Saturday, May 27, 2006

இடி, மழை மங்களூர் ஸ்பெஷல்

சரியாக மே மாத இறுதியில் வரவேண்டிய பருவ மழை இங்கு ஆரம்பித்து விட்டது.சரியாக சீசனில் துவங்கிவிட்டதால் இது தொடர்ந்து தமிழகத்திற்கும் தேவையான பருவ மழை இந்த வருடம் பெய்யும் என்று நம்புவோம். மழை குழந்தைப்பருவம் முதல் கடைசி வரை நமக்கு மனதுக்கு ஒரு மகிழ்ச்சியை தரும் அனுபவமாகவே இருக்கிறது.

மழை பெயுது..மழை பெயுது

நெல்லு வேவிங்க

முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க

..........என்ற பாட துவங்கிய நினைவு தெரிந்த பருவம் முதல் இன்று காலை சன்னல் வழியாக தெரு நிறைய ஓடும் தண்ணீரை பார்க்கும்போதும் ஏற்படுவது ஒரே உணர்வுதான்.மழை என்றால் குஷி.

நாம் மும்பயில் சிறிது காலம் இருந்தபோது ஏற்பட்ட அனுபவம் இது.தினமும் லோக்கல் எனப்படும் ரயிலில் அலுவலகத்திற்கு சென்று திரும்பும் வழக்கம் ஆதலால் (மும்பயில் பெரும்பாலானோர் இப்படித்தான்) மாலையில் திரும்பும் போது சர்ச்கேட் ரயில் நிலையம் ஜே.ஜே என்று இருக்கும். நான் மும்பயில் சேர்ந்திருந்த புதிது. ஒரு நாள் மாலை ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தேன். ஆயிரக் கணக்கானோர் நாரிமன் பாயிண்ட்டில் இருந்து சர்ச்கேட் நோக்கி நடந்துசெல்வது வழக்கம்.

சட்டென்று மழை பிடித்தது. எனக்கு குழப்பம். திடீரென்று மழை வருகிறதே. இத்தனை பேர் எப்படி ஒரே சமயத்தில் எங்கே ஒதுங்குவார்கள்? பிரச்சினை தான் என்று நினைத்தேன். ஆனால் யாரும் அனாவசியமாக அசையவில்லை. நடந்துகொண்டிருந்த அனைவரும் (ஆம்.அனைவரும்) சட்டென்று எங்கிருந்தோ ஒரு குடையை உருவி தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு போய்கொண்டே இருந்தனர். நான் என்னை ஏமாளியாக உணர்ந்த கணங்களில் அதுவும் ஒன்று.

பொதுவாக தமிழ்நாட்டில் தொடர்மழை அது இது என்று நமக்கு பழக்கம் இல்லை. வெயிலுக்கு கூட குடை பிடிக்கும் பழக்கம் நம் பெண்களுக்குக்கூட கிடையாது. ஆனால் பல இடங்களில் சீசன் என்றால் கண்டிப்பாக மழை பெய்யும் என்று இருக்கிறது.

மங்களூரில் ரெயின கோட் போட்டுகொண்டுதான் இரண்டு நாட்களாக அலுவலகம் செல்கிறேன். கார் வாங்கலாம். லோன் எல்லாம் தருகிறார்கள். எனக்கென்னவோ யானையை கட்டி தீனி போடுவது ஞாபகம் வருகிறது. இன்னும் இரண்டு பிரமோஷன் வாங்கினால் அலுவலகத்தில் தருவார்கள். அதுவரை இங்கே தொடரவேண்டுமே?

Friday, May 26, 2006

இளவஞ்சிக்கு ஆதரவாக

நண்பர் இளவஞ்சியின் பதிவுகளையும் இது தொடர்பான பிரச்சினைகளையும் பார்த்து இருப்பீர்கள்.இது சம்பந்தமாக என்னிடமும் சொல்ல சில விஷயங்கள் இருக்கின்றன. இளவஞ்சி யாருக்காக களம் இறங்கினாரோ அவர்கள் எல்லாம் அவரை கைவிட்டுவிட்டார்கள் என்ற விமர்சனத்தையும் பார்க்கமுடிந்தது.

இளவஞ்சி, என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு வேறு வழியில்லை.நீங்கள் என்னை சில சந்தர்ப்பங்களில் குட்டி உள்ளீர்கள். சில சந்தர்ப்பங்களில் பாராட்டியும் உள்ளீர்கள். அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.இதை எழுதவில்லை என்றால் நான் மனிதனே அல்ல.தூக்கமில்லாத இரவுகள், சந்தோஷ கணங்களையும் அனுபவிக்கமுடியாமல் இருத்தல் இவை என்னை போன்ற ஒருவனுக்கு கடினம்.

அய்யோ இளவஞ்சியா இப்படி எழுதினார் என்று கேட்பவர்களுக்கு சில வார்த்தைகள்:

ஆம். இளவஞ்சிதான் இப்படி எழுதினார். ஏனெனில் அவர் மந்தை ஆடுகளில் ஒன்றல்ல. தனித்துவமானவர். இப்படித்தான் எழுதுவார். தவறு என்றால் தவறு என்று சொல்லுங்கள். சரி என்றால் சரி என்று சொல்லுங்கள். அய்யோ இளவஞ்சி, நீங்கள் இப்படி ஆகிவிட்டீர்களே என்று சொல்வதன் மூலம் நீங்கள் என்ன நிறுவ பார்க்கிறீர்கள்? தவறு, சரி என்பதையெல்லாம் பார்க்கும் அளவிற்கு திராணி இல்லையா உங்களுக்கு? தயவு செய்து பேசாமலாவது இருங்கள்.

என்னை போன்ற, முத்துகுமரனை போன்றவர்களுக்காக அவர் எழுதினார். நாங்கள் சொல்லியோ அல்லது காசி சொல்லியோ அவர் எழுதினார் என்று சொல்பவர்கள் சிறிது சிந்திக்கவேண்டும்.நாங்கள் கவிஞர்கள் ஆகக்கூடாதா அல்லது எழுத்தாளர்தான் ஆகக்கூடாதா? ஒரு புத்தகம் போட்டால் கவிஞர் என்று ஒத்துக்கொள்வீர்களா? என் கட்டுரைகளை நானும் யார் கையை காலையாவது பிடித்தோ அல்லது கைகாசை செலவு செய்தோ புத்தகமாக்கினால் என்னையும் எழுத்தாளர் என்று ஒத்துக் கொள்வீர்களா?

நான் ஷகிலா டான்ஸ்தான் ஆடுகிறேன். ஆனால் என் தொடையில் சங்கராச்சாரியார் படத்தை பச்சை குத்திக்கொண்டு ஆடவில்லை. என் விருப்பு வெறுப்புகளை வெளிப்படையாக சொல்லித்தான் எழுதுகிறேன். நடுநிலைமை வேஷம் நான் கட்டுவதில்லை. தமிழ்மணத்தை பல்வேறு ஆட்கள் பல்வேறு காரணங்களுக்காக படிக்கிறார்கள். இப்படி படிப்பவர்கள் எல்லாம் ஷகிலா டான்ஸ் பார்க்கும் மனப்பக்குவம் கொண்டவர்கள் என்று எழுதப்படுவதை படித்து ஆகா ஓகோ என்பவர்கள் இது தங்களையும் பார்த்துத்தான் சொல்லப்பட்டுள்ளது என்பதை ஏன் உணரவில்லை?

காசிக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தும் அளவிலும் எழுதி வருகிறீர்கள் பலர். என்னய்யா பாவம் செய்தார் அவர்? ஒரு பர்ஸ் பிக்பாக்கெட்டில் இழந்தோம் என்றால் ஒரு வாரம் சோறு இறங்காது நமக்கு. கைகாசு லட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டப்பட்டு நம் மொழிக்காக, சமூகத்திற்காக சேவை செய்யும் அவரையும் விமர்சிப்பவர்களை ஊக்குவிக்கிறீர்கள். இத்தனைக்கும் காசி இலக்கியவாதி என்று சொல்லிகொள்வதில்லை.

எந்த தரப்பையாவது ஆதரிக்கிறாரா?தெரியாமல் தான் கேட்கிறேன்.லட்சியம், கொள்கை, சேவை என்று யாராவது சொன்னால் ஏனய்யா எரிகிறது உங்களுக்கு? காந்தி மகான் என்று சொன்னால் உணர்ச்சிவசப்படும் நீங்கள் உங்களில் யாராவது கொஞ்சம் இதே வார்த்தைகளை சொன்னால், ஆசைகளை சொன்னால் ஏன் எரிந்து விழுகிறீர்கள்?விஷம் கக்குகிறீர்கள்?


நான் சொக்கதங்கம் அல்ல.எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்குவது என் லட்சியம் அல்ல. அது எனக்கு அவசியமும் இல்லை. என்னை விமர்சிப்பவர்கள் யார் என்று பார்ப்பேன்.அதை பொறுத்துத்தான் என் எதிர்வினையும் இருக்கும்.இன்று நண்பர் இளவஞ்சிக்கும் அதையே கூறுகிறேன்.இளவஞ்சி உங்களுக்கு நான் ஆதரவாக இருக்கிறேன் இந்த விஷயத்தை பொறுத்தமட்டும்.

ஒரு ஆளாவது இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து இங்கே எழுதினாலும் இளவஞ்சிக்கு தன்னுடைய ஆதரவினை தைரியமாக உரத்து கூறினாலும் நான் சந்தோசப்படுவேன்.

Wednesday, May 24, 2006

தலைப்பு செய்திகள்

வணக்கம் ஜெயாடிவியின் தலைப்பு செய்திகள்


பெரும்பான்மை பலம் இல்லாத திமுக அரசு இயற்றும் சட்டங்கள் எல்லாம் செல்லாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து.

நாம் இன்னும் தோற்கவில்லை. அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா உற்சாகம்

தொலைதொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் அட்டூழியம்

கன்னியாகுமரியில் திமுகவினர் பயங்கர கொலைவெறி தாக்குதல்.வன்முறை.

சிறப்புச்செய்தி:கலைஞரின் கையாட்டு - பரபரப்பு செய்தி.

இனி விரிவான செய்திகள்:

பெரும்பான்மை பலம் இல்லாமல் பதவியேற்றுள்ள திமுக அரசு தினமும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சிறுபான்மை அரசாக பதிவியேற்ற திமுக அரசு கூறும் திட்டங்கள் எல்லாம் செல்லாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து துக்ளக் சோ கருத்து தெரிவி்க்கையில் சட்டசபையில் பெரும்பான்மையே இல்லாத திமுக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவது நகைப்பிற்குரியது என்றார். அடுத்த ஜனாதிபதியாக ஆர்.வி ஒருவேளை மீண்டும் பதவி ஏற்றால் பரம்பரை பகையை மனதில் கொண்டு இந்த ஆட்சியை கலைக்க போராடுவேன் என்று பெருமூச்சுடன் கூறினார் சோ ராமசாமி.

அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாகம் இழந்து இருப்பது தேவையில்லை என்று கண்டித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் நூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் தற்கொலை செய்துகொண்டதை சுட்டிகாட்டினார்.அதே சமயம் தற்கொலை செய்து சாகும் அந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் கட்சியின் சார்பில் தரப்படும் என்றும் கூறி தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார்.

நேற்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர் கூறுகையில் இன்னமும் அ.இ.அ.தி.மு.க தோல்வியை தழுவி விடவில்லை என்றார். இன்னமும் தான்தான் இரவு தலைமை செயலகத்திற்கு போய் விழித்திருந்து ஃபைல் பார்த்துவருவதாகவும் கருணாநிதி காலையில் வந்து வெறும் கையெழுத்து மட்டுமே போடுவதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அது சமயம் அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினார்கள்.


அஸ்ஸாமில் நேற்று இரவு அல்பைகுட்டி என்ற கிராமத்தில் இரண்டு மணிநேரம் தொலைபேசிகள் வேலை செய்யவில்லை. தொலைதொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் என்ன செய்கிறார் என்று பொதுமக்களும் நடுநிலைமைவாதிகளும் கேள்வி எழுப்புகின்றனர்.


நேற்று கன்னியாகுமரியில் கடற்கரையோரம் வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒருவர் சாலையில் கிடந்த கல் ஒன்றில் இடித்துகொண்டதில் கால் சுண்டுவிரல் சுளுக்கிக் கொண்டது. திமுக அமைச்சரின் வீட்டிற்கு மிக அருகில் அதாவது ஐம்பது கிலோமீட்டர் அருகில் நடந்த இந்த சம்பவம் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை எழுப்பி உள்ளது.

நேற்று கருணாநிதி தலைமை செயலகத்திற்கு வந்துகொண்டிருந்தபோது கடற்கரை சாலையில் ஒரு ஆளுக்கு கையாட்டி டாட்டா கூறினார். நமது சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் கலைஞர் டாட்டா காண்பித்த தொண்ணூறு வயதான அந்த ஆளின் சகோதரர் 1967 ல் சிக்னல் இன்றி ரோட்டை கிராஸ் செய்த வழக்கில் அபராதம் கட்டியவர் என்று தெரியவந்தது.இது போன்ற கிரிமினல்களுடன் கருணாநிதி தொடர்பு வைத்திருப்பதுப்பற்றி நடுநிலையாளர்களும் பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் ட்ராபிக் சார்ஜென்ட்டுக்கள் மற்றும் அதிமுகவினரின் கருத்துக்கள் நாளை முதல் ஒரு வாரத்திற்கு கலைஞரின் கையாட்டு என்ற பெயரில் உங்கள் ஜெயா டிவியில் காலையும் மாலையும் ஒளிப்பரப்பாகும்.

இத்துடன் ஜெயா செய்திகள் முடிவடைந்தன.

Monday, May 22, 2006

அய்யா குப்புசாமி "வங்கி" பற்றி

மாட்டு லோன் பற்றிய பதிவில் அய்யா குப்புசாமி ஒரு அருமையான பின்னூட்டம் தந்துள்ளார்.இதை தனிப்பதிவாக போடுவதில் பெருமையடைகிறேன்.

இதைப்பற்றி என் கருத்து அவர் கருத்தோடு ஒத்துபோனாலும் சில இடங்களில் மாறுபடுகிறேன்.இதை பிறகு எழுதுகிறேன். சம்மர் ஹாலிடே முடிந்ததால் இனி எழுதுவது சற்றே(?) குறையும்.

இனி ஓவர் டு குப்புசாமி

*******
தன் முதலாளிக்கு எது உகந்ததோ அதைச் செய்வது தான் எந்தத் தொழிலாளிக்கும் (வங்கி என்பதால் ஊழியன்) அழகு. நீங்கள் சொல்வதிலிருந்து பொதுத்துறை வங்கி எதிலோ பணியாற்றுவதாக யூகிக்கிறேன். அதன் அடிப்படையில் அதன் முதலாளியாகிய அரசுக்கு எது உகந்ததோ அதைச் செய்வதுதான் அழகு. அதைத் தான் செய்திருக்கிறீர்கள் எனத்தெரிகிறது. குடிகளுக்கு எது உகந்ததோ அதைச் செய்வது அரசுக்கு அழகு.

100% அரசு மட்டுமே வங்கியின் உரிமையாளராக இருக்கும் பட்சத்தில் குடிகளுக்கு உகந்ததைச் செய்ய யார் அனுமதியும் பெறத்தேவையில்லை; தற்போதைய இரயில்வே நிர்வாகம் போல. கிட்டத்தட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தன் பங்குகளின் சிறு/பெறு பகுதியை வெளியே விட்ட பிறகு, என்னதான் பெரும்பான்மை பங்குதாரதாக இருந்தாலும், மற்ற பங்குதாருக்குக் கிடைக்க வேண்டிய லாபத்தை/நலனை குறைக்கும் வகையில் செயல்படுவது இந்த வங்கிகள் தனியார் துறை வங்கிகளுடன் போட்டியிட்டு உலகத்தரத்திற்கு உயர்வதைக் குலைக்கும். சில வருடங்களில் இந்தியாவின் இரண்டாவது பெரிய அவங்கியாக வளர்ந்து நிற்கிறதே ICICI! பல ஆண்டுகளாக இருந்த பொதுத்துறை வங்கிகளால் ஏன் முடியவில்லை?

Survival of the fittest என்பது இங்கே செல்லுபடி ஆகுமா? அரசு இந்த வட்டி வீதத்தில் தான் கடன் தர வேண்டும் என நிர்பந்திக்கக்கூடாது. அதே சமயத்தில் சந்தையில் நிலவும் வட்டி அளவில் கடன் தருவதில் வங்கிக்கு எந்தத் தயக்கமும் இருக்கலாகாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், உங்களைப் போல அனைத்து வங்கி அதிகாரியும் இருப்பதில்லை. You guys have loan processes that can drain not only his time but also his energy. His எனபது உழவனுடையதைக் குறிக்கிறது. வங்கியில் 8% க்கு லோன் கிடைகும் என்றால் (அது கிடைக்காததால்) கீழ்த்தட்டுக் குடியானவர்கள் கந்து வட்டி (>2% மாத வட்டி) தான் வாங்குகிறார்கள். சரி.. விவசாயக் கடன்களுக்கு இந்த வட்டி தான் என அரசு கட்டாயப் படுத்தினாலும் கூட அதனால் உண்டாகும் வருவாய் இழப்பை அரசு ஏற்றுக்கொள்வதாக இருக்க வேண்டும்.


"குடியானவர்களுக்கு மானியம், இலவசம் என எதுவுமே இருக்ககூடாது. நாம் கட்டும் வரிப்பணம் இவர்களுக்கு ஏன் போய்ச் சேரவேண்டும்?" என்பதான எண்ணங்கள் நிலவாமலுமில்லை. 'அவர்கள் எலிக்கறி தின்னாலும் பரவாயில்லை, இலவச மின்சாரம் தரக்கூடாது' என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். We should learn from America எனச் சொல்பவர்களுக்கான ஒரு செய்தியுடன் முடிக்கிறேன். அமெரிக்க அரசு வருடந்தோறும் சுமார் இரண்டு இலட்சத்தும் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மானியத்தைத் தன் விவசாயிகளுக்கு வழங்குகிறது.

//The US spends $50-60 billion annually on agricultural subsidies, 90 per cent of which goes to the foodgrains and oilseeds sectors.
http://www.thehindubusinessline.com/2006/05/
03/stories/2006050300621000.htm//

நமது குடியானவன் அவனது அமெரிக்க சக குடிமகனை விட ஏழைப்பட்டவன்; நவீன தொழில் நுட்பங்கள் இல்லாதவன். அவனை மேம்படுத்த ஏதாவது செய்தாக வேண்டியது அவசியமாகிறது.நீ பயன்படுதும் சமையல் எரிவாயு உருளை ஒன்றுக்கு ரூ.125 மானியம் தரப்படுகிறது, அதை வாங்கிக்கொள்ள உனக்கு வெட்கமில்லை! பெட்ரோல் லிட்டர் ஒன்று உனக்குத்தர அரசு 10 ரூபாயை எரிக்கிறது, அது பரவாயில்லை! இந்தியன் ஆயில் கம்பெனி நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டப்படுகிறதே, அது பரவாயில்லை!

ஆனால் உழவனுக்கு சலுகைகள் எனும் போது அதைச் சகிக்க உன்னால் முடியவில்லை?

Saturday, May 20, 2006

மாட்டு லோனும் திராவிட குடிதாங்கியும்

சில பதிவுகளில் மாட்டு லோன் தரும் திராவிட குடிதாங்கி என்பவரைப்பற்றி படிக்க நேர்ந்தது.பலருக்கும் வலைப்பதிவாளர் டிக்ஸ்னரி தெரியவில்லை என்ற சோகம் ஒருபுறம் இருக்க மாட்டு லோன் எப்படி வங்கிகளில் தருகிறார்கள் என்ற குழப்பமும் இருப்பதாக தெரிகிறது.இதை தீர்க்க என்னாலான எளிய பதிவு இது.

மாட்டு லோன் என்பது விவசாயிகளுக்கு வழங்கும் நேரடி கடன்திட்டங்களில் ஒன்று. அனைத்து வங்கிகளும் விவசாயத்திற்கு என்று இவ்வளவு சதவீதம் கடன் தரவேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் ஆணை.பல வங்கிகளில் தருகிறார்கள்.ஆனால் அமர்ந்திருக்கும் மேனேஜர்களை பொறுத்து இதில் சுணக்கமும் உள்ளது.

இதை தெளிவாக வரையறுத்தால் கறவை மாட்டு கடன் எனலாம். ஏழை விவசாயி ( 99 சதவீதம் இவன் திராவிடனாகத்தான் இருப்பான் என்பது திண்ணம்) வியாபாரியிடம் மாட்டை விலைபேசிவிட்டு அவன் பங்காக ஒரு சிறிய தொகையை போட்டால் மீதி தொகையை வங்கி தரும். பிறகு அருகில் உள்ள பால் கூட்டுறவு சொஸைட்டியில் அவரை மெம்பராக்கி பாலை அங்கு கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.இந்த லோன்கள் தனிப்பட்ட முறையிலும் பால் சொசைட்டி மூலமாக மொத்தமாகவும் தரப்படுகிறது.

மாடு கன்று ஈன்று பால் கறக்க ஆரம்பித்தவுடன் அந்த சொஸைட்டியில் இருந்து நேரடியாகவோ அல்லது கடன் பெற்ற விவசாயி மூலமாகவோ மாதாமாதம் இந்த கடன்தொகை வசூல் செய்யப்படும்.இதில் ஏழைகளுக்கு அவர்கள் பங்காக மாடு வாங்க பணம் போட முடியவில்லை என்றால் அரசாங்கம் மானியமாக தரும்.

மேலும் வங்கியின் உதவியுடன் அந்த மாட்டை இன்சுரன்ஸ் செய்து தருவோம். ஒருவேளை மாடு இறந்தால் பணத்திற்கு பாதுகாப்பு. அவ்வளவு தான் சங்கதி. இதில் திராவிட குடிதாங்கியின் பங்கு என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

டீக்காக ட்ரஸ் செய்து அழகாக இருந்தால்,அவர்கள் நல்லவர்கள் என்றும் புனிதபிம்ப கட்டுமானம் நம் சமுதாயத்தில் உள்ளது.அவர்கள் செய்யும் அளப்பரியை பார்த்து மயங்கி லோன் கொடுக்கும் பலர் எளிய விவசாயிகளை புறக்கணிப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

நமக்கு யாரென்றே தெரியாத ஒரு விவசாயி.தனக்கென்று போட்டுக்கெள்ள சட்டைக்கூட இல்லாத விவசாயி.( என்னுடைய தாத்தா இன்னமும் முழுக்கை பனியனைத் தான் சட்டை என்று நினைத்துக் கொண்டுள்ளார்)வங்கிக்கு வந்து இங்கு மாட்டு லோன் தருவாங்களா தம்பி என்று அப்பாவித்தனமாக என்னை கேட்டால் நான் "ச்சீ டர்ட்டி ஃபெல்லோ, போய் அப்ளிகேஷன் ஃபில் பண்ணு என்று கூறியதில்லை. இல்லை பெரிசு என்றும் திருப்பி அனுப்பியதில்லை.

எங்கள் மேனேஜரை நச்சரித்து அதுபோன்ற பல விவசாயிகளுக்கு தேவை யான கையெழுத்தை போட்டு லோன் வாங்கி தந்துள்ளேன்.மாடுதான் அந்த லோனுக்கு செக்யூரிட்டி என்னும்போது கொடுப்பதில் பெரிய பிரச்சினை யும் இல்லை.

மாடு கன்று ஈன்றவுடன் சீம்பாலை எடுத்துக்கொண்டு வந்து இந்தாங்க தம்பி சாப்பிடுங்க என்று சொல்லும்போது அவர்கள் குரலில் இருக்கும் நெகிழ்வும் நன்றியும் யாருக்கும் கண்ணீரை வரவழைக்கும்.

இதில் நாம் இழக்க ஒன்றுமே இல்லை.அந்த கிராமத்தை விட்டு நான் வந்து சில வருடங்கள் ஆனாலும் பம்பாய்க்கும் இங்கே மங்களூருக்கும் இன்றும் போன் பேசி அன்பை தெரிவித்துக்கொண்டிருக்கும் பல எளிய உள்ளங்கள் நான் பெற்ற பெரிய லாபம்.

இது ஒரு கிராமத்தின் கதைதான். இது போன்ற எண்ணற்ற கிராமங்களில் உள்ள எண்ணற்ற ஏழைகளும் திராவிடர்களாகவே இருக்கும்போது நான் திராவிட குடிதாங்கியாக மாறுவதில் எனக்கு வெட்கம் இல்லை.நீங்க என்ன சொல்றீங்க?

Thursday, May 18, 2006

இனிய துவக்கம்

நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த திராவிட தமிழர்கள் வலைத்தளம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இன்னும் எந்த பதிவும் அதில் உள்ளிடப்படவில்லை. கீழே உள்ளது அந்த தளத்தின் சுட்டி. http://dravidatamils.blogspot.com/

கட்டுரைகள் அளிக்க விரும்பும் நண்பர்கள் அளிக்கலாம். மூன்று இடுகைகள் சேர்ந்தவுடன் இதை தமிழ்மணத்தில் சேர்க்கவும் தேன்கூட்டில் சேர்க்கவும் தரலாம் என்று முடிவு செய்து உள்ளோம்.கவிஞர் மணிகண்டனின் கட்டுரை வந்துவிட்டது என்ற பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிலர் கிண்டல் செய்வார்கள், நக்கலடிப்பார்கள் என்றெல்லாம் நினைக்காமல் அனைத்து இன உணர்வாளர்களும் மொழி உணர்வாளர்களும் இதில் சேர்ந்து இந்த முயற்சியை வெற்றி பெற செய்ய வேண்டுமாய் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

தளத்தைப்பற்றிய ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.

Wednesday, May 17, 2006

தி.ரா.மு.மு தன்னார்வலர்கள் தேவை

திராமுமு இயக்கம் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்.பலரும் ஆர்வமாக இதில் இணைந்தும் உள்ளீர்கள்.நம்முடைய எண்ணம், ஆசை, கொள்கை, நமக்கு எதிரான சவடால்களுக்கு பதி்ல் ஆகியவற்றை முழங்க நமக்கென்று ஒரு தொலைக் காட்சி,வாரப்பத்திரிக்கை,ஒரு ரூபாய் பேப்பர் என்று எதுவுமே இல்லாதது என் உள்ளத்தை உறுத்தியது.

ஆகவே அண்ணன் பிளாக்கரின் உதவியுடன் இலவச வலைத்தளத்தை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

வலைத்தளத்தின் தேவை

திராவிடம் என்றாலே கெட்ட வார்த்தை என்பது போல் ஒரு கட்டமைப்பு படிப்படியாக இந்த நாட்டில் செய்யப்பட்டு வருகிறது.அதை தடுப்பதே நம் தலையாயக் கடமை.

வாழ்க்கையில் முன்னேறிய ஆட்கள் திராவிடத்தைப்பற்றி தாங்கள் வைத்திருக்கும் தவறான பார்வையை மீள்பார்வை செய்ய தூண்டுவதும் படித்தவர்கள் மத்தியில் திராவிடத்தை பரப்புவதும் நம் நோக்கம்.

நடுநிலையாளர்களை திராவிடத்தை அனுதாபத்துடன் பார்க்கவைப்பது நம் இன்னுமொரு நோக்கம்.

இந்த பதிவில் திராவிட வரலாறு, திராவிடபெருமை,திராவிடத்தின் தேவை ஆகியவற்றை பற்றி செய்திகள்,கட்டுரைகள் ஆகியவை வெளிவரும்.

திராவிட பெரியவர் கலைஞரைப்பற்றி வரும் விஷம பிரச்சாரங் களுக்கு பதில் தரும் ஒரே இடமாக இது திகழும்.அதே சமயத்தில் கலைஞர் பாதை மாறினால் தட்டிகேட்கும் இடமாகவும் இது திகழும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

உறுப்பினர்

தம்மை தமிழனாக உணரும் எவரும் இதில் இணைந்துக்கொள்ளலாம். கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம்.பெயருடனோ பெயரில்லாமலோ பிரசுரிக்கப்படும்.

திராவிடம் சம்பந்தப்படட விஷயங்களை உலகிற்கு கொண்டுச்செல்ல் வாருங்கள் திராமுமு வலைத்தளம்.

சாதி,மதம்,ஊர் ஆகியவை தடையில்லை.பிறப்பால் எந்த சாதியில் இருந்தாலும் தமிழரின்,திராவிடரின் இருப்பை அங்கீகரிக்கும் எவரும் இதில சேரலாம்.

சாதியால் மதத்தால் பிரிக்கப்பட்ட நாம் இனத்தால் மொழியால் ஒன்றுபடுவோம்.

முக்கியமான சட்டதிட்டம் நாகரீகமாக எழுதவேண்டும் என்பதுதான்.பல்வேறு சமயங்களில் பல்வேறு தன்னார்வலர்களைக் கொண்டு இயங்கஇருக்கும் இந்த வலைத்தளம்,உறுப்பினர்கள் விருப்பப்பட்டால் பிற்காலத்தில் ஒரு கட்சியாகவும் ஆகும்.

நாத்திகனாக இருக்கவேண்டிய அவசியமில்லை.திராமுமு பன்முகத் தன்மையை ஆதரிக்கிறது.மதவெறியை எதிர்க்கிறது.எந்த மதத்திற்கும் ஆதரவாகவோ எதிர்ப்பாகவே திராமுமு இருக்காது.

புனிதபிம்பங்களின் பாணியி்ல சாதியை பற்றி பொதுவில் பேசாமல் இருப்பது, ஆனால் தேவையான நேரம் சாதி பார்ப்பது என்ற கொள்கையில் திராமுமு விற்கு நம்பிக்கை இல்லை.

விருப்பப்படுபவர்களுடைய உறுப்பினர் விவரம் ரகசியமாகவும் வைக்கப்படும். ஒரு கூகிள் குழுமம் துவக்கும் எண்ணமும் உண்டு.

இப்போதைக்கு நிர்வாகிகள் தேர்வு பின்வருமாறு:

தலைவர்: குழலி

செயல் தலைவர் : தமிழினி முத்து

துணைதலைவர்: பொட்டீக்கடை

பொதுசெயலாளர்: பேராசிரியர் தருமி

துணைபொதுசெயலாளர்: ஜோ

சிந்தனைகிட்டங்கி பொறுப்பாளர்: முத்துகுமரன்

கொ.ப.செ : நியோ

(கடும்போட்டிக்கிடையில் இந்த பதவியை இவருக்கு கொடுக்க காரணம் இவரின் அனுபவம் தான்.பல இடங்களில் பின்னூட்டங்களில் உணர்ச்சிகரமாகவும், தகவல்பூர்வமாகவும் பட்டையை கிளப்புவார்)

செய்தி தொடர்பாளர்: பாலபாரதி

இளைஞர் அணி செயலாளர்: அருள்மொழி

அந்தந்த ஏரியாக்களுக்கு வட்ட செயலாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். மத்திய பொதுக்குழுவிற்கும் உறுப்பினர் தேர்வு உண்டு

ஆகவே நண்பர்களே பதவி என்பது ஒரு முள்கீரிடம் என்பதை உணருங்கள். தலைவர் என்பவர் பலபேர் வாயில் விழுந்து எழுந்திருக்கவேண்டும்.எந்த பதிவு போட்டாலும் பல (-)குத்துக்களும் பல பதிவுகளிலும் திட்டும் உள்குத்தும் வாங்கியிருக்க வேண்டும்.ஆகவே நானும் குழலியும் அதற்கு சரியாக பொருந்துவோம் என்பது உங்களுக்கு நான் சொல்லவேண்டியது இல்லை.

ஆகவே இதில் கூறப்பட்டிருக்கும் நிர்வாகிகளும் மற்றும் ஆர்வமுள்ள நண்பர்களும் உடனடியாக தங்கள் கருத்துக்களை எழுதும்படி வேண்டப் படுகிறார்கள்.

Tuesday, May 16, 2006

புஜ்ஜிக்குட்டி அர்ஜுன்சிங்கும் கைகால்நடுக்கமும்

முதலில் இந்த கைகால் நடுக்கத்தை பற்றிய தகவலை கூறிவிடுகிறேன். வரும் ஞாயிறு ஒரு தேர்வு இருப்பதால் வலைப்பதிவை விட்டு சற்று விலகி இருக்கலாம் என்று நினைத்தால் முடியவில்லை. கம்ப்யூட்டரில் சேர்த்து வைத்துள்ள பழைய கேள்வித்தாள்களை எடுக்க வந்தால் தமிழ்மணம் ஐகான் என்னை பார்த்து கெக்கலி கொட்டி சிரிக்கிறது.

சரி.ச்சும்மா பார்ப்போம். கமெண்ட்ஸ் மட்டும் மாடரேட் செய்வோம்.பதிவு எதுவும் வேண்டாம் என்று பார்த்தால் கைகால் எல்லாம் நடுங்குகிறது. எப்படியும் என் சப்த நாடியையும் ஒடுக்கும் மகாசக்தி சம்மர் கேம்ப் முடிந்து திங்கள் மங்களூர் வந்து சேருவதால் இந்த வியாதியில் இருந்து மீளுவேன் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன். நடுவில் நேற்று மாலை போட்ட பதிவை பிளாக்கர் தின்றுவிட்டது.

*********************

மேட்டுக்குடி மாணவர்கள் என்.டி.டி.வி நியூஸ் டுடே போன்ற செய்தி சானல்கள் உதவியுடன் போராடுகிறார்கள். எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்கள், டாக்டர்கள் என்று இவர்கள் அடிக்கும் கூத்து தாங்கவில்லை. ஆனால் புஜ்ஜீக்குட்டி அர்ஜுன்சிங் மிகவும் தெளிவாக இருக்கிறார்.கண்டிப்பாக பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு வந்தே தீரும் என்றுகூறிவிட்டார். இடங்களை அதிகப்படுத்தி இந்த விஷயத்திற்கு மத்திய அரசு தீர்வு காணும் என்று தெரிகிறது.

இந்த இடங்களை அதிகப்படுத்தும் திட்டத்திற்கும் மேட்டுக்குடியினர் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் இதுதான் இதற்கு லாஜிக்கல் முடிவு.இதை உணர்ந்து இவர்கள் இந்த தோற்கும் போராட்டத்தை நிறுத்துவது நல்லது.புனித பிம்பங்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தால் இந்த பிரச்சினை கடைசியில் தலித் போராளி காஞ்சி இலையா கூறியதுபோல் வீதியில்தான் தீர்க்கப்படும்.

இப்போது இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன. எப்படியும் அரசாங்கம் உறுதியாக இருந்து இதை முடித்துவைக்கும் என்ற உறுதியால் இந்த கும்பலின் வேகம் வெளிப்படவில்லை.

பல மருத்துவ கல்லூரிகளில் வெறும் பணத்தின் அடிப்படையில் மட்டுமே சீட் கொடுக்கப்படுவதாகவும் அங்கு மெரிட் என்ன ஆகின்றது, ஏன் இந்த மாணவர்கள் அறசீற்றத்தை அங்கு காட்டவில்லை என்றார் ஒரு பம்பாய் மாணவர்.இவர் கிராமப்புறத்தில் இருந்து இடஒதுக்கீட்டினால் மருத்துவர் படிப்பை மேற்கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடஒதுக்கீ்ட்டினால் படித்து ஆபரேசன் செய்து பேஷண்ட் செத்த சம்பவம் எதுவும் இதுவரை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.இன்னும் சொல்லப் போனால் அடித்தட்டு மக்களின் நிலை தெரிந்து உதவும் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்து மருத்துவர்களை நிறைய நான் பார்த்துள்ளேன்.

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கட்ஆஃப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஓப்பன் காம்படிசனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. மெரிட் பிரச்சினை இல்லை ஒரு முன்னேறிய சமூக மாணவனின் எதிர்காலம் பாழாகிறது என்றால் இடங்களை அதிகப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளவேண்டியதுதானே?

தமிழகத்தில் டாக்டர்கள் சங்கம் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்துள்ளது.இந்தியா முழுவதும் புனித பிம்பங்கள் அதிகரித்துள்ள வேளையில் தமிழக மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் இதை ஆதரிப்பது சந்தோஷமான விஷயம்.

இதை வங்கிகளில் மற்ற மாநிலங்களை விட அதிக அளவில் வேலை பார்க்கும் பிற்படுத்தப்பட்டவர்களும் (மண்டல் கமிஷனுக்கு பிறகு நல்ல முன்னேற்றம்) தாழ்த்தப்பட்டவர்களும் வேலை பார்க்கும் பின்னணி யிலேயே நான் புரிந்துக் கொள்கிறேன்.குறிப்பாக இவர்களின் மக்களிடம் கலந்து பழகும் திறனும் முன்னேறிய சாதியினரைவிட கூடுதலாகவே இருக்கிறது. வங்கிப்பணிக்கு இதுவும் தைரியமும் மிக அவசியம். கூட்டல் கழித்தல் கணக்குகள் இப்போது கம்ப்யூட்டரால் சரியாகவும் வேகமாகவும் செய்யப்படுகிறது.

அர்ஜுன்சிங் காங்கிரசுக்கு மறுபிறவி அளிக்கும் நோக்கத்தில் இதை செய்தாலும் அவரின் அணுகுமுறை சூப்பர்.எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் மிரளவில்லை. மீடியாவை வைத்து மேட்டுக்குடியினர் காட்டும் பூச்சாண்டியை அவர் புரிந்து தான் உள்ளார்.

ஏற்கனவே பாடபுத்தகங்களில் கைவைக்கிறார் என்றெல்லாம் பல இந்துத்வா வாதிகள் இவரை குற்றம் சாட்டினர்.அவர் அசரவில்லை. காந்தி நல்லவர் என்று ஒரு கையாலும் காந்தியை கொன்றது பகவத் கீதையின்படி நியாயம்தான் என்று இன்னொரு கையாலும் எழுதும் புனிதபிம்பங்களுக்கு அர்ஜுன்சிங் பயப்பட தேவையில்லைதான்.


***********************

அர்ச்சகர் சமாச்சாரத்தில் இட்லிவடை முதற்கொண்டு ரவி சீனிவாஸ் வரை அனைவரும் தம்மை வெளிப்படுத்திகொண்டுவிட்டனர் என்பதை பார்க்க முடிந்தது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது என்பது சமத்துவத்திற்கான ஒரு அடையாளம் தான் என்பதை உணர முடியாமல் பலரும் ஆவேசமாக சாமியாடுவது நகைப்பிற்குரியது."நடுநிலை"யாளர்களும் சமத்துவபுர ஜென்டில்மேன்களும் இதை கவனிக்க வேண்டும்.

ஒரு நண்பர் அர்ச்சகர் ஆவதற்கு பெரிய அறிவாளியாக இருக்கவேண்டும் என்றார்.ஒரு பெரிய கோவிலில் இருக்கும் சில "அறிவாளிகளை" ரேண்டமாக எடுத்து சோதனை செய்துவிடலாமா?

அறிவாளித்தனம் என்பது சில சம்ஸ்கிருத சுலோகங்களை மனப்பாடமாக ஒப்பிப்பதுதான் என்றால் இதைவிட பெரிய அயோக்கியத்தனம் இருக்க முடியாது.இதை நான் விளக்கவேண்டிய அவசியம் இல்லை.

கருணாநிதி போடபோகும் முதல் கையெழுத்து எது என்ற ரீதியில் கிண்டல் செய்து கொண்டிருந்தவர்களுக்கு அவர் போடும் ஒவ்வொரு கையெழுத்தும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.முக்கியமில்லாததாகத்தான் இருக்கும்.வாழும் வரலாறு அதன் கடமையை சரியாகத்தான் செய்கிறது.

ஏற்கனவே இந்த ஆணையை உச்சநீதிமன்றம்வரை சென்று எதிர்த்த சின்ன புத்திக்காரர்களைப்பற்றி யாராவது எழுதலாமே?


(திராவிட ராஸ்கல்களுக்கு தேவை இந்த நாட்டில் இன்னும் இருக்கிறது என்பதை நீங்கள் இன்னும் மறுக்கிறீர்களா?)

Monday, May 15, 2006

மனிதர்களை புரிந்துகொள்வோம்

என் தந்தை வாழ்க்கையில் தமக்கு எதாவது பின்னடைவு ஏற்படும் போதோ,துரோகம் இழைக்கப்படும்போதோ அல்லது ஏமாற்றப்படும் போதோ வழக்கமாக "இதெல்லாம் ஒரு அனுபவம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் கண்ணா, மனிதர்களை புரிந்துகொள்ள இது எல்லாம் ஒரு வாய்ப்பு" என்பார் அடிக்கடி.

ஒருமுறை திருநெல்வேலிக்கு அவர் தேர்வுத்தாள்கள் திருத்தும் பணிக்கு செல்லும்போது என்னையும் அழைத்து சென்றிருந்தார்.ஒரு ஞாயிற்றுகிழமை நாங்கள் ஊர் சுற்றிக்கொண்டிருக்கும்போது பாளையங்கோட்டையில் ஒரு ஆள் தெழுவு விற்றுக்கொண்டிருந்தான்.(கொங்கு சீமையில் இதை நாங்கள் சுண்ணாம்பு தெழுவு என்போம்.கள் மாதிரிதான்.ஆனால் இனிப்பாக இருக்கும். மப்பு எல்லாம் ஏறாது)பழக்க புத்தி காரணமாக விலையை கேட்காமல் வாங்கி குடித்து வைத்தோம். எனக்கு அப்போது வயது பதினாறு.

குடித்து முடித்தவுடன் விலையை கேட்டால் அவன் சொன்ன விலை மிக மிக அதிகமாக இருந்தது.நன்றாக ஏமாற்றுகிறான் என்று தெரிந்தது.ஆனாலும் குடித்தவுடன் பேரம் பேசமுடியுமா? வாயை மூடிக்கொண்டு காசை கொடுத்தோம்.என்னப்பா இப்படி ஆயிடுச்சே? என்றேன் நான்.

அவர் வழக்கம்போல் அவருடைய பொன்மொழியை (அனுபவம்,மனிதனை புரிந்து கொள்வது) ஆகியவற்றை கூறினார்.

"இப்படியே அனுபவத்தை மட்டுமே சேகரித்துக் கொண்டிருந்தால் எப்பப்பா இந்த அனுபவத்தை வைத்து வெற்றிகரமாக வாழ்வது?", என்று கேட்டேன். சற்றே ஜெர்க் ஆன என் தந்தை சுதாரித்துக்கொண்டு இது போன்று சேர்க்கப்படும் அனுபவங்களுக்கு முடிவே இல்லை என்றும் இது ஒரு தொடர்ச்சியான நடைமுறை (ON GOING PROCESS) என்றும் கூறினார்.

ஆனால் அந்த பதிலை சொல்லிய பிறகு சிந்திக்க ஆரம்பித்துவிட்டார். நாங்கள் தங்கியிருந்த கதீட்ரல் மேல்நிலைப்பள்ளிக்கு வந்து ஒரு வகுப்பறையில் சில பெஞ்சுகளை கூட்டிப்போட்டு படுக்கை ரெடி செய்யும்வரை எதுவுமே பேசாமல் யோசித்துக்கொண்டே இருந்த அவர் திடீரென்று நான் ஏதோ ஒரு அரிய கேள்வியை கேட்டுவிட்டது போல் என்னை புகழ ஆரம்பித்தார்.இது ஒரு தொடர்ச்சியான நடைமுறை என்பது எல்லோருக்கும் கிடையாது என்று மட்டும் ஒருமுறை கூறினார்.அன்று அதைப்பற்றி நான் தீவிரமாக சிந்திக்கவில்லை. மறுநாள் காலையில் சீக்கிரமாக எழுந்து தாமிரபரணியில் குளிக்கவேண்டும் என்பதைத்தான் என் மனது நினைத்துக்கொண்டிருந்தது.

ஆனால் ஒரு கழுதை வயது, இரண்டு கழுதை வயது என்றெல்லாம் வயது ஏற ஏற அவர் கூறியது சரி என்பதும் என் கேள்விக்கு அவர் கூறிய பதிலும் மிகமிக நியாயமானது என்றும் எனக்கு புரிந்தது. புரிகிறது. புரிந்துக்கொண்டே இருக்கிறது.

நான் கேட்ட கேள்விக்கு சரியான பதிலைத்தான் கூறிஉள்ளார்.ஆனாலும் அந்த கேள்வியைப்பற்றி அதிகம் ஏன் யோசித்தார்? பிறகு ஒரு மாற்றத்தையும் கூறியது ஏன்?

நானும் யோசித்தேன்.இப்படி இருக்கலாம்.மனிதர்களை அதிகம் நம்ப நம்ப அதிக அனுபவம் நமக்கு கிடைக்கும்.ஒரேயடியாக நம்பாமல் விட்டாலும் வெற்றி கரமான மனிதனாக எதையும் சாதிக்கமுடியாது.

மனிதனின் சமூக வாழ்க்கையை முன்னெடுத்துபோவது மனிதர்களுக்குள் உள்ள அன்பு, நம்பிக்கை,பொறுமை,பயம்,காதல்,போட்டி,பொறாமை,ஈகோ, வயிற்றெரிச்சல், சுயநலம்,ஆதிக்க மனோபாவம் மற்றும் சில குணநலன் கள்தான்.இதன் கூட்டுகாரணிகள் ஒவ்வொரு மனிதனையும் இயக்குகின்றன. ஒவ்வொரு மனிதனின் இவ்வகையிலான செயல்களும் சமுதாயம் பயணிக்க கூடிய திசையினை தீர்மானிக்கின்றன.

இதுவரை சேர்க்கப்பட்ட அனுபவங்களை வைத்து தான் பின்பற்றவேண்டிய கொள்கைகளை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்தி வாழ்பவர்கள் பலபேர். இவர்கள் வாழ்க்கையில் பரிசோதனைக்கு இடமில்லை.

மேலும் மேலும் பரிசோதனைகள் செய்து வாழும் வரை அனுபவங்களை சேர்ப்பவர் சிலபேர்.அந்த சிலபேர்தான் சமுதாயம் பயணிக்க வேண்டிய திசையை தீர்மானிக்கின்றனர்.

இவ்வளவும் யோசித்துத்தான் அப்படி கூறியிருப்பாரா?உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா?

Thursday, May 11, 2006

அட ஆமாங்க..நிசமாத்தான்...

இந்த பதிவு எழுதுபவர் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலவரத்தைப்பற்றிய ஒரு ஆழமான நடுநிலை(?) பதிவு எழுதவேண்டி பல தகவல்களையும் சேர்த்துக் கொண்டிருப்பதாலும்....

வேலை செய்யற தாவுல ஒரு பரிட்சை இருப்பதாலும் சில நாட்களுக்கு இங்கன எதுவும் எழுத மாட்டாருங்கோவ்....

(இப்படித்தான் சொல்லுவ..ஆனா அடுத்த நாளே வந்து பல்லிளிப்ப என்று சொல்பவர்களுக்கு நோ கமெண்ட்ஸ்)

இப்போதைக்கு சுருக்கமாக சில கருத்துக்கள் மட்டும்:

பெரிதாக அதிருப்தி இல்லாததால் அதிமுக தனிப்பெரும் கட்சியாக தமிழகத்தில் உருவாகிவிட்டது எனலாம்.

தி.மு.க வின் செல்வாக்கு சரிந்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் வெற்றிக்கு கூட்டணி கட்சிகளின் பலமும் காரணம் (இந்த இரண்டும் திருமா சொன்னது.அதில் அர்த்தமுள்ளது)

வைகோவின் காமெடி தேர்தலுக்கு அப்புறமும் தொடர்கிறது.இவருக்கு கட்சியை வளர்ப்பது பற்றி சிறிதளவும் அக்கறை இல்லை போலும்.

காங்கிரஸ் ஸ்ட்ரைக் ரேட் நன்றாக உள்ளது.

விஜயகாந்த் ஒரு சில சீட்டுக்களை மட்டு்ம் குறிவைத்து பிரச்சாரம் அழுத்தமாக செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் பிடித்திருக்கலாம்.ஜெவை பெரிதாக விமர்சிக்காமல் கலைஞரை மட்டும் விமர்சிக்கும் அரசியலை மாற்றினால் இன்னும் வளர்ச்சி இருக்கும்.

கூட்டணி ஆட்சி கடிவாளம் நல்ல நிகழ்வு

பா.ம.கவிற்கு எதிர்ப்பார்த்த வெற்றி இல்லை.டாக்டர் சிந்திக்கவேண்டும்.

சல்மா தோல்வி,ரவிகுமார் வெற்றி.இலக்கிய அரசியல்

திருமாவளவன் தன் இயங்குமுறையை,இயங்குதளத்தை மாற்றவேண்டும்.

தயாநிதி மாறன் டாட்டா விவகாரம் தோண்டப்பட வேண்டும்.

இனியாவது துக்ளக் சோ ஆளுங்கட்சியை எதிர்த்து பத்திரிக்கை நடத்தலாம். பரம்பரை பகையை தீர்த்த மக்களுக்கு நன்றி.

திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி இனிமேல் நிபந்தனையற்ற ஆதரவினை திமுக அரசுக்கு தராது. உதாரணமாக இலவச டிவி திட்டத்திற்கு எங்கள் ஆதரவு இல்லை. இலவச அரிசி,நிலம் ஆகியவற்றுக்கு அனைத்துக் கட்சிகுழு அமைத்து(அதிமுக உள்பட) பயனாளிகளை தேர்வு செய்யவேண்டும்.

(விளக்கமான பதிவு சில நாட்களுக்கு பிறகு)

தி.ரா.மு.மு தலைவர் அவசர அறிக்கை
திராவிட ராஸ்கல்களை (இப்போதைக்கு) ஒழிக்கமுடியாது

கலைஞர் பதவியேற்பு வைபவத்தில் பங்குகொள்ள விமானநிலைத்திற்கு விரைந்த திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி தலைவர் தமிழினி முத்து அந்த அவசரத்திலும் நம்முடைய "டூப்பைத்தவிர வேறில்லை" பத்திரிக்கைக்கு தொலைபேசியில் அளித்த ஒருவரி பேட்டி.

Sunday, May 07, 2006

Schumi is back with a bang

ஆம்.நண்பர்களே.கிழட்டு சிங்கம் கர்ஜித்தது. இன்று மாலை ஜெர்மனியில் நடந்து ஐரோப்பியன் கிராண்ட் ஃப்ரி எனப்படும் கார்பந்தயத்தில் ஜெர்மனியின் மைக்கேல் சுமேக்கர் பட்டம் வென்றார்.

கடந்த வாரத்திலும் அவர் பட்டம் வென்றது ஃபெராரி அணி மீண்டும் கன்ஸ்ட்ரக்டர் பட்டமும் டிரைவர் பட்டமும் வெல்ல தயாராகிவிட்டதையே காட்டுகிறது.

நேற்றைய போட்டியில் போல் பொசிஷன் எடுக்கமுடியாத சுமேக்கர் இரண்டாவது ஆகத்தான் ஆட்டத்தை தொடங்கினார்.நடப்பு சாம்பியன் அலான்சோவிற்கு பின்னால் ஆட்டத்தை துவங்கிய சுமேக்கர் இரண்டாவது பிட் ஸ்டாப்பின் போது வெறும் ஆறு வினாடிகள் மட்டுமே எடுத்து அலான்சோவை முந்தினார்.

தலைவர் போல் பொசிசன் போட்டி முடிந்தவுடன் டுமாரோ வில் பி இன்ட்ரெஸ்டிங் என்றார்.அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது.
போட்டியில் அலான்சொ இரண்டாவது இடமும், ஃபெராரியின் மற்றொரு டிரைவர் பெலிப் மாசா மூன்றாவதாகவும் வந்தனர்.இவருக்கு இது வாழ்க்கையி்ல முதல் போடியம் ஃபினிஷ் எனப்படும் வெறறி.

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மெக்லாரன் அணி இன்னும் தங்கள் இன்சினின் நம்பகத்தன்மையை (Reliability) சரி செய்யமுடியவில்லை.ஆனால் கடைசி பத்து சுற்றுக்கள் பரபரப்பாக இருந்தன.சுமேக்கரை அலான்சோ துரத்த, அலான்சோவை மாசா துரத்த, மாசாவை ராய்கோனன் துரத்த ஒரே குஜால்தான்

Formula one at its best என்று சொன்னால் மிகையாகாது.

எனக்கு ஏன் என்று தெரியாமலே சுமேக்கரை மிகவும் பிடிக்கிறது.அவர் சிரிப்பா? வென்றவுடன் அவர் கொண்டாடும் அந்த ஸ்டைலா ( இரண்டு கைகளையும் தூக்குவதும்,போடியத்தில் ஏறியவுடன் ஒரு குதி குதிப்பார் பாருங்கள், தேசியப்பண் பாடிமுடியும்வரை அவர் சிரிப்பும் துள்ளலும்).எதுவோ ஆனால் அவர் ஒரு மிகப்பெரிய சாதனையாளர் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.

முப்பத்தி ஏழு வயதான சுமேக்கரை கடந்த ஆண்டு எப்போது ரிடையர் ஆகிறீர்கள் என்று கேட்டார்களாம்.Retirement? what Retirement? என்றாராம் இவர்.சுமேக்கர் ஒரு ஐகான்.அவர் இன்னும் சில வருடங்கள் தாராளமாக இருக்கலாம்.

ஃபார்முலா ஒன் மீண்டும் சூடுபிடிக்கிறது.அதற்கு காரணம் Schumi is back. Yes he is back with a bang.

சந்தி்ல டென்னிஸ் பற்றியும் எழுதிவிடுகிறேன்.(நண்பர் பரஞ்சோதிக் காகவாவது)

புல்தரை மைதானங்கள் மற்றும் ஹார்ட்கோர்ட் எனப்படும் செயற்கை மைதானங்கள் ஆகியவற்றில் ரோஜர் பெடரரும் களிமண்தரையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ரபேல் நடலும் ஆள்கிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது.

ஆனால் நடல் என்பவர் புல்தரை போட்டிகளில் கலந்துகொள்வதே இல்லை. களிமண்தரையே போதும் என்கிறார்.ஆனால் ஃபெடரர் கவலைப்படுவதில்லை. முயற்சி செய்கிறார்.கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் ஃபெடரர் எவ்வளவோ முயற்சி செய்தும் கடினமாக போராடியும் நடலை வெல்ல முடியவில்லை.(களிமண் தரை மைதானம்தான்)

வரும் பிரெஞ்சு ஓபன் நடலுக்குத்தான் என்பதுதான் இப்போதைய நிலை. பார்ப்போம்.ஆனால் புதுமுகங்கள் பிரென்சு ஓபனில் நிறைய ஜெயிப்பதுண்டு. பார்ப்போம்.பெண்களில் கிம் கிளிஸ்டர்ஸ் என் பெட். ரஷ்யா அழகி மரியா சரபோவா வையும் குறைத்து மதிபபிடமுடியாது.பார்ப்போம்.

சுமேக்கர்,ஸ்டீவ் வாக்,மைக்கேல்ஜோர்டான் ஆகியவர்கள் எப்போதும் என் ஆல்டைம் தி கிரேட் லிஸ்ட்டில் இருப்பவர்கள்.

நடந்தது என்ன? - ஒரு விளக்கம்

சில வாரங்களுக்கு முன் மதி கந்தசாமி என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு மே ஒன்றிலிருந்து துவங்கும் வாரத்திற்கு தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருக்கமுடியுமா என்று கேட்டார். மறுபேச்சில்லாமல் நானும் சரியென்று ஒத்துககொண்டேன். ஏற்கனவே வாரத்திற்கு இரண்டு மூன்று என்று காணாததை கண்டவன் போல் நான் பதிவு போட்டு திரிவது தமிழ்மணம் நண்பர்கள் அறிந்ததே.

ஆனாலும் தினம் ஒரு பதிவு கேட்கப்பட்டதால் பதிவுகள் தயார் செய்ய ஆரம்பித்தேன். தயார் செய்ய செய்ய பதிவுகள் நிறைய தயார் ஆக ஆரம்பித்தன. ஆகவே நட்சத்திர வாரத்திற்கு முன்பிருந்தே பதிவுகளை ரீலிஸ் செய்ய ஆரம்பித்தேன்.இந்த வாரத்திலும் நிறைய பதிவு போட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்.சராசரியாக தினமும் இரண்டு.பதிவுகள் போட்டிருக்கிறேன்.இந்த வாரம் மட்டும் இதுவரை பத்து ஆயிரம் ஹிட்ஸ்.மிகவும் நன்றி நண்பர்களே.


நான் எல்லோருக்கும் பின்னூட்டம் தொடர்ந்து போடுவதில்லை. நேரம் இருப்பதை பொறுத்தும், படிப்பதை பொறுத்தும் , புதியவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் பின்னூட்டம் இடுவது என் பாணி.


பின்னூட்டத்தைவிட முக்கியமாக நிறைய பேர் என் பதிவுகளை படிக்கவேண்டும் என்று நான் நினைப்பேன். பெரிதாக அரிய கருத்துக்களை பிரச்சாரம் செய்வதாக எனக்குள் ஒரு அல்ப எண்ணம் இருக்கிறது. தமிழ் மணத்திற்கு வந்த புதிதில் கவுண்ட்டரை அடிக்கடி பார்ப்பேன்.அடடே இன்னைக்கு ஐம்பது பேருக்கு நம்முடைய கருத்து ரீச் ஆயிட்டுதே என்றெல்லாம் புளகாங்கிதப்பட்டு போவேன்.


நான் அறிமுகபதிவில் போட்ட எல்லா தலைப்புகளிலும் பதிவு போட்டுவிட்டேன். எல்லா பதிவுகளுக்கும் நல்ல வரவேற்பை கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. மட்டுறுத்தல் செய்யவேண்டிய தேவை எதுவும் எனக்கு வரவில்லை.

********************

போலி டோண்டு பிரச்சினைப்பற்றி நான் எழுதிய பதிவில் ஆத்திரம் கண்ணை மறைக்க ஒரு சகவலைப் பதிவரை விமர்சித்து எழுதியிருந்தேன்.நான் எழுதிய விஷயத்தில் எனக்கு வருத்தம் இல்லை என்றாலும் பிரச்சினை வேண்டாம் என்ற காரணத்தால் அதை திருத்தியுள்ளேன்.


போலி டோண்டு பிரச்சினையை இல்லாமல் போக செய்ய இந்த வாரத்தில் என்னாலான நடவடிக்கையை எடுத்தேன். இது வெற்றி பெறுமா என்று என்னால் சொல்லமுடியவில்லை.பார்ப்போம்.ஆனால் இதைப்பற்றி வலைப்பதிவில் விவாதிப்பதையும் எழுதுவதையும் தவிர்ப்பது இந்த பிரச்சினையை பெருமளவு குறைக்கும். இது என் வேண்டுகோள்.

**********************

அறிமுகப்பதிவில் இருந்து நண்பர் சிவபாலன் நான் ரசித்து எழுதிய வாக்கியததை எடுத்து எழுதி என் வயிற்றில் பால் வார்த்தார்.அவருக்கு என் ஸ்பெஷல் நன்றி. இந்த கருத்து சிலரையாவது சிந்திக்க வைக்கும் என்று நான் மிகவும் விரும்பிய கருத்து.இதுபோல் அனைத்து பதிவுகளிலும் சில விஷயங்கள் எழுதியுள்ளேன். 150 க்கும் மேற்பட்ட பின்னூட்டம் பெற்று எனக்கு ஊக்கமூட்டிய பதிவு இது.


தருமியை நான் சந்தித்த பதிவில் தருமியின் கோழிக்கறி குருமாவை நான் பாராட்டப் போக கறி சமைத்து கூரியரில் அனுப்பச்சொல்லி அவருக்கு ஏகப்பட்ட ஆர்டர் என்று செல்லமாய் கோபித்துக்கொண்டார்.


அடுத்ததாக நான் போட்ட பதிவு கம்யூனிஸ்ட்டுகளை பற்றி. எனக்கு இதில் ஆழமான தேர்ச்சி இல்லை என்றாலும் ஓரளவு தெளிவு உண்டு. இதில் ஆர்வமாக பங்கு கொண்டு எழுதிய சந்திப்பு, புதுவை சுகுமாரன், சங்கர் நாராயணன், மா.சிவக்குமார் செல்வன் ஆகியோருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.இவர்கள் அனைவரும் தத்துவத்தில் ஆழ்ந்த பரிச்சயம் கொண்டவர்கள்.இதை வைத்து சங்கரும், சுகுமாரனும், பட்டணத்து ராசாவும் தனிப்பதிவு போட்டார்கள்.தீ பரவட்டும்.


அடுத்தது நான் எதிர்பாராதது. நான் எழுதியதும் ஒரு கவிதை என்று அதை பாராட்டியதும் இல்லாமல் அதை பிரித்து மேய்ந்து கருத்து சொன்ன இளவஞ்சி, பினாத்தலார்,சங்கத்தலைவர் ஆசிப் மீரான், உஷா ஆகியோருக்கு இங்கு ஸ்பெஷல் நன்றிகள்.இதற்கும் தனிபதிவுகள் ஆசிப், பினாத்தல்,பட்டணத்து ராசா ஆகியோர் இட்டிருந்தனர். முத்துவின் நாய் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டது என்று உஷா பொறாமைப் பட்டார்.ஜெர்மன் முத்துவும் நாய்களைப்பற்றி ஒரு பதிவு போட்டுள்ளார்.


அடுத்து காதல் என்று ஒரு கதை.சிலர் இதை அனுபவம் என்றார்கள். கல்யாணம் ஆன ஆட்களுக்கு இது அவர்கள் வீட்டிலும் அடிக்கடி நடக்கும் கதை என்பதால் நமுட்டு சிரிப்போடு நழுவினர். சின்ன பசங்களுக்கு ஒண்ணுமே புரியலை.சில பிஞ்சிலே பழுத்த ஆட்களுக்கு புரிந்ததாக நமுட்டு சிரிப்புடன் கூறினார்கள்.


அடுத்ததாக லேசர் சாப்ஃட் என்ற கம்பெனியின் முதலாளிப்பற்றி எழுதினேன். நல்ல உள்ளங்களை எழுதுவதில் நான் இனம்,மத பாகுபாடுகளை பார்ப்பதில்லை. தமிழ்ப்பற்று இருப்பதாலேயே நான் மற்றவர்களை வெறுக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.இந்த பதிவை எழுத எனக்கு உறுதுணையாகவும் ஊக்கமாகவும் இருந்த என் அருமை நண்பர் வினையூக்கி செல்வக்குமாருக்கு நன்றி.


சாயிபாபா பற்றி எழுதிய பதிவு சாதனை படைத்தது.(என்னளவில்).அதில் வெறும் தாக்குதல் மட்டும் இல்லாமல் இவர்களின் சமூக சேவை பாராட்டத்தக்கதா என்று கேள்வியை ஆதாரங்களுடன் வைத்திருந்தேன். அதைப்பற்றி பெரிதாக விமர்சனம் இல்லை என்றாலும் குறைந்தபட்சம் வலைப்பதிவாளர்களில் பெருவாரியானவர் இதுபோன்ற போலி சாமியார்களை மதிப்பதில்லை என்பது அறிந்து மகிழ்கிறேன்.

கிறிஸ்தவ மதத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை விமர்சித்து எழுதிய பதிவையும் நான் என்னளவில் நியாயமாகவே எழுதினேன்.எந்த மட்டுறுத்தலும் இல்லை. ஏற்கனவே இஸ்லாம் பற்றியும் எழுதியுள்ளேன். ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் தனிப்பதிவு போட்டு நான் இதுவரை இந்து மதத்தை விமர்சிக்கவில்லை என்பதுதான்.ஆயினும் அங்காங்கே பொதுவாக நான் மதங்களை நிராகரிப்பது, நாத்திகம் பேசியதற்காகவே என்னை பலபேர் சுரண்டிப் பார்த்தார்கள்.அவரை திட்டமுடியுமா? இவரை திட்ட முடியுமா என்பதுபோல் கேள்விகள். சவால்கள். அதற்காக நான் இவறறை எழுதவில்லை என்றாலும் இனிமேல் இந்த வெற்று சவடால்கள் வராது என்று நம்புவோம்.


நான் முரட்டுக்காளையை அடக்கியது பற்றி எழுதிய பதிவுக்கு ஏனோ பெரிய வரவேற்பு இல்லை. அது ஒரு காமெடிதான் என்றாலும் நான் உண்மை யிலேயே காளையை அடக்காதது பலருக்கும் ஏமாற்றமாக இருந்தது.ஹி.ஹி.

கனவு காணும் வாழ்க்கை என்று நான் போட்ட பதிவு இதே போல் கனவுகள் பலருக்கும் இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியது.எனக்கு பிடித்த எழுத்தாளர் சு.ராவைப்பற்றி எழுதியுள்ளேன்.

*********************

கமலைப்பற்றி எழுதுவது என் எதிர்கால பிளான். எனக்கு பிடித்த வலைப்பதிவு களை பற்றி நான் தயார் செய்திருந்த பதிவு, இந்து மத தத்துவ சிநதனைகள் ஆகியவற்றைப்பற்றி நான் தயார் செய்திருந்த பதிவு, ஒரு நகைச்சுவை பதிவு வங்கிகளை பற்றி பதிவு, விளையாட்டு பற்றிய பதிவு ஆகியவை பதிப்பிக்க முடியவில்லை.

இந்த நட்சத்திர வாரத்தில் திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி உதயமாகி உள்ளது என்பதையும் உங்களுக்கு பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பிற்காலத்தில் துவங்கும் கட்சிக்கும் இதே பெயர்தான்.
இந்த கட்சியின் கொள்கைகள் பற்றி விளக்கமாக தொடர் பதிவு போடும் எண்ணம் உள்ளது.

*********************
தேர்தல் சமயம் என்றாலும் தமிழக தேர்தல் பற்றி என் பதிவில் எதுவும் எழுதவில்லை. நான் ஏற்கனவே என் சார்பு நிலையை வெளிகாட்டி (இதனாலேயெ சிலரிடம் வாங்கிகட்டி) விட்டதால் இதுப்பற்றி எழுத எதுவும் இல்லை.

தேர்தல் முடிவு வெளிவந்தவுடன் இதுப்பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதும் எண்ணம் உண்டு.யார் ஜெயித்தாலும் சரி.ஏதோ நம் கையில்தான் எல்லாம் உள்ளது என்ற பாணியில் சவடால் விடுவது நியாயமாக இருக்காது.
**********************

நடுவில் பல அருமையான பதிவுகளை பார்த்தும் வேலை மும்முரத்தால் அதைப்பற்றி விரிவாக எழுதமுடியவில்லை. பிறகு எழுதுகிறேன்.

இதில் குறிப்பிட்ட , குறிப்பிடப்படாத அனைத்து நண்பர்கள் என் பதிவுகளை தொடர்ந்து படித்த, பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்கள் , இந்த வாய்ப்பை அளித்த தமிழ்மண நிர்வாகிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
***********************

Saturday, May 06, 2006

என்னை கவரும் சுந்தர ராமசாமி

ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதற்கும் பூரண விசுவாசம் செலுத்துகிறவன் அல்ல. நடைமுறை அர்த்தப்படி கட்சிகள், அரசாங்கம், சமூகம், மதம்,தேசம் இவற்றிற் கெல்லாம் பூரண விசுவாசம் அளித்து விடக் கூடாது என்பதை என் இலக்கியக் கொள்கையின் ஒரு பகுதியாக நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.

வெகுஜனத்தின் நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதோ, புதிய நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களை தூண்டுவதோ என்னுடைய வேலை அல்ல.அவர்களுடைய பொது நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விதி விலக்கான உண்மைகளைச் சொல்லி,அந்த சந்தர்ப்பங்களில் அவர்களுடைய விரோதி யாகவும், காலத்தின் நண்பனாகவும் இருப்பதே என் வேலை என்று எண்ணுகிறேன்.

(சு.ரா வின் நானும் என் எழுத்தும் என்ற நூலிருந்து)

எந்த யோசனையும் இல்லாமல் என்னை கவர்ந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் சுந்தர ராமசாமி என்று கூறிவிடலாம். மேலோட்டமாக எழுதக்கூடிய எழுத்தாளர், இறுக்கமான செயற்கை நடையை கொண்டவர், பார்ப்பன மேலாண்மையை வலியுறுத்துபவர் என்றெல்லாம் பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது இருந்தாலும் அத்தனையையும் மீறி அவர் எழுத்துக்கள் எனக்கு பிடித்துத்தான் இருக்கிறது.


ஏறத்தாழ அவரின் அனைத்து ஆக்கங்களையும் படித்துள்ளேன். சிறுகதை, நாவல், கட்டுரைகள் என்று எல்லாவற்றையும் படித்துள்ளேன்.பொதுவாக நவீன கவிதைகளை உள் வாங்கி கொள்வதில் எனக்கு சில பிரச்சினைகள் உண்டு.ஆகவே சு.ரா வின் கவிதைகளை நான் இன்னும் படிக்கவில்லை.

சு.ரா.வின் மொழிபெயர்ப்பி்ல் தோட்டியின் மகனையும் அவரின் கடைசி கால சிறுகதைகளில் ஒன்றான பிள்ளை கெடுத்தாள் விளையையும் தலித் எழுத்தாளர்களிடம் இருந்து குற்றச்சாட்டு வருவதற்கு முன்பே படித்துள்ளேன். என் சிறுமூளைக்கு அவர் எதுவும் அவதூறாக எழுதியதாக தோன்றவில்லை. அவரின் திராவிட கட்சிகளின் மீதான விமர்சனங்களையும் நான் கடுமை யானதாக கருதவில்லை.ஒரு சில கருத்துக்கள் நாணயமாகவே தோன்றுகிறது.

அ.மார்க்ஸ் போன்ற தலித்திய,பின்நவீனத்துவ விமர்சகர்கள் அவரை ஓயாமல் தாக்கியே வந்திருந்தாலும் நான் அவர்களுக்கு எதிரி அல்ல என்பதையே சு.ரா மீண்டும் மீண்டும் சொல்லி வந்தார். இது அவரின் வாழ்வின் முதுமையான கடைசி கட்டம் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஒரு எழுத்தாளர் நமக்கு பிடிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று வாழ்வின் பல்வேறு விஷயங்களின் மேல் நாம் வைத்திருக்கும் மதிப்பீடுகள். அவர்களின் எண்ணப் போக்குகளுடன் நம்முடைய எண்ணங்களை ஒப்பிட்டு அவர்களிடம் இருந்து அஙகீகாரம் பெறுகிறோம்.ஆனால் அதற்காக அவர்கள் அடிக்கும் எல்லா கூத்துக்களையும் தாங்கி பிடிக்கும்போதுதான் பிரச்சினை வருகிறது.


ஜெயமோகனின் ஒரு சுந்தர ராமசாமி-நினைவின் நதியில் நூல் ஒரு முக்கியமான நூல். அந்த நூலில் அடிக்கடி தான் சுந்தர ராமசாமியை மீறி சென்றதாக ஜெயமோகன் எழுதியிருப்பார். அந்த "மீறி" என்ற வார்த்தையை "மாறி" என்று அடுத்த பதிப்பில் ஜெயமோகன் போட்டுகொள்வாரேயானால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.மீறல் என்ற வார்த்தை வேறுவிதமாக அர்த்தம் கொடுக்கிறது.

சு.ராவை வெறுமனே புகழ்வதைவிட அவரின் மீதான கறாரான விமர்சன பார்வையை செலுத்தியுள்ளதாக ஜெயமோகன் கூறுகிறார். இந்த நூலை படிக்கும் சு.ரா வாசகர்கள் பல இடங்களில் முரண்படலாம்.என்னளவில் நான் முரண்படும் இடங்களில் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

எழுத உட்கார்ந்தால் நம்மில் வேறு ஒரு ஆள்(சாமி(?))இறங்கிவிட வேண்டும் என்றும் கண்ணை மூடிக்கொண்டு எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது ஜெயமோகனின் எண்ணம்.அப்படியென்றால் தான் அது இலக்கியம் என்றும் நினைக்கிறார் அவர். சுந்தர ராமசாமி யோசித்து யோசித்து மெதுவாக எழுதுவதாகவும் அதை தவறு என்று கூறி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் போட்டு பார்ப்பார் ஜெமோ. அது ஏன் என்று எனக்கு புரிந்ததே இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பகுத்தறிவு என்பதையும் போட்டுப்பார்ப்பார் ஜெமோ என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

தன்ணுணர்வு இல்லாமல் எழுதுவதுதான் இலக்கியம் என்று இவர் எப்படி நிர்ணயிக்கலாம்? இந்த நூலிலும் நவீனத்துவ எழுத்தாளர்கள் என்று அசோகமித்திரன், ஜீ.நாகராஜன் மற்றும் சு.ராவை வேறு ஒரு நூலிலும் மதிப்பிட முயற்சிக்கும் ஜெயமோகன் பல்வேறு காரணங்களை கூறி ஜீ.நாகராஜன் மற்றும் சு.ரா ஆகியோர் எழுதுவது இலக்கியமே இல்லை என்று அளவிற்கு போகிறார்.ஆனர்ல அவர்களின் இடம் தமிழ் இலக்கியத்தில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது என்றும் கூறுகிறார்.இங்கு ஜெயமோகனுடன் சேர்ந்து நமக்கும் குழப்பம் வருகிறது.

அடுத்ததாக ஜெயமோகனின் "பின் தொடரும் நிழல்" நாவலில் கம்யூனிஸ்ட் கட்சியினரால் துரத்தப்பட்ட கெ.கெ.எம் ஒரு கம்புடன் கோயிலில் இருந்து மீளும் காட்சி தன்னை எப்படி உலுக்கியது என்பதை சு.ரா உணர்ச்சிகரமாக சொன்னதாக எழுதியிருப்பார் ஜெமோ.சு.ரா போன்ற ஒரு நவீனத்துவர் இதுபோன்ற தமிழ் சினிமா காட்சிக்கு நிகரான காட்சியமைப்பினால் உலுக்கப்பட்டிருப்பார் என்று சு.ரா வின் பல புத்தகங்களை படித்த எனக்கு தோன்றவில்லை. சிஷயப்பிள்ளையை சந்தோஷப்படுத்தும் நோக்கத்துடன் ஏதாவது சொல்லியிருக்கலாம்.

இவரைப்பற்றி(சு.ரா) ஒரு புத்தகமே எழுதலாம் என்று எனக்கு ஒரு எண்ணம் உள்ளது. பார்ப்போம்.மற்றபடி,சு.ரா வின் காகங்கள் என்ற சிறுகதையும் ஜே.ஜே.சில குறிப்புகள் என்ற நாவலும் எனக்கு மிகவும் பிடித்த படைப்புகள்.எத்தனை முறை படித்தாலும் சளைக்காத ஆக்கங்கள்.

கனவு காணும வாழ்க்கை எல்லாம்...

நீங்கள் கனவு காண்பதுண்டா?.ஆழ்தூக்கத்தில் நம்மையறியாமல் வரும் கனவு இல்லை.இது விழிப்பு நிலையிலேயே நாம் காணும் கனவு.ரயிலில் தூர பிரதேசம் போகும்போது தூங்கவும் பிடிக்காமல் படிக்கவும் பிடிக்காமல் சில நேரம் அரை தூக்கத்தில் கிடப்போம்.அது போன்ற நேரங்களையும் பஸ்ஸில் போகும்போதும் நேரத்தை கடத்த நான் வைத்திருக்கும் உபாயம் இது.

நாம் காணும் பகல் கனவு நம் உள்மனதுக்கு(sub-consious mind) சென்று விட்டால் நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையும் அதை நோக்கியே இருக்குமாம்.நாம் ஆசைப் பட்டது(கனவு கண்டது) நடக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

என் கனவுகள் இருவகைதான்.ஒன்று நான் இந்த நாட்டுக்கு சர்வாதிகாரியானால் செய்ய வேண்டிய உடனடி கடமைகள் என்ன என்பது பற்றி.இது மிக சுவாரசியமாக இருக்கும்.தருமி இதுபோல் ஒரு பதிவு போட்டிருந்தார்.இது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

இன்னொருவகை கனவு என்னுடைய "பண்ணை இல்லம்" பற்றியது.எப்படி எனக்கு இந்த பண்ணை இல்லம் கிடைக்கிறது என்பதைப் பற்றி நான் மிகவும் குழம்புவதில்லை. அது தனி கனவு ட்ராக்.ஆனால் பண்ணை இல்லம் கனவைப்பற்றி மட்டும் விலாவாரியாக சொல்கிறேன்.

கேரளா மாதிரி ஒரு இடம்.மலைபிரதேசம் அல்ல. சமவெளிதான். ஆனால் என் பண்ணை இல்லம் ஒரு ஆற்றங்கரையோரம் உள்ளது.சலசலவென்று மெதுவாக செல்லும் ஆற்று நீர். சுற்றி அழகான வேலி அமைத்திருக்கிறேன். ஒரு பக்கம் வேலி இல்லை.அழகான ஆறு இருப்பதால் அந்தப்பக்கம் திறந்தவெளிதான்.

எல்லாவித பழ மரங்களும் உண்டு. மா, பலா, வாழை, கொய்யா, சாத்துக்குடி என்ற பழ வகைகளும் பூச்செடிகளும் பசும்புற்களுமாக ஒரு புறம். ஆடு,மாடு, நாய்,கோழி ஆகியவையும் இதே பண்ணையில் இருக்கின்றன.எந்த நேரமும் இரண்டு ஆட்டு குட்டிகளாவது அல்லது இரண்டு நாய்குட்டிகளாவது கொஞ்சுவதற்கு இருந்துகொண்டே இருக்கின்றன.

என் வீடு அந்த பண்ணை நடுவில் ஒரு சிறிய குடிசை.கூரை வேய்ந்த அந்த குடிசையில் உள்பக்கம் நடுவில் திறந்தவெளி.மழை பெய்தால் உள்ளிருந்தே மழையை ரசிக்கலாம்.அங்கே மின்விசிறி, ஏஸி முதலியன இல்லை.ஆனால் கம்ப்யூட்டர்,டிவி உண்டு.ஒரு சிறிய படிப்பறை.

எப்போதும் படிப்பதற்கு என்னிடம் ஐம்பது புத்தகங்களாவது இருந்துகொண்டே இருக்கிறது. தமிழ் இலக்கியங்கள், பிறமொழி இலக்கியங்கள் என்று பல நூல்கள் உள்ளன.

எனக்கு தேவையான காய்கறிகளை என் பண்ணை இல்லத்தில் நானே பயிரிட்டுக் கொள்கிறேன். பால் தயிர் வகைகள் எல்லாம் என் பண்ணை விலங்குகளிடம் இருந்து நானே பெற்றுக் கொள்கிறேன்.

பண்ணையின் ஒரு புறம் உலகத்தரத்தில் ஒரு அமைக்கப்பட்ட ஒரு டென்னிஸ் மைதானம் அமைத்திருக்கிறேன்.அதில் காலை நேரம் நான் விளையாடுகிறேன்.அந்த பகுதி இளைஞர் களுக்கு பயிற்சியளிக்கிறேன்.ஒரு சிறிய கிராமப்புற பாணி உடற்பயிற்சி மையமும் உண்டு.மாலை நேரம் அந்த பகுதி குழந்தைகள் எல்லாம் என் பண்ணை இல்லத்திற்கு வருகின்றன. விளையாடு கின்றன.படிக்கும் குழந்தைகளுக்கு என்னாலான பாடத்தை நான் சொல்லித்தருகிறேன்.

இந்த பண்ணை இல்லத்தில் அமர்ந்துகொண்டு வரும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி தருகிறேன்.( திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி தலைவர் திரு.தமிழினி முத்து அவர்கள் அவருடைய பண்ணை இல்லத்தில் வைத்து தந்த பேட்டியில் தான் வருங்கால முதல்வர் மட்டும் அல்ல,தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சரும் கூட என்றார். பேட்டியின் போது துணைத்தலைவர் "அஞசாநெஞ்சன்" பொட்டீக்கடையும், பொதுச்செயலாளர் "இனமான பேராசிரியர்" தருமியும்,துணை பொதுச்செயலாளர் "வியட்நாம் வென்றான்" ஜோவும் உடன் இருந்தனர்)

சரி.சரி.நிறுத்திக்கொள்வோம்.ஆனால் எனக்கு இந்த கடைசி பத்தி நீங்கலாக மற்ற விஷயங்களுடன் ஒரு கனவு வாழ்க்கை கிடைத்தால் அமெரிக்க ஜனாதிபதி பதவியே ஆனாலும் சரி, ரிலையன்ஸ் குழும தலைவர் பதவியே ஆனாலும் சரி, வேண்டாம் என்றுதான் கூறுவேன்.


(அவரவர் கனவு வாழ்க்கைப்பற்றி பின்னூட்டத்தில் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்)

Friday, May 05, 2006

காளையை அடக்கிய முத்து(தமிழினி)-பரபரப்பு

முரட்டு காளையை அடக்கிய முத்து (தமிழினி). பரபரப்பு. பதட்டம்.ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம்.இதயம் பலவீனம் உடையவர்கள்,ரத்தத்தை பார்த்தால் மயக்கம் போடுபவர்கள், ஆஸ்பத்திரி வாசம் பிடிக்காதவர்கள் படிக்கவேண்டாம்.அப்புறம் முதலில் ஏன் சொல்ல வில்லை என்று வருத்தப்படக்கூடாது என்பதால் முன்னரே சொல்லிவிட்டேன்.இது நான் ஜல்லிக்கட்டில் கலந்துக்கொண்ட அதிரடி அனுபவம்.


நான் முதலில் வேலைக்கு சேர்ந்த அந்த ஊரில் பல நாட்களுக்கு பின் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா என்பதால் இளவட்டங்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. பொதுவாக இதுப்போன்ற உள்ளூர் விழாக்களின் போது யாரும் வங்கிப்பக்கம் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள்.நாங்கள் பழைய பெண்டிங் ஃபைல் எல்லாம் பார்த்து காலத்தை ஓட்டுவோம். ஊர் பெரியவர்கள் எங்கள் எல்லோரையும் ஜல்லிக்கட்டு பார்க்க அழைத்தார். நாங்கள் நாலேபேர் தான் ஊழியர்கள் என்பதாலும் நான்தான் இருந்ததிலேயே இளவட்டம் என்பதாலும் என்னை மட்டும் மேனேஜர் அனுப்பினார்.


நானும் போய் ஓசி பிரியாணியை ஒரு கை பார்த்துட்டு அங்கே போனேன். ஒரு சிறிய தெருவின் ஒரு பகுதியை அடைத்து மேடை போடப்பட்டிருந்தது. அந்த மேடைக்கு அடியில் வாடி வாசல். வாடி வாசல் என்னவென்றால் ஜல்லிக்கட்டு மாடு வெளியே வரும் இடம்.அங்கிருந்து மாட்டை விரும்புவோர் பிடிக்கலாம்.மதியம் சுமார் 12 மணியளவில் ஜல்லிக்கட்டு ஆரம்பம் ஆனது. அனுபவசாலிகள், என்னை மதியம் இரண்டு மணிக்குமேல் வந்தால் போதும் என்றிருந்தார்கள். ஆனால் நான் ஆர்வத்தில் (பிரியாணி) முதலிலேயே போய்விட்டேன்.நான் அப்போது ஒரு சாதாரண கிளார்க் தான் என்றாலும் பேங்க்காரர், பேங்க்காரர் என்று பயங்கர மரியாதை இருந்தது ஊரில்.


கேஷ் கவுண்ட்டரில் பணத்திற்கு மத்தியில் அமர்ந்து கேஷ் எண்ணுவதை பார்த்துவிட்டு அத்தனை பணமும் என்னுடையது என்று கிராம மக்கள் தவறாக நினைத்துக்கொள்வதால் உருவாகும் மரியாதை இது என்பேன். நான் அப்போது பேச்சிலர் ஆக் இருந்ததும் ஒரு காரணம் என்று எங்கள் மேனேஜர் சொல்லுவார். என் பெயரை சொல்லி பெண்ணை பெற்றவர்களிடம் டெபாஸிட் வாங்கிய கில்லாடி அவர்.நான் புரட்சி(?) செய்தவுடன் பலபேர் அந்த ஊர்ல அப்செட் ஆனதாக சொல்லி என்னை ஓட்டுவார் அவர்.வாடிவாசலுக்கு அருகில் ஊர் பெரியவர் ஒருவரின் மொட்டை மாடியில் சேர் போட்டு என்னை அமர வைத்தனர்.மேடைமேலே ஒரு ஆள் கமெண்டரி கொடுத்துவந்தார்.அந்த ஊர் பஞ்சாயத்து சேர்மனின் மகன் என்னுடன் கோவை ராமகிருஷ்ணா மிஷனில் படித்தவன் ஆதலால் அருகில் அமர்ந்து ஜல்லிக்கட்டின் பல நுணுக்கங்களை என்னுடன் பேசிக் கொண்டிருந்தான்.கமெண்டரி கொடுக்கும் ஆளின் முக்கியத்துவத்தை நான் அப்பொது தான் தெரிந்துக் கொண்டேன். தொடர்ச்சியாக நாலு ஐந்து மணிநேரம் பேசக்கூடியவனாக இருத்தல் வேண்டும். நம்முடைய கிரிக்கெட் கமெண்டரி போல அல்ல. டோனி கிரெய்க் மாதிரி உச்சத்ஸதாயில் கத்தவேண்டும். அனைத்து மாடுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்திருக்கவேண்டும். அப்போதைக்கப்போது சரக்கு (சாராயம் தான் அய்யா) உள்ளே இறங்கிக்கொண்டே இருக்கவேண்டும்.ஜல்லிக்கட்டை உற்சாகமாக கொண்டு போவதில் அவரின் பங்கு இன்றியமையாதது.


முதலில் கோயில் மாடு விடப்பட்டது. யாரும் அதை தொட மாட்டார்களாம். சாவதானமாக வெளியே வந்த அது மக்கள் கூட்டத்தை பார்த்து மிரண்டு ஓரமாக ஒதுங்கியது. பிறகு சில கன்றுகுட்டிகள் விடப்பட்டன.இந்த கன்றுகுட்டிகள் எல்லாம் ரியல் சிட்சுவேஷனில் ட்ரெயினிங் எடுக்கின்றனவாம். ஆரம்பத்தில் கூட்டமே இல்லாதிருந்த தெரு கொஞ்சம் கொஞ்சமாக களை கட்டியது.


சற்று அளவில் பெரிய காளைகள் பாய்ந்து வர ஆரம்பித்தன.கிழவர் முதல் குமரர் வரை அனைவரும் வீதியிலேயே பயமில்லாமல் நின்றுக்கொண்டு இருந்தனர்.அனைத்து பெண்களும் அருகில் உள்ள வீடுகளின திண்ணையிலோ மொட்டைமாடிகளிலோ இருந்தனர்.பஸ் ஸ்டாப்பிலோ டீக்கடையிலோ நான் அன்றாடம் பார்க்கும் குப்பன், சுப்பன், கோவிந்தன் எல்லோரும் மாட்டை ஒரு கையில் பிடித்து தூக்கி எறிந்து விடுபவர்களை போல் வேட்டியை தார்ப்பாய்ச்சி கட்டிக்கொண்டு நின்றிருந்தனர்.சிலர் நான் மாடியில் அமர்ந்திருந்ததை பார்த்து நக்கலாக சிரித்தாற்போல தெரிந்தது. ஆனால் நான் தெளிவாக இருந்தேன்.


பலபேரின் லட்சியம் ஓடிவருகிற மாட்டின் முதுகில் ஒரு தட்டு தட்டிவிடுகிற ஆர்வம் தான்.ஒரு முறை ஒரு தட்டு தட்டிவிட்டவுடன் லட்சியத்தை சாதித்த நிறைவுடன் பெண்கள் அமர்ந்திருக்கிற பகுதிகளை பலர் ஏறிட்டு பார்ப்பதும் நடந்தது. கொஞ்ச நேரத்தில் கொம்பு கூர் சீவப்பட்ட முரட்டு காளைகள் வர ஆரம்பித்தன. விவரமான பலர் ஒதுங்க ஆரம்பித்தனர். ஆனால் தெருவில் கூட்டம் சேர்ந்துக்கொண்டேதான் இருந்தது.


சுற்று வட்டார அனைத்து கிராமங்களிலும் இருந்து பல வீரர்களும் வந்து களத்தில் குதிக்க சூழ்நிலை பரபரப்பானது. இதற்கிடையே ஒரு நண்பரின் தூண்தலுக்கேற்ப நானும் கீழே இறங்கிச்சென்று இருப்பதிலேயே சாதுவாக ஓடி வந்துக் கொண்டிருந்த ஒரு மாட்டை தேர்தெடுத்து அதன் முதுகில் தட்டினேன். திரும்பிப்பார்த்த மாடு (அந்த செகண்ட் என் மூச்சே நின்னுடுச்சிய்யா) என்னை மன்னித்துவிட்டேன் என்பதுபோல பார்த்துவிட்டு ஓடியது.பெண்கள் பகுதியை ஏறிட்டு பார்க்கவேண்டும் என்று தோன்றிய ஆவலை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு (பேங்க்காரர் அல்லவா) மீண்டும் மாடியில் அடைக்கலமானேன்.நண்பர் கூறிக்கொண்டிருந்தார். வழக்கமாக இந்த மாதிரி ஜல்லிக்கட்டுகளில் மாடு பிடிக்க வருபவன் மாட்டிடம் இருந்து தப்பிவிடுவானாம். வேடிக்கை பார்க்க வருபவனை மாடு தூக்கிவிடுமாம். மாடு பிடிக்க வருபவன் எப்படி சிக்கலானால் மாட்டிடம் இருந்து பாய்ந்து தப்பிக்கவேண்டும் என்று அறிந்திருப்பான்.வேடிக்கை பார்க்க வரும் ஆர்வகோளாறுகள் டெக்னிக் தெரியாமல் மாட்டிக்கொண்டு விடுமாம்.


பல மாடுகள் வாடிவாசலை விட்டு வெளியே வந்தவுடன் ஒரே ஓட்டமாக ஓடிவிடும். இந்த இடத்தில் ஒரு சுவையான சொற்பிரயோகம் உள்ளது. அதுதான் "நின்று விளையாடுதல்" என்பது. அதாவது சில மாடுகள் வாடி வாசலை விட்டு வெளியே வந்தவுடன் நேராக கூட்டத்தை வி்ட்டு வெளியே ஓடாமல் அங்கேயே நிற்கும் சுத்தி சுத்தி நடக்கும். நமது வீரமறவர்களும் அதை சுற்றி சுற்றி ஓடுவார்கள். மாடு அசந்த நேரம் பாய்வதற்கு. அந்த கணம் உண்மையிலேயே நேரில் பார்த்து அனுபவிக்க வேண்டும்.நின்று விளையாடும் மாடுகள் தான் சூப்பர் மாடுகள்.


ஊரில் உள்ள அனைத்து மக்களும் அந்த ஒரு தெருவில் கூடி இருக்கும்போது சூழ்நிலை மிகவும் எலக்ட்ரிஃபைடாக இருக்கும். வாடி வாசலில் மாடு வெளியே வந்தவுடன் அதன் தோளை பிடித்து தொங்கிக்கொண்டுவிடுவர் சிலர். அது அவர்களையும் தூக்கிக்கொண்டு தெரு முனை வரை கொண்டுவரும். தெருமுனை வரை பிடியை விடாமல் விழாமல் தொங்கிக்கொண்டு வந்தாலே அவன் வீரன் என்பதை மக்கள் ஒத்துக்கொண்டு விடுவார்கள்.பிறகு தெருமுனையில் மாட்டின் சொந்தக்காரன் ஒரு பெரிய சுருக்கு கயிறுடன் நிற்பான். ஓடிவரும் மாட்டின் கழுத்தில் போட்டு மாட்டுடன் சிறிது தூரம் ஓடி மாட்டை நிறுத்துவான்.


ஒரு மாடு பிடிபட்டுவிட்டால் அந்த மாட்டின் சொந்தக்காரனுக்கு அதைவிட அவமானம் ஏதுவுமில்லையாம். அவனுடைய சொந்த வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் அதன் பிறகு நசிவுதானாம். இதுவெல்லாம் மூட நம்பிக்கைகள் என்று புரிந்தாலும் நான் ஆர்க்யூ செய்யவில்லை.


நான் பார்த்த அன்று பெரிதாக காயம் என்று யாருக்கும் இல்லை. ஒரு ஆளை மட்டும் மாடு சுமார் 100 மீட்டர் தூரம் தரையில் இழுத்து சென்றது. மயக்கமாகி கோமா ஸ்டேஜுக்கு போன அந்த நபர் இரண்டு நாள் கழித்துத்தான் கண் விழித்ததாக கேள்விப்பட்டேன்.


இரண்டு மணிநேரம் சுவாரசியமாக பார்த்துவி்ட்டுத்தான் வந்தேன்.நான் எந்த மாட்டை புடிச்சேன்..நீங்க வேற....தொட்டு பார்த்ததற்கே ஆடிப்போயிட்டேன்.


ஜல்லிக்கட்டை பற்றி சி.சு.செல்லப்பா எழுதிய வாடி வாசல் என்ற நாவலை பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ள பதிவு இங்கே....

மயிலாடுதுறை சுத்தியல்

மயிலாடுதுறையில் ஒரு கல்லாலான சுத்தியல் கிடைத்துள்ளது. இதைப்பற்றி இந்த செய்தி.நெட் பதிவில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு என்று போற்றப்பட்டுள்ள இந்த செய்திக்கு இந்த வலைத்தளத்தில் கிடைத்த (+) குத்துக்கள் (-) குத்துக்கள் ஆகியவற்றை பாருங்கள்.இதற்கு பின்னூட்டம் எத்தனை?ஆனால் (-) குத்துக்கள் எத்தனை?

சோற்றாலடித்த பிண்டங்கள் என்றால் கோபப்படும் நாம், இந்த குத்துக்களின் அரசியல் என்ன என்று யோசித்தோமா? இது பலபேர் கண்ணுக்கு தெரியக் கூடாது என்று நினைப்பவர்கள் யார் என்று கேட்டால் அடிவயிற்றில் அடிக்கிறான் என்று ஓலம்.என்னய்யா நடக்குது இங்கே?

இது சம்பந்தமாக மேலதிக சுட்டிகளுக்கு கீழ்க்கண்ட லிங்க்குகளை படிக்கவும்


http://www.hindu.com/2006/05/01/stories/2006050112670100.htm

http://www.hindu.com/2006/05/01/stories/2006050101992000.htm

3.அ.மார்க்ஸ் சில நாட்களுக்கு முன் எழுதியதின் சுட்டி

தருமிக்கு கேள்விகள்-ம்யூஸ் மனம்மகிழ

நான் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போது கல்லூரி விடுதி போரடித்தது என்று வெளியே அறை ஒரு வருடம் எடுத்து தங்கியிருந்தேன். அப்போது என் அறைக்கு எதிர் அறையில் ஒரு கிறிஸ்தவ அன்பர் தங்கியிருந்தார் .நான் தங்கியிருந்த வீட்டு ஓனரின் கல்யாணம் ஆன மகளை கரெக்ட் செய்திருந்த அவர் விடலை பசங்களான எங்களிடையே நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருந்ததில் ஆச்சரியமில்லை.( இந்த தகவல் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இந்த பதிவின் பேசுபொருளுடன் சம்பந்தப்பட்டது. கண்டுபிடிப்பவர்களுக்கு பாராட்டும் பட்டமும் உண்டு )

நான் ஆர்வகோளாறு (அதான் நல்லா தெரியுதுன்னு நீங்க சிரிக்கறது இங்கே கேட்கிறது) என்பதால் அடிக்கடி மொட்டைமாடியில் அரசியல் , சமூகம், பெண்கள்(?) ஆகிய பிரிவுகளில் விவாதங்கள் நடக்கும் .அவ்வாறு ஒரு விவாதத்தின் போது அந்த குறிப்பிட்ட நண்பர் கூறிய ஒரு வாக்கியம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. எனக்கு இன்றும் அது பசுமையாக நினைவில் உள்ளது .ஆச்சரியாகவும் உள்ளது.

"என்ன பேசறீங்க நீங்க, பைபிள்ளயே சொல்லியிருக்கு", இதுதான் அந்த வாக்கியம்.

"பைபிள்ளயே சொல்லியிருந்தால் அதை கேள்வி கேட்கக்கூடாதா" இது நான் .

இதற்கு மேல் என்னுடன் பேசுவதை அவர் குறைத்துக்கொண்டார்.நானும் ஒதுங்கிக்கொண்டேன். கிறிஸ்தவ மதம் மட்டும் அல்ல..இந்து மதம் ஆனாலும் சரி.. இஸ்லாம் ஆனாலும் சரி..தோன்றி பல காலம் ஆகிய மதங்கள். அந்த காலகட்டத்தின் நாகரீக வளர்ச்சி , அறிவியல் வளர்ச்சி ஆகியவை பொறுத்து ஆயிரம் கொள்கைகள் இருந்திருக்கலாம். ஆனால் இந்த நாகரீக யுகத்திலும் இது பைபிள்ளேயே சொல்லியிருக்கிறது ,குரானிலே சொல்லி இருக்கிறது, கீதையிலேயே சொல்லியிருக்கிறது என்றெல்லாம் கூறுவது சரியா ?இதையெல்லாம் மறுபரீசிலனை பண்ணுவதில் என்ன தவறு?


கிறிஸ்தவ மிஷன்கள் மேல் இந்துத்வாவாதிகளால் வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு அவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதே.


அதற்கு கிறிஸ்தவ மிஷன்களை ஆதரிப்போர் கூறும் பதில்கள் சில .

1.அரசியல் சட்டம் மதமாற்றத்தை தடுக்கவில்லை.

2.அவர்கள் இந்து மதத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளினால் தானாகவே மதம் மாறுகிறார்கள்.

3.கிறிஸ்தவ மிஷன்கள் நிறைய சேவை செய்கின்றன.

இவை நியாயமான பதில்களா என்று நானும் யோசித்ததுண்டு.
மதமாற்றத்தை அரசியல் சட்டம் தடுக்காதது சரிதான் என்றுதான் என் சிறுமூளை சொல்கிறது . ஏனெனில் அது கடைசியாக தனிமனித உரிமையை தடுக்கும் செயல்.அதை நடைமுறைப்படுத்துவதும் கடினம். ஆகவே இந்த விஷயத்தி்ல் நம்முடைய அரசியல் சட்ட ஆசான்கள் சரியான வேலையை செய்துள்ளனர்.

மற்ற இரண்டு பிரச்சினைகளும் சுலபத்தில் தீர்க்க முடியாதவை.
சேவையே வாழ்வின் கடமையாக செய்யும் பாதிரிமார்களையும் பார்த்துள்ளேன் . சேவையை வியாபாரமாக செய்து மதமாற்றம் செய்யும் ஆட்களையும் பார்த்துள்ளேன். கல்லூரிகளில் இதை அவர்கள் இதை செய்வதில்லை என்றே அறிகிறேன்.

அன்னை தெரசா என்று நாம் போற்றும் அந்த அம்மாவும் மதம் மாற்றும் வேலையை தீவிரமாக செய்தவர்தான் என்று சில தகவல்கள் கூறுகின்றன. மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி என்ற அந்த அமைப்பு மதமாறியவர்களுக்குத்தான் உதவி செய்வதாகவும் கூறுகிறார்கள் . ஆனால் உறுதியாக தகவல் என்னிடம் இல்லை.லாஜீக்கலாக பார்த்தால் இது கடினம் .எப்படி ஃபில்டர் செய்கிறார்கள் என்று தெரிந்தவர்கள் கூறுங்கள். ஒரு சாரார் தெரசா பரவாயில்லை என்றும் இப்போது வந்துள்ள நிர்மலா இந்த விஷயத்தில் தீவிரமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். மதமாற்றம் செய்யவேண்டி மட்டுமே சேவை செய்தால் அது சேவை அல்ல.வியாபாரம்தான்.

ஒரு கிறிஸ்தவ கல்யாணத்திற்கு போன என்னை ரவுண்ட் கட்டி அவர்கள் ஃபெல்லோஷிப்புக்கு (அப்படின்னா என்னங்க) இழுக்க முயற்சி நடந்தது. கடைசியில் நம் பாணியில் குண்டக்க மண்டக்க கேள்விகளை எழுப்பியவுடன் தான் என்னை விட்டார்கள்.

சர்ச்கள் பல ஏக்கர் நிலத்தை சுருட்டியதாகவும் ஒரு கருத்து வந்தது.இது நான் இதுவரை கேள்விப் படாதது.(இது இடைசெறுகல் ம்யூசுக்காக). நானும் என் சிறு மூளையையும் சில நண்பர்கள் துணைகொண்டும் விசாரித்தேன். எவ்வளவு ஏக்கர் திருடப்பட்டது என்ற தகவல் கிடைக்கவில்லை .ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் கிறிஸ்துவ மிஷனரிகளுக்கும் நிலம் வழங்கியதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதைப்பற்றி மேல்விபரம் தெரிந்தவர்கள் கூறலாம்.


கத்தோலிக்க சர்ச் 175 ஆண்டு பழமை வாய்ந்தது. ஆகவே அன்றிலிருந்து சேர்த்த சொத்துக்கள் என்று அர்த்தம் . (லயோலா, ஜோசப், சேவியர்) .பிராட்டஸ்டண்ட் கல்லூரிகளான கிறிஸ்டியன் காலேஜ் அவ்வண்ணமே.அவ்வாறு பெற்ற நிலங்களை எப்படி திரும்ப கேட்கமுடியும் ? இந்த பார்வை சரியா என்று தெரியவில்லை.பின்னூட்டத்தில பார்க்கலாம் .


இன்னொன்று மலைகளில் சிலுவை போடுவது, பிளஸ் போடுவது அப்புறம் கொஞ்சநாள் கழித்து அங்கே தேவாலயம் கட்டுவது என்று நடக்கும் குறும்புகள் இதுவும் விமர்சிக்கப்படுகிறது.நான் இதை சில இடங்களில் பார்த்துள்ளேன்.இந்த விமர்சனத்தில் நியாயம் உண்டு. இது இந்து மதத்திலும் உண்டு.


நடுவில் இந்த பிரச்சாரகர்கள் வேறு. "நொண்டிகள் நடக்கிறார்கள், ஊமைகள் பேசுகிறார்கள் " என்றெல்லாம் இவர்கள் பிரச்சாரம் செய்யும்போது எனக்கு இரத்த அழுத்தம் ஜிவ்வென்று ஏறும்.அப்புறம் எதுக்கய்யா ஆஸ்பத்திரி ?. இவர்களை பிடித்து 420 பிரிவில் ஜெயிலில் போடவேண்டும் என்பதுதான் என் கருத்து.

இதையெல்லாம் தருமிக்கு கேள்வியாக வைத்தால் நானும் இதைத்தான்யா சொல்றேன்னு சொல்லிடுவார்.அவர் என்னை மாதிரி ஒரு நவீனத்துவ(?) ஆத்மா. ஆகவே தலைப்பு ச்சும்மா துதுபுலாலாயி.. கண்டுக்காதீங்க.


(மட்டுடுடுடுடுறுறுறுறுறுத்தததல் இருக்கும்.யோசித்து எழுதவும்.

ரீஜண்ட்டாக எழுதவும்(சாரி.டீஸண்ட்டாக எழுதவும்

Thursday, May 04, 2006

அற்புதங்கள் என் விசிட்டிங் கார்டு-சாயிபாபா

நீயெல்லாம் ஒரு மனுசனா என்று நேரடியாகவோ அல்லது அப்பாவிதனமாக வந்து அனானியாக திட்டுபவர்கள் இல்லாமலோ நட்சத்திர வாரத்தை முடிக்கமுடியுமா?அப்படி முடித்தால் வரலாறு என்னை மன்னிக்குமா?

என்னடா ரொம்ப பீடிகை போடறானே? வம்பிழுக்க போறானோ என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் ரொம்ப சரி.கடவுளின் நேரடித்தொண்டர்களைப்பற்றிய பதிவு இது.புட்டபர்த்தி பரட்டை என்று அன்பொழுக நம் பொட்டீக்கடையால் அழைக்கப்பட்ட சத்ய சாயிபாபாவின் அணுக்க தொண்டன் என் நண்பன் ஒருவன். நான் அவனை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கலாய்ப்பது வழக்கம். இதையும் மீறி நட்பு என்னவோ தொடருகிறதுதான்.

"ஏண்டா இந்தாள் மேட் இன் சுவிஸ் வாட்சை எல்லாம் வானத்தில் இருந்து வரவழைக்கிறான்? கடவுள் கொடுத்த வாட்ச்சில் மேட் பை காட் என்றுதானே இருக்கவேண்டும்" என்பேன் என் நண்பனிடம்.

அதற்கு அவன் கூறிய பதில்தான் இந்த பதிவின் தலைப்பு.

www.exbaba.com என்ற தளத்திற்கு எந்த முன்முடிவும் இல்லாமல் செல்லுங்கள். பல சேதிகள் உண்டு ஆதாரங்களுடன்.

***************
எல்லா சாமியார்களையும் சாமியாரிணிகளையும் சகட்டு மேனிக்கு தாக்குவது என்பது என் நோக்கம் அல்ல.(ஜக்கி,ரவிசங்கர் ஆகிய சிலரை மதிக்கிறேன் நான்.வாழும் வழி என்பதாக சில வழிமுறைகளை இவர்கள் வைப்பதாக அறிகிறேன்)

இந்த சாமியார்கள் 100 கோடி இருநூறு கோடி என்று சமூகத்திற்கு உதவுகிறார்கள் என்று பலரும் நினைக்கிறோம்.ஆகவே அவரை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது ஒரு வாதம். இந்த உதவி செய்ய பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? மக்களிடம் இருந்துதானே.

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி உள்ளது.ஆனால் எந்த வழியில் சம்பாதித்தீர்கள் என்பது முக்கியம் இல்லையா?மாயம் மந்திரம் செய்வதாக பம்மாத்து செய்யும் இவர் பலகோடி மக்களின் மனதில் ஒரு தவறான முன்னூதாரணம் ஆகிறார்.இதை பார்க்கும் நாம் இவரிடம் ஏதோ ஒரு அதிசய சக்தி இருப்பதாக நம்புகிறோம். பணத்தை கொடுக்கிறோம்.இது பக்தி இல்லை.கேவலமான வியாபாரம்.மேலும் மாயமந்திரம் என்பதையெல்லாம் மற்றவர்கள் எல்லாம் நம்புவதால் நம்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு போய் கடைசியில் ஆட்டுமந்தை மனப்பக்குவம்தான் நம்மில் மிஞ்சுகிறது.

மந்திரத்தில் மாங்காய் விழுந்தால் நாம் ஏன் மாங்கு மாங்கென்று உலகம் பூரா சுத்தி திரவியம் தேடவேண்டும்?

அமிர்தானந்தமயி அம்மாவெல்லாம் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய பீடத்தை எழுப்பிக்கொண்டு வருகிறார் என்பதெல்லாம் கவனிக்கத்தக்கது. சிந்திக்கத்தக்கது. பம்பாயில் வீடு வீடாக வந்து இலவசமாக வேன் அமர்த்தி கூட்டத்திற்கு கூட்டி செல்கிறோம் என்று கேட்டார்கள்.அப்படியானால் உங்கள் நோக்கம் என்ன?

*******************

கார்பரேட் சாமியார்களின் அசிரமத்தில் எப்போதும் சில வெளிநாட்டு ஆசாமிகளும் இருப்பதை காணலாம்.நம் டான்ஸ் புகழ் கல்கி, செக்ஸ் புகழ் பிரேமானந்தா முதற்கொண்டு எல்லா சாமியார் மடததிலும் சில வெளிநாட்டு ஆசாமிகள் இருப்பார்கள்.இதுவும் உளவியல் சம்பந்தப்பட்ட விஷயம்தான். நமக்கு எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. வெள்ளைகாரர்கள் மேல ஒரு கவர்ச்சி.இதை சரியாக புரிந்துகொண்ட இந்த ஆட்கள் அங்கிருந்து சில ஆட்களை இறக்குமதி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். வெள்ளைகாரனே கும்பிடறான்னா ஏதாச்சும் இருக்கும் என்று நம் ஆட்களும குவிவார்கள்.

********************

வெளிநாட்டு கலாச்சாரம் கெட்டு போய்விட்டது. அவர்கள் எல்லாம் அமைதி தேடி இந்தியா வருகிறார்கள் என்பது.இதுவெல்லாம் சுத்த ஹம்பக்.ஓரிரண்டு கேஸை வைத்துக்கொண்டு ஜல்லியடிக்கக்கூடாது.அப்படி எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்?காலையில் விஜய் டிவி பாருங்கள்.ஒரு கிழவி லெக்சர் அடிக்க கிறிஸ்தவ மத பிரச்சாரம் அரங்கு நிறைந்து காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருக்கும். வெள்ளைகாரனுக்கு அவனுக்குரிய ஆன்மிக தேடல் உண்டு.ஏதோ ஒரு பதிவில் ஹரே ராமா இயக்கததினர் கொடுதத பகவத் கீதை புத்தகம் குப்பைத்தொட்டிக்கு போவதை பற்றி எழுதி இருந்தார்கள்.அதுவும் நடக்கிறது.ஆகவே உங்கள் மதத்தின் மேன்மையை நீங்கள் கூறுங்கள். அதற்காக மற்ற எல்லோரும் சட்டையை கிழித்துக்கொண்டு ரோட்டில் அலைவதாக எழுத வேண்டாம். உண்மையை சொல்லப்போனால் நம் நாடுதான் வெள்ளைக்காரர்கள் கலாச்சாரத்திற்கு மாறிக்கொண்டு வருகிறது.குஷ்பு போன்றவர்கள்தான் அதற்கு வழிகாட்டி.(தப்பா எதுவும் சொல்லலீங்க)

*********************

உங்களுக்கும் கார்பரேட் சாமியார் ஆகவேண்டும் என்று ஆசையா?ஒரு சுலப வழிகாட்டி.

1. ஊருக்கு வெளியே ஒரு பத்து ஏக்கர் நிலத்தை வளைத்து போடவும்.

2.உங்கள் ரேஞ்சிற்கு ஏற்றாற்போல் ஒரு இன்சீனியரிங் காலேஜோ அல்லது ஒரு நர்சரி பள்ளிக்கூடமோ தொடங்கவும்.

3.பஜனை நடத்தவேண்டும்.அதை பணம் கொடுத்து ராஜ் டிவியிலோ விஜய் டிவியிலோ ஒளிபரப்பவேண்டும்.இந்த பஜனைக்கு கூட்டத்திற்கு உங்கள் கல்லூரி மாணவ மாணவிகளை உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

4.மாதாஜீ இல்லாமல் ஆசிரமமா? கறாராக தேர்வு செய்து ஒருவரை பிரகடனப்படுத்தவும்.

5.ஏமாளிகள் தரும் பணத்தில் முந்திரிப்பருப்பும், சுண்டக்காய்ச்சிய பாலும் குடித்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால் தேஜஸ் தானாக ஏறும்.

6.குறி சொல்லுதல் நல்ல டெக்னிக்.ஒரு நாளைக்கு நூறு ஆட்களுக்கு நல்லது நடக்கும் என்று சொன்னீர்கள் என்றால் ஐம்பது பேருக்காவது ஓர்க்அவுட் ஆகும். நீங்கள் தான் காரணம் என்று அந்த முட்டாள் இன்னும் ஐம்பது பேரை கொண்டு வருவான்.

உதாரணம் 1:கம்ப்யூட்டர் படித்த மாணவன் வந்தால் ஒரு வருடத்திற்குள் நீ அமெரிக்கா போவது உறுதி என்று சொல்லவேண்டும்.இது இந்த சூழ்நிலையில் சுலபமாக நடக்க வாய்ப்பு உள்ளது.நமக்கெல்லாம் தெரியும்.

உதாரணம் 2:27,28 வயதில் வருபவர்களுக்கு சீக்கிரம் உங்களுக்கு கல்யாணம் நடக்கும் என்று கூறவேண்டும்.எப்படியும் (அந்த வயதில் கல்யாணம் செய்யாமல் 50 வயதிலா கல்யாணம் செய்வார்கள்?)

7.வாய்ப்பு இல்லாமல் வீட்டில் அமர்ந்திருக்கும் நடிகர்களை டிவியில் பேச வைக்கலாம். விசுக்கூட இப்ப ஃப்ரியாமே?

8.வெளிநாடுகளில் இருந்து சில பிச்சைகாரர்களை (அங்கும் பிச்சைகாரர்கள் உண்டு, ஆங்கிலம் தெரிந்த பிச்சைக்காரர்கள்(?) வரவழைத்து குளிக்க வைத்து மூன்று வேளை சாப்பாடு போட்டு உங்கள் ஆசிரமததில் தங்க வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஜென்டில்மேன் பிரமோத்

இளம் தலைவர்களுக்கும் காலதேவனுக்கு அப்படி என்னதான் உறவோ? ராஜீவ்காந்தி,ராஜேஷ்பைலட்,மாதவராவ்சிந்தியா,ரங்கா (எங்கள் ஊரை சேர்ந்த ரங்கராஜன் குமரமங்கலம்), பாலயோகி இந்த வரிசையில் கடைசியாக இப்போது பிரமோத் மகாஜன்.பனிரென்டு நாட்களாக உயிருக்கு போராடிவந்த பிரமோத் மகாஜன் நேற்று மாலை மரணமடைந்தார்.

நான் மும்பயில் வேலை பார்த்தப்போது எங்கள் அலுவலக அடுக்குமாடியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் போல் நடந்து வந்துதான் சர்ச்கேட் மின்வண்டி நிலையத்திற்கு வரவேண்டும்.நேரங்காலம் இல்லாத வேலை என்பதால் அடிக்கடி சர்ச் கேட் செல்லவேண்டிவரும்.அந்த வழியில்தான் பி.ஜே.பி கட்சி ஆபிஸ்.சில முறை பிரமோத் மகாஜனை அங்கு பார்த்துள்ளேன்.அதே அழகான சிரிப்பு.அவருக்கே அழகான அந்த உடை.இன்னும் கண்ணுக்குள் நிற்கிறார் அந்த இளம் தலைவர்.


சிவானி பட்நாகர் கொலை கேஸ், ரிலையன்ஸ் உடனான இவர் தொடர்பு (பம்பாயில் ரிலையன்ஸ் உடன் இணைத்து பேசப்படாதவர் யார்?)எலலாம் சர்ச்சைதான்.ஆனால் லெவல் ஹெட்டட் தலைவர்.சிரிப்பு மாறாதவர். புரட்சிதலைவியிடம் பேசுவதுதர்ன உலகிலேயே கடினம் என்று ஜோக் அடித்தவர். வாஜ்பாய்,அத்வானி இருவருக்கும் நல்லபிள்ளையாக இருந்தார். அவ்வளவு தீவிரமான ஹிந்துத்வாவாதி என்று சொல்லமுடியாது என்றே நினைக்கிறேன்.


இங்கு கட்சி முக்கியமல்ல.கொள்கை முக்கியமல்ல.அரசியல்வாதியாக அவர்கள் தவறான முடிவுகளை சில நேரம் எடுத்திருக்கலாம். இதை யாரும் தவிர்க்கமுடியாது.தவறுகள் செய்வதும் அதிலிருந்து கற்றுக்கொள்வதும்தான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு.ராஜீவ்காந்தி கூட இன்னும் அனுபவம் கூடியிருந்தால் இலங்கை பிரச்சினையை நன்றாகவே அணுகியிருக்கலாம்.


இளம் தலைவர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக செல்வது மனதை வலிக்க செய்வதாக உள்ளது.இவர்கள் எல்லாரும் சவாடல் வகை அரசியல்வாதிகள் இல்லை என்பதும் இன்னொரு ஒற்றுமை.


மிகவும் வருந்துகிறேன்.

பிரமோத்துடன் நேர் அனுபவம் உள்ள பாலபாரதியின் அஞ்சலி
http://balabharathi.blogspot.com/2006/05/blog-post.html

Wednesday, May 03, 2006

முதலாளிகள் வெறும் வியாபாரிகளா?

நிறுவனங்களில் புதிதாக மக்களை பணியமர்த்தும்போது அவர்கள் சமுதாய ஏற்றத்தாழ்வு களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இயங்கவேண்டும் என்று நான் ஒரு பதிவில் கூறி இருந்தேன்.பல நண்பர்களும் இவ்விதமான கருத்தை கொண்டுஉள்ளனர். வழக்கம்போல் இதுவெல்லாம் சாத்தியமா என்று முழங்கும் நண்பர்களுக்கான ஒரு விழிப்புணர்ச்சி பதிவுதான் இது.

கடந்த சில மாதங்களுக்குமுன் எங்கள் வங்கிக்கு மென்பொருள் தரும் நிறுவனத்தின் முதலாளி தலைமை அலுவலகத்திற்கு வருவதாக பேச்சு அடிபட்டது. நான் அப்போதுதான் மும்பை அலுவலகத்தில் இருந்து மங்களூருக்கு மாற்றப்பட்டிருந்தேன். அவரை நான் பார்த்ததும் இல்லை. ஒரு சின்ன பிராஜக்ட். ஏ.டி.எம் மிஷின் மாதிரி.அதன் டெமோ என்று நினைக்கிறேன். டெமோ முடிந்தது. நான் அப்பாவியாக அருகில் இருந்தவரிடம் கேட்டேன்.

"ஏங்க, அவங்க எம்.டி சுரேஷ் காமத் வரவில்லை?"

"சரியாப் போச்சு, பிரசன்ட்டேஷன் தந்தவரே அவர்தான் " என்றார் என் மூத்த மேலாளர்.

அதிர்ச்சி அடைந்தேன் நான்.உப்புமா கம்பெனி வைத்திருக்கும் குப்பனும் சுப்பனும் Prop: Mr.Kuppan என்றெல்லாம் போட்டுக்கொண்டு கேபினை விட்டு வெளியே வராமல் கோட்டை போட்டுக்கொண்டு அளப்பரி செய்யும் காலத்தில் இவ்வளவு எளிமையாக ஒரு சேர்மன்(எம்.டி)இருக்கமுடியுமா? இத்தனைக்கும் முப்பதிற்கும் மேற்பட்ட வஙகிகள் இவர்களின் மென் பொருளால் இயங்குகிறது.

அதுதான் சுரேஷ் காமத்.எண்பதுகளில் ஐ.ஐ.டி பட்டதாரியான கர்நாடகத்தை சேர்ந்த காமத், அப்போதைய ட்ரெண்ட்படி சுலபமாக அமெரிக்கா போயிருக்கலாம். டாலர்களை எண்ணியிருக்கலாம்.ஆனால் மிகவும் சுலபமான, சாதாரண மனிதர்கள் தேர்தெடுக்கும் அந்த பாதையை, அவர் தேர்வு செய்யவில்லை.அதுதான் அவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டியுள்ளது.இத்தனைக்கும் அவர் பிறந்தது ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் தான்.

சமுதா சிந்தனைகளும் கொண்ட அந்த மனிதர் உருவாக்கிய இன்றைய தேதியில் , 20 கோடிக்கும் அதிகமான டர்ன்ஓவரை கொண்ட லேசர் சாப்ஃட் நிறுவனம் வங்கிகளுக்கு மென்பொருள் தரும் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாகவும் சமுதாயத்தில் ஒரு நிறுவனத்தின் கடமை என்ன என்பதை மற்றவருக்கும் புரியவைக்கும் ஒரு நிறுவனமாகவும் வெற்றி நடை போடுகிறது.

அப்படி என்ன சமுதாயத்திற்கு இவர் செய்துவிட்டார்கள்? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.

ஏழை மக்களுக்கு இலவச கணிணி பயிற்சி,பின்னர் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவது என்றெல்லாம் இவர்கள் செய்தாலும் முக்கியமாக சாதனையாக இவர் செய்திருப்பது, ஏறத்தாழ ஐநூறுக்கும் அதிகமான கணிணி வல்லுனர்கள் வேலை பார்க்கும் அந்த நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்டோர் differently abled என் இப்போது விளிக்கப்படும் உடல் ஊனமுற்றோர்.

மற்ற பெரிய நிறுவனங்கள் பலவும் இவர்களுக்கு என்று அலுவலகத்தில் பல வசதிகள் செய்துதரவேண்டும் என்பதற்காகவே இவர்களை ஒதுக்கும்போது ஒரு தனியார் நிறுவனமாக இருந்தாலும் இத்தனை வசதிகளையும் செய்து இவர்களை கைதூக்கிவிடுவது சாதாரண காரியமே அல்ல .லாபம் வரும் இந்த துறையில் சிறிது பயிற்சி கொடுத்தால் நன்றாக வேலை செய்யும் இவர்களுக்கு இந்த வசதிகளை செய்வதற்கு உங்களை தடுப்பது எது? என்கிறார் சுரேஷ்.

மனதில் ஊனம் உள்ள நம்மில் பலரும் அது வெளியே தெரியாத ஒரே காரணத்தால் ஆடுகிறோம். ஆனால் இந்த பிஸிகல் குறைபாடு ஒரு குறையே இல்லை என்று கூறி ஒரு நிறுவனம் அவர்களை பணியில் அமர்த்தினால் அவர்களின் தன்னம்பிக்கை எவ்வளவு கூடும்?எனக்கு தெரிந்து ஒரு நண்பர் இந்தமுறை ஒரு முக்கிய அரசியல் கட்சியில் சீட்டே கேட்டுவிட்டார். (நீங்கள் இங்கே அந்த நம்பிக்கையை பார்க்கவேண்டும்)

இந்த அரிய சேவைக்காக இந்த நிறுவனம் பல விருதுகளையும் பெற்றுள்ளது .

உடல்ஊனமுற்றோர் நலனுக்கான தேசிய விருது 2005.

தேசிய உடல் ஊனமுற்றோர் வேலைவாய்ப்பு மையத்தின் ஹெலன் கெல்லர் விருது

தமிழக அரசின் சிறந்த தனியார் நிறுவனம் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்கள் .

இத்தனைக்கும மேலாக,ஒரு மல்டிநேஷனல் கம்பெனி இவர்கள் கம்பெனியில் முதலீடு செய்ய போட்ட கன்டிஷன் இவர்களுடைய இந்த வேலையில் அமர்த்தும் கொள்கையை கைவிடவேண்டும் என்பதே . இதை மறுத்துவிட்டார் நிறுவனர்.( கவனிக்கவும், ஒரு வெறும் வியாபாரிக்கு இந்த முடிவு எளிதானதல்ல)

இங்கு தேர்தெடுக்கப்படும் உடல் ஊனமுற்ற இளைஞர்களும் இளைஞிகளும் ட்ரெயினிங் கொடுக்கப்பட்டு அவர்களின் திறனுக்கேற்ற பிராஜக்ட்டுகளில் போடப்படுகிறார்கள்.ஆரம்பத்தில் இந்த கொள்கையை பலரும் ஏற்கவில்லை என்று கூறம் இவர் எதிர்காலத்தில் பத்தாயிரம் டிப்ஃரன்ட்லி ஏபில்டு மக்களை வேலைக்கு அமர்த்துவது என்பது எங்கள் குறிக்கோள்களில் ஒன்று என்கிறார்.

ஐ.டி துறை ஏதோ வானத்தில் இருந்து வந்து குதித்த துறை என்பதுபோன்ற நிலை இன்று மாறி,அவர்களுக்கும் சமுதாய கடமை இருக்கிறது என்று உணர்வு இப்போது மெல்ல மெல்ல வருவதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் இவரின் திருமணம் உலக உடல் ஊனமுற்றோர் தினத்தன்று நடந்தது.இவரின் பிறந்தநாளும் பில்கேட்சின் பிறந்த நாளும் ஒன்று .இருபது வருடங்களுக்கு முன்பு இந்த கம்பெனி ஆரம்பிக்கப்பட்ட நாள் மே ஒன்று.

அரசாங் பணிகளில் உடல் ஊனமுற்றோருக்கு ஓரளவு இடஒதுக்கீடு இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் தனியார் நிறுவனங்களில் என்ன நிலைமை? பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு என்றவுடன் துள்ளிகுதிக்கும் பல முதலாளிகள் இது போன்ற உருப்படியான காரியங்கள் எதையாவது தானாக முன்வந்து செய்திருக்கிறார்களா?

கன்னட தங்கங்கள் என்ற வரிசையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சில சாதனையாளர்களை ப்பற்றி எழுத போவதான சொல்லியிருந்தேன். ஏற்கனவே ராகுல் திராவிடைப்பற்றி எழுதியுள்ளேன்.இப்போது இரண்டாவதாக முதவாளிகளுக்கு இலக்கணமாக திகழும் லேசர் சாப்ஃட் நிறுவனத்தின் சுரேஷ் காமத்.

காதல்

என்னங்க நாளைக்கு பீச்சுக்கு போலாமா?"

"ம்..போகலாமே..சண்டே உல்லால் பீச்சுக்கு ஏகப்பட்ட ஃபிகர்ங்க வருமே"

"அடி செருப்பால,உனக்கு கல்யாணம் ஆயிருச்சுடா, அழகான பொண்டாட்டியும் அழகான மகளும் இருக்கு உனக்கு"

"அழகான மகள் சரி..முதல்ல சொன்னியே என்னமோ,அதுதான் புரியலை"

"காலைல டிபன் வேணுமா வேணாமா உனக்கு"

"என்னடி சும்மா விளையாட்டுக்கு கிணடல் செஞ்சா..இப்படி கோவப்படுற"

"ஏங்க,பீச்சில் இருந்து வரும்போது அப்படியே ஷாப்பிங்..அந்த லைட் ப்ளு சுடிதார் சொன்னேனே"

"ம்..வா பாத்துக்கலாம்"

********************************

"இன்னிக்கு ஈவினீங் பீச் சூப்பரா இருக்கு"

"ஆமா, திருச்செந்தூர் நாம போனமே"

"ஏண்டி,உனக்கு நாம லவ் பண்ண காலம் ஞாபகம் வந்திருச்சி போலிருக்கு"

"ஆமா, அப்பல்லாம் என்னை ரொம்ப லவ் பண்ணுவ.. இப்பல்லாம் என் மேலயும் பிள்ளை மேலயும் உனக்கு அக்கறையே இல்லை"

"அடியே அதெல்லாம் ஒரு காலம்.தூரத்தில் இருக்கறது மேல ஒரு கவர்ச்சி, வயசாயிடுச்சி இல்லையா?"

"ஓகோ, இப்பல்லாம் கம்ப்யூட்டர் இல்லாட்டி புத்தகம்,சுந்தரம் ராமசாமி, திருமுருகன்,மார்க்சு இதே வேலைதான்.."


"சரி ,சரி எழுத்தாளருங்க பேரை கொலை பண்ணாத..நீ கூடத்தான் ஜாவா, ஆரக்கிள்னு,பீன்ஸ்,காலிஃபிளவர்னு ஏதேதோ பெனாத்தற..நான் ஏதாவது கேட்கறனா? கண்டுகிறனா?"


"இன்னொரு முறை சொல்லு,நான் பெனாத்தறனா?"


"சும்மா சொன்னன்டி..எனக்கு உன்னை விட்டா யாரு இருக்கா"

"உடனே வழிஞ்சிறுவியே"

"இல்லைடி, இறைவனிடம் கையேந்துங்கள்னு பாடினானே.அதை கொஞ்சம் மாத்தி மனைவியிடம் கையேந்துங்கள்,அவள் இல்லையென்று சொல்லுவ தில்லை, பொறுமையுடன் கேட்டுபாருங்கள்,அவள் நம்புபவர்களை கைவிடுவதில்லைன்னு மாத்த சொல்லலாம்னு இருக்கேன்"

"ரொம்ப, ரொம்ப பேசற நீ"

"சரி வா கிளம்பலாம், கடை சாத்திருவான்"

************************

"ஏங்க, சுடிதார் நல்லா இருக்கா?"

"சூப்பர்ர்ப்"

"ஆமா, என்ன கலர்னு கூட சொல்ல தெரியாது.ஆனால் பேச்சு மட்டும் வக்கனையா எட்டு ஊருக்கு, சூப்பராமில்ல"

"....."

"என்னங்க"

"என்னடி, மரியாதை எல்லாம் தூள் பறக்குது?"

"இல்லைடா, உன்னை மாதிரி புருஷன் கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கணும்"

"ம்..நீ சொல்லு..உங்கப்பன் இதை ஒத்துக்க மாட்டேங்குறானே..போறப்பல்லாம் முறைச்சு முறைச்சுல்ல பாக்குறான்"

"அதான,என்னடா உனக்குள்ள இருக்கற சைக்கோ இன்னும் எட்டி பாக்கலையேன்னு பார்த்தேன்.. எங்க அப்பாவ இழுக்காதன்னு எத்தனை முறை சொல்றது"


"ஆமா, பெரிய பாசபறவைகள் பாரு..உனக்கு ஏதோ மாப்பிள்ளை பாத்தாரே.. அந்த மினரல் வாட்டர் மாப்பிள்ளை..கொடுமை,ஒண்ணும் மட்டும் சொல்றேன் அவனை கல்யாணம் பண்ணியிருந்தா உனக்கு தண்ணீ பஞ்சமே இருந்திருக்காதுடி..."

"...."

"ஏய்,பிள்ளையை தூக்கிட்டு எங்க போற"

"நாங்க ஹால்ல படுததுக்கறோம்,நீ இங்கேயே கட"

"ஏய், சும்மா விளையாட்டுக்குதானே சொன்னேன்"

"...."

"இப்பத்தான் கொடுதது வச்சவன்னு டயலாக் அடிச்ச, அதுக்குள்ள கசந்துட்டனா"

"......"

"போடி, பெரிய இவ..கோவம் மட்டும் பொத்துகிட்டு வந்துரும்,எங்களுக்கு கோவம் வராதா"

"....."

"பிள்ளையை கொடு என்கிட்ட..பாப்பி கண்ணு..அப்பாகிட்ட வாம்மா"
"மாத்தேன்,போ"

"...."


************************************

"என்ன டார்லிங் காலைல குளிச்சுட்டு ஃபிரஷ்ஷா இருக்கற"

"நாங்க சிலர் மாதிரி அழுக்கு ஃபாமிலி கிடையாது"

"அழுக்கு ஃபாமிலியா(?!),...இன்னும் கோவம் போகலை போலிருக்கே.. ம்..சரி..என் தங்கம்..என்ன வேணா சொல்லலாமே,காலைல என்ன டிபன்"

"......"

"இன்னிக்கு சாயங்காலம் எக்ஸ்பிஷன் போறோம்"

"யார்கூட போற...ஆபிசுல கேரளாவுல இருந்து புதுசா பொண்ணுங்க ஜாயின் பண்ணியிருக்குங்கன்னயெ..அவங்க கூடயா?"


"உன் கால்தூசிக்கு ஈடாகுவாங்களா டார்லிங் அவங்கள்ளாம்?"

"ரொம்ப கொஞ்ச வேண்டாம்,நான் கோவமா இருக்கேன், தள்ளி நில்லு..நான் காலைலயே குளிச்சாச்சு"

"கோவமா இருக்கேன்னு சொல்லும்போதே கோவம் இல்லேன்னு தெரியுதே.. அட எனக்கு புடிச்ச புதினா சட்னி செஞ்சிருக்க"

"தெரியுதுல்ல,தள்ளி நில்லு..உன் பிள்ளை எந்திரிக்கற நேரம்,கையை எடு முதல்ல"

"பார்த்துக்கலாண்டி, பெரிய சுத்தம் இவ"

"ப்பா"

"போச்சு, வந்துட்டா உன் புள்ளை அப்படியே அப்பன் புத்தி,இந்த போர்ன்விடாவை போய் குடு அவளுக்கு"

"ம்..சரி..வாடா தங்கம் காப்பி குடிக்கிலாமா?."

"ஏங்க,"

"என்னவாம்"

"ஈவினிங் எக்ஸிபிஷன் புரோக்கிராம் உண்டுல்ல"**************************

Tuesday, May 02, 2006

கவிதைக்கு வந்த சோதனை

நண்பர் மணிகண்டன் எழுதிய இந்த கட்டுரையை பார்க்க நேர்ந்தது. கவிதைகளைப்பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துகெர்ண்டுள்ளார்.


எனக்கு இந்த கவிதைகள் புரிவதே இல்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். பலமுறை படித்துப்பார்ப்பேன். குழப்பமாகிவிடும் விட்டுவிடுவேன். கவிஞர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள். உணர்ச்சி வசப்பட்டால்தான் கவிதை வரும் என்று சில நண்பர்கள் கூறினார்கள். நானும் சில நாட்களுக்கு முன் உணர்ச்சிவசப்பட்டேன்.ஒரு கவிதை உருவானது. இது ஒரு கன்னி முயற்சி என்பதை புரிந்துக்கொண்டு அஸ்திரங்களை ஏவுங்கள்.நன்றி.


அடிபட்ட நாய்

மனிதா

வாலை சுருட்டிக்கொண்டு

அடுத்த வீதிக்கு

ஓடி

நின்று திரும்பி

குரைக்கும் பழக்கம்

உங்களிடம் பழகுவதற்கு

முன்பு எங்களிடம்

இல்லை

வங்கி அனுபவம்-கூடமலை கோபால்

இது என்னுடைய அனுபவங்களில் ஒன்று.ஊர்வலம் போவது,கோஷ்டி சேர்ந்து கோஷம் போடுவது என்பதெல்லாம் வீணாண வேலை என்பதாக பலருக்கு நினைப்பு இருக்கிறது.நானும் அந்த மாதிரியான எண்ணத்தை கொண்டு இருந்தவன் தான். அதை நான் தவறு என்று உணர்ந்தது ஒரு சந்தர்ப்பத்தில்.அதை பற்றி இங்கு எழுதுவது தான் இந்த பதிவின் நோக்கம்.

நான் முதன்முதலில் வங்கி பணியில் சேர்ந்தது ஒரு கிராமத்து கிளை.அதிகம் படித்தவர்கள் நிறைந்த ஊர் என்று சொல்லிவிடமுடியாது. தலித் சமுதாயத்தை சேர்ந்த விவசாய கூலிகள், மலைவாழ் பழங்குடியினர் நிறைய இருந்த அந்த கிராமத்தில் அதிக அளவு சிறு மற்றும் குறு விவசாயிகளும் இருந்தனர்.

நான் அன்று கையெழுத்து போட்டு வேலைக்கு சேர வேண்டும். ஆனால் நான் வங்கி உள்ளேயே நுழைய முடியாதபடி வங்கி வெளிப்புற கேட் முன்னால் ஒரே கூட்டம். எப்படியோ உள்ளே நுழைந்துவிட்டேன். ஆனால் மேலாளர் வரவில்லை.கிராம கிளையாதலால் ஒரே ஆபிசர்தான்.அவரிடம் தான் ரிப்போர்ட் செய்யவேண்டும்.

மேலாளர் வரும்போது கெரோ தொடங்கிவிட்டது. வெளியே கூடியிருந்த கூட்டம் அவரை உள்ளேயே வரவிடவில்லை. எனக்கு அதிர்ச்சியாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது.எங்கள் வங்கி கிளை மாடியி்ல் அமைந்திருந்ததால் மாடியில் இருந்து கி்ழே நடக்கும் களேபரங்களை பார்க்கமுடிந்தது. சுமார் 45 முதல் 50 வயதுள்ள ஒரு குட்டையான ஒரு ஆள் தான் ஆர்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்திவந்தார்.

எங்கள் கிளை மேலாளருடன் சூடான வாக்குவாதம். எங்கள் மேலாளர் போலீஸை கூப்பிடுவேன் என்று சொல்லி பார்க்கிறார். இந்த பூச்சாண்டியெல்லாம் என்கிட்ட வேண்டாம் சார் என்ற அந்த நபர் புறங்கையால் அந்த மிரட்டலை சமாளிக்கிறார். அன்றே அருகில் இருந்தவர்களிடம் கேட்டதில் அவர் பெயர் கோபால் என்பதும் உள்ளுர் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் என்றும் தெரியவந்தது.

கிராமத்து பெரிய மனிதர்கள் உதவியுடன் எங்கள் மேலாளர் அன்று கெரோவில் இருந்து மீண்டதும் எதற்கும் அயராத கோபால் வங்கிக்கு எதிரில் மைக் செட் கட்டி மேலாளருக்கு எதிராக கோஷம் போட்டதும் பின்னர் மீண்டும் ஊர்பெரியமனிதர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்து எங்கள் மேலாளர் கோபால் கேட்டுக்கொண்டபடி சிலருக்கு லோன் வழங்க ஒப்புக்கொண்டதையும் பார்த்த எனக்கு அந்த வயதில் அது கண்டிப்பாக ஒரு புதிய அனுபவம் என்றே சொல்லவேண்டும்.

IRDP(ஒருங்கிணைந்த கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்)திட்டத்தின் கடைசி நாட்கள் அவை. எங்கள் கிளை மேலாளர் சற்றே கெடுபிடியானவர். இது போன்ற கடன்திட்டங்களில் வழங்கப்படும் கடன்கள் பெரும்பாலும் திரும்பசெலுத்தப்படுவதில்லை என்பதால் இது போன்ற கடன்களை அவர் ஊக்கப்படுத்துவதில்லை.

பிறகு சில காலம் கழித்து நான் அறிந்துக்கொண்டது என்னவெனில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசாங்கம் ஸ்பான்சர் செய்கிற கடன்களில் (இதில் குறிப்பிட்ட சதவீத பணம்தான் அரசுடையது)பணம் திரும்ப வராது என்ற காரணத்தால் கிளை மேலாளர் ஒருவருக்கு கடனை மறுத்தாலும், புகார் என்று போனால் வங்கி மேலிடம் கிளை மேலாளருக்கு சப்போர்ட் செய்யாது என்பதுதான்.கிளை மேலாளர் என்பவர் எவ்வாறு இவ்வகையாக குறுக்கீடுகளை சமாளிக்கிறார் என்பதும் முக்கியம்.இதுபோன்ற சமயங்களில் சில கடன்கள் வசூல் ஆகாமல் போகலாம்.இதன்பொருட்டு அந்த மேலாளர்களும் கேள்வி கேட்கப்பட மாட்டார்கள்.

விஷயத்திற்கு வருவோம்.அன்று தொடங்கி கம்யூனிஸ்ட் கோபாலை பல சமயங்களில் பார்த்துள்ளேன்.காலை எட்டு மணிக்கு வங்கி முன் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வெறும் பனியனோடு லுங்கியை கட்டிக்கொண்டு பல்குச்சி வாயில் இருக்க பஞ்சாயத்து பண்ணிக்கொண்டு இருப்பார். ஒரு தீர்ப்பையாவது அவர் கூறுவார் என்று நானும் காத்திருந்து பார்த்தது உண்டு.ஆனால் என் கண் பார்த்து அவர் தீர்ப்பு சொன்னதில்லை.ஆனால் எப்படியும் தினமும் பஞ்சாயத்து உண்டு.

தீடிரென்று காலை பத்து பதினொரு மணிக்கு சிலருடன் வங்கிக்கு வருவார்."நம்ப பசங்கதான், வெளியே பத்துரூவா வட்டிக்கு கடன் வாங்கி வட்டி கட்டிக்கிட்டு இருந்தான். நான்தான் நம்ப மானேஜர் இருக்கார்னு கூட்டிக்கிட்டு வந்தேன்", என்பார்.எங்கள் கிளை மேலாளரும் எப்படியாவது ஒரு லோனுக்காவது அவரை ஜாமீன் கையெழுத்து போட வைக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்.அந்த கடன் வசூல் ஆகவில்லையெனில் அதை சொல்லி அவருடைய மற்ற பரிந்துரைகளை மறுத்துவிடலாம் என்பது திட்டம்.ஆனால் அதற்கெல்லாம் மசிகிறவரா நம்ப கோபால்.கூட்டிக்கொண்டு வருகிற ஆட்களிலேயே ஒருவருக்கு ஒருவர் மாற்றி ஜாமீன் போட வைப்பார்.

ஒருநாள் ஏதோ காரணத்திற்காக அந்த கிராமத்தில் உள்ள ஒரே அரசு மருத்துவமனையை கண்டித்து பேரணி, ஆர்பாட்டம் என்று அறிவித்தார். காலை பத்து மணிக்கு பேருந்து நிறுத்தத்தில் துவங்கும பேரணி ஊர்வலமாக சென்று அரசாங்க ஆஸ்பத்திரி முன்னால் கோபாலின் பேருரைக்குப்பின் மகஜர் கொடுப்பது என்பது நிகழ்ச்சிநிரல்.பயந்துப்போன நான் அன்று பஸ் எல்லாம் ஊருக்குள் போக முடியாது என்று முடிவு செய்து என்னுடைய இரு சக்கர வாகனத்தில் வங்கிக்கு சென்றேன்.எங்கள் வங்கிக்கு முன்னால்தான் பேருந்து நிறுத்தம் ஆதலால் எதையும் நன்றாக பார்க்கமுடியும்.

பத்துமணிக்கு எந்த ஒரு சலசலப்பையும் காணோம்.கோபால் தான் வழக்கமாக உட்காரும் இடத்தில் அமர்ந்திருக்கிறார்.அமைதியாக இருக்கிறார். ஒரே மாற்றம் துவைத்த வேஷ்டி,சட்டை அணிந்திருக்கிறார்.ஒரு பேரணி நடக்கப்போகிற அறிகுறி எதுவுமே அந்த இடத்தில் இல்லை.நான் பேரணி கேன்சல் ஆகிவிட்டதோ என்று சந்தேகப்பட்டேன்.நேரம் கூடக்கூட எனக்கு பதட்டமாக இருந்தது.சரியாக பத்து மணி பத்து நிமிடத்திற்கு கோபால் தன் சட்டை பையிலிருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்து படித்துக்கொண்டே நடக்கிறார். ஆங்காங்கே உட்காந்திருந்த நான்கு பேர் ஆம் ,நம்பினால நம்புங்கள்.நான்கே பேர். அவரை கோஷம் போட்டபடி பின்தொடருகிறார்கள். ஊர்வலமும் பேருரையும் மகஜர் சமர்பித்தலும் கண்டிப்பாக நடந்திருக்கும் .சந்தேகம் என்ன?

போலீஸ் ஸ்டேஷன் என்பது சர்வ சாதாரணம் அவருக்கு.கிராமத்தில் ஏற்படும் சில சில்லறை சண்டை,திருட்டு போன்ற விஷயங்களில் போலீஸ் ஸ்டேஷன் போய் கிராம மக்கள் சார்பாக பேசுவதும் அவர் வேலைகளில் ஒன்று.பணம் எதுவும் வாங்குவது இல்லை.மக்கள் அன்புடன் வாங்கிக்கொடுப்பதை சாப்பிடுவார்.

வரலாற்று பொருள்முதல்வாதம் என்றால் என்ன என்று இவருக்கு தெரியுமா? எங்கெல்ஸ், மார்க்ஸ் பற்றியெல்லாம் மக்களுக்கு இவர் சொல்வாரா? என்றெல்லாம் நான் சிந்தித்ததுண்டு. அவரிடம் நான் அதிகம் பேசியதில்லை. அவர் என்னை பூர்ஷ்வா வர்க்கம் என்று கூட நினைத்துக் கொண்டிருக்கலாம்.ஆனால் நான் உள்ளூர அவரை ரசித்துக்கொண்டிருந்தேன். அவருடைய நடவடிக்கைகளை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் தன் பார்வையை கொண்டு அர்த்தப்படுத்திவிடமுடியும்.

ஒருவர் இந்த பதிவை வெறுமே ஒரு சிரிப்பு துணுக்காகவும் படித்துவிடமுடியும் ஆனால் சற்றே சிந்தித்தால் இதுபோன்ற ஆட்கள் படிப்பறிவில்லாத அப்பாவி ஜனங்கள் வாழ்க்கையில் எந்த அளவிற்கு ஆக்கபூர்வமாக பங்களிக்கிறார்கள் என்பதையும் புரிந்துக்கொள்ள முடியும். இன்றைய கிராமங்களில் இவர்களுடைய பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.இவர்களின் சாதனை என்பது வெளிஉலகிற்கு தெரியாமல் போகலாம். ஆனால் இந்த மாதிரியான போராட்டங்களால் சிறிய அளவிளாவது சில மாற்றங்களை இவர்கள் உருவாக்கி வருகிறார்கள்.

ஆனால் நம் கல்வி முறையில் பட்டபடிப்பு வரை ஒருவர் மார்க்சியம் என்றால் என்ன என்று தெரியாமலே படித்துவிடமுடியும் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.ஒருவர் அந்த சிந்தாந்தத்தை ஏற்றுக்கொள்கிறாரா மறுக்கிறாரா என்பது அவரவர் மனப்பான்மையையும் சிந்தனைமுறையையும் பொறுத்தது. ஆனால் ஒரு அறிவியலை அடிப்படையாக கொண்டதாக சொல்லப்படுகின்ற ஒரு சிந்தனை முறை பற்றிய படிப்பு நம் பள்ளிகல்வியில் இல்லை என்பது நம் கல்விமுறையின் பற்றாக்குறையை சொல்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

ஒரு புறம் அறிவியல் பாடம் எதையும் அறிவியல் பூர்வமாக பார்க்கும் கல்வி. இன்னொரு புறம் அதற்கு சம்பந்தமே இல்லாமல் மூடநம்பிக்கைகளில் ஊறிய வாழ்க்கை முறை. குறைந்தபட்சம் மார்க்சியத்தின் அடிப்படைகளாவது தெரிந்த இளைஞர்கள் இங்கு எத்தனை பேர்?கம்யூனிஸ்ட் என்றாலே ஸ்ட்ரைக் பண்ணுகிறவர்கள் என்றும் கூட்டம் சேர்ந்து கோஷம் போடுகிறவர்கள் என்று எண்ணம்தானே இங்கு பல இளைஞர்களுக்கும் உள்ளது.இது வருந்தத்தக்கது மட்டுமல்ல சிந்திக்கதக்கதும் கூட.

(இந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்த என்னுடைய படைப்பு.மே தினமாக நேற்று வெளியிடப்பட்டிருக்கவேண்டிய இந்த கட்டுரை ஒரு மீள்பதிவு.இத்துடன் இன்று நான் எழுதியுள்ள கம்யூனிசம் சில கேள்விகளும் குறிப்புகளும் என்ற கட்டுரையையும் வாசிக்கவேண்டுகிறேன்.நன்றி.)

மார்க்சியம் சில குறிப்புகள்-கேள்விகள்

சில நேரம் என்னுடைய எழுத்துக்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கம்யூனிஸ்ட் கருத்துக்களையும் தூக்கி பிடிப்பது போல் தோன்றும்.இதனால் நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று நினைத்துக்கொள்பவர்களும் உண்டு. இது தவறான கருத்து நாம் கம்யூனிஸ்ட்களிடம் உள்ள சில விஷயங்களை மதிக்கிறேன். அவ்வளவுதான்.

காலத்திற்கு ஏற்ப அவர்கள் வளரவில்லை என்பது நான் அவர்கள் மேல் வைக்கும் குற்றச்சாட்டு.தீர்வு எதையும் நான் வைத்திருக்கவில்லை.ஆனால் அவர்களின் சிந்தனை இந்திய சூழலில் தேக்கம் அடைந்துவிட்டது போல் எனக்கு தோன்றுகிறது.

பொதுவாக தனிபேச்சில் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள்/அனுதாபிகள் அவர்களுடைய தத்துவத்தை வானுலகத்தில் இருந்த வந்த தத்துவத்தை போலவும மற்ற அரசியல் பேசுபவர்கள் ஏதோ ஞானசூன்யங்கள் போலவும் கூறுவார்கள்.இது எல்லா கட்சிகளும் செய்யும் இயற்கையான ஒரு விஷயம்தான்.

மக்களை நெருங்காத எந்த தத்துவமும் வெற்றி பெறுவது சிரமம். உதாரணத்திற்கு தொழிற்சங்கங்களில் இன்று எத்தனை சங்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரிக்கின்றன?

ஒரு சிறிய காமெடி.ஜெயமோகனின் சுந்தர ராமசாமி நினைவின் நதியில் புத்தகத்தில் படித்தது.

"ஐம்பதுகளில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு தலைமறைவாக செயல்பட்ட காலம்.என்ன செய்வது என்று ஸ்டாலினிடம் கேட்டுவர ஆள் அனுப்புகிறார்கள்.ஸ்டாலினின் செய்தியை அச்சுத மேனனிடம் எம்.என்.கோவிந்தன் நாயர் சொல்கிறார். தெருக்களில் தடையரண் அமைத்து ஆயுதமேந்தி போராடும்படி ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அச்சுத மேனன் அதிர்ச்சியுடன் முகம் சிவக்க, "பாரிக்கேடா? இந்தாளுக்கு என்ன பைத்தியமா?" என்றாராம்."

தடையரண் அமைத்து போராடவேண்டிய தொழிலாளர் வர்க்கம இன்று காங்கிரசுக்கு முட்டுக்கொடுத்து நிற்கிறது. ஏன்? சமரசம்.நான் அதை குற்றம் சொல்லவில்லை. இதே சமரசத்தை பல்வேறு நிலைகள் சார்ந்து மற்ற கட்சிகளை செய்தால் அதை தோழர்கள் விமர்சிப்பார்கள்.

நேற்று வந்த விஜயகாந்த் தைரியமாக தனியாக தேர்தலை சந்திக்கிறார். கட்சியை வளர்க்கிறார். இத்தனை ஆண்டு அனுபவம் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கம் ஏன் தேர்தலை தனியாக எதிர்கொள்ளுவதில்லை என்று ஞானி கேட்பதில் நியாயம் உள்ளதாகவே எனக்கு படுகிறது. எப்போது கேட்டாலும் வியூகம் என்பார்கள்.அதே யுத்த தந்திரம் , வியூகம் என்பதை மற்றவர்கள் உபயோகப்படுத்தினால் அது பூர்ஷவா தந்திரம் ஆகிவிடுமா?

வங்காளம், கேரளா இங்கு மட்டும் இந்த இயக்கங்கள் வளர ஏதாவது வரலாற்று காரணம் உள்ளதா?இந்த இரண்டு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் கட்சி வளருகிறதா? என்ன திட்டம்? ஏதாவது சொல்ல முடியுமா?

என்னை பொறுத்தவரை மாய்மை இல்லாத பிரபஞ்ச பார்வை மார்க்சிடம் இருந்தது. அதுதான் முக்கியமாக கூறாக எனக்கு தோன்றியது..ஆனால் கட்சி தோழர்கள் உலகை பெரும் சுரண்டல் களமாக மட்டுமே பார்க்கின்றனர்.அதை வென்றெடுக்க இவர்கள் வகுக்கும் திட்டங்களும் முழுமையானதல்ல என்றே தோன்றுகிறது.அடிப்படை மார்க்சியம் பற்றிய ஒரு தெளிவான பார்வை எல்லா மக்களுக்கும சென்று சேர வேண்டியது அவசியம்.அது பகுத்தறிவு பாதைதான்.ஆனால் அதை தோழர்கள் பேசுவதில்லை.

இடஒதுக்கீடு விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் அகில இந்திய தலைமையின்(பொலிட்பீரோ) நிலைப்பாடு என்ன?தங்களுக்கு ஓட்டு வேண்டும் என்பதற்காக பங்களாதேஷ் அகதிகளை அனுமதிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பகீர் ரகம்தான். இந்தியாவின் வெளியுறவு கொள்கையையே ஓட்டுக்காக மாற்ற சொல்லுகிறார்கள் என்பதும் பாரதீய ஜனதா இவர்கள் மேல் வைக்கும் குற்றச்சாட்டு.இதற்கெல்லாம் தெளிவான பதில் இல்லை.

பெரியார் கம்யூனிச இயக்கத்தின் வளர்ச்சியை தமிழகத்தில் (அல்லது இன்னும் தெளிவாக இப்படி போடுவோம். திராவிட இயக்கங்கள் கம்யூனிச கட்சிகளின் வளர்ச்சியை தடுத்தனவா? ஆம் எனில் எப்படி? என்பதையும் தெரிந்தவர்கள் எழுதலாம்.

கம்யூனிசம் என்றால் என்ன என்றே தெரியாத சில நண்பர்களுக்கு இங்கு சில குறிப்புகள்.

கம்யூனிசத்தின் ஆணிவேர் கடவுள்மறுப்பு.பிரபஞ்சம் யாராலும் தோற்று விக்கப்படவில்லை.உலகில் மாற்றம் தான் நிரந்தரம் என்பதுதான் இவர்களின் மூலதத்துவம்.பொருள்முதல்வாதம் என்பதை இவர்கள் விளக்குவது உடலில்லாமல் ஆத்மா என்பது இல்லை.சிந்தனை மூளையில் இருந்து தோன்றுவது தான் என்பதும் இவர்களின் கருத்து. சிந்தனை என்பதோ உயிர் என்பதோ உடலின் பொருட்டு உருவாவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

மிகவும் முக்கியமாக சமுதாய மாற்றங்கள் உற்பத்தி உறவுகளை பொருத்தே அமைகின்றன என்பது தான் முக்கியமான கருத்து.(நான் விளக்கமாக எழுதாததால் குழப்பங்கள் எழலாம்.பல புத்தகங்கள் சல்லிசான விலையில் கிடைக்கின்றன)

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

மார்க்சியம் பற்றி சசியின் கட்டுரை அவருக்கே உரித்தான பாணியில் அருமையாக அலசியுள்ளார்.

மார்க்சியம் பற்றிய செல்வனின் கட்டுரை ஒப்புநோக்கும் முறையில் எழுதப்பட்டது.

Monday, May 01, 2006

தருமி அங்கிள்...

ஒரு வாரம் தமிழ்மணத்தில் என் பதிவுகள் இல்லை என்று அனைத்து நண்பர்களும் வருத்தப்பட்டார்கள்.(சரி,சரி.அடங்கு). கடந்த வாரம் மதுரை சென்றிருந்தேன்.ஆகையால் புதிய பதிவு எதுவும் எழுத முடியவில்லை. வட்டியும் முதலுமாக இந்த வாரம் உங்களை எல்லாம் பழிவாங்குவதுதான் என் நோக்கம்.

தருமி என்றொரு வலைப்பதிவர் மதுரையில் இருக்கிறார்.சாமி இல்லை, சோதிடம் பொய் என்றெல்லாம் எழுதிக்கொண்டு திரிவார்.இவரின் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் நீங்கள் அங்காங்கே பார்த்திருக்க க்கூடும். புரொபைல் புகைப்படத்தை பார்த்தீர்கள் என்றால் ஒரு அறிவுஜீவி லுக் இருக்கும்.இவரை சந்தித்தே ஆகவேண்டும் என்பது என்னுடைய பிளான்.

ஏற்கனவே எனக்கு மதுரையில் தெரிந்த இடம் கொஞ்சம்தான். மாமனார் வீட்டிலிருந்து நடந்து கிளம்பினால் மீனாட்சி பஜார் வழியாக ரயில்வே ஸ்டேஷன், நேராக சர்வோதய புத்தக மையம், குறுக்கே திரும்பி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.வந்த வழியிலேயே திரும்பி விடுவேன்.பக்கத்தில் பிரவுசிங் சென்டர்.

எனக்கு பிடித்த மீனாட்சி அம்மன் கோவிலுக்குக்கூட(என் பிற்போக்கு புத்தியை தேடி அலையும் நண்பர்களுக்கு வசமான பிடி) என் மனைவியுடன் தான் செல்வேன். வழி தவறிவிடும் என்ற பயம்தான். ஒரு முறை தனியாக சென்று கோவிலைச்சுற்றி சுற்றி வந்தேன்.வெளியே வர முடியவில்லை.

தருமியின் மொபைல் நம்பரை அடித்தேன்.அவரை வந்து என் பிக்அப் செய்யச்சொல்லி கேட்டேன்.அப்போதே அவர் உஷார் அடைந்திருக்க வேண்டும். ஆகலையே. அப்பாவியாக உடனே தன்னுடைய மொபட்டை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். என் மகளுக்கு இவர்தான் தருமி அங்கிள் என்று அறிமுகப் படுத்தினேன். உஷாரானார் தருமி.

"தாத்தா என்று சொல்லுங்கள், என்ன அங்கிள் வேண்டிகிடக்கு.. pseudo சந்தோஷம் எனக்கு தேவையில்லை", என்றார்.இரண்டு நவீனத்துவ ஆத்மாக்கள் மோதும்போது இதெல்லாம் சகஜம் என்று உணர்ந்து அமைதி காத்தேன்.

தருமியுடன் அவரின் இல்லத்திற்கு சென்றேன். வீடு மதுரை அவுட்டரில் என்றார்.இன்னும் கொஞ்சம் தூரம் போனால் திண்டுக்கல் வந்துவிடும் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கும் போதே விளாங்குடி என்ற இடத்தில் இருந்த அவருடைய வீட்டை அடைந்தோம்.

கம்ப்யூட்டரை சிறிது நேரம் நோண்டினோம். எந்த கமெண்ட்டும் என் மெயிலுக்கு வருவதில்லை என்று குறைப்பட்டுக்கொண்டார். எல்லா காமெண்ட்டும் ஸ்பம்முக்கு போனால் எப்படி இன்பாக்ஸ் க்கு வரும் என்று கூறி சரிசெய்து கொடுத்தேன். அவரே தயாரித்த ஜுஸ் அளித்தார். மதுரையில் இருக்கும்வரை எப்போது வேண்டு மானாலும் வாஙக என்று வார்த்தை விட்டார் தருமி. அதுக்குத் தானே நாம் இருக்கோம் என்று நினைத்துக் கொண்டு அவரே அதிசயக்கும் அளவிற்கு இம்சை கொடுக்க ஆரம்பித்தேன்.

ஆப்புவின் செய்கையினால் வருத்தப்பட்ட தமிழ்காவலன் அய்யா ஞானவெட்டியானை பற்றி பேசினோம்.திண்டுக்கல் போகலாம் என்று நினைத்தோம். பிறகு ஒரு முறை மதுரை ஏரியா வலைப்பதிவர் சங்க கூட்டத்தை கூட்டலாம் என்றும் முடிவு செய்தோம்.

வலைபதிவின் மூலம் எனக்கு கிடைத்த அருமையான நட்புகளில் தருமியும் ஒருவர்.என் குடும்பத்துடன் தருமியின் வீட்டுக்கு சென்று ஒரு மாலை வேளையை கழித்தோம்.மனது நிறைந்த மாலைவேளை.நன்றி தருமி.(தருமி சிக்கன் நன்றாக செய்கிறார். மதுரை வரும் நண்பர்கள் கவனிக்க)

இன்னும் முத்துகுமரனும் குமரனும் என்னிடம் சிக்கவில்லை. பார்ப்போம். உலகம் உருண்டைதானே.

மதுரை சென்ட்ரல் லைப்ரரி

புத்தக செலவு ஏகப்பட்டது ஆகிறது என்று வீட்டில் கடுமையாக எதிர்ப்பு எழுந்ததால் நூலகத்தில் உறுப்பினர் ஆகலாம் என்று முடிவு செய்தேன். மதுரை மததிய நூலகம்.பேருதான் பெத்த பேர். பராமரிப்பு ஒரு வெங்காயமும் இல்லை.

புத்தகங்கள் எல்லாம் தூசி படர்ந்து கிடக்கின்றன.அறிவுப்பசி என்று வந்தவன் வியாதியுடன்தான் போவான்.நூலக ஊழியர்கள், உதவியாளர்கள் எல்லாம் படுமோசம்.எந்த புத்தகங்களும் ஒரு முறையாக அடுக்கிவைக்கப்படவில்லை. இதற்கு அந்த நூலகத்தையே மூடிவிடலாம்.

இந்த முறை நியூ செஞ்சுரி புக் ஹவுசில் நான் வாங்கிய புத்தகங்கள்.

பெருமாள்முருகனின் பீக்கதைகள்-சிறுகதை தொகுப்பு

பெருமாளமுருகனின் துயரமும் துயரநிமித்தமும் -கட்டுரை தொகுப்பு

அ.மார்க்ஸின் சொல்வதால் வாழ்கிறேன் -கட்டுரை தொகுப்பு

ராகுல்ஜீயின் வால்கா முதல் கங்கை வரை-வரலாற்று கதைகள் தொகுப்பு

இந்த புத்தகங்களைப்பற்றி படித்துவிட்டு பிறிதொரு நாள் விளக்கமாக எழுதுகிறேன்.

நட்சத்திரம்**:எனக்கு ஆழமாக எழுத தெரியாது

"ரோகவனத்தில் உதிரும் பாறைகளில் செதில் உதிரும் பாதரச எலும்பின்தூள் படிந்த கல்கோவிலில் நூல் சுருளும் சர்ப்பம் மணல் உதிர நகர்ந்தது."

ஏதாவது புரிகிறதா? ஆனால் இது அனைத்தும் தமிழ் சொற்கள் தாம். இப்படி எல்லாம் எழுதாமல் நான் எளிமையாக எழுதுவதையே விரும்புகிறேன்..(மேற்கண்ட வாக்கியத்தை நான் சுட்டது வெப்உலகம் தளத்தில் ஒரு கட்டுரையில் இருந்து).

என்னுடைய பதிவுகளும் எழுத்தும் அனைவருக்கும் புரியும்படி இருக்கவேண்டும் என்பதில் நான் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறேன்.கடுமையான மொழியையோ அல்லது அதிக சிந்தனையை வேண்டி நிற்கும் விஷயங்களையோ நான் எழுதாமல் இருப்பதற்கு காரணம் அது எனக்கு புரிவதில்லை(?) என்பதற்காக மட்டும் அல்ல.கடுமையாக இருப்பதாலேயே பெரும்பான்மையான மக்கள் பார்க்கவோ படிக்கவோ விரும்பாத சில நல்ல விஷயங்களை சற்று எளிமையாக கொடுக்க ஆசை.அவ்வளவுதான்.

***********************************

நான் இந்த தமிழ்மணத்திற்கு வந்தது ஒரு விபத்துதான்.வேலை இல்லாத நேரங்களில் எழுத்தாளர்களின் பெயர்களை கூகிள் தேடுபொறியில் இட்டு அது துப்பும் பக்கங்களை படித்து பொழுதை ஓட்டிக்கொண்டிருந்தேன்.ஒரு நாள் சுந்தர ராமசாமியின் பெயரை கொடுத்து படித்துக்கொண்டிருந்தபோது அது என்னை பிரகாஷின் தளத்தி்ல் கொண்டு தள்ளியது.அன்று ஆரம்பித்தது தமிழ்மணத்திற்கு சனி. நானும் வலைபதிக்க வேண்டி உதவி கேட்டு பிரகாஷிற்கு மெயில் தட்டிவிட்டேன்.ஆனால் அவரின் மெயில்சர்வர் என் மெயிலை ஸ்பம் என்று கூறி ட்ராஷில் போட்டது.

பிறகு கூகிள் முதலிய பொறிகளின் உதவியோடு நானே பிளாக்கர் அக்கவுண்ட், தமிழில் டைப் அடிப்பது, யூனிகோடு முதலிய சமாச்சாரங்களை கற்றேன். ஆங்கில டைப்பிங் தெரியுமாதலால் இரண்டே வாரங்களில் தமிழ் டைப்பி்ங் (யளனகபக) கற்றுத்தேர்ந்தேன்.தமிழ்மணத்தில் நுழைந்தேன். சோ பற்றி நான் எழுதிய பதிவுகளும் திராவிட ராஸ்கல்களை ஒழிக்க முடியுமா என்று எழுதிய இந்த பதிவும் என்னை இங்கு ஓரளவு அடையாளம் காட்டியுள்ளது.தெரிந்தோ தெரியாமலோ ஒரு இமேஜ் (சிலருக்கு தவறாகவும்) உருவாகிவிட்டது. வருத்தம் இல்லை.பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்(?).

***********************

என் இளமைக்காலம் முதல் சுமார் 12,13 வயது முதல் நான் திராவிட மற்றும் அரைகுறை இடதுசாரியாகத்தான் இருக்கிறேன்.என் தந்தை எங்கள் வீ்ட்டு பீரோவில் அடுக்கி வைத்திருந்த பழைய பெரியாரின் புத்தகங்களும் சோவியத் நூல்களும் இதற்கு தூண்டுகோலாய் இருந்தது. ஸ்புட்நிக் என்று ஒரு புத்தகம் மாதமாதம் வரும்.யாருக்காவது தெரியுமா?

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தினமலர்,துக்ளக் போன்ற புத்தகங்களை படித்து இந்துத்வா கொள்கைகளையும் பேசியிருக்கிறேன். நான் ஏற்கனவே சொல்லியிருந்தபடி சொந்தபுத்தி வந்தவுடன் அதை நிறுத்திவிட்டேன்.

இது திராவிட கருத்து, இது இடதுசாரி கருத்து என்ற வார்த்தைகள்(ஜார்கன்ஸ்) எல்லாம் மிக தாமதமாகத்தான் தெரியவந்தது.ஆனால் அதற்கு முன்பே அந்த கருத்துக்கள் என் மூளையில் ஏறிவிட்டது.

நண்பர் செல்வனின் பதிவில் நான் படித்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்த கருத்து.உங்கள் கருத்துக்களை மற்றவர் கட்டமைத்தால் மனிதன் என்று முறையில் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று பொருள்.

பொதுவாக நாம் என்னவாக இருக்கிறோம் என்பதற்கும் மற்றவர் நம்மை என்னவாக நினைக்கவேண்டும் என்று நாம் நினைப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளதாக எனக்கு படுகிறது.இந்த வித்தியாசம் சிறிதாக இருந்தால் பிரச்சினை இல்லை.இந்த வித்தியாசம் பெரிதாக பெரிதாக பிரச்சினைகள் முளைக்கின்றன்.இந்த வித்தியாசத்தை குறைப்பது அவசியம்.

ஜெய்ஹிந்த என்று கோஷத்தைப்பற்றி நாம் வேண்டிய மட்டும் பேசியாகி விட்டது.கடந்த வாரத்தில் குழலி ஒருமுறை இந்த கோஷத்தை கிண்டலடித்து புனித பிம்பங்களிடம் வாங்கிக்கட்டிகொண்டார்.சில மாதங்களுக்கு முன் நான் வாங்கி கட்டியிருக்கிறேன்.

இந்த கோஷத்தை நாம் மிஸ்யூஸ் செய்வதும் பிரச்சினை. சோவை விமர்சித்தால் ஜெய்ஹிந்த் போடுவது நியாயமா? போலி டோண்டு பிரச்சினைக் கெல்லாம் ஜெயஹிந்த் போட்டு நம்மை நாமே ஏமாற்றி கொள்வதை விட்டுவிட்டு காவிரியில் தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகா காரனிடம் ஏன் ஜெயஹிந்த் போட்டு தண்ணீர் வாங்கிவரகூடாது?

இதை கூறினால் பிரிவினைவாதிகள்,இந்திய ராணுவ வீரர்கள் உங்களை காக்கிறார்கள், தமிழக போலீஸை வைத்து இலங்கையை பிடித்துவிடுவீர்களா என்று சரமாரியாக புனித பிம்பங்கள் கேள்விகளை கேட்கும்போது நமக்கு சிரிப்புத்தான் வருகிறது.அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

மொழி,இனம் என்ற வரலாற்றின் அடிப்படையில் எனக்கு உணர்ச்சி வருவதில்லை என்று கூறும் பலர் வெறும் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக கொண்ட மதம் என்று வரும்போது வரிந்துகட்டிக் கொண்டுவருவது ஏன் என்பதும் எனக்கு விளங்காத பல கேள்விகளில் ஒன்று.


**********************

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் பிறந்த ஒருவன் உலகாள்வான் என்று யாரோ சொன்னதை பலகாலமாக நம்பியதும் இல்லாமல் அது என்னை பற்றித்தான் கூறுப்பட்டுள்ளது என்று சிறுபிள்ளை த்தனமாக நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறேன்.

இந்த விஷயத்தை எல்லாம் கடந்து வெகுதூரம் வந்துவிட்டாலும் இன்னமும் தன்னம்பிக்கை நமக்கு ஜாஸ்திதான்.யாரையும் விட நான் எந்த விதத்திலும் தாழ்ந்தவன் இல்லை என்று நினைத்துக் கொள்வதும் தகுதிக்கு மீறிய எதிர்ப்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாததும் எனக்கு பல வகைகளிலும் உதவியாகத்தான் உள்ளது.

**************************

இந்த வார தத்து(பித்து)வங்கள்

இது படிக்க எளிமையாக இருப்பதால் இந்த தத்துவத்தை சாதாரணமாக எண்ணவேண்டாம்.இதில் பல அரிய தத்துவங்கள் இலைமறைகாயாக மறைந்து உள்ளனஉலகத்தில் உள்ள மக்களை கீழ்க்கண்ட நாலு வகையாக பிரிக்கலாம்.

1.உண்மையில் விவரம் இல்லாதவர்கள்.அதே சமயம் தனக்கு விவரம் பத்தாது என்பதையும் உணர்ந்துக்கொண்டவர்கள்.(நானெல்லாம் இந்த வகையில்தான் வருகிறேன் என்று நினைக்கிறேன்)

2.உண்மையில் புத்திசாலிகள்.தான் புத்திசாலி என்பதை உணர்ந்துக் கொண்டவர்கள்.

3.உண்மையில் புத்திசாலிகள்.ஆனால் தாங்கள் புத்திசாலிகள் என்று அவர்களுக்கு தெரியாது.

4.உண்மையில் விவரம் இல்லாதவர்கள்.ஆனால் தன்னை புத்திசாலி என்று நினைத்துக்கொள்பவர்கள்.

இனி கருத்து:

இதில் முதல் மூன்று வகையில் அடங்கும் ஆட்களுக்கும் வாழ்க்கையில் அதிக பிரச்சினை வராது.கடைசி வகை ஆட்கள் வாழ்க்கையில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.ஆனால் கொடுமை என்ன என்றால் கடைசி வகை ஆட்களுக்கு தாங்கள் இந்த கேட்டகிரியில இருக்கிறதே தெரியாது. இது தான்யா வாழ்க்கை.

***********************

இந்த வாரம் முழுவதும் தினமும் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளை (சில மீள்பதிவுகள்) எழுதலாம் என்று நினைத்துள்ளேன்.நட்சத்திரம் என்பதை மிகவும் ஆக்டிவ்வாக தமிழ்மணத்தில் இயங்குவது என்ற அடிப்படையில் முடிந்தளவு மற்றவர்களின் நிறைய பதிவுகளையும் படித்து கருத்து(?) சொல்வது என்று நினைத்துள்ளேன்.பார்ப்போம்.

நான் எழுத உத்தேசித்துள்ள சில தலைப்புகள் பின்வருமாறு :

காதல்,ஜல்லிகட்டு,கவிதை, கம்யூனிசம், சுந்தர ராமசாமி, அ.மார்க்ஸ், தருமிக்கு சில கேள்விகள்,கனவு காணும் வாழ்க்கை,மதுரையில் ஒரு வாரம்,பகவான் சத்யசாயிபாபா

இன்று என்னுடைய முதல் சிறுகதையினை மீள்பதிவு செய்துள்ளேன். நண்பர்கள் இந்த சுட்டியில் சென்று இதைப்படித்து தங்கள் கருத்துக்களை கூறலாம்.

நண்பர்கள் எப்போதும் போல் ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறேன்.நன்றி.

தமிழ்வெளியை பார்த்தீங்களா?