ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதற்கும் பூரண விசுவாசம் செலுத்துகிறவன் அல்ல. நடைமுறை அர்த்தப்படி கட்சிகள், அரசாங்கம், சமூகம், மதம்,தேசம் இவற்றிற் கெல்லாம் பூரண விசுவாசம் அளித்து விடக் கூடாது என்பதை என் இலக்கியக் கொள்கையின் ஒரு பகுதியாக நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.
வெகுஜனத்தின் நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதோ, புதிய நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களை தூண்டுவதோ என்னுடைய வேலை அல்ல.அவர்களுடைய பொது நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விதி விலக்கான உண்மைகளைச் சொல்லி,அந்த சந்தர்ப்பங்களில் அவர்களுடைய விரோதி யாகவும், காலத்தின் நண்பனாகவும் இருப்பதே என் வேலை என்று எண்ணுகிறேன்.
(சு.ரா வின் நானும் என் எழுத்தும் என்ற நூலிருந்து)
எந்த யோசனையும் இல்லாமல் என்னை கவர்ந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் சுந்தர ராமசாமி என்று கூறிவிடலாம். மேலோட்டமாக எழுதக்கூடிய எழுத்தாளர், இறுக்கமான செயற்கை நடையை கொண்டவர், பார்ப்பன மேலாண்மையை வலியுறுத்துபவர் என்றெல்லாம் பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது இருந்தாலும் அத்தனையையும் மீறி அவர் எழுத்துக்கள் எனக்கு பிடித்துத்தான் இருக்கிறது.
ஏறத்தாழ அவரின் அனைத்து ஆக்கங்களையும் படித்துள்ளேன். சிறுகதை, நாவல், கட்டுரைகள் என்று எல்லாவற்றையும் படித்துள்ளேன்.பொதுவாக நவீன கவிதைகளை உள் வாங்கி கொள்வதில் எனக்கு சில பிரச்சினைகள் உண்டு.ஆகவே சு.ரா வின் கவிதைகளை நான் இன்னும் படிக்கவில்லை.
சு.ரா.வின் மொழிபெயர்ப்பி்ல் தோட்டியின் மகனையும் அவரின் கடைசி கால சிறுகதைகளில் ஒன்றான பிள்ளை கெடுத்தாள் விளையையும் தலித் எழுத்தாளர்களிடம் இருந்து குற்றச்சாட்டு வருவதற்கு முன்பே படித்துள்ளேன். என் சிறுமூளைக்கு அவர் எதுவும் அவதூறாக எழுதியதாக தோன்றவில்லை. அவரின் திராவிட கட்சிகளின் மீதான விமர்சனங்களையும் நான் கடுமை யானதாக கருதவில்லை.ஒரு சில கருத்துக்கள் நாணயமாகவே தோன்றுகிறது.
அ.மார்க்ஸ் போன்ற தலித்திய,பின்நவீனத்துவ விமர்சகர்கள் அவரை ஓயாமல் தாக்கியே வந்திருந்தாலும் நான் அவர்களுக்கு எதிரி அல்ல என்பதையே சு.ரா மீண்டும் மீண்டும் சொல்லி வந்தார். இது அவரின் வாழ்வின் முதுமையான கடைசி கட்டம் என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஒரு எழுத்தாளர் நமக்கு பிடிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று வாழ்வின் பல்வேறு விஷயங்களின் மேல் நாம் வைத்திருக்கும் மதிப்பீடுகள். அவர்களின் எண்ணப் போக்குகளுடன் நம்முடைய எண்ணங்களை ஒப்பிட்டு அவர்களிடம் இருந்து அஙகீகாரம் பெறுகிறோம்.ஆனால் அதற்காக அவர்கள் அடிக்கும் எல்லா கூத்துக்களையும் தாங்கி பிடிக்கும்போதுதான் பிரச்சினை வருகிறது.
ஜெயமோகனின் ஒரு சுந்தர ராமசாமி-நினைவின் நதியில் நூல் ஒரு முக்கியமான நூல். அந்த நூலில் அடிக்கடி தான் சுந்தர ராமசாமியை மீறி சென்றதாக ஜெயமோகன் எழுதியிருப்பார். அந்த "மீறி" என்ற வார்த்தையை "மாறி" என்று அடுத்த பதிப்பில் ஜெயமோகன் போட்டுகொள்வாரேயானால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.மீறல் என்ற வார்த்தை வேறுவிதமாக அர்த்தம் கொடுக்கிறது.
சு.ராவை வெறுமனே புகழ்வதைவிட அவரின் மீதான கறாரான விமர்சன பார்வையை செலுத்தியுள்ளதாக ஜெயமோகன் கூறுகிறார். இந்த நூலை படிக்கும் சு.ரா வாசகர்கள் பல இடங்களில் முரண்படலாம்.என்னளவில் நான் முரண்படும் இடங்களில் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.
எழுத உட்கார்ந்தால் நம்மில் வேறு ஒரு ஆள்(சாமி(?))இறங்கிவிட வேண்டும் என்றும் கண்ணை மூடிக்கொண்டு எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது ஜெயமோகனின் எண்ணம்.அப்படியென்றால் தான் அது இலக்கியம் என்றும் நினைக்கிறார் அவர். சுந்தர ராமசாமி யோசித்து யோசித்து மெதுவாக எழுதுவதாகவும் அதை தவறு என்று கூறி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் போட்டு பார்ப்பார் ஜெமோ. அது ஏன் என்று எனக்கு புரிந்ததே இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பகுத்தறிவு என்பதையும் போட்டுப்பார்ப்பார் ஜெமோ என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
தன்ணுணர்வு இல்லாமல் எழுதுவதுதான் இலக்கியம் என்று இவர் எப்படி நிர்ணயிக்கலாம்? இந்த நூலிலும் நவீனத்துவ எழுத்தாளர்கள் என்று அசோகமித்திரன், ஜீ.நாகராஜன் மற்றும் சு.ராவை வேறு ஒரு நூலிலும் மதிப்பிட முயற்சிக்கும் ஜெயமோகன் பல்வேறு காரணங்களை கூறி ஜீ.நாகராஜன் மற்றும் சு.ரா ஆகியோர் எழுதுவது இலக்கியமே இல்லை என்று அளவிற்கு போகிறார்.ஆனர்ல அவர்களின் இடம் தமிழ் இலக்கியத்தில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது என்றும் கூறுகிறார்.இங்கு ஜெயமோகனுடன் சேர்ந்து நமக்கும் குழப்பம் வருகிறது.
அடுத்ததாக ஜெயமோகனின் "பின் தொடரும் நிழல்" நாவலில் கம்யூனிஸ்ட் கட்சியினரால் துரத்தப்பட்ட கெ.கெ.எம் ஒரு கம்புடன் கோயிலில் இருந்து மீளும் காட்சி தன்னை எப்படி உலுக்கியது என்பதை சு.ரா உணர்ச்சிகரமாக சொன்னதாக எழுதியிருப்பார் ஜெமோ.சு.ரா போன்ற ஒரு நவீனத்துவர் இதுபோன்ற தமிழ் சினிமா காட்சிக்கு நிகரான காட்சியமைப்பினால் உலுக்கப்பட்டிருப்பார் என்று சு.ரா வின் பல புத்தகங்களை படித்த எனக்கு தோன்றவில்லை. சிஷயப்பிள்ளையை சந்தோஷப்படுத்தும் நோக்கத்துடன் ஏதாவது சொல்லியிருக்கலாம்.
இவரைப்பற்றி(சு.ரா) ஒரு புத்தகமே எழுதலாம் என்று எனக்கு ஒரு எண்ணம் உள்ளது. பார்ப்போம்.மற்றபடி,சு.ரா வின் காகங்கள் என்ற சிறுகதையும் ஜே.ஜே.சில குறிப்புகள் என்ற நாவலும் எனக்கு மிகவும் பிடித்த படைப்புகள்.எத்தனை முறை படித்தாலும் சளைக்காத ஆக்கங்கள்.
Saturday, May 06, 2006
Subscribe to:
Post Comments (Atom)
52 comments:
ஜே.ஜே. சில குறிப்புகள் குறித்து விமர்சனங்கள் உண்டு(வாசித்த பக்கங்கள் வரையிலேயே). முழுமையாக வாசித்துவிட்டு முழுப்பதிவாக போடுகிறேன். வாசித்த வரைக்கும் எந்தவித பிரமிப்பையும் அவரது எழுத்துகள் எனக்குள் ஏற்படுத்தவில்லை.
ஒரு புளிய மரத்தின் கதை?
படித்தேன்....
சு.ரா. அமெரிக்காவில் நீண்ட நாட்கள் இருந்தபோது, அமெரிக்கா குறித்து எந்தவிதமான விமர்சனமோ அல்லது அவர்களது வாழ்க்கை குறித்த பதிவையே எழுதவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனை விளக்க அவர் தற்போது நம்மிடம் இல்லை. இருப்பினும் ஒரு எழுத்தாளனை மதிப்பீடு செய்யும் போது பல தரப்பில் இருந்தும் கல் வரும்! இதிலெல்லாம் அவர் தாங்குகிறாரா?
"என்னை கவரும் சுந்தர ராமசாமி" ஐயர்ன்னு சொல்லுங்கோ,
அப்பத்தான் நன்னா இருக்கும்.
j
முத்துகுமரன்,
படிப்பதற்கு முன்பே அவரை பற்றி ஏதோ முன்முடிவுகளோடு(?) படித்தால் அப்படித்தான்:) இருக்கும்...
முழுப்பதிவை போடுங்க..நீங்க என்ன எதிர்பார்த்தீர்கள் என்ன இருந்தது என்ன இல்லை என்பதை பார்ப்போம்..
பட்டணத்து ராசா,
ஒரு புளிய மரத்தின் கதை
ஜே.ஜே சில குறிப்புகள்
பெண்கள்,குழந்தைகள்,ஆண்கள்
அவர் எழுதியது மூன்றே நாவல்கள்தான்.
சந்திப்பு,
எதை எழுதுவது என்றுக்கூட ஒரு படைப்பாளியை நாம் கேட்கமுடியுமா?
அமெரிக்காவில் இருந்து அவர் எழுதிய கதைகள் மரியா தாமுவுக்கு எழுதிய கடிதம் என்ற தொகுப்பில் உள்ளன.
வயதாகி போன சமயத்தில்தான் அமெரிக்கா சென்றார்.உடல் தொந்தரவு நிறைய இருந்ததாக கேள்வி.
சந்திப்பு,
//ஒரு எழுத்தாளனை மதிப்பீடு செய்யும் போது பல தரப்பில் இருந்தும் கல் வரும்! இதிலெல்லாம் அவர் தாங்குகிறாரா//
நாத்திகர்,.ஆகவெ இந்துத்வா வாதிகள் அடித்தார்கள்...
கம்யூனிஸ்ட்டுகளிடம் இருந்து ஸ்டாலினிசத்தால் பிரிந்தார் ஆகவெ கம்யூனிஸ்டுகள் அடித்தார்
பார்பனராக பிறந்ததால் அ.மார்க்ஸ் முதல் தலித் எழுத்தாளர்கள் வரையுள்ள ஆட்களும் அடித்தார்கள்
போலி இலக்கியவாதி என்று ஜெயகாந்தன் முதலானோரை நினைத்தார்...ஆகவே புனித பிம்பங்களும் அவரை அடித்து நொறுக்கினர்..
நீங்களே முடிவு செஞ்சுக்கங்க...
//முன்முடிவுகளோடு(?) //
இந்த வார்த்தையை நான் எதிர்பார்த்தேன் முத்து:-))).. என் நம்பிக்கை வீண் போகவில்லை. மிகப் பெரும் எதிர்பார்ப்புகளோடுதான் வாசிக்க ஆரம்பித்தேன் என்பதை மற்றும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். (பிரபலமான புத்தகங்கள் மூது எப்போதும் ஆர்வம் உண்டு)
நிச்சயம் பார்ப்போம்... பதிவு போட எடுத்து கொள்ளும் காலம் என்னுடையது:-)). சும்மா எப்போ எப்போனு கேக்கப்பிடாது.....
ஓடிட்டான்யானு யாரும் சொன்னாலும் கவலை இல்லை:-)))
முத்து சு.ரா.வை பற்றி எனக்கு எதுவும் தெரியாது? ஸ்டாலினிசத்தால் பிரிந்ததாக எழுதியுள்ளீர்கள். ஸ்டாலினிசம் என அவர் எதைப் புரிந்து கொண்டார் என்றும் தெரியவில்லை. தங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் கொரிக்கலாமே!
////முன்முடிவுகளோடு(?) //
இந்த வார்த்தையை நான் எதிர்பார்த்தேன் முத்து:-))).. //
அட! இந்த வார்த்தைகளை எல்லாம் உபயோகப்படுத்தவில்லை என்றால் இலக்கிய குட்டையில் ஊற முடியாதாமே:)
//பதிவு போட எடுத்து கொள்ளும் காலம் என்னுடையது:-)). சும்மா எப்போ எப்போனு கேக்கப்பிடாது.....
ஓடிட்டான்யானு யாரும் சொன்னாலும் கவலை இல்லை:-))) //
வம்புதானே :)
தனிபதிவு போட தகுதியில்லாத புத்தகம் என்று நினைத்தால் பதிவு தேவையே இல்லை என்பேன் நான்.
//தனிபதிவு போட தகுதியில்லாத புத்தகம்//.
விமர்சனம் உள்ளதென்பதற்காக ஒட்டு மொத்தமாக நிராகரிப்பவன் அல்ல நான்.
பதிவு போட தகுதி வாய்ந்த புத்தகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விமர்சனங்களே படைப்பின் வீரியம் சொல்வன...
இலக்கியவாதிகள் பலருக்கு கம்யூனிசம் ஒரு சிறந்த பாதுகாப்புபோர்வையாக இருந்திருக்கிறது. **அடுத்த 100 பின்னூட்டத்திற்கு அடி போட்டுகொடுத்திருக்கேன்:-)))**,
போய்ட்டு பொறவு வாரேன்:-)))
பிடித்த பலகாரம் சாப்பிட்டபின் நிறைய நேரம் அந்தச் சுவை வாயிலலும், மனதிலும் தங்கியிருக்குமே, அதேபோல ஜே.ஜே சில குறிப்புகளின் தாக்கம் வாசித்து சின்னாட்கள் வரை மனதில் தங்கியிருந்தது.
சந்திப்பு,
வாங்க..உட்காருங்க..கொரிச்சுருவோம்
ஸ்டாலின் பதவியில உட்காந்துகிட்டு பல பேரை கொலை செய்ததாகவும் தன்னுடைய தளபதிகள் சிலபேரையே ஒழித்து கட்டியதாகவும்,ரஷ்யாவில் விவசாயிகளை ஒழித்து கட்டியதாகவும் சர்வாதிகாரியாகவும் சொல்லப்படுகிறதே? உண்மையா?
//இலக்கியவாதிகள் பலருக்கு கம்யூனிசம் ஒரு சிறந்த பாதுகாப்புபோர்வையாக இருந்திருக்கிறது. **அடுத்த 100 பின்னூட்டத்திற்கு அடி போட்டுகொடுத்திருக்கேன்:-)))**, //
புரியுது..புரியுது...நீங்க கோடு மட்டும் போடுங்கண்ணே..நான் ரோடு போட்டு தார் ஊத்தி சாலை பணியாளர்களுக்கு வேலையே போட்டு கொடுத்திர்றேன்...
அப்புறமேட்டு வரணும்..ஆமா..
தருமி,
அது உங்களுக்கு பிடித்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை..எனக்கு பிடித்திருக்கிறதே....
விவாதத்தில் நாவலை உடைப்பது வேறு...பிடித்திருப்பது வேறு...சரியா..
என்னையும் அதிகம் கவர்ந்த எழுத்தாளர் சு.ரா. தான் முத்து. அவரோடு பல விசயங்களில் எனக்கு கருத்தொற்றுமையுண்டு. உங்கள் பல பதிவுகள் நன்றாக உள்ளன; நேரமின்மையால் (சோம்பேறித்தனத்தினால்) பின்னூட்டமிடமுடியவில்லை.
தங்கவேல்,
//(சோம்பேறித்தனத்தினால்) பின்னூட்டமிடமுடியவில்லை//
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.. இந்த பதிவில் நான் கூறியுள்ள ஜெயமோகன் புத்தகத்தை பற்றி ஒரு பதிவு போட இருப்பதாகவும் சோம்பேறிதனத்தால் போடாமல் இருப்பதாகவும் முதலில் எனக்கு ஒருமுறை கூறிஉள்ளீர்கள்..(இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றுவிட்டு வந்து)
இன்னும் அதையே:)
அப்ப ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சு என்பதே உங்களிடம் கிடையாதோ:))
---வாங்க..உட்காருங்க..கொரிச்சுருவோம்
ஸ்டாலின் பதவியில உட்காந்துகிட்டு பல பேரை கொலை செய்ததாகவும் தன்னுடைய தளபதிகள் சிலபேரையே ஒழித்து கட்டியதாகவும்,ரஷ்யாவில் விவசாயிகளை ஒழித்து கட்டியதாகவும் சர்வாதிகாரியாகவும் சொல்லப்படுகிறதே? உண்மையா?---
இது சோசலிச சோவியத்துக்கு எதிராகவும் °டாலினுக்கு எதிராகவும், ஏகாதிபத்தியவாதிகள் கட்டமைத்த பெரும் கதை. இன்றைக்கும் °டாலின் மீதுh ஏராளமான பொய்களையும், புனை சுருட்டுக்களையும் இட்டுக் கட்டி கதைக்கப்பட்டு வருகிறது. ஏகாதிபத்தியவாதிகளுக்கு °டாலின் என்ற பெயரைக் கேட்டாலே ஒரு நடுக்கம்தான். °டானிசம் என்ற ஒன்றெல்லாம் இல்லவே இல்லை. சோவியத் அதிபராக இருந்த °டாலின் இரண்டாவது உலகப் போர்ச் சூழலில் பாசிச இட்லரையும், அவரது பாசிச பரிவாரங்களையும் முறியடித்து உலகை காப்பாற்றியவர். மேலும் இந்தப் போரின் போது அமெரிக்காவும், பிரிட்டனும், ஜெர்மனியும், ஜப்பானும் சோவியத்தை அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது உள் நோக்கம். எப்படியாவது இட்லரை சோவியத் மீது படையெடுக்க வைத்து அதன் மூலம் சோவியத் அழியுமா என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்கள். ஆனால், இவர்களை முகத்திரைகளையெல்லாம் கிழித்து சோவியத்நாட்டை மட்டுமல்ல; உலகையே பாசிச சர்வாதிகாரப் பிடியில் இருந்து காத்தவர். அடுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் அணுகுண்டை திடு திப்பென்று போட்டு, சோவியத்தை மறைமுகமாக மிரட்டியது. இருப்பினும் °டாலின் இதற்கெல்லாம் மசிவாரா? சோவியத்தும் மிக விரைவாக அணுகுண்டை கண்டுபிடித்தது. உருவாக்கியது. இப்படி ஏகாதிபத்தியவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் °டாலின்.
°டாலின் மட்டுமல்ல இந்த பாசிச இலட்லரை முறியடிக்க, உலகைக் காப்பாற்ற சோவியத் மக்கள் செய்த தியாகத்தை யாரும் கூறுவதே இல்லை. கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். எனவே தியாகத்தின் மறு உருவம்தான் சோவியத். சு.ரா. போன்றவர்கள் °டானிசத்தால் கம்யூனிசத்தில் இருந்து விலகினார் என்றால், இவரது அறிவுத் தேடல் அப்போதே காய்ந்துப் போனதைத்தான் இது காட்டுகிறது. அதே சமயம் °டாலின் காலத்தில் சில மோசமான சம்பவங்களும் நடைபெற்றிருக்கலாம். இத்தகைய சம்பவங்கள் கூட சோவியத் என்ற முதல் சோசலிச அரசை காப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே!
ஆனால் ஏகாதிபத்தியவாதிகள் ஈரைப் பேணாக்குவதும், பேணை பெருமாளாக்குவதிலும் எப்போதும் வல்லவர்கள். அந்த விதத்தில் °டானி மீதான அவதூறுகள் வரலாற்றில் என்றும் நிற்காது. °டானிசம் என்றாலலே அது பாசிசத்தை வேறருக்கும் பாதை! ஏகாதிபத்தியத்திற்கு சமாதி கட்டப்போகும் பாதை, சோசலிசத்தை பலப்படுத்தும் பாதை எனக் கொள்க!
சந்திப்பு,
(இது விவாதத்திற்காக)
உங்களுடைய அனைத்து கருத்துக்களும் கம்யூனிஸ்ட்டுகளின் அதிகாரபூர்வ கருத்துக்களோடு அப்படியே ஒத்துப்போகின்றன. கொஞ்சம் கூட மாறுவதில்லை.
அப்படியே நம்புவீர்களா? இல்லை உண்மையாக தொண்டன் இப்படித் தான் இருக்கவேண்டும் என்று நினைத்து உள்ளீர்களா?
சந்திப்பு,
ட்ராஸ்கி என்பவர் யார்?
ஸ்டாலின் இறந்தப்பிறகு பல திடுக்கிடும் விஷயங்கள் வெளியே வந்ததாக கூறுகிறார்களா?
ஏதோ பஞ்சம் வந்து சைபீரியாவில் லட்ச கணக்கானோர் செத்தார்களாமே?
விவசாயிகளை கூட்டுபண்ணைகள் என்றுக்கூறி கசக்கி பிழிந்து கொலை செய்தார்களாமே?
இதற்கெல்லாம் பதில் ஏதாவது கிடைக்குமா?
உங்களுடைய அனைத்து கருத்துக்களும் கம்யூனிஸ்ட்டுகளின் அதிகாரபூர்வ கருத்துக்களோடு அப்படியே ஒத்துப்போகின்றன. கொஞ்சம் கூட மாறுவதில்லை.
என்னுடைய கருத்துக்கள் இதிலிருந்து விலகிச் சென்றால், நானும் சு.ரா. ஆக வேண்டியதுதான்.....
டிராட்°கியைப் பொறுத்தவரை அவர் ஒரு குட்டி பூர்ஷூவா அறிவாளி... ஓடுகாலி டிராட்°கி என்றுதான் கம்யூனி°ட்டுகள் இவரை அழைப்பர். லெனின் காலத்திலேயே புரட்சிக்கு துரோகம் இழைத்தவர். லெனின் முன்வைத்த கம்யூனிச கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டவர். உலகம் முழுவதும் புரட்சி வரும் என்று நம்பிக் கொண்டிருந்தவர். இன்னும்.... இவரைப் பற்றி விரிவாக பின்னர் பார்க்கலாம்.
முத்து இந்த லிங்கில் °டாலின் குறித்த விவரங்கள் விலாவரியாக இருக்கிறது. இதில் உடன்பாடும் இருக்கிறது. வேறுபாடும் இருக்கிறது. எனினும் இப்போதைக்கு இதனை தங்கள் முன் வைக்கிறேன்.
http://tamilarangam.blogspot.com/2006/03/blog-post_31.html
சந்திப்பு,
நன்றி நண்பரே
பல நல்ல விஷயங்களை எனக்கு தந்திருக்கிறீர்கள்.இந்த தமிழரங்க சுட்டி கணடிப்பாக அருமை.ஒரு பார்வைத்தான் பார்த்தேன்.நல்ல தகவல் களஞ்சியம்தான்.
அடுத்த வாரம் நான் படிக்கவேண்டியது ஏராளம்.
//என்னுடைய கருத்துக்கள் இதிலிருந்து விலகிச் சென்றால், நானும் சு.ரா. ஆக வேண்டியதுதான்..... //
அப்பப்ப டைமிங் பின்றீங்க அய்யா நீங்க
சு.ரா விலிருந்து கம்யூனிஸத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. சு.ராவை தெரியவேத் தெரியாது. கம்யூனிஸத்தை புரிந்து கொள்ளும் முன்பே கசப்பை அளித்தது.கம்யூனிஸத்தின் மேல் நம்பிக்கையிருந்தாலும் எங்களது குடும்பம் "கம்யூனிஸத்தினால்" அலைகழிந்ததினால் அடக்கியே வாசிக்க வேண்டியுள்ளது.
ஆயினும் சந்திப்பு அவர்களின் தமிழ்ப்பற்றை போற்றுகிறேன்.
இங்கேயும் "உள்ளேன் ஐயா"
சு.ரா நான் படித்ததே இல்லை என்று சொல்லாம்.. ஆசையாய் "ஒரு புளியமரத்தின் கதை" வாங்கினேன். தரமற்ற பேப்பரும் சின்னச் சின்ன எழுத்துமாக படு கண்ணறாவியாக இருந்ததில் பாதியிலேயே விட்டு விட்டேன்..
கிடைத்தால் ஜே.ஜே. சில குறிப்புகள் வாங்கிப் படிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.. இனி முயற்சி செய்ய வேண்டும்...
(வீட்ல அப்பா சத்தம்: வாங்கி வச்சிருக்கிற புஸ்தகம் எல்லாம் முதல்ல படி அப்புறம் புதுசா வாங்க அடி போடலாம் :) )
Sorry, so far I haven't read Su.RA.
I will try.
Good blog.
Sorry, so far I haven't read Su.RA.
I will try.
Good blog.
ஐயா சந்திப்பு, கம்யுனிஸ்ட் கட்சிகாரர்கள் கூறும் வரலாறு இந்த்துவ்வாதிகள் கூறும் இந்திய வரலாறு போன்றது.ஸ்டாலின் இட்லரின் பாசிசத்தினை தோற்கடிக்க உதவினார்.அவர் ஆட்சிக்காலத்தில் விமர்சித்தவர்கள் காணமல் போனார்கள்.கட்சிக்கும் ஜனநாயகம் இல்லாமல் அவர் சொன்னதே சட்டம் என்றாயிற்று.லைசென்கோ விவகாரம் போன்றவை சோசலிச ஆட்சி என்ற பெயரில் எத்தகைய கொடுமைகள் நடந்தன என்பதற்கு எடுத்துக்காட்டு.கலைஞர்கள்,அறிவு ஜீவிகள்
ஒடுக்கப்பட்டார்கள். தமிழில் ஸ்டாலின்,ஸ்டாலினியம் குறித்து நூல்கள் வெளிவந்துள்ளன. உ-ம் எஸ்.வி.ராஜதுரை எழுதிய ரஷ்ய புரட்சி: ஒர் இலக்கிய சாட்சியம், கோவை ஞானி தொகுத்த
ஸ்டாலினியம் பற்றிய நூல்.ஸ்டாலினை,ஸ்டாலினியத்தினை விமர்சிப்பவர்கள் எல்லோரும் ஏகாதிப்பதிய ஆதரவாளர்கள் என்பது பொய்.மன் த்லி ரீவ்யு போன்ற இடதுசாரி ஏடுகள், பல
மார்க்ஸிய அறிஞர்கள் ஸ்டாலின்,ஸ்டாலினியம் குறித்து எழுதியவை எல்லாம் இல்லாதது போல்
இரண்டு கம்யுனிஸ்ட் கட்சிக்கார்கள் பேசுவார்கள். அது போல் இவர்களில் பலர் புகாரின்
போன்றவர்களையும் வசைபாடுவார்கள். உண்மையைப் புரிந்து கொள்ள இவர்களின் பிரச்சாரத்திற்கு
அப்பாலும் மார்க்சியம் குறித்து வந்துள்ளதைப் படிக்க வேண்டும். தமிழில் என்ன இருக்கிறது என்பதை முதலில் படியுங்கள்.கட்சிக்காரர்கள் சொல்வதே உண்மை என்று இருந்து விடாதீர்கள்.
என்னுடைய கருத்துக்கள் இதிலிருந்து விலகிச் சென்றால், நானும் சு.ரா. ஆக வேண்டியதுதான்.....
It is better to be a thinking non-communist than a non-thinking communist.Marx wrote that one should not hesitate to dobut.
Marx had the passion to know the
truth but party oriented marxists
often want blind followers who
would accept what the party has told without any questions.
Su.Raa raised some questions
and they branded him as this
and that and as usual resorted
to defending stalinism and stalin.
In the process the party lost its
credibility among intellectuals and
unbiased observers.They
gave preference to morons over
thinkers.Had party been more open and allowed debate and democracy in party fora the party would have
been in a better shape now.
முத்து சு.ரா பற்றிய உங்கள் எண்ணத்தோடு பெரும்பாலும் என் எண்ணமும் ஒத்துப்போகிறது.நான் ஜெ.மோ னயும் அதிகம் படிப்பேன்.இலக்கியவாதிகளின் எழுத்து மூலமாகத்தான் அவர்களை எடைப் போட வேண்டும்.அவர்களுக்குள் பல அரசியல் இருக்கும் .காலச்சுவடில் கண்ணன் சு.ரா வை பற்றிய சில மயக்கங்களை கட்டமைக்க முயற்சித்து அதை விமர்சித்தவர்களை தீவிர அவதூறு கிளப்பியதற்கு சுரா தன்னுடைய எதிர்ப்பை எங்கும் பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.கண்ணன் காலச்சுவட்டை ஒரு வெற்றிகரமான நிறுவனமாக ஆக்கியவர் ஆனால் அவரின் போக்கு கண்ட்டிப்பாக சுரா வின் மன்ப்போக்கோடு எந்த சம்பந்தமும் இல்லாதவை. சுரா மிகவும் சாந்தமானவர் என்று அவரைத் தெரிந்தவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
புளிய மரத்தின் கதை நாகர்கோவிலின் வேப்பமூடு ஜங்க்சன் பற்றியும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் அடங்கும் அதில் உள்ள மெல்லிய பகடி எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
ஜே ஜே சில குறிப்புகள் முதலில் படிக்கும் போது சிரமம் இருந்தாலும் மறு வாசிப்பில் அது ஒரு முக்கியமான நாவல்லகப் பட்டது.
கம்யூனிசம் என்பது கட்சிக்காரராய் இருப்பதல்ல அது ஒரு உணர்வு ,அந்த உணர்வு இருப்பவர்கள் எவரும் ஸ்டாலினிசம் பற்றி ஒத்துக்கொள்வார்கள் ,ஸ்டாலின் செய்த கொலைகளை ஏதோக் காரணம் சொல்லி நியாப்படுத்துப்வர்கள் ஒரு கம்யூனிஸ்ட் யாகவே இருக்க முடியாது ,அவர் வேண்டுமானால் திராவிட கட்சியின் முட்டாள் தொண்டர்கள் மாதிரி ஒருவர்தான் .
ரவி சிறினிவாஸின் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.ஜெமோ வின் பின் தொடரும் நிழல்க் கூட நம்மூர் கம்யூனிஸ்டுகளை தோலுரிக்கும் நல்லப் புத்தகம் தான்
"ஒரு புளிய மரத்தின் கதை" தமிழில் பெஸ்ட் பத்தில் கட்டாயம் வரும். அடுத்து ஜே. ஜே. சில குறிப்புக்கள்- உள்ளே நுழையவே முடியவில்லை. இராமு அவர்கள் "புத்தக வாசம்" என்ற
வலைப்பதிவில் ( படிக்காதவர்கள் தேடிப்பிடித்து கட்டாயம் படியுங்கள்)
நூல் அறிமுகமும், நாவலைக் குறித்து விரிவான பதிவும் படிக்க படிக்க, நாவலை ரசிக்க முடிந்தது. அங்கங்கு தெறிக்கும் நகைச்சுவை பொடிகள், கொஞ்சம் நிதானமாய் படித்ததும்
புரிந்தது. இவை இரண்டுமே சு.ராவின் மாஸ்டர் பிஸ்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்- அவருடைய சிறுகதைகளை பல இடங்களில் காண முடிந்தது. ஆனால் கொஞ்சம் போர்தான்.
/டிராட்°கியைப் பொறுத்தவரை அவர் ஒரு குட்டி பூர்ஷூவா அறிவாளி... ஓடுகாலி டிராட்°கி என்றுதான் கம்யூனி°ட்டுகள் இவரை அழைப்பர். லெனின் காலத்திலேயே புரட்சிக்கு துரோகம் இழைத்தவர். லெனின் முன்வைத்த கம்யூனிச கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டவர். உலகம் முழுவதும் புரட்சி வரும் என்று நம்பிக் கொண்டிருந்தவர். /
அப்படியா :-))))?
பொட்டீக்கடை,
சு.ரா படியுங்கள்..அருமையான எழுத்தாளர்.."இவை என் உரைகள்" கட்டுரை தொகுப்பை முதலில் சிபாரிசு செய்கிறேன்.
பொன்ஸ்,
ஒரு புளியமரத்தின் கதை மாத நாவலில் மலிவு பதிப்பு போட்டார்களே அதுவா?
காலச்சுவடி பதிப்பகத்தில் 90 ரூபாய்க்கு நலல பதிப்பு இருக்கிறது.படிங்க..
சிவபாலன்,
பொட்டீக்கடைக்கு சொன்ன பதில்தான்.நன்றி.
வருகைக்கு நன்றி ரவி
நான் உங்கள் பார்வையுடன் பெருமளவு ஒத்துப்போகிறேன் இந்த விஷயத்தில்.
கூத்தாடி,
ஜெமோ நானும் படிப்பதுண்டு.ஆனால் அவர் கண்மூடித்தனமான நாத்திக எதிர்ப்பாளர்.அதனாலேயே எனக்கு பிடிப்பதில்லை.மதம் இல்லை என்று கூறிக்கொண்டே மதத்தை அவர் தூக்கிப்பிடிப்பார்.
சு.ரா வயதான காலத்தில் முதுமையின் காரணமாக ஒதுங்கி இருந்ததை பலபேர் அட்வான்டேஜ் எடுத்து அவர் பெயரை கெடுக்க முயற்சித்தார்."கண்ணனின் சில செயல்கள்" என்று எல்லோரும் கூறுகிறார்கள்.அது என்ன என்று எனக்கு தெரியவில்லை.
காலச்சுவட்டை வெற்றிகரமாக நடத்தியது பொறாமையா? அல்லது வேறு ஏதாவதா?
//கம்யூனிசம் என்பது கட்சிக்காரராய் இருப்பதல்ல அது ஒரு உணர்வு ,அந்த உணர்வு இருப்பவர்கள் எவரும் ஸ்டாலினிசம் பற்றி ஒத்துக்கொள்வார்கள் ,ஸ்டாலின் செய்த கொலைகளை ஏதோக் காரணம் சொல்லி நியாப்படுத்துப்வர்கள் ஒரு கம்யூனிஸ்ட் யாகவே இருக்க முடியாது ,அவர் வேண்டுமானால் திராவிட கட்சியின் முட்டாள் தொண்டர்கள் மாதிரி ஒருவர்தான் .//
fully agreed....
//ஜெமோ வின் பின் தொடரும் நிழல்க் கூட நம்மூர் கம்யூனிஸ்டுகளை தோலுரிக்கும் நல்லப் புத்தகம் தான//
நான் இதை மறுக்கிறேன்...இது ஒரு போலி நாவல்..இது பற்றி பின்னால் ஒரு கட்டுரை எழுதும் எண்ணம் உண்டு.
உஷா,
சு.ரா எழுத்து கொஞ்சம் போர்தானா..ம்.. எனக்கு தெரியவில்லை....
நன்றி யுவன்,
அவரின் "பு.ம.கதையை" தகழியின் 'கயிறு'க்கு ஒப்பிட்டு பேசுவான் என் நண்பன் ஒருவன்.
ஆனாலும் அவரது சிறுகாதைகள் மீது தான் எனக்கு ஈர்ப்பு அதிகம்.
தாம் நினைக்கும் கருத்தினை மெல்ல பாத்திரத்தின் வாயிலாக பேச விட்டு, தான் நடுநிலையான {மிக} நல்லவராக காட்டிக்கொண்டார் என்பதிலும் சந்தேகமில்லை.
(அரசியல் பார்வையில் சுரா கிட்டவே வரமாட்டார் என்பது வேறு விஷயம்.)
முத்து,
சுரா எழுதிய நாவல்களின் வரிசை தெரிந்தால் சொல்லுங்களேன். முதலிரண்டை படித்து மயங்கிய
ஜோரில் ஆவலுடன் ஆ, பெ. கு வாங்கி படிக்க ஆரம்பித்ததும் ஏமாற்றமாய் இருந்தது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கொஞ்சம் போர் என்றேன்.
உஷா,
வரிசை நான் மேல குடுத்ததுதான்....
பெண்கள், குழந்தைகள், ஆண்கள் கடைசியாக எழுதியது......
என்னாலும் பெரிய்ய்ய் நாவல் எழுதமுடியும் என்று யாரோ சிலருக்கு காட்ட அவர் கஷ்டப்பட்டது என்று நினைக்கிறேன்.எனக்கு அதுவும் பிடித்தது. நவீனத்துவ கூறுகள் பல உள்ளன அதில.
bala,
what is wrong in that?(sura)
எனக்கும் ஒரு வாய்ப்பு வரட்டும்..(கை கட்டு அவுக்கட்டும்)
இப்போது தீவிர இலக்கியம் குறித்து வேண்டாம்.
சுராவையும், ஜெயமோகனையும் ஒரே தராசில் வைக்கலாம். இருவரும் ஒருவொருக்கொருவர் சளைத்தவர்களில்லை.
அது கொடக்கட்டும்.
அவசரமா இன்னொரு சூப்பர் பதிவு போடுங்கள்..
முத்து , உங்கள் பின் தொடர்ந்து வரும் நிழ்ல் பத்தி வரும் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.கம்யூனிச்ட் பாலிடிக்ஸ் பற்றி எனக்குத் தெரிந்தது கொஞ்சம் தான்..
ஜெமோ வின் எழுத்திற்காக அவரை நான் ,மதிக்கிறேன் அவரின் ஏழாம் உலகம் பற்றி உங்களின் எண்ணம் என்ன ? அவர் எழுத்துக்களில் சில புத்திசாலித்தனமான இந்துத்துவா கருத்துக்களை நானும் கண்டுள்ளேன் ஆனால் அதற்காக அவரின் மேல் உள்ள மதிப்பை நான் குறைத்து கொள்ளவில்லை .சமகால எழுத்தாளர்களில்; அவர் முக்கியமானவர் ,அவரின் தீவிர எழுத்திற்கு நான் மரியாதைக் குடுக்கிறேன்,அதற்காக நான் வரின் எல்லா எழுத்துக்களிக்கும் ஆதரவு குடுப்பதாக சொல்லமுடியாது.நான் யாரையும் யாருடய எழுத்தையும் புனிதமாக எடுத்த்க்கொண்டதாகக் இல்லை.
உங்களின் இந்த வாரப் பதிவுகளைப் படித்தேன்,அருமையான்ப் படைப்புக்கள் .
//personal note
என்னைக் கவரும் சுந்தர ராமசாமி என்பதுத் தான் சரியானதாக இருக்கும் என எண்ணுகிறேன்//
கூத்தாடி,
சரிதான்...யாரும் புனித பிம்பமாக ஆகக்கூடாது என்பது என் கருத்து...
ஜெயமோகன் மூர்க்கமாக நிராகரிக்கும் சில கருத்துக்களில் எனக்கு உறுதி உண்டு...
அவர் எழுத்தை கடுமையாக சொன்னால் பிரச்சார எழுத்து என்றுதான் என்னால் சொல்லமுடியும்...(சில கதைகள் எனக்கு பிடித்தது)..இந்த கடுப்பினால் நான் அதிகம் படித்ததில்லை.சிறுகதைகள் அனைத்தும் படித்துள்ளென்.
காமெடி என்ன என்றால் இவர் கருணாநிதியை பிரச்சார எழுத்தாளர் என்றதுதான்.
முத்து (தமிழினி)சுந்தர ராமசாமி படிப்பதற்கு சுலபமானவர்.அவரைப் பற்றி ஜெயமோகன் எழுதுக்கள் தான் பாரமாக தெரிகின்றன.சீக்கிரம் புரியவில்லை. மனு
முத்து,
இலக்கிய மேட்டிமைத்தனத்துள் உறையும் அற்பவாத இதயம் என்ற புத்தகம் படித்திருக்கிறீர்களா? இணையத்திலும் கிடைக்கிறது.
"சந்தை இலக்கியம், சினிமா ஆகியவற்றுக்கு மாற்றான உன்னதமான இலக்கிய சொர்க்கம் ஒன்று நிலவுவதாகவும், அந்த சொர்க்கத்தின் திறவுகோலைக் கையில் வைத்திருக்கும் தேவர்கள் தாங்கள்தான் என்றும் ஒரு கூட்டம் பீற்றித் திரிகிறது. இலக்கிய தரிசனத்தின் ஞானக்கண் தங்கள் முன் மண்டையிலிருந்து பின் மண்டை வரை பரவியிருப்பதாகவும், அதன் மூலம் 360 டிகிரியிலும் ஒரே சமயத்தில் தங்களால் வாழ்க்கையைப் பார்க்க முடியுமென்றும் சாதாரண வாசகர்களை இவர்கள் அச்சுறுத்துகிறார்கள். எவ்வித சித்தாந்தக் கறையும் படியாத காலி மூளைதான் இந்த அழகியல் ஞானக்கண்ணைப் பெறுவதற்கும் அவர்களுடைய இலக்கியத்தை ரசிப்பதற்கும் முன் நிபந்தனை என்றும் கூறுகிறார்கள்...."
http://www.tamilcircle.net/uniindex2.htm
பிரபு ராஜதுரை
//உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.. இந்த பதிவில் நான் கூறியுள்ள ஜெயமோகன் புத்தகத்தை பற்றி ஒரு பதிவு போட இருப்பதாகவும் சோம்பேறிதனத்தால் போடாமல் இருப்பதாகவும் முதலில் எனக்கு ஒருமுறை கூறிஉள்ளீர்கள்..(இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றுவிட்டு வந்து)
இன்னும் அதையே:)//
முத்து உங்களுக்கு நினைவாற்றல் மிகவுமதிகம். எனக்கே சற்று குழப்பமாகயிருந்தது; நான் உங்கள் பதிவில் பின்னூட்டமிட்டிருந்தேனா அல்லது முத்துக்குமரன் பதிவிலா என்று. என்ன செய்வது சோம்பேறித்தனத்தை என்னால் வெல்லமுடியவில்லை; ஆயினும் ஒருநாள் கண்டிப்பாய் வெல்வேன் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. சோம்பேறித்தனம் மற்றும் தயக்கம் இவையிரண்டும் என்னுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை வாழைகள். எதையும் நன்கு தெரிந்தவுடன் தான் செய்யவேண்டும் என நினத்து பெரும்பாலும் எதையும் செய்வதில்லை. அதற்கு நான் கூறிக்கொள்ளும் காரணம் 'செய்நேர்த்தி' (perfectionism)
Post a Comment