Tuesday, May 02, 2006

மார்க்சியம் சில குறிப்புகள்-கேள்விகள்

சில நேரம் என்னுடைய எழுத்துக்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கம்யூனிஸ்ட் கருத்துக்களையும் தூக்கி பிடிப்பது போல் தோன்றும்.இதனால் நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று நினைத்துக்கொள்பவர்களும் உண்டு. இது தவறான கருத்து நாம் கம்யூனிஸ்ட்களிடம் உள்ள சில விஷயங்களை மதிக்கிறேன். அவ்வளவுதான்.

காலத்திற்கு ஏற்ப அவர்கள் வளரவில்லை என்பது நான் அவர்கள் மேல் வைக்கும் குற்றச்சாட்டு.தீர்வு எதையும் நான் வைத்திருக்கவில்லை.ஆனால் அவர்களின் சிந்தனை இந்திய சூழலில் தேக்கம் அடைந்துவிட்டது போல் எனக்கு தோன்றுகிறது.

பொதுவாக தனிபேச்சில் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள்/அனுதாபிகள் அவர்களுடைய தத்துவத்தை வானுலகத்தில் இருந்த வந்த தத்துவத்தை போலவும மற்ற அரசியல் பேசுபவர்கள் ஏதோ ஞானசூன்யங்கள் போலவும் கூறுவார்கள்.இது எல்லா கட்சிகளும் செய்யும் இயற்கையான ஒரு விஷயம்தான்.

மக்களை நெருங்காத எந்த தத்துவமும் வெற்றி பெறுவது சிரமம். உதாரணத்திற்கு தொழிற்சங்கங்களில் இன்று எத்தனை சங்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரிக்கின்றன?

ஒரு சிறிய காமெடி.ஜெயமோகனின் சுந்தர ராமசாமி நினைவின் நதியில் புத்தகத்தில் படித்தது.

"ஐம்பதுகளில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு தலைமறைவாக செயல்பட்ட காலம்.என்ன செய்வது என்று ஸ்டாலினிடம் கேட்டுவர ஆள் அனுப்புகிறார்கள்.ஸ்டாலினின் செய்தியை அச்சுத மேனனிடம் எம்.என்.கோவிந்தன் நாயர் சொல்கிறார். தெருக்களில் தடையரண் அமைத்து ஆயுதமேந்தி போராடும்படி ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அச்சுத மேனன் அதிர்ச்சியுடன் முகம் சிவக்க, "பாரிக்கேடா? இந்தாளுக்கு என்ன பைத்தியமா?" என்றாராம்."

தடையரண் அமைத்து போராடவேண்டிய தொழிலாளர் வர்க்கம இன்று காங்கிரசுக்கு முட்டுக்கொடுத்து நிற்கிறது. ஏன்? சமரசம்.நான் அதை குற்றம் சொல்லவில்லை. இதே சமரசத்தை பல்வேறு நிலைகள் சார்ந்து மற்ற கட்சிகளை செய்தால் அதை தோழர்கள் விமர்சிப்பார்கள்.

நேற்று வந்த விஜயகாந்த் தைரியமாக தனியாக தேர்தலை சந்திக்கிறார். கட்சியை வளர்க்கிறார். இத்தனை ஆண்டு அனுபவம் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கம் ஏன் தேர்தலை தனியாக எதிர்கொள்ளுவதில்லை என்று ஞானி கேட்பதில் நியாயம் உள்ளதாகவே எனக்கு படுகிறது. எப்போது கேட்டாலும் வியூகம் என்பார்கள்.அதே யுத்த தந்திரம் , வியூகம் என்பதை மற்றவர்கள் உபயோகப்படுத்தினால் அது பூர்ஷவா தந்திரம் ஆகிவிடுமா?

வங்காளம், கேரளா இங்கு மட்டும் இந்த இயக்கங்கள் வளர ஏதாவது வரலாற்று காரணம் உள்ளதா?இந்த இரண்டு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் கட்சி வளருகிறதா? என்ன திட்டம்? ஏதாவது சொல்ல முடியுமா?

என்னை பொறுத்தவரை மாய்மை இல்லாத பிரபஞ்ச பார்வை மார்க்சிடம் இருந்தது. அதுதான் முக்கியமாக கூறாக எனக்கு தோன்றியது..ஆனால் கட்சி தோழர்கள் உலகை பெரும் சுரண்டல் களமாக மட்டுமே பார்க்கின்றனர்.அதை வென்றெடுக்க இவர்கள் வகுக்கும் திட்டங்களும் முழுமையானதல்ல என்றே தோன்றுகிறது.அடிப்படை மார்க்சியம் பற்றிய ஒரு தெளிவான பார்வை எல்லா மக்களுக்கும சென்று சேர வேண்டியது அவசியம்.அது பகுத்தறிவு பாதைதான்.ஆனால் அதை தோழர்கள் பேசுவதில்லை.

இடஒதுக்கீடு விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் அகில இந்திய தலைமையின்(பொலிட்பீரோ) நிலைப்பாடு என்ன?தங்களுக்கு ஓட்டு வேண்டும் என்பதற்காக பங்களாதேஷ் அகதிகளை அனுமதிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பகீர் ரகம்தான். இந்தியாவின் வெளியுறவு கொள்கையையே ஓட்டுக்காக மாற்ற சொல்லுகிறார்கள் என்பதும் பாரதீய ஜனதா இவர்கள் மேல் வைக்கும் குற்றச்சாட்டு.இதற்கெல்லாம் தெளிவான பதில் இல்லை.

பெரியார் கம்யூனிச இயக்கத்தின் வளர்ச்சியை தமிழகத்தில் (அல்லது இன்னும் தெளிவாக இப்படி போடுவோம். திராவிட இயக்கங்கள் கம்யூனிச கட்சிகளின் வளர்ச்சியை தடுத்தனவா? ஆம் எனில் எப்படி? என்பதையும் தெரிந்தவர்கள் எழுதலாம்.

கம்யூனிசம் என்றால் என்ன என்றே தெரியாத சில நண்பர்களுக்கு இங்கு சில குறிப்புகள்.

கம்யூனிசத்தின் ஆணிவேர் கடவுள்மறுப்பு.பிரபஞ்சம் யாராலும் தோற்று விக்கப்படவில்லை.உலகில் மாற்றம் தான் நிரந்தரம் என்பதுதான் இவர்களின் மூலதத்துவம்.பொருள்முதல்வாதம் என்பதை இவர்கள் விளக்குவது உடலில்லாமல் ஆத்மா என்பது இல்லை.சிந்தனை மூளையில் இருந்து தோன்றுவது தான் என்பதும் இவர்களின் கருத்து. சிந்தனை என்பதோ உயிர் என்பதோ உடலின் பொருட்டு உருவாவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

மிகவும் முக்கியமாக சமுதாய மாற்றங்கள் உற்பத்தி உறவுகளை பொருத்தே அமைகின்றன என்பது தான் முக்கியமான கருத்து.(நான் விளக்கமாக எழுதாததால் குழப்பங்கள் எழலாம்.பல புத்தகங்கள் சல்லிசான விலையில் கிடைக்கின்றன)

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

மார்க்சியம் பற்றி சசியின் கட்டுரை அவருக்கே உரித்தான பாணியில் அருமையாக அலசியுள்ளார்.

மார்க்சியம் பற்றிய செல்வனின் கட்டுரை ஒப்புநோக்கும் முறையில் எழுதப்பட்டது.

50 comments:

Anonymous said...

நான் ஒரு இந்திய கம்யூனிஸ்ட்காரன். அதன் கொள்கைகள் எனக்கு பிடிக்கும். விவசாயிகளின் நலனுக்காக அதிகம் போராட்டம் செய்து வெற்றிகளைப் பெறுவது கம்யூனிஸ்தான்.

மக்கள் பணத்தை திருடாமல், பொய்சொல்லாமல், மிரட்டிப் பறிக்காமல் உண்டியல் குலுக்குயே அரசியல் செய்வது கம்யூனிஸ்ட்களின் பலம். அப்பழுக்கில்லாத அரசியல் கம்யூனிஸ்ட்களின் பலம், பலவீனம் என்பது ஏழைக்கட்சி என்ற ஒன்றுதான்.

போலிடோண்டு ரசிகர்மன்றம்
திருத்துறைப்பூண்டி கிளை.

Unknown said...

தலைப்பில் சிறிது தவறு உள்ளது

மார்க்ஸியம் மார்க்ஸுக்கு பிறகு பல மாற்றங்களை கண்டுள்ளது.மார்க்ஸின் வார்த்தைகளை இறுதி வேதமாக அது கருதவில்லை.வெபெர்,வால்டர் பெஞ்சமின், ஜாக் டெரீடா என பலர் மார்க்ஸியத்தை உரமிட்டு வளர்த்தனர்.இன்று மார்க்ஸியம் லாஜிகல் பாசிடிவிசம்,போஸ்ட் பாசிடிவிசம்,டிகன்ஸ்ட்ரக்ஷன்,பெண்ணியம் என செழித்து நிற்கிறது.பல ஆய்வுத்துறைகள் மார்க்ஸியத்தை பயன்படுத்தி ஆய்வு நடத்துகின்றன.

நீங்கள் எழுதிய கட்டுரை லெனினிசத்துக்கு தான் பொருந்தும்.அது தற்போது கியூபாவிலும் வடகொரியாவிலும் இந்திய காம்ரேடுகளாலும் பின்பற்றப்படுகிறது.மார்க்ஸுக்கு பிறகு பிரான்க்பர்ட் ஸ்கூல் மார்க்ஸியத்தை வளர்த்து வருகிறது.நியோ மார்க்ஸிஸ்டுகள் என அவர்களை அழைப்பர்.

மார்க்ஸியத்தையும், லெனினிசத்தையும் ஒன்று என நம்பும்,சொல்லும் காம்ரேடுகள் பலருண்டு.அது தவறான பிரச்சாரம்

Anonymous said...

மார்க்ஸுக்கு பிறகு பிரான்க்பர்ட் ஸ்கூல் மார்க்ஸியத்தை வளர்த்து வருகிறது.

செல்வன் ஐயா பிராங்குபருட்டு மார்க்குசியமே கடந்து ஆண்டுகள் அய்ம்பது ஆகின்றனவே.

CrazyTennisParent said...

நன்றி செல்வன்,

உங்கள் கட்டுரையையும் சுட்டியுள்ளேன்.அடிப்படை மார்க்ஸ் என்பதால் தலைப்பு அவ்வாறு உள்ளது.

மார்க்சியத்தின் அரசியல் முகத்தை மட்டும்தான் நான் எடுத்துள்ளேன்.மற்ற துறைகளும் எனக்கு பிடிக்கும்.ஆனால் படிப்பு கம்மி.


//நீங்கள் எழுதிய கட்டுரை லெனினிசத்துக்கு தான் பொருந்தும்.அது தற்போது கியூபாவிலும் வடகொரியாவிலும் இந்திய காம்ரேடுகளாலும் பின்பற்றப்படுகிறது//

இது கிண்டல்தானே:)))

CrazyTennisParent said...

நன்றி அனானி,

எனக்கு அவர்களை பிடிக்கும் என்பதால்தான் இன்றைய இருபதிவுகளும் அவர்களை பற்றியே...

நல்லகண்ணு வாழும் மகாத்மா என்று சொல்லலாம்.

பொன்ஸ்~~Poorna said...

பூர்ஷவா தந்திரம் என்றால் என்ன?

Unknown said...

//நீங்கள் எழுதிய கட்டுரை லெனினிசத்துக்கு தான் பொருந்தும்.அது தற்போது கியூபாவிலும் வடகொரியாவிலும் இந்திய காம்ரேடுகளாலும் பின்பற்றப்படுகிறது//

இது கிண்டல்தானே:))) ////

கிண்டல் எல்லாம் இல்லை.நான் மார்க்ஸியத்தை கிண்டல் செய்தால் சந்திப்பு என்னை சும்மா விடுவாரா என்ன?:-)

நீங்கள் என் பதிவுக்கு தந்த சுட்டியில் பாருங்கள்.சந்திப்பு அப்படித்தான் சொல்லியிருக்கிறார்.வடகொரியாவிலும்,கியூபாவிலும் தான் மார்க்ஸியம் தூய்மையான வடிவில் பின்பற்றப்படுகிறது என சொல்லியிருக்கிறார்.(சீனாவையும் சொன்னார்.ஆனால் அங்கு தற்போது கோக்கும்,மெக்டொனால்ட்ஸும் சக்கைப்போடு போடுவதாக கேள்வி)

சந்திப்பு கோபத்தோடு வரும் சத்தம் கேட்கிறது.நான் தலைமறைவாகி விடுகிறேன்.பரிட்சைக்கு படிக்க வேண்டும்.:-)))

CrazyTennisParent said...

பொன்ஸ்,

என் மாணவி நீ என்று நான் பெருமை கொள்ளத்தக்க கேள்வியை கேட்டதற்கு நன்றி.

பூர்ஷ்வா தந்திரம் என்றால் முதலாளித்துவத்தின் தந்திரம்.தொழிலாளர்கள் உரிமையை அடித்து நொறுக்க முதலாளிகள் பயன்படுத்தும் டெக்னிக்.

CrazyTennisParent said...

என் விளக்கங்கள் குன்சாவாக இருந்தால் மற்ற மார்க்சிய ஆய்வாளர்களை கேட்போம்.பொறுத்திரு பொன்ஸ்

CrazyTennisParent said...

செல்வன்,

சந்திப்பு கோபம் கொள்ளத்தக்க மற்ற பல கேள்விகள் இதில் உள்ளன.என்மைத்தான் உதைப்பார் அவர். நீங்க சும்மா எழுதுங்க...:))

Unknown said...

செல்வன் ஐயா பிராங்குபருட்டு மார்க்குசியமே கடந்து ஆண்டுகள் அய்ம்பது ஆகின்றனவே./

இல்லை நண்பரே.தற்போதும் அப்பள்ளி உள்ளது.பல ஆய்வுகளையும், முனைவர் பட்ட மாணவர்களையும் தற்போதும் உருவாக்கிக்கொண்டுள்ளது.நியோ மார்க்ஸிஸ்டுகள் பலர் அப்பளியிலிருந்து தர்போதும் வருகின்றனர்.

அப்பள்ளியின் விவரம் இதோ இந்த சுட்டியில் உள்ளது

http://home.case.edu/~ngb2/Pages/Intro.html

ramachandranusha(உஷா) said...

செல்வம், முத்து! வாழ்க்கை கல்வி இருபால்ருக்கும் மார்க்சீச வகுப்புகள் எடுப்பார்களாமே. அவை உண்மையா? ஏன் அப்படிபிள்ளைகளுக்கு பள்ளியில் சொல்லிதரக்கூடாது என்று தோன்றுமளவு செய்திகள் கண்ணில் பட்டன. ஆனால் வகுப்பு மட்டுமா
பெண்கள் நிலை கம்யூனிஸ்ட் கட்சிகளில் எப்படி என்ன?

பொன்ஸ், இ.பா வின் கதைகளில் இந்த "பூர்ஷ்வா" அதிகம் தென்படும். சின்ன வயதில் இதை ஒரு திட்டு வார்த்தையாய் எங்கள் வீட்டில் பாவிப்போம் :-)

இரா.சுகுமாரன் said...

//கம்யூனிசத்தின் ஆணிவேர் கடவுள்மறுப்பு//

இப்படித்தான் உங்களைப் போன்றோர் நினைத்து எழுதுகின்றனர். ஆனால் பொதுவுடைமை கட்சி என்பது அனைவருக்கும் எல்லாவற்றையும் பொதுவாக்கி எல்லா நன்மைகளையும் மக்களுக்கு பொதுவாக்குவது தான் பொதுவுடைமையின் நோக்கம். அதுதான் அதன் ஆனிவேர். ஆனால் ஆனால் கடவுள் மறுப்புதான் அதன் ஆணிவேர் என்று சொல்வது மார்சியத்தின் அடிப்படையை பற்றி புரியாமல் பேசுவதாகவே நான் நினைக்கிறேன்.

//மிகவும் முக்கியமாக சமுதாய மாற்றங்கள் உற்பத்தி உறவுகளை பொருத்தே அமைகின்றன என்பது தான் முக்கியமான கருத்து. (நான் விளக்கமாக எழுதாததால் குழப்பங்கள் எழலாம்.//

நன்றி! மார்சியத்தை தப்பும் தவறுமாக புரிந்து கொண்டு எழுதினாலும் குழப்பம் எழலாம். அப்படி எழுதாமல் இருந்ததற்கு நன்றி, பொதுவுடைமைக் கட்சிகள் பொதுவுடைமைக் கருத்துக்களை அதிகம் பேசுவதில்லை, அதனால் தான் பொதுவுடைமைக் கொள்கைகள் இன்னும் பரவாமல் இருந்துள்ளன. இடது வலது பொதுவுடமைக் கட்சிகள் பொதுவுடமைக் கட்சிகளாக இல்லை, அவை தற்போது ஒரு முதலாளித்துவ கட்சிகள் போலவே உள்ளன. அவர்களின் செயல்களை வைத்து ஒட்டுமொத்த பொதுவுடைமைக் கொள்கையை மதிப்பீடு செய்வது சரியான மதிப்பீடாகாது.

CrazyTennisParent said...

//கம்யூனிசத்தின் ஆணிவேர் கடவுள்மறுப்பு//

நன்றி சுகுமாரன்,இதே பாயிண்ட்டைத்தான் சந்திப்பு எனக்கு சில நாட்களுக்குமுன் எனக்கு தவறு என்று சுட்டிகாட்டினார்...அதையும் எழுதியுள்ளென்...ஆனால் இதை ஒழிக்காமல் சுரண்டலைப்பற்றி வயிறு கிழிய கத்தினாலும் மக்கள் மனதில் ஏறாது என்பது என் புரிதல்...


சிந்தாந்தத்தையும் கட்சியையும் பிரித்தால் பதிலளிக்கவேண்டிய அவசியம் இல்லைதான்.

CrazyTennisParent said...

//எல்லா நன்மைகளையும் மக்களுக்கு பொதுவாக்குவது தான் பொதுவுடைமையின் நோக்கம்//

இது நோக்கமென்றால் அனைவரும் சமம் என்பதை நிறுவவேண்டும் இல்லீங்களா..

மற்றபடி உங்களொடு ஒத்துப்போகிறென்.

இரா.சுகுமாரன் said...

////எல்லா நன்மைகளையும் மக்களுக்கு பொதுவாக்குவது தான் பொதுவுடைமையின் நோக்கம்////

//இது நோக்கமென்றால் அனைவரும் சமம் என்பதை நிறுவ வேண்டும் இல்லீங்களா..//

அனைவரும் சமமாக இல்லை என்பதால் தான் அனைவருக்கும், அனைத்தையும் பொதுவுடைமை ஆக்கி சமம் செய்ய வேண்டும் என்கிறார்கள்

Anonymous said...

ஐயா, முத்து அவர்களே மார்க்ஸியம் பற்றி படிக்க ஏராளமான நூல்கள் உள்ளன. கட்சிகள், குழுக்கள் தவிர கட்சி சாரா மார்க்சியர்கள் (உ-ம் கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை,வ.கீதா, எஸ்.என்.நாகராஜன், அ.மார்க்ஸ், கோ.கேசவன், முத்துமோகன்) தமிழில் பல நூல்களை மார்க்சியம் குறித்து எழுதியிருக்கிறார்கள். பிராங்க்பர்ட் மார்க்ஸியம் குறித்து ராஜதுரையும்,கீதாவும் எழுதியிருக்கிறார்கள். ஒரு புதையலே இருந்தாலும் கண்ணைத் திறந்து பார்க்க மாட்டேன், ஆனால் நான் பாட்டிற்கு எதையாவது யாரோ சொன்னதைத் திருப்பிச் சொல்லுவேன் என்றால் என்ன அர்த்தம்.
மார்க்ஸியம் குறித்து எழுதிவிட்டேன் என்று பந்தாவாக சொல்லிக்கொள்ளவா. செல்வனுக்கு குழப்புவதுதான் தொழில் போதும். பிராங்க்பர்ட் மார்க்ஸியர் என்று இன்று சொல்லிக் கொள்ள இருப்பவர்களில் முதன்மையானவர் ஜர்கன் கேபர்மாஸ். பிராங்க்பர்ட் மார்க்ஸியத்தின் தாக்கம் வேறு பலரின் எழுத்துக்களில் காணப்பட்டாலும் (உ-ம் மார்க் போஸ்டர், சூசன் பக் மார்ஸ்) அவர்கள் பிராங்க்பர்ட் மார்க்ஸியர் என்று கருதப்படுவதில்லை. மேலும் இன்று மந்த்லி ரீவியு, நியு லெப்ட் ரிவியு, ரீதிங்க் மார்க்ஸியம், சயன்ஸ் அண்ட் சோசைட்டி என்று பல்வேறு சிந்தனைப் போக்குகளை பிரதிபலிக்கும்
வெளியீடுகள் இருக்கின்றன, லெனினை ஏற்பவர்கள் உண்டு, விமர்சிப்பவர்கள் உண்டு.ஆனால் மிகப்
பெரும்பான்மையான (99%) மார்க்ஸியர்கள் லெனினை நிராகரிப்பதில்லை. மேலும் லெனினியம் மார்க்ஸியத்திற்கு விரோதம் அல்லது முரண் என்று கருதுவதில்லை. அதே சமயம் பலர் ஸ்டாலின்
செய்ததையும், லெனிற்கு பிந்தைய சோவித் அரசுகளை கடுமையாக விமர்சித்துள்ளனர். நீர் குட்டையை குழப்பாமல் இருந்தால் போதும்.

Anonymous said...

வெபெர்,வால்டர் பெஞ்சமின், ஜாக் டெரீடா என பலர் மார்க்ஸியத்தை உரமிட்டு வளர்த்தனர்.இன்று மார்க்ஸியம் லாஜிகல் பாசிடிவிசம்,போஸ்ட் பாசிடிவிசம்,டிகன்ஸ்ட்ரக்ஷன்,பெண்ணியம் என செழித்து நிற்கிறது.பல ஆய்வுத்துறைகள் மார்க்ஸியத்தை பயன்படுத்தி ஆய்வு நடத்துகின்றன

வெபர் மார்க்ஸியவாதி என்று யாரப்பா சொன்னது. லாஜிகல் பாசிடிவிசம்,போன்றவை சிந்தனைப் போக்குகள். அதை மார்க்ஸியத்துள் சுருக்க முடியாது. கட்டுடைப்புவாதமும் அது போன்றதுதான்.பெண்ணியத்தில் பல்வேறு போக்குகள் உள்ளன. அதையும் மார்க்ஸியதையும் ஒன்றாக கருத முடியாது.மார்க்ஸியம் இப்படி பல சிந்தனைப் போக்குகளாக செழித்து நிற்கிறது என்பது அபத்தம். ஏனெனில் இவை மார்க்ஸியத்திலிருந்து கிளைத்தவை அல்ல.
உம்முடைய குழப்பத்திற்கு அளவே இல்லையா. ஏனய்யா இப்படி தானும் குழம்பி அடுத்தவரையும் குழப்புகுகிறீர். பெயர் உதிர்ப்பதை நிறுத்தி விட்டு படித்து புரிந்து கொள்ள முயற்சி செய்யும்.

CrazyTennisParent said...

//ஐயா, முத்து அவர்களே மார்க்ஸியம் பற்றி படிக்க ஏராளமான நூல்கள் உள்ளன. //

நானும் இதைத்தானய்யா சொல்றன்...

Over to Selvan

CrazyTennisParent said...

அனானி,

கட்சி சாரா மார்க்சியர்கள் பற்றி இங்கு எதுவும் எழுதப்படவில்லை..மேலும் உங்கள் எழுத்தி்ல் பல திறப்புகள் எனக்கு தென்படுகின்றன.மிகவும் நன்றி.

நீங்கள் எழுதுவது எல்லாம் பொதுதளத்தில் விவாதத்திற்கே வருவதில்லை என்பதே என் அடிப்படை நோக்கம் என்பதாக கொள்க.

வஜ்ரா said...

//கம்யூனிசத்தின் ஆணிவேர்//

From each according to his abilities, to each according to his needs.

இதை மறந்து விட்டீர்களே!! இது தானே ஆணிக்குக் ஆணி வேர். இது இல்லையேல் கமயூனிஸம் இல்லை.

அவர்களிடம் பதில் இல்லாத கேள்விகள் கேட்டுள்ளீர்கள். ஆனால் எதற்காக நம் கம்யூனிஸ்டுகள், ஸ்டாலினிடம் போய், idea கேட்டுக் கொண்டு நின்றார்கள் என்று நீங்கள் ஏன் கேட்கவில்லை?

நல்ல பதிவு, "நட்சத்திரதிற்கு" வாழ்த்துகள்.
ஷங்கர்.

Unknown said...

வெபர் மார்க்ஸியவாதி என்று யாரப்பா சொன்னது.//

இங்க பாருங்க.

Weber's analysis had similar scope to that of Marx, and he came from a similar historical, German tradition of thought, examining many of the same topics as Marx. Many contemporary sociologists think of Weber as complementing Marx, examining issues that Marx thought less important, providing a way of thinking about the individual within a structural approach, and laying out a sociological methodology. Weber's writing had an influence on structural functionalism, critical theory, some of the social interaction approaches, and much contemporary sociological theory, including some Marxist approaches that use ideas from Weber.

http://uregina.ca/~gingrich/o902.htm

//லாஜிகல் பாசிடிவிசம்,போன்றவை சிந்தனைப் போக்குகள். அதை மார்க்ஸியத்துள் சுருக்க முடியாது. கட்டுடைப்புவாதமும் அது போன்றதுதான்.//

கட்டுடைப்பின் தந்தை ஜாக் டெர்ரிடா ஒரு மார்க்ஸிஸ்ட். ச்பெக்டர்ஸ் ஆப் மார்க்ஸ் என்று புத்தகம் எழுதியுள்ளார்.பிரெஞ்சு சோஷலிச கட்சியின் உறுப்பினரும் கூட.மார்க்ஸியத்துக்கு திரும்புவதை பற்றி எழுதிய கட்டுரை இதோ

http://psc.sagepub.com/cgi/content/abstract/25/1/1

பின்நவீனத்துவத்தையும் மார்க்ஸையும் அழகாக இணைக்கிறார் டெர்ரிடா.மார்க்ஸியமே பின்நவீனத்துவத்தின் இறுதி நோக்கம் என்கிறார்.

இரா.சுகுமாரன் said...

தமிழினி
//சிந்தாந்தத்தையும் கட்சியையும் பிரித்தால் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லைதான்.//

சித்தாந்தமும் கட்சியும் ஒன்றல்ல. சித்தாந்தாந்தத்தை பிழைப்பு வாதத்திற்காக வைத்து செயல்பட்டால் அதற்கும் பதில் சொல்ல வேண்டாம் என்பது அல்ல, இங்கு பேசப்படுவது சித்தாந்தம் மட்டுமே, கட்சி அல்ல, கட்சி பற்றி பேசினால் அக்கட்சி பற்றி குறித்து தனியாகப் பேசுங்கள்

Unknown said...

ஆனால் மிகப்
பெரும்பான்மையான (99%) மார்க்ஸியர்கள் லெனினை நிராகரிப்பதில்லை. மேலும் லெனினியம் மார்க்ஸியத்திற்கு விரோதம் அல்லது முரண் என்று கருதுவதில்லை. அதே சமயம் பலர் ஸ்டாலின்
செய்ததையும், லெனிற்கு பிந்தைய சோவித் அரசுகளை கடுமையாக விமர்சித்துள்ளனர். நீர் குட்டையை குழப்பாமல் இருந்தால் போதும்.//


அண்ணா,

நான் சொல்லும் மார்க்ஸிசம் ஒரு தத்துவ முறை.லெனினிசம் மார்க்ஸின் அரசியல் தத்துவத்தின் வாரிசு.அரசியல்ரீதியாக மார்க்ஸிசத்துக்கு அப்புறம் லெனினிசம்,ட்ராட்ஸ்கியிசம்,மாவோயிசம்,ஸ்டாலினிசம் என பல வகைகள் வந்துவிட்டன.

தத்துவ ரீதியாக மார்க்ஸிசத்தை முன்னெடுத்து கொண்டு சென்றவர்கள் பிரான்க்பர்ட் பள்ளியினரும்,டெரீடா போன்றவர்களும்.மாவோ,ஸ்டாலின், கிம் இல் சுங்(வடகொரியா) போன்ற மார்க்ஸின் அரசியல் சீடர்கள் அவர் பெயரை கெடுத்து வைத்தது தான் மிச்சம்.

CrazyTennisParent said...

//இங்கு பேசப்படுவது சித்தாந்தம் மட்டுமே, கட்சி அல்ல, கட்சி பற்றி பேசினால் அக்கட்சி பற்றி குறித்து தனியாகப் பேசுங்கள் //

சுகுமாரன் அவர்களே

நான் ஏற்கனவே சொன்னது போலத்தான்.பிரித்தால் பிரச்சினை இல்லை.

என்னுடைய எழுத்தின் பலம் பலவீனம் எல்லாமே எளிமைதான். என் அறியாமையை ஒத்துக்கொள்வது தான்.உங்கள் கருத்துக்கு நேர்பேச்சில் என்னால் பதில் சொல்லமுடியும். எழுதுவது கடினம்.

சிலரை போல் அல்லாமல் நாகரீகமாக எழுதுவீர்கள் என்பதால் இந்த கேள்வி:

மக்களை நெருங்காத நெருங்கமுடியாத சித்தாந்தததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

Anonymous said...

Selvan
That was an article on Derrida's work and not an article by Derrida as claimed by you.Even the para you have cited does not say that Weber contributed to Marxism, nor it says that Weber was a marxist.
Complementing marxims is different from contributing to marxism. And you have not replied to the other questions.Dont try to mislead by
putting abstracts.Do you still stand by what you have written
on logical positivism and marxism.

Anonymous said...

Mr.Selvan, Pls understand this basic fact.Marx never considered himself to be an idle philosopher with no interest in changing the world.Marxism is much more than a
philosophy.Marx did not prioritise philosophy over praxis.Lenin was not just a strategist.He contributed significantly to Marxist thought by writing many books and by taking part in debates.Works like State and Revolution, What is to be done
cannot be dismissed as mere works
on party tatics.

Unknown said...

Selvan
That was an article on Derrida's work and not an article by Derrida as claimed by you.//

Where did I say that article was written by derrida?

//Even the para you have cited does not say that Weber contributed to Marxism, nor it says that Weber was a marxist.//

Weber contributed to marxism.Frankfurt school used his theories to fulfill the imossions of marx.Wikipedia says as follows

"they(Frankfurt School ) took up the task of choosing what parts of Marx's thought might serve to clarify social conditions which Marx himself had never seen. They drew on other schools of thought to fill in Marx's perceived omissions. Max Weber exerted a major influence, as did Sigmund Freud "

http://en.wikipedia.org/wiki/Frankfurt_School

//Complementing marxims is different from contributing to marxism.//

Complementing means adding value.Is'nt addning value a contribution?


//Do you still stand by what you have written
on logical positivism and marxism.//

What happened so that I ran away from it?

I will post an article on neo marxists after my exams.Not now.

Anonymous said...

http://en.wikipedia.org/wiki/Max_Weber

Anonymous said...

http://uregina.ca/~gingrich/o902.htm

Weber is often regarded as the most important classical sociological theorist since he investigated many areas and since his approach and methods guide much later sociological analysis. Like Marx, Weber had a wide ranging set of interests: politics, history, language, religion, law, economics, and administration, in addition to sociology. His historical and economic analysis does not provide as elaborate or as systematic a model of capitalism and capitalist development as does that of Marx. But the scope of his analysis ranges more widely than that of Marx; is examines broad historical changes, the origins of capitalism, the development of capitalism, political issues, the nature of a future society, and concepts and approaches that Marx downplayed – religion, ideas, values, meaning, and social action.

In the view of some, Weber may have "spent his life having a posthumous dialogue with the ghost of Karl Marx." (Cuff, p. 97). This dialogue concerned (i) economic determinism or the extent to which developments are rooted in the material base, and (ii) the extent to which economic factors alone can be considered at the root of social structure. At the same time, the differences between Weber and Marx should not be overstated. Weber's analysis had similar scope to that of Marx, and he came from a similar historical, German tradition of thought, examining many of the same topics as Marx. Many contemporary sociologists think of Weber as complementing Marx, examining issues that Marx thought less important, providing a way of thinking about the individual within a structural approach, and laying out a sociological methodology. Weber's writing had an influence on structural functionalism, critical theory, some of the social interaction approaches, and much contemporary sociological theory, including some Marxist approaches that use ideas from Weber.

Mr.Selvan read this again.You have cited only one portion.Marx and Weber had similar interests and
their outlook and approach was
different.

Anonymous said...

Where did I say that article was written by derrida?

கட்டுடைப்பின் தந்தை ஜாக் டெர்ரிடா ஒரு மார்க்ஸிஸ்ட். ச்பெக்டர்ஸ் ஆப் மார்க்ஸ் என்று புத்தகம் எழுதியுள்ளார்.பிரெஞ்சு சோஷலிச கட்சியின் உறுப்பினரும் கூட.மார்க்ஸியத்துக்கு திரும்புவதை பற்றி எழுதிய கட்டுரை இதோ

This is what you wrote.

Your logic is funny.At this rate
you might claim that Freud was
a marxist as Frankfurt School
used freudian psychoanalysis.
God save Tamil from such cut and
paste experts.

சந்திப்பு said...

முத்து வணக்கம். தங்களது மார்க்சியம் குறித்த விவாதத்தையும், அதன் பின்னூட்டங்களையும் படித்தேன். நல்லெண்ணத்தில் எழுதப்பட்ட பதிவாகவே கருதுகிறேன். தாங்கள் எழுப்பியுள்ள கேள்விகள் மிக அடிப்படையானதுதான். நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு எல்லாம் எனக்கு மட்டுமே விடை தெரியும், மற்றவர்களுக்கு மூளை கிடையாது என்ற ரகத்தில் எனக்கு பதிலளிக்க என்னால் முடியாது.
கம்யூனிசம் என்பது, இதுவரை உலகம் முழுவதும் உள்ள மக்களின் (தொழிலாளிகளின்) துன்ப - துயரங்களால், அதிலிருந்து எவ்வாறு மீள்வது என்ற இலக்கை நோக்கிய பயணத்தால் பல கோடிக்கணக்கான உழைப்பாளிகளின் உழைப்பு (அறிவு) வளத்தால் உருவானது. இந்த உழைப்பாளி மக்களின் அனுபவங்களை காரல் மார்க்சு தெளிவாக புரிந்து கொண்டு - அதை விஞ்ஞான ரீதியானதாக மாற்றினர். அவருடன் இணைந்து ஏங்கல்சு மிகப் பெரும் பங்கை ஆற்றியுள்ளார். எனவே மார்க்சியம் என்பது யாரோ ஒருவருக்கு சொந்தமானது அல்ல. அவ்வாறு யாரும் உரிமையும் கொண்டாடவில்லை.
அதே சமயம் மார்க்சியம் என்பது தேங்கிய குட்டையும் இல்லை. அது வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த வளர்ச்சி சமூகத்தில் நிலவும் பல்வேறு முரண்பாடுகளுக்கு - சிக்கல்களுக்கு தீர்வு காண்பதாக இருக்கும். இதில் எந்த தனிநபரின் பங்கையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
பொதுவாக மார்க்சியத்தை, மார்க்சியம், லெனினிசம், °டாலினிசம், மாவோயிசம்.... இப்படி எந்த பெயரை வைத்து அழைத்தாலும் அது சுரண்டலுக்கு முடிவுகட்டும் மார்க்சியமாக இருக்குமே தவிர வேறல்ல. ஒவ்வொன்றையும் மார்க்சியத்தில் இருந்து பிரித்துப் பார்ப்பது - குழப்பத்தை உருவாக்குவதற்கே தவிர வேறில்லை. அவ்வாறு பிரித்துப் பார்ப்பதெல்லாம் மார்க்சியமும் அல்ல. ஏன், எதிர்காலத்தில் நீங்களே கூட (அதான் உங்களுக்குள் உறைந்து கிடக்கும் கனவு...) இந்தியச் சூழலில் மார்க்சியத்தை செழுமைப்படுத்தும் உளியாக மாறலாம்.... (நிச்சயமாக கிண்டலுக்கு அல்ல) ஆனால், இதற்கு தேவை இரண்டு விஷயங்கள் : இதை லெனின் குறிப்பிட்ட அந்த பொன்வரிகளோடு சொல்வது பொருத்தமாக இருக்கும். அதாவது, --நடைமுறையற்ற தத்துவம் குருட்டுத்தனமானது, தத்துவமற்ற நடைமுறை மலட்டுத்தனமானது-- எனக் குறிப்பிட்டிருப்பார்.
இங்கே வருத்தமான விஷயம் என்னவென்றால், பலரும் மார்க்சியத்தையும், இந்தியச் சூழலில் அதற்கான தீர்வையும் புத்தகத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்... (அதற்காக மார்க்சியத்தின் மீதான அவர்களது காதலை இங்கே நான் மதிக்கிறேன்.)
தேவை இரண்டும் கள அனுபவமும் - தத்துவ அனுபவமும்தான்.
அடுத்து, கடவுள் குறித்து நான் ஏற்கனவே உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தேன். அனானியும் குறிப்பிட்டிருக்கிறார். வாழ்த்துக்கள்.
மார்க்சியத்தின் மூன்று கூறுகள் மிக முக்கியமானது : 1. இயக்கவியல் பொருள் முதல்வாதம், 2. மார்க்சிய பொருளாதாரம், 3. புரட்சி. (மன்னிக்கவும் - இதை லெனின் குறிப்பிட்டதில் இருந்து வேறு வகையில் குறிப்பிட்டிருக்கிறேன் - இதை தவறாக கருதிட வேண்டாம்.)
அதாவது, பிரபஞ்சத்தை பற்றிய புரிதல் - பொருள் முதல் வாதம் - கடவுள் மறுப்பு வாதம் மார்க்சியத்தின் ஆதாரமானதே. இதை மறுக்கவில்லை. அதே சமயம் உலகில் எந்த மூளையில் உள்ள மார்க்சியர்களாக இருந்தாலும், இதுவே பிரதானமானது என்று பிரச்சாரம் செய்வதில்லை. ஏனெனன்றால், இன்றைக்கு சுரண்டல் அமைப்பை ஒழித்திட, அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை பேசுவதுதான் மார்க்சித்தின் முதல் விஷயம். இல்லையென்றால் மனிதன் சோமாலியாவில் செத்துக் கொண்டிருக்கும் போது, கடவுள் இல்லை. எனவே புரட்சி செய்யலாம் வாருங்கள் என்றால் - நம்மை புதிய பைத்தியமாக அவர்கள் பார்ப்பார்களே தவிர வேறொன்றும் நடக்காது. அதே சமயம் தினமும் செத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, குறைந்த பட்ச நிவாரணமும் - அவர்களது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான களத்தையும் அமைத்துவிட்டால், அடுத்து தத்துவ உபதேசம் செய்து அவர்களது பிரபஞ்ச பார்வையை விரிவடையச் செய்யலாம்.
விஜயகாந்த் தனிக்கட்சி ஆரம்பிக்கும் போது, இவர்கள் ஏன் இப்படி திராவிடங்களை தொங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள். மிக அடிப்படையானது ஒன்றுதான். மார்க்சியர்கள் தண்ணீருக்குள் இருக்கும் மீனைப் போன்றவர்கள், அதாவது பெரும் மக்கள் திரளில் இருந்து - ஓங்கி ஜிந்தாபாத் கோஷம் போட விரும்பவில்லை. அவ்வளவுத்தான். இன்றைய சூழலில் மார்க்சியர்கள் இப்படிப்பட்ட முடிவினை எடுத்தால், அது தற்கொலைக்கு ஒப்பானது. இங்கு மட்டுமல்ல ரஷ்யாவிலும், சீனாவிலும், கியூபாவிலும் ஏன் புரட்சி நடந்த பல நாடுகளிலும் பெருந்திரளான மக்ளை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்து கட்சிகளை - நேரத்திற்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டேதான், தங்களது தனித்துவத்தையும், கூட இருப்பவர்களின் போலி கோஷத்தையும் தோலுரிக்க முடிந்தது. இது குறித்து விரிவாக எழுதிட வேண்டும்.
பெரிய சப்ஜெக்ட்... மீண்டும் பதில் தருகிறேன்....
இங்கே செல்வன், இரா. சுகுமாறன், அனானிக்கு நன்றிகள்...
செல்வன் கோபமல்ல.... பாசம்தான் காரணம் கோபத்திற்கு....

இரா.சுகுமாரன் said...

//மக்களை நெருங்காத நெருங்கமுடியாத சித்தாந்தததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?//

இது மக்களை நெருங்க முடியாத தத்துவம் அல்ல., குப்பனுக்கு சுப்பனுக்கும் உலகம் எப்படித் தோன்றியது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இன்று இல்லை.

அவனுக்கு இன்றைய வாழ்க்கையே போராட்டம். அவனுக்கு தத்துவம் தேவை இல்லை. இப்போது தேவை உணவு. எனவே தான் அவனிடம் அந்த தத்துவம் சென்று சேராமல் உள்ளது.

முடவன் நடக்கிறான் ஊமையன் நடக்கிறான் என்று பேசி ஏமாற்றும் தத்துவம் அல்ல அது.

மார்ச்சியம் ஒரு அறிவியல் எனவே, இதனை ஒரு கூத்து நடத்தி விளக்கி விட முடியாது. இராமாயணம் மகாபாதம் போல அது ஒரு பொழுது போக்கு அம்சம் அல்ல அது.

உலக இயங்கியலில் எப்படி நிலபிரபுத்துவம் முதலாளித்துவமாக மாறும், எப்படி முதலாளித்துவம் பொதுவுடைமையாக மாறும் என்பது பற்றி அது விளக்கியுள்ளது. அது மீண்டும் முதலாளித்துமாக மாறினாலும், மீண்டும் அது எதை நோக்கி செல்லும் என்பதற்கான இயங்கியலை மார்க்சியம் விளக்கியுள்ளது.

எப்படி ஒரு அ.தி.மு.க வை , தி.மு.க. வை பா.ம.க-வை எந்த சித்தாந்த்தை வைத்து புரிந்து மக்கள் சென்றார்கள். சிலருக்கு நடிப்பு, சிலருக்கு தமிழ், சிலருக்கு சாதி, இது எதுவுமே நம் பிரச்சனை தீர்க்கவில்லை என்றவுடன் அவர்கள் எதைநேக்கி செல்வார்கள். ஏதேனும் ஒரு தீர்வை நோக்கி சென்றுதான் ஆகவேண்டும்.

காவிரியில் தண்ணீரும் வரவில்லை, இலவசமும் இல்லை, உணவே கிடைக்கவில்லை என்றால் அவன் என்ன செய்வார்கள்?

ஒரு நாள் எல்லாம் இழந்தவர்கள் யாரை எதிர்த்து போராடுவார்கள். அரசுக்கும் மக்களுக்குமான போராட்டமாகவும், இருப்பவர்களுக்கும் இல்லாதவர் களுக்குமான போராட்டமாக அது மாறும். அந்த போராட்டம் எப்படிப்போகும் கற்பனை செய்து கொள்ளுங்கள். காவல் துறை தடுக்கலாம். நேபாளத்தில் காவல் துறை எதிர்த்தது, ஆனால் என்ன நடந்தது.

நேபாள மக்களின் போராட்டத்தால் மன்னர் வீழ்ந்து சனநாயகத்துக்கு வழிகோல வழி இப்போது கிடைத்துள்ளது. அது போல தேவைக்கான போராட்டம் முன்னெடுக்கப்படுவது என்பது காலத்தின் கட்டாயமாக்கப்படுகிறது. நேபாளத்தில் மன்னர் ஆட்சி தான் மாற்றவே முடியாது என்று நினைத்திருந்தால் எதுவுமே அவர்கள் சாதித்து இருக்காது.

எனவே, இப்போது சித்தாந்தம் என்பது மக்களை சென்று அடையாமல் இருக்கலாம், ஆனால் இயக்கவியல் தத்துவப்படி அவர்களின் தேவைக்கான போராட்டம் வாழ்க்கைக்கான போராட்டமாக மாறும். தனது இருத்தலை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து எந்த மக்கள் சமூகமும் தன்னை ஒரு போதும் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது.

எனவே, தத்துவம் என்பது ஒரு விவாதமாக அல்லாமல் ஒரு செயல் வடிவமாக அவர்களை சென்றடைவது என்பது காலத்தின் கட்டாயமாகும்.

CrazyTennisParent said...

நண்பர் சுகுமாரனுக்கும் சந்திப்புக்கும் ஸ்பெஷல் நன்றி...

நல்ல பதில்கள்..மீண்டும் விளக்கமாக எழுதுகிறேன்...

மார்க்சியம் அறிவியல்பூர்வமானது இல்லையாமே? அப்படியா?(கேள்வி என்னுடையது அல்ல)

வஜ்ரா said...

//
மார்க்சியம் அறிவியல்பூர்வமானது இல்லையாமே? அப்படியா?(கேள்வி என்னுடையது அல்ல)
//

அந்த கேள்வி என்னுடையது தான்.

முத்து சார், என் வங்கி அனுபவம்-கூடமலை கோபால் பதிவில் உள்ள என் மற்றும் சந்திப்பின் பின்னூட்டங்களை இங்கு Cut-paste செய்து விட்டீர்கள் என்றால், அந்த Discussion ஐ இங்கு தொடரலாம். தலைப்புக் கேற்ற Discussion.

நனறி.

ஷங்கர்.

CrazyTennisParent said...

சங்கர்,

தவறு என்னுடையதுதான்..கன்ப்யூஸ் ஆகிவிட்டேன்...மன்னித்துவிடுங்கள்..எந்த உள்நோக்கமும் இல்லை..

மற்றபடி இந்துத்வாதிகளை வைத்து இவர்களை எடைபோடுவதும் இவர்களை வைத்து அவர்களை எடைபோடுவதும் சரியில்லை என்று எனக்கு தோன்றுகிறது..

இந்துத்வா பேசும் ஆட்களைவிட இவர்கள் ஆபத்தற்றவர்கள் என்பது என் புரிதல்.

வஜ்ரா said...

//
இந்துத்வா பேசும் ஆட்களைவிட இவர்கள் ஆபத்தற்றவர்கள் என்பது என் புரிதல்.
//

மார்க்ஸ்வாதம் பேசுபவர்களைவிட இந்துத்வா பேசுபவர்கள் ஆபத்தற்றவர்கள் என்பது என் புரிதல்.

இந்த நிலையில், நமது விவாதம் முடியாமல் தொடரக்கூடியது. நீங்கள் வேண்டினால் தொடரலாம்.

நனறி, என் பின்னூட்டங்களை வெளியிட்டதற்கு. மறுமுறை வாழ்த்துகள் நட்சத்திரத்திற்கு.

ஷங்கர்.

இரா.சுகுமாரன் said...
This comment has been removed by a blog administrator.
இரா.சுகுமாரன் said...

முத்துவிற்கு
இவ்வார நட்சத்திரமான உங்களுக்கு வாழ்த்துக்கள்

//மார்க்ஸ்வாதம் பேசுபவர்களைவிட இந்துத்வா பேசுபவர்கள் ஆபத்தற்றவர்கள் என்பது என் புரிதல்//

என்று சங்கர் போன்றவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்
இந்துத்துவம் சாதியத்தை காப்பாற்றுகிறது.

அதுதான் இன்று சமூகத்தை பிரிந்து நம்மை பிளவுபடுத்தியுள்ளது என்று கூறி, சாதியத்தை எதிர்ப்போர்களை ஆபத்தானவர்கள் என சங்கர் போன்றோர் புரிந்து கொள்வதில் ஆச்சரியம் எனக்கு இல்லை.
நன்றி!

Anonymous said...

// இந்தியாவின் வெளியுறவு கொள்கையையே ஓட்டுக்காக மாற்ற சொல்லுகிறார்கள் என்பதும் பாரதீய ஜனதா இவர்கள் மேல் வைக்கும் குற்றச்சாட்டு.இதற்கெல்லாம் தெளிவான பதில் இல்லை.//

Allegation not clear(need proof) how can they give clear answer

-poli dondu rasigar mandram
Cananda (near calgeri)

குழலி / Kuzhali said...

கம்யூனிசம் எனது பார்வையில் என்ற பதிவில் சென்ற ஆண்டு நான் எழுதியது இது வரை கம்யூனிசம் பற்றி தெரிந்து கொள்வதில் அதே இடத்தில் தான் நிற்கின்றேன்

CrazyTennisParent said...

போலி டோண்டு மன்றம்,

ஈரான் பிரச்சினையில் ஏதோ முஸ்லீம் மக்களை சமாதானம் செய்யத்தான் கம்யூனிஸ்ட் அந்த நிலையை எடுத்தாங்களாமே?

இல்லை அமெரிக்காவை கண்மூடித்தனமாக எதிர்ப்பதால் அந்த நிலையா?

எது சரி?

CrazyTennisParent said...

thanks kuzhali.

சிந்தாந்த ரீதியாக பார்த்தால் என்னிடமும் அதிகம் படிப்பு இல்லை..நீங்கள் சொன்ன உங்கள் சுட்டி ஏற்கனவே உங்கள் பழைய பதிவுகளை தோண்டிகொண்டிருக்கும்போது நான் பார்த்ததுதான்.

உங்கள் அனுமதியுடன்


குழலியின் பதிவில் இருந்து

____________________
கம்யூனிசம் பற்றி பேசும் போது வைக்கப்படும் சில வறட்டு வாதங்கள்

1. கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

1. கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

எல்லோரும் சமம் என்ற இடத்திலே பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு உள்ள அதிகாரம் மற்றவர்களுக்கு இல்லையே என்று வைக்கப்படும் மொக்கை வாதம் மிக நகைப்புக்குறியது

என் குடும்பத்தில் என் அண்ணன், அக்காள், என் தாய், தந்தைக்கு இருக்கும் அதிகாரங்கள் எனக்கு இருக்காது என்பது உண்மை, அது அவர்களுடைய அனுபவத்தாலும் உரிமையாலும் எனக்காக உழைப்பதாலும் நான் அவர்களுக்கு தர வேண்டியது என் கடமை.

எனக்காக உழைக்கும், நான் தேர்ந்தெடுத்த முதல்வர், என் நேரத்தைவிட அதிக மதிப்புடைய அவர் நேரத்தை சேமிக்கும் நோக்கிலும் பாதுகாப்பு மற்றும் இன்ன பல காரணங்களுக்காகவும் (இதற்கெல்லாம் அவர்களுக்கு தகுதி உண்டா என்பது வேறு விடயம்) தரப்படும் சலுகைகளும் அதிகாரங்களையும் குறை சொல்வது என்பதை எப்படி விவரிப்பது என்றே எனக்கு புரியவில்லை.

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

நாமெல்லாம் மனித சமுதாயம் தானே? விலங்கினம் இல்லையே? வலுத்தவன் வாழ்வானென்றால் பின் எதற்கு காவல்துறை, பின் எதற்கு சட்டம், நீதி, இராணுவமெல்லாம்.

வலுத்தவன் வாழ்வானென்ற நீதி விலங்கினத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் ஒரு நாகரீகமான, மனித சமுதாயத்திற்கு இது சரியா?

வலுத்தவன் வாழ்வானென்றால் ஒரு பத்து ரூபாய் வைத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் என்னால் இறங்கமுடியுமா? சென்னையில் என்னை விட உடல் பலத்தில், அரசியல் பலத்தில், ஆள் பலத்தில், பண பலத்தில் அதிகம் உள்ளவர்கள் இல்லையா?

வலுத்தவன் எது வேண்டுமானாலும் செய்வானென்றால் வீட்டுப்பெண்கள் சாலையிலே நடமாடமுடியுமா?? அல்லது நாம் தான் சுதந்திரமாக இருக்க முடியுமா?

நாமெல்லாம் மனித சமுதாயத்தில் இருக்கின்றோம், விலங்கினத்திலிருந்து இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியடைந்து மனிதனாக மாறிவிட்டோம், உடல் வலுவை மட்டும் நான் குறிக்கவில்லை, பொருளாதார வலிமையயும் சேர்த்து தான், எனவே அந்த காலத்திலேயே இருக்காதீர்கள்.

உலகாலாவிய அளவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிக்கொண்டே போவது நல்லதற்கல்ல, முதலாளித்துவத்தின் சைடு எபெக்ட் தற்போதுதான் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்துள்ளது, இது முழுதாக வெளிப்படும் போது உலகலாவிய அளவில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படும், அந்நிலையில் சிற் சில மாற்றங்களோடு கம்யூனிசம் பரந்து பட்டு இருக்கும்.

Unknown said...

கட்டுடைப்பின் தந்தை ஜாக் டெர்ரிடா ஒரு மார்க்ஸிஸ்ட். ச்பெக்டர்ஸ் ஆப் மார்க்ஸ் என்று புத்தகம் எழுதியுள்ளார்.பிரெஞ்சு சோஷலிச கட்சியின் உறுப்பினரும் கூட.மார்க்ஸியத்துக்கு திரும்புவதை பற்றி எழுதிய கட்டுரை இதோ

This is what you wrote.//

In that I never mentioned that derrida wrote that article.

//Your logic is funny.At this rate
you might claim that Freud was
a marxist as Frankfurt School
used freudian psychoanalysis.
God save Tamil from such cut and
paste experts.//

Freud and weber contributed to marxism.Can we refuse that?Dont limit marxism to marX.It's a dynamic field which draws knolwedge from all walks of life.Whoever contributes to a field are the forefathers of that field.We cant exclude them from that field.

//Mr.Selvan read this again.You have cited only one portion.Marx and Weber had similar interests and
their outlook and approach was
different. //

Yes,they were different.Marxism is not a religion where you cant have a different approach than the founder.Marx was the father of marxism,thats all.Aristotle was the father of science but today's scientist will have a different opinion compared to aristotle.Why?

Frankfurt school developed marxism way beyond the boundaries established by marx.Just like science expanded way beyond the boundaries imagined by aristotle.

ஜெயஸ்ரீ said...

வல்லது வாழும் என்பதற்குப் பொருள் ஒருவருக்கு அவரது திறமை மற்றும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்ட வேண்டும் என்பதே. எளியவர்கள் சுரண்டப்படக்கூடாது என்பது மிக மிகச் சரி. அதே நேரத்தில் ஒரே வேலையைச் செய்யும் இரு தொழிலாளிகளில் திறமை குறைந்தவருக்கும் திறமை நிறைந்தவர்க்கும் ( உற்பத்தியில் அவர்கள் பங்கு வேறு வேறாக இருக்கும்போது) ஒரே ஊதியம் அளிப்பது எப்படி சரியாகும் ? இங்கு திறமை உள்ளவனின் திறமை அல்லவா சுரண்டப்படுகிறது?

இதற்கு மாற்றாக எல்லோருக்கும் சமமாக ஊதியம்(fixed income) அளிக்கப்பட்டு பின் அவரவர் வேலையின் தரத்திற்கேற்ப variable component அளிக்க முடியுமல்லவா? ?செல்வனின் பதிவில் இட்ட பின்னூட்டம் மீண்டும் இங்கே


A very famous conversation from Ayn Rand's "We the Living "

I loathe your ideals."
"Why?"
"For one reason, mainly, chiefly, and eternally, no matter how much your Party promises to accomplish, no matter what paradise it plans to bring mankind. Whatever your other claims may be, there's one you can't avoid, one that will turn your paradise into the most unspeakable hell: your claim that man must live for the state."

"What better purpose can he live for?"

"Don't you know," her voice trembled suddenly in a passionate plea she could not hide," don't you know that there are things, in the best of us, which no outside hand should dare touch? Things sacred because, and only because, one can say: 'This is mine'? Don't you know that we live only for ourselves, the best of us do, those who are worthy of it? Don't you know that there is something in us which must not be touched by any state, by any collective, by any number of millions?"

CrazyTennisParent said...

பிராக்டிக்கல்லாக உள்ளது என்று நினைக்கிறேன்..

we have to analyse pros and cons

இரா.சுகுமாரன் said...

ஜெயஸ்ரீ நீங்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளீர்கள்

//அதே நேரத்தில் ஒரே வேலையைச் செய்யும் இரு தொழிலாளிகளில் திறமை குறைந்தவருக்கும் திறமை நிறைந்தவர்க்கும் ( உற்பத்தியில் அவர்கள் பங்கு வேறு வேறாக இருக்கும்போது) ஒரே ஊதியம் அளிப்பது எப்படி சரியாகும் ? இங்கு திறமை உள்ளவனின் திறமை அல்லவா சுரண்டப்படுகிறது?

என நீங்கள் குறிப்பிடுவது சரியல்ல.

அரசியல், கலாச்சார வளர்ச்சியில் சோசலிசம் கீழ்நிலைக்கட்டம், கம்யூனிசம் மேல் நிலைக்கட்டமாகும். சோசலிசத்தின் கீழ் பொதுச்சொத்தாக உள்ள உற்பத்திச் சாதனங்களின் பால் எல்லா உழைப்பாளிகளும் சமமானவர்கள்.

அவர்கள் “திறமைக்கேற்ற உழைப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம்“ என்ற சோசலிச கோட்பாட்டின் படி நுகர்வுப்பண்டங்களை பெறமுடியும்.

(பார்க்க : சமுக அரசியல் ஆரம்ப நூல் வரிசை, சமூக விஞ்ஞான பாடநூல், பக்கம் 74,75 முன்னேற்றப்பதிப்பகம் 1990, தமிழ் பதிப்பு )

Unknown said...

திறமைக்கேற்ற உழைப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம்“ என்ற சோசலிச கோட்பாட்டின் படி நுகர்வுப்பண்டங்களை பெறமுடியும்.//


இது எப்படி சோஷலிசமாகும் என்று விளக்க முடியுமா?

அதிக திறமை உடையவன் அதிக ஊதியம் பெறுவான் என்பது எப்படி சோஷலிசமாகும்?'வல்லவன் பொருள் சேர்ப்பான்' என்று அர்த்தமல்லவா வருகிறது?

இரா.சுகுமாரன் said...

////திறமைக்கேற்ற உழைப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம்“ என்ற சோசலிச கோட்பாட்டின் படி நுகர்வுப் பண்டங்களை பெறமுடியும்.////

//இது எப்படி சோஷலிசமாகும் என்று விளக்க முடியுமா?

அதிக திறமை உடையவன் அதிக ஊதியம் பெறுவான் என்பது எப்படி சோஷலிசமாகும்?' வல்லவன் பொருள் சேர்ப்பான்' என்று அர்த்தமல்லவா வருகிறது?. //

அய்யா, நன்றாக படியுங்கள்.

சோசலிச கோட்பாட்டின் படி நுகர்வுப் பண்டங்களை பெறமுடியும்.

சொத்து சேர்ப்பது அல்ல. அடிப்படை வசதிகள் அனைத்தும் அரசு செய்வதால் அவர்களுக்கு அதிகம் நுகர்வதற்கான தேவை எழாது. அப்படியே வாங்கினாலும் அது அரசின் உடைமையாகவே (பொதுவுடைமை யாகவே) இருக்கும். மேலும் விளக்கம் வேண்டும் எனில் மேற்குறிப்பிட்ட நூலை படிக்கவும்.

அசுரன் said...

//Sankar said
மார்க்ஸ்வாதம் பேசுபவர்களைவிட இந்துத்வா பேசுபவர்கள் ஆபத்தற்றவர்கள் என்பது என் புரிதல்.

இந்த நிலையில், நமது விவாதம் முடியாமல் தொடரக்கூடியது. நீங்கள் வேண்டினால் தொடரலாம்.//

Dear Sankar,
Could you please clarify some of my basic questions.

What is Hindhudva?

How a Communist is more dangerous than a Hindhudva person?


not like 'Santhippu', 'Muthu', 'Selvan' etal, I've not read a lot about communism, and it's various present day philosophical manifestations. But I have some basic knowledge about Communism.

But hindhudva I am completly unaware of.

So, Please address my queries

தமிழ்வெளியை பார்த்தீங்களா?