Saturday, December 31, 2005

கேப்டனுக்கு புத்தாண்டில் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்

புதிதாக அரசியலுக்கு வந்த விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த புதிதி்ல் "என்ன செய்வீர்கள் பெரிதாக...இன்கம்டாக்ஸ் ரெய்டு செய்து தொந்தரவு செய்வீர்கள்..அவ்வளவுதானே" என்று வூடு கட்டினார். அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். உண்மையிலேயே அவர் கட்டிய வீட்டை இடிக்க முயற்சி நடைபெறும் என்று. LINK கண்கள் சிவக்க மத்திய அரசு அதிகாரிகளை பார்த்து விஜயகாந்த பேசும் வீர வசனங்களை தமிழக மக்கள் எதிர்பார்க்கலாம்.

தனித்து போட்டியிட தயாரா என்றெல்லாம் வூடு கட்டினாலும் தேர்தல் நேரத்தில் அம்மா அழைத்து நாலு சீட் கொடுத்தால் அம்மாவுடன் சேர்ந்து கொள்வார் என்றே தோன்றுகிறது.( நாலு சீட்: இவர்: மனைவி:மச்சினர்:ரசிகர் மன்ற தலைவர்)


காமெடி


இது ஒருபுறமிருக்க எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா விஜயகாந்த அரசியலுக்கு வருவதற்காக கூறிய காரணத்தை கிண்டல் செய்திருந்ததை படிக்க நேர்ந்தது. எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் விஜயகாந்த?

" எனக்கு எப்போதுமே ஏழைகளுக்கு உதவுவது பிடிக்கும். நான் ரொம்ப நாளாக அயர்ன் பாக்ஸ்,மூணு சக்கர வண்டி,வேட்டி சேலை என்று ஏழைகளுக்கு வழங்குகிறேன். அதன் தொடர்ச்சியாக ஏழைகளுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வருகிறேன்"

இதுதான் விஜயகாந்த் பேச்சின் சாராம்சம். இதில் சாரு நிவேதிதா கிண்டல் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அரசியலுக்கு வருவதற்கு ஒருவர் பாலஸ்தீன பிரச்சினைக்கோ அல்லது ஈராக் பிரச்சினைக்கோ தீர்வு சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். ஏன் சாரு அவ்வாறு கூறினார் என்று யாராவது விளக்கமுடியுமா?

Friday, December 30, 2005

ஜீவராசிகள் - 2005

இந்த 2005 பல புதிய ஜீவராசிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இவர்களை உங்களிடம் அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1. உரலரசன்:

இவர் இணையம் நமக்கு அளித்த கொடை என்றுதான் சொல்லவேண்டும். இவர் இல்லையென்றால் கூகுள் கம்பெனி பல நாட்களுக்கு முன்பே இழுத்து மூடப்பட்டிருக்கவேண்டும்.இது சம்பந்தமாக கூகிள் இவருக்கு கொடுத்த சான்றிதழை இவர் ஃபிரேம் பண்ணி வைத்துள்ளார்.இவர் தன்னோடு கருத்துரீதியாக மோதுபவர்களை எதிர்கொள்ள பல உரல்களை (URL)அனுப்பி அதிர வைப்பார் என்பதால் இந்த பெயர் இவருக்கு ஒட்டிக்கொண்டது.

2.கற்பு வெட்டியான்

இவர் கட்டுடை தலைவி குஷ்பு நமக்கு அளித்த கொடை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இவரிடம் இளைஞர்களும் இளைஞிகளும் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.இவர் சிம்பு போல பப்(pub), ஐந்து நட்சத்திர ஹோட்டல்,பீட்ஸா கார்னர் போன்ற இடங்களில் சுற்றி திரிவார்.பார்ப்பதற்கு மிகவும் பேஷனாக இருப்பார். ஆனால் இளவட்டங்கள் யாராவது பீர்,பிராந்தி போன்றவைகளை குடிக்காமலோ அல்லது ஜோடி இல்லாமல் தனியாகவோ இருந்தால் அவர்களை போட்டு தள்ளி விடுவார். இளைஞர்களும் இளைஞிகளும் கல்யாணத்திற்கு முன்பே கண்டிப்பாக தவறு செய்யவேண்டும் என்பது இவர் கொள்கை.இவருக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்பது வெளிப்படை.


3.தமிழ்மண போலி்+ஆபாச பின்னூட்ட அனானி

இவர்(கள்) ஒரு விசித்திர பிராணி. ஆனால் ஒரு மிகப்பெரிய கணிணி வல்லுனர்(கள்) ஆக இருக்கக்கூடும். ஒரு சமுதாயமே( இது தமிழ்மண சமுதாயம்தான்) கூடி விரட்டி விரட்டி தாக்கினாலும் அசராமலும் மாட்டிக்கொள்ளாமலும் திருப்பி தாக்குகிறார்(கள்).
பல பேர் வலைப்பதிவை விட்டே வெளியேற காரணம் என்று கூறப்படும் இந்த அனானி(கள்) இவ்வருடத்திய சிறந்த வில்லன் பரிசை போட்டி இல்லாமல் தட்டி செல்கிறார்.இந்த அனானி(கள்) தாமே முன்வந்து 2006 முதல் விளையாட்டில் கலந்துக்கொள்ளாமல் தமிழ்வலைப்பதிவு உலகை அழியாமல் ரட்சிக்க வேண்டுகிறோம்.

4.சேப்பல்

இவரை இந்திய தேர்தல்கமிஷனுக்கு தலைவராக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகள் மன்மோகன்சிங்குக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இரக்கமே இல்லாமல் இந்திய அணியில் இருந்து ஓடமுடியாத நடக்கமுடியாத பலபேரை கதற கதற வெளியே எறியும் சேப்பல் தேர்தல் கமிஷனுக்கு தலைவரானால் பல தலைவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்பதால் அனைத்து கட்சி தலைவர்களும் இதை எதிர்த்துள்ளனர்.

5.குரங்கு குப்புசாமி

வந்தேறிகள் யார் என்று கண்டுபிடிக்க வேர்களை தேடி அலைந்த ஆராய்ச்சியாளர் குப்புசாமி இப்போது மனித குரங்குகளை பிடித்து DNA ஆராய்ச்சி செய்து உள்ளார்.அதன்மூலம் அனைவருமே வந்தேறிகள் தான் என்பது நீருபிக்கப்பட்டுள்ளது. இந்த சரித்திர புகழ்வாய்ந்த ஆராய்ச்சியை டுனீசியாவில் கிக்காயோ மாகாணத்தில் ஏற்றுக்கொண்டவி்ட்டபடியால் இங்கேயும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.இவருக்கு பெயர் காரண்ம் விளக்கப்பட வேண்டியதில்லை.


(தொடரும்)

Thursday, December 29, 2005

எந்திரிச்சா பொல்லாதவன் கதை தெரியுமா?

நான் முதன்முதலில் வேலைக்கு சேர்ந்த வங்கிக்கிளையில் ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் சத்தியசீலன். அவரின் சிறப்பம்சம் என்னவென்றால் சரியான நேரத்தில் பொறுத்தமாக பழமொழிகளை எடுத்துவிடுவார்.மிகவும் சுவாரசியமாக இருக்கும் அந்த பழமொழிகளில் இருந்து சாம்பிளுக்கு சில.

எந்திரிச்சா பொல்லாதவன்

அடிக்கடி எங்கள் வங்கியின் மண்டல அலுவலகத்தில் இருந்தோ மத்திய அலுவலத்தி்ல் இருந்தோ பல நினைவூட்டு கடிதங்கள் வரும். மாதாந்திர ஸ்டேட்மெண்டுகள் சரியான நேரத்தில் அனுப்படவில்லையென்றால் சம்பந்தப்பட்டவர் பொறுப்பாக்கபடுவார் (Accountability fixing) என்றெல்லாம் வரும் கடிதங்களை பார்த்து நான் பதட்டபடுவேன்.அவரோ ஹாயாக இருப்பார்.எப்படிங்க கவலையேபடாமல் இருக்கீங்க என்று நான் கேட்டதற்கு ஒரு நாள் இவ்வாறு கூறினார்.

"பயப்படாதீங்க..இதெல்லாம் எந்திரிச்சா பொல்லாதவன் கதைதான்"

"அது என்ன சார் கதை?", என்றேன்.

"ஒண்ணுமில்லீங்க...அவனோ எந்திரிக்க முடியாம நொண்டியா இருப்பான்.ஆனா அடிக்கடி நான் எந்திரிச்சா என்ன நடக்கும்னே தெரியாது என்றெல்லாம் மிரட்டுவான்", என்றார்.

சில தினங்களுக்கு முன் ஒரு புத்தகத்தில் இதே கதையை முழு நீள சுவையான கதையாக கி.ரா கூறியிருந்ததை படிக்க முடிந்தது.ஒரு கிராமத்தையும் மெயின் ரோட்டையும் இணைக்கும் பாதையில் ஒரு மேடான இடத்தில் ஒரு மரத்தினடியில் அவன் அமைதியாக அமர்ந்திருப்பான். கையில் ஒரு நீளமான அரிவாள் வைத்திருப்பான்.அந்த வழியாக போகும் வண்டிகள் அவனுக்கு பணம் கொண்டுப்போய் அவனிடம் கொடுக்கவேண்டும்.தண்டல் வசூல் மாதிரி இது பல நாட்களாக நடந்து வந்தது.

ஒரு குறிப்பிட்ட நாளில் விஷயம் தெரிந்த சிலர் ஒரு வண்டியில் அவ்வழியாக வந்தனர்.வந்தவன் வண்டியை நிறுத்திவிட்டான்.ஆனால் பணத்தை கொண்டு வரவில்லை.

"அய்யா வந்து வாங்கிக்கொங்க"

"டேய், கொண்டு வாடா இங்க..நான் எந்திரிச்சா என்ன நடக்கும் தெரியுமில்ல.."

"என்ன ஆவும்"

"டேய் உன் தலையை தனியா எடுத்திருவேண்டா"

"மொதல்ல எந்திரி பார்ப்போம், எங்களுக்கு தெரியும்டேய்"

அவமானத்தில் சுண்டவனாக அழ ஆரம்பித்தான் அவன் என்பதாக கதையை கொண்டு போயிருப்பார்.


அவனை காலை எடுக்க சொல்லு


சில நேரம் நம்முடைய மேலதிகாரிகள் தம்மால் சுலபமாக செய்யக்கூடிய காரியத்தை பொறுத்தமற்ற காரணம் (சப்பை காரணம்,நன்றி: கவுண்டமணி) கூறி தட்டி கழிக்கும்போது உபயோகப்படுத்தகூடிய பழமொழிதான் மேற்சொன்னது.

இது கடவுளையே கிண்டல் செய்யும் பழமொழி. கோவிலில் இருக்கும் சாமி சிலையின் மீது ஒருவன் காலை வைத்தானாம். உடனே சாமி பூசாரியை அழைத்து அவனை காலை எடுக்க சொல்லு..இல்லை உன்னை தொலைச்சுருவேன் என்றதாம்..இது ஒரு நுண்ணிய பழமொழி. இது பல இடங்களில் பல வழிகளில் உபயோகப்படுத்தக்கூடியது. எனக்கு மிகவும் பிடித்ததும் இதுதான்.


இனி கேள்வி நேரம்

யாராவது இந்த பழமொழியின் கதையை சொல்லலாம். செத்தும் சிரிச்ச மாதிரி

Tuesday, December 27, 2005

லேட்டஸ்ட கிரெடிட் கார்டு மோசடி

யார் சொன்னது நமது இந்திய மென்பொருள் நிபுணர்கள் சொந்த தொழில் செய்யமாட்டார்கள் என்று...மும்பயை சேர்நத இரண்டு மென்பொருள் நிபுணர்கள் வெறும் இருபதாயிரம் முதலீட்டில் மூன்று லட்சம் ரூபாய்களை சம்பாதித்து உள்ளனர்.

மும்பயை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜேக்கப்(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இரண்டாம் வருடம் தொழிற்கல்வி பயின்று வருகிறார். அவர் தன் நண்பர் பிரகாஷின் உதவியோடு அமெரிக்காவில் இருந்து ஒரு கருவியை இறக்குமதி செய்கிறார். கருவியின் விலை பதினெட்டாயிரம் (இந்திய மதிப்பில்).அதன் மேல் ஒரு கிரெடிட் கார்டை உரசினால் அந்த கார்டில் உள்ள அனைத்து விஷயங்களையும் உள்வாங்கிக்கொள்ளும். அது போல பனிரென்டு கார்டுகளின் தகவல்களை அதில் சேமிக்கலாம் என்பது உபரி செய்தி.
இருவரும் மும்பய் ஜுகுவில் உள்ள ஒரு ஓட்டலில் ஒரு சர்வர்(வெயிட்டர்) ஒருவரையும் தங்களுடன் சேர்த்துக்கொள்கிறார்கள். யாராவது கிரெடிட் கார்டை உபயோகித்து பணம் செலுத்தினால் அந்த கார்டை கையடக்கமான அந்த கருவியில் உரசிக்கொள்கிறார் அந்த வெயிட்டர்.(ஆறு இன்ஞ் நீளம் மட்டுமேயுள்ள அந்த கருவியை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாமாம்)
பிறகு நமது கணிப்பொறி வல்லுனர் அந்த கருவியில் இருந்து தகவல்களை கம்ப்யூட்டரில் இறக்கி கள்ள மார்கெட்டில் கிடைக்கும் பழைய கார்டுகளில் ஏற்றுகிறார்.

அப்புறமென்ன அந்த காட்டுகளை எங்கு வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம். படுத்தினார்கள்.பணத்தை இழந்த அனைத்து வாடிக்கையாளர்களும் அந்த குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்றதை வைத்து காவல்துறை அந்த வெயிட்டரை அமுக்கி பிறகு நமது மென்பொருள் நிபுணர்களை பிடித்தனர். நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.அதில் ஒருவர் அமெரிக்காவில் பெரிய மென்பொருள் கம்பெனியில் வேலை கிடைத்து இன்னும் சிறிது நாட்களில் பிளைட் ஏற இருந்தாராம். அதற்குள் மாமியார் வீட்டுக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது.

அடுத்த முறை கார்டு உபயோகப்படுத்துமுன் உஷாராக இருக்கலாமே.

தகவல் நன்றி:TIMES NEWS NETWORK

Saturday, December 24, 2005

சாகித்ய அகாடமியும் பின்நவீனத்துவமும்

சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக இதுப்போன்ற விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன் பரிசு கிடைக்காத மற்ற எழுத்தாளர்கள் விருது வாங்கியவரை பொளந்து கட்டுவார்கள். தமிழிலேயே என்னுடைய நாவல்கள் மட்டும்தான் நாவல்கள் என்று கூறும் எழுத்தாளர்கள் முதல் பிரான்சில் நான் பிறந்திருந்தால் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வருடா வருடம் எனக்கு மட்டும்தான் கிடைக்கும் என்று சொல்லும் எழுத்தாளர் வரை எல்லோரும் இந்த விஷயத்தில் கைக்கோர்த்துவிடுவார்கள்.

குறிப்பிட்ட அந்த பரிசுக்குரிய படைப்பை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்துப்போட்டு தரிசனம் இல்லை என்ற குற்றச்சாட்டு முதற்கொண்டு பின்நவீனத்துவம், விளிம்புநிலை என்றெல்லாம் வார்த்தைகளை போட்டு விளையாடிவிடுவார்கள்.

இந்த முறை அவ்வாறு செய்யும்முன் பரிசு பெற்ற படைப்பாளி ஒரு போலீஸ் டி.ஜி.பி என்பதை மனதிற்கொண்டு புத்திசாலிதனமாக நடந்துக்கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம். பொறுத்து இருந்து பார்ப்போம்.

Thursday, December 22, 2005

வூடு கட்டுதல் தொடர்பாக -கடைசி பதிவு

இந்த பதிவில் சொல்லப்படும் அசடாகிய நான் எழுதுவது...

திரு.டோண்டு பதிவில் கூறப்படும் திரு.அருண் அவர்களின் பதிவை அடிப்படையாக கொண்டுத்தான் நான் சொக்க தங்கம் சீரிஸை எழுதினேன். அப்துல் கலாமை பற்றி நான் எழுதியுள்ள ஒரு பத்தியை ஊன்றி படித்தாலே இது புரியும்.

திரு.டோண்டுவின் பதிவு மற்றும் அருணின் பதிவு ஆகிய இரண்டிற்கும் ஆன பதில்கள் என்னுடைய மூன்று பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களில் உள்ளன.( குறிப்பாக மூன்றாவது பதிவின் பின்னூட்டங்கள்)

நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டபடி பின்னூட்டங்களை முன்னே கொண்டு வருகிறேன்.அப்போது தேவையில்லை என்று நினைத்தேன்.இப்போது தேவைப்படுகிறது என்று உணர்கிறேன்.திரு.டோண்டு அவர்கள் தர்க்க முறை பற்றியெல்லாம் எழுதுவதின் ரகசியம் என்ன என்று தெரிந்துக்கொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பார்கள்.அவர்களின் நன்மையை முன்னிட்டு இது கிறிஸ்துமஸ் சிறப்பிதழாக மலர்கிறது.

கடைசியாக பேசுபவர் கூறுவதுதான் சரி என்பதாக மக்கள் நினைத்துவிடக்கூடாது என்பதும் ஒரு முக்கிய காரணம். இந்த பதிவிற்கு நான் பின்னூட்ட விளக்கமும் கொடுக்கபோவதில்லை.விருப்பப்பட்டவர்கள் வழக்கம்போல் தங்கள் பதிவுகளில்வூடு(காலி கிரவுண்டில் வாளை வீசுவது) கட்டிக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
OVER TO பின்னூட்டம்
_________________________________________________________________//உங்களைச் சேலஞ்ச் செய்கிறேன். சோ பார்ப்பனர் என்பதால்தான் நான் அவரை ஆதரித்தேன் என்பதை என் எழுத்துக்களிலிருந்து காட்டுங்கள் //


அண்ணா விட மாட்டீங்க போல...உங்கள் எழுத்துக்களில் இருந்து நீங்கள் நடுநிலையாளர் என்று தெரிகிறது. உங்கள் சாதி மட்டுமல்ல நீங்கள் ஆணா பெண்ணா என்றே கண்டுக்கொள்ளமுடியவில்லை.. போட்டோவை வைத்துத்தான் கண்டுபிடித்தேன்.அந்தளவிற்கு நீங்கள் ஜெண்டிலாக எழுதியிருக்கிறீர்கள். பலரும் இங்கே அதே கருத்து கொண்டு இருக்கிறார்கள். இதை படிப்பவர் ஜட்ஜ்மெண்டுக்குத்தான் விடவேண்டும்.நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

நீங்கள் மேலும் ஊடுகட்டிக்கொண்டே இருப்பதால் மற்றதையும் பார்க்கிறேன்.

ஒரு சின்ன கதை கூறுகிறேன். ஒருவர் (அருண்) கூறுகிறார் சோ சுத்தமானவர் என்று.

நான் கூறுகிறேன் இல்லை அவர் பல் கூட துலக்குவதில்லை, குளிப்பதில்லை என்று.
நீங்கள், நான் கூறியபல் துலக்குவதில்லை குளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை கண்டுக்கொள்ளவில்லை.ஆனால் நீங்கள் சொல்லுகிறீர்கள் அவர் ரொம்ப காலமாக செண்ட் உபயோகபடுத்துகிறார்( 1975 முதல்). எனக்கு அது நன்றாக தெரியும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறீர்கள்.

ஊடு கட்டுகிறீர்கள். இதை படிக்கிறவர்கள் எல்லாமே கோயிஞ்சாமிகளாக இருந்தால் உங்கள் வாதத்திற்கு கை தட்டுவார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்மணத்தில் கோயிஞ்சாமிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.(பி.கு)அவர் செண்ட் போடுவதை பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை.ஏன் குளிப்பதில்லை.பல் துலக்குவதில்லை என்பதுதான் என் கேள்வி.உடனே இதையும் சீரியஸாக எடுத்துக்கொண்டு அவர் உபயோகப்படுத்தும் பேஸ்ட், சோப் எல்லாம் போட்டோ பிடித்து காட்டி ஏதாவது சொல்லவேண்டாம்.(இது உங்களுடைய பிரஞ்சு டூரிஸ்ட் ஸ்டோரிக்கும் பொருந்தும்)அண்ணா, அவரை அவரே விரும்பி ஏற்றுக்கொண்ட ஒரு டெம்பிளேட்டை விலக்கிவிட்டு யாரும் அவரை விமரிசித்துவிட முடியாது. ராவணன் கூட சிறந்த சிவபக்தனாம்.அதுக்காக ராமன் சீதையை அவன்கிட்டேயா விட்டுட்டான்.எல்லார்கிட்டயும் சில நல்ல குணங்கள் இருக்கும்.அதை பத்தி நான் எதுவும் சொல்லவில்லை.விஷ விதைகளை தூவுகிறாரே அதைப்பற்றி தான் சொல்கிறேன்.

என் பதிவுகளை படிக்கவே இல்லையா?

சோ என்ற வார்த்தையை பார்த்துவுடன் வரிந்துக்கட்டி வீட்டீர்களா?

75 மற்றும 76 எல்லாம் நான் பிறக்கவேயில்லை என்பது ஒருபுறமிறுக்க அவர் ஏதாவது உருப்படியாக செய்திருந்தாலும் அதையும் எதிர்த்து ஆகவேண்டும் என்பது என் தலையெழுத்து இல்லை.எல்லாம் ஆரம்பத்தில் நல்லாதான் இருப்பாங்க..அப்புறம் தான் வரவர மாமியார் கதை ஆயிடுது.......


கிசுகிசு பற்றி: நீங்களே தினமலரை பற்றி இவ்வளவு கேவலமாக எழுதினால் எங்களை மாதிரி ஆட்கள் எல்லாத்துக்கும் வாய்ப்பு ஆகிவிடாதா? நிற்க...துக்ளக் காப்பாற்றி வரும் தரம் என்ன என்பதே யாருக்கும் தெரியாது.என் பதிவுகளில் நான் கூறி உள்ள தயானந்த சரஸ்வதி கட்டுரை போன்றவை தான் தரம் என்றால் ஸாரி இதற்கு என்னிடம் பதில் இல்லை...


எம்பிக்கள் நிதி விஷயத்தை பற்றி ஒரு விமர்சனமும் இல்லை.பாராட்டுக்கள்.(கடமையை சரியாக செய்வதே சாதனை ஆயிடுச்சு என்பது துரதிஷ்டவசமானது சார்)


ஏதோ அவர் கூட்டம் நடத்துகிறார் என்றெல்லாம் சொல்கிறீர்கள். திண்டுக்கல் லியோனியும் கூட்டம் நடத்துகிறார். கூட்டம் பிய்த்துக்கொண்டு போகிறது. (எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் தான்.இதில் என்ன சந்தேகம்?) அவரும் பிரியாணி பொட்டலம் தருவதில்லை.இதெல்லாம் ஒரு பொழுதுப்போக்கு சார். எல்லோரும் வருவாங்க. சிரிப்பாங்க. சீரியஸா யாரும் எடுத்துக்கறதில்லை. நீங்க எடுத்துகிட்டீங்கன்னா அது உங்க தப்பு. அங்க என்ன நீங்க உலகத்தை மாத்தி அமைக்கிறீங்களா?(அவரை கடுமையா விமரிசிக்கறவங்களும் துக்ளக் படிப்பதை இங்கே நினைவுபடுத்தி கொள்ளவும்.)

அதே மாதிரி அவர் கூட்டத்தில எப்படி சார் பிரியாணி போடமுடியும்? தயிர்சாதம், புளிசாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவை தான்.எனிவே உங்கள் ஆதங்கத்தை அவருக்கு சொல்கிறேன்.அடுத்த முறை ஆவன செய்வார்.பி.ஜெ.பி பற்றிய அவர் விமர்சனங்கள் பற்றி எல்லாம் என் பதிவில் பதில் இருக்கிறது.(முதல் பதிவு).தன்னைத்தானே கிண்டல் செய்வது எல்லாம் ஒரு சாதனையா? வலிக்கிற எடத்துல அடிக்கிறதுன்னு ஒண்ணு இருக்குதுங்க.அது எல்லோருக்கும் புரியாது. அடி வாங்கினாதான் புரியும்.அடிமட்டத்து ஆளுங்களுக்குதான் அது.மேட்டுகுடிக்கு புரியாது.... குழந்தைங்களுக்கு விளையாட்டு காட்டறதுக்காக நாம நம்மளை அடிச்சிக்குவம்ல.. அதெல்லாம் இதுல வராது அய்யா.....மற்றபடி தனிமனித தாக்குதல் என்பதெல்லாம் பற்றி பலர் கூறிவி்ட்டார்கள்.தனிமனித தாக்குதல் விஷயத்தை நீங்கள் எப்படி விளங்கி வைத்துள்ளீர்கள் என்று விளக்க முடியுமா?நான் சோ உத்தி என்றால் என்ன என்று என் சோ மூன்றாம் பாகத்தில் எழுதியுள்ளேன். அதை படித்து அப்டேட் ஆகவும்.மெல்ல பதிவுகளை போடவும் நான் ஆன்லைன்லயே உங்களுக்காக வெயிட் பண்ணலை. முடிந்தவரை உடனே எழுத முயற்சி செய்கிறேன்.கவுண்ட் டவுன் எல்லாம் எண்ணிட்டு இருக்க வேண்டாம்.

END OF பின்னூட்டம்


முழு கதையும் இங்கே (see comments area)
_______________________________________________________________மேற்கண்ட கடைசி பத்திக்கு பிறகு அவர் தனியாக வூடு கட்ட போய்விட்டார்.

Wednesday, December 21, 2005

ராஜதந்திரம் --- சரத்பவாரும் தமிழக அரசும்

என்னடா இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும முடிச்சு போடறாங்களேன்னு பாக்கறீங்களா? மேலே படிங்க..

நேற்று சென்னையில் தி.மு.க வை சேர்ந்த கிளை செயலாளர் தனசேகரன்(இவர் கவுன்சிலராகவும் இருக்கிறார்) என்பவரை தமிழக அரசு கைது செய்தது. இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது ஆனவர். மேலும் பல குற்றச்சாட்டுக்கள் இவர் மேல் உள்ளதாக போலீஸ் தெரிவித்தனர். குற்றச்சாட்டு என்னவென்றால் வெள்ள நிவாரண வாங்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி 42 பலியாக காரணமாக இருந்தது.இவர் பரப்பிய வதந்தி காரணமாகத்தான் மக்கள் அந்த அதிகாலை நேரத்தில் அங்கு கூடினார்களாம்.
பிரச்சனை நடந்து இரண்டு நாட்களுக்கு அப்புறம் அரசு சுதாரித்துக்கொண்டு இப்படி ஒரு பாயிண்டை (கவுண்ட்டர்) வீசினாலும் கேள்விகள் தொடர்கின்றன.

அரசு அறிவிக்காமல் அத்தனை பேர் கூடியதை அரசு ஏன் அனுமதித்தது?

அங்கே சில காவலர்களும் இருந்ததாக தகவல்.அவர்களும் வதந்தியை நம்பி வந்தவர்கள்தானா?

முன்பு நடந்த சம்பவமும் அதிகாலையில் தான் நடந்தது.அதுவும் அப்படித்தானா?

தி.மு.க தரப்பு இன்னும் பல கேள்விகளை எழுப்பி இதை திசை திருப்பும் செயல் என்று கூறுகிறது. யார் சொல்வது சரி..யார் சொல்வது தவறு என்பதை பிறகு பார்ப்போம்.விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் பல தகவல்கள் வெளிவரலாம்.ஆனால் 42 பேர் இறந்ததிற்கு இவர்தான் காரணம் என்று ஒருவர் மீது பழி போடுவது சம்மந்தப்பட்டவருக்கு மிகவும் மனஉளைச்சலாகத்தான் இருக்கும்.

இப்போது இன்னொரு சம்பவத்தை பார்ப்போம். சவுரவ் கங்குலி அணியில் நீக்கப்பட்ட உடன் பலரும் அவருக்கு ஆதரவாக திரண்டதை நாம் அறிவோம்.அப்போது வாரியத்தலைவர் திரு.சரத்பவார் விட்ட பஞ்ச் குறிப்பிடத்தக்கது.

எனக்கு தெரியாமல் இது நடந்துவிட்டது..தேர்வுக்குழு தலைவரிடம் நான் இதுப்பற்றி பேச இருக்கிறேன் என்றார் பவார்.எல்லோருக்கும் தெரியும் இவருக்கு தெரியாமல் கங்குலிக்கு கல்தா கொடுத்திருக்க முடியாது என்று. இவரை கேட்காமல் தேர்வாளர்கள் அணியை முடிவு செய்வார்களா?.அதுவும் கங்குலி விஷயம் ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கும்போது..அப்படியிருக்க அவர் ஏன் அவ்வாறு கூறினார்?

இங்குதான் சரத்பவார் தான் எப்படிப்பட்ட ராஜதந்திரி என்பதை காண்பிக்கிறார். கங்குலிக்கு ஆதரவாக எழுந்தவர்களை ஆதரிப்பதுபோல ஒரு தோற்றம் காண்பித்து அவர்கள் எதிர்ப்பை பிசுபிசுக்க வைத்தார் அவர்.எதிர்தரப்பு நிலைகுலைந்து போனது.அதற்குள் அடுத்த ஆட்டம் ஆரம்பித்து விட்டது.

இந்த மாதிரியான திறமைகளை எதையும் காட்டாமல் சம்பவம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு படுவீக்கான கவுண்ட்டர் அட்டாக்கை தமிழக அரசு செய்துள்ளது..

இது வேலை செய்யுமா என்பதை போக போகத்தான் பார்க்கவேண்டும்.

Monday, December 19, 2005

மானம் காத்த தமிழ் தனயன் பாலமுருகன்

நண்பர்களே, ஸ்டார் தொலைக்காட்சியில் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை பற்றிய என் முந்தைய பதிவு (புலம்பல்) இங்கே.

கடந்த சனியன்று ஒளிப்பரப்பபட்ட நிகழ்ச்சியில் கோயமுத்தூரை சேர்ந்த சென்ட்ரல் எக்ஸ்சைஸ் அதிகாரி திரு.பாலமுருகன் அருமையாக பதில் சொல்லி இருபத்திஐந்து லட்சத்தை வென்று தொடர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிப்பரப்பபட்டு வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழர்கள் கலந்துக்கொள்வதே அரிதாக இருந்தது. சேலத்தில் இருந்து கோயமுத்தூரில் இருந்து என்றெல்லாம் அறிவிப்பார்கள். ஆனால் பார்த்தால் சர்மா, சிங் என்று ஏதாவது வடநாட்டு ஆசாமிகள் அமர்ந்திருப்பார்கள். இதற்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த தமிழர்கள் இரண்டு மூன்று பேர் மட்டுமே ஹாட் சீட் வரை வந்திருந்தனர்.ஆனால் பெரிய தொகை ஏதும் வெல்லவில்லை.

அனைத்து வருத்தங்களையும் போக்கும் வகையில் திரு.பாலமுருகன் திறமையாக பதில் சொல்லி இருபத்தி ஐந்து லட்சங்களை வென்று தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார். வழக்கம் போல அல்லாமல்,கடினமாக அமைந்த கேள்விகளையும் கண்டு மிரளாமல் சிரித்து முகத்தோடு அலசி அவர் பதில் கூறிய விதம் அருமையிலும் அருமை.அவருக்கு தமிழக வலைப்பதிவாளர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

Saturday, December 17, 2005

இம்சை அரசன் இருபத்திமூன்றாம் குலிகேசியும் வலைப்பதிவும்

(இம்சை அரசன் இருபத்திமூன்றாம் குலகேசியின் அரசவை)

இம்சை அரசன் இருபத்திமூன்றாம் குலிகேசி இட்ட ஆணையின்படி மந்திரிசபை அவசர அவசரமாக கூட்டப்படுகிறது.

அரசன்: மந்திரியாரே, நான் இந்த அரசவையை கூட்டியுள்ள நோக்கம் என்ன தெரியுமா?

மந்தி்ரி:(மனதிற்குள்)ஏதாவது வெட்டி காரணமாகத்தான் இருக்கும்.(சத்தமாக) சொல்லுங்கள் பிரபோ

அரசன்: நீர் சொன்னீர் என்பதற்காக நான் வலைப்பதிவு தொடங்கினேன்

மந்திரி: (மெதுவாக) உன் இம்சை அரசவையில் தாங்க முடியவில்லை என்பதற்காகத்தானே நான் சொன்னேன்...

அரசன்:என்ன மந்திரி?

மந்திரி:ஒன்றுமில்லை மன்னா..

அரசன்: ஒரு வருடம் ஆகியும் என்னுடைய பிளாக்கிற்கு மக்கள் வருகை குறைவாகவே உள்ளது. பின்னூட்டங்களும் நிறைய இல்லை.யாரும் என்னுடைய கட்டுரைகளை நட்சத்திர பரிந்துரைப்பதும் இல்லை. பல நல்ல தலைப்புகளில் எழுதினாலும் யாராவது அதே சப்ஜெக்ட்டில் எழுதிடறான்.எல்லா பயலும் அங்கே தான் பின்னூட்டம் இடறான்.நட்சத்திர பரிந்துரை செய்யறான்.என் பதிவை ஒதுக்கிடறாங்க...இது அநியாயமில்லையா?

மந்திரி:(மெதுவாக) உன் லட்சணம் அப்படி(சத்தமாக)மன்னா, தாங்களே தங்கள் கட்டுரையை பரிந்துரைக்கலாமே.

அரசன்: அதுவும் செய்து பார்த்தேனே.ஆனால் ஒரே ஒரு பரிந்துரை மட்டும் இருந்தாலே மக்களுக்கு நன்றாக தெரிந்துவிடுகிறது. நானே என்னுடைய பதிவையே பரிந்துரைக்கிறேன் என்று.

மந்திரி:(மனதிற்குள்)சில்லறை பயல்தானே நீ

அரசன்: மேலும் இரவு நேரமாக பார்த்து யாரோ சிலர் (-) குத்துக்களை இட்டு அதையும் அமுக்கிவிடுகின்றனர். எப்படியாவது என் வலைப்பதிவை பிரபல்யபடுத்தி முகமூடி,குழலி,டோண்டு ஆகியோர் அளவிற்கு எதை எழுதினாலும் நிறைய பின்னூட்டங்களும் நட்சத்திர பரிந்துரைகளும் வர வழி சொல்லுங்கள்.

(அதுவரை எதுவும் பேசாமல் இருந்த சேனாபதி வாயை திறக்கிறார்)

சேனாபதி : அரசே, நீங்களே சில பின்னூட்டங்களை வேறு பெயர்களில் அளிக்கலாம். உதாரணத்திற்கு அனானிமஸ் என்ற பெயரில் வந்து அரசகுடும்பத்தை விமரிசித்து படிக்கவே அறுவெறுப்பூட்டும் வகையில் ஏதாவது எழுதலாம். நீங்களே அதற்கு பதிலும் அளிக்கலாம்...இது பரபரப்பாகும்..

அரசன்: அடப்பாவி, அரசியாரை பக்கத்து நாட்டு இளவரசனுடன் இணைத்து வயது வித்தியாசம் கூட பார்க்காமல் விமரிசித்து அனானிமஸ்ஸாக வந்து பின்னூட்டம் இட்ட துரோகி நீதானா?

சேனாபதி:(மெதுவாக)அதைத்தான் நீ ரீமுவ் பண்ணிட்டயே (சத்தமாக)இல்லை மன்னா...இல்லவே இல்லை..

அரசன்: பின்னூட்டம் அதிகமாக வரவேண்டும் என்பதற்காக காமெண்ட் மாட்ரேஷன் கூட வைக்காமல் இருப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அரசியாரை கேவலமாக விமரிசிக்கும் அற்பப்பதர்களை கடுமையாக எச்சரிக்கிறேன். மந்திரியாரே..உடனடியாக ஐ.பி அட்ரஸ்களை ஒற்றறிய ஒற்றர்களை அனுப்புங்கள்....

மந்திரி:மன்னா கோபப்படாதீர்கள்.ஒரு யோசனை.பரபரப்பான கருத்துக்களை சொல்லுவது தான் உங்கள் பிளாக் பிரபலமாக ஒரே வழி.

அரசன்:என்ன அது?

மந்திரி:அப்போது நாட்டில் பரபரப்பாக நடந்திருக்கும் ஏதாவது சம்பவத்தை பற்றி கருத்து கூறவேண்டும். அது யாரும் சொல்லாத கருத்தாக இருக்கவேண்டும்.இது ரொம்ப முக்கியம்.அபத்தமாக இருந்தாலும் தப்பில்லை....

அரசன்: புரியவில்லையே..சற்று விளக்கமாக சொல்லும்...

மந்திரி: உதாரணத்திற்கு நமது அரசவை நாட்டியக்காரி குபிஷாம்பிகை கடந்த வாரம் ஒரு ஓலைக்கு (பத்திரிக்கைதான்) பேட்டி கொடுக்கும்போது மன்னனின் அந்தப்புரத்தில் இளவரசி உள்பட எந்த பொண்ணும் யோக்கியம் இல்லை என்று கூறினாளே...

அரசன்:(வாளை உறுவியபடி)அப்படியா கூறினாள்?

மந்திரி:அரசே அவசரப்படாதீர்கள்..இங்கேதான் நீங்கள் தப்பு பண்ணுகிறீர்கள்...வழக்கம்போல சிந்தித்து லூசுத்தனமாக கருத்து கூறினால் யார் உங்கள் வலைப்பதி்வை படிப்பார்கள்?நீங்கள் முற்போக்குவாதி என்று காட்டவேண்டாமா?

அரசன்: என்ன மந்திரியாரே...மரியாதை குறைகிறது...ம்...
மந்திரி:மன்னியுங்கள் மன்னா...இப்படி யோசித்து பாருங்கள்...நீங்களோ போர், சுயம்வரம் என்று போய்விடுகிறீர்கள்....என்ன நடக்கிறது என்று யாருக்கு தெரியும்?

அரசன்:(மீசை துடிக்க) மந்திரி...

சேனாபதி:இங்கே தான் நீங்கள் புரட்சிகர கருத்துக்களை அள்ளிவிடவேண்டும்.அந்தப்புர பெண்கள் மட்டுமல்ல நாட்டில் எந்த பெண்ணுமே யோக்கியம் அல்ல என்று ஒரு போடு போடவேண்டும்...நீங்கள் இரவு நகர்வலம் குஜிலி தெரு வழியாகத்தானே போகிறீர்கள்?

அரசன்:யோவ் சேனாபதி..அதை எதுக்குய்யா இப்போ சபையில போட்டு உடைக்கிற?

சேனாபதி:இல்லை மன்னா நீங்கள் போகிற தெருவைத்தானே கேட்டேன்..யார் வீட்டுக்கு போகிறீர்கள் என்றா கேட்டேன்? அவ்வாறு போகும்போதுக்கூட முன்ஜாக்கிரதையாக போகும் நான் அந்தப்புரத்தை அழிய விட்டுவிடுவேனா என்று கேட்க வேண்டும்.... மேலும் சுயம்வரத்திற்கு முன்பே புங்க நாட்டு இளவரசனுடன் டேட்டிங் அனுப்பியவன் நான் என்று முழங்க வேண்டும்....

அரசன்:யோவ் கேட்கவே நாராசமா இருக்கேய்யா..

மந்திரி:சரி..இதுவும் ஒத்து வரலியா இதை பாருங்க.... தமிழ்மணம் காசி வலைப்பதிவுகளில் சில நெறிமுறைகளை கொண்டுவந்துள்ளாராம்....கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அதை விமர்சித்து.....

அரசன்:யோவ்..நீ முதலுக்கே மோசம் பண்ண பாக்கறே.....

மந்திரி:இதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு..நீங்க உடனடியாக முற்போக்குவாதி மற்றும சர்வ சமாதானவாதியாக மாறவேண்டும்.

அரசன்:அது என்ன?

மந்திரி:அது ஒண்ணுமில்லை மன்னா...நீங்கள் டெல்லி நவாபுக்கு கப்பம் கட்டுகிறீர்கள் அல்லவா?

அரசன்:ஆம்..அதற்கென்ன...

மந்திரி:அதை பெருமையாக சொல்லிக்கொள்ளவேண்டும்....டெல்லி நவாபும் நம்மளமாதிரி மனுசன்தான். இன்னிக்கு நாம அவனுக்கு அடிமைன்னாலும் நாளைக்கு நாமளும் அவன் பாஷையை கத்துக்கிட்டு அவனை மாதிரியே மாறிட்டா அவன் யாரை அடிமையா வைச்சிருப்பான் என்று எழுதி மக்களை குழப்பினீர்கள் என்றால்.....

அரசன்:(குழம்பி)என்ன சேனாபதி, தலையை சுத்துதே... அடுத்த வாரம் படை திரட்டி நவாபை தாக்கலாம் என்று கூறினீர்கள்..இப்பொது அவரை போற்றவேண்டும் என்று மந்திரியார் கூறுகிறாரே...

மந்திரி:அரசே..உங்களுக்கு முக்கியம் எது என்று பாருங்கள்...டெல்லி நவாபை போற்றவேண்டும். பாரசீக மொழியை கற்கவேண்டும்....

அரசன்:அப்புறம்...

மந்திரி: தமிழை பற்றி திட்டவேண்டும்.எப்படியும் வலைப்பதிகளில் தமிழ்,தமிழர் என்று முழங்கும் கும்பல் இருக்கும்.அவர்கள் உங்களை எதிர்ப்பார்கள்...ஆரம்பத்தில் உங்களுக்கு சற்று சிரமமாக இருக்கும்..ஆனால் அதே குழுவிற்கு எதிராக எப்படியும் ஒரு குழு இருக்கும்.அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.நட்சத்திர மற்றும் பின்னூட்ட சப்போர்ட்டும் கிடைக்கும்....

அரசன்:இது ரொம்ப சுவாரசியமா இருக்கே.....

மந்திரி: அல்லது தமிழ்,தமிழர் என்று புலம்பும் கும்பலில் சேருங்கள்.தமிள்மொலி, தமிளர் என்றெல்லாம் உங்களுக்கே உரிய பாணியில் தவறாக எழுதினாலும் அதனால் யாராவது உங்களை கிண்டல் செய்தாலும் தமிழ் பாதுகாப்பு குழு உங்களுக்கு சப்போர்ட் பண்ணும்...

அரசன்:பலே..அப்படியா....

மந்திரி:ஆமாம்..ஆனால் ஒன்று எந்த கும்பலில் சேர்ந்தாலும் உங்க கும்பலை சேர்ந்தவங்க என்ன சொன்னாங்க,சரியா சொன்னாங்களா தப்பா சொன்னாங்களா என்றெல்லாம் பார்க்காமல் சப்போர்ட் பண்ணணும். முதல்ல (+) குத்து குத்திட்டுத்தான் படிக்கவே ஆரம்பிக்கணும். எதிர்குழு என்றால் (-)
குத்து மற்றபடி படிக்கலேன்னாலும் பரவாயில்லை...யாருக்கும் தெரியாது....

அரசன்:சேச்சே அது நல்லாயிருக்காது....

மந்திரி: (டென்ஷனாகி) அப்புறம் என்னதான் எங்களை செய்ய சொல்றீங்க? பேசாம வலைப்பதிவை மூடிடுங்க...இல்லாட்டி பின்னூட்டங்கள் அதிகம் பெறுவது பற்றி டோண்டு எழுதிய பதிவையும் ஆழமான பதிவுகள் எழுதுவது எப்படி என்று முகமூடி எழுதிய பதிவையும் படிங்க.எங்க உயிரை எடுக்காதீங்க...


மந்திரியும் சேனாபதியும் கோபமாக அரசவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறார்கள்.

( திரை )

Friday, December 16, 2005

அது மற்றும் இது பற்றி பேசி எதை நோக்கி போகிறோம்?

நண்பர்களே...திரு.சோ பற்றி ஒரு தொடர் பதிவை போட்டாலும் போட்டேன். தமிழ்மணம் பற்றியெறிகிறது. நான் அப்படி ஒன்றும் திரு.சோ பற்றி புதிதாக எதுவும் கூறிவிடவில்லை.ஏற்கனவே பலர் பல்வேறு சர்தர்ப்பங்களில் அவர் மேல் கூறியுள்ள அவர் பதில் சொல்லாத சொல்ல தவிர்க்கும் விஷயங்கள் தான் அதில் பேசப்பட்டுள்ளன.

நான் தமிழ்மணத்திற்கு மிக்ப்புதியவன்.எனக்கு இங்கு யாரையும் தெரியாது. தனிப்பட்ட மின்னஞ்சல் கூட ஓரிருவருக்கு ஒற்றை வரியில் தான் அனுப்பியுள்ளேன்.யார் எந்த சாதி என்பதெல்லாம் நான் யோசித்ததில்லை.(ஆனால் என்னுடைய சில பதிவுகளில் ஒரு அனானிமஸ் இங்கே யார் யார் எந்த சாதி என்று பிட்டுபிட்டு வைத்துள்ளார். ஆடிப்போனேன் நான்.எப்படி...எப்படிய்யா இப்படியெல்லாம் முடியுது...)நான் இந்த மூன்று மாதங்களில் ஏறககுறைய முப்பது பதிவுகள் போட்டுள்ளேன்.அதில் சிறந்த பதிவுகள் என்று நான் கருதிய சில பதிவுகளுக்கு நான் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.(உதாரணம்:கம்யூனிஸ்ட் கோபால்). ஆனால் "சோ" வை பற்றிய பதிவுகளுக்கு உள்ள வரவேற்பு திக்குமுக்காட வைக்கிறது. முதன்முதலாக பின்னூட்ட எண்ணிக்கை ஐம்பதை தாண்டியுள்ளது. இது தற்செயலானது அல்ல.ஐம்பதாவது பின்னூட்டத்தை கொடுத்த அருட்பெருட்கோவிற்கு நன்றி..
ஆனால் இங்கு வருத்தப்படவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் இதில் ஒரு பி்ன்னூட்டத்தில் கூட அவர்மீதான என் விமர்சனத்திற்கு பதில் இல்லை.திரு.டோண்டு கூட நான் அவரின் பல பதிவுகளில் இருந்து நான் டோண்டுவை பற்றி INFER செய்து எழுதிய ஒரு கருத்தைத்தான் மறுத்தாரே ஒழிய 'சோ' பற்றிய கருத்துக்களுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.
ஆனால் பலருக்கும் இங்கே பிராமணர்களுக்கு எதிராக ஒரு போர் நடப்பது போல் ஒரு எண்ணம்.இது எப்படி உருவானது என்று எனக்கு புரியவில்லை.நானும் என் பதிவுகளை திரும்ப திரும்ப படித்துப்பார்த்தேன். அப்படி எதுவும் நான் எழுதியதாக தெரியவில்லை. நான் எழுதிய சில ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு கூட எந்த பதிலும் இல்லை.
என்னுடைய பதிவின் பின்னூட்டங்களிலும் அருண் வைத்தியநாதன் பின்னூட்டங்களிலும் சிலர் அவ்வாறு எழுதி இருக்கலாம்.பேசி இருக்கலாம். அருண் வருத்தப்படுவதில் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.ஆனால் திரு.சோ வை பற்றி பேசும்போது சோவே ஏற்று ஒழுகும் இந்த ஐடென்டிடி பற்றி பேசாமல் அவரை விமர்சித்துவிட முடியாது. இதுதான் நடந்தது.

மற்றபடி பொதுவாக இழிபிறவிகளும் நடமாடும் இந்த தமிழ்மணத்தில் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாத பலர் அனானிமஸ்ஸாக திரிகின்றனர்.அவர்களை புறக்கணிப்பதே நாம் செய்யக்கூடிய வேலை.
பொதுவாக அமைதியாக எல்லாரையும் "அன்பின்" "அன்பின்" என்றே போட்டு எழுதும் திரு.மூர்த்தி நேற்று பொங்கி எழும்படி நிலைமை ஏன் உருவானது?.நாம் எல்லாரும் சிந்திக்கவேண்டும்.ராகவன் மிகவும் வருத்தப்பட்டு எழுதி இருந்தார்.மூர்த்தியே வருத்தப்பட்டார் என்றுதான் நினைக்கிறேன்.ஏன் இது நடந்தது?

யோசித்து பார்க்கும்போது பிரகாஷ் என்பவர் ஒரு பதிவில் கூறியிருந்தபடி ஒரு டெம்பிளேட் மனோபாவம் நம்மிடையே இருக்கிறது.ஒரு தனிப்பட்ட நபரை பற்றியோ ஒரு அமைப்பை பற்றியோ விமர்சிக்கும்போது அந்த நபரின் நிறைகுறைகளை அல்லது கருத்துக்களை மட்டும் விமர்சிப்பதற்கு பதிலாக நம் சாதியையும் இனத்தையும் அதனுடன் சேர்த்து குழப்பிக்கொள்கிறோம்.
சோ பற்றி பேசினாரா..பிராமணரை தாக்கிவிட்டார்.அவரை போட்டு தாக்கு....
கருணாநதியை பற்றி பேசிவிட்டாரா...தமிழ் சமுதாயத்தையே தாக்கிவிட்டார்..தமிழ் துரோகி...அவனை பேசவிடாதே....
இஸ்லாமிய தீவிரவாதத்தை மற்றும் இஸ்ரேலிய தீவிரவாதம் பற்றி பேசும்போதும் இந்த மனோபாவம் நம்மிடையே தோன்றுவதை பல சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம். தவறை யார் செய்தாலும் அது தவறுதான் என்று சுட்டிக்காட்டும் பழக்கம் ஏன் நம்மிடையே இல்லை...ஒரு தனிப்பட்டவரின் மீது அல்லது ஒரு தனிப்பட்ட அமைப்பின் மீது (நான் இதில் மதத்தையும் சேர்த்துக்கொள்வேன்)சந்தேகமற்ற அல்லது விமர்சனமற்ற பற்று, சிந்தனை வளர்ச்சியை தடுக்கும் என்பது தமிழ்மண நண்பர்களுக்கு நான் கூறி தெரியவேண்டியது இல்லை..

உஷா கூறினார்..குருபீடங்களை மனதில் வைத்து ஆராதித்தால் பிரச்சனை இல்லை என்று.சரியான கருத்து.

குருபீடங்களை எழுப்ப ஆசைப்பட்டால் ரவுண்ட் த கிளாக் காவல் இருக்க முடியுமா?.

சிலர் குருவை சுண்டிப்பார்ப்பார்கள்.(நான் செய்ததுமாதிரி).

சிலர் ரசனை அலாதியானது.பீடத்தை மட்டும் சுரண்டி பார்ப்பார்கள்.(நைட் வந்து (-) குத்து போடுவார்கள்).

காக்கா வந்து தலையில் "கக்கா" போகும்.(அனானிகள் சிலரின் பின்னூட்டங்கள்).சிலைகளின் தலையில் காக்கா இடும் "கக்கா" வை என்ன பண்ண முடியும்.காக்காக்களை சுட்டு வீழ்த்த முடியுமா? சிலையை கழுவி விடுவது தான் வழி.(என்னா உதாரணம்..கலக்கறே சந்துரு)

இதற்கெல்லாம் வருத்தப்பட்டால் குருவை பீடத்தில் ஏற்றவே கூடாது. நான் குருவை பீடத்தில் ஏற்றி விடிய விடிய காவல் இருப்பேன் என்றால் இருங்கள்.இல்லாவிட்டால் இன்னொரு வழி உள்ளது.குருவை சபையில் ஏற்றுங்கள். பேசுவோம். முடிவில் குருவை பீடத்தில் ஏற்றுவீர்களோ முச்சந்தியில் எறிவீர்களோ அது உங்கள் இஷ்டம்.இது எல்லா குருபீடங்களுக்கும் பொருந்தும்.

ஒரு அனானிமஸ் நான் கூறிய சாதிப்பற்று விஷயம் பா.ம.க விற்கும் பொருந்துமா என்றார்.இதில் என்ன சந்தேகம்..கண்டிப்பாக பொருந்தும் என்றே கூறினேன்.

பின்லேடனை எதிர்க்க பி.ஜே.பி யில் உறுப்பினர் கார்டு வைத்திருக்க வேண்டுமா? ரஜினியை கண்டிக்க பா.ம.க கட்சியை சேர்ந்தவருக்கு மட்டும்தான் உரிமை உள்ளதா என்ன? இதுவெல்லாம் நாமே போட்டுக்கொள்ளும் மாய வேலி.

இப்படி சகட்டுமேனிக்கு எல்லாரையும் நாம் எப்படி எதிர்க்கமுடியும்? யாரையாவது சப்போர்ட் செய்தால்தானே நம் சப்போர்ட்டுக்கு யாராவது வருவார்கள் என்று மென்டாலிட்டி உள்ளவர்கள் அடுத்தவரை விமர்சனம் செய்யும் தார்மீக உரிமையை இழக்கிறார்கள் என்றே கூறுவேன்.
மனிதன் முரண்பாடுகளால் பின்னப்பட்டவன். எல்லோருக்கும் நல்ல பிள்ளை கலியுகத்தில் சாத்தியம் இல்லை.பல்வேறு சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட சுயநலத்தினாலும்,சில சமயம் நேர்மையான காரணங்களுக்காகவும் சமரசம் செய்துக்கொள்ளும் பிரபலங்களை கண்மூடித்தனமாக DEFEND செய்வதை பற்றி நாம் மறுபரிசீலனை செய்யவேண்டுகிறேன்.

( இந்த பதிவிற்கு பிறகு நடுநிலைவாதிகளின் நாற்பது குணாதிசயங்கள்,ஆடு ஓநாய், எலி,எள், எலிபிளக்கை என்ற தலைப்புகளில் பதிவுகள் வந்தால் நான் பொறுப்பல்ல.)

Tuesday, December 13, 2005

சொக்க தங்கம் சோ பாகம் -3(இறுதி)

மற்ற இரண்டு பதிவுகளையும் இங்கே படிங்க....

பதிவு -1

பதிவு -2


அவரின் தி.மு.க எதிர்ப்பு வெறிக்கு ஒரு உதாரணம். நேற்று சில பி.ஜே.பி எம்பிக்கள் உட்பட பல எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில கேள்வி கேட்க லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டனர். இதை கிண்டலாக விமர்சிக்க வேண்டுமென்றால் நீங்களும நானும் நேரடியாக செய்வோம். இவர் என்ன பண்ணுவார் தெரியுமா?

கலைஞரும் அன்பழகனும் அல்லது கலைஞரும் துரைமுருகனும் பேசிக்கொள்வது மாதிரி ஒரு படத்தை போட்டு..."இந்த பி.ஜே.பி எம்.பிக்கள் நம்ம கிட்டே வந்திருந்தா எப்படி மாட்டிக்காம விஞ்ஞான ரீதியாக லஞ்ச ஊழல் செய்யறதுன்னு சொல்லி கொடுத்திருப்போம்" என்று கலைஞர் சொல்வதுபோல கார்ட்டூன் போடுவார்.

இப்ப என்ன ஆச்சு? ஒரே கல்லுல பல மாங்காய். லஞ்சத்தை எதிர்த்துவிட்டாராம்.(நேர்மையானவரில்லையா). பிஜே.பியை தாக்கிட்டாராம்.(அப்படி நேர்மையா இருக்கும்போது யாரை வேணாலும் எதிர்ப்பாராம்)அப்படியே தனக்கும் மற்ற பலருக்கும் தடவிக்கொடுத்த(சரியான வார்த்தையான்னு தெரியலை) மாதிரியும் ஆச்சு இல்லையா...

சரி.எல்லாத்தையும் விடுங்க ...செத்துப்போன சங்கரராமனை பிளாக்மெயிலர் என்றார் இவர். பிளாக்மெயில் செய்து சங்கரராமன் சேர்த்த கோடி ரூபாய் சொத்து எங்கே என்று சொல்வாரா?

இனி திரு.சோ ராமசாமி யாரும் புகழ்ந்து எழுதவோ பேசவோ வருவதற்கு முன்பு இதை மற்றும் இதன் பின்னூட்டங்கள் ஆகியவற்றை படித்துவிட்டு பிறகு எழுதலாமா என்ற மனசாட்சியை தொட்டு கேட்டுவிட்டு அப்படியே எழுதினாலும் இதற்கெல்லாம் இந்த குற்றசாட்டுக்கெல்லாம் பதில் சொல்ல முயற்சி செய்யலாமே...(இது சிந்தனை தளத்தை உயர்த்திக்கொள்ளவும் பயன்படும்)


இதுப்போல பல பதிவுகள் உள்ளன. டோண்டு அண்ணாவும் போட்டுள்ளார்.அதையும் படிக்கலாம். திரு.டோண்டு அவர்களின் கருத்துக்களை பற்றியெல்லாம நாம் எதுவும் சொல்வதற்கில்லை.அவர் தெளிவாகவே இருக்கிறார். அவர் கூறுவது என்னவென்றால் சோ பிராமணர்களை ஆதரிக்கிறார்.ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன் என்பதுதான்.மூத்தவர் என்ற வகையில் அவர் மீது நம் அனைவருக்கும் மரியாதை உண்டு. நானும் சிறுவயதி்ல் துக்ளக் பத்திரிக்கையை ரெகுலராக படித்து வந்தவன் தான். ஆனால் என் தந்தை அடிக்கடி சொல்வார்.உனக்கு எப்படா சொந்த புத்தி வரும் என்று. சொந்த புத்தி வந்தது. துக்ளக் ரெகுலராக படிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.


திரு.சோ வை பற்றி விமர்சிப்பதற்கும் பிராமணர்களை விமர்சிப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பிராமணர் , பிராமணீயம் இந்த இரண்டை பற்றியும் கருணாநிதியும் சோவும் நிறைய விவாதித்திருக்கிறார்கள். "சோ" த்தனம் என்றால் என்ன என்ற குழப்பத்தில் இருப்பவர்கள் இதுப்பற்றி சோ கூறிய கருத்துக்களை ஊன்றி படிக்கவேண்டும்.

மேலும் கைபர் , போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்ற கருத்தே பொய் என்று உரத்து கூறும் சிலர் மனதிற்குள் உண்மையிலேயே தாங்கள் அப்படித்தான் வந்ததாக நினைத்துக்கொண்டு இருப்பது துரதிஷ்டவசமானது. யார் தமிழர்கள் என்று BAPTISE செய்யும் தகுதி இங்கு யாருக்கும் கிடையாது. அப்படி BAPTISE செய்யும் தகுதி தனக்கு இருப்பதாக கூறுபவர்கள் முட்டாள்கள் மட்டுமல்ல.வடிகட்டின அயோக்கியர்களும் கூட.இதை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.தம்மை தமிழராக உணர யாருக்கும் உரிமை உண்டு. யாரோ லைசென்ஸ் கொடுக்கவேண்டும் என்று யாரும் நினைக்க தேவையில்லை.

தமிழ் சமுதாயத்திற்கு பிராமண சமூகத்தின் பங்கு கணிசமானது. அப்படி இருக்கும்போது யாரையோ எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு தமிழ் அடையாளத்தை மறுத்துக்கொண்டு அதை மறைப்பதற்காகவே "தேசியம்" பேசுவது தவறு என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

ஆகவே நண்பர்களே, திரு.சோ அவர்கள் நிஜமாகவே போற்றுதலுக்குரிய பல்கலை வித்தகர் என்பது உங்களுக்கு எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.நினைவில் நின்றவைகளை மட்டும் எழுதியுள்ளேன். இன்னும் எழுதலாம் நிறைய அவரைப்பற்றி.தேவைபட்டால் எழுதுவேன்.

பொறுமையாக படித்ததற்கு நன்றி.

முற்றும்

சொக்க தங்கம் "சோ" வை உரசிப்பார்ப்போம் -பாகம் -2

முதல் பாகத்தை பார்க்க

அப்துல்கலாம் பற்றி எல்லோரும் பேசினார்களாம்.உடனே இவர் தைரியமாக கிண்டல் செய்தாராம்.ஆகா என்ன அரிய தொண்டு. அப்துல்கலாம் பற்றி மக்கள் நிறைய பேசினால் என்னய்யா தப்பு? ஒரு நடிகர், அவரின் பாஸிடிவ் பங்களிப்பு என்னன்னு யாருக்கும் தெரியாது. நெகடிவ் பங்களிப்பு என்ன என்று மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும். அவரின் பிறந்தநாளுக்கு தலைவா தலைவா என்று கூச்சல்.கும்மாளம். இளைஞர்கள் முன்னேற வேண்டும் என்று கூறும் அப்துல்கலாம் பத்தி பேசினால் நக்கல் பண்ணுவாராம். என்னய்யா தமாசு இது? இதே அப்துல்கலாமிற்கு பதில் ஆர்.வெங்கட்ராமன் என்றால் என்ன சொல்லி இருப்பார்?

இன்றைய அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு கிண்டல், கேலி எல்லாம் யார் வேணாலும் பண்ணலாம். உலகம் கெட்டு போச்சு என்று ஈஸி சேர்ல உட்கார்ந்துகிட்டு சொல்றது சுலபம். பாஸிடிவ்வாக நீங்க என்ன பண்ணீங்க என்று கேட்டால் பதில் இல்லை. வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தினார் என்ற ஒரு காரணத்தினாலேயே அவரை மனதார வெறுத்தவர் சோ.

புத்திகூர்மை உண்டு . இல்லையென்று மறுக்கமுடியாது. உள்ள சுத்தியோடு கூடிய நேர்மையான புத்திக்கூர்மையை தலைவணங்கலாம்.ஆனால்
இவர் ? இதையும் படிக்கவும். இன்றைய இந்தியாவை பிடித்து ஆட்டுகிற வினையாக இந்த மாதிரி புத்திசாலித்தனங்களை குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.


பெண்களை பற்றி இவரின் கருத்துக்களை வைத்து ஒரு புத்தகமே போடலாம்.எப்போதோ அவர் மனதில் உருவாக்கி வைத்துள்ள கருத்துக்களை இன்றும் பிடிவாதமாக மாற்றிக்கொள்ளாமல் வைத்துக்கொண்டு அதை நியாயப்படுத்துவது , அதையும் சிலர் புகழுவது( ironically பெண்களுக்கு நிறைய உரிமை கொடுக்கவேண்டும் என்று சொல்பவர்களும் இவர்கள்தான்) காலக்கொடுமைதான்.

தீவிரவாதிகளை அவர் கண்டிப்பதை யாரும் தவறு சொல்லவில்லை. ஆனால் யார் கண்டிக்கப்படவேண்டிய தீவிரவாதி என்ற அவர் கருத்தைத்தான் எதிர்க்கவேண்டி இருக்கிறது. இவரின் கருத்துப்படி சுபாஷ் சந்திர போஸ் கூட தண்டிக்கப்படவேண்டிய தீவிரவாதிதான். விடுதலைப்புலிகளை இவர் கண்மூடித்தனமாக எதிர்க்க ஒரே காரணம் தமிழ் என்ற வார்த்தை அவர்கள் பெயரில் இருப்பது தான் என்று நினைக்க வேண்டி உள்ளது.( LIBERATION TIGERS OF TAMIL EELAM).

சுனாமி வந்தப்போது இவர் கூறியது புகழ்பெற்றது. ஏன் சுனாமி வருகிறது என்று யாரும் கூற இயலாதாம். பூகம்பம் வந்ததால் சுனாமி வந்தது என்றால் ஏன் பூகம்பம் வந்தது என்கிறார். பூமிக்கு அடியில் தகடுகள் நகர்ந்ததால் பூகம்பம் வந்தது என்றால் ஏன் பூமிக்கு அடியில் தகடுகள் நகர்ந்தது என்று கேட்கிறார்.இதற்கெல்லாம பதில் யாராலும் கூறமுடியாது என்றெல்லாம் கூறி செல்கிறார். அதாவது அறிவியலின் எல்லையை இவர் தொட்டு பார்க்கிறாராம். அப்போது யாரையோ பிடித்து உள்ளே போட்டதினால் தான் பூகம்பம் வந்தது என்றால் ஒத்துக்கொள்வாரா?


தொடரும்

Monday, December 12, 2005

சொக்க தங்கமா "சோ" ராமசாமி-- பாகம் 1

ஒரு சமுதாயத்தின் ஒலிபெருக்கியாக இருப்பது தான் அவரின் ஒரே சாதனை. அதை சொன்னால் அய்யோ அம்மா என்று ஒப்பாரி ஏன்? இதையெல்லாம் சொல்வதற்கு ஒருவர் பிராமணர்களை எதிர்ப்பவராக தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை.தலையில் இருக்கும் அரைக்கிலோ சமாச்சாரத்தை உபயோகப்படுத்தினால் போதும்.

மூப்பனாருடன் தி.மு.க கூட்டணிக்கு பேச்சுவார்த்தைக்கு ஏன் சென்றார்?..
96 ல் ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு யாருக்கும் காரணம் தேவையில்லை.அ.தி.மு.க ஆடிய ஆட்டம் அப்படி. அ.தி.மு.க வின் தோல்வி நிச்சயமாகிவிட்ட ஒன்று. ரஜினிகாந்த கூட மக்கள் எல்லாம் நினைத்த ஒரு விஷயத்தை சொல்லப்போய் தான் பிரபலமானாரே தவிர ரஜினி சொல்லித்தான் ஜெயலலிதா தோற்றார் என்று கூறுபவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள் என்றே கூறலாம்.ஆகவே தான் சோவும் வேறு வழியின்றி மூப்பனாரையும் தி.மு.க வையும் ஆதரிக்க நேர்ந்தது. பாவம் சோ...அவரின் ஒரே லட்சியம் தி.மு.க வை ஒழிப்பது தான். அது அவர் வாழ்நாள் முடியும் வரை நடக்கபோவதில்லை. அதற்காகத்தான் ரஜினியை எல்லாம் மகாபுருஷன் என்றெல்லாம் பேசி திரிந்தவர் தான் இந்த சோ.


.அவருக்கு வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் பாண்டித்யம் உண்டு என்று புளகாங்கிதம் அடைகிறீர்கள். எத்தனையோ புத்தகங்கள் உள்ளன. அதை பார்த்து எழுதுவது ஒன்றும் சாதனை இல்லை. இன்றைய வாழ்க்கைமுறைக்கு ஒத்துவராத விஷயங்களை வாந்தி எடுப்பதில் என்ன ஐயா சாதனை உள்ளது?அவர் ஒரு உள்நோக்கத்தோடு (சில்லறைத்தனம்) தான் இதுப்போன்று எழுதி வருகிறார். துக்ளக்கில் சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய ஒரு விஷயம் ரொம்ப பிரபலம். அவரவர் அவரவர் கடமையை மட்டும் செய்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்றார் அவர்.இது சோவின் பார்வையை மீறி துக்ளக்கில் வெளிவந்து விட்டது என்று எந்த முட்டாளும் நினைக்கமாட்டான்.( அவரவர் கடமை என்பது வர்ணாஸ்ரமத்தை பற்றிய கேள்விக்கான பதில்தான்.)

மூடநம்பிக்கைகளை பரப்பி திரிவதும் அவர் பத்திரிக்கை தான். சோதிடம், சாமியார்கள் பற்றி அவர் பத்திரிக்கைகளில் வருவதில்லையா? ஒருவன் இதையெல்லாம் நம்ப தொடங்கி விட்டால் பிறகு இந்த தத்துவங்களின்படி பிராமணர்களை கும்பிடவேண்டும். இதுவெல்லாம் நுணுக்கமான விஷயங்கள். நுனிப்புல் மேய்பவர்களுக்கு புரிவது கடினம்.

தமிழ் பற்று உள்ளவர்களை அவர் எதிர்க்கிறார் என்பதில் என்ன ஐயா சந்தோஷம்?
சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனை பண்ணினால் தான் கடவுளுக்கு புரியும். தமிழில் செய்தால் கடவுளுக்கு புரியாது என்ற அரிய கருத்தை வாந்தி எடுத்தவர் தான் அவர். பிற்போக்கு என்பது இதுதான் ஐயா.......

தெரியாமல் தான் கேட்கிறோம்.தமிழ்பற்று என்றால் ஏனய்யா ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கிண்டலாகவே தெரிகிறது. வ.வே.சு அப்படி நினைக்கவில்லை.பாரதியார் அப்படி நினைக்கவில்லை.சுந்தர ராமசாமி அப்படி நினைக்கவில்லை. மத்த சில்வண்டுகளுக்கு ஏன் இந்த எண்ணம்.(இங்கு மொழிப்பற்று பத்தி மட்டும்தான் பேசப்படுகிறது. தாய்மொழியை அழித்துவிட்டு அடுத்த மொழி வரும்போது போராட்டம் தேவையாகத்தான் இருக்கிறது.)

பி.ஜே.பியை ஆதரிப்பதற்கு எல்லாம் காரணம் நாம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. விமரிசித்தால் கூட ஒரு பரிவோடு தான் அவர்களை விமரிசிப்பார்.அய்யோ இப்படி பண்ணீ்ட்டீங்களே? ஏன் ராசா என்பது போலத்தான் அவர் விமரிசனம் இருக்கும்.தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களை எதிர்ப்பதையே முழு மூச்சாய் கொண்டு வாழ்கிறார். அவர் எழுத வேண்டியது. அவருக்கு வேண்டியவர்கள் மட்டும் படித்து சிரித்துக்கொள்ளவேண்டியது. என்ன காமெடி அது?(தொடரும்)

Saturday, December 10, 2005

சிறுமை கண்டு பொங்குவோம்

சிறுமை கண்டு பொங்குவோம்

ஃபிளைட் லேண்ட் ஆக அனுமதி கிடைக்கவில்லை என்று முகமெல்லாம் வெளுத்த குட்டை பாவாடை ஏர்ஹோஸ்டஸ் அறிவித்தாள். அவள் அருகில் வந்த போதெல்லாம் ஒரு சுகந்த மணம் வீசியது. சென்ட்டை தடவுவாளா அல்லது சென்ட்டில் குளிப்பாளா? ஒரு நிமிடம் என் மனது அவள் குளியலறையை தொட்டு மீண்டது.விமானம் ஒரு மணி நேரமாக சுற்றி சுற்றி வந்துக்கொண்டிருக்கிறது என்று நான் நினைத்தது சரியாக போய்விட்டது. யாராவது வீணாய் போன மந்திரி வருவதற்காக ஏதாவது ஃபிளைட் விமான நிலையத்தில் டேக் ஆஃப் ஆகாமல் காத்துக்கொண்டிருக்கும். அதுதான் லேட் என்று தானாக ஒரு காரணம் கற்பித்துக்கொண்டு 'பொறுக்கி பசங்க' என்று திட்டினேன். மனதில் சிறு ஆறுதல் ஏற்பட்டது.

சட்டென்று விமானத்தின் உயரம் குறைந்து குறைந்து கீழே உள்ள கான்கீரிட் கட்டிடங்கள் குப்பைகள் போல் தெரிய ஆரம்பித்தன.முழுதாக இரண்டு வருடங்களுக்கு பிறகு சென்னை மண்ணை மிதிக்க போகிறோம் என்ற எண்ணமே மனதில் தென்றலாய் மிதந்தது.

அண்ணா பல்கலையில் பொறியியல் படித்த கையோடு ஒரு பன்னாட்டு மெனபொருள் நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்து பிறகு அந்த நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா சென்ற நான் இரண்டு வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக இந்தியா திரும்புகிறேன். விமானத்தில் இருந்து இறங்கி லக்கேஜ் ரீசீவ் செய்ய சென்றால் அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. என்னுடைய லக்கேஜ் மட்டும் மும்பயிலேயே தங்கி விட்டதாக வருத்தத்தோடு சொன்னார்கள். இந்த மாதிரியான இம்சைகள் இங்கு இருக்கும் என்று அறிந்தவன்தான் என்றாலும் ஏற்கனவே பிளைட் லேட் ஆனதில் அப்செட் ஆகியிருந்த நான் மேலும் அப்செட் ஆனேன்.அடுத்த விமானத்திலேயே லக்கேஜ் வந்துக்கொண்டு இருப்பதாகவும் சிரமம் பார்க்காமல் சிறிது காத்திருக்க வேண்டினார்கள்.

தீடிரென்று செல் ஒலித்தது. அம்மாதான்.விமானம் லேட் ஆன விஷயத்தை சொல்லி சீக்கிரம் வந்துவிடுவதாக கூறினேன். நான் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தில் ஒரு புதுவீடு வாங்கியிருந்தோம்.அந்த வீட்டிற்கு வரும் அட்ரஸ், லேண்ட்மார்க் ஆகியவற்றை அம்மா குழந்தைக்கு விளக்குவது போல் விளக்கினாள்.நான் இன்னும் குழந்தை என்றே நினைத்துக்கொண்டிருக்கிறாள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி வைத்தேன்.

இந்தியா எத்தனை வருடம் ஆனாலும் முன்னேறாது என்று என்னுடன் வேலை பார்க்கும் மற்ற நண்பர்கள் கிண்டல் அடிக்கும்போதெல்லாம் நான் அவர்களுடன் விவாதம் செய்வேன்.இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தன் கடமையை உணர்ந்து கேள்வி கேட்டு வாழ பழகிக்கொண்டார்கள் என்றால் இந்தியா வல்லரசு ஆகும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை என்பேன்.என்னுடைய எத்தனையோ நண்பர்கள் இந்த கணிப்பொறி துறையில் அதிர்ஷ்டத்தினாலோ அல்லது சொந்தக்காரர்களின் பரிந்துரையிலோ வேலையை வாங்கிக்கொண்டு அடுத்தவன் முதுகில் சவாரி செய்து வாழும்போது நான் கேம்பஸ் இண்டர்வ்யூவில் செலக்ட் ஆனவன். என்னுடைய பிராஜக்ட்டில் என்னை விட ஊன்றி வேலை செய்பவர் யாரும் இல்லை என்று எங்கள் துணை சேர்மனாலேயே பாராட்டப்பட்டவன்.என்னை நம்பியே என் பிராஜக்ட்டில் சிலர் வாழ்ந்துக்கொண்டு இருப்பதும் எனக்கு தெரிந்துதான் இருந்தது. கல்லூரி காலத்திலேயே நான் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி ஆகியவற்றில் கலக்குவேன்.மகாத்மா காந்தியும் தேச விடுதலையும் என்ற என் கட்டுரை ஒன்று தேசிய அளவிளான ஒரு கட்டுரை போட்டியில் பரிசு பெற்றுள்ளது.இவ்வளவு பெருமை உள்ள நான் இதுப்போன்ற ஒரு சூழ்நிலையில் என்ன செய்யவேண்டும்? இந்த ஏர்லைன்ஸ் கம்பெனியை உண்டு இல்லை என்று செய்துவிடவேண்டாமா?

ஆவேசத்துடன் எழுந்தேன். கவுண்டரில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் ஆங்கிலத்தில் ஆரம்பித்தேன்.

"சோ,ஈஸ் திஸ் த சர்விஸ் யூ ஆர் கிவ்விங் டூ எலைட் கஸ்டமர்ஸ்?"

"வெரி ஸாரி ஸார்" என்ற அந்த பெண் எந்த உணர்ச்சியும் இல்லாமல் டேப்பில் பதிவு செய்தது போன்ற ஒரு குரலில் தானும் வருந்துவதாக தெரிவித்தாள்.உங்கள் வருத்தம் என் கஷ்டத்தை போக்காது என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே போன் அடித்தது.எடுத்து பேசியவள் என் லக்கேஜ் வந்துவிட்டதாக அறிவித்தாள்.

********************************************

சரியான மழை. நசநசவென்று இருந்தது சிட்டி முழுக்க. ஒரு சிறிய மழை அடித்தாலும் அத்தனை சாலைகளும் பல்லை இளிக்கின்றன. இந்த நாட்டை எத்தனை காந்தி பிறந்தாலும் திருத்த முடியாது. யாராவது தட்டி கேட்டால்தானே அரசாங்கத்தை. எது நடந்தாலும் கண்டுக்காமல் அவரவர்க்கு தேவையானதை பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். என்னுடைய லட்சியமே ஒரு அரசியல்வாதி ஆவதுதான். இவர்கள் ஆடுகிற ஆட்டத்துக்கெல்லாம் வைச்சுக்கிறேன் அப்ப என்று நினைத்துக்கொண்டேன்.

ஆட்டோ போய்க்கொண்டிருந்தது.நான் மெதுவாக ஆட்டோ டிரைவரிடம் பேச்சு குடுத்தேன்.

"இப்ப மெட்ராஸில அய்யா கை ஓங்கி இருக்கா இல்லை அம்மா கை ஓங்கி இருக்கா"

"நமக்கு எதுக்கு சார் அரசியலெல்லாம்" என்றான்

பொதுவாக இதுப்போன்ற கேள்விக்களுக்கெல்லாம் சுவாரசியமாக பதில் சொல்லும் ஆட்டோக்காரர்களுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை.உம்மென்று வந்தான்.நான் இறங்க வேண்டிய இடம் வந்தாகிவிட்டது.ஆட்டோ நின்றது.

"நூறு ரூபாய் கொடுங்க சார்",என்றான்

"என்னங்க இது பகல் கொள்ளையா இருக்கு, நாலு கிலோமீட்டர் தூரத்திற்கு நூறு ரூபாயா? மீட்டர் சார்ஜ் எவ்ளோ?"

"தோடா, நீ என்ன ஊருக்கு புச்சா?, இங்க மீட்டரெல்லாம் இல்லை. மழை வுழுவுது பாத்தையில்ல"

கடந்து சென்ற சிலர் திரும்பி பார்த்துவிட்டு சென்றனர். எனக்கு அவமானமாக இருந்தது.ஆனால் இந்த அச்சுறுத்தலுக்கு பணிந்து இவனுக்கு நூறு ரூபாய் கொடுக்கபோவதில்லை என்று முடிவு செய்துக்கொண்டேன்.

"கிலோமீட்டருக்கு பத்து ரூபாய்னு பாத்தாகூட நாப்பது ரூபாய்தானே",என்றேன்.

ஆட்டோடிரைவர் இதுப்போன்ற பல உரையாடல்களில் அனுபவப்பட்டவன்.நான் கொடுத்த ஐம்பது ரூபாய் நோட்டையும் வாங்காமல் நின்றுக்கொண்டிருந்தான்.

"உங்களையெல்லாம் யாரும் தட்டி கேக்காததால் தான் நீங்கள்ளால் ஆடறீங்க"

"யோவ், என்ன ஆடற கீடற என்றெல்லாம் பேசினா மரியாதை காணாம போயிடும்"

பேச்சு வார்த்தை முற்றியது."சரி, நீ சரிப்பட மாட்டே, எங்க மாமா கூட பேசு", என்று கூறிய நான் என் மொபைலை எடுத்தேன்.அவர் E-3 போலீஸ் ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டராக இருக்கிறார் என்ற நான் கற்பனையாக போட்ட குண்டு வேலை செய்தது.

"சரியான சாவு கிராக்கிய்யா நீ, கொடுக்கறதை கொடு"

முப்பது ரூபாய் கொடுத்தேன். அதை சற்றும் எதிர்பார்க்காத ஆட்டோக்காரன் என்ன சார் என்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்தான்.

"கொஞ்சம் போட்டுகுடு சார்"

"ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்ளோ? ஐம்பது ரூபாயா? எத்தனை கிலோமீட்டர் தரும் உன் வண்டி?. இருபத்திஐந்து கிலோமீட்டர்னே வச்சுக்கலாம்.நாலு கிலோமீட்டர் வந்திருக்கோம்.அப்ப ஏழு அல்லது எட்டு ரூபா தான் உனக்கு அதிகபட்சம்.ரிட்டர்ன் ஒரு எட்டு ரூபா.மொத்தம் பதினைந்து ரூபாய்.அப்படி பார்த்தாலும் உனக்கு நான் ரெண்டு மடங்கு கொடுத்திருக்கேன்."

"சார் , நான் பிள்ளைக்குட்டிக்காரன்"

"எனக்கும் கல்யாணம் ஆகியிருந்தா இன்னேரம் நானும் பிள்ளைக்குட்டிக்காரன்தாம்பா, உழைச்சு பிழைக்க கத்துக்கோ, எல்லோரும் நேர்மையா நடந்தா நம்ம நாடு எங்கேயோ போயிரும், உனக்கு உண்டான காசை தவிர அடுத்தவன் காசை ஒரு பைசா கேட்க உனக்கு உரிமையில்லை, எல்லோருக்கும் தான் கஷ்டம் வாழ்க்கையில, என்னமோ நீ மட்டும்தான் கஷ்டபடுற மாதிரி பேசற?"

"என்ன துரை, ஏழைக்கிட்டே சட்டம் பேசறே", ஆட்டோக்காரன் குரல் தாழ்ந்துவந்தது.

"ஆமாய்யா, சட்டம்தான்.சட்டம்கிறகு எல்லோருக்கும் பொதுவானது.நம்ம சுயநலத்திற்காக சட்டத்தை வளைக்ககூடாது.இதே மாதிரி எல்லோரும் அவங்கவங்க சுயநலத்திற்காக சட்டத்தை மீறினா என்ன ஆகும்? அப்புறம் சட்டம் போடறதுக்கு என்ன அர்த்தம்?" எனக்கு மூச்சு வாங்கியது.

என்னை வித்தியாசமாக பார்த்த ஆட்டோக்காரன் எதுவும் சொல்லாமல் பணத்தை வாங்கிக்கொண்டு போனான்.

*************************************


இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை.நண்பர்கள்,உறவினர்கள் என்று பலரும் வந்திருந்ததால் டைம் போனதே தெரியவில்லை.இன்றும் அப்படித்தான் ஒரு நண்பன் வீட்டிற்கு சென்றுவிட்டு நானும் என் இன்னொரு நண்பனும் திரும்பிக் கொண்டிருந்தோம். பஸ் ஸ்டாப்பில் இறங்கி வந்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று தான் கவனித்தேன்.பாக்கெட்டில் இருந்த என் மொபைல் போனை காணவில்லை.மிகவும் காஸ்ட்லியான செட் அது. அனைத்து நவீன வசதிகளும் கொண்ட அந்த மொபைல் இந்திய மதிப்பில் கண்டிப்பாக இருபதாயிரத்திற்கு மேல் வரும்.

நண்பனை உடனடியாக தொடர்புக்கொண்டு ஒருவேளை அங்கே மறந்து வைத்து விட்டேனா என்று கேட்டேன்.அங்கு இல்லை என்றான் அவன். என் உடன் இருந்த நண்பன் யோசனைப்படி என் மொபைல் நம்பருக்கு டயல் செய்தேன்.முதல்முறை ரிங் போய் கட் ஆனது. இரண்டாம் முறை ரிங் போகவில்லை. இந்த எண் சுவிட்சு ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் என் மொபைல் திருடு போய்விட்டதை உணர்த்தியது.

அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் செய்வதுதான் உத்தமமான யோசனை என்று புலப்படவே
அங்கே சென்று காவல்துறை அதிகாரியிடம் கூறினேன்.

"மொபைல் போனை தொலைச்சுட்டியா? ஏய்யா பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்க..உங்களுக்கெல்லாம் பொறுப்பே இருக்காதா, பஸ்ஸிலே எவளையாவது பார்த்துட்டு வாயை பொளந்துட்டு இருந்திருப்பே, எவனாவது பிக்பாக்கெட் அடிச்சிருப்பான்"

எனக்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறியது."சார்,சட்டப்படி உங்க கடமையை மட்டும் செய்யுங்க,நான் யாரை பார்த்து வாயை பொளந்தேங்கறது உங்க விசாரணை எல்லைல வராது" என்றேன் சூடாக.

"ஓ அப்படியா,சரி சரி, ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி அதுகூட மொபைல் போன் வாங்கின பில்லை இணைச்சி கொண்டு வாங்க, பாக்கறோம்."

"சார், புகார் கடிதம் சரி.ஆனால் மொபைல் வாங்கின பில்லெல்லாம் என்கிட்டே இல்லை இப்ப".

"சார், அதெல்லாம் இங்க பேசவேண்டாம், நீங்க சொன்னபடி சட்டப்படி என் கடமையை நான் செய்யறேன்.நீங்களும் சட்டப்படி நடந்துக்கங்க", என்ற ஆய்வாளர் அதற்குமேல் பேச ஒன்றும் இல்லை என்பதுபோல ஒரு பைலை எடுத்து புரட்ட ஆரம்பித்தார்.

செய்வதறியாது தவித்து நின்ற என்னை அதுவரை ஒதுங்கி நின்று பார்த்துக்கொண்டிருந்த காவலர் அணுகினார்.

"என்ன தம்பி,இவ்ளோ விவரம் இல்லாம இருக்க, இங்கெல்லாம் வந்து சட்டம் பேசலாமா? மொபைல் போனெல்லாம் காஸ்ட்லி சமாச்சாரமாச்சே"

"என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க சார்", என்றான் அதுவரை பேசாமல் இருந்த என் நண்பன்.

"ஒரு முன்னூறு ரூபாயை கொடுங்க, எஃப.ஐ.ஆர் புக் செய்துரலாம்.ரெண்டு நாள் கழித்து வாங்க.பார்ப்போம்".

பணத்தை எடுத்துக்கொடுத்தேன்.புகாரை எழுதிக்கொடுத்துவிட்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம். தற்செயலாக நிமிர்ந்து பார்த்தேன். E-3 காவல் நிலையம் என்று எழுதியிருந்தது.என் நினைவில் ஏனோ அந்த ஆட்டோடிரைவர் வந்து போனான்.

Monday, December 05, 2005

பதிலைத்தான் சொல்லிடுங்களேன் சார்

நேர்மையானவன்(நல்லவன்) * நேர்மையில்லாதவன்(கெட்டவன்)

புத்திசாலி * முட்டாள்மேற்கண்டவை இரண்டுவிதமான முரண்பாடான குணச்சித்திரங்கள். மனிதர்களை எளிமையாக வகைப்படுத்தினோம் என்றால் இந்த இரண்டு விதமாக காம்பினேஷன்களில் அடக்கலாம்.ஒவ்வொன்றாக பார்ப்போம்.

நேர்மையான புத்திசாலி

நேர்மையான முட்டாள்

நேர்மையில்லாத முட்டாள்

நேர்மையில்லாத புத்திசாலி


இதில் முதல் இரண்டு வகையும் பெரிய ஆபத்தை கொடுத்துவிடாது.நேர்மையில்லாத முட்டாள்கூட எதாவது முட்டாள்தனமாக செய்து மாட்டிக்கொண்டுவிடுவான்.நான்காவது பகுப்பாடான நேர்மையில்லாத புத்திசாலி தான் நமக்கு பிரச்சினை.இந்த வகையான மனிதர்கள் மிகமிக ஆபத்தானவர்கள்.இந்த வகையினரை எப்படி எதிர்கொள்வது என்பது இன்று சமுதாயத்தை எதிர்நோக்கிஇருக்கும் பிரச்சனைகளில் ஒன்று.மேற்படி சிந்தனை கீற்று(?) நான் அடிக்கடி நண்பர்கள் வட்டாரத்தில் உதிர்க்கும் தத்துவ முத்துக்களில் ஒன்றாகும்.சிலர் பாராட்டிய அதே வேளையில் என் தத்துவ கீற்றுக்களை தாங்க முடியாமல் நட்பை முறித்துக்கொண்டு சென்றவர்களும் உண்டு.

சரி.சரி.விஷயத்திற்கு வருவோம்.சமீபத்தில் அ.தி.மு.க எம்பிக்கள் குழு ஒன்று பிரதமரை சந்தித்து மத்திய நிதி அமைச்சர் திரு.சிதம்பரத்தின் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது.திடுக்கிட வைக்கும் பல புகார்களை அடக்கியுள்ள அந்த குற்றச்சாட்டை பற்றி நிதி அமைச்சர் எந்த பதிலும் கூறாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.இதைவிட கொடுமை நம் மீடியாக்களின் செயல்பாடு. ஜெயா டிவி தவிர வேறு எந்த டிவியிலும் இதை பற்றி கேட்க முடியவில்லை.திரு.சிதம்பரம் ஆங்கில மட்டும் வடஇந்திய மீடியாவின் செல்லப்பிள்ளை என்பது உண்மைதான் என்றாலும் இது கொஞ்சம் ஓவர்.

திரு.சிதம்பரம் கிளீன் இமேஜ் உள்ள ஒரு அரசியல்வாதி. ஒரு வேளை சூரியன் மேற்கில் உதித்து காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தால் முதல்வர் பதிவியில் அமர தகுதியானவர் என்றெல்லாம் மக்களிடம் அவர்மேல் ஒரு எதிர்பார்ப்பு உண்டு.குற்றம் சாட்டியிருப்பது அ.தி.மு.க என்பதாலேயே இவை பதில் கூற தேவையில்லாதது என்பதான நிலைப்பாடு தவறானது.ஊழலில் உலகச்சாதனை பண்ணியவர்கள் அ.தி.மு.க வினராக இருக்கலாம்.அதற்காக அவர்களுக்கு அடுத்தவர் ஊழலைப்பற்றி புகார் சொல்ல தகுதியில்லையா என்ன?.இன்றைய இந்தியாவில் அடுத்தவர் மீது குற்றம் சாட்டும் ஒருவர் அப்பழுக்கில்லாமல் இருக்கவேண்டும் என்றால் யாரும் யார் மீதும் குற்றம் சாட்ட முடியாது ( மகாத்மா காந்தி உட்பட).

சிறிது காலம் முன்புவரை பாமரர்களின் கட்சியாக மட்டுமே இருந்த அ.தி.மு.க பல விதங்களிலும் வளர்ந்து வருகிறது.அங்கங்கே சில அமைச்சர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவதும் தெரிகிறது.தி.மு.க வை ஒப்பிடும்போது இந்த மாதிரி விஷயங்களில் பின்தங்கி இருந்த அ.தி.மு.க இப்பொது நன்றாகவே முன்னேறியிருப்பது தெரிகிறது.இப்போது அவர்கள் சொல்லியிருக்கும் குற்றச்சாட்டுகளான செபி விதிமுறை மீறல்,ரேபோ வங்கியிடம் கடன் வாங்கியுள்ள விவகாரம், ஐ.டி.பி.ஐ செக்யூரிட்டி விதியை தளர்த்திய விவகாரம் ஆகியவை மிகவும் தீவிரமானவை. நிதி அமைச்சருக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது.

திரு.சிதம்பரம் புத்திசாலி என்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு உண்மை.ஆனால் நேர்மையானவரா என்பதற்காக பதிலை ஒரு சாதாரண குடிமகன் எதிர்பார்க்கிறான்.(அப்பாடா, எப்படியோ என் தத்துவத்திற்கும் இந்த விஷயத்திற்கும் முடிச்சு போட்டாச்சு)

Thursday, December 01, 2005

ஒரு செய்தியும் சில பின்னூட்டங்களும்

தினமலர் 01.01 .2006
தேசிய தமிழ் நாளிதழ்

திருப்பம்

தமிழக அரசியலில் ஒரு திடீர் திருப்பமாக டாக்டர் இராமதாஸ் நேற்று தி.மு.க கூட்டணியில் இருந்து விலகினார்.அன்பு சகோதரியின் ஆட்சி நிலைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் தி.மு.க தலைவர் கலைஞர் கடந்த தேர்தலில் தனது கோவணத்தை உருவியதைப்போல் இந்த தேர்தலி்ல் அன்புமணி கோவணத்தையும் சேர்த்து உருவ சதி செய்வதாகவும் அதனாலேயே தான் கனத்த மனத்துடன் விலகுவதாகவும் கூறிய டாக்டர் மத்திய அரசில் இருந்து விலகும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றார். மத்தியில் தேர்தலுக்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்பதும் அன்புமணி பதவியில் இருப்பதும்தான் இதற்கு காரணமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்ததுடன் பின்னால் அமர்ந்திருந்த காடுவெட்டி குருவை அர்த்தபூஷ்டியுடன் திரும்பி பார்த்ததால் குறிப்பிட்ட கேள்வியை கேட்ட நிருபர் தலைமறைவாக வேண்டி இருந்தது.சித்தியின் ஆட்சி சிறப்பாக இருப்பதாக டாக்டர் அன்புமணி கவித்துவமாக கூறியது ரசிக்கும்படியாக இருந்தது.

இதுப்பற்றி கருத்து தெரிவித்த கலைஞர் அம்மையார் விரித்திட்ட வலையில் இராமதாஸ் விழுந்திட்டார் எனவும் தனக்கு இதுப்பற்றி முன்பே தகவல் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதுப்பற்றி கருத்துக்கேட்க திரு.வை.கோ வை தொடர்புக்கொள்ள முடியவில்லை.இலங்கையில் மீண்டும் சண்டை வரலாம் என்று செய்திகள் வந்துள்ள நிலையில் வைகோ காணாமல் போயிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.தினமலர் வாசகர் கடிதம் பகுதி


புளுகனூரில் இருந்து செட்டப்பு செல்லப்பா எழுதுகிறார்


எதிர்பார்த்தது போலவே அண்ணன் கலைஞர் இராமதாஸ் மற்றும் அன்புமணியின் கோவணத்தை உருவ முயன்றதினால் இராமதாஸ் மனம் கனத்து விலகுகிறார்.கருணாநிதி 1967 ல் இருந்து இதுப்போல பலரின் கோவணங்களை உருவி இருக்கிறார்.இதற்கு சர்க்காரியா கமிஷனில் சாட்சி உள்ளது. இப்படி உருவிய கோவணங்களைத்தான் மஞ்சள் சாயம் போட்டு துண்டுகளாக உபயோகப்படுத்திக்கொண்டு இருப்பதற்கு சாட்சிகள் உள்ளன்.கருணாநிதி உருவிய பல கோடிகள் எண்ணிக்கையிலான கோவணங்களை பற்றிய விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் .ஜெயேந்திரர் மீது அபாண்டமாக பழி சுமத்தி விசாரணை என்ற பெயரில் அலைகழிக்கும் அரசாங்கம் உடனடியாக அந்த வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்(இதை முன்பே செய்திருந்தால் சுனாமியை தவிர்த்திருக்கலாம்.இப்போதாவது இதை செய்து, தற்போதைய புயல்,மழை சேதம் ஆகியவைகளை தவிர்க்கலாம்).தமிழக அரசு ஆவன செய்யுமா?
இனி சில தமிழ்மண பின்னூட்டங்கள்

முதுகுமூடி

எனக்கு இது ஒன்றும் ஆச்சரியமாக இல்லை.ஆனால் நான் சொல்ல விரும்புவது என்னவெனில் நான் தர்மபுரி மாவட்டத்தில் பா.ம.க.வினர் பஸ்ஸை எரிக்கும்போது பஸ்ஸின் சீட்டுக்கடியில் ஒளிந்திருந்தேன்.அப்போது பா.ம.க.வினர் தொடர்ந்து இரு தேர்தல்களில் ஒரே கூட்டணியில் இருப்பது தன் தலைவருக்கு பிடிக்காது என்று பேசியதை என் காதால் கேட்டேன்.மற்றபடி டாக்டர் இராமதாஸ் கைவசம் நிறைய கோவணங்கள் உள்ளன.கலைஞருக்கு சில கோவணங்களை கொடுப்பதின் மூலம் ஒன்றும பெரிய நஷ்டம் வந்துவிடாது.

மேலும் புரட்சித்தலைவி குஷ்புவை அபாண்டமாக கலாய்த்த டாக்டரிடம் முதல்வர் மன்னிப்பு கடிதம் வாங்க வேண்டும்.


காண்டு

போலி் காண்டு என்ற இழிபிறவி பின்னூட்டம் இடுவதற்கு முன் நான் பின்னூட்டம் இடவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் நான் இரவெல்லாம் விழித்திருந்து பின்னூட்டம் இட்டு வருகிறேன்.இரண்டு பிளாக்குகளில் மீண்டும் மீண்டும் ஒரே பின்னூட்டம் இட்டு பார்த்தால் தான் தெரியும் என் கஷ்டம்.மற்றபடி நண்பர் முதுகுமூடி சொல்வதை நான் ஆதரிக்கிறேன்.

(இதற்கு பிறகு நண்பர் முதுகுமூடியை ஆதரித்து (வழக்கம்போல எனன சொல்கிறார் என்று படிக்காமலே) சில பின்னூட்டங்கள் விழுகின்றன)

மழலி

யாரோடும் சண்டை போடுவது என் நோக்கம் அல்ல. ஆனால் கருத்துக்களின் மூலம் வன்முறை பரப்பப்படும்போது நான் அதை மறுக்கவேண்டி உள்ளது. நண்பர் முதுகுமூடி பஸ் எரிந்த அன்று சற்று பின்னால் திரும்பி பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் ஒகேனக்கல் சுற்றுலா வந்திருந்த இந்த கடலூர்காரன் பின்சீட்டில் தான் ஒளிந்திருந்தான் என்பது.ஜெயிக்கிற கூட்டணியில்தான் இருக்கவேண்டும் என்பதுதான் தமிழ்குடிதாங்கியின் லட்சியம் என்று பா.ம.க காரர்கள் பேசினார்களே தவிர முதுகுமூடி கூறுவது போல அல்ல .இது உண்மையை திரிக்கிற செயல். டாக்டர் அய்யாவிடம் நிறைய கோவணத்துணிகள் உள்ளன என்ற அபாண்டமான குற்றச்சாட்டுக்கு எதாவது ஆதாரம் கொடுக்க முடியுமா?

முதுகுமூடி

டாக்டர் இராமதாஸ மற்றும் டாக்டர் அன்புமணி ஆகியோர் நிறைய கோவணம் வைத்துள்ளனர் என்பது சிலுக்குவார்ப்பட்டியில் உள்ள சிறு குழந்தையை கேட்டால் கூட சொல்லிவிடுமே.இதற்கு ஆதாரம் தேவையா?


ரமணி சீனிவாஸ்

டாக்டர் இராமதாஸ் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது சீட்டோபோபியா என்ற வியாதியினால்தான். இந்த வியாதி வந்த உகாண்டா நாட்டு அமைச்சர் அண்டாகுண்டா பற்றி என் பதிவில் ஏறகனவே நான் எழுதியுள்ளது நண்பர்கள் அறிந்திருக்கலாம். இந்த வியாதியின் ஆரம்ப அறிகுறிதான் இது. இந்த வியாதி தீவிரமாகும்போது தினமும் ஒரு கூட்டணி மாறுவார்.ஒருவேளை தமிழ்நாட்டில் தேர்தல் இல்லை என்றால் அண்டைமாநில தேர்தல்களிலும் தேவைப்பட்டால் வெளிநாட்டு தேர்தல்களிலும் பங்கு பெற்று கட்சி மாறுவார் என்பது திண்ணம்.மற்றபடி கோவணம் பற்றி டாக்டர் கூறுவது ஒரு குறியீடுதான்.


தமிழ்கிறுக்கன்

தமிழர்களை பற்றி கேவலமான முறையில் பிராக்ஸிகளை வைத்து எழுதி புனிதச்சுடர் போல் காட்டிக்கொள்ளும் தினமலர் ஏடு தன்னுடைய வாரமலர் இதழில் நடிகைகளை பற்றி படுகேவலமாக எழுதுவது எந்த விதத்தில் நியாயம்?


(தமிழ் என்ற வார்த்தையை பார்த்தவுடன் கத்து, சோ ஆகியோர் (வழக்கம் போல என்ன என்று படிக்காமலே) ஆதரித்து சில பின்னூட்டங்கள் இட்டுள்ளனர்.ANONYMOUS

அதற்குத்தான் தினமலர் அடுத்தப்பக்கத்திலேயே கோவில்களை பற்றியும் பக்தியை பற்றியும் இரண்டு பக்கம் போட்டு பேலன்ஸ் பண்ணிடறாங்களே..அப்புறம் என்ன?(யோவ் உன்னுடைய பதிவை பத்தி தினமலரில் வராது .பரவாயில்லையா?)கடைசியாக
முத்து

தமிழ்மணம் நண்பர்களுக்கு ,
குஷ்பு விவகாரத்தால் சற்றே சூடாகிப்போன மனங்கள் ஆறுவதற்காக போடப்பட்ட பதிவு இது.இது யாருடைய மனத்தையும் புண்படுத்த இல்லை.சிரிப்பு வந்தா சிரிங்க.சீரியஸாய் எடுத்துக்காதீங்க.

(பரிந்துரைகள் மற்றும் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.)

தமிழ்வெளியை பார்த்தீங்களா?