Saturday, April 22, 2006

இப்படிக்கூட ஆயிடுமாண்ணே.....

லண்டன் நகர அ.இ.அ.தி.மு.கழக கிளை செயலாளரும் இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் தினமலர் ஏஜெண்ட்டுமான அருமை அண்ணன் ஜெயகுமாரின் பதிவையும் நேற்றைய லயோலா கல்லூரி கருத்து கணிப்பை தங்களிஷ்டம் இஷ்டம் போல் வளைத்து பொருள் கொண்ட அருமை அண்ணன் உடனடி செய்தி இட்லி வடை மற்றும் சன் செய்திகள் ஆகியவற்றை பார்த்தவுடன் உடன்பிறப்புக்கு நாமும் கடிதம் எழுதினால் என்ன என்று தோன்றியது.(உடனே என்னை மங்களூருக்கான தினகரன் ஏஜெண்ட்டா என்று கேட்கும் நண்பர்கள் தயைகூர்ந்து அதற்காக ஏற்பாடுகளை கவனித்தால் நானும் நாலு காசு பார்த்த மாதிரி இருக்கும்)


கலைஞரின் இரண்டு ரூபாய் அரிசி அறிவிப்பை கிண்டல் செய்த பொருளாதார மேதைகள் இன்றைய தினம் அம்மாவின் 10 கிலோ இலவச அறிவிப்பினால் தேள் கொட்டிய திருடன் போல் இருக்கிறார்கள்.தமிழகத்தில் உள்ள எல்லா 1.88 லட்ச ரேசன் குடும்பமும் இலவச அரிசி 10 கிலோ மட்டும் எங்களுக்கு போதும் என்று கூறிவிட்டால் அது கலைஞரின் 2 ரூபாய் அரிசி சமாச்சாரத்தைவிட கேலி கூத்தாகிவிடும் என்பது இவர்களுக்கு தெரியாதா?


அண்ணன் ஜெயகுமார் தினமலர் பேப்பரில் இருந்து சுட்டி காட்டியிருந்தபடி ஒருவேளை தி.முக வென்று அதன் கூட்டணி கட்சிகளினால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிர்பந்திக்கப்பட்டால் என்ன ஆகும் என்று சிந்தித்தால் பல பகீர் எண்ணங்கள் தோன்றுகின்றன்.


கலைஞர் இந்த திட்டங்களை நிறைவேற்ற மறுத்துவிட்டால் இந்த கூட்டணி கட்சிகள் அதிமுக வை ஆதரிக்க போய்விடுமா அல்லது அதிமுக தான் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக இருக்குமா?

தொண்டர் முதல் மந்திரிகள் வரை காலில் விழவைக்கும் அம்மா அப்போது கூட்டணி கட்சி தலைவர்கள் என்ற கோதாவில் போயஸ் தோட்டத்து கேட்டை சுவாதீனமாக திறந்து அம்மாவின் முன்னால் கால் மேல் கால் போட்டு ராமதாஸ், வைகோ திருமா, கம்யூனிஸ்டு தோழர்கள் அமர்ந்தால் அதை தாங்கி கொள்வாரா?

அந்த சூழ்நிலையில் அம்மாவின் இமேஜ் காலியாகிவிடும். அம்மா எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்கமுடியாது. அப்போதும் வைகோ ஜெயா டிவியில் ஏன் தன்னை காட்டவில்லை என்று வம்பு பண்ணுவார்.(காமெடி பஜார் நிகழ்ச்சியில் இவரை காட்டலாம்.ஜெயாடிவி ரேட்டிங்கும் ஏறும்).

பொதுவாக கடும்போட்டி என்று கருத்து கணிப்புகள் கூறினால் அது எதிர்கட்சிகளுக்கு சாதகம் என்று நினைக்கிறேன்.திமுக மற்றும் எதிர்கட்சிகளின் பிரச்சாரத்திலும் கூட்டம் சேர்கிறது.இது தமிழனின் வேடிக்கை பார்க்கும் மனோபாவம் என்று கூட கூறலாம்.

எப்படியும் அதிமுகவும் தனியாக ஆட்சி அமைப்பது சிரமம்தான். கூட்டணி ஆட்சி என்பதே தமிழகத்திற்கு புதுசு.அதுவும் அம்மாவின் தலைமையில் கூட்டணி ஆட்சி என்றால் காமெடிகளுக்கு குறைவு இருக்காது. என்ஜாய்.

Thursday, April 20, 2006

புனித பிம்பங்கள் - பி.அ.-2

முதல் பாகம் இங்கே....


எனக்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கிய என் சிஷ்யை பொன்ஸ் மற்றும ஆருயிர் நண்பன் கவிஞன் பட்டணத்து ராசா ஆகியோருக்கு இந்த பதிவை சமர்ப்பணம் செய்கிறேன்.

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது புனித பிம்பங்கள் டெக்னிக்.இதற்கு மிகவும் பொறுமை வேண்டும்.வலைப்பதிவுகளை கவனித்துகொண்டே இருக்கவேண்டும். எப்படியும் எவனாவது அறிவை வளர்த்துக் கொள்கிறேன், புதிய விஷயம் தெரிந்துக் கொள்கிறேன் பேர்வழி என்று விவாதம் என்று எதையாவது இழுத்து பொதுமாத்து வாங்கிகொண்டு இருப்பான்.அவனை குறிப்பிட்டு

1. இப்படியெல்லாம் எழுதாதீர்கள்.எத்தனை நாள் இருக்கபோகிறோம்?. எல்லோரும் நண்பர்களாக இருப்போம்.( என்னவோ விவாதம் செய்பவர்கள் எல்லாம் பேட்டை ரவுடிகள் மாதிரியும் கையில் அரிவாளோடு திரிபவர்கள் மாதிரியும்)

2. எல்லோரும் நன்றாக படித்தால் நாடு தானாக முன்னேறும்.

3. சாதி ஒழிந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் சாதியை பற்றி எழுதுகிறீர்களே? உங்களுக்கு வெட்கமாக இல்லை?

4. எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள்.தானாக நன்மை மலரும்.

5.காந்தியை பாருங்கள். நேருவை பாருங்கள்.வள்ளுவரை பாருங்கள்.

இப்படியெல்லாம் குன்சாவாக எதையாவது எழுதவேண்டும்.இதற்காகவே காத்திருந்தது போல் நண்பர்கள் ஓடிவந்து ஆதரவு தருவார்கள். நீங்கள் யாரை குறிப்பிட்டு எழுதுகிறீர்களோ அவனின் எதிர்கருத்து கொண்டவர்கள் ஓடி வருவார்கள். இதை கவனித்து யாரை கண்டிப்பது என்று முடிவு செய்யவும்.

இதில் உள்ள லாபங்கள் பின்வருமாறு

1. விவாதம் செய்பவனை கேப்மாரி என்று நிரூபிக்கும் அதே வேளை நாம் புனித பிம்பமாக ஆட்டோமெடிக்காக ஆகிறோம். Hero + Zero = Hero. simple.

அதாவது நான் படித்த பி.எஸ்.ஜீ கலைக்கல்லூரியில் ஒரு கான்செப்ட் இது. கஷ்டப்பட்டு ஒரு ஃபிகரை தேத்தி லைப்ரரியில் வைத்து கடலை போட்டுக்கொண்டிருப்போம். "மச்சான், காலைல சாப்பாட்டுக்கு கோவிலில் தேங்காய் பொறுக்கணும்னு சொன்னியே..போகலையா", என்பான் ஒரு நண்பன். இதுதான் அந்த டெக்னிக்.அந்த பெண் மனதில் நாம் ஜீரோவாகும் அதே நேரம் நண்பன் ஹீரோ ஆவான்.

சுமாரான ஃபிகர் அட்டு ஃபிகரை தோழியாக வைத்துக்கொண்டு சுத்துவதுகூட ஒரு உதாரணம்தான்.

2. மேற்கண்ட ஐந்து அரிய கருத்துக்களையும் விவாதம் செய்பவன் எதிர்க்கிறான் என்று நினைத்துக்கொள்வார்கள் மற்றவர்கள்.இங்கும் உங்கள் ஹீரோ இமேஜ் கூடும்.இந்த கருத்துக்களை எதிர்த்து எழுதமுடியாது என்பதும் வெளிப்படை. (இந்த கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாகவே இருக்கின்றன என்பதும் நடைமுறைதான் சிரமம் என்பதையும் மக்கள் உணர மாட்டார்கள்.)

3. கூடவே விவாதம் செய்பவனின் நியாயமான கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல தேவையில்லை என்பதை சொல்லவும் வேண்டுமா?

இந்த டெக்னிக்கை அடிக்கடி உபயோகிக்க கூடாது. காரணங்களை அடுத்த பதிவில் கூறுகிறேன்.

Wednesday, April 19, 2006

பின்னூட்டங்களின் அரசியல்-1

தமிழ் வலைப்பதிவுகள் மிகவும் பிரபலமாகிக்கொண்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.வலைப்பதிவுகளில் புகழ்பெற்று முதலமைச்சர் ஆகும் ஆசையைக்கூட சிலர் ரகசியமாக வளர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு உதவுவதே இந்த பதிவின் நோக்கம்.

பரவலாக உங்கள் பதிவுகள் படிக்கப்படுவது, பின்னூட்டங்கள் நிறைய பெறுவது, நிறைய பேரால் உங்கள் கருத்துக்கள் போற்றப்படுவது என்று பலவகையான ஆசைகள் உங்களுக்கு இருக்கக்கூடும்.அவர்களுக்கு சில தகவல்கள்.

சரக்கு இல்லாமல் அல்லது விஷயம் இல்லாமல் விடுதலைபுலி பிரபாகரனுக்கு நாற்பது கேள்விகள், திருமாவளவன் மனிதனா,இந்து மதம் என்றால் பார்ப்பனர்கள் மட்டும்தானா, போலி டோண்டுவை சுரண்டிப்பார்ப்போம் போன்ற தலைப்புகளை தேர்வு செய்ய வேண்டாம். பல அறிவுஜீவிக்கள் முதற்கொண்டு குட்டி திராவிட ராஸ்கல்கள் வரை பலரும் வந்து பின்னிவிடுவார்கள் பின்னி. இவ்வகை பதிவுகளில் சரக்கு இருந்தால் பின்னூட்டங்களை வளர்க்கலாம். இல்லாவிட்டால் வம்புதான்.

விவாதங்கள் செய்வதும் சுலபம்.பல உரல்கள் (URL) கைவசம் இருப்பது நன்மை பயக்கும். உரல்கள் அளிப்பதும் இல்லாமல் சில இஸம்கள் கைவசம் இருக்கவேண்டும். நீங்கள் என் கருத்தை எதிர்த்தால் நீங்கள் அண்டகாகஸம் என்ற அரிய அறிவியல் கருத்தை எதிர்க்கிறீர்கள் என்று அர்த்தம் என்று அடித்துவிடவேண்டும்.உங்கள் ஒன்றுவிட்ட தாத்தாவும், தூரத்து மாமாவும் உன் கருத்தை ஏற்றுக்கொள்கிறார்களா என்று முழங்கவேண்டும்.

வம்பு விவாதங்கள் வேண்டாம் என்பதற்காக ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றியும் அன்பே உருவான கல்கி பகவான் பற்றிய பதிவுகள் எழுதிவிட்டு பின்னூட்டங்கள் வரும் என்று கூகிள் நோட்டிஃபையரை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கவேண்டாம்.இதுவும் வேலைக்கு உதவாது. தப்பிதவறி யாராவது பதிவு பக்கம் வந்தாலும் பதிவுக்கு நன்றி என்று எழுதிவிட்டு அடுத்தமுறை உங்கள் பதிவை பார்த்தாலே பின்னங்கால் பிடறியில் பட ஓடிவிடக்கூடிய அபாயம் உள்ளது.

(தொடரும்)

Tuesday, April 18, 2006

இந்தியாவில் இஸ்லாம்

உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி, தமிழ்வலைப்பதிவுலகத்திலும் சரி.அதிகம் விவாதிக்கப்படும் மதம் இஸ்லாம்.இந்த மதத்தைப்பற்றி சில மாதங்களுக்கு முன் தருமி எழுதிய பெரும்பாலான கருத்துகள் என்போன்ற இறைநம்பிக்கை இல்லாதவர்கள் ஒத்துப் போகும்படித்தான் உள்ளன.சுட்டிகள் இங்கே.

ஒரு மதத்தில் இருப்பதாக சொல்லப்படும் சில கோட்பாடுகள் சமூக அமைதியை பாதித்தால் அதைப்பற்றி பேச எழுத எல்லோருக்கும் உரிமை உண்டு என்ற அடிப்படையில் இவ்வகை விமர்சனங்கள் வருகின்றன.மதத்தில் உள்ள கருத்துக்களை விட்டுவிட்டு பொதுவாக இந்திய இஸ்லாமியர்களை அடிப்படையாக வைத்து என்னுடைய சில கருத்துக்களை எழுதுவது மட்டுமே என் நோக்கம்.மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட என் கருத்துக்கள் மிகவும் மேலோட்டமாகத்தான் இருக்கும்.

முக்கியமான குற்றச்சாட்டு தீவிரவாதிகளை சில சிந்தனையாளர்கள்கூட ஆதரிப்பதை பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக தாலிபான்கள் போன்ற ஆட்களை எல்லாம் ஆதரிப்பது எந்த விதத்தில் சேர்த்தி?(ஒரு நண்பர் தாலிபன்கள் பாமியன் புத்தர் சிலைகளை உடைத்ததை ஆதரித்து எழுதியதை நம் வலைப்பதிவுகளிலேயே பார்க்க முடிந்தது.இது கொடுமையிலும் கொடுமை).


இந்த தாலிபன் போன்ற தீவிரவாத இஸ்லாமியர்களுக்கு இந்தியா போன்ற தேசங்களில் உள்ள நம்முடைய இஸ்லாமிய சகோதரர்கள் மீதும் அன்பு இருப்பதாக தெரியவில்லை. அப்படித்தான் இந்த தீவிரவாதிகள் வீரர்களா என்று பார்த்தால் இல்லை. மக்கள் கூடி இருக்கும் இடத்தில் குண்டு வைப்பது, அமெரிக்கா படை திரட்டி வந்தால் ஓடி ஒளிந்துகொள்வது என்று இருக்கிறார்கள். ஈராக்கில் கூட இவர்கள் அமெரிக்க படைகளை தாக்குவதில்லை. அப்பாவி மக்களையே தாக்குகிறார்கள்.காஷ்மீரை சேர்ந்த மக்களின் உரிமை போராட்டத்திற்கு ஒரு அர்ததம் உள்ளது.இஸ்ரேலுடன் போராடும் பாலஸ்தீனர்கள் போராட்டத்திலும் ஒரு நியாயம் உள்ளது.ஆனால் பின்லேடன், தாலிபன் வகையறாக்களை எந்த விதத்திலும் சேர்க்கமுடியாது. வன்முறை, அதுவும் அப்பாவி மக்களின் மீது வன்முறை என்பதை வழிமுறையாக கொண்ட எந்த இயக்கமும் எதையும் சாதித்துவிடமுடியாது.

நல்லவேளை உலகிலேயே அதிக முஸ்லீம்களை கொண்ட நாடுகளி்ல ஒன்றான இந்தியாவில் இதுவரை அல்-கொய்தாவை சேர்ந்து ஒருவர் கூட இல்லை. இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆட்களும் முஸ்லீம்களில் மிகவும் சிறுபான்மையோர் என்பதும் ஒரு ஆறுதல் அளிக்கும் உண்மை.

மற்றொரு குற்றச்சாட்டு மதத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு படித்த அல்லது விவரம் தெரிந்த முஸ்லீம்களின் பாராமுகம்.விமர்சனமின்மை. ஏனென்றால் மூலப்புத்தகத்தில் உள்ள சில தகவல்களை மற்றும் கருத்துக்களை அடிப்படையாக கூறித்தான் தீவிரவாதிகள் இயங்குகிறார்கள். இதை எதிர்க்கும் இஸ்லாமியரின் எதிர்ப்புக்குரல் மிகவும் பலவீனமாகவே ஒலிக்கிறது.இதை எதிர்த்து இந்நேரம் இஸ்லாமியரில் ஒரு தனிப்பிரிவே வந்திருக்கவேண்டும். அறிவுபூர்வமாகவும் மதரீதியாகவும் அப்பாவிகள் மீதான வன்முறை ஒரு வெறுக்கப்படவேண்டிய வழிமுறை என்பதை இஸ்லாமிய அறிவுஜீவிகள் தீவிரமாக வலியுறுத்துவதில்லை. சிறுவயதிலிருந்தே இறுக்கமாக அவர்களை இறுக்கும் மதக்கல்வி அவர்களை அவ்விதம் சிந்திக்க விடுவதில்லையோ என்று நான் நினைக்கிறேன்.

சுருக்கமாக சொல்லப்போனால் மதங்களை மீறிய சிந்தனை உள்ள இஸ்லாமிய பெருமக்களை காண்பது கடினமாகவே இருக்கிறது. மதத்தை எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக நினைக்கும் ஒரு தன்மை அவர்களி்ல கலந்துவிட்டது. காலத்திற்கு ஏற்ப மதத்தை சீர்தூக்கி பார்ப்பது சாத்தியமே இல்லை என்றாகி விட்டது. எப்பாடு பட்டாவது மூலப்புத்தகத்தில் உள்ள எல்லாவற்றையும் நியாயப்படுத்துவது என்ற நிலையை பல சிந்தனையாளர்களும் எடுப்பதை காண்கிறோம்.சங்பரிவாரை எதிர்ப்பவர்கள் பின்லேடனை ஆதரிப்பவர்கள் என்பதுபோல் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது.பல முஸ்லீம்களும் இந்த மாயவலையில் விழுவதை பார்க்கிறோம்.

(உதா) இட ஒதுக்கீடு வேண்டியோ அல்லது கோயமுத்தூரில் பல ஆண்டுகளாக சிறையில் வாடுபவர்களுக்கு ஆதரவாகவோ ஊர்வலம் போகும்பொது அதில் பின்லேடன் புகைப்படத்தை எடுத்துச்செல்வது.

கோயமுத்தூர் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பதினெட்டு வயது சிறுவன் இப்போது எய்ட்ஸ் நோயாளியாம். இவனுக்கு எய்ட்ஸ் வந்தது மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் பொது தவறான ரத்தம் செலுத்தப்பட்டதுதானாம்.நண்பர் அழகப்பன் பதிவில் படித்த ரத்தததை உறைய வைக்கும் இதுபோன்ற கொடுமைகளை எதிர்த்து போராடு்ம்போது மதரீதியாக போராடுவது எந்த பயனையும் கொடுக்காது. ஊசி நுழையும் இடத்தில் புல்டோசரையே நுழைக்கும் சங்பரிவாரின் பிரச்சார சூழ்ச்சியில் விழுந்து மேலும் மேலும் இஸ்லாமியர் தனிமைப்படும் அபாயம்தான் இங்கு உள்ளது.
இந்த நிலையை மாற்றுவதுதான் முஸ்லீம் அறிவுஜீவிகளின் தலையாய கடமை.

மற்றபடி இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்த ஒரு கட்டுரையின்படி இந்திய இஸ்லாமியரின் வாழ்க்கைத்தரம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அரசாங்கத்தின் உதவிகள் அவர்களில் பெரும்பான்மையோரை சென்று சேர்வதில்லை. அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில்கூட அவர்களுக்கு லோன்கள் தரப்படுவதில்லை.படிப்பறிவு மிகவும் குறைவு. அரசாங்க வேலைகளில் அவர்கள் அதிகம் இல்லை.பட்டதாரிகளின் அளவும் அதிர்ச்சி தரும் வகையில் குறைவாகவே உள்ளது.இதுபோன்ற ஒதுக்கும்தன்மை இந்தியாவின் முன்னேற்றத்திற்கு எந்த விதத்திலும் உதவபோவதில்லை.ஓட்டுவங்கி அரசியலும், சங்பரிவார் கும்பலின் பிரச்சாரங்களும் பிரச்சினையை தீவிரமாக்குகின்றன.


முஸ்லீம்களுக்கு கல்வியில்,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது எல்லா விதத்திலும் ஒரு சரியான வழிமுறை என்றே நான் நினைக்கிறேன். அரசாங்கம் ஒரு உருப்படியான வழிமுறையை பின்பற்றி உண்மையிலேயே உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு இந்த சலுகைகள் சென்றுசேர வழிசெய்யவேண்டும்.

அரசாங்கம் மட்டும் எதையும் சாதித்துவிட முடியாது. நான் ஏற்கனவே கூறியபடி இஸ்லாமியரில் உள்ள படித்தவர்கள், மதப்பெரியவர்கள் ஆகியோர் ஒன்றுகூடித்தான் இதை செய்யமுடியும். இல்லையென்றால் சங்பரிவாரின் பிரச்சாரத்திற்கு இரையாகிக்கொண்டே இருக்கும் அவல நிலைத்தான் நீடிக்கும்.

(சென்சிடிவ் பதிவாகையால் மட்டுடுடுடுடுறுறுறுறுறுததததல் இருக்கும்)

Friday, April 14, 2006

எனக்கு யார் ரோல்மாடல்?

என் தந்தையார் கல்லூரியில் சேர்ந்த கதையை அவரை திரும்ப திரும்ப சொல்ல சொல்லி நான் கேட்பேன்.அவரும் சளைக்காமல் சொல்வார். கிராமத்தில் வாழ்ந்த அவர் பி.யூ.சி முடித்து கல்லூரியில் சேர திருச்சிக்கு சென்றிருக்கிறார்.என் தாத்தாவிற்கு இதெல்லாம் தெரியாது என்பதால் பதினைந்தோ இருபதோ ரூபாய் யாரிடமோ கடன் வாங்கிக்கொண்டு என் தந்தைக்கு துணையாக மட்டும் சென்றிருக்கிறார்.


திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி.என் தந்தை கல்லூரி முதல்வரான கிறிஸ்தவ பாதிரியாரிடம் தன் மதிப்பெண் பட்டியலை காட்டியிருக்கிறார்.இந்த மார்க்குக்கு எல்லாம் இங்கு சீட் கிடையாது என்றாராம் அந்த முதல்வர்.என் தாத்தாவிற்கும் மிகவும் வருத்தமாம். ஆனால் என் தந்தை ஆவேசமடைந்து " Iam the first in my school" என்று கூறியிருக்கிறார்.அது உண்மையும் கூட.


இதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த அந்த முதல்வர் இதற்கு ஏதாவது சான்றிதழ் உன் பள்ளி தலைமையாசிரியரிடம் வாங்கி வந்தால் உன்னை சேர்த்துக்கொள்கிறேன் என்றாராம்.பிறகு அதன்படியே அவருக்கு அட்மிஷனும் கிடைத்தது.அந்த பி.யூ.சி மதிப்பெண் பட்டியலின்படி அவரின் மதிப்பெண்கள் 294/600.ஏறத்தாழ ஐம்பது சதவீதத்திற்கும் கம்மிதான்.ஆனால் Iam the first in my school என்ற வசனம் என் மனதில் ஆழ பதிந்தது.


கண்டதை படித்தவன் பண்டிதன் ஆவான் என்ற பழமொழியை அடிக்கடி சொல்லி என்னை சிறுவயதிலேயே புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படு்த்தியது என் தந்தை எனக்கு கொடுத்த மிகப்பெரிய கிஃப்ட்.(நான் பண்டிதன் ஆகவில்லை என்பது வேறு விஷயம்)என்னுடைய பத்து வயதிலேயே ராஜாஜயின் சக்ரவர்த்தி திருமகன், வியாசர் விருந்து ஆகிய புத்தகங்களை நான் படித்துவிட்டேன்.எனக்கு ஏழு அல்லது எட்டு வயதாக இருக்கும்போது பனிரென்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்த சென்னை சென்ற என் தந்தை சுமார் ஐம்பது கதைபுத்தகங்களை எனக்காக வாங்கி வந்ததை என்னால் மறக்கவே முடியாது.


சொந்த பந்தம் என்று பலருக்கும் இன்சினியரிங் சீ்ட் வாங்கி கொடுத்த என் தந்தை எனக்கு இன்சினியரிங் சீட் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டதை இன்று குற்ற உணர்வுடன் நினைத்துப்பார்க்கிறேன். பணத்தை கட்டியாவது இன்சீனியரிங் சேர்த்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தாலும் நீ என்னவாக ஆகவேண்டும் என்பதை நீதான் முடிவு செய்யவேண்டும் என்றுகூறி என் விருப்பத்தின்படி என்னை கலைக் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.


முதல்நாள் கல்லூரிவிடுதியில் என்னைவிட்டுவிட்டு போகும்போது அவர் கூறிய ஒரே அறிவுரை நீ என்ன வேண்டுமானாலும் செய், எப்படி வேண்டுமானாலும் இரு, ஆனால் நாளை நீ என் மகன் என்று நான் பெருமைபடும்படி ஒரு முழுமனிதனாக ஆகவேண்டும் என்பது தான் என் ஆசை என்று முழுசுதந்திரம் கொடுததவர் என் தந்தை.நல்ல நோக்கமும் நடத்தையும் இல்லாத புத்திசாலித்தனமும் பக்தியும் குப்பைக்கு சமம் என்பதை எனக்கு புரிய வைத்தவரும் அவர்தான்.


அப்பா, என் வாழ்க்கை பஞ்சுமெத்தையாக இல்லை.ஆனால் முள்படுக்கையாக ஆகாமல் இருக்க காரணம் உங்களின் வளர்ப்பு.என் வெற்றிகளை நீங்கள் பார்க்கவில்லை.நீங்கள் என்னை பிரிந்து இன்றுடன் பதினொரு வருடங்கள் ஆகிறது. நான் உங்களுக்கு நினைவுகூர திவசம் என்று எதுவும் வைத்ததில்லை. வைக்கவும் போவதில்லை. .ஆனால் நீங்கள் நினைத்தப்படி தான் நான் வளர்ந்து வருகிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைபடுகிறேன்.நீங்கள் எனக்கு எப்படி இருந்தீர்களோ அப்படியே என் பிள்ளைகளுக்கு நான் இருப்பேன் என்று உறுதி எடுக்கிறேன்.

Thursday, April 13, 2006

சரத்குமார் ஒரு புதிர்

சரத்குமார் தி.மு.க வில் இருந்து விலகியிருக்கிறார். தேர்தல் சமயங்களில் இதுபோன்ற பல காமெடி காட்சிகள் நடப்பது சகஜம் என்றாலும் எம்.பி பதவி வரை வழங்கப்பட்டு திமுகவில் ஓரளவு மரியாதையுடனே வைக்கப்பட்டுள்ள இருந்த சரத்குமார் விலகல் சிலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

சரத்குமார் என்றுமே தன் அரசியல் நோக்கங்களை மறைத்ததில்லை. தொண்ணூறுகளில் புரட்சித்தலைவி கலந்துகொண்ட ஒரு விழாவில் இரட்டை இலை போட்ட சட்டையை அணிந்துக் கொண்டு சரத்குமார் கலந்துகொண்டதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த சமயம் ஜெயலலிதா மேல் பரவலாக தமிழகத்தில் அதிருப்தி இருந்த காலம். பின்னர் நாட்டாமை படத்தை தன்னிச்சையாக ஜெயாடிவியில் போட்டார்கள் என்ற காரணத்தால் பிரச்சினை ஆரம்பித்ததாக சொல்லப்பட்டு சரத்குமார் அதிமுகவுடன்
மனஸ்தாபம் கொண்டு திமுகவில் தஞ்சம் புகுந்தார்.

கொள்கை, வெங்காயம் என்பதெல்லாம் அவர் அதிகம் பேசியவரல்ல. தான் அரசியலில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் உடையவர். எம்.பி பதவி கிடைத்த சரத் திமுகவில் மத்திய மந்திரி பதவி எதிர்பார்த்ததாக தெரிகிறது. தயாநிதி மாறனை விட தான் எந்த விதத்தில் தாழ்ந்தவன் என்பது அவர் எண்ணமாக இருந்திருக்கலாம். இது நியாயமான வருத்தம்தான்.(இருவரையும் விட தகுதியான மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் நமது எண்ணம்).

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் பின்னே ஒரு பெரிய சமுதாயமே (நாடார்கள்) இருப்பதாக அவர் சொல்லி வந்திருக்கிறார்.இதுவெல்லாம் அவர் அரசியலில் ஒரு உயர்வான இடத்தை பிடிக்க அடிபோட்டு வந்திருப்பதை த்தான உணர்த்துகிறது.இன்று விஜயகாந்த வெற்றியோ தோல்வியோ ஒரு உறுதியான முடிவெடுத்து அரசியலில் குதித்திருப்பது இவரை ரொம்பவே தொந்தரவு படுத்தியிருக்கலாம்.

அவருக்கு உள்ள கடன் தொல்லை என்பதெல்லாம் அவருடைய பர்சனல் விசயம்.அதையெல்லாம் கட்சியின் மீது போட்டு பார்ப்பது அறிவார்ந்த நாணயம் அல்ல. சரத்குமாரின் பலவீனம் என்னவென்றால் தன்னுடைய பலத்தை சற்றே அதிகமாக கணக்கு போட்டு வைத்திருப்பது என்று எனக்கு தோன்றுகிறது.

ரசிகர் மன்றத்தை வைத்து நோட்டீஸ் ஒட்டி மட்டும் ஒருவர் வளர்ந்துவிட முடியாது. ரஜினி ரசிகர்கள் ஒட்டாத நோட்டீஸா?ஆனால் தைரியம் விஜயகாந்திற்கு மட்டும்தான் வந்தது.ராஜேந்தர் திமுகவில் ஒரு தனிப்பெரும் சக்தியாக வளர முயற்சித்தார்.இன்று அவர் இருந்த இடத்தில் புல் முளைத்து விட்டது. ஒரு காமெடியனாக ஆகிவிட்டார்.

சாதி பின்னணியும் ரசிகர் மன்ற பலமும் சரத்துக்கு உதவுமா? சரத் என்ன செய்வார்? பொறுத்திருந்து பார்ப்போம்.

Tuesday, April 11, 2006

நானூறு கோடியும் மேதா பட்கரும்

சல்மான்கான் என்ற கிரிமினல் (இவரை பின் வேறு எப்படி சொல்லுவது) கைது செய்து உள்ளே அடைக்கப்பட்டுள்ளார். மும்பை பாந்த்ரா பகுதியில் பலரும் இப்போது நிம்மதியாக வீதியில் நடமாடுவதாக தகவல் வந்துள்ளது.


நானும் அடிக்கடி அந்த வீதியில் சுற்றியவன்தான்.எஙகள் வங்கிக்கு அங்கு ஏகப்பட்ட கிளைகள் உள்ளன.(நக்மா எங்க கஸ்டமர்.ஹி.ஹி)

சன் டிவியில் நேற்று ஒரு செய்தியை பார்க்கமுடிந்தது. அதாவது சல்மான்கானை கைது செய்ததால் 400 கோடி முடங்கிவிட்டதாம்.பணம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். இவர் மேல் உள்ள கேஸ்(கள்) ஏறத்தாழ எழு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அப்போது தெரியாதாமா இந்த தயாரிப்பாளர்களுக்கு?அல்லது நம்முடைய நீதி துறை மேல் அவ்வளவு நம்பிக்கையா?

ஆனால் நம்முடைய கவலையெல்லாம் இதே போல் தெல்கி போட்ட தொகை,தாவுது போட்ட தொகைக்கு எல்லாம் பம்பாயி்ல் எல்லாரும் கவலைபட் ஆரம்பித்தால் என்ன ஆகும் என்பது தான்.

*****************

நேற்று ரோசா வசந்தின் சுட்டியை பின்பற்றி சென்றபோது மேதா பட்கருக்காக ஆதரவு தெரிவித்து தொடர் உண்ணாவிரதம் இருக்க அழைப்பு இருந்ததை பார்த்தேன்.இன்று செவ்வாய்கிழமை வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு உருப்படியான காரணத்திற்காக உண்ணாவிரதம் இருந்தேன்.

மாலை ஒரு லெமன் சர்பத் குடித்து என் உண்ணாவிரதத்தை முடிவு செய்தேன்.நன்றி ரோசா வசந்த்.

காலையி்ல் செய்தித்தாளில் பார்த்த பிரான்ஸ் சட்ட வாபஸ் செய்தியும் மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.நேற்றுவரை நடந்த ஸ்டேட் வங்கி ஊழியர்களின் போராட்டம் வெற்றி பெற்றதையும் வைத்து பார்க்கும்போது மீடியாக்களின் சில்லறை பிரச்சாரங்களையும் மீறி இன்னும் உலகில் போராட்டங்களுக்கு மதிப்பு இருக்கிறது என்பது புரிகிறது.

Monday, April 10, 2006

சம்மரை சகித்துக்கொள்ளுங்கள்

நான் ஒரு புதிய பதிவு போட வாய்ப்பு கொடுத்த அண்ணன்களுக்கு நன்றி கூறி தொடங்குகிறேன்.(நன்மனம் என்னை மன்னிச்சிருப்பா)

"வந்தனம்.வந்தனம்.வந்த சனம் குந்தணும்."
"என் கதையை படிச்சி பாருங்கோ மனசு மகிழ
பின்னூட்டம் கொடுத்து பாருங்க"

(சினிமா பாட்டு மெட்டில் படிக்கவும்)

சரி.விஷயத்துக்கு வருவோம்.

ஐயா, நான் பெரிய சிந்தனையாளன் கிடையாது.எனக்கு வாசிப்பும் கம்மிதான். ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன். கடந்த ஆறு மாதமாகத்தான் தமிழ் இணையத்தில் ஆக்டிவ்வாக இருக்கிறேன். வீட்டில் ஆள் இல்லை.சம்மர் வெகேஷனுக்கு ஊருக்கு அனுப்பியுள்ளேன்.எனக்கு எந்த பிராஜக்ட்டும் இல்லை என்றால் ஃப்ரியாக இருந்தேன் என்றால் தினமும் இரண்டு பதிவுக்கூட போடுவேன்.இதற்கு உங்கள் அனுமதி தேவையா எனக்கு?என்னுடைய இந்த வார பதிவுகளை பலவும் ரியாக்சன் தான்.இதில் என்ன உங்களுக்கு கஷ்டம்? வருத்தம்?

என்னுடைய பதிவுகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒன்று தெரியும்.அது என்னவென்றால் புதிய அரிய கருத்துக்களை என்று நான் எதுவும் சொல்வதில்லை. என்னுடைய முறையில் இன்டர்பிரெட் பண்ணுவது மட்டுமே என் வேலை.

ஆனால் எனக்கு ஒரு புதிய வேஷம் போடும் பணி இங்கு நடக்கிறது. நண்பர்களையும் எனக்கு எதிராக திருப்பிவிடும் திரித்தல் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் அங்கங்கே பார்க்கிறேன்.சாதி மதம் எப்போதுமே டென்சன்தான்.ஆனால் யாரையும் நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது பொதுமைப்படுத்தியோ திட்டியதில்லை. வரலாறு அப்படி இருந்தால் நான் என்ன செய்யமுடியும்?

நீங்கள் உங்கள் நண்பர்களுடன் உரையாடலில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். நான் அங்கு வருகிறேன்.சடாரென்று கீழே விழுந்து கையை, காலை உதைத்துக்கொண்டு அய்யோ, என்னை அடிக்கிறான், உதைக்கிறான் என்று அலறினேன் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

அப்படித்தான் இருக்கிறது எனக்கு உங்களின் அணுகுமுறை.இதை முதலில் பார்க்கும் நண்பர்கள் மனதில் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?இதையெல்லாம் மீறி நான் இங்கு பல நண்பர்களை பெற்றிருந்தாலும் இந்த திரி்த்தல்களினால் நண்பர்களை இழந்துவிடுவேனோ என்ற பயமும் இருக்கிறது.அந்த பயத்தில் போட்டதுதான் இந்த பதிவு.

சரி.இதற்கு தீர்வு என்ன? அதையும் பார்ப்போம். உங்களுடைய கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் நீங்கள் வைத்துள்ளீர்களே அந்த டெம்பிளேட் டாகுமெண்ட். அதை டெலிட் செய்யவும்.

"ஒரு சாராரை இரக்கமில்லாமல் தாக்குகிறார்கள்"

"முஸ்லீம்களை பார், கிறிஸ்துவர்களை பார்"

"இந்து மதத்தில் தான் உனக்கு நாங்கள் சுதந்திரம் கொடுத்துள்ளோம்"

"வீட்டை திருத்திவிட்டு வீதிக்கு வா"

(நம்முடைய கருத்துக்கள் எல்லாவற்றையும் பொண்டாட்டி ஒத்துக்கணும்னா இங்க எவனுக்கும் பொண்டாட்டி இருக்கமாட்டாங்க- இது என் கருத்து)

இதுபோன்ற வாக்கியங்களை அடக்கிய அந்த டாகுமெண்ட்டை டெலிட் செய்துவிட்டு குறிப்பிட்ட பதிவுகளை மட்டும் படித்து இந்த டெம்பிளெட்டை காப்பி செய்து பின்னூட்டம் இடும் பழக்கத்தை நிறுத்தவும.இது ஆரம்பத்தில் கடினமாக இருக்கும்.பின்னர் பழகி விடும்.

இல்லையென்றால் உங்கள் பதிவில் ஏதாவது எழுதுங்கள்.யாரும் படிக்கக்கூடாது என்று இருக்கிறதா என்ன? துக்ளக் கூட நல்ல விற்பனையாகிறது என்பதை கவனியுங்கள்.

ஏன் எனக்கு சிம்ரனை இன்னும் பிடிக்கும்,சங்கிலி பதிவில் என்னையெல்லாம் கூப்பிட்டார்களே என்று இருக்கும் பதிவுகளை படிக்கலாம்.ஞானவெட்டியான் எழுதும் பக்தி ரசம் கமழும் பதிவுகளை படியுங்கள். திருப்புகழுக்கு முன் திருமந்திரம் வந்ததா என்ற உருப்படியான விவாதங்களில் கலந்துகொள்ளுங்கள்.

இல்லை,நான் எல்லா பதிவுகளையும் படிப்பேன் என்றால் முதலில் பதிவின் தலைப்பை படிக்கவேண்டும்.பிறகு முழுப்பதிவையும் படியுங்கள்.பின்னர் காமெண்ட் என்ற பகுதியை தட்டினீர்கள் என்றால் நண்பர்கள் அங்கு அளித்த பின்னூட்டங்கள் வரும்.ஓரளவு எதைப்பற்றி எழுதுகிறார்கள் என்பதை படியுங்கள்.பிறகு விவாதபூர்வமாகவும் லாஜீக்கலாகவும் அதை அலசி ஏதாவது உருப்படியாக எழுதவும்.உங்கள் டெஸ்க்டாம்ட் டெம்பிளேட்டை அழித்துவிட்டால் உங்களுக்கு சிந்திக்க சிறிது அவகாசம் கிடைக்கும்.

வாலி படத்தில் சிம்ரனை அஜீத் டாக்டர் மாத்ருபூதத்திடம் கூட்டிசெல்வார். நீங்கள் எல்லாம் போலி டோண்டுவை மனநோய் மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்லவேண்டும் என்று கூறும்போதெல்லாம் எனக்கு அதுதான் ஞாபகம் வருகிறது.(உடனே நான்தான் போலி டோண்டு என்று எழுதினாலும் எழுதுவார்கள்)

கருத்துக்களில் ஒப்புதல் இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் நான் எப்படி பழகுவேன் என்பதை நிஜடோண்டுவிடம் கேளுங்கள்.அதை விட்டுவிட்டு அங்கங்கே சென்று பதிவுக்கு சம்பந்தமில்லாமல் என்னை கேரக்டர் அசாசினேஷன் செய்வதை விடுங்கள்.உங்களுக்கு கோடி புண்ணியம்.

நான் அப்பாவி.(அப்பாவிகளுக்கு மட்டும்)

என்னுடைய வருத்தத்தை புரிந்துகொள்ளும் நண்பர்கள் ஆதரவை வேண்டுகிறேன்.

Sunday, April 09, 2006

ரவிசீனிவாசின் பதிவை முன்வைத்து...

உயர்கல்வியில் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு என்ற விஷயத்தை மத்திய அரசாங்கம் எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனக்குரிய இடத்தை இந்திய அரசியலில் கேட்பதற்காக இதை எடுத்துக்கொண்டாலும் இதில் தவறு இல்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது.என் "பிற்போக்கு" கருத்துக்களை விரிவாக பார்ப்போம். இதைப்பற்றி பத்ரி,ரவிசீனிவாஸ் ஆகியொர் எழுதியுள்ளனர்.

இடஒதுக்கீட்டின் அவசியம் பற்றி வேண்டிய அளவு பேசியாகிவிட்டது. இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் ஆகியவை தங்களாலான விஷம பிரச்சாரத்தை முடுக்க ஆரம்பித்தாயிற்று.ஆனால் பலரை பலநாள் ஏமாற்ற முடியாது என்ற பழமொழியை இங்கு நினைத்துக் கொள்வோம்.ஆகவே நாராயணமூர்ததிகள் உயிரை விட்டு கத்தினாலு்ம் இது நடக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் சில விஷயங்களை பார்ப்போம்.

கடந்த இரண்டு,மூன்று நாட்களாக என்.டி.டி.வி ஹெட்லைன்ஸ் டுடே ஆகிய சேனல்களில் இதுதான் பேச்சு.வழக்கம்போல் இந்தியா இதனால் நூறு வருடம் பின்னோக்கி போவதாக அறிவுஜீவிகள் புலம்ப ஆரம்பித்தாயிற்று. நான் பார்த்த சேனல்களில் இருந்து சில சுவையான காட்சிகளை இங்கே போடுகிறேன்.

இப்போது இங்கள்ளாம் உலகத்தரமான மாணவர்கள் இருக்கிறார்கள். பிற்படுத்தப் பட்டவர்களை சேர்த்தால் தரம் குறைந்துவிடும் என்பது ஒரு பொது குற்றச்சாட்டு. இவர்களை பார்த்து ஒருவர் கேட்டார்.

"ஏற்கனவே தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனமக்களுக்கு இங்கெல்லாம் இடஒதுக்கீடு உள்ளது. தரம் உள்ளது என்பதையும் ஒத்துக்கொள்கிறீர்கள். அப்போது உள்ள தரம் இப்போது பிற்படுத்தப்பட்டோர் வந்தால் மட்டும் எப்படி தரம் குறைந்து விடும் என்கிறீர்கள்?" குரூரமான கேள்விதான். ஆனால் பாயிண்ட் உள்ளது என்று எனக்கு தோன்றியது.


ஆனந்த அதிர்ச்சியாக பி.ஜே.பி தலைவர் ஒருவர் பேசியதை போடுகிறேன். மகராஷ்ட்ராவை சேர்ந்த அவர்

"பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள அந்த கடைசி ஆளின் மதிப்பெண்ணுக்கும் பொதுபிரிவில் உள்ள கடைசி ஆளின் மதிப்பெண்ணுக்கும் கடைசி தேர்வில் உள்ள வித்தியாசம் என்ன?"

"பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள முதல் ஆளுக்கும் பொது பிரிவில் உள்ள கடைசி ஆளுக்கும் மதிப்பெண் வித்தியாசம் என்ன?"

இதில் தரம் எங்கே குறைகிறது என்று கூறுங்கள் என்றாரே பார்க்கவேண்டும். அந்த நிகழ்ச்சியை நடத்திய காம்பியர் அழாக்குறையாக ஆகிவிட்டார். பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் முற்போக்குவாதிகள் இதையெல்லாம் எதிர்ப்பார்கள் என்பது தெளிவு.இதை சொன்ன அந்த பி.ஜே.பி பிரமுகர் தொடர்ந்து இடஒதுக்கீடு அவசியம்தான்.ஆனால் அது மைனாரிட்டி கல்வி நிறுவனங்களிலும் வரவேண்டும் என்பதுதான் எங்கள் நிலை என்று போட்டார் ஒரு போடு.என் தனிப்பட்ட கருத்தும் அதுதான்.


அப்துல் கலாம் ஒரு உருப்படியான யோசனை தெரிவித்தார். இடத்தை அதிகப்படுத்துங்கள். இடஒதுக்கீட்டை அறிவியுங்கள் என்பதுபோல என்று நினைக்கிறேன். "நடுநிலைமைவியாதிகள்"(கொத்ஸ் கவனிக்க) அதையாவது ஒத்துக்கொள்ளவேண்டும். அதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஒருவர் கேட்டார்."பலபேர் வெளிநாட்டுக்கு படிக்க போகிறார்கள் என்கிறீர்கள். உங்களிடம் உலகத்தரமான கல்வி இருப்பதாக கூறுகிறீர்கள்.ஏன் இங்கேயே சீட்களை அதிகப்படுத்தி இடஓதுக்கீட்டையும் அளித்து அனைவரும் முன்னேற வழிவகை செய்யக்கூடாது"

இதற்கும் நேர்மையான பதிலை காணோம்.நாங்கள் மட்டும் முன்னேற வேண்டும் என்பதுதான் எண்ணம்.இதை வெளியே சொல்லமுடியுமா?

என்.டி.டி.வியில் இன்னும் சுவாரசியம். காஞ்சி இலையா முதலிய தலித் ஆக்டிவிஸ்ட் முதலியோரை கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் காஞ்சி இலையா பிற்படுத்தப்பட்டோரை ஆதரித்தே பேசினார். தலித்துக்களை பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக திருப்பிவிடும் சமயோசிதம் அவரிடம் பலிக்கவில்லை போலும்.

அவர் என்ன சொன்னாலும் பார்வையாளர் பகுதியில் இருந்து சில முட்டாள்கள் ஆட்சேபித்துக்கொண்டே இருந்தார்கள்.அவர் கூறிவிட்டார்.முழுக்க முழுக்க முன்னேறிய சாதியினரை கொண்டுவந்து இங்கே உட்கார வைத்துள்ளீர்கள். இவர்கள் அப்புறம் என்ன செய்வார்கள் என்றார்.

நிகழ்ச்சி அமைப்பாளர் ஒரு சாகசம் செய்தார்.இங்கே எத்தனை பேர் முன்னேறிய சாதி என்று கேட்க பெரும்பான்மையோர் கைதூக்கினார்கள்.அடுத்த டுவிஸ்ட்டாக இதில் தலித் இடஒதுக்கீட்டை ஆதரித்து பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை மட்டும் எதிர்ப்பவர் எத்தனை பேர் என்றார்.(பாருங்க.எவ்வளவு சாதுரியம்.சகுனிவேலை என்று).

ஆனால் சுயநலமே வாழ்க்கை என்றாகிவிட்ட இந்தியாவின் முன்னேறிய இளைய தலைமுறை எந்த ஒரு இடஒதுக்கீட்டையும் நாங்கள் ஆதரிக்கவில்லை என்று ஒரே குரலில் கூறிவிட முகத்தில் வழிந்ததை துடைத்துக்கொண்டார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.

அதாவது இவர்கள் நம் நாட்டு ஐ.ஐ.டியிலும் அல்லது ஐ.ஐ.எம்மிலும் படித்துவிட்டு நாஸாவிலும் அமெரிக்கன் மல்டிநேஷனல் கம்பெனியிலும் செட்டிலாகவேண்டுமாம்.ஆனால் மூவாயிரம் ஆண்டுகளாக( ஓ.நோ) அடிபட்டவன் முன்னேற கூடாதாம்.நல்லா இருக்குங்க உங்க முற்போக்கு.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு எப்படி பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய ஆட்களுக்கு செல்லாமல் டிசர்விங் மாணவர்களுக்கு அளிப்பது என்பதைப்பற்றி ஒரு பாஸிடிவ்வான கருத்தையோ அல்லது விவாதத்தையோ முன்வைக்காமல் இடஒதுக்கீடே கூடாது என்பது என்ன நியாயம்?

என்னுடைய பழனிச்சாமி பதிவில் தங்கமணி எழுப்பிய கேள்வி முக்கியமானது. இடஒதுக்கீடு பிச்சை என்று நினைக்காதீர்கள்.அது மக்களின் உரிமை.இந்த விஷயத்தை பேசி தீர்க்காமல் மற்றதை பேசவே கூடாது.முடியாது.

தோழி உஷா அவர்களே..

நீங்கள் சந்தேகம் என்று கூறிவிட்டதால் மட்டும் எனக்கு தெரிந்த சில விஷயங்களை போட்டுடைக்கிறேன்.இவ்விடமும் அதே பவ்யம்தான் உஷா:))

இந்து என்ற வார்த்தையை பற்றி:நீங்கள் இங்கு கருத்தை விட்டுவிட்டு பெயரை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குவதை போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. இந்து என்ற பெயரை மட்டும் சொல்கிறீர்களா அல்லது இந்து மதம் என்றால் என்ன என்பதைப்பற்றி சொல்கிறீர்களா என்பதில் எனக்கு குழப்பம் ஏற்படுகிறது.இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.ஆங்கிலேயனை எல்லாம் நாம் இதில இழுக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை.

முஸ்லீம்களில் இருந்தும் கிறிஸ்தவர்களில் இருந்தும், மற்ற பல கடவுள்களை வழிபடும் ஆட்களை ஆங்கிலேயர் இந்த பெயரில் பொதுமைப்படுத்தி இருக்கலாம்.ஆனால் இந்த மக்கள் அனைவரும் பின்பற்றுவது உண்மையில் வேதங்களில் சொல்லப்படும் இந்து மதமா என்பதுதான் முக்கியமான கேள்வி.இது மிகவும் அடிப்படையான விஷயம்.

இதை புரிந்துககொள்ளாமல பலபேர் உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டிருப்பதாக தெரிகிறது(நெத்தியடி) இதை எத்தனை முறை சொன்னாலும் புரிந்துகொள்ளவில்லை என்றால் அதற்கு என்ன?இதை முதலில் தெளிவுப்படுத்திவிட்டு மற்ற விஷயங்களை பேசுவதுதான் முறை.நியாயம்.


புண்ணிய யாத்திரை சமாச்சாரத்தையும் நாம் "நடுநிலைமைவியாதியாக" (கொத்ஸ் கவனிக்க)இருந்து கட்டுடைத்து பார்த்தால் நாட்டார் தெய்வங்கள் எனப்படுவதை வணஙகி வாழ்ந்துவரும் இந்த நாட்டின் பெரும்பான்மையான இனத்தின் மக்கள் காசிக்கு சென்றார்களா? அல்லது ராமேஸ்வரத்திற்கு வந்தார்களா? கேள்வி ஆழமானது.


மற்ற கோவில்களை பற்றியும் தெய்வங்களையும் பற்றியும் நீங்கள் சொல்வது எலலாம் வரலாற்றில் தெளிவாக இருக்கிறது.சங்கரர் மீட்டெழுப்பிய இந்துமதத்தை பற்றிய வரலாற்றை படிக்கவும்.

புத்தமதம் ஆரம்பத்தில் எப்படி இருந்தது? அதை யார் எப்படி எதற்காக ஒழித்துகட்டினார்கள் என்பதையும் வரலாற்றில் தெளிவாகவும் தர்க்கபூர்வமாகவும் பலபேர் எழுதிவிட்டனர்.படியுங்கள்.

கல்யாண சடங்குகள் மட்டும் அல்ல.எல்லா சடங்குகளும் அருகில் உள்ள மக்களுடன் சில விஷயங்களில் ஒத்திருக்கும்.இது சாதாரண விஷயம்.மேலும் நீங்கள் சொல்லும் பல சமூக சடங்குகள் எங்கள் சாதியிலும் இன்னும் பல சாதிகளிலும் இல்லை.இப்போது மெதுவாக உள்ளே வருகின்றனவா என்று எனக்கு தெரியவில்லை.

பலமுறை சொன்னதுதான்.பலபேர் கரடியாக கத்தியதுதான்.மீண்டு்ம் கரடியாக மாறி கத்துகிறேன்.இந்து மதம் என்று நீங்கள் முன்னிறுத்துவது ஒன்று. ஆனால் பெரும்பான்மையோர் பின்பற்றி வந்தது வேறு.இதை புரிந்தும் புரியாமல் நீங்கள் பேசினால் இந்த வியாதிக்கு மருந்து இல்லை.

ஒரு பழமொழியை தமிழ்கூறுநல்லுலகத்தின் அனுமதியுடன் மாற்றுகிறேன்.
உண்மை சுடும் என்பது பொய். நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத உண்மை மட்டும்தான் சுடும்.

Saturday, April 08, 2006

இப்படியும் பார்க்கலாம் சார் -2

முதல் பாகம் இங்கே கிளிக் செய்யவும்.


சார்,

கெடா வெட்டினால் கைது செய்வார்கள் என்பதை எதற்கு சொன்னேன் என்றால் உங்கள் தனிப்பட்ட இன அடையாளம் இங்கே அழிக்கப்படுகிறது. ஏண்டா கண்ணு ,கெடா வெட்டினா போலீஸ் பிடிக்குமாமேன்னு எங்க தாத்தா கேட்டா அவருக்கு நான் பகவத் கீதை கிளாஸ் எடுத்தா விளக்க முடியும்? அல்லது அவருக்கு அது புரியுமா ?

அவ்வளவு ஏன்?

உங்க "என் பைபிள்" பதிவுக்கு வருவோம் . நான் தான் அநாச்சாரம். ஒரு குப்பனோ சுப்பனோ, கோவிந்தனோ உங்களிடம் வந்து ஐயா,உங்கள் பைபிள் பதிவை நீச மொழியான தமிழில் படித்தேன், எனக்கு பிடித்திருந்தது .நானும் பரிசுத்த ஆவியான ஏசுவை ஏத்துக்கிறேன்னு சொல்றான்னு வைங்க. நீங்களும் அவனை சர்ச்க்கு கூட்டிட்டு போய் பாப்டைஸ் செய்து பிலிப் கோவிந்தன்னு பெயரை மாத்தி விடறீங்க. அடுத்த நாள் காலைல ஜோசப் மதமாற்றம் பண்றார்னு போலீஸ் வந்து உங்க வீட்டு முன்னாடி நிக்குதுன்னு வைங்க.

எப்படி இருக்கும் சார்?

சத்தியமா அன்னைக்கு ஒரு திராவிட ராஸ்கல்தான் உங்களுக்கு உதவியா வருவான். "தேசியவியாதி" (கொத்ஸ் கவனிக்க) வரமாட்டான்.

தெரியாமத்தான் சார் கேட்கிறேன.தமிழ்ப்பற்று இருப்பது அவ்வளவு கேவலமான விஷயமா?

தொல்காப்பியம் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு எழுதப்பட்டதாக சொல்கிறார்கள. அதில் அவ்வளவு இலக்கணம் எழுதியுள்ளான் என்றால் மொழி எப்போது தோன்றியிருக்கும் அந்த மொழியோட வாரிசு சார் நம்பள்ளாம். எவ்வோ பெரிய விஷயம். .பெருமைப்படுங்க.இந்தியோட வயசு என்ன?இன்றைய இந்தியாவில் இந்தி இல்லாமல் வாழ்வது ஒரு பிரச்சினையே இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா ?

இந்த தமிழ்மொழிதானே நம்மை சேர்த்தது. அமெரிக்கா ,லண்டன், இத்தாலி, சுவீடன், கிரீஸ் என்றெல்லாம் உலகம் முழுவதும் இருந்து நம்ப பிளாக்கை யார் படிக்கிறார்கள்? தமிழர்கள் தானே. நீங்கள்ளாம் இங்கிலீஷ் பிளாக் வைச்சு வெள்ளைகாரனை படிக்க வைக்கறீங்க.எனக்கெல்லாம் இங்கிலீஷ் தெரியாது. தமிழ்தான் தெரியும்.

கிறிஸ்தவன்,இஸ்லாமியன் என்றெல்லாம் மதரீதியான பிரிவினை இருந்தாலும் நம்மை முதலில் சேர்ப்பது மொழிதான். எங்கயோ வடஇந்தியாவோ அல்லது வெளிநாடோ போறீங்க.தமிழ் யாராவது பேசகேட்டா உங்களுக்கு என்ன தோணுது?

செத்துப்போன மொழியான சம்ஸ்கிருதத்தை இன்னமும் தேவபாசைன்னு பேசற "தமிழர்களும்" இருக்கற இடம் தான் இது. இவங்களுக்கு சம்ஸ்கிருதம் எழுதவும் படிக்கவும தெரியாது.ஆனாலும் இது தேவபாசை என்பார்கள் . தமிழ் காட்டுமிராண்டி பாசை என்று பெரியார் சொன்னாரே என்பார்கள்.அங்கேதான் பெரியார் ஞாபகம் வரும் இவர்களுக்கு.

சரி.விடுங்க.மொழியில் எமோஷன்ஸ் வேண்டாம் . மொழி எப்படி தோன்றியிருக்கும் என்று அறிவியல்பூர்வமாக வருவோம்.அப்படி பார்த்தாலும் சம்ஸ்கிருதம் எப்படி தேவ பாசை ஆச்சு? கடவுள் அந்த மொழியில் பேசினாரா? இதை இந்த இடத்தில் நிறுத்துவோம்.இது மேலும் நீட்டினால் பிரச்சினை ஆகும் .என்னால் ஆகாது சாமி.

இன்று உலகம் முழுவதும் இனம்,மொழி என்று அவனவன் அவனுடைய வேரை தேடறான் சார்.அதில் பெருமையடையறான். ஆனா நாம தாழ்வு மனப்பான்மையில் புழுங்கறோம்.

ஏன் தாழ்வு மனப்பான்மை வந்தது? மொழியை பற்றி இனத்தை பற்றி பேசுதல் கேவலம் என்று கட்டமைக்கிறார்கள். அதாவது உங்கள் மொழியையும் இனத்தையும் பற்றி பேசுவது மட்டுமே இங்கு கேவலமாக கட்டமைக்கப்படுகிறது.அடுத்த மொழியைப்பற்றி அழிக்க முயற்சி செய்பவர்கள்தான் வெட்கப்படவேண்டும் .நாம் ஏன் படவேண்டும் வெட்கம்?ஆனால் நம்மை ஆள்பவர்கள் வேறு மாநிலத்தவர் என்பதில் பெருமை கொள்கிறீர்கள் நீங்கள்?

நீங்க இங்க ஒரு மிகப்பெரிய முன்னுதாரணம் சார். உங்கள் பதிவில் நீங்கள் எழுதும் அனுபவங்களை பார்த்து இங்கு பலரும் பிரமிக்கிறோம்.உங்களிடம் பலநேரங்களில் மோதிய ஊர் பெரிய மனுசர்கள், மனநிலை சரியில்லாத வாடிக்கையாளர்கள், மேல்சாதியினர், கீழ்சாதியினர் ஆகியோரை நீங்கள் ஒவ்வொரு முறையும் அவர்களுக்குரிய மரியாதையை கொடுத்தே டீல் செய்துள்ளீர்கள்.ஆனால் கருத்து தளத்தில் அதை நீங்கள் எடுப்பதில்லை. உதாரணத்திற்கு சாக்கடை அள்ளுபவர்களை அப்படியே விடுங்கள் என்பதாக ஒருமுறை கூறினீர்கள். நாம் கூடச்சேர்ந்து அள்ளவில்லை என்றாலும் அந்த நிலையை மாற்றவேண்டும் என்று மனப்பூர்வமாக நினைப்பதில் ஒரு கருத்தொற்றுமையை கொண்டு வருவதை உங்கள் கருத்து தடுக்கிறதல்லவா?

அப்படியானால் இந்தியாவின் மேல் மரியாதை உனக்கு இல்லையா என்று தயவு செய்து கேட்காதீர்கள்.எனக்கு என்ன மரியாதை இந்தியா கொடுக்கிறதோ அதே அளவு மரியாதையோ அல்லது அதற்கும் ஒருபடி மேலேயோ நான் எப்போதும் கொடுத்தே வந்திருக்கிறேன். இந்திய தாய் கண்ணீர் விடும் அதே நேரம் தமிழ்த்தாய் கதறுகிறாள். மன்னித்துவிடுங்கள். என்னால் முதலில் தமிழ்த்தாயை தான் பார்க்க்முடிகிறது.

மீண்டும் மீண்டும் சில நண்பர்கள் இந்து மதம் உனக்கு சுதந்திரம் கொடுத்தது என்று கூறி வருகிறார்கள்.இந்தி தெரியாதா ..நீ எல்லாம் இந்தியனா என்று சிலர் கேட்கும் ஆபாச கேள்விக்கு(இந்த கேள்விக்கு நமக்கு குற்ற உணர்ச்சி வந்தால் அய்யோ பாவம் நீங்கள்) இது எந்த விதத்திலும் சளைத்ததல்ல.

அவர்களுக்கு ஒன்று. இந்து மதம் என்று எதை நீங்கள் கூறுகிறீர்கள்? இங்கு முத்துகுமரன், குழலி ஆகியோர் கடவுள் பக்தி உள்ளவர்கள் என்று நினைக்கிறேன்.(உறுதியாக தெரியவி்ல்லை).அவர்கள் தங்களை இந்து என்கிறார்களா? மீண்டும் போய் தங்கமணி பதிவுகளை படியுங்கள்.

இங்கு பொதுவாக ஆதிக்கம் என்றுதான் கூறிஉள்ளேன். தனிப்பட்ட யாரையும் அல்ல. நேற்று இரவு நண்பர் டோண்டுவுடன் ஒரு மணிநேரம் தொலைபேசியப்போதும் இதையே தான் சொன்னேன். டோண்டுவை என்றுமே நானும் என்னுடைய சக திராவிட ராஸ்கல் ஜோவும் பேரன்புடன்தான் அணுகியுள்ளோம்.ஆகவே அது சம்பந்தமாக யாராவது எழுதினால் ட்ராஷ் செய்வேன் என்பதை பேரன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதைத்தான் திராவிட உணர்வுகளின் ஒரு கூறாக நான் முன்வைக்கிறேன்.கருணாநிதி குடும்பத்தை, ராமதாஸ் குடும்பத்தை , திருமாவளவன் குடும்பத்தை தாண்டி இதில் சிந்திக்க வேண்டியது ஏராளம்.இவர்களை எல்லாம் கிண்டல் செய்யும் அறிவாளிகள் இவர்களை கிண்டல் செய்வது போல் கிண்டல் செய்வது இவர்களை இல்லை சார் .நம்முடைய உணர்வுகளை, உரிமைகளை, கருத்துக்களை எல்லாவற்றையும்தான்.

ஆகவே இதில் உள்ள நுண்ணிய அரசியலை பின்நவீனத்துவ நோக்கில் அணுகினீர்கள் என்றால் ( அட..சட். என்னுள் உள்ள அரைகுறை இலக்கியவாதி இப்படி அடிக்கடி எட்டிப்பார்க்கிறான்.மன்னியுங்கள்.)

இதில் உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல நானும் ஜோவும் எங்கள் உணர்வுகளை உங்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறோம். நாங்கள் இளையவர்கள்.ஏதாவது குற்றம் குறை இருந்தால் மன்னியுங்கள் அய்யா.நன்றி.


(கொஞ்ச நாளைக்கு நான் லீவு. பின்னூட்ட பெட்டி திறந்து கிடக்கும்.என் பதில்களை எதிர்பார்க்கவேண்டாம்.விவாதம் செய்பவர்கள் செய்யலாம்)

தேர்தல் அறிக்கைகளில் மாற்றம் -பரபரப்பு

கருணாநிதி கட்சி தேர்தல் அறிக்கையில் எல்லாருக்கும் கலர் டிவி தருவோம் என்று மயிர்கூச்செறியும் அபத்த வாக்குறுதியை அறிவித்தது பலருக்கும் வயிற்றி்ல் புளியை கரைத்துள்ளது. இதை கண்ட கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை மாற்றி வெளியிட்டுள்ளன.அவை பின்வருமாறு...

அதிமுக

அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிப்பெண் தரும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.

இளைஞர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு நிறைய டாஸ்மாக கடைகளை திறக்க உங்களின் தங்கத்தலைவி தாயுள்ளத்தோடு ஒத்துக்கொண்டுள்ளார். மேலும் வீட்டுக்கு ஒரு டாஸ்மாக கடை என்பது தான் இந்த ஆட்சியின் லட்சியம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைவரும் அமைச்சர் என்ற திட்டத்தை தொடர்ந்து அனைவரும் எம்மெல்லே என்று அரிய திட்டத்தையும் உங்கள் சகோதரி கொண்டு வர எண்ணி உள்ளார்.எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற அடிப்படையில் வர உள்ள இந்த திட்டம் தீய சக்தியாம் கருணாநிதி குடும்பத்தின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிக்கும்.

கச்ச தீவு மட்டுமல்ல, இலங்கை தீவையே வாங்கி வர சொல்லி அன்பு தம்பிகள் காளிமுத்து, ஜெயகுமார் ஆகியோரை அனுப்பியுள்ளேன்.

திமுக

கலர் டிவி கொடுப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதில் சன் தொலைக்காட்சியும் அதன் கோலங்கள், சிதம்பர ரகசியம் போன்ற முற்போக்கு சீரியல்களை இலவசமாக கேபிள் வாடகை இல்லாமல் பார்க்க ஆவண செய்யப்படும்.

தேர்தல்களில் கூட்டணி மாறுபவர்கள் குறைந்தது ஆறு மாதத்திற்கு முன்பே மாறிவிட வேண்டும் என்று சட்டதிருத்தம் கொண்டு வருவோம்.

கண்ணகி சிலையை நிறுவுவதோடு இலலாமல் எதிர்காலத்திலும் அதை பெயர்க்க இயலாதவாறு வெளிநாட்டு தொழிற்நுட்பத்தில் கான்கீரிட் அமைப்போம்.

விஜயகாந்த்

ரேசன் பொருட்களை வீட்டுக்கே கொண்டு வந்து தருவதோடு இல்லாமல் சமைத்தும் தருவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளாக உங்களை ஆண்ட இவர்கள் இதை செய்தார்களா?

அனைத்து ஏழைகுடும்பங்களுக்கும் விஜயகாந்தின் ஏழைசாதி படம் போட்டு காட்டப்படும்.

ஹி ஹி இதெல்லாம் ஒரு கற்பனைதான்.

Friday, April 07, 2006

ஜோசப் அய்யாவுக்கு ஒரு பகிரங்க மடல்

நீங்கள் சாதியை ஒழிக்க போராடுகிறேன் என்று என் கட்டுரையை காட்டி எழுதியது என் மனதை வருத்தமடைய வைத்துள்ளது. உங்களது பல கருத்துக்கள் எனக்கு உவப்பானதில்லை என்றாலும் நான் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை.ஆனால் நண்டுகளும் சிண்டுகளும் இதைவைத்து கொண்டு ஆகா பேஷ் பேஷ் என்று சொல்லும்போது தான் இதைப்பற்றி எழுதுவதின் தேவையை உணருகிறேன்.


சில நாட்களுக்கு முன்பு , கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை மிக
கடுமையாக" விமர்சித்து நீங்கள் எழுதியிருந்தீர்கள். இப்போது உங்களுக்கு ஆமாம் சாமி போடுபவர்கள் அப்போது அதை கண்டிக்கவில்லை. நீங்கள் சொன்ன ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தின் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? தருமி கூட அதை கேட்டார்.உடனே என் நம்பிக்கை அந்தரங்கமானது என்று சொல்லிவீட்டீர்கள்.

அப்படி என்ன நாங்கள் பாவிகளா?.கடவுள் நம்பிக்கை இல்லாத பல நல்லவர்களை மனிதாபிமானிகளை நான் காட்டமுடியும். இதற்கு கருணாநிதியின் மஞ்சள் துண்டையும் தாண்டி நாம் பார்க்கவேண்டி உள்ளது.
கடவுள் பக்தி இல்லை என்றால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்துகொண்டு எல்லோரையும் மிரட்டிப்பிழைத்து கொண்டு இருப்பார்கள் என்றெல்லாம் குழந்தைத்தனமான கற்பனையை விடுங்கள்.

பெரும்பான்மையுடன் உங்களை அடையாளப்படுத்திக்கொள்வது சந்தோஷம்தான். ஆனால் நாங்களும் கேவலமானவர்கள் இல்லை. வரலாற்றை எடுத்து பாருங்கள்.எல்லா காலத்திலும் எங்களை போன்றவர்கள் இருப்பார்கள். எங்கள் இருப்பையே கேள்விக்குட்படுத்துவதையே ஆதிக்கம் என்கிறோம்.அதாவது ஏதோ இந்த பூமியில் நாங்கள் வாழவே தகுதியில்லாதவர்கள் போலவும் கடவுள் பக்தி உள்ள நீங்களெல்லாம் தான் உத்தமர்கள் போலவும் நீங்களே எழுதலாமா?எத்தனை பிராமணர்கள் இந்த நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்று என்னால் சொல்லமுடியும்.

நீங்கள் எந்த அளவிற்கு உருகி பைபிள் எழுதுகிறீர்களோ அதே உணர்வில்தான் நாங்களும் எழுதுகிறோம். நீங்கள் கடவுளை கும்பிட்டால் நாங்கள் மனிதாபமானத்தை கும்பிடுகிறோம்.

" டேய் மணியா...சாமி இல்லைன்னு சொன்னவன் கோயிலை இடிச்சதில்லை..சாமி இருக்குன்னு சொன்னவன்தான் கோயிலை இடிச்சான்"

(---சத்யராஜீன் அமைதிப்படையில் ஒரு வசனம்)


(சினிமாவை வைத்து சொன்னால்தான் மக்களுக்கு புரியும்)

என்னுடைய இந்த வார கட்டுரைகளில் எங்காவது என் சாதியை பாராட்டி சீராட்டி எழுதியுள்ளேனா?

மேற்படி கட்டுரை ஒரு ஒப்பீடுதான். என் பதிவுகளை நீங்கள் முழுமையாக படிக்கவில்லை.திராவிட கருத்தாக்கம் என்பதை எந்தளவிற்கு கொச்சையாக நீங்கள் புரிந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

சார், இந்தியா என்றுமே ஒரு நாடாக இருந்ததில்லை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? இங்கு பல்வேறு இனங்களை சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். சுதந்திரத்திற்கு பிறகு ஒரே நாடாக ஆனோம். யாரை கேட்டு ஒரு நாடாக ஆனோம். எல்லோருக்கும் சுதந்திரமும் பாதுகாப்பும் கிடைக்கும் என்றுதானே.ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நாகரீகம் கலாச்சாரம், மொழி ஆகியவைதான் நம் எல்லோருக்குமானது அல்லது உயர்ந்தது என்பதை எப்படி சார் கேள்வி இல்லாமல் ஏற்றுகொள்கிறீர்கள்? simply i cannot imagine it.


நமக்கென்று ஒன்றுமே இல்லையா சார்? நாமெல்லாம அநாதைகளா சார்? என்னுடைய தாத்தா பாட்டிக்கு கீதை தெரியாது சார். அவங்கள்ளாம் கள் குடித்து முனியப்பனுக்கு கடா வெட்டித்தான் வாழ்ந்தார்கள். நாளைக்கு அவங்க கோயிலுக்கு போய் கிடா வெட்டினார்கள் என்று குற்றம் சுமத்தி அவர்களை அரசாங்கம் கைது செய்தால், அது நியாயம் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் இந்த நாட்டில் என்ன நியாயம் சார் இருக்கு?

(தொடரும் )

சில சுவையான பின்னூட்டங்களும் விளக்கங்களும்

தெருவோர அரசியல் பொதுகூட்டத்தில் சோடாவை குடித்துவிட்டு, தலைவர் வரும்வரை, ஜார்ஜ் புஷ்ஷிற்கு சவால் விட்டு பேசும் உடன்பிறப்பு ரேஞ்சிற்கு என்னை கொண்டுவந்துவிட்டார் ஒரு நண்பர்.ஒரு நண்பர் நான் நடுநிலைமை வாதியே இல்லை என்று உணர்ச்சிவசப்பட்டார்.அவர்களுக்கு ஒரு விஷயம். என்னிடம் திமுக உறுப்பினர் கார்டு எல்லாம் இல்லை.

என்னுடைய கலைஞர் சம்பந்தப்பட்ட கட்டுரைத்தொடரை படித்த மற்றும கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. சில பதில்களை பதிவாக போடலாம் என்ற தோன்றியது.

நடுநிலைமை என்பது என்ன?

தினமலர். ஒரு நடுநிலை நாளிதழ் என்று போட்டுகொண்டு விஷவிதை தூவுவதா? அல்ல.

(என்னுடைய பதிவுகள் தினமலரின் பரிந்துரை இல்லாமலே பதிவுக்கு 500 பேர் என்ற விகிதத்தில் படிக்கப்படுகிறது.ஹி.ஹி.(முத்து அடங்குடா டேய்)

என்னை பொருத்தவரை ஒரு கட்டுரையோ ஒரு விமர்சனமோ சில அடிப்படை விஷயங்களை பொறுத்து எழுதப்படுகிறது.இந்த கட்டுரையை பொறுத்தவரை இது இருபெரும் திராவிட தலைவர்களை மட்டும் பற்றிய வெறும் ஒப்பீடுதான்.

என்னுடைய அடிப்படை எண்ணங்கள் சார்ந்து நான் எழுதுகிறேன். மற்றவர்கள் அவர்கள் அடிப்படை எண்ணங்கள் சார்ந்து எழுதுவார்கள்.படிப்பவர்கள் சொந்த முடிவுக்கு வரவேண்டும்.அதுதான் நடக்கவேண்டிய விஷயம். நான் சொல்கிறேன். ஆகவே நீ நம்பு என்பதெல்லாம் விவாதம் அல்ல.

என்னுடைய கட்டுரையின் அடிப்படை மக்கள்நலதிட்டங்கள், சர்வாதிகாரம், ஊழல், இந்துத்வா மற்றும் சில. மக்களை, சமுதாயத்தை பாதிக்கக்கூடிய விஷயங்களை பேசுபொருளாக வைத்து நான் எழுதினேன்.மற்றபடி ஒரு நண்பர் கூறியபடி மதுரை சிறுவியாபாரிகளுக்காகவாவது ஜெயலலிதா ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை நான் ஒத்துக்கொள்ளவில்லை.அந்த பிரச்சினையை சரிசெய்ய பல்வேறு மாற்று ஏற்பாடுகள் உள்ளன.(சுப்ரமணியன்சாமி இட்லி கடையை அதகளம் செய்தாராமே) .

சிலர் ஜெயலலிதாவும் நிறைய மக்கள் நலதிட்டங்களை செய்துள்ளார் என்றார்கள். இதில் இரண்டு விஷயங்களை பார்க்கவேண்டும். முதலில் விழிப்புணர்வு உள்ள இன்றைய சமுதாயத்தில் யார் ஆட்சி செய்தாலும் ஓரளவு இந்த நலத்திட்டங்களையோ சலுகைகளையோ கொடுத்துத்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லாமல் கொடுக்கும் ஜெயலலிதாவையும் பொதுவாகவே மக்கள் நல திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கருணாநிதியையும் நான் ஒப்பிட்டேன். அடுத்ததாக புள்ளி விவர அடிப்படையிலும் நாம் ஒப்பிடலாம்.முடிவு அவரவர் கையில்.

இந்துத்வா என்ற விஷயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் வேதத்தை அடிப்படையாக கொண்டு பார்ப்பனீயம் தான் வெளிப்படும். இதை தனிப்பதிவாகவே என்னால் எழுதமுடியும்.சொல்லுங்கள். எழுதுகிறேன்.
அதற்காக என்னால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளையும் சப்போர்ட் செய்யமுடியாது.இதன் அடிப்படையிலும் நான் ஜெயலலிதாவின் கொள்கைகளை விரும்பவில்லை.

நண்பர் எஸ்.கே கலைஞா ஆட்சியாக இருந்தால் சங்கரராமன் செத்திருக்க மாட்டான் என்பது மூடநம்பிக்கை அல்லவா என்று கேட்டிருந்தார். ஆகவே மூட நம்பிக்கை என்றால் என்ன என்றே தெரியாத ஆட்கள் இங்கே இருக்கிறார்கள். அதற்கு பொட்டீக்கடை சரியான பதிலை கூறிஉள்ளார்.அதை சுருக்கமாக இங்கே தருகிறேன்.

இந்த அரசு குற்றம் சாட்டியுள்ள நபர்கள்தான் இக்குற்றத்தை செய்தார்கள் என்று வைத்துக்கொண்டால் அந்நபர்கள் கலைஞர் ஆட்சியாக இருந்திருந்தால் இக்குற்றத்தை செய்ய துணிந்திருக்கமாட்டார்கள் என்பதுதான் அதற்கு பொருள்.இக்குற்றத்தை செய்ய மோட்டிவ் வேறு யாருக்கும் இல்லை என்பதுதான் இந்த கேசின் சுவாரசியமே.

சாணக்யன் கூறியுள்ள சன் டிவியை பற்றி வேண்டிய மட்டும் பேசியாயிற்று. தினமலருக்கு இருக்கும் உரிமை சன்டிவிக்கும் உண்டு. பிடித்தவர்கள் பாருங்கள்.மற்றவர்களுக்கு ரிமோட் இருக்கவே இருக்கிறது.நுகர்வு கலாச்சாரம்.ஆனால் இந்த வகை பிரச்சாரம் எடுபடலாம்.காரணங்கள் பல.


விஜயகாந்த் ஒரு மாற்றா என்று பார்த்தாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.அவர் அரசியலுக்கு வந்ததை நான் கேள்விக்குட்படுத்தவில்லை.ரஜனிகாந்த என்பவருடன் ஒப்பிட்டால் இவர் 1000 மடங்கு நல்லவர்.நான் விஜயகாந்தை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்.

ரஜினிப்பற்றி சில

1.தன்னுடைய படங்கள் ஓடவேண்டும் என்பதற்காகவே ரசிகர்களை உசுப்பேத்தி சுரண்டியவர் ரஜினிகாந்த்.யாராவது மறுக்கமுடியுமா?

2.தன்னை நம்பி பலர் இருக்கிறார்கள் என்றும் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்யமுடியும் என்றும் நம்பும் ஒருவர்,பக்திமான், ஏற்கனவே சில தலைமுறை களுக்காவது சொத்து சேர்த்துவிட்ட ஒருவர் அரசியலுக்கு வர தயங்க தேவையில்லை.ஆனால் இவர் சினிமா பாணியில் மக்கள் எல்லாம் தன் வீட்டு முன்னால் வந்து தன்னை முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொள்ள வற்புறுத்துவார்கள் என்று நம்புவதாக தெரிகிறது.

3.ஒருவேளை இவர் பதவிக்கு வந்தால் லதா ரஜினிகாந்தையாவது இவர் கண்ட்ரோல் செய்யமுடியுமா? (ரஜினி 25 நிகழ்ச்சி ஞாபகம் வருகிறதா)

(இதற்கெல்லாம் எழுத்தாளர் ரஜினி ராம்கி பதிலளிக்கவேண்டியதில்லை)

விஜயகாந்திற்கு வருவோம்.அவா தாராளமாக அரசியலுக்கு வரலாம்.ஆனால் அவர் அரசியல் செய்யும் பாணி என்ன?

ஆளுங்கட்சி நன்றாக ஆட்சி செய்தால் இவர் ஏன் கட்சி துவக்குகிறார்? இவர் எடுத்தவுடன் கலைஞரை மட்டும் தாக்க துவங்கினார்.பிறகு பாலம் அது இது என்று அவர்கள் சில விஷயங்களை இவருக்கு விளக்கியவுடன் பிறகு இருவரையும் (ஆளுங்கட்சி, எதிர்கட்சி ) தாக்குகிறார்.

இவர் கட்சி சட்டத்தில் இவர்தான் எல்லாம் என்று இருக்கிறதாம். சந்திரபாபு நாயுடு எஃபக்ட் இது. ஜனநாயகம். மற்றபடி இவர் நல்லவராக இருக்கும் பட்சத்தில் கொஞ்சம கொஞ்சமாக வளருவதில் தவறில்லை. திருமாவளவனும் நல்லவர்தான். விஜயகாந்தைவிட அவர் அதிக காலமாக அரசியலில் இருக்கிறார்.அவரை ஏன் யாரும் மொழியவில்லை?

நல்லவேளை.சசிகலா குடும்பத்தை யாரும் ஆதரிக்கவில்லை. இன்றைய முதல்வர் ஜெயலலிதாவை எம்.ஜீ.ஆர் போல் கல்ட் ஃபிகர் ஆக்கி நாளை ஜெயலலிதாவின் பெயரை சொல்லி சசிகலா குடும்பம் ஒரு டெர்ம் ஆட்சி செய்தால் என்ன ஆகும்? எம்.ஜீ.ஆர் செத்ததே இன்னும் பலருக்கு தெரியாது என்ற அதிர்ச்சி தகவல் உலா வரும் தமிழகத்தில் மேலும் மேலும் விமாசனத்திற்கு இடம் தராத கடவுள்கள் உருவாவது நல்லது அல்ல. ஜெயலலிதா எத்தனை பிரஸ் மீட் நடத்தியுள்ளார்? அதில் எத்தனை மீட்டிங்கில் கோபப்படாமல் கடைசிவரை அமர்ந்துள்ளார்?

ஸ்டாலின் பரவாயில்லை.தயாநிதி மாறனைத்தான் எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று சில நண்பர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.அதை நான் ஒத்துக்கொள்கிறேன்.தயாநிதிக்கு என்று தனியாக ஏதும் திறமை இருப்பதாக தெரியவில்லை. முக்கியமான துறையை முக்கியமான நேரத்தில் ஹேண்டில் செய்வதால் கொஞ்சம் பெயர். (இந்திய மக்கள் தொகை
ஆயிரம் கோடியாமே)மற்றபடி சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயங்களை அவர் மேல் போட்டுப்பார்த்து புகழ்வதாகவே எனக்கும் தோன்றுகிறது.(ராஜீவ் காந்தி இல்லாவிட்டால் இந்தியாவிற்கு கம்ப்யூட்டரே வந்திருக்காது என்று சொல்வது போலத்தான்)

சர்வாதிகாரம்,பாசிசம்,நாஜியிசம் என்று அறிவுஜீவியாக மாறி எழுதுவது எனக்கு கடினம்.முயற்சிக்கிறேன்.

வக்கீல்கள் மீதான தாக்குதல்கள், சொந்த கட்சி எம்.எல்.ஏக்கள் மீதான தாக்குதல்கள்( இவர்கள் போலிஸ்க்கு போவதில்லை) மற்றும் கடைசியாக கராத்தே தியாகராஜன்.இந்த விஷயங்கள் உணர்த்துவது என்ன?

சென்னையில் ஸ்டாலினை பதவியில் இருந்த அகற்ற சாம,பேத,தான,தண்ட முறையிலான தியாகராஜனின் சர்வீஸ் தேவைப்பட்டது. ஆனால் இப்போது சென்னைக்கு உள்ளே அவரால் வரமுடியவில்லை.

கருத்துகணிப்புகள் கூறுவது போல் அதிமுக வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு சென்னை வரமுடியாதா என்று கராத்தே தியாகராஜன் பயந்து கிடப்பதாக தகவல்கள் வருகின்றன்.இன்னும் சிலர் கூறும் நிரந்தர முதல்வர் என்று வார்த்தைக்ள அவரை நிறைய துன்புறுத்துகிறதாம்.மணிசங்கர அய்யர் பாதுகாப்பில் எங்கோ பம்பாயில் இருந்தாராமே.அது சரி.மணிசங்கர அய்யருக்குதானே தெரியும் இந்த கஷ்டம்.:)))

கம்யூனிஸ்ட் தோழர்களை விமர்சித்துத்தான் இந்த கட்டுரையே எழுத ஆரம்பித்தேன்.ஆனால் திசை மாறிவிட்டது. அந்த விமர்சனங்களை பிறகு வைத்து க்கொள்வோம்.இதற்கு காரணம் அவர்களின் சில கொள்கைகளை நான் இன்னும விரும்புவதால்தான்.

நண்பர்களுக்கு நன்றி.தொடர்புடைய சுட்டியாக இதையும் படிக்கலாம்.

Thursday, April 06, 2006

கலைஞரை ஏன் ஆதரிக்கவேண்டி உள்ளது?

முதல் பாகம்


இரண்டாம் பாகம்


ஜெயலலிதா அத்வானி, வாஜ்பாய் ஆகியோர்களைவிட பழுத்த இந்துத்வாவாதி என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். கரசேவையை ஆதரித்தது முதற்கொண்டு அவரின் பல்வேறு நடவடிக்கைகள் அதை காட்டுகின்றன. இத்தனையும் மீறி ஜெயலலிதாவை சிறுபான்மை மக்கள் ஆதரித்தால் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.கருணாநிதி அதுபோல் ஏதாவது கருத்தை வெளியிட்டுள்ளாரா? நடந்துகொண்டுள்ளாரா?

தமிழகத்தில் இன்று இந்துத்வா பல்வேறு "இலக்கியவாதிகள்"(வலையுலக இலக்கியவாதிகளும் இதில் அடக்கம்) உதவியுடன் மீண்டெழுந்து இருக்கும் இன்றைய நிலையில் இதை ஒழிக்க கலைஞரை விட்டால் ஆள் கிடையாது என்பதுதான் இன்றைய நிதர்சனம். இதைத்தான் திராவிட அரசியல் என்றேன். மற்றும் பார்ப்பனீய எதிர்ப்பு, மொழிப்பற்று, இனப்பற்று,அடையாளம் காத்தல்,சுயமரியாதை ஆகியவையும் திராவிட அரசியலில் உண்டு.

சங்கராச்சாரியரையும் தைரியமாக கைது செய்தார் ஜெயலலிதா என்று கூறுகிறார்கள். கலைஞர் இருந்திருந்தால் கைது செய்திருக்க மாட்டார் என்பதும் சிலரின் வாதம். ஆனால் கலைஞர் ஆட்சியாக இருந்திருந்தால் சங்கரராமன் என்ற அப்பாவி செத்தே இருக்கமாட்டான் என்பதுதான் என் வாதம்.

பெரியார் எஃபக்டில் இன்னும் சிலர் திராவிட கட்சிகளின் மீது (குறிப்பாக திமுக மற்றும் கலைஞர் மீது) மீது கடுப்பாக இருக்கிறார்கள்.(ஐந்து வயதில் இருந்து குழந்தைகளுக்கு இந்த கருத்தை ஊட்டி வளர்ப்பார்கள் போல).என்னுடன் ஆபிசில் வேலை செய்யும் மேற்படியார் ஒருவர் கருணாநிதி ஓழிந்தால்தான் தமிழ்நாட்டுக்கு நிம்மதி என்று கூறி என்னை குலைநடுங்க வைத்தார்.அப்போது அவர் கண்ணில் தோன்றிய கொலைவெறியில என் முதுகுத்தண்டு சில்லிட்டுப்போனது. தங்களுடைய ஆதிக்கம் குறைந்தது இவரால்தான் என்று அரைகுறையாக புரிந்துக்கொண்டு அவரை கண்மூடித்தனமாக எதிர்க்கும் சராசரிகள்தான் இங்கு அதிகம்.

நமது நண்பர் சந்திப்பு கூறியதுபோல் சட்டமன்ற ஜனநாயகம் என்று ஒன்று உள்ளது.ராசிபுரத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ பி.ஆர்.சுந்தரம் தனி ஆளாக நின்றுகொண்டு முரட்டுவாதம் பேசி திரிந்தார்.அவரையும் ஜனநாயக முறைப்படித்தான் கலைஞர் எதிர்கொண்டார். சட்டசபையில் அதிமுக அமைச்சர்கள் நடவடிக்கைகளுக்கும் திமுக அமைச்சர்கள் நடவடிக்கைகளுக்கும் வித்தியாசம் இருந்ததா இல்லையா?

இந்த அழகில பலருக்கும் வாய்ப்பு எம்எல்ஏ பதவி மந்திரி பதவி அதிமுகவில் கொடுப்பதை பற்றி பலர் புளகாங்கிதமடைகிறார்கள்.எல்லா கோமாளிகளும் ஒரு டெர்ம் இருந்து சம்பாதிச்சுக்கலாமாம்.என்ன கூத்து இது?

திமுக சார்பு பதிவாக தெரிகிறதே என்று நீங்கள் நினைக்கலாம்.கலைஞர் வாரிசு அரசியல் விஷயத்தில் சறுக்கினாலும் எனக்கும் என்னை போன்ற லட்சோப லட்ச திராவிட ராஸ்கல்களுக்கும் வேறு வழி இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இது வெறும் தேர்தல் அரசியல் மட்டும் இல்லை.

நாள் முழுதும் கிரிக்கெட் பார்த்து இந்தியா தோற்றுவிட்டால் நெஞ்சில் அறையும் சோகம், வெறுமை ஒரு மணிநேரத்திற்கு மேல் இருக்காது. அதுவே தான் நாளை திமுக தோற்றாலும் எனக்கு இருக்கும்.ஆனால் அதற்காக யார் ஜெயிக்கவேண்டும் என்ற தன் ஆசையை மனதில் மறைத்துக்கொண்டு வாழ்ந்து, தான் ஆசைப்பட்டது நடந்தால் மட்டுமே உடனே வெளியே வந்து அட்டை கத்தியை வீசி போர் புரிவது எனக்கு பிடித்தமான விளையாட்டு அல்ல.

கொள்கை, வெங்காயம் எல்லாவற்றையும் கலைஞருக்கு மட்டும் போட்டுபார்த்து மற்றவர்களுக்கு பெனிபிட் ஆஃப் டவுட்டை கொடுத்து கள்ள சந்தோஷம் அடைபவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.வாழ்க நடுநிலைமை.

இரண்டு மட்டைகளும் ஊறும்/ஊறிய குட்டைகள் வேறு வேறு என்பதை ஓரளவு எடுத்துக்கூறி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.இந்த தொடர் சில பொது விஷயங்களை வைத்து இரு பெரும் திராவிட கட்சி தலைவர்களை ஒப்பி்ட்டு எழுதப்பட்டது.மாற்று கருத்துக்களும் இருக்கலாம். இருக்கவேண்டும்.

Wednesday, April 05, 2006

கலைஞர் ஜனநாயகவாதியா?

முதல் பாகம் இங்கே...http://muthuvintamil.blogspot.com/2006/04/1.html

ஜெயலலிதாவின் ஜனநாயக உணர்வை விட கலைஞரின் ஜனநாயக உணர்வு போற்றப்படத்தக்கது. நான் ஏற்கனவே கூறியுள்ளபடி ஒரு ஜனநாயக சமூகத்தில் அடக்கக்கூடாத செயல்கள் பேச்சுரிமை.எழுத்துரிமை. கலைஞரின் ஆட்சியில் தனித்தமிழ் இயக்கங்கள்,தமிழ்வழிகல்வி இயக்கங்கள், தீண்டாமை குறித்த பிரச்சினைகள்,கோயில்களில் பூசை செய்யும் பிரச்சினை போன்ற பல பிரச்சினைகள் வரும்.அரசு ஊழியர்கள் போன்றோர் பல கோரிக்கைகளை வைப்பார்கள். பேச்சுவார்த்தைகள்,வாதபிரதிவாதங்கள் நடைபெறும். இதன்மூலமாகவே கருத்தொற்றுமையை கொண்டுவரமுடியும். அது தான் நியாயமும் கூட.அதைத்தான் கலைஞர் செய்வார்.


ஆனால் புரட்சித்தலைவி அப்படி செய்வதில்லை.அவருடன் பேச்சுவார்த்தை என்று யாராவது எதையாவது நடத்தமுடியுமா? கடைசியாக கார்த்திக் ஏதோ அனுபவ பட்டிருக்கிறார்.ஆனால் வெளியில் சொல்ல தயக்கப்படுகிறார். ஜெயலலிதா எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஏதாவது சட்டத்தை கொண்டுவருவார்.பின் அதை அவரே திரும்ப பெறுவார்.இது ஜனநாயக பண்பா? இதுபோல் கலைஞர் எதையாவது செய்ததாக யாராவது சொல்லமுடியுமா? கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கலைஞரிடம் துள்ளிவிட்டு அம்மாவிடம் அடங்கிசெல்லும் தோழர்களுக்கு இது தெரியாதா?

கட்சியினரை அடக்கி வைத்துள்ளார் என்பது எல்லாம் சிறுபிள்ளைத்தனமான வாதங்கள். கேள்வி கேட்க யாரும் இருக்கக்கூடாது என்ற அளவிற்கு சர்வாதிகாரமாக நடப்பதை எல்லாம் நாம் புகழும் அளவிற்கு வந்துவிட்டது ஒரு சமூக சீர்கேடுதான்.

தற்போதைய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை அதிரடி சட்டம் மூலம் அடக்கியதை பலரும் பாராட்டுவதை பார்க்கும்போது மக்கள் எல்லாம் மாக்கள் ஆகிவிட்டதை போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது.

ஸ்ட்ரைக் விஷயத்தில் மக்களின் எண்ணம் என்ன?கடமையை சரியாக செய்யாத அரசு ஊழியர்களுக்கு ஸ்ட்ரைக செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதுதானே? சம்பள உயர்வு கேட்பதையும் சலுகைகள் கேட்பதையும் கேள்வி கேட்பது நியாயமல்ல.எப்போதுமே தன்னை மற்றவர்களை விட புத்திசாலியாகவும்,அதிகம் உழைப்பவர்களாகவும் நினைக்கும் சராசரி மனதின் எண்ணமே அது.கிம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இந்த கேள்விகள் பொருந்தலாம்.ஆனால் நேர்மையாக நடக்கவேண்டும் என்று நினைக்கும் ஊழியர்களுக்கு,வேறு மேல் வருமானத்தை எதிர்பார்க்காத ஊழியர்களின் கதி என்ன? லஞ்சம், ஊழல் ஆகியவை நடைபெறும் ஓட்டைகளை அடைப்பதுதான் ஒரு நியாயமான அரசாங்கததின் நடைமுறையாக இருக்கவேண்டுமே ஒழிய ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது அல்ல.இது எங்கே சென்று முடியும் என்றால் நியாயமான கோரிக்கைகளுக்கு போராடும் பொதுமக்கள் மீதுகூட போலீஸ் துப்பாக்கி சூடு நடத்துவதில் முடியும்.


வாரிசு அரசியல் விஷயத்திலும் கலைஞருக்கு மாறன் குடும்பம் என்றால் ஜெயலலிதாவுக்கு சசிகலா குடும்பம்.சசிகலா குடும்பத்திற்கு புத்திசாலிதனமாக வியாபாரம் செய்யதெரியாவிட்டால் அதற்கு கலாநிதி மாறன் பொறுப்பாக மாட்டார்.வியாபாரம் செய்ய அரசியல் அதிகாரம் ஒரளவிற்குத்தான் உதவி செய்யும்.மற்றபடி நம்முடைய உழைப்பு, புத்திசாலிததனம் ஆகியவையும் வேண்டும். ஒன்றுமில்லாததை வெறும் அரசியல் அதிகாரம் சார்ந்து விற்றுவிட முடியாது.ஆளுங்கட்சியாக மொத்தம் பத்து வருடம் இருந்த அதிமுகவால் ஏன் ஜெயாடிவியை பெரிதாக வளர்க்கமுடியவில்லை?

கலைஞரின் ஆட்சியில் பல அடிப்படை கட்டமைப்பு வேலைகள் நடந்துகொண்டே இருக்கும். ரோடு போடுதல், தூர் வாருதல், குடிதண்ணீர் வசதி செய்தல், பாலம் கட்டுதல் என்று எப்போதும் வேலை நடக்கும்.அதே போல் அரசுத்துறையில் பணியிடங்களையும் நிரப்பிக்கொண்டே இருப்பார்.மக்கள் நலத்திட்ட பணிகள் நடந்துகொண்டே இருக்கும்.உள்ளாட்சி மன்றங்கள் ஆக்டிவ்வாக இருப்பது கலைஞர் ஆட்சியில்தான்.ஆனால் ஜெயலலிதாவோ ஏன் எம்.ஜீ.ஆரோ கூட இது போல் மக்கள் நல திட்டங்களையோ அடிப்படை கட்டமைப்புகளையோ செய்ததாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விஷயங்களை சொல்லலாம்.ஆனால் திமுக வுடன் ஒப்பீடு செய்யவே முடியாது என்பதுதான் உண்மை.

திமுகவில் சொந்த சரக்கு உள்ள ஆட்கள் இருப்பதையும் அதிமுகவில் அனைவரும் பூம் பூம் மாடுகள் என்பதையும் இங்கே சேர்த்து பார்க்கவேண்டும்.

ஒரே குட்டையி்ல் ஊறிய மட்டைகளா? - 1

கலைஞருக்கு நாம் கொடுத்த டிப்ஸ்களை பார்த்த நண்பர் சந்திப்பு வரலாற்று சிறப்பு மிகுந்த வாக்கியமான "இரண்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்பதை எடுத்து காட்டியுள்ளார்.அப்படி என்றால் அந்த குட்டை எது என்பதை அலசுவதே இன்றைய சிறப்பு பார்வை.

இரண்டு கழகங்களுக்கும் நோக்கம்(சுருட்டுவதை சொல்லலீங்க),கொள்கை எல்லாம் ஒன்றுதான் என்று மாலனும் கூறியுள்ளார்.ஆனால் இரு கழகங்களுக்கும் உள்ள சில வித்தியாசங்களை இங்கு எடுத்துகாட்ட முயல்வதே இந்த தொடர் பதிவின் நோக்கம்.

புரட்சிதலைவி ஜெயலலிதா அவர்களை எடுத்துக்கொள்வோம். அவரின் கடந்த 91 -96 ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? கடந்த 91 -96 ஆட்சியில் தானுன்டு தன் வேலையுண்டு என்று இருந்த பக்திமான் ரஜினிக்கும் ஆட்சியின் அவலங்கள் தெரியும் அளவிற்கு அடக்குமுறை கொடிகட்டி பறந்தது.ஊழல் முதலிய விஷயங்களில் அதிமுகவினர் ஏறக்குறைய கின்னஸ் சாதனையை படைத்தனர்.சூடு கண்ட காரணத்தால் இந்த முறை அந்த பிரச்சினைகள் எல்லாம் இல்லை.அல்லது குறைந்தபட்சம் வெளியே தெரியவில்லை.இன்று புரட்சிதலைவி திருந்தி விட்டார். குணக்குன்றாகி விட்டார் என்று அவருக்கு சர்டிபிகேட் தருபவர்கள் கலைஞரை விமர்சனம் செய்யும்போது மட்டும் 67 ஆண்டு,அரிசி, சர்க்காரியா என்றெல்லாம் ஆரம்பிக்கும்போது அவர்களின் நடுநிலைமை சந்தி சிரிக்க ஆரம்பித்துவிடுகிறது.


பயங்கரவாதத்தை ஜெயலலிதா எதிர்க்கிறார் என்பதும் கலைஞர் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்து களத்தில் இறங்கி போராடுகிறார் என்பதும் இட்டு கட்டிய விமர்சனங்கள் என்பது தெள்ளந்தெளிவு.இதற்கும் பயந்து கலைஞர் இலங்கை பிரச்சினையில் வைகோ அளவிற்கு கூட பேசாமல் அடங்கிவிட்டார்.இது கலைஞரை பொறுத்தவரை ஒரு சறுக்கல் என்றாலும் அவரை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்பதுதான் அவரின் நோக்கமாக இருக்கவேண்டும் என்று புரிகிறது.இன்று வைகோ ஜெயலலிதாவின் அணியிலும் காங்கிரஸ் திமுக அணியிலும் இருக்கும்போது இந்த "பயங்கரவாதம்" என்ற வாதத்தை "சோ" தவிர யாரும் பயன்படுத்த மாட்டார்கள்.(இலங்கை பிரச்சினையில் என் கருத்துக்கள் சிலவற்றை பொடா பயம் காரணமாக எழுதவில்லை)


ஊழல்கள்,திராவிட அரசியல், ஜனநாயக உணர்வு,வாரிசு அரசியல், சன்டிவி,மாறன் குடும்பம்,சசிகலா குடும்பம், சங்கராச்சாரி முதலான விஷயங்களை வரும் பாகங்களில் அலசுவோம்

(தொடரும்)

Monday, April 03, 2006

கலைஞருக்கு சில டிப்ஸ் - பாகம் 2

நம்முடைய கலைஞருக்கு சில டிப்ஸ் முதலாம் பாகத்தில் பொதுவாக அரசியல் சூழ்நிலைகளில் கலைஞர் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தோம். இப்பொது தேர்தல் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் தேர்தல் வியூகத்தை எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போம்.

இன்றைய சூழ்நிலையில் ஜெயலலிதாவை விட கலைஞர் திராவிட அரசியலையும் சில ஜனநாயக நெறிமுறைகளையும் தூக்கி பிடிப்பார் என்ற எண்ணத்திலேயே கலைஞருக்கு இந்த விதமாக டிப்ஸ்களை நாம் கொடுக்க வேண்டி உள்ளது.மற்றபடி கலைஞர் வென்றால் எங்கள் வீட்டுக்கு கலர் டிவி வர போவதில்லை.ஏற்கனவே எங்கள் வீட்டில் கலர் டிவி உள்ளது.மேலும் தி.மு.க கூட்டணி வென்றால் கூட்டணி ஆட்சி வர வாய்ப்பு உள்ளது. அதையும் ஊக்கப்படுத்துவது நமது கடமையாகும்.

இப்போது கலைஞருக்கு வீக்னெஸ் பாயிண்ட் ஒன்றே ஒன்றுதான்.அது நமது வலைபதிவுலகில் பலரும் அலசியுள்ளபடி சன் டிவியும் மாறன் குடும்பமும் தான்.இதை எப்படி தனக்கு சாதகமாக உபயோகப்படுத்துவது என்று இப்போது பார்ப்போம்.

கலாநிதி மாறன் தயாநிதி மாறனை வீட்டை விட்டு துரத்திவிட்டதாக ஒரு செய்தியை வெளியிட வேண்டும்.காரணங்கள் ஆயிரம் கூறிக்கொள்ளலாம். வைகோவை சன் டிவி காட்டாததை தயாநிதி மாறனும் கலைஞரும் தட்டி கேட்டதாகவும் அதனால் கலாநிதி மாறன் கோபமடைந்ததாகவும் கூறி விடலாம். ஏற்கனவே விஜயகாந்திடம் சன் டிவி தன் சொல்பேச்சு கேட்பதிலலை என்று கலைஞர் அங்கலாய்த்ததை உபயோகப்படுத்தி கொள்ளலாம்.

தயாநிதி மாறன் எப்போதும் அணியும் சூட் கோட்டை விட்டுவிட்டு சாதாரண சட்டை, அழுக்கேறிய பழுப்பு வேட்டி அணிந்து வந்தால் சினிமாவை நேர் வாழ்க்கையில் எப்போதும் பார்க்க விரும்பும் தங்க தமிழர்கள் கண்ணீர் விடுவார்கள். கலைஞர் நீதி கேட்க சென்றபோது கலாநிதி மாறன் கலைஞரை பிடித்து தள்ளிவிட்டதாக கூறினால் இன்னும் நல்ல எஃபக்ட் இருக்கும்.


தேவை ஏற்பட்டால் டிப்ஸ்கள் தொடரும்.

Saturday, April 01, 2006

சாராயத்தை ஊத்து..

கலைஞரின் தேர்தல் அறிக்கையில் கள் சாராயக்கடைகளை திறப்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை என்று நினைக்கிறேன்.இதைப்பற்றி பா.ம.க ஏதாவது சொல்லி இருக்கிறதா என்று தெரிந்தவர்கள் கூறுங்கள்.

91 ஆண்டு தேர்தலில் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் தான் கையெழுத்து போட்ட ஃபைல் கள்ளுக்கடையை ஒழித்ததுதான் என்று பெருமையுடன் சொல்லிக்கொண்ட தற்போதைய முதல்வர் ஒயின் ஷாப்புகளை அரசே ஏற்று நடத்தும் வரலாற்று சிறப்புமிக்க சாதனையை இப்போது செய்துள்ளார்.91ம் ஆண்டு தாய்மார்களின் கண்ணீரை துடைத்த அம்மா இப்போது அவர்களை கண்ணீர் கடலில் மிதக்க வைத்துள்ளது ஏன்?

அம்மா அப்போது தங்கள் கண்ணீரை துடைத்ததாக புளகாங்கிதமடைந்த தமிழச்சிகள் இப்போது தங்கள் கணவர்கள் ஃபாரின் சரக்கு அடிப்பதை எண்ணி மனமகிழ்ந்து உள்ளனரா? டிவிசீரியலில் வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கும் தமிழச்சிகள் இதை நினைப்பதில்லை.தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் இந்த பெரும்பாலான பெண்களின் புத்தி பின் புத்திதானே?(பெண்களின் எதிரியாம் முத்து உனக்கு உதை உண்டுடா)

வெறும் ஐந்து பத்தோடு போகவேண்டிய சாராய செலவு ஐம்பது நூறு ஆகிக்கொண்டு உள்ளது.எனக்கு சரியான ரேட் தெரியாது.(ஆனால் கிங்ஃபிஷர் பீயர் மங்களூரில் 52 ரூபாயாமே,பெங்களூரில் என்ன ரேட்?).

கலைஞர் செய்தால் அநியாயம்.அம்மா செய்தால் சாதனை என்ற தமிழனின் சுரணை கெட்ட மனப்போக்குதான் இதற்கு காரணம்.கலைஞர் ஒருமுறை சொன்னது போல் தமிழன் சோற்றாலடைத்த பிண்டம்தானோ?

இன்று அதிமுக அரசு அரசாங்கத்தை நடத்துவதே சாராய வருமானத்தில்தான் என்று சட்டசபையிலேயே கூறும் அளவிற்கு வருமானம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது.அடுத்ததாக கஞ்சா,அபின் வியாபாரத்தை அரசே ஏற்று நடத்தவேண்டுமென்று கஞ்சா ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கலைஞர் சூடு கண்டதினால் இதைப்பற்றி பேசுவதில்லை.பல விஷயங்களில் சூடு கண்டப்பிறகு கலைஞர் அடக்கி வாசிப்பதை நாம் பார்க்கிறோம்.
(உதா) இலங்கை பிரச்சினை,கள் சாராய விவகாரம்

ஆகவே தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த வியாபாரத்தை அபிவிருத்தி செய்து அந்த பணத்தில் தாய்மார்களுக்கு கலர் டிவி தரலாம் என்று கலைஞர் முடிவு செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்.(அதிலும் மாறன் குடும்பம் கொடி கட்டும் எனலாம்)

ஆனால் கிண்டலைவிட்டு சிறிது சீரியஸாக யோசித்து பார்த்தோம் என்றால் கள், சாராயக்கடைகளை அரசு தடையை நீக்கி ஆரம்பிப்பதே நல்லது.சில காரணங்கள்.நண்பர்களும் ஏதாவது பாயிண்ட் தோன்றினால் எழுதலாம்.

1.குடி பழக்கத்தை ஒழிப்பது என்பது தேவையில்லை.சங்க காலம் முதற்கொண்டே இந்த பழக்கம் உள்ளது.(இது விவாதத்திற்கு உரியது)

2.இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சாராயகடைகள் உள்ளன.

3.ஏழைகளுக்கு மலிவு விலையில் சரக்கு கிடைக்கும்.

4.பல ஏழைகளுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

5.பனை,தென்னை மரங்களில் உள்ள சில வியாதிகளையும் இதன்மூலம்
போக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்றைய பொன்மொழி (தேவைபடுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம்)
உங்கள் கொள்கைகளை உள்நோக்கத்தோடு கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதை உணர்ந்தும் நீங்கள் பின்வாங்கினீர்கள் என்றால் உங்கள் கொள்கைகளின் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

தமிழ்வெளியை பார்த்தீங்களா?