Thursday, September 28, 2006

செந்தழலார், திராவிடஃபிகர்-சென்னை பயணம் 2

சென்னை மீதான என் காதலைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். சென்னையில் குடியேற ஒரு துவக்கம் ஏற்படுத்தும் முகமாக வலையுலக நண்பர்கள் ஏழெட்டு பேர் உள்பட பல நண்பர்கள் மூலமாக மென்பொருள் துறை வேலைவாய்ப்புகளை பற்றி விசாரித்து கொண்டிருந்தேன். ஒரு சனி,ஞாயிறு அன்று "உள்நடக்கும்" (வாக்-இன் இண்டர்வ்யூக்கு அதுதானே தமிழ்) நேர்முகத்தேர்வு ஏதாவது இருந்தால் பங்கு பெறலாம் என்ற எண்ணத்தில்தான் ஆகஸ்ட் பயணத்தை முடிவு செய்திருந்தேன்.அது ஒரு அசட்டு முயற்சியாகத்தான் முடிந்திருக்கும் என்பது இப்போதுதான் தெரிகிறது.

அந்த குறிப்பிட்ட சீசனில் பலரும் வலைப்பதிவில் வேலைவாய்ப்பு செய்திகளை கொடுத்து கொண்டிருந்தனர். ஒரு கலவரம், கொலைவெறி சமாச்சாரமாக நண்பர் செந்தழல் ரவியுடன் மொபைலில் பேசிக்கொண்டிருந்த போது என் சென்னை பயணத்தின் நோக்கத்தை சொன்னேன். புரொபைல் அனுப்புங்க என்பதோடு முடித்துக்கொண்டு அனானி பின்னூட்டம் இட சென்றுவிட்டார்.

ஒரிரு வாரம் கழிந்திருக்கும். ரவி ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதிர்ஷ்வசமாக ஒரு நல்ல கம்பெனியில் ஆட்கள் தேவைப்படுவதாகவும் நான் அனுப்பிய புரொபைலை தான் முன்மொழிவதாகவும் கூறினார்.நேர்முகத்தேர்வு நன்றாக செய்தால் வாய்ப்பு இருப்பதாக கூறினார்.அதற்குப்பிறகு நடந்தது எல்லாம் மாயம்தான். ரவி தன் அனுபவத்தை வைத்து சில உபயோகமான டிப்ஸ்களையும் கொடுத்தார்.சில நாட்களில் தொலைபேசி வாயிலாக நேர்முகத்தேர்வு நடந்தது. காரியமும் ஜெயமானது.

இந்த மிகப்பெரிய உதவியை செய்த செந்தழல் ரவியை இன்று வரை நான் நேரில் பார்த்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் பல நண்பர்களை நேரில் பார்க்காமலே ஆண்டாண்டு காலம் பழகிய உணர்வை தருவது இணையத்தின் சிறப்புதான். எனக்காக முயற்சிகளை எடுத்துக்கொண்ட அனைத்து நண்பர்களுக்கும்(செந்தழலாருக்கு ஸ்பெஷல் என்பதை சொல்லவும் வேண்டுமா) என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னையில் ஒருநாள் ரவியின் சகோதரரை சந்திக்க நான்,லக்கி,வரவணையான் ஆகியோர் சென்றிருந்தோம்.அன்று தான் வலையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட திராவிட ஃபிகர் பைக்கில் கடத்தப்பட்ட சம்பவம் நடந்தது. வேளச்சேரி ரோட்டில் கால் டாக்சியை அழைத்துவிட்டு காத்திருந்த நேரத்தில் நாங்கள் வெட்டி ஞாயம் பேசிக்கொண்டு இருந்தோம்.

சென்னை மென்பொருள் துறையில் மிகுந்த முன்னேற்றம் அடைந்துவிட்டது. கால்சென்டர்கள் ஏராளமாக வந்துவிட்டது என்றேன் நான். ஆனால் பப் கலாச்சாரம், பார்ட்டி கலாச்சாரம் என்று நாட்டின் கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று அங்கலாய்த்துக்கொண்டார் லக்கி.அப்போது ஒரு மாநிறமான பெண்ணை ( ஜீன்ஸ்,டீசர்ட் அணிந்திருந்தார்) பைக்கில் அமர்த்திக்கொண்டு ஒரு சிவப்பான இளைஞன் எங்களை கடக்க ஜாலிக்காக "திராவிட ஃபிகரை தள்ளிகிட்டு போறான்யா" என்றேன் நான். திராவிட இயக்கத்தின் உண்மை வாரிசான லக்கியாருக்கு நரம்புகள் துடித்தன.கழுத்தில் இருந்து ஒரு நரம்பு அப்படியே ரட்சகன் ஸ்டைலில் துடித்து மேலேறியது.அவர் பாய்ந்து செல்வதற்கு முன் ஒரு வெளிநாட்டு கார் வந்து எங்கள் அருகில் நின்றது.அதிலிருந்து ஒரு அழகிய ஆன்ட்டி ஏதோ அட்ரஸ் கேட்க லக்கி சிறிதே குளிர்ந்தார். காரில் ஏறி சென்றுவிடுவாரோ என்று நாங்கள் பயந்திருக்க நல்லவேளை லக்கி அவ்வாறெல்லாம் செய்யவில்லை.

அதற்கு முன்னர் ரவியின் சகோதரரை சந்தித்தோம். அவருடன் சென்று சிஃபி ஹைவேயில் இணையத்தில் சில மெயில்கள் அனுப்ப சென்றிருந்தோம். நான் அவருடன் பேசிக்கொண்டிருக்க வரவணையானும்,லக்கியும் ஒரு மெஷனில் அமர்ந்து இலங்கை பிரச்சினையில் மயிர் பிளக்கும் வாதம் செய்துக்கொண்டிருந்தனர். யாழ் களத்தை ஓப்பன் பண்ணு, பொங்குதமிழை திற, திரிகோணமலை,வன்னி,சந்திரிகா என்று இவர்கள் பேசுவதை பார்த்த ரவியின் அண்ணன் தியாகு இவர்கள் தற்கொலை படை தீவிரவாதிகளோ என்று சிறிது ஆடிப்போனார். நீங்களெல்லாம் ரவிக்கு எப்படி தெரியும் என்று மட்டும் ஒரு வார்த்தை என்னிடம் கேட்டார்.

இலங்கை பிரச்சினையில் பிரபாகரனுக்கே தெரியாத சில உண்மைகளை வரவணையான் பகிர்ந்துகொள்ள லக்கி பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து வைகோவை துவைத்து காயப்போட்டு கொண்டிருந்தனர். ஓரளவு எங்களைப்பற்றிய ஒரு முடிவுக்கு ரவியின் அண்ணன் வ்நதிருப்பார் என்று எனக்கு தோன்றியது. எங்கள் வேலை முடிந்ததும் சாப்பிடபோகலாம் என்று நாங்கள் அழைக்க எங்களுடன் இருந்தால் புலிகள்,நக்சலைட் சம்பந்தப்பட்ட பிரச்சினை வரும் என்று அஞ்சி உஷாராக நழுவினார் அவர்.ரவிக்கு மண்டகப்படி கிடைத்ததாக கடைசி தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக வரவணையான் பதிவில் குறிப்பிட்ட எக்மோர் பாரில் குறிப்பிடும்படி எந்த விஷயத்தையும் நாங்கள் பேசவில்லை. வரவணையான் கூறியபடி பொதுவான சில விஷயங்களைத்தான் பேசிக்கொண்டிருந்தோம். வலைப்பதிவர் சீனு என் நெருங்கிய நண்பனுக்கு நண்பர் என்று தெரியவந்தது. சில பழைய செய்திகளை பகிர்ந்துகொண்டோம்.மற்றபடி இரவு பாட்டில் சந்திப்புகள் நடத்த சென்னை பார்கள் உகந்த இடம் அல்ல என்று தெரிந்துக்கொண்டேன்.

Wednesday, September 27, 2006

வேட்டையாடு விளையாடு சர்ச்சை

கமல்,கெளதம் பற்றிய பாலபாரதி,லிவிங் ஸ்மைல் மற்றும் லக்கிலுக்கின் பதிவுகளை படிக்க நேர்ந்தது.ஒரு இடத்தில் யாருக்காவது பொதுமாத்து விழுந்துகொண்டிருந்தால் என்ன ஏது என்று என்று கேட்காமல் தாமும் இரண்டு குத்துவிட்டுவிட்டுத்தான் என்ன விஷயம் என்று கேட்பது தமிழ் பண்பாடு என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம்.அந்த அடிப்படையில் நானும் கமலையோ அல்லது பாலபாரதியையே மொத்தலாம் என்று நினைத்தேன்.

ஆனால் வேட்டையாடு,விளையாடு என்ற அந்த படத்தை பார்க்காமல் படத்தை விமர்சித்தால் அது ஜல்லியாகிவிடும்.உதாரணத்திற்கு...
இட ஒதுக்கீடு ஏன் என்பது பற்றி எதுவும் தெரியாது.ஆனால் இடஒதுக்கீட்டால் மெரிட் பாதிக்கப்படும் என்பார்கள்.
இயக்கவியல் பொருள்முதல்வாதம்,முரண்இயக்கம் தெரியாது. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் பிற்போக்குவாதிகள் என்பார்கள்.
பெரியாரை படித்ததே இல்லை.ஆனால் பெரியாரின் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானவை என்பார்கள்.
இந்த லிஸ்ட்டில் சோந்து நானும் படத்தை பார்க்காமல் கதையை சொல்லி ஜல்லி கொட்டி சூழலை மாசுப்படுத்த விரும்பவில்லை. சில விஷயங்கள் மட்டும்..

முதல் விஷயம் இது கமல் படம் இல்லை. கமல் தலையிட்டு இருந்தால் இந்த திரைப்படம் ஊற்றிக் கொண்டிருக்கலாம்:)).மாபெரும் வெற்றி பெற்றிருக்காது.கமல் இந்த படம் பற்றி ஆர்வம் இல்லாமல் இருந்ததாக இயக்குநரே கூறி உள்ளார்.கமல் டைரக்சன் விசயத்தில் மூக்கை நுழைத்து படங்களை ஒழித்துவிடுவதாக ஒரு கருத்து உள்ளது.ஆகவே கமல் கதை விஷயத்திலும் டைரக்டர் விஷயத்திலும் தலையிடாமல் இருக்க அவருக்கு சம்பளத்தில் ஒரு தொகை சேர்த்து தரப்படுகிறதாம்:)).

ஆக இது கெளதம் படம்தான்.கெளதமின் படங்கள் மேல் எனக்கு பெரிய அபிப்பிராயம் எதுவும் கிடையாது.மசாலா படங்களை திறமையாக எடுக்கக்கூடியவர் என்ற அளவில் தான் அவர் மீதான மரியாதை. பாட்டுக்கள் ஹி்ட்டாவது கூடுதல் நன்மை.அவருடைய முதலிரண்டு படங்களையும் வைத்துத்தான் இந்த கருத்தை சொல்கிறேன். இது போன்ற மசாலா திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்கள் நம்மிடையே நிறைய உள்ளார்கள். சங்கர், சரண், ஹரி, கெளதம் என்று இவர்கள் எல்லோருமே மசாலா கலைஞர்கள்தான்.

டைரக்டர் பாலா போன்றோரை இவர்களை விட ஒரு படி மேலாகத்தான் நான் மதிக்கிறேன் என்ற ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.ஆனால் அவருடைய முதல் படத்திலும் அய்யர்களை கடுமையாக நக்கல் அடித்து சில வசனங்கள் இருந்தன என்று ஞாபகம். கதைக்கு சம்பந்தப்பட்டு இருப்பதாக பாலா கூறலாம்.எனக்கும் அப்படித்தான் தோன்றியது.ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்த வசனங்கள் ஓவராக இருப்பதாக தோன்றியிருக்கும்.

லிவிங் ஸ்மைல் கூறியதில் முக்கிய அம்சமே இங்குதான் வருகிறது. டைரக்டர் யதார்தத்தை எடுக்கிறார் என்று கூறுவதா? அல்லது தெரிந்தே, கேட்க ஆளில்லாமல் இருப்பவர்களை கேவலப்படுத்துகிறாரா? என்பதை கவனிக்கவேண்டும்.இதை எப்படி கண்டுபிடிப்பது என்பது அடுத்த பிரச்சினை.கதைக்கு அவசியம் தேவைப்படாத பட்சத்தில் குறிப்பிட்ட அந்த சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

கதைக்கு அந்த குறிப்பிட்ட வசனமோ, வார்த்தையோ, கான்செப்ட்டோ எந்த விதத்தில் இன்றியமையாதது என்று டைரக்டர்/கதாசிரியர் விளக்கவேண்டும். நம் விமர்சனமும் அதை பொறுத்துதான் இருக்கமுடியும். ஆட்டம் போடு, அவுத்து போடு(நன்றி லிவிங் ஸ்மைல்) படத்தில் இந்த வார்த்தையும்( பொட்டை), கான்செப்ட்டும்(ஓரின சேர்க்கை சமாச்சாரம்) தேவையில்லாமல் திணிக்கப்பட்டுள்ளன என்ற முடிவுக்குத்தான் நண்பர்களின் விமர்சனம் என்னை இட்டு செல்கிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் டைரக்டர் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவர் ஆகிறார்.

மேலும் கமலின் மீதான பாலபாரதியின் இந்த விமர்சனம் என்னால் ஏற்க முடியவில்லை.

//ஆணாதிக்க சிந்தனாவாதிகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் எத்தனையோ விதமான கற்பித விஷயங்களில் ஒன்று தான் விதவையையோ, மணமுறிவோ ஆன பெண் மறுமணம் செய்துகொள்ளும் போது, அதே போல மனைவியை இழந்தவரோடோ, மணமுறிவு ஏற்பட்ட ஆணுடனோ தான் மணம் முடித்துக்கொள்ள வேண்டும். இந்த கருத்தாக்கம் படித்த பலரிடம் கூட இருக்கிறது. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் இந்தபடத்தில் கமலினி முகர்ஜி கொல்லப்படுகிறார்.எப்போதும் தன்னை சக நடிகர்களிலிருந்து இருந்து வேறுபடுத்தி சமூக அக்கறை உள்ளவராக காட்டிக்கொள்ளும் கமல்ஹாசன் இந்த பாத்திரத்தை எப்படி விமர்சனம் செய்யாமல் ஏற்றுக்கொண்டார் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு வேளை அவருக்குள் இருக்கும் மிருகத்தனமான ஆணாதிக்க சிந்தனை இதை பெரியதாக கண்டு கொண்டிருக்காது.//
இந்த படத்தை பொறுத்தவரை கமலுக்கு அவர் வயதை கணக்கில் கொண்டு எழுதப்பட்ட கதை. இன்று கமல் "அம்மா காலேஜுக்கு போறேன்" என்று சொல்லி துள்ளி ஓடமுடியாது. ஒரு பழைய எம்.ஜீ.ஆர் படத்தில் அப்படி ஒரு காட்சியை பார்த்து அதிர்ந்தது ஞாபகம் வருகிறது. அதை தவிர

நளதமயந்தி என்ற படம் . கமல் கதையா அல்லது திரைக்கதையா என்று தெரியவில்லை.ஆனால் கமலின் சொந்தப்படம்.கதையின் நாயகன் மாதவனின் தங்கையை புகுந்த வீட்டில் அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவார்கள். பொதுவாக முடிவில் இதுபோன்ற விஷயங்களில் மாப்பிள்ளை பையன் திருந்துவதாக காட்டுவார்கள். ஆனால் இந்த படத்தில் தங்கையின் முன்னாள் காதலனுக்கு அவளை மறுமணம் முடிப்பது போல் காட்டுவார்கள். வரதட்சணை கொடுமைக்கு இது சரியான தீர்வா என்பது ஒருபுறமிருக்க கல்யாணம் ஆன பெண்ணுக்கு கல்யாணமாகாத மாப்பிள்ளையை கட்டி வைக்கும் புரட்சி(?)மனப்பான்மை கமலுக்கு இருக்கிறது என்று தோன்றுகிறது.

மற்றபடி கமலஹாசன் தேவர்சாதி மீது பற்றோடு இருக்கிறார் என்று ஒரு விமர்சனம் பார்த்தேன். எனக்கு தெரிந்தவரை தேவர்மகன் படத்தில் கதைக்கு சம்பந்தப்பட்டுத்தான் காட்சிகள் இருந்ததாக ஞாபகம்.விருமாண்டி, தேவர்மகன் போன்ற வட்டார வாழ்க்கையை காட்டும் படங்களில் சாதியை தவிர்த்து(சாதி அடையாளம் தெரியாமல்/பேசாமல்) படம் எடுக்கமுடியுமா?

தனிப்பட்ட முறையில் கமலின் "வெச்சு வாழ தெரியாத" தன்மையைப்பற்றி நிறைய பேரிடம் விமர்சனம் (குறிப்பாக பெண்கள் நிறைய பேர் இதை சொல்கிறார்கள்) உள்ளது.

இது ஒரு சிக்கலான விஷயமும் அதற்கு மேலாக அவரின் தனிப்பட்ட விஷயமும். நம்மை பாதிக்காதவரைஅதைப்பற்றி கருத்து கூற நமக்கு உரிமையில்லை.

Tuesday, September 26, 2006

மங்களூரில் வலைப்பதிவர் சந்திப்பு

k; வலைப்பதிவர் மாநாடுகள் அங்காங்கே நடப்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம். ஒரே ஊரில் ஒரே வாரத்தில் மூன்று முறை கூட நடக்கின்றனவாம். வலைப்பதிவர் மாநாடுகள்(?) வலைப்பதிவின் தட்பவெப்ப நிலையை கட்டுக்குள் வைக்கவும் நல்ல அறிமுகங்கள் கிடைக்கவும் உதவும் என்ற அடிப்படையில் நான் வலைப்பதிவாளர் சந்திப்புகளில் ஆர்வம் காட்டுவது உண்டு.

"அத்தெல்லாம் சரி மாமே.மங்களூர்ல என்ன மீட்டிங்,அங்கிருந்து தமிழ் குப்பை போடும் ஒரே ஆசாமி நீதானே",என்று அவசரப்படும் கண்மணிகளுக்காக நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு தூக்கம் வராமல் கணிணியை நோண்டிக்கொண்டிருந்த போது ஒரு மெயில் வந்தது. நடராசன் சீனிவாசன் என்ற பெயரில் வந்த அந்த மெயில் ஒரு பதிவர் மங்களூர் வருவதாகவும் வலைப்பதிவாளர் சந்திப்பை மங்களூரில் வைத்துக்கொள்ளலாமா என்றும் கேட்டது.

ஏற்கனவே நற்பணி மன்றம், மங்களூர் கிளை அது இது என்று பல இடங்களில் நம் பெயர் உபயோகப்படுப்பட்டிருப்பதால் குழப்பம் அடைந்திருந்த நான் எந்த பெயரில் நீங்கள் எழுதுகிறீர்கள் என்று கேட்டு மெயிலை தட்ட பிறகுதான் தெரிந்தது நமமுடைய ஓகை தான் நடராசன் சீனிவாசன்.

தன்னுடைய தொழில் சம்பந்தப்பட்ட (அலுமினியம் தயாரிப்பு) மூன்று நாள் கருத்தரங்குக்கு மங்களூர் வந்த ஓகை நடிகர் சுனில் ஷெட்டியின் ஓட்டலில் இந்த வரலாற்றுபூர்வமான, தமிழ் வலைப்பதிவாளர்களின் முதல் மங்களூர் சந்திப்பின் முதலாம் அமர்வு நடைபெற்றது. மொத்தம் மூன்று அமர்வுகளாக இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிநிரல் என்னவோ ஒன்றுதான்.

மரபு கவிதைகளில் ஆர்வம் உள்ள அவர் பல கவிதைகளையும் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சில கவிதைகளை புரட்டி பார்த்தேன். நிலைமண்டில ஆசிரியப்பா, விருத்தம், அடி என்று லத்தீன் மொழியில் சில வார்த்தைகள் இருந்தன.உஷாராக பேச்சை மாற்றினேன்.தமக்கு புதுக்கவிதைகள் பிடிக்காது என்பதுபோல் ஒரு கருத்தை உதிர்த்தார் ஓகை. மேத்தாவை கலாய்க்க சென்ற மணிகண்டனை விட்டு இந்த ஆளை ஒரு காட்டு காட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

தமிழ்மேல் மிகவும் ஆர்வமுள்ள ஓகை பல காலமாக தமிழ் இணையத்தில் இயங்கி வருவதாக கூறினார்.மரத்தடி குழுமங்களிலும் இயங்குவதாக கூறினார். எனக்கு தமிழ் இணைய பரிச்சயம் ஒரு வருடமாகத்தான் என்றேன் நான். பரவாயில்லை அதற்குள்ளாக பிரபலம் ஆகிவிட்டீர்கள் என்றார். ஹிஹி என்று மையமாக சிரித்துவைத்தேன்.முதுகில் டின் கட்டப்பட்டால் அதற்கு பெயர் பிரபலமா என்று மனதிற்குள் நினைத்துக்கெர்ணடேன்.புரிந்து கொண்டாரோ என்னமோ மிகவும் இளவயதினராக இருக்கிறீர்கள் என்று ஒரு கட்டி ஐஸை எடுத்து வைத்தார்.கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன்.

சென்னை வலைப்பதிவர் சந்திப்பின் போது ஒரு முக்கிய வேலை இருந்ததால் கலந்துக்கொள்ள இயலவில்லை என்றார்.எனக்கு ஓகை என்ற பெயரும் சிதம்பரம் அர்ச்சகர் சமாச்சாரம் மற்றும் தேர்தல் சமயத்தில் யாருக்கு ஓட்டு போடுவது என்று அவர் எழுதிய சில பதிவுகளும் ஞாபகம் இருந்தது. அதன் அடிப்படையில் நாங்கள் பேச ஆரம்பித்தோம்.சோ பிடிக்கும் என்றும் கருணாநிதி பிடிக்காது என்றும் தயக்கத்துடன் சொல்லியபடி கொஞ்சம் தள்ளி அமர்ந்தார் மனிதர்.மேலே பாய்ந்துவிடுவேன் என்று சந்தேகம் அவருக்கு இருந்திருக்கும் போல் தோன்றியது. ஆவேசமாக எழுதுவது போல் தோன்றினாலும் நான் அப்பாவிதான்(அப்பாவிகளுக்கு மட்டும்) என்றேன். மேலும் நான் எந்த கட்சியிலும் இல்லை.யாரிடமும் அல்லது எந்த கோட்பாட்டிலும் விமர்சனமற்ற பக்தி என்பது எனக்கு இல்லை என்றேன். அவருடைய பதிவுகளை வைத்து எனக்கு அவர் பற்றி ஏற்பட்ட இருந்த மனபிம்பத்தை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டேன். சோவின் இரண்டாவது குரல் என்று அவரை நான் விமர்சித்ததை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டார்.

அவர் ஒரு மிகப்பிரபல வலைப்பதிவாளருக்கு மிகவும் நெருங்கியவர் என்று அவருக்கே தெரியாத ஒரு தகவலை கூறி அவரை அதிர வைத்தேன். மாற்றுபார்வை என்பது என்ன? ஏன்? என்பதைப்பற்றியும் இடதுசாரியம், வலதுசாரியம், இந்து மதம், டோண்டு, புனிதபிம்பங்கள், தேசியம்,திராவிடம் என்று வழக்கமாக எல்லா வலைப்பதிவு எவர்கிரீன் சமாச்சாரங்களையும் பேசினோம்.

புனிதப்படுத்துதல், இழிவுப்படுத்துதல் பற்றி என் கருத்தை உன்னிப்பாக கேட்டுக்கொண்டார்.இந்திய தத்துவத்தின்,சிந்தனையின் பெருமையை பேசும்போது மட்டும் சமணம், பெளத்தம், சாங்கியம்,கடவுள் மறுப்பு தத்துவங்களை சேர்த்துக்கொண்டு விட்டு ஆன்மீகத் தளத்தில் பேசும்போது இவைகளை புறந்தள்ளிவிட்டு வேத உபநிஷத தத்துவங்களை மட்டும் சிலர் பெரிதாக பேசுவது அயோக்கியத்தனம் என்றேன் நான்.

கருணாநிதி திமுகவில் தீடிரென வளர்ந்தது அந்த காலகட்டத்தில் எல்லாருக்கும் ஒர் ஆச்சரியமான விஷயம் என்றார்.சோவின் பல கருத்துக்கள் பிடிக்காது எனினும் அவர் வாதம் செய்யும் முறை,தைரியம் ஆகியவையே தம்மை கவர்ந்தவை என்றார். காலரிக்காக எழுதுவது,நிறைய பேரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக எழுதி தன்னுடைய தனித்தன்மையை கைவிடுவது என்ற எழுத்து துறையில் உள்ள பிரச்சினைகளையும் பரிமாறிக்கொண்டோம்.கருத்துக்கள் மாறுபடலாம். மனிதம், நட்பு ஆகியவை அதையும் மீறியவை என்ற அடிப்படையில் பல விஷயங்களை விவாதித்தோம்.பல விஷயங்களில் மாற்றுபார்வைகள் விவாதபூர்வமாக அவர் வைத்திருந்தாலும் விவாதங்களில் தமக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை என்றார்.

மிகவும் குறைந்த கால அவகாசமே இருந்ததால் உடுப்பி, கொல்லூர் ஆகிய இடங்களுக்கு போக முடியவில்லை. ஒரு மாலை பனம்பூர் பீச்சுக்கு சென்றோம்.தன்னுடைய பரிசாக பாலகுமாரனின் புருஷவதம் என்ற புத்தகத்தையும் எனிஇந்தியன் பதிப்பகத்தின் அறிவியல் புனைகதைகளின் தொகுப்பை எனக்கு அளித்தார்.அதில் அவர் எழுதிய ஒரு சிறுகதையும் இருப்பது போனஸ்.

(என்னது ரிட்டையர்மெண்ட்டா? ஹிஹி அதெல்லாம் முடிஞ்சிருச்சி.சிறிய இடைவேளைன்னு தானே போட்டிருந்தேன்:))

Thursday, September 14, 2006

சென்னை வலைப்பதிவாளர்களுக்கு ஜே

சென்னை வருகிறேன் என்றும் நண்பர்களை சந்திக்க ஆசை என்றும் ஒரு பதிவு போட்டிருந்தேன். என் வேண்டுகோளை ஏற்று நண்பர் பாலபாரதி ஒரு வலைப்பதிவாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். பாலபாரதிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

என்னை மாதிரி தூர தேசத்தை சேர்ந்த வலைப்பதிவாளர்கள் சென்னையில் ஒவ்வொரு நண்பராக போய் சந்திப்பதைவிட இது போன்ற வலைப் பதிவாளர்கள் சந்திப்புகளின் மூலம் சென்னை நண்பர்களை சந்திப்பது நல்ல முறை. இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ள தூத்துக்குடியில் இருந்து வருகை தந்த நண்பர் வரவணையான் தன் நண்பர் கவிஞர் சுகுணா திவாகரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஒரு இரவு பதினொரு மணிவரை எனக்கு பின்நவீனத்துவம், அமைப்பியல் ஆகியவற்றைப்பற்றி எளிமையாகவும் பொறுமையாகவும் விளக்கினார்.அதைப்பற்றி பிறகு பார்ப்போம். வெள்ளியன்று நானும் வரவணையானும் கிளம்பி சந்திப்புக்கு செல்வது என்று முடிவாகியது.

மாலை பூங்காவிற்கு சென்று இறங்கியவுடன் முன்வாசலிலே சில இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். "அனானி ஆப்சனை நீக்க வேண்டும்" என்ற கோர்ட்வேர்டை அவர்கள் சொல்லாததால் நாங்கள் அவர்களை கடந்து சென்றுவிட்டோம்.பின்னர் பூங்காவின் மையப்பகுதிக்கு சென்று கைத் தொலைபேசியில் பாலபாரதியைஅழைத்தேன். பிறகுதான் தெரிந்தது. பூங்காவின் வாசலில் நின்று கொண்டிருந்த ஆட்கள் நம் ஆட்கள் தான் என்று.

சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் வலைப்பதிவுகளை விட்டு விலகுவதாக அறிவித்த அணில்குட்டி புகழ் கவிதா வந்திருந்தது சர்ப்ரைஸ். குப்புசாமி செல்லமுத்து, முத்துக்குமரன் ப்ரியன்,பரஞ்சோதி ஆகியோர் அருகிலேயே நின்றிருந்தனர். இந்த குப்புசாமி செல்லமுத்துவை நான் அய்யா குப்புசாமிக்கு என்று விளித்து ஒரு பதிவே போட்டிருந்தேன்.ஆனால் மனுசன் இளவட்டம்.

பாலபாரதி பத்தி எல்லாம் சொல்லவே வேண்டாம். அமீர்கான், சாரூக்கான், சல்மான்கான் என்றெல்லாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம். நேரில் அன்றுதான் பார்த்தேன். முகம்மது பாலா உசேன் அவ்வளவு அழகாக இருந்தார். பரஞ்சோதி(குழந்தைகளுக்காக கதை புகழ்) முத்துகுமரனுடன் வந்திருந்தார்.

ஜெய்சங்கர் (We the People) வந்தார். எங்கங்க மத்த ஆளுங்கள்ளாம் என்றேன் நான். திரும்பி திரும்பி பார்த்தார்.We the people என்பது அவர் ஒருவர்தானாம். ஒரு கூட்டமே இருக்கும் என்று என்னை போல் பலரும் நம்பி ஏமாந்ததாக கூறியது என் மனதிற்கு ஆறுதலை தந்தது.பிறகு சிமுலேசன்,பொன்ஸ்,சந்திப்பு,அருள், சிவஞானம்ஜி, கெளதம், வினையூக்கி,சீனு, ரோசா என்று பலரும் கூட கூட்டம் இனிதே துவங்கியது.

சிவஞானம்ஜீக்கு சிறப்பு நன்றிகள்

அய்யா சிவஞானம் ஆர்வத்துடன் வந்து சந்திப்பில் கலந்துகொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. பின்னர் பேசிய சிவஞானம் அவர்கள், பின்னூட்டம் இடுபவர்கள் சிலர் பொறுப்பில்லாமல் தவறான தகவல்கள் எழுதுவது மனநிம்மதியை குலைப்பதாக உள்ளது என்றும் அத்தகைய ஒரு பின்னூட்டத்தினால் ஒரு இரவு தூக்கமே போய்விட்டது என்று வருத்தத்துடன் பகிர்ந்துக்கொண்டார்.வருத்தமாக இருந்தது.

நண்பர் வினையூக்கி முதன்முதலாக வலைப்பதிவாளர் கூட்டத்திற்கு வந்திருந்தார்.அதிகம் பேசவில்லை அவர்.அவருடன் அதிகம் பேச முடியவில்லை என்பது எனக்கு குறைதான்.

பின்னர் அறிமுகம் நடைபெற்றது. பிறகு பேசிய நண்பர் சந்திப்பு திராவிட தமிழர் வலைத்தளம் துவக்கப்பட்டது சரியான முடிவு அல்ல என்ற தன் கருத்தை விவாதத்திற்கு எடுத்து வைத்தார். பலமுறை அவரிடம் தளத்திலும் தனிப்பட்ட முறையிலும் விவாதித்த ஒரு விஷயம் தான் இது.

ஒரு பொதுஇடத்தில் திராவிடம்,தமிழுணர்வு,இடஒதுக்கீடு போன்ற கருத்தாக்கங்களை பேசுவதே கேவலம் என்று கட்டமைக்கப்படுவதை எதிர்க்க தன்னிச்சையாக உருவான அமைப்பே அது என்று ஆயிரத்து எண்ணூறாவது முறையாக எடுத்துக் கூறினேன் நான்.

சந்திப்பு அவர்களின் உள்ளங்கனிந்த சிந்தாந்தமான, பொது உடைமை, அதைப்பற்றி முழுதாக தெரியாதவர்களால் கடுமையாக தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டு பிறகு சில நாட்களில் கம்யூனிசத்தைப்பற்றி பேசுவதே ஆபாசம் என்று சிறிது சிறிதாக கட்டமைக்கப்படும்போது தான் இந்த உணர்வை அவர் புரிந்துக்கொள்வார் என்று நினைக்கிறேன். மேலும் தமிழகத்தில் கம்யூனிசம் வளராமல் போனதற்கு திராவிட இயக்கங்கள் தான் காரணம் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் அவரிடம் உள்ளது.அதனால் அவருக்கு திராவிட கருத்தாக்கத்தின் மீது உள்ள கடுமையான எதிர்ப்புணர்வினால்(முத்திரை) சில சமயம் இந்துத்வாவாதிகள் அளவிற்குக்கூட போய் எழுதிவிடுகிறார்:).இந்த விஷயத்தில் விவாதங்களை கடந்த நிலையில் அவர் உள்ளதாகவே நான் புரிந்து வைத்துள்ளேன்.காம்ரேடுகள் இந்திய சமுதாய முறையை சரியாக புரிந்துகொள்ளாமல் தவறு செய்வது இங்குதான் என்று தோன்றுகிறது.

கலவரம்,கொலைவெறி ஆகியவற்றை கிளப்பும் அனானிகளைப் பற்றி பேசும்போது பலரும் லக்கிலுக்கை திரும்பி பார்த்தனர். ஆயினும் மனுசன் நிதானமாகவே இருந்தார். தனிப்பேச்சின் போது தெளிவாக ஒரிஜினாலிட்டி என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும் என்பதை நாசுக்காக எடுத்துக்கூறினார்.

ஆயினும் தனிமனித தாக்குதல் போல் வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்துவது நல்லது என்று பலரும் கூறினார்கள். தனிமனித தாக்குதல் என்பதை எப்படி நிர்ணயிப்பது என்ற அடுத்த கேள்வி வந்தது. இது ஒரு மாயச்சூழல் என்று சிலர் கூறினார்கள். தனிமனித தாக்குதல் இருக்கும் பதிவுகளை இக்னோர் செய்வதுதான் சரியான முறை என்பது பலரின் கருத்து.
வலைப்பதிவர்கள் என்ற அடிப்படையில் ஒரு அமைப்பை ஏற்படுத்த முடியுமா என்று நான் ஒரு கேள்வியை கேட்டேன். அது சாத்தியமில்லாதது என்று சில நண்பர்கள் கூறினார்கள்.ஆனால் எனக்கு இன்னமும் அதன் சாத்தியகூறுகளைப்பற்றி நம்பிக்கை உள்ளது.

எட்டு மணிக்கு பூங்கா மூடப்படும் என்பதால் 7.45 மணிக்கே மசால்வடை வினியோகம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு நடக்க இருந்த தி.த. கூட்டத்தை கவர் செய்ய வந்த உண்மை நிருபர்களுடன் வந்த கவிஞர் வளர்மதி வலைப்பதிவாளர்கள் கூட்டத்தை தி.த கூட்டம் என்று கருதி பேச ஆரம்பித்த போது துள்ளி எழுந்த சிமுலேசன் நிலைமையை விளக்கினார்.

சிமுலேசன் அவருடைய வலைப்பதிவில் உள்ள புகைப்படத்தை விட இளமையாகவும் ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார்.அவரிடம் அதிகம் பேசமுடியாமல் போய்விட்டது. இதே போன்று பல நண்பர்களுடன் அதிகம் பேசமுடியாமல் போய்விட்டது.இனி அடிக்கடி சென்னையில் மீட்டிங்கில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

நண்பர் பாலா கூறியது போல் குறைந்த கால அவகாசத்தில் கூட்டப்பட்டது என்றாலும் நிறைய நண்பர்கள் வந்திருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.இது போன்ற கூட்டங்களை மாதம் ஒரு முறையாவது நடத்தலாம்
வலைப்பதிவர் என்ற ஒற்றுமையை தாண்டி அவரவர்களுக்கு தனித்தனி கருத்துக்கள், அரசியல் ஆர்வங்கள் இருக்கிறது என்பதையும் அது இயற்கையானதுதான் என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

வலைப்பதிவர் கூடிப்பேச குழுமத்தில் இயங்குவது முட்டுக் கட்டையாகிவிடக்கூடாது.கவிதை பிடித்தவர்கள் சேர்ந்து கவிதைக்கு குழுமம் அமைப்பது போல் ஒரு அரசியல் கருத்தை பிடித்திருப்பவர்கள் அதை சார்ந்து குழுமம் அமைக்கலாம்.இத்தனையையும் மீறி மாற்று கருத்து இருப்பவர்களுடன் நண்பராக பழகலாம்.அது தான் வளர்ச்சி.முதிர்ச்சி இந்த தெளிவு சென்னை வலைப்பதிவாளர்கள் பலருக்கும் இருப்பது ஒரு ஆரோக்கியமான கூறு.எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது.இதற்காக சென்னை வலைப்பதிவாள நண்பர்களுக்கு ஒரு ஜெ போட்டுக்கொள்கிறேன்.

இந்த பக்குவம் இல்லாத ஒரு ஆத்மா கூட்டுவலைத்தளத்தில் கடந்த வாரம் வந்த ஒரு கட்டுரையைப் பார்த்து குழுமம் கலைக்கப்படுமா என்று அனானியாக கேட்டது ஞாபகம் வருகிறது.

அடுத்த வலைப்பதிவாளர் கூட்டத்தில் இருந்து கூட்டத்தில் என்ன பேசுவது என்பதை முதலிலேயே முடிவு செய்துவிட வேண்டுமாய் சந்திப்பை ஒருங்கிணைக்கும் சென்னை நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். அறிமுகத்திற்கு பிறகு,கவிதை படிப்பது, கட்டுரை படிப்பது அல்லது ஏதாவது தலைப்பில் விவாதம்(கலந்துரையாடல் செய்வது) என்று வைத்துக் கொள்ளலாம்.

நாகேஸ்வரா பார்க் என்பது எழு மணிக்கு மேல் இருட்டி விடுகிறது. யார் வருகிறார்? யார் போகிறார் என்று குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. சென்னையில் இருப்பதாக கூறப்பட்ட அந்த மனிதரையும் டோண்டுவையும் சந்திக்க வைத்து சூழலை சரியாக்கலாம் என்று நினைத்து இருந்தேன். அது சரியாக அமையவில்லை. என் பெருந்தலைவர் ஜோசப் வராதது எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

அடுத்த முறை சந்திப்பை வெளிச்சம் இருக்கும் இடத்தில் நடத்தலாம். மெரினாவில் கூட முயற்சி செய்யலாம்.

மதுரையில் தீபாவளி சமயத்தில் ஒரு சந்திப்பு நடத்தலாம் என்பது என் ஆசை. மதுரையை சேர்ந்த நண்பர்கள்( லிவிங் ஸ்மைல், தருமி, ராம்,பிரபு ராஜதுரை உள்ளிட்டோர்) தொடர்பு கொண்டால் இதைப்பற்றி மேலும் விவாதிக்கலாம்.

(திராவிட ஃபிகர் மேட்டரை பற்றியும் வாட்டர் பாக்கெட்டை முகர்ந்து மப்பாகி மயக்கம் அடைந்தவரைப்பற்றியும் வரும் பாகங்களில் )