இது என்னுடைய அனுபவங்களில் ஒன்று.ஊர்வலம் போவது,கோஷ்டி சேர்ந்து கோஷம் போடுவது என்பதெல்லாம் வீணாண வேலை என்பதாக பலருக்கு நினைப்பு இருக்கிறது.நானும் அந்த மாதிரியான எண்ணத்தை கொண்டு இருந்தவன் தான். அதை நான் தவறு என்று உணர்ந்தது ஒரு சந்தர்ப்பத்தில்.அதை பற்றி இங்கு எழுதுவது தான் இந்த பதிவின் நோக்கம்.
நான் முதன்முதலில் வங்கி பணியில் சேர்ந்தது ஒரு கிராமத்து கிளை.அதிகம் படித்தவர்கள் நிறைந்த ஊர் என்று சொல்லிவிடமுடியாது. தலித் சமுதாயத்தை சேர்ந்த விவசாய கூலிகள், மலைவாழ் பழங்குடியினர் நிறைய இருந்த அந்த கிராமத்தில் அதிக அளவு சிறு மற்றும் குறு விவசாயிகளும் இருந்தனர்.
நான் அன்று கையெழுத்து போட்டு வேலைக்கு சேர வேண்டும். ஆனால் நான் வங்கி உள்ளேயே நுழைய முடியாதபடி வங்கி வெளிப்புற கேட் முன்னால் ஒரே கூட்டம். எப்படியோ உள்ளே நுழைந்துவிட்டேன். ஆனால் மேலாளர் வரவில்லை.கிராம கிளையாதலால் ஒரே ஆபிசர்தான்.அவரிடம் தான் ரிப்போர்ட் செய்யவேண்டும்.
மேலாளர் வரும்போது கெரோ தொடங்கிவிட்டது. வெளியே கூடியிருந்த கூட்டம் அவரை உள்ளேயே வரவிடவில்லை. எனக்கு அதிர்ச்சியாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது.எங்கள் வங்கி கிளை மாடியி்ல் அமைந்திருந்ததால் மாடியில் இருந்து கி்ழே நடக்கும் களேபரங்களை பார்க்கமுடிந்தது. சுமார் 45 முதல் 50 வயதுள்ள ஒரு குட்டையான ஒரு ஆள் தான் ஆர்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்திவந்தார்.
எங்கள் கிளை மேலாளருடன் சூடான வாக்குவாதம். எங்கள் மேலாளர் போலீஸை கூப்பிடுவேன் என்று சொல்லி பார்க்கிறார். இந்த பூச்சாண்டியெல்லாம் என்கிட்ட வேண்டாம் சார் என்ற அந்த நபர் புறங்கையால் அந்த மிரட்டலை சமாளிக்கிறார். அன்றே அருகில் இருந்தவர்களிடம் கேட்டதில் அவர் பெயர் கோபால் என்பதும் உள்ளுர் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் என்றும் தெரியவந்தது.
கிராமத்து பெரிய மனிதர்கள் உதவியுடன் எங்கள் மேலாளர் அன்று கெரோவில் இருந்து மீண்டதும் எதற்கும் அயராத கோபால் வங்கிக்கு எதிரில் மைக் செட் கட்டி மேலாளருக்கு எதிராக கோஷம் போட்டதும் பின்னர் மீண்டும் ஊர்பெரியமனிதர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்து எங்கள் மேலாளர் கோபால் கேட்டுக்கொண்டபடி சிலருக்கு லோன் வழங்க ஒப்புக்கொண்டதையும் பார்த்த எனக்கு அந்த வயதில் அது கண்டிப்பாக ஒரு புதிய அனுபவம் என்றே சொல்லவேண்டும்.
IRDP(ஒருங்கிணைந்த கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்)திட்டத்தின் கடைசி நாட்கள் அவை. எங்கள் கிளை மேலாளர் சற்றே கெடுபிடியானவர். இது போன்ற கடன்திட்டங்களில் வழங்கப்படும் கடன்கள் பெரும்பாலும் திரும்பசெலுத்தப்படுவதில்லை என்பதால் இது போன்ற கடன்களை அவர் ஊக்கப்படுத்துவதில்லை.
பிறகு சில காலம் கழித்து நான் அறிந்துக்கொண்டது என்னவெனில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசாங்கம் ஸ்பான்சர் செய்கிற கடன்களில் (இதில் குறிப்பிட்ட சதவீத பணம்தான் அரசுடையது)பணம் திரும்ப வராது என்ற காரணத்தால் கிளை மேலாளர் ஒருவருக்கு கடனை மறுத்தாலும், புகார் என்று போனால் வங்கி மேலிடம் கிளை மேலாளருக்கு சப்போர்ட் செய்யாது என்பதுதான்.கிளை மேலாளர் என்பவர் எவ்வாறு இவ்வகையாக குறுக்கீடுகளை சமாளிக்கிறார் என்பதும் முக்கியம்.இதுபோன்ற சமயங்களில் சில கடன்கள் வசூல் ஆகாமல் போகலாம்.இதன்பொருட்டு அந்த மேலாளர்களும் கேள்வி கேட்கப்பட மாட்டார்கள்.
விஷயத்திற்கு வருவோம்.அன்று தொடங்கி கம்யூனிஸ்ட் கோபாலை பல சமயங்களில் பார்த்துள்ளேன்.காலை எட்டு மணிக்கு வங்கி முன் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வெறும் பனியனோடு லுங்கியை கட்டிக்கொண்டு பல்குச்சி வாயில் இருக்க பஞ்சாயத்து பண்ணிக்கொண்டு இருப்பார். ஒரு தீர்ப்பையாவது அவர் கூறுவார் என்று நானும் காத்திருந்து பார்த்தது உண்டு.ஆனால் என் கண் பார்த்து அவர் தீர்ப்பு சொன்னதில்லை.ஆனால் எப்படியும் தினமும் பஞ்சாயத்து உண்டு.
தீடிரென்று காலை பத்து பதினொரு மணிக்கு சிலருடன் வங்கிக்கு வருவார்."நம்ப பசங்கதான், வெளியே பத்துரூவா வட்டிக்கு கடன் வாங்கி வட்டி கட்டிக்கிட்டு இருந்தான். நான்தான் நம்ப மானேஜர் இருக்கார்னு கூட்டிக்கிட்டு வந்தேன்", என்பார்.எங்கள் கிளை மேலாளரும் எப்படியாவது ஒரு லோனுக்காவது அவரை ஜாமீன் கையெழுத்து போட வைக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்.அந்த கடன் வசூல் ஆகவில்லையெனில் அதை சொல்லி அவருடைய மற்ற பரிந்துரைகளை மறுத்துவிடலாம் என்பது திட்டம்.ஆனால் அதற்கெல்லாம் மசிகிறவரா நம்ப கோபால்.கூட்டிக்கொண்டு வருகிற ஆட்களிலேயே ஒருவருக்கு ஒருவர் மாற்றி ஜாமீன் போட வைப்பார்.
ஒருநாள் ஏதோ காரணத்திற்காக அந்த கிராமத்தில் உள்ள ஒரே அரசு மருத்துவமனையை கண்டித்து பேரணி, ஆர்பாட்டம் என்று அறிவித்தார். காலை பத்து மணிக்கு பேருந்து நிறுத்தத்தில் துவங்கும பேரணி ஊர்வலமாக சென்று அரசாங்க ஆஸ்பத்திரி முன்னால் கோபாலின் பேருரைக்குப்பின் மகஜர் கொடுப்பது என்பது நிகழ்ச்சிநிரல்.பயந்துப்போன நான் அன்று பஸ் எல்லாம் ஊருக்குள் போக முடியாது என்று முடிவு செய்து என்னுடைய இரு சக்கர வாகனத்தில் வங்கிக்கு சென்றேன்.எங்கள் வங்கிக்கு முன்னால்தான் பேருந்து நிறுத்தம் ஆதலால் எதையும் நன்றாக பார்க்கமுடியும்.
பத்துமணிக்கு எந்த ஒரு சலசலப்பையும் காணோம்.கோபால் தான் வழக்கமாக உட்காரும் இடத்தில் அமர்ந்திருக்கிறார்.அமைதியாக இருக்கிறார். ஒரே மாற்றம் துவைத்த வேஷ்டி,சட்டை அணிந்திருக்கிறார்.ஒரு பேரணி நடக்கப்போகிற அறிகுறி எதுவுமே அந்த இடத்தில் இல்லை.நான் பேரணி கேன்சல் ஆகிவிட்டதோ என்று சந்தேகப்பட்டேன்.நேரம் கூடக்கூட எனக்கு பதட்டமாக இருந்தது.சரியாக பத்து மணி பத்து நிமிடத்திற்கு கோபால் தன் சட்டை பையிலிருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்து படித்துக்கொண்டே நடக்கிறார். ஆங்காங்கே உட்காந்திருந்த நான்கு பேர் ஆம் ,நம்பினால நம்புங்கள்.நான்கே பேர். அவரை கோஷம் போட்டபடி பின்தொடருகிறார்கள். ஊர்வலமும் பேருரையும் மகஜர் சமர்பித்தலும் கண்டிப்பாக நடந்திருக்கும் .சந்தேகம் என்ன?
போலீஸ் ஸ்டேஷன் என்பது சர்வ சாதாரணம் அவருக்கு.கிராமத்தில் ஏற்படும் சில சில்லறை சண்டை,திருட்டு போன்ற விஷயங்களில் போலீஸ் ஸ்டேஷன் போய் கிராம மக்கள் சார்பாக பேசுவதும் அவர் வேலைகளில் ஒன்று.பணம் எதுவும் வாங்குவது இல்லை.மக்கள் அன்புடன் வாங்கிக்கொடுப்பதை சாப்பிடுவார்.
வரலாற்று பொருள்முதல்வாதம் என்றால் என்ன என்று இவருக்கு தெரியுமா? எங்கெல்ஸ், மார்க்ஸ் பற்றியெல்லாம் மக்களுக்கு இவர் சொல்வாரா? என்றெல்லாம் நான் சிந்தித்ததுண்டு. அவரிடம் நான் அதிகம் பேசியதில்லை. அவர் என்னை பூர்ஷ்வா வர்க்கம் என்று கூட நினைத்துக் கொண்டிருக்கலாம்.ஆனால் நான் உள்ளூர அவரை ரசித்துக்கொண்டிருந்தேன். அவருடைய நடவடிக்கைகளை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் தன் பார்வையை கொண்டு அர்த்தப்படுத்திவிடமுடியும்.
ஒருவர் இந்த பதிவை வெறுமே ஒரு சிரிப்பு துணுக்காகவும் படித்துவிடமுடியும் ஆனால் சற்றே சிந்தித்தால் இதுபோன்ற ஆட்கள் படிப்பறிவில்லாத அப்பாவி ஜனங்கள் வாழ்க்கையில் எந்த அளவிற்கு ஆக்கபூர்வமாக பங்களிக்கிறார்கள் என்பதையும் புரிந்துக்கொள்ள முடியும். இன்றைய கிராமங்களில் இவர்களுடைய பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.இவர்களின் சாதனை என்பது வெளிஉலகிற்கு தெரியாமல் போகலாம். ஆனால் இந்த மாதிரியான போராட்டங்களால் சிறிய அளவிளாவது சில மாற்றங்களை இவர்கள் உருவாக்கி வருகிறார்கள்.
ஆனால் நம் கல்வி முறையில் பட்டபடிப்பு வரை ஒருவர் மார்க்சியம் என்றால் என்ன என்று தெரியாமலே படித்துவிடமுடியும் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.ஒருவர் அந்த சிந்தாந்தத்தை ஏற்றுக்கொள்கிறாரா மறுக்கிறாரா என்பது அவரவர் மனப்பான்மையையும் சிந்தனைமுறையையும் பொறுத்தது. ஆனால் ஒரு அறிவியலை அடிப்படையாக கொண்டதாக சொல்லப்படுகின்ற ஒரு சிந்தனை முறை பற்றிய படிப்பு நம் பள்ளிகல்வியில் இல்லை என்பது நம் கல்விமுறையின் பற்றாக்குறையை சொல்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
ஒரு புறம் அறிவியல் பாடம் எதையும் அறிவியல் பூர்வமாக பார்க்கும் கல்வி. இன்னொரு புறம் அதற்கு சம்பந்தமே இல்லாமல் மூடநம்பிக்கைகளில் ஊறிய வாழ்க்கை முறை. குறைந்தபட்சம் மார்க்சியத்தின் அடிப்படைகளாவது தெரிந்த இளைஞர்கள் இங்கு எத்தனை பேர்?கம்யூனிஸ்ட் என்றாலே ஸ்ட்ரைக் பண்ணுகிறவர்கள் என்றும் கூட்டம் சேர்ந்து கோஷம் போடுகிறவர்கள் என்று எண்ணம்தானே இங்கு பல இளைஞர்களுக்கும் உள்ளது.இது வருந்தத்தக்கது மட்டுமல்ல சிந்திக்கதக்கதும் கூட.
(இந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்த என்னுடைய படைப்பு.மே தினமாக நேற்று வெளியிடப்பட்டிருக்கவேண்டிய இந்த கட்டுரை ஒரு மீள்பதிவு.இத்துடன் இன்று நான் எழுதியுள்ள கம்யூனிசம் சில கேள்விகளும் குறிப்புகளும் என்ற கட்டுரையையும் வாசிக்கவேண்டுகிறேன்.நன்றி.)
Tuesday, May 02, 2006
Subscribe to:
Post Comments (Atom)
41 comments:
தேர்தல் களத்தில் இவர்களோட வாய்ப்பைப்பற்றி எழுதுங்க முத்து
தேர்தல் பத்தி எழுதறது இல்லைன்னு வைச்சிருக்கேன் இந்த வாரம்...அதான்
நல்ல தகவல் பகிர்வு. வாயுள்ள பிள்ளைதானே பிழைக்கும்.
சரி...இந்த மாதிரி திரும்பி வாராக் கடன்களைக் கொடுப்பதற்கு உச்ச வரம்பு இருக்கிறதா? இல்லை வரும் பொழுதெல்லாம் குடுத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதானா?
ஒருமுறை அரசாங்க உதவியை பெற்றவர்(பணக்காரர் ஆயிடறீங்களே) மீண்டும் பெறமுடியாது என்பது விதி. ஆனால் இதில் பல ஓட்டைகள் உள்ளன.
திரு.முத்து அவர்களே..
உங்களின் இந்த வரிகள் மிகவும் அருமை..
//*அவருடைய நடவடிக்கைகளை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் தன் பார்வையை கொண்டு அர்த்தப்படுத்திவிடமுடியும்.*//
உங்களின் பார்வை விசாலமாக இருந்ததால் தான் அவரின் நடவடிக்கைகளுக்கு
எந்த உள் அர்த்தமும் உங்களுக்கு தோனாமல் அவரின் நடவடிக்கைகளை
ரசித்து இருக்கிறீர்கள். அருமையான பதிவு.
அன்புடன்
சரவணன்.இரா
கம்யூனிசம் என்றாலே கெட்ட வார்த்தை, உரிமைக்குப் போராடுவது பிற்போக்குத் தனம் என்று சாதித்துக்
காட்டி விட்ட இன்றைய அமெரிக்க மயமாகி விட்ட சமூகத்தில், கோபால் போன்ற மனிதர்கள்தான் சாதாரண
மனிதர்களின் நம்பிக்கை அரண்கள்.
முத்து நம்மிருவருக்கும் நட்பை ஏற்படுத்திய - அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்ட பதிவு இதுதான் என்பதை நினைவூட்டுகிறேன். இந்த பதிவை வெளியிட - உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய கம்யூனி°ட் கோபாலுக்கு மிகுந்த நன்றிகள்...
படித்தவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்பவர்களுக்கு கம்யூனி°ட் கோபாலின் பணி ஒரு முன்னுதாரணம். ஒருவர் அரசியல் அறிவியலில் டாக்டரேட் ஆகி இருக்கலாம். ஆனால் அவருக்கு மக்கள் மீது பாசம் இல்லாவிட்டால் பத்தோடு ஒண்ணு - 11 ஆகி விடுவார். இதுதான் இன்றைய சூழல். மக்களுக்குத் தேவை கம்யூனி°ட் கோபால்கள்....
இது போன்று ஏராளமான உதாரணங்கள் இருக்கும். இவற்றை தொகுத்தலே இன்றைக்கு அடித்தள மக்கள் வரலாறாக. உண்மையான வரலாறாக பதியப்படுகிறது. இன்றைக்கு வரலாறு என்றாலே அது கருணாநிதிக்கும் - ஜெயலலிதாவுக்கும் நடக்கும் சண்டை மட்டுமே என்பது போலவேவும், ஓடுகாலி வைகோவைப் பற்றி கூறுவது மட்டுமேயாக இருக்கிறது. ஆனால், வரலாறு என்றால், மக்கள் பொருளாதார - வாழ்வை மேம்படுத்தும் கூறுகளை அடிப்படையாக கொண்டது. அந்த வகையில் கோபால் வரலாற்றில் பதியப்பட்டுள்ளார். வாழ்த்துக்கள் முத்து!
சரி...இந்த மாதிரி திரும்பி வாராக் கடன்களைக் கொடுப்பதற்கு உச்ச வரம்பு இருக்கிறதா? இல்லை வரும் பொழுதெல்லாம் குடுத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதானா?
நன்பரே வரா கடன் என்றால், அது இதுபோன்ற ஏழைகள் வாங்கும் கடன்கள் அல்ல. இது மிக மிக சொற்பமானதே! இந்த வரா கடனில் மிக முக்கியமானது பல லட்சம் கோடிகளை ஏப்பம் விடும் பெரும் முதலாளிகள், நிலபிரபுக்களுடையது. பெரும் முதலாளிகளுக்கும் - நிலவுடைமையாளர்களுக்கும் கோடிக்கணக்காக கடனிளிக்கும் வங்கிகள், ஏதுமில்லாத ஏழைகளை முன்னேற்றுவதற்கு ஒன்றுமே செய்வதில்லை... இது குறித்தும் முத்து பதிந்துள்ளார். அவரே இந்த நட்சத்திரத்தில் இது குறித்து விளக்குவார் என்று எதிர்பார்ப்போம்.
நீங்கள் பார்த்த கோபால், நாம் எல்லோரும் பார்த்திருக்கும் நல்லக்கண்ணு - இவர்கள் எல்லாம் இருக்கும்போதும் இந்தக் கட்சிகள் ஏன் இன்னும் நம் தமிழ்கூறு நல்லுலகில் காலூன்ற முடியவில்லை?
//
ஆனால் ஒரு அறிவியலை அடிப்படையாக கொண்டதாக சொல்லப்படுகின்ற ஒரு சிந்தனை முறை பற்றிய படிப்பு நம் பள்ளிகல்வியில் இல்லை என்பது நம் கல்விமுறையின் பற்றாக்குறையை சொல்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
//
அறிவியல் அடிப்படை கொண்டது மார்க்ஸியம் என்பது நீங்கள் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.
என்னை பொருத்தவரை, அறிவியல் அடிப்படை என்பது தவறு என்றும் சரி என்றும் நிரூபிக்கப்படக் கூடியதாக இருக்கவேண்டும் (Falsifiablity).
நான் மார்க்ஸ்வாதம் தவறு என்று சொன்னால், என்னை வலது சாரி தீவிரவாதி/ ஹிந்துத்வா வாதி என்று பட்டம் கட்டி ஒதுக்கி விடுவார்கள். (அல்லாஹ் வை ஏற்றுக் கொள்ளாதவர்கள் காஃபிர், கிருத்துவ தத்துவத்திற்கு எதிர்ப்பு கூறுபவர்கள் apostate அல்லது blasphemy செய்துவிட்டதாக கூறுவது போல்).
மார்க்ஸியக் கொள்கை Falsifiable என்பதை ஒத்துக் கொள்வீர்களா? (உலகறிந்த உதாரணம் சிதருண்ட சோவியத் யூனியன்)
நமது கல்வி முறையின் கண்ணோட்டம், சாய்வின்றி இருப்பது நல்லது.
ஏற்கனவே, மார்க்ஸியம் போன்ற தீவிரமான கொள்கையின் (strong ideology) பாதிப்பு நம் படப் புத்தகங்களில் உணரப்பட்டதே. மார்க்ஸியக் கொள்கையின் கண்ணோட்டத்தில் நமது வரலாற்றை திரித்தவர்கள் யார்?
ஷங்கர்.
சங்கர் வரலாற்றை திருத்தியவர்கள் இடதுசாரிகள் இல்லை. இந்துத்துவவாதிகள்தான். சுதந்திரப்போராட்ட துரோகியான சவர்க்கரை ஹீரோவாக சித்தரித்தவர்கள் வாஜ்பாய் வகையறாக்கள்தான்... அடுத்து வாஜ்பாயே மிகப் பெரிய சுதந்திரப்போராட்ட துரோகி... இவர்கள் வெள்ளையனின் கையாள்.. இவரை உத்தம புருஷர் என்று பொய்யாய் சொல்லி புளுகியவர்கள் - திருத்தல்வாதிகள் இந்துத்துவாதிகள்தான்....
நல்லக்கண்ணு - இவர்கள் எல்லாம் இருக்கும்போதும் இந்தக் கட்சிகள் ஏன் இன்னும் நம் தமிழ்கூறு நல்லுலகில் காலூன்ற முடியவில்லை?
நல்லகண்ணு ஒரு முன்னுதாரணமான பொதுவுடைமைவாதி... இவரை வாழும் காமராஜர் என்று கூறுவார்கள்... அதுவே தவறானது! ஏனென்றால் காமராஜர் மக்களை எலிக்கறி சாப்பிடச் சொன்னவர்... அதாவது, மக்களை நிந்தித்தவர்... இவர் அப்படியல்ல... இவரைப் போல் ஏராளமானோர் உள்ளனர் சங்கரய்யா, உமாநாத், ஜீவா....
இருப்பினும் இன்னும் வளராததற்கு அடிப்படைக் காரணம் சாட்சாத் திராவிட மாயைத்தான்.
//
சங்கர் வரலாற்றை திருத்தியவர்கள் இடதுசாரிகள் இல்லை. இந்துத்துவவாதிகள்தான். சுதந்திரப்போராட்ட துரோகியான சவர்க்கரை ஹீரோவாக சித்தரித்தவர்கள் வாஜ்பாய் வகையறாக்கள்தான்... அடுத்து வாஜ்பாயே மிகப் பெரிய சுதந்திரப்போராட்ட துரோகி... இவர்கள் வெள்ளையனின் கையாள்.. இவரை உத்தம புருஷர் என்று பொய்யாய் சொல்லி புளுகியவர்கள் - திருத்தல்வாதிகள் இந்துத்துவாதிகள்தான்....
//
நான் வரலாற்றைத் "திரி"த்தவர்களைப் பற்றிப் பேசினேன். "திருத்தி"யவர்களைப் பற்றி அல்ல.
திரித்தவர்கள் இடது சாரிகள் (Irfan Habib, Romila Thapar, போன்ற self proclaimed marxists).
உங்களால், வேறொரு கண்ணோட்டத்தில் சிந்திக்கக் கூட முடியவில்லை.
சாவர்கர் துரோகி, வாஜ்பாய் துரோகி, இவர்கள் வெள்ளயனின் கையாள் என்று, மார்க்ஸ்வாதிகள் கூறுவதைத் தவிர நீங்கள் ஒன்றும் புதிதாகக் கூறவில்லை. (baseless allegations).
யார் வெள்ளையனின் கையாள் என்பதை Mitrokhin நிருவி விட்டார் என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. Mitrokhin ஒரு ஹிந்துத்வாவாதியா!? அல்லது மார்க்ஸியத்தை அழிக்க வந்த அமேரிக்க முதலாளித்துவக் கைப்பாவையா?
பார்தீர்களா! மார்க்ஸ்வாதத்தை பற்றி சற்றே சங்கடமான கேள்வி கேட்டால் இந்துத்வாவாதியை இழுப்பது!!
மார்க்ஸ்வாதம் அறிவியல் கண்ணோட்டத்தில் இல்லை என்பதற்க்கு "சந்திப்பை"த் தவிர வேறு உதாரணம் வேண்டுமா?
ஷங்கர்.
ஷன்கர்,
மார்க்ஸிசம் அறிவியல் கண்ணோட்டத்தில் இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள்?
பொருளாதாரவியல் என்பது சமூக அறிவியலைச் சேர்ந்தது. அந்த வகையில் மார்க்ஸின் கோட்பாடுகள்
அறிவுபூர்வமாக நிரூபிக்கப்பட்டவைதான்.
சுகுமாறன் மார்க்சியம் சார்ந்து நீங்கள் எழுதும் விளக்கங்கள் நல்லமுறையில் அமைந்துள்ளது. ஆனால் படிப்பது இராமாயணம் - இடிப்பது பெருமாள் கோவில் என்பது போல உள்ளது உங்களது பதிவு குறித்த நோக்கம்.
"தமிழ் தமிழர் உயர்வே நமது இலட்சியம்?
இனம் என்று வந்து விட்டாலே வர்க்கம் காணாமல் போய்விடும்... இனத்திற்கு முதலாளி - தொழிலாளி வித்தியாசம் தெரியாது. அங்கே வெறும் உணர்வுதான் நிற்கும். இதுவே மார்க்சியத்திற்கு முரணானதாக தெரிகிறது. வர்க்கத்தை ஒழிப்பதுதான் மார்க்சியத்தின் நோக்கமே தவிர, இனங்களின் உயர்வல்ல. எனவே, நீங்கள் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவராக இருந்தால் உங்கள் தளத்தில் உள்ள - தளம் குறித்த நோக்கத்தை நீக்கிட வேண்டுகிறேன்.
மார்க்ஸ்வாதிகளைப் பார்கவும்,
மார்க்ஸ்வாதத் தத்துவம் அதனால் அவர்கள் கொண்ட கண்ணோட்டத்தை தவிர வேறு ஒரு கண்ணோட்டம் இருக்கலாம் என்பதை உணர மறுப்பதை. (எதற்கெடுத்தாலும் இந்துத்வா, அமேரிக்க முதலாளித்துவம் என்று பேசுவது)
falsifiability என்பது,
//
"Falsifiability, or defeasibility, is an important concept in the philosophy of science. It is the principle that a proposition or theory cannot be considered scientific if it does not admit the possibility of being shown false."
//
பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது, சோவியத் சிதறியது போன்ற சரித்திர நிகழ்வுகள் மார்க்ஸியத்தின் தவறுகளைக் காட்டிவிட்ட நிலையில். அதை இன்னமும், ஒரு அறிவியல் கண்ணோட்டம் என்று சப்பை கட்டுவது எந்த விதத்திலும் அதை அறிவியலாக்கிவிடாது.
போதாத குறைக்கு, க்யூபா போன்ற நாடுகள், மார்க்ஸ்வாததினால் இன்னமும் முன்னேராமல் இருப்பது உலகறிந்த உண்மை. (அதற்கு காரணம் அமேரிக்கா என்று நமது மார்க்ஸ்வாதிகள் சொல்வது சகிக்கமுடியவில்லை. மார்க்ஸ்வாததின் இன்றய எதிரி அமேரிக்கா, உலகில் உள்ள எல்லா தீமைகளுக்கும் காரணம் அமேரிக்கா)
In here we see marxism not only being shown falsifiable, but also shown to be false or wrong economic concept which lead ultimately to the destruction of the countries following it.
According to science, a theory should accept the possibility of Falsifiability (which marxism does not) and if a theory is shown to be false, it should be discarded (according to science).
ஷங்கர்.
மார்க்சியம் விஞ்ஞானப்பூர்வமானது. வரலாற்றை விஞ்ஞானப்பூர்வமாக அலசுகிறது. இயக்கவியல் ரீதியாக பரிசீலிக்கிறது. அந்த பரிசீலனையின் முடிவுதான் கீழ்க்கண்டவை:
1. புராதான பொதுவுடைமை சமூகம் (அதாவது, அனைத்து மனிதர்களும் கூட்டமாக - குழுவாக வாழ்ந்த காலகட்டம். கிடைத்ததை அனைவரும் சமமாக - அல்லது தேவைக்கேற்ப பகிர்ந்து உண்ட சமூகம்)
2. ஆண்டான் - அடிமை சமூகம்
3. நிலப்பிரபுத்துவ சமூகம்
4. முதலாளித்துவ சமூகம்
5. சோசலிச சமூகம்
6. இறுதியில், கம்யூனிச சமூகம்.
சமூகம் எந்த இடத்திலும் மாறாமல் தேங்கிய குட்டையாய் நின்றுபோனது கிடையாது. அதனால் நிற்கவும் முடியாது. இது வளர்ச்சியை நோக்கித்தான் முன்னேறும். அந்த அடிப்படையில் நாம் கடந்து வந்திருக்கிற ஒவ்வொரு பாதையும் முற்போக்கானது. இதுவரை நாம் கண்டுள்ளது சோசலிச சமூகத்தின் ஆரம்பத்தைத்தான். கம்யூனிச சமூக அமைப்பை உலகில் இன்னும் எந்த மூளையிலும் வரவில்லை. இதுதான் விஞ்ஞானம். இந்த விஞ்ஞானம் நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் இந்துத்துவ சமூகம் என்ற ஒன்று எந்த காலகட்டத்திலும் இருந்ததில்லை. அத்தோடு, அந்த இந்துத்துவ சமூகமும் சுரண்டல் வர்க்கத்தின் தத்துவமே. அது பார(தீ)ய சமூகம். இது ஆண்டைகளுக்கும், ஜாதிய மேலாதிக்கத்திற்கும் வக்காலத்து வாங்கும் சமூகமே. எனவே இந்தியாவில் இந்துத்துவ சமூகம் எந்த காலத்திலும் உருவாகாது. ஏனென்றால் இது விஞ்ஞானமல்ல.
நன்றி சங்கர்.
மார்க்ஸிசம் என்பதை முழுவதுமாக புரிந்து கொள்ளாமல், சோவியத் யூனியன், பெர்லின் சுவர், கியூபா என்று எதிர்மறை உதாரணங்களைக் காட்டாதீர்கள்.
சந்தைப் பொருளாதரத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் அமல்படுத்தி அதனால் அவதியுற்ற நாடுகளும் உண்டு (தென்கிழக்கு ஆசிய பொருளாதார வீழ்ச்சி, தென் அமெரிக்க வாழைப்பழ குடியரசுகளின் தவறுகள் போன்றவை). அதனாலேயே சந்தைப் பொருளாதாரம்
பற்றிய தத்துவங்கள் தவறு என்று சொல்லி விடுவீர்களா?
நாடுகள் தழுவிய பரிசோதனைகள் தவறாகப் போய் முடிந்து விட்டாலும், இன்னும் ஒவ்வொரு சமூகத்திலும்
(அமெரிக்கா, இந்தியா உட்பட), மார்க்ஸ் விவரித்த காரணிகள் பொருளாதார வாழ்வை பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
அவற்றைப் புரிந்து கொண்டு அவற்றின் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
மா. சிவகுமார்,
மார்க்ஸிஸக் பொருளாதாரக் கொள்கை என்பது, ஒரு கொள்கை தான் என்பதை மறந்துவிடவேண்டாம்.
நான் கேட்பதெல்லாம், மார்க்ஸ்வாதம் falsifiable என்பதை ஒத்துக் கொள்வீர்களா? உலகில் அப்படி எத்தனை மார்க்ஸ்வதிகள் ஒத்துக் கொள்கிறார்கள்.?
//
நாடுகள் தழுவிய பரிசோதனைகள் தவறாகப் போய் முடிந்து விட்டாலும், இன்னும் ஒவ்வொரு சமூகத்திலும்
(அமெரிக்கா, இந்தியா உட்பட), மார்க்ஸ் விவரித்த காரணிகள் பொருளாதார வாழ்வை பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
//
இது மறுப்பதற்கில்லை.
ஆனால், நாடுகள் தழுவிய பரிசோதனைகள், தவறாக முடிந்தது என்பதை ஓப்பனாக ஒத்துக் கொள்ளும் முதல் மார்க்ஸிஸ்ட் நீங்கள் தான். (மற்றவர்களெல்லாம் அமேரிக்க சதி என்று சொன்னார்கள்) நன்றி. (நீங்கள் மார்க்ஸ்வாதி இல்லை என்று சொல்லி கவுத்திவுட்றாதீங்க!)
அது சரி, இன்னும் எத்தனை நாடுகளில் தான் பரிசோதிக்கவேண்டும் என்கிறீர்கள்.? உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரிசோதித்து தோற்றால் தான் ஒத்துக் கொள்வீர்களா?
நான் சந்தைப் பொருளாதாரத்தை மார்க்ஸிய கண் கொண்டு புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இன்றய நிலையில் சந்தைப் பொருளாதாரம் பலனளித்து முன்னேறிய நாடுகள் பல உள்ளன. அதனால் சந்தைப் பொருளாதாரம் தான் சரி மற்ற கொள்கைகளெல்லாம் தவறு என்று யாரும் வாதிடுவதில்லை.
இங்கு ஒரு தகவலை வலைப்பதிவாளர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இஸ்ரேலில் (சில காலமாக இங்கு தான் நம் வாழ்வு), 1940 களில் யூதர்கள் உலகெங்கிலும் இருந்து வந்து வாழ ஆரம்பித்த நிலையில், kibbutz என்று கிராமாமாக வாழ்ந்தார்கள் எல்லாமே பொதுவில் தான், நிலம், வீடு, எல்லாமே பொதுச் சொத்து தான். அவர்கள் kibbutz அமைத்த தத்துவம் From each according to his abilities, to each according to his needs என்ற அடிப்படை மார்க்ஸ் வாதத் தத்துவம் தான் (அது விவிலியத்தில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?). இன்றும் ஆங்காங்கே இருக்கிறது இத்தகய கிப்பூட்ஸ். ஆனால் பெரும்பான்மையோர், வெளியேரிவிட்டனர். காரணம், அவர்களிடம் திறமை இருந்தும் சாதிக்க முடியாமல், போவது. ஒருவர் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது, ஒருவன் வேலையே செய்யாமல் வாழ்வது. மொத்தத்தில் அது சிறிய அளவில் failure. அதை அவர்களே ஒத்துக் கொள்வார்கள்.
ஷங்கர்.
ஆமாம் முத்து! விவரம் அறியாத கிராமத்து மக்களுக்கு இப்படி சில ஆட்கள் முன் நின்று உதவி செய்வது, போராட்டம், ஒற்றுமையின் வலிமையை உணர்த்துவது நல்லது தான். நானும் சிலரை என் கிராமத்தில் பார்த்திருக்கிறேன்.
கம்யூனிசம் என்பது வெறும் தொழிற்சாலையில் வேலை பாக்கிறவனுக்கு மட்டும் இருக்கிற ஒரு இயக்கம் மாதிரி ஆனது நம் துரதிஷ்டம் தான்.
ஷங்கர்,
சந்திப்பு எழுதிய சமூகப் பொருளாதரத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய பின்னூட்டத்தை இன்னும் ஒருமுறை
நன்றாகப் படித்து விடுங்கள்.
சோவியத் பரிசோதனை தோல்வி அடைந்தது தவறான புரிதலேயொழிய, அதனால் மார்க்சிஸம் தவறு
என்று ஆகி விடவில்லை. நீங்கள் ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும் ஒவ்வொரு சந்தைப் பொருளாதார சமூகமும், மார்க்ஸ் கணித்த பாதைகளைக் கடந்து கம்யூனிச (கெட்ட வார்த்தை !!) அமைப்பைத்தான்
அடையப் போகிறது.
உலகின் எல்லா நாடுகளிலும் அதுதான் நடக்கப் போகிறது. நடந்து கொண்டிருக்கிறது.
அப்படிப் பார்க்கப் போனால் கம்யூனிஸ்டு கட்சிகள் அந்தப் பரிணாம வளர்ச்சியை இழுத்துப் பிடித்து தாமதப்படுத்த முனைகின்றனவா என்று கேட்டு விடாதீர்கள் :-)
//சோவியத் பரிசோதனை தோல்வி அடைந்தது தவறான புரிதலேயொழிய, அதனால் மார்க்சிஸம் தவறு
என்று ஆகி விடவில்லை. நீங்கள் ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும் ஒவ்வொரு சந்தைப் பொருளாதார சமூகமும், மார்க்ஸ் கணித்த பாதைகளைக் கடந்து கம்யூனிச (கெட்ட வார்த்தை !!) அமைப்பைத்தான்
அடையப் போகிறது.//
sivakumar..same view i read somewhere else also..i think it is in jeyamohan's novel..
சிவக்குமார் மார்க்சியம் குறித்து நல்லமுறையில் பதிலளித்துள்ளீர்கள். இன்றைய சூழலில் மார்க்சியம் - கம்யூனிசம் - சோசலிசம் என்றாலே அது சோவியத்தோடு முடிந்து விட்ட ஒன்றாக கதைக்கப்படுகிறது. பாவம் அவர்களைச் சொல்லி தவறில்லை... இந்த முதலாளித்துவ சமூகம் திரும்பத், திரும்ப கம்யூனிசத்திற்கு எதிராக பரப்பும் கோயபல்சு பிரச்சாரம். ஆனால் மீண்டும், மீண்டும் மண்டையடி வாங்கி வரும் முதலாளித்துவம் பற்றி யாருமே வாய் திறப்பதில்லை. பிரான்சில் மாணவர் - வாலிபர் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் நேபாளில் மன்னராட்சிக்கு முடிவு கட்டப்படும் காலம் நெருங்கி விட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரேசில், வெனிசுலா, ஈக்குவாடர், பொலிவியா என பல நாடுகளில் வேகமாக சோசலிச தீ பரவி வருகிறது. அமெரிக்க பொருளாதாரம் நாறிக் கொண்டிருக்கிறது. எதை எதிர்க்க வேண்டுமோ, அதை செய்வதை விட்டு விட்டு, எது வரக்கூடாது என்று அலறுபவர்களிடம் நாம் எதையும் நியாயத்தை எதிர்பார்க்க முடியும். இவர்களை கன்வின்சு செய்வதை விட, நம் கருத்தை சம காலத்தில் பதிகிறோம்... இது இரண்டு எதிர் - எதிர் பகை வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டம்... இந்தப் போராட்டத்தில் உழைத்து, உழைத்து செவ்வேறிய - உரமேறிய தொழிலாளிகள் முஷ்டிகள் இயல்பாகவே வெற்றி பெறும். சுரண்டலை தூக்கி துமக்கும் மென்மையான கைகள் இந்தப் போராட்ட காலச்சக்கரத்தின் ஒடுங்கும் இது நியதி!
"பழம் தானாகப் பழுக்க வேண்டும். தல்லிப் பழுக்கக் கூடாது" என்று எங்கள் ஊரில் சொல்வார்கள். என்னுடைய புரிதலில், இந்த ஆயுதம் ஏந்திய புரட்சிகள் பெரிதாக சாதித்து விட முடியாது. நீங்கள் எழுதிய குறிப்புபடி, முதலாளித்துவம் முற்றி, சோஷலிசம் உருவாகி அதன் பின்னரே கம்யூனிசம் மலரும். இந்த மாறுதலை தாமதப்படுத்தும் நிகழ்வுகளை தவிர்க்கலாமே ஒழிய வலுக்கட்டாயமாக, குறுக்கு வழியில் கம்யூனிசம் காண முயன்றதுதான் சோதனைகளின் தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறேன்.
நிலவுடமைச் சீர்திருத்தங்கள், தொழிலாளர் நிலை உயர்த்துதல், ஒடுக்கப்பட்டவரின் குரலை எடுபடச் செய்து அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற பணிகள் இந்தியாவில் கம்யூனிஸ்டு இயக்கங்களின் பெரும்பங்காக உள்ளது என்பது என் கருத்து.
வாங்க சார்,
உண்மையிலேயே அதற்கான காரணம் உங்களுக்கு புரியவில்லையா...நமது பார்வையில் உள்ள அடிப்படை வேறுபாடுகள் தான் இதற்கு காரணம்...
இதற்கு காரணம் நான் என்ன சொல்லுவேன் என்று நீங்களே யோசிங்க..இல்லாட்டி நாளைக்கு நான் சொல்றேன்..இதை நீங்க யோசிச்சா பல விஷயங்கள் உங்களுக்கு புலனாகும்..ஏன் நாங்க கத்துறோம்னும் புரியும்....
//அல்லது திராவிட, தேசிய கொள்கைகளிலிருந்து இந்த கம்யூனிஸ்ட் எவ்வாறு வேறுபடுகிறார்? //
வேறுபடுவதேயில்லை..வயிறு காஞ்சவன் பக்கம்,தனக்கென பேச ஆள் இல்லாதவன் பக்கம் கோபால் நிக்கறார்...அவ்வளவுதான்...
கோபாலை பற்றி அதிக விவரம் தெரியாததால் அவரை பற்றி ஏதும் சொல்ல முடியவில்லை.ஆனால் இம்மாதிரி கட்சிக்காரன் கூட்டி வருபவனுக்கெல்லாம் கடன் கொடுப்பது என ஆரம்பித்தால் அது வங்கிகள் திவாலாவதில் தான் வந்து முடியும்.கோபால் கிராம அளவில் செய்வதை நமது மந்திர்கள் மாநில அளவில் செய்கிறார்கள்.ராபின்மெயின் விவகாரம் கூட அப்படிப்பட்டதுதான்.பெருமுதலைகள் மந்திரிகளை பிடித்து கடன் வாங்குகிறார்கள்.ஏழைகளுக்கு ஒரு கோபால்.பணக்காரனுக்கு ஒரு காளிமுத்து.இந்திய வங்கி கோபாலகிருஷ்ணன் இப்படித்தான் மூப்பனார் சொன்னவருக்கெல்லாம் கடன் மேல் கடன் கொடுத்து இந்திய வங்கியையே ஒழித்து கட்ட இருந்தார்.அரசு தலையிட்டு வங்கி தப்பியது.
கோபாலும்(தனிப்பட்ட மனிதரான கோபால் அல்ல) காளிமுத்துவும் செய்யும் தவறுகளும் அடிப்படையில் ஒன்றுதான்.அரசு வங்கிகள் தமது பணியை சரிவர செய்வதில்லை என்பதன் ஒரு சின்னம் தான் இதுபோன்ற அரசியல் தலையீடுஇகள்.வங்கியில் கடன் வாங்குவோர் மட்டும் ஏழைகளல்ல,பணம் போடுவோரும் ஏழைகள் தான்.
உண்மையான ஏழைகளுக்கு உதவ சரிவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிப்பாரிசை ஒழித்து உண்மையான விவசாயிகளுக்கு உதவ வங்கதேசத்தில் உள்ளது போன்று கிராமீன் வங்கிகளை ஏற்படுத்தலாம்.உண்மையான புரட்சியாக அது அமையும்.
அப்பாடி ஒருவழியா இந்த பூர்ஷ்வாக்கு அர்த்தம் தெரிஞ்சிடிச்சு :))
selvan.
you are not knowing ground realities..you are mostly relying on theories..i can explain...
அப்பாவிதமிழன்,
நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு..அதற்கு பாராட்டு..(நீங்கள் யார் என்பதைப்பற்றி எனக்கு ஒரு யூகம் உள்ளது..அது பிறகு)
ஏழைகள் கடனை செலுத்தமுடியாமல் போவதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. பெரிய பெரிய தொழிலதிபர்களே வங்கிகளுக்கு டேக்கா கொடுக்கும்போது வெறும் உடலுழைப்பை மட்டுமெ நம்பி இருக்கும் இந்த மக்களால் சில நேரம் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போகலாம்...(ஆனால் தொழிலதிபர்கள் போல் இவர்கள் wilful defaulters ஆவதில்லை.)
ஆனால் ஏதோ காரணம்(சமூக,உளவியல் காரணங்கள்,பொதுபுத்தி சார்ந்த கருத்துக்களால்) நிறைய வங்கி மேலாளர்கள் இவர்களை புறக்கணிக்கிறார்கள்.கோபால் மாதிரி ஆட்களை இந்த மாதிரியான தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக ஓதுக்கினால் ஏழைகள் பயனடைவது எப்படி?
இது என் முதல் பதில்.கோபாலின் செய்கைக்கு இதுதான் காரணம்.இது அவர் அனுபவத்தால் அவர் கற்ற பாடமாக இருக்கலாம்
திராவிட(ராஸ்கல்) , தேசிய (புனித பிம்ப) கொள்கைக்ள இங்கு முக்கியமல்ல.அவரை பார்க்க வரும் மக்களை ஒருநாள் அமர்ந்து பாருங்களேன்.அழுதுருவீங்க.காய்ந்து கருத்த உடம்பு, எண்ணெய் காணாத தலை, இடுப்பில் அழுக்கு வேட்டி அல்லது ஒரு கோவணம். அவன் கூட எதுவும் எதிர்பாராமல் இரண்டு நாள் நீங்க அலைய முடியுமா?
பாராட்டிற்கும் கருத்திற்கும் நன்றி சரவணன்
சிவகுமார்..
கருத்துக்களை ஆக்கபூர்வமான வழியில் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி..ஏதாவது நான் ஞானசூன்யமாக சொல்லியிருந்தாலும் கற்றுக்கொள்ளும் ஆர்வம்தான் என்று கொள்க.
தடியால் அடித்து கனிய வைப்பது என்றில்லாமல் புரட்சியை வேகப்படுத்தும் காரணிகளாக கம்யூனிஸ்டு்கள் இயங்கவேண்டும் என்கிறார்களெ..அது சரிதானே?
சந்திப்பு,
கருத்து வேறு நட்பு வேறு என்பதில் உறுதியாக இருப்பேன் நான்.உங்கள் நட்பு எனக்கு உற்சாகமூட்டுகிறது. நன்றி.
படித்தவர் அரசியல் என்பதெல்லாம் மாயை..ரோசாவின் பதிவிலும் இவர்களை கிழித்துள்ளார் நேற்று...
ஒரு கேள்வி இனம் என்று வந்தால் ஏன் வர்க்கம் காணாமல் போகவேண்டும்? நாடுகள் தனிதனியாக இருக்கும்வரை இது இருக்குமே?
// ஆனால், வரலாறு என்றால், மக்கள் பொருளாதார - வாழ்வை மேம்படுத்தும் கூறுகளை அடிப்படையாக கொண்டது. அந்த வகையில் கோபால் வரலாற்றில் பதியப்பட்டுள்ளார்//
சத்தியமான வார்த்தைகள் சந்திப்பு மிகவும் நன்றி...
இது ராகவனுக்கும் உங்களுக்கும்,
வராக்கடனை பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளென் மீண்டும் இந்த வாரம் முடிந்தால் எழுதுகிறேன்
தருமி,
ஏழை கட்சி என்பது அடிப்படை காரணம்....
கொள்கை புரியவைக்க சிரமமானது...
தனித்து போட்டியிட பயம்(?)
இன்ன பிற
சங்கர்,
அறிவியல் அடிப்படை என்பதை நீங்கள் இறுக்கமாக அடுக்கினால் கஷ்டம்தான்.
நீங்கள் இந்துத்வா நோக்கில் பார்க்கிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது.பொதுவான பார்வை மதத்தையும் கடவுள்களையும் ஆதரித்தால் கம்யூனிசம் புரிவது கடினம்( இது என் கருத்துதான்)
பொதுவாக சிவகுமார் ,சங்கர் ,சந்திப்பு ஆகியோர் நடத்தும் விவாதம் விஷயபூர்வமாக உள்ளது.இவர்களுக்கு என் நன்றி.
நன்றி சிவா,
எனக்கு மிகவும் பிடித்தவர் இந்த கிராமத்து கோபால்...
அலக்ஸ்
சிரிப்பு எதற்கு? பாராட்டு என்று எடுத்துக்கொள்கிறேன்...
பட்டணத்து ராசா,
பீசை எடுத்து வைச்சுட்டு மறுவேலை பாருமையா...ஓசில மங்களம் பாடுறீரா..
அன்பு முத்து,
இன்னமும் பாமரர்கள் அரசை விடுத்து, கோபால் போன்றவர்களை சார்ந்து இருப்பது வேதனைக்கு உரியது.
சங்கர் அவர்கள் கம்யூனலிசத்தை இடையில் சொருகாமல், கம்யூனிசம் பற்றி மட்டும் பேசினால், விவாதம் சிறக்கும்.
நட்புடன்,
ஸல்மான்
நல்ல பதிவு. சந்திப்பு சொன்னதைப் போல இவர்களைப் பற்றிப் பதித்தலே உண்மையான வரலாறு... மதுரையை ஆண்டவர்கள் யார் என்று தொகுப்பதை விட.
முத்து,
என்னுடைய புரிதலின்படி, உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்கும்படி சமூகத்தின்/அரசின் சட்ட திட்டங்களை மாற்ற முனைவதே கம்யூனிஸ்டு கட்சிகளின் பணியாக இருக்க வேண்டும். கம்யூனிச சமூகம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்று புரிதல் இல்லாமல், ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி விட்டால், அரைகுறை கொள்கை முடிவுகளைச் செயல்படுத்தி சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
சீனாவின் மாவ் சே துங் நடத்திய பரிசோதனைகளும் (கலாச்சாரப் புரட்சி போன்றவை), சமூக அளவில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், அதற்கு கொடுத்த விலை மிக அதிகம் என்பது என்னுடைய கருத்து. அதே மாதிரிதான் சோவியத் பரிசோதனையும்.
அப்படிப் பார்க்கும்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளின் இரண்டு மாநில பணிகள், மக்களாட்சி வரம்புக்குள் செயல்பட்டு, விரும்பத்தக்க மாறுதல்களைத் தந்துள்ளன என்று நினைக்கிறேன்.
மேற்கு வங்காளம் தொழிற் துறையில் பின் தங்கி விட்டது என்ற கூக்குரல்களுக்கிடையில், அதன் பக்கத்து மாநிலமான பீகாருடன் ஒப்பிடும்போது சமூக மற்றும் பொருளாதார காரணிகளில் பல படிகள் முன்னிலையில் உள்ளது அந்த மாநிலம்.
ஏன் பீகாருடன் ஒப்பிட வேண்டும்? இரண்டு மாநிலங்களுமே ஒரே மாதிரியான ஆண்டான் / அடிமை சமூக முறையில் இருந்து, பீகார் அப்படியே தொடர, மேற்கு வங்கம் கம்யூனிஸ்டு ஆட்சியின் கீழ் நடந்த சீர்திருத்தங்களால் அந்தத் தேக்க நிலையைத் தவிர்த்துள்ளது. மேற்கு வங்கம் பற்றி இன்னும் நன்கு தெரிந்தவர்கள் இதைப் பற்றி விளக்கலாம்.
வெகுஜனப் பத்திரிகைகளில் கம்யூனிஸ்டுகளை வில்லனாக்கி வரும் அலசல்களே அதிகம். 25 ஆணடுகளுக்கு ஒரு கட்சி ஒரு மாநிலத்தை ஆள்வது குண்டர் பலத்தால்தான் என்று கூறி திருப்தி அடைவர்களும் உண்டு.
//சந்திப்பு said...
சுகுமாறன் மார்க்சியம் சார்ந்து நீங்கள் எழுதும் விளக்கங்கள் நல்லமுறையில் அமைந்துள்ளது. ஆனால் படிப்பது இராமாயணம் - இடிப்பது பெருமாள் கோவில் என்பது போல உள்ளது உங்களது பதிவு குறித்த நோக்கம்.
"தமிழ் தமிழர் உயர்வே நமது இலட்சியம்?
இனம் என்று வந்து விட்டாலே வர்க்கம் காணாமல் போய்விடும்... இனத்திற்கு முதலாளி - தொழிலாளி வித்தியாசம் தெரியாது. அங்கே வெறும் உணர்வுதான் நிற்கும். இதுவே மார்க்சியத்திற்கு முரணானதாக தெரிகிறது. வர்க்கத்தை ஒழிப்பதுதான் மார்க்சியத்தின் நோக்கமே தவிர, இனங்களின் உயர்வல்ல. எனவே, நீங்கள் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவராக இருந்தால் உங்கள் தளத்தில் உள்ள - தளம் குறித்த நோக்கத்தை நீக்கிட வேண்டுகிறேன்.//
சந்திப்பு அவர்களுக்கு,
ஒவ்வொரு தேசிய இனமும் அதற்கான விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அதன் கடமை.
அந்த கடமையின் அடிப்படையில் தான், என் தேசிய இன விடுதலையே என் நோக்கமாக நான் சொல்லிக் கொள்கிறேன். அதைத்தான் தமிழ் தமிழர் உயர்வே நமது இலட்சியம், என்கிறேன் அவ்வளவு தான். நான் எந்த தேசிய இன விடுதலைக்கும் எதிரானவன் இல்லை.
இதில் எந்த தவறும் இல்லை.
அருமையான பதிவு உங்களின் பதிவை நான் நேரிலிருந்து வாழ்ந்து பார்த்தவன்.முத்துத்தமிழினி உங்கள் எழுத்து முத்துமுத்தாய் தமிழை பேச வைத்துள்ளது.எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என்றென்றும் உங்களோடே பயணிக்கும்.நன்றி.பின் குறிப்பு கோபலண்ணாவ எனக்கு மிகவும் பரிச்சையம்.ஹா ஹா ஹா
Post a Comment