Monday, March 19, 2007

அசுரன்-சந்திப்பு சபாஷ்

பல சிறந்த கட்டுரைகளையும்,கதைகளையும் படிக்க இயலாமல் போகிறது. அதிஷ்டவசமாக சந்திப்பு எழுதிய கட்டுரையையும் அதற்கு பதிலாக அசுரன் எழுதியதையும் படிக்க நேர்ந்தது.சமீப காலத்தில் இணையத்தில் படித்ததிலேயே சிறந்த எழுத்தாக இதை கூறலாம். கலக்கி கொண்டிருக்கும் இன்னொரு தோழர் சுகுணா திவாகர். இணையத்தில் சிந்தனைக்கு (நவீன சிந்தனை எனலாம்).சிலர் வேதம்,வெங்காயம் எழுதி காலவெள்ளத்தில் பின்னோக்கி துடுப்பு போடும்போது இந்த தோழர்களின் எழுத்து ஆறுதல் அளிக்கிறது.

நண்பர் சந்திப்பின் கருத்துக்கள் ஏமாற்றத்தை அளிக்கிறது. கட்சியின் நிலையை அட்சரம் பிசகாமல் எடுத்து வைப்பது என்பது தான் அவர் நிலை. பலமுறை இதைப்பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவுடைமை கட்சிகள் வளராததற்கு காரணம் திராவிட இயக்கம்தான் காரணம் என்று நினைத்துக்கொண்டு அடிக்கடி (என்ன ஆதாரம் இதற்கு என்று தெரியவில்லை.அப்படியானால் திராவிட இயக்கம் இல்லாத மற்ற மாநிலங்களில் கம்யூனிஸ்ட்டுகள் கோலேச்சுகிறார்களா? என்று கேட்கலாம்.)
திராவிட இயக்கங்களையும் அவ்யபோது சமுத்ரா,வஜ்ரா ஆகியோருடம் சேர்ந்துகொண்டு திராவிட கருத்தாக்கத்தையுமே தாக்குவது நண்பரின் பொழுதுபோக்கு.

ம.க.இ.க மக்களை அரசியல்மயப்படுத்துவது தான் எங்கள் நோக்கம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளது. ஆயுத போராட்டம் என்றெல்லாம் எதையும் செய்ததாக எனக்கு தெரியவில்லை.பல்வேறு சமுதாய பிரச்சினைகளில் அவர்கள் நிலை என்ன என்பதும் முக்கியமாக அவர்களிடம் உள்ள தீர்வு (விரிவாக) என்ன? என்பதைப்பற்றி எனக்கு ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் (சரியான புத்தகங்கள் கிடைக்கவில்லை) அவர்களுடைய கலைவிழா உள்பட எல்லாவற்றையும் கேவலமாக கொச்சைப்படுத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு என்ன தகுதி உள்ளது? என்பது என் கேள்வி.
துப்பாக்கிசூடு செய்து பி.ஜே.பியிடம் பேச்சு வாங்கி கட்டுவதும் இல்லாமல் பிணங்களை மறைக்கும் அளவிற்கும் போகிற இவர்களுக்கு கலைஞர் கடந்த வாரம் பேட்டியில் வைத்த உள்குத்து தேவைதான்.(சென்னை மாநகராட்சி தேர்தலின்போது இவர்கள் போட்ட நல்ல மனுசன் வேஷத்தை தாக்கினார் அவர்)


அரசியலில் ஆயிரம் நாகரீகம் பேசும் இவர்களின் பவிசு நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலுவை தாக்க பாய்ந்ததில் தெரிந்ததே.என்ன சந்திப்பு சார்? என்ன நடக்குது?எனக்கு பதில் வேண்டாம்.அசுரனுக்கு சொல்லுங்க.அதை விட்டுட்டு இந்துத்வா வாதிகள் பாணியில் போலீசு,இண்டர்போல் என்று காமெடி பண்ணாதீங்க.

நடுவில் நண்பர் செல்வன் வந்து சந்தில் பாடுகிறார்.கர்நாடக நக்சல் இயக்கம், தமிழக நக்சல் இயக்கம் ஏதாவது காவிரி பிரச்சினை பற்றிய அவர்கள் கருத்தை உங்களிடம் சொன்னார்களா? அவர்கள் பேசும் தளம் என்னவென்றே தெரியாமல் குழப்பாதீர்கள். வேடிக்கை பாருங்கள்.கடைசியில் வழக்கம்போல் வென்றவர்களுடன் சேர்ந்து ஒரு பாராட்டு பதிவு போட்டால் முடிந்தது நம் உடன்போக்கு பாணி.இதுக்கு எதுக்கு கஷ்டப்படறீங்க?

Sunday, March 11, 2007

முத்துகுமரா பதில் கிடைச்சதாப்பா?

நண்பர் முத்துகுமரன் எழுதிய சம்ஸ்கிருத சுலோகங்களுக்கு பதிவை படிக்கும்போது ஒரு பரபரப்பாக இருந்தது. தேவபாடையில் பரிச்சயம் கொண்ட ஆன்மீக அன்பர்கள் நிறைந்துள்ள இந்த தமிழ்மணத்தில் இதற்கான சரியான அர்த்தம் உடனடியாக தந்து முத்துகுமரனின் வாயை அடக்கிவிடுவார்கள் என்று நினைத்தேன். அனைத்து பின்னூட்டங்களையும் ஆவலுடன் படித்தும் எந்த பதிலையும் காணவில்லை.

வழக்கமாக காவடி தூக்கும் நண்பர்களைக் கூட காணோம். வழவழா கொழகொழ என்று சிலர் நழுவுவதை பார்க்கும்போது ரொம்ப நகைச்சுவையாக இருக்கிறது. சில நழுவல்களையும் பல்டிகளையும் பார்க்கும் போது எனக்கு தோன்றிய ஒரு கதை.

___________

ஒரு ஊரில் ஒரு புருசன்,பொண்டாட்டி இருந்தார்களாம். புருசன் அடிக்கடி கோவிச்சுக்குட்டு வீட்டை வீட்டு போகிறேன்னு போவானான். ஆனால் வீட்டுக்காரி, பக்கத்துவீட்டுகாரங்க என்று எல்லாரும் சமாதானம் பண்ணி விட்டுவாங்களாம்.

அடிக்கடி இவன் இம்சை தாங்காம ஒரு நாள் எல்லாரும் பேசி வெச்சு விட்டுட்டாங்களாம். சப்பை மேட்டருக்கு சண்டைய போட்டுட்டு நம்மாளு கிளம்பி போறானாம்.யாரும் சமாதானம் பண்ண வரல்லையாம்....ஆளுக்கு கிலி கண்டுடுச்சு...ஆனாலும் ரோசமாக ஊரை விட்டே கிளம்பி போயிட்டானாம்....

பொண்டாட்டி ஒப்பாரி வெக்க ஆரம்பிச்சுட்டாளாம்..ஊரில் எல்லாருக்கும் ஆச்சரியமாம்..ஆனா ஒரு பெரிசு மட்டும் இன்னும் கொஞ்சம் நேரம் பாருங்கன்னாராம்..

சாயந்தரம் ஆச்சாம்..ஊருக்கு வெளியே மேய்ச்சலுக்கு போயிருந்த மாடெல்லாம் திரும்ப வரும்போது ஒரு மாட்டோட வாலை புடிச்சுகிட்டு நம்மாளு வரானாம்..

"வரமாட்டேன்..என்னை கட்டாய படுத்தாதே" என்று வசனம் வேற பேசறானாம்....

________
கி.ரா வின் கதை என்று நினைக்கிறேன். அவர் பாணியில் பேச்சு நடையில் தந்துள்ளேன்.

இந்த கதை இங்கே எப்படி வந்தது , எப்படி பொருந்தும் என்றெல்லாம் கேட்டு என்னை தர்மசங்கடப்படுத்த வேண்டாம். பிறகு மீண்டும் ஒரு முறை அந்த நண்பர் மாட்டு வாலை பிடிக்க வேண்டி வரும்..மாடு பாவம்....:))

Sunday, March 04, 2007

ம.க.இ.க வின் தமிழ்மக்கள் இசைவிழா

கடந்த வாரம் தஞ்சாவூரில் நடந்த மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பதினைந்தாம் ஆண்டுவிழாவினை கண்டுகளித்தேன்.அதைப்பற்றி எழுதலாம் என்று தோன்றியது.வேலைபளு இருந்தாலும் இதை பதிவு செய்வது நல்லது என்று நினைக்கிறேன்.

தீவிர வாசிப்பு, தீவிரமான சமூக பார்வை, சமூகத்தை பாதிக்கும் பிரச்சினைகள் இவைகளை பற்றிய நினைக்கும் போது தினமலர்,தினகரன் பாணி அரசியலையும் ,சோ போன்ற ஆட்கள் நம் மனதில் திணிக்கும் அழுக்கு அரசியல் சிந்தனைமுறையை தாண்டியும் நம் பார்வையை விஸ்தரிக்கும்போது பொதுவுடைமை கொள்கையை,அதன் வீச்சை புறக்கணிக்க முடியாது.

நம்மில் பலர்மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற பெயரை தமிழகம் முழுவதும் பரவலாக சுவர் விளம்பரங்களிலும் தட்டிகளிலும் நாம் அனைவருமே பார்த்திருப்போம். பகத்சிங்கின் படம் ஒன்று வரையப்பட்டிருக்கும். ஏற்கனவே நண்பர்( இலக்கிய நண்பர்) ஒருவரின் கையில் இந்த அமைப்பின் புத்தகங்களை பார்த்திருக்கிறேன்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை மற்றபடி நாட்டில் உள்ள எத்தனையோ அமைப்புகளில் அதுவும் ஒன்று என்ற அளவில் தான் இருந்தது.

இந்த ம.க.இ.க என்ற அமைப்பும் அடிப்படையில் கம்யூனிச அமைப்புதான். இவர்கள் மொத்தம் நான்கு அமைப்புகளாக இயங்குகிறார்கள்.ஆனால் இந்தியாவில் இருக்கும் பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளான சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் இவைகளை தான் இவர்கள் அதிகமும் தாக்குகிறார்கள். அசுரன் பதிவுகளை பார்த்திருப்பீர்கள்.இதைப்பற்றி நான் அதிகம் சொல்லதேவையில்லை.

நான் பார்த்த அந்த கருத்தரங்கம் இரு அமர்வுகளாகவும் இரவு கலைநிகழ்ச்சி என்றும் கூறப்பட்டிருந்தது. சரியான நேரத்தில் துவங்கி நேரந்தவறாமல் அனைத்து நிகழ்ச்சிகளும் நடந்தன. கருத்தரங்கம் நடைபெறும் போது விழா பந்தலில் யாரும் தூங்கி விழும் சில மக்களை முகம் கழுவி வருமாறு தொண்டர் படையினர் கேட்டுக்கொண்டு இருந்தது வித்தியாசமாகப்பட்டது.
சுமார் பத்தாயிரம் பேர் வரை அமரக்கூடிய அந்த பந்தல் நாள் முழுவதும் முக்கால் சதவீதம் நிரம்பித்தான் இருந்தது. நிறைய மக்கள் குடும்பம் குடும்பமாக இந்த கலைவிழாவில் கலந்துக்கொள்ள வந்திருந்தது ஒரு புதுமையான காட்சி.

காலை நிகழ்ச்சியில் குறிப்பிடத்தகுந்த ஒரு உரை திப்பு சுல்தான் பற்றியது. திப்பு பிரச்சார சமிதி என்ற கர்நாடகத்தை சேர்ந்த அமைப்பில் இருந்து வந்திருந்த சிக்கே ரங்கே கவுட என்பவர் திப்பு சுல்தானை பற்றி ஒரு அருமையான உரையை மொழிபெயர்ப்பாளர் துணையுடன் நிகழ்த்தினார்.
ஐதர் அலி அவன் மகன் திப்பு சுல்தான் ( சாதாரண பின்னணியில் இருந்து மன்னர் ஆனவராம் ஐதர் அலி) ஆகியோரின் தொலைநோக்கு பார்வையும் வீரமும் உண்மையிலேயே மிகவும் போற்றத்தக்கவை.எந்த மன்னன் ஆண்டாலும் நீ இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து வயிறு வளர்க்கும் கும்பலை எல்லாம் திப்பு என்றுமே கூட வைத்திருந்தது இல்லை. துரத்திவிட்டுவிடுவான் என்று ரங்கே கவுடா கூறியதை கூட்டம் வெகுவாக ரசித்து சிரித்தது..சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தில் ஆளும் பா.ஜ.கவின் அமைச்சர் ஒருவர் திப்புவை பற்றி அவதூறு சர்ச்சையின் பின்னணியில் பல விஷயங்களை புரிந்துக்கொள்ள முடிந்தது.

அடிமை மோகத்தை பற்றி துரை.சண்முகம் என்பவர் எளிமையாக பேசினார்.ரசிக்கக்தக்க உரை.

மாலையில் பகத்சிங்கை பற்றி புத்தகம் எழுதிய பேராசிரியர் சமன்லால் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார். பகத்சிங்கை பற்றிய நிறைய தகவல்களை அடங்கிய அருமையான உரை அது.

இந்து நாடு, இந்திய நாடு, மாட்டுக்கறி தடை செய்யப்பட வேண்டும் என்று எல்லாம் உரக்க குரல்கள் எழும் பின்னணியில் இந்த விஷயத்தை அணுக வேண்டும். மாட்டுக்கறி போடும் விவகாரத்தில் தான் மங்களூரில் சில மாதங்களுக்கு முன்பு கலவரம் வந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.இந்த விழாவில் மாட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி சில்லி ஆகியவை அரங்கின் உணவுக்கூடத்தில் கிடைத்தன. தமிழ் மக்கள் இசைவிழாவில் மாட்டுபிரியாணி... கோமாதா கறி நல்ல டேஸ்ட்டாக இருந்தது என்பது என்னவோ உண்மை.

மாலையில் மருதையன் பேச்சு. மருதையனின் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை நான் ஏற்கனவே படித்திருந்த அடிப்படையில் பார்க்க போனால் அன்றைய பேச்சு சற்றே சூடு குறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். பிறகு நண்பர் ஒருவர் பரிசளித்த திரைப்பட விமர்சன கட்டுரை தொகுப்பு குறிப்பிடத்தக்க ஒரு புத்தகம்.

சொந்த வேலைகள் நெருக்கியதால் கலைநிகழ்ச்சிகளை நான் முழுமையாக இருந்து பார்க்க முடியவில்லை. அதற்குள் நான் பார்த்த ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி தப்பாட்டம் என்ற கலை.தஞ்சாவூரை சேர்ந்த சில கலைஞர்கள் நிகழ்த்திய அந்த கலையை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை.
இடையன் என்ற நண்பர் விரிவாக இந்த விழாவை பற்றி எழுதிய பதிவு இங்கே...

மக்களை அரசியல் மயப்படுத்துவது என்பது இந்த அமைப்பின் கொள்கைகளில் ஒன்று என்றார் நண்பர் ஒருவர். அரசியல் எல்லாரிடமும் இருக்கிறது. அரசியல் இல்லாத ஆத்மா என்று நம்மில் எவரும் இல்லை. பெரும்பாலோனோர் செய்யும் அரசியல் தன் நிலையை(உயர்நிலை) காக்க போராடுவது. அதற்கு பொதுநல சாயம் பூசுவது. உடன்போக்கு அரசியல் வலையுலகில் பரவலாக பேசப்படுவதை பார்த்திருப்பீர்கள்.

என்னை பொறுத்தவரை அரசியலில் யாரை ஆதரிப்பது என்பதில்கூட சில நேரம் குழப்பம் இருக்கும். தேர்தல் அரசியலில் பலநேரம் கலைஞரை ஆதரிப்பேன்,சில நேரம் ராமதாசை கூட ஆதரிப்பேன்.ஆனால் யாரை எதிர்ப்பது என்ற விஷயத்தில் உறுதியாக இருக்கிறேன்.அந்த அடிப்படையில்தான் இந்த அமைப்பின் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். வந்திருந்த மக்களில் பெரும்பாலோனோர் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள்தான். எப்படி இந்த மக்கள் அரசியல் மயப்படுத்த பட்டார்கள் என்பதை பற்றி ஒரு நண்பருடன் விவாதம் ஏற்பட்டது. ஏதோ பிரச்சினையி்ல் பாதிக்கப்படும் மக்கள் அதன்பின் இருக்கும் அரசியலை உணர்ந்து அதன்மூலமே அரசியலை புரிந்துக் கொள்கிறார்கள் என்றார் நண்பர்.திருநெல்வேலியில் கோக்குக்கு எதிரான போராட்டத்தை பெரிய அளவில் நடத்தியதும் பெரியார் சிலை உடைப்புக்கு எதிரான போராட்டத்தை நடத்திய வகையிலும் இந்த அமைப்பு அரசியல் சாரா அமைப்புகளில் சமரசம் இன்றி இயங்குகிறது.

எந்த அரசியலும் பாதிக்கப்படாமலும்( கடுமையாக பாதிக்கப்பட்டாலும் நேரடியாக நாம் பாதிக்கப்படவில்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பெரும்பான்மையான நடுத்தர வர்க்க மக்களையும் படித்தவர்களையும் அரசியல் மயப்படுத்துவதில் தான் இதுபோன்ற அமைப்புகளின் வெற்றி அடங்கி உள்ளது என்று நினைக்கிறேன்.

Saturday, March 03, 2007

30,கும்மி மற்றும் ஹிப்போகிராட்

தமிழ்மணத்திற்கு வந்து இரண்டு பதிவுகளாவது படிப்பது என்பதே இப்போது எல்லாம் எனக்கு ஒரு சாதனை போல் ஆகிவிட்டது. அப்புறம் எங்கு பதிவுகள் போடுவது?

ஆனாலும் சில நண்பர்கள் நம்மை இன்னும் நினைவு வைத்து அவ்வபோது நம்மை பற்றி "நல்ல மாதிரி" எழுதுவது ஒரு "கிக்"க்காக தான் இருக்கிறது. உடனே உணர்ச்சி வசப்பட்டு "பாப்பார அடிவருடி" "திராவிட குஞ்சு" என்றெல்லாம் எழுதிக்கொண்டு நேரத்தை வீண் செய்யவேண்டாம் என்று நினைக்கிறேன்.(அப்படி எல்லாம் எழுதியதும் இல்லை)ஆனால் இதுபோன்ற புனித பிம்ப கருத்துக்களை வைத்து சில கோமாளிகள் பொது கருத்துக்களை உருவாக்கிய காலம் எல்லாம் மலையேறி விட்டது என்பதை உணராமல் எழுதி தீர்க்கிறார்கள் என்பது எனக்கு வருத்தம் தான்.

*********

தமிழ்மணத்தில் பின்னூட்டங்களுக்கு உயரெல்லை வகுத்தது பற்றி படித்தேன். ஒரு பதிவில் 20 பின்னூட்டத்திற்கு மேல் வந்தால் அது விவாதம் என்ற எல்லையை கடந்து விதண்டாவாதம் என்ற எல்லையில் நுழைந்துவிடுவதாக ஏற்கனவே ஒரு நண்பர் எழுதியிருந்தார். ஆனால் வலைப்பதிவுகளின் பலத்தில், இன்னும் சரியாக சொல்லப்போனால் திரட்டிகளின் ஆகப்பெரிய பலங்களில் ஒன்றான இந்த மறுமொழி காட்டும் சேவையின் பலனை இந்த உயரெல்லை வகுத்தல் குறைப்பதாகவே நான் கருதுகிறேன்.

அது ஒருபுறம் இருக்க, இந்த உயரெல்லை வைக்க நேர்ந்ததின் காரணம் பற்றி ஒரு தகவலை கேள்விப்பட்டேன். சில நண்பர்கள் (நமது நண்பர்கள் தான்:) அடிக்கடி பின்னூட்ட விளையாட்டு விளையாடுவதால் இவ்வாறு செய்ய நேர்ந்ததாம். அப்படியானால் இதுபோன்ற பின்னூட்ட விளையாட்டு இப்போது தான் முதன்முறையாக நடக்கிறதா?பலநாட்களாக இந்த விளையாட்டு நடைபெறுகிறது என்பது தான் என் புரிதல். விளையாட்டு விளையாடிவர்கள் யார் என்பதில் தான் வித்தியாசம்.

முதலில் விளையாடியவர்கள் ஏதோ ஒரு உயர்ந்த வகை நகைச்சுவை பதிவுகள்/பின்னூட்டங்கள் எழுதுவது போலவும் பின்னால் விளையாட ஆரம்பித்தவர்கள் ஏதோ தாழ்ந்த ரக விளையாட்டு விளையாடுவது போலவும் சிலர் கூறுகிறார்களாம். பெரும்பாலோனோரின் கருத்து,ரசனை,பார்வை என்ன என்பதை மிகச்சிலர் உருவாக்குவதற்கு கிளாசிக் உதாரணமாக இதை சொல்லலாம்.

சரி..நான் தரும் தீர்வு/யோசனை என்ன?

மறுமொழி காட்டும் சேவை பகுதியை இரண்டாக பிரிக்கலாம். 30 அல்லது 40 பின்னூட்டம் தாண்டிய பதிவுகளை முகப்பு பக்கத்தில் ஒரு சிறிய பகுதியில்( ஒரு நாலு பதிவுகளை மட்டும் காட்டும் வண்ணம்) அமைக்கலாம். மற்ற (30 பின்னுட்டங்களுக்கு குறைந்த) பதிவுகளை வழக்கம் போல் காட்டலாம்.
இன்று அமர்ந்து பிளாக்கர் பீட்டாவில் பதிவை மாற்றி பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில் தெரிந்த என் பதிவு பக்கத்தை சரி செய்துள்ளேன். இன்னமும் காமெண்ட் எழுதும் பதிவர்களின் பெயர் மட்டும் சரியாக வரவில்லை.ஏதாவது நிரல்துண்டு உள்ளதா?

*****************

பதிவுகள் எழுதாமல் இருந்த காலகட்டத்தில் ஒருநாள் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நண்பர் சமீப காலமாக வலைப்பதிவில் ஆக்டிவ்வாக இயங்குகிறவர்.நன்றாகவும் எழுதக்கூடியவர். கும்மி பதிவுகள் மற்றும் ரவுசு பதிவுகள் சம்பந்தமாக பேச்சு வந்தபோது பூங்காவில் வருவது போன்ற தரத்தில் மட்டுமே பதிவுகள் எழுதுவது தம் லட்சியம் என்றும் கும்மிகள்,ரவுசு பதிவுகள் தனக்கு பிடிக்காது என்றார். ஆனால் அதே நண்பர் இன்னொரு நண்பரிடம் ஒரு நண்பரின் பதிவுக்கு கும்மியடிக்க ஆள் வேண்டும் என்று கேட்டதாக கேள்விப்பட்டு பேஜார் ஆகிவிட்டேன்.

கும்மி அடிப்பவர்கள் பூங்கா தரத்திற்கு எழுதமுடியாதா என்ன?எழுதுவதில்லையா?

உரக்க சொல்லுங்கள் "கும்மி என்பது கொண்டாட்டம்"

****************

தர்மபுரி கலவரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட செய்திகளை வைத்து வலைப்பதிவில் கும்மி அடிக்கபட்டதை பார்த்தேன்.

நானும் கொஞ்சம் கும்மி அடித்துக்கொள்கிறேன். இந்த தீர்ப்பை பொறுத்தவரை உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம்,ஜனாதிபதி கருணை மனு அது இது என்று வருவதற்கு பதினைந்து வருடம் ஆகும் என்று நினைக்கிறேன்.அப்போது தான் இதைப்பற்றி சீரியஸான விவாதம் வரும். அது வரை இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது நிறைய உள்ளது.ஆனால் நிறைவேற்ற படுவது ரொம்ப கொஞ்சம்தான்.அப்சல் விஷயத்தில் மரண தண்டனை வேண்டாம் என்று கருத்து சொன்னவர்கள் இதற்கு என்ன சொல்லுகிறார்கள் என்றெல்லாம் பல கருத்துக்கள் இங்கு எழுதப்பட்டன.ப்ரீமெச்சூர்.

அப்சல் மரண தண்டனையை எதிர்த்து எழுதியவன் என்ற முறையில் என் பதில் இதுதான். மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்பதைவிட அப்சல் விவகாரத்தில் உள்ள அரசியல் பகுதியை பற்றி மட்டும்தான் நான் தொட்டிருந்தேன். அந்த வழக்கையும் இந்த வழக்கையும் நான் எழுதியிருப்பதின் அடிப்படையில் ஒப்பிட முடியாது என்று நினைக்கிறேன்.
************************

கைப்பிள்ளையா நான்? கங்கூலி ஆவேசம்

சச்சினையும்,ராகுல்திராவிடையும் கடத்த தீவிரவாதிகள் திட்டம் தீட்டி இருப்பதாகவும் அவர்களை காக்க இந்தியா 16 கமேண்டோ வீரர்களை அனுப்புவதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது.


இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கங்கூலி கடுப்பானதாக மேற்கிந்திய தீவுகளில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடத்தும் தீவிரவாதிகள் தன் சாதனைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதில் தான் மிகவும் வருந்துவதாகவும் தானும் ஒருநாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் குவித்திருப்பதாகவும் மேலும் சச்சினை கடத்துவதாக அறிக்கைவிடும் போது தன் பெயரையும் சேர்த்துகொண்டால்தான் தன் கெளரவத்திற்கு பாதிப்பு வராமல் இருக்கும் என்கிறாராம் கங்கூலி. ( ஹிஹி நண்பர் ஒருவரின் காமெடி காமெண்ட்டை தான் தந்துள்ளேன். தாதா ரசிகர்கள் உள்ளிட்ட தேசபக்தர்கள் உணர்ச்சி வசப்படவேண்டாம்:)

தமிழ்வெளியை பார்த்தீங்களா?