Friday, October 28, 2005

கீர்த்தனாவிற்கு தமிழ் எழுத படிக்கத்தெரியுமா?

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதிலேயே ஏதோ குளறுபடி இருப்பதாக சில வட்டாரங்களில் பிரச்சனை எழுப்பப்பட்டது. தமிழின் தொன்மை குறைவாகவும் தவறாகவும் கணிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் கூறிவந்தன.நேற்று மீண்டும் ஒரு அறிவிப்பு வந்துள்ளது.இதை பற்றிய விஷயங்கள் வெவ்வேறு பத்திரிக்கைகளில் வெவ்வேறு விதமாக கொடுக்கப்பட்டுள்ளது. செம்மொழி தகுதி ஆயிரம் ஆண்டுகளில் இருந்து ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக அதிகரிகப்பட்டுள்ளதாக ஒரு தகவலும் இரண்டாயிரம் ஆண்டுகளில் இருந்து ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவலும் தெரிவிக்கின்றன.எது உண்மை என்பது தமிழன்னைக்குத்தான் வெளிச்சம். இப்பொழுது தேசிய அளவில் உள்ள கூட்டணி அரசால்தான் இது போன்ற அங்கீகாரம் தமிழுக்கு சாத்தியம் ஆகியுள்ளது. இதை பயன்படுத்தி இந்திய தேசிய மொழிக்கொள்கையையே மறுபரிசீலனை செய்ய சொல்லி கேட்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.

சமீபத்தில் கன்னட மொழிக்கு கூட செம்மொழி அந்தஸ்தை கேட்டு கோரிக்கைகளை இங்கு பார்த்தேன்.அப்படியென்றால் கன்னடம் தமிழில் இருந்து தான் பிரிந்தது என்பது உண்மையா? பொய்யா? என் பிரச்சனை கன்னட மொழி செம்மொழி ஆவது இல்லை.
கன்னடர்களின் புத்திசாலித்தனத்தின் மேல் எனக்கு நம்மவர்களின் புத்திசாலித்தனத்தை விட மதிப்பு உள்ளது.கண்டிப்பாக அவர்கள் தங்கள் மொழிக்கு அந்த அந்தஸ்தை நம்மை விட சுலபமாக பெற்றுவிடுவார்கள.ஆகவே சர்வ சமாதான வாதிகள் கச்சை கட்ட வேண்டாம். கன்னடம் மற்றும் தெலுங்கும் செம்மொழி ஆக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இத்தனை செழுமை உள்ள தென்னிந்திய மொழிகள் இந்தி ஆதிக்கத்தால் அழிய வேண்டுமா?

எங்கள் வங்கியில் என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் கன்னடம் மட்டும் அல்ல.தமிழும் கூட சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்ததே என்பதாக கூறினார். நானும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை இணையத்தில் படித்தேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதெல்லாம் சம்ஸ்கிருதத்தால் மிகவும் குறைவாக பாதிக்கப்பட்ட மொழி என்றே தமிழை கூறியிருக்கிறார்கள். கன்னடம்,தெலுங்கு மற்றும் மலையாளம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன்.

இந்தி இந்தியா முழுவதற்குமான மொழியாக அறிவிக்கப்பட்டு பரப்பப்பட்டதின் நோக்கம் நாட்டு மக்கள் அனைவரும் ஒரே மொழி பேசவேண்டும்,அது நமது மொழியாக இருக்கவேண்டும்,ஆங்கிலத்தை ஒழிக்க வேண்டும் என்பது தான் என்றால் சுதந்திரம் கிடைத்து இந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் ஆங்கிலத்தை ஒழித்து விட்டோமா?அல்லது ஆங்கிலத்தைத்தான் ஒழிக்க முடியுமா?எதற்காக ஒழிக்கவேண்டும் ஆங்கிலத்தை?

இன்று இந்தியா முன்னேறி விட்டது .2020 ஆம் ஆண்டு வல்லரசு ஆகி விடும் என்றெல்லாம் கூக்குரல்கள் எழுகின்றன. முன்னேற்றம் என்று நம்மால் கூறப்படும் இந்த விசயங்கள் எதனால் சாத்தியப்பட்டது? கணிப்பொறி துறைக்கு ஒரு முக்கிய பங்கு என்றால் அதில் இந்தி என்ற மொழியின் பங்கு என்ன? ஆங்கிலத்தின் பங்கு என்ன?

மற்ற தொழில்துறைகளும் உலகளாவிய போட்டி,சந்தை பொருளாதார சூழ்நிலை இவற்றில் தாக்குப்பிடித்து நன்றாக செயல்படுகின்றன என்றால் அதில் ஆங்கிலத்தின் பங்கு என்ன? இந்தியின் பங்கு என்ன?இந்திய அளவில் வேலைவாய்ப்பில் தமிழன் இந்தி தெரியாததால் பின்னுக்கு தள்ளப்படுகிறான் என்பதாக ஒரு பேச்சு உண்டு.ஒரு சாரார் அதை முனைந்து பிரச்சாரமும் செய்து வருகின்றனர். பலரும் அதை நம்பவும் செய்கின்றனர். சமீபத்தில் கட்சி தொடங்கிய விஜுயகாந்த் கூட அந்த எண்ணத்தை ஓட்டுக்களாக்க எண்ணி தமிழும் படிப்போம்,இந்தியை வரவேற்போம் என்று சூளுரை(!)த்திருக்கிறார் இந்தி தெரியாததால் தமிழன் வேலை வாய்ப்புகளை இழந்துக்கொண்டு இருப்பது எந்தெந்த துறைகளில்? அந்த துறைகளில் ஆங்கிலமே இல்லையா? வேலை வாய்ப்புக்காக மட்டும் இல்லாமல் ஒரு தொடர்பு மொழியாகவும் இந்தியை பயன்படுத்தலாமே என்றால் ஏன் ஆஙகிலத்தை வடஇந்தியர் உடபட அனைவரும் பயன்படுத்தக்கூடாது? யாரும் யாருடைய தாய்மொழியை படிக்கவேண்டாம் என்று கூற வில்லையே. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையையும் படிக்க எந்த தடையும் இருக்கக்கூடாது.எத்தனையோ பேர் பிரஞ்சு,ஜெர்மன்,இத்தாலியன் போன்ற மொழிகள் தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்ளவிலலையா?

சிந்திக்க தெரிந்த தமிழர்களை பார்த்து நான் கேட்கும் கேள்வி என்னவென்றால் ஆங்கிலத்தை ஒழிக்க முடியாது என்பதை சுதந்திரம் கிடைத்த இந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் அனைவரும் உணர்ந்திருப்போம். ஆங்கிலத்தை ஒழிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எந்த ஒரு இனத்திற்கும் தன் தாய்மொழியை தவிர அனைத்து மொழிகளும் அன்னிய மொழிகள் தான்.தமிழனுக்கும் அப்படித்தான்.தமிழை தவிர மற்ற அனைத்து மொழிகளும் அவனுக்கு அன்னிய மொழிகள் தான். அவற்றில் அவன் எதை தேர்ந்தெடுத்து கற்கிறான் என்பது அவனின் விருப்பத்தை பொறுத்தது. அரசாங்கத்தின் பொதுவான நிலைப்பாடு தன்னுடைய அனைத்து மக்களுக்கும் ஒரு பொதுவான தளத்தை அமைத்துக்கொடுப்பதாக இருக்கவேண்டும். அந்த பொதுவான மொழியானது அவர்கள் வாழ்வுக்கு வளம் சேர்க்கவேண்டும்.

அவரவர்கள் அவரவர் தாய்மொழியை கண்டிப்பாக கற்க உரிமை உண்டு. பொது மொழியாக ஆங்கிலத்தை,வைத்துக்கொள்வோம். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உபயோகப்படுமே.(சில அறிவு ஜுவிகள் கேட்பார்கள், பிரான்ஸில் நீ ஆங்கிலத்தில் பேச முடியாது என்று. நான் கேட்கிறேன், பிரான்ஸில் இந்தியை வைத்துக்கொண்டு நீ என்ன புடுங்குவாய்? எந்த ஊருக்கும் உன் தேவைக்கு நீ போனால் நீதான் அவர்கள் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.(நான் பணி நிமித்தமாக பம்பாயில் இருந்தபோது தேவையான இந்தி வார்த்தைகளை கற்றுக்கொண்டேன்.இப்போது கன்னட வார்த்தைகள்)

மும்பயில் நாரிமன் பாய்ண்டில் இட்லி விற்று பிழைக்கும் தமிழன் பள்ளியிலா படித்தான் அவன் இந்தியை?. வடநாடுகளில் எண்ணற்ற உள்ளடங்கிய இடங்களுக்கு போர்வெல் லாரிகளில் ராடு தூக்கும் தமிழர்கள் இந்தியை பள்ளிகளிலா படித்தார்கள்?

தமிழை நம்மை விட புலம் பெயர்ந்த தமிழர் தமிழை நன்கு காப்பாற்றுவதாக ஒரு கருத்து உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். பிரச்சனை நாம் நினைப்பதை விடவும் தீவிரமானது. இப்பொழுதே சென்னை போன்ற மெட்ரோக்களில் இளைய தலைமுறையினர் பல பேர் தமிழ் எழுத் படிக்க தெரியாமல் வளர்ந்துவருகின்றனர்.(நடிகர் பார்த்திபன் தன் மகள் கீர்த்தனாவிற்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்று குமுதத்தில் கூறி வாங்கி கட்டி கொண்டது தெரிந்திருக்கலாம்.எழுத்தாளர் சுந்தர ராமசாமி கூட இதை பற்றி வருத்தப்பட்டதை இவ்வார திண்ணையில் சிவக்குமார் எழுதியுள்ள கலந்துரையாடல் பதிவில் படிக்கலாம்)இது கொஞசம் கொஞசமாக அதிகரித்து ஒரு கட்டத்தில் எதற்கு தமிழ்? ஆங்கிலமும் இந்தியுமே போதுமே என்பார்கள். அதற்கும் ஒத்து ஊத மக்கள் இங்கு உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்.எங்குமே அப்படிப்பட்ட ஒரு குழு உண்டு. மொழி விஷயத்தில் இவ்வளவு சீரியஸாக இருக்கவேண்டியதில்லை என்று இவர்கள் கூறுவார்கள்.இந்த பதிவில் உள்ள ஆங்கில வார்த்தைகளை பட்டியல் இடுவார்கள். அவர்களுக்காக இது எழுதப்படவில்லை. தமிழ் மணத்தில் தமிழின் மேல் பற்றுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக எழுதப்பட்டது.

வாழ இடம் இல்லை என்றாலும் கூட ஒரு இனம் பிழைத்துக்கொள்ளும். ஆனால் ஒரு இனத்தை ஒழிக்க வேண்டுமானால் அதன் மொழியை ஒழித்தால் போதும் என்பார்கள்.பல்லாயிரம் வருட பாரம்பரியம் உள்ள மொழி இது.வள்ளுவன்,கம்பன்,பாரதி கண்ட மொழி இது .இதை காப்பது நமது கடமை. வேற்று மொழியை எதிர்க்க வேண்டாம்.ஆனால் தாய்மொழியை மிதித்து மற்ற மொழியை கொண்டாடவும் வேண்டாம்.

பொதுவாக தமிழ்,தமிழ் என்று ரொம்ப மொழி பற்றில் ரொம்ப உருகுவதாக நம் மேல மற்ற மாநிலத்து காரர்களுக்கு ஒரு எண்ணம் உண்டு. அதை அவர்கள் சொல்லவும் செய்கிறார்கள்.அதை அவர்கள் கிண்டலாக நினைக்கிறார்களா அல்லது நமக்கு நம் மொழி மேல் இருக்கும் பிடிப்பை பாராட்டுகிறார்களா என்று தெரியவில்லை. இந்தியாவிலேயே வெளி மாநிலங்களில் வாழ நேர்பவர்களுக்கு இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம்.இப்போதெல்லாம் மொழியை பற்றியும் மொழிபற்றை பற்றியும் பேசுவது எழுதுவது என்பது ஏதோ கெட்டவார்த்தை என்பது போல் சில அறிவுஜுவிகளால் கட்டமைக்க பட்டுள்ள நிலையில் இதை பற்றிய நண்பர்களின் கருத்துக்களை அறிய ஆவல்.

Thursday, October 27, 2005

தேவை ஒரு சங்கம்

சமீபத்தில் மிகவும் பேசப்படுகிற ஒரு விசயம் மென்பொருள் தொழில்நுட்பத்துறையில் தொழிற்சங்கத்தை அனுமதிக்கலாமா என்பது பற்றியது.

இப்பொழுது எங்கும் இது போன்ற தொழிற்சங்கம் இந்த துறையில் இல்லை என்றே கூறலாம்.கல்கத்தாவில் மட்டும் சில இடங்களில்,அதுவும் பெயருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.நேற்று மார்க்ஸிஸ்ட் பொலிட்பீரோவில் இது பற்றி பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன்.

பொதுவாக கணிப்பொறி துறை என்றால் ஏ.சி யில் உட்கார்ந்து கொண்டு பெப்ஸி,கோக் குடித்துக்கொண்டு ஜாலியாக வேலை செய்துக்கொண்டு இருப்பார்கள் என்றே பலரும் எண்ணுகிறார்கள். உண்மையில் அவர்கள் வேலை எப்படிப்பட்டது? வேலை எனனும் போது செய்யும் வேலை மட்டும் இல்லாமல் அனைத்து சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டி இருக்கிறது.

செய்யும் ஒவ்வொரு பிராஜக்ட்க்கும் ஒரு டெட்லைன் கொடுத்து அதற்குள் முடிக்கவேண்டும் என்ற பிரஷர் ஜாஸ்தியாக உள்ளது என்று ஒரு பேச்சு உள்ளது. சக்கையாக பிழியபடுவதாக ஒரு சாரார் கருதுகின்றனர்.இவ்வாறான உயர்அழுத்த சூழ்நிலைகளில் பணிபுரிபவர்களின் மனநிலை பாதிக்கப்படுகிறதா? அவர்களின் சொந்த வாழ்க்கை இதனால் பாதிக்கப்படுகிறதா?டைவர்ஸ் நிறைய ஆவதாக எங்கோ படித்த ஞாபகம்.பலர் மன அழுத்த நோய்களுக்கு ஆளாவதாக ஒரு டாக்டர் பேட்டி கூட பார்த்தேன்.ஒரு தொழிற்சங்கம் என்று வந்தால் இது போன்ற பிரச்சனைகளுக்கு நிர்வாகத்துடன் பேசி தீர்வு காண முடியுமா?

பொதுவாக நல்ல சம்பளம் கொடுக்கப்படுவதாக ஒரு அபிப்பிராயம் உள்ளது. ஆகவே அந்த தளத்தில் முதலாளிகளின் சுரண்டுதல் என்பது இல்லை என்றே நான் நினைக்கிறேன்.ஆயினும் இது பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை.அந்த துறையில் உள்ளவர்கள் கூறலாம்.

மேலும் குழுமனப்பான்மை(தமிழ் மணத்திலேயே இத்தனை குழு இருக்கும்போது) மற்றும் போட்டி பொறாமை(போட்டுக்கொடுப்பது) முதலிய காரணங்களால் வேலை பறிகொடுப்பவர்கள் பரிகாரம் பெறுவதற்கு இது வகை செய்யுமா?

நானும் ஒரு வகையில் மென்பொருள் தொழில்நுட்பத்துறையில் தான் உள்ளேன் .கணிணி தொழில்நுட்பத்துறை என்று எல்லா வங்கிகளிலும் ஒரு பிரிவு உள்ளதால் இது போன்ற விஷயங்கள் இங்கு எப்படி செயல்படுகின்றன என்பதனையும் நான் சொல்லிவிடுகிறேன்.

இது பொதுத்துறை என்பதால் இங்கு தொழிற்சங்கம் உள்ளது. பொதுவாக அனைத்து வங்கிகளுமே தங்களுக்கு தேவையாக மென்பொருள்களை வெளியே வாங்குகின்றன. எங்களை போன்ற ஆட்களுக்கு பொதுவாக மென்பொருள் வழங்கும் நிறுவனத்தின் மென்பொருளை சோதனை செய்வது மற்றும் பராமரிப்பு வேலைதான்.மென்பொருள் உருவாக்குதல் சம்மந்தப்பட்ட வேலைகள் பெரும்பாலும் கிடையாது. சில வங்கிகள் தங்களுக்கு தேவையாக மென்பொருள்களை அவர்களே உருவாக்குவதாக கூறுகிறார்கள். ஆனால் பெரும்பாலான வங்கிகள் வெளியே வாங்குகின்றன்.

ஆயினும் கடைசியாக நடந்த ஊதிய ஒப்பந்தத்தின் ஒரு ஷரத்தின்படி கணிப்பொறி வல்லுனர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்ற வங்கி நிர்வாகங்களின் கோரிக்கையை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டன.அதாவது முக்கியமாக ஆட்கள் தேவைபடுகின்ற இடங்களில் (உ.தா. hub's,core centres,Distribution Centres)வேலை செய்பவர்கள் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது.ஆனால் தொழிற்சங்கங்களில் உறுப்பினராக இருக்கலாம். தம்முடைய பிரச்சனைகளுக்கு தொழிற்சங்கங்கள் மூலமாக தீர்வு காணலாம்.

பணி உயர்வு போன்ற விசயங்களிலும் ஒரு குறிப்பிட்ட கேடர்(CADRE) வரை தான் தொழிற்சங்கத்தில் இருக்கலாம். அதன்பிறகு அவர்கள் நிர்வாகத்தின் ஒரு அங்கம் என்பது தான் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள நிலைமை.

சிறிய நிறுவனங்களுக்கு இந்த தொழிற்சங்கம் என்பது ஒத்துவராது. ஆனால் இப்போது பல நிறுவனங்கள் வளர்ந்து சர்வசாதாரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்திருப்பதால் தொழிற்சங்கத்தின் தேவைப்பற்றி சிந்திக்கலாம் என்றே தோன்றுகிறது.

இங்கு வலைபதிவுகளில் எழுதும் பல நண்பர்கள் இந்த துறையில் பணியாற்றுபவர்கள் என்பதால் இது பற்றிய நண்பர்களின் கருத்துக்களை அறிய ஆவல். ஏதோ நீங்களும் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்து சீரழிந்து போக் வேண்டும் என்பதற்காக நான் கூறவில்லை. உங்கள் கருத்துக்களை அறிந்துக்கொள்ளலாம் என்றுதான் எழுதுகிறேன்.

Monday, October 24, 2005

சிறுகதை-தேவி தோன்றியபோது,,,

முதலாளி என்னை சீக்கிரமாக வீட்டுக்கு போக அனுமதி கொடுத்துவிட்டார். சம்பள நாள் வேறு. சொல்லவா வேண்டும்? அன்று எனக்கு மி்கவும் சந்தோஷமாக இருந்தது. எப்போதும் என்னை பார்த்து சிரிக்காத எங்கள் டைப்பிஸ்ட் லலிதா கூட என்னை பார்த்து சிரித்தாள்.மாலை நான்கு மணிக்கே கிளம்பி விட்டேன். டவுண்பஸ் பிடித்து எங்கள் ஸ்டாப் வந்து சேர சரியாக முக்கால் மணிநேரம் தான். பஸ்ஸில் சரியான கூட்டம். அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஏதோ விசேஷம் என்று பேசிக்கொண்டார்கள். எனக்கு அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. கிடைத்திருக்கும் நேரத்தை எப்படி அனுபவிக்க வேண்டும் எப்படி உபயோகித்துக்கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. பஸ் மெல்ல மெல்ல ஊர்ந்தது.

இறங்கியவுடன் பாய் கடைக்கு சென்று ஆற அமர பஜு்ஜூ சாப்பிட வேண்டும்.பின்பு இரயில்வே ஸ்டேஷன் சென்று இரவு பத்து மணி வரை யாருமற்ற அந்த அமைதியில் ஆழ்ந்துவிட வேண்டும்.நமது நாட்டை எப்படி முன்னேற்றி உலகத்தின் வல்லரசாக மாற்றுவது என்பது பற்றி எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அந்த கனவில் நான் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருக்கிறேன். எப்படி சர்வாதிகாரி ஆக போகிறேன் என்ற என் கனவு தனி. அதை பிறகு சிந்திக்கலாம் என்று இருக்கிறேன்.இப்போதைக்கு சர்வாதிகாரி ஆனப்பிறகு நான் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன என்பதை பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன். இரவு யாருமற்ற எங்கள் ஊர் இரயில்வே ஸ்டேஷனில் சொரசொரப்பான சிமெண்ட பெஞ்சில் படுத்துக்கொண்டு வானில் உள்ள நிலாவையும் நட்சத்திரங்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு நான் சிந்தனை உலகில் உலா வருவது என் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்காமல் போனது. முதன்முதலாக பக்கத்து வீட்டு ஓய்வு பெற்ற தமிழய்யா என்னை இரயில்வே ஸ்டேஷனில் மோன நிலையில் பார்த்துவிட்டு வீட்டில் போட்டுக்கொடுத்துவிட்டார்.

என் தந்தை புலம்ப ஆரம்பித்து விட்டார்.

"படிப்பிலும் கெட்டி இல்லை,பொறுப்பும் இல்லை" என்றார்.

"இப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்படி கத்தறீங்க"

"ஸ்டேஷனில் என்னடா பண்ணறே நைட்டெல்லாம்"

"யார் சொன்னா"

"யார் சொன்னா என்னடா,டிகிரி பெயிலாகிவிட்டு வீட்டில் சும்மா இருக்காம வேலைக்கு போடான்னா இரயில்வே ஸ்டேஷனில் தனியாக உட்கார்ந்து பத்து மணி வரை என்னடா பண்றே"

நான் மெளனமாக இருந்தேன்.முந்தின நாள் இரவு பக்கத்து வீட்டு தமிழ் வாத்தியார் நாராயணன் யாரோ சில பல் போன் கிழடுகளோடு இரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்து வரப்போகும் கம்பன் கழக விழாவை பற்றி பேசிக்கொண்டு இருந்தது ஞாபகம் வந்தது.எனக்கு அவர் மேல் கடுங்கோபம் வந்தது. இரண்டு திருக்குறளையும் சில கம்பராமாயண பாட்டுக்களையும் வைத்துக்கொண்டு தன் காலத்தையே ஓட்டி விட்ட நன்றிகெட்ட நாராயணன்.(அடைமொழி எங்கள் பள்ளியில் நாங்கள் வைத்த பெயர் அது போன்ற பல பெயர்கள் உண்டு.ஒரு வாத்தியார் பெயர் பூட்ஸ்மேன்.தினமும் பூட்ஸ் போட்டுக்கொண்டு வரும் அவர் கோபம் வந்தால் பூட்ஸ் காலால மாணவர்களை உதைப்பார் என்று ஒரு வதந்தி உண்டு.)

"ஒழுங்காக கடைக்கு வேலைக்கு போயிட்டிருக்கியா? டிகிரி முடிச்சிட்டு எதாவது வேலைக்கு போற வழியை பாரு", பேங்க் கிளார்க் பரிட்சை அப்ளிக்கேஷன் வாங்கிட்டயா"

"இல்லை"

"துரைக்கு வேற என்ன வேலை,நாட்டை முன்னேத்தற வேலையோ" சலித்துக்கொண்டார் அப்பா.

உண்மையில் அதுதான் என் வேலை என்று நினைத்துக்கொண்டேன்.

அவரின் நண்பர் கடைக்கு தான் நான் வேலைக்கு போகிறேன்.வேலையை எல்லாம் கட் அடிக்க முடியாது என்று அப்பாவுக்கு தெரியும்.சட்டென்று ஒரு திருப்பத்தில் விழித்துக்கொண்டேன்.என் அருகில் நின்ற ஒருவரின் தோளில் சாய்ந்து நின்றுக்கொண்டிருந்திருக்கிறேன். அவரும் ஏதும் சொல்லவில்லை. பரவாயில்லை மனித நேயம் இன்னும் முற்றாக அழிந்துப்போய்விடவில்லை என்று எண்ணிக்கொண்டேன். கடை வீதி முக்கில் பஸ் திரும்பியது.அடுத்து ஸ்டாப் என்னுடையது. இறங்கிக்கொண்டேன்.

மெயின் ரோட்டில் இருந்து சற்று திரும்பினால் கேசவன் தியேட்டர். அதற்கு எதிரில் பாய் கடை. பஜு்ஜூ ஞாபகம் வந்து எச்சில் ஊறியது. என்னை பார்த்ததும் பாய் சிரித்துக்கொண்டார். ரெகுலர் கஸ்டமர் அல்லவா?

"வாங்க ஸார்"

வெட்கமாக சிரித்தேன். இவன் நம்ப பஜு்ஜூக்கு அடிமை என்ற எண்ணம் அவருக்கு இருப்பதாக எனக்கு தோன்றியது. ஒரு பஜு்ஜூயை எடுத்து என்னிடம் கொடுத்து உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்து சொல்லும்படி கேட்டுக்கொண்டார் பாய்.ஒரு பஜு்ஜுயை வாயில் போட்டுப்பார்த்தேன்.பாய் எமத்திருடன். எல்லாம் செக் செய்து தான் வெளியே விடுவான் என்று எனக்கு தெரியும் .

உண்மையில் பஜு்ஜூயை அனுபவித்து சாப்பிட வேண்டும்.என் ஸ்டைல் என்னவென்றால் அது வெங்காய பஜு்ஜூ என்றாலும் சரி.வாழைக்காய் பஜு்ஜூ என்றாலும் சரி. மாவு தனியாகவும் உள்ளிருக்கும் வாழைக்காய் தனியாகவும் பிரி்த்துவிடுவேன்.பிறகுதான் சாப்பிடுவேன். முட்டைதோசை சாப்பிடும்போதும்கூட முட்டையை தனியாகவும் தோசையின் மாவு பகுதி தனியாகவும் பிரித்து சாப்பிடுவது தான் எனக்கு பிடிக்கும்.பாய் என்னை பார்த்துக்கொண்டிருக்கும்போது அப்படி என்னால் சாப்பிட முடியாமல் போனது. பிறகு இரண்டு பஜு்ஜூயை எடுத்துக்கொண்டு ஒதுங்கினேன்.கேசுவலாக சட்டை பாக்கெட்டை தொட்டு பார்த்த நான் அதிர்ந்துப்போனேன். பர்ஸை காணோம்.

எல்லா பாக்கெட்டையும் தேடிப்பார்த்தேன். இல்லை. பஸ்ஸில் தான் யாராவது எடுத்திருக்க வேண்டும். சம்பள பணம் வேறு. முழுசாக ஆயிரத்து முன்னூறு ரூபாய்.பிக்பாக்கெட் விட்டு பார்த்தால் தான் அதில் உள்ள மனக்கஷ்டம் புரியும்.குற்றங்களை பற்றி பேசும் போது கூட சாதாரண பிக்பாக்கெட் என்கிறோம். ஆனால் அது பணத்தை பறிக்கொடுத்தவரின் மனதில் ஏற்படும் பாதிப்பை சொல்லி புரியவைக்க முடியாது. அதனால்தான் பொதுஇடத்தில் மாட்டிக்கொள்ளும் பிக்பாக்கெட்டை மக்கள் சவட்டி எடுத்துவிடுகிறார்கள. இத்தனை எண்ணமும் என் மனதில் ஒரு கணத்தில் வந்துப்போனது.சரி .இப்போது பஜு்ஜுக்கு என்ன பண்ணுவது? ஒரு துண்டை ஏற்கனவே பிய்த்து வாயில் போட்டிருந்தேன். இல்லையென்றாலும் திருப்பி கொடுத்து விடலாம். கடன் சொல்லுவது என்றாலும் வெட்கமாக இருக்கிறது.பாய் தெரிந்தவன்தான் என்றாலும் யாராவது தெரிந்தவர் நண்பர் வந்தால் வாங்கிக்கொள்ளலாம் என்று நின்றிருந்தேன்.பழிகார பாவிகள்.யாரையும் காணோம்.இந்த மாதிரி நேரத்தில் எவனும் வரமாட்டான். ஆனால் அன்று லலிதாவுடன் நூலக வாசலில்(லலிதாவும் அகஸ்மாத்தாய் அந்த பக்கம் கோயிலுக்கு வந்தவள் வேறு வழியில்லாமல் நின்று பேசினாள் என்பது தான் உண்மை)பேசிக்கொண்டிருந்தபோது சொல்லி வைத்த மாதிரி இந்த பாவிகள் அந்த பக்கமாக வந்ததும் இல்லாமல் அதில் ஒருவன் அப்பாவிடமும் போட்டுக்கொடுத்ததும் நடந்தது.

பலத்த யோசனைக்கு பிறகு பாயிடம் சரணடைய முடிவு செய்தேன். விஷயத்தை கூறினேன். பாய் எதுவும் சொல்லவில்லை.பரவாயில்லை,அதனாலென்ன,நாளைக்கு குடுத்தால் போயிற்று என்று கூறிவிட்டான்.பாயிக்காக இல்லாட்டியும் பஜு'ஜூக்காக நான் வருவேன் என்று அவன் நினைப்பது போல் நினைத்து பார்த்தேன்.

என் சந்தோஷமே போயிற்று. இரயில்வே ஸ்டேஷன் வந்து என் ஆஸ்தான சிம்மாசனத்தில் படுத்தேன்.வழக்கமாக இருக்கும் கிழவர்கள் கூட அன்று இல்லை. பணத்தை தொலைப்பது என்பது எனக்கு புதிதில்லை என்றாலும் நான் உழைத்து சம்பாதித்த பணம் இப்படி அநியாயமாக பிக்பாக்கெட் கொடுத்ததை என்னால் ஜுரணித்துக்கொள்ள முடியவில்லை.அப்பாவுக்கு பதில் சொல்வது என்பதும் கடினமாகி விட்டது. இன்று என்னுடைய சிந்தனையை தொடர்வது என்பது சாத்தியமில்லை என்று பட்டது. லஞ்ச லாவண்யங்களை நேற்று இரவே ஒழித்துக்கட்டி விட்டதால் இன்று மதக்கலவரங்களை ஒழிப்பது என்று முடிவு செய்திருந்தேன்.அது இன்று முடியும் என்று தோன்றவில்லை.

"கடவுளே என்னை இப்படி சோதிக்கிறாயே இது நியாயமா?உண்மையில் நீ இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா" என்று வாய் விட்டு அழுதேன்.

"தம்பி குமார் அழாதே" என்று ஒரு பெண் குரல் மரத்தின் பின்னிருந்து கேட்டது.

"யார்,யாரது"

"நான் தான் அம்மன்"

"பொய்,யாரோ பெண் குரலில் பேசி என்னை ஏமாத்தறீங்க"

சட்டென்று மரத்தின் பின்னாலிருந்து வெளிப்பட்டாள் அம்மன்.சர்வலாங்கரங்கலோடும் கையில் ஒரு வேலோடும்.கண்ணில் கனிவு.தலையில் கிரீடம்.கண்ணை பறிக்கும் சேலை,உடம்பெங்கும் மின்னும் நகைகள்.எனக்கு உடம்பெங்கும் ஒரு நடுக்கம் ஒடியது.

"நிஜுமாகவே நீதானா தாயே"

"ஆம் மகனே, உன் குரல் கேட்டே யாம் வந்தோம்"

எனக்கு சுயஉணர்வு வந்துக்கொண்டிருந்தது.மெல்ல கேட்டேன்.

"யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணாமல் நாட்டை முன்னேற்ற பாடுபடும் எனக்கு ஏன் தாயே சோதனைகள் வருகின்றன?"

"கஷ்டங்கள் யாம் உமக்கு அளிக்கும் சோதனைகள்"

"எங்கப்பாவுக்கு பதில் யார் சொல்லுவது?"

சட்டென்று சிரித்துவிட்டாள் தேவி."சரி,உனக்கு என்ன வேண்டும்", என்று வினவினாள்

நான் பதில் எதுவும் சொல்லவில்லை.கடவுளின் வருகையை வைத்து நான் என்ன செய்யமுடியும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

அப்போது அந்த பக்கமாக ஒரு சாமியார் ஊர்வலம் போனது. எல்லோரும் நீல வண்ண உடை அணிந்திருந்தனர்.அவர்கள் வணங்கும் அந்த சாமியாரை எனக்கு நன்றாக தெரியும். அவர் ஒரு இயக்கமாகவே வளர்ந்துக்கொண்டிருக்கிறார்.அந்த சாமியார் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறார்.அவருக்கு தேவி மீதான பக்தி அளவிடற்கரியது.நாங்கள் அந்த ஊர்வல கூட்டத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போதே கூட்டத்திலிருந்த ஒருவர் "என்னம்மா வேஷம் இன்னும் கலைக்கலியா? நைட் இரயில்வே ஸ்டேஷன் பக்கம் நிக்காதே" என்று கூறியவாறே சென்றார்.

"உன்னை நாடக கம்பெனியை சேர்ந்த பெண் என்று நினைத்துக்கொண்டிருக்கிறான்" என்றேன் நான்.

உடனடியாக சாதாரண உருவத்தில் வரவேண்டியதின் அவசியத்தையும் இல்லாவிட்டால் தேவியின் நகைகளுக்கு நான் பொறுப்பாக முடியாது என்றும் அவளுக்கு உணர்த்தினேன். தேவியும் ஒத்துழைத்தாள்.

"உனக்கு தேவை உன் பர்ஸ்தானே" ,என்றாள் தேவி.

"எனக்கு உன் சித்து விளையாட்டுக்கள மேல் எல்லாம் ஆர்வம் இல்லை " என்றேன்.

"மனித உருவம் எடுத்து வரும்போது என்னாலும் சித்து விளையாட்டுக்கள் செய்யமுடியாது,மீண்டும் நீயாக என்னை கடவுளாக சொன்னால் தான் நான் கடவுளாக முடியும், என்ன வேண்டும் என்று சீக்கிரம் சொல்லு குழந்தாய்"

"நான் குழ்ந்தை இல்லை,எனக்கு வயது 20,இந்த நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.எனக்கு நீ செய்யக்கூடிய ஒரு உதவி இருக்கிறது"

"என்ன அது?சொல்,நான் மேலுலகுக்கு செல்லவேண்டும்,தேவன் காத்துக்கொண்டிருக்கிறார்"

கடவுள் இருப்பது யாருக்கும் உறுதியாக தெரியாததாலும்,ஆகவே மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுள் தண்டனை கண்டிப்பாக தருவார் என்ற கோட்பாட்டின் மேல் நம்பிக்கை யாருக்கும் இல்லாததாலும் தான் தவறுகள் நடக்கின்றன் என்று நான் தேவியிடம் கூறினேன்.ஆகவே பொதுவாக அடுத்தவர் தவறு செய்யும் போது மட்டுமே கடவுளை மனிதன் நினைப்பதாகவும் தான் தவறு செய்யும் போது வசதியாக கடவுளை மனிதன் மறந்துவிடுவதை நான் ஆதாரங்களுடன் கூறியதை தேவியும் ஏற்றுக்கொண்டாள்.

"நீ எனக்கு செய்யவேண்டிய உதவி ஒன்று உள்ளது" என்றேன் நான்.

"நீ உன் இருப்பை உலகுக்கு ஓங்கி ஒலிக்கவேண்டிய நாள் வந்துவிட்டது.நீ நான் சொல்வதை செய்யவில்லையென்றால் அடுத்து வரும் விரைவு வண்டியில் நான் விழுந்து என் உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டியிருக்கும்" என்றேன்.விருத்தாசலம் பேசஞ்சர் கேன்சல் ஆன விவரம் எனக்கு முன்னமே தெரியும்.தேவிக்கு தெரியாது என்றே எண்ணுகிறேன்.நம் இரயில்வே என்கொயரில யாராச்சும் ஏதாவது தகவலை சுலபமாக வாங்கிடமுடியுமா என்ன?

"நீ சொல்ற மாதிரி நான் செய்கிறேன்,நீ அந்த மாதிரி வீபரித முடிவை தேடவேண்டாம்"

"உடனடியாக கடவுள் நேரடியாக வருவதாக ஒரு விளம்பரம் கொடுப்போம்.குறிப்பிட்ட நாளில் மக்கள் கூடியுள்ள சபையில் நீ தேவனையும கூட்டிக்கொண்டு சர்வலங்காரமாக தோன்றவேண்டும் " ,என்று என் யோசனையை தெரிவித்தேன்.

"இதுவெல்லாம் நடக்கற கதையா? எப்படி விளம்பரம் கொடுப்பது?யார் இடம் தேர்தெடுத்து புக் பண்றது? செலவெல்லாம் யார் செய்வது?"

"தேவி,நீ கேட்பதும் சரியான கேள்விதான்.நானும் என் பணத்தை பிக்பாக்கெட் விட்டுள்ள நிலையில் இது யோசிக்க வேண்டிய விசயம்தான்"

சட்டென்று எனக்கு சற்றுமுன் போன ஊர்வலமும் அந்த சாமியாரும் நினைவுக்கு வந்தனர்.கண்டிப்பாக அவர் செய்வார்.தேவிக்கு அவர் செய்யும் தொண்டு உலகிற்கே தெரியும்.என்னை தெரிந்த தேவிக்கு அவரை தெரியாதது ஆச்சரியமாக இருந்தது.அவரை பார்ககலாம் என்று நான் தெரிவித்த யோசனையை தேவி ஏற்றுக்கொண்டாள்.ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த ஆசிரமத்திற்கு சென்றோம்.சாமியாரிடம் தனியாக பேச வேண்டும் என்றோம்.சாமியும் பெரிய மனது பண்ணி ஒத்துக்கொண்டது.

விஷயத்தை எல்லாம் அமைதியாக கேட்ட சாமியார் யாரையோ அழைக்க ஒரு இளைய சாமி சில பழங்களை கொண்டு வந்து வைத்து சாப்பிட சொன்னது. உடனடியாக அட்வடைஸ்மெண்ட் கொடுக்கலாம் என்னுடன் வா என்று என்னை அழைத்துக்கொண்டு தன்னுடைய ஆபிஸ்க்கு சென்று சாமியார் யாருக்கோ போன் செய்தார்.நான் ரூமிற்கு வெளியே உட்கார்ந்து இருந்தேன்.ஏதோ உள்ளுணர்வு உறுத்த சாமியார் பேசுவதை சன்னல் ஓரமாக சென்று உற்றுக்கேட்டேன்.உள்ளே சாமியார் பேசுவது கேட்டது.

"ஆமாம் சார் , பையனுக்கு இருபது வயதிருக்கும்,"

"......"

"பொண்ணும் ரொம்ப அழகு"

"......"

"பைத்தியம் மாதிரி நடிக்கிறாங்கன்னு நெனைக்கிறென்.அந்த பொண்ணை ரூமிலே போட்டு அடைச்சிட்டேன்,பையன் வெளியே உட்கார்ந்திருக்கான்

"......."

"திருடங்க இப்படி கூட வருவாங்களா "


அதற்கு மேல் என்னால் உட்கார முடியவில்லை.ரத்தம் தலையில் வேகமாக பாய்ந்தது.நான் பொங்கி எழுந்தேன்.அடப்பாவிங்களா,தேவியை யாடா அடைச்சி வைக்கறீங்க என்றவாறு சாமியாரை அடிக்க பாய்ந்தேன்.எங்கிருந்தோ தோன்றிய சிஷ்ய கோடிகள் சிலர் என்னை பிடித்துக்கொண்டனர்.நான் அவர்கள் பிடியில் இருந்து தப்ப துள்ளினேன்.

"நான் சொல்லாம தேவியால கடவுள் ஆகமுடியாதுடா..என்னை விடுங்கடா" என்று கூச்சலிட்டேன்.சட்டென்று பெஞ்சில் இருந்து உருண்டு விழுந்தேன்.

"தம்பி பத்து மணிக்கு மேல இங்க இருக்கக்கூடாது,எத்தனை முறை சொல்றது உனக்கு" என்றவாறு ஸ்டேஷன் மாஸ்டர் என்னை எழுப்பினார்.அப்போதும் என் உடம்பு நடுங்கிக்கொண்டே இருந்தது.

Friday, October 21, 2005

காங்கிரஸ் கட்சியின் அதி மேதாவித்தனமான அறிவுரைகள்

சமீபத்தில் மணிசங்கர அய்யர் கேஸ் விலையேற்றத்தை சமாளிக்க மக்களுக்கு புதுமையான உத்தியை கூறி வாங்கி கட்டி கொண்டது நாம் அறிந்ததே. இது போன்ற அறிவார்ந்த அறிவுரைகள் சொல்வது காங்கிரஸ்காரர்களுக்கு புதிதல்ல.

தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் போரடிக்கிறதே என்று கேட்ட கேள்விக்கு ராஜுவ் காந்தி அளித்த பதிலை நினைவுக்கூர்ந்து கொள்ளவும். என்ன கூறினார் என்று நினைவு கூர்ந்து கூறுபவர்களுக்கு ஞாபக சிந்தாமணி பட்டம் வழங்கப்படும். யாரும் பதில் கூறாவிட்டால் என்னுடைய அடுத்த பதிவில் அல்லது பின்னூட்டத்தில் பதில் கூறப்படும்.

மற்றபடி இந்த மாதிரி அறிவுரைகளை சீரியசாக எடுத்துக்கொண்டு அவருக்கு கறுப்பு கொடி காட்டுவது போன்ற செய்கைகள் தேவையற்றது. இன்னொரு காங்கிரஸ் காமெடியன் என்று எடுத்துக்கொண்டு அவரவர் வேலையை பார்ப்பது நல்லது.

Wednesday, October 19, 2005

கோன் பனேகா குரோர்பதியில் குப்புசாமி

நண்பர்களே, கோன் பனேகா குரோர்பதி என்று ஒரு தொடர் தொலைக்காட்சியில் வருவது நமக்கு எல்லாம் தெரியும். அதற்கு எஸ்.எம்.எஸ. அனுப்பி அனுப்பி கை
விரல் தேய்ந்தும் அழைப்பே வராத அப்பாவி தமிழர்கள் சார்பாக இந்த கடிதம் எழுதுகிறேன்.

ஒவ்வொரு வாரமும் யாராவது தமிழ்நாட்டில் இருந்து பங்கு பெறுவார்கள் என்று ஆவலாக பார்பபதும் பின்பு ஏமாறுவதுமே நமது பொழப்பாகி விட்டது. இதுவரை தமிழ்நாட்டில் இருந்து நிகழ்ச்சியில் பங்கு பெற அழைக்கப்பட்ட அனைவருமே வடநாட்டவர்கள் தான் என்பது தற்செயல்தான் என்று என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

சென்னையில் இருந்து யாரோ சிங், கோவையிலிருந்து யாரோ செளதுரி, சேலத்தில் இருந்து ஏதோ சர்மா, கல்பாக்கத்திலிருந்து செளபே என்று தான் ஆட்கள் அழைக்கப்பட்டார்கள்.

நண்பர்களே தெரியாமல் தான் கேட்கிறேன் .தமிழ்நாட்டிலிருந்து குப்புசாமிக்களும் கோயிஞ்சாமிக்களும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற முடியாதா? நிகழ்ச்சியை தமிழ் மொழிபெயர்த்து விளம்பரதாரர் மூலம் பணம் அள்ளும் விஐய் டிவி மற்றும் ஏர்டெல் நிறுவனம் இதை பற்றி என்ன நினைக்கிறார்கள்? தமிழன் எங்கேயும் எப்போதும் இளிச்சவாயன்தானா?

பெரியசாமி பேங்குக்கு வந்த கதை - வங்கி அனுபவங்கள் - 1

ஒரு பின்னூட்டத்தில் நண்பர் ஒருவர் வெளிநாட்டில் உள்ளவர்கள் இங்கு இந்தியாவில் வீட்டு லோன் வாங்கவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று எழுத சொல்லி கேட்டிருந்தார்.நான் வங்கியில் வேலை செய்வதால் அவருக்கு இந்த கேள்வி தோன்றி இருக்கிறது. வீட்டுவசதி கடன்களை பொருத்தவரை இப்போது வாடிக்கையாளர்களது பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்கள் பின்னால் வாலை குழைத்து கொண்டு வருகின்றன.ரொம்ப சுலபம்.மேல் விபரம் தேவைபடுவோர் என் மின்னஞசலுக்கு எழுதவும்.நான் சொல்ல வந்தது அது அல்ல.

இப்பொழுது நான் என் உத்தியோக நிமித்தமாக ஒரு நகரத்தில் வசித்து வந்தாலும் நான் முதலில் ஒரு கிராமத்தில் உள்ள எங்கள் வங்கி கிளையில் தான் பணியில் சேர்ந்தேன். என்னுடைய ஐந்து வருட ரூரல்(கிராம) சர்வீஸில் ஏற்பட்ட பல்வேறு சுவையான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் சேவை தேவை என்ற அரசின் கொள்கை காரணமாக பல கிராமங்களில் புதிய வங்கிகள் திறக்கப்பட்டன. அப்படி ஒரு கிராமம் தான் எங்கள் வங்கி அமைந்திருந்த கிராமமும்(சேலம் அருகே).ஒரு வங்கிக்கிளை புதிதாக திறப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. குறிப்பாக அந்த கிளை மேலாளருக்கு.அது வரை வங்கியையே பார்த்து அறியாத அந்த கிராமத்து மக்களுக்கு வங்கியை பற்றி விளக்கி வைப்பு நிதி(அதாங்க டெபாஸிட்) வாங்குவது என்பது ரொம்ப சிரமம்.

நான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த நேரம்.எனக்கு மதிய உணவு கொண்டுச்செல்லும் பழக்கம் இல்லாததால் அருகில் உள்ள ஒரு சிறிய ஓட்டலில் சாப்பிடுவது வழக்கம்.அப்போது ஒரு விவசாயி எனக்கு பழக்கமானார். நான் இயல்பிலேயே மிகவும் அமைதியாகவும்,அந்த ஊர் விவசாயிகளை மதிப்பவனாகவும்,சிறு வயதினனாகவும் இருந்ததினால் என் மேல் பொதுவாக ஊரில் ஒரு மதிப்பு இருந்தது.அவருக்கும் உண்டு. பெரியசாமி என்பது அவர் பெயர் என்று வைத்துக்கொள்வோமே. நிலம் விற்ற வகையில் கையில் ஒரு நாற்பதாயிரம் ரூபாய் வைத்திருந்தார்.என்ன பண்ண போறீங்க என்றதற்கு ஒரு மாதம் கழித்து மீண்டும் வேறு நிலம் வாங்க வேண்டும் என்றார். சும்மா கையில் பணத்தை வைச்சுக்காதீங்க. பாங்கில போடுங்க என்றேன் நான்.(canvass).பேங்க் புத்தி.

அவருக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை.நான் மேலும் வற்புறுத்தவே பணத்தை எடுத்துக்கொண்டு வந்தார். எங்கள் மேனேஜுர் ரொம்ப சந்தோஷப்பட்டார். சாப்பிட போன இடத்தில் டெபாஸிட் பிடித்துக்கொண்டு வந்ததற்காக என்னை பாராட்டினார்.வாங்க பெரியசாமி என்று வரவேற்றார். ஒரு சேமிப்பு அக்கவுண்ட் ஆரம்பித்து அதில் அந்த பணத்தை போட சொல்லலாம் என்ற என் நினைப்புக்கு மாறாக பதினைந்து நாள் இட்டுவைப்பு(fixed deposit) கணக்காக செய்துவிடலாம் என்றார் எங்கள் மேனேஜர். அதில் உள்ள லாஜிக் என்னவென்றால் சேமிப்பு கணக்கில் இருந்தால் உடனே யாராவது கேட்டால் எடுத்துக்கொடுத்து விடுவார்கள் என்பதால் எப்போதும் எங்கள் மேனேஜர் முடிந்தவரை டெபாஸிட் ஆகத்தான் செய்வார்.

இப்போது ஒரு மானேஜுரே நமது பெரியசாமியை வாங்க சார் என்று கூப்பிட்டதும் புளகாங்கிதமடைந்த பெரியசாமி டெபாஸிட் செய்ய ஒத்துக் கொண்டார். என்னை திரும்பிக்கூட பார்க்கவில்லை பெரியசாமி.வவுச்சர் எல்லாம் நான் எழுதினேன். மானேஜுர் வாங்கிக்கொடுத்த காப்பியை பருகியவாறே ரேகை வைத்தார் பெரியசாமி.

இரண்டு நாள் இருக்கும்.திடீர் என்று ஒருநாள் மாலை நான்கு மணிக்கு வந்தார் பெரியசாமி. அவசரம் ஒரு காடு நல்ல விலைக்கு வருகிறது, அட்வான்ஸ் கொடுக்க பணம் வேண்டும் என்றார். இரண்டு மணிக்கு மேல் பணம் கொடுக்கல் வாங்கல் வங்கிகளில் அப்போது இல்லை என்றாலும் கிராமங்களில் அந்த விதிகளை கெடுபிடியாக பயன்படுத்த முடியாது. எவ்வளவு வேண்டும் என்று கேட்டுக்கொண்ட மானேஜர் டெபாஸிட்டை உடைக்க மனமில்லாது அந்த டெபாஸிட்டின் மீது லோன் போட்டு கொடுத்து விட்டார். லோனுக்கு வட்டி கட்டணுமே என்றார் பெரியசாமி உஷாராக. டெபாஸிட்டுக்கும் வட்டி உள்ளதால் பெரிய பிரச்சினை இல்லை என்று அன்று அவரை சமாதானப்படுத்தினோம்.

ஒரு பத்து நாள் சுமூகமாக போனது. மீண்டும் பரபரப்பாக வந்தார். மாடு வாங்க போவதாகவும் எல்லா பணமும் உடனே வேண்டும் என்றும் கூறியவரை மானேஜரால் சமாளிக்க முடியவில்லை.மேலும் பெரியசாமி என்னை பார்த்து எப்ப வேணாலும் பணத்தை வாங்கிக்கலாம்னயே என்று கேட்க வேறு வழி இல்லாமல் அவர் கணக்கை முடித்தோம்.மீதி பணத்தை கையில் வாங்கிய பெரியசாமி முகத்தில் அதிர்ச்சி. நெற்றி கண் இருந்தால் என்னை சுட்டிருப்பார் அன்று.அதுக்குதான்யா நாங்கள்ளால் மேலே ஏறி வரதில்லை என்றார்.(எங்கள் வங்கி ஒரு கட்டிடத்தின் மாடியில் உள்ளது).

என்ன நடந்தது என்றால் பெரியசாமியின் டெபாஸிட் குறைந்துபட்ச நாட்களான பதினைந்து நாட்கள் வங்கியில் இல்லாததால் வங்கி அவருக்கு வட்டி தரவில்லை. ஆனால் அவர் அந்த டெபாஸிட் மீது எடுத்த லோனுக்கு அவர் கட்ட வேண்டிய வட்டியை வங்கி பிடித்துக்கொண்டு மீதியைத்தான் அவருக்கு தந்தது.கொண்டு வந்த பணத்தை விட குறைந்த பணத்தையே அவர் திரும்ப வாங்கிக்கொண்டு போனார்.

அதிலிருந்து வெளியே ஓட்டல்,பஸ் ஸ்டாப் முதலான இடங்களில் அவர் என்னை பார்த்தாலும் என்னுடன் பேசுவதில்லை. நானும் அவரை ஏன் என்று கேட்கவில்லை.(கேட்க முடியுமா?)

Monday, October 17, 2005

எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு அஞ்சலி

ஒரு எழுத்தாளனின் கடமை என்ன? ஒரு எழுத்தாளன் தன் வாழும் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமை என்ன? வெறுமே இலக்கியம் படைத்துவிட்டால் மட்டும் போதுமா? நாம் ஒரு கொள்கையை விரும்பி ஏற்கிறோம். அது சரியானது என்று நம்புகிறோம். அது நம் படைப்பில் வெளிப்படலாம். வெளிபடாமலும் போகலாம். ஒழுக்கமானது,உயர்வானது என்று தம் படைப்புகளில் தூக்கிபிடிக்கப்படும் பல விசயங்களை சொந்த வாழ்க்கையில் பின்பற்றாத பல இலக்கிய வாதிகளை நாம் நிறைய பார்த்துவருகிறோம்.

நாம் சரி என்று நமக்கு பட்ட ஒரு கொள்கையை ஏற்கிறோம். பின்னால் அதில் உள்ள குறைபாடு நமக்கு தெரிய வருகிறது.நம்மில் எத்தனை பேர் நம்முடைய ஜுட்ஜுமெண்ட் தவறென்று ஒத்துக்கொள்கிறோம்? நம்முடைய நிலையை காத்துக்கொள்ள நாம் நினைத்தது சரி என்று நிறுவ எத்தனை குட்டிகரணம் அடிக்கிறோம்? இந்த சிறுமைகளை மீறி வாழ்ந்தவர்களையே நாம் உயர்ந்தவர்கள் என்கிறோம்.

சுந்தர ராமசாமி.தமிழ் இலக்கிய உலகின் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக திகழ்ந்தவர்.உடல்நலக்குறைவு காரணமாக 15.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார். மரணம் என்பது தவிர்க்க முடியாதது என்றாலும் எதிர்பாராத மரணம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுக்காலம் இலக்கிய உலகில் சமரசங்களற்று,உயர்ந்த தரத்தை மட்டுமே தம் மதீப்பீடுகளாக முன்வைத்து,என் போன்ற எத்தனையோ இளைஞர்களை தமிழ் இலக்கியத்தின் பால் திருப்பிய பேராசான்.நான் எப்படி இலக்கிய உலகிற்குள் சுந்தர ராமசாமியினால் இழுத்து வரப்பட்டேன் என்பதை என்னுடைய முந்தைய கட்டுரையில் கூறி உள்ளேன்.முதன்முதலாக அவரின் கட்டுரைகளை படிக்க் நேர்ந்தப்போது நான் அடைந்த அதிர்ச்சிகளுக்கு அளவே இல்லை.இவை என் உரைகள் என்ற அந்த அவரின் கட்டுரை தொகுப்பு மிகவும் ஆழமானது. இளைஞர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது.

எளிமையான விளக்கங்கள்,எள்ளல் தேய்ந்த நடை, சமரசங்களற்ற உயர்ந்த மதிப்பீடுகள் ஆகியவை அவரின் படைப்பு திறனின் சிறப்புகளின் சில கூறுகள்.

"இல்லாத அற ஒழுக்கங்களைப் படைப்புகளில் திணித்தால் அது வாழ்க்கையில் அமலாகிவிடுமா? நாவல் என்பது உட்டோப்பியா அல்ல.எவ்வாறு வாழ்க்கை இருக்கவேண்டும் என்று கனவு காண்பது அல்ல நாவல். எவ்வாறு வாழ்க்கை இருக்கிறது என்ற பரிசீலனை நாவலாசிரியனை சார்ந்தது"..

"எழுத்தாளன் என்ற முறையில் நான் தூக்கி சுமக்க வேண்டிய சித்தாந்தங்கள் என்று எதுவும் இல்லை. காலத்தின் பக்கம் நின்று சாட்சியம் சொல்வது என் வேலை."

"இன்றைய திரைப்படங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.ஒன்றுக்கும் பிரயோஜுனமில்லாத ஒரு கதாநாயகன்,ஒன்றுக்கும் உதவாதவன் என்று பெண் வீட்டாரால் கருதக்கூடிய ஒரு கதாநாயகன்,அவன் கூலி வேலை செய்யக்கூடியவனாகவோ,டாக்சி ஓட்டக்கூடியவனாகவோ இருக்கலாம்.அவன் அந்த திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆங்கிலத்தில் சில வசனங்கள் பேசும் போது எண்ணற்ற பார்வையாளர்கள் கரகோஷம் செய்வார்கள்.அந்த கரகோஷத்திற்கு அர்த்தம் 'அவன் அறிவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது' என்பதுதான்.இவை நாம மன ரீதியாக எவ்வளவு பெரிய நோயாளியாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளங்கள்"

எவ்வளவு ஆழமாக அதே சமயம் எளிமையான கருத்துக்கள். சுந்தர ராமசாமி,ஒரு படைப்பாளியின் நோக்கம் அவன் சார்ந்த சமூகத்தை சிந்திக்க வைப்பது தான் என்றால் உங்கள் வாழ்வின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்பதற்கு என்னை போன்ற எண்ணற்ற இளைஞர்களே சாட்சி.

இதை படிக்கும் சிலராவது அவரை படிக்க முனைந்தால் இந்த கட்டுரையின் நோக்கம் நிறைவேறிவிடும்.அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, October 10, 2005

கள், சாராயம், சிகரெட் மற்றும் நவீன தமிழ் இலக்கியம்

இப்போது எங்கு பார்த்தாலும் தமிழ் இலக்கியம் பற்றியே பேச்சு. நவீன தமிழ் இலக்கியம் மறுமலர்ச்சி பெற்றிருக்கும் இந்த பொன்னான தருணத்தில் எனக்கும் இலக்கியம் படைக்கும் ஆசை வந்ததில் வியப்பில்லை. ஆனால் எதை எழுதுவது? மிகுந்த யோசனைக்குப்பின் தமிழ் இலக்கியத்துடனான என் உறவு எப்படி ஏற்பட்டது என்பதையே எழுதலாம் என்று முடிவு செய்து விட்டேன்.இங்கு இரண்டு கேள்விகள் வருகின்றன. இது எப்படி இலக்கியம் ஆகும் என்பது முதல் கேள்வி. இதனால் என்ன பலன் என்பது இரண்டாவது கேள்வி. முதல் கேள்விக்கான பதிலை என் சார்பாக என்னுடைய சக (முன்னோடி) இலக்கிய வாதிகள் ஏற்கனவே கூறிவிட்டனர். எழுத்தாளன் வீட்டு பால் கணக்கு கூட இலக்கியமே என்பதே அந்த பதில். மேலும் இலக்கிய விமரிசனம் மட்டுமே கூறி இலக்கிய விருதுகளே வாங்கலாம் என்ற அளவு வளைந்துகொடுத்து போகும் தன்மை இலக்கியத்தில் உண்டு என்பதை இந்த சிறு காலகட்டத்தில் உணர்ந்திருக்கிறேன். ஆகவே தமிழ் இலக்கிய உலகம் என்னுடைய சிறு கட்டுரையை கண்டிப்பாக உள்வாங்கிக்கொள்ளும எனலாம்.
இரண்டாவது கேள்விக்கான பதில் என்னவென்றால் பொதுவாக தமிழ் சூழலில் ஒரு இலக்கிய எழுத்தாளன் சக இலக்கிய எழுத்தாளனுக்காகவே இலக்கியம் படைத்து கொண்டிருப்பதாக ஒரு கருத்து உண்டு. அந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் பலபுதிய வாசகர்களை தமிழ் இலக்கியத்தின்பால் திருப்ப வேண்டும் அல்லவா? நான் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டேன் என்று இலக்கியவாதிகள் தெரிந்துக் கொண்டார்களேயானால் அதே உத்தியை பயன்படுத்தி பல புதிய வாசகர்களையும் ஈர்த்து சக படைப்பாளிக்காக மட்டுமே எழுதி வரும் அவல நிலையிலிருந்து நாம்(?) அனைவரும் மீளலாம் என்பதே என் குறிக்கோள்.

அதுவும் வேண்டாமா? சரி. ஆபீசீலோ அல்லது வீட்டிலோ பொழுது போகாமல் இண்டர்நெட்டில் புகுந்து தமிழை பார்த்து வியந்து திண்ணை போன்ற வலைதளங்களில் விழுந்து இலக்கிய உலகை அணைக்க புறப்படும் இளைய தலைமுறைக்கு ஒரு ஒரு எளிய அறிமுகமாக கூட எடுத்துக் கொள்ளலாம்.

நானும் சிறிய வயதில் (சுமார் பதினைந்து வயது) பாட புத்தகத்தை தவிர வேறு புத்தகம் என்றால் அது பாக்கெட் நாவல் தான் என்றிருந்தேன். முதன்முதலில் கோவி.மணிசேகரன் என்று நினைக்கிறேன். மாத நாவல்கள (க்ரைம் வகையறா) பற்றி கடுமையாக ஏதோ கருத்துகள் கூறிவிட்டார். கடும் எதிர்ப்பு கிளம்பியது என் அபிமான எழுத்தாளர்களிடம் இருந்து. நாம் ரசித்து படித்து கொண்டிருப்பதை குப்பை என்று ஒருவர் கூறினார் என்றால் ஏன் அவ்வாறு கூறுகிறார் என்று அறிந்துக்கொள்ளும் ஆர்வம் வந்தது.
நூலகம் சென்று கோவி.மணிசேகரன் புத்தகம் ஒன்றை எடுத்து படித்தேன். முதல் இலக்கிய நூல் அல்லவா?. மூளை குழம்பியதுதான் மிச்சம். இலக்கியம் புரியவில்லை. சில நாட்களில் அதே இலக்கியவாதி தனக்கு ஏதோ விருது கொடுத்ததற்காக எம.ஜீ.ஆரை புகழ்ந்து பேசியதை ஒரு பத்திரிக்கையில் படித்தேன். இலக்கியத்தின் ஒரு வகை எனக்கு இலேசாக புரிய ஆரம்பித்தது.

இலக்கியத்துடனான அடுத்த உரசல் சுமார் பதினெட்டு அல்லது இருபது வயதில் கல்லூரியில் ஏற்பட்டது.மாத நாவல்கள் போர் அடிக்க தொடங்கி இருந்த காலம். என் அடிமனதில் மறைந்திருந்த இலக்கிய வெறியை ஏதோ வெகுஐன பத்திரிக்கையில் வந்த செய்தி தூண்டிவிட்டது. இலக்கியவாதிகள் தங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை தீர்க்க அடித்துக்கொள்வார்கள் என்பதே அந்த செய்தி. தனது கொள்கைகளின் மேல் என்னவொரு பற்று இருந்தால் இலக்கியத்திற்காக பல்லையும் இழக்க துணிவார்கள் என்று எண்ணி வியந்து போனேன். என்ன தான் வெகுஜன இதழ்கள் இலக்கியத்தின் வாசனை தன் மேல் அடிக்காமல் பார்த்துக்கொண்டாலும் அவர்களையும் மீறி சில செய்திகளை வெளியிட்டு விடுகின்றனர்.நு}லகம் சென்று இலக்கிய நூல்கள் என்று விசாரித்ததில் ஜானகிராமன் மற்றும் ஜெயகாந்தனின் சில கதைகளை படிக்க நேர்ந்தது. மிகையாக புனையப்பட்ட எக்ஸ்ட்ரா ஆர்டினரி காரக்டர்களையே படித்து வந்த எனக்கு யதார்த்தமான கதாபாத்திரங்கள் அறிமுகமாயின். ஏற்கனவே என் தந்தையின் பாதிப்பில் பகுத்தறிவுவாத கருத்துக்களில் சற்று ஆர்வம கொண்டிருந்தேன். (நமது சமகால இலக்கியவாதிகளின் பாணியில் சொல்ல போனால் தட்டையான மேம்போக்கான கருத்துக்கள்) ஜெயகாந்தனின் சில கதைகள் மிகவும் நன்றாகவே இருந்தது. சிறு வயதிலேயே சன்னியாசி ஆக்கப்பட்ட ஒரு சிறுவனை பற்றிய கதையும் (கழுத்தில் விழுந்த மாலை) ஒரு பிராமண பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையும்(நம்ப மாட்டேளே) என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு இலக்கியவாதி(?) ஆக வேண்டும் என்ற கனவு அப்போதே தோன்றிவிட்டது என்று நினைக்கிறேன். நம் மனதில் தோன்றும் ஒரு கருத்து அல்லது உணர்வு வேறு எந்த வடிவிலாவது வேறு ஒருவர் கருத்தாகவோ உணர்வாகவோ வெளிப்படும்போது நாமும் எழுதலாம் என்று தோன்றுகிறது என்று நினைக்கிறேன்.

கல்லூரியில் ஏற்பட்ட அந்த ஆர்வம் வளரவில்லை. வாழ்க்கையில் முதலில் 'செட்டில்" ஆக வேண்டும் என்ற எண்ணம் தான் அதற்கு காரணம். மேலும் நமது தமிழாசிரியர்கள் பலரும் காமெடியன்களாகவே இருப்பதும் தான் காரணம் என்று நினைக்கிறேன். தமது பொறுப்பை அவர்கள் தட்டி கழக்க முடியாது.பரவலான தளத்தில் நவீன தமிழ் இலக்கியத்தை பரப்ப வேண்டும் என்று நினைத்தால் நமது தமிழாசிரியர்களை கம்பனில் இருந்து இளங்கோவில் இருந்து பிரித்து நிகழ்காலத்திற்கு கொண்டு வருவது முக்கியம். பண்டைய தமிழ் இலக்கியங்களில் இருந்து சில பாடல்களை மனப்பாடமாக கூறுவதையே தன் சாதனையாக பல வருடங்களாக நினைத்துக்கொண்டு காலத்தை ஓட்டுபவர்கள் இவர்கள். பழம்பெருமை மட்டுமே பேசி நாம் திரிவதற்கு இவர்கள் தான் பொறுப்பு.

இலக்கிய ஆர்வம் அப்போது அவ்வபோது கையில் கிடைக்கும் நூல்களை படிப்பது என்ற அளவில்தான் இருந்தது. ஆனால் மாத நாவல் போன்றவை படிக்கும் பழக்கம் முற்றாக தொலைந்து போனது. வாழ்க்கையில் செட்டில் ஆனபின்னால் (முட்டி மோதி ஒரு கிளார்க் உத்தியோகமாவது வாங்குவது என்பதுதான் நமது வாழ்வில் செட்டில் ஆவது என்பது)

நூலகத்தில் கிடைத்த ஒரு புத்தகத்தின் (சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு) மூலம் சுந்தர ராமசாமியை படித்தேன். அடிமனதில் உறங்கிக்கொண்டிருந்த இலக்கிய ஆசையை மீண்டும் தூண்டியவர் அவரே என்று கூறலாம். முதலில் சுந்தர ராமசாமியிடம் என்னை கவர்ந்ததே அவர் ஜம்பது வருடங்களாக எழுதியும் மூன்றே நாவல்கள் தான் எழுதியுள்ளார் என்பதே. அடுத்ததாக அவரது கதைகளின் தலைப்பு. முதன்முதலில் ஒரு புளியமரத்தின் கதை என்ற தலைப்பை பார்த்தவுடன் என் மனதில் ஓடியது பள்ளி பாடத்தில் தென்னைமரத்தை பற்றி நாங்கள் எழுதும் கட்டுரைதான். தென்னை மரத்தின் உபயோகம்.தென்னை மரத்தின் எந்த பாகமும் வீணாவதில்லை என்றெல்லாம் இருக்கும். ஒரு புளிய மரத்தை பற்றி ஒரு நாவல் எழுத என்ன இருக்கிறது என்றே நினைத்தேன். அடுத்து ஜெ.ஜெ. சில குறிப்புகள். அது ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அல்ல என்று நான் நம்பியதற்கு ஒரே காரணம் நாவல் வெளிவந்த வருடம்தான்.

இந்த இரண்டு நூல்களும் என் மனதில் ஏற்படுத்திய பாதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல.அப்போதிலிருந்து (சுமார் இரண்டு வருடங்கள்) முதல் என் ஆதர்ச எழுத்தாளர் அவரே எனலாம். என்னவென்று விளக்கி சொல்ல முடியாததொரு அனுபவத்தை கொடுத்த நாவல் ஒரு புளியமரத்தின் கதை. ஒருவகையான இலக்கிய போதைக்கு ஆளாகி போனேன். ஜெ.ஜெ. சில குறிப்புகள நாவலை எத்தனை முறை படித்தேன் என்று என்னால் கூற முடியாது.


அவரின அனைத்து நூல்களையும் தேடி படித்தேன். அவருடைய நாவல்கள் மற்றும் சிறுகதைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல அவரது கட்டுரைகள். அடிக்கடி நண்பர்கள் வட்டாரத்திலும் வீட்டிலும் அவரது கட்டுரையில் இருந்தோ கதையில் இருந்தோ சில வாக்கியங்களை திருப்பி சொல்ல ஆரம்பித்தேன். பணிஇடமாற்றம் காரணமாக மும்பாய் செல்ல நேர்ந்த நான் அப்போதுதான் படித்த சுந்தர ராமசாமியின் காகங்கள் கதையை படித்து விட்டு என் உணர்வை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று என்று தெரியாமல் என் மனைவியை அமர வைத்து படித்து காண்பித்தேன்.

வரிவரியாக நான் ரசித்து படிப்பதை பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்த அவள் கடைசியாக "நீயும் காக்காய் பின்னால் போக வேண்டியதுதானே, இனிமேல் அந்த தாடிக்காரன் பற்றி என்னிடம் பேசினால் நடப்பதே வேறு", என்று எச்சரித்தாள்.

உத்தியோக நிமித்தமாக வெளி மாநிலங்களிலேயே இருக்க நேரும் நான் நூலக வசதி இல்லாமல் அவ்வபோது இருநூறு முன்னூறு என்று செலவு செய்து குண்டு குண்டு புத்தகங்கள் வாங்குவதை அவள் எதிர்த்தாள். இலக்கியவாதிக்கு முதல் எதிர்ப்பு வீட்டில் இருந்துதான் வரும் என்று எனக்கு முன்பே என் முன்னோடிகள் எச்சரித்து வைத்திருந்தபடியால் நான் அதை பொருட்படுத்தவில்லை.

ஒரு தரமான இலக்கிய வாசகன் கண்டிப்பாக தமிழக சிறுபத்திரிக்கை இயக்கத்தை புறக்கணிக்க இயலாது ஆனபடியால் சில சிறுபத்திரிக்கைகளும் வாங்கிப்படிக்க தொடங்கினேன். முக்கியமாக சிறுபத்திரிக்கைகளில் இருப்பது என்ன? அவற்றில் விவாதிக்கப்படும் விஷயம்தான் என்ன? என்று பார்த்தோம் என்றால் கணிசமான பங்கை கம்யுனிஸம் என்ற சிந்தாந்தமே ஆக்ரமித்து கொண்டு இருக்கிறது. நமக்கு தெரிந்த கம்யுனிஸம் எல்லாம் ஒரு டஜன் கம்யுனிஸ்ட் கட்சிகள் தான். ஏற்கனவே இந்தியாவில் உள்ள கம்யுனிஸ்ட்களுக்கும் கம்யுனிஸத்துக்கும் உள்ள உறவு மைசூருக்கும் மைசூர் போண்டாவுக்கும் உள்ள உறவுதான்(நன்றி திரு.சோ) என்று கேள்விப்பட்டுள்ளேன்.


மார்க்சிஸம் தெரியாமல் சிறு பத்திரிக்கைகள் படிக்க இயலாது ஆகையால் மார்க்சிஸம் பற்றி அறிந்துக்கொள்ளும் பொருட்டு மார்க்சிய மெய்ஞானம் என்ற நூலை வாங்கினேன்.

எனது புத்தக அலமாரியில் இந்த புத்தகத்தை பார்த்த என் மனைவி சில பக்கங்களை புரட்டி பார்த்து விட்டு பயந்து போனாள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்டும் தொடர்களில் வரும் சில கதைகளை சுட்டி காட்டி என்னிடம் விளக்கம் கேட்க ஆரம்பித்தாள்.( அந்த கதைகளில் உள்ளது என்னவென்றால் கதாநாயகன் தன் வீட்டு பரணில் உள்ள சில ஓலைசுவடிகளை படித்து அதனால் பல பிரச்சினைகளிலும் சிக்கி கொள்ளும் கதை). புத்தக கடையில் வாங்கப்படும் இது போன்ற புத்தகங்களுக்கும் ஓலைசுவடிகளுக்கும விததியாசம் உண்டு என்று அவளை சமாதானம் செய்துவிட்டு படிக்க ஆரம்பித்தேன்.

இலக்கிய உலகில் பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் கடவுளை நம்புவதுதான் உலகில் உள்ள எல்லா சிக்கல்களும் தீரும் வழி என்று கருத்து கொண்ட ஒரு குழுவும் அதை மறுத்து பகுத்தறிவு அல்லது மார்க்சியம் தான் சிறந்த வழி என்று ஒரு குழுவும் தான் நிரந்தரமான குழுக்கள்.

இதுபோக இலக்கிய உலகில்; பேசப்படுகிற இன்னொரு விஷயம் கவிதை. நம் தமிழ் சமுதாயத்தில் பெரும் கவிஞராக உலா வரும் வைரமுத்து போன்றவர்கள் எல்லாம் கவிஞர்களே அல்ல என்ற சிறுபத்திரிக்கைளின் கருத்து எனக்கு அதிர்ச்சி தந்தது. அந்த முடிவுக்கு அவர்கள் வந்த விதமும் சரியே என்று புரிந்ததில் மேலும் அதிர்ச்சி அடைந்தேன். புதுக்கவிதை என்று ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் சீரழியும் அனைத்தையும் சிறுபத்திரிக்கைகள் பீச்சாங்கையால் ஒதுக்குகின்றன. சரி.கவிதைகளைப் பற்றியும் அவைகளை அணுகும் தன்மையும் அறியும்பொருட்டு மேலும் சில புத்தகங்களை வாங்கும்போது என் மனைவி பொங்கி எழுந்தாள். கேபிள் டிவிக்கு மாதம் முன்னூறு ரூபாய் (அப்போது மும்பயில் இருந்தோம்) தருகிறோமே. புத்தகத்திற்கு செலவு பண்ணுவது தப்பா? என்ற கேள்வி எல்லாம் செல்லுபடியாகவில்லை. கேபிளை இணைப்பை துண்டித்துவிடு என்று கூறிவிட்டாள்.பிறகு ஒருவழியாக ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி நான் மாதம் எவ்வளவு ரூபாய்களுக்கு புத்தகம் வாங்குகிறேனோ அவ்வளவு ரூபாய்களை அவளுக்கு தந்து விட வேண்டியது. இதனால் நான் வாங்கும் புத்தகங்களின் விலை இரு மடங்காக கடுமையாக உயர்ந்தாலும் வீட்டில் அமைதி நிலவியது. கடந்த முறை தமிழ்நாட்டுக்கு வந்த போது என் மனைவி என்னுடன் நான் வழக்கமாக மதுரையில் புத்தகம் வாங்கும் கடைக்கு வரும் அளவிற்கு சகஜ நிலை திரும்பியது. தமிழ்நாட்டிற்கே வருடத்தில் ஒருமுறை அல்லது இருமுறை தான் வருகிற என்னை கடைக்காரர் அடையாளம் கண்டுக்கொண்டு சிரித்ததும் நான் கேட்காமலே நான் வாங்கிய நூல்களுக்கு 10 பர்சென்ட் தள்ளுபடி அளித்ததும் எனக்கு மகிழ்ச்சி அளித்த தருணங்கள்.

Tuesday, October 04, 2005

ஆயிரத்து முன்னூறு ரூபாய்

சற்று கண் அசந்து விட்டேன் என்று நினைக்கிறேன். நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் மிகவும் நெருங்கிவிட்டதை உணர்ந்தேன். திடுக்கிட்டேன். மெதுவாக படியை நோக்கி ஊற ஆரம்பித்தேன். முனகல்களும் எரிச்சல் பார்வைகளும் உடம்பை அரிக்க ஆரம்பித்தன. அந்தேரி ஸ்டேஷனில் இறங்க முடியவில்லை என்றால் அடுத்து போரிவிலிதான். முட்டி கொண்டு போக முயற்சித்தேன். முடியாது என்று தெரிந்தும் முயற்சித்தேன். இரயில் காந்திவிலியை நெருங்கியது. நான் இறங்க யாரும் நகர்ந்து இடம் தரவில்லை. இரயில் நின்றது. திமுதிமுவென்று உள்ளே ஏறிய கூட்டம் இறங்குவதை சாத்தியம் இல்லை என்றாக்கியது. இரயில் கிளம்பியது. என் உடம்பில் பாய்ந்து கொண்டிருக்கும் அத்தனை இரத்தமும் தலையில் பாய்ந்தது. சுற்றியிருந்த அனைவரும் என்னை பார்த்து சிரித்தார்கள். என்னையும் மீறி என் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்தது. தேவடியா பசங்க என்று தமிழில் அர்த்தம் வரும். சற்று சத்தமாக திட்டிவிட்டேன் போலிருக்கிறது.

"என்ன சொன்னாய்?", என்று இந்தியில் கேட்டான் ஒருவன்.

அதுவரை எதுவும் பேசாமல் இருந்த ஒருவன் மற்றவர்களை பார்த்து இந்தியில் ஏதோ சொன்னான். அனைவரும் என்னையே பார்த்தார்கள்.

"இறங்கவேண்டும் என்று முன்னமேயே சொல்லியிருக்கலாமே" என்று கோணல் சிரிப்புடன் சொல்லியபடி என்னை நெருங்கினான் ஒருவன். கூட்டம் என்னை நெருங்கியது. என்னை அலாக்காக சிலர் தூக்கி ஓடுகிற இரயிலில் இருந்து வீசி எறிந்தனர். ஒருவன் என் பைலை தூக்கி எறிந்தான். அப்போதும் நான் அலறாமல் இருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இது கனவாக இருக்கலாம் என்று நான் நினைத்தபோது என் கனவு கலைந்தது.

"டீ,,,காபி", என்று சத்தம் கேட்டது. இரயிலில் வேகமாக போய் கொண்டு இருந்ததை உணர்ந்தேன். மேல் பர்த்தில் அமர்ந்திருந்த என்னை என் மனைவி உற்று பார்த்து கொண்டிருந்தாள். கீழே இறங்கி என் கனவை கூறினேன்.

"நாளையில் இருந்து லோக்கல் ட்ரெயினில் ஆபீஸ் போகணும் என்ற பயம் உனக்கு", எனறாள் அவள்.

சரியாக அதே நேரம் என் மொபைல் போன் ஒலித்தது.

"மும்பயிலிருந்துதான்", என்றாள் என் மனைவி.

எனது நண்பர் சாமிநாத அய்யர் தான் பேசினார். மிகவும் பதட்டமாக இருந்தார்.
"நம்ம சிங்கை கொன்றுவிட்டார்கள்", என்றார்

"அய்யோ,எப்போ?"

"நேத்து நைட் கடையில. உங்களை போனில் ட்ரை பண்ணிக்கொண்டே இருந்தேன். உங்கள் மொபைல் எடுக்கவில்லை",

நான் இரயிலில் வருவதை சொன்னேன். திரும்ப லைன் டிஸ்கனெக்ட் ஆனது. எனது முகம் போன போக்கை வைத்து என் மனைவி ஊகித்துவிட்டாள் ஏதோ கெட்ட செய்தி என்று. நான் சொன்னேன். பெரிய அதிர்ச்சி. என் மனைவியும் ஷாக் ஆனாள். அப்படியே கண்ணை மூடிக்கொண்டேன்.

என் உத்தியோக நிமித்தம் மும்பாய் பணிமாற்றம் ஏற்பட்டிருந்த புதிது. திருமணமும் அப்போது தான் ஆகியிருந்தபடியால் மனைவியுடன் அருகிலிருந்த எலிபெண்டா கேவ்ஸ் என்ற சின்னஞ்சிறியதீவிற்கு போயிருந்தோம். படகில் தான் செல்ல வேண்டும். படகில் ஐம்பது நூறு பேர் பயணம் செய்யலாம். அந்த பயணத்தில் தான் முதன்முதலாக ரிபுதாமன்சிங்கை பார்த்தேன்.

படகு முழுவதும் ஒரே இளவட்டங்கள் கூட்டம். எனக்கு திருமணம் ஆகியிருந்த புதிதாகையால் மனைவியின் பார்வையை மீறி பெண்களை பார்ப்பது மிகவும் கடினமாகி தடுமாறி கொண்டிருந்தேன். சிங் தன் பெரிய குடும்பத்துடன் வந்திருந்தான். திடீரென்று படகில் ஒரே கலாட்டா. யாரோ சில இளைஞர்கள் சில இளம் பெண்களிடம் சில்மிஷம் பண்ணிவிட்டார்கள். கேட்க போன பெண்ணின் கணவரையும் அடித்துவிட்டார்கள். இதுவெல்லாம் எனக்கு பின்னால் சிங் மூலம் தெரிய வந்தது. பொதுவாகவே அடிதடி என்றாலே காத தூரம் ஓடும் எனக்கு, மொழியும் புரியாமல், கையும் ஓடாமல் காலும் ஓடாமல் அமர்ந்திருந்தேன்.

சிங் பொங்கியெழுந்தான். அப்போது அவன் போட்ட ஸ்டண்ட் இன்றும் என் கண்ணில் நிற்கிறது. கலாட்டா பண்ணிய இரண்டு இளைஞர்களையும் உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டான். பலரும் தலையிட்டு தடுக்கவில்லை என்றால் அன்று கொலையே விழுந்திருக்கும். களேபரம் ஓய்ந்தபிறகு சிங் எனதருகில் வந்து அமர்ந்தான். இப்போது நான் கண்டிப்பாக எதாவது அவனிடம் பேசுவேன் என்பது என் மனைவிக்கு தெரியும்.பொதுவாக இரயிலில் அல்லது பஸ்ஸில் நான் அருகிலிருப்பவர்களுடன் அதிகம் வாயாடுகிறேன் என்பது அவளின் புகார். நான் மெல்ல சிங்கிடம் என்ன நடந்தது என்றேன்.

என்ன நடந்தது என்று விளக்கிய சிங் முஷ்டியை மடக்கி நான் இருக்கும் போது எதாவது கலாட்டா நடக்குமா? என்றவன்,

"நீங்கள் ஏன் தலையிடவில்லை", என்றான்.

"எனக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை"

"மதராஸி எல்லாம் இட்லி சாப்பிட தான் லாயக்கு", என்றான் பட்டென்று

"எனக்கு இட்லி பிடிக்காது", என்றேன்.

பெரிதாக சிரித்தான் சிங்.

"சும்மா தமாசுக்கு தான் சொன்னேன்", என்றான்.

"உங்கள் சண்டை நிஜமாகவே நன்றாக இருந்தது. நீங்கள் சோல்ஜரா?",

"ஆமாம், எப்படி அறிந்துக்கொண்டீர்கள்?", என்று கேட்டு ரொம்பவே சந்தோஷப்பட்டுக்கொண்டான் சிங.

பரஸ்பர அறிமுகத்திற்கு பின் தானும் அந்தேரியில் தான் கேஸ் ஏஜென்ஸி வைத்திருப்பதாகவும் சமயம் கிடைக்கும்போது தன் கடைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தான். படகு தீவை அடைந்ததும் நாங்கள் சிங் குடும்பத்துடன் சேர்ந்துக்கொள்ள அழைத்தான். பஞ்சாபிகளுக்கே உரிய விருந்தோம்பல் ட்ரை சப்பாத்தி மற்றும் கெட்டி பருப்பு ஆகியவை வற்புறுத்தி சாப்பிட வைத்தான்.

பிறகு மும்பாய் மிஷின் வாழ்க்கையில் கலந்தப்பின் சிங்கை மறந்து விட்டேன்.ஒருநாள் நான் மின்சார இரயிலில் வந்த அலுப்பு தீர ஸ்டேஷன் எதிர்புறம் அருகில் வடாபாவ் தின்றுகொண்டிருந்த போது முதுகில் படீரென்று ஒரு குத்து. திரும்பி பார்த்தால் சிங்.

"என்னப்பா இது, என்னை மறந்துவிட்டாயே", என்று உரிமையுடன் கோபித்துக்கொண்டான்.

"பக்கத்தில் தான் என்னுடைய ஆபிஸ்,. வந்துட்டுப்போ", என்றான்.

இன்னொரு நாள் வரேனே என்ற என் குரல் தன் காதிலேயே விழாததை போல் நடக்க ஆரம்பித்துவிட்டான்.

அப்படித்தான் ஆரம்பித்தது அவன் கடைக்கு செல்லுகிற பழக்கம். வாரத்தில் குறைந்தது மூன்று முறையாவது அவன் கேஸ் ஏஜென்சிக்கு செல்லுவது என்பது பழக்கமாகி விட்டது. சிங் ஒரு முன்னாள் ராணுவ வீரன் என்பதும் அதனாலேயே அவனுக்கு ஒரு கேஸ் ஏஜென்ஸி கிடைத்திருப்பதும் எனக்கு முன்னதாகவே தெரிந்த விஷயங்கள். பிறகு நான் அறிந்து கொண்டது எல்லாம் அவனுக்கு என்னை போல பல நண்பர்கள். அனைவரும் வெவ்வேறு வேலை பார்ப்பவர்கள். அவனது கடையில் எப்போதும் யாராவது நண்பர்கள் இருந்துக்கொண்டேயிருப்பார்கள். சிங் தன்னுடைய ராணுவ வீரபராக்கிரமங்களை ஒவ்வொன்றாக விஸ்தாரமாக கூறிக்கொண்டிருப்பான். இந்தியா-பாகிஸ்தான் போரில் தன்னுடைய குழு தான் முன்னால் சென்றது என்றும் பல பாகிஸ்தானிய நிலைகளை அழித்ததில் தன்னுடைய பங்கு கணிசமானது என்பான் அவன்.


நானும் அவனை தூண்டி பல கேள்விகளை கேட்பேன். ஒரு நாள் கேட்டேன்.

"நீங்கள்ளாம் தாடி வளர்ப்பது ஏன்?",

"ஆண்டவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் உடலில் எந்த பாகமும் வேஸ்ட் என்று தூக்கியெறிய உங்களுக்கு உரிமையில்லை", என்றான் சிங்.

"ஓகோ", என்றேன் கேலியாக நான்.

"அப்படியென்றால் தாடி மீசையை வெட்டி எறிவது போல் நீங்களெள்ளாம் கை காலை வெட்டி எறிவதுதானே", சிங் உணர்ச்சிவசப்பட்டான்.

அதன்பிறகு வரிசையாக எனக்குள் தோன்றிய பல கேள்விகளை என் மனதுக்குள்ளேயே அமுக்கினேன்.

நீங்கள்(மதராஸிகள்) எல்லாம் உடலை வருத்தி வேலை செய்ய லாயக்கு இல்லை. எங்களுக்கு உடல் வலிமை அதிகம் என்பதால் உடலை வருத்தி செய்யும் ராணுவம் போன்ற துறைகளை தாங்கள் தேர்ந்தெடுப்பதாக சிங் அடிக்கடி கூறிக்கொள்வான்.அதற்காக அவன் நம்மை மட்டமாக எண்ணுபவனும் அல்ல. நீங்கள் எல்லாம் முளையை நன்றாக உபயோகபடுத்துகிறவர்கள் என்பான். மதராஸிகள் என்றால் அவன் மனதில் உள்ள சித்திரம் தமிழ் அய்யர்கள் மட்டும்தான் என்று எனக்கு தோன்றியது.

ஓருநாள் இரவு காலாண்டு கணக்கு முடிந்து தாமதமாக மாலையில் திரும்பும் போது சிங் கடை வழக்கத்திற்கு முன்னதாகவே சாத்தி இருந்தது. எல்லோரும் போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கிறார்கள் என்றான் பக்கத்து கடைக்காரன். விசாரித்ததில் அன்று மாலை சிங் கடையில் தனியாக இருந்திருக்கிறான். யாரோ இருவர் கத்தியை காட்டி பணத்தை கொள்ளை அடிக்க முயன்றிருக்கின்றனர். சிங் தனி ஆளாக இருவரையும் புரட்டி எடுத்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போயிருப்பதாக தெரிந்தது. மறுநாள் கடையில் பார்த்து நாங்களெல்லாம் அவனை பாராட்டியபோது அதை ஒரு சாதாரண விஷயமாக அவன் கூறினாலும் மனதினுள் அவன் சந்தோஷப்பட்டதை உணர முடிந்தது.

சிங் கடையில் அக்கவுண்ட பார்த்துக்கொண்டு இருப்பவர்தான் சாமிநாத அய்யர். மும்பாயில் செட்டில் ஆகிய தமிழர்.எனக்கும் நண்பர் ஆனார். பேசவே காசு கேட்கும் நானும், சிங்கும் நெருங்கிய நண்பர்களானது அவருக்கு வியப்பு. பழகும் வரைக்கும் நான் பேசமாட்டேன் ஆனால் ரொம்ப பழகியபிறகு ரொம்பவும் பேசுகிறேன் என்றார் அவர். அது பாராட்டா இல்லை கிண்டலா என்றே புரியவில்லை.

"சிங் வியாபாரத்தில் எப்படி", என்றேன். புத்திசாலிதனமாகவே செய்வதாக சாமிநாதன் கூறியதாகவே நினைவு. இந்த முறை கூட மதுரையில் இருந்து தனக்கு ஏதாவது வாங்கி வரும்படி கூறியிருந்தான். ஆனால் எல்லாம் முடிந்து விட்டது. என் மனைவியும் இரயிலில் தூங்கவில்லை என்று அவள் புரண்டு புரண்டு படுத்ததில் தெரிந்தது.

மும்பாயை அடைந்தவுடன் சாமிநாத அய்யரை போய் விசாரித்தேன்.

"முந்தாநாள் இரவு கடை சாத்தும் நேரத்தில் இரண்டு பேர் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். கடையில் சிங்கும் கடை பையனும் தான் இருந்திருக்கிறார்கள். துப்பாக்கி முனையில் அவர்கள் கல்லாவில் இருந்த பணத்தை கேட்டவுடன் சிங்குக்கு வேறு வழியில்லாமல் போயிருக்கிறது. பணத்தை எடுத்துக்கொடுத்துவிட்டார்"

"எவ்வளவு பணம்"

"வெறும் ஆயிரத்து முன்னூறு ரூபாய்தான்.தொலைகிறது என்று விட்டிருக்கலாம். அவர்கள் திரும்பும் நேரம் ஒருவனை பிடிக்க முயன்றிருக்கிறார். சுட்டுட்டான் மிக அருகிலிருந்து சுடப்பட்டு உள்ளதாக போலீஸ் கூறுகிறது"

",,,,,"

"வெறும் ஆயிரத்து முன்னூறு ரூபாய்க்காக அவசரப்பட்டு விட்டார்"

நான் எதுவும் சொல்லாமல் திரும்பி நடந்தேன் .சிங் வெறும் ஆயிரத்து முன்னூறு ரூபாயை மட்டும் காப்பதற்காக உயிரை விடவில்லை என்று நான் இன்றும் உறுதியாக நம்புகிறேன்.

கபீஷ் மற்றும் குபீஷ்

சமீபத்தில் விஜய் டீவியில் மதன் கமலிடம் விருமாண்டி படத்தை பற்றி பேட்டி எடுத்துக்கொண்டிருந்ததை பார்த்தேன். அப்போது வடஇந்திய பெயர்களின் மேல் சமீபகாலமாக தமிழர்கள் மோகம் கொண்டு இருப்பதை பற்றி கமல் சில வார்த்தைகள் கூறினார். தன் மகள் ஸ்ருதிக்கு கூட மின்னல் என்ற பெயரை வைத்திருக்கலாம் என்று அங்கலாய்த்துக்கொண்டார்.

சற்று சிந்தித்து பார்த்தால் அவர் சொல்வது உண்மை என்றே படுகிறது. நல்ல தமிழ் பெயர்களை வைக்க கூச்சப்படுகிறோமா நாம்? சற்றே சிந்தித்து பாருங்கள் .நம் வீட்டிலோ அல்லது நமக்கு தெரிந்த உறவினர் வீட்டிலோ சமீபத்தில் பிறந்த எத்தனை குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர்களை வைத்துள்ளோம?;. கண்டிப்பாக திரிஷா என்றோ ஷீலா என்றோ பெயர் வைக்கப்பட்ட குழந்தைகள் நிறைய இருக்கும் (போன வருடம் பிறந்த என் மகளுக்கு பெயர் திவ்யா தமிழினி. இதில் திவ்யா என்பது தூய தமிழ் அல்ல என்பதை நான் அறிவேன்)

உசிலம்பட்டியிலும் கொண்டலாம்பட்டியிலும் கூட கபீஷ் மற்றும் கூபீஷ்கள் இருப்பது ஒரு வகையில் கலாச்சார அழிவு என்றே சொல்லத் தோன்றுகிறது. கலாச்சார சீர்கேடு அல்ல.கலாச்சார அழிவு.

இதை உடனே கொச்சைப்படுத்தி தமிழ் வெறி என்று முத்திரை குத்துவதற்கு பதிலாக நமக்கு நம்முடைய பெயர்களின் மேல் உள்ள கூச்சங்களை மறுபரிசீலனை பண்ண வேண்டியது அவசியம். பெயரில் என்ன இருக்கிறது என்ற வறட்டு வாதங்களை தாண்டி குறைந்தபட்சம் தமிழில் இல்லாத எழுத்துக்களை பயன்படுத்தி பெயர் வைக்கமாட்டோம் என்றாவது ஒரு முடிவுக்கு வரலாமே?

ஸ,ஷ என்ற வார்த்தை இருந்தால் அந்த பெயர் மாடர்ன் பெயரா?
அல்லது நல்ல தமிழ் பெயர்களுக்கு பஞ்சமா? தமிழ் அழிகிறது என்று வருத்தப்படும் தமிழ் அறிஞர்கள் நல்ல தமிழ் பெயர்களை பண்டைய இலக்கியங்களில் இருந்தோ அல்லது எங்கிருந்தாவதோ தொகுத்து வெளியிட்டால் என்ன? இதை பற்றி மற்ற தமிழர்களின் கருத்து என்ன என்று அறிய ஆவலாக உள்ளேன்.