Monday, May 15, 2006

மனிதர்களை புரிந்துகொள்வோம்

என் தந்தை வாழ்க்கையில் தமக்கு எதாவது பின்னடைவு ஏற்படும் போதோ,துரோகம் இழைக்கப்படும்போதோ அல்லது ஏமாற்றப்படும் போதோ வழக்கமாக "இதெல்லாம் ஒரு அனுபவம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் கண்ணா, மனிதர்களை புரிந்துகொள்ள இது எல்லாம் ஒரு வாய்ப்பு" என்பார் அடிக்கடி.

ஒருமுறை திருநெல்வேலிக்கு அவர் தேர்வுத்தாள்கள் திருத்தும் பணிக்கு செல்லும்போது என்னையும் அழைத்து சென்றிருந்தார்.ஒரு ஞாயிற்றுகிழமை நாங்கள் ஊர் சுற்றிக்கொண்டிருக்கும்போது பாளையங்கோட்டையில் ஒரு ஆள் தெழுவு விற்றுக்கொண்டிருந்தான்.(கொங்கு சீமையில் இதை நாங்கள் சுண்ணாம்பு தெழுவு என்போம்.கள் மாதிரிதான்.ஆனால் இனிப்பாக இருக்கும். மப்பு எல்லாம் ஏறாது)பழக்க புத்தி காரணமாக விலையை கேட்காமல் வாங்கி குடித்து வைத்தோம். எனக்கு அப்போது வயது பதினாறு.

குடித்து முடித்தவுடன் விலையை கேட்டால் அவன் சொன்ன விலை மிக மிக அதிகமாக இருந்தது.நன்றாக ஏமாற்றுகிறான் என்று தெரிந்தது.ஆனாலும் குடித்தவுடன் பேரம் பேசமுடியுமா? வாயை மூடிக்கொண்டு காசை கொடுத்தோம்.என்னப்பா இப்படி ஆயிடுச்சே? என்றேன் நான்.

அவர் வழக்கம்போல் அவருடைய பொன்மொழியை (அனுபவம்,மனிதனை புரிந்து கொள்வது) ஆகியவற்றை கூறினார்.

"இப்படியே அனுபவத்தை மட்டுமே சேகரித்துக் கொண்டிருந்தால் எப்பப்பா இந்த அனுபவத்தை வைத்து வெற்றிகரமாக வாழ்வது?", என்று கேட்டேன். சற்றே ஜெர்க் ஆன என் தந்தை சுதாரித்துக்கொண்டு இது போன்று சேர்க்கப்படும் அனுபவங்களுக்கு முடிவே இல்லை என்றும் இது ஒரு தொடர்ச்சியான நடைமுறை (ON GOING PROCESS) என்றும் கூறினார்.

ஆனால் அந்த பதிலை சொல்லிய பிறகு சிந்திக்க ஆரம்பித்துவிட்டார். நாங்கள் தங்கியிருந்த கதீட்ரல் மேல்நிலைப்பள்ளிக்கு வந்து ஒரு வகுப்பறையில் சில பெஞ்சுகளை கூட்டிப்போட்டு படுக்கை ரெடி செய்யும்வரை எதுவுமே பேசாமல் யோசித்துக்கொண்டே இருந்த அவர் திடீரென்று நான் ஏதோ ஒரு அரிய கேள்வியை கேட்டுவிட்டது போல் என்னை புகழ ஆரம்பித்தார்.இது ஒரு தொடர்ச்சியான நடைமுறை என்பது எல்லோருக்கும் கிடையாது என்று மட்டும் ஒருமுறை கூறினார்.அன்று அதைப்பற்றி நான் தீவிரமாக சிந்திக்கவில்லை. மறுநாள் காலையில் சீக்கிரமாக எழுந்து தாமிரபரணியில் குளிக்கவேண்டும் என்பதைத்தான் என் மனது நினைத்துக்கொண்டிருந்தது.

ஆனால் ஒரு கழுதை வயது, இரண்டு கழுதை வயது என்றெல்லாம் வயது ஏற ஏற அவர் கூறியது சரி என்பதும் என் கேள்விக்கு அவர் கூறிய பதிலும் மிகமிக நியாயமானது என்றும் எனக்கு புரிந்தது. புரிகிறது. புரிந்துக்கொண்டே இருக்கிறது.

நான் கேட்ட கேள்விக்கு சரியான பதிலைத்தான் கூறிஉள்ளார்.ஆனாலும் அந்த கேள்வியைப்பற்றி அதிகம் ஏன் யோசித்தார்? பிறகு ஒரு மாற்றத்தையும் கூறியது ஏன்?

நானும் யோசித்தேன்.இப்படி இருக்கலாம்.மனிதர்களை அதிகம் நம்ப நம்ப அதிக அனுபவம் நமக்கு கிடைக்கும்.ஒரேயடியாக நம்பாமல் விட்டாலும் வெற்றி கரமான மனிதனாக எதையும் சாதிக்கமுடியாது.

மனிதனின் சமூக வாழ்க்கையை முன்னெடுத்துபோவது மனிதர்களுக்குள் உள்ள அன்பு, நம்பிக்கை,பொறுமை,பயம்,காதல்,போட்டி,பொறாமை,ஈகோ, வயிற்றெரிச்சல், சுயநலம்,ஆதிக்க மனோபாவம் மற்றும் சில குணநலன் கள்தான்.இதன் கூட்டுகாரணிகள் ஒவ்வொரு மனிதனையும் இயக்குகின்றன. ஒவ்வொரு மனிதனின் இவ்வகையிலான செயல்களும் சமுதாயம் பயணிக்க கூடிய திசையினை தீர்மானிக்கின்றன.

இதுவரை சேர்க்கப்பட்ட அனுபவங்களை வைத்து தான் பின்பற்றவேண்டிய கொள்கைகளை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்தி வாழ்பவர்கள் பலபேர். இவர்கள் வாழ்க்கையில் பரிசோதனைக்கு இடமில்லை.

மேலும் மேலும் பரிசோதனைகள் செய்து வாழும் வரை அனுபவங்களை சேர்ப்பவர் சிலபேர்.அந்த சிலபேர்தான் சமுதாயம் பயணிக்க வேண்டிய திசையை தீர்மானிக்கின்றனர்.

இவ்வளவும் யோசித்துத்தான் அப்படி கூறியிருப்பாரா?உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா?

9 comments:

கோவி.கண்ணன் said...

//கண்ணா, மனிதர்களை புரிந்துகொள்ள இது எல்லாம் ஒரு வாய்ப்பு" //
உங்க அப்பா சூப்பர் ஸ்டாரின் ரசிகரா ! :)

Muthu said...

விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் தனக்கு நோபல் பரிசு மூலம் வந்த பணத்தில் பெரும்பகுதியை ஒரு வங்கியில் இட்டுவைத்திருந்தார். அந்த வங்கி திவாலாகி பணம் போய்விட்டது. ஒரு பத்திரிக்கை நிருபர் இதுபற்றிக்கேட்டதற்குச் சொன்ன பதில் கிட்டத்தட்ட தமிழினி முத்துவின் அப்பா சொன்ன பதிலேதான். '...அங்கு பணம் போட்டதிலிருந்து எனக்கு எதுவும் கிடையாமலில்லை, ஒரு புதிய அனுபவம் எனக்குக் கிடைத்தது..'.

ஒரு பழமொழி இங்கு நினைவுக்கு வருகிறது. 'அனுபவம் ஒரு சிறந்த ஆசிரியை, ஆனால் அதற்கான கட்டணம் மிகமிக அதிகம்'.

நன்மனம் said...
This comment has been removed by a blog administrator.
Muthu said...

//உங்க அப்பா சூப்பர் ஸ்டாரின் ரசிகரா ! :) //


சூப்பர் ஸ்டாரையும் ரசிப்பார்...கமல் நல்ல நடிகன் என்பார்...

Muthu said...

//அனுபவம் ஒரு சிறந்த ஆசிரியை, ஆனால் அதற்கான கட்டணம் மிகமிக அதிகம்'//


இது சரிதான் ஜெர்மன்,

ஆனால் நான் எழுப்பிய மற்ற கேள்விகளை நீங்கள் முயற்சி செய்யவில்லை...

பொன்ஸ்~~Poorna said...

அனுபவங்கள் நல்ல ஆசான் தான். ஆனால், அனுபவங்களிடம் கற்றுக் கொண்ட வாழ்க்கைப் பாடத்தை பயன்படுத்துவதற்கும் ஒரு களம் இருந்தால் தான் அனுபவங்களுக்கு மதிப்பு..

அன்றன்றைக்குக் கற்றதை அன்றைக்கே பயன்படுத்தி விடலாம்.. அப்படி பயன்படுத்த முடியாவிட்டாலும், சில நாட்கள் கழித்தாவது பயன்படுத்த வேண்டிய அவசியம், சந்தர்ப்பம் அமையும். அப்படியே அந்த வியாபாரி மாதிரியே இல்லாவிட்டாலும், குறைந்தது அவரின் சில குணங்களுடனாவது நீங்கள் ஒருவரைப் பார்த்திருப்பீர்கள் தானே.. அது உதவும் தானே..?!!

//இது ஒரு தொடர்ச்சியான நடைமுறை என்பது எல்லோருக்கும் கிடையாது என்று மட்டும் ஒருமுறை கூறினார்//
இனிமேல் நான் தெரிந்து கொள்ள எதுவுமில்லை என்று நினைப்பவதுக்கு இது பொருந்தும்.. அவனுக்கும் வாழ்க்கை வெகுகாலம் கழித்து ஏதேனும் ஒரு வழியில், ஒரு அனுபவத்தில் பாடம் வைத்திருக்கும்
ஒரு வட்டத்துக்குள் மட்டும் வாழும் சிலருக்கும் அது மாதிரி மற்றவரின் இயல்பு அறிவதற்கு அவசியம் வராமல் போகலாம்,
இதையெல்லாம் யோசித்து உங்கள் தந்தையார் சொல்லி இருக்கலாம். இல்லையேல், இது போல் அறிந்து பயன்படுத்தும் யாராவது அவருக்கு நினைவு வந்திருக்கலாம்..

Prasanna said...

///இது ஒரு தொடர்ச்சியான நடைமுறை (ON GOING PROCESS) என்றும் கூறினார்.//
கண்டிப்பாக இப்பொ எல்லாம் வித விதமா ஏமாத்த ஆரம்பிச்சுட்டாங்களே!! ஒன்று நீங்கள் அவனுக்கு மேல பெரிய கேடியா இருக்கணும் இல்ல இதெல்லாம் ஒரு அனுபவம்னு எடுத்துகிட்டு போய்டணும்.
//"இப்படியே அனுபவத்தை மட்டுமே சேகரித்துக் கொண்டிருந்தால் எப்பப்பா இந்த அனுபவத்தை வைத்து வெற்றிகரமாக வாழ்வது?///
இது சத்தியமா மேட்டர் உள்ள கேள்வி தான். அதாவது அடுத்தவங்க உங்கள ஏமாத்தும் போது நீங்க ஏமாந்துடுறீங்க. உங்கள விட இளையவர்கள், அல்லது உங்கள மதிப்பவர்கள், இதை பார்த்துட்டு கேள்வி கேக்கும்போது "இதெல்லாம் ஒரு அனுபவம்" அப்படின்னு சொல்லிப்போம். இந்த கேள்வி, "நீங்க எப்போ சுதாரிப்பா, ஏமாறாம இருக்க போறீங்க" அப்படின்னு கேக்குற மாதிரி தோணி இருக்கலாம்.
இல்லை, அந்த பதநீர் (நீங்க தெழுவுனு சொல்லுவீங்க நாங்க பதநீர்னு சொல்லுவோம்) காரன் கிட்ட பேரம் பேசி அவன் செய்த தப்ப தடுத்திருக்கலாம், அல்லது சரியான விலையை குடுத்திருக்கலாம் அப்படின்னு எடுத்துக்கலாம். நம்ம பய இப்பவே இப்படி சிந்திக்கானே பிற்காலத்துல பெரியா ஆளா வருவான் அப்படின்னு சொல்லி பாராட்டி இருப்பார். எப்படியோ கேள்வி கேட்கும், அதிலும் 16 வயதில் கேள்வி கேட்கும் மகனை புகழும் தந்தை ஒரு அதிசயம் தான்.
///ஆனால் ஒரு கழுதை வயது, இரண்டு கழுதை வயது என்றெல்லாம் வயது ஏற ஏற அவர் கூறியது சரி என்பதும் என் கேள்விக்கு அவர் கூறிய பதிலும் மிகமிக நியாயமானது என்றும் எனக்கு புரிந்தது. புரிகிறது. புரிந்துக்கொண்டே இருக்கிறது.///
பதினாறு வயசுல எல்லாத்தையும் புரட்டி போட்டுடலாம் அப்படின்னு தான் தோணும், பின்னால நம்மளும் "இதெல்லாம் அனுபவம்" அப்படின்னு பேசுற நிலைமை வந்துடுது பார்த்தீங்களா.
நான் ரொம்ப சின்ன பையன், எதுனா தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுடுங்க.
பிரசன்னா

Prasanna said...

//இது ஒரு தொடர்ச்சியான நடைமுறை என்பது எல்லோருக்கும் கிடையாது என்று மட்டும் ஒருமுறை கூறினார்//
உங்களுக்குள் ஒரு கில்லர் இன்ஸ்டிங்ட் குடுக்க இப்படி சொல்லி இருக்கலாம், பிரசன்னா

Anonymous said...

life is actually a simultaneous or parallel process of both learning and applying the learnt thought or experimenting with it ! CONSCIOUSNESS in learning as well as applying is important....its like now-you-learn-now-you-experiment situation...and the lessons,they work differently for different people - that that man that that lesson :) -

needless to say, its a delicate process !! and more complicated a topic for a discussion in this media... 'தண்ணி' party-க்கு சரியான topic !

enjoy.