Wednesday, November 08, 2006

ஒரு வருடத்திற்கு பின்

கடந்த முறை சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியையும் சென்னை புத்தக கண்காட்சியையும் பார்க்க சென்னை வந்துவிட்டு நான் எடுத்த முடிவு அடுத்த ஆண்டிற்குள் சென்னையில் செட்டில் ஆகிவிடவேண்டும் என்பதுதான்.

வரும் ஜனவரி சென்னை ஓபன் ( ரஃபேல் நடல் வருகிறாராம்) டென்னிஸ் மற்றும் புத்தக கண்காட்சி நடைபெறும் போது நான் சென்னைவாசி ஆகியிருப்பேன்.அதற்கான பூர்வாங்க பணிகள் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன.

டோண்டுவின் பதிவை பார்த்தவுடன் தான் நானும் பார்த்தேன்.நானும் பதிவுகள் எழுதி சூழலை நாசப்படுத்த ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்து விட்டது. ஏறத்தாழ 165 பதிவுகள் போட்டுள்ளேன். (நீக்கிய பதிவுகளா? அது இருக்கும் ஒரு ஏழெட்டு:).

பல அனுபவங்கள். பல நட்புக்கள்.நிறைவான ஒரு வருடம்.

இடமாற்ற வேலைகளால் கொஞ்சம் பிசி என்பதால் ஒரு மாதம் பதிவுகள் இருக்காது என்று என் லட்சோப லட்ச ரசிகர்களுக்கு(?) அறிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, November 07, 2006

ஏன் திமுக? ஏன் கலைஞர்?

மற்ற கட்சிகளை விட திமுகவையும் மற்ற தலைவர்களை விட கலைஞரையும் ஓப்பீட்டளவில் நான் ஏன் ஆதரிக்க வேண்டி இருக்கிறது என்பதற்கு ஆயிரம் காரணம் சொல்லமுடியும். சில காரணங்களை கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் நான் எழுதி உள்ளேன். சுட்டிகள் கீழே.

1.http://muthuvintamil.blogspot.com/2006/04/1.html

2.http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_05.html

3.http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_06.html

4.http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_07.html

மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கலைஞரால் மீட்டு கொண்டுவரப்பட்டு்ள்ள விவசாய தொழிலாளர்களுக்கு மிகவும் பயன்தரக் கூடிய ஒரு அமைப்பைப் பற்றிய ஒரு தகவலை நான் இங்கு கூற விரும்புகிறேன்.

கடந்த கலைஞர் ஆட்சியில் விவசாய தொழிலாளர் நலவாரியத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 60 வயதிற்கு உட்பட்ட நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் சிறு, சிறு விவசாயிகள் அனைவரும் ரூ.100 - நுழைவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாக சேர்ந்திட வழிவகை செய்யப்பட்டது.

அவ்வாறு உறுப்பினர்களாக சேர்பவர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை விபத்துகால உதவி, இயற்கை மரணத்திற்கான நிதி, ஈமச் சடங்கு நிதி என்று பல்வேறு நலத்திட்ட உதவிகளும் அறிவிக்கப்பட்டன. விவசாயத் தொழிலாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சேர்ந்தனர், 7,35,000 விவசாயத் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து அவ்வாரியத்தில் ரூ.10 கோடிக்கும் மேல் நிதியும் சேர்ந்த நிலையில் - 2001-ம் ஆண்டு சட்டப் பேரவைக்கான தேர்தல் வந்தது.

வழக்கம்போல் ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா தன்னுடைய அதிரடி தடாலடி பாணியில் அந்த அமைப்பையே கலைத்து உத்தரவிட்டார்கள். பலகோடி விவசாய தொழிலாளர்கள் பயன்பெற அமைக்கப்பட்ட அந்த வாரியத்தை கலைத்தது எந்த விதத்தில் நியாயம் என்று விவசாய தோழர்கள் குமுறினார்கள். இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி அந்த வாரியத்தை மீண்டும் அமைத்து கோடிக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் பயன்பெற ஏற்பாடு செய்துள்ளார்.இத்தகைய ஒரு அமைப்பின் தேவையைப்பற்றியும் இதனால் விளையும் பலன்களை பற்றியும் நான் விரிவாக விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இதற்காக திருவாரூரில் நடத்தப்பட்ட விழாவில் பேசிய கருணாநிதி"அறிஞர் அண்ணாவையும், தந்தை பெரியாரையும் நான் சந்திக்காமல் இருந்திருந்தால் நானும் ஒரு கம்யூனிஸ்ட்டாய் உங்கள் தோழர்களில் ஒருவனாய் இந்த மேடையில் அமர்ந்திருப்பேன்'' என்று உணர்ச்சியுறப் பேசியபோது லட்சக் கணக்கில் கூடியிருந்த உழைக்கும் தோழர்கள் மகிழ்ச்சி பொங்கப் பெரும் ஆரவாரம் செய்தார்களாம்.

http://www.keetru.com/anaruna/oct06/mutharasan.html


சன் டிவியில் சம்பாதிக்கிறார்கள், உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்தார்கள் என்றெல்லாம் ஆயிரம் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டாலும் இதுபோன்ற செயல்பாடுகளே நான் கலைஞரை தொடர்ந்து ஆதரிக்க காரணமாக அமைகின்றன.

கலைஞர் மீதான சில குற்றச்சாட்டுக்களை அனைத்து அரசியல்வாதிகளின் மேலும் வைக்கமுடியும் என்பதும் முனை முழுங்கி போன சில குற்றச்சாட்டுக்கள் ஒரு குறிப்பிட்ட சாராரால் மட்டும் மீண்டும் மீண்டும் இவர் மீது வைக்கப்படுகின்றன என்பதை அதன் காரணத்துடன் உணர முடிவதாலும் கலைஞரின் மீதான மதிப்பு என் மனதில் உயரத்தான் செய்கிறது.

Monday, October 30, 2006

கிரிக்கெட்டில் ஆப்பு

மக்களே, நான் இந்த மேட்ச் கழுதையெல்லாம் முழுசா உட்கார்ந்து பாக்கறதில்லை. நானெல்லாம் எப்பவும் இந்த பாவத்துக்கு ஆளாகவே மாட்டேன்.வேற வழியில்லாம சில நேரம் ஹிஹி...


மொகாலியில் மேட்ச்.சாதாரணமாகவே அது வேகபந்துக்கு சாதகமான பிட்ச். இந்த தொடரின் பெரும்பாலான ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது என்ற போதே எனக்கு தெரிந்துவிட்டது நமக்கு ஆப்பு தான் என்று.


ஆசிய அணிகள் எதுவும் அரைஇறுதிக்கு தகுதி பெறவில்லை என்பது தற்செயலா? இல்லை.மற்ற அணிகள் ஆடுகளத்திற்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ள சிறிது அவகாசமே எடுத்துக்கொள்கின்றன.நம் ஆட்களுக்கு அதெல்லாம் இல்லை. எப்பவாவது ஜெயசூர்யா பவுலிங் பிட்ச்சில் ரன் எடுத்திருக்கிறாரா? நம் ஆட்களுக்கு மட்டையாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் வேண்டும்.குறிப்பாக பந்து முட்டிக்கு மேல் எழும்பக்கூடாது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கவே கூடாது.


இந்த டிவி,மீடியா,முன்னாள் வீரர்களின் கூத்து சகிக்க முடியாத அளவு வளர்ந்துக் கொண்டே போகிறது. இதை தடுக்க எவனாவது சட்டம் போடக்கூடாதா?


நேத்து பாருங்க மெக்ராத் எப்பவும் போல் நூல் பிடித்தது போல் பந்து வீச ஆரம்பிச்சாரு.. சச்சின் தடுமாறினாலும் நம்ப காமெண்ட்ரி ஆளுங்களை பார்க்கணுமே.இதோ வெளுக்க போறாரு.வெட்ட போறாரு. கிழிக்க போறாருன்னு ஓரே கூச்சல்.கடைசியில் மெக்ராத் தான் சிரிச்சாரு. அதே ஸ்டைலில் இன்னும் எத்தனை முறை சச்சின் கீப்பர் கேட்ச் தருவாரோ?


சேவாக்குக்கு ரெண்டு பால் பீட் ஆகி கீப்பர் கிட்டே .போகுது. அடுத்த பால்ல தடுமாறி ஒரு காமா சோமா ஷாட் அடிச்சி பவுண்டரி கிடைக்குது.சரியான பிளேஸ்மெண்ட் இல்லை. ஆனா உடனே ஒரு ஆள் சொல்றாரு."அதுதாங்க சேவாக்.கவலையே படமாட்டாரு" இந்த பில்ட் அப் தேவையா? எக்ஸ்டரா கவர்ல ஆள் இருந்திருந்தா அப்பவே டவுசர் கிழிஞ்சிருக்கும்.

எப்பவுமே காயப்பட்டு இருக்கிற அகர்கர், டீமை விட்டு தூக்கற நிலைமை வந்தா மட்டும் ஒன்றிரண்டு அரை சதம் அடிச்சி இடத்தை தக்க வைக்கற யுவராஜ் இவங்க இல்லாட்டி டீமே இல்லையா?டிவி போட்டா எல்லா சேனலிலும் இதுதான் பேச்சு.


விளம்பரம் எல்லாம் ஊ ஆ இந்தியான்னு ஓரே கூச்சல். நடுவில் இந்த கங்கூலி வேற. நீட்டா ட்ரஸ் பண்ணிகிட்டு உட்கார்ந்துகிட்டு குழந்தை மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டு என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்கன்னு கேக்குறாரு.


மொத்தத்துல பவுலிங்கில் பதானும் பேட்டிங்கில் திராவிட்டும் ஜொலிக்க வில்லை என்றால் நம்ம மேட்டர் காலி. என்னது உலக கோப்பையா? ஹிஹி...என்னங்க குறும்பு பண்றீங்க? அது வெஸ்ட் இண்டிஸ்ல நடக்க போகுதுங்க..... கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்.......:))

Friday, October 27, 2006

நெருப்பு நரியில் உங்கள் பதிவு

என்னுடைய பதிவுகளை நெருப்பு நரி உலாவியை உபயோகப்படுத்தி படிக்க முடியவில்லை என்று ஒரு நண்பர் கூறினார்.நேற்று அகஸ்மாத்தாக ஒரு புகழ்பெற்ற பதிவரிடம் பேச நேர்ந்தது.


பிளாக்கரில் வலையேற்றிய பின் அதை right align,left align,justify full ஆகிய ஆப்சன்களை உபயோகப்படுத்தினால் நெருப்பு நரி உலாவியில் படிக்க முடியாது என்றார் அவர்.சோதித்து பார்த்ததில் அது உண்மை என்று அறிந்தேன்.


எத்தனை பேருக்கு இது தெரியும் என்று தெரியவில்லை.தனிபதிவாக இட்டால் பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது.

மதுரை சந்திப்பு விவாதங்கள் 3

சில பேர்(மொக்கையன்) கேட்டது போல் மதுரை வலைப்பதிவாளர் சந்திப்பில் கவிதைகள் எதுவும் படிக்கப்படவில்லை என்பது உண்மைதான்.லிவிங் ஸ்மைலின் காட்டமான கேள்விகள் ஜுவியில் வந்ததைப்பற்றி விசாரித்தேன். அதைப்பற்றி இங்கு உஷா பதிவில் ஒரு விவாதமே நடந்தது எனக்கு அப்போது தெரியாது.அந்த ஜுவி கட்டுரை பொது மக்களிடையே எந்த விதமாக பாதிப்பை ஏற்படுத்தியது? எதிர்வினைகள் என்ன? என்றெல்லாம் கேட்டேன்.அதைப்பற்றி தனக்கு தெரியாது என்றார். பத்திரிக்கைகள் இதை வெறுமனே ஒரு வியாபார விஷயமாகத்தான் பார்க்கின்றன என்று அவர் நினைப்பதாக எனக்கு தோன்றியது.

அப்சல் விஷயத்தை பற்றி பேசும்போது பேராசிரியர் தருமியின் நண்பர் பேராசிரியர் சைலேஸ்(முனைவர்) ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டார். தேசதுரோகிகளை சுட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் ஆவேசப்பட்ட போது எனக்கே உடல் நடுங்கியது.சட்ட நுணுக்கங்கள் சம்பந்தமாக அட்வகேட் பிரபுவும் கவிஞர் சுகுணா திவாகரும் சில கேள்விகளை வைத்தப்போது முனைவர் சைலேஸ் தடுமாறினார்.

பேராசிரியர் தருமியும் அப்சல் தூக்கு விஷயத்தில் ஒரு தீவிரமான நிலைப்பாடு வைத்துள்ளார்.அவர் பதிவுடனோ வி த பீப்பிள் பதிவுடனோ அல்லது பினாத்தலாரின் பதிவுடனோ எனக்கு முரண்பட ஒன்றுமில்லை.ஒரு பிரச்சினையை பாதியில் இருந்து அவர்கள் அணுகுவதாக எனக்கு படுகிறது. ஆகவே அந்த விவாதத்தில் நான் பங்கு கொள்ளவில்லை. அரசியல் நோக்கில் இதை அணுகுவதில் உள்ள சிக்கல்களைப்பற்றி நான் எழுதியுள்ள ஒரு பதிவு இங்கே.

அப்சல் பற்றிய விவாதங்கள் வலைப்பதிவில் மிக நன்றாக நடந்தன என்று தான் எனக்கு தோன்றுகிறது.முதலில் தேசபக்தி ஆறாக ஓடியது.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரச்சினையில் மற்ற பரிமாணங்களும் விவாதத்திற்கு வந்துள்ளது நல்ல முன்னேற்றமாகவே படுகிறது.இஸ்லாமிய எதிர்ப்பு கண்மூடித்தனமாக நம் மனதில் நிறைந்துள்ளது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.இது பி.ஜே.பி ஆட்சியில் திட்டமிட்டு பரப்பப்பட்ட விஷம பிரச்சாரமா அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மேல் உள்ள கோபத்தினால் வந்ததா என்று தெரியவில்லை.இதன் இரண்டின் கூட்டு கலவை தான் இது என்று நினைக்கிறேன்.அதே போல் காஷ்மீர் பிரச்சினையை பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் பலர் இருப்பதை உணர முடிகிறது.வெகுஜன மீடியா என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இதன்மூலம் நம்மால் புரிந்துக்கொள்ளமுடியும்.

சரி மீட்டிங்குக்கு வருவோம்.அட்வகேட் பிரபு ராஜதுரையும் ராமும் பல காலமாகவே தமிழ் இணையத்தில் பங்கு பெற்று வருகிறவர்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ராம் சீரியஸாக எதுவும் எழுதுவதில்லை என்றார். சே குவாராவை பற்றி உணர்ச்சி வசப்பட்டு அவர் சில வார்த்தைகள் பேசினார்.

ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இடதுசாரி கருத்தாக்கங்களை பற்றி பொதுவில் பேச தயங்கும் பலரும் தனிப்பட்ட முறையில் பேசும் போது அதைப்பற்றி பேசுவதும் தெரிந்து வைத்திருப்பதும்தான்.

அட்வகேட் பிரபு அதிகம் வலையுலகில் எழுதுவது இல்லை என்றாலும் தொடர்ந்து வலையுலகை படித்து வருவது அவர் பேச்சில் இருந்து புரிந்துக்கொள்ள முடிந்தது.மரத்தடி காலத்தில் இருந்து இன்றுவரை தமிழ் இணையத்தில் இயங்கி வரும் சிலரில் அவர் முக்கியமானவர் என்று தோன்றியது.மரத்தடி காலம் என்று தருமி சிலாகித்தது கொஞ்சம் ஓவரானது என்பது என் கருத்து.அப்போதும் பிரச்சினைகள் இருந்தன என்பதுதான் என் புரிதல்.பங்கு பெற்றோர் எண்ணிக்கை, பேசப்பட்ட விஷயங்களை பொறுத்து கூடக்குறைய இருக்கலாமே தவிர கருத்து மோதல்கள் இருக்கத்தான் செய்தன.

வலைப்பதிவுகளினால் சமூகத்திற்கு பயன் என்ன என்ற தருமியின் கேள்வி முக்கியமானது. இது ஒரு சுதந்திரமான வெளி. எந்த விதமான தடங்கலும் இன்றி உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உங்களுக்கு இருக்கும் சுதந்திரம் தான் இங்கு முக்கியம். யார்,எதை எழுதவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இங்கு நொறுக்கப்படுகின்றன என்பதை வைத்துத்தான் இதை புரிந்துக்கொள்ளமுடியும்.


(தொடரும்)

Thursday, October 26, 2006

MADURAI MEET VIDEO 2

மதுரை சந்திப்பின் வீடியோ இங்கே

http://kuttapusky.blogspot.com/2006/10/photobucket-video-and-image-hosting.html


கருத்துக்களை அங்கேயே எழுதவும். பீட்டா குளறுபடியால் அந்த பதிவு தமிழ்மணத்தில் லிஸ்ட் ஆகவில்லை.

Wednesday, October 25, 2006

திமுகவை வீழ்த்த கேப்டனுக்கு யோசனை

விஜயகாந்த் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசிவிட்டதாக சில விமர்சனங்கள் பார்த்தேன்.தன்னை பார்த்து குடிகாரர்,குடித்துவிட்டு உளறுபவர் என்று ஒருவர் விமர்சித்தால் அதை மறுத்து இவர் எனக்கு ஊற்றி தந்தாரா என்று கேட்க அவருக்கு உரிமை உள்ளது என்றுதான் எனக்கு தோன்றுகிறது.பேச்சுக்கு பேச்சு சில நேரம் தேவைதான். குடிகாரன் என்று திட்டுவதை எல்லாம் கேட்டுக்கிட்டு இளிச்சிகிட்டு இருக்க முடியுமா என்ன?

கள்ளுக்கடை விவகாரத்தில் விஜயகாந்தை ஆதரிப்பது என் தார்மீக கடமை.(பழைய பதிவை பார்க்கவும்)

இப்போதைக்கு நான் முதலிலேயே கூறியது போல் விஜயகாந்த் வளர்ச்சி அதிமுக வாக்குவங்கிக்கு தான் ஆப்பு விழுந்துள்ளது. ஏனெனில் கவர்ச்சி அரசியல் கவர்ச்சி அரசியலைத்தான் பாதிக்கமுடியும். ஒரு புனித பிம்பம் இன்னொரு புனித பிம்பத்தைத்தான் அமுக்க முடியும்.ரொம்ப சுலபமாக கணக்கு இது.ஆயினும் நான் எதிர்ப்பார்த்த அளவு (விரும்பினேனா என்று சொல்ல முடியாது) வெற்றி விஜயகாந்திற்கு கிடைக்கவில்லை என்றுதான் நான் சொல்லுவேன். சட்டமன்ற தேர்தலை வைத்து பார்க்கும்போது அவர் உள்ளாட்சி தேர்தலில் இன்னும் கொஞ்சம் ஓட்டு வாங்குவார் என்று நினைத்தேன்.

சினிமா நெருங்காத பல மக்களுக்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் தெரியும்.திமுகவும் பிடிக்காமல் அதிமுகவும் பிடிக்காமல் உள்ளவர்கள் என்று ஏதோ பலகோடி இருப்பதாக நினைப்பதும் அவர்களை பிடித்து ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைப்பதும் கனவுதான். எனக்கு தெரிந்து அப்படி எல்லாம் எதுவும் இல்லை.அப்படி இருந்திருந்தால் காங்கிரஸ் இன்னேரம் வென்றிருக்க வேண்டும்.வளர்ந்திருக்க வேண்டும்.எப்போதும் ஒரு இருபது சதவீதம் பேர் ஓட்டு போடுவதில்லை.ஏதாவது சட்ட திருத்தம் வந்து, தொழில்நுட்பம் வளர்ந்து நூறு சதவீத ஓட்டுப்பதிவு வரும்போது அதை பார்க்கலாம்.

ஜோ கூறிய கலைஞர் எதிர்ப்பு ஓட்டு வங்கி என்று ஒன்று உள்ளது. எம்.ஜீ.ஆரின் கவர்ச்சி அரசியலினால் வளர்க்கப்பட்ட இந்த வாக்குவங்கியின் இருப்பே கலைஞரின் வாக்கு வங்கி என்று ஒன்று இருப்பதை காட்டுகிறது.அதை அசைத்து திமுக ஓட்டு வங்கியை அசைக்க விஜயகாந்திற்கு ஒரு வழி சொல்லுகிறேன். சுலபமான வழி. புனித பிம்பங்களை விட்டு விலகினால் போதும்.வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளை மட்டும் நம்பாமல் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள படித்த, இன உணர்வுள்ள இளைஞர்களை நிறைய கட்சிக்கு கொண்டு வந்து களப்பணியாற்ற வைக்க வேண்டும்.(இது கொஞ்சம் ஓவரான எதிர்ப்பார்ப்பு தான் என்று தெரிகிறது.என்ன செய்ய?)

இடஒதுக்கீடு, இலங்கை பிரச்சினை, மொழி உணர்வு ஆகியவற்றில் தன்னுடைய கருத்து என்ன என்பதை கொஞ்சம் தெளிவாக எடுத்து வைத்து உள்கட்சி ஜனநாயகத்தை வளர்ப்பது, கட்சி அதிகாரத்தில மற்றவர்களுக்கும் பங்கு கொடுப்பது என்றெல்லாம் செய்தால் திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி கூட விஜயகாந்தை ஆதரிக்கலாம்.யார் கண்டது?

இந்தியை எல்லாரும் படிக்கணும்னு வாந்தி எடுத்தாராம் ஒரு முறை.இது மூலம் அவருக்கு எத்தனை ஓட்டு கூடுதலாக கிடைத்தது என்று பார்க்கவேண்டும் அவர். இன்று இந்தியை நம்பினால் தான் வாழமுடியும் என்ற தேவை நம் நாட்டில் சுத்தமாக ஒழிந்தே விட்டது. விஜயகாந்த் இங்கு திருந்தவேண்டும்.

ஊருக்கு ஊர் ஊழல் ஒழிப்பு இயக்கம் என்று ஒன்றினை ஏன் விஜயகாந்த் ஆரம்பிக்கக் கூடாது? தனது கட்சியினரை வைத்து தாலூக்கா ஆபிஸ், ஆர்.டி.ஓ ஆபிஸ் முதற் கொண்டு எல்லா இடங்களிலும் ஊழலை ஒழிகக நடவடிக்கை எடுக்கலாமே?பெட்டிசன்போடுவது,உண்ணாவிரதம் இருப்பது, மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது என்பது போல் இந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் இருக்கவேண்டும்.

விருத்தாசலத்தை ஒரு மாதிரி தொகுதியாக ஆக்கிக்காட்ட வேண்டும்.இது சுலபமாக வேலைதான்.

அதிமுகவிலும் திமுகவிலும் சம்பாதிக்க முடியாதவர்கள் இன்று தேமுதிகவில் சேருகிறார்கள் என்ற அவபெயரை நீக்கவேண்டும்.

//தமிளன், தமில்மொலி என்றெல்லாம் அடிக்கடி முழங்கியவர்தான் அவர். தம் மகனுக்கு பிரபாகரன்(விடுதலைப்புலி தலைவர் நினைவாக) என்று பெயர் வைத்துள்ளவர்தான் அவர்.ஆனர்ல இதை இன்று உரத்து கூறினால் அவருக்கு சப்போர்ட் செய்துவரும் ஒரு குறிப்பிட்ட லாபி ஆதரவை வாபஸ் வாங்கலாம்.( தினமலர் வகையறாக்கள்). ஆனால் ஓட்டு போடும் மக்களுக்கு சில முக்கிய விஷயங்களி்ல் இவர் கருத்து என்ன என்று தெரிவிப்பது மிகவும் அவசியம். //

செய்வாரா விஜயகாந்த்?

மதுரை சந்திப்பு - 1

இந்த பதிவை பார்த்திருப்பீர்கள்.மதுரையில் வலைப்பதிவாளர் சந்திப்பு என்ற எண்ணத்தை செயலாக்க உதவிய பேராசிரியர் தருமி அவர்களுக்கு நன்றி கூறி இந்த சந்திப்பை பற்றிய என் கட்டுரையை தருகிறேன்.

முன்கூட்டி திட்டமிடப்படாத சில பயணங்களால் இந்த சந்திப்பில் நான் கலந்துக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவானது.(அதைக்கூட கிசுகிசுவா எழுதினாங்களாமே? ஏண்டாப்பா அம்பிகளா இது நியாயமா?)கலந்துக் கொண்டவர்கள் லிஸ்ட் தருமி கொடுத்துள்ளார்.பத்து நாட்களாக பேருந்து,மற்றும் ரயிலிலேயே வாழ்ந்துவந்த நான் சரியான நேரத்தில் மதுரையில் இருப்பது போல் பார்த்து கலந்துக்கொண்டேன்.

வலைப்பதிவில் புதியதாக அறிமுகமாகி சிறப்பாக எழுதிவரும் ராஜ்வனஜ் கோவையிலிருந்து இதற்காகவே வந்தது எங்களுக்கெல்லாம் சந்தோஷத்தை கொடுத்தது.அவர் அதிகம் பேசவில்லை.எழுத்துதான் என் ஆயுதம் என்று மென்மையாக கூறுகிறார் மனிதர்.

மதுரை மாப்பிள்ளைகள்(ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம் என்று எண்ணம்) லிஸ்ட்டில் கடைசியாக சேர்ந்திருக்கும் மகேஷ் என்னை தூரத்தில் பார்த்தே அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்.எனக்கு அவர் என்று ஊகிக்க முடியாததால் மையமாக தலையாட்டி சிரித்துக்கொண்டிருந்தேன். அவராக தன் பெயரை சொல்லுவார் என்று ஐந்து நிமிடம் காத்திருந்தும், பேசியும் மனிதர் வாயை திறக்காததால் நானே கேட்க வேண்டியதாயிற்று(எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரி நடிக்கறதுன்னு வடிவேலு சொல்லுறது ஞாபகம் வருதா).

மீட்டிங் துவக்கத்திலேயே எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது.நான் பாதியில் கிளம்பி விடுவேன் என்றார் மகேஷ்.என்னங்க அப்படி ஒரு வேலை? மீட்டிங் முடிஞ்சு பார்க்கக்கூடாதா என்றேன்.இல்லை ரொம்ப நேரம் பிடிக்கும் என்றார்.போகவில்லை என்றால் ஆட்கள் இங்கேயே வந்துவிடுவார்கள் என்று சீரியஸாக கூறினார்.அப்போது தான் எனக்கு மென்பொருள் தொழிலின் மகத்துவமும் முக்கியத்துவமும் புரிய மெளனமானேன்.

கடைசியாக அவர் கூறிய ஆட்கள் வந்தார்கள்.மாமா ஓடி வாங்க படத்தை போட்டிருவான் என்றார் ஒருவர்.விசாரித்ததில் தொடர்ந்து இரண்டு ஷோ (வரலாறு மற்றும் தர்மபுரி) பார்க்க அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.என் பார்வையை புரிந்துக்கொண்ட அவர் அவரை அழைக்க வந்தவர்கள் ஏற்கனவே இரண்டு காட்சியை பார்த்துவிட்டு அடுத்த இரண்டு காட்சிகளையும் பார்க்க காத்திருப்பவர்கள் என்றும் தானெல்லாம் சும்மா என்றும் விளக்கினார்.ஆகா மக்களே,குப்பனுக்கும் பூவாயிக்கும் கண்ணாலம் அதுவும் அஜீத் நல்லாசியுடன் என்று மதுரையில் வீதிக்கு வீதி ஏன் போஸ்டர் அடிக்கிறானுங்கன்னு இப்ப புரியுதா?

ஞானவெட்டியான் அய்யா, அட்வகேட் பிரபு, ராகவன், வித்யா,பேராசிரியர் தருமி,ராம்,வரவணையான்,கவிஞர் சுகுணா திவாகர் என்று வந்திருந்த எல்லாருமே வி.ஐ.பிகள் தான்.

ராகவனின் வருகை தருமி பதிவில் கூறியிருந்தது போல் எங்களுக்கெல்லாம் ஒரு சர்ப்ரைஸ் தான்.சீக்கிரமே கிளம்பிவிட்டார்.

(அப்சலை பற்றிய சூடு பறந்த விவாதம் உள்பட மற்றவை அடுத்த பதிவில்)

Wednesday, October 11, 2006

வலைப்பதிவாளர்களுக்கு ஒரு அறிவிப்பு

தீபாவளி சமயத்தில் மதுரையில் வலைப்பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்று நினைத்துள்ளோம். வழக்கமான வலைப்பதிவு சந்திப்புகளின் போது அறிமுகம் மற்றும் அரட்டை என்ற நிகழ்ச்சிகள் தான் இருக்கும்.இதை தாண்டி கவிதை,கட்டுரை என்று அமைத்து இந்த நிகழ்வை ஒரு மறக்கவியலா நிகழ்வாக ஆக்க எண்ணியுள்ளோம்.கண்டிப்பாக கவிதை நான் எழுத போவதில்லை.யாரும் பதட்டப்பட தேவையில்லை.

பேராசிரியர் தருமி, லிவிங் ஸ்மைல் வித்யா, வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, கவிஞர் சுகுணா திவாகர்,நண்பர்கள் வரவணையான்,ராம்,எம்.எஸ்.வி முத்து மற்றும் நான் கண்டிப்பாக கலந்துக்கொள்வோம் என்று நினைக்கிறேன்.அய்யா ஞானவெட்டியான் அருகில் திண்டுக்கல்லில் இருப்பதால் அவரும் வருவார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

இந்த மாதம் 20 லிருந்து 24 வரை இருக்கபோகின்ற விடுமுறை காலங்களில் மதுரையில் இருக்கும் நண்பர்கள் மற்றும் மற்ற ஊர்களில் இருந்தும் வர இயலும் நண்பர்களும் அன்பர்களும் மதுரை சந்திப்பில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.வர விரும்பும் நண்பர்கள் பேராசிரியர் தருமியை தொடர்பு கொள்ளவும்.DHARUMI2@GMAIL.COM.சரியான நாளும் நேரமும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும்.

வலையுலகில் முதல் முயற்சியாக இந்த வலைப்பதிவு சந்திப்பை கேமராவில் பதிவு செய்து வலையேற்ற எண்ணியுள்ளோம்.நன்றி.
bloggers meeting in temple city madurai

Tuesday, October 10, 2006

தெரியாது..தெரியாது..தெரியாது

நண்பர் செல்வனுக்கு என் கேள்விகள் என்ற பதிவில் நண்பரின் எதிர்வினைக்குஎன் பதில்கள்.சுவாரசியமானது.படிக்காமல் இருந்துவிடாதீர்கள். நன்றி.

//தலைப்பை பார்த்ததும் பகீரென்றது. என்னை தீவிரவாதி என்பதெல்லாம் நியாயமா?:-)//

கண்டிப்பாக நியாயமில்லை. அல்-கொய்தாவின் படத்தை போட்டு நீங்கள் ஒருவரை எழுதும்போது இது உங்களுக்கு சாதாரணமாகத்தானே இருக்க வேண்டும் என்று நினைத்துத்தான் போட்டேன்:))).
அந்த வார்த்தை சொன்னா அப்படி வலிக்குதா செல்வன்? இதே தான் அனைவருக்கும்.சொல்வதற்கு முன் யோசிக்கணும்.....

//ஏதோ பெரிய பொறி வைத்திருக்கிறீர்கள் போலிருக்கு:)//

பொறி அங்கேயே வெச்சாச்சு. எப்போது தமிழ் ஈழம் அமைவதை ஆதரிக்கறேன்னு நீங்க சொன்னீங்களோ அங்கேயே சிக்கியாச்சு.( மசால் வடை எலி ஞாபகம் வருதா:))


//"பொதுவாக தேசியவாதிகள்" என்பதெல்லாம் எனக்கு தெரியாது. அது உங்கள் பார்வை, உங்கள் கருத்து. எனக்கு தெரிந்த தேசியவாதிகள் காமராஜர், கக்கன், எம்ஜிஆர் மாதிரி பெரியவர்கள் தான். சரி அதை விடுங்கள்....//

காமராஜர்,கக்கன்,எம்.ஜீ.ஆர் எல்லாம் தேசியத்தை பற்றி என்ன சொன்னார்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா? கூகிளில் பார்த்து எடுத்து போடவும். நானும் தெரிந்துக்கொள்கிறேன்.

//தமிழீழம் அமையவேண்டும் என ஆசைப்பட்டால் எப்படி தீவிரவாதி ஆவேன்?ஆயுதம் ஏந்தி அப்பாவிகளை கொன்றால் தான் தீவிரவாதி ஆவேன். ஆக முதல் கேள்வி தப்பு//

அப்படியா? எனக்கு இது தெரியவே தெரியாது. இலங்கை ராணுவத்திலும் போலீசிலும் அப்பாவிகளே கிடையாதா செல்வன்?(கேட்க குரூரமாக இருந்தாலும் இதுதான் இங்கே கேள்வியே)

//.இரண்டாம் கேள்விக்கு பதில் அவ்வளவு விவரமாக ஈழம் பிரச்சனை பற்றி எனக்கு தெரியாது,//

//ஏன் புலிகள் ஆயுதம் தூக்கினர் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. //

//இலங்கை ஏன் புலிகளுடன் பேசுகிறது என கேட்டால் அதுவும் தெரியாது//

//சமாதானம் ஏற்பட பேசுவதாகவோ அல்லது நார்வே நிர்பந்தத்தில் பேசுவதாகவோ இருக்கலாம்.//

தெரியாது.

தெரியாது.

தெரியாது.

தெரியாது.

என்னதான் தெரியும்? :)))
ஏற்கனவே இடஒதுக்கீடு பற்றிய உங்கள் ஜல்லி கருத்து ஒன்றில் இடஒதுக்கீடு பற்றி எல்லாம் எனக்கு தெரியாது என்று சொன்னீர்களே? ஞாபகம் உள்ளதா?

என்னது? அதுவும் தெரியாதா? சரி சரி.....:)))

//இலங்கையின் இறையாண்மை எக்கேடு கெட்டால் எனக்கென்ன?//

அப்படி போடுங்க ...இதுதான் உலகத்தின் புதிய கடவுளின் கருத்துக்களா? பேஷ்,..பேஷ்..

//இந்திய ஒருமைப்பாடு பற்றி தான் கவலைப்பட முடியுமே அன்றி இலங்கை, ஜப்பான், கொரியா இறையாண்மை குறித்தேல்லாம் எனக்கு எந்த கவலையும் கிடையாது.தமிழன் வாழவேண்டும், இந்தியன் உயரவேண்டும் அவ்வளவுதான்//

புல்லரிக்குதுங்க...பொதுவாக எல்லா வினைக்கும் தனிப்பதிவு போட்டு கலாய்ப்பீங்க.அதுதான் நானும் போட்டுட்டேன்:))))) படிச்சுட்டு, தெரிஞ்சுகிட்டு எழுதுங்கதல..நம்பஆளுங்க கைதட்டரானுங்களேன்னு மட்டும்எழுதிடாதீங்க... மேசமான பய புள்ளைங்க.. கவுத்துருவானுங்க...
ஹிஹி....

தமிழ் தீவிரவாதியாகிறார் செல்வன்

கேள்வி:ஈழம் பெறுவது உங்களுக்கு உடன்பாடா என்று மட்டும் சொலலுங்கள் செல்வன்.மற்றதை பிறகு பார்ப்போம்.

பதில்: ஈழம் அமைந்து ஈழத்தமிழர் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. முத்தையா முரளிதரன் தலைமையிலான தமிழீழம் கிரிக்கட் அணியை திராவிட் தலைமையில் உள்ள கிரிக்கட் அணி யாழ்ப்பாணத்தில் மோதி ஜெயிக்க வேண்டும். அதை நான் கண்குளிர பார்க்க வேண்டும்:-)

நண்பர் செல்வனின் பதிலை மேலே பார்க்கிறீர்கள். இப்போது நண்பர் செல்வனுக்கு சில கேள்விகளை கேட்க கடமைப்பட்டவன் ஆகிறேன்.

1.பொதுவாக தேசியவாதிகளின் ஜல்லி இலங்கை அரசியல் சட்டத்திற்குட்பட்டு இலங்கை தமிழர் பிரச்சினை தீரவேண்டும் என்பதாக இருக்கும்.நீங்கள் ஈழம அமையவேண்டும் என்று ஆசைப்பட்டால் நீங்கள் தமிழ் தீவிரவாதியா?

2.ஈழ தமிழர்கள் நேற்று முடிவு செய்து இன்று சண்டை ஆரம்பிக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?எந்தவிதமான அடக்குமுறைகளை (அரசியல்ரீதியாக,மொழிரீதியாக, பண்பாட்டுரீதியாக)அவர்கள் எதிர்க் கொண்டார்கள் என்பதைப்பற்றி தெரியுமா?விடுதலைப்புலிகள் என்ற சக்தி அங்கு இல்லாமல் இருந்திருந்தால் ஈழ பிரச்சினையில் தமிழர் குரல் எடுபட்டிருக்குமா?இன்னும் தெளிவாக போடுவோம்.ஆயுதம் சார்ந்த வன்முறையினால்தான் தமிழரின் குரல் இந்த அளவாவது எடுபடுகிறது என்பதை கவனித்துள்ளீர்களா?பிரேமதாசாவை கொன்றதாக கூறப்படுகிற இன்னும் பல கொலைகளை செய்த விடுதலைபுலிகளுடன் அரசாங்கம் ஏன் பேச்சுவார்த்தை நடத்துகிறது?இந்திய முதலி்ல் அனைத்து வகையிலும் ஆதரித்ததாக சொல்கிறார்களே? கேள்விப்பட்டுள்ளீர்களா?

3.ஈழம் அமைவது தான் உங்கள் ஆசையாக இருக்கும் பட்சத்தில் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

உடன்போக்கு அரசியலை விட்டு விலகி கருத்துக்களை ஆணித்தரமாக வைக்க வேண்டுறேன்.இலங்கை ராணுவம் வென்றால் இலங்கை இறையாண்மை காப்பாற்றப்பட்டது என்று சந்தோஷப்பட்டும் ஈழம் கிடைத்தால் தமிழனுக்கு வெற்றி என்றும் கூறி சந்தோஷப்படுவதும் அறிவார்ந்த நாணயம் ஆகாது என்பது என் தாழ்மையான கருத்து.நன்றி.
LTTE TAMIL EELAM INDIA NATIONALISM

Monday, October 09, 2006

Poetic (in)Justice

Michael Schumacher, Alonso, Formula One Car Racing

நேற்று நடந்த ஐப்பான் கிராண்ட்ப்ரீயி்ல் நடப்பு சாம்பியன் அலான்சோ வெற்றி பெற்றார். ஆக இதன்மூலம் அடுத்து நடக்கவிருக்கும் பந்தயத்தில் ஒரு புள்ளி பெற்றாலே (ஒரு வேளை சுமேக்கர் வென்றாலும்) அலான்சோ சாம்பியன் பட்டத்தை வெல்லமுடியும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.

என்னை போன்ற சுமேக்கர் ரசிகர்களுக்கு இது ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும் அலான்சோவையும் பாராட்டவேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வருட சீசன் ஆரம்பத்தில் அலான்சோ முன்னணியில் இருந்தார். சுமேக்கருக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை தான் இருந்தது.

ஆனால் தீடிரென்று சுமேக்கர் தொடர்ந்து சில போட்டிகளில் வென்றார். பார்முலா ஒன் அமைப்பாளர்களே பெராரிக்கு ஆதரவாக சில வேலைகளை செய்வதாக முணுமுணுப்புகள் எழுந்தன.டேம்பனர்(Dampener)என்ற ஒரு பொருளை வண்டியில் இருந்து விலக்கச்சொல்லி ரெனால்ட் கம்பெனிக்கு போட்டி அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டது விமர்சிக்கப்பட்டது.

அதன்பிறகு நடந்த சில போட்டிகளில் சுமேக்கர் வெற்றிபெற்றார். நேற்றைய போட்டியிலும் சுமேக்கர் இன்சின் புகைவது வரை அவர் போட்டியில் முன்னணியிலேயே இருந்திருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக இன்சின் அவரை கைவிட்டுவிட்டது. 2000 ம் ஆண்டுக்கு பின் அவர் இன்சின் பெயிலியர் ஆனது இப்போது தான்.பார்முலா ஒன் காரில் எத்தனையோ ஆயிரம் பாகங்கள் இருக்கிறதாம்.அத்தனையும் சரியாக வேலை செய்தால்தான் கார் முழு போட்டியையும் தாங்குமாம்.எப்படியும் மூன்று சதவீதம் பாகங்களில் பிரச்சினை வந்தே தீருமாம்.சுமேக்கருக்கு விதி விளையாடி விட்டது.

யார் கண்டது? அடுத்த போட்டியில்(பிரேசில் கிராண்ட்ப்ரி) மீண்டும் எதிர்பாராரது எதாவது நடக்கலாம்.சுமேக்கர் ரசிகனாக இருந்தாலும் நான் அலான்சோ ஜெயிக்க வேண்டும் என்றே இப்போது விரும்புகிறேன்.

முத்துவின் பம்மல்-commoncivilcode-curfew

ஓகை என்ற நண்பர் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் "அப்சலை தூக்கில் போட்டால் தான் நீ தேசபக்தன் என்று நீங்கள் கூறினால் அவனை தூக்கில் போடு என்று சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்", என்று நான் கூறியதை வைத்து "அவர்"(குறித்திருக்கும் ஆளுமையை சொன்னால் நண்பர் வருத்தப்படுவார் என்பதால்) பாணியில் சுற்றி வளைத்து எழுதியிருக்கிறார்.

தேசதுரோகியாக கூடாது என்று முத்து ஆசைப்படுகிறார் என்பதும் ஆனால் அவரது முந்தைய பதிவுகளை படித்திருப்பவர்களுக்கு ஆச்சரியாக இருக்கும் என்றும் ஒரு கண்டுபிடிப்பு வேறு.எந்த என்னுடைய முந்தைய பதிவில் தேசதுரோக கருத்துக்கள் இருக்கின்றன என்று தெரிந்துக்கொள்ள எனக்கு ஆசை ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு பல புதிய கேள்விகள் எழுகின்றன.ஜெய்ஹிந்த என்பதை கண்ட இடத்தில் வாந்தி எடுப்பதை எதிர்த்து நான் எழுதியதை மட்டும் வைத்து நண்பர் இதை கூறியிருக்க மாட்டார் என்ற நம்பிக்கை உங்களை போலவே எனக்கும் இருக்கிறது.நல்லவேளை திராவிட தளத்தில் எழுதுபவர்கள் எல்லாம் தேசதுரோகிகள் என்று சொல்லவில்லையே என்று ஆசுவாசப்படுகிறேன்.

அப்சலை தூக்கில் போடுங்கடா என்ற வசனத்தின் பின்னணியில் என் கருத்தை உருவாக்க நீங்கள் கடைபிடிக்கும் வழி முறையின் மீதான என் விமர்சனத்தைத் தான் நான் குறிந்திருந்தேன் என்பது படிப்பவர்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.மேற்கண்ட நண்பரின் கட்டுரையும் இதற்கு ஒரு சான்று.

நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு புறம்.தன்னிடம் வைக்கப்பட்ட வாதங்களை வைத்து நீதிமன்றம் சட்ட விதிகளின்படி ஒரு தீர்ப்பு தருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை அப்சலின் பங்கு தூக்கு தண்டனை தரத்தக்கதா என்பதை விவாதிப்பது ஒரு தனிப்போக்கு.நல்லடியார் அந்த புள்ளியை தொட்டிருந்தார்.தடா என்ற சட்டத்தின்படி இந்த வழக்கு நடைபெற்றிருக்கிறது.

சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர்கள் அதைப்பற்றி நிறைய பேசலாம். இதற்கு முன்பு கிலானியை தூக்கில் இட ஒரு விசாரணை நீதிபதி தீர்ப்பு கூறியிருந்தார். அந்த நீதிபதிக்கு ஹேங்கிங் ஜட்ஜ் என்பது பட்ட பெயராம். பிறகு செய்யப்பட்ட மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றத்தில் கிலானி மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டார் (பார்க்க :ரோசாவின் பொதுபுத்தியை பற்றிய பதிவு).உறுதிப்படுத்தப்படவில்லை என்பதற்காகத்தான் அவர் தப்பித்தார் (நம்முடைய சவார்க்கர் காந்தி கேசில் விடுவிக்கப்படடதை போல்) என்றாலும் அந்த சுட்டியில் எப்படி நிரூபிக்கப்படவில்லை என்பதற்கான விளக்கம் இருக்கின்றது. அதையும் படிக்கலாம்
.

இப்போதைய விவாதங்கள் அப்சலுக்காக கேட்கப்பட்டுள்ள மன்னிப்பு பற்றியது.போன பதிவில் நான் கூறிய புள்ளியை சைடுவாக்கில் தொட்டு உஷா எழுதிய அரசியல் குற்றங்கள் என்ற கருத்தாக்கத்தை அதன்பிறகு பார்க்க நேர்ந்தது.உஷா கூறிய வாதம் பாதிவரை சரியானதுதான் என்பதுதான் என் கருத்து.ஆனால் உஷா எழுதிய காரணம் கருத்தை சுருக்கிவிடுகிறது.இந்த பொதுமன்னிப்பு விவகாரத்தில் அரசு என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இநத விவகாரத்தில் நீண்ட காலநோக்கில் அது ஏற்படுத்தும் விளைவுகள்.

மேலும் நண்பர் ஓகை ராஜதுரை எழுதிய ஷரியா சரியா என்ற கட்டுரையை மேற்கோள் காட்டி இப்படியாக ஷரியாவை ஆதரிக்கும் ராஜதுரையின் கருத்தை ஆதரிக்கும் முத்துவை பாரீர் என்கிறார்.நண்பர் பிரபு ராஜதுரையின் கட்டுரையையும் படித்தேன்."அடப்பாவிகளாஅவரையும் தீவிரவாதி லிஸ்ட்டில் சேர்த்துட்டீங்களாடா" என்று விவேக் போல சொல்லத் தோன்றுகிறது. ( டா விகுதி நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டது)

ஆனால் ஒரு குழப்பமான போக்காக இன்று வரை பொது சிவில் சட்டம் என்பதில் எனக்கு ஒரு உடன்பாடான போக்குத்தான் இருக்கிறது.ஆம்.பிரபு ராஜதுரையின் கட்டுரைக்கு பிறகும்.ஆனால் சில சந்தேகங்கள் தோன்றிஉள்ளன.குறிப்பாக திருமணம் விவாகரத்து ஆகிய நிகழ்வுகளுக்குப்பின் மதத்தைப்பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுபரிசீலனை ஏற்பட்டால் வரும் நிலைமைகளை பொறுத்து.அவருடன் பிறகு கேட்டுக்கொள்ளலாம்.

கடைசியாக இன்றும் மங்களூரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மாட்டுக்கறி விவகாரத்தில் ஆரம்பித்த இந்த பிரச்சினையில் இதுவரை இரண்டு உயிர்கள் பலியாகி இருக்கின்றன. சிமி இதில சம்பந்தப்படட இருப்பதாக பா.ஜ.க வின் தலைவர் துணை முதல்வர் ஒரு அறிக்கை விட பதட்டம் அதிகமாகி உள்ளது.நேற்று ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட நேரத்தில் வெளியே சென்றேன்.பசசை காய்கறிகள் ஏதும் கிடைக்காததால் சிக்கன்( என்னது பிஃபா. இல்லைங்க இல்லைங்க) வாங்கி சுட்டு சாப்பிட்டேன்.இன்று என்னாகுமோ தெரியவில்லை.இன்று மாலை ஊரடங்கு உத்தரவு விலக்கப்படும் என்கிறார்கள். மெயில்,போன்,பின்னூட்டம்,சேட் ஆகியவற்றில் நலம் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

Saturday, October 07, 2006

அப்சலை தூக்கில போடுங்கடா

அப்சல் மரண தண்டனை பற்றி இங்கு நண்பர்கள் விவாதித்தது மிக மிக கவனமாக எழுதப்பட்டது என்பது என் கருத்து. கவனமாக நண்பர்கள் தவிர்த்த ஒரு விஷயத்தை பற்றி நானும் மிக கவனமாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.ஏனெனில் செல்வன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் (அல் கொய்தா ) படங்களை போட்டு நம்மை அசிங்கப்படுத்திவிட வாய்ப்பு உள்ளது:)).இந்த கட்டுரை ரோசா, பிரபு, செல்வன், குழலி ஆகியோர் போட்ட பதிவுகளுடன் சம்பந்தப்பட்டது. வேறு ஒரு கோணத்தில் அணுகியிருக்கிறேன்.

நாகரீக சமுதாயத்தில் ஒரு மனிதனை சமூகமே(அரசாங்கமே) கொல்வது சரியா என்று கேட்பது ஒரு நிலைப்பாடு. இதை பற்றி பேசுபவர்களுக்கு குற்றவாளிகளின் குற்றம் என்பது ஒரு பொருட்டே அல்ல. குற்றத்திற்கு தண்டனை மரணம் என்பதை இவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். தண்டனை பற்றிய பயமே குற்றத்தை குறைக்கும் என்பது தவறு என்றும் அது சரி என்றால் இன்றைய சமுதாயத்தில் குற்றமே நடைபெறுவதில்லையா? என்பதும் இவர்கள் கேள்விகள்.நாகரீகத்தில் முன்னேறியதாக சொல்லப்படுகிற ஐரோப்பிய சமுதாயத்தை இவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள். உஷா பதிவு உதாரணம்.

இன்னொரு நிலைப்பாடு வஜ்ரா கூறியுள்ளது. பாதிரியார் கொலையில் தாராசிங்குக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை ஆதரித்தவர்கள் இதை எதிர்ப்பது ஏன் என்பது. இதிலும் வெறுமனே அரசியலை மட்டும் கூறி எதிர்க்காமல் மரண தண்டனை என்பது காட்டுமிராண்டித்தனம் என்று கூறி எதிர்ப்பதை அவர் கேள்வி கேட்டுள்ளார். இவர்களுக்கு மரண தண்டனை என்பதின் மேல் என்ன நிலைப்பாடு என்பது முக்கியமல்ல. ஒரு சார்பு இருக்கக்கூடாது என்பது தான் இவர்களின் நிலை.இதில் நியாயம் உள்ளது.

மரண் தண்டனைக்கான காரணங்களாக சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பதை ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் பிரபு ராஜதுரை எடுத்துக்கூறிய புள்ளிகளை நாம் கணக்கில் எடுக்க வேண்டும். மக்களை திருப்திப்படுத்த இது அவசியம் என்றால் எதிர்தரப்பில் நரேந்திர மோடி போன்றவர்களை தூக்கில் போட்டால் பலர் திருப்தியடைவார்கள். இதை செய்யமுடியுமா என்ற வாதத்தை ஒரு இஸ்லாமிய பதிவாளர் எழுதியிருக்கிறார்.இந்த வாதம் எதற்கு வருகிறது என்றால் இது வெறும் கிரிமினல் வழக்கு மட்டும் அல்ல.பொலிடிக்கல் வழக்கும் கூட என்ற எண்ணம் ஒரு சாரார் மத்தியில் நிலவுகிறது.இன்றும் பிரேமதாசாவை கொன்ற விடுதலை புலிகளுடன் இலங்கை அரசாங்கம் எப்படி பேச்சு வார்த்தை நடத்துகிறது என்பது போன்ற கேள்விகளை இங்கு போட்டு பார்க்கலாம். ரொம்பவும் நுட்பமான பகுதிக்கு வருகிறேன்.

இனி ரோசா, செல்வன் மற்றும் குழலி ஆகியோர் பதிவுகளைப் பார்ப்போம்.தீவிரவாதியை தூக்கில் போட வேண்டும் என்று முழக்கங்கள் ஒலிக்கின்றன. நாகரீக சமுதாயத்தில், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதிகளை கொல்ல முயற்சிப்பது என்பது கொடிய குற்றம் என்பதில் சந்தேகம் இல்லை.அதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது சரிதான்.நாமும் முழங்குகிறோம்.நியாயமான முழக்கம்தான்.

ஆனால் காஷ்மீர் மக்கள் இதை எதிர்க்கிறார்கள்.அங்குள்ள அனைத்து அமைப்புகளும் இதை எதிர்க்கின்றன.இங்கு நானும் மிக ஜாக்கிரதையாக வாக்கியங்களை அமைக்க வேண்டி இருக்கிறது.நாம் இங்கு இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து பார்க்கும் பார்வைக்கும் அங்கு வாழும் மக்களின் பார்வைக்கும் இருக்கும் வேறுபாடுகளை நான் கவனிக்க முயற்சிக்கிறேன். காஷ்மீர் மக்களின் பார்வை என்ன என்பதை நாம் சொல்லமுடியுமா? நாம் இதை காதில் கேட்க விரும்பாமல் இருக்கலாம். இது சரியா தவறா, உண்மையா என்று எல்லாம் என்னால் கூற முடியவில்லை. முதன் முதலில் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்த ஒரு காஷ்மீர் நபரை தூக்கில் போட்டதே அந்த பகுதி மக்களுக்கு இன்னமும் ஆறாத ரணமாக இருப்பதாக கூறுகிறார்கள். அப்சலை குழலி பகத்சிங்காக ஆக்குகிறார் என்று செல்வன் கூறுகிறார். குழலியினுடைய கருத்து கடுமையாக இருந்தாலும் செல்வனுடையதும் மட்டையடி தான்.

குற்றத்தை நாம் எப்படி பார்க்கிறோம்,எங்கிருந்து பார்க்கிறோம் என்பதை பொறுத்து வழக்கின் தன்மைகள் மாறுகின்றன என்பது ஒரு பார்வை.வெறும் மரண தண்டனை பற்றிய விவாதம் மட்டும் இல்லை இது.உதாரணமாக வீரப்பன் கூட்டாளிகளை தூக்கில் போடுவதை பற்றிய விவாதம் வந்தால் அதை நாம் அரசியல்ரீதியாக அணுக முடியாது.(தமிழ் தீவிரவாதிகளுடன் வீரப்பன் கூட்டணி சேர்ந்து காமெடி செய்த துன்பியல் நிகழ்வுகள் வேறு).

சென்சிட்டிவ்வான புள்ளிகளை தொட்டு விட்டேன் என்று நினைக்கிறேன். அப்சல் என்பவனின் பங்கு இந்த குற்றத்தில் என்ன என்பதைப் பற்றி யாரும் எழுதவில்லை. உடந்தையாக இருந்தவன் என்று சிலர் கூறியிருக்கிறார்கள். இந்த வழக்கின் நுட்பமாக பகுதிக்குள் செல்ல விரும்பவில்லை. தெரியவில்லை என்பது ஒரு காரணம். இந்த கட்டுரையின் பேசுபொருளுக்கு அவசியமில்லை என்பது மற்றொரு காரணம்.ரோசாவசந்த் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்களின் வழக்கை மேற்கோள் காட்டியதும் இந்த இடத்தில் யோசிக்கத்தக்கது.

கிரிமினல் குற்றமாக மட்டும் பார்க்கப்பட்டால் அப்சல் தூக்கில் தொங்க வேண்டியதுதான்.இதுவரை எந்த தூக்கு தண்டனை குற்றவாளியையும் அப்துல் கலாம் சந்தித்ததில்லையாம்.ஆனால் அப்சலின் உறவினர்கள் சந்தித்தாராம்.ஒரு அரசியல் முடிவாக இந்த மரண தண்டனை நிறுத்தப்படலாம் என்ற ஆங்கில மீடியாக்கள் கூறுகின்றன.அந்த அரசியல் முடிவு சரியா தவறா என்று கூறமுடியாது.இந்த விவாதங்களுக்கு முடிவு என்பதே இல்லை.எங்கிருந்து பார்க்கிறோம் என்பதுதான் விஷயம்.

உன் கருத்து என்ன என்பதை கடைசிவரை சொல்லவே இல்லையே என்கிறீர்களா? என்னத்த சொல்றது? எல்லாரும் அவனை தூக்கில் போடுன்னு சொல்லு.. இல்லாட்டி உன்னிய தேசதுரோகின்னு சொல்லுவோம்னு சொன்னீங்கன்னா அவன தூக்கில் போடுங்கன்னு சொல்ற மொத ஆள் நான்தான்....

அப்சலை தூக்கில் போடுங்கடா

( Although i have not supported or opposed any section, given the sensitiveness of the subject moderation will be strictly enforced)

Thursday, October 05, 2006

மங்களூரில் இந்து முஸ்லீம் கலவரம்

நேற்றுத்தான் ஒரு முழு அடைப்பு நடந்து முடிந்தது இந்த பந்த்தினால் நான் எப்போதும் சாப்பிடும் உணவகம் நேற்றைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் நான் சொந்தமாக சமைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு ஆளானேன்.MTRல் மசால் தோசையை கூட பார்சலாக செய்து விற்கிறார்களாம். நண்பர்கள் சொன்னார்கள். அது சரியாக வராது என்பதால் MTR உடனடி கலக்கல்(மிக்ஸ்) தோசை மாவை வாங்கி தோசை முயற்சி செய்திருந்தேன். அதுவும் சரியாக வரவில்லை. சோர்ந்து போயிருந்த நான் இன்று காலையில் முதல் வேலையாக ஓட்டலுக்கு ஓடினேன். இந்து முஸ்லீம் பிரச்சினையினால் இன்றும் பந்த் என்றார்கள்.

"அவுதா" என்றேன்.இப்போது சொல்ப சொல்ப கன்னட வார்த்தைகளை அங்கங்கே பொருத்தமான தருணங்களில் வீச பழகியிருந்தேன். நான் குடியிருக்கும் பகுதி இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதி.அனைவரும் நட்புடன் பழகுவார்கள். பஜ்ரங் தள் செய்த கலாட்டாதான் காரணம் என்றார் ஒரு பெரியவர்.இஸ்லாமிய மக்களும் பயத்தில் தான் இருந்தார்கள் என்று எனக்கு தோன்றியது.

சரி அலுவலகத்திற்கு சென்று விடுவோம். கேன்டீன் இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்றேன்.ஏதோ சாப்பிட்டேன் என்று பெயர் பண்ணிவிட்டு இணையத்தை திறந்து கலவரத்தைப்பற்றிய செய்தியை தேடினேன்.

நேற்று நடந்த முழு அடைப்பே மராட்டியர் பெருவாரியாக வாழும் பெலகாம் பகுதியை மகராஷ்ட்ராவுடன் சேர்க்கக்கூறி அந்த பகுதி மக்களில் ஒரு பிரிவினர் (இவர்களில் மக்கள் பிரதிநிதிகளும் உண்டு)போராட்டங்கள் நடத்துவது பற்றித்தான். ஆனால் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது கன்னட அமைப்புகள். இந்த அமைப்புகள் இந்த விஷயத்தில் மத்திய அரசின் போக்கை கண்டிக்கின்றனவாம்.இந்திய தேசியத்தில் என்ன பிரச்சினையை கண்டார்கள் இந்த பெலகாம் மக்கள் என்று தெரியவில்லை.எங்கு இருந்தால் என்ன? எல்லாம் இந்தியாதானே? சர்வம் இந்தி மயம் தானே என்று அவர்களுக்கு கிளாஸ் எடுக்க நம் வலைப்பூ தேசியவாதிகள் அங்கு இல்லை போலிருக்கிறது.

சரி இன்றைய சமாச்சாரத்தை பார்ப்போம்.மங்களூரில் சிறுபான்மை ஜனதொகையும் அதிகம் தான். நிறைய இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அடங்கிய ஊர் இது. ஏற்கனவே cow slaughter எனப்படும் மாட்டுக்கறி சமாச்சாரத்தில் இங்கு பிரச்சினை புகைந்துக்கொண்டு தான் இருக்கிறது.

ஆறு மாதங்களுக்கு முன் ஒரு செய்தி படித்தேன்.மிகவும் சுவாரசியமானது மாட்டை வெட்டி கறி போடக்கூடாது என்பதற்காக slaughter house எனப்படும் கறி வெட்டப்படும் இடத்தை நகராட்சி ஏலத்தில் பி.ஜே.பி, பஜ்ரங் தள் ஆட்கள் எடுத்துவிட்டார்களாம். கத்தியின்றி ரத்தமின்றி ஒரு போராட்டம்..எப்படி? புத்திசாலித்தனமாக அக்கிரமம் செய்வது எப்படி என்பதை இவர்களிடம் தான் நாம் படிக்கவேண்டும்.

நாட்டை இந்துமயப்படுத்தும் இவர்கள் போராட்டத்தின் ஒரு அத்தியாயம் தான் நேற்றைய கலவரமும். இப்போது கூறப்பட்டுள்ள செய்தி என்னவெனில் நேற்று இரவு இது போன்ற மாடுகளை வெட்ட போய்க்கொண்டிருந்த ஒரு வேனை பஜ்ரங் தள் ஆட்கள் வழிமறித்தார்களாம்.அதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் நகரின் பல பகுதிகளுக்கும் பரவியது.உயிர்சேதம் பற்றி தகவல் இல்லை.

பிரச்சினைக்குரிய அந்த வேன் ஒரு குவாலிஸ் கார்மீதும் ஒரு பெண்மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகவும் அதனால் தான் பிரச்சினை என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள்.ஆனால் பஜ்ரங்தள் ஆட்கள் பங்கை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள்.

முஸ்லீம்களோ, யாரோ மாட்டுக்கறி சாப்பிடுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியவில்லை. இப்படி எல்லாவற்றையும் புனிதப்படுத்தி புனிதப்படுத்தி எதை சாதிக்க நினைக்கிறார்கள் இவர்கள்? என் அலுவலகத்தில் ஒரு நண்பர் அவர்கள் மாட்டை வெட்டும் முறையை தான் பஜ்ரங் தள் காரர்கள் எதிர்க்கிறார்கள் என்று கூறி கிச்சுகிச்சு மூட்டினார்.

இதுபோன்ற முட்டாள்தனமான புனிதப்படுத்துதல்கள் கலவரங்களில்தான் வந்து முடிகின்றன.இந்த கலவரங்களிலும் உயிரிழப்பது அப்பாவி மக்கள்தான். இவர்கள் கிளப்பும் புனித வெறியில் மயங்கி உயிரை விடுவது பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் என்பது கொடுமையான செய்தி. கோத்ரா ரயில் விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலோனோர் முன்னேறிய வகுப்பினர் இல்லை என்ற செய்தியை இத்துட்ன் சேர்த்து பார்க்கவேண்டும்.

தமிழ்நாட்டில் ஏகப்பட்ட விஷம பிரச்சாரங்களுக்கு நடுவிலும் புனிதங்களை உடைக்க ஒரு சாரார் இருப்பது ஆசுவாசம் தருகிறது. அனைத்து தலைமுறைகளிலும் மக்களை உள்ளடக்கிய இந்த வகையான மக்களுக்கு தமிழகத்தில் பரவலான ஆதரவும் இருப்பது தமிழகத்தின் கடந்த நாற்பதாண்டு கால அரசியலின் சாதக விளைவுகளில் ஒன்று.

கடைசியாக, இன்று இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்வது? இன்றும் MTR தோசை தான். ஆன்லைன்ல சாப்பாடு கிடைக்காதாமே?

Wednesday, October 04, 2006

ஒத்தக்கால் குதிரை கவிதை

சமீபத்தில் மறைந்த மலையாள கவிஞர் அய்யப்ப பணிக்கரின் .ஒத்தக்கால் குதிரை என்ற கவிதையை உயிர்மை இதழில் படிக்க நேர்ந்தது.கவிதைகளில் எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாவிடினும் இந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.நீங்களும் படியுங்களேன்.


குதிரை நடனம்
*****************

நான்கு பெரும் குதிரைகள்

அலங்கரித்து வந்தன

ஒன்று வெள்ளை, ஒன்று சிவப்பு

ஒன்று கருமை, ஒன்றுக்கு தவிட்டு நிறம்

ஒன்றுக்கு நான்கு கால்

இரண்டாவதிற்கு மூன்று கால்

மூன்றாவதிற்கு இரண்டு கால்

நாலாவது ஒற்றைக்கால்

ஒற்றைக்கால் குதிரை சொன்னது

மற்றவர்களிடம்

நடனத்திற்கு நேரமாகிவிட்டது நண்பர்களே

நாம் ஒற்றைக்கால் நடனம் ஆடுவோமாக!

நடனம் தொடங்கியது

நான்குகால் குதிரை நடுங்கி விழுந்தது

மூன்றுகால் குதிரை மூர்ச்சையானது

இரண்டுகால் குதிரை நொண்டித் தவித்தது

ஒற்றைக்கால் குதிரை மட்டும்

ஆடிக்கொண்டே இருந்தது

**********

கவிதைகளுக்கு அருஞ்சொற்பொருள் கொடுத்து விளக்கம் கொடுக்கமுடியாது என்று கவிஞர்கள் கூறுவது ஏன் என்று விளங்கிக்கொள்ளமுடிகிறது. இந்த கவிதை தரும் சிந்தனைகளை விளக்கமுடியுமா? நம் வலைப்பூ நவீனகவிதை தீவிரவாதி மணிகண்டனை பிடித்து சில கவிதை புத்தகங்களை கேட்டு வாங்கி படிக்கலாம் என்று நினைக்கிறேன்.

எனக்கும் கவிதைகளுக்கும் தொடர்பு விட்டுப்போனது ஏன் என்று யோசித்து பார்க்கிறேன்.கீழே உள்ள கவிதையை படியுங்கள்.சொல்கிறேன்.

காதலி
*******
அன்பே

நீ ராணி

நான் பேமானி

நீ செவப்பு

நானோ உந்தன் செருப்பு


சிறுவயதில் இது போன்ற கவிதைகளை பத்திரி்க்கைகளில் படித்து பேஜாராகியதால் கவிதைகளை படிக்காமல் இருந்திருக்கிறேன் போல.

Thursday, September 28, 2006

செந்தழலார், திராவிடஃபிகர்-சென்னை பயணம் 2

சென்னை மீதான என் காதலைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். சென்னையில் குடியேற ஒரு துவக்கம் ஏற்படுத்தும் முகமாக வலையுலக நண்பர்கள் ஏழெட்டு பேர் உள்பட பல நண்பர்கள் மூலமாக மென்பொருள் துறை வேலைவாய்ப்புகளை பற்றி விசாரித்து கொண்டிருந்தேன். ஒரு சனி,ஞாயிறு அன்று "உள்நடக்கும்" (வாக்-இன் இண்டர்வ்யூக்கு அதுதானே தமிழ்) நேர்முகத்தேர்வு ஏதாவது இருந்தால் பங்கு பெறலாம் என்ற எண்ணத்தில்தான் ஆகஸ்ட் பயணத்தை முடிவு செய்திருந்தேன்.அது ஒரு அசட்டு முயற்சியாகத்தான் முடிந்திருக்கும் என்பது இப்போதுதான் தெரிகிறது.

அந்த குறிப்பிட்ட சீசனில் பலரும் வலைப்பதிவில் வேலைவாய்ப்பு செய்திகளை கொடுத்து கொண்டிருந்தனர். ஒரு கலவரம், கொலைவெறி சமாச்சாரமாக நண்பர் செந்தழல் ரவியுடன் மொபைலில் பேசிக்கொண்டிருந்த போது என் சென்னை பயணத்தின் நோக்கத்தை சொன்னேன். புரொபைல் அனுப்புங்க என்பதோடு முடித்துக்கொண்டு அனானி பின்னூட்டம் இட சென்றுவிட்டார்.

ஒரிரு வாரம் கழிந்திருக்கும். ரவி ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதிர்ஷ்வசமாக ஒரு நல்ல கம்பெனியில் ஆட்கள் தேவைப்படுவதாகவும் நான் அனுப்பிய புரொபைலை தான் முன்மொழிவதாகவும் கூறினார்.நேர்முகத்தேர்வு நன்றாக செய்தால் வாய்ப்பு இருப்பதாக கூறினார்.அதற்குப்பிறகு நடந்தது எல்லாம் மாயம்தான். ரவி தன் அனுபவத்தை வைத்து சில உபயோகமான டிப்ஸ்களையும் கொடுத்தார்.சில நாட்களில் தொலைபேசி வாயிலாக நேர்முகத்தேர்வு நடந்தது. காரியமும் ஜெயமானது.

இந்த மிகப்பெரிய உதவியை செய்த செந்தழல் ரவியை இன்று வரை நான் நேரில் பார்த்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் பல நண்பர்களை நேரில் பார்க்காமலே ஆண்டாண்டு காலம் பழகிய உணர்வை தருவது இணையத்தின் சிறப்புதான். எனக்காக முயற்சிகளை எடுத்துக்கொண்ட அனைத்து நண்பர்களுக்கும்(செந்தழலாருக்கு ஸ்பெஷல் என்பதை சொல்லவும் வேண்டுமா) என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னையில் ஒருநாள் ரவியின் சகோதரரை சந்திக்க நான்,லக்கி,வரவணையான் ஆகியோர் சென்றிருந்தோம்.அன்று தான் வலையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட திராவிட ஃபிகர் பைக்கில் கடத்தப்பட்ட சம்பவம் நடந்தது. வேளச்சேரி ரோட்டில் கால் டாக்சியை அழைத்துவிட்டு காத்திருந்த நேரத்தில் நாங்கள் வெட்டி ஞாயம் பேசிக்கொண்டு இருந்தோம்.

சென்னை மென்பொருள் துறையில் மிகுந்த முன்னேற்றம் அடைந்துவிட்டது. கால்சென்டர்கள் ஏராளமாக வந்துவிட்டது என்றேன் நான். ஆனால் பப் கலாச்சாரம், பார்ட்டி கலாச்சாரம் என்று நாட்டின் கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று அங்கலாய்த்துக்கொண்டார் லக்கி.அப்போது ஒரு மாநிறமான பெண்ணை ( ஜீன்ஸ்,டீசர்ட் அணிந்திருந்தார்) பைக்கில் அமர்த்திக்கொண்டு ஒரு சிவப்பான இளைஞன் எங்களை கடக்க ஜாலிக்காக "திராவிட ஃபிகரை தள்ளிகிட்டு போறான்யா" என்றேன் நான். திராவிட இயக்கத்தின் உண்மை வாரிசான லக்கியாருக்கு நரம்புகள் துடித்தன.கழுத்தில் இருந்து ஒரு நரம்பு அப்படியே ரட்சகன் ஸ்டைலில் துடித்து மேலேறியது.அவர் பாய்ந்து செல்வதற்கு முன் ஒரு வெளிநாட்டு கார் வந்து எங்கள் அருகில் நின்றது.அதிலிருந்து ஒரு அழகிய ஆன்ட்டி ஏதோ அட்ரஸ் கேட்க லக்கி சிறிதே குளிர்ந்தார். காரில் ஏறி சென்றுவிடுவாரோ என்று நாங்கள் பயந்திருக்க நல்லவேளை லக்கி அவ்வாறெல்லாம் செய்யவில்லை.

அதற்கு முன்னர் ரவியின் சகோதரரை சந்தித்தோம். அவருடன் சென்று சிஃபி ஹைவேயில் இணையத்தில் சில மெயில்கள் அனுப்ப சென்றிருந்தோம். நான் அவருடன் பேசிக்கொண்டிருக்க வரவணையானும்,லக்கியும் ஒரு மெஷனில் அமர்ந்து இலங்கை பிரச்சினையில் மயிர் பிளக்கும் வாதம் செய்துக்கொண்டிருந்தனர். யாழ் களத்தை ஓப்பன் பண்ணு, பொங்குதமிழை திற, திரிகோணமலை,வன்னி,சந்திரிகா என்று இவர்கள் பேசுவதை பார்த்த ரவியின் அண்ணன் தியாகு இவர்கள் தற்கொலை படை தீவிரவாதிகளோ என்று சிறிது ஆடிப்போனார். நீங்களெல்லாம் ரவிக்கு எப்படி தெரியும் என்று மட்டும் ஒரு வார்த்தை என்னிடம் கேட்டார்.

இலங்கை பிரச்சினையில் பிரபாகரனுக்கே தெரியாத சில உண்மைகளை வரவணையான் பகிர்ந்துகொள்ள லக்கி பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து வைகோவை துவைத்து காயப்போட்டு கொண்டிருந்தனர். ஓரளவு எங்களைப்பற்றிய ஒரு முடிவுக்கு ரவியின் அண்ணன் வ்நதிருப்பார் என்று எனக்கு தோன்றியது. எங்கள் வேலை முடிந்ததும் சாப்பிடபோகலாம் என்று நாங்கள் அழைக்க எங்களுடன் இருந்தால் புலிகள்,நக்சலைட் சம்பந்தப்பட்ட பிரச்சினை வரும் என்று அஞ்சி உஷாராக நழுவினார் அவர்.ரவிக்கு மண்டகப்படி கிடைத்ததாக கடைசி தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக வரவணையான் பதிவில் குறிப்பிட்ட எக்மோர் பாரில் குறிப்பிடும்படி எந்த விஷயத்தையும் நாங்கள் பேசவில்லை. வரவணையான் கூறியபடி பொதுவான சில விஷயங்களைத்தான் பேசிக்கொண்டிருந்தோம். வலைப்பதிவர் சீனு என் நெருங்கிய நண்பனுக்கு நண்பர் என்று தெரியவந்தது. சில பழைய செய்திகளை பகிர்ந்துகொண்டோம்.மற்றபடி இரவு பாட்டில் சந்திப்புகள் நடத்த சென்னை பார்கள் உகந்த இடம் அல்ல என்று தெரிந்துக்கொண்டேன்.

Wednesday, September 27, 2006

வேட்டையாடு விளையாடு சர்ச்சை

கமல்,கெளதம் பற்றிய பாலபாரதி,லிவிங் ஸ்மைல் மற்றும் லக்கிலுக்கின் பதிவுகளை படிக்க நேர்ந்தது.ஒரு இடத்தில் யாருக்காவது பொதுமாத்து விழுந்துகொண்டிருந்தால் என்ன ஏது என்று என்று கேட்காமல் தாமும் இரண்டு குத்துவிட்டுவிட்டுத்தான் என்ன விஷயம் என்று கேட்பது தமிழ் பண்பாடு என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம்.அந்த அடிப்படையில் நானும் கமலையோ அல்லது பாலபாரதியையே மொத்தலாம் என்று நினைத்தேன்.

ஆனால் வேட்டையாடு,விளையாடு என்ற அந்த படத்தை பார்க்காமல் படத்தை விமர்சித்தால் அது ஜல்லியாகிவிடும்.உதாரணத்திற்கு...
இட ஒதுக்கீடு ஏன் என்பது பற்றி எதுவும் தெரியாது.ஆனால் இடஒதுக்கீட்டால் மெரிட் பாதிக்கப்படும் என்பார்கள்.
இயக்கவியல் பொருள்முதல்வாதம்,முரண்இயக்கம் தெரியாது. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் பிற்போக்குவாதிகள் என்பார்கள்.
பெரியாரை படித்ததே இல்லை.ஆனால் பெரியாரின் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானவை என்பார்கள்.
இந்த லிஸ்ட்டில் சோந்து நானும் படத்தை பார்க்காமல் கதையை சொல்லி ஜல்லி கொட்டி சூழலை மாசுப்படுத்த விரும்பவில்லை. சில விஷயங்கள் மட்டும்..

முதல் விஷயம் இது கமல் படம் இல்லை. கமல் தலையிட்டு இருந்தால் இந்த திரைப்படம் ஊற்றிக் கொண்டிருக்கலாம்:)).மாபெரும் வெற்றி பெற்றிருக்காது.கமல் இந்த படம் பற்றி ஆர்வம் இல்லாமல் இருந்ததாக இயக்குநரே கூறி உள்ளார்.கமல் டைரக்சன் விசயத்தில் மூக்கை நுழைத்து படங்களை ஒழித்துவிடுவதாக ஒரு கருத்து உள்ளது.ஆகவே கமல் கதை விஷயத்திலும் டைரக்டர் விஷயத்திலும் தலையிடாமல் இருக்க அவருக்கு சம்பளத்தில் ஒரு தொகை சேர்த்து தரப்படுகிறதாம்:)).

ஆக இது கெளதம் படம்தான்.கெளதமின் படங்கள் மேல் எனக்கு பெரிய அபிப்பிராயம் எதுவும் கிடையாது.மசாலா படங்களை திறமையாக எடுக்கக்கூடியவர் என்ற அளவில் தான் அவர் மீதான மரியாதை. பாட்டுக்கள் ஹி்ட்டாவது கூடுதல் நன்மை.அவருடைய முதலிரண்டு படங்களையும் வைத்துத்தான் இந்த கருத்தை சொல்கிறேன். இது போன்ற மசாலா திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்கள் நம்மிடையே நிறைய உள்ளார்கள். சங்கர், சரண், ஹரி, கெளதம் என்று இவர்கள் எல்லோருமே மசாலா கலைஞர்கள்தான்.

டைரக்டர் பாலா போன்றோரை இவர்களை விட ஒரு படி மேலாகத்தான் நான் மதிக்கிறேன் என்ற ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.ஆனால் அவருடைய முதல் படத்திலும் அய்யர்களை கடுமையாக நக்கல் அடித்து சில வசனங்கள் இருந்தன என்று ஞாபகம். கதைக்கு சம்பந்தப்பட்டு இருப்பதாக பாலா கூறலாம்.எனக்கும் அப்படித்தான் தோன்றியது.ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்த வசனங்கள் ஓவராக இருப்பதாக தோன்றியிருக்கும்.

லிவிங் ஸ்மைல் கூறியதில் முக்கிய அம்சமே இங்குதான் வருகிறது. டைரக்டர் யதார்தத்தை எடுக்கிறார் என்று கூறுவதா? அல்லது தெரிந்தே, கேட்க ஆளில்லாமல் இருப்பவர்களை கேவலப்படுத்துகிறாரா? என்பதை கவனிக்கவேண்டும்.இதை எப்படி கண்டுபிடிப்பது என்பது அடுத்த பிரச்சினை.கதைக்கு அவசியம் தேவைப்படாத பட்சத்தில் குறிப்பிட்ட அந்த சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

கதைக்கு அந்த குறிப்பிட்ட வசனமோ, வார்த்தையோ, கான்செப்ட்டோ எந்த விதத்தில் இன்றியமையாதது என்று டைரக்டர்/கதாசிரியர் விளக்கவேண்டும். நம் விமர்சனமும் அதை பொறுத்துதான் இருக்கமுடியும். ஆட்டம் போடு, அவுத்து போடு(நன்றி லிவிங் ஸ்மைல்) படத்தில் இந்த வார்த்தையும்( பொட்டை), கான்செப்ட்டும்(ஓரின சேர்க்கை சமாச்சாரம்) தேவையில்லாமல் திணிக்கப்பட்டுள்ளன என்ற முடிவுக்குத்தான் நண்பர்களின் விமர்சனம் என்னை இட்டு செல்கிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் டைரக்டர் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவர் ஆகிறார்.

மேலும் கமலின் மீதான பாலபாரதியின் இந்த விமர்சனம் என்னால் ஏற்க முடியவில்லை.

//ஆணாதிக்க சிந்தனாவாதிகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் எத்தனையோ விதமான கற்பித விஷயங்களில் ஒன்று தான் விதவையையோ, மணமுறிவோ ஆன பெண் மறுமணம் செய்துகொள்ளும் போது, அதே போல மனைவியை இழந்தவரோடோ, மணமுறிவு ஏற்பட்ட ஆணுடனோ தான் மணம் முடித்துக்கொள்ள வேண்டும். இந்த கருத்தாக்கம் படித்த பலரிடம் கூட இருக்கிறது. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் இந்தபடத்தில் கமலினி முகர்ஜி கொல்லப்படுகிறார்.எப்போதும் தன்னை சக நடிகர்களிலிருந்து இருந்து வேறுபடுத்தி சமூக அக்கறை உள்ளவராக காட்டிக்கொள்ளும் கமல்ஹாசன் இந்த பாத்திரத்தை எப்படி விமர்சனம் செய்யாமல் ஏற்றுக்கொண்டார் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு வேளை அவருக்குள் இருக்கும் மிருகத்தனமான ஆணாதிக்க சிந்தனை இதை பெரியதாக கண்டு கொண்டிருக்காது.//
இந்த படத்தை பொறுத்தவரை கமலுக்கு அவர் வயதை கணக்கில் கொண்டு எழுதப்பட்ட கதை. இன்று கமல் "அம்மா காலேஜுக்கு போறேன்" என்று சொல்லி துள்ளி ஓடமுடியாது. ஒரு பழைய எம்.ஜீ.ஆர் படத்தில் அப்படி ஒரு காட்சியை பார்த்து அதிர்ந்தது ஞாபகம் வருகிறது. அதை தவிர

நளதமயந்தி என்ற படம் . கமல் கதையா அல்லது திரைக்கதையா என்று தெரியவில்லை.ஆனால் கமலின் சொந்தப்படம்.கதையின் நாயகன் மாதவனின் தங்கையை புகுந்த வீட்டில் அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவார்கள். பொதுவாக முடிவில் இதுபோன்ற விஷயங்களில் மாப்பிள்ளை பையன் திருந்துவதாக காட்டுவார்கள். ஆனால் இந்த படத்தில் தங்கையின் முன்னாள் காதலனுக்கு அவளை மறுமணம் முடிப்பது போல் காட்டுவார்கள். வரதட்சணை கொடுமைக்கு இது சரியான தீர்வா என்பது ஒருபுறமிருக்க கல்யாணம் ஆன பெண்ணுக்கு கல்யாணமாகாத மாப்பிள்ளையை கட்டி வைக்கும் புரட்சி(?)மனப்பான்மை கமலுக்கு இருக்கிறது என்று தோன்றுகிறது.

மற்றபடி கமலஹாசன் தேவர்சாதி மீது பற்றோடு இருக்கிறார் என்று ஒரு விமர்சனம் பார்த்தேன். எனக்கு தெரிந்தவரை தேவர்மகன் படத்தில் கதைக்கு சம்பந்தப்பட்டுத்தான் காட்சிகள் இருந்ததாக ஞாபகம்.விருமாண்டி, தேவர்மகன் போன்ற வட்டார வாழ்க்கையை காட்டும் படங்களில் சாதியை தவிர்த்து(சாதி அடையாளம் தெரியாமல்/பேசாமல்) படம் எடுக்கமுடியுமா?

தனிப்பட்ட முறையில் கமலின் "வெச்சு வாழ தெரியாத" தன்மையைப்பற்றி நிறைய பேரிடம் விமர்சனம் (குறிப்பாக பெண்கள் நிறைய பேர் இதை சொல்கிறார்கள்) உள்ளது.

இது ஒரு சிக்கலான விஷயமும் அதற்கு மேலாக அவரின் தனிப்பட்ட விஷயமும். நம்மை பாதிக்காதவரைஅதைப்பற்றி கருத்து கூற நமக்கு உரிமையில்லை.

Tuesday, September 26, 2006

மங்களூரில் வலைப்பதிவர் சந்திப்பு

k; வலைப்பதிவர் மாநாடுகள் அங்காங்கே நடப்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம். ஒரே ஊரில் ஒரே வாரத்தில் மூன்று முறை கூட நடக்கின்றனவாம். வலைப்பதிவர் மாநாடுகள்(?) வலைப்பதிவின் தட்பவெப்ப நிலையை கட்டுக்குள் வைக்கவும் நல்ல அறிமுகங்கள் கிடைக்கவும் உதவும் என்ற அடிப்படையில் நான் வலைப்பதிவாளர் சந்திப்புகளில் ஆர்வம் காட்டுவது உண்டு.

"அத்தெல்லாம் சரி மாமே.மங்களூர்ல என்ன மீட்டிங்,அங்கிருந்து தமிழ் குப்பை போடும் ஒரே ஆசாமி நீதானே",என்று அவசரப்படும் கண்மணிகளுக்காக நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு தூக்கம் வராமல் கணிணியை நோண்டிக்கொண்டிருந்த போது ஒரு மெயில் வந்தது. நடராசன் சீனிவாசன் என்ற பெயரில் வந்த அந்த மெயில் ஒரு பதிவர் மங்களூர் வருவதாகவும் வலைப்பதிவாளர் சந்திப்பை மங்களூரில் வைத்துக்கொள்ளலாமா என்றும் கேட்டது.

ஏற்கனவே நற்பணி மன்றம், மங்களூர் கிளை அது இது என்று பல இடங்களில் நம் பெயர் உபயோகப்படுப்பட்டிருப்பதால் குழப்பம் அடைந்திருந்த நான் எந்த பெயரில் நீங்கள் எழுதுகிறீர்கள் என்று கேட்டு மெயிலை தட்ட பிறகுதான் தெரிந்தது நமமுடைய ஓகை தான் நடராசன் சீனிவாசன்.

தன்னுடைய தொழில் சம்பந்தப்பட்ட (அலுமினியம் தயாரிப்பு) மூன்று நாள் கருத்தரங்குக்கு மங்களூர் வந்த ஓகை நடிகர் சுனில் ஷெட்டியின் ஓட்டலில் இந்த வரலாற்றுபூர்வமான, தமிழ் வலைப்பதிவாளர்களின் முதல் மங்களூர் சந்திப்பின் முதலாம் அமர்வு நடைபெற்றது. மொத்தம் மூன்று அமர்வுகளாக இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிநிரல் என்னவோ ஒன்றுதான்.

மரபு கவிதைகளில் ஆர்வம் உள்ள அவர் பல கவிதைகளையும் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சில கவிதைகளை புரட்டி பார்த்தேன். நிலைமண்டில ஆசிரியப்பா, விருத்தம், அடி என்று லத்தீன் மொழியில் சில வார்த்தைகள் இருந்தன.உஷாராக பேச்சை மாற்றினேன்.தமக்கு புதுக்கவிதைகள் பிடிக்காது என்பதுபோல் ஒரு கருத்தை உதிர்த்தார் ஓகை. மேத்தாவை கலாய்க்க சென்ற மணிகண்டனை விட்டு இந்த ஆளை ஒரு காட்டு காட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

தமிழ்மேல் மிகவும் ஆர்வமுள்ள ஓகை பல காலமாக தமிழ் இணையத்தில் இயங்கி வருவதாக கூறினார்.மரத்தடி குழுமங்களிலும் இயங்குவதாக கூறினார். எனக்கு தமிழ் இணைய பரிச்சயம் ஒரு வருடமாகத்தான் என்றேன் நான். பரவாயில்லை அதற்குள்ளாக பிரபலம் ஆகிவிட்டீர்கள் என்றார். ஹிஹி என்று மையமாக சிரித்துவைத்தேன்.முதுகில் டின் கட்டப்பட்டால் அதற்கு பெயர் பிரபலமா என்று மனதிற்குள் நினைத்துக்கெர்ணடேன்.புரிந்து கொண்டாரோ என்னமோ மிகவும் இளவயதினராக இருக்கிறீர்கள் என்று ஒரு கட்டி ஐஸை எடுத்து வைத்தார்.கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன்.

சென்னை வலைப்பதிவர் சந்திப்பின் போது ஒரு முக்கிய வேலை இருந்ததால் கலந்துக்கொள்ள இயலவில்லை என்றார்.எனக்கு ஓகை என்ற பெயரும் சிதம்பரம் அர்ச்சகர் சமாச்சாரம் மற்றும் தேர்தல் சமயத்தில் யாருக்கு ஓட்டு போடுவது என்று அவர் எழுதிய சில பதிவுகளும் ஞாபகம் இருந்தது. அதன் அடிப்படையில் நாங்கள் பேச ஆரம்பித்தோம்.சோ பிடிக்கும் என்றும் கருணாநிதி பிடிக்காது என்றும் தயக்கத்துடன் சொல்லியபடி கொஞ்சம் தள்ளி அமர்ந்தார் மனிதர்.மேலே பாய்ந்துவிடுவேன் என்று சந்தேகம் அவருக்கு இருந்திருக்கும் போல் தோன்றியது. ஆவேசமாக எழுதுவது போல் தோன்றினாலும் நான் அப்பாவிதான்(அப்பாவிகளுக்கு மட்டும்) என்றேன். மேலும் நான் எந்த கட்சியிலும் இல்லை.யாரிடமும் அல்லது எந்த கோட்பாட்டிலும் விமர்சனமற்ற பக்தி என்பது எனக்கு இல்லை என்றேன். அவருடைய பதிவுகளை வைத்து எனக்கு அவர் பற்றி ஏற்பட்ட இருந்த மனபிம்பத்தை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டேன். சோவின் இரண்டாவது குரல் என்று அவரை நான் விமர்சித்ததை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டார்.

அவர் ஒரு மிகப்பிரபல வலைப்பதிவாளருக்கு மிகவும் நெருங்கியவர் என்று அவருக்கே தெரியாத ஒரு தகவலை கூறி அவரை அதிர வைத்தேன். மாற்றுபார்வை என்பது என்ன? ஏன்? என்பதைப்பற்றியும் இடதுசாரியம், வலதுசாரியம், இந்து மதம், டோண்டு, புனிதபிம்பங்கள், தேசியம்,திராவிடம் என்று வழக்கமாக எல்லா வலைப்பதிவு எவர்கிரீன் சமாச்சாரங்களையும் பேசினோம்.

புனிதப்படுத்துதல், இழிவுப்படுத்துதல் பற்றி என் கருத்தை உன்னிப்பாக கேட்டுக்கொண்டார்.இந்திய தத்துவத்தின்,சிந்தனையின் பெருமையை பேசும்போது மட்டும் சமணம், பெளத்தம், சாங்கியம்,கடவுள் மறுப்பு தத்துவங்களை சேர்த்துக்கொண்டு விட்டு ஆன்மீகத் தளத்தில் பேசும்போது இவைகளை புறந்தள்ளிவிட்டு வேத உபநிஷத தத்துவங்களை மட்டும் சிலர் பெரிதாக பேசுவது அயோக்கியத்தனம் என்றேன் நான்.

கருணாநிதி திமுகவில் தீடிரென வளர்ந்தது அந்த காலகட்டத்தில் எல்லாருக்கும் ஒர் ஆச்சரியமான விஷயம் என்றார்.சோவின் பல கருத்துக்கள் பிடிக்காது எனினும் அவர் வாதம் செய்யும் முறை,தைரியம் ஆகியவையே தம்மை கவர்ந்தவை என்றார். காலரிக்காக எழுதுவது,நிறைய பேரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக எழுதி தன்னுடைய தனித்தன்மையை கைவிடுவது என்ற எழுத்து துறையில் உள்ள பிரச்சினைகளையும் பரிமாறிக்கொண்டோம்.கருத்துக்கள் மாறுபடலாம். மனிதம், நட்பு ஆகியவை அதையும் மீறியவை என்ற அடிப்படையில் பல விஷயங்களை விவாதித்தோம்.பல விஷயங்களில் மாற்றுபார்வைகள் விவாதபூர்வமாக அவர் வைத்திருந்தாலும் விவாதங்களில் தமக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை என்றார்.

மிகவும் குறைந்த கால அவகாசமே இருந்ததால் உடுப்பி, கொல்லூர் ஆகிய இடங்களுக்கு போக முடியவில்லை. ஒரு மாலை பனம்பூர் பீச்சுக்கு சென்றோம்.தன்னுடைய பரிசாக பாலகுமாரனின் புருஷவதம் என்ற புத்தகத்தையும் எனிஇந்தியன் பதிப்பகத்தின் அறிவியல் புனைகதைகளின் தொகுப்பை எனக்கு அளித்தார்.அதில் அவர் எழுதிய ஒரு சிறுகதையும் இருப்பது போனஸ்.

(என்னது ரிட்டையர்மெண்ட்டா? ஹிஹி அதெல்லாம் முடிஞ்சிருச்சி.சிறிய இடைவேளைன்னு தானே போட்டிருந்தேன்:))

Thursday, September 14, 2006

சென்னை வலைப்பதிவாளர்களுக்கு ஜே

சென்னை வருகிறேன் என்றும் நண்பர்களை சந்திக்க ஆசை என்றும் ஒரு பதிவு போட்டிருந்தேன். என் வேண்டுகோளை ஏற்று நண்பர் பாலபாரதி ஒரு வலைப்பதிவாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். பாலபாரதிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

என்னை மாதிரி தூர தேசத்தை சேர்ந்த வலைப்பதிவாளர்கள் சென்னையில் ஒவ்வொரு நண்பராக போய் சந்திப்பதைவிட இது போன்ற வலைப் பதிவாளர்கள் சந்திப்புகளின் மூலம் சென்னை நண்பர்களை சந்திப்பது நல்ல முறை. இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ள தூத்துக்குடியில் இருந்து வருகை தந்த நண்பர் வரவணையான் தன் நண்பர் கவிஞர் சுகுணா திவாகரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஒரு இரவு பதினொரு மணிவரை எனக்கு பின்நவீனத்துவம், அமைப்பியல் ஆகியவற்றைப்பற்றி எளிமையாகவும் பொறுமையாகவும் விளக்கினார்.அதைப்பற்றி பிறகு பார்ப்போம். வெள்ளியன்று நானும் வரவணையானும் கிளம்பி சந்திப்புக்கு செல்வது என்று முடிவாகியது.

மாலை பூங்காவிற்கு சென்று இறங்கியவுடன் முன்வாசலிலே சில இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். "அனானி ஆப்சனை நீக்க வேண்டும்" என்ற கோர்ட்வேர்டை அவர்கள் சொல்லாததால் நாங்கள் அவர்களை கடந்து சென்றுவிட்டோம்.பின்னர் பூங்காவின் மையப்பகுதிக்கு சென்று கைத் தொலைபேசியில் பாலபாரதியைஅழைத்தேன். பிறகுதான் தெரிந்தது. பூங்காவின் வாசலில் நின்று கொண்டிருந்த ஆட்கள் நம் ஆட்கள் தான் என்று.

சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் வலைப்பதிவுகளை விட்டு விலகுவதாக அறிவித்த அணில்குட்டி புகழ் கவிதா வந்திருந்தது சர்ப்ரைஸ். குப்புசாமி செல்லமுத்து, முத்துக்குமரன் ப்ரியன்,பரஞ்சோதி ஆகியோர் அருகிலேயே நின்றிருந்தனர். இந்த குப்புசாமி செல்லமுத்துவை நான் அய்யா குப்புசாமிக்கு என்று விளித்து ஒரு பதிவே போட்டிருந்தேன்.ஆனால் மனுசன் இளவட்டம்.

பாலபாரதி பத்தி எல்லாம் சொல்லவே வேண்டாம். அமீர்கான், சாரூக்கான், சல்மான்கான் என்றெல்லாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம். நேரில் அன்றுதான் பார்த்தேன். முகம்மது பாலா உசேன் அவ்வளவு அழகாக இருந்தார். பரஞ்சோதி(குழந்தைகளுக்காக கதை புகழ்) முத்துகுமரனுடன் வந்திருந்தார்.

ஜெய்சங்கர் (We the People) வந்தார். எங்கங்க மத்த ஆளுங்கள்ளாம் என்றேன் நான். திரும்பி திரும்பி பார்த்தார்.We the people என்பது அவர் ஒருவர்தானாம். ஒரு கூட்டமே இருக்கும் என்று என்னை போல் பலரும் நம்பி ஏமாந்ததாக கூறியது என் மனதிற்கு ஆறுதலை தந்தது.பிறகு சிமுலேசன்,பொன்ஸ்,சந்திப்பு,அருள், சிவஞானம்ஜி, கெளதம், வினையூக்கி,சீனு, ரோசா என்று பலரும் கூட கூட்டம் இனிதே துவங்கியது.

சிவஞானம்ஜீக்கு சிறப்பு நன்றிகள்

அய்யா சிவஞானம் ஆர்வத்துடன் வந்து சந்திப்பில் கலந்துகொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. பின்னர் பேசிய சிவஞானம் அவர்கள், பின்னூட்டம் இடுபவர்கள் சிலர் பொறுப்பில்லாமல் தவறான தகவல்கள் எழுதுவது மனநிம்மதியை குலைப்பதாக உள்ளது என்றும் அத்தகைய ஒரு பின்னூட்டத்தினால் ஒரு இரவு தூக்கமே போய்விட்டது என்று வருத்தத்துடன் பகிர்ந்துக்கொண்டார்.வருத்தமாக இருந்தது.

நண்பர் வினையூக்கி முதன்முதலாக வலைப்பதிவாளர் கூட்டத்திற்கு வந்திருந்தார்.அதிகம் பேசவில்லை அவர்.அவருடன் அதிகம் பேச முடியவில்லை என்பது எனக்கு குறைதான்.

பின்னர் அறிமுகம் நடைபெற்றது. பிறகு பேசிய நண்பர் சந்திப்பு திராவிட தமிழர் வலைத்தளம் துவக்கப்பட்டது சரியான முடிவு அல்ல என்ற தன் கருத்தை விவாதத்திற்கு எடுத்து வைத்தார். பலமுறை அவரிடம் தளத்திலும் தனிப்பட்ட முறையிலும் விவாதித்த ஒரு விஷயம் தான் இது.

ஒரு பொதுஇடத்தில் திராவிடம்,தமிழுணர்வு,இடஒதுக்கீடு போன்ற கருத்தாக்கங்களை பேசுவதே கேவலம் என்று கட்டமைக்கப்படுவதை எதிர்க்க தன்னிச்சையாக உருவான அமைப்பே அது என்று ஆயிரத்து எண்ணூறாவது முறையாக எடுத்துக் கூறினேன் நான்.

சந்திப்பு அவர்களின் உள்ளங்கனிந்த சிந்தாந்தமான, பொது உடைமை, அதைப்பற்றி முழுதாக தெரியாதவர்களால் கடுமையாக தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டு பிறகு சில நாட்களில் கம்யூனிசத்தைப்பற்றி பேசுவதே ஆபாசம் என்று சிறிது சிறிதாக கட்டமைக்கப்படும்போது தான் இந்த உணர்வை அவர் புரிந்துக்கொள்வார் என்று நினைக்கிறேன். மேலும் தமிழகத்தில் கம்யூனிசம் வளராமல் போனதற்கு திராவிட இயக்கங்கள் தான் காரணம் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் அவரிடம் உள்ளது.அதனால் அவருக்கு திராவிட கருத்தாக்கத்தின் மீது உள்ள கடுமையான எதிர்ப்புணர்வினால்(முத்திரை) சில சமயம் இந்துத்வாவாதிகள் அளவிற்குக்கூட போய் எழுதிவிடுகிறார்:).இந்த விஷயத்தில் விவாதங்களை கடந்த நிலையில் அவர் உள்ளதாகவே நான் புரிந்து வைத்துள்ளேன்.காம்ரேடுகள் இந்திய சமுதாய முறையை சரியாக புரிந்துகொள்ளாமல் தவறு செய்வது இங்குதான் என்று தோன்றுகிறது.

கலவரம்,கொலைவெறி ஆகியவற்றை கிளப்பும் அனானிகளைப் பற்றி பேசும்போது பலரும் லக்கிலுக்கை திரும்பி பார்த்தனர். ஆயினும் மனுசன் நிதானமாகவே இருந்தார். தனிப்பேச்சின் போது தெளிவாக ஒரிஜினாலிட்டி என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும் என்பதை நாசுக்காக எடுத்துக்கூறினார்.

ஆயினும் தனிமனித தாக்குதல் போல் வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்துவது நல்லது என்று பலரும் கூறினார்கள். தனிமனித தாக்குதல் என்பதை எப்படி நிர்ணயிப்பது என்ற அடுத்த கேள்வி வந்தது. இது ஒரு மாயச்சூழல் என்று சிலர் கூறினார்கள். தனிமனித தாக்குதல் இருக்கும் பதிவுகளை இக்னோர் செய்வதுதான் சரியான முறை என்பது பலரின் கருத்து.
வலைப்பதிவர்கள் என்ற அடிப்படையில் ஒரு அமைப்பை ஏற்படுத்த முடியுமா என்று நான் ஒரு கேள்வியை கேட்டேன். அது சாத்தியமில்லாதது என்று சில நண்பர்கள் கூறினார்கள்.ஆனால் எனக்கு இன்னமும் அதன் சாத்தியகூறுகளைப்பற்றி நம்பிக்கை உள்ளது.

எட்டு மணிக்கு பூங்கா மூடப்படும் என்பதால் 7.45 மணிக்கே மசால்வடை வினியோகம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு நடக்க இருந்த தி.த. கூட்டத்தை கவர் செய்ய வந்த உண்மை நிருபர்களுடன் வந்த கவிஞர் வளர்மதி வலைப்பதிவாளர்கள் கூட்டத்தை தி.த கூட்டம் என்று கருதி பேச ஆரம்பித்த போது துள்ளி எழுந்த சிமுலேசன் நிலைமையை விளக்கினார்.

சிமுலேசன் அவருடைய வலைப்பதிவில் உள்ள புகைப்படத்தை விட இளமையாகவும் ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார்.அவரிடம் அதிகம் பேசமுடியாமல் போய்விட்டது. இதே போன்று பல நண்பர்களுடன் அதிகம் பேசமுடியாமல் போய்விட்டது.இனி அடிக்கடி சென்னையில் மீட்டிங்கில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

நண்பர் பாலா கூறியது போல் குறைந்த கால அவகாசத்தில் கூட்டப்பட்டது என்றாலும் நிறைய நண்பர்கள் வந்திருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.இது போன்ற கூட்டங்களை மாதம் ஒரு முறையாவது நடத்தலாம்
வலைப்பதிவர் என்ற ஒற்றுமையை தாண்டி அவரவர்களுக்கு தனித்தனி கருத்துக்கள், அரசியல் ஆர்வங்கள் இருக்கிறது என்பதையும் அது இயற்கையானதுதான் என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

வலைப்பதிவர் கூடிப்பேச குழுமத்தில் இயங்குவது முட்டுக் கட்டையாகிவிடக்கூடாது.கவிதை பிடித்தவர்கள் சேர்ந்து கவிதைக்கு குழுமம் அமைப்பது போல் ஒரு அரசியல் கருத்தை பிடித்திருப்பவர்கள் அதை சார்ந்து குழுமம் அமைக்கலாம்.இத்தனையையும் மீறி மாற்று கருத்து இருப்பவர்களுடன் நண்பராக பழகலாம்.அது தான் வளர்ச்சி.முதிர்ச்சி இந்த தெளிவு சென்னை வலைப்பதிவாளர்கள் பலருக்கும் இருப்பது ஒரு ஆரோக்கியமான கூறு.எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது.இதற்காக சென்னை வலைப்பதிவாள நண்பர்களுக்கு ஒரு ஜெ போட்டுக்கொள்கிறேன்.

இந்த பக்குவம் இல்லாத ஒரு ஆத்மா கூட்டுவலைத்தளத்தில் கடந்த வாரம் வந்த ஒரு கட்டுரையைப் பார்த்து குழுமம் கலைக்கப்படுமா என்று அனானியாக கேட்டது ஞாபகம் வருகிறது.

அடுத்த வலைப்பதிவாளர் கூட்டத்தில் இருந்து கூட்டத்தில் என்ன பேசுவது என்பதை முதலிலேயே முடிவு செய்துவிட வேண்டுமாய் சந்திப்பை ஒருங்கிணைக்கும் சென்னை நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். அறிமுகத்திற்கு பிறகு,கவிதை படிப்பது, கட்டுரை படிப்பது அல்லது ஏதாவது தலைப்பில் விவாதம்(கலந்துரையாடல் செய்வது) என்று வைத்துக் கொள்ளலாம்.

நாகேஸ்வரா பார்க் என்பது எழு மணிக்கு மேல் இருட்டி விடுகிறது. யார் வருகிறார்? யார் போகிறார் என்று குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. சென்னையில் இருப்பதாக கூறப்பட்ட அந்த மனிதரையும் டோண்டுவையும் சந்திக்க வைத்து சூழலை சரியாக்கலாம் என்று நினைத்து இருந்தேன். அது சரியாக அமையவில்லை. என் பெருந்தலைவர் ஜோசப் வராதது எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

அடுத்த முறை சந்திப்பை வெளிச்சம் இருக்கும் இடத்தில் நடத்தலாம். மெரினாவில் கூட முயற்சி செய்யலாம்.

மதுரையில் தீபாவளி சமயத்தில் ஒரு சந்திப்பு நடத்தலாம் என்பது என் ஆசை. மதுரையை சேர்ந்த நண்பர்கள்( லிவிங் ஸ்மைல், தருமி, ராம்,பிரபு ராஜதுரை உள்ளிட்டோர்) தொடர்பு கொண்டால் இதைப்பற்றி மேலும் விவாதிக்கலாம்.

(திராவிட ஃபிகர் மேட்டரை பற்றியும் வாட்டர் பாக்கெட்டை முகர்ந்து மப்பாகி மயக்கம் அடைந்தவரைப்பற்றியும் வரும் பாகங்களில் )

Wednesday, August 23, 2006

தேசபக்தி, ஜெய்ஹிந்த் பற்றி செல்வன்

வலைப்பதிவுகளில் தேசப்பக்தி ஆறாக பெருக்கெடுத்து போனதையும் அதில் பல வலைப் பதிவாளர்கள் அடித்துசெல்லப்பட்டதையும் பார்த்திருப்பீர்கள். நண்பர் செல்வனின் பதிவில் இதுப்பற்றி சில சுவையான வாதங்களை பார்க்கமுடிந்தது.

சுதந்திர இந்தியாவின் சிறுமைகளை பேச வெட்கப்பட்டுக்கொண்டு முன்னேறிய ஒரு சிறிய சதவீத மக்களைப்பற்றி மட்டுமே பேசி புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருந்தால் இந்தியா முன்னேறாது. மாறாக சுதந்திரம் பெற்று ஐம்பது வருடங்களுக்கு பிறகும் இங்கு நிலவும் பல்வேறு சமூக ஏற்றத்தாழ்வுகள், சமுதாய மேடுபள்ளங்கள் இவற்றைப்பற்றி யோசித்தவர்களால் தான் நாடு இந்த அளவாவது முன்னேறியுள்ளது.

என்று ஒரு பெண் நடுநிசியில் சுதந்திரமாக உலவ முடிகிறதோ அன்றுதான் நிஜமான சுதந்திரம் என்று காந்தியார் கூறியது போல் என்று அனைத்து மக்களும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடிந்தால்தான் நிஜமான சுதந்திரம் என்று நினைக்க அனைவருக்கும் உரிமை உள்ளது.நினைத்தபடி வாழ்ககையை அமைத்துக்கொண்டவர்களுக்கு முழுதிருப்தி என்றால் முழுதிருப்தி இல்லாத ஆட்களுக்கு அவர்கள் வருத்தத்தை பகிர உரிமை உள்ளது.

மூச்சை அடைத்துக்கொண்டு ஜெய்ஹிந்த் போடாதவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் என்றும் இந்தியாவை கூறு முக்கால் ரூபாய் என்று விற்பவர்கள் என்றும் கூறுவது நகைப்பிற்குரியது.தேசபக்தியை இதை வைத்து அளக்கமுடியாது. நாடு என்ற கற்பிதத்தை போலியாக போற்றுவதை விட அதில் உள்ள பெரும்பான்மையான மக்களின் நலனுக்காக பேசுவது கண்டிப்பாக சிறந்ததுதான்.

லிவிங் ஸ்மைல் போன்றவர்களுக்கு இந்த நாடு என்ன செய்தது என்பதை "நாட்டுக்கு நீ என்ன செய்தாய்" போன்ற குழந்தைத்தனமான கேள்விகளை கேட்டு மறைக்கமுடியாது. அவர் நிலையில் இருந்து அதை பார்க்க வேண்டும். அதே போல் ஒரு லிவிங் ஸ்மைல் இன்று ஒரு நல்ல வேலையில் அமர்ந்துவிட்டதை வைத்து இந்த நாட்டில் திருநங்கைகள் வாழும் வாழ்க்கையை எடை போட்டுவிட முடியாது.அப்துல் கலாம் ஜனாதிபதியாகிவிட்டதால் முஸ்லீம்களின் குறைந்த கல்வி அறிவு சதவீதத்தை நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்கமுடியுமா?

ஆந்திராவில், மகராஷ்ட்ராவில் தற்கொலை செய்துக்கொண்டு இறக்கும் ஏழை விவசாயிக்கு நாடு என்ன செய்தது என்று கேட்க அனைவருக்கும் உரிமை உள்ளது. இந்த கேள்விக்கும் அவர்கள் நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்பதுதான் பதிலா? இந்த நாட்டில் அறுபது சதவீததிற்கும் மேலான மக்கள் வாழும் வாழ்க்கைத்தரம் என்ன?அதை வைத்துத்தான் நாட்டின் முன்னேற்றத்தை எடை போடமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து.

முன்னேறியவர்கள் தங்கள் நலத்தை மட்டுமே பார்த்துக்கொள்வதும் அந்த சுயநலத்தில் பொதுநலன் இருப்பதாக பில்ட் அப் செய்வதும் ஆபாசமானது. பல நிறுவனங்களை சாம, பேத, தான தண்ட முறைகளில் அழித்த மைக்ரோசாப்ட் நிறுவனம் எய்ட்ஸ் ஒழிப்பிற்கு பல கோடிகளை அள்ளி விடுவதை பாராட்டும் நம் மிடில் கிளாஸ் மனசாட்சிதான் இதில் தெரிகிறது. அதாவது அவர் சம்பாதிக்க எந்த வித நெறிமுறையும் இல்லாமல் கொள்ளை அடிக்கலாமாம்.ஆனால் ஏழைகளுக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்தால் சரியாகிவிடுமாம்.என்ன கூத்து இது?

மத்திய அரசு பணிகளில் 1980 களில் தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வந்தது என்பதே ஒரு அதிர்ச்சிதகவல்.இன்று அதே மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டி உள்ளது.இதை நினைத்து நாம் என்ன பெருமைப்படுவது? இன்று அரசியல் அரங்கில் பிற்படுத்தப்பட்டவர்களின் அதிகாரம் செல்லுபடியாகும் இந்த சூழ்நிலையிலும் இந்த சட்டம் இந்த பாடுபடுகிறது.இது சந்தோஷப்படக்கூடிய செயல்பாடா?

14வது மக்களவையில் 136 எம்.பி.க்கள் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்களாம்.இதில் பெருமைப்பட ஏதாவது உள்ளதா?

நாடு சரியில்லை என்று புலம்புபவர்கள் அதை மட்டும் செய்வதில்லை.அது சம்பந்தமாக மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். நம்மிடம் இருக்கும் பிரச்சினைகளைப்பற்றி ஒரு பொதுகருத்து எட்ட முயல்கிறார்கள்.ஆனால் நம்மிடம் பிரச்சினையே இல்லை என்று கூறுபவர்கள் பிரச்சினைகளை மறைக்கிறார்கள் என்பதுதான் எங்கள் புலம்பல்.நாட்டில் உள்ள பிரச்சினைகளை வெளிப்படையாக பேசுபவன் தீவிரவாதி என்றும் தேசத்துரோகி என்றும் சித்தரிப்பது பலகாலமாக நடப்பதுதான்.

போராடுபவன் ஏன் போராடுகிறான் ? எவனும் தற்கொலை படையாக ஆக விரும்பி வரமாட்டான். எவனும் நக்சலைட்டாக ஆகவேண்டும் என்று வரம் வேண்டி ஆவதில்லை. அவன் தரப்பு நியாயத்தை அவன் நிலையில் இருந்து பார்க்கவேண்டும்.காஷ்மீரிலிருந்து வடகிழக்கு மாநிலங்கள் வரை இந்திய தேசியத்தின் தவறான கொள்கைகள்தான் இந்தியாவிற்கு பிரச்சினைகள் ஏற்படுத்தி உள்ளன என்று கூறினால் அது தேசவிரோதமா?

"எனக்கு இந்தியா மேலே நேசம் இருக்கே ஒழிய பக்தி இல்லை. அதனால அதன் குறைகளை குறிக்கவோ, ஒழிக்க முனைவதிலோ எனக்கு தயக்கமில்லே" என்று சொல்வேன்.அதனால, "போங்கடா நீங்களும் உங்க 'ஜெய் ஹிந்த்'" ம்னு கண்டிப்பா சொல்வேன்" என்று ஒருவர் கூறிய கருத்தில் எனக்கு முழு ஒப்புதல் உண்டு.

லோக்பிரதான் தேர்தலில் நின்றபோது ஓட்டு விழவில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.லோக்பிரதானின் யோக்கியதை சில நாட்களிலேயே பல் இளித்தது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

//நல்லவேளை ஏழை ஜனம் தேசபக்தியோடு இருப்பதால் நாம் தப்பிக்கிறோம்.இல்லாட்டா நம் நாட்டின் கதி என்ன?//

இந்த வாக்கியம் பயங்கர காமெடி செல்வன், குழந்தை மாதிரி பேசறீங்க என்று நான் சொன்னதற்கு ஒரு கிளாசிக் உதாரணம் இது.இது போல் பல இடங்களில் பின்னூட்டங்களில் சொல்லி உள்ளீர்கள்.குழாயில் தண்ணீரை அண்ணன் தரவில்லை என்றால் அம்மாவை அடிப்பது முறையா?(இது காவிரி பிரச்சினைக்கு நீங்கள் தரும் பதில்.மேலும் தமிழக அரசு இந்த விஷயத்தில் சரியாக நடந்துக் கொள்ளவில்லை என்ற ஜல்லியை அடிப்பீர்கள்.நாமெல்லாம் ஒரே தேசியம்தானே.அப்புறம் ஏன் அவர்கள் மறுக்கவேண்டும் என்பதுதான் கேள்வியே. அப்படியானால் தேசியம் என்பதில் புத்திசாலியாக( as you said Clever) இருப்பவன் பிழைத்துக்கொள்ளலாம்.மற்றவன் தற்கொலை செய்துக்கொண்டு சாகவேண்டும் என்பதுதானா?

//ஒருவன் ஏழையாக பிறப்பது கண்டிப்பாக அவன் குற்றம் இல்லை.ஆனால் ஒருவன் ஏழையாக சாவது என்பதில் அவன் மீது அரை சதவிகிதமாவது தப்பு இருக்கும்.போராடினால் தான் வெல்ல முடியும்.போராடாத மனிதன் மண்புழு தான்.//

இதையும் நீங்கள்தான் சொல்கிறீர்கள்.இது நியாயமா என்று ஒருகணம் யோசிக்கவும். சினிமாவில் தான் கதாநாயகனுக்கு லாட்டரி அடிக்கும்.அல்லது ரஜினியின் அண்ணாமலை படம் போல் ஒரு பாட்டு முடிவதற்குள் பெரிய ஆள் ஆகமுடியும்.நிஜ வாழ்வில் ஒரு அரசாங்கத்தின் கடமை அனைவருக்கும் வாய்பபு ஏற்படுத்து தருவதே,

//சிதம்பரம் கோயிலில் மணியாட்டுபவன் தமிழ் பேசவில்லை என்றால் மொழியுரிமை இல்லை என்பது டூ மச்.தமிழ் மொழிக்காக பல போராட்டங்களை செய்தோம்,இன்னும் பலவற்ரை செய்ய வேண்டியுள்ளது.அதை எல்லாம் மறுக்கவில்லை.ஆனால் மொழி உரிமை இல்லை,தமிழ் ஒடுக்கப்படுகிறது என்பதெல்லாம் மிக மிகைப்படுத்தப்ப்ட்ட கூற்று.//

ஹிஹி.....மொழியின் அருமையைப்பற்றி பதிவு போட்ட செல்வனா இது?

//தமிழன் தான் இன்று நாட்டின் முதல் குடிமகன்.மத்திய அரசை தாங்கி நிற்பவன் தமிழன்.பெரும் பொறுப்புக்களில் தமிழன் இன்று மத்தியில் ஆளுகிறான்.இதை எல்லாம் பயன்படுத்தி மொழிக்கும்,நாட்டுக்கும் வேண்டியதை சாதித்துக்கொள்ள வேண்டியது அவன் கடமை.//

ஹிஹி இதுவும் ஜோக..என்ன செய்யமுடியும் இந்த சூழ்நிலையில்? ஒரு இடஒதுக்கீட்டுக்கு போராடிய தமிழன் சகதமிழனிடம் கூட மரியாதை இல்லாம நிக்கிறான்.உதாரணத்திற்கு இடஒதுக்கீடு பற்றி உங்கள் கருத்து என்ன என்று விளக்கமாகவும் வெளிப்படையாகவும் உங்களால் சொல்லமுடியுமா?

அப்துல்கலாமை நினைத்து புளகாங்கிதப்பட என்ன இருக்கிறது என்று நிஜமாகவே எனக்கு புரியவில்லை.நல்லவர்தான். குழந்தைகள் மேல் பாசம் உள்ளவர்தான்.ஆனால் அவரால் ஜனாதிபதியாக என்ன மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்த முடிந்தது?

//அமெரிக்காவில் இப்படித்தான் பெண்ணுரிமை இல்லை,சம உரிமை இல்லை,என்று வருஷம் முழுக்க போராடுவார்கள்.ஜூலை 4 வந்தால் அனைவரும் சேர்ந்து கொடியேற்றி சல்யூட் அடிப்பார்கள்.அடுத்த நாள் மீண்டும் ஊர்வலம் போவார்கள்.//

அவங்கவங்க பாதிப்போட அழுத்தத்தை பொறுத்தது அது செல்வன்..இங்க அடிப்படை தேவைகளே பூர்த்தியாகாத ஆட்கள் நிறைய இருக்காங்க

//கலவரம்,வன்முரை இவை இல்லாத நாடு என ஏதேனும் உண்டா?ஒரு நாடு கூட இல்லை.//

அப்படியா? ...நான் ஏதோ நம்மளை மாதிரி சில நாடுகள் தான் சுதந்திர தினத்தைக்கூட பயந்து பயந்து கொண்டாடுவதாக நினைத்தேன்.:))
இவையெல்லாம் மாற்றுக்கருத்துக்கள்தான். ஆனால் இதை சொல்பவர்கள் எல்லாம் இந்தியாவை கூறுக்கட்டி விற்பவர்கள் என்று கூறினால் அது மிகப்பெரிய காமெடியாகத்தான் இருக்கும்.

Sunday, August 20, 2006

புலித்தம்பிக்கு அண்ணனின் ஆப்பு

அருமை தம்பி வைகோ கள்ளத்தோணியில் இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்ததால்தான் ராஜீவ் பிரபாகரனை சந்திக்கும் ஒரு புரட்சிகரமான திட்டம் கைவிடப்பட்டது என்று அர்த்தம் தெனிக்கும்படி ஒரு கருத்தை அண்ணன் கலைஞர் நேற்று கூறியிருக்கிறார்.

இதை ஆப்பு என்று எடுத்துக்கொள்வதா அல்லது மெஸேஜ் என்று எடுத்துக் கொள்வதா என்று தெரியவில்லை.வைகோ அடக்கி வாசிக்க வேண்டும் என்று அண்ணன் விரும்புவதாக தெரிகிறது.இலங்கை தமிழர் பிரச்சினை என்பது தமிழக மக்களின் உணர்வு பூர்வமான ஒரு பிரச்சினை என்பது ஒருபுறமிருக்க இதை வைத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கபடி விளையாடுவது என்பது பல காலமாக நடந்து வருவதுதான்.

நேற்று மதிமுகவின் குட்டித்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளை ஆதரித்து துப்பாக்கி தூக்குவேன்,தனிதமிழ்நாடு கேட்போம் என்பதுபோன்ற பேச்சுக்களுக்காக அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் கூறுகிறது.மேலும் கலைஞர் இது தொடர்பாக பிரதமருடன் பேசி வருவதாகவும் என்ன பேசினார் என்று தமிழ் மக்களின் நன்மை கருதி வெளிப்படையாக கூற முடியாது என்று சட்டசபையிலே ஆற்காடு வீராசாமி கூறியிருந்தார்.

அண்ணன் கலைஞர் ஏற்கனவே ஒருமுறை ஆட்சியை இதனால் இழந்தது குறிபபிடத்தக்கது.ஆகவே அண்ணன் இந்த முறை உஷாராக வண்டியை ஓட்ட முடிவு செய்துள்ளார்.தம்பி வைகோவும் அம்மாவின் அணியில் இருப்பதால் அவரும் மிக வெளிப்படையாக எதையும் அம்மாவின் அனுமதியை மீறி பேசிவிடமுடியாது.

சேலத்தில் நடந்த தமிழர் மாநாட்டிலும் குட்டித்தலைகள் பல பிரபாகரனை பகிரங்கமாக ஆதரித்து பேசிய நிலையிலும் மாநாட்டில் பேசிய ராமதாஸ் அடக்கி வாசித்தது குறிப்பிடத்தக்கது. வெற்று பேச்சு கவைக்கு உதவாது என்ற முடிவுக்கு நமது தலைவர்கள் வந்துள்ளது பாராட்டத்தக்கது. அதிகாரம் பறிப்போய்விடும் என்ற பயம் இந்த பக்குவத்தை அவர்களுக்கு கொண்டு வந்திருந்தாலும் நல்லதுதான்.இப்போதைக்கு திருமாவளவன் கொஞ்சம் அதிகமாக பேசிவருகிறார்.ஆனால் அவருக்கு அவர் எல்லை தெரியும்.

இந்த விஷயத்தில் உணர்ச்சி வசப்பட்டு பேசினால் இதை சாக்கிட்டு தமிழ் உணர்வையே கேலி பேசும் சக்திகளின் ஆட்டம் அதிகமாகிவிடும்.ஆனால் மத்திய அரசில் தமக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அதிக சலசலப்பு இல்லாமல் இலங்கை விஷயத்தில் ஒரு நல்ல முடிவு ஏற்பட கலைஞர், ராமதாஸ்,வைகோ ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Thursday, August 17, 2006

ஆகஸ்ட் சிந்தனைகள் by Dummy

சுதந்திர தின உரையை பாரத பிரதமர் குண்டு துளைக்க முடியாத கூண்டுக்குள் இருந்துதான் நிகழ்த்த முடிகிறது. வழக்கம் போல் பாகிஸ்தானுக்கு சவால், ஏழை விவசாய மக்களுக்கு ஆறுதல் என்று அனைத்து மசாலக்களையும் தூவி தயாரிக்கப்பட்ட இந்த உரையில் பெட்ரோலிய பொருள்கள் விலை உயரும் என்று சூசகமாக தெரிவித்தாராம் பிரதமர்.விலைகளை குறைக்க போராடுவோம் என்றுதான் சொல்வது வழக்கம். இப்போது தலைகீழாகி விட்டது. இந்தியா தான் வளருதாமே? கண்டுக்காத மாமே.


இந்த காஷ்மீர் பிரச்சினையில் தைரியமாக முடிவெடுக்கக்கூடிய ஒரு அரசாங்கம் நமக்கு கிடைக்கும் வரை அல்லது பாகிஸ்தான் அழியும்வரை இந்த பிரச்சினையை ஒழிக்கமுடியாது என்று தோன்றுகிறது.

***********

இலங்கை பிரச்சினை சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் கணிசமாக பகுதிகளை தங்கள் கைவசம் விடுதலைபுலிகள் வைத்துக் கொண்டிருப்பதாகவும் அங்கே தனி அரசாங்கமே நடக்கிறது என்றும் மற்ற நாடுகளின் அங்கீகரிப்புதான் இப்போதைக்கு தேவை என்றும் பலரும் கூறுகிறார்கள்.ஆயினும் அவர்களுடன் தொப்புள்கொடி உறவு கொண்டிருக்கும் நம்மில் பலபேர் அவர்களை தீவிரவாதி என்று கூறி நம் நடுநிலைமையை நிலைநாட்டுகிறோம்.

ராஜீவ் காந்தி ஒருவருக்காக ஒரு இனத்தையே அழிய விடமுடியுமா என்று தரண் கேட்கும் கேள்வி ஒதுக்கப்படக்கூடியது அல்ல. ராஜீவ்காந்தி இலங்கை பிரச்சினையை அணுகிய விதம் தவறு என்பது எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று கூறி நடுநிலைமையை நிலைநாட்டும் நாம், அறுபது பச்சிளம் தளிர்களை கொன்ற இலங்கை ராணுவத்தின் அட்டூழியத்தை கண்டிக்காத நாம், எங்கோ அடாவடி பண்ணும் இஸ்ரேலுக்கு தட்டும் ஜால்ராவில் கேட்பவர்கள் காது கிழிகிறது. கண்ராவி.

*****************

துளசியின் இந்த பதிவு இது எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கவில்லை. மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழை நக்கல் அடிக்கிறார்கள் என்று வருத்தப் பட்டிருக்கிறார். அவ்வளவு தூரம் போக தேவையில்லை. நம் ஊரிலேயே தமிழை மட்டம் தட்ட பலர் இருக்கிறார்கள்.

ஜெயராமன் தமிழின் போதாமை என்று கூறி சில கருத்துக்களை அள்ளி விட்டுள்ளார். அதற்கு முன் தமிழில் என்ன இருக்கிறது என்ன இல்லை என்று அறிந்து,தெளிந்து கூறியிருக்கலாம்.இதுபோன்ற கருத்துக்கள் வருவதற்கு காரணமே தமிழ் என்பது ஒரு தனிப்பட்ட, தனித்தியங்கக்கூடிய ஒரு மொழி என்ற கருத்தையே இவரை போன்றோர் ஒத்துக்கொள்ளாததுதான். சம்ஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது தான் தமிழ் என்ற இவர்கள் அடிப்படை கருத்தே இவ்வாறு திரிந்து வருகிறது.

எப்போதும் அமைதியாக இருக்கும் ராகவன், லைட்டாக உணர்ச்சிவசப்பட்டு அதி ராகவன் ஆகிவிட்டார். இராம.கி மற்றும் குமரன் ஆகியோர் அதற்கு சரியான,விளக்கமாக பதிலை தந்துள்ளார்கள்.

ஜெயராமன் ஒரு மொழி அறிஞர் என்று அடையாளம் காணப்படுபவர் அல்ல. ஆகையால் அவருடைய இந்த கருத்திற்கு பின்னால் இருக்கும் அரசியல் கவனிக்கத் தக்கதாகிறது. முக்கியமாக கல்வெட்டு கருப்புவின் பதிவில் கூறிய இந்த வரிகள் சிந்திக்கத்தக்கவை.

"உனக்கு ஆயிரம் மொழிகள் தெரிந்து இருக்கலாம். ஆனால், நீ எந்த மொழியுடன் உன்னை அடையாளப்படுத்திக் கொள்ள(இணைத்துக் கொள்ள) மனதால் விரும்புகிறாய் என்பது முக்கியம்.நீ அதுவாகவே ஆகிறாய்.அதனாலேயே அடையாளம் காணப்படுகிறாய்."


Friday, August 11, 2006

சிங்கார சென்னைக்கு வருகிறேன்

இந்த வருடம் ஜனவரி முதல் வாரத்தில் புத்தக கண்காட்சி மற்றும் ஏ.டி.பி டென்னிசுக்கு வந்தப்பிறகு இப்போது மீண்டும் ஆகஸ்ட் 31ம் தேதி சென்னை வருகிறேன்.ஒரு மூன்று,நான்கு நாள் இருப்பேன் என்று நினைக்கிறேன்.இந்த முறை சென்னை விஜயத்தின் போது நான் சந்திக்க நினைக்கும் நண்பர்கள் லிஸ்ட் பெரிதாக இருக்கிறது. கீழ்க்கண்ட அனைவரையும் சந்திக்க ஆசை.

ரஜினிராம்கி, டோண்டு,ஜோசப், ரோசாவசந்த், குப்புசாமி, பினாத்தல், சந்திப்பு, பாலபாரதி, முத்துகுமரன், ராகவன், தங்கவேல், செல்வகுமார், பொன்ஸ், பூபாலன், லக்கிலுக், இட்லிவடை மற்றும் இதில் கூற மறந்த மற்ற நண்பர்களையும் சந்திக்க ஆசை.ஆர்வம் உள்ள சென்னை நண்பர்கள் எனக்கு ஒரு மெயில் தட்டி விடலாம். முடிந்தால் ஒரு பிளாக்கர் மீட்டிங்கும் நடத்த உத்தேசம்.

************************

முதுகலை படிக்க சென்னையின் மூன்று புகழ்பெற்ற கல்லூரிகளில் முட்டி மோதினேன் என்று கூறியிருந்தேன். எல்லா கல்லூரிகளில் என் மதிப்பெண்களுக்கு சுலபமாக சீட் கிடைக்கும் என்றார்கள்.எனக்கென்னவோ அந்த வயதில் லயோலா,கிறிஸ்டியன் காலேஜ் மேல் அப்படி ஒரு கிரேஸ். அந்த நம்பிக்கையில் தைரியமாக முயற்சி செய்தேன்.

இந்த மூன்று கல்லூரிகளிலும் அவர்கள் வைத்த நுழைவு தேர்வினில் தேறி விட்டேன். உடனே எனக்கு ஒரு நம்பிக்கை வந்துவிட்டது.பிரசிடென்சியில் நேர்முகத்தேர்வு இல்லை. ஆனால் லயோலாவிலும்,கிறிஸ்டியன் கல்லூரியிலும் நேர்முகத்தேர்வு இருந்தது. நன்றாகவே செய்திருந்தேன்.

குறிப்பாக கிறிஸ்டியன் காலேஜ் நேர்முகத்தில் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் சொன்னதால் மிகவும நம்பிக்கையுடன் இருந்தேன். அங்கிருக்கும் டென்னிஸ் கோர்ட்டில் விளையாடுவது போலவும், அங்கு மேய்ந்து திரியும் மான்குட்டிகள்(நிஜ மான்குட்டிகள் தாங்க)உடன் விளையாடுவது போலவும் கனவுகள் காண ஆரம்பித்தேன்.

ஆனால் விதி சதி செய்தது.தேர்வு பட்டியலில் என் பெயர் இல்லை.ஓபன் மற்றும் பி.சி என்று அனைத்து சீட்டுக்களையும் பெண்களே கைப்பற்றினர். போனால் போகிறதென்று எஸ.சி கோட்டாவில் ஆண்குலம் சிலரின் பெயர் இருந்தது.பட்டியலை பார்த்து துள்ளி குதித்த ஒரு ஜீன்ஸ் போட்ட ஒரு இளங்கன்னியை கேட்டே விட்டேன்.

எச்சூஸ் மீ, உங்க பர்சன்டேஜ் என்ன?

புழுவை போல் என்னை பார்த்த அந்த அழகிய இளம்பெண் சொன்னாள்.

"நைன்ட்டி ஓன்"

அதற்குப்பிறகு அங்கு எனக்கு என்ன வேலை? திரும்பி வரும்போது என் மாமன் சொன்னான்.

"டேய், இப்படி ஒரு ஃபிகர் கூட நீ படிக்கிறது ஆண்டவனுக்கே பொறுக்கலைடா"

சில நாட்கள் கழித்துத்தான் சென்னையில் உள்ள சில பெண்கள் கல்லூரிகளில் இன்டர்னல் மார்க் என்பது ஐம்பது சதவீதம் என்பதால் தொண்ணூறு சதவீதம் என்பது சாதாரணம் என்று தெரியவந்தது.

ஆனால் என் நண்பன் ஒருவன் எம்.பி.சி கோட்டாவில் கெமிஸ்ட்ரியில் நுழைந்து விட்டான்.நானும் அப்போதெல்லாம்(ஹிஹி..இப்போதும்தான்) பட்லர் ஆங்கிலம்தான் என்றாலும் ஒரு டவுனில்தான் வளர்ந்தேன்.அவனோ பிராப்பர் கிராமத்தான். அவனால் ஆறு மாதத்திற்கு மேல் அங்கு படிக்க முடியவில்லை. இடையில் படிப்பை விட்டுவிட்டான்.காரணம் அதேதான். அந்த மெட்ரோபாலிடன் சூழ்நிலையில் அவனால் சர்வைவ் செய்யமுடியவில்லை.

Wednesday, August 09, 2006

எழுத்துலக பயணமும் சென்னை பயணமும் - 1

என் வலைப்பதிவுலக வாழ்க்கையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகிறது(ஓவர் பில்ட் அப்பாக இருக்கிறதா:) என்று நினைக்கிறேன். தொடர்ந்து பதிவுகள் எழுதுவதினால் என்ன பலன் என்று யோசிக்க ஆரம்பித்தால் அது இரண்டாம் கட்டம்தானே?

மிகுந்த ஆர்வமாகவும் தொடர்ந்தும் வலையுலகில் இயங்குவதன் தொடர்ச்சி என்ன?பலன் என்ன? கண்டிப்பாக வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் வலைப்பதிவில் இயங்கக்கூடாது என்றுதான் நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

இந்த யோசனை வருவதற்கு காரணம் என்ன? இணையத்தில் தமிழை கண்ட ஆர்வத்தில் எழுதி,சலித்து போய் தமிழின், எழுத்தின் மீதான கவர்ச்சி குறைந்து விட்டதா என்ற யோசனை ஒரு பக்கம், சமூகத்தின் மீது வெறும் விமர்சனங்களை மட்டும் வைத்து என்ன ஆகப்போகிறது என்ற நினைப்பு மறு பக்கம்,நடைமுறை ரீதியாக விஷயங்களை பார்க்கமறுத்து எதிர்மறை விமர்சனம் மட்டுமே செய்யும் அரைகுறைகளினால் ஏற்படும் சலிப்பு இன்னொரு பக்கம் என்று பல யோசனைகள். சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தால் இவை எவையுமே காரணம் இல்லை என்பது புலப்படுகிறது.

ஆனால் தொடர்ந்து வலையுலகில் ஆர்வமாக இயங்குவதின் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன என்று பார்த்தால் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்துள்ளதை உணர முடிகிறது.பேசி பேசி முனை மழுங்கி போன விஷயங்களை மீண்டும் மீண்டும் எதிர்க்கொள்வதில் உள்ள சங்கடங்கள் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் இவையெல்லாம் பிரச்சினைகளாக தோன்றவில்லை.ஆனால் போக போக இந்த வகையிலான பிரச்சினைகள் அதிகமாக தெரிகின்றன.

தளங்களின் வேறுபாடுகளினால் வரும் சிக்கல்கள் தான் சிக்கல்களில் தலையாய பிரச்சினை. சமூகத்தின் பொதுபுத்தி சார்ந்த கருத்துக்களுக்கு புனிதபிம்ப முலாம் பூசப்படுவதால் சோர்வு தட்டுகிறது பல நேரம்.இந்த சிக்கல்களைப்பற்றி யோசித்து பார்த்தால் இவைகளின் தீர்வும் இந்த பிரச்சினைகளிலேயே உள்ளன என்பதையும் உணரமுடிகிறது.

நம் எழுத்தை பட்டை தீட்டிக்கொள்ள ஒரு களன் என்பதும் நாம் நினைக்கும் கருத்துக்கள் பெரும்பாலானவர்களை நாம் நினைக்கும் விதத்தில் சென்று சேருகிறதா என்பதை சோதிக்கும் தளமாகவும் வலைப்பதிவுகள் இருக்கின்றன என்பது நல்ல விஷயமே.

இதையும் மீறி மிகப்பெரிய நன்மையாக நான் நினைப்பது வலைப்பதிவுகளின் மூலம் பெற்ற நண்பர்கள்தான்.நிறைய நண்பர்களை நான் வலைப்பதிவுகள் மூலம் பெற்றிருக்கிறேன். தொடர்ந்து ஒருவரை படிப்பதன் மூலம் எழுதுபவரின் மனதையும் மனம் இயங்கும் விதத்தையும் புரிந்துக் கொள்ளமுடிகிறது. ஒருவரிடம் பழகி அவர்களை புரிந்துகொள்வதற்கு எந்த விதத்திலும் குறைவில்லாத புரிதலை அவர்களை படித்து புரிந்துக்கொள்வது தருகிறது என்றுதான் நினைக்கிறேன்.(சிலர் விஷயங்களி்ல இதில் தவறுகள் நேரலாம்).ஆனால் பெரும்பாலும் இது சரிதான்.

இவ்விதம் நெருக்கமாக நான் உணரும் பல நண்பர்களை நான் இன்றுவரை நேரில் சந்தித்ததே இல்லை என்பதுதான் இதில் ஆச்சரியமானது. பொதுவாகவே ஒரு முறை பேசினாலே ரொம்ப நெருங்கி பழகும் தன்மை என்னுடையது.(இது பலவீனமா என்று எனக்கு தெரியவில்லை).நண்பர்கள் தினத்திற்கு எழுத வேண்டிய கட்டுரையை காலம் தாழ்த்தி எழுதுகிறேனோ?

************************

சென்னை என் மனதில் எப்போதும் ஒரு சிறப்பான, கவர்ச்சிகரமான இடத்தை பிடித்துள்ளது. இத்தனைக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய முறை தான் நான் சென்னைக்கு வந்திருப்பேன்.முதன்முதலாக எப்போது சென்னைக்கு வந்தேன் என்று இன்று நினைத்துப்பார்க்கிறேன். நினைவு தெரியாத ஐந்து வயது பருவத்தை எல்லாம் தாண்டி யோசித்து பார்க்கையில் பட்டபடிப்பு முடித்தப்பின் முதுகலை(பிஸிக்ஸ்) சேருவதற்காக லயோலா, பிரசிடென்சி, கிறிஸ்டியன் காலேஜ் ஆகிய மூன்று கல்லூரிகளிலும் சேர கடும் முயற்சி செய்த காலத்தில்தான் முதன்முதலாக சென்னை வந்தேன். எந்த கல்லூரியிலும் கிடைக்கவில்லை. கோவை பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்தவுடன் பிரசிடென்சியில் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்து கிடைத்தது. போகும் சூழ்நிலை இல்லை. பல மாதங்கள் எதையோ இழந்ததாக வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தேன்.

அந்த காலக்கட்டத்தில் சென்னை போகும்போதெல்லாம் என் உறவினர் பையன்(அப்போது சி.ஏ படித்துக்கொண்டு இருந்தான். இன்னமும் படிக்கிறான்). அவன் ரூமில் தங்குவேன். திருவல்லிக்கேணி வெங்கடேஸ்வரா ஹாஸ்டல் என்று நினைக்கிறேன். அதைப்பற்றியும் சென்னைப்பற்றி என் மற்ற நினைவுகள் பற்றியும் அடுத்த பாகத்தில் தொடர்கிறேனே.

Sunday, August 06, 2006

வள்ளுவர் கோட்டத்தை காக்கவேண்டும்

ஏ.டி.பி டென்னிஸ் போட்டிகளை காணச்சென்ற நான் ஞாயிறன்று இரண்டு மணிநேரம் அருகில் இருந்த வள்ளுவர் கோட்டத்தில் கழிக்க வேண்டியது ஆயிற்று. வள்ளுவம் எங்கள் உயிர்மூச்சு. திருக்குறள் எமது மறை என்றெல்லாம் பிதற்றும் தமிழர்கள் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய இடம் வள்ளுவர் கோட்டம்.ஒரு காலத்தில் உள் நுழைய கட்டணம் வசூலிக்கப்பட்டுக்கொண்டு இருந்ததாம்.இப்போது இல்லை. முன்பகுதியில் சிறிய கார்டன். இந்தியன் வங்கி புண்ணியத்தில் நன்றாகவே மெயின்டெய்ன் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் மெயின் கட்டிடம் பெயிண்ட் செய்து எவ்வளவு வருடங்கள் ஆயிற்றோ தெரியவில்லை. அழுது வடிகிறது. உள்ளே ஹாலில் சர்வோதய சங்க கண்காட்சி நடைப்பெற்று கொண்டிருந்தது. அதையும் சகித்துக் கொள்வதில் நமக்கு பிரச்சினை எதுவுமில்லை.ஆனால் முக்கிய பகுதி மாடி வராண்டா.இங்குதான் அனைத்து குறள்களையும் அதிகாரங்களாக பிரித்து ஒவ்வொரு தூணில் பொறித்து படங்களுடன் வைத்துள்ளார்கள். இந்த பகுதியை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. சுத்தம் செய்து பல நூற்றாண்டுகள் உருண்டோடி இருக்கும் போல ஒரு தோற்றம். வெற்றிலை எச்சில். காகித குப்பைகள். காண்டம் ஒன்றுதான் இல்லை. பெயிண்ட் செய்து பல நாட்கள் ஆகியிருக்கும்.சுவர்களில் இருக்கும் படங்கள் துடைக்கப் படுவதில்லை. பாத்ரூம், டாய்லட் என்றெல்லாம் கூறப்படுகின்ற ஒரு பகுதியும் உள்ளே உள்ளது. தயவு செய்து யாரும் உள்ளே நுழைந்து விடாதீர்கள்.
சுத்தப்படுத்தபடுவதும் இல்லை. தண்ணீரும் இல்லை. மூச்சு திணறி விடும்.

வள்ளுவர் கோட்டத்தின் பின்புறம் பராமரிக்கப்படாமல் ஒரு பகுதி உள்ளது. அதில் ஒரு சிறிய தண்ணீர் தொட்டி கழுவப்படாமல் இருக்கிறது.அந்த பக்கமும் போக முடியவில்லை.யாராவது வெளிநாட்டுக்காரன் நாம் திருக்குறள் பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் பினாத்திக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு, என்னே தமிழர் தமிழ் பற்று! வள்ளுவர் பற்று! ஆக நாம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடம் வள்ளுவர் கோட்டம்தான் என்று நினைத்து வந்து பார்த்தால் நம் மானம் என்ன ஆவது?

சுத்தமாக மெயின்டெய்ன் பண்ணலாம்.அனைத்து குறள்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைக்கலாம். ஒரு சிறிய நூலகம் அமைத்து அனைத்து திருக்குறள் உரைகளையும் வாங்கி போடலாம். எவ்வளவோ செய்யலாம். பணம் பிரச்சினை என்றால் வசூல் செய்தால்கூட தமிழர்கள் கொடுப்பார்களே.மாற்று கட்சி அரசு வள்ளுவர் கோட்டத்தை அமைத்தது தான் பிரச்சினை என்றால் மாற்றுக்கட்சி அரசாங்கம் அமைத்த அனைத்து ரோடு, பாலம் அனைத்தையும் அரசாங்கம் இடிக்க முன்வருமா?

இல்லை செய்யமுடியாது என்றால் இந்த வள்ளுவர் கொட்டத்தை (இதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) இடித்து விடுங்கள் அய்யா. தமிழனின் மானமும் திருக்குறளின் மானமும் இப்படி காற்றில் பறக்கவேண்டாம்.அந்த இடத்தில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டிக் கொள்ளலாம். வருமானமாவது வரும்.

***********
மேற்கண்ட இந்த பதிவு ஆறு மாதங்களுக்கு முன்பு நான் எழுதியது.இன்று ஆட்சி மாறியிருக்கும் சூழலில் ,கண்ணகிக்காக வாளை சுழற்றிய கலைஞர் இதற்கும் ஆவண செய்வாரா?

Saturday, July 29, 2006

ரஜினி ராம்கியின் மு.கருணாநிதி

முதல் பகுதி இங்கே

http://muthuvintamil.blogspot.com/2006/07/1_28.html

என்னை பொறுத்தவரை சமூக நிகழ்வுகளில் அக்கறை கொள்ளும் / விமர்சிக்கும் மக்களின் பார்வையை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒரு பார்வை கலகப்பார்வையாக, நிலைப்படுத்தப் பட்டுள்ள கருத்துக்களின் மீதான மாற்று பார்வைகளை அங்கீகரிக்கும் பார்வையாக, அதிகாரத்தை எதிர்க்கும் பார்வையாக இருக்கும்.இதற்கு மாறான இன்னொரு பார்வை தன் நிலையை தக்க வைக்கும் பார்வை. தன் வாழ்க்கையை வைத்து எதையும் எடைபோடும் பார்வையாக இருக்கும். இந்த பார்வைகளில் உள்ள நுண்ணிய உள் வித்தியாசங்களை பொறுத்து புனித பிம்பங்கள் முதல் பிரிவினைவாதிகள் வரை உள்ள சகல அடையாளங்களும் ஒருவருக்கு உருவாகும்.

இந்த நூலின் ஆசிரியரின் அரசியல்நிலைப்பாடுகள் எனக்கு தெரியாது.சப்தமா சகாப்தமா என்ற புத்தகத்தில் ரஜினியின் இருகண்களாக ராம்கி கூறிய தெய்வீகமும் தேசியமும் என்பதை இங்கு பொறுத்தி பார்ப்பது முக்கியமானது. இது தான் ராம்கியின் கருத்தும் என்று நாம் அனுமானிக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. இவர் இதற்கு முற்றிலும் மாறுபாட்ட கருத்து நிலைப்பாட்டை கொண்ட கலைஞரைப் பற்றி எழுதுவது காலத்தின் கோலம் என்றே நான் முதலில் நினைததேன்.

//அடுக்குமொழி வசனம், இலக்கியம், லெமூரியா கண்டம், சுயமாரியாதை, கழகம், சமூக நீதி லொட்டு லொசுக்கையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இருபது பிளஸ் வயசுக்காரங்களுக்கு கருணாநிதி என்கிற தனிநபரின் வாழ்க்கையை சொல்வது என்பதுதான் முதலில் போட்ட ஸ்கெட்ச்//

//'பயோகிரா·பியோட பின்னணியில் தமிழ்நாட்டின் ஐம்பது வருஷத்து அரசியல் இருந்தாகணும்'//

http://rajniramki.blogspot.com/2006/04/blog-post.html


இருபது வயசுகாரர்களுக்கு எந்த ஒரு எதிர்மறை விமர்சனமும் இன்றி கருணாநிதியை கொண்டு சேர்ப்பதில் இந்த புத்தகம் வெற்றியடைந்ததா (இங்கு நான் வியாபார ரீதியிலான வெற்றியை சொல்லவில்லை) என்று கேட்டால் ஆம் என்று தான் சொல்லவேண்டும். விருப்பு வெறுப்பு இன்றி இந்த நூலை எழுதியது கண்டிப்பாக பாராட்டப்படவேண்டிய ஒரு விஷயம். நானெல்லாம் அரசியலை சிறு வயதிலிருந்தே கவனிக்க ஆரம்பித்தாலும் எனக்கு நினைவு தெரிந்த முதல் அரசியல் நிகழ்வு எம்.ஜி.ஆர் இறந்த அந்த காலகட்டம்தான்.என் வயது ஆட்கள் பலரும் இந்த காலகட்டத்தில் இருந்தே சமகால அரசியலை கவனிக்க ஆரம்பித்திருப்பார்கள். என்று நினைக்கிறேன். ராம்கிக்கும் இது பொருந்தலாம். 89 தேர்தலுக்கு முன் மக்கள் என் பக்கம் -கலைஞர் கம்பீர பேட்டி என்ற தலைப்பில் ஆனந்தவிகடனில் வந்த பேட்டி என் மனதை கவர்ந்த ஒன்று.அப்போது எனக்கு வயது 13.


பழைய தகவல்களை திரட்டி எழுதும்போது எந்த ஒரு சார்பும் வந்துவிடக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்து எழுதியுள்ள ஆசிரியரால் தன் சமகால நிகழ்வுகளில் தன் கருத்துக்களை பொறுத்து வாக்கியங்களை அமைப்பதை தவிர்க்க முடியவில்லை. இலங்கை பிரச்சினை, ராஜீவ் காந்தி கொலை ஆகிய சமாச்சாரங்களைப்பற்றி எழுதும்போதும் இந்த சட்டமன்ற தேர்தலைப்பற்றி எழுதும்போதும் இந்த கூறுகளை பார்க்கமுடிகிறது. ஆனால் இவை சமகால அரசியல் என்பதாலும் விவாதிக்கப்படவேண்டிய விஷயங்கள் தான் என்பதாலும் மையகருத்துக்கு பாதிப்பு இல்லாமல் நகர்கிறது.

பல இடங்களில் சம்பவங்களை மட்டும் கூறி கருணாநிதியின் ஆளுமையை வெளிக்காட்டுவதில் ஆசிரியர் வெற்றி பெறுகிறார்.

****
பதிமூன்று வயதில் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக கோஷம் போட்டு ஊர்வலம் போன கருணாநிதி அப்போது எதிரே வந்த இந்தி ஆசிரியருக்கும் இந்தி எதிர்ப்பு நோட்டீசை கொடுத்தாராம்.அமைதியாக நோட்டீசை வாங்கிக்கொண்ட வாத்தியார் அடுத்த நாள் வகுப்பறையில் வைத்து பின்னிவிட்டாராம் கருணாநிதியை. அதை எதிர்த்து இன்னொரு ஊர்வலம் கருணாநிதி நடத்துவார் என்று நண்பர்கள் நினைத்திருக்க கருணாநிதி சொன்னாராம்.

" அன்று நான் வீதியில் செய்ததும் சரிதான்.வாத்தியார் வகுப்பறையில் என்னை அடித்ததும் சரிதான்".

கலைஞரின் ஆளுமைத்தன்மையை அந்த சிறுவயதிலேயே காட்டிய சம்பவம் இது.

****

கட்சியில் இரண்டாம் மட்ட தலைவர்களை சுலபமாக தொண்டர் பலம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் வெற்றிக்கொண்ட கருணாநிதி அண்ணாவிற்கு மாற்றாக தான் வர முயற்சிப்பதாக உருவான ஒரு பிம்பத்தை முறித்ததைப்பற்றிய ஒரு சம்பவம் குறிப்பிடத்தக்கது.

அந்த காலகட்டத்தில் ஒரு கூட்டத்தில் அண்ணா பேசிக் கொண்டிருந்த போது கருணாநிதி தாமதாக கூட்டத்திற்கு வந்தாராம். வா கருணாநிதி என்று அண்ணா அழைத்து மீதி பேச்சை என் தம்பி கருணாநிதி பேசுவான் என்று கூறினாராம்.அப்போது கலைஞர் பேசியது இது.

"அண்ணா பேசிவிட்டதால் தமிழ்பேசிவிட்டது என்று அர்த்தம்.தமிழ்நாடே பேசிவிட்டது என்று அர்த்தம்".

கூட்டத்தின் கரவொலி அடங்க நிறைய நேரம் ஆனதாம்.திமுக வை அண்ணாவிற்கு பிறகு கலைஞர் கவர்ந்துகொண்டு விட்டார் என்ற முட்டாள்தனமான குற்றச்சாட்டை இதுப்போன்ற சம்பவங்களை விளக்குவதன் வாயிலாக இந்த புத்தகம் உடைத்தெறிகிறது. ஆசிரியர் தன் கருத்தாக எதையும் கூறாமலே இது போன்ற பல விஷயங்களை மக்களுக்கு புரியவைக்கிறார்.

கட்சியில் இருந்து எம்.ஜீ.ஆர் காங்கிரசின் முயற்சிகளினால் வெளியேற முதலிலேயே முடிவு செய்துவிட்டார் என்பதையும் பல்வேறு கொள்கை சார்ந்த விஷயங்களிலும்,நிர்வாகத்திலும், அரசியலிலும் எம்.ஜீ.ஆர் ஒரு புனிதப்பசு இல்லை என்பது இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களில் இருந்தே ஒருவர் உணர முடியும்.அதே போல் திமுக வளர திராவிட உணர்வு எவ்வளவு துணை புரிந்ததோ அதே அளவிற்கு அல்லது ஒருவேளை அதற்கும் அதிகமாக சினிமா கவர்ச்சியும் துணை புரிந்துள்ளது என்பதையும் நம்மால் உணர முடிகிறது.

திமுக வும் ஜனதா கட்சியும் பிரிந்த நின்ற சூழ்நிலையில் தான் எம்.ஜீ.ஆர் முதன் முதலில் ஜெயிக்கமுடிந்தது என்பது எனக்கு செய்தி. உடல்நலம் குன்றி இருந்த அனுதாபத்தால் வென்றது இவை போன்ற செய்திகளெல்லாம் மீடியாவில் புரெஜக்ட் செய்யப்படுவது போல எம்.ஜி.ஆர் Invincible அல்ல என்பதையே உணர்த்துகிறது.

இதில் வெறும் வரலாற்று பதிவாக இருந்தாலும் பல இடங்களில் கலைஞரின் செயல்பாடுகளை,திமுகவின் செயல்பாடுகளை வரலாற்றில் நியாயப்படுத்துவதாகவே உள்ளது.சீனப்போரில் திமுக எடுத்த நிலை(அண்ணாவின்அணுகுமுறை), பாகிஸ்தானுடனான போரின் போது மொத்தம் இந்தியாவில் வசூலான 25 கோடியில் தமிழகத்தில் மட்டும் ஆறு கோடி வசூலித்த தந்த செய்தி ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது திமுக தேசியத்தை கொத்தி குதறினாலும் நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்றால் என்ன செய்யவேண்டும் என்பதில் (அறிஞர் அண்ணா உள்பட) தெளிவாகவே இருந்துள்ளனர் என்பதைத்தான் காட்டுகிறது. சுதந்திரம் பெற்ற நாளை இன்ப நாள் என்று அண்ணா வருணித்ததும் துன்ப நாள் என்று பெரியார் வருணித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் கலைஞர் போன்ற ஒரு ஆளுமையை பற்றி ஒரு நூல் எழுதும்போது பல்வேறு தருணங்களி்ல் அவர் எடுத்த முடிவுகளை படிப்பவர் புரிந்துக்கொள்ள அவர் கொள்கைகளைப்பற்றிய அறிமுகம்/பரிச்சயம் இருப்பது அவசியம் என்று எனக்கு தோன்றுகிறது.

ஒரு கேள்விக்கு பதிலாக அரசு என்ற கேடயத்தையும் தக்கவைத்து கொண்டு எமர்ஜென்சிக்கு எதிர்ப்பு என்ற வாளையும் ஏகநேரத்தில் வீச வேண்டி இருந்தது என்றாராம் கலைஞர். வாழ்க்கை முழுவதும் அதைத்தான் செய்துவந்துள்ளார் கலைஞர் கருணாநிதி. கொள்கைக்கும் கேடு வராமல் அதே சமயம் தேவையான சமரசங்கள் செய்யவும் தயங்காமல் இருப்பதாலேயே இத்தனை ஆண்டுகள் இங்கு சமாளிக்க முடிந்திருக்கிறது.

சினிமா கவர்ச்சியும் புனித பிம்ப மனப்போக்கும் மிகுந்த தமிழ் மக்களை ஒரு பெயர் பெற்ற நாத்திகன் ஐந்து முறை ஆள்வது என்ற முரணின் பின்னால் உள்ள தமிழ்மக்களின் உளவியல்....

அனைத்து கொள்கைகளையும் வயதான காலத்தில் குடும்ப அரசியலுக்காக அடகு வைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு...

தமிழ்நாடு திமுகவால் கற்றதும் பெற்றதும்....

ஆகிய விஷயங்களை கொஞ்சம் ஆழமாகவும் அகலமாகவும் அலசியிருக்கலாம்.

ஆனால் ராம்கி எழுத்தாளராக பல படிகள் முன்னேறிவிட்டார். அவருடைய முதல் புத்தகத்தை வைத்து பார்க்கும்போது இதைத்தான் கூறமுடிகிறது. இது ஒரு வாழ்க்கை வரலாறு தான்.புனைவு படைப்பு இல்லை என்றாலும் விருப்பு வெறுப்பின்றி எழுதுவதிலும், சுவாரசியமாகவும் கொண்டு செல்வதிலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் நமது ராம்கி. வெல்டன்.


புத்தகம் கிடைக்கும் இடத்திற்கு சுட்டவும்.

Friday, July 28, 2006

பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு

புதிதாக ஏதாவது சோதிடம் பார்க்க ஆரம்பித்து விட்டானா என்று பார்க்க வேண்டாம். தேன்கூடு போட்டியில் பத்தாவது படைப்பாளியாக என்னையும் பனிரெண்டாவது படைப்பாக என் கதையையும் தேர்தெடுத்து உள்ளார்கள். பத்தொன்பது ஓட்டு எனக்கு விழுந்துள்ளது. (நல்லவேளை அங்க (-) குத்து இல்லை.:))

தேன்கூட்டில் என் கடவுசொல் மறந்துவிட்டதால் எனக்கு நான் ஓட்டு போடமுடியில்லை. பிரச்சினை ஆகக்கூடாது என்பதற்காக ஒரு ஓட்டையாவது எனக்கு போடச்சொல்லி ஒரு நண்பரிடம் சொல்லி இருந்தேன்.(ஒரு ஓட்டு கூட இல்லைன்னா நல்லாவாங்க இருக்கும். அதுக்குத்தான்). அவரும் ஏற்கனவே எனக்கு அந்த ஒரு ஓட்டை போட்டுவிட்டதாக கூறி வயிற்றில் பால் வார்த்தார்.

எல்லோரும் தேன்கூட்டிற்கு போட்டி நடத்துவதற்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்து விட்டதால் நானும் என் ஐடியாவை தருகிறேன். மக்கள் ஓட்டு போட்டு ஒரு பதினைந்து இருபது படைப்புகளை தேர்தெடுத்தவுடன் அந்த படைப்புகளை மட்டும் மூத்த படைப்பாளிகளை வைத்து மார்க் போட வைத்து தேர்தெடுக்கலாம்.ஆயினும் இந்த முறை பரிசு பெற்ற படைப்புகள் மிகவும் அருமை என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.

பரிசு பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்களும் எனக்கு ஓட்டு போட்ட நண்பர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.