முதல் பகுதி இங்கே
http://muthuvintamil.blogspot.com/2006/07/1_28.html
என்னை பொறுத்தவரை சமூக நிகழ்வுகளில் அக்கறை கொள்ளும் / விமர்சிக்கும் மக்களின் பார்வையை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒரு பார்வை கலகப்பார்வையாக, நிலைப்படுத்தப் பட்டுள்ள கருத்துக்களின் மீதான மாற்று பார்வைகளை அங்கீகரிக்கும் பார்வையாக, அதிகாரத்தை எதிர்க்கும் பார்வையாக இருக்கும்.இதற்கு மாறான இன்னொரு பார்வை தன் நிலையை தக்க வைக்கும் பார்வை. தன் வாழ்க்கையை வைத்து எதையும் எடைபோடும் பார்வையாக இருக்கும். இந்த பார்வைகளில் உள்ள நுண்ணிய உள் வித்தியாசங்களை பொறுத்து புனித பிம்பங்கள் முதல் பிரிவினைவாதிகள் வரை உள்ள சகல அடையாளங்களும் ஒருவருக்கு உருவாகும்.
இந்த நூலின் ஆசிரியரின் அரசியல்நிலைப்பாடுகள் எனக்கு தெரியாது.சப்தமா சகாப்தமா என்ற புத்தகத்தில் ரஜினியின் இருகண்களாக ராம்கி கூறிய தெய்வீகமும் தேசியமும் என்பதை இங்கு பொறுத்தி பார்ப்பது முக்கியமானது. இது தான் ராம்கியின் கருத்தும் என்று நாம் அனுமானிக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. இவர் இதற்கு முற்றிலும் மாறுபாட்ட கருத்து நிலைப்பாட்டை கொண்ட கலைஞரைப் பற்றி எழுதுவது காலத்தின் கோலம் என்றே நான் முதலில் நினைததேன்.
//அடுக்குமொழி வசனம், இலக்கியம், லெமூரியா கண்டம், சுயமாரியாதை, கழகம், சமூக நீதி லொட்டு லொசுக்கையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இருபது பிளஸ் வயசுக்காரங்களுக்கு கருணாநிதி என்கிற தனிநபரின் வாழ்க்கையை சொல்வது என்பதுதான் முதலில் போட்ட ஸ்கெட்ச்//
//'பயோகிரா·பியோட பின்னணியில் தமிழ்நாட்டின் ஐம்பது வருஷத்து அரசியல் இருந்தாகணும்'//
http://rajniramki.blogspot.com/2006/04/blog-post.html
இருபது வயசுகாரர்களுக்கு எந்த ஒரு எதிர்மறை விமர்சனமும் இன்றி கருணாநிதியை கொண்டு சேர்ப்பதில் இந்த புத்தகம் வெற்றியடைந்ததா (இங்கு நான் வியாபார ரீதியிலான வெற்றியை சொல்லவில்லை) என்று கேட்டால் ஆம் என்று தான் சொல்லவேண்டும். விருப்பு வெறுப்பு இன்றி இந்த நூலை எழுதியது கண்டிப்பாக பாராட்டப்படவேண்டிய ஒரு விஷயம். நானெல்லாம் அரசியலை சிறு வயதிலிருந்தே கவனிக்க ஆரம்பித்தாலும் எனக்கு நினைவு தெரிந்த முதல் அரசியல் நிகழ்வு எம்.ஜி.ஆர் இறந்த அந்த காலகட்டம்தான்.என் வயது ஆட்கள் பலரும் இந்த காலகட்டத்தில் இருந்தே சமகால அரசியலை கவனிக்க ஆரம்பித்திருப்பார்கள். என்று நினைக்கிறேன். ராம்கிக்கும் இது பொருந்தலாம். 89 தேர்தலுக்கு முன் மக்கள் என் பக்கம் -கலைஞர் கம்பீர பேட்டி என்ற தலைப்பில் ஆனந்தவிகடனில் வந்த பேட்டி என் மனதை கவர்ந்த ஒன்று.அப்போது எனக்கு வயது 13.
பழைய தகவல்களை திரட்டி எழுதும்போது எந்த ஒரு சார்பும் வந்துவிடக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்து எழுதியுள்ள ஆசிரியரால் தன் சமகால நிகழ்வுகளில் தன் கருத்துக்களை பொறுத்து வாக்கியங்களை அமைப்பதை தவிர்க்க முடியவில்லை. இலங்கை பிரச்சினை, ராஜீவ் காந்தி கொலை ஆகிய சமாச்சாரங்களைப்பற்றி எழுதும்போதும் இந்த சட்டமன்ற தேர்தலைப்பற்றி எழுதும்போதும் இந்த கூறுகளை பார்க்கமுடிகிறது. ஆனால் இவை சமகால அரசியல் என்பதாலும் விவாதிக்கப்படவேண்டிய விஷயங்கள் தான் என்பதாலும் மையகருத்துக்கு பாதிப்பு இல்லாமல் நகர்கிறது.
பல இடங்களில் சம்பவங்களை மட்டும் கூறி கருணாநிதியின் ஆளுமையை வெளிக்காட்டுவதில் ஆசிரியர் வெற்றி பெறுகிறார்.
****
பதிமூன்று வயதில் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக கோஷம் போட்டு ஊர்வலம் போன கருணாநிதி அப்போது எதிரே வந்த இந்தி ஆசிரியருக்கும் இந்தி எதிர்ப்பு நோட்டீசை கொடுத்தாராம்.அமைதியாக நோட்டீசை வாங்கிக்கொண்ட வாத்தியார் அடுத்த நாள் வகுப்பறையில் வைத்து பின்னிவிட்டாராம் கருணாநிதியை. அதை எதிர்த்து இன்னொரு ஊர்வலம் கருணாநிதி நடத்துவார் என்று நண்பர்கள் நினைத்திருக்க கருணாநிதி சொன்னாராம்.
" அன்று நான் வீதியில் செய்ததும் சரிதான்.வாத்தியார் வகுப்பறையில் என்னை அடித்ததும் சரிதான்".
கலைஞரின் ஆளுமைத்தன்மையை அந்த சிறுவயதிலேயே காட்டிய சம்பவம் இது.
****
கட்சியில் இரண்டாம் மட்ட தலைவர்களை சுலபமாக தொண்டர் பலம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் வெற்றிக்கொண்ட கருணாநிதி அண்ணாவிற்கு மாற்றாக தான் வர முயற்சிப்பதாக உருவான ஒரு பிம்பத்தை முறித்ததைப்பற்றிய ஒரு சம்பவம் குறிப்பிடத்தக்கது.
அந்த காலகட்டத்தில் ஒரு கூட்டத்தில் அண்ணா பேசிக் கொண்டிருந்த போது கருணாநிதி தாமதாக கூட்டத்திற்கு வந்தாராம். வா கருணாநிதி என்று அண்ணா அழைத்து மீதி பேச்சை என் தம்பி கருணாநிதி பேசுவான் என்று கூறினாராம்.அப்போது கலைஞர் பேசியது இது.
"அண்ணா பேசிவிட்டதால் தமிழ்பேசிவிட்டது என்று அர்த்தம்.தமிழ்நாடே பேசிவிட்டது என்று அர்த்தம்".
கூட்டத்தின் கரவொலி அடங்க நிறைய நேரம் ஆனதாம்.திமுக வை அண்ணாவிற்கு பிறகு கலைஞர் கவர்ந்துகொண்டு விட்டார் என்ற முட்டாள்தனமான குற்றச்சாட்டை இதுப்போன்ற சம்பவங்களை விளக்குவதன் வாயிலாக இந்த புத்தகம் உடைத்தெறிகிறது. ஆசிரியர் தன் கருத்தாக எதையும் கூறாமலே இது போன்ற பல விஷயங்களை மக்களுக்கு புரியவைக்கிறார்.
கட்சியில் இருந்து எம்.ஜீ.ஆர் காங்கிரசின் முயற்சிகளினால் வெளியேற முதலிலேயே முடிவு செய்துவிட்டார் என்பதையும் பல்வேறு கொள்கை சார்ந்த விஷயங்களிலும்,நிர்வாகத்திலும், அரசியலிலும் எம்.ஜீ.ஆர் ஒரு புனிதப்பசு இல்லை என்பது இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களில் இருந்தே ஒருவர் உணர முடியும்.அதே போல் திமுக வளர திராவிட உணர்வு எவ்வளவு துணை புரிந்ததோ அதே அளவிற்கு அல்லது ஒருவேளை அதற்கும் அதிகமாக சினிமா கவர்ச்சியும் துணை புரிந்துள்ளது என்பதையும் நம்மால் உணர முடிகிறது.
திமுக வும் ஜனதா கட்சியும் பிரிந்த நின்ற சூழ்நிலையில் தான் எம்.ஜீ.ஆர் முதன் முதலில் ஜெயிக்கமுடிந்தது என்பது எனக்கு செய்தி. உடல்நலம் குன்றி இருந்த அனுதாபத்தால் வென்றது இவை போன்ற செய்திகளெல்லாம் மீடியாவில் புரெஜக்ட் செய்யப்படுவது போல எம்.ஜி.ஆர் Invincible அல்ல என்பதையே உணர்த்துகிறது.
இதில் வெறும் வரலாற்று பதிவாக இருந்தாலும் பல இடங்களில் கலைஞரின் செயல்பாடுகளை,திமுகவின் செயல்பாடுகளை வரலாற்றில் நியாயப்படுத்துவதாகவே உள்ளது.சீனப்போரில் திமுக எடுத்த நிலை(அண்ணாவின்அணுகுமுறை), பாகிஸ்தானுடனான போரின் போது மொத்தம் இந்தியாவில் வசூலான 25 கோடியில் தமிழகத்தில் மட்டும் ஆறு கோடி வசூலித்த தந்த செய்தி ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது திமுக தேசியத்தை கொத்தி குதறினாலும் நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்றால் என்ன செய்யவேண்டும் என்பதில் (அறிஞர் அண்ணா உள்பட) தெளிவாகவே இருந்துள்ளனர் என்பதைத்தான் காட்டுகிறது. சுதந்திரம் பெற்ற நாளை இன்ப நாள் என்று அண்ணா வருணித்ததும் துன்ப நாள் என்று பெரியார் வருணித்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் கலைஞர் போன்ற ஒரு ஆளுமையை பற்றி ஒரு நூல் எழுதும்போது பல்வேறு தருணங்களி்ல் அவர் எடுத்த முடிவுகளை படிப்பவர் புரிந்துக்கொள்ள அவர் கொள்கைகளைப்பற்றிய அறிமுகம்/பரிச்சயம் இருப்பது அவசியம் என்று எனக்கு தோன்றுகிறது.
ஒரு கேள்விக்கு பதிலாக அரசு என்ற கேடயத்தையும் தக்கவைத்து கொண்டு எமர்ஜென்சிக்கு எதிர்ப்பு என்ற வாளையும் ஏகநேரத்தில் வீச வேண்டி இருந்தது என்றாராம் கலைஞர். வாழ்க்கை முழுவதும் அதைத்தான் செய்துவந்துள்ளார் கலைஞர் கருணாநிதி. கொள்கைக்கும் கேடு வராமல் அதே சமயம் தேவையான சமரசங்கள் செய்யவும் தயங்காமல் இருப்பதாலேயே இத்தனை ஆண்டுகள் இங்கு சமாளிக்க முடிந்திருக்கிறது.
சினிமா கவர்ச்சியும் புனித பிம்ப மனப்போக்கும் மிகுந்த தமிழ் மக்களை ஒரு பெயர் பெற்ற நாத்திகன் ஐந்து முறை ஆள்வது என்ற முரணின் பின்னால் உள்ள தமிழ்மக்களின் உளவியல்....
அனைத்து கொள்கைகளையும் வயதான காலத்தில் குடும்ப அரசியலுக்காக அடகு வைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு...
தமிழ்நாடு திமுகவால் கற்றதும் பெற்றதும்....
ஆகிய விஷயங்களை கொஞ்சம் ஆழமாகவும் அகலமாகவும் அலசியிருக்கலாம்.
ஆனால் ராம்கி எழுத்தாளராக பல படிகள் முன்னேறிவிட்டார். அவருடைய முதல் புத்தகத்தை வைத்து பார்க்கும்போது இதைத்தான் கூறமுடிகிறது. இது ஒரு வாழ்க்கை வரலாறு தான்.புனைவு படைப்பு இல்லை என்றாலும் விருப்பு வெறுப்பின்றி எழுதுவதிலும், சுவாரசியமாகவும் கொண்டு செல்வதிலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் நமது ராம்கி. வெல்டன்.
புத்தகம் கிடைக்கும் இடத்திற்கு சுட்டவும்.
Saturday, July 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
ராம்கியின் இரண்டு புத்தகங்களையும் வாங்கிக்கொள்கிறேன் என்று அனுப்பச்சொல்லி கேட்டிருக்கிறேன். படித்துவிட்டு கருத்துகள் இருந்தால் என் பதிவில் எழுதுகிறேன். அறிமுகத்துக்கு நன்றி, முத்து.
நன்றி முத்து.
"திமுக வும் ஜனதா கட்சியும் பிரிந்த நின்ற சூழ்நிலையில் தான் எம்.ஜீ.ஆர் முதன் முதலில் ஜெயிக்கமுடிந்தது என்பது எனக்கு செய்தி."
தவறான செய்தி. 1974-ல் அண்ணா திமுக முதலில் சந்தித்த திண்டுக்கல் இடை தேர்தலிலேயே அமோக வெற்றி. பழைய காங்கிரஸ் இரண்டாமிடம், திமுக மூன்றாம் இடம், இந்திரா காங்கிரஸ் நான்காமிடம்.
1977 பாராளுமன்ற தேர்தலில் அண்ணா திமுகவும் காங்கிரஸும் கூட்டு. அப்போது அகில இந்திய அளவில் இந்திரா தோல்வியுற்றாலும் தமிழ் நாட்டைப் பொருத்தவரை எம்ஜியாரும் அவரும் அமோக வெற்றியே.
1979-ல் பாராளுமன்ற தேர்தலிலோ திமுகவும் ஜனதாவும் பிரிந்த இந்த முதல் தேர்தலில் எம்ஜியார் தோல்வியே அடைந்தார். ஆனால் உடனே வந்த சட்டசபை தேர்தலில் அதே எம்ஜியார் வெற்றி பெற்றார்.
ஆக, அப்போதைய தமிழக மக்களின் மன நிலையை இவ்வாறு உணரலாம். மத்தியில் காங்கிரஸ், மானிலத்தில் அதிமுக.
எம்ஜியார் உயிருடன் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சி பக்கம் வரவே இயலவில்லை என்பதுதான் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
dondu sir ,
forget abt by election... i said abt the first full fledged assembly election...
முத்து,
///சினிமா கவர்ச்சியும் புனித பிம்ப மனப்போக்கும் மிகுந்த தமிழ் மக்களை ஒரு பெயர் பெற்ற நாத்திகன் ஐந்து முறை ஆள்வது என்ற முரணின் பின்னால் உள்ள தமிழ்மக்களின் உளவியல்.... //
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்...
//மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் நமது ராம்கி. வெல்டன்.//
நானும் எனது வாழ்த்துக்களை திரு.ராம்கி தெரிவித்துக்கொள்கிறேன்.
இ-புத்தகம் வசதி இப்புத்தகத்திற்கு இருக்கிறதா? இருந்தால் வாங்கலாம்..
திமுகவும் ஜனதாவும் பிரிந்து நின்றதால்தான் எம்.ஜி.ஆர் வெற்றிபெற்றார் என்பது,
குமரிமுத்துவின் பிரச்சாரத்தால்தான் இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்றது
என்பதைப் போன்றது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் காமராஜருக்குப் பின் புதைகுழிக்குப் போய்விட்டது.
பழய காங்கிரஸின் பெரும் பகுதி சேர்ந்தபின்னும் இந்திரா காங்கிரசுக்கே பெரிதாக செல்வாக்கு ஏதுமில்லை.
இதில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலிருந்த ஜனதாவிற்கு, இதைக்கேட்டாலே சிரிப்புத்தான் வருகிறது.
திமுகவின் ஒரு பகுதி வோட்டும்,பழைய காங்கிரஸின் ஒரு பகுதி ஓட்டும்,எம்.ஜி.ஆரின் சினிமா கவர்ச்சியால் பெரும் பகுதி ஓட்டும்(குறிப்பாக பெண்கள் ஓட்டு),எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் பிராமணர்களின் சில ஓட்டும்(!!!???) தான் எம்.ஜி.ஆர் வெற்றிபெற முக்கியமாகும்.
இல்லாவிட்டால் 80-ல் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் பெருங்கூட்டணி முன் பெரும் தோல்வியடைந்த எம்.ஜி.ஆர், அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் உடன் சில உதிரிக்கட்சிகள் துணையுடன்
பெற்ற வெற்றி எவ்விதம்.
எது எப்படியோ, எம்.ஜி.யார் இருந்தவரை கருணாநிதி எப்படியெப்படியோ குட்டிக்கரணம் அடித்துப் பார்த்தார்.இதற்கு உதாரணம் 1985-ல் நடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி பேசிய பேச்சுக்களே.எனக்கு ஓட்டுப் போட்டு முதல்வர் ஆக்குங்கள், எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும் அவரிடமே முதல்வர் பொறுப்பைக் கொடுத்துவிடுகிறேன் என்றாரே பார்க்களாம்.இந்தத் தேர்தலில் அவர் பேசிய பேச்சுக்களே எனக்கு கருணாநிதின் மீதும் திமுகவின் மீதும் இருந்த மதிப்பை வெகுவாகக் குறைத்துவிட்டது.
அதற்குப் பின் கருணாநிதி அடிப்பது எல்லமே அந்தர் பல்டிதான்.
எந்தப் பிரச்சனையிலும் அவரது பதில்கள் வழவழா கொழகொழாதான்.
எதிலும் கேடயமுல்லை,வாளுமில்லை.
எல்லாம் அட்டைக்கத்தி காமடிதான்.
இன்றும்கூட எம்.ஜி.ஆருக்கு எதிராக கருணாநிதி ஏதும் கருத்து சொல்லமுடியாது என்பதே உண்மை.
எம்.ஜி.ஆர் வல்லவர்,நல்லவர்,சிறந்தவர் என்பதற்காகக் கூறவில்லை.
இன்னும் மக்களிடம் எம்.ஜி.ஆரிடம் ஒரு கவர்ச்சி இருப்பதனாலே.
ஜெயலலிதாவின் மோசமான,அடவடியான நடவடிக்கையால்தான் கருணாநிதி மீண்டும் மீண்டும் முதல்வராக முடிகிறதே ஒழிய,ஜெயலலிதா மட்டும் எம்.ஜி.ஆரின் வழியைப்(???????????) பின் பற்றினால் கருணாநிதி அறிவாலயத்தில் கூட முதல்வராகி இருக்க முடியாது.
இதைப் படிப்பவர்கள் நான் கருணாநிதிக்கு எதிராக எண்ணம் கொண்டவனென்றத் தோற்றம் வரலாம்.
ஆனால் கருணாநிதியிடமிருந்து நான் அதிகம் எதிர்பார்த்தேன்.திமுகவில் இருப்பதைப் போன்று துடிப்புமிக்க தொண்டர்படை எந்தக்கட்சியிலும் இந்தியாவில் கிடையாது.அதை வைத்து அவர் எவ்வளளோ சாதித்திருக்கலாம்.
அந்த ஏமாற்றத்தினால் விளைந்த பதிலே இது.
anony,
thanks for your honest views
கருணாநிதிக்கு பிறகு திமுக தேறுமா என்பதையும் சொல்லியிருக்கலாம்
திரு. டோண்டு ராகவன் கூறியிருப்பது சரியே என்று தான் நான் கருதுகிறேன். அ.தி.மு.க சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் இருந்த வரை சக்கை போடு போட்டது. முக்கியமாக காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியை எதிர்த்து அவர் பெற்ற வெற்றி மிக அசாதரணமானது. ஏனெனில் இந்த 2 கட்சி கூட்டணியின் வாக்குகள் சாதாரணமாக எல்லா தொகுதிகளிலும் அ.தி.மு.க வை விட கூட வரும். ஆனால் எதிர்பார்ப்பை மீறி எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். இறுதியில் கலைஞரால் எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின்னரே வெற்றி பெற முடிந்தது என்றாலும் தோல்வியிலும் கட்சியை கட்டுகோப்பாக அமைத்து சென்ற மன வலிமை மிக்க சிங்கம் கருணாநிதி என்று தாராளாமாக அவரை வர்ணிக்கலாம். ஆனால் ஜெயலலிதாவின் வருகைக்கு பின்னர் கிட்டதட்ட சம அளவிற்கு இரண்டு கட்சிகளும் வந்து விட்டன. 2001 இல் கருணாநிதி மிக மோசமான கூட்டணியை அமைத்தார். கொஞ்சம் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டிருந்தால் ஜெயலலிதாவை அவர் கூட்டணி பலத்தோடு தோற்கடித்திருக்கலாம். தொடர்ச்சியாக இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் தோற்றிருந்தால் ஜெயலலிதாவிற்கு மிகுந்த கடினமாகவே இருந்திருக்கும். ஆனால் இன்றொ ஆட்சியில் இல்லா விட்டாலும் தமிழ்க அரசியலின் மையமாகவே ஜெயலலிதா திகழ்கிறார். ஜெயலலிதா ஆதரவு , ஜெயலலிதா எதிர்ப்பு என்ற திசையில் தான் தமிழக அரசியலின் எதிர்காலம் செல்லும்.
//திமுக வும் ஜனதா கட்சியும் பிரிந்த நின்ற சூழ்நிலையில் தான் எம்.ஜீ.ஆர் முதன் முதலில் ஜெயிக்கமுடிந்தது என்பது எனக்கு செய்தி. உடல்நலம் குன்றி இருந்த அனுதாபத்தால் வென்றது இவை போன்ற செய்திகளெல்லாம் மீடியாவில் புரெஜக்ட் செய்யப்படுவது போல எம்.ஜி.ஆர் Invincible அல்ல என்பதையே உணர்த்துகிறது//
நண்பரே,
இது மிகப் பெரிய சப்பைக்கட்டு.
எம்.ஜி.ஆரின் வெற்றிகளை வெறும் அனுதாப ஓட்டுக்களாக நீங்கள் கருதினால் அது மிகப் பெரிய தவறு.
கருணாநிதி நீதி கேட்டு நெடும் பயணம் சென்ற பின் திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. அனைத்தையும் மீறி அதிமுக தான் தேர்தலில் வெற்றி பெற்றது.
முக்கியமான தருணத்தில் முக்கியமான எதிரிகளை உருவாக்கிக் கொள்வதில் கலைஞருக்கு நாட்டம் அதிகம். அதனால்தான் அவர் பல தோல்விகளை சந்தித்தார். எம்.ஜி.ஆருக்கு அனைவரையும் அரவணைக்கும் திறன் அதிகம். அதையும் மீறி அரசியல் நிலைப்பாட்டிற்கும் அப்பால் அவரை நேசித்த ஏழை மக்களும் ரசிகர்களும்.இன்றுவரை அவர்கள் திமுகவிற்கு தலைவலியாகத்தான் இருக்கிறார்கள்.
///எம்ஜியார் உயிருடன் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சி பக்கம் வரவே இயலவில்லை என்பதுதான் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும்./////
86 உள்ளாட்சித் தேர்தலில் திமுக 85 சதவிதத்துக்கும் மேல் வெற்றி பெற்றதையும் நினைவில் கொள்ள வேண்டும்.... எனக்குத் தெரிந்து 105 நகராட்சிகளில் திமுக 90க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் வெற்றி பெற்று சாதனை செய்தது.... (குறிப்பு : எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தார்)
//முக்கியமான தருணத்தில் முக்கியமான எதிரிகளை உருவாக்கிக் கொள்வதில் கலைஞருக்கு நாட்டம் அதிகம். அதனால்தான் அவர் பல தோல்விகளை சந்தித்தார்.
//
மிகசரி, கலைஞரின் வெற்றிக்கும் தோல்விக்கும் எப்போதும் அவரே காரணமாக இருக்கின்றார்
//கருணாநிதி. கொள்கைக்கும் கேடு வராமல் அதே சமயம் தேவையான சமரசங்கள் செய்யவும் தயங்காமல் இருப்பதாலேயே இத்தனை ஆண்டுகள் இங்கு சமாளிக்க முடிந்திருக்கிறது.//
உண்மையான வியாபர தந்திரம் அறிந்த வியாபாரி. அதனால்தான் அரசியல் என்ற வியாபாரத்தில் கோடிகளை சம்பாதிக்க முடிந்தது
எம்ஜிஆர் வெல்ல முடியாதவர் அல்ல.ஆனால் அவர் இருந்தவரை அதிமுக திமுகவை விட பலம் மிக்க இயக்கமாகவே இருந்து வந்துள்ளது.அவருக்கு எதிராக எதிர்ப்பு அலை உருவாகவே இல்லை எனினும் தற்போது உள்ள கூட்டணி போல் கலைஞர் உருவாக்கி இருந்திருந்தால் எம்ஜிஆருக்கு கடும்போட்டியை தந்திருப்பார்.ஆனால் அப்படி ஒரு கூட்டணி அமைய எம்ஜிஆர் விடவே இல்லை.அரசியல் செய்வதில் அவர் கலைஞரை எடுத்து விழுங்கியவர் என்பதுதான் உண்மை.அவர் இப்போது உயிரோடு இருந்திருந்தால் கூட கலைஞர் இன்னும் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்.மேற்குவங்க அரசை முறியடிக்கும் அளவு சாதனை படைக்கும் அளவு எம்ஜிஆர் ஆட்சியில் இருந்திருப்பார்
எம்ஜிஆர் மிக சிறந்த ராஜதந்திரி.ஆனால் கலைஞர் நல்ல நிர்வாகி.ஜெயலலிதா துணிச்சலின் உச்சகட்டத்துக்கும் ஆணவத்தின் ஆரம்பகட்டத்துக்கும் இடையே உள்ள சிறிய இடைவெளியில் இருக்கிறார்.
கலைஞர் பாசமுள்ள தந்தையாக இருப்பது திமுகவுக்கு பெரும்கேடு.ஸ்டாலினுக்கு எந்த திறமையும் இல்லை.திராவிட இயக்கத்தை கட்டி வழி நடத்துவது ஸ்டாலினால் முடியாது.தினகரன் அதிமுகவின் தலைமைபொறுப்புக்கு வந்தால் தேவர் இனம் முழுக்க அதிமுக பின்னர் காலா காலத்துக்கும் அணிதிரளும்.தமிழகம் உத்தரபிரதேசம் போல் ஜாதி அரசியலுக்கு மாற அது வழிவகுக்கலாம்.
வைகோ திமுக தலைவராவது இனி சாத்தியமில்லை.இது தமிழகத்துக்கு மிகப் பெரும் இழப்பு.தயாநிதி திமுக தலைவரானால் ஓரளவு நல்ல போட்டியை அதிமுகவுக்கு தரமுடியும்.அழகிரி வந்தால் இன்னொரு கருணாநிதி போல் புகழ் பெறுவார்.ஆனால் இதெல்லாம் நடக்க சாத்தியமில்லை.ஸ்டாலின்,உதயநிதி எனவே திமுக இனி பயணிக்கும்.
செல்வன்!
ஸ்டாலின் பற்றிய தவறான புரிந்துணர்தல் உங்களுக்கு உள்ளது.... ஸ்டாலின் பற்றிய ஒரு திறனாய்வு நான் செய்திருக்கிறேன்... அதை கொஞ்சம் படித்துப் பாருங்கள் : http://madippakkam.blogspot.com/2006/07/blog-post_17.html
ஜெயலலிதா பற்றியும் ஒரு திறனாய்வு செய்திருக்கிறேன்.... அதை இங்கே பாருங்கள் : http://madippakkam.blogspot.com/2006/07/blog-post_21.html
Lucky look
I read your posts about JJ and Stalin.I feel that you have exaggerated their abilities and personalities.
Stalin is yet to prove himself(He is 60).That speaks volumes about his skills.
JJ is a disaster that befell tamilnadu.She will finish of DMK if she gets another chance.
பின்னெழுபதுகளில் தமிழக அரசியல் பற்றி ஆளாளுக்கு (திமுக, ஜனதாவுக்கு ஆதரவு இல்லை என்பது போன்ற). சுவாரசியமான கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 1977 பாராளுமன்றத் தேர்தல் தான் நான் ஆர்வத்தோடு அரசியலை அவதானிக்க ஆரம்பித்தது.
1977 பாராளுமன்றத் தேர்தலில் திமுக-ஜனதா கூட்டணி சார்பில் திமுக ஒரு இடத்திலும் (வடசென்னை - ஏ.வி.பி. ஆசைத்தம்பி) ஜனதா மூன்று இடங்களிலும் (மத்திய சென்னை - பா. ராமச்சந்திரன்; வேலூர் - வி. தண்டாயுதபாணி; நாகர்கோவில் - குமரி அனந்தன்) வெற்றி பெற்றன. அடுத்து சில மாதங்களில் நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். இ. காங்கிரசை கைகழுவி விட்டார். அத்தேர்தலில் திமுக, அதிமுக, இ.காங்கிரஸ், ஜனதா என்று நான்கு முனைப்போட்டியில் அதிமுக மிகக்குறைந்த பெரும்பான்மையில் (127) வெற்றி பெற்றது. திமுக 48 இடங்களில் வென்று வலுவுள்ள எதிர்க்கட்சியாக விளங்கியது (சென்னையில் 14 இடங்களில் 13ல் வென்றது; ஆர்.கே. நகரில் சிரிப்பு நடிகர் ஐசரிவேலன் வென்று பரபரப்பை ஏற்படுத்தினார்). மொத்த வாக்கு வித்தியாசமும் பெரிய அளவில் இல்லை.
முதலாவது எம்ஜிஆர் ஆட்சி மிகவும் பலவீனமாகவே இருந்தது. அந்த இரண்டரை ஆண்டுகளில் வேலைநிறுத்தம் நடக்காத நாளே இல்லை (துரதிர்ஷ்டவசமாக அந்த ஆண்டு தான் PUC இல் சேர்ந்திருந்தேன். முக்கால்வாசி நாட்கள், ஆசிரியர் போராட்டம், மாணவர் போராட்டம் என்று மாறிமாறி கல்லூரி நடக்கவில்லை). ஏதாவது ஒரு துறையினர் எதற்காகவாது வேலை நிறுத்தம் செய்துக்கொண்டிருந்தார்கள். சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் துரைமுருகன், ரகுமான்கான், க.சுப்பு மூவரும் எம்.ஜி.ஆரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருந்தார்கள். சட்டசபையில் கருணாநிதியின் பேச்சுக்கு ஈடுகொடுக்கக்கூடியவராக அரசு சார்பில் நாஞ்சில் மனோகரன் மட்டுமே இருந்தார்.
1980 இல் திமுக-காங்கிரஸ் கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற அமோக வெற்றியின் போதையில் எம்.ஜி.ஆர். ஆட்சியை கலைத்து திமுக காங்கிரஸ் கட்சிகள் இடங்களை சரிசமமாகப் பகிர்ந்துக்கொண்டு போட்டியிட்டு தோல்வியைக் கண்டன. இந்த தேர்தலே எம்ஜிஆருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. கருணாநிதி செய்த தவறுகள்: (1) அவசரக் கோலத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியை கலைக்க வைத்து அனுதாபத்தை ஏற்படுத்தியது; (2) இடங்களை சம அளவில் பகிர்ந்து கொடுத்து 'கூட்டாட்சி' பயத்தை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு தான் எம்.ஜி.ஆர். வீழ்த்தமுடியாத அதீத நாயகனாகவும், கருணாநிதி படுகேவலமான வில்லனாகவும் சித்தரிக்கப்பட்டனர். இவற்றில் தமிழ்நாட்டு ஊடகங்களின் பங்கு எம்ஜிஆரின் கடவுள் பிம்பத்திற்கு இருந்த பங்கைவிட அதிகம் என்பதை சொல்லத் தேவையில்லை. அதன் தொடர்ச்சிதான் டோண்டுவின், இன்னொரு அனாமதேயத்தின் கருத்துக்களும்.
கொசுறு: எதிர்க்கட்சித் தலைவரை கேவலமான வில்லனாக்கி பழிவாங்கும் கலாச்சாரத்தை தமிழக அரசியலில் அறிமுகப்படுத்திய பெருமை எம்.ஜி.ஆரையேச் சாரும். தோற்ற கட்சியை/தலைவரை கண்ணியமாக நடத்தும் கலாச்சாரம் கருணாநிதி-காமராஜர் இருவருக்கும் இருந்த உறவோடு முடிவு எய்தியது.
ஸ்டாலினை பற்றி செல்வன் கூறுவது சரியல்ல...
மேயராக இருந்து திறம்பட செயலாற்றினார் என்பது அனைவருக்கும் தெரியுமே செல்வன்...
மு.க வை பற்றி கருத்து இல்லை..அது மு.க (முடிந்துபோன கதை)
ஆனால் எதிர்காலத்தில் ஸ்டாலின் முதல்வராகா சிறப்பாக செயல்படுவார் என்பதே என் கருத்து...
வாய்ப்பு குடுங்க சார் மொதல்ல...
/////மு.க வை பற்றி கருத்து இல்லை..அது மு.க (முடிந்துபோன கதை)/////
இந்த ஆணவத்துக்கு தான் போன தேர்தலில மக்கள் அம்மாவுக்கு ஆப்பு அடிச்சாங்க.....
60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி டாக்டர் கலைஞர் மட்டுமே....
நன்றி சுந்தரமூர்த்தி,
நான்கு முனை போட்டியில் 127 சீட் பெற்று ஆட்சி.அதைத்தான் நானும் சொன்னேன்.
ஆனால் கருணாநிதி வெறுப்பில் உள்ளவர்கள் எம்.ஜி.ஆரை புரெஜக்ட் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.வரலாறு சரியாக எழுதப்படவில்லை என்றால் யாருக்கு நஷ்டம்?
அனுதாப அலை என்பது எப்போதும் கலைஞருக்கு வாய்த்ததில்லை .எம்.ஜி.ஆர் தி.மு.க -வில் இருந்த போது சுடப்பட்டது தி.மு.கவுக்கு அனுதாப ஓட்டுக்களை பெற்றுத்தந்தது .அதன் பின்னர் எம் .ஜி. ஆர் சுகவீனம் ,ராஜீவ் காந்தி மரணம் போன்றவை சரியாக தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க வை ஆட்சியில் அமர்த்தின .கடந்த முறை கூட கலைஞரின் ஆட்சி மீது பெரிதாக குற்றசாட்டுகள் இல்லாத போதும் ,நீதிமன்றம் ஜெயலலிதா தேர்தலில் நிற்பதற்கு விதித்த தடையை ஏதோ கருணாநிதி ஜெயலலிதாவை தேர்தலில் கூட நிற்க விடாமல் சதி செய்து விட்டதாக ஜெயலலிதா பரப்பிய அழுமூஞ்சி வாதத்தை பாமர மக்கள் நம்பி ஓட்டுப்போட்டது கண்கூடு
Post a Comment