Friday, April 07, 2006

ஜோசப் அய்யாவுக்கு ஒரு பகிரங்க மடல்

நீங்கள் சாதியை ஒழிக்க போராடுகிறேன் என்று என் கட்டுரையை காட்டி எழுதியது என் மனதை வருத்தமடைய வைத்துள்ளது. உங்களது பல கருத்துக்கள் எனக்கு உவப்பானதில்லை என்றாலும் நான் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை.ஆனால் நண்டுகளும் சிண்டுகளும் இதைவைத்து கொண்டு ஆகா பேஷ் பேஷ் என்று சொல்லும்போது தான் இதைப்பற்றி எழுதுவதின் தேவையை உணருகிறேன்.


சில நாட்களுக்கு முன்பு , கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை மிக
கடுமையாக" விமர்சித்து நீங்கள் எழுதியிருந்தீர்கள். இப்போது உங்களுக்கு ஆமாம் சாமி போடுபவர்கள் அப்போது அதை கண்டிக்கவில்லை. நீங்கள் சொன்ன ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தின் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? தருமி கூட அதை கேட்டார்.உடனே என் நம்பிக்கை அந்தரங்கமானது என்று சொல்லிவீட்டீர்கள்.

அப்படி என்ன நாங்கள் பாவிகளா?.கடவுள் நம்பிக்கை இல்லாத பல நல்லவர்களை மனிதாபிமானிகளை நான் காட்டமுடியும். இதற்கு கருணாநிதியின் மஞ்சள் துண்டையும் தாண்டி நாம் பார்க்கவேண்டி உள்ளது.
கடவுள் பக்தி இல்லை என்றால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்துகொண்டு எல்லோரையும் மிரட்டிப்பிழைத்து கொண்டு இருப்பார்கள் என்றெல்லாம் குழந்தைத்தனமான கற்பனையை விடுங்கள்.

பெரும்பான்மையுடன் உங்களை அடையாளப்படுத்திக்கொள்வது சந்தோஷம்தான். ஆனால் நாங்களும் கேவலமானவர்கள் இல்லை. வரலாற்றை எடுத்து பாருங்கள்.எல்லா காலத்திலும் எங்களை போன்றவர்கள் இருப்பார்கள். எங்கள் இருப்பையே கேள்விக்குட்படுத்துவதையே ஆதிக்கம் என்கிறோம்.அதாவது ஏதோ இந்த பூமியில் நாங்கள் வாழவே தகுதியில்லாதவர்கள் போலவும் கடவுள் பக்தி உள்ள நீங்களெல்லாம் தான் உத்தமர்கள் போலவும் நீங்களே எழுதலாமா?எத்தனை பிராமணர்கள் இந்த நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்று என்னால் சொல்லமுடியும்.

நீங்கள் எந்த அளவிற்கு உருகி பைபிள் எழுதுகிறீர்களோ அதே உணர்வில்தான் நாங்களும் எழுதுகிறோம். நீங்கள் கடவுளை கும்பிட்டால் நாங்கள் மனிதாபமானத்தை கும்பிடுகிறோம்.

" டேய் மணியா...சாமி இல்லைன்னு சொன்னவன் கோயிலை இடிச்சதில்லை..சாமி இருக்குன்னு சொன்னவன்தான் கோயிலை இடிச்சான்"

(---சத்யராஜீன் அமைதிப்படையில் ஒரு வசனம்)


(சினிமாவை வைத்து சொன்னால்தான் மக்களுக்கு புரியும்)

என்னுடைய இந்த வார கட்டுரைகளில் எங்காவது என் சாதியை பாராட்டி சீராட்டி எழுதியுள்ளேனா?

மேற்படி கட்டுரை ஒரு ஒப்பீடுதான். என் பதிவுகளை நீங்கள் முழுமையாக படிக்கவில்லை.திராவிட கருத்தாக்கம் என்பதை எந்தளவிற்கு கொச்சையாக நீங்கள் புரிந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

சார், இந்தியா என்றுமே ஒரு நாடாக இருந்ததில்லை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? இங்கு பல்வேறு இனங்களை சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். சுதந்திரத்திற்கு பிறகு ஒரே நாடாக ஆனோம். யாரை கேட்டு ஒரு நாடாக ஆனோம். எல்லோருக்கும் சுதந்திரமும் பாதுகாப்பும் கிடைக்கும் என்றுதானே.ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நாகரீகம் கலாச்சாரம், மொழி ஆகியவைதான் நம் எல்லோருக்குமானது அல்லது உயர்ந்தது என்பதை எப்படி சார் கேள்வி இல்லாமல் ஏற்றுகொள்கிறீர்கள்? simply i cannot imagine it.


நமக்கென்று ஒன்றுமே இல்லையா சார்? நாமெல்லாம அநாதைகளா சார்? என்னுடைய தாத்தா பாட்டிக்கு கீதை தெரியாது சார். அவங்கள்ளாம் கள் குடித்து முனியப்பனுக்கு கடா வெட்டித்தான் வாழ்ந்தார்கள். நாளைக்கு அவங்க கோயிலுக்கு போய் கிடா வெட்டினார்கள் என்று குற்றம் சுமத்தி அவர்களை அரசாங்கம் கைது செய்தால், அது நியாயம் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் இந்த நாட்டில் என்ன நியாயம் சார் இருக்கு?

(தொடரும் )

24 comments:

ஜோ/Joe said...

//கலப்பு திருமணம் செய்ததால் சாதியில் இருந்து துரத்தப்பட்ட ஒரு துர்ஆத்மா நான்.//

துர் ஆத்மாக்களிடமிருந்து தப்பிவந்த நல் ஆத்மா என்று சொல்லுங்கள்.
சாதி ஒழிப்போம்! தமிழால் இணைவோம்!!

முத்துகுமரன் said...

முத்து, விட்டுத் தள்ளுங்கள்

சிலர் மகாத்''மாக்கா''ளாக இருந்து விட்டு போகட்டும்... நம் மனிதனாக இருப்பது அதுவும் கேள்வி கேட்கவும், அடையாளத்தை தேடும் சுய சிந்தனை உள்ள மனிதனாக இருப்பதுதான் தவறு.

thiru said...

கடவுள் பெயரால் மசூதி இடித்தவன், கோவிலை இடித்தவன், சர்ச்சுகளை கொழுத்தியவன், பாலியல் வன்முறை, கொலை, சூறையாடல் செய்தவன் என கடைக்கோடி தெருமுனை முதல் சங்கரமடம் வரையும், மண்டைக்காடு முதல் குஜராத் வரையும் விரிந்து கிடக்கும் மண்டையோடுகளுக்கு மத்தியில் நின்று கடவுள், புனிதம், கருவாடு என முழங்குபவர்கள் எங்காவது கடவுள் மறுப்பாளர்கள் மனிதநேயமற்ற இந்த படுபாதகத்தை செய்ததுண்டா?

வரலாற்றின் வடுக்களை புரிந்து கொள்ளாமலும், அல்லது அறிந்தும் அறியாததாக இப்படி பதிவுகள் வரத்தான் செய்யும்.

நாம் வாழும் காலம் காவிப்படை காலித்தனத்தின் காலம். அதை எதிர்ப்பதும் உண்மையை உரக்க சொல்வதும் கடமையாக கருதுங்கள். உண்மை பலமானது, கடவுள் சார்ந்த நம்பிக்கையை விட.

குழலி / Kuzhali said...

//திராவிட கருத்தாக்கம் என்பதை எந்தளவிற்கு கொச்சையாக நீங்கள் புரிந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதற்காக நான் வருத்தப்படுகிறேன்.
//
நானும் வருத்தப்படுகின்றேன்...

//சார், இந்தியா என்றுமே ஒரு நாடாக இருந்ததில்லை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? இங்கு பல்வேறு இனங்களை சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். சுதந்திரத்திற்கு பிறகு ஒரே நாடாக ஆனோம். யாரை கேட்டு ஒரு நாடாக ஆனோம்.
//
என் நட்பு வட்டத்தில் நான் அடிக்கடி பேசுவது இப்படித்தான், 'பாரத நாடு பழம்பெரும் நாடு' என்று எங்கேயாவது படிக்கும் போதும் கேட்கும் போதும் எனக்குள் ஒரு சிரிப்பு தான் வரும், மொழி, இனம், கலாச்சாரம் என எதாலும் இணையவில்லை.(இந்து மதம் என்று சொல்லிக் கொண்டாலும் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இந்து மதத்தில் இருக்கிறோம், ஒரே மாதிரியாகவா இந்து மதத்தை பின்பற்றுகின்றோம், திராவிட, இயற்கை வழிபாட்டை, சிறு தெய்வ வழிபாட்டை அழித்து சைவ, வைணவம் வளர்ந்து, புத்த,ஜைன,சீக்கிய மதங்களை இந்து மதத்தின் பிரிவாக்கி) இப்போது எல்லாம் இந்து என்ற ஒரு குடையின் கீழ், இந்தியா என்ற ஒரு கடவுசீட்டின் கீழ்,அவ்வளவே, அதைத் தாண்டி ஜெய்ஹிந்த் என கேட்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு மட்டுமே....

//எல்லோருக்கும் சுதந்திரமும் பாதுகாப்பும் கிடைக்கும் என்றுதானே
//
பாதுகாப்பின் இலட்சணம் கர்னாடகாவில் இழந்த ஆயிரம் தமிழ் உயிர்களும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பல்லாயிரம் பெண்களும் கூறுவார்கள், காஷ்மீரில் ஆரம்பித்து, வடகிழக்கு மாநிலங்கள், குசராத் என பாதுகாப்பின் இலட்சணங்கள் பற்றி நிறையவே எழுதலாம்,

//ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நாகரீகம் கலாச்சாரம், மொழி ஆகியவைதான் நம் எல்லோருக்குமானது அல்லது உயர்ந்தது என்பதை எப்படி சார் கேள்வி இல்லாமல் ஏற்றுகொள்கிறீர்கள்? simply i cannot imagine it.


நமக்கென்று ஒன்றுமே இல்லையா சார்? நாமெல்லாம அநாதைகளா சார்? என்னுடைய தாத்தா பாட்டிக்கு கீதை தெரியாது சார். அவங்கள்ளாம் கள் குடித்து முனியப்பனுக்கு கடா வெட்டித்தான் வாழ்ந்தார்கள். நாளைக்கு அவங்க கோயிலுக்கு போய் கிடா வெட்டினார்கள் என்று குற்றம் சுமத்தி அவர்களை அரசாங்கம் கைது செய்தால், அது நியாயம் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் இந்த நாட்டில் என்ன நியாயம் சார் இருக்கு?
//
ம்....

G.Ragavan said...

// அப்படி என்ன நாங்கள் பாவிகளா?.கடவுள் நம்பிக்கை இல்லாத பல நல்லவர்களை மனிதாபிமானிகளை நான் காட்டமுடியும். //

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நிச்சயம் பாவிகள் அல்லர். அப்படிச் சொல்வது மிகவும் தவறான கருத்து. கடவுள் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நல்லவராக இருந்தால் போதும்.

// கடவுள் பக்தி உள்ள நீங்களெல்லாம் தான் உத்தமர்கள் போலவும் //

கடவுள் நம்பிக்கை மட்டுமே ஒருவனை உத்தமனாக்கிடாது. கடவுளின் பெயரால் இந்தியாவில் மட்டுமல்ல உலகளாவிய அளவிலும் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இறைவன் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை நிச்சயம் ஆண்டவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.

// நாளைக்கு அவங்க கோயிலுக்கு போய் கிடா வெட்டினார்கள் என்று குற்றம் சுமத்தி அவர்களை அரசாங்கம் கைது செய்தால், அது நியாயம் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் இந்த நாட்டில் என்ன நியாயம் சார் இருக்கு? //

உண்மைதான் முத்து. இப்பொழுது நான் எழுதிக் கொண்டிருக்கும் பயணக் கட்டுரையின் நடுவில் கிட்டத்தட்ட இதே பொருளில் ஒரு பகுதி வரும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை. அடுத்தவர் நம்பிக்கையை மதிக்காதவன் நிச்சயம் மடையன். ஐயமில்லை.

வெளிகண்ட நாதர் said...

நமக்கென்று ஒன்றுமே இல்லையா சார்? நாமெல்லாம அநாதைகளா சார்? என்னுடைய தாத்தா பாட்டிக்கு கீதை தெரியாது சார். அவங்கள்ளாம் கள் குடித்து முனியப்பனுக்கு கடா வெட்டித்தான் வாழ்ந்தார்கள். நாளைக்கு அவங்க கோயிலுக்கு போய் கிடா வெட்டினார்கள் என்று குற்றம் சுமத்தி அவர்களை அரசாங்கம் கைது செய்தால், அது நியாயம் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் இந்த நாட்டில் என்ன நியாயம் சார் இருக்கு?

வெளிகண்ட நாதர் said...

//என்னுடைய தாத்தா பாட்டிக்கு கீதை தெரியாது சார். அவங்கள்ளாம் கள் குடித்து முனியப்பனுக்கு கடா வெட்டித்தான் வாழ்ந்தார்கள். நாளைக்கு அவங்க கோயிலுக்கு போய் கிடா வெட்டினார்கள் //இதை பத்தின ஒரு சர்ச்சை என் பதிவில இருக்கு!

துளசி கோபால் said...

இதைப் படிச்சப்பிறகு ச்சும்மா இருக்க முடியலை.

மதம், கடவுள் எல்லாம் மனுஷன் உண்டாக்குனது. நம்ம கண்ணுக்குத் தெரியாத எதோ ஒரு சக்தி பல கஷ்டங்களிலே
இருந்து நம்மக் காப்பாத்திடுது பாருங்க. அதைத்தான் கடவுள்னு நான் நினைக்கிறேன். மத்தபடி அந்த்ச் சக்திக்கு உருவம்
கொடுத்து வழிபட ஆரம்பிச்சது மனுஷனே. அது போட்டும் அவுங்களுக்கு இஷ்டமான உருவம், ஊணவு எல்லாம் கொடுத்துக் கும்புடறதுலே
பிரச்சனை கிடையாது. கடவுள் நேருலே வந்து சொன்னாரா நான் இப்படித்தான் இருக்கென்னு?
கடவுள்ன்றதை நம்புனவங்களுக்கு அது கடவுள். அதை உணரணுமே தவிர இப்படித்தான் இருப்பாருன்னு சொல்லவே முடியாது.
சிலபேர் சொல்வாங்க, அவருக்கு ..... கடவுள் பிரத்தியக்ஷம்னு. அதெல்லாம் ச்சும்மா......

நாராயணகுருன்னு ஒருத்தர் இருந்தார். மனுஷந்தான். அவர் சொன்னது எல்லாருக்கும் பொருந்தும்.
'மதம் ஏதாயாலும் சரி. மனுஷன் நன்னாயால் மதி'

முதல்லெ மனுஷன் மனுஷனா இருக்கணும். மத்த உயிர்களிடத்தில் அது எதுவாவேணுமாலும் இருக்கட்டும்
அன்பா இருக்கணும். தன்னுடைய மனசாட்சி தப்புன்னு சொல்றதைச் செய்யக்கூடாது.
இதுலே ஜாதி எங்கெ வந்துச்சு?
ஜாதிப் பிரச்சனை இல்லாத சமுதாயம் உண்டாக நாம் என்ன செஞ்சோம்? என்ன செய்யணும்? இதை யோசிச்சுப்
பார்த்துச் செயல் படுத்தணும்.

முத்து தமிழினி சொல்றது போல , கலப்புக் கல்யாணத்தால் உறவுகளை இழந்த கூட்டத்தில் நானும் இருக்கேன். தனிப்பட்ட
முறையில் ஜாதி என் வீட்டுக்குள்ளே இல்லாமல் பார்த்துக்கிட்டு இருக்கேன். இவ்வளவுதான் என்னாலெ செய்யமுடிஞ்சது.

இதைத்தவிற வேற ஒண்ணும் சொல்றதுக்கில்லை. சொந்த விஷயத்தை ரொம்பச் சொல்றது நல்லா இருக்காது.

பின்னூட்டம் நீண்டு போச்சு. மன்னிக்கணும்.

Unknown said...

அன்பின் குழலி,

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை.தமிழ் கலாச்சாரம் என்று கூட ஒன்று எப்போதும் இருந்தது கிடையாது.தமிழ்நாடு என ஒன்று உருவானதே 1956ல் தான்.அப்போது தமிழ்,தமிழன் என்பதெல்லாம் வெற்றுக்கோஷமா என்ன?ஒரே மொழி பேசும் ஆங்கிலேயர் அனைவரும் ஒரே கலாச்சாரம் என்று சொல்ல முடியுமா?

//இந்து மதம் என்று சொல்லிக் கொண்டாலும் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இந்து மதத்தில் இருக்கிறோம், ஒரே மாதிரியாகவா இந்து மதத்தை பின்பற்றுகின்றோம்,//

எல்லாரும் ஒரே தமிழ் கலாச்சாரத்தையா பின்பற்றுகிறோம்?ஒரே மாதிரியாகவா தமிழனாக இருக்கிறோம்?உலகின் 99% நாடுகளில் ஒரே மாதிரியாக ஒரு மதத்தை பின்பற்றுவது கிடையாது.Unity in diversity என்பது தான் நமது பலம்.

//அதைத் தாண்டி ஜெய்ஹிந்த் என கேட்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு மட்டுமே....//

நல்ல வேளை.நம்மை காக்க எல்லையில் உயிரை விடும் ராணுவ வீரன் ஜெய்ஹிந்த் என்று கேட்டபோது சிரிக்கவில்லை.தேசபக்தி தான் கொண்டான்.அதனால் நாம் தப்பினோம்.

//பாதுகாப்பின் இலட்சணம் கர்னாடகாவில் இழந்த ஆயிரம் தமிழ் உயிர்களும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பல்லாயிரம் பெண்களும் கூறுவார்கள், காஷ்மீரில் ஆரம்பித்து, வடகிழக்கு மாநிலங்கள், குசராத் என பாதுகாப்பின் இலட்சணங்கள் பற்றி நிறையவே எழுதலாம்//

என் ஊரில் 10 கொள்ளையும்,10 கற்பழிப்பும் நடந்தது.அதனால் போலிஸ் ஸ்டேஷனை மூடு என்று சொல்லுவது போல் இருக்கிறது உங்கள் வாதம்.பாதுகாப்பை எடுத்தால் தான் என்ன நடந்திருக்கும் என்பது தெரியும்.1000 கொள்ளைகளை தடுத்தால் அது வெளியில் தெரியாது.யாரும் பேச மாட்டார்கள்.1 கொள்ளை நடந்தால் ஆ ஊ என்பார்கள்.

நிழலின் அருமை என்று வெயிலில் தான் தெரியும்.இந்தியாவின் அருமை அதை உருவாக்க போராடிய லட்சக்கணக்கான தியாகிகளுக்கு தான் தெரியும்.அவர்கள் வைத்த மரத்தின் கனிகளை இன்று நாம் சுவைக்கிறோம்.பழம் சரியில்லை என வசை பாடுகிறோம்.பழம் சரியில்லாதது இருக்கட்டும்,மரத்துக்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றினாயா தம்பி என கேட்க அவர்கள் நல்லவேளை உயிரோடு இல்லை.

Muthu said...

செல்வன்,

கோவித்துகொள்ளவேண்டாம்.உங்கள் எழுத்தில் உள்ள உட்டோப்பியவாதம் அதிகமாகிகொண்டே போகிறது.

இந்தியாவை நாங்கள் உடைக்க சொல்லவில்லை.ஆனால் எல்லோருக்கும் சம உரிமை கேட்கிறோம்.அவ்வளவுதான். எங்கள் இருப்பையே கேள்விக்குட்படுத்தவேண்டாம் என்பதுதான் மையகருத்து.

Anonymous said...

உங்கள் எழுத்தில் உள்ள உட்டோப்பியவாதம் அதிகமாகிகொண்டே போகிறது

;-))))

வெங்காயம் said...

முத்து விட்டுத் தள்ளுங்கள்.

திராவிடர்களை நசுக்கி, பலகூறுகளாப் பிரித்து எங்கள் இனமே உயர்ந்தது என்ற இறுமாப்புடன் 'நான் பிராமனன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்' என்று சிலர் இதே தமிழ்மணத்தில் கூவியபோதெல்லாம் ஒன்றும் கூறாமல், இப்போது திராவிடன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்பதற்கு மட்டும் இது வேண்டாமே என்று அவர் கூறியிருப்பது, தங்களை இனத்தால் உயர்த்திக் கொண்டவர்களை நோக்கி அறிவுரை சொல்ல முடியாது என்ற எண்ணம் அல்லது நானும் திராவிட இனத்தவன்தான் என்ற உரிமையில் ஒரு சகோதரனுக்கு விடுத்த அறிவுரையாகவே எடுத்துக் கொள்ளுங்கள்.

Pot"tea" kadai said...

தமிழ்நாட்டில் எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் திராவிடமோ, சுயமரியாதை பற்றியோ யாரும் பேசக்கூடாது. அப்படி பேசிவிட்டால், நாம் எங்கே செல்கிறோம்? உலகம் எங்கே செல்கிறது? என பல நூறு பதிவுகள் போட்டுவிடுவார்கள்.

திட்டமிட்டு பல கொள்ளை, கொலை செய்த மடத்துக் காரர்களுக்கு எல்லாம் "இணைய தளம்" வைத்து ஆதரவு கோரும் காலமாயிற்றே இது!

தமிழினி,
உங்கள் வழியில் பயனத்தை தொடர வாழ்த்துக்கள்!

//கோவித்துகொள்ளவேண்டாம்.உங்கள் எழுத்தில் உள்ள உட்டோப்பியவாதம் அதிகமாகிகொண்டே போகிறது//

ஆனாலும் உங்களுக்கு குறும்பு ஜாஸ்தி தான்!:-))

முத்துகுமரன் said...

//தமிழ்நாடு என ஒன்று உருவானதே 1956ல் தான்.//

என்ன செய்ய இந்திய வரலாறு அப்படிதான சொல்லுது.....

பி.கு:
புறநானுற்று காலத்திலே தமிழகம் என்பது உருவாகிவிட்டது.

குழலி / Kuzhali said...

//நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை.
//
புரியவில்லையா? இந்தியா என்பது இயல்பான உருவான நாடு அல்ல, இந்திய தேசியம் ஒரு கற்பிதம், இயல்பான

நாடு உருவாவது மொழியால், இனத்தால், கலாச்சாரத்தால் என ஏதேனும் ஒன்றால் இணைந்திருக்கும், இந்தியா

வெள்ளையனிடத்தில் அடிமையாக இருந்தோம் என்ற அடிமைத்தனத்தில் மட்டுமே ஒன்றாக இணைந்திருக்கின்றது.

////இந்து மதம் என்று சொல்லிக் கொண்டாலும் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இந்து மதத்தில் இருக்கிறோம்,

ஒரே மாதிரியாகவா இந்து மதத்தை பின்பற்றுகின்றோம்,//

எல்லாரும் ஒரே தமிழ் கலாச்சாரத்தையா பின்பற்றுகிறோம்?ஒரே மாதிரியாகவா தமிழனாக இருக்கிறோம்?உலகின்

99% நாடுகளில் ஒரே மாதிரியாக ஒரு மதத்தை பின்பற்றுவது கிடையாது.Unity in diversity என்பது தான் நமது

பலம்
//
மிகத்தெளிவாக எல்லாவற்றையும் கீழே விளக்கியிருக்கும்போது வார்த்தைகளில் தொங்குகின்றீர்...

கீழே இருப்பதை மீண்டும் படித்து பாருங்கள்
//ஒரே மாதிரியாகவா இந்து மதத்தை பின்பற்றுகின்றோம், திராவிட, இயற்கை வழிபாட்டை, சிறு தெய்வ

வழிபாட்டை அழித்து சைவ, வைணவம் வளர்ந்து, புத்த,ஜைன,சீக்கிய மதங்களை இந்து மதத்தின் பிரிவாக்கி)

இப்போது எல்லாம் இந்து என்ற ஒரு குடையின் கீழ்,
//
எப்படி பல்வேறு வழிபாட்டுமுறைகளை, நம்பிக்கைகளை ஒரே குடையின் கீழ் இந்து மதம் என்ற குடையின் கீழ்

கொண்டு வரப்பட்டதோ அதே போல் இந்தியாவையும் இந்த குடையின் கீழ் கொண்டு வர முயலுவது, இதன்

முயற்சி இந்தியை திணிக்க முயன்றது, மற்றைய மாநிலங்களில் வெற்றி பெற்றது தமிழகத்தில் மட்டும் திராவிட

ராஸ்கல்களால் முடியாமல் போய்விட்டது.

//அதைத் தாண்டி ஜெய்ஹிந்த் என கேட்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு மட்டுமே....//
இப்போதும் ஜெய்ஹிந்த் என கத்துவதை கேட்கும்போது அதன் பின்னணியிலுள்ள போலித்தனம் தான் எனக்கு

தெரிகின்றது.


//பாதுகாப்பின் இலட்சணம் கர்னாடகாவில் இழந்த ஆயிரம் தமிழ் உயிர்களும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட

பல்லாயிரம் பெண்களும் கூறுவார்கள், காஷ்மீரில் ஆரம்பித்து, வடகிழக்கு மாநிலங்கள், குசராத் என பாதுகாப்பின்

இலட்சணங்கள் பற்றி நிறையவே எழுதலாம்//
//என் ஊரில் 10 கொள்ளையும்,10 கற்பழிப்பும் நடந்தது.அதனால் போலிஸ் ஸ்டேஷனை மூடு என்று சொல்லுவது

போல் இருக்கிறது உங்கள் வாதம்.பாதுகாப்பை எடுத்தால் தான் என்ன நடந்திருக்கும் என்பது தெரியும்.1000

கொள்ளைகளை தடுத்தால் அது வெளியில் தெரியாது.யாரும் பேச மாட்டார்கள்.1 கொள்ளை நடந்தால் ஆ ஊ

என்பார்கள்.
//
கர்னாடகாவில் தமிழர்கள் கொல்லப்பட்டது தமிழன் என்ற காரணத்தால், காஷ்மீர், வடகிழக்கு

மாநிலபிரச்சினைகளும் இதே மாதிரியானதே, போலி தேசியத்தினால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இதையும்

முடிச்சி போடுவதை பற்றிய முடிவையும் செல்வனின் உதாரணத்தையும் அதிலுள்ள தர்கத்தையும் இதை

படிப்பவர்களிடமே விடுகின்றேன்.

//தமிழ் கலாச்சாரம் என்று கூட ஒன்று எப்போதும் இருந்தது கிடையாது.தமிழ்நாடு என ஒன்று உருவானதே 1956ல்

தான்.அப்போது தமிழ்,தமிழன் என்பதெல்லாம் வெற்றுக்கோஷமா என்ன?ஒரே மொழி பேசும் ஆங்கிலேயர்

அனைவரும் ஒரே கலாச்சாரம் என்று சொல்ல முடியுமா?
//
இந்தியா எந்த அடிப்படையில் ஒன்றினைந்திருக்கின்றது? மொழியா? மதமா? கலாச்சாரமா? இனமா? இதில்

ஒன்றில் கூட பொதுமை இல்லாத இணைவு எப்படி பட்ட இணைவாக இருக்கும், போலித்தனமான

இணைவாகத்தானே இருக்கும்? இப்படி பட்ட போலித்தனத்தால் யாருக்கோ இழப்பும், யாருக்கோ லாபமும்

இருக்கும், யார் இழக்கின்றார்கள்? யார் லாபம் அடைகின்றார்கள்?.

இதற்கு மேல் இது தொடர்பாக விவாதிக்க விரும்பவில்லை, சரியான விளக்கங்கள் தந்திருப்பதாகவே

எண்ணுகின்றேன்.

முதன்முறை செல்வனிடம் பேசுகின்றேன் என நினைக்கின்றேன்,

செல்வன் அல்லாமல், முன் முடிவுகளுடன் வார்த்தைகளை, சொல்லப்பட்ட context புரிந்து

கொள்ளாமல்/விரும்பாமல் தொங்குபவர்களிடம் பேச விரும்பவில்லை.

Muthu said...

முத்து,
கடவுளை நம்பாதவர்கள் பாவிகள் என்ற கருத்து உண்மையான மதவாதியின் கருத்தே அல்ல. உண்மையான மதவாதி மனிதர்கள் மீதும், பிற உயிர்கள் மீதும் அன்பு கொண்டவன். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுபவன். மதத்தின் பெயரை சொல்லி ஒழுக்கக்கேட்டைச் செய்பவர்கள் மதவாதிகளே அல்லர், மதத்தின் போர்வையின் வாழும் கொடியவர்கள். எத்தனையோ ரவுகளும், சமூக விரோதிகளும் அரசியலைக் கேடயமாகப் பயன்படுத்துவதுபோலவே, மதத்தைக் கேடயமாய்ப் பயன்படுத்துவோரும் பலருண்டு. அது அரசியலின் தவறோ அல்லது மதத்தின் தவறோ இல்லை. தவறு மனிதனிடத்திலேயே உள்ளது.

விவேகானந்தரின் பல பொன்மொழிகள் எனக்குப் பிடிக்கும். அதில் ஒன்று. "...தன் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எவனும் நாத்திகனே இல்லை..".

டிபிஆர்.ஜோசப் said...

அன்புள்ள முத்து,

என்னால் கேவலமாக சிந்திக்கவும் முடியாது, கேவலமாக எழுதவும் முடியாது. என் பேச்சிலும், எழுத்திலும் ஏன் சிந்தனையிலும் கூட கேவலம் என்ற வார்த்தையே இல்லை.

கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்கிறவர்களை நான் கேவலப்படுத்தவும் இல்லை. விமர்சித்திருக்கிறேன். அவ்வளவுதான். அதற்காக என்னை அவதூறாக பேசி வந்த பின்னூட்டங்களையும் பப்ளிஷ் செய்திருக்கிறேன். என்னால் முடிந்த அளவு பதிலும் அளித்திருக்கிறேன்.

ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் எந்த அளவுக்கு தங்களுடைய இனத்தை (திராவிடம் என்ற சொல்லுக்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லை என்றுவேறு சொல்கிறீர்கள்)பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தெளிவாக புரிந்துக்கொள்கிறேன்.

ஆனாலும் ஒரு சின்ன சமாதானம். என்னுடைய கருத்தை ஆதரித்து வந்த பின்னூட்டங்கள் அவற்றை எதிர்த்து வந்த பின்னூட்டங்களை அதிகமாக இருந்தது. என்னுடைய சிந்தனை அதைப் படித்தவர் மனத்தில் ஒரு புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தினால் அதுபோதும்.

இப்போதும் கேட்கிறேன். என்னுடைய எழுத்தின் பின்னால் இருக்கும் ஆதங்கத்தைப் புரிந்துக்கொள்ளுங்கள்.

பிறகு வேறொன்று என்னுடைய நட்சத்திர வார முதல் நாள் நான் பதிந்திருந்த இடுகையிலேயே என்னுடைய மூத்த மகளுக்கு சாதி பாராமல் நான் செய்த திருமணத்தை எப்படி என்னுடைய தாயாரே புறக்கணித்தார்கள் என்று.

மேலும் இறுதியில் ஒன்றையும் கூறியிருந்தேன்.

சாதி, மத, இனத்தின் பெயரால் நம்மை பிரித்து ஆண்ட கேடு கெட்ட அரசியல் எங்களுடைய ஜெனரேஷனோடு ஒழிந்து போகட்டும் என்று. ஆம். அப்போது எங்களுக்கு இதை எதிர்த்துப் போராட துணிவிருந்ததில்லைதான். சாதி என்றல்ல இனத்தையும் (திராவிடம் என்று பொருள் கொள்ளவும்) தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடாதீர்கள். அதுவும் கடல்கடந்து சென்று வாழ்ந்துக் கொண்டிருக்கும் உங்களில் பெரும்பாலோனோர் செல்லரித்துப்போன இந்த conceptஐ பிடித்துக்கொண்டு அழுவதுதான் வேதனையாக இருக்கிறது.

இது ராகவனுக்கு,

பிறருடைய நம்பிக்கையை மதிக்கத் தெரியாதவன் நான் இல்லை ராகவன். என்னுடைய அந்த பதிவு யாருடைய மனதிலாவது அப்படியொரு எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். கடவுள் நம்பிக்கையில்லாதவனும் மனிதாபிமானத்தோடு இருக்க முடியும் என்பதை நேரில் கண்டுணர்ந்தவன் நான்.

Muthu said...

ஜோசப் அவர்களே,
மேலே குறிப்பிட்டிருப்பது எனக்கா அல்லது தமிழினி முத்துவுக்கா என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் நான் ஒன்றை முதலில் சொல்லிவிடுகிறேன். நீங்கள் இதுவரை எதையும் தவறாக(கேவலமாக என்பது ரொம்பக் கடினமான வார்த்தை, அதற்கு அருகில்கூட நீங்கள் இல்லை) எழுதியதாய் எனக்கு நினைவில்லை. நான் இங்கே இட்ட பின்னூட்டம் மதவாதிகள் பற்றிய பொதுவான என்னுடைய கருத்து. தனிப்பட்ட முறையில் எந்த மனிதரையும் குறிப்பிடுவது இல்லை.

Anonymous said...

irraivan illai enbavan paavi

irriavan irrukiran enbavan appavi

irraivan peeyaral kaalithanam seybvan maha paavi

(for e.g sankara sarees)pondravargal(maha periyavar chiii)maha paavi

//நல்ல வேளை.நம்மை காக்க எல்லையில் உயிரை விடும் ராணுவ வீரன் ஜெய்ஹிந்த் என்று கேட்டபோது சிரிக்கவில்லை.தேசபக்தி தான் கொண்டான்.அதனால் நாம் தப்பினோம்.//

ithe vaarthaiyai solli ratha yathirai nadatha poranuga

ennakum seripu than varuthu

he he he he he

-swamy red bull

Anonymous said...

ஆனாலும் ஒரு சின்ன சமாதானம். என்னுடைய கருத்தை ஆதரித்து வந்த பின்னூட்டங்கள் அவற்றை எதிர்த்து வந்த பின்னூட்டங்களை அதிகமாக இருந்தது.

அதில் எத்தனைபேர் தேசியம் என்ற பெயரிலே எவ்விடத்திலும் திராவிடத்தினைத் தீவிரமாக எதிர்க்கின்றகூட்டத்தினர் என்பதைக் கவனித்தீர்களா அய்யா? திராவிடக்கட்சிகளை அமுக்கவென்றே விஜயகாந்துக்கு வாக்கிடும்படி சுற்றஞ்சல் அனுப்புவதை முன்னிலைப்படுத்தும் உங்களிடமும் டோண்டு, எஸ்கே ஆகியோர்போல திராவிடக்கட்சிகள்மீதான வெறுப்புத்தான் இருக்குமோவெனத் தோன்றுகின்றது. நீங்கள் பேசும் சாதியறு சமூகம் கருத்தளவிலே பொருந்தும். நடைமுறையிலே ஒவ்வாது. அப்படியான கருத்துநிலை சமூகத்திலே நாமிருப்பின், சாதி பற்றிப் பேசவேண்டிய தேவையே இராது.

இன்றைய அரசியல்சார் பெரும் திராவிடக்கட்சிகள் முழுதானவையல்ல, ஆனால், நீங்கள் உங்கள் ஆங்கிலப்பதிவிலே சொல்லியிருக்கும் இருபதாண்டு சத்தியமூர்த்தி, ராஜாஜிபோன்றோரின் குலம்சார் நடவடிக்கைகளை முறித்து ஒரு மாற்றுநிலை எல்லோருக்குமாகத் தந்தவை இத்திராவிடக்கட்சிகள்தான் என்பதைமறுக்கமுடியாது.

தமிழ்நாடு 1956 இலே தோன்றியது என்பதற்கும் தமிழ்பேசும் சமூகம் நெடுங்காலமிருந்ததற்குமான வித்தியாசத்தினைச் செல்வன் உணரவில்லையா?

உண்மையிலேயே தூங்குகின்றவர்களையும் நிலத்திலே கால்பட நடக்கின்றவர்களையும் எழுப்பவும் காணவும் செய்யலாம் என்றுமட்டுமே என்னால் சொல்லமுடிகின்றது.

பத்மா அர்விந்த் said...

முத்து: துளசி சொன்னதை நான் வழிமொழிகிறேன். சக மனிதர்கள் நேசம் இல்லாமல் அனபை புரிந்து கொள்ள முடியாது. நானும் ஜோசப் சாரின் அந்த கட்டுரையை படித்தேன். நான் ஆத்திக வாதியும் இல்லை நாத்திக வாதியும் இல்லை. சக மனிதரிகளிடம் அன்பை செலுத்தி ஏற்றுக்கொண்டு மனிதனாக இருக்க இன்னமும் முயன்று கொண்டிருக்கும் சாதாரண சராசரி பெண். everyone is religious in their own way, in their own beliefs. please move on

ஜெயஸ்ரீ said...

"உற்றவர் நாட்டவர் ஊரார் - இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் -இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை

பக்கத்தில் இருப்பவர் துன்பம் தன்னை
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி
ஒக்கத்தில் இருத்தி உலகோர் நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி"
- பாரதி

Muthu said...

ஜோசப் அவர்கள் நாத்திகவாதிகளை "கேவலமாக" விமர்சித்தார் என்ற வார்த்தையை வாபஸ் வாங்கி "கடுமையாக" விமர்சித்தார் என்று கட்டுரையில் திருத்தி உள்ளேன்.

கிறிஸ்துவன் என்பதால் தமிழ் அடையாளத்தை மறுக்கிறீர்கள் என்ற என் குற்றச்சாட்டும் தவறு என்று அவர் கூறிய விளக்கத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து அதை வாபஸ் பெறுகிறேன்.

மற்றபடி திராவிட கருத்தாக்கம் பற்றி நான் கூறியவை அனைத்தும் சரிதான் என்று நினைக்கிறேன்.

நன்றி.

நியோ / neo said...

Muthu,

The lack of Historical Perspective and insensitivity towards ethnic-cultural identities drive some people towards ill-informed views.

It is our duty to (if need be) continuously explain the stand on why india's multi-cultural multi-ethnic national identities need to be protected, propagated and cherished.

Please continue our good work.

Perhaps people should mull over the fact that instead of becoming like European Union, the Indian union has been incarcerated into this suffocating 'single national' entity.