Friday, April 14, 2006

எனக்கு யார் ரோல்மாடல்?

என் தந்தையார் கல்லூரியில் சேர்ந்த கதையை அவரை திரும்ப திரும்ப சொல்ல சொல்லி நான் கேட்பேன்.அவரும் சளைக்காமல் சொல்வார். கிராமத்தில் வாழ்ந்த அவர் பி.யூ.சி முடித்து கல்லூரியில் சேர திருச்சிக்கு சென்றிருக்கிறார்.என் தாத்தாவிற்கு இதெல்லாம் தெரியாது என்பதால் பதினைந்தோ இருபதோ ரூபாய் யாரிடமோ கடன் வாங்கிக்கொண்டு என் தந்தைக்கு துணையாக மட்டும் சென்றிருக்கிறார்.


திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி.என் தந்தை கல்லூரி முதல்வரான கிறிஸ்தவ பாதிரியாரிடம் தன் மதிப்பெண் பட்டியலை காட்டியிருக்கிறார்.இந்த மார்க்குக்கு எல்லாம் இங்கு சீட் கிடையாது என்றாராம் அந்த முதல்வர்.என் தாத்தாவிற்கும் மிகவும் வருத்தமாம். ஆனால் என் தந்தை ஆவேசமடைந்து " Iam the first in my school" என்று கூறியிருக்கிறார்.அது உண்மையும் கூட.


இதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த அந்த முதல்வர் இதற்கு ஏதாவது சான்றிதழ் உன் பள்ளி தலைமையாசிரியரிடம் வாங்கி வந்தால் உன்னை சேர்த்துக்கொள்கிறேன் என்றாராம்.பிறகு அதன்படியே அவருக்கு அட்மிஷனும் கிடைத்தது.அந்த பி.யூ.சி மதிப்பெண் பட்டியலின்படி அவரின் மதிப்பெண்கள் 294/600.ஏறத்தாழ ஐம்பது சதவீதத்திற்கும் கம்மிதான்.ஆனால் Iam the first in my school என்ற வசனம் என் மனதில் ஆழ பதிந்தது.


கண்டதை படித்தவன் பண்டிதன் ஆவான் என்ற பழமொழியை அடிக்கடி சொல்லி என்னை சிறுவயதிலேயே புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படு்த்தியது என் தந்தை எனக்கு கொடுத்த மிகப்பெரிய கிஃப்ட்.(நான் பண்டிதன் ஆகவில்லை என்பது வேறு விஷயம்)என்னுடைய பத்து வயதிலேயே ராஜாஜயின் சக்ரவர்த்தி திருமகன், வியாசர் விருந்து ஆகிய புத்தகங்களை நான் படித்துவிட்டேன்.எனக்கு ஏழு அல்லது எட்டு வயதாக இருக்கும்போது பனிரென்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்த சென்னை சென்ற என் தந்தை சுமார் ஐம்பது கதைபுத்தகங்களை எனக்காக வாங்கி வந்ததை என்னால் மறக்கவே முடியாது.


சொந்த பந்தம் என்று பலருக்கும் இன்சினியரிங் சீ்ட் வாங்கி கொடுத்த என் தந்தை எனக்கு இன்சினியரிங் சீட் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டதை இன்று குற்ற உணர்வுடன் நினைத்துப்பார்க்கிறேன். பணத்தை கட்டியாவது இன்சீனியரிங் சேர்த்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தாலும் நீ என்னவாக ஆகவேண்டும் என்பதை நீதான் முடிவு செய்யவேண்டும் என்றுகூறி என் விருப்பத்தின்படி என்னை கலைக் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.


முதல்நாள் கல்லூரிவிடுதியில் என்னைவிட்டுவிட்டு போகும்போது அவர் கூறிய ஒரே அறிவுரை நீ என்ன வேண்டுமானாலும் செய், எப்படி வேண்டுமானாலும் இரு, ஆனால் நாளை நீ என் மகன் என்று நான் பெருமைபடும்படி ஒரு முழுமனிதனாக ஆகவேண்டும் என்பது தான் என் ஆசை என்று முழுசுதந்திரம் கொடுததவர் என் தந்தை.நல்ல நோக்கமும் நடத்தையும் இல்லாத புத்திசாலித்தனமும் பக்தியும் குப்பைக்கு சமம் என்பதை எனக்கு புரிய வைத்தவரும் அவர்தான்.


அப்பா, என் வாழ்க்கை பஞ்சுமெத்தையாக இல்லை.ஆனால் முள்படுக்கையாக ஆகாமல் இருக்க காரணம் உங்களின் வளர்ப்பு.என் வெற்றிகளை நீங்கள் பார்க்கவில்லை.நீங்கள் என்னை பிரிந்து இன்றுடன் பதினொரு வருடங்கள் ஆகிறது. நான் உங்களுக்கு நினைவுகூர திவசம் என்று எதுவும் வைத்ததில்லை. வைக்கவும் போவதில்லை. .ஆனால் நீங்கள் நினைத்தப்படி தான் நான் வளர்ந்து வருகிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைபடுகிறேன்.நீங்கள் எனக்கு எப்படி இருந்தீர்களோ அப்படியே என் பிள்ளைகளுக்கு நான் இருப்பேன் என்று உறுதி எடுக்கிறேன்.

27 comments:

செல்வன் said...

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்.

உங்கள் தந்தை இருந்திருந்தால் உங்களை பார்த்து நிச்சயம் பெருமைப்பட்டிருப்பார்.

இன்று போல் என்றும் வாழ்க என
அன்புடன் வாழ்த்தும்

செல்வன்

செல்வராஜ் (R.Selvaraj) said...

முத்து, தந்தையை நினைவுகூறும் நல்ல பதிவு. அண்மையில் உங்களின் பல பதிவுகளையும் படித்தே வருகிறேன். நேரக்குறைவால் பின்னூட்ட முடியவில்லை. உங்கள் கருத்தை அது சிலசமயம் ஒருபுறம் சார்ந்திருந்தாலும் தெளிவாகவும் யாரையும் தனிப்படத் தாக்காமலும் வைத்து வருகிறீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள். பல கருத்துக்களில் உங்களுடையதோடு நானும் உடன்படுகிறேன்.

SK said...

ஒவ்வொரு மகனும் படித்துப் பெருமைப் பட வேண்டிய பதிவு!
தூத்துக்குடி தெய்வங்களின் பாதிப்பு தெரிந்தாலும், மனதை உருக்கும் பதிவு!
அப்பா..... இந்த ஒரு மந்திர வார்த்தையின் தாக்கம் புரிந்தவன் என்ற முறையில் உணர்ந்து சொல்கிறேன்..... இவருக்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய முடியும்?.... இருவிழி நீர்த்திவலையைத் தவிர?

Sam said...

நல்ல பதிவு. வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை
அன்புடன்
சாம்

D The Dreamer said...

Muthu
am sure your would be proud of you.

D the D

வெளிகண்ட நாதர் said...

இன்னெரு தவமாய் தவமிருந்தா! இருந்தாலும் தந்தைக்கும் மகன் ஆற்றும் நன்றி!

D The Dreamer said...

Muthu:
sorry about the missing word in the previous comment.

am sure your Dad would be proud of you.

D the D

நன்மனம் said...

முத்து(தமிழினி) நல்ல பதிவு. ஸ்ரீதர்

நன்மனம் said...

முத்து மற்றும் அனைவருக்கும், இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஸ்ரீதர்

விடாதுகருப்பு said...

முத்து,

நல்ல அனுபவ சிதறல். நன்றாக இருக்கிறது பதிவு.

Dharumi said...

நல்ல பதிவு..
நல்ல தகப்பனாக இருப்பீர்கள்...

G.Ragavan said...

நல்லதொரு பதிவு முத்து.

சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே. அந்தக் கடனை நீங்கள் இன்னமும் நினைவு வைத்திருப்பது நன்று.

வாழ்க வளர்க.

உங்கள் தந்தையார் சொன்னது போல் நாம் நல்லவர்களாக இல்லாவிட்டால் நம்மிடம் எந்தப் பழக்கமும் பக்தியும் இருந்து பயனில்லை. நாம் நல்லவர்களாக இருந்து விட்டால் நம்மிடம் எது இல்லாவிட்டாலும் பாதகமில்லை. யாரும் ஒரேடியாக நல்லவராக முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக அதனை நோக்கிச் செல்ல வேண்டும்.

Srimangai(K.Sudhakar) said...

Very much appealing to the heart. Some words just keep lingering in the heart and mind and drive us forward. Being a good father is a challenge for any one . You must be really proud of your father.
All the best.
regards
K.Sudhakar
( I am not able to type in Tamil now. Sorry for that!)

பினாத்தல் சுரேஷ் said...

//அப்பா, என் வாழ்க்கை பஞ்சுமெத்தையாக இல்லை.ஆனால் முள்படுக்கையாக ஆகாமல் இருக்க காரணம் உங்களின் வளர்ப்பு//

அற்புதமாக உணர்வுகளை (என் உணர்வுகளையும்!) வார்த்தையில் வடித்திருக்கிறீர்கள் முத்து. உங்கள் தந்தையின் ஆத்மா சடங்குகளால் சாந்தி அடைந்ததோ இல்லையோ, இந்தப்பதிவினால் நிச்சயம் அடைந்திருக்கும்!

dondu(#4800161) said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் முத்து. உங்களது இப்பதிவை நான் என் தந்தையைப் பற்றி எழுதியப் பதிவுக்கு இணைப்பு கொடுக்க முயன்றேன். அது நான் நினைத்தபடி இல்லாது தனிப்பதிவாகப் போய்விட்டது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/blog-post_14.html#comments

எல்லாம் நல்லதுக்குத்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சந்திப்பு said...

முத்து அப்பாவைப் போல் பிள்ளையா நீங்கள். வாழ்த்துக்கள். எந்தவொரு குடும்பத்திலும் அப்பா இருந்தால் அது ஒரு மாபெரும் தூண். அதுவும் ஒழுக்கத்துடன் கூடிய தன் மக்களுக்கு வழிகாட்டும் அப்பாக்கள் இருந்தால் அதுவே தேசத்திற்கும் செய்யும் பெரும்தொண்டு. இந்த இடத்தில் எனக்கு ஒரு வருத்தம் என்றும் இருந்து கொண்டே இருக்கிறது அது என்னவென்றால், உங்கள் தந்தை மறைந்து 11 வருடங்கள் ஆகின்றது. என் தந்தை எனக்கு 11 வயது இருக்கும் போது மறைந்து விட்டார் இதுதான். என் தந்தையின் அன்பு என்றென்றும் என் நினைவில்... உங்களைப் போல். இந்த இடத்தில் இன்னொரு விஷயம் நீங்கள் திசவம் கொடுப்பதில்லை வாழ்த்துக்கள்! என்னுடைய அம்மா, அவரும் தற்போது இல்லை அவர் மறைந்து 3 வருடங்கள் ஆகிறது. என் வீட்டில் நான் ஒரே பையன், சகோதரர், சகோதரிகள் யாரும் இல்லை. தாய் - தந்தைக்கு திவசம் கொடுக்க ஒரு பிள்ளை வேணும்னுதான்டா உன்னை பெத்துக்கிட்டோம் என்று அன்பும், பாசமும் பொழிய கூறுவார், அதுவும் என் தந்தையின் திவசம் வரும்போதெல்லாம் இந்த உரைகள் என்னை துளைத்துக் கொண்டே இருக்கும். இருப்பினும் எங்க அம்மாவின் அன்புக்காக ஐயர் இல்லாமல் பால், தயிர், இத்தியாதி, இத்தியாதி...களை இணைத்து விடுவேன். அதுவே அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.

எனக்கு ரோல் மாடல் என் தாய்தான்!

மணியன் said...

முத்து, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இந்நன்நாளில் தந்தையை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். உணர்ச்சிகரமான பதிவு.

Anonymous said...

நான் நினைத்தேன், நீங்கள் எழுதிவிட்டீர்கள்.

முத்து(தமிழினி) said...

என் உணர்வினை பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

இந்த பதிவை எழுத இன்ஸ்பிரேஷன் அய்யா டோண்டுவிற்கு ஸ்பெஷல் நன்றிகள்.

பரஞ்சோதி said...

முத்து,

அருமையான பதிவு. மற்ற பதிவுகள் படித்து விட்டு பின்னோட்டம் போடாமல் போவது போல் இப்பதிவில் என்னால் முடியவில்லை, காரணம் தங்கள் தந்தையாரை நானும் போற்றுகிறேன். சிறந்த தந்தைக்கு எடுத்துக்காட்டு, அதே போல் சிறந்த மகனாக நீங்க திகழ்வது, வாழ்த்துகள்.

எனக்கு தந்தையை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை, காரணம் எனக்கு விபரம் தெரியும் முன்பே அவர் மறைந்து விட்டார், ஆனால் அன்னை பற்றி சொல்ல எவ்வளவோ இருக்குது.

இன்று நான் தந்தையாகி இருக்கிறேன், ஒரு தந்தையானவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை புரிந்து நடந்து கொள்ள உங்கள் பதிவும் எனக்கு உதவுகிறது.

நன்றி, தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

முத்து(தமிழினி) said...

பரஞ்சோதி,

நன்றி நண்பரே,

புத்தகம் படிக்கும் பழக்கம்,சொந்த முடிவெடுக்கும் உரிமை.இந்த இருவிஷயங்களும் என் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தின.இதற்கு என் தந்தைதான் காரணம்.

priya said...

A talented writer need not prove who he is to this society.
You are already stamped as "the best" with good guidelines from your father.
As an angel your father must be watching you.
I know how it feels when you miss someone who really cares....
Be proud of urself'......

ஜோ / Joe said...

மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

திதி செய்ய மனமில்லை
இன்னும் வாழ்கிறாள்
மனதில் அம்மா
-இது என் ஹைக்கூகளில் ஒன்று.
----------------
அது போலவே.. எவ்வளவோ நல்ல விஷயங்களை கற்றுக்கொடுத்திருந்தாளும் அப்பாவின் கண்டிப்பு தான் முதலில் நினைவு வரும் எனக்கு.. அந்த பாதிப்பில்..
----------
உடலை நனைக்கும் தூரல்
நினைவில் வந்தார்
பிரம்புடன் அப்பா.
------
பழமை நினைவுகளுக்கு அழைத்து போனமைக்கு நன்றி முத்து!

பாரதி said...

முத்து,

உங்கள் பதிவுகளைத் தவறாமல் படிக்கிறேன். எப்படி இதைத் தவறவிட்டேன் தெரியவில்லை.

//நீங்கள் எனக்கு எப்படி இருந்தீர்களோ அப்படியே என் பிள்ளைகளுக்கு நான் இருப்பேன்//

The most appropriate tribute to your father.

Anonymous said...

I keep coming back and reading this blog...your father's "I am first in my school" keeps coming back to my head ever since I read this blog a few months back. Since then, I have reread this blog many times.

-kajan

முத்து(தமிழினி) said...

kajan,

கருத்துக்கு நன்றி.

இந்த வாக்கியம் எனக்கும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதைப்பற்ிற விளக்கமாக எழுதினால் பத்த பதிவு தேவைப்படும்.

தமிழ்வெளியை பார்த்தீங்களா?