Sunday, July 02, 2006

இலக்கியத்தில் மலம்

பீக்கதைகள்

பெருமாள்முருகன் - நன்றி பாஸ்டன் பாலா

அடையாளம் பதிப்பகம்

பெருமாள்முருகனின் பீக்கதைகள் வாங்கியதாக எழுதி இருந்தேன். இந்த வாரம் தான் இந்த கதைகளை அனைத்தையும் படித்து முடித்தேன். அதைப்பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றியது. அதற்கு முன் பண்டைய தமிழ் இலக்கியத்தில் மலத்தை பற்றி நேரடியாக எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைப்பற்றி இந்த புத்தகத்தின் முன்னுரையில் வேல்சாமி எழுதியுள்ளதை தருகிறேன்.

**************

சமண மத இலக்கியமான நீலகேசி காவியத்தில் 829 ஆம் பாடலில்
இருந்து நான்கைந்து செய்யுள்களில் மலத்தை மையமாக வைத்தே ஆசிரியர் தன் கருத்தை விளககுகிறார். வேதவாதச் சருக்கம் என்னும் அப்பகுதியில் வேதங்கள் என்றால் என்ன? அவை யாரால் படைக்கப்பட்டன என்னும் நீலகேசியின் கேள்விகளுக்கு வேதவாதி, வேதம் யாராலும் படைக்கப்படாதது என்றும் அது தான்தோன்றி என்று கூறியதற்கு பதிலாக நீலகேசி

"நள்ளிரவில் மக்களெல்லாம் உறங்கும் நேரத்தில் ஊர்நடுவே ஒருவன் மலங்கழித்துச் (மலோத்ஸ்ர்க்கம்) சென்றால் அதை தான்தோன்றி என்பாயோ? ஆயுர்வேத வைத்தியத்தின்படி பரிசீலித்து நோயாளியின் மலம், நோஞ்சானின் மலம்,வலிமையானவனின் மலம் என்று பகுக்கலாம்.அந்த நோயாளிக்கு என்ன நோவென்றுகூட பார்க்கலாம்.அதைவிட்டுவிட்டு தான்தோன்றி என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வுமா?", என்று கேட்கிறான்.

இந்த ஓரிடம் தவிர தமிழ் இலக்கிய வரலாற்றில் மலப் பகுப்பாய்வு வேறெங்கும் இல்லை. சொன்னவர்களும் வைதீகத்திற்கு எதிரான அவைதீகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

**************

வெளிப்படையாக பேசப்படக்கூடாதது என்ற அடிப்படையில் பலவிஷயங்களையும் தமிழ் சமுதாயம் பேசாமல் இருக்கப்போய் இன்று சாதியை ஒழிக்க அதைப்பற்றி பேசாமல் இருந்தாலே போதும் என்று படித்தவர்கள் கூட தவறாக எண்ணிக்கொண்டு இருக்கும் சூழ்நிலை தோன்றிவிட்டது.

நான் இளங்கலை பட்டபடிப்பின் போதுதான் முதன் முதலாக கோவையில் விடுதியில் சேர்ந்திருந்தேன். முதல்நாள் விடிந்ததும் முதல் வேளையாக மலங்கழிக்க சென்ற எனக்கு பயங்கர அதிர்ச்சி. ஏறத்தாழ 600 பேர் தங்கியிருந்த அந்த விடுதியில் மொத்தமே நாலே கக்கூஸ். அதற்கும் வெயிட்டிங் லிஸ்ட் போட்டுவிட்டு அடிவயிற்றில் கையை வைத்துக்கொண்டு சிலர் நின்றிருந்தனர். எப்படி இருக்கும்? எதற்கடா விடுதிக்கு வந்தோம் என்றாகிவிட்டது.உயிரை கையிலும் கையை மூக்கிலும் வைத்துக்கொண்டு "போய்"விட்டு வந்தேன்.

ஏண்டா முகம் வெளிறி இருக்கு என்று கேட்டஒரு நண்பனிடம் பலத்த தயக்கத்திற்குபின் நான் என் கஷ்டத்தை சொல்ல அவன் இதுதானா விஷயம் என்று சிரித்துவிட்டு நான் உன்னை சாயங்காலம் வந்து "ட்ராக்"குக்கு அழைத்து போகிறேன் என்றான்.

எங்கள் விடுதியை ஒட்டி ரயில்வே ட்ராக் போவதும் ரயில்வே ட்ராக்கை கடந்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருக்கும்பொட்டல் காட்டில்தான் ஏறத்தாழ 95 சதவீதம் மாணவர்கள் தினமும் அங்குதான் காற்றாட "போவதும்" என்ற விஷயம் எனக்கு அன்று மாலைதான் தெரிந்தது.Rest as they say is history(?).

**************

இந்த சம்பவத்திற்கு பிறகு இன்னொரு சுவாரசியமான விவாதம் இதே விஷயத்தில் எங்கள் விடுதி வழிபாட்டு மீட்டிங்கில் நடைபெற்றது.இவ்வாறு நாங்கள் "ட்ராக்" போய்விட்டு வந்து சுத்தப்படுத்திகொள்ளும் இடத்தில் உள்ள "டப்பா"க்கள் அதாவது வாளிகள் எல்லாவற்றிலும் சாமி படம் இருப்பதாகவும் இதைப்பற்றி மீட்டிங்கில் சுவாமிஜியிடம் சொல்லப்போவதாகவும் சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு ஒரே ஆச்சர்யம்.இதை எப்படி சுவாமிஜியிடம் சொல்வது என்று. படபடக்கும் இதயத்தோடு அன்றைய பிரேயரில் பாட்டு பாடிக் கொண்டிருந்தேன். பிரேயர் முடிந்ததும் ஒரு "புனித பிம்பம்" (அங்கும் புனித பிம்பங்கள் இருந்தன.எங்கு இல்லை என்கிறீர்களா? சரி சரி கதையை கேளுங்கள்) இதைப்பற்றி கேள்வி எழுப்பினார்.சுவாமிஜீக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.இன்னும் பல புனித பிம்பங்களும் கூட சேர்ந்து பேசவும் சுவாமிக்கு குழப்பம் அதிகமாகிவிட்டது. சட்டென்று விடுதி வார்டனான ரசாயனத்துறை பேராசிரியர் தலையிட்டு "சாமி இல்லாத இடம் எங்கப்பா இருக்கு? என்று கேட்டு பிரச்சினையை சமயோசிதமாக முடிதது வைத்தார்.

****************

இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள பெருமாள்முருகனின் அனைத்து கதைகளும் மலத்தை உரிப்பொருளாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இன்னொரு வகையாக பகுத்தால் வட்டார வழக்குள்ள கதைகள் மற்றும் பொதுகதைகள் என்று இரண்டாக பிரிக்கலாம். அந்த வட்டாரத்தை சேர்ந்தவன் என்பதால் இந்த கதைகள் நேரடியாக என்னால் அடையாளப்படுத்தி கொள்ளமுடிகிறது.

புகை உருவங்கள் என்ற கதை என்னை மிகவும் கவர்ந்தது.இந்த புகை உருவங்கள் கதை குறியீட்டு தளத்தில் எழுதப்பட்டிருந்தாலும் நான் சரியாக அதை புரிந்துகொண்டது என் வாசிப்பில் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி உள்ளது.ஒரு ஊரில் பிறந்து அங்கு மட்டுமே வாழ்ந்து சாகும் பழக்கத்தை விட்டு வெளிஉலகம் செல்லும் இந்த தலைமுறை வாழ்க்கையையும் அதனாலான பதட்டங்களையும் அதே சமயம் சொந்த மண்ணின் மீதான வேட்கையையும் மிக சிறப்பாக சித்தரித்துள்ளார்.

"பீ" என்ற கதை பீயள்ளும் ஒரு ஆளின் (செப்டிக் டாங்க் சுத்தம் செய்யும்) ஒரு ஆளின் செயல்களையும் அதை பார்க்கும் அறுவெறுக்கும் சராசரி மனம் இயங்கும் விதத்தையும் கூறுகிறது.கடைசி இருக்கை, வராக அவதாரம் ஆகிய கதைகளை ஒரு வகையான சமூக விமர்சனமாக கொள்ளலாம்.தோழர் பி.எம்.மின் வெற்றி என்ற கதை கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இரு தோழர்களை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட சுவாரசியமான கதை. ஒரு கிராமத்துக்கு களப்பணிக்காக செல்லும் ஒரு தோழர் தனக்கு காலையில் டீ குடித்தால் மட்டுமே மலங்கழிக்கமுடியும் என்று சொல்ல இன்னொரு தோழர் டீ குடிப்பது பூர்ஷ்வா மனநிலை, தேவையில்லாத பழக்கம் என்றும் அதை நிறுத்த பல்வேறு வழிகளை தர்க்கபூர்வமாக தந்து பேசுவதும் சுவையாக எழுதப்பட்டுள்ளது.

மேற்பார்வைக்கு எளிமையாக தோற்றம் கொள்ளும் இச்சிறுகதைகள் கச்சிதமாக பின்னப்பட்டவை.வட்டார வாழ்க்கைமுறை தெரிந்தவர்களால் அதிகம் புரிந்துக் கொள்ளக்கூடிய கதைகளாக வேக்காடு, கருப்பணார் கிணறு, கருதாம்பாளை மற்றும் பிசாசுக்கு போதுமாக விஷயம் ஆகிய கதைகளை சொல்லலாம்.இருந்தாலும் வட்டாரங்களை மீறி சில விஷயங்கள் அனைவருக்கும் பொதுதானே.

பெருமாள்முருகனின் கூளமாதாரி

24 comments:

கோவி.கண்ணன் said...

ஆன்மிக இலக்கியங்களிலும் மலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
ஆணாவம், கண்மம், மாயை இந்த மூன்றும் மும்மலங்கள் எனப்படுகிறது. எனக்குத் தெரிந்தது இது... விளக்கம் ..? ஞான சூரியன்கள் வந்து விளக்குவார்கள் என்று எதிர்பார்கிறேன்

G.Ragavan said...

மலம் அள்ளுகிறவர்கள் என்ற வழக்கம் நடுக்காலத்தில் வந்திருக்கலாம் என நினைக்கிறேன். ஆகையால் முந்தமிழிலக்கியங்களில் மலம் அள்ளுகிறவர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது போல சைவ சித்தாந்தப்படி பார்த்தால் நாமெல்லாம் பிறப்போடே மலத்தோடு வருகிறோம். உடல் கழிவுகள் மட்டுமல்ல மனக்கழிவுகளும் மலமே என்பது சைவக்கொள்கை. வாரியார் சுவாமிகளும் இதற்கு விளக்கம் சொல்லும் பொழுது மலம் சாணியை வைத்துத்தான் விளக்கம் சொல்வார். நான் ஒலிப்பேழைகளில் கேட்டிருக்கிறேன்.

மலம் என்று சொல்லாத சைவ நூல்கள் இல்லை என்றே சொல்லலாம்.

இந்தப் பீக்கதைகள் மலம் அள்ளுகிறவர்களின் வாழ்க்கையை வைத்து வருகின்ற கதைகள் அல்லவா. எந்த ஒரு வாழ்க்கையும் இருக்கிறது என்றால் அதை இலக்கியம் கொள்வது தவறில்லை. என்னைக் கேட்டால் ஃபயர் திரைப்படம் கூட அந்த வகை. அதாவது பெரும்பாலானவர்கள் செய்வதைச் செய்யாமல் வேறு ஏதேனும் ஒன்றை ஒருவர் செய்தால் அதைப் பற்றி நினைப்பதும் பேசுவதும் எழுதுவதும் அசிங்கம் என்ற நிலைதான் இன்று உலகமெங்கும்.

Thangamani said...

நல்ல அறிமுகம் முத்து. இணைய இதழ்களுக்கு அனுப்பலாமே!

Muthu said...

நன்றி கோவி.கண்ணன் மற்றும் ராகவன்,

இது பீயள்ளுபவர்களை மட்டும் பேசும் கதை தொகுப்பு அல்ல. மலம் ஒரு உரிப்பொருளாக உபயோகப்படுத்தப்பட்டு உள்ள சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

சைவ இலக்கியங்கள் மலம் என்று பல விஷயங்களை கூறியிருந்தாலும் மலத்தை அதன் அர்த்தத்தில் எந்த இலக்கியமும் பேசவில்லை.அந்த நீலகேசியை தவிர.

Muthu said...

நன்றி தங்கமணி,

கட்டுரையை கொஞ்சம் விரிவுபடுத்தி அனுப்பலாம் என்று உள்ளேன்.

G.Ragavan said...

//இது பீயள்ளுபவர்களை மட்டும் பேசும் கதை தொகுப்பு அல்ல. மலம் ஒரு உரிப்பொருளாக உபயோகப்படுத்தப்பட்டு உள்ள சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.//

ஓ அப்படியா! நான் கூட அந்தச் சமூகத்தை அடிக்களமாக வைத்து எழுதப் பட்டது என்று நினைத்தேன். ஒரு சின்ன சந்தேகம். தூத்துக்குடியில் நான் பார்த்தவர்கள் தெலுங்கு பேசுகிறவர்களாக இருந்தார்கள். இது தமிழகம் முழுமைக்கும் அப்படித்தான் இருந்ததா?

// சைவ இலக்கியங்கள் மலம் என்று பல விஷயங்களை கூறியிருந்தாலும் மலத்தை அதன் அர்த்தத்தில் எந்த இலக்கியமும் பேசவில்லை.அந்த நீலகேசியை தவிர. //

இல்லை என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்தே திருப்புகழில் இருக்கிறது. மலம் என்ற பொருளில். மலம் மட்டுமல்ல கண்ணில் வரும் பீழை. புண்களில் வரும் சலம் எல்லாம் வரும். மற்ற நூல்களில் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை. தேடிப்பார்த்தால் கிடைக்கலாம்.

G.Ragavan said...

well....இப்பத்தான் நினைவுக்கும் வருது. பட்டினத்தடிகள் பாட்டில் கூடப் படித்த நினைவு. தேடிப் பார்க்க வேண்டும்.

Muthu said...

ராகவன்,

இது தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் செய்த/செய்யும்/ செய்யவைக்கப்பட்ட வேலை.அவர்கள் தெலுங்கு பேசுபவர்கள்.சக்கிலியர்கள் (தேவேந்தர குலம்) தெலுங்கு பேசி பார்த்துள்ளேன்.

பீக்கதைகள் புத்தகத்தில் முன்னுரையில் வேல்சாமி கூறியிருந்ததுதான் அந்த கருத்து.
மலத்திற்கு இணையானது என்று சில விஷயங்களை ஒதுக்கிவைப்பது, அல்லது அறுவெருப்பூட்டுவது என்றில்லாமல் அதை எடுத்து பேசும் இலக்கியம் என்ற அர்த்தத்தில் அவர் கூறினார் என்றே நான் புரிந்துள்ளேன்.


ஆனாலும் வேறு இடத்தில் (நீங்கள் கூறிய பட்டணத்தார்)
இருக்கலாம். பார்க்கவேண்டும்.
எனக்கு பண்டைய இலக்கியங்களில் அவ்வளவு பரிச்சயம் கிடையாது.

அருள் குமார் said...

இத்தொகுப்பைப் பற்றி முன்னமே கேள்வியுற்றிருக்கிறேன். இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் அறிமுகம், படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. நன்றி.

Muthu said...

நன்றி அருள்குமார்

Sivabalan said...

முத்து,

நல்ல பதிவு!

நீங்கள் நம்ம காலேஜ் பற்றி சொன்னது ஒரளவு சரியே.

ஆனால் எங்க Hostel ஒரளவுக்கு பரவாயில்லை.

சுவாமிஜி பல விசயத்திற்கு அப்படித்தான், அமைதியா இருந்து விடுவார்.

G.Ragavan said...

முத்து, இந்தப் பதிவு என்னவோ என்னை ரொம்பவும் பாதித்திருக்கிறது என நினைக்கிறேன். இன்று காலை பேருந்தில் அலுவலகம் செல்லும் பொழுதும் இந்தப் பதிவும் அதன் நினைப்பும் வந்தது. அப்பொழுது எழுந்த ஒரு சிந்தனை.

இவர்கள் பெரும்பாலும் தெலுங்கு பேசுகின்றவர்களாக இருப்பதால் வெளியில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள் அல்லவா. இன்று நேற்று என்று இல்லாவிட்டாலும் என்றைக்காவது. இது போல இன்றைக்குப் பல நாடுகளுக்கு கழிப்பறைத் தூய்மைக்குப் போகின்றவர்கள் நிலை என்ன? பணம் கொடுக்கிறார்கள். நவீன கழிப்பறைகள் என்பதெல்லாம் சரி. ஆனால் அவர்களின் நிலை? வேலைக்கு என்று எங்கிருந்தோ வந்து இவர்கள் அனுபவிக்கும் இழிநிலைதானே இங்கிருந்து எங்கோ போகின்றவர்களுக்கும்! இந்த வேலைக்கு ஆள் எடுக்கிறவர்கள் பின்னால் தம்மக்கள் அதைச் செய்வதை விட இந்தியாவில் இருந்தே ஆட்களைக் கொண்டு வரலாம் என்று முடிவெடுப்பது எந்த வகை? பணம் வேண்டியிருக்கிறதே என்று நம்மவர்களும் போகாமல் இருக்க முடியாது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

Muthu said...

ராகவன்,

//இவர்கள் பெரும்பாலும் தெலுங்கு பேசுகின்றவர்களாக இருப்பதால் வெளியில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள் அல்லவா. இன்று நேற்று என்று இல்லாவிட்டாலும் என்றைக்காவது//

அவ்வளவு சுலபமாக இதை பகுக்க முடியாது. தென்னாட்டில் மொழிகள் பிரிந்த வரலாறு(தமிழிலிருந்து இந்த மொழிகள் பிரிந்ததாக சொல்கிறார்கள்), மக்கள் பரவிய வரலாறு எல்லாவற்றையும் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.


//அவர்களின் நிலை? வேலைக்கு என்று எங்கிருந்தோ வந்து இவர்கள் அனுபவிக்கும் இழிநிலைதானே இங்கிருந்து எங்கோ போகின்றவர்களுக்கும்! இந்த வேலைக்கு ஆள் எடுக்கிறவர்கள் பின்னால் தம்மக்கள் அதைச் செய்வதை விட இந்தியாவில் இருந்தே ஆட்களைக் கொண்டு வரலாம் என்று முடிவெடுப்பது எந்த வகை? //

பீ அள்ள மட்டுமே அவர்கள் எங்கிருந்தோ இங்கு வந்தார்கள் என்பதை ஏற்கமுடியாது என்று தோன்றுகிறது.

மற்றபடி வெளிநாடுகளில் இந்தியாவில் இருந்து மட்டுமா ஆட்கள் எடுக்கிறார்கள்? எனக்கு உறுதியாக தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கலாம்.

G.Ragavan said...

// முத்து(தமிழினி) said...
ராகவன்,

//இவர்கள் பெரும்பாலும் தெலுங்கு பேசுகின்றவர்களாக இருப்பதால் வெளியில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள் அல்லவா. இன்று நேற்று என்று இல்லாவிட்டாலும் என்றைக்காவது//

அவ்வளவு சுலபமாக இதை பகுக்க முடியாது. தென்னாட்டில் மொழிகள் பிரிந்த வரலாறு(தமிழிலிருந்து இந்த மொழிகள் பிரிந்ததாக சொல்கிறார்கள்), மக்கள் பரவிய வரலாறு எல்லாவற்றையும் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. //

நானறிந்த வரையில் தமிழ் தென்மொழிகளின் மூலம் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் மொழி பிரிந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் அங்கிருந்தும் மக்கள் வந்தது அனைவரும் அறிந்ததே. அவர்களும் தமிழரோடு தமிழராக வாழ்வதும் அறிந்ததே. தமிழகத்திலேயே இருந்து கொண்டு தெலுங்கும் தெரிந்தனர் என்பது சரியில்லை. பின்னால் வந்தவர்கள்தான். ஆனால் நம்மவர்கள்தான். இதைத்தான் வரலாறும் சொல்கிறது. தமிழகத்தில் தெலுங்கின் வரவு கிருஷ்ணதேவராயர் காலத்தில் வந்தது. மராட்டிய மொழி சரபோஜியின் முந்தையர்கள் வந்த பொழுது. சௌராஷ்ட்டிரம் மன்னன் வழியில் வராமல் மக்கள் வழியில் வந்தது. அனைத்திற்கும் காலகட்டம் இருக்கிறதே.

G.Ragavan said...

// //அவர்களின் நிலை? வேலைக்கு என்று எங்கிருந்தோ வந்து இவர்கள் அனுபவிக்கும் இழிநிலைதானே இங்கிருந்து எங்கோ போகின்றவர்களுக்கும்! இந்த வேலைக்கு ஆள் எடுக்கிறவர்கள் பின்னால் தம்மக்கள் அதைச் செய்வதை விட இந்தியாவில் இருந்தே ஆட்களைக் கொண்டு வரலாம் என்று முடிவெடுப்பது எந்த வகை? //

பீ அள்ள மட்டுமே அவர்கள் எங்கிருந்தோ இங்கு வந்தார்கள் என்பதை ஏற்கமுடியாது என்று தோன்றுகிறது.

மற்றபடி வெளிநாடுகளில் இந்தியாவில் இருந்து மட்டுமா ஆட்கள் எடுக்கிறார்கள்? எனக்கு உறுதியாக தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கலாம். //

இந்தியா என்றல்ல. மூன்றாம் உலக நாடுகளில் இருந்து எடுக்கலாம் அல்லவா. தம்மக்கள் இந்த வேலையை ஏன் செய்ய வேண்டும். இதைச் செய்யவும் ஆள் இருக்கையில் என்று வெளியில் இருந்து எடுக்கலாம் அல்லவா. இன்னும் சொல்லப் போனால் குறிப்பிட்ட ஆசிய நாடுகளில் அதுதானே நிலமை என்று சொல்கிறார்கள். வடிவேலு காமெடி கூட வருமே.

இந்தத் தொழில் தவறு என்பதல்ல என் வாதம். எப்படி செய்யும் தொழிலால் வேறுபாடு பார்க்கும் எண்ணம் வளரும். அதன் விளைவு என்னவாகும் என்று சொல்வதற்கே. உலகம் முழுவதும் வாசப்படிதான் போல.

Muthu said...

//இந்தத் தொழில் தவறு என்பதல்ல என் வாதம். எப்படி செய்யும் தொழிலால் வேறுபாடு பார்க்கும் எண்ணம் வளரும். அதன் விளைவு என்னவாகும் என்று சொல்வதற்கே. உலகம் முழுவதும் வாசப்படிதான் போல. //

ஓ...அப்படி சொல்றீங்களா? ஏழ்மை மட்டும்தான் பிரச்சினை என்கிறீர்களா?

Muthu said...

//அவர்களும் தமிழரோடு தமிழராக வாழ்வதும் அறிந்ததே. தமிழகத்திலேயே இருந்து கொண்டு தெலுங்கும் தெரிந்தனர் என்பது சரியில்லை. பின்னால் வந்தவர்கள்தான். ஆனால் நம்மவர்கள்தான். இதைத்தான் வரலாறும் சொல்கிறது. தமிழகத்தில் தெலுங்கின் வரவு கிருஷ்ணதேவராயர் காலத்தில் வந்தது. மராட்டிய மொழி சரபோஜியின் முந்தையர்கள் வந்த பொழுது//

இந்த வரலாற்று உண்மை இந்த பதிவுக்கும் நீங்கள் சொல்ல வரும் விஷயத்திற்கும் எங்கே சரியாக பொருந்துகிறது என்று சிறிது தெளிவாக இடுங்கள் ராகவன்.எனக்கு கொஞ்சம் குழம்புகிறது.

suvanappiriyan said...

அழகிய பதிவு திரு முத்து தமிழினி!

பதினைந்து வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டு செப்டிங் டேங்கை சுத்தம் செய்ய இந்த வேலைக்கென்றே பஞ்சாயத்தால் நியமிக்கப் பட்ட ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு சிறுவனும் வந்தனர்.வந்தவர்களில் இள வயது பெண் முகத்தில் சட்டி கை மாறும் போது மலம் தெறித்து விட்டது. இதை பார்த்துக் கொண்டிருந்தஎனக்கோ ஒரே உமட்டல். ஆனால் அந்த பெண்ணோ எந்த அருவருப்பும் கொள்ளாமல் கையால் வழித்தெறிந்து விட்டது தன் வேலையை பார்க்க போய் விட்டாள். என் முகம் போன போக்கைப் பார்த்தவுடன் அந்த பெண் என்னிடம், 'உங்க மலம் என் மேல் விழுந்ததுக்கே இப்படி முகத்தைச் சுழிக்கிறீங்களே அப்ப எனக்கு எப்படி இருக்கும். ஆனால் எங்களுக்கு இதெல்லாம் பழகி போச்சு சாமி!' என்று சொன்னார். உங்கள் பதிவைப் படித்தவுடன் எனக்கு அந்த சம்பவம் தான் உடன் ஞாபகத்துக்கு வந்தது.

இங்கு சவூதியில் அனைத்து கக்கூஸ்களும் பைப்லைன்களில் இணைக்கப் பட்டு பல கிலோ மீட்டர்களுக்கு கொண்டு சென்று கொட்டப் படுகிறது. பிறகு மலம் தனியாகவும், தண்ணீர் தனியாகவும் பிரித்தெடுக்கப் படுகிறது. எல்லாம் இயந்திரங்களே! பிரித்தெடுக்கப் பட்ட தண்ணீர் குளோரினால் சுத்தப் படுத்தப் பட்டு வயல் வெளிகளுக்கு கொண்டு செல்லப் படுகிறது. மலம் தனியாக உலர வைக்கப் பட்டு பல ரசாயன கலவைகளால் கெட்டியாக்கப் படுகிறது. பிறகு அவை கேன்களில் அடைக்கப் பட்டு உரமாக உபயோகப் படுத்தப் படுகிறது. இவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. மனிதர்கள் எந்த வேலையும் செய்வதில்லை. எல்லாம் இயந்திரங்களே!

இது போன்ற அமைப்பு நம் நாட்டில் செயல் பாட்டில் உள்ளதா என்று தெரியவில்லை! இதனால் நமக்கு நிலத்தடி நீரும் மிச்சமாகும்: உரமாகவும் பயன் படும்: இழி தொழில் செய்பவன் (நம் நாட்டு வழக்கப்படி) என்ற பெயரும் அந்த சமூகத்திலிருந்து மறையும்.

பெருசு said...

முத்து

நம்ம அந்த ஹாஸ்டல் பக்கம் போனதே தயிர் சாப்பிடத்தான்.

சாப்பாட்டு நேரத்துக்கு முன்னாடியே ஹாஸ்டல் மக்கள் எல்லாரும்

நம்ம டிபன்பாக்சை காலி செஞ்சுருவாங்க.அதுக்கு பதிலா

guest பேர போட்டு, சாப்பாடு வாங்கி குடுப்பாங்க.

மத்தபடி நாங்க train வரும்போது track ஓரத்திலே இருக்கறவுங்க

எல்லாம் எழுந்து மரியாத குடுப்பாங்க.

கால்கரி சிவா said...

சுவனப்ரியன் சொன்னது போல் வெளிநாடுகளில் எல்லாம் இயந்திரமே. இந்த கழிவுநீறேற்று சுத்திகரிபிற்கு நவீன இயந்திரங்கள் இருக்கின்றன. இந்த இயந்திரங்களின் கட்டுபாடு கம்யூட்டர்களையும் கருவிகளையும் அடியேன் வடிவமைத்திருக்கிறேன்.

சாலைகளில் உள்ள சைபன்கள் அடைபட்டால் அதற்கும் இயந்திரங்கள் தான்.

அலுவகங்களில் கழுவுவது சவூதி மற்றும் மேலைநாடுகளில் மனிதர்கள்தான். இவர்களுக்கு கையுரைகள், முகமூடிகள் சின்ன சின்ன உபகரணங்கள் உள்ளன.

அரபு நாடுகளில் இந்த கழுவி விடும் ஆட்கள் உபகண்டத்தில் இருந்து போனவர்கள் தான்

கனடாவில் எல்லாரும், முக்கியமாக பணம் தேவையிருக்கும் கல்லூரி மாணவர்கள் வேலை செய்கிறார்கள்

சில நாட்களுக்கு முன் என் வீட்டின் கக்கூஸ் பொங்கி விட்டது.

யெல்லோ பக்கங்களில் பார்த்து ஆளை அழைத்தேன். அது ஒரு சனி மாலை. ஆகையால் கட்டணம் இருமடங்கு. அவர் வந்து பார்க்க 100 டாலர்கள். பிறக் கட்டணங்கள் பழுதிற்கு தகுந்தவாறு.

வந்தார் ஒரு அழகான இளைஞர் ஒரு ராட்சத லாரியுடன்.

வந்து கட்டண விவரங்களை விளக்கினார்.

விளக்கிவிட்டு கையுரை முகமூடி அணிந்து வேலையில் இறங்கினார். 15 நிமிடத்தில் சரி செய்தார். செய்து விட்டு எனக்கும் பயிற்சி அளித்தார்.

அவர் உபயோகித்தது கக்கூஸ் பாம்பு என்ற கருவி.

அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் கல்லூரியில் வேதியியல் பொறியியல் பயில்கிறார்.

மொத்த பில் $300 சுமார் 12,000 ரூபாய்கள்.

அதற்கு பின் நான் கக்கூஸ் பாம்பு விடுவதில் தேர்ந்து விட்டேன்.

என் நண்பர்களுக்கும் பயிற்சி அளிக்கிறேன்

12000 ருபாய்கள் ஒரு வீட்டில் கிடைத்தால் பீ அள்ள நம் ஊரிலும் ஒரு கூட்டம் சேரும்

தருமி said...

இன்று சாதியை ஒழிக்க அதைப்பற்றி பேசாமல் இருந்தாலே போதும் என்று படித்தவர்கள் கூட தவறாக எண்ணிக்கொண்டு இருக்கும் சூழ்நிலை தோன்றிவிட்டது.//
படித்தவர்கல் கூட என்பதை விடவும், 'படித்தவர்கள் மட்டுமே' என்றிருக்கலாமோ?

இந்த நூலைப்படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைக் கொடுத்தமைக்கு நன்றி. ஏற்கென்வே ஒரே ஒரு கதை வாசித்ததாக - அந்த கம்யூ நண்பர்கள் பற்றியது - ஞாபகம்.

ரவி said...

அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி முத்து..

லிவிங் ஸ்மைல் said...

பெருமாள் முருகனையும், அவரது கூளமாதாரியும் கேள்வி பட்டதுண்டு.. பீக்கதை குறித்து தற்போதுதான் கேள்விப் படுகிறேன்..

நல்ல அறிமுகம், கண்டிப்பாக வாங்கிப் படிக்க முயல்கிறேன்..

வலைப்பதிவர் பலருக்கும் இந்த சிந்தனை(அவர்கள் தெலுங்கர்கள், என்பது போன்ற வாத-பிரதி வாதங்கள்)
இருப்பது குறித்து மகிழ்கிறேன்..

சாதியால், தொழிலால் இழிவு பட்டிருக்கும் அவர்களை மொழியைக் கொண்டு மேலும் ஆய்வுக்குட்படுத்துவது.. சும்மா இருப்பவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பது போல் ஆகிவிடாதா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்..

இயக்குநர் அமுதன் (நான் வேலை தேடி அலைந்த நாட்களில் தக்க வழிநடத்தலைத் தந்த நண்பர்) எடுத்த shit கிடைத்தால் பாருங்கள்...

Muthu said...

//வலைப்பதிவர் பலருக்கும் இந்த சிந்தனை(அவர்கள் தெலுங்கர்கள், என்பது போன்ற வாத-பிரதி வாதங்கள்)
இருப்பது குறித்து மகிழ்கிறேன்.. //

//சாதியால், தொழிலால் இழிவு பட்டிருக்கும் அவர்களை மொழியைக் கொண்டு மேலும் ஆய்வுக்குட்படுத்துவது.. சும்மா இருப்பவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பது போல் ஆகிவிடாதா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்..//


வித்யா..முதல் வருகைக்கு நன்றி. நான் மொழியை பார்க்கவில்லை. நலிந்தோர்க்கு ஏதுங்க நாளும் கோளும்...

நண்பர் ராகவன் அதன்மூலம் ஏதொ ஒரு பாயிண்ட் சொல்கிறார்.(சொல்லமுயல்கிறார்).எனக்கு சரியாக விளங்கவில்லை.கேட்டுள்ளென்.