Wednesday, July 12, 2006

தேன்கூடு கதை ::: எதிர்நீச்சல்

"அப்ப என்ன சொல்றீங்க,நான் அவரை கூப்பிட ஏற்பாடு செய்யட்டுமா, உங்களால் உடனே பணத்தை கட்ட முடியுமில்லையா?" என்றபடி எங்களை ஏறிட்டு பார்த்தார் டாக்டர்.எப்படி இந்த டாக்டர்கள் எல்லாம் எப்போதும் அப்போதுதான் குளித்துவிட்டு வந்ததைபோன்ற ஒரு புத்துணர்ச்சியுடனும் நிதானமாகவும் இருக்கிறார்கள் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒரு எண்ணம் எனக்குள் வந்துப்போனது.

அந்த குளிரூட்டப்பட்ட சுத்தமான அறையில் நானும் சிவகுமாரும் வெளிகிரக வாசிகளை போல் உணர்ந்தோம். ஒரு வார அலைச்சலும் மனஉளைச்சலும் என்னை விட சிவகுமாரை ரொம்பவும் பாதித்திருந்ததை உணர முடிந்தது. யோசிக்க யோசிக்க தலை வெடித்துவிடும் போலிருந்தது.

"மதியம் சொல்றோம் டாக்டர்", என்றேன் நான். சிவகுமாரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.சுழல் படிக்கட்டில் நடந்து நடந்து நடந்து கீழே வந்தோம்.

கடந்த வாரம் நான் அலுவலகத்தில் லெட்ஜரோடு போராடிக்கொண்டு இருக்கும் போது சிவகுமாரின் போன் வந்தது.அவன் தந்தைக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலத்தில் பார்க்கமுடியாது என்று டாக்டர்களால் அறிவுறுத்தப்பட்டு கோயமுத்தூர் எடுத்துக் கொண்டு வந்ததை சொன்னான். நான் உடனே கையில் இருந்த பணத்தோடு பண்டிகை முன்பணம், பி.எஃப் லோன் ஆகியவற்றையும் சேர்த்து அட்வான்ஸ் எடுத்துக்கொண்டு கோவை வந்தேன்.

ஒரு வாரத்தில் இதுவரை அறுபதாயிரம் செலவாகி இருக்கிறது.எந்த வித முன்னேற்றமும் இல்லை.இரண்டு மூன்று முறை கண்விழித்து பார்த்ததோடு சரி.மல்டிபிள் ஆர்கன் டிஸ்ஆர்டர் என்றும் பிழைக்க பத்து சதவீத வாய்ப்புத் தான் உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.

அவருக்கு திடீரென்று இப்படி ஆகும் என்று யாரும் எதிர்ப்பார்த்திருக்க முடியாது. நல்ல வாட்டசாட்டமான ஆள்.பலசாலி.ஒரு முறை அவர்கள் ஊரில் பில்லுக்குறிச்சி வாய்க்காலில் தண்ணீர் வந்தபோது எனக்கு நீச்சல் தெரியும் என்று கூறி நான் கெத்தாக தண்ணீரில் இறங்கிய சம்பவம் ஞாபகம் வந்தது.கிணற்று நீச்சலும் ஆற்று நீச்சலும் வேறு என்பதை அறியாமல் இறங்கி தண்ணீரோடு அடித்து செல்லப்பட்ட என்னை இழுத்து கரையில் போட்டுவிட்டு எதிர்த்து வரும் தண்ணீரில் எப்படி நீச்சல் அடிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தார் அவர். மகள் திருமணத்திற்காக நிலத்தை விற்கும்வரை நிலத்தில் கடுமையாக உழைத்துக்கொண்டுதான் இருந்தார்.

நானும் அவனும் கல்லூரி தோழர்கள். அவர்கள் ரொம்ப வசதியானவர்கள் இல்லை. தங்கை திருமணத்திற்கு நிலத்தை விற்றப்பின் அவனுக்கு இருக்கும் ஒரே சொத்து அவன் பத்து வருடம் உழைத்து வாங்கிய அந்த டாக்சி தான்.வாடகை வீடுதான். அப்பா, அம்மா, மனைவி, குழந்தை என்று அளவான குடும்பம்.

பிழைக்க தொண்ணூறு சதம் வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்ட டாக்டர் ஒரு யோசனையாக கே.எம்.சி.எச் சுக்கு ஒரு வெளிநாட்டு நிபுணர் வந்திருக்கிறார் என்றும் அவரை அழைத்து பார்க்க வைக்கவும் மருந்து செலவிற்கும் ஒரு லட்சம் வரை ஆகும் என்று எங்களை அழைத்து கூறினார்.அதே சமயம் உயிரை காக்க தான் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதையும் தெளிவாக கூறிவி்ட்டார் அவர்.

வெளியே வந்தோம்.அவன் என்ன நினைக்கிறான் என்று அவன் முகத்தை பார்த்து உணருவது சிரமமாக இல்லை. ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். வண்டியை தடவி கொடுத்தான்.

"சிவா, வேண்டான்டா,ஆண்டவன் விட்ட வழி,அப்பாவை ஊருக்கு கொண்டு போய்டுவோம்", என்றேன் நான்.

சிவகுமார் என்ன யோசிக்கிறான் என்று எனக்கு புரிந்ததால் நான் அவசர அவசரமாக இதை கூறினேன். அவன் எதுவும் பேசவில்லை.சிவகுமாரின் மாமனார் தோளில் இருந்து நழுவிய துண்டை இறுக்கிக் கொண்டு வந்தார்.

"குமாரு,வீட்டுல சொல்லிட்டேன்,மெட்டாடர் வர சொல்லிருட்டுமா"

"ஆமாண்டா, என்னடா யோசிக்கற?" என்றேன் நான்.

"தம்பி, பெரிய டாக்டர்தான் நேத்தே சொன்னாரே" என்றார் அவர்.

அவன் ஏதும் சொல்லவில்லை. தாடை இறுகியது.ஏதோ சொல்ல வாயெடுத்தான்.

"எங்க போய்ட்டீங்க அவர் கண்ணை முழிச்சி பார்க்கிறார், உங்கம்மா தேடறாங்க", என்று ஓடிவந்தாள் ஒரு நர்ஸ்.

சிவகுமாரின் முகம் மாறியது.ஓடினான்.நானும் பின்னால் ஓடினேன். டாக்டர்,நர்ஸ் என்று ஒரு பெரிய பட்டாளமே அங்கு திரண்டிருந்தது. பல மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் வாடிப்போய் களைத்த அவர் முகம் தெரிந்தது.

சிவகுமார் அருகே சென்று அப்பா என்றான்.

கண் விழித்துப்பார்த்தார் அவர்.கஷ்டப்பட்டு கையை தூக்கி அவன் நீ்ட்டிய கையை பிடித்தார்.அவன் கையை அழுத்தி பிடித்தார்.

"டேய் குமாரு"

அவ்வளவுதான் வார்த்தைகள் வந்தது.கண்ணை மூடிக்கொண்டார்.உடனே எல்லாரையும் வெளியே போகசொல்லிவிட்டாள் நர்ஸ்.திரும்பி பார்த்தால் நின்றுகொண்டிருந்த சிவகுமாரை காணோம்.அவசர அவசரமாக கீழே ஓடிப்பார்த்தேன்.காரையும் காணோம்.

அடுத்த இரண்டு மணிநேரத்தில் ஆஸ்பத்திரியில் ஒரு லட்ச ரூபாயை கட்டினான்.அதற்கு மறுநாள் காலை சிவகுமாரின் தந்தை செத்துப்போனார்.

***************

சில வாரங்கள் கழித்து சிவகுமாரை சந்தித்தப்போது அவன் ஒரு வாடகை ஆட்டோவில் டிரைவராக இருந்தான். ஒரு சிறிய வீட்டில் குடியேறி இருந்தான்.

குசல விசாரிப்புகளுக்கு பிறகு உள்ளிருந்து ஒரு ஐநூறு ரூபாயை எடுத்துவந்து என் கையில் திணித்தான்.

"ஒண்ணும் அவசரம் இல்லைடா,மெதுவா குடு" என்றேன்

"வைச்சிக்கடா,மாமா கூட வண்டியை வித்திருக்க தேவையில்லைன்னாரு" என்றான்.அவன் கண்கள் கலங்கியிருந்தன.

நான் எதுவும் பேசவில்லை.புத்தியை மனசு வெல்லும் தருணங்கள் நுணுக்கமானவை. வாழ்வின் அர்த்தம் புரியும் அந்த தருணங்களை, அந்த கணத்தில் எடுக்கப்படும் முடிவுகளை எந்த அளவுகோலில் அளப்பது?

சிறிது நேர மெளனத்திற்குபின் "தப்பில்லைடா" என்றேன்.

"தெரியும்டா" என்பது போல் தலையை அசைத்தான்.

எனக்கு அவன் தந்தை மருத்தவமனையில் கண்விழித்து அவனை பார்த்த அந்த பார்வை ஞாபகம் வந்தது. எதிர்நீச்சல் சொல்லித்தந்த தருணம் நினைவுக்கு வந்தது. கண்ணீரை அடக்க முயன்றேன்.முடியவில்லை.மாமா என்று ஓடிவந்த சிறுவன் சுரேஷின் பாக்கெட்டில் அந்த பணத்தை வைத்து வி்ட்டு கிளம்பினேன்.

(இது சிறிது மாற்றம் செய்ப்பட்ட ஒரு உண்மை சம்பவம்.)

23 comments:

அனுசுயா said...

//புத்தியை மனசு வெல்லும் தருணங்கள் நுணுக்கமானவை//

நல்ல வார்த்தை பிரயோகம். வெற்றி பெற வாழத்துக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

அவ்வளவுதான் வார்த்தைகள் வந்தது.கண்ணை திரும்பி பார்த்தால் நின்றுகொண்டிருந்த சிவகுமாரை காணோம்.அவசர அவசரமாக கீழே ஓடிப்பார்த்தேன்.காரையும் காணோம்.

அடுத்த இரண்டு மணிநேரத்தில் ஆஸ்பத்திரியில் ஒரு லட்ச ரூபாயை கட்டினான்//

அதுதான் முத்து பிள்ளைப் பாசங்கறது.

ஆனால் இப்பல்லாம் அது குறைஞ்சிக்கிட்டு வர்றது வேதனையாத்தான் இருக்கு.

ஒங்க நண்பர் உண்மையிலேயே நல்லவர்னு நினைக்கிறேன்..

உணர்வுகள ரொம்ப நல்லா வார்த்தைகள்ல வடிச்செடுத்திருக்கீங்க.

நல்லாருந்தது. வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

//புத்தியை மனசு வெல்லும் தருணங்கள் நுணுக்கமானவை. வாழ்வின் அர்த்தம் புரியும் அந்த தருணங்களை, அந்த கணத்தில் எடுக்கப்படும் முடிவுகளை எந்த அளவுகோலில் அளப்பது?
//

உண்மையான பாசத்திற்கு முன்னால் பணம் ஒரு பொருட்டே அல்ல! முடியும் வரை முயன்று பார்ப்பதுதான் எதிர் நீச்சல்.

:(

G.Ragavan said...

ம்ம்ம்ம்....அந்த நேரத்துல முடிவெடுக்குறது கஷ்ட்டந்தான்.

ஜோசப் சார், அந்தப் பையன் மனசால முடிவெடுத்ததால அவன் நல்லவனா. உண்மையிலேயே அறிவாளிப் பையனா இருந்து நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டு முடிவெடுத்தா கெட்ட பையனா போயிருவானா? முடிஞ்ச வரைக்கும் பாக்க வேண்டியதுதான். அப்புறமா....ஆண்டவன் விட்ட வழி.

ஆளுக்கொரு தேதி வெச்சு ஆண்டவன் அழைப்பான்னு ஒரு சினிமாப் பாட்டும் உண்டே!

லக்கிலுக் said...

உங்கள் அனுபவம் ரொம்பவும் நெகிழ வைக்கிறது.... வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!!

Anonymous said...

இன்னும் போட்டிக்கு அனுப்பவில்லையா?

http://www.thenkoodu.com/contestants.php

நன்மனம் said...

கனமான பதிவு.:-(

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Muthu said...

thanks anusuya

மணியன் said...

மனதை நெகிழச் செய்யும் நிகழ்ச்சியும் எழுத்தும். வாழ்த்துக்கள்!

Priya said...

To live and to be lived you need to face life. His strength lives within himself and has given the best of him when he was close to his father.
Not all are lucky to be ther to feel the energy.....
Death: We all have to face oneday. But when it is unexpected, it can never be replaced.

குமரன் (Kumaran) said...

எனக்கும் கதையைப் படிச்ச பிறகு இராகவன் சொன்னது தான் சரின்னு படுது. ஆனா அனுபவம் இல்லாததால உறுதியாத் தெரியலை.

Sivabalan said...

முத்து,

மிகவும் சோகமா இருக்கிறது.

கதை நல்லா வந்திருக்கிறது

வெற்றி பெற வாழ்த்துக்கள்..

Muthu said...

ஜோசப் சார்,

நன்றி. பிள்ளை பாசம் குறைகிறது என்கிறீர்களா? வாழ்க்கை முறை மாறுவதால் தனிக்குடித்தனம்,இருவரும் வேலைக்ககு போவது இதெல்லாம் காரணமா?

விரிவாக பேசப்படவேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன்

Muthu said...

thanks sibi

thanks luckylook

thanks jojo
only after seeing your comment i sent to thenkoodu..thanks for link

Muthu said...

thanks nanmanam, manian sir and sivabalan..

Muthu said...

thanks priya...

correct...you have not given your judgement....:))

Muthu said...

ராகவனும் குமரனும் கதையின் சாரத்தை தொட்டுள்ளார்கள். அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி.

புத்தியை தெரிந்தே மனசு வெல்லுவது என்பது பலநேரங்களில் நடக்கும்.ஒரு வேளை அந்த மகன் வண்டியை விற்காமல் தந்தையை சாக விட்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் அவன் மனம் உறுத்தலாம்.எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த எண்ணம் வந்தால் ....

இது ஒரு பாயிண்ட் ஆஃப் வியூ..

இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

Priya said...

"Situation" makes anybody's life change forever. Here the change is for his best to lead a simple life.
Aging comes to all, but in reality not all people take care of their parents. It can be money; selfish and saddist.
This person had a heart to give his love back to his father in a different way.

Muthu said...

thanks priya

(pinuuta kayamai)

முத்துகுமரன் said...

ராகவனும் குமரனும் கதையின் சாரத்தை தொட்டுள்ளார்கள். அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி.

//புத்தியை தெரிந்தே மனசு வெல்லுவது என்பது பலநேரங்களில் நடக்கும்.ஒரு வேளை அந்த மகன் வண்டியை விற்காமல் தந்தையை சாக விட்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் அவன் மனம் உறுத்தலாம்.எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த எண்ணம் வந்தால் ....//

லாப நட்ட கணக்குளை கொண்டு உறவுகளை அணுகமுடியாது.

யாத்ரீகன் said...

>>>வண்டியை விற்காமல் தந்தையை சாக விட்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் அவன் மனம் உறுத்தலாம்.எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த எண்ணம் வந்தால் .... <<<

Exactly.. thatz what i was thinking.. its not only just to avoid that guilty conscience..but its an intricate feeling that no-one even that person couldnt explain..

வினையூக்கி said...

Dear Muthu,
arumai. (i mean it)
r.selvakumar

தருமி said...

மனசோ, அறிவோ இரண்டில் ஏதோ ஒன்று அந்தக் கணத்தில் வெற்றி பெறும். கதைகளில் மனசுக்கும், நிஜ வாழ்க்கையில் அறிவுக்கும்தான் வழக்கமாக பாஸ் மார்க் விழுகின்றது என்று நினைக்கிறேன்.