Saturday, February 04, 2006

பெருமாள் முருகனின் கூளமாதாரி -2

இந்த பதிவின் முதல் பாகம் மேட்டு காட்டு காட்டான்கள் என்ற பெயரில் இங்கே. தமிழ் சினிமாவில் கவுண்டர் பாஷை என்றும் கவுண்டர் வாழ்க்கை என்றும் காட்டப்படுவது பெரும்பாலும் கோயமுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வாழும் கவுண்டர்களுடையது.இந்த மக்களுக்கும் நாமக்கல, திருச்செங்கோடு மக்களுக்கும் சிறிது வித்தியாசம் உண்டு என்று முந்தைய பதிவில் கூறியிருந்தேன். பாஷையிலும் வித்தியாசம் உண்டு. நாமக்கல், திருச்செங்கோடு மக்கள் அவர்களைவிட கொஞ்சம் பாமரத்தனமாக இருப்பார்கள்.

பெருமாள் முருகனின் இந்த நாவலில் அதுவும் குறிப்பாக திருச்செங்கோட்டு மலையை முக்கிய மையமாக வைத்துள்ளார்.இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் சாதி சார்ந்தது. இங்கு பெரும்பாலும் நிலத்தை வைத்திருப்பவர்கள் கவுண்டர்கள்.நாடார்கள் கள் இறக்கி வாழ்பவர்கள். சக்கிலியர் விவசாயக்கூலிகளாக வாழ்ந்து வருபவர்கள்.இந்த கதையின் நாயகன் கூளையன் ஒரு சக்கிலி சிறுவனாக இருக்கிறான்.இளம் வயதில் கவுண்டர் வீட்டு பண்ணையத்திற்கு வருஷம் இவ்வளவு என்று கூலி பேசப்பட்டு வேலை செய்கிறான்.சாதிக்கொடுமைகள் சம்பந்தப்பட்ட இடங்களை யதார்த்தமாகவும் நேர்மையாகவும் கையாள்கிறார் ஆசிரியர்.


எனக்கும் இதில் சில அனுபவங்கள் உண்டு. எட்டு ஒன்பது வயதிருக்கலாம். நான் ஒருமுறை ஊருக்கு சென்றிருந்தப்போது ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் என்னை முதலாளி என்று அழைத்ததோடு அவரை விட வயதில் சிறிய என்னுடைய மாமா டேய் கந்தா என்றெல்லாம் அழைத்ததற்கு எதுவுமே சொல்லவில்லை.இத்தனைக்கும் அந்த நபர் உள்ளூர் அரசு பள்ளியில் ஆசிரியர்.டவுனில் வளர்ந்த நான் வியந்து போனேன்.ஆனால் அப்போதே அங்கு வந்திருந்த என் தந்தை என்னையும் மாமாவையும் திட்டியதோடு இல்லாமல் வாத்தியார் கந்தனையும் சின்ன பையன்கள் மனதில் தவறான எண்ணத்தை வளர்ப்பதாக கடிந்துகொண்டார்.என் தந்தையும் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போது நிலைமையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்று நினைக்கிறேன்.

எங்கள் காட்டுக்கு பக்கத்து காட்டு உரிமையாளரை பணக்கார சக்கிலி என்று அழைப்பார்கள்.கடும் உழைப்பின் மூலமாக நில உரிமையாளர் ஆகிவிட்டார் அவர்.ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன்.ஆனால் ஒற்றுமையுணர்வும் நிலவுகிறது.


நான் ஏற்கனவே சொல்லியிருந்தபடி இந்நாவலில் கதையோட்டம் என்று குறிப்பாக ஒன்றும் இல்லையென்றாலும் கதை முடிவில் உள்ள அந்த எதிர்பாராத திருப்பத்தின் மூலம் கதைக்கு ஒரு கனமான முடிவையும் கதையை படிப்பவர் நெஞ்சில் கதை நாயகனின் பாதிப்பையும ஏற்றிவிடுகிறார் பெருமாள்முருகன்.கண்டிப்பாக கதையை படித்த இரண்டு நாட்களுக்கு கூளையன் நம் நெஞ்சில் உட்கார்ந்துகொண்டு இருப்பான்.
கதையின் நாயகன் தாழ்த்தப்பட்ட குல சிறுவனாக இருப்பினும் கதையின் ஊடாக இழையோடி இருப்பது கவுண்டர்கள் வாழ்க்கைதான் என்று எனக்கு தோன்றுகிறது.இது கதைக்கு பலமா பலவீனமா என்று சொல்லமுடியவில்லை.வீட்டுக்கு வந்த கூளையன் திரும்பவும் கவுண்டர் பண்ணையத்திற்கு போக பயந்து தன்னுடைய பாட்டி வீட்டிற்கு போகும் சம்பவத்தில் சாதிகளை தாண்டிய ஒரு அனுபவத்தை நமக்கு காட்டுகிறார் பெருமாள்முருகன்.நிறைய தகவல்களை , தேவையற்ற தகவல்களை அள்ளி தெளிப்பதாக சுந்தர ராமசாமி இவர் கதைகளின் மேல் ஒரு விமரிசனத்தை வைத்தார்.ஆனால் அந்த மண்ணின் மைந்தன் என்ற அடிப்படையில் அதை நான் மறுப்பேன்.நான் ஏற்கனவே கூறியுள்ளபடி இது ஒரு ஆவணப்படுத்துதல்.தேவையற்ற விவரணைகள் என்று எடுக்கப்படுகிற ஒவ்வொரு வரியும் இந்த நாவலை எதிர்மறையாக பாதிக்கும்.இவர் கதைகளை இதன்ஊடாகத்தான் ரசிக்கமுடியும்.அனைத்து புத்தகங்களையும் படிக்கவேண்டிய ஒரு எழுத்தாளராக என் அலமாரியில் சுந்தர ராமசாமியின் அருகில் அமர்கிறார் பெருமாள்முருகன்.

5 comments:

சந்திப்பு said...

பெருமாள் முருகனின் ‘கூளமாதாரி’ கதையை உடனே வாங்கி படிக்க திட்டமிட்டுள்ளேன். படித்து முடித்த பின்னர் என்னுடைய கருத்தை பதிகிறேன்.

கூளமாதாரியின் போன்ற பல நாவல்கள் வெளிவருவதன் மூலம்தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் முகத்தோற்றத்தையும், நம்முடைய பன்முக கலாச்சாரத்தையும் அடையாளம் காட்டப்பட முடியும். இதிலிருந்து சிறந்த கலாச்சாரத்தை நோக்கி பயணிப்பது எப்படி என்ற கருத்தையும் உருவாக்க முடியும். அந்த அடிப்படையில் கூளமாதாரியின் கதையும், கையாடலும் நல்லவிதமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

நன்றி, முத்து.

மேலும், என்னுடைய பிளாக்கில் தற்போது -ரேட்டிங்- நல்ல முறையில் தெரிகிறது. இதற்காக தாங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Vaa.Manikandan said...

அண்ணா கோயம்புத்தூரூ சுத்திலயும் இருக்குற கோபி,பொள்ளாச்சிய மட்டும் காட்றத்துக்கு அர்த்தம் இருக்குதுங்குல்ல! அது நம்ம கொங்கு நாட்டுக்கு நடுவுல இருக்குது. நீங்க சொன்னது எல்லாம் கொஞ்சம் ஓரம் வந்துருது இல்லீங்களா?அதனால அவ்வுங்க பேச்சும் மாறிப்போச்சுங்க. என்னமோ போங்கண்ணா கோபிக் காரங்கறதுல கொஞ்சம் பெருமைதாம் போங்க எனக்கு.

செல்வராஜ் (R.Selvaraj) said...

முத்து, கூளமாதாரி பற்றிய நூல்விமர்சனத்தை நன்றாக எழுதி உள்ளீர்கள். படிக்க வேண்டும் என்று ஒரு ஆவல் துளிர்க்கிறது. நீங்கள் குறிப்பிட்ட பகுதியின் அண்மைய பகுதியைச் சேர்ந்தவன் என்கிற முறையிலும், வட்டார வழக்கு எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஒரு ஆவல்.

உங்களின் எழுத்து பொதுவாகவே நன்றாகவும் இருக்கிறது.

முத்து(தமிழினி) said...

நன்றி சந்திப்பு..கண்டிப்பாக படியுங்கள்...


நன்றி மணிகண்டன்...ஓரமா இருக்கிற கொங்கு நாட்டு ஆசாமிகளை கைவிட்டுராதீங்கோ....
i studied in kovai only...i like entire kongu naduநன்றி செல்வராஜ்

உங்கள் வாழ்த்து என்னை ஊக்கப்படுத்துகிறது.....

பெருமாள் முருகன் said...

கூளமாதாரி பற்றிய உங்கள் இரண்டு கட்டுரைகளையும் படித்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி.
பெருமாள்முருகன்

தமிழ்வெளியை பார்த்தீங்களா?