Saturday, July 29, 2006

ரஜினி ராம்கியின் மு.கருணாநிதி

முதல் பகுதி இங்கே

http://muthuvintamil.blogspot.com/2006/07/1_28.html

என்னை பொறுத்தவரை சமூக நிகழ்வுகளில் அக்கறை கொள்ளும் / விமர்சிக்கும் மக்களின் பார்வையை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒரு பார்வை கலகப்பார்வையாக, நிலைப்படுத்தப் பட்டுள்ள கருத்துக்களின் மீதான மாற்று பார்வைகளை அங்கீகரிக்கும் பார்வையாக, அதிகாரத்தை எதிர்க்கும் பார்வையாக இருக்கும்.இதற்கு மாறான இன்னொரு பார்வை தன் நிலையை தக்க வைக்கும் பார்வை. தன் வாழ்க்கையை வைத்து எதையும் எடைபோடும் பார்வையாக இருக்கும். இந்த பார்வைகளில் உள்ள நுண்ணிய உள் வித்தியாசங்களை பொறுத்து புனித பிம்பங்கள் முதல் பிரிவினைவாதிகள் வரை உள்ள சகல அடையாளங்களும் ஒருவருக்கு உருவாகும்.

இந்த நூலின் ஆசிரியரின் அரசியல்நிலைப்பாடுகள் எனக்கு தெரியாது.சப்தமா சகாப்தமா என்ற புத்தகத்தில் ரஜினியின் இருகண்களாக ராம்கி கூறிய தெய்வீகமும் தேசியமும் என்பதை இங்கு பொறுத்தி பார்ப்பது முக்கியமானது. இது தான் ராம்கியின் கருத்தும் என்று நாம் அனுமானிக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. இவர் இதற்கு முற்றிலும் மாறுபாட்ட கருத்து நிலைப்பாட்டை கொண்ட கலைஞரைப் பற்றி எழுதுவது காலத்தின் கோலம் என்றே நான் முதலில் நினைததேன்.

//அடுக்குமொழி வசனம், இலக்கியம், லெமூரியா கண்டம், சுயமாரியாதை, கழகம், சமூக நீதி லொட்டு லொசுக்கையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இருபது பிளஸ் வயசுக்காரங்களுக்கு கருணாநிதி என்கிற தனிநபரின் வாழ்க்கையை சொல்வது என்பதுதான் முதலில் போட்ட ஸ்கெட்ச்//

//'பயோகிரா·பியோட பின்னணியில் தமிழ்நாட்டின் ஐம்பது வருஷத்து அரசியல் இருந்தாகணும்'//

http://rajniramki.blogspot.com/2006/04/blog-post.html


இருபது வயசுகாரர்களுக்கு எந்த ஒரு எதிர்மறை விமர்சனமும் இன்றி கருணாநிதியை கொண்டு சேர்ப்பதில் இந்த புத்தகம் வெற்றியடைந்ததா (இங்கு நான் வியாபார ரீதியிலான வெற்றியை சொல்லவில்லை) என்று கேட்டால் ஆம் என்று தான் சொல்லவேண்டும். விருப்பு வெறுப்பு இன்றி இந்த நூலை எழுதியது கண்டிப்பாக பாராட்டப்படவேண்டிய ஒரு விஷயம். நானெல்லாம் அரசியலை சிறு வயதிலிருந்தே கவனிக்க ஆரம்பித்தாலும் எனக்கு நினைவு தெரிந்த முதல் அரசியல் நிகழ்வு எம்.ஜி.ஆர் இறந்த அந்த காலகட்டம்தான்.என் வயது ஆட்கள் பலரும் இந்த காலகட்டத்தில் இருந்தே சமகால அரசியலை கவனிக்க ஆரம்பித்திருப்பார்கள். என்று நினைக்கிறேன். ராம்கிக்கும் இது பொருந்தலாம். 89 தேர்தலுக்கு முன் மக்கள் என் பக்கம் -கலைஞர் கம்பீர பேட்டி என்ற தலைப்பில் ஆனந்தவிகடனில் வந்த பேட்டி என் மனதை கவர்ந்த ஒன்று.அப்போது எனக்கு வயது 13.


பழைய தகவல்களை திரட்டி எழுதும்போது எந்த ஒரு சார்பும் வந்துவிடக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்து எழுதியுள்ள ஆசிரியரால் தன் சமகால நிகழ்வுகளில் தன் கருத்துக்களை பொறுத்து வாக்கியங்களை அமைப்பதை தவிர்க்க முடியவில்லை. இலங்கை பிரச்சினை, ராஜீவ் காந்தி கொலை ஆகிய சமாச்சாரங்களைப்பற்றி எழுதும்போதும் இந்த சட்டமன்ற தேர்தலைப்பற்றி எழுதும்போதும் இந்த கூறுகளை பார்க்கமுடிகிறது. ஆனால் இவை சமகால அரசியல் என்பதாலும் விவாதிக்கப்படவேண்டிய விஷயங்கள் தான் என்பதாலும் மையகருத்துக்கு பாதிப்பு இல்லாமல் நகர்கிறது.

பல இடங்களில் சம்பவங்களை மட்டும் கூறி கருணாநிதியின் ஆளுமையை வெளிக்காட்டுவதில் ஆசிரியர் வெற்றி பெறுகிறார்.

****
பதிமூன்று வயதில் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக கோஷம் போட்டு ஊர்வலம் போன கருணாநிதி அப்போது எதிரே வந்த இந்தி ஆசிரியருக்கும் இந்தி எதிர்ப்பு நோட்டீசை கொடுத்தாராம்.அமைதியாக நோட்டீசை வாங்கிக்கொண்ட வாத்தியார் அடுத்த நாள் வகுப்பறையில் வைத்து பின்னிவிட்டாராம் கருணாநிதியை. அதை எதிர்த்து இன்னொரு ஊர்வலம் கருணாநிதி நடத்துவார் என்று நண்பர்கள் நினைத்திருக்க கருணாநிதி சொன்னாராம்.

" அன்று நான் வீதியில் செய்ததும் சரிதான்.வாத்தியார் வகுப்பறையில் என்னை அடித்ததும் சரிதான்".

கலைஞரின் ஆளுமைத்தன்மையை அந்த சிறுவயதிலேயே காட்டிய சம்பவம் இது.

****

கட்சியில் இரண்டாம் மட்ட தலைவர்களை சுலபமாக தொண்டர் பலம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் வெற்றிக்கொண்ட கருணாநிதி அண்ணாவிற்கு மாற்றாக தான் வர முயற்சிப்பதாக உருவான ஒரு பிம்பத்தை முறித்ததைப்பற்றிய ஒரு சம்பவம் குறிப்பிடத்தக்கது.

அந்த காலகட்டத்தில் ஒரு கூட்டத்தில் அண்ணா பேசிக் கொண்டிருந்த போது கருணாநிதி தாமதாக கூட்டத்திற்கு வந்தாராம். வா கருணாநிதி என்று அண்ணா அழைத்து மீதி பேச்சை என் தம்பி கருணாநிதி பேசுவான் என்று கூறினாராம்.அப்போது கலைஞர் பேசியது இது.

"அண்ணா பேசிவிட்டதால் தமிழ்பேசிவிட்டது என்று அர்த்தம்.தமிழ்நாடே பேசிவிட்டது என்று அர்த்தம்".

கூட்டத்தின் கரவொலி அடங்க நிறைய நேரம் ஆனதாம்.திமுக வை அண்ணாவிற்கு பிறகு கலைஞர் கவர்ந்துகொண்டு விட்டார் என்ற முட்டாள்தனமான குற்றச்சாட்டை இதுப்போன்ற சம்பவங்களை விளக்குவதன் வாயிலாக இந்த புத்தகம் உடைத்தெறிகிறது. ஆசிரியர் தன் கருத்தாக எதையும் கூறாமலே இது போன்ற பல விஷயங்களை மக்களுக்கு புரியவைக்கிறார்.

கட்சியில் இருந்து எம்.ஜீ.ஆர் காங்கிரசின் முயற்சிகளினால் வெளியேற முதலிலேயே முடிவு செய்துவிட்டார் என்பதையும் பல்வேறு கொள்கை சார்ந்த விஷயங்களிலும்,நிர்வாகத்திலும், அரசியலிலும் எம்.ஜீ.ஆர் ஒரு புனிதப்பசு இல்லை என்பது இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களில் இருந்தே ஒருவர் உணர முடியும்.அதே போல் திமுக வளர திராவிட உணர்வு எவ்வளவு துணை புரிந்ததோ அதே அளவிற்கு அல்லது ஒருவேளை அதற்கும் அதிகமாக சினிமா கவர்ச்சியும் துணை புரிந்துள்ளது என்பதையும் நம்மால் உணர முடிகிறது.

திமுக வும் ஜனதா கட்சியும் பிரிந்த நின்ற சூழ்நிலையில் தான் எம்.ஜீ.ஆர் முதன் முதலில் ஜெயிக்கமுடிந்தது என்பது எனக்கு செய்தி. உடல்நலம் குன்றி இருந்த அனுதாபத்தால் வென்றது இவை போன்ற செய்திகளெல்லாம் மீடியாவில் புரெஜக்ட் செய்யப்படுவது போல எம்.ஜி.ஆர் Invincible அல்ல என்பதையே உணர்த்துகிறது.

இதில் வெறும் வரலாற்று பதிவாக இருந்தாலும் பல இடங்களில் கலைஞரின் செயல்பாடுகளை,திமுகவின் செயல்பாடுகளை வரலாற்றில் நியாயப்படுத்துவதாகவே உள்ளது.சீனப்போரில் திமுக எடுத்த நிலை(அண்ணாவின்அணுகுமுறை), பாகிஸ்தானுடனான போரின் போது மொத்தம் இந்தியாவில் வசூலான 25 கோடியில் தமிழகத்தில் மட்டும் ஆறு கோடி வசூலித்த தந்த செய்தி ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது திமுக தேசியத்தை கொத்தி குதறினாலும் நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்றால் என்ன செய்யவேண்டும் என்பதில் (அறிஞர் அண்ணா உள்பட) தெளிவாகவே இருந்துள்ளனர் என்பதைத்தான் காட்டுகிறது. சுதந்திரம் பெற்ற நாளை இன்ப நாள் என்று அண்ணா வருணித்ததும் துன்ப நாள் என்று பெரியார் வருணித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் கலைஞர் போன்ற ஒரு ஆளுமையை பற்றி ஒரு நூல் எழுதும்போது பல்வேறு தருணங்களி்ல் அவர் எடுத்த முடிவுகளை படிப்பவர் புரிந்துக்கொள்ள அவர் கொள்கைகளைப்பற்றிய அறிமுகம்/பரிச்சயம் இருப்பது அவசியம் என்று எனக்கு தோன்றுகிறது.

ஒரு கேள்விக்கு பதிலாக அரசு என்ற கேடயத்தையும் தக்கவைத்து கொண்டு எமர்ஜென்சிக்கு எதிர்ப்பு என்ற வாளையும் ஏகநேரத்தில் வீச வேண்டி இருந்தது என்றாராம் கலைஞர். வாழ்க்கை முழுவதும் அதைத்தான் செய்துவந்துள்ளார் கலைஞர் கருணாநிதி. கொள்கைக்கும் கேடு வராமல் அதே சமயம் தேவையான சமரசங்கள் செய்யவும் தயங்காமல் இருப்பதாலேயே இத்தனை ஆண்டுகள் இங்கு சமாளிக்க முடிந்திருக்கிறது.

சினிமா கவர்ச்சியும் புனித பிம்ப மனப்போக்கும் மிகுந்த தமிழ் மக்களை ஒரு பெயர் பெற்ற நாத்திகன் ஐந்து முறை ஆள்வது என்ற முரணின் பின்னால் உள்ள தமிழ்மக்களின் உளவியல்....

அனைத்து கொள்கைகளையும் வயதான காலத்தில் குடும்ப அரசியலுக்காக அடகு வைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு...

தமிழ்நாடு திமுகவால் கற்றதும் பெற்றதும்....

ஆகிய விஷயங்களை கொஞ்சம் ஆழமாகவும் அகலமாகவும் அலசியிருக்கலாம்.

ஆனால் ராம்கி எழுத்தாளராக பல படிகள் முன்னேறிவிட்டார். அவருடைய முதல் புத்தகத்தை வைத்து பார்க்கும்போது இதைத்தான் கூறமுடிகிறது. இது ஒரு வாழ்க்கை வரலாறு தான்.புனைவு படைப்பு இல்லை என்றாலும் விருப்பு வெறுப்பின்றி எழுதுவதிலும், சுவாரசியமாகவும் கொண்டு செல்வதிலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் நமது ராம்கி. வெல்டன்.


புத்தகம் கிடைக்கும் இடத்திற்கு சுட்டவும்.

Friday, July 28, 2006

பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு

புதிதாக ஏதாவது சோதிடம் பார்க்க ஆரம்பித்து விட்டானா என்று பார்க்க வேண்டாம். தேன்கூடு போட்டியில் பத்தாவது படைப்பாளியாக என்னையும் பனிரெண்டாவது படைப்பாக என் கதையையும் தேர்தெடுத்து உள்ளார்கள். பத்தொன்பது ஓட்டு எனக்கு விழுந்துள்ளது. (நல்லவேளை அங்க (-) குத்து இல்லை.:))

தேன்கூட்டில் என் கடவுசொல் மறந்துவிட்டதால் எனக்கு நான் ஓட்டு போடமுடியில்லை. பிரச்சினை ஆகக்கூடாது என்பதற்காக ஒரு ஓட்டையாவது எனக்கு போடச்சொல்லி ஒரு நண்பரிடம் சொல்லி இருந்தேன்.(ஒரு ஓட்டு கூட இல்லைன்னா நல்லாவாங்க இருக்கும். அதுக்குத்தான்). அவரும் ஏற்கனவே எனக்கு அந்த ஒரு ஓட்டை போட்டுவிட்டதாக கூறி வயிற்றில் பால் வார்த்தார்.

எல்லோரும் தேன்கூட்டிற்கு போட்டி நடத்துவதற்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்து விட்டதால் நானும் என் ஐடியாவை தருகிறேன். மக்கள் ஓட்டு போட்டு ஒரு பதினைந்து இருபது படைப்புகளை தேர்தெடுத்தவுடன் அந்த படைப்புகளை மட்டும் மூத்த படைப்பாளிகளை வைத்து மார்க் போட வைத்து தேர்தெடுக்கலாம்.ஆயினும் இந்த முறை பரிசு பெற்ற படைப்புகள் மிகவும் அருமை என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.

பரிசு பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்களும் எனக்கு ஓட்டு போட்ட நண்பர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மு.க -1

எழுத்தாளர் : ரஜினி ராம்கி

பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்

இங்கே கிடைக்கும்

நண்பர் ராம்கியின் இந்த புத்தகத்தை கடந்த வாரம் பெற்றேன்.ஒரே மூச்சில் படித்தும் ஆகிவிட்டது. கூடவே இதற்குமுன் இதே ஆசிரியர் எழுதிய இன்னொரு புத்தகமான ரஜினி சப்தமா சகாப்தமா என்ற புத்தகத் தையும் பெற்றதினால் இரண்டையும் படித்துவிட்டு அதன்மீதான நம் கருத்துக்களை எழுதலாம் என்று எண்ணி இரண்டையும் இந்த வாரத்தில் படித்து முடித்தேன்.

ரஜினி ராம்கியின் ரஜினி மீதான பற்று நாம் அறிந்தது தான். ரஜினிகாந்தைப் பற்றி ஒரு விமர்சனம் எங்காவது இருந்தால் கண்டிப்பாக அங்கு ராம்கியின் ஒரு பின்னூட்டம் கண்டிப்பாக இருக்கும்.சில பின்னூட்டங்கள் காட்டமாக.சில பின்னூட்டங்கள் விளக்கம் கேட்கும் தொனியில்.ஒரு ரசிகராகத்தான் அவர் ரஜினியை அணுகுகிறார் என்பது தெளிவு.அவருடைய முதல் புத்தகத்தின் பலவீனம் என்று இந்த விஷயத்தையே குறிப்பிடலாம்.

ரஜினிகாந்தின் செயல்பாடுகளை (முக்கியமாக அரசியல் முடிவுகளில் அவர் எடுத்த மதில்மேல் நிலைப்பாடுகளை) நியாயப்படுத்தும் முயற்சி பல தளங்களில் வெளிப்படுகிறது. ரஜினிகாந்தின் மீதான பல கடுமையான விமர்சனங்களை இந்த புத்தகம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. இதைப்பற்றி விளக்கமாக பிறகு பார்ப்போம்.

ஆனால் மு.க வைப்பற்றி ராம்கி எழுதும்போது இந்த தடுமாற்றங்கள் எதுவுமே இல்லாமல் எழுதியுள்ளார்.ரஜினி பற்றியான புத்தகத்தை போல் இல்லாமல் இந்த புத்தகத்தில் ஆசிரியர் கருத்தாக நிறைய விமர்சனங்கள் இல்லை. ஒரு அமைதியான ஆற்றுநீர் ஓடுவது போன்ற இயல்பான நடையில் சுவாரசியமாக கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். காலவரிசையும் தெளிவாக இருக்கிறது.

கடும் உழைப்பை செலுத்தினால்தான் இந்த மாதிரியான ஒரு வரலாற்றினை எழுத முடியும்.கலைஞரின் வரலாறு என்பது தமிழகத்தின் அறுபதாண்டு கால வாழ்க்கை வரலாறு என்று ராம்கி கூறியுள்ளது மிகவும் சரி என்றே தோன்றுகிறது.கலைஞரின் வரலாறு என்பது தமிழகத்தில் திராவிடத்தின் வரலாறு.திராவிடம் வளர்ந்த வரலாறு. திராவிடம் நீர்த்த வரலாறும் அதுவே.

மு.கவை பற்றி எழுதினால் இரண்டு விதமாக விமர்சனம் வரும்.ஒன்று ஜால்ரா அடிக்கிறாங்க என்பது.இன்னொன்று அம்மாகிட்ட பெட்டி வாங்கிட்டு தாக்கி எழுதறாங்க என்று.இதை இரண்டையும் தாண்டி விருப்பு வெறுப்பின்றி எழுதப்பட்டது என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது சரி என்றே தோன்றுகிறது. எந்த விதமான கடுமையான விமர்சனங்களும் இல்லாமல் புகழாரங்களும் இல்லாமல் எழுதப்பட்டுள்ள இந்த நூல் இளைய தலைமுறை யினரிடம் கலைஞரை கொண்டு சேர்க்கும் ஒரு நல்ல ஆவணம் எனலாம்.

வெறும் வாழ்க்கை வரலாறு அல்ல ஸ்கேன் ரிப்போர்ட் என்று எடுத்துக் கொண்டதினால் கலைஞர் கொள்கை என்று கூறிக்கொள்ளும் சமாச்சாரங்களை விளக்க ஆசிரியர் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வில்லை.செய்திகளை மட்டுமே சொல்லிசெல்லும் உணர்வு பல இடங்களில் தென்படுகிறது.கலைஞரின் வெற்றியின் ரகசியம், தமிழ் மக்களின் உளவியல் ஆகிய விஷயங்களைப்பற்றி ஆசிரியர் கூற்றாக சில விஷயங்களை எழுதியிருக்கலாம்.

(தொடரும்)

Sunday, July 23, 2006

இஸ்ரேலும் இந்தியாவும்

இரண்டு ராணுவ வீரர்கள் கடத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் லெபனானை தாக்கிக்கொண்டு இருக்கிறது. இதைப்பற்றி சர்வதேசநாடுகள் எதுவும் கண்டுக்கொள்ளவே இல்லை. இஸ்ரேல் விஷயத்தில் அவர்களுக்கு தங்களை தற்காத்துக்கொள்ள முழு உரிமை உள்ளது என்று புஷ்ஷில் தொடங்கி அமெரிக்க அரசாங்கத்தின் அனைத்து அல்லக்கைகளும் கூறிவிட்டனர்.

கொஞ்சமும் மனித தன்மையற்ற இந்த தாக்குதலில் ஏகப்பட்ட சிவிலியன்கள் உயிரிழப்பு என்று தகவல்கள் வருகின்றன. ஏகப்பட்ட வெளிநாட்டவர்கள் லெபனானை விட்டு வெளியேறி வருகின்றனர். அங்கு இருந்த வெளியேறிய இந்தியர்களில் கணிசமானோர் தமிழர்கள் போல் தெரிகிறது.நம்ம ஆளுங்க இல்லாத இடமே இல்லடா சாமி.

பம்பாயில் குண்டுவெடித்து ஏராளாமோனோர் இறந்தும் நம்மை பாகிஸ்தானை குற்றம் சொல்லக்கூட அமெரிக்கா விடவில்லை. ஆதாரத்தை எடுத்து வைத்து விட்டு பேசுங்கள் என்றுவிட்டனர். இந்தியா ஒருவேளை பாகிஸ்தானை தாக்கினால் கூட நமக்கு அமெரிக்க ஆதரவு கிடைக்காது. சீனாவும் பாகிஸ்தானை தான் ஆதரிக்கும்.ரஷியா கூட நமக்கு கண்மூடித்தனமான ஆதரவை தரும் நிலையில் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

ஆகவே உணர்ச்சி வேகத்தில் இஸ்ரேலை போல் நாமும் செய்யவில்லை என்றெல்லாம் பேசுவது புத்திசாலித்தனம் அல்ல. அமெரிக்கா இருக்கும் தைரியத்தில் பேட்டை ரவுடி மாதிரி கலாட்டா செய்யும் இஸ்ரேலை ஆதரிப்பதும் நியாயமாகாது.

உருப்படியான தீர்வு இந்திய அரசாங்கம் புலனாய்வு பிரிவை பலப்படுத்த வேண்டும். உள்நாட்டு கண்காணிப்பு அதிகப்படுத்தப் படவேண்டும். மத ரீதியான மோதல்களை தூண்டும் முயற்சிகளில் ஈடுபடும் அன்னிய சக்திகளை ஊக்கப்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் அறிக்கை விடுவதும் தவிர்க்கப்படவேண்டும்.இஸ்லாமிய சமூகத்தில் உள்ள மிதவாத சக்திகள், மிதவாத அறிவுஜீவிகள் ஊக்கப்படுத்தப்படவேண்டும்.


நேற்று கோவையில் தமிழக போலீஸ் அதிரடி நடவடிக்கையில் சில தீவிரவாதிகளின் சதிச்செயல் முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீசின் இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டப்படவேண்டியது. இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் எல்லா பகுதிகளிலும் நடைபெற வேண்டும்.

(points taken from express article)

Saturday, July 22, 2006

தீர்ப்பை மாத்தி சொல்லு....

ஒரு வாரமாக அதிகாரபூர்வ ஏட்டுக்கு ஒரு நல்ல கட்டுரை எழுத எண்ணி செயல் தலைவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும் சில நச்சு சொம்புகள் குழுமத்தில் குழப்பம் என்று விஷத்தை பரப்புவதால் செயல் தலைவர் தலையை காட்ட வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிட்டது.மேலும் என்னைப்பற்றிய ஒரு அரிய தகவலையும் ஒரு தளததில் பார்க்க நேரிட்டது. கருத்து சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்க விரும்பாததால் அதை கண்டுக்கொள்ளாமல் இருக்க நேரிட்டு விட்டது.


இந்த பதிவு எழுதப்பட்ட நேரத்தில் நான் இணைய அரசியலில் கழுத்தளவு முழுகியிருந்ததால் எப்படியும் அந்த பரிட்சை ஊத்திக்கொள்ளும் என்று பல நண்பர்கள் வருத்தப்பட்டார்கள்.எனக்கும் பயம் இருந்தது. தனி மெயிலில் என்னை தொடர்புக்கொண்டு உனக்கு இதெல்லாம் தேவையா என்று கடிந்தரைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி.

கெலிச்சாச்சுப்பா..ஹிஹி ஒரு இங்கிரிமெண்ட் உண்டுபா...

நண்பர் ஒருவர் எழுதிய புத்தகங்கள் குரியரில் நேற்று வந்து சேர்ந்தன. ஒரு புத்தகத்தை ஒரே மூச்சில் உட்கார்ந்து படித்தும் விட்டேன்.அதைப்பற்றிய ஒரு திறனாய்வு(?) கட்டுரை எழுதலாம் என்று எண்ணம் உண்டு. அவருடைய இன்னொரு புத்தகத்தையும் படித்துவிட்டு திங்கள் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

அதற்குமுன்னர் இன்று ஒரு காமெடி சீரியல் ஜோசப் சார் பாணியில் துவக்கலாம் என்று உள்ளேன். வலைப்பதிவாளர்களின் போராட்டத்திற்கு செவி சாய்த்து பிளாக்கர் தடையை நீக்கிய அரசுக்கு நன்றி.

Saturday, July 15, 2006

பாலச்சந்தரின் அழைப்பை ஏற்று

பாருங்க சார், அய்யாமாரே, அம்மாமாரே,இந்த குத்துசண்டை கத்துக்கறவங்க பிராக்டிஸ் பண்றதுக்காக ஒரு மணல் மூட்டையை கட்டி தொங்கவிட்டுருப்பாங்க.அதை குத்தி குத்தி பிராக்டிஸ் பண்ணுவாங்க.அக்னி நட்சத்திரம் படத்தில் பார்த்தீங்கன்னா பிரபு எக்சைஸ் பண்ணுவாரு பாருங்க.என்ன தான் குண்டாக இருந்தாலும் பிரபு அந்த படத்தில் செய்த ஸ்டைல், பாடி லாங்வேஜ் எல்லாம் சூப்பருங்க.ஒரு பணக்கார வீட்டு பையன், போலீஸ்காரன், காதலன் இந்த கெத்தை அப்படியே காட்டுவாரு.ரஜினி(?) படத்துல கூட இந்த மாதிரி சில காட்சி, சரத் படத்துல இந்த மாதிரி சில காட்சி பார்த்தாலும் அந்த பிரபு பாட்டு (அது என்னங்க பாட்டு) மாதிரி வரதீல்லீங்க.சரி இருக்கட்டும்.அதை ஏன் இப்ப சொல்ற என்று கேட்கறீங்களா?

தமிழ்மணத்தில் இப்பல்லாம் எந்த பிரச்சினை வந்தாலும் இந்த மணல் மூட்டை மாதிரி ஆயிட்டேங்க நானு, ஹிஹி. இவ்வளவு தகுதிக்கு மீறிய விளம்பரம் மனசோட ஒரு மூலைல சந்தோசமா இருந்தாலும் நியாயமான விளம்பரம் இல்லீங்க. என்னை விட பெரிய ஆளுங்க எவ்வளவோ இருக்காங்க.எனக்கு வந்த ஒரு வருசத்தில் ஏகப்பட்ட அனுபவம்னே..இந்த சீதா பிராட்டி மாதிரி நெருப்பில விழுந்தெல்லாம் என் கற்பை(கருப்பா..இல்லீங்க கற்பு) நிரூபிக்கற எண்ணமெல்லாம் இல்லீங்க...கதை எழுதத் கத்துக்கதானுங்க இங்க வந்தேன்...ஆனா நடந்தது வேறங்க.

பாலு சொன்ன மாதிரி நான் நேத்து போட்ட பதிவே சூடு அணைக்கற பதிவுதான்...சரி திரும்பவும் சொல்லிட்டாரேன்னு நெருப்பை அணைக்க ஒரு பாட்டு போடலாம்னு தான் நெனைச்சேன்.. ஏற்கனவே எனக்கு புடிச்ச தேவுடா பாட்டை போட்டாச்சி... .வேற பாட்டு என்னன்னே இருக்கு? அதுவும் இல்லாம பாட்டெல்லாம் அதிகம் நமக்கு தெரியாதுண்ணே. இந்த சினிமா பாட்டெல்லாம் எணையத்துல ஃப்ரியா(?) டவுன்லோட் செய்வாங்களாமே..அப்படி எதாவது ஃப்ரி சைட் இருந்தா சொல்லுங்கண்ணே..பாப்பம்...

ஒரு காரியம் செய்வோம்.நாளையோட எனக்கு முப்பது வயது முடியற இந்த நல்ல நேரத்துல நான் ஒரு உருப்படியான காரியம் செய்யறன்னே..ஒரு நாலு நல்லா எழுதக்கூடிய புதிய ஆசாமிகளை அறிமுகப்படுத்தறன்னெ..அதில் பாருங்க..இவங்க போலி நடுநிலைமை, போலி ஆன்மீக ஆசாமிகள் இல்லைங்கண்னே அதே சமயம் இந்த நாலு பேரும் நல்லா எழுதறவங்க அப்படின்னு நான் சொன்னேன்னா அது என் டேஸ்ட்டை வைச்சித்தாங்க... படிங்க..படிச்சிட்டு சொல்லுங்க..

1.kuppusamy

இவரு ஏற்கனவே பங்கு வணிகத்தை பத்தி ஆழமா எழுதுனவரு.மற்ற விஷயங்களையும் தன்னால் எழுத முடியும்னு இந்த பதிவுல நிரூபிக்கறாரு. மனசை தொடும் எழுத்து. ஒரு சர்ச்சைக்குரிய கதையை எழுதியவர்(அதை ரகசியமா ரசிச்சவங்க பலபேர்)என்றாலும் சிறந்த எழுத்தாளர் இவர்

2.bonapert

மிக சிறப்பாக எழுதிக்கொண்டு இருப்பவர் . இவருடைய பாரதி கட்டுரை, மாப்ளா கலவர கட்டுரை உள்பட அனைத்து கட்டுரைகளும் உண்மையில் விஷயம் தெரிந்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு உதவும்.போலி நடுநிலைமையாளர்கள், புனித பிம்பங்கள் எக்ஸ்க்யூஸ்

3.voice of wings

அவசியமான விஷயங்களை பேசும் இந்த வார வலைப்பதிவாளரான இவருடைய கட்டுரைகளுக்கு சரியான விளம்பரம் இல்லை என்பது என் வருத்தம்..மறுமொழி மட்டுறுத்தல் செய்யாததும் ஒரு காரணம்.

4.varavanaiyan

வரவணையானின் எழுத்துக்களை உயர்தர காமெடி என்பேன் நான். சிறிது எளக்கிய தத்துவ(?) அறிமுகம் உள்ளவர்கள் ரசிக்கத்தக்க பதிவுகள்.அனைத்து பதிவுகளையும் படியுங்கள்.சின்ன சின்ன பதிவுகள்தான்

சண்டைங்களை பார்த்து டென்சன் பண்ணிக்காம இவங்க பதிவுகளை படியுங்க.. ஏதாச்சம் நல்ல கருத்தா இங்கெல்லாம் பின்னுட்டம் போடுங்க...பொழுது உருப்படியா போகும்.. அணைக்கறதுக்கு பதிலா பத்திக்குச்சின்னு யாரும் இங்க வந்து நீக்காதீங்கண்ணே....

ஹிஹி

Friday, July 14, 2006

வலைப்பதிவை விட்டு விலகுவது

வலைப்பதிவுகளுக்கு அடிமை ஆவது என்பது ஒரு புதிய நோய்தான். பல நண்பர்கள் குறுகிய கால விடுமுறை எடுத்துக்கொண்டு போவது உண்டு. சிலர் நெடுங்கால விடுமுறை எடுப்பார்கள். சிலர் கொடுமை தாங்காமல் ஒரேயடியாக விலகிவிடுவார்கள்.இந்த நோய் உங்களை தாக்கி இருக்கிறது என்பதை அறிய சில அறிகுறிகளை சொல்கிறேன்.நம் வாயால் நாமளே வீட்டில் சம்பந்தம் இல்லாமல் உளறுவது ஒரு வகை. அவைகளைப்பற்றி ஒரு சிறிய பார்வை.

சம்பவம் 1:

வீட்டில் ஒரு நாள் ஓட்டலில் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.குழந்தை மழலையில் ஏதோ சொல்ல இனிமே ஓட்டலிலேயே சாப்பிடலாம் என்று குழந்தை சொல்வதாக நான் மொழிபெயர்த்தேன்.

"என்ன உள்குத்தா", என்றாள் வீட்டுக்காரி.

"என்னது? இந்த வார்த்தை உனக்கு எப்படி தெரியும்" என்றேன் நான்.

"நீதான அடிக்கடி சொல்ற", என்றுவிட்டு போய்விட்டாள்.

சம்பவம் 2:

திடீரென்று ஒரு நாள் மாலை ஆபிஸ் விட்டு வீட்டுக்கு சென்றால் எல்லோரும் கிளம்பி நிற்கிறார்கள்.இன்னைக்கு ஷாப்பிங், ஹோட்டல் போகலாம்னு சொன்னியே மறந்துட்டயா என்றார்கள்.

"நான் எப்ப சொன்னேன்?" என்றேன்

"காலைல கம்ப்யூட்டர்ல உட்கார்ந்து நீ எழுதிட்டு இருக்கறப்ப சொன்னியே"

",,,,"

"இது தான் சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கறது" என்றாளே பார்க்கணும்.

இந்த வாக்கியம் உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டால் அதான் அடிக்கடி நீ சொல்றியே என்கிறாள்.

சம்பவம் 3:

"என்னங்க, போன் ரிங் அடிக்குது,ஆனா யாரும் எடுத்தா கட் ஆவுது" என்றாள் வீட்டில்.

"அனானிமஸ் ஆப்ஷனை ரீமூவ் பண்ணணும், எலிக்குட்டி சோதனையை...

"என்ன சொல்றீங்க",என்று இடைமறித்தப்பின்தான் தெரிகிறது நாம் என்ன சொல்கிறோம் என்று.

ஆகவே பேரன்புடைய நண்பர்களே, இது போன்ற சம்பவங்கள் உங்களிடத்தில் தெரிந்தால் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.உங்களுக்கு தோன்றும் அறிகுறிகளை இங்கு பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

Thursday, July 13, 2006

தோழி உஷாவுக்கு - 2

நான் மதிக்கும் மணியன் சார் கூறிய

//நம் நேர்மைக்கு நம் மனசாட்சியே அத்தாட்சி. பொது இடத்தில் நான்குபேர் நான்குவிதமாகத்தான் சொல்வார்கள், டேக் இட் ஈஸி, மேம்!//

இதை நான் வழிமொழிகிறேன்.

உங்களுக்கு யார் மீதாவதோ அல்லது பதிவு மீதாவதோ ஆட்சேபம் இருக்கும் பட்சத்தில் தமிழ்மண நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்திருக்கலாம்.தனிப்பதிவு போட்டிருக்க தேவையில்லை. அவசர அவசரமாக என்னையும் விசாரிக்காமல் என்னை பற்றியும் நீங்கள் எழுதினீர்கள். அதையும் தவிர்த்திருக்கலாம். என்னை தவறானவனாக பார்க்க விரும்பியதாலும் அப்படி மற்றவர்களுக்கு காட்ட விரும்பியதாலும் இதை அவசர அவசரமாக செய்தீர்கள் என்று நான் நினைக்கலாமே? (நான் அப்படி உடனடியாக யாரைப்பற்றியும் முடிவுக்கு வருவதில்லை.மேலே மணியன் சார் சொன்ன நடைமுறை யைத்தான் கடைபிடிக்கிறேன்).பிறகு தவறை ஒத்து கொண்டீர்கள். ஆகவே அதை விடுங்கள்.

உங்களின் இந்த செயல் மூலம் தமிழ்மணத்தின் பெயரை கெடுக்க முயன்றீர்கள் என்று பலரும் நினைக்க இடம் உள்ளது.( நான் அப்படி நினைக்கவில்லை என்பது வேறு விஷயம்). இன்று செல்வராஜ் இதைப்பற்றி குறிப்பிடாமல் ஆனால் நிர்வாகி பதவியை விட்டு விலகியது வருத்தத்திற்குரியது.( இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் கூறினாலும் சண்டைகளினால் அவருக்கும் சலிப்பு ஏற்பட்டிருப்பது கண்கூடு.(சேர்க்கப்பட்டது-15.07.2006)

சென்சிட்டிவ்வான பிரச்சினைகள் எழுதினால் இங்கு காரசாரமாக நிறைய பேச்சு வரும்.எழுதுபவர்கள் எல்லாரும் நாம் நினைப்பது போல் எழுதமாட்டார்கள். தரந் தாழ்ந்து எழுதுவதும் தவறுதான்.அந்த வம்பிற்கு பயந்து பலர் சென்சிட்டிவ் ஆன விஷயங்களை பேசுவதில்லை. இது போன்ற விஷயங்களை ஒதுக்குவது என்ற அவர்களின் முடிவு கூட நல்ல முடிவுதான்.

பிரச்சினைகளுக்கு இக்னோர் செய்வது/ஒதுங்கி போவது சரியான முறை. இதை நான் சொல்லப்போய் என்னை திட்டியவர்கள் இன்று இதையே செய்யும்போது நான் கூறியது சரிதான் என்ற எண்ணம் எனக்கு வலுபெறுகிறது.Time Tested strategy.

அனானி பின்னூட்டங்களை ஒழிப்பதுப் பற்றி திரட்டியாளர்கள் ஒன்றும் சொல்ல முடியாது என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கமுடியாது. அப்பாவியாக இருப்பது அல்லது விவரமாக இருப்பது.இதில் ஏதாவது ஒன்றாகத்தான் நாம் பொது இடத்தில் இருக்க முடியும்.நீங்கள் இரண்டாகவும் ஒரே சமயத்தில் இருக்க முயல்வதால் தான் பிரச்சினை என்று எனக்கு தோன்றுகிறது.உங்களைப்பற்றி உங்களுக்கு இருக்கும் கருத்தே மற்றவர்களுக்கும் உங்கள் மேல் இருக்கும் என்று சொல்லமுடியாது இல்லையா?

படித்தவர்கள் இடையே இப்படி எல்லாம் பிரச்சினை வரக்கூடாது என்றும் என்றும் அதை நிறுத்தலாம் என்றும் நான் ஒரு முயற்சி செய்தேன்.அதையே கேவலமாக பேசியவர்கள் பலபேர்.இதைப்பற்றி எல்லாரிடமும் சொல்லி பதிவே போட்டபின்பும் இன்னும் அதை நோண்டி இன்பம் அடைபவர்கள் இருக்கிறார்கள். இதற்கு நான் என்ன பண்ணுவது? இங்கு ஈகோ தான் பிரச்சினை. கருத்துக்கள் அல்ல என்பதை கடைசியாகத்தான் உணர்ந்து கொண்டேன்.

தமிழ்மணத்தை ஒழித்து இந்த பிரச்சினையை ஒழிக்க முடியாது. எலியை பிடிக்க வீட்டை எரிப்பது போல் இது. நாளை தேன்கூட்டிலும் இந்த பிரச்சினை வரலாம். பிராக்டிக்கலாக அணுகுவதுதான் புத்திசாலித்தனம். தேன்கூட்டில் இன்று வரை எந்த பதிவையும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையாக எழுதிய கடுமையாக குற்றம் சாட்டப்பட்ட பலரின் பதிவுகள் அங்கு உள்ளன.இதை ஒரு செய்தியாக கூறுகிறேன்.

முகத்தை மறைத்து எழுதுவது கூட சரிதான் என்று பலபேர் சொல்கிறார்கள்.
( மதிப்பிற்குரிய குமரன் கூட இது சரிதான் என்கிறார்.ஆகவே அதுவும் தவறு இல்லை என்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறுவது போல் இது சரியாகவும் இருக்கலாம்.).சில பேர் அவ்வாறு பெயரை மறைத்தும் எழுதுகிறார்கள்.(பெயரை மறைப்பது என்பது புனைப்பெயர் வைப்பது மட்டும் அல்ல.யார்,எங்கிருந்து எழுதுகிறார்கள் என்றெல்லாம் தெரியாமல் எழுதுவது தான்) அதுவும் தவறு என்று நாம் கூறிவிட முடியாது. நேரடியாக கேவலமாக எழுதுவதும் குற்றம்தான். பூடகமாக கேவலப் படுத்துவதும் குற்றம்தான் என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நடவடிக்கை எடுக்க ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.(முக்கோணம்). அதையும் நீங்கள் செய்யலாம் / செய்திருக்கலாம். யாரிடமும் நம்மைப்பற்றி நாமே சொல்லி எதையும் நிரூபிக்கமுடியாது. அவரவர்கள் அவரவர் மனப்பக்குவத்தை பொறுத்து மற்றவர்களைப்பற்றிய கருத்துக்களை ஏற்படுத்திக் கொள்வார்கள்.இதுதான் நிதர்சனம்.

பெண்களைப்பற்றி தொடர்ந்து சினிமா பாட்டு எழுதி கிண்டல் செய்த பதிவே இங்கு இருந்தது.விஷயம் தெரிந்தோ தெரியாமலோ அந்த பதிவுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த மதிப்பிற்குரிய ஆட்கள் இங்கு உண்டு. இது தான் உலகம்.அதற்காக அவர்களை நாம் என்ன சொல்லமுடியும்? பூடகமாக கேவலப்படுத்துவது என்பது அதுதான்.


அதற்காக இதெல்லாம் சரிதான் என்று சொல்லவில்லை. சகஜம் என்றும் சொல்லவில்லை. ஆனால் உங்கள் முறை தவறு என்பது மட்டும்தான் என் கருத்து. மற்றபடி உங்கள் கருத்துக்களுக்கு என் ஆதரவு உண்டு. எந்த கோஷ்டியிலும் இல்லாத நீங்கள் இதை சரியான முறையில் எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

Wednesday, July 12, 2006

தேன்கூடு கதை ::: எதிர்நீச்சல்

"அப்ப என்ன சொல்றீங்க,நான் அவரை கூப்பிட ஏற்பாடு செய்யட்டுமா, உங்களால் உடனே பணத்தை கட்ட முடியுமில்லையா?" என்றபடி எங்களை ஏறிட்டு பார்த்தார் டாக்டர்.எப்படி இந்த டாக்டர்கள் எல்லாம் எப்போதும் அப்போதுதான் குளித்துவிட்டு வந்ததைபோன்ற ஒரு புத்துணர்ச்சியுடனும் நிதானமாகவும் இருக்கிறார்கள் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒரு எண்ணம் எனக்குள் வந்துப்போனது.

அந்த குளிரூட்டப்பட்ட சுத்தமான அறையில் நானும் சிவகுமாரும் வெளிகிரக வாசிகளை போல் உணர்ந்தோம். ஒரு வார அலைச்சலும் மனஉளைச்சலும் என்னை விட சிவகுமாரை ரொம்பவும் பாதித்திருந்ததை உணர முடிந்தது. யோசிக்க யோசிக்க தலை வெடித்துவிடும் போலிருந்தது.

"மதியம் சொல்றோம் டாக்டர்", என்றேன் நான். சிவகுமாரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.சுழல் படிக்கட்டில் நடந்து நடந்து நடந்து கீழே வந்தோம்.

கடந்த வாரம் நான் அலுவலகத்தில் லெட்ஜரோடு போராடிக்கொண்டு இருக்கும் போது சிவகுமாரின் போன் வந்தது.அவன் தந்தைக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலத்தில் பார்க்கமுடியாது என்று டாக்டர்களால் அறிவுறுத்தப்பட்டு கோயமுத்தூர் எடுத்துக் கொண்டு வந்ததை சொன்னான். நான் உடனே கையில் இருந்த பணத்தோடு பண்டிகை முன்பணம், பி.எஃப் லோன் ஆகியவற்றையும் சேர்த்து அட்வான்ஸ் எடுத்துக்கொண்டு கோவை வந்தேன்.

ஒரு வாரத்தில் இதுவரை அறுபதாயிரம் செலவாகி இருக்கிறது.எந்த வித முன்னேற்றமும் இல்லை.இரண்டு மூன்று முறை கண்விழித்து பார்த்ததோடு சரி.மல்டிபிள் ஆர்கன் டிஸ்ஆர்டர் என்றும் பிழைக்க பத்து சதவீத வாய்ப்புத் தான் உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.

அவருக்கு திடீரென்று இப்படி ஆகும் என்று யாரும் எதிர்ப்பார்த்திருக்க முடியாது. நல்ல வாட்டசாட்டமான ஆள்.பலசாலி.ஒரு முறை அவர்கள் ஊரில் பில்லுக்குறிச்சி வாய்க்காலில் தண்ணீர் வந்தபோது எனக்கு நீச்சல் தெரியும் என்று கூறி நான் கெத்தாக தண்ணீரில் இறங்கிய சம்பவம் ஞாபகம் வந்தது.கிணற்று நீச்சலும் ஆற்று நீச்சலும் வேறு என்பதை அறியாமல் இறங்கி தண்ணீரோடு அடித்து செல்லப்பட்ட என்னை இழுத்து கரையில் போட்டுவிட்டு எதிர்த்து வரும் தண்ணீரில் எப்படி நீச்சல் அடிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தார் அவர். மகள் திருமணத்திற்காக நிலத்தை விற்கும்வரை நிலத்தில் கடுமையாக உழைத்துக்கொண்டுதான் இருந்தார்.

நானும் அவனும் கல்லூரி தோழர்கள். அவர்கள் ரொம்ப வசதியானவர்கள் இல்லை. தங்கை திருமணத்திற்கு நிலத்தை விற்றப்பின் அவனுக்கு இருக்கும் ஒரே சொத்து அவன் பத்து வருடம் உழைத்து வாங்கிய அந்த டாக்சி தான்.வாடகை வீடுதான். அப்பா, அம்மா, மனைவி, குழந்தை என்று அளவான குடும்பம்.

பிழைக்க தொண்ணூறு சதம் வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்ட டாக்டர் ஒரு யோசனையாக கே.எம்.சி.எச் சுக்கு ஒரு வெளிநாட்டு நிபுணர் வந்திருக்கிறார் என்றும் அவரை அழைத்து பார்க்க வைக்கவும் மருந்து செலவிற்கும் ஒரு லட்சம் வரை ஆகும் என்று எங்களை அழைத்து கூறினார்.அதே சமயம் உயிரை காக்க தான் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதையும் தெளிவாக கூறிவி்ட்டார் அவர்.

வெளியே வந்தோம்.அவன் என்ன நினைக்கிறான் என்று அவன் முகத்தை பார்த்து உணருவது சிரமமாக இல்லை. ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். வண்டியை தடவி கொடுத்தான்.

"சிவா, வேண்டான்டா,ஆண்டவன் விட்ட வழி,அப்பாவை ஊருக்கு கொண்டு போய்டுவோம்", என்றேன் நான்.

சிவகுமார் என்ன யோசிக்கிறான் என்று எனக்கு புரிந்ததால் நான் அவசர அவசரமாக இதை கூறினேன். அவன் எதுவும் பேசவில்லை.சிவகுமாரின் மாமனார் தோளில் இருந்து நழுவிய துண்டை இறுக்கிக் கொண்டு வந்தார்.

"குமாரு,வீட்டுல சொல்லிட்டேன்,மெட்டாடர் வர சொல்லிருட்டுமா"

"ஆமாண்டா, என்னடா யோசிக்கற?" என்றேன் நான்.

"தம்பி, பெரிய டாக்டர்தான் நேத்தே சொன்னாரே" என்றார் அவர்.

அவன் ஏதும் சொல்லவில்லை. தாடை இறுகியது.ஏதோ சொல்ல வாயெடுத்தான்.

"எங்க போய்ட்டீங்க அவர் கண்ணை முழிச்சி பார்க்கிறார், உங்கம்மா தேடறாங்க", என்று ஓடிவந்தாள் ஒரு நர்ஸ்.

சிவகுமாரின் முகம் மாறியது.ஓடினான்.நானும் பின்னால் ஓடினேன். டாக்டர்,நர்ஸ் என்று ஒரு பெரிய பட்டாளமே அங்கு திரண்டிருந்தது. பல மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் வாடிப்போய் களைத்த அவர் முகம் தெரிந்தது.

சிவகுமார் அருகே சென்று அப்பா என்றான்.

கண் விழித்துப்பார்த்தார் அவர்.கஷ்டப்பட்டு கையை தூக்கி அவன் நீ்ட்டிய கையை பிடித்தார்.அவன் கையை அழுத்தி பிடித்தார்.

"டேய் குமாரு"

அவ்வளவுதான் வார்த்தைகள் வந்தது.கண்ணை மூடிக்கொண்டார்.உடனே எல்லாரையும் வெளியே போகசொல்லிவிட்டாள் நர்ஸ்.திரும்பி பார்த்தால் நின்றுகொண்டிருந்த சிவகுமாரை காணோம்.அவசர அவசரமாக கீழே ஓடிப்பார்த்தேன்.காரையும் காணோம்.

அடுத்த இரண்டு மணிநேரத்தில் ஆஸ்பத்திரியில் ஒரு லட்ச ரூபாயை கட்டினான்.அதற்கு மறுநாள் காலை சிவகுமாரின் தந்தை செத்துப்போனார்.

***************

சில வாரங்கள் கழித்து சிவகுமாரை சந்தித்தப்போது அவன் ஒரு வாடகை ஆட்டோவில் டிரைவராக இருந்தான். ஒரு சிறிய வீட்டில் குடியேறி இருந்தான்.

குசல விசாரிப்புகளுக்கு பிறகு உள்ளிருந்து ஒரு ஐநூறு ரூபாயை எடுத்துவந்து என் கையில் திணித்தான்.

"ஒண்ணும் அவசரம் இல்லைடா,மெதுவா குடு" என்றேன்

"வைச்சிக்கடா,மாமா கூட வண்டியை வித்திருக்க தேவையில்லைன்னாரு" என்றான்.அவன் கண்கள் கலங்கியிருந்தன.

நான் எதுவும் பேசவில்லை.புத்தியை மனசு வெல்லும் தருணங்கள் நுணுக்கமானவை. வாழ்வின் அர்த்தம் புரியும் அந்த தருணங்களை, அந்த கணத்தில் எடுக்கப்படும் முடிவுகளை எந்த அளவுகோலில் அளப்பது?

சிறிது நேர மெளனத்திற்குபின் "தப்பில்லைடா" என்றேன்.

"தெரியும்டா" என்பது போல் தலையை அசைத்தான்.

எனக்கு அவன் தந்தை மருத்தவமனையில் கண்விழித்து அவனை பார்த்த அந்த பார்வை ஞாபகம் வந்தது. எதிர்நீச்சல் சொல்லித்தந்த தருணம் நினைவுக்கு வந்தது. கண்ணீரை அடக்க முயன்றேன்.முடியவில்லை.மாமா என்று ஓடிவந்த சிறுவன் சுரேஷின் பாக்கெட்டில் அந்த பணத்தை வைத்து வி்ட்டு கிளம்பினேன்.

(இது சிறிது மாற்றம் செய்ப்பட்ட ஒரு உண்மை சம்பவம்.)

Monday, July 10, 2006

வஜ்ராவின் திராவிட கூத்து

ஆரிய திராவிட வரலாற்றைப்பற்றிய உங்கள் மயிர் கூச்செறியும் பதிவை பார்த்தேன்.யார் யார் திராவிட அடிவருடிகள்,மூளையுள்ள/இல்லாத திராவிட தமிழர்கள் யார், பொய்யில் பிறந்து பொய்யில் வளர்ந்தவர்கள் யார் என்றும் புரிந்தது. நன்றி. பல அறிவாளிகளும் புரட்டுக்காரர்களும் இட்ட பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருந்தன. (வழக்கம்போல் அறிவாளிகள்: நீங்கள், புரட்டுகாரர்கள்:திராவிடர்கள்)

கம்பராமாயணம் வால்மீகி ராமாயணத்தை தமிழில் மொழிப்பெயர்த்து எழுதப்பட்டது.அதில் எப்படி ஒரு சாராரை தாக்கி இருக்கும்?அது கூட தெரியாமல் பண்டைய இலக்கியத்தில் ஆரியர்களை யாரும் தாக்கவில்லை என்று ராமாயணத்தை வைத்து உளறுவது நகைப்பிற்குரியது.

மேலும் பண்டைய இலக்கியங்கள் பலவும் நமக்கு கிடைக்கவில்லை என்பது முக்கிய கருத்து. அவை அழிக்கப்பட்டன என்றும அன்றைய ஆதிக்க சக்திகள் தங்களுக்கு உகந்தவைகளை வைத்து மற்றையவைகளை அழித்ததாக வரலாறு கூறுகின்றது.உ.வே.சா மீதுக்கூட குற்றச்சாட்டு உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?இருக்கும் நூல்கள் மட்டும் அல்ல.அழிக்கப்பட்ட நூல்களையும் ஆராய்ச்சி செய்துள்ளார்கள்.அதையும் கணக்கில் எடுத்துத்தான் இதைப்பற்றி தீர்ப்பு எழுதவேண்டும்.

அந்த காலத்திற்கும் இந்த காலததிற்கும் உள்ள முக்கிய வித்தியாசமே தாங்கள் உண்மையிலே பிராமணர்களை விட மட்டம் தான் என்று எண்ணி அன்று வாழ்ந்த மக்கள் இன்று இதெலலாம் புரட்டு என்று உணர்ந்து வாழ்கின்றனர்.இந்த வாக்கியத்தில் பல பதில்கள் உள்ளன. நேர்மையாக சிந்தித்தால் பதில் கிடைக்கும்.

சதயத்தின் கேள்விகளில் அர்ததம் உள்ளது.அசுரர் என்று புராணங்களில் வருணிக்கப்பட்டவர்கள் யார் என்பதற்கு நேர்மையான நேரடியான பதில் இல்லையே உங்களிடம்?

அறிவியலுக்கு நீங்கள் போட்ட புதிய பதிவு உள்பட அனைத்துக்கும் எதிராக பார்வைகளை கொண்ட எத்தனையோ சுட்டிகளை தரமுடியும்.மாங்கு மாங்கென்று எழுதியுள்ள சன்னாசி அவர்களின் பின்னூட்டத்தை உங்களால் நேர்மையாக எதிர்க்கொள்ள முடியவில்லை. ஏற்கனவே சொன்னதையே அடிவயிற்றை எக்கி மீண்டும் கத்துகிறீர்கள்.ஐந்து வருடம் பி.ஜே.பி ஆட்சியிலேயே இவ்வளவு கூத்து என்றால் இரண்டாயிரம் வருடமாக என்னவெல்லாம் நடந்திருக்கும்? கழுவிலேற்றப் பட்டவர்கள் வந்து சாட்சி சொல்வார்களா? பண்டைய இலக்கிய ஆதாரம் வேண்டுமாம்.நல்ல காமெடி.

புராணங்கள் தரும் கலாச்சாரமும் இங்கு வாழும் பெரும்பான்மை மக்களின் கலாச்சாரமும் வேறு வேறு என்பது காமன் சென்ஸ் உள்ளவர்களுக்கே புரியும். இப்படித்தான் காசி யாத்திரை போகிற இந்துக்கள் யார் என்று ஒரு பதிவில் நான் கேட்டேன்.பிராமணர்கள் தவிர நகரத்தார் என்று ஒரு சாதி பெயர் மட்டுமே மக்களால் சொல்லமுடிந்தது.இதற்கு என்ன பதில்?


முத்திரை குத்துகிறார்கள் என்று புலம்பும் ஆட்கள் திராவிடர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆட்களை எந்த உரிமையில் பிரிவினை பேசுகிறார்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்? அதே உரிமையில்தான் நாங்கள் சாதி இல்லை என்று கூறிக்கொண்டே சாதி பேசுபவர்களையும்(நாங்கள் எல்லர்ம ஒன்று என்று கூறினாலே இதுதான் அர்த்தம்) , இடஒதுக்கீடு என்றாலே எரிந்துவிழுபவர்களையும் சம்ஸ்கிருதத்திற்கு காவடி தூக்குபவர்களையும், கடவுள் மறுப்பும் ஒரு மரபு என்பதையும் உணராமல் நம்பிக்கை புண்படுகிறது என்றெல்லாம் புலம்புபவர்களையும் எதிர்க்கிறோம்.(கருத்துரீதயாகத்தான்)

ஆதிக்க சக்திகள் எப்போதும் எங்களுக்குள் வித்தியாசம் இல்லை என்றே முழங்கும்.நீங்கள் பேசுவது ஒரு சிறிய சமுதாயத்தின் சார்பாக.படித்து வாழ்க்கையில் முன்னேறிய ஒரு சிறிய சமூகம்தான் நீங்கள் பார்த்த உங்கள் உலகம். வாழ்முறையை பாருங்கள்.யதார்த்தத்தை பாருங்கள். வந்தேறி இனம் என்று ஒன்று இல்லை என்றால் முதலில் சந்தோஷப்படுவதும் பரம்பரை பரம்பரையாக பாதிக்கப்பட்ட திராவிடர்களாகத் தான் இருக்க முடியும்.திராவிடம் என்பது நீங்கள் கூறியது போல் விந்திய மலைக்கு இந்தப்புறம் இருப்பவர்களாகவே இருக்கட்டுமே.என்ன குடி முழுகிவிட்டது?


இன்றும் இடஒதுக்கீடு வேண்டாம் என்று கூவுவது யார் திராவிடர்களா?

தாய்மொழியை விட்டு வேறு மொழிக்கு காவடி தூக்குவது யார் திராவிடர்களா?

மற்ற மதத்தினர் மீது புழுதி வாறி தூற்றுவது திராவிடர்களா?

பத்து சதவீத பேருடைய கலாச்சாரத்தை,மொழியை தொண்ணூறு சதவீதம் பேர் மேல் சுமத்த இவர்கள் முயல்வார்களாம்.நாம் நமக்குள் வித்தியாசம் இல்லை என்று கூறிக்கொண்டு பல்லை இளிக்கணுமாம். என்னய்யா கொடுமை இது?

போங்க சார்....

எது எப்படியோ இத்தனை நாட்களாக தம்மை உயர்த்தி பேசியும் தாங்கள் தான் அறிவுக்கே மொத்த குத்தகைதாரர்கள் என்றெல்லாம் உயர்த்தி சொல்லிக் கொண்டவர்கள் தங்களை மற்றவர்களுடன் வைத்து அடையாளப் படுத்திக்கொள்ள முன்வந்ததே வரவேற்கத்தக்கது.இன்னும் கொஞ்சம் கிழிறங்கி வரவேண்டி உள்ளது.வரும்.வந்துதான் ஆகவேண்டும்.

ஆயிரம் தான் இருந்தாலும் தமிழ்நாட்டின் கடந்த முப்பது வருட தலையெழுத்து திராவிடர்களால் எழுதப்பட்டது. தமிழ்நாடு நன்றாகவே முன்னேறி இருப்பதாகத் தான் எனக்கு படுகிறது.திராவிட கட்சிகளால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட நன்மைகளைப்பற்றி ஒரு பதிவு எழுதும் எண்ணம் உள்ளது.போகிறவர் வருகிறவர் எல்லாம் தாக்கும் அளவிற்கு திராவிடம் இன்னும் நீர்க்கவில்லை. பிராமணர் என்பதற்காக மட்டுமே ஒருவரை வெறுத்தால் தான் அது பிராமண வெறுப்பு என்பதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள்.

பிராமண எதிர்ப்பையும் பிராமணீய எதிர்ப்பையும் வேறுப்படுத்தி பார்க்க தெரியாத ஆட்களுக்கு சில பாயிண்ட்டுகள்.

பிராமணீயத்தின் சில கூறுகள்

1.பிறப்பால் எந்த சாதியாக இருந்தாலும் அவர்களின் முக்கிய கருத்தாக்கமான வேதம், சம்ஸ்கிருத மரபு ஆகியவற்றை தூக்கிபிடிப்பது....

2.மற்ற மதத்துக்காரர்களிடம் பாசம் காட்டி இருப்பது போல் நடித்துவிட்டு வாய்ப்பு கிடைக்கும்போது போட்டு பார்ப்பது....(இந்த கூறுகள் நேர் பேச்சில்தான் வெளிப்படும் என்பது குறிப்பிடத்தக்கது)

3.தமிழ், மொழிப்பற்று என்றெல்லாம் பேசுபவர்களை கிண்டல் செய்துவிட்டு இந்திக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் காவடி தூக்குவது...

4.கம்யூனிசத்தை கண்மூடித்தனமாக எதிர்ப்பது(இதன் அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்கள், அடிமைப்படுத்தப்பட்டவர் என்று சகல தரப்பினர் நியாயத்தையும் குழிதோண்டி புதைப்பது)

5.இடஒதுக்கீடு என்றால் எரிந்துவிழுவது....

இதையெல்லாம் செய்யாத பிராமணர்களும் உண்டு. பிராமணர்களில் கம்யூனிஸ்டுகள் உண்டு,பிராமணர்களில் சிந்தனையாளர்கள் உண்டு. இன்னொரு புறம் சோ போன்ற ஆசாமிகளுக்கு சப்பைக்கட்டு கட்டும் ஆட்களும் உண்டு.

இந்த கொடுமைகளை எல்லாம் தட்டிகேட்பவன் தான் திராவிடன்.அவனுக்கு பெயர் முக்கியமல்ல.உணர்வு முக்கியம்.நியாயம் முக்கியம்.

Saturday, July 08, 2006

வேணுகோபாலை வாழ்த்துகிறேன்-3

வேணுகோபால் மிக திறமைசாலி. அவர் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம். நேற்று அவர் செய்த சாதனை அவருடைய எதிர்கால சாதனை களுக்கு கட்டியம் கூறுவது போல் அமைந்துள்ளது.என்னடா இது ஓவர் நைட்ல டகால்டி(நன்றி:காமெடியன் அப்பாவி தமிழன்) விடறானேன்னு பார்க்கிறீர்களா? நான் சொல்வது வேணுகோபால் ராவ்.கிரிக்கெட் வீரர்.நேற்று ஆஸ்திரேலிய-ஏ அணியுடனான ஆட்டத்தில் நன்றாக விளையாடி 55 ரன் எடுத்து இந்தியா வெல்ல வழிவகை செய்துள்ளார்.

இன்று பதவியேற்ற உடன் முதல் வேலையாக எய்ம்ஸ் பதிவாளரை வேலையை விட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் வேணுகோபால். சம்பளம் விவகாரத்தில் அவர்தான் தவறு செய்ததாக புது கரடி கிளம்பி உள்ளது.ஆனால் மிகவும் சுவாரசியமான பல தகவல்கள் எதிர்ப்பார்க்கப் படுகின்றன.

ஆனால் என் சிறுமூளைக்கு எட்டிய சில விஷயங்களை நான் இங்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.இந்த பிரச்சினைக்கு முன்பே வேணுகோபாலுக்கு எதிராக பல கும்பல்கள் எய்ம்ஸில் இருந்திருக்கின்றன. அவர்கள் வேணுகோபாலை தூக்க சொல்லி அமைச்சருக்கு கொடுத்த பெட்டிசன் கிடைத்துள்ளது.volte face என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.அது இந்த விஷயத்தில் மீடியாக்களுக்கு பொருந்தலாம்.

ஒரு சுவாரசியமான தகவல்.அந்த இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏதோ அனைத்து மருத்துவர்களும் போராட்டம் செய்ததாக இவர்கள் செய்த பில்ட் அப்பும் இப்போது இவர்களாலேயே நெறுக்கப் பட்டுள்ளது.சுமார் 400 டாக்டர்களும் மாணவர்களும் போராட்டம் தவறானது என்று எழுதிக் கொடுத்த மகஜர் கிடைத்துள்ளது.ஆனால் வேணு கோஷ்டியோ அல்லது வேறு கோஷ்டியோ இவர்களை மிரட்டி அடிபணிய வைத்ததாகவும் தகவல்.

மேலும் புனித பிம்பங்களுக்கு இடையே முதலிலேயே பிரச்சினை இருந்துள்ளது.இருந்தாலும் இந்த இடஒதுக்கீடு விஷயத்தில் வேணுகோபால் புகுந்து விளையாடிய உடன் அவர்கள் ஒரு அடிப்படையில் ஒன்று சேர்ந்து விட்டார்கள். அது என்ன காரணம் என்பதை கூறாமல் தவிர்க்கிறேன்.எப்படி சொல்கிறேன் என்பதை கூறுகிறேன்.

நேற்று என்.டி.டி.வியில் ஒரு டாக்டரின் பேட்டி ஒளிப்பரப்பபட்டது. அவர் டாக்டர் யூனியனில் ஏதோ பொறுப்பில் இருக்கிறார்.ஏற்கனவே அவர்களுக்கு வேணுகோபாலிடம் பிரச்சினை இருந்தாலும் எய்ம்சின் தன்னாட்சி அதிகாரத்தை காக்கவேண்டி தாங்கள் அவருக்கு ஆதரவு தருவதாக பேட்டியில் கூறினார் அந்த டாக்டர்.இந்த குறிப்பிட்ட டாக்டரை நான் நியூஸ் டுடே சானலின் இடஒதுக்கீடு சம்பந்தமான விவாதத்தில் பார்த்துள்ளேன். இடஒதுக்கீட்டுக்கு எதிராக இவர் பேசினார் என்பதை சொல்லவும் வேண்டுமா?பூனைகுட்டி லேசாக வெளியே எட்டிப்பார்த்த கதை இது.

ஆனால் தலைவர் வேணு இதற்கும் கோட்டா அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை என்று இன்னொரு டகால்டி அடித்துள்ளார். டேமேஜ் கண்ட்ரோல் நன்றாகவே செய்கிறார் வேணு. அவரை விடுதலை போராட்ட வீரர் ரேஞ்சுக்கு உயர்த்திய மீடியாக்களும் நம் சக நண்பர்களும் இப்போது என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்

ஒரு அருமையான திரில்லர் திரைப்படம் பார்ப்பது போல் உள்ளது.என்ன நடந்திருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுவது வேறு.என்ன நடக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுவது வேறு.ஆனால் யதார்த்தம் என்பது வேறு .ஆனால் எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.

Wednesday, July 05, 2006

அன்புமணியும் வேணுகோபாலும்-பாகம் 2

நான் முதல் பாகம் என்று போட்டது பலருக்கு அப்போது ஆச்சரியமாக இருந்திருக்கலாம்.ஆனால் நானும் இப்போதெல்லாம் பின்னால் நடப்பதை முன்னமே யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.இன்று நடந்த உயர்மட்ட கமிட்டி
கூட்டத்தில் வேணுகோபாலை டிஸ்மிஸ் செய்து அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பி.ஜே.பி தலைவர்களில் ஒருவரான மல்ஹோத்ரா இதை எதிர்த்துள்ளார்.இது எதிர்ப்பார்க்கக்கூடியதே.ஆச்சர்யம் இல்லை.பதினேழு பேர் அடங்கிய குழுவில் மூன்று பேர் மட்டும் இந்த முடிவை எதிர்த்துள்ளனர்.

கொஞ்சம் எச்சரித்து விட்டிருக்கலாம் என்று நான் நினைத்தேன்.(ஆமா, உன் நினைப்பா அங்கு முக்கியம் என்று யாரோ முனகுவது கேட்கிறது).ஆனால் வேணுகோபால் ரொம்ப ஆட்டம் போடுகிறார் என்று மந்திரி உள்பட மற்ற நிர்வாகிகள் நினைத்திருக்கிறார்கள்.எப்படியோ இந்த பிரச்சினை பிரதமர் தலையிட்டு ஒரு முகம் காக்கும் (face saving(?)) ஃபார்முலா கொண்டுவந்து வேணுகோபால் காப்பாற்றப்படலாம் என்பது என் எதிர்ப்பார்ப்பு. மாறாக ஆப்பும் வைக்கப்படலாம்.

மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் மீண்டும் வேலை நிறுத்தம் ஆரம்பி்த்து விட்டார்களாம்.இது எத்தனை நாள் என்று பார்க்கவேண்டும். என் கணக்கின்படி இந்த வேலைநிறுத்தம் பிசுபிசுக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.உண்மை நிலவரம் தெரிய ஓரிரண்டு நாட்கள் ஆகலாம்.பின்னூட்டத்தில் அப்டேட் பார்க்கலாம்.

இங்கு மீண்டும் ஆங்கில மீடியாக்களில் ஒன்றான என்.டி.டி.வி சில்லறைத் தனம் வெளிப்பட்டது. மூன்று உறுப்பினர்கள் இந்த டிஸ்மிஸ் முடிவை ஏற்கவில்லை என்பதை மட்டும் மீண்டும் மீண்டும் சொன்னார்களே ஒழிய மீதம் பதினாலு பேர் இதை ஆதரித்தார்கள் என்பதை சொல்லவில்லை.

இந்த வேலைநிறுத்தத்திற்கும் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கும் அன்புமணிதான் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் என்.டி.டி.வியில் கூறினார்கள்.அப்படியானால் இடஒதுக்கீட்டை எதிர்த்து இவர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது பாதிக்கப்பட்ட நோயாளிகள் பொறுப்பை யார் எடுத்துக்கொண்டது? உயிர்காக்கும் சேவை செய்யும் ஆட்கள் சுயநலவாதிகளாக மாறி வேலைநிறுத்தம் செய்வதும் இல்லாமல் நாக்கூசாமல் அதை நியாயப்படுத்துவதும் நடக்கிறது.அன்று நோயாளிகளின் அவல நிலையினை கண்டுக்கொள்ளாத மீடியா இன்று அவர்கள் அவல நிலையை கண்டு கண்ணீர் வடிக்கிறது. ஆனால் கொடுமை என்றால் இருமுறையும் வேலைநிறுத்தம் செய்வதும் அவர்கள்தான்.காரணமும் சுயநலமாக காரணம்தான்.

இதனுடன் தொடர்புடைய இன்னொரு செய்தி:சுப்ரீம் கோர்ட் ஒரு முக்கிய கருத்தை கூறியுள்ளது. அதாவது இடஒதுக்கீடு பிரச்சினைக்காக டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது அவர்கள் சம்பளத்தை கொடுக்காமல் இருந்தது தவறு என்றும் அரசாங்கம் நியாயமான முதலாளியாக நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளது.ஏனோ தமிழக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது சுப்ரீம்கோர்ட் கூறிய கருத்துக்கள் ஞாபகம் வருகிறது.அன்று உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஆதரித்தவர்கள் இன்றும் ஆதரிப்பார்களா என்று தெரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

Sunday, July 02, 2006

இலக்கியத்தில் மலம்

பீக்கதைகள்

பெருமாள்முருகன் - நன்றி பாஸ்டன் பாலா

அடையாளம் பதிப்பகம்

பெருமாள்முருகனின் பீக்கதைகள் வாங்கியதாக எழுதி இருந்தேன். இந்த வாரம் தான் இந்த கதைகளை அனைத்தையும் படித்து முடித்தேன். அதைப்பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றியது. அதற்கு முன் பண்டைய தமிழ் இலக்கியத்தில் மலத்தை பற்றி நேரடியாக எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைப்பற்றி இந்த புத்தகத்தின் முன்னுரையில் வேல்சாமி எழுதியுள்ளதை தருகிறேன்.

**************

சமண மத இலக்கியமான நீலகேசி காவியத்தில் 829 ஆம் பாடலில்
இருந்து நான்கைந்து செய்யுள்களில் மலத்தை மையமாக வைத்தே ஆசிரியர் தன் கருத்தை விளககுகிறார். வேதவாதச் சருக்கம் என்னும் அப்பகுதியில் வேதங்கள் என்றால் என்ன? அவை யாரால் படைக்கப்பட்டன என்னும் நீலகேசியின் கேள்விகளுக்கு வேதவாதி, வேதம் யாராலும் படைக்கப்படாதது என்றும் அது தான்தோன்றி என்று கூறியதற்கு பதிலாக நீலகேசி

"நள்ளிரவில் மக்களெல்லாம் உறங்கும் நேரத்தில் ஊர்நடுவே ஒருவன் மலங்கழித்துச் (மலோத்ஸ்ர்க்கம்) சென்றால் அதை தான்தோன்றி என்பாயோ? ஆயுர்வேத வைத்தியத்தின்படி பரிசீலித்து நோயாளியின் மலம், நோஞ்சானின் மலம்,வலிமையானவனின் மலம் என்று பகுக்கலாம்.அந்த நோயாளிக்கு என்ன நோவென்றுகூட பார்க்கலாம்.அதைவிட்டுவிட்டு தான்தோன்றி என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வுமா?", என்று கேட்கிறான்.

இந்த ஓரிடம் தவிர தமிழ் இலக்கிய வரலாற்றில் மலப் பகுப்பாய்வு வேறெங்கும் இல்லை. சொன்னவர்களும் வைதீகத்திற்கு எதிரான அவைதீகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

**************

வெளிப்படையாக பேசப்படக்கூடாதது என்ற அடிப்படையில் பலவிஷயங்களையும் தமிழ் சமுதாயம் பேசாமல் இருக்கப்போய் இன்று சாதியை ஒழிக்க அதைப்பற்றி பேசாமல் இருந்தாலே போதும் என்று படித்தவர்கள் கூட தவறாக எண்ணிக்கொண்டு இருக்கும் சூழ்நிலை தோன்றிவிட்டது.

நான் இளங்கலை பட்டபடிப்பின் போதுதான் முதன் முதலாக கோவையில் விடுதியில் சேர்ந்திருந்தேன். முதல்நாள் விடிந்ததும் முதல் வேளையாக மலங்கழிக்க சென்ற எனக்கு பயங்கர அதிர்ச்சி. ஏறத்தாழ 600 பேர் தங்கியிருந்த அந்த விடுதியில் மொத்தமே நாலே கக்கூஸ். அதற்கும் வெயிட்டிங் லிஸ்ட் போட்டுவிட்டு அடிவயிற்றில் கையை வைத்துக்கொண்டு சிலர் நின்றிருந்தனர். எப்படி இருக்கும்? எதற்கடா விடுதிக்கு வந்தோம் என்றாகிவிட்டது.உயிரை கையிலும் கையை மூக்கிலும் வைத்துக்கொண்டு "போய்"விட்டு வந்தேன்.

ஏண்டா முகம் வெளிறி இருக்கு என்று கேட்டஒரு நண்பனிடம் பலத்த தயக்கத்திற்குபின் நான் என் கஷ்டத்தை சொல்ல அவன் இதுதானா விஷயம் என்று சிரித்துவிட்டு நான் உன்னை சாயங்காலம் வந்து "ட்ராக்"குக்கு அழைத்து போகிறேன் என்றான்.

எங்கள் விடுதியை ஒட்டி ரயில்வே ட்ராக் போவதும் ரயில்வே ட்ராக்கை கடந்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருக்கும்பொட்டல் காட்டில்தான் ஏறத்தாழ 95 சதவீதம் மாணவர்கள் தினமும் அங்குதான் காற்றாட "போவதும்" என்ற விஷயம் எனக்கு அன்று மாலைதான் தெரிந்தது.Rest as they say is history(?).

**************

இந்த சம்பவத்திற்கு பிறகு இன்னொரு சுவாரசியமான விவாதம் இதே விஷயத்தில் எங்கள் விடுதி வழிபாட்டு மீட்டிங்கில் நடைபெற்றது.இவ்வாறு நாங்கள் "ட்ராக்" போய்விட்டு வந்து சுத்தப்படுத்திகொள்ளும் இடத்தில் உள்ள "டப்பா"க்கள் அதாவது வாளிகள் எல்லாவற்றிலும் சாமி படம் இருப்பதாகவும் இதைப்பற்றி மீட்டிங்கில் சுவாமிஜியிடம் சொல்லப்போவதாகவும் சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு ஒரே ஆச்சர்யம்.இதை எப்படி சுவாமிஜியிடம் சொல்வது என்று. படபடக்கும் இதயத்தோடு அன்றைய பிரேயரில் பாட்டு பாடிக் கொண்டிருந்தேன். பிரேயர் முடிந்ததும் ஒரு "புனித பிம்பம்" (அங்கும் புனித பிம்பங்கள் இருந்தன.எங்கு இல்லை என்கிறீர்களா? சரி சரி கதையை கேளுங்கள்) இதைப்பற்றி கேள்வி எழுப்பினார்.சுவாமிஜீக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.இன்னும் பல புனித பிம்பங்களும் கூட சேர்ந்து பேசவும் சுவாமிக்கு குழப்பம் அதிகமாகிவிட்டது. சட்டென்று விடுதி வார்டனான ரசாயனத்துறை பேராசிரியர் தலையிட்டு "சாமி இல்லாத இடம் எங்கப்பா இருக்கு? என்று கேட்டு பிரச்சினையை சமயோசிதமாக முடிதது வைத்தார்.

****************

இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள பெருமாள்முருகனின் அனைத்து கதைகளும் மலத்தை உரிப்பொருளாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இன்னொரு வகையாக பகுத்தால் வட்டார வழக்குள்ள கதைகள் மற்றும் பொதுகதைகள் என்று இரண்டாக பிரிக்கலாம். அந்த வட்டாரத்தை சேர்ந்தவன் என்பதால் இந்த கதைகள் நேரடியாக என்னால் அடையாளப்படுத்தி கொள்ளமுடிகிறது.

புகை உருவங்கள் என்ற கதை என்னை மிகவும் கவர்ந்தது.இந்த புகை உருவங்கள் கதை குறியீட்டு தளத்தில் எழுதப்பட்டிருந்தாலும் நான் சரியாக அதை புரிந்துகொண்டது என் வாசிப்பில் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி உள்ளது.ஒரு ஊரில் பிறந்து அங்கு மட்டுமே வாழ்ந்து சாகும் பழக்கத்தை விட்டு வெளிஉலகம் செல்லும் இந்த தலைமுறை வாழ்க்கையையும் அதனாலான பதட்டங்களையும் அதே சமயம் சொந்த மண்ணின் மீதான வேட்கையையும் மிக சிறப்பாக சித்தரித்துள்ளார்.

"பீ" என்ற கதை பீயள்ளும் ஒரு ஆளின் (செப்டிக் டாங்க் சுத்தம் செய்யும்) ஒரு ஆளின் செயல்களையும் அதை பார்க்கும் அறுவெறுக்கும் சராசரி மனம் இயங்கும் விதத்தையும் கூறுகிறது.கடைசி இருக்கை, வராக அவதாரம் ஆகிய கதைகளை ஒரு வகையான சமூக விமர்சனமாக கொள்ளலாம்.தோழர் பி.எம்.மின் வெற்றி என்ற கதை கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இரு தோழர்களை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட சுவாரசியமான கதை. ஒரு கிராமத்துக்கு களப்பணிக்காக செல்லும் ஒரு தோழர் தனக்கு காலையில் டீ குடித்தால் மட்டுமே மலங்கழிக்கமுடியும் என்று சொல்ல இன்னொரு தோழர் டீ குடிப்பது பூர்ஷ்வா மனநிலை, தேவையில்லாத பழக்கம் என்றும் அதை நிறுத்த பல்வேறு வழிகளை தர்க்கபூர்வமாக தந்து பேசுவதும் சுவையாக எழுதப்பட்டுள்ளது.

மேற்பார்வைக்கு எளிமையாக தோற்றம் கொள்ளும் இச்சிறுகதைகள் கச்சிதமாக பின்னப்பட்டவை.வட்டார வாழ்க்கைமுறை தெரிந்தவர்களால் அதிகம் புரிந்துக் கொள்ளக்கூடிய கதைகளாக வேக்காடு, கருப்பணார் கிணறு, கருதாம்பாளை மற்றும் பிசாசுக்கு போதுமாக விஷயம் ஆகிய கதைகளை சொல்லலாம்.இருந்தாலும் வட்டாரங்களை மீறி சில விஷயங்கள் அனைவருக்கும் பொதுதானே.

பெருமாள்முருகனின் கூளமாதாரி

Saturday, July 01, 2006

அய்யப்பனுக்கு செலக்டிவ் அம்னீஷியா?

கடந்த ஒரு வாரமாக கேரளா அய்யப்பன் கோவிலை மையமாக வைத்து நடைபெற்று வரும் கூத்துக்களை செய்திதாள்களில் படித்திருக்கலாம். கேரள சோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் அய்யப்பன் கோவிலில் நடத்திய "தேவ பிரசன்னத்தில்" அய்யப்பன் கோபமாக இருப்பதை கண்டறிந்தார். அதற்கு காரணமாக அவர் 18 ஆண்டுகளுக்கு முன் பெண்கள்(அதுவும் குறிப்பாக நடிகைகள்) அய்யப்பன் கோவில் கருவறைக்குள் நுழைந்ததுதான் என்று ஒரே போடாக போட்டார்.

இதன் சங்கிலித்தொடர் விளைவு கர்நாடகத்தில் எதிரொலித்தது.அந்த கால நடிகை ஜெய்மாலா என்பவர் தான்தான் கோவில் கருவறைக்குள் நுழைந்தது என்று ஒத்துக்கொண்டார்.

ஆனால் கோவில் பூசாரிகள் இதை கடுமையாக மறுத்துள்ளனர். பணிக்கரும் ஜெய்மாலாவும் சேர்ந்து ஆடும் நாடகம் இது என்கிறார்கள் இவர்கள்.இவர்கள்
வாதத்திற்கு துணையாக நான்கு வருடத்திற்கு முன்பு நடந்த "தேவ பிரசன்னம்" நிகழ்ச்சியை சுட்டி காட்டுகிறார்கள்.நான்கு வருடத்திற்கு முன்பு இதே நிகழ்ச்சியின்போது அய்யப்பன் சந்தோஷமாகத்தான் இருந்தாராம். அப்போது பதினெட்டு வருடத்திற்கு முன்பு நடந்த விஷயத்தைப்பற்றி பேசாத அய்யப்பன் இன்று ஏன் கோபமடைய வேண்டும் என்கிறார்கள் இவர்கள். அப்படியானால் அய்யப்பனுக்கே செலக்டிவ் அம்னீஷியாவா?

ஆனால் பணிக்கர் தான் ஒரு பிராமணர் இல்லை என்பதற்காக பூசாரிகள் தன் பெருமையை குலைக்க சதி செய்து இதை கூறுகிறார்கள் என்று ஒரே போடாக போட்டார்.இந்த வகை பாணி நமது தமிழ்மண அன்பர்களுக்கு பழகியதுதான்(?).


வழக்கம்போல் சாதிரீதியாக கருத்துக்கள் வந்து விழ தொடங்கிவிட்டன. தமிழக பி.ஜே.பியின் இல.கணேசனும் இது பணிக்கரின் சதிதான் என்கிறார். நேற்று கர்நாடகா சட்டசபை ஜெய்மாலாவுக்கு ஆதரவாக ஓங்கி குரல் கொடுத்தது. பொதுவாக கர்நாடகா தங்கள் மாநிலத்திற்கும் மாநிலத்தவர்க்கும் ஒரு கஷ்டம் என்றால் ஒன்று சேர்வார்கள்.இதில ஆச்சரியம் இல்லை.

முதலில் இந்த பிரச்சினை வெளிவந்தபோது "சோதிடத்தின்" "தேவ பிரசன்ன த்தின்" மகிமை என்றெல்லாம் வந்த தகவலை பார்த்து எனக்கே ஒரு ஆச்சரியம்.அப்புறம் பூனைகுட்டி தொப்பென்று வெளியே வந்து விழுந்துவிட்டது.


இரு தரப்பினருக்கும் அய்யப்பனின் மேல் கடுகளவும் மரியாதை இல்லை என்பது நன்றாக தெரிகிறது.கடவுளை வைத்து வேஷம் கட்டி வயிறு வளர்க்கும் இவர்களை என்ன செய்வது?பெண்கள் போகக்கூடாது என்று இருக்கும்போது ஏன் ஜெய்மாலா கோவிலுக்கு போனார்? கடவுளை தொட்டு கும்பிட்டார்?இது ஒருபுறமிருக்க இனியும் இந்த கோவிலுக்கு பெண்களை போகாமல் ஒதுக்கிவைப்பது சரியா? (இதை நான் கேட்கவில்லை சாமி.கர்நாடக சட்டசபையில் பேசினார்கள்)


எனக்கு பதினொரு பனிரெண்டு வயதாக இருக்கும்போது நானும் ஒருமுறை அய்யப்பன் கோவிலுக்கு போயிருக்கிறேன்.அது ஒரு நல்ல அனுபவம்.பம்பா நதி குளியல்.அங்கிருந்து ஒரு எழு எட்டு கிலோ மீட்டர் நடந்து கோவிலுக்கு போவதும் நல்ல அனுபவம் தான்.அனைவரும் ஒரு முறையாவது போகலாம். கடவுள் பக்தி இல்லாதவர்கள் சுற்றுலா மாதிரி நினைத்து போய்வரலாம்.

ஜோதி தரிசனம் என்பது தேவஸ்தான ஆட்களே சென்று வண்டி நிறைய கற்பூரத்தை பற்ற வைத்துவிட்டு வருவதுதான் என்றும் ஒரு தியரி உலவுகிறது.ஒரு முறை கேரளத்தில் ஆக்டிவ்வாக உள்ள பகுத்தறிவாளர்கள் சங்கம் ஒன்று அந்த வண்டியை மடக்கிவிட்டதாகவும் அந்தவருடம் சோதி வரவில்லை என்றும் செவி வழிச்செய்தி ஒன்று எனக்கு கிடைத்தது.

ஆயினும் நம் மக்கள் வருடத்தில் விரதம் இருக்கும் ஒரு மாதமாவது தம்,தண்ணி அடிக்காமல் இருப்பதால் நமது தாய்மார்களும் இவர்களை அங்கு செல்ல் அனுமதித்துவிடுகிறார்கள்.ஆனால் அதிலும் அய்யப்பன் சாமிகளுக்கு தனி சாராய டம்ளர் என்று வைத்து புரட்சி செய்தவர்கள் அல்லவா நாம்?

Related post

http://thekkikattan.blogspot.com/2006/06/blog-post_29.html