தங்கமணியின் பதிவில் வந்த பஞ்சாங்கத்தின் கட்டுரையையும் அதன் பின்னூட்டங்களையும் படித்த பிறகு இந்த பதிவை எழுதுகிறேன்.இந்த பதிவை அந்த கட்டுரையுடன் எப்படி தொடர்பு படுத்த முடியும் என்பதை படிப்பவர் பார்வைக்கே விடுகிறேன்.
விஷயத்திற்கு வருவோம்.யார் இந்த பழனிசாமி என்ற கேள்வி உங்களுக்கு வருவது நியாயம்தான்.இவர் எங்கள் வங்கியில் பியூனாக இருந்தார். இவரைப்பற்றி கூறுவதற்கு முன் வங்கியில் ஊழியர்கள் கிரேடு எப்படி அமைக்கப்படுகிறது என்பது பற்றி சில தகவல்கள்.
கீழ் அடுக்கு பியூன்.இவர்கள் யூனிபார்ம் அணிந்துக்கொண்டு ஃபைல் சுமப்பது, ரூபாய் நோட்டுக்களை கட்டுவது மற்ற பிற வேலைகளை செய்வார்கள் .
நடு அடுக்கு கிளார்க் எனப்படும் குமாஸ்தாக்கள். கேஷியர் எல்லாம் இதில்தான் வருவார்கள் கிளார்க் என்ற வார்த்தையை சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டு கேஷியர் என்றே சொல்லி திரிவோம். நான் கிளார்க்காகத்தான் வங்கியில் சேர்ந்தேன்.
மூன்றாவது மற்றும் அதிகார வர்க்கம் ஆபிஸர்கள்.இதில் ஏழு படி உண்டு. ஏழாவது படிதான் ஜெனரல் மானேஜர் .இதற்கு மேல் மற்ற வங்கிகளுக்கு ஈ.டி(E.D) ஆகவும் பிறகு சி .எம்.டி(C.M.D) ஆகவும் போகலாம். நான் இந்த அதிகார வர்க்கத்தில் இரண்டாவது படியிலும் நம்முடைய டி.பி.ஆர் .ஜோசப் ஆறாவது படியிலும் இருக்கிறோம் என்று சொன்னால் உங்களுக்கு இதைப்பற்றி கொஞ்சம் புரியும்.மற்ற அரசு துறைகள் போல் பெஞ்ச்சை தேய்த்துக் கொண்டிருந்தால் பிரமோஷன் தானாக எல்லாம் வராது. திறமை முக்கியம்.இதனால்தான் டி .பி.ஆரை பார்த்தால் எனக்கு ஒரு பயம் அல்லது மரியாதை என்று வைத்துக்கொள்வோமே .
மீண்டும் விஷயத்திற்கு வருவோம
நம்முடைய பழனிசாமி பத்தாம் வகுப்பில் 98 மதிப்பெண்கள் எடுத்தவர் .ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் ஒவ்வொரு பாடத்திலும் எடுப்பதற்கு பதிலாக ஐந்து பாடத்திலும் சேர்த்து எடுத்துவி்ட்டார். பத்தாவது வகுப்பில் ஃபெயில் ஆகி குடும்ப சூழல் காரணமாக கூலி வேலைகளுக்கு சென்றவர்.. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.பொதுவாக அரசாங்க வங்கிகளில் பியூன் வேலைக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களைத்தான் நிறைய சேர்ப்பார்கள். அதிர்ஷ்டவசமாக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக எங்கள் வங்கிக்கு வந்தார்.
பொதுவாக வங்கிகளில் பியூனாக எட்டு வருடங்கள் சர்வீஸ் போட்டால் ஒரு பரிட்சை வைப்பார்கள்.அதில் பாஸ் ஆனால் கிளார்க்காக சேர்ப்பது என்று ஒரு திட்டம் உண்டு . ஆனால் எங்கள் வங்கியில் பியூன்கள் பத்தாவது முடித்தால் இந்த பரிட்சை எழுத தேவையில்லை.நேரடியாக கிளார்க் ஆகிவிடலாம். ஆனால் இதில் சீனியாரிட்டி லிஸ்ட் உண்டு.
நான் அந்த கிராமத்து கிளையில் சேர்ந்த சில நாட்களில் இந்த தகவல்களை தெரிந்துக்கொண்டேன்..பழனிசாமியை பத்தாவது பாஸ் பண்ணலாமே என்றேன் . அதெல்லாம் கஷ்டம் சார் என்றார்.
ஒரு கஷ்டமும் இல்லை..நான் உதவி செய்கிறேன் என்றேன் நான்.அன்று ஆரம்பித்தோம் .டெய்லி் கொஞ்சம் படிப்போம்.வருடம் ஒரு பேப்பராக எழுதி எழுதி பாஸ் செய்தோம். கடந்த செப்டம்பர் வருடத்தில் பழனிசாமி பத்தாம் வகுப்பு பாஸ் செய்தார் . அவர் கையில் இப்போது இருப்பது ஐந்து பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் .ஏனென்றால் ஒவ்வொரு முயற்சியிலும் ஒவ்வொரு பேப்பர்தான் பாஸ் செய்தார்.இதற்கிடையி்ல் அவருக்கு எட்டு வருட சர்வீ 'ஸ் ஆகிவிட்டதால் அவர் வங்கி நடத்தும் நேரடி தேர்வும் எழுதலாம்.
இந்த ஆண்டு இந்த தேர்வை எழுத மங்களூர் வந்தார். என் வீ்ட்டில் தங்க வைத்தேன். கடந்த வருடம் வங்கி நடத்திய கேள்வித்தாளை வாங்கி வைத்து என் வீட்டில் மூன்று நாள் அவரை டார்ச்சர் செய்தேன் . நான் மாதிரி கேள்வித்தாள் தயார் செய்வேன்.அவர் அதை எழுதுவார் . நான் திருத்தி கொடுப்பேன். சில கேள்விகள் உதாரணத்திற்கு கொடுத்துள்ளேன் .
123654 785* 123=
466.12 - 24.8 =
254879 +23445
மற்றும் வங்கி துவங்கிய வருடம?
டெபாஸி்ட் வட்டி விகிதம?
லோன் வட்டி விகிதம?
இதுப்போலத்தான் கேள்விகள
நமக்கு சுலபம்.ஆனால் அவர்களுக்கு படித்து புரிந்துக்கொள்வதே கடினம் .
ஆனால் எல்லோரும் ஆச்சரியப்படும்வகையில் பழனிசாமி பரிட்சையில் பாஸ் ஆனார். இண்டர்வ்யூவில் அவர் வைத்திருந்த பத்தாம் வகுப்பிற்கான ஐந்து மதிப்பெண் சான்றிதழ்களை பார்த்து எங்கள் ஏ .ஜீ.எம் அதிர்ச்சி அடைந்ததை அவர் சொல்வதை கேட்டால் இன்றும் எனக்கு சிரிப்பு வரும் .
கிளார்க்காக தேர்வு பெற்ற அவர் இப்போது வேறொரு கிளைக்கு மாற்றப்பட்டு உள்ளார்..அடுத்த வாரம் பணியில் சேர உள்ளார். பியூனாக இருந்த அதே கிளையில் பொதுவாக பிரமோஷன் தர மாட்டார்கள். ஆப்வியஸ் ரிசன்ஸ்தான்.
இதனால் தமிழ்நாட்டில் சில நண்பர்கள் நான் தலைமை அலுவலகத்தில் இருந்ததால் அவருக்கு "ஏற்பாடு" செய்துவிட்டேன் என்றார்களாம். உண்மையை சொன்னால் நம்ப மாட்டார்கள் . சரி எனக்கு தலைமையகத்தில் பெரும் செல்வாக்கு இருக்கிறது என்று எல்லாரும் நினைத்துக்கொள்ளட்டும் என்று நானும் கண்டுகொள்ளவில்லை.
இதை கட்டுரையின் முக்கியமான இரண்டாம் பாகம் நாளை தொடரும்.
Sunday, February 26, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வாழ்த்துக்கள் தமிழினி... பெருமையாக இருக்கிறது. அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நன்றி ராம் மற்றும் ஜெயா,
jaysri.,
கிளார்கிலிருந்து ஆபிசர் பதவி உயர்வுக்கும் பியூனிலிருந்து கிளார்க் பதவி உயர்விற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. ஆபிசர் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளவர்.ஆகவே அவர்கள் பொதுவாக ஒரே கிளையில் மூன்று வருடத்திற்கு மேல் தொடர அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கிளார்க் என்பவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை.அவர்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் சரிபார்த்து கையெழுத்து போடும் ஆபிசர்தான் பொறுப்பு.அதனால் தான் சில வங்கிகளில் காலம் காலமாக சில கிளார்க்குகள் ஒரே கிளையில் இருக்க முடிகிறது.
என் பிரமோசன் என்னை மும்பய்க்கு அனுப்பியது.அடுத்த பிரமோசன் மங்களூருக்கு.
மற்றபடி ஜோசப் சார் வயதில் நான் மிகப்பெரிய பதவியில் (உட்சபட்சம்) இருக்க வாய்ப்பு உள்ளது.என்னால் முடியும் என்று நம்புகிறேன்.பிரச்சினை என்னவென்றால் என் லட்சியம் அதுவல்ல.
நான் ஆசைப்படுவது எல்லாம் 40 -45 வயதில் வி.ஆர்.எஸ். பின்பு களப்பணிதான்.பார்ப்போம்.
தங்கமணி,
நன்றி..நான் மீண்டும் சொல்ல விரும்புவது இதுதான். என் பார்வையில் என் அனுபவத்தில் கண்டதை எழுதுகிறேன். உங்களுடைய பின்னூட்டத்தில் இருந்து
எனக்கு சில தகவல்கள் கிடைக்கின்றன.இதைப்பற்றி யோசிப்பேன். தேடி படிப்பேன்.
என்னுடைய அனுபவங்கள், எழுத்துக்கள் ஆகியவை இன்னொரு பரிமாணத்தில் (அதாவது பொதுஜன மனப்பார்வையில் இருந்து ஒரு விஷயத்தை அணுகும்) என்று வைத்துக்கொண்டால் உங்களை போன்றவர்களுடைய பதிவுகளும், பின்னூட்டங்களும் படிப்பவர்களின் பார்வையை விசாலப்படுத்தும் என்பதாகத்தான் தான் என் எழுத்துக்களை நான் பார்க்கிறேன்.
நீங்கள் சொல்லிய அரசாங்கம் ஏன் இந்த சலுகைகளை கொடுக்கவேண்டும் என்ற கேள்வியை பின்னெடுத்துக்கொண்டே போகலாம்.
பெருங்கருணை ஏன் என்று பார்ப்பது ஒரு பார்வை.அந்த பார்வையை கடந்து தான் ஒருவர் அடுத்த நிலைக்கு வரமுடியும் என்பது என் எண்ணம்.இதைப்பற்றி நீங்கள் ஒரு தனிப்பதிவு போடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நான் வங்கியில் பணியில் சேர்ந்த புதிதில் ஐ.ஆர்.டி.பி லோன் எல்லாம் எதற்கு என்று எங்கள் மேலாளரிடம் சண்டை போட்டுள்ளேன்.அவர் அதற்கு சொன்ன பதில் அப்போது புரியவில்லை.இப்போது புரிகிறது.
Post a Comment