சமீபத்தில் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் பெருமாள் முருகனின் கூள மாதாரி என்ற நூலை வாங்கியிருந்தேன்.தற்கால தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் முக்கியமானவர் பெருமாள் முருகன்.ஏற்கனவே சுந்தர ராமசாமியின் ஒரு கட்டுரையில் இவரை பற்றி குறிப்பிட்டு அவரின் ஏறுவெயில் என்ற நாவலை பரிந்துரை செய்திருந்தார்.சுந்தர ராமசாமியின் கருத்துகளிலும்,ரசனைகளில் நான் அடிக்கடி என் கருத்துகளையும் ரசனைகளையும் பொறுத்தி பார்ப்பதுண்டு.அவ்வடிப்படையில் பெருமாள்முருகனை படித்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.
புத்தக கண்காட்சியில் கூளமாதாரி என்ற புத்தகத்தை பார்த்தவுடன் வாங்கிவிட்டேன்.
திருச்செங்கோடு நாமக்கல் பகுதி மக்களின் வாழ்க்கையை, கலாச்சாரத்தை இதை விடவும் அழகாக யாரும் இதுவரை ஆவணப்படுத்தியது இல்லை. இனிமேலும் யாரும் செய்துவிட முடியாது என்றும் தைரியமாக கூறலாம் என்ற அளவிற்கு எழுதியுள்ளார்.
நான் அடிக்கடி நினைப்பதுண்டு. இந்த பகுதி மக்களின்வாழ்க்கை முறை, இந்த பகுதி கலாச்சாரம், இந்த மக்களின் பண்பு பெரிதாக வெளிப்படுத்தப்படாமல் மறைந்துகொண்டு வருகிறதோ என்று. மண்ணின் மைந்தர்களான இந்த தலைமுறையை சேர்ந்த என்னை போன்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வாழ்வை விட்டு விலகி கொண்டிருக்கிறோம். படிப்பு என்பது பெரும்பாலும் இந்த தலைமுறையில் பரவலாகி இருக்கிறது.விவசாயம் செய்ய ஆளில்லாமல் போய்விடும் என்ற பயம் தோன்றும் அளவிற்கு.
தலித் இனத்தை சேர்ந்த ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனின் பார்வையில் கதையை நகர்த்தி உள்ள பெருமாள்முருகன் இந்த புத்தகத்தில் கதை என்று பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் பெரும்பான்மையான கவுண்டர் இனத்தை தவிர நாடார் மற்றும் தலித் மக்களும் நிறைய வசிக்கும் இந்த நிலப்பரப்பின் வாழ்க்கையை அப்படியே கண்முன்னே கொண்டு வருவதில் மிக்பபெரிய வெற்றி பெற்றுள்ளார்.இதை படிக்கும்போது பல இடங்களில் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை.இவ்வாறு ஒரு வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் ஒரே கதையில் அடக்குவது என்பது வார்த்தையில் விளக்கமுடியாதது.
கெட்ட வார்த்தைகளையும் அதிர்ச்சி தரும் வார்த்தை பிரயோகங்களையும் செயற்கையான முறையில் கதைகளில் உபயோகப்படுத்தப்படுவதை பார்த்து
பழகிய எனக்கு, தலித்தாக இல்லாதிருந்தாலும் தன்னை தலித்தாக உணருபவர் என்று கூறப்படும் இந்த எழுத்தாளர் அந்த மண்ணில் சாதாரணமாக புழங்கும் தாயோலி,தேவிடியா,பொச்சு, முதலிய வார்த்தைகளை பல இடங்களில் உபயோகப்படுத்தி இருந்தாலும் எந்த ஆபாச அதிர்ச்சிகளையும் நமக்கு தருவதில்லை.
இந்த மண்ணை தவிர மற்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு இந்த கதை எந்தவிதமான உணர்வுகளை தரும் என்று என்னால் தெளிவாக கூறமுடியவில்லை.எங்கிருந்தாலும் மனித அடிப்படை உணர்வுகள் ஒன்றுதான் என்பதாக புரிந்துகொண்டோமானால் இதை ஒரு மிகச்சிறந்த நாவல் என்று எளிதாக கூறிவிடலாம்.
முன்பு பத்து பனிரெண்டு வயதில் ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் திருச்செங்கோட்டில் குமாரமங்கலம் பக்கத்தில் உள்ள எங்கள் தாத்தா பாட்டியுடன் சென்று மாத கணக்கில் இருப்பேன்.
தினமும் காலை எழுந்து ஆடு ஓட்டிக்கொண்டு (மேய்த்துக்கொண்டு) கிலோமீட்டர் கணக்கில் சென்ற அனுபவங்கள்...
பண்ணையத்தில்(வேலைக்கு) இருந்த தூங்கப்பிள்ளை என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்று எலிக்கறி சாப்பிட்டது......
மாலை நேரங்களில் பனைமரம் பனைமரமாக தேடிச்சென்று பனம்பழம் பொறுக்கி வந்து நெருப்பில் சுட்டு தின்னது.....
சுழன்று சுழன்று மழை பெய்யும் நேரத்தில் ஆட்டு படலை கயிறு போட்டு இழுத்து கட்டியது.....
இன்னும் எவ்வளவோ என் நெஞ்சில் நின்ற நினைவுகளை அழகாக கிளறிக்கொண்டு வந்துள்ளார்.
கூளமாதாரியில் செல்வனும் கூளையனும் இரவு நேரம் ஆட்டு படலை விட்டுவிட்டு எம்.ஜி.ஆர் படம் பார்க்க கொட்டாய்க்கு போவது..திரும்பி வந்தபோது ஆடு காணாமல் போயிருப்பது............
முனியப்பன் சாமி கூளையனுக்கு காட்சி அளித்தது...
செல்வனும் கூளையனும் சண்டை போட்டுக்கொள்வது.........
கூளையன் பனங்கிழங்குகளை சாயபு தாத்தாவிடம் விற்று பணத்தை கவுண்டரிடம் தருவது.அவர் அவனையே சட்டை வாங்கிக்கொள்ள சொல்வது..
போன்ற அத்தியாயங்களில் பெருமாள்முருகனின் சித்தரிப்பு அருமை..
கவுண்டர் இன மக்கள் சேலம், தர்மபுரி, நாமக்கல் , திருச்செங்கோடு பகுதிகளில் இருந்து ஈரோடு மற்றும் கோவை வரை வாழ்கிறார்கள்.ஆனால் காவிரி ஆறு பிரிக்கும் ஈரோட்டுக்கு மறுபுறம் இருக்கும் மக்களுக்கும் மேட்டு காட்டில் உழைக்கும் இவர்களுக்கும் சிறிது வித்தியாசம் இருக்கும்.
(தொடரும்)
Thursday, February 02, 2006
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
நூலறிமுகத்துக்கு நன்றி!
முத்து,
இந்தக்கதையைப் படிக்க மிக வலுவான recommendation இருந்தும் இன்னும் புத்தகம் கிடைக்கவில்லை.
ஆனால் இந்தப்பின்னூட்டம் உங்கள் இந்தக்கருத்தைப்பற்றியது..
//முதலிய வார்த்தைகளை பல இடங்களில் உபயோகப்படுத்தி இருந்தாலும் எந்த ஆபாச அதிர்ச்சிகளையும் நமக்கு தருவதில்லை.
//
கெட்ட வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் பெரும்பாலும் உபயோகப்படுத்துபவர் அறிந்திருப்பாரா அல்லது உணர்ந்துதான் பயன்படுத்துகிறாரா என்பது கேள்விக்குறி. அப்படிப்பட்ட நேரங்களில் வார்த்தைகள் அர்த்தங்களை இழந்து அதிர்ச்சி மதிப்பீட்டையும் இழந்துவிடுகின்றன.. அல்லவா?
முத்து கூளமாதாரி நூலை வாங்கவும், படிக்கவும் தூண்டியுள்ளீர்கள் நன்றி. இதுபோன்ற இலக்கிய அறிமுகம் இன்றைய தமிழ்ச்சூழலில் தேவைப்படுகிறது.
மண்ணின் வாசனையோடு கலந்த இலக்கியங்கள் இதம் தருபவை. அத்தகைய ஒரு நூலை அறிமுகப் படித்தியதற்கு நன்றி.
//விவசாயம் செய்ய ஆளில்லாமல் போய்விடும் என்ற பயம் தோன்றும் அளவிற்கு//
தஞ்சையில் இவ்வருடம் வெள்ளத்தில் மீந்த பயிர்களை அறுவடை செய்ய ஆளில்லை என்று படித்தேன்.:(
மண்ணின் வாசனையோடு கலந்த இலக்கியங்கள் இதம் தருபவை. அத்தகைய ஒரு நூலை அறிமுகப் படித்தியதற்கு நன்றி.
//விவசாயம் செய்ய ஆளில்லாமல் போய்விடும் என்ற பயம் தோன்றும் அளவிற்கு//
தஞ்சையில் இவ்வருடம் வெள்ளத்தில் மீந்த பயிர்களை அறுவடை செய்ய ஆளில்லை என்று படித்தேன்.:(
முத்து,
சி.ஆர்.ரவீந்திரன் எழுதிய 'ஈரம் கசிந்த நிலம்' படிச்சுப் பாருங்க. இதுவும் திருப்பூர், ஈரோடு, பழனி belt மக்களின் வாழ்வியலைப் பற்றியதே.
அப்புறம்..., ராமகிருஷ்ண வித்யாலயத்துல எந்த வருஷம் படிச்சீங்க?
நன்றி சுரேஷ்,
இந்த இடத்தில் தேவையில்லாமல் இந்த வார்த்தைகள் துருத்திக்கொண்டு இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படவில்லை. மற்ற சில நூல்களில் எனக்கு அந்த உணர்வு ஏற்பட்டதுண்டு.
இதற்கு காரணம் அந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளை நேரடியாக பார்த்து பலமுறை அனுபவப்பட்டதாகவும் இருக்கலாம்.என் பெற்றோர், உறவினர் என் அனைவரும் இப்படி பேசியிருப்பதினாலும் கதாசிரியர் exaggerate செய்யாததாலும் இருக்கலாம்.
நன்றி மணியன்,
நீங்கள் சொல்வது ஒரு துன்பியல் நகைச்சுவை போல தோன்றுகிறது. கண் கலங்குகிறது என்று எழுதியது சத்தியமாக சம்பிரதாயத்திற்கு எழுதவில்லை. வேர் இழுக்கிறது. வாழ்க்கை சிரிக்கிறது.(சிரிப்பாய்).
நன்றி சந்திப்பு,
அப்பப்ப ட்ரெண்டை மாற்ற வேண்டி உள்ளது.இலக்கிய ஆர்வத்தி்ல் தான் எழுத வந்தேன்.நன்றி
நன்றி தங்கமணி
நன்றி அனானி,
என்ன சொல்றமுன்னு நீங்க அனானியா வறீங்க?எனக்கு புரியவில்லை.
ஈரம் கசிந்த நிலம் படித்ததில்லை. ஈரோட்டு கவுண்டர்களுக்கும் நாமக்கல் திருச்செங்கோடு கவுண்டர்களுக்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டல்லவா?வித்தியாசத்தை நான் நாளை சொல்கிறேன்.( இரண்டாம் பாகம் உண்டு)
பெருமாள் முருகன் எழுதுவதில் நிறைய திருச்செங்கோடு, நாமக்கல்லை பற்றியே..
வித்தியாலயத்தில் நான் எப்போது படித்தேன் என்று சொல்கிறேன்.நீங்கள் யார் என்றும் வயது என்ன என்றும் கூறுங்கள்.
//என்ன சொல்றமுன்னு நீங்க அனானியா வறீங்க?எனக்கு புரியவில்லை.//
கூச்சமா இருந்தாலும் நீங்க கேக்கறீங்கன்னு சொல்றேன்.
அய்யனும், அம்மாவும் குலதெய்வகோயிலுக்கு கூட்டிட்டு போயி, மொட்டையடிச்சு வெச்ச பேரு அனானிமஸுங்க.
//ஈரோட்டு கவுண்டர்களுக்கும் நாமக்கல் திருச்செங்கோடு கவுண்டர்களுக்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டல்லவா?//
கோயமுத்தூர்ல இருந்திட்டு நமக்கெங்க இதெல்லாந் தெரியுது??
//நீங்கள் யார் என்றும் வயது என்ன என்றும் கூறுங்கள்.//
வயசு? அது ஆகுது 32 வருஷமுங்க.
நானும் வித்யாலயத்துல 89-லிருந்து 94 வரைக்கும் படிச்சேனுங் முத்து அண்ணா.
+2 ரெண்டு வருஷம் சிவானந்தா ஸ்கூல், B.Sc 3 வருஷம் கலைக்கல்லூரி.
அன்புடன்
அனானி என்ற அனானிமஸ்.
அனானி,
நீங்க எனக்கு அண்ணன்.எனக்கு 29 வயசுதான் ஆறது. நான் பிஸிக்ஸ் படிச்சேன்.93-96.
நீங்க எந்த டிபார்ட்மெண்ட்?
Post a Comment