Thursday, December 29, 2005

எந்திரிச்சா பொல்லாதவன் கதை தெரியுமா?

நான் முதன்முதலில் வேலைக்கு சேர்ந்த வங்கிக்கிளையில் ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் சத்தியசீலன். அவரின் சிறப்பம்சம் என்னவென்றால் சரியான நேரத்தில் பொறுத்தமாக பழமொழிகளை எடுத்துவிடுவார்.மிகவும் சுவாரசியமாக இருக்கும் அந்த பழமொழிகளில் இருந்து சாம்பிளுக்கு சில.

எந்திரிச்சா பொல்லாதவன்

அடிக்கடி எங்கள் வங்கியின் மண்டல அலுவலகத்தில் இருந்தோ மத்திய அலுவலத்தி்ல் இருந்தோ பல நினைவூட்டு கடிதங்கள் வரும். மாதாந்திர ஸ்டேட்மெண்டுகள் சரியான நேரத்தில் அனுப்படவில்லையென்றால் சம்பந்தப்பட்டவர் பொறுப்பாக்கபடுவார் (Accountability fixing) என்றெல்லாம் வரும் கடிதங்களை பார்த்து நான் பதட்டபடுவேன்.அவரோ ஹாயாக இருப்பார்.எப்படிங்க கவலையேபடாமல் இருக்கீங்க என்று நான் கேட்டதற்கு ஒரு நாள் இவ்வாறு கூறினார்.

"பயப்படாதீங்க..இதெல்லாம் எந்திரிச்சா பொல்லாதவன் கதைதான்"

"அது என்ன சார் கதை?", என்றேன்.

"ஒண்ணுமில்லீங்க...அவனோ எந்திரிக்க முடியாம நொண்டியா இருப்பான்.ஆனா அடிக்கடி நான் எந்திரிச்சா என்ன நடக்கும்னே தெரியாது என்றெல்லாம் மிரட்டுவான்", என்றார்.

சில தினங்களுக்கு முன் ஒரு புத்தகத்தில் இதே கதையை முழு நீள சுவையான கதையாக கி.ரா கூறியிருந்ததை படிக்க முடிந்தது.ஒரு கிராமத்தையும் மெயின் ரோட்டையும் இணைக்கும் பாதையில் ஒரு மேடான இடத்தில் ஒரு மரத்தினடியில் அவன் அமைதியாக அமர்ந்திருப்பான். கையில் ஒரு நீளமான அரிவாள் வைத்திருப்பான்.அந்த வழியாக போகும் வண்டிகள் அவனுக்கு பணம் கொண்டுப்போய் அவனிடம் கொடுக்கவேண்டும்.தண்டல் வசூல் மாதிரி இது பல நாட்களாக நடந்து வந்தது.

ஒரு குறிப்பிட்ட நாளில் விஷயம் தெரிந்த சிலர் ஒரு வண்டியில் அவ்வழியாக வந்தனர்.வந்தவன் வண்டியை நிறுத்திவிட்டான்.ஆனால் பணத்தை கொண்டு வரவில்லை.

"அய்யா வந்து வாங்கிக்கொங்க"

"டேய், கொண்டு வாடா இங்க..நான் எந்திரிச்சா என்ன நடக்கும் தெரியுமில்ல.."

"என்ன ஆவும்"

"டேய் உன் தலையை தனியா எடுத்திருவேண்டா"

"மொதல்ல எந்திரி பார்ப்போம், எங்களுக்கு தெரியும்டேய்"

அவமானத்தில் சுண்டவனாக அழ ஆரம்பித்தான் அவன் என்பதாக கதையை கொண்டு போயிருப்பார்.


அவனை காலை எடுக்க சொல்லு


சில நேரம் நம்முடைய மேலதிகாரிகள் தம்மால் சுலபமாக செய்யக்கூடிய காரியத்தை பொறுத்தமற்ற காரணம் (சப்பை காரணம்,நன்றி: கவுண்டமணி) கூறி தட்டி கழிக்கும்போது உபயோகப்படுத்தகூடிய பழமொழிதான் மேற்சொன்னது.

இது கடவுளையே கிண்டல் செய்யும் பழமொழி. கோவிலில் இருக்கும் சாமி சிலையின் மீது ஒருவன் காலை வைத்தானாம். உடனே சாமி பூசாரியை அழைத்து அவனை காலை எடுக்க சொல்லு..இல்லை உன்னை தொலைச்சுருவேன் என்றதாம்..இது ஒரு நுண்ணிய பழமொழி. இது பல இடங்களில் பல வழிகளில் உபயோகப்படுத்தக்கூடியது. எனக்கு மிகவும் பிடித்ததும் இதுதான்.


இனி கேள்வி நேரம்

யாராவது இந்த பழமொழியின் கதையை சொல்லலாம். செத்தும் சிரிச்ச மாதிரி

5 comments:

சந்திப்பு said...

முத்து

முடவன் கொம்புத் தேனிக்கு ஆசைப்பட்ட கதை இது தானா?

டிபிஆர்.ஜோசப் said...

முத்து,

எந்திரிச்சா பொல்லாதவன்கறத வேற மாதிரியும் சொல்லலாம்.

அதாவது நா உக்காந்து இருக்கறவரைக்கும் நல்லவந்தாண்டா, மவனே எளிந்திரிச்சேன் நீ தொலைஞ்சே? (இதெப்படி இருக்கு?)

அதேமாதிரி அவனை காலை எடுக்க சொல்லுங்கறதுக்கு இப்படியும் எடுத்துக்கலாம்.

நாயகனில் கமல்: ஏள பாளைங்க இருக்கற எடத்துக்கு நடுவுல புல்டோசர விட்டானே ஒரு சேட் கம்மனாட்டி அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்.

தாயிடம் மகன்: தம்பி மட்டும் உங்க மேல கால போட்டுக்கிட்டு தூங்கறானே என்ன மட்டும் எடுக்க சொல்றீங்க? முதல்ல அவனை காலை எடுக்க சொல்லுங்க.
:-)))))))))))

பட்டணத்து ராசா said...
This comment has been removed by a blog administrator.
Muthu said...

நன்றி பெருமாள்

அந்த கதை வேற இது வேற

Anonymous said...

இது கிரா சொல்வதற்கும் முன்னாலே உலாவிய கதை. முடவன் என்பதற்குப் பதிலாக, ஆனைக்கால்(நோய்) கொண்ட பலகாரம்/பட்சணம் விற்கும் வியாபாரி தன்னோடு சேட்டை செய்யும் சிறுவர்களுக்குச் சொல்வதாக (இராமகிருஷ்ணபரமஹம்ஸரின் குட்டிக்கதைகளிலோ எங்கோ) வாசித்த ஞாபகம்