Saturday, December 17, 2005

இம்சை அரசன் இருபத்திமூன்றாம் குலிகேசியும் வலைப்பதிவும்

(இம்சை அரசன் இருபத்திமூன்றாம் குலகேசியின் அரசவை)

இம்சை அரசன் இருபத்திமூன்றாம் குலிகேசி இட்ட ஆணையின்படி மந்திரிசபை அவசர அவசரமாக கூட்டப்படுகிறது.

அரசன்: மந்திரியாரே, நான் இந்த அரசவையை கூட்டியுள்ள நோக்கம் என்ன தெரியுமா?

மந்தி்ரி:(மனதிற்குள்)ஏதாவது வெட்டி காரணமாகத்தான் இருக்கும்.(சத்தமாக) சொல்லுங்கள் பிரபோ

அரசன்: நீர் சொன்னீர் என்பதற்காக நான் வலைப்பதிவு தொடங்கினேன்

மந்திரி: (மெதுவாக) உன் இம்சை அரசவையில் தாங்க முடியவில்லை என்பதற்காகத்தானே நான் சொன்னேன்...

அரசன்:என்ன மந்திரி?

மந்திரி:ஒன்றுமில்லை மன்னா..

அரசன்: ஒரு வருடம் ஆகியும் என்னுடைய பிளாக்கிற்கு மக்கள் வருகை குறைவாகவே உள்ளது. பின்னூட்டங்களும் நிறைய இல்லை.யாரும் என்னுடைய கட்டுரைகளை நட்சத்திர பரிந்துரைப்பதும் இல்லை. பல நல்ல தலைப்புகளில் எழுதினாலும் யாராவது அதே சப்ஜெக்ட்டில் எழுதிடறான்.எல்லா பயலும் அங்கே தான் பின்னூட்டம் இடறான்.நட்சத்திர பரிந்துரை செய்யறான்.என் பதிவை ஒதுக்கிடறாங்க...இது அநியாயமில்லையா?

மந்திரி:(மெதுவாக) உன் லட்சணம் அப்படி(சத்தமாக)மன்னா, தாங்களே தங்கள் கட்டுரையை பரிந்துரைக்கலாமே.

அரசன்: அதுவும் செய்து பார்த்தேனே.ஆனால் ஒரே ஒரு பரிந்துரை மட்டும் இருந்தாலே மக்களுக்கு நன்றாக தெரிந்துவிடுகிறது. நானே என்னுடைய பதிவையே பரிந்துரைக்கிறேன் என்று.

மந்திரி:(மனதிற்குள்)சில்லறை பயல்தானே நீ

அரசன்: மேலும் இரவு நேரமாக பார்த்து யாரோ சிலர் (-) குத்துக்களை இட்டு அதையும் அமுக்கிவிடுகின்றனர். எப்படியாவது என் வலைப்பதிவை பிரபல்யபடுத்தி முகமூடி,குழலி,டோண்டு ஆகியோர் அளவிற்கு எதை எழுதினாலும் நிறைய பின்னூட்டங்களும் நட்சத்திர பரிந்துரைகளும் வர வழி சொல்லுங்கள்.

(அதுவரை எதுவும் பேசாமல் இருந்த சேனாபதி வாயை திறக்கிறார்)

சேனாபதி : அரசே, நீங்களே சில பின்னூட்டங்களை வேறு பெயர்களில் அளிக்கலாம். உதாரணத்திற்கு அனானிமஸ் என்ற பெயரில் வந்து அரசகுடும்பத்தை விமரிசித்து படிக்கவே அறுவெறுப்பூட்டும் வகையில் ஏதாவது எழுதலாம். நீங்களே அதற்கு பதிலும் அளிக்கலாம்...இது பரபரப்பாகும்..

அரசன்: அடப்பாவி, அரசியாரை பக்கத்து நாட்டு இளவரசனுடன் இணைத்து வயது வித்தியாசம் கூட பார்க்காமல் விமரிசித்து அனானிமஸ்ஸாக வந்து பின்னூட்டம் இட்ட துரோகி நீதானா?

சேனாபதி:(மெதுவாக)அதைத்தான் நீ ரீமுவ் பண்ணிட்டயே (சத்தமாக)இல்லை மன்னா...இல்லவே இல்லை..

அரசன்: பின்னூட்டம் அதிகமாக வரவேண்டும் என்பதற்காக காமெண்ட் மாட்ரேஷன் கூட வைக்காமல் இருப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அரசியாரை கேவலமாக விமரிசிக்கும் அற்பப்பதர்களை கடுமையாக எச்சரிக்கிறேன். மந்திரியாரே..உடனடியாக ஐ.பி அட்ரஸ்களை ஒற்றறிய ஒற்றர்களை அனுப்புங்கள்....

மந்திரி:மன்னா கோபப்படாதீர்கள்.ஒரு யோசனை.பரபரப்பான கருத்துக்களை சொல்லுவது தான் உங்கள் பிளாக் பிரபலமாக ஒரே வழி.

அரசன்:என்ன அது?

மந்திரி:அப்போது நாட்டில் பரபரப்பாக நடந்திருக்கும் ஏதாவது சம்பவத்தை பற்றி கருத்து கூறவேண்டும். அது யாரும் சொல்லாத கருத்தாக இருக்கவேண்டும்.இது ரொம்ப முக்கியம்.அபத்தமாக இருந்தாலும் தப்பில்லை....

அரசன்: புரியவில்லையே..சற்று விளக்கமாக சொல்லும்...

மந்திரி: உதாரணத்திற்கு நமது அரசவை நாட்டியக்காரி குபிஷாம்பிகை கடந்த வாரம் ஒரு ஓலைக்கு (பத்திரிக்கைதான்) பேட்டி கொடுக்கும்போது மன்னனின் அந்தப்புரத்தில் இளவரசி உள்பட எந்த பொண்ணும் யோக்கியம் இல்லை என்று கூறினாளே...

அரசன்:(வாளை உறுவியபடி)அப்படியா கூறினாள்?

மந்திரி:அரசே அவசரப்படாதீர்கள்..இங்கேதான் நீங்கள் தப்பு பண்ணுகிறீர்கள்...வழக்கம்போல சிந்தித்து லூசுத்தனமாக கருத்து கூறினால் யார் உங்கள் வலைப்பதி்வை படிப்பார்கள்?நீங்கள் முற்போக்குவாதி என்று காட்டவேண்டாமா?

அரசன்: என்ன மந்திரியாரே...மரியாதை குறைகிறது...ம்...
மந்திரி:மன்னியுங்கள் மன்னா...இப்படி யோசித்து பாருங்கள்...நீங்களோ போர், சுயம்வரம் என்று போய்விடுகிறீர்கள்....என்ன நடக்கிறது என்று யாருக்கு தெரியும்?

அரசன்:(மீசை துடிக்க) மந்திரி...

சேனாபதி:இங்கே தான் நீங்கள் புரட்சிகர கருத்துக்களை அள்ளிவிடவேண்டும்.அந்தப்புர பெண்கள் மட்டுமல்ல நாட்டில் எந்த பெண்ணுமே யோக்கியம் அல்ல என்று ஒரு போடு போடவேண்டும்...நீங்கள் இரவு நகர்வலம் குஜிலி தெரு வழியாகத்தானே போகிறீர்கள்?

அரசன்:யோவ் சேனாபதி..அதை எதுக்குய்யா இப்போ சபையில போட்டு உடைக்கிற?

சேனாபதி:இல்லை மன்னா நீங்கள் போகிற தெருவைத்தானே கேட்டேன்..யார் வீட்டுக்கு போகிறீர்கள் என்றா கேட்டேன்? அவ்வாறு போகும்போதுக்கூட முன்ஜாக்கிரதையாக போகும் நான் அந்தப்புரத்தை அழிய விட்டுவிடுவேனா என்று கேட்க வேண்டும்.... மேலும் சுயம்வரத்திற்கு முன்பே புங்க நாட்டு இளவரசனுடன் டேட்டிங் அனுப்பியவன் நான் என்று முழங்க வேண்டும்....

அரசன்:யோவ் கேட்கவே நாராசமா இருக்கேய்யா..

மந்திரி:சரி..இதுவும் ஒத்து வரலியா இதை பாருங்க.... தமிழ்மணம் காசி வலைப்பதிவுகளில் சில நெறிமுறைகளை கொண்டுவந்துள்ளாராம்....கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அதை விமர்சித்து.....

அரசன்:யோவ்..நீ முதலுக்கே மோசம் பண்ண பாக்கறே.....

மந்திரி:இதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு..நீங்க உடனடியாக முற்போக்குவாதி மற்றும சர்வ சமாதானவாதியாக மாறவேண்டும்.

அரசன்:அது என்ன?

மந்திரி:அது ஒண்ணுமில்லை மன்னா...நீங்கள் டெல்லி நவாபுக்கு கப்பம் கட்டுகிறீர்கள் அல்லவா?

அரசன்:ஆம்..அதற்கென்ன...

மந்திரி:அதை பெருமையாக சொல்லிக்கொள்ளவேண்டும்....டெல்லி நவாபும் நம்மளமாதிரி மனுசன்தான். இன்னிக்கு நாம அவனுக்கு அடிமைன்னாலும் நாளைக்கு நாமளும் அவன் பாஷையை கத்துக்கிட்டு அவனை மாதிரியே மாறிட்டா அவன் யாரை அடிமையா வைச்சிருப்பான் என்று எழுதி மக்களை குழப்பினீர்கள் என்றால்.....

அரசன்:(குழம்பி)என்ன சேனாபதி, தலையை சுத்துதே... அடுத்த வாரம் படை திரட்டி நவாபை தாக்கலாம் என்று கூறினீர்கள்..இப்பொது அவரை போற்றவேண்டும் என்று மந்திரியார் கூறுகிறாரே...

மந்திரி:அரசே..உங்களுக்கு முக்கியம் எது என்று பாருங்கள்...டெல்லி நவாபை போற்றவேண்டும். பாரசீக மொழியை கற்கவேண்டும்....

அரசன்:அப்புறம்...

மந்திரி: தமிழை பற்றி திட்டவேண்டும்.எப்படியும் வலைப்பதிகளில் தமிழ்,தமிழர் என்று முழங்கும் கும்பல் இருக்கும்.அவர்கள் உங்களை எதிர்ப்பார்கள்...ஆரம்பத்தில் உங்களுக்கு சற்று சிரமமாக இருக்கும்..ஆனால் அதே குழுவிற்கு எதிராக எப்படியும் ஒரு குழு இருக்கும்.அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.நட்சத்திர மற்றும் பின்னூட்ட சப்போர்ட்டும் கிடைக்கும்....

அரசன்:இது ரொம்ப சுவாரசியமா இருக்கே.....

மந்திரி: அல்லது தமிழ்,தமிழர் என்று புலம்பும் கும்பலில் சேருங்கள்.தமிள்மொலி, தமிளர் என்றெல்லாம் உங்களுக்கே உரிய பாணியில் தவறாக எழுதினாலும் அதனால் யாராவது உங்களை கிண்டல் செய்தாலும் தமிழ் பாதுகாப்பு குழு உங்களுக்கு சப்போர்ட் பண்ணும்...

அரசன்:பலே..அப்படியா....

மந்திரி:ஆமாம்..ஆனால் ஒன்று எந்த கும்பலில் சேர்ந்தாலும் உங்க கும்பலை சேர்ந்தவங்க என்ன சொன்னாங்க,சரியா சொன்னாங்களா தப்பா சொன்னாங்களா என்றெல்லாம் பார்க்காமல் சப்போர்ட் பண்ணணும். முதல்ல (+) குத்து குத்திட்டுத்தான் படிக்கவே ஆரம்பிக்கணும். எதிர்குழு என்றால் (-)
குத்து மற்றபடி படிக்கலேன்னாலும் பரவாயில்லை...யாருக்கும் தெரியாது....

அரசன்:சேச்சே அது நல்லாயிருக்காது....

மந்திரி: (டென்ஷனாகி) அப்புறம் என்னதான் எங்களை செய்ய சொல்றீங்க? பேசாம வலைப்பதிவை மூடிடுங்க...இல்லாட்டி பின்னூட்டங்கள் அதிகம் பெறுவது பற்றி டோண்டு எழுதிய பதிவையும் ஆழமான பதிவுகள் எழுதுவது எப்படி என்று முகமூடி எழுதிய பதிவையும் படிங்க.எங்க உயிரை எடுக்காதீங்க...


மந்திரியும் சேனாபதியும் கோபமாக அரசவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறார்கள்.

( திரை )

17 comments:

Pot"tea" kadai said...

தமாசு, தமாசு...வயிரெல்லாம் வலிக்குது சாமியோவ்!
ஆனா...அப்பட்டமா உண்மையெல்லாம் எழுதக் கூடாது!

Pot"tea" kadai said...

அடங்கொக்காமக்கா...இந்த பதிவுக்கு கூட "மாடரேஷன்"னா...இது அநியாயம்...அக்கிரமம்...

b said...

அய்யா ராசா,

பின்னிப் பெடல் எடுக்குறீங்கய்யா. அருமை அருமை!

இம்சை அரசன் 23ம் புலிகேசின்னு வடிவேலு கதாநாயகனா நடிக்க படம் ஒன்னு தயாராகுது. கேள்விப் பட்டீங்களா?

ilavanji said...

நல்லா இருக்குக்க! :)

Muthu said...

Thank you pottea kadai, Moorthi and pottikadai..

muthu

Muthu said...

thank you illavanchi

குழலி / Kuzhali said...

அய்யா சாமி இப்படிலாமா பெடலெடுக்கறது

Muthu said...

thanks kuzhali

சாணக்கியன் said...

ஹையோ ஹையோ தமாசு தமாசு..

துளசி கோபால் said...

அங்கே சுட்டி கொடுத்ததுக்கு நன்றிங்க. இப்பத்தான் படிச்சேன்.
நமக்குப் பிரதானமே 'நகை'ச்சுவை தாங்க.
கொன்னுட்டீங்க போங்க.
நல்லா இருங்க.

Ram.K said...

நான் ஏற்கனவே படித்த மகிழ்ந்த பதிவுதான் என்றாலும், பின்னூட்டமிடவில்லை.

என் மகிழ்ச்சியைப் பின்னூட்டமிட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜோ/Joe said...

முத்து,
இதை முன்பு தவற விட்டுவிட்டேன் .இப்போது தான் படித்தேன் .சும்மா புகுந்து விளையாடிருக்கீங்க!

ஸ்ருசல் said...

நன்றாக இருந்தது.

>>>மேலும் இரவு நேரமாக பார்த்து யாரோ சிலர் (-) குத்துக்களை இட்டு
அதையும் அமுக்கிவிடுகின்றனர்>>>

:))))

முன்பு நட்சத்திர மதிப்பீடு முக்கியமாக இருந்தது. இப்போது அது மதிப்பினை இழந்து விட்டது. அது நல்லதுக்குத் தான். நீங்கள் குறிப்பிடும் போட்டியையும் காண முடிந்தது.

Muthu said...

thanks srusal..these are almost my experiences

மஞ்சூர் ராசா said...

தம்பி சூப்பரா தமாஷ் பண்ணறீங்க. வாழ்த்துக்கள்.
முத்தமிழ் குழுமத்திலும் போட்டிருக்கேன்.
அதுக்கும் நன்றி.
muththamiz@googlegroups.com

லக்கிலுக் said...

தூள்.... நீங்களும் இம்சை அரசன் 24ஆம் புலிகேசின்னு படம் எடுக்கலாம்....

Unknown said...

அட நீங்க இப்படியெல்லாம் கூட எழுதி இருக்கீங்களா.. இதைத்தான் இளவஞ்சி குறிப்பிட்டாரா? உங்க Featured post of the dayல பார்த்து இங்கே வந்தேன்.