Saturday, December 10, 2005

சிறுமை கண்டு பொங்குவோம்

சிறுமை கண்டு பொங்குவோம்

ஃபிளைட் லேண்ட் ஆக அனுமதி கிடைக்கவில்லை என்று முகமெல்லாம் வெளுத்த குட்டை பாவாடை ஏர்ஹோஸ்டஸ் அறிவித்தாள். அவள் அருகில் வந்த போதெல்லாம் ஒரு சுகந்த மணம் வீசியது. சென்ட்டை தடவுவாளா அல்லது சென்ட்டில் குளிப்பாளா? ஒரு நிமிடம் என் மனது அவள் குளியலறையை தொட்டு மீண்டது.விமானம் ஒரு மணி நேரமாக சுற்றி சுற்றி வந்துக்கொண்டிருக்கிறது என்று நான் நினைத்தது சரியாக போய்விட்டது. யாராவது வீணாய் போன மந்திரி வருவதற்காக ஏதாவது ஃபிளைட் விமான நிலையத்தில் டேக் ஆஃப் ஆகாமல் காத்துக்கொண்டிருக்கும். அதுதான் லேட் என்று தானாக ஒரு காரணம் கற்பித்துக்கொண்டு 'பொறுக்கி பசங்க' என்று திட்டினேன். மனதில் சிறு ஆறுதல் ஏற்பட்டது.

சட்டென்று விமானத்தின் உயரம் குறைந்து குறைந்து கீழே உள்ள கான்கீரிட் கட்டிடங்கள் குப்பைகள் போல் தெரிய ஆரம்பித்தன.முழுதாக இரண்டு வருடங்களுக்கு பிறகு சென்னை மண்ணை மிதிக்க போகிறோம் என்ற எண்ணமே மனதில் தென்றலாய் மிதந்தது.

அண்ணா பல்கலையில் பொறியியல் படித்த கையோடு ஒரு பன்னாட்டு மெனபொருள் நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்து பிறகு அந்த நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா சென்ற நான் இரண்டு வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக இந்தியா திரும்புகிறேன். விமானத்தில் இருந்து இறங்கி லக்கேஜ் ரீசீவ் செய்ய சென்றால் அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. என்னுடைய லக்கேஜ் மட்டும் மும்பயிலேயே தங்கி விட்டதாக வருத்தத்தோடு சொன்னார்கள். இந்த மாதிரியான இம்சைகள் இங்கு இருக்கும் என்று அறிந்தவன்தான் என்றாலும் ஏற்கனவே பிளைட் லேட் ஆனதில் அப்செட் ஆகியிருந்த நான் மேலும் அப்செட் ஆனேன்.அடுத்த விமானத்திலேயே லக்கேஜ் வந்துக்கொண்டு இருப்பதாகவும் சிரமம் பார்க்காமல் சிறிது காத்திருக்க வேண்டினார்கள்.

தீடிரென்று செல் ஒலித்தது. அம்மாதான்.விமானம் லேட் ஆன விஷயத்தை சொல்லி சீக்கிரம் வந்துவிடுவதாக கூறினேன். நான் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தில் ஒரு புதுவீடு வாங்கியிருந்தோம்.அந்த வீட்டிற்கு வரும் அட்ரஸ், லேண்ட்மார்க் ஆகியவற்றை அம்மா குழந்தைக்கு விளக்குவது போல் விளக்கினாள்.நான் இன்னும் குழந்தை என்றே நினைத்துக்கொண்டிருக்கிறாள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி வைத்தேன்.

இந்தியா எத்தனை வருடம் ஆனாலும் முன்னேறாது என்று என்னுடன் வேலை பார்க்கும் மற்ற நண்பர்கள் கிண்டல் அடிக்கும்போதெல்லாம் நான் அவர்களுடன் விவாதம் செய்வேன்.இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தன் கடமையை உணர்ந்து கேள்வி கேட்டு வாழ பழகிக்கொண்டார்கள் என்றால் இந்தியா வல்லரசு ஆகும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை என்பேன்.என்னுடைய எத்தனையோ நண்பர்கள் இந்த கணிப்பொறி துறையில் அதிர்ஷ்டத்தினாலோ அல்லது சொந்தக்காரர்களின் பரிந்துரையிலோ வேலையை வாங்கிக்கொண்டு அடுத்தவன் முதுகில் சவாரி செய்து வாழும்போது நான் கேம்பஸ் இண்டர்வ்யூவில் செலக்ட் ஆனவன். என்னுடைய பிராஜக்ட்டில் என்னை விட ஊன்றி வேலை செய்பவர் யாரும் இல்லை என்று எங்கள் துணை சேர்மனாலேயே பாராட்டப்பட்டவன்.என்னை நம்பியே என் பிராஜக்ட்டில் சிலர் வாழ்ந்துக்கொண்டு இருப்பதும் எனக்கு தெரிந்துதான் இருந்தது. கல்லூரி காலத்திலேயே நான் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி ஆகியவற்றில் கலக்குவேன்.மகாத்மா காந்தியும் தேச விடுதலையும் என்ற என் கட்டுரை ஒன்று தேசிய அளவிளான ஒரு கட்டுரை போட்டியில் பரிசு பெற்றுள்ளது.இவ்வளவு பெருமை உள்ள நான் இதுப்போன்ற ஒரு சூழ்நிலையில் என்ன செய்யவேண்டும்? இந்த ஏர்லைன்ஸ் கம்பெனியை உண்டு இல்லை என்று செய்துவிடவேண்டாமா?

ஆவேசத்துடன் எழுந்தேன். கவுண்டரில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் ஆங்கிலத்தில் ஆரம்பித்தேன்.

"சோ,ஈஸ் திஸ் த சர்விஸ் யூ ஆர் கிவ்விங் டூ எலைட் கஸ்டமர்ஸ்?"

"வெரி ஸாரி ஸார்" என்ற அந்த பெண் எந்த உணர்ச்சியும் இல்லாமல் டேப்பில் பதிவு செய்தது போன்ற ஒரு குரலில் தானும் வருந்துவதாக தெரிவித்தாள்.உங்கள் வருத்தம் என் கஷ்டத்தை போக்காது என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே போன் அடித்தது.எடுத்து பேசியவள் என் லக்கேஜ் வந்துவிட்டதாக அறிவித்தாள்.

********************************************

சரியான மழை. நசநசவென்று இருந்தது சிட்டி முழுக்க. ஒரு சிறிய மழை அடித்தாலும் அத்தனை சாலைகளும் பல்லை இளிக்கின்றன. இந்த நாட்டை எத்தனை காந்தி பிறந்தாலும் திருத்த முடியாது. யாராவது தட்டி கேட்டால்தானே அரசாங்கத்தை. எது நடந்தாலும் கண்டுக்காமல் அவரவர்க்கு தேவையானதை பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். என்னுடைய லட்சியமே ஒரு அரசியல்வாதி ஆவதுதான். இவர்கள் ஆடுகிற ஆட்டத்துக்கெல்லாம் வைச்சுக்கிறேன் அப்ப என்று நினைத்துக்கொண்டேன்.

ஆட்டோ போய்க்கொண்டிருந்தது.நான் மெதுவாக ஆட்டோ டிரைவரிடம் பேச்சு குடுத்தேன்.

"இப்ப மெட்ராஸில அய்யா கை ஓங்கி இருக்கா இல்லை அம்மா கை ஓங்கி இருக்கா"

"நமக்கு எதுக்கு சார் அரசியலெல்லாம்" என்றான்

பொதுவாக இதுப்போன்ற கேள்விக்களுக்கெல்லாம் சுவாரசியமாக பதில் சொல்லும் ஆட்டோக்காரர்களுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை.உம்மென்று வந்தான்.நான் இறங்க வேண்டிய இடம் வந்தாகிவிட்டது.ஆட்டோ நின்றது.

"நூறு ரூபாய் கொடுங்க சார்",என்றான்

"என்னங்க இது பகல் கொள்ளையா இருக்கு, நாலு கிலோமீட்டர் தூரத்திற்கு நூறு ரூபாயா? மீட்டர் சார்ஜ் எவ்ளோ?"

"தோடா, நீ என்ன ஊருக்கு புச்சா?, இங்க மீட்டரெல்லாம் இல்லை. மழை வுழுவுது பாத்தையில்ல"

கடந்து சென்ற சிலர் திரும்பி பார்த்துவிட்டு சென்றனர். எனக்கு அவமானமாக இருந்தது.ஆனால் இந்த அச்சுறுத்தலுக்கு பணிந்து இவனுக்கு நூறு ரூபாய் கொடுக்கபோவதில்லை என்று முடிவு செய்துக்கொண்டேன்.

"கிலோமீட்டருக்கு பத்து ரூபாய்னு பாத்தாகூட நாப்பது ரூபாய்தானே",என்றேன்.

ஆட்டோடிரைவர் இதுப்போன்ற பல உரையாடல்களில் அனுபவப்பட்டவன்.நான் கொடுத்த ஐம்பது ரூபாய் நோட்டையும் வாங்காமல் நின்றுக்கொண்டிருந்தான்.

"உங்களையெல்லாம் யாரும் தட்டி கேக்காததால் தான் நீங்கள்ளால் ஆடறீங்க"

"யோவ், என்ன ஆடற கீடற என்றெல்லாம் பேசினா மரியாதை காணாம போயிடும்"

பேச்சு வார்த்தை முற்றியது."சரி, நீ சரிப்பட மாட்டே, எங்க மாமா கூட பேசு", என்று கூறிய நான் என் மொபைலை எடுத்தேன்.அவர் E-3 போலீஸ் ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டராக இருக்கிறார் என்ற நான் கற்பனையாக போட்ட குண்டு வேலை செய்தது.

"சரியான சாவு கிராக்கிய்யா நீ, கொடுக்கறதை கொடு"

முப்பது ரூபாய் கொடுத்தேன். அதை சற்றும் எதிர்பார்க்காத ஆட்டோக்காரன் என்ன சார் என்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்தான்.

"கொஞ்சம் போட்டுகுடு சார்"

"ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்ளோ? ஐம்பது ரூபாயா? எத்தனை கிலோமீட்டர் தரும் உன் வண்டி?. இருபத்திஐந்து கிலோமீட்டர்னே வச்சுக்கலாம்.நாலு கிலோமீட்டர் வந்திருக்கோம்.அப்ப ஏழு அல்லது எட்டு ரூபா தான் உனக்கு அதிகபட்சம்.ரிட்டர்ன் ஒரு எட்டு ரூபா.மொத்தம் பதினைந்து ரூபாய்.அப்படி பார்த்தாலும் உனக்கு நான் ரெண்டு மடங்கு கொடுத்திருக்கேன்."

"சார் , நான் பிள்ளைக்குட்டிக்காரன்"

"எனக்கும் கல்யாணம் ஆகியிருந்தா இன்னேரம் நானும் பிள்ளைக்குட்டிக்காரன்தாம்பா, உழைச்சு பிழைக்க கத்துக்கோ, எல்லோரும் நேர்மையா நடந்தா நம்ம நாடு எங்கேயோ போயிரும், உனக்கு உண்டான காசை தவிர அடுத்தவன் காசை ஒரு பைசா கேட்க உனக்கு உரிமையில்லை, எல்லோருக்கும் தான் கஷ்டம் வாழ்க்கையில, என்னமோ நீ மட்டும்தான் கஷ்டபடுற மாதிரி பேசற?"

"என்ன துரை, ஏழைக்கிட்டே சட்டம் பேசறே", ஆட்டோக்காரன் குரல் தாழ்ந்துவந்தது.

"ஆமாய்யா, சட்டம்தான்.சட்டம்கிறகு எல்லோருக்கும் பொதுவானது.நம்ம சுயநலத்திற்காக சட்டத்தை வளைக்ககூடாது.இதே மாதிரி எல்லோரும் அவங்கவங்க சுயநலத்திற்காக சட்டத்தை மீறினா என்ன ஆகும்? அப்புறம் சட்டம் போடறதுக்கு என்ன அர்த்தம்?" எனக்கு மூச்சு வாங்கியது.

என்னை வித்தியாசமாக பார்த்த ஆட்டோக்காரன் எதுவும் சொல்லாமல் பணத்தை வாங்கிக்கொண்டு போனான்.

*************************************


இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை.நண்பர்கள்,உறவினர்கள் என்று பலரும் வந்திருந்ததால் டைம் போனதே தெரியவில்லை.இன்றும் அப்படித்தான் ஒரு நண்பன் வீட்டிற்கு சென்றுவிட்டு நானும் என் இன்னொரு நண்பனும் திரும்பிக் கொண்டிருந்தோம். பஸ் ஸ்டாப்பில் இறங்கி வந்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று தான் கவனித்தேன்.பாக்கெட்டில் இருந்த என் மொபைல் போனை காணவில்லை.மிகவும் காஸ்ட்லியான செட் அது. அனைத்து நவீன வசதிகளும் கொண்ட அந்த மொபைல் இந்திய மதிப்பில் கண்டிப்பாக இருபதாயிரத்திற்கு மேல் வரும்.

நண்பனை உடனடியாக தொடர்புக்கொண்டு ஒருவேளை அங்கே மறந்து வைத்து விட்டேனா என்று கேட்டேன்.அங்கு இல்லை என்றான் அவன். என் உடன் இருந்த நண்பன் யோசனைப்படி என் மொபைல் நம்பருக்கு டயல் செய்தேன்.முதல்முறை ரிங் போய் கட் ஆனது. இரண்டாம் முறை ரிங் போகவில்லை. இந்த எண் சுவிட்சு ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் என் மொபைல் திருடு போய்விட்டதை உணர்த்தியது.

அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் செய்வதுதான் உத்தமமான யோசனை என்று புலப்படவே
அங்கே சென்று காவல்துறை அதிகாரியிடம் கூறினேன்.

"மொபைல் போனை தொலைச்சுட்டியா? ஏய்யா பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்க..உங்களுக்கெல்லாம் பொறுப்பே இருக்காதா, பஸ்ஸிலே எவளையாவது பார்த்துட்டு வாயை பொளந்துட்டு இருந்திருப்பே, எவனாவது பிக்பாக்கெட் அடிச்சிருப்பான்"

எனக்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறியது."சார்,சட்டப்படி உங்க கடமையை மட்டும் செய்யுங்க,நான் யாரை பார்த்து வாயை பொளந்தேங்கறது உங்க விசாரணை எல்லைல வராது" என்றேன் சூடாக.

"ஓ அப்படியா,சரி சரி, ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி அதுகூட மொபைல் போன் வாங்கின பில்லை இணைச்சி கொண்டு வாங்க, பாக்கறோம்."

"சார், புகார் கடிதம் சரி.ஆனால் மொபைல் வாங்கின பில்லெல்லாம் என்கிட்டே இல்லை இப்ப".

"சார், அதெல்லாம் இங்க பேசவேண்டாம், நீங்க சொன்னபடி சட்டப்படி என் கடமையை நான் செய்யறேன்.நீங்களும் சட்டப்படி நடந்துக்கங்க", என்ற ஆய்வாளர் அதற்குமேல் பேச ஒன்றும் இல்லை என்பதுபோல ஒரு பைலை எடுத்து புரட்ட ஆரம்பித்தார்.

செய்வதறியாது தவித்து நின்ற என்னை அதுவரை ஒதுங்கி நின்று பார்த்துக்கொண்டிருந்த காவலர் அணுகினார்.

"என்ன தம்பி,இவ்ளோ விவரம் இல்லாம இருக்க, இங்கெல்லாம் வந்து சட்டம் பேசலாமா? மொபைல் போனெல்லாம் காஸ்ட்லி சமாச்சாரமாச்சே"

"என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க சார்", என்றான் அதுவரை பேசாமல் இருந்த என் நண்பன்.

"ஒரு முன்னூறு ரூபாயை கொடுங்க, எஃப.ஐ.ஆர் புக் செய்துரலாம்.ரெண்டு நாள் கழித்து வாங்க.பார்ப்போம்".

பணத்தை எடுத்துக்கொடுத்தேன்.புகாரை எழுதிக்கொடுத்துவிட்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம். தற்செயலாக நிமிர்ந்து பார்த்தேன். E-3 காவல் நிலையம் என்று எழுதியிருந்தது.என் நினைவில் ஏனோ அந்த ஆட்டோடிரைவர் வந்து போனான்.

9 comments:

துளசி கோபால் said...

25வது பதிவா?

வாழ்த்துக்கள்.

அப்புறம் மொபைல் ஃபோன் கிடைச்சதா?

Muthu said...

நன்றி துளசி....மொபைல் கிடைக்கலை.. எப்படி கிடைக்கும்?

b said...

அன்பின் முத்து,

கதை நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

முத்து இது வெறும் கதைதானே.

அப்ப துளசி முபைல் கிடைச்சிதான்னு கேட்டா கிடைக்கலைங்கறீங்க?

அப்ப இது உங்க அனுபவமா?

இருந்தாலும் நல்லா இருக்கு.. அதாவது உங்க அனுபவத்தை கதைன்னு சொல்லி 'கதை' விடறீங்க.

Muthu said...

ஜோசப் சார்,
கற்பனையும் அனுபவமும் கலந்தாதானே நல்ல கதை...என்ன சொல்றீங்க?
என்னுடைய எல்லா கதைகளிலும் சில அனுபவ பாடங்கள் இருக்கும்.
உதாரணத்திற்கு என் நண்பர் மொபைலை தொலைச்சுட்டு அந்தேரி ரயில்வே ஸ்டேஷனில் புகார் பண்ண போனப்ப மொபைல் வாங்கின பில் கேட்டாங்க..(பாம்பே பிக்பாக்கெட் பத்தி நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை)

மொபைல் கிடைக்கலை என்று நான் சொன்னது கதை நாயகன் சார்பாகத்தான்.

பாராட்டிற்கு நன்றி திரு.மூர்த்தி

சந்திப்பு said...

ஆட்டோகாரனிடம் மட்டும்தான் நாம் கறாராக இருக்க முடியும்!
சட்டத்தின் முன் சமம் என்றுஅவனிடம் மட்டும்தான் பேச முடியும்!
பிளையட் காலதாமதமாக வந்தாலும், சூட்கேஸை ஏர்வே° மறந்து விட்டாலும், அது ஒரு நிர்வாகமாக இருப்பதால் அங்கெல்லாம் நம்முடைய இன்டிலிஜென்° எடுபடாது...
நமக்கு காரியம் ஆக ஊழலுக்கு துணைபோவதைத் தவிர வேற வழியே இல்லை!
இந்த ஹீரோ எப்படி நாட்டை திருத்தப் போகிறார்!

Muthu said...

நன்றி பெருமாள் இதுதான் நம்முடைய இன்றைய பிரச்சனை என்று நான் நினைக்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

கதை சூப்பர். என் மொபைல் கூட இப்படித் தான் தொலைஞ்சு போச்சு. போலீஸ் ஸ்டேஷன்ல கேட்டதுக்கு, மேஜிஸ்ட்ரேட் கோர்ட்ல கேஸ் பதிவு பண்ண சொன்னாங்க. அவங்க சொன்ன நேரம் ஒத்து வராததுனால, நான் அப்டியே விட்டுட்டேன். அந்த சம்பவம் நினைவு வருது. People for policies or policies for People நு ஒரு வசனம் சொல்லுவங்க.. அது போல் தான் சட்டமும்.

பொன்ஸ்~~Poorna said...

Clicking http://competitionindia.blogspot.com

The requested URL was not found on this server.

25ஆவது பதிவுக்கெல்லாம் ஒரு கொண்டாட்டம் வேறயா?!! :)