Thursday, June 29, 2006

ஆறு வலைப்பதிவாளர்கள்

ஆறு தகவல்கள்

1.இப்போது நான் தினமும் கேட்கும் பாட்டு டைலாமோ டைலாமோ என்ற டிஷ்யூம் படப்பாடல். என்ன டேஸ்டுடா உனக்கு என்று சிலர் பல்லை கடிப்பது தெரிகிறது.என்ன பண்றது? என் குழந்தை இந்த பாட்டை போட்டால் அழாமல் இருப்பதும் இல்லாமல் என்கூட சேர்ந்து டான்சும் ஆடறா.இந்த பாட்டுல இன்னொரு சுவாரசியம் பாடல்வரிகள். அதுல ஒரு டைமிங் ஜோக் நல்லா இருக்கும்.சொல்பவர்களுக்கு அரசியல் ரத்னா விருது உண்டு.

2. நான் ஆங்கில பாடல்களை விரும்பி கேட்ட ஒரு காலம் இருந்தது. இப்போது நேரம் இல்லை. என் இசையப்பி நண்பன் தேவபாரதி எனக்கு கொடுத்த ஒரு ஆங்கிலப்பாடல்கள் அடங்கிய கேசட்டை நான் தொலைத்ததை மிகப்பெரிய இழப்பாக உணர்கிறேன்.

3.பெருமாள்முருகனின் பீக்கதைகள் என்ற தொகுப்பை இந்த வாரம்தான் படித்து முடித்தேன். யாரும் தொட தயங்கும் விஷயங்களை அழகாக கதையாக்கி உள்ளார்.

4. உலக கோப்பை கால்பந்தைப்பற்றி ஒரு விரிவாக ஒரு பதிவு போடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நண்பர் இளங்கோவின் கால்பந்து பதிவுகள் அருமையாக இருப்பதால் நான் அடக்கி வாசிக்கிறேன். சாருநிவேதிதாவின் இந்த கால்பந்து பதிவு நன்றாக இருக்கிறது.

5.ஒரு கொசுறு தகவல்:2003 வருடத்திற்கு பிறகு நான் தியேட்டருக்கு என்று போய் எந்த சினிமா படமும் பார்க்கவில்லை.

6. ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள்.நல்ல கேள்வியாக இருந்தால் பதிலளிக்க முயற்சிக்கிறேன்.(மனசாட்சி: டேய், முத்து எழுத விஷயம் இல்லாட்டி இப்படி எல்லாமா ஒப்பேத்துறது)


என்னை கவர்ந்த வலைப்பதிவுகளில் ஆறு:


1.ரோசாவசந்த்:ரொம்ப ஆக்ரோஷமாகவும் எழுதுவார். நக்கல் நையாண்டியும் நன்றாக இருக்கும். இணைய அம்பிகள் என்ற வார்த்தையை முதன்முதலாக நான் பார்த்தது இவர் பதிவில்தான்.எந்த பதிவு என்று நினைவில்லை. இந்த வார்த்தை மல்டி டைமன்ஷன் கொண்டது.இதை இவர் உருவாக்கினாரா என்று தெரியவில்லை.ஆனால் பல அர்த்தங்களை கொண்ட அருமையான வார்த்தை.எப்போது நினைத்தாலும் சிரிப்பேன்.இவருடைய குஷ்பு விவகாரம் பற்றிய கருத்திலும் எஸ்.ரா குட்டிரேவதி சர்ச்சை பற்றிய கட்டுரையிலும் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு என்ற போதிலும் நம்மை சிந்திக்க வைப்பதில் வெற்றி பெறுபவர் இவர்.எந்த ஒரு சீரியஸ் பத்திரிக்கையிலும் எழுதும் அளவிற்கு தகுதி படைத்த இவர் சாதாரண பதிவுகளை விட எதிர்வினைகளில் தான் உக்கிரமாக வெளிப்படுவார்.

அருந்ததி கட்டுரை, சாரு நிவேதிதா கட்டுரை


2.தங்கமணி:இவர் கொஞ்சம் சீரியஸானவர்.கொஞ்சம் ஆழமாக எழுதுவார். இவருடைய இந்து மதத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியுமா என்ற பதிவு தமிழ்மணத்தில் பயங்கர பிரபலம்.பதிவுக்கு அல்ல.பின்னூட்ட சண்டைக்கு.

அழியும் பன்முகத்தன்மை பற்றிய பதிவு


3.தமிழ்சசி: மகா சீரியஸானவர் தமிழ்சசி.ஆழ்ந்து ஆராய்ந்து இவர் போடும் கட்டுரைகள் தகவல் சுரங்கங்கள். தமிழக அரசியல் பற்றியும் எழுதுவார். காஷ்மீர் பற்றியும் எழுதுவார். பங்கு வணிகம் பற்றியும் எழுதுவார்.எனக்கு பிடித்தது காஷ்மீர் பதிவுகள்.

காஷ்மீர் பற்றிய பதிவுகள்.


4.தருமி: தருமியின் மாஸ்டர் பீஸ் என்றால் மதங்களை பற்றிய ஆராயும் இந்த பதிவுகள்தான்.இஸ்லாம் மற்றும் கிறிஸ்து மதத்தைப்பற்றியும் கடைசியாக இந்து மதத்தையும் ஆராயும்படி நிர்பந்திக்கப்பட்டார்.நன்றாகவே செய்தார் பேராசிரியர். அன்புக்கு இலக்கணமாக திகழும் பேராசிரியர் தருமியின் பதிவுகள் படிப்பதே ஒரு இனிய அனுபவம்.

மதம் பற்றிய பதிவுகள் இந்து மதம் பதிவு


5.இளவஞ்சி: அளவோடு எழுதி வளமோடு வாழ்வது எப்படி என்று இவரைப் பார்த்து தான் தெரிந்துகொள்ள வேண்டும்.நானெல்லாம் ஆர்வ கோளாறில் நூற்றிக்கும் மேற்பட்ட பதிவுகள் போட்டிருந்தாலும் அதில் எத்தனை தேறும் என்று சொல்லமுடியாது.ஆனால் இளவஞ்சியின் அனைத்து பதிவுகளுமே சூப்பர்.மனதை தொடும் பதிவுகள், அட்டகாசமாக நகைச்சுவை பதிவுகள், அறச்சீற்ற பதிவுகள்(?) என்று வெரைட்டியும் காட்டுவார்.இவர் போன்ற ஆட்களின் பதிவுகளில் இருந்து ஒருசில பதிவுகளை எடுத்துக்காட்டுவது கடினம்.இருந்தாலும் முயற்சிக்கிறேன்.

துளசி பெங்களூர் வந்துப்போது, பீட்டர் சாங்ஸ்


6.குழலி: மாற்று பார்வைகளை அழுத்தமாக முன்வைப்பது என்பதை இவரிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும்.பா.ம.க பற்றி, இடஒதுக்கீடு பற்றி இவர் போட்ட பல பதிவுகள் மூலம் ஏற்கனவே தமிழ்மண வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்.எந்த வித சீண்டுதல்களுக்கும் நிதானம் தவறாதவர் குழலி.(கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன் தலைவரே) பதிவுகளுக்கு சுட்டி இவர் தளத்தில் உள்ளது.

மேலும் பல நண்பர்களுடைய பதிவுகளை விரும்பி படிப்பேன்.ஆறு பதிவுகளில் ஆறு பேர் மட்டுமே இருக்கமுடியும் என்பதால் ஆறு பதிவுகள் மட்டுமே இங்கு கொடுக்க முடிந்தது.

கடைசி செய்தி:நானும் "ஆத்திகம்" எஸ்.கே அவர்களும் சட்டை கிழிய சண்டை போட்டுள்ளோம். அதையெல்லாம் மனதில் வைத்து விஷச்செடியை வளர்த்துக்கொள்ளாமல் என்னை இந்த ஆட்டத்துக்கு அழைத்த நண்பருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் என் புரொபைல் ஒரு குறுகிய காலத்திற்கு ஆத்திகமாக்கப் பட்டுள்ளது.என்ன, இது திராவிட ஆத்திகம்.அவ்வளவுதான்(படம் உதவி:நன்றி இளவஞ்சி)


என்னுடைய நாலு பதிவை இங்கு படிக்கலாம்

Saturday, June 24, 2006

என்ன கொடுமை சார் இது?

நண்பர் தமிழ்ப்பூ கொடுத்த லிங்க் பிரகாரம் நான் போய் நாலு கேள்விக்கு பதில் கொடுத்தேன்.வந்த பதில் இதுதான். மண்டையில் அடிச்ச மாதிரி இருந்தது எனக்கு.

உங்களுக்கு என்ன தோணுதுன்னு பாருங்க!



//Your Blogging Type is Kind and Harmonious
You're an approachable blogger who tends to have many online friends.People new to your blogging circle know they can count on you for support.You tend to mediate fighting and drama. You set a cooperative tone.You have a great eye for design - and your blog tends to be the best looking on the block! //


இது நிசமாங்க? அட..சொல்லிட்டு போங்க.....

செல்வன்,அருந்ததி உடன்போக்கு அரசியல்

அருந்ததி பற்றி காரசாரமாக விவாதம் நடைப்பெற்று வருகிறது. ரோசா வசந்த், செல்வன் ஆகியோர் எழுதியதை படித்தேன். செல்வனின் கட்டுரையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். ரோசாவசந்தின் கருத்துக்கள் பெரும்பாலும் நான் ஏற்றுக்கொள்ள கூடியதாகத்தான் இருக்கும்.பாஸ்டன் பாலாஜி பதிவிலும் அருந்ததி கூறாத கருத்துக்கு பலர் கிண்டலும் கண்டனமும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த எதிர்வினை செல்வன் என்பதால் மட்டுமே எழுதுகிறேன்.ஒரு சமுத்ராவோ ஜெயராமனோ அல்லது ம்யூஸோ எழுதியிருந்தால் நான் ஏன் இதை எழுத போகிறேன்:) அதாவது அவர்கள் அளவிற்கு என்னால் திறமையாக வாதங்களை அடுக்கமுடியாது என்பதற்காகத்தான் இதை சொல்கிறேன்.மேலும் நான் அருந்ததியின் அனைத்து கருத்துக்களையும் ஆதரிக்கிறேன் என்று கூறி இதை எழுதவில்லை என்றும் தெளிவுபடுத்திவிடுகிறேன்.

ஒரு இந்தியர் நாம் அணுகுண்டு வெடித்திருக்க தேவையில்லை என்று கூறினால் நீங்கள் வருத்தப்பட என்ன இருக்கிறது செல்வன்? சாப்பிட உணவில்லாமல் பலகோடி பேர் பட்டினி கிடக்கும் தேசத்தில் அணுகுண்டு வெடித்ததின் மூலம் என்ன சாதித்தீர்கள் என்று கேட்கிறார் அருந்ததி. நியாயமான கேள்விதானே.

அணுகுண்டு வெடித்ததின் மூலம் இந்தியாவின் பெருமை உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவியதாக சொல்கிறீர்கள்.எனக்கு அப்படி தோன்றவில்லை. இன்று தவிர்க்க முடியாமலும் இயற்கையான நடைமுறை ஆகவும் நாம் அறிமுகப்படுத்திய உலகமயமாக்கல் சூழ்நிலையில் இவ்வளவு மனித வளம் உள்ள நம் நாட்டின் பெருமை உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவுவது இயற்கையான விசயமே.

அணுகுண்டு வெடித்ததின் மூலம் பாகிஸ்தானை நாம் மிரட்டிவிட்டோம் என்று எல்லாம் கூறிவிடமுடியாது. உடனே அவனும் குண்டு வெடித்ததை கவனியுங்கள்.சரி நமக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன பிரச்சினை? நம்முடன் வாழ்ந்தவர்கள்தானே அவர்கள்.இன்று பஸ் எல்லாம் விட்டு உறவு வளர்க்கிறோமே? ஏன்?

உங்களுக்கு பாகிஸ்தான் பிரச்சினையின் ஆணிவேரும் அதில் யாசின் மாலிக் கும்பலின் பங்கு என்ன என்று தெரியுமா?இதற்காக நான் தீவிரவாதிகளின் ஆதரவாளன் என்றெல்லாம் கூறவிடக்கூடாது.சங்கரின் கட்டுரையும் முக்கியமாக இந்த யாசின் மாலிக், அருந்ததி படத்தை அடிப்படையாக்கித்தான் இருந்தது.

காஷ்மீர் பற்றி தமிழ்சசியின் இந்த கட்டுரைகளை படியுங்கள். சந்திப்பின் இந்த கட்டுரையையும் படிக்கலாம்.

அமெரிக்கா இந்தியாவை குண்டு வைத்திருக்கிறாய் என்று கண்டித்தது காமெடி என்று சிரிக்கிறீர்கள். அதே அடிப்படையில்தான் இன்று இந்தியா ஈரானை கண்டிக்கிறது. இதற்கு என்ன சொல்வது?அருந்ததி ராய் நக்சலைட் தீவிரவாதிகள் துப்பாக்கி ஏந்துவது தான் சரி என்று எங்காவது கூறியுள்ளாரா? மேலும் நீங்கள் கூறியது போல் அவர் ஜனநாயக முறையில் போராடவில்லை என்றால் அவர் என்ன துப்பாக்கி ஏந்தி போராடுகிறாரா?


இடதுசாரியம் பேசுபவர்களை புறங்கையால் நீங்கள் ஒதுக்கிவிடமுடியாது செல்வன். மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டில் , படிப்பறிவு குறைந்த நம் நாட்டில், சாதியின் அடிப்படையில் பெரும்பான்மை மக்கள் கல்வி உள்பட பல உரிமைகளை இழந்திருந்த நம் நாட்டில் அருந்ததிராய், மேதா பட்கர், கம்யூனிஸ்ட்டுகள் போன்றவர்கள் தேவை நிறைய உள்ளது.

ஆயிரம் இருந்தாலும் இந்த நாட்டின் பலம் ஜனநாயகம் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஜனநாயக முறையில் நாட்டின் வளர்ச்சி தொடர்ந்து ஏற்பட வேண்டுமானால் அனைத்து தரப்பு மக்களின் குரலும் உரத்து ஒலிக்கப் படவேண்டும்.ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பார்கள்.அப்படிப்பட்ட மக்களின் குரலை உரத்து ஒலிப்பவர்கள் இவர்கள்.

இங்கு பலரும் ஒலிப்பது ஒரு சிறுபான்மையோரின் குரல்.அந்த குரலுக்கு, அந்த அரசியலுக்கு பெயர் உடன்போக்கு அரசியல். ஆம்.உடன்போக்கு அரசியலுக்கு என்று எந்த தெளிவாக கொள்கையும் இருக்காது. நாடு போகும் போக்கில் உடன்போக்கு கொள்கை போகும். இன்று ஜனநாயகம் வாழ்க என்று குரல் கொடுக்கும்.நாளை முஸ்ராப் மாதிரி ஒரு சர்வாதிகாரி கையில் நாடு சிக்கினால் முஸ்ரப் வாழ்க என்று முதல் குரல் கொடுக்கும் குரலாகவும் இந்த உடன்போக்கு அரசியல்தான் இருக்கும்.உடன்போக்கு அரசியலின் ஒரே நோக்கம் தன் நிலையை காத்துக்கொள்வதுதான்.

தமிழ் வாழ்க என்று ஒரு புறம் எழுதும் நீங்கள் தேசியம் என்ற கற்பித கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் தருவதுபோல் ஒரு தொனி தெரிகிறது. தவறில்லை.ஆனால் தேசியம் என்ற பெயரில் இங்கு அமல்படுத்தப்படும் விஷயங்களையே பலர் எதிர்க்கிறார்கள். இங்கு இந்தியா சிதறவேண்டும் என்று யாரும் கூறுவதில்லை.கார்கில் போரில் கூட முதலில் உயிர்தியாகம் செய்தது ஒரு தமிழனான சரவணன்தான்.அது வேறு.இது வேறு.

ஆனால் அருந்ததியோ, இடதுசாரிகளோ அனைத்து தரப்பினர் உரிமைகளும் மதிக்கப் படவேண்டும் என்றுதான் கூறுகிறார்கள்.வேற்றுமையில ஒற்றுமை என்பதை வாயளவில் பேசுகிறோம்.என்றுமோ அரசாங்கத்தின் நிலைகளை ஆதரிப்பது நமக்கு பாதுகாப்பானதுதான்.ஆனால் நியாயமானதா?

இன்று மேதா பட்கர் என்று ஒருவர் போராட்டங்கள் நடத்தவில்லை என்றால் இந்த அளவாவது நிவாரண உதவிகள் அந்த உரத்து குரல் எழுப்ப வக்கில்லாத அந்த பழங்குடி இனத்தாருக்கு கிடைத்திருக்குமா? இந்த அரசாங்கத்தை நம்பினால் அவர்கள் சரியாக செய்வார்களா?

சாத்வீகமான முறையில் நியாயமான காரணத்திற்காக உண்ணாவிரதம் இருந்த மேதா பட்கரை சாகட்டும் விடு என்று கூறிய நாடுதானே இது?


( அவசரமாக எழுதப்பட்டது.சில சொற்குற்றங்கள் இருக்கலாம். பின்னர் திருத்தப்படும்.இந்த கட்டுரைக்கு இரண்டாம் பாகமும் வரலாம்)

Tuesday, June 20, 2006

இதுதான்யா அறச்சீற்றம்

"இந்தி"ய சினிமா விழா என்ற பெயரில் துபாயில் பாலிவுட்டை சேர்ந்தவர்கள் கொட்டம் அடித்தது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம்.இந்திய சினிமாவை இன்டர்நேஷனல் லெவலுக்கு எடுத்து செல்வதாக இந்தி சினிமாகாரர்கள் சொல்கிறார்கள்.

Click for the Statement:

" அது எப்படி இந்தி சினிமாவை மட்டும் வைத்துக்கொண்டு இதை இந்திய சினிமா விழா என்று சர்வதேச அளவில் பேசமுடியும்? தென்னிந்திய மொழிகளை கணக்கில் எடுத்து கொள்ளாதது கண்டனத்தற்கு உரியது" என்றார் மம்மூட்டி.

இது பல காலமாக நாம் புலம்பிவருவதுதான். இந்தியா என்றால் இந்தி என்று தெரிந்தோ தெரியாமலோ மாற்றிவருகிறார்கள்.இதற்கு நம் தேசிய வியாதிகளும் ஒத்து ஊதி வருகின்றனர்.

அமிதாப்பச்சன் சாதித்துள்ளதை விட நம்முடைய "வாழும் வரலாறு" கமல் சாதித்தது அதிகம்.சினிமாவில் ஒரு பச்சை குழந்தைக்குக்கூட தெரியும். ஆனால் அமிதாப்பச்சன்தான் இந்திய சினிமாவின் மார்லன் பிராண்டோ என்ற அளவிற்கு சர்வதேச சினிமா சமுதாயத்திலும் சரி,இந்தியாவிலும் சரி ,பில்ட் அப் தரப்படுகிறார்.இந்தி சினிமாவை விட தொழில்நுட்ப ரீதியில் நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் கிடையாது.

அந்த கிரிக்கெட் படத்திலிருந்துதான் அமீர்கான் சில தரமான படங்கள் தந்துவருகிறார். Most Overrated Actor என்று இவரை ஷோபா டே என்று நினைக்கிறேன் விமர்சிக்கப்பட்டவர்.அது சரிதான் என்று நானும் நினைக்கிறேன். நம்முடைய பாலா, செல்வராகவன் ஆகியோர் மிகச்சிறந்த டைரக்டர்கள். நாசர், விக்ரம் உள்பட மிகச்சிறந்த நடிகர்கள் நம்மிடமும் உள்ளனர்.

இந்தி தனது அகண்ட வாயை திறந்து பல மொழிகளை விழுங்கிவருகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. கன்னட திரை உலகம் எங்கே என்று தேட வேண்டியுள்ளது. சமீப காலமாக கேரளாவிலும் சீரியஸ் திரைப்படங்களுக்கு மவுசு குறைந்து வருவதாக பேச்சு உள்ளது. இந்தி திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகமாகிறதாம். சகிலா திரைப்படம் பட்டையை கிளப்புவதால் அதை எதிர்த்துக்கூட கேரள திரை உலகத்தின் ஒரு பகுதியினர் கலாட்டா செய்ததாக நண்பர் ஒருவர் கூறினார். மம்மூட்டி இதனால் கூட கோபப்பட்டிருக்கலாம்.

ஆனால் அவர் கூறியதில் உள்ள உண்மையை புறந்தள்ளவிடமுடியாது. இந்தியா என்றால் இந்தி என்று கொஞ்சம் கொஞ்சமாக நம் மேல் திணிக்கப் பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத் தக்கது. தைரியமாகவும் அறச் சீற்றத்துடனும் கருத்து தெரிவித்த கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை பாராட்டுவோம்.

தொடர்புடைய சுட்டியாக நண்பரும் கவிஞர் சங்க தலைவருமான ஆசிப்பின் சுட்டி கிழே:


http://asifmeeran.blogspot.com/2006/06/blog-post_19.html

Saturday, June 17, 2006

அன்புமணியும் வேணுகோபாலும் - 1

டாக்டர் அன்புமணி ராம்தாசுக்கு எதிராக மீடியாவின் ஒரு பிரிவினர் சமீப காலமாக வம்பு வளர்த்து வருவதை நீங்களும் பார்த்திருக்கலாம். அன்பு மணியும் சரி அவருடைய தந்தையாரும் சரி.புனித பிம்பங்களல்ல. (நம்முடைய லோக்கல் புனித பிம்பங்களை இங்கே குழப்பி கொள்ளாதீர்கள்). அன்புமணியும் சரி. டாக்டர் ராமதாசும் சரி.இருவரும் சராசரி அரசியல்வாதிகள்தான் என்று சொல்லவந்தேன்:)

ஆனால் இப்போது டெல்லி எ.ஐ.ஐ.எம்.எஸ் இயக்குநர் வேணுகோபால் என்பவருக்கும் அன்புமணி ராமதாசுக்கும் நடக்கும் பனிபோரில் ஆங்கில மீடியாக்கள் அன்பு மணியை தாக்கி வருகின்றன.மருத்துவமனை இயக்குநரின் குற்றச்சாட்டு என்னவென்றால் அன்புமணி இந்த மருத்துவமனையின் தன்னாட்சி உரிமையில் தலையிடுகிறார் என்பதாகும்.

ஆனால் அமைச்சரோ தான் தலையிட்டது இரண்டு வகைகளில்தான் என்கிறார்.ஐநூறு கோடி பணம் அரசிடம் இருந்து மருத்துவமனைக்கு பெற்றுக்கொடுத்ததும் பலகாலமாக முடியாமல் இருந்த சில பிராஜக்ட்டுகளை
முடித்ததும் தான் தன் தலையீடு என்கிறார்.

வெளியே தெரியும் பிரச்சினை என்னவென்றால் முக்கிய பதவிகளில் நான்கு பேரை இயக்குநரை கலந்தாலே சிக்காமல் அன்புமணி பணியில் அமர்த்தியது மற்றும் இடஒதுக்கீடு பிரச்சினைக்காக வேலை நிறுத்தம் செய்த டாக்டர்களுக்கு சம்பளம் கிடையாது என்று அன்புமணி சொன்னதும் ஆகும்.வேலை நிறுத்தம் செய்த டாக்டர்களுக்கு சம்பளம் தர இயக்குநர் முடிவு செய்திருந்தாராம்.அதை அமைச்சர் தடுத்துவிட்டார் என்கிறார்கள்.

ஒரு ஆதிக்க மனோபாவத்தோடு செய்யப்பட்ட இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு அமைச்சர் என்ன ஆரத்தி எடுத்து வாழ்த்திபேசுவாரா? எங்களுக்கு எல்லாம் வங்கிகளில் உருப்படியான விஷயத்திற்கு வேலைநிறுத்தம் செய்தாலே அன்றைய சம்பளம் கட்.இதற்கு பயந்து வேலைநிறுத்த நாட்களில் விடுமுறையில் போகும் ஆட்களும் உண்டு.ஆனால் இந்த புனிதபிம்பங்கள் மட்டும் வேலைநிறுததமும் செய்வார்களாம்.சம்பளமும் வாங்குவார்களாம். இதை எதிர்த்த மந்திரி கெட்டவராம்.

இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் கட்சி என்ற அடிப்படையில் ஏற்கனவே பா.ம.க மேல் வெறுப்பில் இருக்கும் ஆங்கில மீடியா (இந்த இடஒதுக்கீடு ட்ராமாவில் அருவெறுக்கத் தக்க முறையில் நடந்துகொண்டவை இந்த ஆங்கில மீடியாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது) இதுதான் சாக்கு என்று அன்புமணியை போட்டு பார்க்க முயற்சி செய்கிறது.இயக்குநர் வேணுகோபாலை சேஷன் ரேஞ்சுக்கு உயர்த்தி பில்ட் அப் கொடுக்கப்பட்டு அவரும் ராஜினாமா மிரட்டல் எல்லாம் விட்டார்.

ஆனால் அன்புமணி ஜித்தன். இயக்குநர் ராஜினாமா செய்கிறார் என்றால் செய்ய வேண்டியதுதானே.என்ன வெங்காயத்திற்கு மிரட்டல் லாபி செய்து திரிகிறார்?என்று கடுமையாக சொல்லிவிட்டார். வேணுகோபாலை எதிர்த்து ஒரு குழு மருத்துவமனைக்கு உள்ளேயே உருவாகிவிட்டது. வேணுகோபால் அப்பாயிண்மெண்ட் கொடுப்பதில் காசு பார்த்துவிட்டதாக குற்றச்சாட்டு வந்து சந்தி சிரிக்கிறது.

சரி.இப்போது நம்முடைய பிரச்சினைக்கு வருவோம்.யார் ஆட்சிக்கு வந்தாலும் காசு பார்க்கும் அதிகாரிகள் தங்கள் ஆதிக்கம் பறிபோகும்போது இந்த மாதிரி பிரச்சினையை திசை திருப்புவது வழக்கமாகிவிட்டது.(இந்த சம்பவத்தில் தன்னாட்சி உரிமையி்ல் ராமதாஸ் கைவைத்துவிட்டார் என்கிறார்). யார் செத்தால் எனக்கென்ன என்று இவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது அன்புமணி கடுமையாக கண்டித்ததும் இப்போது சம்பளத்தில் கைவைத்ததும் தான் இதற்கு காரணம் என்றாலும் அதை சமாளிக்க இந்த குற்றச்சாட்டு. வழக்கம்போல் ஆங்கில மீடியாவின் ஜால்ரா.

இந்த நாட்டை இப்போது உண்மையில் ஆள்வது யார்? ஒரு பக்கம் வியாபாரிகள் எல்லா விஷயத்திற்கும் கருத்து சொல்கிறார்கள்.அந்த பொன்மொழிகளை அரிய கருத்துக்களை போல் பத்திரிக்கைகள் பிரச்சாரம் செய்கின்றன்.இடஒதுக்கீடு விஷயத்தில் மேதாவிகளான பிரேம்ஜீ, நாராயணமூர்த்தி, பஜாஜ் ஆகியோர் கருத்துக்களை ஆங்கில மீடியா தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு ஆடியதை பார்த்திருப்பீர்கள்.இவர்கள் கருத்துக்களின் காரணமும் அதற்கான மீடியா ஆதரவின் காரணமும் வெளிப்படை.

இது அரசியல்வாதிகளுக்கு சப்பைக்கட்டு கட்டும் பதிவு அல்ல.ஆனால் அரசியல்வாதிகளை விட ஆபத்தானவர்களான வியாபாரிகளின் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் மோசமான போக்கை அலச முயலும் பதிவு.அடுத்த பாகத்தில் அரசியலில் வியாபாரிகளின் பங்கைப்பற்றி பார்ப்போம்.

Sunday, June 11, 2006

பகவான் சாயிபாபாவும் நாத்திகமும்

இந்த கட்டுரையின் முதல் பாகம் இங்கே
கட்டுடைப்பது, தகர்ப்பது என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை அப்படியே எடுத்து நான் பேசமுடியாது. ஒரு நண்பர் கூறியது போல் எய்ட்ஸ்க்கு மருந்து என்னிடம் உள்ளது என்று ஒரு ஆள் ஏமாற்றுகிறான் என்று வைத்துக் கொள்வோம் . நான் இவனிடம் மருந்து இல்லை.இவன் ஃபிராடு என்று கூறுகிறேன் .உடனே நீங்கள் அப்படி என்றால் நீ மருந்து தா என்று கூறுவது போல்தான் இந்த மாற்று என்ன என்ற கேள்வி உள்ளது. ஆனாலும் மாற்று என்ன என்ற கேள்வியை நாம் புறந்தள்ளிவிடமுடியாது என்பதையும் நான் ஏற்றுககொள்கிறேன் .

மேற்கண்ட சாயிபாபா பற்றிய கட்டுரையில் நான் நம்மை இயற்கையின் ஒரு பகுதி என்று கூறி வாழும் வகையை பற்றி பேசும் ரவிசங்கர், ஜக்கி ஆகியோரை பற்றியும் கூறிஉள்ளேன். சில நடைமறை பிரச்சினைகள் இருந்தாலும் எந்த விதமான மூடநம்பிக்கைகளையும் இவர்கள் பரப்புவதில்லை. நான் ஃபிராடை ஃபிராடு என்று நான் கூறுகிறேன். மற்ற ஆபத்தில்லாத கருத்துக்களை கூறும் சாமியார்களைப்பற்றி கோடி காண்பித்துள்ளேன். அவரவர் மெய்ஞானதேடல் என்பதைப்பற்றி நான் கூறியதை இதனுடன் இணைத்து பார்க்கவேண்டும். இதனுடன் சேர்த்துத்தான் இந்த மாற்று என்ன என்ற கேள்விக்கு பதிலை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

அபத்தங்களை சுட்டிகாட்டும் போது ஏற்படும் கடுமையான எதிர்வினைகளே நமக்கு கடுமையான மன உளைச்சல்களை ஏற்படுத்த வல்லன . இதில் மாற்று சொன்னோம் என்றால் நீ யார் சொல்வதற்கு என்ற கேள்வி முதற்கொண்டு அனைத்தும் வரும் .ஆகவே அவரவர் அவரவர் மெய்ஞானத்தேடலை செய்வதே நல்லது.ஆனால் இது (சாயிபாபா , தினகரன் பாணி) கேவலமானது என்பதை நான் கடுமையாக கூறுகிறேன்.காரண காரியங்களுடன் கூறுகிறேன் என்பது மிகவும் முக்கியம் . இதிலிருந்து முன்னெடுத்து செல்வது அவரவர் கையில். நீயாக சிந்தி என்று கூறிய கிருஷ்ணமூர்த்தி முதற்கொண்டு பல முன்னோடிகள் உள்ளனர் . கடவுளின் நண்பர்கள் ரெடிமெட் சொல்யூசன்களுடன் சுற்றுவதும் அதை விமர்சிப்பதையே தடுப்பதும் வரலாற்றில் பலகாலமாக நடைபெற்றுத்தான் வருகிறது.ஆனால் இவ்விதமான மதங்களும் கடவுளின் நண்பர்களும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் மனிதனுக்கு எந்த ஒரு தீர்வையும் கொடுக்கமுடியவில்லை .

நாத்திகம் பேசுகிறான் என்ற ஒரே காரணத்திற்காக அவன் எல்லாரையும் எல்லாவற்றையும் பற்றி அவநம்பிக்கை கொண்டவன் என்றெல்லாம் புறந்தள்ளி விடக்கூடாது. சாயிபாபா ஆகட்டும்.தினகரன் ஆகட்டும். இயற்கைக்கு ஒவ்வாத ஒரு விஷயத்தை சாதாரணமாக நடத்தி காட்டுவதாக சொல்கிறார்கள்.மக்களை நம்ப வைக்கிறார்கள்.இது மிகவும் கண்டிக்கத்தக்க போக்கு.இவர்களை மனம் புண்படும் விதம் திட்டக்கூடாது என்பது மிகமிக கண்டிக்கத்தக்க போக்கு .

நான் கடந்த கட்டுரையில் கூறிஉள்ள திருப்புகழ் கோஷ்டி உதாரணத்தை இங்கு எடுக்கிறேன்.என்னுடைய முதல் பதிவுக்கு இவ்விதமான எதிர்வினை ஒன்று வந்தது.இங்கு நம் சூழலில் இந்த வழியான விமர்சனங்கங்கள் ஒழுக்கத்துடன் இணைத்து பார்க்கப் படுகின்றன . அது மிகவும் தவறு.கடவுள் நம்பிக்கை உள்ளவன் = நல்லவன் என்றும் கடவுள் நமபிக்கை இல்லாதவன் = கெட்டவன் என்றெல்லாம் சிறுவயதில் இருந்து நாம் ஊட்டி வளர்க்கப்படுகிறோம். மனம் புண்படும் என்பதற்காக இதை விமர்சிக்காமல் விடுவதுதான் இவர்களின் பலம்.இவர்களையும் கடுமையாக விமாசிக்கலாம் என்ற விஷயமே பலபேருக்கு சில திறப்புகளை கொடுக்கும் . மாய்மாலம்(மாயமந்திரம்) செய்யும் சாமியாரை பரட்டையன் என்று திட்டலாமா? அவர் சாபம் கொடுக்கமாட்டாரா? அவரால் சாபம் கொடுக்கமுடியுமா என்பதுபோல.

ஒரு குறிப்பிட்ட வகை அரசியலை முன்னெடுக்கும் ஆட்கள் சந்திக்க வேண்டிய முதல் பிரச்சினை இதுதான்.கொச்சைப்படுத்தப்படல்.அதாவது பக்திமானாக தம்மை காட்டிக்கொள்ளும் நபருக்கு அளவிள்ளாத உரிமைகள்.

நம்பிக்கை உள்ளவருக்கு மனம் புண்படுகிறது என்றால் கணககில்லாத உணவு பொருட்கள் அபிஷேகம் என்ற பெயரில் வீண் செய்யப்படுவதை பார்த்து எங்கள் மனம் புண்படாதா?மனிதன் துன்பப்பட முற்பிறவி பாவம்தான் காரணம் என்று வெட்டிச்சாக்கு சொல்லப்பட்டு சாகவிடும் செய்கை எங்கள் மனத்தை புண்படுத்தாதா? இந்த மனம் புண்படுகிறது என்பதே ஒரு பம்மாத்து.

முக்கியமான விஷயமாக நான் முன்வைத்தது சாய்பாபாவின் மற்றும் தினகரனின் தகிடுதத்தங்கள்.இதை புரிந்துகொள்ள முதலில் நாம் இதை நம்புகிறோமா என்ற கேள்வியை போட்டுக் கொள்ளவேண்டும். அதனடிப்படையில்தான் இதை புரிந்துகொள்ளமுடியும். புட்டபர்த்திக்கு வருபவர்களிடம் நண்பர்களாக பழகி அவர்கள் பிரச்சினையை கேட்டு பின் அதை சாயிபாபாவிடம் ஒருவர் கூறுவார். பின்னர் சாயிபாபா சரியாக உங்கள் பெயரைக்கூறி கூப்பிடுவார் . இது அற்புதமாம். நான் கூறிய அந்த குறிப்பிட்ட தளத்தில் காட்டப்படும் வீடீயோ காட்சிகள் அதிர்ச்சி கொள்ள வைப்பவை . அதாவது அறிந்தே ஏமாற்றுவேலை செய்யும் நபரை மனம் புண்படாமல் விமர்சிப்பது எப்படி?

இவர்களின் அற்புதங்களும் பிரசங்கங்களும் மக்கள் மனதில் ஏற்படுத்தும் உணர்வுகள் பாஸிடிவ்வானது என்று நீங்கள் நினைத்தால் அதையும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

உடம்பு சரியில்லாத ஒருவரை வெறும் ஜெபம் செய்து காப்பாற்றிவிடலாம் என்றுக்கூறி மருத்துவமனைக்குக்கூட அழைத்து செல்லாமல் வைத்து சாகடித்துள்ள கிறிஸ்தவ குடும்ப கதைகளை நான் கேள்விப்பட்டுள்ளேன். அற்புதங்கள் செய்யும் சாயிபாபா இன்னொரு புறம் மருத்துவமனை வைத்திருப்பது எதற்கு ? அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்தலாமே?


கடைசியாக இன்று நாத்திகம் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது என்பதுதான் என் கருத்து. இன்று நாகரீக சமுதாயத்தில் மாய்மைக்கு எந்தவித மதிப்பும் இல்லை . சட்டத்திற்கு முன் மாயமந்திரமோ அற்புதமோ நிற்க முடியாது. பகுத்தறிவுதான் கோலேச்சுகிறது மதத்திலும் மதசடங்குகளிலும் நம்பிக்கை குறைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிகொண்டே வருகிறது. நீங்கள் கூறிய சமுதாய பிணைப்புகளுக்கும் பிடிப்புகளுக்கும் மதம் தான் காரணம் என்பதையும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று நினைக்கிறேன். அறிவியலின் எல்லை என்ன? மாய்மையின் எல்லை என்ன ? என்பதைப்பற்றி தெளிவாக கோடு போட்டு வாழ தெரிந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டுத்தான் உள்ளது.

(நாத்திகம் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதையும் தெளிவாக வரையறுப்பது முக்கியம்)

மாய்மையை தூக்கி பிடி்ப்பவர்கள் கூட சொந்த வாழ்க்கை என்று வரும்போது பகுத்தறிவோடு முடிவு எடுப்பதை நாம் நிறைய பார்க்கமுடிகிறது. அப்படி யானால் இன்று பொதுவாழ்வில் பக்தி என்பது

1.பொழுதுபோக்கு

2.நல்லவன் என்று தம்மை காட்டிக்கொள்ள எளிய வழி

ஆகியவை மட்டுமே என்று மிகவும் சுருங்கிப்போய்த்தான் உள்ளது.

ஆன்மீகத்தின் அர்த்தம் இங்கு கேவலப்பட்டு போய் இருக்கிறது.

(இதில் சொல்லப்பட்டது போல் அல்லாமல் ஒரு சிறுபான்மை யானவர்கள் ஆன்மிகத்தை ஆழமாக முன்னெடுத்துசெல்ல முயற்சி செய்கிறார்கள் என்பதையும் நான் ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் நாம் பெரும்பான்மையை கணக்கில் எடுத்துத்தான் எதையும் செய்யவேண்டி உள்ளது:)

related posts:

http://muthuvintamil.blogspot.com/2006/05/blog-post_07.html

http://muthuvintamil.blogspot.com/2006/05/blog-post_114671990230043082.html


2011ல் விஜயகாந்த் முதல்வர்?

நேற்றைய தமிழ்முரசு நாளிதழை பார்க்க நேர்ந்தது.அதில் கட்டம் கட்டி போடப்பட்டிருந்த ஒரு செய்தி கருத்தை கவருவதாக அமைந்திருந்தது.

*******************

முதலில் செய்தி:

கடலூரில் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த விஜயகாந்திடம் உங்கள் கட்சி சட்டசபை தேர்தலில் செலவு செய்த தொகை எவ்வளவு என்று கேட்டதற்கு முதலில் இதை அதிமுகவிடமும் திமுகவிடமும் கேளுங்கள் என்றாராம்.கடலூர் மாவட்டத்தில் தங்கள் கட்சியி்ல் இருக்கும் உட்பூசல் எல்லா கட்சியிலும் இருப்பது போலத்தான் என்று கூறியுள்ளார்.

1.ஈழத்தமிழர் பிரச்சினையில் உங்கள் நிலைப்பாடு என்ன?

2.இடஒதுக்கீடு பற்றிய உங்கள் கருத்து என்ன?

3.10 ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டது பற்றி உங்கள் கருத்து என்ன?

போன்ற கேள்விகளை கேட்ட தமிழ்முரசு(?) நிருபரிடம் இந்த கேள்விக்கு எல்லாம் பதில் கூறமுடியாது.இந்த மாதிரி கேள்விகளை எல்லாம் எங்கிட்ட கேட்காதீங்க என்றாராம்.

நீங்கள்தான் எங்களை கூப்பீட்டீர்கள்.அதனால் கேள்வி கேட்கிறோம் என்று அந்த நிருபரும் தன் கடமையை( வேறென்ன குட்டையை குழப்பறதுதான்) செவ்வனே செய்ய

"என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்.நான் கேள்வி கேட்டால், உங்களால் பதில் சொல்ல முடியாது" என்றாராம் கேப்டன்.

விஜயகாந்தின் ஆவேசத்தால் அதிர்ச்சியடைந்த நிருபர்களை பண்ருட்டி ராமச்சந்திரன் சமாதானப் படுத்தினாராம்.

*****************

நான் ஏற்கனவே சிலமுறை கூறியிருந்தபடி முக்கிய பிரச்சினைகளில் தன் கருத்து என்ன என்றே கூறாமல் கள்ள அரசியல் நடத்தி வருகிறார் விஜயகாந்த் என்பது தான் இந்த செய்தியின் சாராம்சம்.

விஜயகாந்தின் தர்மசங்கடத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. முக்கிய பிரச்சினைகளில் தன் கருத்து வெளியே தெரிந்தால் தமக்கு ஆதரவு கொடுத்து வரும் சிலர் தொடர்ந்து ஆதரவு தரமாட்டார்கள் என்று நினைக்கிறார் அவர்.

தமிளன், தமில்மொலி என்றெல்லாம் அடிக்கடி முழங்கியவர்தான் அவர். தம் மகனுக்கு பிரபாகரன்(விடுதலைப்புலி தலைவர் நினைவாக) என்று பெயர் வைத்துள்ளவர்தான் அவர்.

ஆனர்ல இதை இன்று உரத்து கூறினால் அவருக்கு சப்போர்ட் செய்துவரும் ஒரு குறிப்பிட்ட லாபி ஆதரவை வாபஸ் வாங்கலாம்.( தினமலர் வகையறாக்கள்). இதுதான் அவரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.இதனால் தான் கள்ள மெளனம் அனுசரிக்கிறார் அவர்.

ஆனால் இவ்வகையாக முக்கிய பிரச்சினைகளில் தன் கருத்தை வெளியே சொல்லாமலே அரசியல் நடத்துவது நியாயமா என்ற கேள்வி முக்கியமானது. ஓட்டு போடும் மக்களுக்கு சில முக்கிய விஷயங்களி்ல் இவர் கருத்து என்ன என்று தெரிவிப்பது மிகவும் அவசியம். அரசியல் தெளிவு உள்ள ஒரு சமுதாயத்தில் இப்படி எல்லாம் இவர் பம்மாத்து செய்யமுடியாது.(தமிழகத்தில செய்யலாம். டிவி பெட்டிக்கும் சைக்கிளுக்கும் ஓட்டு போடறவன்தானே தமிழன்).

இந்த கள்ள மெளன டெக்னிக்கை இவருக்கு கூறியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் மிக புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும். இங்கிருந்து விஜயகாந்தை முன்னிலைப் படுத்தி வரும் புனித பிம்பங்களும் சரி. விஜயகாந்தும் சரி.மிகவும் ஜாக்கிரதையாக தங்கள் காய்களை நகர்த்துவார்கள்.

இவரை முன்னிலைப்படுத்தி வரும் ஆட்கள் தங்களின் எண்ணத்திற்கேற்ப இவரை வளைக்க முயற்சிப்பார்கள். அவர்களின் வலையில் விஜயகாந்த் விழுந்துவிட்டார் என்று வெளியே தெரிந்தால் கண்டிப்பாக பெரும்பான்மை மக்களின் ஆதரவை விஜயகாந்த் இழப்பது உறுதி.

ஒருவேளை இவர்களை அனுசரித்து விஜயகாந்த் ஆட்சியை பிடித்தவுடன் விடுதலைபுலிகளை ஆதரித்தோ, தமி்ழ், தமிழ்மொழி என்று பேச ஆரம்பித்தால் புனிதபிம்பங்களின் ஆதரவை இழந்துவிடுவார். அவர் அப்படி பேசக் கூடியவர் தான் என்பது என் சொந்த கருத்து.ஆனால் ஆட்சியை பிடித்தவுடன் புனித பிம்பங்களின் ஆதரவு அவருக்கு தேவைஇல்லை என்றும் ஆகிவிடலாம். ஆனால் ஆட்சியை பிடிப்பதுவரை விஜயகாந்த் கள்ளமெளனம் அனுசரித்து சமாளிக்கமுடியுமா என்பது முக்கிய கேள்வி.

முதலில் இப்போது வர இருக்கும் உள்ளாட்சி தேர்தல்கள் அவருக்கு ஒரு சவால். விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலில் வாங்கியுள்ள ஓட்டுக்கள், சட்டமன்ற தேர்தலில் அவர் வாங்கிய ஓட்டுக்களினால் கவரப்பட்டு அவரை ஆதரிக்க தயாராக இருப்போரின ஓட்டுக்கள்,இவை இரண்டும் சேர்ந்தால் ஓரளவு சீட்டுக்களை அவர் வெல்லமுடியும் என்று தோன்றுகிறது.

இங்கு ஒரு சிக்கல் உள்ளது. விஜயகாந்த் புதியவர்தான்.ஆனால் அவர் கட்சியில் உள்ள அனைவரும் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல.பல கட்சிகளிலும் இருந்து அரசியல் எதிர்காலத்தை தேடி அவர் கட்சியில் இணைந்தவர்கள்தான். இவர்கள் அனைவரும் சுத்தமானவர்கள் என்று கூறமுடியாது.உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் ஜெயித்துவந்தால் ஊழல் செய்யாமல் இருக்கச்செய்ய விஜயகாந்தால் முடியுமா? அப்படி முடியாத பட்சத்தில் பொதுமக்கள் மத்தியில் இவர் இமேஜ் பாதிக்கப்படலாம்.
அதிமுக எம்.ஜீ.ஆர் காலத்தில் இருந்தே பொதுவாக உள்ளாட்சி அமைப்புகளை முடக்கி போடுவதற்கு காரணம் இதுதான் என்பார்கள்.சில அதிகாரங்களை கையில் வைத்துக்கொண்டு இந்த தலைவர்கள் செய்யும் சிறுசிறு ஊழல்கள் பொதுமக்கள் மத்தியில் கட்சியின் பெயரை கெடுக்கும்.ஆனால் திமுக இத்தேர்தல்களை நடத்துவதும் உள்ளாட்சிகளுக்கு அதிகாரத்தை கொடுப்பதும் பல வளர்ச்சி பணிகள் நடக்க துணை புரிந்தாலும் கட்சி ஆட்களும் தலைவர்களும் பணத்தை சுருட்டுவதும் நடக்கும்.அது பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கு கெட்ட பெயரை பெற்றுத்தரும்.
அதிகாரத்தில் இருக்கும்போது ஒரு தலைவர் எப்படி நடந்துகொள்கிறார் அல்லது கட்சி எப்படி நடந்துகொள்கிறது என்பது ஒரு முக்கிய அம்சம்.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை தொடர்ந்து விஜயகாந்தின் செயல்பாடுகளை பொருத்தே 2011ல் தேர்தலில் விஜயகாந்த கனவு பலிக்குமா என்று தெரியவரும்.மற்றபடி ஒரு தலைவராக விஜயகாந்த் முக்கிய பிரச்சினைகளில் கள்ள மெளனம் அனுஷ்டிப்பது நான் முன்னிலைப் படுத்தும் அரசியலின் பிரகாரம் தவறு என்பேன் நான்.

Thursday, June 08, 2006

இளவஞ்சிக்கு எதிராக - 1

இளவஞ்சிக்கு ஆதரவாக ஒரு பதிவு போட்டால் பின்பு எதிராக ஒரு பதிவு போட்டு நடுநிலைமையை நிலை நாட்டுவதுதானே தமிழ் மரபு.அந்த அடிப்படையில் இந்த பதிவு. என்னுடைய நட்சத்திர வார இறுதிப்பதிவில் இளவஞ்சி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்.அதற்கு விளக்கமாக பதில் தனிப்பதிவாக பிறகு சொல்கிறேன் என் கூறியிருந்தேன்.

சமீப காலமாக வலைப்பதிவுகளில் அதிக நேரம் செலவிட முடியாததாலும் வலைபதிவுகளில் புழங்குவதை குறைத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாலும் பதில்கூற தாமதம் ஆகிவிட்டது.

சரி.விஷயத்திற்கு வருவோம். சில குட்டுக்கள், இடித்துரைப்புகள் அடங்கிய அந்த பின்னூட்டத்தில் இளவஞ்சி கூறிய மிக முக்கியமான கருத்து என்று நான் நினைக்கும் பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.

// நம்பிக்கைகளை கட்டுடைப்பவனும் தகர்ப்பவனும் ஒன்றல்ல! தகர்ப்பவனுக்கு மற்றவர்களுடைய நம்பிக்கைகளை பற்றி எந்தவித கவலைகளுமில்லை! தனது கருத்தினை திணித்தால் போதும்! கட்டுடைப்பவன் அப்படியல்ல! மற்றவர் ஒரு கருத்தினை தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என தன் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு நம்புகிறானெனில் முதலில் அவர்களுடைய நம்பிக்கைகளின் மீதான தவறான புரிதலை அவர்களுக்கு விளக்கவேண்டும்! அந்த தவறான நம்பிக்கைகளில் இருந்து அவர்களை அவர்களது சுயமும் இந்த மாறுதலின் மீதான நம்பிக்கைகளும் சிதைக்காவண்ணம் வெளிக்கொணர வேண்டும்! கட்டுடைக்கும் வேலையைச் செய்பவனுக்கு கட்டமைக்கும் பொறுப்பும் உண்டு! நீ செய்வது எல்லாம் அபத்தம் என அடித்து நிரூபிப்பது மட்டுமே அவனது வேலையல்ல! அவர்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பின் நம் நல்ல நம்பிக்கைகளை அவர்களுடையதாக மாற்றும் பொறுப்பையும் செய்யவேண்டுமல்லவா!//

//சாயிபாபாவின் மீதான் நம்பிக்கைகளை "பரட்டையன்" என தகர்த்தெறிய முயலும் உங்கள் முயற்சியின் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை! அவரை திட்டுவதால் மட்டுமே தீர்வு கிடைத்துவிடுமா? அவர் பொய்யராக இருப்பினும் அவர்மீது வைத்த நம்பிக்கையின் மூலம் பலன் பெற்றவர்களை மாற்ற இந்த கட்டுடைப்பு போதுமா? மனரீதியாக ஆதவரற்றவர்களுக்கு ஒரு வேடதாரி தினகரனின் மூலம் "இயேசு உங்கள் துயரங்களை ஏற்றுக்கொள்வார்" என மனமுருகிப் பிராத்திப்பாதாக சொல்லும்போது அதனை உண்மையென நம்பி அதன் மூலம் மன உறுதியை பெறுபவர்களுக்கு "தினகரன் ஒரு பொய்யர்" என கட்டுடைப்பதின் மூலம் அவர்களுக்கு இந்த போலி பிரசங்கங்களின் மூலம் கிடைக்கும் மனநிம்மதிக்கு என்ன மாற்று வைத்திருக்கிறீர்கள்? //

//என்னைக்கேட்டால் நாத்திகம் தோல்வியடைந்ததே இங்குதான் என்பேன்! மதநம்பிக்கைகளின் மூலம் ஒரு வித பலனை பெற்றுவந்தவர்களுக்கு அந்த நம்பிக்கைகள் அத்தனையும் மூடநம்பிக்கைகள் என்பதோடு நின்றுவிட்டது நாத்திகம்! அதன்பிறகு வாழ்க்கைக்கும் உறவுகளுக்கும் உள்ள பிடிப்புகளுக்கும் பிணைப்புகளுக்கும் ஒரு மாற்று சொல்லாமல் நிற்க... மக்கள் "எத்தை தின்றால் பித்தம் தெளியுமெனெ" ஆசாமிகள் பின்னே இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறோம்!//

இனி என் கருத்துக்கள்:

எந்நேரமும் திருப்புகழையும் பகவத்கீதையும் (குரானையும் பைபிளையும் இங்கு சேர்த்துக் கொள்ளுங்கள்) பற்றி மட்டுமே பேசி பெரிய பக்திமானாக வேடம் கட்டுபவர்களில் பலர் உள்மனதில் எவ்வளவு அழுக்கானவர்கள் என்பதற்கு ஏகப்பட்ட உதாரணங்களை என்னால் காட்டமுடியும்.ஆனால் இவர்களை இவர்கள் மற்றவர்களை விமர்சிக்கும பாணியில் கூட நாம் விமர்சித்துவிடமுடியாது. காரணம் என்ன தெரியுமா?கடவுள் நம்பிக்கையை, சமய நம்பிக்கையை உரக்க அறிவிப்பவன் நல்லவன் என்றும் சமய நம்பிக்கை இல்லாத கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதன் கொடியவன் என்றும் நம் பாமர மனதில் பதிந்து போனதுதான்.

சாய்பாபாவை பரட்டையன் என்று கூறியதை சொல்லி உள்ளீர்கள். மிகவும் லேசான தாக்குதல் அது. மிகவும் தெளிவாக அதற்கான காரணங்களை அந்த பதிவில் கூறி உள்ளேன். பலகோடி பேர் கூடி இருக்கும் ஒரு மேடையில் தன்னிடம் ஏதோ மந்திர சக்தி உள்ளதுபோல் நடித்து அத்தனை பேரையும் ஒட்டுமொத்தமாக முட்டாள் ஆக்கும் செயலை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இது நொண்டிகள் நடக்கிறார்கள், ஊமைகள் பேசுகிறார்கள் என்ற கோஷம் போடும் வெளிநாட்டு கூலிப் பட்டாளத்திற்கும் பொருந்தும்.

கண்டிப்பாக மதத்தால் ஒருசில நன்மைகள் இருப்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். அதே சமயம் மதங்களுக்கு இடையே ஆன சண்டை களினால்தான் இந்த பூமி நிறைய உயிர்பலிகளை கண்டுள்ளது என்பது கவனிக்கவேண்டிய ஒரு தகவல்.

ஆனால் மெய்ஞானம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதை தேடிபோனோம் என்றால் நமக்கு தெரிய வரும் பதில்கள் வியப்பை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் மெய்ஞானத்தேடல் மாறுபடும்.

இந்த பத்திகளில் உங்களுக்கான பதில் ஒளிந்து கொண்டுள்ளது. விளக்கமாக இரண்டாம் பாகத்தில் தருகிறேன்.

Sunday, June 04, 2006

பங்கு வர்த்தகமும் கோயிஞ்சாமிகளும்

சில நாட்களுக்கு முன் இந்திய பங்கு சந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது. நிதி அமைச்சர் சிதம்பரம் தலையிட்டு கவலைப்பட ஒன்றுமில்லை என்று அறிக்கை விட்டார்.ஒவ்வொரு முறை பங்கு சந்தை விழும்போதும் சிதம்பரம் இவ்வாறு அறிக்கை விடுவது வாடிக்கையாகிவிட்டது.ஒரு நிதி அமைச்சர் இவ்வாறு தலையிட்டு கருத்து கூறுவது சரியா என்பது ஒரு புறமிருக்க கம்யூனிஸ்டு தலைவர்கள் விடும் அறிக்கைகளால்தான் பங்கு வர்த்தகம் சரிவை சந்திப்பதாக ஒரு சாரார் கூறிவருகின்றனர்.


வெளியிலிருந்து பார்க்கும் கோயிஞ்சாமியாக எனக்கு தோன்றும் சில சந்தேகங்களை வைப்பதுதான் என் நோக்கம். பங்கு குறியீட்டு எண் வரலாறு காணாத அளவு ஏறிக்கொண்டே சென்றபோது பத்தாயிரம் எல்லாம் கம்மி என்றும் பதினாறாயிரம் வரை இந்த வருடமே ஏறும் என்றெல்லாம் பல வல்லுனர்களும் கருத்துக்கூறி வந்தனர்.இந்திய பொருளாதாரம் அந்த அளவு வலிமை வாய்ந்தது என்றெல்லாம் பல ஆதாரங்களை அள்ளிவிட்டு இவர்கள் கருத்துக்கூறி வந்தனர்.

கடந்த சில வாரங்களாக பங்குகள் சரிய ஆரம்பித்தவுடன் இவர்கள் கூறுவது என்னவெனில் மும்பை சென்செக்சின் உண்மையாக மதிப்பு 7800 - 8000 புள்ளிகள்தான் என்றும் இப்போது இருக்கும் 10000+ புள்ளிகள் நிலையே அதிகம் என்கிறார்கள். அரசியல் வாதிகள் கணக்காக பொருளாதார மேதைகளும் உளறிகொட்டுவதை பார்க்க மிக காமெடியாக உள்ளது.

பங்கு மார்க்கெட் ஐந்தாயிரம் புள்ளிகளை தாண்டுமபோதே ரீடெய்ல் இன்வஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் நம்மை போன்ற கோவிஞ்சாமிகளில் பலர் பங்குகளை விற்றுவிட்டார்கள்.பிறகு மார்க்கெட் நன்றாக ஏறியபின் உள்ளே நுழைந்த கோவிஞ்சாமிகள் பலர் கையை சுட்டுகொள்வது எதிர்ப்பார்க்கக்கூடியதே.

இப்போது கோயிஞ் சாமிகளான நாம் எந்த நிலையை எடுப்பது? சிதம்பரம் சொல்கிறார் என்று பங்குகள் வாங்குவதா ?

நாக்கில் நரம்பில்லாமல் பேசும் இந்த பொருளாதார மேதைகளை நம்பி இவர்கள் அழும்போது அழுவதும் இவர்கள் சிரிக்கும்போது சிரிப்பதும் நமக்கு தேவையா?

இன்னொரு புறம் வெளிநாட்டு பணம் ஏகப்பட்டது இந்தியாவில் வந்து குவிந்து இதனால் செயற்கையாக ஏற்றப்பட்டதுதான் பங்கு வர்த்தகம் என்ற கருத்தும் நிலவுகிறது.அதுவும் உண்மை என்றுதான் தோன்றுகிறது. கடந்த சில வாரங்களில் மிகப்பெரிய தொகையை இந்த வெளிநாட்டு வியாபாரிகள் வெளியே எடுத்துள்ளார்கள். இதற்கே பங்கு மார்க்கெட் ரணகளமாகி உள்ளது.

இந்த அழகில் பென்சன் நிதியை பங்கு மார்கெட்டில் முதலீடு செய்ய
{இப்போதைக்கு ஐந்து சதவீதத்தை மட்டும்} அரசாங்கம் நினைப்பதாகவும் அதற்கு கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அரசாங்கம் அலுத்துக்கொள்கிறது.வழக்கம் போல் ஆங்கில மீடியாக்கள் ரொம்ப ஃபீல் செய்கின்றன.(இந்தியாவில் உள்ள ஆங்கில மீடியாக்களை போல் அயோக்கியர்கள் யாரும் இல்லை என்பது என் சொந்த கருத்து}.

வயதான காலத்தில் நிம்மதியாக வாழ்வது என் ஒரே அடி்ப்படையில்தான் பென்சன் முதலான சலுகைகளை நம்பி சம்பளம் குறைவு என்றாலும் அரசாங்க வேலையில் சேர்கிறார்கள். இந்த பென்சன் பணத்தையும் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்து யாரோ சாப்பிட்டுவிட்டு சென்றால் அது யாருக்கு லாபம்?எத்தனையோ அரசாங்க பாண்டுகள், செக்யூரிட்டுக்கள் ஆகியவை பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கின்றன. இதனால்தான் கம்யூனிஸ்டுகள் இதை எதிர்க்கிறார்கள்.அவர்கள் இருப்பும் நாட்டிற்கு அவசியம்தான் என்று தோன்றுகிறது.

இந்த அழகில் கேபிடல் அக்கவுண்ட் கன்பர்டபிளிட்டி என்று நமது ரூபாயை எங்கு வேண்டுமானாலும் மாற்றக்கூடிய அளவில் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிதம்பரம் அண்ட் கம்பெனி மன்னாரு அண்ட் கம்பெனி கணக்காக அறிக்கை கொடுக்கிறது.நல்லவேளை இதை ஏற்கனவே பல பொருளாதார நிபுணர்கள் எதிர்த்து உள்ளனர்.

பணவீக்கவிகிதம் என்று கூறி அரசாங்கம் வாரவாரம் ஒரு அறிக்கை வெளியிடுகிறது.இதன் அடிப்படையில் பல பொருளாதார முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அந்த மதிப்பீட்டையே குறைகூறியும் அரசாங்கம் அதில் தகிடுதத்தம் செய்கிறது என்று கூறியும் ஒரு கட்டுரையை நான் படித்தேன்.என்ன நடக்கிறது இந்த நாட்டில்?

கோவிஞ்சாமிகளை காப்பாற்றுவது யார்?