Sunday, June 04, 2006

பங்கு வர்த்தகமும் கோயிஞ்சாமிகளும்

சில நாட்களுக்கு முன் இந்திய பங்கு சந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது. நிதி அமைச்சர் சிதம்பரம் தலையிட்டு கவலைப்பட ஒன்றுமில்லை என்று அறிக்கை விட்டார்.ஒவ்வொரு முறை பங்கு சந்தை விழும்போதும் சிதம்பரம் இவ்வாறு அறிக்கை விடுவது வாடிக்கையாகிவிட்டது.ஒரு நிதி அமைச்சர் இவ்வாறு தலையிட்டு கருத்து கூறுவது சரியா என்பது ஒரு புறமிருக்க கம்யூனிஸ்டு தலைவர்கள் விடும் அறிக்கைகளால்தான் பங்கு வர்த்தகம் சரிவை சந்திப்பதாக ஒரு சாரார் கூறிவருகின்றனர்.


வெளியிலிருந்து பார்க்கும் கோயிஞ்சாமியாக எனக்கு தோன்றும் சில சந்தேகங்களை வைப்பதுதான் என் நோக்கம். பங்கு குறியீட்டு எண் வரலாறு காணாத அளவு ஏறிக்கொண்டே சென்றபோது பத்தாயிரம் எல்லாம் கம்மி என்றும் பதினாறாயிரம் வரை இந்த வருடமே ஏறும் என்றெல்லாம் பல வல்லுனர்களும் கருத்துக்கூறி வந்தனர்.இந்திய பொருளாதாரம் அந்த அளவு வலிமை வாய்ந்தது என்றெல்லாம் பல ஆதாரங்களை அள்ளிவிட்டு இவர்கள் கருத்துக்கூறி வந்தனர்.

கடந்த சில வாரங்களாக பங்குகள் சரிய ஆரம்பித்தவுடன் இவர்கள் கூறுவது என்னவெனில் மும்பை சென்செக்சின் உண்மையாக மதிப்பு 7800 - 8000 புள்ளிகள்தான் என்றும் இப்போது இருக்கும் 10000+ புள்ளிகள் நிலையே அதிகம் என்கிறார்கள். அரசியல் வாதிகள் கணக்காக பொருளாதார மேதைகளும் உளறிகொட்டுவதை பார்க்க மிக காமெடியாக உள்ளது.

பங்கு மார்க்கெட் ஐந்தாயிரம் புள்ளிகளை தாண்டுமபோதே ரீடெய்ல் இன்வஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் நம்மை போன்ற கோவிஞ்சாமிகளில் பலர் பங்குகளை விற்றுவிட்டார்கள்.பிறகு மார்க்கெட் நன்றாக ஏறியபின் உள்ளே நுழைந்த கோவிஞ்சாமிகள் பலர் கையை சுட்டுகொள்வது எதிர்ப்பார்க்கக்கூடியதே.

இப்போது கோயிஞ் சாமிகளான நாம் எந்த நிலையை எடுப்பது? சிதம்பரம் சொல்கிறார் என்று பங்குகள் வாங்குவதா ?

நாக்கில் நரம்பில்லாமல் பேசும் இந்த பொருளாதார மேதைகளை நம்பி இவர்கள் அழும்போது அழுவதும் இவர்கள் சிரிக்கும்போது சிரிப்பதும் நமக்கு தேவையா?

இன்னொரு புறம் வெளிநாட்டு பணம் ஏகப்பட்டது இந்தியாவில் வந்து குவிந்து இதனால் செயற்கையாக ஏற்றப்பட்டதுதான் பங்கு வர்த்தகம் என்ற கருத்தும் நிலவுகிறது.அதுவும் உண்மை என்றுதான் தோன்றுகிறது. கடந்த சில வாரங்களில் மிகப்பெரிய தொகையை இந்த வெளிநாட்டு வியாபாரிகள் வெளியே எடுத்துள்ளார்கள். இதற்கே பங்கு மார்க்கெட் ரணகளமாகி உள்ளது.

இந்த அழகில் பென்சன் நிதியை பங்கு மார்கெட்டில் முதலீடு செய்ய
{இப்போதைக்கு ஐந்து சதவீதத்தை மட்டும்} அரசாங்கம் நினைப்பதாகவும் அதற்கு கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அரசாங்கம் அலுத்துக்கொள்கிறது.வழக்கம் போல் ஆங்கில மீடியாக்கள் ரொம்ப ஃபீல் செய்கின்றன.(இந்தியாவில் உள்ள ஆங்கில மீடியாக்களை போல் அயோக்கியர்கள் யாரும் இல்லை என்பது என் சொந்த கருத்து}.

வயதான காலத்தில் நிம்மதியாக வாழ்வது என் ஒரே அடி்ப்படையில்தான் பென்சன் முதலான சலுகைகளை நம்பி சம்பளம் குறைவு என்றாலும் அரசாங்க வேலையில் சேர்கிறார்கள். இந்த பென்சன் பணத்தையும் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்து யாரோ சாப்பிட்டுவிட்டு சென்றால் அது யாருக்கு லாபம்?எத்தனையோ அரசாங்க பாண்டுகள், செக்யூரிட்டுக்கள் ஆகியவை பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கின்றன. இதனால்தான் கம்யூனிஸ்டுகள் இதை எதிர்க்கிறார்கள்.அவர்கள் இருப்பும் நாட்டிற்கு அவசியம்தான் என்று தோன்றுகிறது.

இந்த அழகில் கேபிடல் அக்கவுண்ட் கன்பர்டபிளிட்டி என்று நமது ரூபாயை எங்கு வேண்டுமானாலும் மாற்றக்கூடிய அளவில் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிதம்பரம் அண்ட் கம்பெனி மன்னாரு அண்ட் கம்பெனி கணக்காக அறிக்கை கொடுக்கிறது.நல்லவேளை இதை ஏற்கனவே பல பொருளாதார நிபுணர்கள் எதிர்த்து உள்ளனர்.

பணவீக்கவிகிதம் என்று கூறி அரசாங்கம் வாரவாரம் ஒரு அறிக்கை வெளியிடுகிறது.இதன் அடிப்படையில் பல பொருளாதார முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அந்த மதிப்பீட்டையே குறைகூறியும் அரசாங்கம் அதில் தகிடுதத்தம் செய்கிறது என்று கூறியும் ஒரு கட்டுரையை நான் படித்தேன்.என்ன நடக்கிறது இந்த நாட்டில்?

கோவிஞ்சாமிகளை காப்பாற்றுவது யார்?

30 comments:

மகேஸ் said...

உண்மைதான், மும்பை பங்குச் சந்தையின் உண்மையான மதிப்பு 7500 புள்ளிகள் தான். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தயவால் 11000 புள்ளிகளைத் தாண்டிப் பாய்ந்தது. செயற்கையான விலையேற்றம் நீண்ட நாட்கள் நிலைக்க முடியாது. இப்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தை சந்தையில் இருந்து வெளியே எடுக்காவிட்டாலும், பல நிறுவனங்களின் காலாண்டு, அரையாண்டு அறிக்கைகள் வெளியிடப்படும் போது பங்குகளின் விலைக்கு ஏற்ற வர்த்தகத்தை(லாபத்தை) அவர்களால் காண்பிக்க முடியாது. அப்போது பங்குகள் விலைகள் கட்டாயம் சரியும்.

இந்த வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டு வெளியே எடுக்கப் படுவதினால் என்னைப் போன்றவர்களுக்கு மிகுந்த லாபம். ஆமாம் இந்தியப் பணமாற்று விகிதம் மிகுந்த சரிவைச் சந்தித்துள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு பிரிட்டிஷ் பவுண்டு சராசரியாக 78 ரூபாய். இன்று சுமார் 84.5 முதல் 86 ரூபாய்வரை தினமும் ஊசலாடுகிறது. பணத்தை இந்தியாவிற்கு அனுப்ப இதுவே சரியான தருணம். எனவே பங்குச் சந்தை சரிவை நான் கொண்டாடுகிறேன். மேலும் சந்தை சரிவதை நான் எதிர்பார்க்கிறேன்.

மஞ்சூர் ராசா said...

உங்களின் ஆற்றாமையும், அதில் பொதிந்துள்ள கருத்தும் உண்மையில் மிக முக்கியமாக தற்போதைய நிலையில் எடுத்துக்கொள்ளவேண்டிய கருத்தாகும். வர வர் சிதம்பரத்தின் பேச்சில் ஏகப்பட்ட முரண்கள் எதிரொலிக்கின்றன. தமிழ்நாட்டில் இலவச அரிசி, இலவச தொலைகாட்சி பெட்டி இவற்றைப் பற்றி மூச்சுவிடாமல் இருப்பது ஒரு நாட்டின் நிதியமைச்சருக்கு அழகா என்று தெரியவில்லை.

ம்ம்ம் என்னமோ நடக்குது. கோயிஞ்சாமிகளும் தலையாட்டிக்கொண்டும் பாத்துகிட்டு இருக்காங்க....

பரஞ்சோதி said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க.

கடந்த ஆட்சியில் கூட செயற்கையாக பங்கு வர்த்தக புள்ளிகளை உயர்த்திட்டாங்க, தேர்தலுக்காக செய்த வித்தை என்று இதே காங்கிரஸ்க்காரர்கள் சொன்னாங்க தானே.

பங்கு வர்த்தக புள்ளிகள் உயர உயர, சாதனை புள்ளிகள், சாதனை புள்ளிகள் என்று சொல்ல, சொல்ல அடிவயிறு கலங்கியது உண்மை தான், எப்போ வெடிக்குமோன்னு.

நான் இன்னைக்கு வரை வேடிக்கை பார்க்கும் கோயிந்தசாமியாகவே இருக்கிறேன், அதனால் நான் இன்னும் போயிந்தேசாமியாகல :)

நாகை சிவா said...

ஆமாங்க முத்து, இவங்க அடிக்குற கூத்து கண் கொண்டு காண முடியலை. தலையில் தூக்கி வைத்து ஆடுனாங்க, இப்ப தொபக்கடினு கீழ போட்டுடானுங்க.
என்னை பொறுத்தவரை பங்கு வர்த்தகம் நிதானமாக 100 200 புள்ளிகளாக வலுவாக ஏறினால் தான் சரியாக இருக்கும்.

Murthi said...

பங்குச் சந்தை குறியீட்டு எண் சரிந்திருப்பது ஒரு ஆரோக்கியமான விசயமே. பங்குகளை முன்பு குறைந்த விலைக்கு வாங்கியவர்கள் தற்போது லாபத்திற்கு விற்க முற்படும்பொழுது விலை சரிவு ஏற்படுகிறது.தேவையைவிட அதிகமாக பொருட்கள் சந்தைக்கு வந்தால் விலை குறையத்தான் செய்யும்.இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.இது மறுபடியும் உயரத்தான் போகிறது. இது "correction" தான்.

இதே போன்ற நிகழ்வு கடந்த வருடம் ஜனவரி மற்றும் செப்டம்பரில் நிகழ்ந்தது.
FII களுக்கு இந்தியாவைவிட நல்ல முதலீட்டு சந்தை எங்கு கிடைக்கும்?

Anonymous said...

1. PF நிதிக்கான வட்டியை 9% கீழே குறைக்ககூடாது என்று கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்கள்.

2. PF நிதியை பங்குசந்தையில் முதலீடு செய்வதையும் கம்யூனிஸ்டுகள் எதிர்க்கிறார்கள்.

அப்போ, எப்படித்தான் 9% வட்டி கொடுப்பதாம்?

இடதுசாரிகளே இதற்கு ஒரு வழி சொன்னா நல்லா இருக்கும்.

சதயம் said...

பங்கு வர்த்தகம் பற்றிய மற்றொரு பதிவு கண்டு மகிழ்ச்சி. நிறைய நண்பர்கள் பொருளாதாரம் மற்றும் பங்கு வனிகம் பற்றி இங்கு விவாதிக்க வேண்டுமென எண்ணுகிறேன்.நம்மில் பலர் பங்குவர்த்தகம் தொடர்பான சரியான தகவல் இல்லாமையால்தான் பங்கு வர்த்தகத்தை ஒரு சூதாட்டமாய் நினைத்து எட்ட நிற்கிறோம்.

இந்த மனப்பான்மையால்தான் பங்குச் சந்தையில் உள்நாட்டு முதலீடுகள் அதிகரிக்கவில்லை என்பது என் கருத்து. இதில் நிதியமைச்சரின் பங்கினை பொத்தாம் பொதுவாய் குற்றம் சாட்டுவது அத்தனை ஏற்புடையதல்ல, அவர் சில சமயங்களில் அரசியல்வாதியாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். பெரும்பாலும் அவருடைய செயல்பாடுகள் திருப்திகரமாய்த்தான் உள்ளது.

மற்றபடி நீங்கள் பயப்படும் அளவுக்கு பங்குச் சந்தை 7000-8000 எல்லாம் தொடுவதற்கான வாய்புகள் குறைவே...தற்போதைய சந்தையின் போக்கை நிர்ணயிப்பவர்கள்...Technical Analysys...சொல்வதை கேட்பவர்களாகவே இருக்கின்றனர்.

Fundamental Analysys படி நமது பங்குகளும் குறியீடுகளும் திருப்திகரமாகவே இருக்கின்றன.இதைத்தான் நிதியமைச்சரும் சொல்கிறார்.

தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன்..என்கிற பழமொழியை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்.அதுதான் இப்போதைய சந்தையின் நிலவரம்...Investor, Trader, Speculator...இந்த மூவரும் அடிப்படையில் வெவ்வேறு வகையினர், இப்போது சந்தையில் மூன்றாவது வகையினர்தான் கோலோச்சி வருகின்றனர். விரைவில் இந்த நிலை சீரடையும் என்றே எண்ணுகிறேன்.

நிறைவாக சந்தை Correction க்குப் பிறகு முன்னேற்றப் பாதையில் செல்ல வாய்ப்புகள் அதிகம், தேவையில்லாத பயத்தையும், பீதியையும் துடைத்தெறியுங்கள்.

முத்து(தமிழினி) said...

அனானி,

1.8.5 சதவீதம்தான் இப்போது பி.எஃப்பிற்கு தரப்படுகிறது.

2. பங்குசந்தையில் மட்டும்தான் இந்த 8.5 மேல் சம்பாதிக்கமுடியுமா?வங்கிகள் எப்படி சம்பாதிக்கின்றன.எல்.ஐ.சி எப்படி சம்பாதிக்கிறது?

முத்து(தமிழினி) said...

மகேஸ்,

இப்போதே பங்குகளின் விலைகேற்ப அனைத்து கம்பெனிகளின் வர்த்தகங்களும் இல்லை என்பது உண்மை.

ஆனால் இந்திய ரூயாயின் வீழ்ச்சியை நீங்கள் கொண்டாடுவது எனக்கு ஒரு மாதிரியாக உள்ளது.

முத்து(தமிழினி) said...

மஞ்சூர் ராசா,

தேர்தல் அரசியலின் கேலிகூத்தினால் சிதம்பரம் டிவிப்பற்றி வாயை திறக்காமல் இருந்திருக்கலாம்.
(ஜெ. செய்தால் இரக்கம்.கருணாநிதி செய்தால் விரயம்)

மற்றபடி 2 ரூபாய் அரிசி நிஜமாகவே வறுமைகோட்டிற்கு கீழிறிருப்பவர்களுக்கு கொடுத்தால் நீங்கள் வேண்டாம் என்பீர்களா?

முத்து(தமிழினி) said...

பரஞ்சோதி,

நன்றி...

நன்றி நாகை சிவா,

நீங்கள் சொல்லுவது சரி. இது தீடிரென்று ஏறுவதும் இறங்குவதும் அடிப்படைகளினால் இல்லை. திருட்டு பசங்களின் மனிபுலேசன்தான் காரணம்.

முத்து(தமிழினி) said...

மூர்த்தி மற்றும் சதயம் இருவரும் ரொம்ப பாஸிடிவ்வாக இருப்பது மகிழ்ச்சி.நீங்கள் சொல்லுவது போல் இது வெறும் கரெக்சனாக இருந்தால் நல்லதுதான்.

வவ்வால் said...

வணக்கம் தமிழினி!

ப.சி என்ன செய்வார் இருக்கும் இடம் வகிக்கும் பதவி அப்படி! அன்னிய முதலீடு தான் வில்லங்கம் என்பது கத்துகுட்டி பொருளாதார நிபுணரும் அறிவார்களே,நாம் தானே வலிய போய் அழைக்கிறோம். இதெல்லாம் பேசி வைத்துக்கொண்டு செய்வது,காங் ஆட்சி பிடித்ததும் பங்கு வர்த்தகம் சரிந்ததும் அப்போது.பா.ஜ.க ஊளையிட்டதே அவர்களை விட காங்க் மீது முதலீட்டார்களுக்கு நம்பிகை குறைவு என்று அதை சரி கட்ட அதிக அன்னிய முதலீடு கொண்டு வர திரை மறைவில் ப.சி தான் செயல் பட்டார் வந்த முதலீடு வந்த வழியே போய்விட்டது.இது வரை பங்கு வர்த்தகத்தில் இருந்தது வளர்ச்சி அல்ல வீக்கம் ,இப்போது பலூன் காற்று இரங்கி விட்டது :-))

மனதின் ஓசை said...

மிகவும் தேவையான ஒரு நல்ல பதிவு...உண்மை நிலையை தெரிந்து கொள்ள இந்த பதிவும் பின்னூட்டமும் பயன்படுமென நினைக்கிறேன்..

//நான் இன்னைக்கு வரை வேடிக்கை பார்க்கும் கோயிந்தசாமியாகவே இருக்கிறேன், அதனால் நான் இன்னும் போயிந்தேசாமியாகல :) //
//நம்மில் பலர் பங்குவர்த்தகம் தொடர்பான சரியான தகவல் இல்லாமையால்தான் பங்கு வர்த்தகத்தை ஒரு சூதாட்டமாய் நினைத்து எட்ட நிற்கிறோம்//

நானும் இந்த வகைதான்.

வவ்வால் said...

//பங்குசந்தையில் மட்டும்தான் இந்த 8.5 மேல் சம்பாதிக்கமுடியுமா?வங்கிகள் எப்படி சம்பாதிக்கின்றன.எல்.ஐ.சி எப்படி சம்பாதிக்கிறது? //

எல்.ஐ.சி, வங்கிகள் எல்லாம் தங்கள் முதலீடை அரசுக்கும் ,மற்றவர்களுக்கும் அதிக வட்டி விகிதத்தில் கடனாக அளித்தே வருவாய் ஈட்டுகிறது என்பது தாங்கள் அறியாதது அல்லவே! நிதி நிறுவனங்கள் நேரடியாக தங்கள் முதலீட்டை பங்கு வணிகத்தில் முதலீடு செய்ய ரிசெர்வ் வங்கி அனுமதிக்காதே ,பங்கு வர்த்தகத்தில் ஈடுபட தடை உள்ளது.சிறிது காலத்திற்கு முன் டாடா பைனான்ஸ் அப்படி மாட்டியதாக படித்தேன்.இது பரஸ்பர நிதிகளுக்கு அல்ல அவை பங்கு வர்த்கத்திற்கு என திறட்டப்படுவது.நான் சொல்வது வங்கிகள்,எல்.ஐ.சி,அஞ்சலகங்களில் திரட்டப்படும் வைப்பு நிதிகளை.அவற்றை கொண்டு பங்கு வர்த்தகம் செய்ய தடை உள்ளது!ஒரு வேலை விதிகளில் திருத்தம் கொண்டுவருவாரோ ப.சி.

முத்து(தமிழினி) said...

வணக்கம் வவ்வால்,

வெளிநாட்டு பணம் இங்கு ஏதாவது தொழிலில் முதலீடு செய்யப்பட்டால் சரிதான்.ஆனால் இங்கு பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யப்பட்டு பிறகு இங்குள்ள பணத்தையும் அள்ளி செல்வது பகல் கொள்ளையாகத்தான் உள்ளது.

அப்புறம் ஏதோ மொரிஷியஸ் ரூட் என்று ஏதோ சொல்கிறார்கள்.நம் மரமண்டைக்கு புரியவில்லை.யாராவது வல்லுனர்கள் சொல்லலாம்.

குப்புசாமி எங்க இருக்கீங்க?

முத்து(தமிழினி) said...

மனதின் ஓசை நன்றி..நானும் உங்கள் மனநிலையில்தான் உள்ளென்..

முத்து(தமிழினி) said...

வவ்வால்,

பி.எஃப், பென்சன் போன்ற நிதிகள் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படக்கூடாது என்கிறேன் நான்.
உங்கள் கருத்து எனக்கு புரியவில்லை.
வங்கிகள் எப்படி சம்பாதிக்கின்றனவோ அதுபோல் சேஃப்பாக இந்த நிதியை அரசாங்கம் முதலீடு செய்யவேண்டும்

சந்திப்பு said...

கோயிஞ்சாமி நல்லாத்தான் சொல்லிகீறீங்க...

நம்முடைய இந்திய பங்குச் சந்தை 8000 புள்ளிகளை கடக்கும் போதே இடதுசாரிகள் இந்த பங்குச் சந்தையில் கரடிகளும், காளைகளும் விளையாடுவதாக கூறினார்கள். அப்போதெல்லாம் மெத்தப்படித்த மேதாவி சிதம்பரம் நமது பங்கு சந்தை குறித்து அரசு கவனமாக ஆராய்வதாக ஆய்யாக கூறினார். பின்னர் இந்த ரேஞ்ச் படிப்படியாக உயர்ந்து 10,000, 11,000 என தொடும்போதே கை, கால் முறிந்து விழப்போகிறது என்பதை உண்மையான பொருளாதார வல்லுநர்கள் அறிவார்கள். இன்றைக்கு பங்குச் சந்தை என்பது பாயும் பணமாக உள்ளது. இந்த பணம் உலக நாடுகளில் இந்த மூலையில் இந்து வேண்டுமானாலும் பங்கில் முதலீடு போடுவதும், அதனை ஒரே நாளில் கழற்றிக்கொண்டு போவதும் வாடிக்கையே. இந்த பங்கு மார்க்கெட்டில் அமெரிக்கா போன்ற பெரும் பங்குச் சந்தைகளே கூட திணறிக் கொண்டிருக்க சொத்தை பொருளாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் நமது இந்தியா, இந்த விளையாட்டிற்கு துணைபோயுள்ளது என்பதுதான் உண்மை. இதற்கு சிதம்பரம் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். அவர் பதவி விலகியிருந்தால்கூட தொழிலாளி வர்க்கம் நிம்மதியடைந்திருக்கும் என்பது உண்மை. மேலும், இந்த பங்குச் சந்தையால் பாதிக்கப்படப்போவது கரடிகளும், காளைகளும் அல்ல; சரி, நமது வருங்காலத்திற்கும் ஏதாவது போட்டு வைப்போமோ என்று கொஞ்சம் இருக்கும் பணத்தையும் முதலீடு செய்யும் ஒரு ஹையர் - மிடில் கிளாசு மக்கள்தான்.

இந்தியாவில் பங்கு விளையாட்டை இனியும் அனுமதித்தால் ஒரே நாளில் மொத்தப்பணமும் காணாமல் போய் திவாலாகக்கூடிய வாய்ப்பும் உள்ளது. இந்த முதலீடு என்பது தொழில் முதலீடு அல்ல. வெறும் லாபத்தை அடிப்படையாக கொண்ட பண விளையாட்டு, இந்த சித்து விளையாட்டில் நம்மவர்கள் யாரும் மாட்டிக் கொள்ள வேண்டாம். (தொழிலாளி வர்க்கங்கள்)

மகேஸ் said...

முத்து அவர்களே, பலருக்கு பங்குச் சந்தையின் குறியீடுகள் ஏறும் போது லாபம் எனக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களால் பங்குச் சந்தை சரிவதனால் லாபம்.
பணமாற்று விகிதம் சரிந்ததால் பங்குச் சந்தையில் எந்த விதமான முதலீடும் செய்யாமல் எனக்கு நான்குமாதங்களில் 8 சதவீதம் லாபம்.
நான் சொன்னது "எனவே பங்குச் சந்தை சரிவை நான் கொண்டாடுகிறேன். மேலும் சந்தை சரிவதை நான் எதிர்பார்க்கிறேன்"

நீங்கள் சொல்வது "ஆனால் இந்திய ரூயாயின் வீழ்ச்சியை நீங்கள் கொண்டாடுவது எனக்கு ஒரு மாதிரியாக உள்ளது."

நான் இந்திய ரூபாயின் சரிவைக் கொண்டாடவில்லை. பங்குச் சந்தை சரிவை நான் கொண்டாடுகிறேன்.

எனக்கு சந்தை சரிந்து வெளிநாட்டு முதலீடு வெளியே சென்றால் லாபம். உங்களுக்கு வெளிநாட்டு முதலீடு உள்ளே வந்தால் லாபம்.
நீங்கள் காளை என்றால் நான் கரடி. வியாபாரத்தில் இதெல்லாம் சாதாரணமப்பா.

Kuppusamy Chellamuthu said...

நிதியமைச்சர் ஒருவர் தினசரி பங்கு விலைகளைக் கண்காணித்து அறிக்கை விடுவது பேரவலம். அவருக்கு இதனை விட முக்கியப் பொறுப்புகள் இருக்குமெனக் கருதுகிறேன். விலை உயரும் போது மார்தட்டும் சந்தைகள் (BSE & NSE), செபி, அரசு, அந்தந்த நிறுவனங்கள் எல்லாம், விலை சரியும் போது வேறு காரணங்களைத் தேடுகின்றனர். அதுவும் ஒரு அவலம்.

கிரிக்கெட் மேட்ச் ஜெயிக்கும் போது ஆட்டக்காரர்கள் செய்யும் தவறுகள் அனைத்தும் மறக்கப் படுகின்றன. அதே சமயத்தில் அணி தோல்வியைச் சுவைக்கும் போது, சிறப்பான ஆட்டம் கூட விமர்சிக்கப் படுகிறது. அதே போலத் தான் பங்குவிலையும்.. ஏறும் போது இறங்கும் போதும் அதற்குக் காரணம் கற்பிப்பதற்காத்தான் மிகப் பெரிய கூட்டம் கழுத்தில் 'டை'யைக் கட்டிக் கொண்டு சி.என்.பி.சி.யில் இரைச்சலைக் கிளப்புகிறது.

பிறரது ஆலோசனையின் பேரிலோ அல்லது சிய முடிவின் அடிப்படையிலோ நாம் முதலீடுகளைச் செய்து விட்டு அரசாங்கம் விலையச் சரியாமல் பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அறிவீனம் மட்டுமில்லாது பேராசையும் கூட. Warren buffett once said, "Stock market is somewhat like a god. He rewards when you do good things. But, unlike real god he does not forgive on mistakes; rather punishes hard".

முத்து, நீங்கள் திறந்த வெளிச் சந்தை அமைப்பை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதாகவும், பொதுவுடமைத் தனத்தை மாற்றமின்றி ஏற்பதாகவும் அறிகிறேன். அது குறித்து விவாதிக்க இங்கே இடம் போதாது. தனியாக வைத்துக் கொள்ளலாம். (தமிழ் மேல் கொண்ட காதலினால் தி.மு.க.வைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் சிலரது மனநிலை போல இது இருக்கக் கூடும். ஸ்மைலி எல்லாம் போடத்தேவையில்லை)

'கேபிடல் அக்கவுண்ட் கன்பர்டபிளிட்டி' குறித்தான் உங்களது பார்வை என்னை மகிழச்செய்கிறது. தமிழ்மணத்தில் இது போன்ற விடயங்களை விவாதிக்க எவருமில்லை என எண்ணியிருந்தேன்.

Fundamental analysis & technical analysis என எத்தனை இருந்தாலும் maas psycology தான் சந்தையை இயக்குகிறது. 2005 மே மாதம் முதல் 2006 மே வரை சென்செக்ஸ் நிறுவனங்களின் செயல்பாடு சுமார் 25% (அதிகபட்சமாக) உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் குறியீடு 6,000 இல் இருந்து 12,000 ஐத் தொட்டது. இதையெல்லாம் பார்க்காமல் சூதாடி விரலைச் சுட்ட பின் பிறரைக் குறை சொல்வது ஆரோக்கியமானதல்ல. குறியீடு உச்சத்தில் இருக்கும் போது இந்தியப் பங்குகளில் பணம் போட்ட (விரலைச் சுட்ட) அந்நிய முதலீட்டு நிறுவனங்களும் இல்லாமலில்லை. ஆனால் அவர்களது மொத்த நிதியில் அது சிறிய விழுக்காடாகவே இருந்திருக்கும்.

இன்னும் நிறையப் பேசலாம்.. இப்போதைக்கு இது போதும்.. இன்று மட்டுமின்றி என்றுமே, பணவீக்கத்தை விட, வங்கிகள் தரும் வட்டியை விட நீண்ட கால அடிப்படையில் பங்கு முதலீட்டில் (not trading & speculation) அதிகமான வளர்ச்சியை ஈட்ட முடியும் என நம்புகிறேன். அதற்காக நிரம்ப உழைக்க வேண்டியிருக்கும்.

-குப்புசாமி செல்லமுத்து

முத்து(தமிழினி) said...

// நீங்கள் திறந்த வெளிச் சந்தை அமைப்பை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதாகவும், பொதுவுடமைத் தனத்தை மாற்றமின்றி ஏற்பதாகவும் அறிகிறேன்.//

இது தவறு.அப்படியில்லை. அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் என் நிலை.

Sivabalan said...

// இந்தியாவில் உள்ள ஆங்கில மீடியாக்களை போல் அயோக்கியர்கள் யாரும் இல்லை என்பது என் சொந்த கருத்து}. //

உங்கள் கருத்தே என் கருத்தும்..


Market linked LIC Policy வேறு நான் போட்டுவைத்துள்ளேன். அது என்ன ஆனாது என்று தெரிய்வில்லை.

வவ்வால் said...

வணக்கம் தமிழினி!
//பி.எஃப், பென்சன் போன்ற நிதிகள் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படக்கூடாது என்கிறேன் நான்.
உங்கள் கருத்து எனக்கு புரியவில்லை.
வங்கிகள் எப்படி சம்பாதிக்கின்றனவோ அதுபோல் சேஃப்பாக இந்த நிதியை அரசாங்கம் முதலீடு செய்யவேண்டும்//

நீங்கள் கூறியதை தான் சொல்லியுள்ளேன்,பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என வங்களையே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தும் போது பி.ஃப்,பென்சன் போன்றவை பங்கு வணிகத்தில் முதலீடு செய்ய கூடாது என்பதையே அவ்வாறு கூறினேன் தெளிவில்லாமல் போய்விட்டது போலும்!

//அப்புறம் ஏதோ மொரிஷியஸ் ரூட் என்று ஏதோ சொல்கிறார்கள்.நம் மரமண்டைக்கு புரியவில்லை.யாராவது வல்லுனர்கள் சொல்லலாம்//

நாம வல்லுனர் இல்லை ஆனாலும் தெரிந்ததை சொல்கிறேன்.மொரிஷியஸில் பெரும்பாலும் இந்தியவம்சா வழியினர் என்பதால் நாம் அங்கு இருந்து வரும் முதலீட்டுக்கு 100 சதவீத வரி விலக்கு அளித்துள்ளோம்.அதையே தவறாக அயல் நாட்டினர் பயன் படுத்துகிறார்கள் ஒரு டுபாக்கூர் பேரில் மொரிஷியசில் நிறுவனத்தை துவங்கி விட்டு அங்கே இருந்து இந்தியாவில் முதலீடு செய்வார்கள்.இந்தியாவில் உள்ள அன்னிய முதலீடு செய்துள்ள நாடுகளில் முதல் இடம் மொரிஷியஸ்கு தான்.அந்த நாட்டில் ஒரு சூட் கேஸில் பணம் எடுத்து போனால் போதும் குடிஉரிமை கொடுத்து நிறுவனம் ஆரம்பிக்க எல்லா ஏற்பாடும் செய்து தருவார்கள். ஏர்டெல் மொபைல் அதிபர் சுனில் மிட்டல் பாரதி கூட மொரிஷியஸ் குடியிரிமை உள்ளவர்,அந்த நாட்டின் அரசு பிரதிநிதி கூட. சில வாரங்களுக்கு முன்னால் இந்தியா டுடேயில் அந்நிய முதலீடு பற்றி கட்டுரை வந்துள்ளது!

பா.ஜ.க ஆட்சியின் போது யஷ்வந்த் சின்காவின் மகள் மொரிஷியஸில் உள்ள போலி நிறுவனத்தின் நிதி ஆலோசகராக செயல் பட்டு அதிக பலன்களை அனுபவித்ததாக ஒரு குற்றச்சாட்டு கூட உண்டு!

முத்து(தமிழினி) said...

சிவபாலன்,

எல்.ஐ.சியும் இந்திய பங்கு வர்ததகத்தில் பெரிய ஆபரேட்டர். பிரச்சினை வராது என்று நம்புவோம்.
(குறைந்தது அவர்கள் பாலிசிக்காவது)

முத்து(தமிழினி) said...

வவ்வால்,

நன்றி.அருமையான விளக்கம்.யஷ்வந்த் சின்கா மேட்டர் உண்மையா?

குருமூர்த்தி இதைப்பற்றி எழுதவில்லையா? :))

முத்து(தமிழினி) said...

குப்புசாமி,

நீங்கள் கூறிய கணக்கின்படி சொல்லுங்கள். இந்திய கம்பெனிகளின் பங்கு மதிப்பு இப்போது சரியா இல்லை அதிகமா?

ரிலையன்ஸ், இன்ஃபி, ஓ.என்.ஜி.சி மற்றும் பார்தி மற்றும் சொல்லுங்கள்

Kuppusamy Chellamuthu said...

முத்து, தனிப்பட்ட பங்குகளைப் பற்றிப் தனி நபர்களுக்காகப் பேச நான் என்றுமே விரும்புவதில்லை. எனினும், முன்பே வாங்கியிருந்தால், இந்த நிறுவனங்களை நீண்ட காலத்திற்கு வைத்திருக்க தயக்கம் எனக்கு இருக்காது. இவை சார்ந்த துறைகளும், அந்தத் துறைகளில் இவற்றின் செயல்பாடும் திருப்திகரமாக இருக்குமென நம்புகிறேன்.

-குப்புசாமி செல்லமுத்து

Kuppusamy Chellamuthu said...

Muthu,

The way I interpreted your query was that you did not mean if the prices would still plunge further. As I often quote, “it is easier to spot what company to buy; but what price to buy”. I can only assure you that I am more comfortable now at 10,000 levels than 12,500 level some weeks back. Did I answer you or confused further?

-Kuppusamy Chellamuthu

முத்து(தமிழினி) said...

குப்பு,

உங்க பதிவுக்கு வர்றன்.வெயிட் பண்ணுங்க.

தமிழ்வெளியை பார்த்தீங்களா?