Thursday, March 02, 2006

சாருவின் ஸீரோ டிகிரி இலக்கியமா?

ஒரு அதிர்ச்சி

எல்லா மனிதனுக்குள்ளும் ஒரு அழுக்கான இன்னொரு மனிதன் இருக்கிறான் என்பது உண்மை என்று நான் நம்புகிறேன்.(அழுக்கின் அளவு வித்தியாசப்படலாம்) ஆனால் பிரபஞ்ச ஒழுங்கு காப்பாற்றப்பட அந்த அழுக்கு மனிதனை உள்ளேயே அமுக்கி வைக்கவோ அல்லது உள்ளேயோ கொன்று புதைக்கவோ தான் ஒருவர் முயலவேண்டுமோ ஒழிய அவனை நியாயப்படுத்தவோ வீதியில் விட்டு பரபரப்பை ஏற்படுத்தவோ கூடாது.

ஒரு கதை

சின்ன வயதில் பாட புத்தகத்தில் அனைவரும் படித்திருக்கக்கூடிய கதை இது.
ஒரு ஒரு ஊரில் ஒரு முட்டாள் ராஜா இருந்தாராம். அந்த ராஜாவுக்கு பிறந்த நாள் ட்ரஸ் தைத்து தருகிறேன் என்று கூறி இரண்டு பேர் வந்து எந்த துணியையுமே காட்டாமல் (வடிவேலுவின், எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்குத்தான் கடவுள் தெரிவார் என்ற காமெடியை நினைத்துக் கொள்ளவும்.) ராஜாவை ஏமாற்றுவார்களாம். கடைசியில் ராஜா நகர்வலம் போகும்போது ஒரு குழந்தை ராஜா ட்ரெஸ்ஸே போடவில்லை என்று கத்தியவுடன் எல்லோரும் தன் அசட்டுதனத்தை உணர்வார்கள்.

ஒரு இலக்கிய வகை

ஸீரோ டிகிரி நாவலை பின்நவீனத்துவ நாவல் என்று கூறுகிறார்கள்.

பின்நவீனத்துவத்தின் அர்த்தம் என்ன என்று தேடினால் கிடைப்பது இதுதான்.

"பின் நவீனத்துவ புனைவிலக்கியம் தொடர்ச்சி, நீரோட்டம், தொகுப்பு, நேர்கோடு, ஆகியவற்றில் இருந்து விலகி தொடர்ச்சியின்மை, சிதறல், முடிவின்மை, மையமின்மை,புனைவு பற்றிய மேம்பட்ட புனைவு பன்முகத்தன்மை ஆகியவை கொண்டது."

(திண்ணையில் வந்த ஒரு கட்டுரையில் இருந்து சுடப்பட்டது)

எந்த ஒழுங்கிற்கும் வராது போனால் ரொம்ப அருமையான பின்நவீனத்துவ நாவல் என்பதாக கூறுகிறார்கள்.

ஒரு அத்தியாயம்

இது வரையிலான இந்த பக்கங்களை வாசித்துவிட்டு எங்கே கதை என்று கேட்டாள் வாசுகி. கதை சொல்ல வேண்டுமானால் கதாபாத்திரங்கள் வேண்டும். கதாபாத்திரங்கள் உருவாக்கப்படவேண்டும். யார் உருவாக்குவது.கடவுளற்ற உலகத்தில் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நியாயமற்ற உலகத்தில் வாழந்துகொண்டிருக்கிறேன்.

27 தினங்கள் முட்டைகளை அடைகாத்து முட்டை ஓட்டை தன் அலகினால் லேசாக உடைத்து குஞ்சு முட்டையிலிருந்து வெறியேற வழி செய்து குஞ்சுகளைத் தன் வெதுவெதுப்பான சிறகுகளுக்குள் வைத்துப் பாதுகாத்து தானியங்களைத் தின்பதற்கு கற்றுக்கொடுத்து எல்லாம் ஒழுங்கான தாள லயத்துடன் நடந்து கொண்டிருக்கும்போதே ஆகாயத்திலிருந்து சரேலெனப் பாய்ந்து குஞ்சுகளைத் தன் காலிடுக்கில் எடுத்து செல்லும் பருந்துகளுக்கு மிஞ்சிப் பிழைக்கும் குஞ்சுகள் ஒன்பது கூட இல்லை என்றால் இந்த உலகில் ஒழுங்கு எங்கே உள்ளது?

(ஸீரோ டிகிரியில் இருந்து எனக்கு பிடித்த ஒரு பகுதி)


ஒரு இலக்கிய கருத்து

இலக்கியம் இலக்கியத்திற்கே என்பது ஒரு மோசடி வாதம் என்பது தான் என் கருத்தும். ஆனால் இலக்கியத்தில் அழகியல் இருக்கத்தேவையில்லை என்பதும் முரட்டு வாதம்தான். ஒரு கட்டுரைக்கும் இலக்கிய புனைவிற்கும் கண்டிப்பாக வித்தியாசம் உள்ளது என்றே நான் நினைக்கிறேன்.

ஒரு நண்பர் என்னிடம் "அடிபட்டவன் எப்படி அழுவான்? ராகம் போட்டா?" என்று கேட்டார். என்னை சிந்திக்க வைத்த கிண்டல் அது.

திருப்பி அடிப்பதோ ராகம் போட்டு அழுவதோ அவனவன் இஷ்டம்.ஆனால் அடிப்பட்டவன் போராடவேண்டிய களம் வேறு. உடனே அடிப்பட்டவன் இலக்கியம் படைக்கக்கூடாதா என்று கேட்டால் அதற்கு பதில் என்னிடம் இல்லை. இதுவெல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் ரசனை, கருத்து என்று கூறி தப்பித்துக்கொள்வது தான் நான் செய்யும் காரியமாக இருக்கும்.

இலக்கியத்தில் உள்ள ரசனையை தூண்டக்கூடிய அந்த பண்பு, ரசனையோடு கூடி சிந்தனையையும் செழுமைப்படுத்துகிறது என்பது என் அனுபவம்.
இலக்கியம் என்பதற்கு பல விளக்கங்களை பலர் கூறி வருகின்றனர். என்னை பொருத்தவரை தனிமனிதனின் ரசனையை உயர்த்தி கூடவே அவன் சிந்தனைத்தளத்தை உயர்த்தி பக்குவப்பட்ட ஒரு மனதை உருவாக்குவதே நல்ல இலக்கியம் என்று நினைக்கிறேன். இலக்கியம் என்பது ஒரு தனி மனிதனோ அல்லது சமுதாயமோ எதிர்கொண்ட பிரச்சினைகளை, அதை அவர்கள் எதிர்கொண்ட விதம் ஆகியவற்றைப்பற்றி நியாயமான முறையிலும், யதார்த்தமான முறையிலும் முன்வைத்தலே என்றும் கூறலாம்.


ஒரு விளக்கம்

ஃபூக்கோ என்பவரின் பின்நவீனத்துவம் பற்றிய கருத்து

"வித்தியாசத்தை விடுவிக்க நமக்கு ஒரு வேறுபட்ட சிந்தனை வேண்டும். இச்சிந்தனை தருக்கமும் மறுப்பும் அற்றது. பன்மையை வரவேற்பது. அங்கீரிக்கப்பட்டதிலிருந்து விலகும் பாதைகளை உள்ளடக்கியது.ஒப்புதல் உள்ளது, அதே சமயத்தில தனிப்படுத்துவதை உபகரணமாக கொண்டது.பாண்டித்திய விதிகளுக்குள் கட்டுப்படாது தீர்வில்லாத கேள்விகளை எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் விளையாடும் வேறுபட்ட சிந்தனை."

இதன்படி பன்முகத்தன்மை பின்நவீனத்துவத்தின் ஒரு கூறு என்று வைத்துக்கொண்டாலும் ஒரு கலைஞன் எடுத்தாளும் ஒரு கருத்தில் அவன் கூறும் அனைத்து பன்முகத்தன்மையையும் சேர்க்கும் ஒரு புள்ளி இருந்தாக வேண்டும் என்று நினைக்கிறேன் நான்.

இலக்கியவாதியை பற்றி

தமிழ் வாழ்வு சார்ந்து கடுமையான பல விமர்சனங்களை கொண்ட சாரு நிவேதிதா லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க இலக்கியங்களையே பெரிதும் விரும்புகிறார்.அங்குள்ள படைப்பாளிகள் படைப்பதோடு மற்றுமின்றி களத்தில் இறங்கி போராடவும் செய்பவர்கள் என்றெல்லாம் அவர்களை போற்றி பேசும் சாரு நிஜ வாழ்வில் ஒரு சாதாரண போலீஸ் விசாரணை வந்ததற்காக தன்னுடைய ஒரு நண்பரை இனிமேல் தன்னை சந்திக்கக்கூடாது என்று கண்டித்து கூறியதாக கவிதா சரண் பத்திரிக்கையில் படித்துள்ளேன்.

இந்த நாவலில் கணிசமான அளவில் இவர் சொந்த வாழ்க்கையும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் பலராலும் சிலாகிக்கப்படும் மேற்கோள் காட்டப்படும் இந்த புகழ்பெற்ற வாசகத்தின் அர்த்தம் எனக்கு நிஜமாகவே புரியவில்லை.

" என் எழுத்தை புரிந்துக்கொள்ளவேண்டுமானால் என் வாழ்வை பார்க்காதே..என் வாழ்வை புரிந்துக்கொள்ள வேண்டுமானால் என் எழுத்தை பார்க்காதே"

ஒரு செக்ஸ் கருத்து

பெரும் கலகமாகவும் பரபரப்பாகவும் சித்தரிக்கப்பட்ட பெண்கள் மற்றும் செக்ஸ் பற்றி எழுதியுள்ளதாக கூறப்படும் பகுதிகள், இந்த நூலின் முன்னுரையில் ஜெயமோகன் கூறியுள்ளபடி முதிர்ச்சியில்லாமல் இருக்கிறது என்பது தான் என் புரிதலும். விடலைத்தனமாக சில அத்தியாயங்களை எழுதியுள்ளார்.

சில அத்தியாயங்களில் சில சக இலக்கியவாதிகள் தாக்கப்பட்டுள்ளனர் என்று எனக்கு புரிகிறது.இது அந்த கால இலக்கிய அரசியலுடன் சம்பந்தப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.நமக்கு இந்த உலகம் புதிதாகையால் அது யாரையெல்லாம் சுட்டுகிறது என்று புரியவில்லை.
இவ்வளவையும் மீறி நாவலின் சில பகுதிகள் கவித்துவமாக புனையப்பட்டுள்ளது. இதைவிடவும் நல்ல நாவலை இவரால் படைக்க முடியும் என்று தோன்றுகிறது..

ஒரு விளக்கம்

கடந்த இரு ஆண்டுகளாகத்தான் தமிழ் இலக்கிய உலகத்தை கவனித்து வருகிறேன். எனக்கு ஆச்சரியத்தை அளித்த படைப்பாளிகளில் ஒருவர் சாரு நிவேதிதா. அவருடைய கோணல் பக்கங்கள் என்ற இணையத்தளத்தை அவ்வபோது படிப்பதுண்டு.

முதன் முதலில் அந்த தளத்தை திறந்தபோது அதை எத்தனை பேர் (தினமும் இருபதாயிரம் ஹிட்ஸ்..நிஜமாகவா) படிக்கிறார்கள் போன்ற விவரங்களும், பிறகு அந்த தளத்தை பேமேண்ட் சைட் ஆக்கியபோது வெறும் இருபது பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்ததுமான நேர்மையான தகவல்கள் என்னை சிரிக்க வைத்தன.மீண்டும் அந்த தளம் இலவச தளமாக ஆக்கப்பட்டதை சொல்லவும் வேண்டுமா?அப்படிப்பட்ட சாரு நிவேதிதாவினுடைய ஸீரோ டிகிரியை பற்றி பல இடங்களில் கேள்விப்பட்டதினால் படாத பாடுபட்டு அந்த புத்தகத்தை சென்னை வலைப்பதிவர்கள் உதவியுடன் வாங்கினேன். எனக்கு இந்த புத்தகத்தை தந்தவர் ஒரு எழுத்தாளர்தான்.இதைப்பற்றி ஒரு ரிவ்யூ எழுத வேண்டும் என்ற கன்டிஷனுடன் புத்தகத்தை தந்தார்.

(என்னய்யா இது ஒரு இழவும் புரியவில்லை என்று கூறுபவர்கள் ஒரு பின்நவீனத்துவ நாவலுக்கு எழுதப்பட்ட பின்நவீனத்துவ விமர்சனம் இப்படித்தான் இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.அந்த நாவலை படிக்கும்போது எனக்கும் இப்படித்தான் இருந்தது)

30 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

என்னவீனத்தனமோ தெரியவில்லை. ஆனால் உங்களின் விமர்சனம் நன்றாகத் தான் இருக்கிறது. ஸீரோ டிகிரி கேள்விப் பட்டிருக்கிறேன். படித்ததில்லை.

ஜோ/Joe said...

என்னய்யா இது ஒரு இழவும் புரியவில்லை

சிறில் அலெக்ஸ் said...

பின் நவீனத்துவமோ..இன்னும் எந்த எழுத்து நடையோ, வகையோ, ஒரு கதையில் அல்லது கட்டுரையில் 'திணிக்கப்'படும்போது அழகாயில்லை.

புரியவில்லை என்பதற்காகவே சில படைப்புகளை ரசிப்பவர்கள் இருக்கிறார்கள்.

நந்தன் | Nandhan said...

சரியாய் சொன்னீங்க, படைப்புக்காக தான் இலக்கியம், ஒழுங்கு ஒழுங்கின்மயெல்லாம். வலுக்கட்டாயமக்க படும்போது அது தோத்து போயிடுது. எனக்கு பொதுவாகவே இந்த நவின இலக்கியம்/இலக்கியவாதிகள்ன்னா கொஞ்சம் அலர்ஜி. இரண்டு வரிக்கு மேல முற்றுப்புள்ளி வைக்கிலனா தல சுத்தும் எனக்கு.
இப்படிதாங்க எஸ்.ராமகிருஷ்ணன் விகடன்ல எழுதினத பார்த்து உபபாண்டவம் வாங்கிட்டேன். படிச்சா கதை சுத்து சுத்துன்னு சுத்துது.
எப்படியோ நான் இன்னும் அந்த அளவுக்கு வளரலன்னு நினைக்கிறேன். :(

ஜெ. ராம்கி said...

I would like to proudly say that still the book cost doesn't send to concerned person. :-)

Muthu said...

ராம்கி,
அடகடவுளே...அதையும் ரொட்டேஷன்ல விட்டாச்சா....சரி சரி..அதுக்குத்தான் இந்த பதிவே..ஞாபகம் வந்தா சரி.....முடிஞ்சா பா.ராவிற்கு ஒரு வார்த்தை சொல்லி இதை படிக்க சொல்லவும்....

ஜோ/Joe said...

//I would like to proudly say that still the book cost doesn't send to concerned person. :-)
//
ராம்கி,
இது பின் நவீனத்துவத்த விட கொடுமையா இருக்கு..ஒண்ணுமே புரியல்ல.

Muthu said...

ஆகவே மைலார்ட்

திரு.ஜோ அவர்கள் தனக்கு இலக்கியம் புரியாது என்று ஏற்கனவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதால் இந்த ஆர்க்யூமெண்ட்டை தள்ளுபடி செய்ய சொல்லி வேண்டுகிறேன்.(எங்களுக்கும் புரியாது என்பது வேறு விசயம்)

வேண்டுமென்றால் கீழ்க்கண்ட பதிவை படித்து அவர் தெளியலாம் என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

http://muthuvintamil.blogspot.com/2006/01/blog-post_12.html

ஜெ. ராம்கி said...

ஜோ... correctaa pudichitteengale!

Ilakkiyam meeriya kavithaigal avai! :-)

Muthu said...

நன்றி செல்வராஜ், ஜோ,சிறில், ராம்கி, நந்தன்

cyril

புரியவில்லை என்பதற்காக ரசிக்கிறார்கள் என்பதைவிட புரிந்தும் புரியாமல் இருப்பதால் ரசிக்கிறார்கள் என்று சொல்லலாம்.

இந்த பின்நவீனத்துவ கதையில் கதை இருந்தால்தானே நீங்க சொன்ன திணிப்பு எல்லாம் வரும்....


நந்தன்,

அவ்வளவு அலர்ஜியாக வேண்டியதில்லை..சிலர் நன்றாகவே எழுதுகிறார்கள்.நீங்கள் சொன்ன எஸ்ரா கதை எல்லாம் வலுகட்டாயமாக எழுதப்படுவது..அதுவெல்லாம் கடினம்தான்.அதையெல்லாம் நான் தொடுவதில்லை.

G.Ragavan said...

பின்னிலக்கியத்தின் மூலக்கூறுகளின் அடிப்படை வாதத்தினை புரிந்து கொண்டு படிக்கும் கதைகள் நல்ல விளைவுகளுக்கான கோணத்தைத் திருப்பி விடும் என்பதில் ஐயமில்லாமல் இருப்பதே பின்னிலக்கியம் அல்லது எக்ஸ்ஸிஸ்டென்ஷியலிசம். இதன் ஆழத்தை வேர் வரை முகரும் பொழுது மூக்கில் நெடிக்கும் ஈரமும் அழுக்குமான மண்ணின் வாடைதான் எழுத்துகளின் ஆதாரப் புள்ளிகளின் தொடக்கம்.

என்ன மக்களே தலை சுத்துதா....நான் என்ன செய்ய! எனக்குத் தெரிஞ்சத எழுதுனேன்.

சீரோ டிகிரியைப் படித்தேன். என்னால் முழுவதும் ரசிக்க முடியவில்லை.

யாத்ரீகன் said...

நந்தன் சொன்ன மாதிரி.. ஒரு காற்புள்ளி, முற்றுப்புள்ளி இல்லாம ரெண்டுவரிக்கு மேல இருந்தாலே தல சுத்துதுங்க.... சரி.. இந்த பின்நவீனத்துவத்துக்கு இணையான ஆங்கில வார்த்தை என்ன ? மேலும் இதை எளிய தமிழில் விளக்க முடியாதா ?

ஜெ. ராம்கி said...

//உபபாண்டவம் வாங்கிட்டேன். படிச்சா கதை சுத்து சுத்துன்னு சுத்துது.
எப்படியோ நான் இன்னும் அந்த அளவுக்கு வளரலன்னு

ethu "avan", ethu "aval"nu oru confusion irukkum Upapandavam climaxla...

BTB, ithuvum...

"Ilakkiyam" meeriya kavithaigal thaan ... "doesn't send" vagairaakkal! :-)

Not "Ilakkanam" meeriya kavaithaigal! :-) :-) :-)

b said...

என்னால் இன்றைக்கு வரைக்கும் புரிந்துகொள்ள முடியாத ஜீவராசி சாரு. ஆபிதீன் ப்ரச்னையை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் ஏதோ ஒருவகையில் அவர் எழுத்தும் பிடித்துத்தான் இருக்கிறது!

அன்புடன்,
மூர்த்தி.

ramachandranusha(உஷா) said...

முத்து, புத்தக அறிமுகத்துக்கு நன்றி. நானும் போனமுறை சென்னையில் தேடினேன் கிடைக்கவில்லை.
ஆனால பின்நவீனத்துவம் என்ற வார்த்தை பயமுறுத்துகிறதே! எஸ்.ராவின் "நெடுங்குறுதி" என்னால்
படிக்க முடியவில்லை. நெடுங்குறுதியும் பி. ந வரிசையில் வருமா?

நந்தன், ஓரளவு மகாபாரதம் தெரிந்தால், உபபாண்டவம் புரியும். எஸ்.ரா மகாபாரதத்தை தன் கோணத்தில்/ வேறு கோணத்தில் எழுதியது புரியும்.

Muthu said...

மூர்த்தி வாங்க

அது என்னங்க ஆபிதீன் பிரச்சினை? அரசல் புரசலாக் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஏதாச்சும் சுட்டி கிடைக்குமா?

( சாரு உங்களுக்கு ஜீவராசியா :)))). நான் இப்படித்தான் ஒரு ஆளை ஜீவராசின்னு சொல்லப்போய் வெளக்கம் கேட்டாங்க)


ராம்கி

அப்பு...எளக்கிய வியாதி ஆனப்புறம் நீங்க சொல்றது பேஸ்றது எதுவுமே பிரிய மாட்டேங்குது..அப்பு....பாத்து பண்ணுங்கப்பு...

Muthu said...

யாத்திரீகன்

ஆங்கிலத்தில் இதுக்கு பெயர் POST MODERNISM....

தமிழில் அத்தனை விளக்கம் கொடுத்திருக்கேனே படிக்கலையா நீங்க...


ராகவன்,

அந்த விளக்கத்தை எங்க பிடிச்சீங்க...அரை மணியாச்சு அர்த்தம் எடுக்க..(இன்னும் தெளிவா இல்லை...மயமயங்குது....

கதை உங்களுக்கு பிடிபடலையா? வருத்தபடாதீங்க....சொன்னா தப்பா நெனச்சுக்குவாங்கன்னு யாரும் இதை சொல்லாம இருக்காங்கன்னு நெனைக்கிறேன்:))))

Muthu said...

உஷா,

இந்த புத்தகத்தை பல போராட்டத்திற்கு அப்புறம் தான் நான் வாங்கினேன்.ஒரு எழுத்தாள நண்பர்கிட்டே இருந்து நண்பர்கள் வாங்கி கொடுத்தாங்க...

பின்நவீனத்துவம் விளக்கம் நல்லா இருக்கும்..ஆனால் இந்த புத்தகம் வடிவத்தை மட்டும் எடுத்துகிட்டு மேட்டரை விட்டுருச்சின்னு நெனைக்கிறேன்.

எஸ்.ரா புக் எதுவும் படித்ததில்லை. நெடுங்குருதி லைப்ரரியில் கிடைத்தால் படிக்கவேண்டும்.உபபாண்டவம் டிட்டோ....

dondu(#11168674346665545885) said...

முத்து அவர்களே, ஆபிதீன் பிரச்சினை சம்பந்தமாக நாகூர் ரூமி அவர்களின் பதிவுக்கான சுட்டி இதோ. http://www.tamiloviam.com/rumi/page.asp?ID=28&fldrID=1

அது பற்றி நானும் ஒரு பதிவு போட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/02/blog-post.html

இபின்ன்னூட்டத்தின் நகல் என்னுடைய மேலே கூறிய பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/02/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

நந்தன் | Nandhan said...

//நந்தன், ஓரளவு மகாபாரதம் தெரிந்தால், உபபாண்டவம் புரியும். எஸ்.ரா மகாபாரதத்தை தன் கோணத்தில்/ வேறு கோணத்தில் எழுதியது புரியும்.//
அட அது புரியுதுங்க, தெரிஞ்ச கதை என்பதால் தான் படிச்சு முடிக்க முடிந்தது..ஆனா ஏன் அப்படி எழுதினாருன்னு புரியல...அப்படி குழப்பறதால ஏதாச்சும் புது அர்த்தம் வருதான்னு நம்ம மண்டைக்கு ஏறல :) நல்ல வேளை நம்மள மாதிரி நிறைய பேரு இருக்காங்க இந்த நாட்டுல :)

Vaa.Manikandan said...

//எஸ்.ராவின் "நெடுங்குறுதி" என்னால்
படிக்க முடியவில்லை.//
சிறு திருத்தம் 'னெடுங்குருதி'. 'னெடுங்குருதி' படிக்க முடியவில்லை எனில் ஜெயமோகனின் 'காடு'?
என்னைப் பொறுத்தவரை நான் படித்த புத்தகங்களில் (கொஞ்சம் தான்) மூன்றுமே தரமனவை தான்.
ஜெ.மோ வின் சொற்களில் 'அலுப்பு' தராத எதுவுமே சிறந்த நாவலாக இருக்க முடியாது

G.Ragavan said...

// ராகவன்,

அந்த விளக்கத்தை எங்க பிடிச்சீங்க...அரை மணியாச்சு அர்த்தம் எடுக்க..(இன்னும் தெளிவா இல்லை...மயமயங்குது....//

என்னங்க இது...எவ்வளவு கஷ்டப்பட்டு யோசிச்சு எழுதியிருக்கேன். புரியலைன்னு சொல்றீங்களே! :-)

// கதை உங்களுக்கு பிடிபடலையா? வருத்தபடாதீங்க....சொன்னா தப்பா நெனச்சுக்குவாங்கன்னு யாரும் இதை சொல்லாம இருக்காங்கன்னு நெனைக்கிறேன்:)))) //

தப்பா நெனச்சா நெனைக்கட்டும். புரிஞ்சதுன்னா புரிஞ்சதுன்னு சொல்லலாம். இல்லைன்னா என்ன சொல்றது? ஒருவேளை அது புரிய தனி அறிவு வேணுமோ என்னவோ!

மோகன் said...

சாருவின் 'கோணல் பக்கங்களை' எதேச்சையாக படிக்க ஆரம்பித்து, 'zero degree' பற்றி ஒரு ஆவல் எழ 'இ-புக்'காக வாங்கி படித்தேன்.எனக்கு அது ஒரு 'அதிர்ச்சியான,பட்டவர்த்தனமான வாசிப்பு' அனுபவமாக இருந்தது.ஆனால் கடைசி(இது)வரையில் 'பின் நவீனத்துவம்' பற்றி ஒன்றும் புரியவில்லை.

Muthu said...

நன்றி திரு.டோண்டு அவர்களே...அந்த சுட்டிகள் உபயோகமாக இருந்தது.
மணி,
ஜெ.மோ அவர் புத்தகங்கள் அலுப்பு தருவதால் அவர் அவ்வாறு கூறிவி்ட்டார் போலும்..என்னை பொருத்தவரை நல்ல புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போது முடிந்துவிடுமோ என்று பதட்டத்துடன் புத்தகத்தை திருப்பி பார்ப்பேன்.

மோகன்,
உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்திச்சோ அப்படித்தான் இங்கயும்....

Muthu said...

நன்றி திரு.டோண்டு அவர்களே...அந்த சுட்டிகள் உபயோகமாக இருந்தது.
மணி,
ஜெ.மோ அவர் புத்தகங்கள் அலுப்பு தருவதால் அவர் அவ்வாறு கூறிவி்ட்டார் போலும்..என்னை பொருத்தவரை நல்ல புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போது முடிந்துவிடுமோ என்று பதட்டத்துடன் புத்தகத்தை திருப்பி பார்ப்பேன்.

மோகன்,
உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்திச்சோ அப்படித்தான் இங்கயும்....

ROSAVASANTH said...

இப்போதைக்கு

http://rozavasanth.blogspot.com/2005/01/blog-post_18.html

இன்னும் விரிவாய் சாருவை பற்றி, சாருவின் எழுத்தைப் பற்றி எழுதும் நோக்கம் உள்ளது. தேவெஇயும் உள்ளதாக கருதுகிறேன்.

Thangamani said...

முத்து, சாருவின் எழுத்துக்களில் (அதில் இருக்கும் பாலியல் சார்ந்த தன்மையில் அல்ல) எனக்கு சில கருத்துகள் உண்டு. ஆனால் தமிழர்கள் மிக மோசமான பாலியல் வறட்சிக்கு ஆளாகி கேவலமான நிலையில் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. கற்பு பற்றிய கலவரங்களைக் கவனிக்க.

//சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்!.......
.......//

இந்தப்பாடலை இன்றைய சூழலில் ஒரு தமிழ் பெண் எழுதமுடியுமா? இது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதியது. இன்றைய தமிழ்ச் சூழல் அவ்வளவு நொய்மை அடைந்திருக்கிறது. தமிழ் நவீனமான மொழியா என்று சமீபத்தில் ஓரிடத்தில் கேட்கப்பட்டது; தமிழன் நவீனமானவன் அல்லன் என்பதால் தமிழும் அப்படி இருக்கிறது.

சாரு இன்னும் எழுதவேண்டும்.

Muthu said...

நன்றி ரோசா மற்றும் தங்கமணி,
//அதே போல நான் வாசித்தவரையில் அவருடய எழுத்தில் காட்டப்படும் தீவிரமும் ஒரு போலித்தனத்தை அடக்கியது என்றே நினைக்கிறேன். சாரு அறிவுறுத்தும் வகையில் அவர் வாழ்க்கையையோ, எழுத்தையோ மட்டும் தனித்து புரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல், இவற்றை எல்லாவற்றுடனும் தொடர்பு படுத்தி பார்க்கையில் போலித்தனமே மிகுதியாய் தெரிகிறது.//

மேற்கண்ட பத்தி ரோசாவின் பதிவில் இருந்து படித்தேன். ஓரளவு நானும் அதைத்தான் சொல்லவந்தேன். மற்றபடி நீங்கள் கூறியது போல மேலே தங்கமணியும் கூறியுள்ளது போல் அவரின் இலக்கியத்திற்கும் இங்கு தேவை உள்ளது என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன்.
தமிழர்களின் வறண்ட செக்ஸ் வாழ்வு, நமக்கு இருப்பதாக மற்றவர் நினைத்துக்கொள்ள வேண்டும் என்று நாம் ஆசைப்படும் செக்ஸ் பற்றிய கருத்துக்கள் எண்ணங்கள் ஆகியவை உடைத்தெறியப்பட வேண்டும் என்பதாலேயே சாருவின் எழுத்து முக்கியத்துவம் பெறுகிறது.

Muthu said...

தங்கமணி,

சாரு எடுத்து எழுதும் இலக்கிய வகைக்கு தமிழ் சூழலில் தேவை உள்ளது.ஆனால் இவரின் எழுத்துக்களுக்கு?

நீங்கள் கூறியது போல் பெண் கவிஞர்களை தலையில் பாலுறுப்புகளை சுமந்து பார்க்கும் சமுதாயம் தான் நம்முடையது.ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு.

ஆனால் எழுத்தாளனை வெறும் எழுத்தை வைத்து மட்டும் அளக்காமல் (நீங்கள் கூட ஒரு பதிவு போட்டிருந்தீர்கள்.நான் ஜெயகாந்தனை பற்றி பின்னூட்டம் கொடுத்திருந்தேன் ) டொட்டாலிட்டியாக பார்க்கும்போது சாரு தோற்கிறார் என்று கருதுகிறேன்.

சில அத்தியாயங்களில் உக்கிரமாக வெளிப்படும் அவர் மற்ற சில அத்தியாயங்களில் மட்டமாக போகிறார்.

கவிதாசரண் இவரை பற்றி கூறிய ஒரு விஷயத்தை என் பதிவில் போட்டிருந்தேன்.இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் இவர் உணர்வுகளை நாம் எப்படி நம்பமுடியும்? (அது மிகச்சிறிய விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது )

Thangamani said...

நானும் சாருவின் எழுத்தில் இருக்கும் ஒரு போலித்தனத்தை உணர்ந்திருக்கிறேன். ஆனால் நமது பெரும்பான்மையான தமிழ் எழுத்தாளர்களின் விமர்சனத்துக்கு (இவர்களின் தகுதியை வைத்துப்பார்க்கையில்) சாரு அப்பாற்பட்டவர். சாருவின் போலித்தனம் சாருவினுடைய பிரச்சனையே அன்றி தமிழ் எழுத்தின் (சூழலின்) பிரச்சனையாக மாறும் அளவுக்கு தமிழ் சூழல் இல்லை. ஞானபீடம் வாங்கிய எழுத்தாளர் தமிழை இழிவு செய்கிறார்; வன்முறையின் சுவடே தெரியாமல் எழுதுவதாக் பெயர் பண்ணிய எழுத்தாளர் ஒரு இனத்தின் மேலேயே துவேஷம் கக்குகிறார். பெண்களை இழிவு செய்வது தொடங்கி சகலவிதமான பாலியல், சாதி, சமய வெறுப்புகளில் பரிதாபமாய் தமிழ் எழுத்துலகம் இருக்கையில் சாருவின் சுயபோலித்தனம் அவரது பிரச்சனையாய் மட்டுமே ஆகிறது.