Thursday, March 09, 2006

என்ன கிழித்தோம் வலைபதிவில்,,.

நான் வலைப்பதிய ஆரம்பித்து ஏறக்குறைய சற்றேறக்குறைய ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. வலைப்பதிவின் மூலம் நாட்டுக்கு பெரிய சேவை ஆற்றுவது போன்ற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை.இன்று பாலசந்தர் கணேசனின் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது. மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம்.

முதலில் பாலச்சந்தருக்கு சில வார்த்தைகள்:

நீங்கள் குமரனை தவறாக புரிந்துகொண்டீர்கள். குமரனை நான் அதிகம் படிப்பதில்லை என்றாலும் அவர் அப்படிபட்டவர் இல்லை என்பது என் கருத்து.நானும் உங்களுக்கு சொல்லவேண்டும் என்று நினைத்ததுதான் இது.சுருக்கமாக செய்திகளை சொல்லி அதன் பிறகு உங்கள் கருத்துக்களை சற்று விளக்கமாக போட்டீர்கள் என்றால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.

தனிப்பட்ட முறையில் உங்களின் எத்தனையோ கருத்துக்களை நான் ரசிப்பதுண்டு. ஆனால் நீங்கள் அதை விளக்காமல் ஒரு வரியில் முடித்துவிடுகிறீர்கள் என்ற வருத்தமும் உண்டு.படிக்கும் நண்பர்களும் உங்கள் பதிவை ஒரு செய்தியாக மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை படிக்காமல் போய்விடுகிற அபாயமும் உண்டு.

தினமும் ஒரு பதிவையோ அல்லது இரண்டு பதிவையோ சற்று பெரிதாக உங்களுக்கே உரிய ஆர்க்யூமெண்ட்டுடன் போட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும் என்பதுதான் என் கருத்து.(விகடனில் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பாணியில்).மற்றபடி உங்கள் உழைப்பையோ முயற்சியையோ நான் குறைத்து மதிப்பிடவில்லை. சிறிய பதிவுகள் சைட் கவுண்ட்டர் ஏற உதவலாம்.ஆனால் நல்ல விவாதம் நடக்காது என்பதும் ஒரு கருத்து.


ஆரோக்கியமான விவாதம் வேண்டுமா அல்லது ஹிட் கவுண்ட்டர் ஏறினால் போதுமா என்பது நீங்கள் முடிவு செய்யவேண்டியது.உங்கள் பதிவு உங்கள் இஷ்டம் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.choice is yours.

உங்கள் பதிவில் பின்னூட்டம் இடமுடியவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி பொதுவாக

மற்றபடி என் பதிவுகளை யாரும் படிக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. பின்னூட்டத்திற்காக நான் எழுதுவதில்லை என்றெல்லாம் யாராவது கூறினால் அது பம்மாத்து .இல்லை நான் உண்மையிலேயே அப்படித்தான் என்றால் நீங்கள் ஞானிதான்.

பல உருப்படியான விவாதங்களை நான் வலைபதிவின் மூலம் அறிந்து கொள்ளமுடிந்தது. என்னை பொருத்தவரை ஸ்டார் வலைப்பதிவாளர்கள் என்று சிலரை குறித்து வைத்துள்ளேன்.அவர்கள் என்ன "குப்பையை" எழுதினாலும் தவறாமல் படிப்பது வழக்கம்.

மற்றபடி பதிவின் தலைப்பை வைத்தே அதில் என்ன உள்ளது என்று மோப்பம் பிடித்துவிடுவேன். 90 சதவீதம் சரியாகவும் சில நேரம் தவறாகவும் ஆகியிருக்கிறது.

வலைப்பதிவிலும் இணையதளத்திலும் நாம் அடிக்கும் கூத்துக்களை பற்றி நான் சில பதிவுகளும் போட்டுள்ளேன்.வலைப்பதிவும் இம்சை அரசனும் என்ற என்னுடைய பழைய நகைச்சுவை பதிவை இங்கே படிக்கவும்.

ஒரு பதிவு மட்டமான தரம் என்று நண்பர்களால் சுட்டிக்காட்டப்பட்டு திரும்ப பெற்றுள்ளேன். தவறை தட்டும் அதே நண்பர்கள் நல்ல பதிவுகளையும் கைநீட்டி வரவேற்க தயங்கியதில்லை.

மற்றபடி அதிக பின்னூட்டம் வருவதுதான் நல்ல பதிவு என்றெல்லாம் நானும் நம்புவதில்லை. நாம் சுவையாகவும் உபயோகமாகவும் எழுதினால் அங்கீகாரம் தானாக வரும் என்பது என் கருத்து.நான் எழுதியதிலேயே சிறந்ததாக நான் நினைக்கும் ஒரு பதிவை பலர் படிக்கவில்லை என்பது எனக்கு குறைதான்.நானும் ஒரு நாள் நட்சத்திரம் ஆவேன்.அப்போது அந்த பதிவை மீள்பதிவு செய்து அந்த குறையை தீர்த்துக்கொள்வேன்.


நானும் எத்தனையோ பதிவுகளை படித்துவிட்டு பின்னூட்டம் இடாமல் சென்றுள்ளேன்.அதற்காக அவையெல்லாம் நல்ல பதிவு இல்லை என்று அர்த்தமா? கிடையவே கிடையாது.நான் பின்னூட்டம் இட்டாலும் அதற்கு அவர்கள் பதில் கண்டிப்பாக கொடுக்கவேண்டும் என்றும் எதிர்ப்பார்ப்பதில்லை.(பெரும்பாலும்)


கண்டிப்பாக நம்மை படிப்பவர் அனைவரும் பின்னூட்டம் இடவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. அப்படி என்றால் நாம் எல்லோருக்கும் பின்னூட்டம் இடவேண்டும். இதுவெல்லாம் அவரவர்களுக்கு உள்ள ஓய்வு நேரத்தை பொறுத்த விஷயம்.


உதாரணத்திற்கு ஆன்மிகம் பற்றி நான் படிப்பதில்லை. சமையல் கலையை பற்றி நான் படிப்பதில்லை.சினிமா பாடல்களை பற்றி அதிகம் படிப்பதில்லை.அரசியல், சமூகம், நகைச்சுவை, இலக்கியம், இணையச்சண்டைகள் (நிஜந்தாங்க) ஆகியவையை விரும்பி படிப்பேன்.


திரும்பி பார்க்கும்போது நானும் 60 பதிவு வரை போட்டிருக்கிறேன் என்று தெரியவருகிறது. இது ஒரு மலரும் நினைவுகள் மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள்.நன்றி.

21 comments:

ஜோ / Joe said...

முத்து,
பாலசந்தர் பதிவில் நான் கீழே உள்ளதை பின்னூட்டமிட பல முறை முயன்றேன் ..அது என் மயிலுக்கே திரும்பி வந்தது..
--------------------------
பாலசந்தர்,
உங்கள் பதிவில் பின்னூட்டம் இடுவதில்லை என்ற முடிவை மீறி இங்கே இடுகிறேன்.

உங்கள் மேல் யாருக்கும் தனிப்பட்ட வெறுப்பு இல்லை.தொடக்கத்தில் நீங்கள் வலைப்பூ ஆரம்பித்த போது ஆர்வமாக வந்தோம் .ஆனால் உப்புச்சப்பில்லாத 2 வரிகளை பதிவுகளாக போட்டு எரிச்சல் படுத்தினீர்கள் .மாற்றிக்கொள்ளுங்கள் என்று உங்களுக்காக சொன்ன போது ,செவிமடுத்தீர்களே தவிர நடைமுறைப்படுத்தவில்லை ."கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்ற ரீதியில் விளக்கமும் கொடுத்து ,இனிமேல் உங்களுக்கு சொல்லி பிரயோஜனம் இல்லை என்ரு உணர்த்தினீர்கள் .இப்போது என்னைப்போல ,குமரனைப் போல பலர் அவ்வப்போது நீங்கள் என்ன காமெடி பண்ணுகிறீர்கள் என்று வந்து பார்த்து விட்டு போவதோடு சரி..பின்னூட்டமிட்டு மாட்டிக் கொள்வதில்லை ..இது தான் நிலைமை..இந்த நிலைமை சிபி-க்கும் வர வேண்டாம் என்று குமரன் சொல்லியிருக்க வேண்டும் .அதற்கு ஒரு தனிப்பதுவு போட்டு வேறு குமரனை மாட்ட வைத்து விட்டதாக நினைப்பு வேறு .அவருக்கு இது தேவை தான்.
---------------------------

சந்திப்பு said...

முத்து! என்ன கிழித்தோம் வலைப்பதிவில் நல்ல தலைப்பு: இன்றைய மீடியாக்கள் (டி.வி., ரேடியோ, பத்திரிகை...) எல்லாம் மக்களின் ஆரோக்கியமான சிந்தனைகளுக்கு எதிராகத்தான் செயல்படுகிறது. இது அரசியல் முதல் கலாச்சாரம் வரை பொருந்தும் என நினைக்கிறேன்.


இப்படிப்பட்ட சூழலில் ஒவ்வொருவருக்கும் எழுத்தார்வமும், கருத்தார்வமும் நிச்சயம் இருக்கும். ஆனால், அதை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்குவதும் உண்டு.


இந்த வகையில் வலைப்பதிவின் பங்களிப்பு இன்றைய ஜனநாயக உலகில் மிக முக்கியமானது. வரவேற்கத்தக்க ஒன்று. முழுமையான ஜனநாயக அம்சத்துடன் இதனை பயன்படுத்த முடிகிறது. அத்துடன் எந்த திசை வழியில் நாம் சமூகத்தை அணுக வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த திசை வழியில் கருத்து ரீதியாகவும் வாதத்தை எடுத்து வைக்க முடிகிறது.


சந்திப்பின் மூலம் உலக வர்த்தக அமைப்புக்கு எதிராகவும், ஜார்ஜ் புஷ் வருகைக்கு எதிராகவும் வலைப்பதிவில் கருத்தை திரட்ட வேண்டும் என்று நிச்சயித்துக் கொண்டு எழுதினேன். அதற்கான சூழலையும் வலைப்பதிவில் உருவாக்க முடிந்தது என்பது என்னுடை கருத்து. இந்த பதிவுகள் எவ்வளவு பேரை சென்றடைகிறது என்பதை விட - குறைந்தபட்சம் சிலரையாவது நம் கருத்துக்கள் சென்றடைகிறதே என்பதைக் கண்டு மகிழ்வதோடு, நம்மையும், நம் கருத்துக்களையும் செழுமைப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்த வலைப்பதிவு செயல்படுகிறது.


இதை விட மிக முக்கியமானது. வலைபதிவின் மூலம் உருவாகும் நட்பு வட்டம் - எதிர்காலத்தில் ஒரு ஆரோக்கியமான புரிதலுடன் கூடிய நட்பு வட்டத்தை நம்முடைய விரல்களிலேயே கொண்டு வந்து சேர்க்கிறது. இந்த வகையில் வலைப்பதிவின் பதிவுகள்... ஒரு புரட்சிகரமானது என்பது என் கருத்து! இந்த மேலும் வளர்க்க வேண்டும். அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நன்பர்கள் எதிர்காலத்தில் சிறந்த பதிவுகளை இடுவார்கள் என்று நம்புவோம்.

முத்து(தமிழினி) said...

WELCOME AND THANKS JOE AND SANTHIPU

குமரன் (Kumaran) said...

முத்து, நான் இன்னும் உங்கள் பதிவை முழுவதுமாக படிக்கவில்லை. படித்தப் பின் பின்னூட்டம் இடுகிறேன்.

இந்தப் பதிவை பாலசந்தர் கணேசன் படித்துக் கொண்டிருக்கலாம் என்பதால் இதனை இங்கே சொல்ல விரும்பினேன்.

நேற்று இரவு அவருடைய பதிவைப் பார்த்துவிட்டு நீண்ட நெடிய விளக்கங்களைப் பின்னூட்டமாக இட்டேன் அவர் பதிவில். ஆனால் அவை எல்லாம் எனக்கே திரும்பி வந்துவிட்டன. அவருக்கு கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது. ஜோவும் அதனையே சொல்லியிருக்கிறார். சரி. என் பெயரில் இடுவது தான் அவருக்கு வரவில்லையோ என்று நினைத்து, Other Optionல் சென்று என் பெயரில் ஒரு பின்னூட்டம் இட்டேன் 'என் முந்தைய பின்னூட்டம் வந்ததா' என்று. அதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை போல் இருக்கிறது.

பாலசந்தர் கணேசன். said...

குமரனின் கருத்து புரியாததனால் அந்த பதிவை எழுதினேன். அவரை மாட்டிவிடுகிறேன் என்று கருதுவது தவறு. விமர்சனங்களை நான் நல்ல முறையில் தான் எடுத்து கொள்கிறேன். நான் குமரன் அவர்களிடம் வேண்டியது எக்ஸ்ப்ளனேஷன் மட்டுமே. முத்துவும் ஜோவும் நன்றாக புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். அனைவரின் கருத்துக்கும் நன்றி. விரைவில் மாற்றங்களை எதிர்பாருங்கள்,

நான் என்னுடைய பதிவில் விட்ட பின்னூட்டத்தை கீழே தந்துள்ளேன்.குமரன் மற்றும் அனைவரின் பின்னூட்டங்களுக்கு நன்றி,

எனக்கு வந்த அனைத்து பின்னூட்டங்களையும் பப்ளிஷ் செய்து விட்டேன். ப்லாக்கர் பிரச்சினை காரணமாக சில பின்னூட்டங்கள் வராமல் போயிருக்கலாம்.

குமரனின் கருத்து ஒரு பாதி புரிந்தது. மறு பாதி புரியவில்லை என்பதனால் தான் இந்த பதிவினை எழுதினேன். அவர் தற்போது கொடுத்த விளக்கத்தை புரிந்து கொண்டேன்.

முத்து தமிழினியும் இதை பற்றி கருத்து சொல்லி உள்ளார். ஜோ -கடற்புரத்தானும் அங்கே பின்னூட்டம் இட்டுள்ளார். அவர் இட்ட பின்னூட்டம் எனக்கு வரவில்லை. அன்பு செல்வன் என்ன கூறினார் என்று தெரியவில்லை. யாரேனும் அவர் கருத்தை கூறினால் எனக்கு உதவியாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களை நல்ல முறையிலேயே எடுத்து கொள்கிறேன். விரைவில் மாற்றங்கள் காண்பீர்கள்.

குமரன் (Kumaran) said...

என் விளக்க பின்னூட்டங்களை பாலசந்தர் கணேசனின் வலைப்பதிவில் இட்டிருக்கிறேன். ஏதோ காரணத்தால் நான் முன்னர் இட்ட பின்னூட்டங்கள் அவருக்கு வரவில்லை என்று சொன்னார். தற்போது இட்ட பின்னூட்டங்கள் அவருக்குக் கிடைத்து அவற்றை அனுமதித்திருக்கிறார்.

குமரன் (Kumaran) said...

முதலில் உங்கள் ஆதரவுக்கு நன்றி சொல்கிறேன் முத்து. மிக்க நன்றி. குமரன் பதிவுகளை அதிகம் படித்ததில்லை; ஆனால் அவர் அப்படிபட்டவர் இல்லை என்று சொல்லிய உங்கள் நம்பிக்கைக்காக ஆவது நான் அப்படியே தொடர்ந்து இருந்து வரவேண்டும். :-)

உங்கள் ஸ்டார் வலைப்பதிவாளர்கள் யார் யார் என்று எனக்குச் சொல்கிறீர்களா? இங்கு சொல்ல விருப்பம் இல்லை என்றால் எனக்கு மின்னஞ்சலில் சொன்னாலும் போதும். என் லிஸ்டிலும் அவர்கள் இருக்கிறார்களா என்று பார்க்கிறேன். :-)

உங்கள் இம்சை அரசன் நகைச்சுவைப் பதிவைப் பார்த்தேன். அது பதித்த காலத்தில் உடனேயே படித்திருந்தால் இன்னும் அதிகமாக ரசித்திருப்பேனோ என்று தோன்றியது. அப்போது தான் நான் தமிழ்மணத்திற்கு வந்திருந்த நேரம் என்பதால் இங்கு நடப்பவைகளைப் புரிந்தும் புரியாமலும் கவனித்துக் கொண்டிருந்தேன்.

இது 60வது பதிவா? 6 மாதத்தில் 60 பதிவுகள். மாதத்திற்கு பத்து என்று அளவாகப் பதித்திருக்கிறீர்கள். :-) வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

ஜோ, நீங்கள் சொல்லுவதை ஏற்றுக் கொள்கிறேன். தப்பித்தவறி ஒரு வார்த்தை தவறாகப் பொருள் படும் படி பொது இடத்தில் கூறியதால் எனக்கு எவ்வளவு நேர விரயம் (குறைந்தது 2 மணி நேரமாவது பாலசந்தர் கணேசன் பதிவில் பின்னூட்டங்கள் இடுவதில் போயிருக்கும். அந்த நேரத்தில் வேறு ஏதாவது உருப்படியாகச் செய்திருக்கலாம்). நீங்கள் சொன்னது மாதிரி எனக்கு இது தேவை தான். நல்ல பாடம் எனக்கு. இனிமேல் வழியில் போகும் ஓணானை எடுத்து மடியில் விட்டுக் கொள்வேனா என்ன? :-)

செல்வன் said...

அன்பின் தமிழினி முத்து,

மிகவும் நேர்மையான கருத்துக்கள்.நான் தமிழ்மணத்தில் முகப்பு பகுதியில் இருக்கும் அனைத்து பதிவுகளையும் அதுபோக நீங்கள் சொன்ன மாதிரி சில நட்சத்திர பதிவுகளையும்(நட்சத்திர பதிவர்கள் என்றால் என் நண்பர்கள்+எனக்கு பிடித்த கருப்பொருளில் எழுதுபவர்கள்+வேடிக்கையான தமாஷ் பதிவர்கள்..என ஒரு லிஸ்டே வைத்திருக்கிறேன்).ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 10, 20 பதிவுகளை படிப்பேன் என நினைக்கிறேன்.அத்தனையிலும் பின்னூட்டம் இடுவது காரிய சாத்தியமா?

பாலச்சந்தர் கணேசன்,நீங்கள் இரு வரிகளில் பதிவு போட்டாலும் சரி.எதாவது வித்த்யாசம் தெரிய வேண்டாமா?எழுத்துக்கு அளவுகோல் ஏதும் கிடையாது.நீங்கள் 1000 வரிகள் எழுதினாலும், ஒரே வரியில் எழுதினாலும் சுவாரசியமாக எழுதினால் நிறைய பேர் ரசிப்பார்கள்.ஒரு சிறு உதாரனம் சொல்கிறேன்.

நிலாரசிகனின் இந்த கவிதையை பாருங்கள்.

எனக்கு பிடித்த கவிதை

அவள் பெயர்

இரு சொல் கவிதை இது.நச் என இருக்கிறது.இம்மாதிரி பதிவு எழுதினால் ஓராயிரம் பின்னூட்டம் வரும்.ஓராயிரம் வரிகள் சொல்லும் உணர்வை இந்த இரு சொற்கள் தருகின்றன.

நீங்கள் சொல்ல வருவதை ஒரு வார்த்தையில் சொன்னாலும் சரி,ஓராயிரம் வார்த்தைகளில் சொன்னாலும் சரி-அதை அழகாக சொல்லுங்கள்,அதை வித்யாசப்படுத்தி காட்டுங்கள்.அழகிய வார்த்தைகள்,நல்ல கருப்பொருள்,ஜோக்,கோபம், என ஏதாவது ஒரு உணர்ச்சியை உங்கள் பதிவில் காட்டுங்கள்.உங்கள் எழுத்து பேச வேண்டும்.வாசகனை அது ஏதோ செய்ய வேண்டும்.

தமிழ்மணத்தில் நாம் அனைவரும் ஒருவர் எழுத்தை இன்னொருவர் விமர்சிப்போம்.கிழித்து தோரனம் கட்டுவோம்,பிடித்தால் மடியில் எடுத்து வைத்தும் கொஞ்சுவோம்.அப்படி செய்தால் தான் எழுத்து செழிக்கும்.எழுத்தாளன் செழிப்பான்.

நீங்கள் ஸ்போர்டிவாக இதை எடுத்துக்கொண்டதை எண்ணி மகிழ்கிறேன்.நாம் அனைவரும் என்றும் நண்பர்களே என்ற உணர்வில் என்றும் பழகுவோம்.

அன்புடன்
செல்வன்

பாலசந்தர் கணேசன். said...

அனைவரின் பின்னூட்டத்திற்கு நன்றி.
திரு. குமரன் அவர்களுக்கு நான் மீண்டும் கூற விரும்புவது: நான் உங்களிடம் வேண்டியது விளக்கம் மட்டுமே ஏனெனில் நீங்கள் என்ன அர்த்ததில் கூறினர்கள் என்பதை நான் தெளிவாக புரிந்து கொள்ள விரும்பினேன்.
ஆனால் முத்து( தமிழினி) நான் எழுதியது வருத்ததை தந்ததாக கூறியுள்ளார். நான் குமரனை வம்புக்கு இழுக்க வில்லை.அல்லது அவருக்கு சிரமம் தரும் நோக்கத்தோடும் எழுதவில்லை.

எனக்கு தமிழினியும் ஜோவும் தான் என்னை தவறாக புரிந்து கொண்டு ஒவர் ரியாக்ட் செய்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. இந்த பின்னூட்டம் இதற்கு முற்று புள்ளி வைக்கும் என நினைக்கிறேன்.

செல்வன் said...

அன்பின் முத்து

உங்கள் 23ம் குலிகேசி பதிவை இப்போது தான் படித்தேன்.சத்தியமாக சொல்கிறேன்.இது போல் பதிவை நான் எங்கும் படித்ததில்லை.இந்த 2 வருடத்தில் தமிழ்மணத்தில் நான் படித்ததிலேயே மிகவும் சூப்பரான பதிவுகள் என என் மனதில் நிற்பவை இதுவும் ஜோ எழுதிய "மதியுரை மறவேன் ஜோ பேருரை" பதிவும் தான்.

மனம் கனிந்த வாழ்த்துக்கள்.மிகச் சிறந்த எழுத்து நடை அந்த பதிவில் உள்ளது.

வெங்காயம் said...

பாலசந்தரின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இது:-

குமரன் மற்றும் பெனாத்தல் சுரேஷ் ஆகியோருக்கு,

வெங்காயத்தின் அநேக நமஸ்காரங்கள்.

கடுகு சிறுத்தாலும் காரம்போகாது மற்றும் குறுகத்தரித்த குறள் என்று நான் பாலசந்தர் பதிவைக் கூறியது கண்டு எள்ளி நகையாடி நக்கல் தொனியில் பதிந்து இருக்கிறீர்கள். அப்படி என்ன குறை கண்டீர்கள் அவர் பதிவுகளில்? அளவில் சிறியதாக இருந்தாலும் அவர் தான் சொல்ல வந்ததை முறையாக நாணயமாக சொல்கிறார். உங்களுக்கும் எனக்கும் பயந்து கொண்டு அவரை பக்கம் பக்கமாக எழுதிச் சாய்க்கச் சொல்கிறீர்களா? படிப்பவருக்கு ஒரு அலுப்பினைத்தராதா பக்கம் பக்கமான பதிவுகள்?

கொஞ்சம் எழுதினால் என்ன நிறைய எழுதினால் என்ன? நல்ல கருத்தினை யார் எழுதினாலும் ரசிப்பேன் நான்.

உங்களைப்போல குழுவாக சேர்ந்து கொண்டு 'என் பதிவில் நீ பின்னூட்டினால் நான் திரும்ப ஊட்டுபேன்' என்ற அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டு அவர் எங்கும் சென்று ஊட்டுவதில்லை.

இலவசகொத்தனார் முதல் குமரன் வரை, பினாத்தல் முதல் ராமநாதன் வரை அதிகமான பின்னூட்டங்கள் எப்படி எடுப்பது என ஒரே பின்னூட்ட பைத்தியமாக அலைந்தீர்களே! அதனைத்தான் நான் இங்கு நன்றியோடு நினைவுகூறினேன்.

எங்கே நீங்களே உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், நீங்கள் அதிகமாக பின்னூட்டுவது எப்படி என பதிவிடவில்லை என? அவ்வாறு இல்லையென நீங்கள் மறுக்குங்கால் தகுந்த ஆதாரத்துடன் எடுத்துப்போட நான் ஆவல் கொண்டுள்ளேன்.

எனக்கும் பாலசந்தருக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. சிபி தன் வலைப்பதிவில் கொஞ்சமாக எழுதினால் நண்பர் என்ற முறையில் கண்டிக்க குமரனுக்கு உரிமை உண்டு. அதற்காக பாலசந்தர் பெயரினை பயன்படுத்தியது கண்டிக்கத் தகுந்தது.

உங்களைப்போல நானும் பாலசந்தரும் நண்பரில்லை. எதிரியும் இல்லை. சக பதிவர்கள். உங்களைப்போல சாதிக்காகவோ மதத்துக்காகவோ எழுதவில்லை. தொண்டரடிப்பொடிகளோ நாங்கள் இல்லை. எங்கள் மனமகிழ்ச்சிக்காக எழுதுகிறோம். குறைவாக எழுதுகிறோம் நிறைய எழுதுகிறோம் என மிரட்டிப்பேச உங்களுக்கு அதிகாரம் யார் கொடுத்தது?

Ram.K said...

நாலு சங்கிலிப் பதிவில் எப்படி நாலு விஷயமும், நாலு வலைப்பதிவாளர் இணைப்பு முக்கியமோ - அதுபோல வலைபதிவு (அ) வலைப்பூ என்று வரும்போது பின்னூட்டம் மிக முக்கியம். பின்னூட்டம் தேவையில்லை, முக்கியமாகக் கருதவில்லை என்றால் பின்னூட்டம் அளிக்கலாம் என்ற ஆப்ஷனையே எடுத்துவிட்டு வலைப்பதிப்பிக்கலாமே. அல்லது திண்ணை போன்ற இலக்கிய இணையத் தளங்களில் எழுதலாமே.
வலைப்பூ எதற்கு ? எனவே, வலைப்பூ எழுதவதில் பின்னூட்டம் பெறும் அம்சமும் முக்கியம் என்று நான் எழுதிய பின்னூட்டம் பாலச்சந்தர் கணேசனின் குமரன் பதிவில் வரவில்லை.

உங்கள் பதிவும் இது தொடர்பாகப் பேசுவதால் இங்கு பதிகிறேன், நன்றி.

Ram.K said...

முத்து(தமிழினி)

இப்பதிவிற்குப் பொறுத்தமான உங்கள் இம்சை அரசன் பதிவை ரெஃபர் செய்தது அருமை.

குமரன் (Kumaran) said...

பாலசந்தர் கணேசன். முத்துவும் ஜோவும் ஓவர் ரியாக்சன் கொடுத்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. உங்கள் பதிவில் வரும் அனானிமஸ் பின்னூட்டங்களும் வெங்காயம் என்ற பெயரில் வரும் பின்னூட்டங்களும் தான் ஓவர் ரியாக்சன் கொடுப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

செல்வன் said...

அன்பின் வெங்காயம்,

குமரன் எந்த இடத்திலும் பாலச்சந்தர் கணேசனை மிரட்டவில்லை.குமரன் சொன்னது அவருடைய கருத்து.அதை ஏற்றுக்கொள்வதும்,தள்ளி விடுவதும் முழுக்க முழுக்க பாலச்சந்தரின் விருப்பம்.இதில் மிரட்டல் எங்கிருந்து வந்தது?

குமரன் அதிக பின்னூட்டம் பெறுவது எப்படி என எழுதியது உண்மைதான்.ஆனால் அது தமாஷ் பதிவு.அதை அனைவரும் ரசித்ததற்கு சாட்சி அதற்கு வந்த 100க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள்.நாங்கள் அதை தமாஷாக தான் எடுத்துக்கொண்டோமே தவிர நீங்கள் சொல்வது போல் பின்னூட்ட வெறி என எங்களுக்கு தோன்றவில்லை.

டீம் போட்டு பின்னூட்டத்துக்கு அலைகிறார் என சொல்வது சிரிப்பை தான் வரவழைக்கிறது.நல்ல நகைச்சுவை என்று மட்டும் சொல்லி விடுகிறேன்.

சாதி பற்றி குமரன் எழுதியதில்லை.நாங்கள் யாருமே எழுதியதில்லை.மதம் பற்றி எழுதுவதில் என்ன தவறு கண்டீர்கள்?குமரன் பதிவில் மதவெறி இருக்கிறதா,மற்ற மதங்களை தூஷிக்கிறாரா?இல்லையே. அவர் உயர்வாக எண்ணும்,பின்பற்றும் கொள்கையை பற்றி அவர் எழுதினால் உங்களுக்கு கோபம் வருவது ஏன்?அவர் எழுதியதில் ஏதாவது மாறுபட்ட கருத்து இருந்தால் அதை தாராளமாக கேளுங்கள்.பதில் தர அவர் எப்போதும் தயாராக இருப்பார்.

முத்து(தமிழினி) said...

நண்பரே வெங்காயம்,

தவறாக நினைக்கவேண்டாம்.யாரும் நண்பர் பாலச்சந்தர் கணேசனை மிரட்டவில்லை. ஒரு நண்பருக்கு நல்ல அறிவுரையாகத்தான் கூறினோம். நீங்களே கூட நல்ல பல பின்னூட்டங்களை கொடுக்கிறீர்கள்.

"முதுகு சொரிந்தல்" விஷயங்களை நீங்கள் இதனுடன் போட்டு குழப்பிவிட்டீர்கள்.நான் கூட உங்கள் கருத்தை ஒட்டி அதைப்பற்றி எழுதிய பதிவு பலரின் மனதை புண்படுத்திவிட்டது.நாம் கணக்கு தீர்ப்பதைவிட நண்பர்களின் மனம் புண்படக்கூடாது என்பதால் நான் அதை நீக்கினேன்.

குமரனின் கருத்தை தனிபதிவாக எழுதி அதற்கு 20 + குத்தும் குத்தியிருந்தது ஏதோ அவர் பஞ்சமாபாதகம் புரிந்தது போல் இருந்தது. அதற்காகத்தான இந்த பதிவை எழுதினேன்.

பின்னூட்டங்களில் அருமையாக எழுதும் நீங்கள் தனிப்பதிவு தொடங்கி எழுதும்படி அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

பாலச்சந்தருக்கும் எனக்கும் யாருக்கும் பின்னூட்ட ஆசை இருக்கத்தான் செய்கிறது என்று இந்த பதிவிலே கூறி உள்ளேன். பாஸிடிவ்வாகத்தான் எழுதிஉள்ளேன்.அவர் பதிவில் நாங்களும் பின்னூட்டம் இடவேண்டும் என்ற ஆசையும் ஆதங்கமும் தான் காரணம்.

வெங்காயம் said...

குமரன், செல்வன், முத்து ஆகியோருக்கு அநேக நமஸ்காரங்கள்.

சண்டை வளர்க்க அல்ல இப்பதிவு.

நன்றாக சிந்தித்துப் பாருங்கள். என பதிவில் உட்பொருள் புரியும் உங்களூக்கு.

இப்போது உங்கள் வழிக்கே வருகிறேன்.

பாலசந்தர் கணேசன் அவர்கள் சிறிய பதிவாக இடுகிறாரா? உடனே அவருக்கு ஆலோசனையாகவோ அல்லது எதிர்க்கருத்தாகவோ அவரின் பதிவில் தாங்கள் மறுமொழி இடலாம். அப்படி இட்டவர்கள் பலர். ஜோ, போட்டீகடை உட்பட. அவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசவில்லை. அவர்கள் துணிவினை நான் பாராட்டுகிறேன்.

ஆனால் குமரன் செய்தது என்ன? இன்னொருவரின் பதிவுக்கு சென்று நீ பாலசந்தரைப்போல் எழுதாதே! அப்படி எழுதினால் அவரின் கதிதான் உனக்கும் என மிரட்டி இருக்கிறார். பாலசந்தருக்கு அப்படி என்ன பெரிய கதி ஏற்பட்டு விட்டது?

பின்னூட்டத்தினை விளையாட்டு என்கிறார் செல்வன். அதற்கும் சிறு பிள்ளைகளின் விளையாட்டிற்கும் என்ன வித்தியாசம். நல்ல பதிவுகளாக நாம் இட்டால் நிச்சயம் மறுமொழி நம்மைத் தேடி வரும். தேன்கூட்டுக்குப்போக தேனீக்களுக்கு வர சொல்லித்தர வேண்டுமா என்ன?

யார் நல்ல பதிவுகளாக இடுகிறார்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது? நன்றாக யோசித்துப் பாருங்கள். நல்ல பதிவாளர்கள் நினைவுக்கு வருவார்கள்.

முத்து என்னை வலைப்பதிவு தொடங்கச் சொல்லி இருக்கிறார். மிக்க நன்றி உங்களின் ஊக்கத்திற்கு. உங்களின் பதிவில் நான் இதற்கு முந்தைய பல பதிவுகளில் பின்னூட்டம் தந்து இருக்கிறேன். இங்கு நடக்கும் கூத்துக்களைக் கண்டு மெய்மறந்து நிற்கிறேன்.

முத்து(தமிழினி) said...

வெங்காயம்,

வருத்தம் வேண்டாம்.விடுங்கள்.நீங்கள் சொல்வதிலும் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

திரு/திருமதி. வெங்காயம் அவர்களுக்கு,

அன்பன் குமரனின் அநேக கோடி நமஸ்காரங்கள்.

//ஆனால் குமரன் செய்தது என்ன?//

குமரன் செய்தது என்ன என்பதை பாலசந்தர் கணேசனைக் கேளுங்கள். இல்லை உங்களுக்கே நேரம் இருந்தால் பின்னூட்டத்தில் திட்டுவதை விட்டு விட்டு அந்த நேரத்தில் பாலசந்தரின் பழைய பதிவுகளைப் பாருங்கள். எங்கெங்கு நான் பின்னூட்டம் இட்டுள்ளேன். இட்ட கருத்துக்கள் என்ன என்று.

ஜோ சொன்ன மாதிரி நேரிடையான விமர்சனத்தை அவருடைய பதிவிலேயே அவருக்கு நேரடியாகவே பல முறை கொடுத்தாகிவிட்டது. இனிமேல் சொல்லுவதில் பொருளில்லை என்ற நிலையும் வந்தாகிவிட்டது. கடைசியாக சிபி பதிவில் அவருக்கு சொன்னதை மட்டும் பிடித்துக் கொண்டு அதற்கு உங்களுக்குத் தோன்றும் பல விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டு உங்கள் நேரத்தையும் எல்லாருடைய நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். சம்பந்தப் பட்டவர்களே 'புரிந்து கொண்டேன்' என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளும் போது இதனை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு போவது ஏன்?

முத்து(தமிழினி) said...

அன்புள்ள வெங்காயம் அண்ட் குமரன்,

இந்த வாதத்தை வளர்க்கவேண்டாம்.நண்பர்களுக்குள் எதற்கு இந்த விவாதம்? இதனால் நாம் அடைவது ஒன்றுமில்லை.இது முழுக்க முழுக்க ஒரு misunderstanding தான்.இந்த பதிவையே நான் எடுக்க எண்ணியுள்ளேன்.

எனக்கு வெங்காயமும் வேண்டும். குமரனும் வேண்டும். பாலச்சந்தரும் வேண்டும். ஜோவும் வேண்டும்.

தமிழ்வெளியை பார்த்தீங்களா?