Friday, October 28, 2005

கீர்த்தனாவிற்கு தமிழ் எழுத படிக்கத்தெரியுமா?

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதிலேயே ஏதோ குளறுபடி இருப்பதாக சில வட்டாரங்களில் பிரச்சனை எழுப்பப்பட்டது. தமிழின் தொன்மை குறைவாகவும் தவறாகவும் கணிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் கூறிவந்தன.நேற்று மீண்டும் ஒரு அறிவிப்பு வந்துள்ளது.இதை பற்றிய விஷயங்கள் வெவ்வேறு பத்திரிக்கைகளில் வெவ்வேறு விதமாக கொடுக்கப்பட்டுள்ளது. செம்மொழி தகுதி ஆயிரம் ஆண்டுகளில் இருந்து ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக அதிகரிகப்பட்டுள்ளதாக ஒரு தகவலும் இரண்டாயிரம் ஆண்டுகளில் இருந்து ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவலும் தெரிவிக்கின்றன.எது உண்மை என்பது தமிழன்னைக்குத்தான் வெளிச்சம். இப்பொழுது தேசிய அளவில் உள்ள கூட்டணி அரசால்தான் இது போன்ற அங்கீகாரம் தமிழுக்கு சாத்தியம் ஆகியுள்ளது. இதை பயன்படுத்தி இந்திய தேசிய மொழிக்கொள்கையையே மறுபரிசீலனை செய்ய சொல்லி கேட்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.

சமீபத்தில் கன்னட மொழிக்கு கூட செம்மொழி அந்தஸ்தை கேட்டு கோரிக்கைகளை இங்கு பார்த்தேன்.அப்படியென்றால் கன்னடம் தமிழில் இருந்து தான் பிரிந்தது என்பது உண்மையா? பொய்யா? என் பிரச்சனை கன்னட மொழி செம்மொழி ஆவது இல்லை.
கன்னடர்களின் புத்திசாலித்தனத்தின் மேல் எனக்கு நம்மவர்களின் புத்திசாலித்தனத்தை விட மதிப்பு உள்ளது.கண்டிப்பாக அவர்கள் தங்கள் மொழிக்கு அந்த அந்தஸ்தை நம்மை விட சுலபமாக பெற்றுவிடுவார்கள.ஆகவே சர்வ சமாதான வாதிகள் கச்சை கட்ட வேண்டாம். கன்னடம் மற்றும் தெலுங்கும் செம்மொழி ஆக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இத்தனை செழுமை உள்ள தென்னிந்திய மொழிகள் இந்தி ஆதிக்கத்தால் அழிய வேண்டுமா?

எங்கள் வங்கியில் என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் கன்னடம் மட்டும் அல்ல.தமிழும் கூட சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்ததே என்பதாக கூறினார். நானும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை இணையத்தில் படித்தேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதெல்லாம் சம்ஸ்கிருதத்தால் மிகவும் குறைவாக பாதிக்கப்பட்ட மொழி என்றே தமிழை கூறியிருக்கிறார்கள். கன்னடம்,தெலுங்கு மற்றும் மலையாளம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன்.

இந்தி இந்தியா முழுவதற்குமான மொழியாக அறிவிக்கப்பட்டு பரப்பப்பட்டதின் நோக்கம் நாட்டு மக்கள் அனைவரும் ஒரே மொழி பேசவேண்டும்,அது நமது மொழியாக இருக்கவேண்டும்,ஆங்கிலத்தை ஒழிக்க வேண்டும் என்பது தான் என்றால் சுதந்திரம் கிடைத்து இந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் ஆங்கிலத்தை ஒழித்து விட்டோமா?அல்லது ஆங்கிலத்தைத்தான் ஒழிக்க முடியுமா?எதற்காக ஒழிக்கவேண்டும் ஆங்கிலத்தை?

இன்று இந்தியா முன்னேறி விட்டது .2020 ஆம் ஆண்டு வல்லரசு ஆகி விடும் என்றெல்லாம் கூக்குரல்கள் எழுகின்றன. முன்னேற்றம் என்று நம்மால் கூறப்படும் இந்த விசயங்கள் எதனால் சாத்தியப்பட்டது? கணிப்பொறி துறைக்கு ஒரு முக்கிய பங்கு என்றால் அதில் இந்தி என்ற மொழியின் பங்கு என்ன? ஆங்கிலத்தின் பங்கு என்ன?

மற்ற தொழில்துறைகளும் உலகளாவிய போட்டி,சந்தை பொருளாதார சூழ்நிலை இவற்றில் தாக்குப்பிடித்து நன்றாக செயல்படுகின்றன என்றால் அதில் ஆங்கிலத்தின் பங்கு என்ன? இந்தியின் பங்கு என்ன?இந்திய அளவில் வேலைவாய்ப்பில் தமிழன் இந்தி தெரியாததால் பின்னுக்கு தள்ளப்படுகிறான் என்பதாக ஒரு பேச்சு உண்டு.ஒரு சாரார் அதை முனைந்து பிரச்சாரமும் செய்து வருகின்றனர். பலரும் அதை நம்பவும் செய்கின்றனர். சமீபத்தில் கட்சி தொடங்கிய விஜுயகாந்த் கூட அந்த எண்ணத்தை ஓட்டுக்களாக்க எண்ணி தமிழும் படிப்போம்,இந்தியை வரவேற்போம் என்று சூளுரை(!)த்திருக்கிறார் இந்தி தெரியாததால் தமிழன் வேலை வாய்ப்புகளை இழந்துக்கொண்டு இருப்பது எந்தெந்த துறைகளில்? அந்த துறைகளில் ஆங்கிலமே இல்லையா? வேலை வாய்ப்புக்காக மட்டும் இல்லாமல் ஒரு தொடர்பு மொழியாகவும் இந்தியை பயன்படுத்தலாமே என்றால் ஏன் ஆஙகிலத்தை வடஇந்தியர் உடபட அனைவரும் பயன்படுத்தக்கூடாது? யாரும் யாருடைய தாய்மொழியை படிக்கவேண்டாம் என்று கூற வில்லையே. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையையும் படிக்க எந்த தடையும் இருக்கக்கூடாது.எத்தனையோ பேர் பிரஞ்சு,ஜெர்மன்,இத்தாலியன் போன்ற மொழிகள் தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்ளவிலலையா?

சிந்திக்க தெரிந்த தமிழர்களை பார்த்து நான் கேட்கும் கேள்வி என்னவென்றால் ஆங்கிலத்தை ஒழிக்க முடியாது என்பதை சுதந்திரம் கிடைத்த இந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் அனைவரும் உணர்ந்திருப்போம். ஆங்கிலத்தை ஒழிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எந்த ஒரு இனத்திற்கும் தன் தாய்மொழியை தவிர அனைத்து மொழிகளும் அன்னிய மொழிகள் தான்.தமிழனுக்கும் அப்படித்தான்.தமிழை தவிர மற்ற அனைத்து மொழிகளும் அவனுக்கு அன்னிய மொழிகள் தான். அவற்றில் அவன் எதை தேர்ந்தெடுத்து கற்கிறான் என்பது அவனின் விருப்பத்தை பொறுத்தது. அரசாங்கத்தின் பொதுவான நிலைப்பாடு தன்னுடைய அனைத்து மக்களுக்கும் ஒரு பொதுவான தளத்தை அமைத்துக்கொடுப்பதாக இருக்கவேண்டும். அந்த பொதுவான மொழியானது அவர்கள் வாழ்வுக்கு வளம் சேர்க்கவேண்டும்.

அவரவர்கள் அவரவர் தாய்மொழியை கண்டிப்பாக கற்க உரிமை உண்டு. பொது மொழியாக ஆங்கிலத்தை,வைத்துக்கொள்வோம். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உபயோகப்படுமே.(சில அறிவு ஜுவிகள் கேட்பார்கள், பிரான்ஸில் நீ ஆங்கிலத்தில் பேச முடியாது என்று. நான் கேட்கிறேன், பிரான்ஸில் இந்தியை வைத்துக்கொண்டு நீ என்ன புடுங்குவாய்? எந்த ஊருக்கும் உன் தேவைக்கு நீ போனால் நீதான் அவர்கள் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.(நான் பணி நிமித்தமாக பம்பாயில் இருந்தபோது தேவையான இந்தி வார்த்தைகளை கற்றுக்கொண்டேன்.இப்போது கன்னட வார்த்தைகள்)

மும்பயில் நாரிமன் பாய்ண்டில் இட்லி விற்று பிழைக்கும் தமிழன் பள்ளியிலா படித்தான் அவன் இந்தியை?. வடநாடுகளில் எண்ணற்ற உள்ளடங்கிய இடங்களுக்கு போர்வெல் லாரிகளில் ராடு தூக்கும் தமிழர்கள் இந்தியை பள்ளிகளிலா படித்தார்கள்?

தமிழை நம்மை விட புலம் பெயர்ந்த தமிழர் தமிழை நன்கு காப்பாற்றுவதாக ஒரு கருத்து உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். பிரச்சனை நாம் நினைப்பதை விடவும் தீவிரமானது. இப்பொழுதே சென்னை போன்ற மெட்ரோக்களில் இளைய தலைமுறையினர் பல பேர் தமிழ் எழுத் படிக்க தெரியாமல் வளர்ந்துவருகின்றனர்.(நடிகர் பார்த்திபன் தன் மகள் கீர்த்தனாவிற்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்று குமுதத்தில் கூறி வாங்கி கட்டி கொண்டது தெரிந்திருக்கலாம்.எழுத்தாளர் சுந்தர ராமசாமி கூட இதை பற்றி வருத்தப்பட்டதை இவ்வார திண்ணையில் சிவக்குமார் எழுதியுள்ள கலந்துரையாடல் பதிவில் படிக்கலாம்)இது கொஞசம் கொஞசமாக அதிகரித்து ஒரு கட்டத்தில் எதற்கு தமிழ்? ஆங்கிலமும் இந்தியுமே போதுமே என்பார்கள். அதற்கும் ஒத்து ஊத மக்கள் இங்கு உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்.எங்குமே அப்படிப்பட்ட ஒரு குழு உண்டு. மொழி விஷயத்தில் இவ்வளவு சீரியஸாக இருக்கவேண்டியதில்லை என்று இவர்கள் கூறுவார்கள்.இந்த பதிவில் உள்ள ஆங்கில வார்த்தைகளை பட்டியல் இடுவார்கள். அவர்களுக்காக இது எழுதப்படவில்லை. தமிழ் மணத்தில் தமிழின் மேல் பற்றுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக எழுதப்பட்டது.

வாழ இடம் இல்லை என்றாலும் கூட ஒரு இனம் பிழைத்துக்கொள்ளும். ஆனால் ஒரு இனத்தை ஒழிக்க வேண்டுமானால் அதன் மொழியை ஒழித்தால் போதும் என்பார்கள்.பல்லாயிரம் வருட பாரம்பரியம் உள்ள மொழி இது.வள்ளுவன்,கம்பன்,பாரதி கண்ட மொழி இது .இதை காப்பது நமது கடமை. வேற்று மொழியை எதிர்க்க வேண்டாம்.ஆனால் தாய்மொழியை மிதித்து மற்ற மொழியை கொண்டாடவும் வேண்டாம்.

பொதுவாக தமிழ்,தமிழ் என்று ரொம்ப மொழி பற்றில் ரொம்ப உருகுவதாக நம் மேல மற்ற மாநிலத்து காரர்களுக்கு ஒரு எண்ணம் உண்டு. அதை அவர்கள் சொல்லவும் செய்கிறார்கள்.அதை அவர்கள் கிண்டலாக நினைக்கிறார்களா அல்லது நமக்கு நம் மொழி மேல் இருக்கும் பிடிப்பை பாராட்டுகிறார்களா என்று தெரியவில்லை. இந்தியாவிலேயே வெளி மாநிலங்களில் வாழ நேர்பவர்களுக்கு இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம்.இப்போதெல்லாம் மொழியை பற்றியும் மொழிபற்றை பற்றியும் பேசுவது எழுதுவது என்பது ஏதோ கெட்டவார்த்தை என்பது போல் சில அறிவுஜுவிகளால் கட்டமைக்க பட்டுள்ள நிலையில் இதை பற்றிய நண்பர்களின் கருத்துக்களை அறிய ஆவல்.

9 comments:

டிபிஆர்.ஜோசப் said...

நல்லா அறிவுபூர்வமா சிந்திச்சி எழுதியிருக்கீங்க முத்து.

வாழ்த்துக்கள்.

ஆனால் ஒன்று ஹிந்தி, ஹிந்தி என்று வடநாட்டவர் மற்றவர் மீது அதை திணிக்க முயன்றதால்தான் நம்மைப் போன்ற ஹிந்தி பேசாத மக்களுக்கு அதன்மேல் ஒரு வெறுப்பு வந்தது.

அதேபோன்றுதான் தமிழும். தி.மு.க மற்றும் ம.தி.மு.க, ப.ம.க போன்ற கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு தமிழுக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்தினால் போதும் என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

தமிழ் வளர்க்கப்படவேண்டும் என்பதில் இருவேறு கருத்துகளிருக்க வாய்ப்பில்லை.

ஆனால் அதேசமயம் இன்றைய தலைமுறைக்கு தமிழ் எந்த அளவுக்கு அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் உதவியிருக்கிறது என்பதுதான் பிரச்சினை.

தேவைக்கதிகமான திறமைகளிருந்தும் கிராமப்புற இளைஞர்கள் இன்று வேலை வாய்ப்பு இல்லாமல் அவதிப்படுகின்றனரென்றால் அவர்களுக்கு ஆங்கிலப்புலமை குறைவாயிருப்பதுதான் முதன்மையான காரணம்.

ஆகவே தமிழை ஒரு மொழியாக மட்டும் பார்ப்போம், படிப்போம். ஆனால் ஆங்கிலத்தை வாழ்வளிக்கும் மொழியாக தேர்ந்தெடுப்போம்.

Muthu said...

கழகங்கள் செய்யும் கலாட்டாவை விடுங்க. ஆங்கில அறிவு வளர வேண்டும் என்றுதான் நானும் கூறுகிறேன்.ஒரு படி மேல் போய் தாய்மொழி அவரவர்க்கு.தொடர்பு மொழிக்கு அனைவருக்குமே உபயோகமான ஆங்கிலம என்று தான் நானும் நினைக்கிறேன்.நடுவே எதற்கு இந்தி என்பதுதான் என் கேள்வி.கழகங்கள் செய்யும் கலாட்டாவை வைத்து தமிழ் பற்றையே கொச்சை படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன.அது தவறுதானே. அவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக அனைத்துமே தவறாகாது.அது போல் அவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக அனைத்துமே சரியாகாது.
thank you for visiting and encouraging words..you are G.M(I.T) or AGM ?

Anonymous said...

How could chinese and japanese grow without much english proficiency? My point is english proficiency alone doesn't help; it is the basic attitude towards country and growth that matters; Our english profieciency has helped to garner all major jobs only and not the businesses!
Regards
S.J.Babu

Sudhakar Kasturi said...

அன்பின் முத்து,
நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
ஜோசப் அவர்கள் சொன்னது போல ஆங்கிலம் வாழ்க்கைக்கு வழிவகுக்கும் மொழியாகப் பார்க்கலாம். ஆனால் தமிழை ஒரு மொழியாக மட்டும் பார்ப்பதில் சில குறைகள் உள்ளன. தாய்மொழியென்பது வேலை வாய்ப்பைத் தரும் மொழிமட்டுமல்ல. அது உணர்வில் கலந்தது ( இது ஏதோ உணர்ச்சி வசப்பட்டு மேடையில் உளறும் அரசியல்வாதப் பேச்சல்ல!).
தமிழுக்கு மரியாதையும் , அன்பும் நாம் செலுத்தப் பல காரணங்கள் இருக்கின்றன. அதன் செழுமை பற்றி நான் பேசுவது மிக மிக சிறுபிள்ளைத்தனமாக அமையும். கொங்குதேர் வாழ்க்கையாக நாம் அதனை மரபுச்செய்யுள்களிலிருந்து, புதுக்கவிதை வரை அனுபவிக்க முயலவேண்டும். இலக்கிய ரசனை என்பது அனைவரிடமும் இருக்கும். அளவுகள் மாறுபடலாம்.
குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஒரு புராதனக் கலைச்செல்வத்தையும், மொழிச்செல்வத்தையும் தெரியப்படுத்துவதில் எந்த சிரமமும் இருப்பதாக எனக்குப் படவில்லை.
அன்புடன்
க.சுதாகர்

G.Ragavan said...

நல்ல கட்டுரை முத்து. சொல்ல வந்ததைச் சொல்லி விட்டீர்கள்.

Muthu said...

நன்றி திரு சுதாகர்

உணர்வுபூர்வமான உங்களின் விளக்கத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி கூறி வரவேற்கிறேன்.

நன்றி திரு ராகவன்

Costal Demon said...

மிகவும் நல்ல பதிவு... இந்தியா மாதிரியான பல்வேறு மொழிகள் பேசப்படும் நாட்டிற்கு தேசிய மொழியென்று ஒரு மொழியே தேவையில்லை. தேசிய மொழி என்ற ஒரே காரணத்திற்காக இந்தியைக் கற்க வேண்டும் என்பவர்கள் வீடுகளில் நாய் வளர்ப்பதற்குப் பதிலாக புலியை வளர்க்கட்டும். அதுதானே நமது தேசிய விலங்கு...???

Unknown said...

கலைஞர் அரசு இந்தி திணிப்பை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழை செம்மொழியாக்கினால் போதாது.அதை உலக அளவில் பல்கலைகழகங்களில் சொல்லித்தர நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.50 லட்சம் தந்தால் இந்தியாவின் எந்த பல்கலைகழகத்திலும் தமிழுக்கு ஒரு chair ஒதுக்குவார்களாம்.அதை உடனே செய்ய வேண்டும்.சமஸ்கிருதம்,ஈப்ரு,பாரசீகம் போல் உலக அரங்கில் தனக்கான இடத்தை தமிழ் பெற என்னென்ன செய்யவேண்டுமோ அதை கலைஞர் அரசு உடனே செய்ய வேண்டும்.

கலைஞருக்கு பிறகு ஆட்சிக்கட்டிலில் ஏறப்போகும் தமிழறிஞர் யாரும் தொலை தூரத்தில் கண்ணுக்கு தெரியவில்லை.

விரைந்து செயல்படுங்கள் கலைஞரே

தருமி said...

நான் பல இடங்களிலும் வைக்கும் 'ஒப்பாரி'யை இங்கு மட்டும் வைக்காமல் போகலாமா?

இன்றைய நிலையில் நம் இளைஞர்களில் பலருக்கும் பயிற்று மொழியான ஆங்கில மொழியறிவு மிக மிகக் குறைவு. அவர்களுக்கு தாய்மொழியிலாவது திறனுண்டா என்றால் அதுவும் இல்லை. அடிப்படை மொழியறிவும் அதனால் வரும் communication skill - பேச்சாற்றலுக்கும் எத்தகைய சிறப்பிடமும் இன்றி, மாணவர்களின் தலையில் வெறும் சேதிகளை எவ்வளவு ஏற்ற முடியும் என்பதிலேயே நம் பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்கள் முனைந்து செயல் படுகின்றன.

மொழிக்கல்வியைப் பயிற்றுவிக்கும் முறைகள் திருத்தப்பட வேண்டும். என்று workbook என்று ஆங்கிலப்பாடங்களுக்கு readymade notes வந்தனவோ(20 வருடங்கள் இருக்குமோ?) அன்றே ஆங்கில மொழிக் கல்விக்கு சாவு மணி அடித்தாகி விட்டது.

மொழிக் கல்வி சிறப்பாக மாறி, பயிற்று மொழி தாய்மொழியில் இருந்தால் படித்த பிறகு தேவைக்கேற்ப மொழியைத் தேர்ந்த்டுப்பது கடினமாக இருக்காது. ஆனால் நன்கு தெரியும் இது நடக்கப் போவதில்லை!