ஒரு பின்னூட்டத்தில் நண்பர் ஒருவர் வெளிநாட்டில் உள்ளவர்கள் இங்கு இந்தியாவில் வீட்டு லோன் வாங்கவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று எழுத சொல்லி கேட்டிருந்தார்.நான் வங்கியில் வேலை செய்வதால் அவருக்கு இந்த கேள்வி தோன்றி இருக்கிறது. வீட்டுவசதி கடன்களை பொருத்தவரை இப்போது வாடிக்கையாளர்களது பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்கள் பின்னால் வாலை குழைத்து கொண்டு வருகின்றன.ரொம்ப சுலபம்.மேல் விபரம் தேவைபடுவோர் என் மின்னஞசலுக்கு எழுதவும்.நான் சொல்ல வந்தது அது அல்ல.
இப்பொழுது நான் என் உத்தியோக நிமித்தமாக ஒரு நகரத்தில் வசித்து வந்தாலும் நான் முதலில் ஒரு கிராமத்தில் உள்ள எங்கள் வங்கி கிளையில் தான் பணியில் சேர்ந்தேன். என்னுடைய ஐந்து வருட ரூரல்(கிராம) சர்வீஸில் ஏற்பட்ட பல்வேறு சுவையான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் சேவை தேவை என்ற அரசின் கொள்கை காரணமாக பல கிராமங்களில் புதிய வங்கிகள் திறக்கப்பட்டன. அப்படி ஒரு கிராமம் தான் எங்கள் வங்கி அமைந்திருந்த கிராமமும்(சேலம் அருகே).ஒரு வங்கிக்கிளை புதிதாக திறப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. குறிப்பாக அந்த கிளை மேலாளருக்கு.அது வரை வங்கியையே பார்த்து அறியாத அந்த கிராமத்து மக்களுக்கு வங்கியை பற்றி விளக்கி வைப்பு நிதி(அதாங்க டெபாஸிட்) வாங்குவது என்பது ரொம்ப சிரமம்.
நான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த நேரம்.எனக்கு மதிய உணவு கொண்டுச்செல்லும் பழக்கம் இல்லாததால் அருகில் உள்ள ஒரு சிறிய ஓட்டலில் சாப்பிடுவது வழக்கம்.அப்போது ஒரு விவசாயி எனக்கு பழக்கமானார். நான் இயல்பிலேயே மிகவும் அமைதியாகவும்,அந்த ஊர் விவசாயிகளை மதிப்பவனாகவும்,சிறு வயதினனாகவும் இருந்ததினால் என் மேல் பொதுவாக ஊரில் ஒரு மதிப்பு இருந்தது.அவருக்கும் உண்டு. பெரியசாமி என்பது அவர் பெயர் என்று வைத்துக்கொள்வோமே. நிலம் விற்ற வகையில் கையில் ஒரு நாற்பதாயிரம் ரூபாய் வைத்திருந்தார்.என்ன பண்ண போறீங்க என்றதற்கு ஒரு மாதம் கழித்து மீண்டும் வேறு நிலம் வாங்க வேண்டும் என்றார். சும்மா கையில் பணத்தை வைச்சுக்காதீங்க. பாங்கில போடுங்க என்றேன் நான்.(canvass).பேங்க் புத்தி.
அவருக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை.நான் மேலும் வற்புறுத்தவே பணத்தை எடுத்துக்கொண்டு வந்தார். எங்கள் மேனேஜுர் ரொம்ப சந்தோஷப்பட்டார். சாப்பிட போன இடத்தில் டெபாஸிட் பிடித்துக்கொண்டு வந்ததற்காக என்னை பாராட்டினார்.வாங்க பெரியசாமி என்று வரவேற்றார். ஒரு சேமிப்பு அக்கவுண்ட் ஆரம்பித்து அதில் அந்த பணத்தை போட சொல்லலாம் என்ற என் நினைப்புக்கு மாறாக பதினைந்து நாள் இட்டுவைப்பு(fixed deposit) கணக்காக செய்துவிடலாம் என்றார் எங்கள் மேனேஜர். அதில் உள்ள லாஜிக் என்னவென்றால் சேமிப்பு கணக்கில் இருந்தால் உடனே யாராவது கேட்டால் எடுத்துக்கொடுத்து விடுவார்கள் என்பதால் எப்போதும் எங்கள் மேனேஜர் முடிந்தவரை டெபாஸிட் ஆகத்தான் செய்வார்.
இப்போது ஒரு மானேஜுரே நமது பெரியசாமியை வாங்க சார் என்று கூப்பிட்டதும் புளகாங்கிதமடைந்த பெரியசாமி டெபாஸிட் செய்ய ஒத்துக் கொண்டார். என்னை திரும்பிக்கூட பார்க்கவில்லை பெரியசாமி.வவுச்சர் எல்லாம் நான் எழுதினேன். மானேஜுர் வாங்கிக்கொடுத்த காப்பியை பருகியவாறே ரேகை வைத்தார் பெரியசாமி.
இரண்டு நாள் இருக்கும்.திடீர் என்று ஒருநாள் மாலை நான்கு மணிக்கு வந்தார் பெரியசாமி. அவசரம் ஒரு காடு நல்ல விலைக்கு வருகிறது, அட்வான்ஸ் கொடுக்க பணம் வேண்டும் என்றார். இரண்டு மணிக்கு மேல் பணம் கொடுக்கல் வாங்கல் வங்கிகளில் அப்போது இல்லை என்றாலும் கிராமங்களில் அந்த விதிகளை கெடுபிடியாக பயன்படுத்த முடியாது. எவ்வளவு வேண்டும் என்று கேட்டுக்கொண்ட மானேஜர் டெபாஸிட்டை உடைக்க மனமில்லாது அந்த டெபாஸிட்டின் மீது லோன் போட்டு கொடுத்து விட்டார். லோனுக்கு வட்டி கட்டணுமே என்றார் பெரியசாமி உஷாராக. டெபாஸிட்டுக்கும் வட்டி உள்ளதால் பெரிய பிரச்சினை இல்லை என்று அன்று அவரை சமாதானப்படுத்தினோம்.
ஒரு பத்து நாள் சுமூகமாக போனது. மீண்டும் பரபரப்பாக வந்தார். மாடு வாங்க போவதாகவும் எல்லா பணமும் உடனே வேண்டும் என்றும் கூறியவரை மானேஜரால் சமாளிக்க முடியவில்லை.மேலும் பெரியசாமி என்னை பார்த்து எப்ப வேணாலும் பணத்தை வாங்கிக்கலாம்னயே என்று கேட்க வேறு வழி இல்லாமல் அவர் கணக்கை முடித்தோம்.மீதி பணத்தை கையில் வாங்கிய பெரியசாமி முகத்தில் அதிர்ச்சி. நெற்றி கண் இருந்தால் என்னை சுட்டிருப்பார் அன்று.அதுக்குதான்யா நாங்கள்ளால் மேலே ஏறி வரதில்லை என்றார்.(எங்கள் வங்கி ஒரு கட்டிடத்தின் மாடியில் உள்ளது).
என்ன நடந்தது என்றால் பெரியசாமியின் டெபாஸிட் குறைந்துபட்ச நாட்களான பதினைந்து நாட்கள் வங்கியில் இல்லாததால் வங்கி அவருக்கு வட்டி தரவில்லை. ஆனால் அவர் அந்த டெபாஸிட் மீது எடுத்த லோனுக்கு அவர் கட்ட வேண்டிய வட்டியை வங்கி பிடித்துக்கொண்டு மீதியைத்தான் அவருக்கு தந்தது.கொண்டு வந்த பணத்தை விட குறைந்த பணத்தையே அவர் திரும்ப வாங்கிக்கொண்டு போனார்.
அதிலிருந்து வெளியே ஓட்டல்,பஸ் ஸ்டாப் முதலான இடங்களில் அவர் என்னை பார்த்தாலும் என்னுடன் பேசுவதில்லை. நானும் அவரை ஏன் என்று கேட்கவில்லை.(கேட்க முடியுமா?)
Wednesday, October 19, 2005
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
முத்து,
நல்லா எழுதியிருக்கீங்க.
இங்கேயும் மாசாமாசம் அக்கவுண்ட் ஃபீஸ் கழிச்சுக்கிட்டே இருப்பாங்க.
மூணுமாசத்துக்கொருதரம் புதுப்புது டிஸைனில் அவுங்க யூனிஃபார்ம் போடறப்ப நமக்கு எரிச்சலா இருக்கும். அது நம்ம காசில்லையான்னு:-)
Paavap patta vivasaayum, Paritabaththukkuriya Vankiyarkalum! Nallk kooththu!
thank you selvanayaki....
generally bank managers will try to get fixed deposits only...that what my manager also did
ச்ச்ச்ச்சும்மா நகைச்சுவைக்காக ஒன்று:
கோயிஞ்சாமி: அய்யா என் பெயரில் ஒரு கணக்கு ஆரம்பிக்க வேண்டும்
வங்கிமேலாளர்: இந்த அக்கவுண்ட் ஓப்பனிங் ஃபார்மை ஃபில் அப் செய்து கையெழுத்து போட்டுத்தாருங்கள்
கோயிஞ்சாமி: அய்யா எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதே!
வங்கிமேலாளர்: சரி சரி எழுதப் படிக்கத்தெரியாதுஎன்று கையெழுத்து போட்டு ஒரு அப்ளிகேஷன் கொடுங்கள்
கோயிஞ்சாமி: ???
இந்த மாதிரி நிறைய எழுதுங்க முத்து.
வாய்விட்டு சிரிக்கலாம்.
எல்லாரையும் சிரிக்க வைங்க. நீங்களும் சிரிங்க்.
வாழ்த்துக்கள்.
என்னை மாதிரி கசப்பான அனுபவங்கள் நீங்க மேலாளரானதுக்கப்புறம் தான் வரும். அதுவரை எஞ்சாய் பண்ணலாம்.
வேலை பளுதான் கொஞ்சம் ஆளை அமுக்கும். என்ன முத்து?
அதுசரி, இந்த வேர்ட் வெரிபிகேஷன் இன்னமும் வேணுமா?
முத்து எதுக்கு மேனேஜர்ங்க Fixed Deposit மேலேயே கண்ணா இருக்காங்கன்னு சொல்லணுமில்ல?
அதுவும் மூனு வருஷ டெப்பாசிட்டா இருந்தா சந்தோஷம். நாம அந்த கிளைய விட்டு மாறி போற வரைக்கும் டெப்பாசிட் அப்படியே இருக்குமே. அதானே..
வேர்ட் வெரிபிகேஷன் இப்போ எடுத்துடறேன் சார்....
கசப்பான அனுபவங்கள்னா இப்போதைக்கு கிடையாது சார்..அது கிளரிக்கல்..இப்போ
ஆபிஸர்லே கம்ப்யூட்டர்ல இருக்கேன்...பிராஞ்சு போனா சான்ஸ் இருக்கு..
நம்ப செய்யற வேலை அளவை வெளியே சொன்ன நம்பமாட்டான் சார்....
நம்ப பணம் எண்ணறமே அதுவே நம்பளதுன்னு நினைக்கிறான் வெளியே....
ஆமா சார், சில மேனேஜர் போற பிராஞசுக்கெல்லாம் ரெகுலரா சில டிபாஸிட் அக்கவுண்ட் ட்ரான்ஸ்பர் பண்ணுவாங்களாமே...உங்களுக்கு அது மாதிரி ஏதாவது?
thank you balarajangeetha for the joke....
Post a Comment