Tuesday, October 04, 2005

கபீஷ் மற்றும் குபீஷ்

சமீபத்தில் விஜய் டீவியில் மதன் கமலிடம் விருமாண்டி படத்தை பற்றி பேட்டி எடுத்துக்கொண்டிருந்ததை பார்த்தேன். அப்போது வடஇந்திய பெயர்களின் மேல் சமீபகாலமாக தமிழர்கள் மோகம் கொண்டு இருப்பதை பற்றி கமல் சில வார்த்தைகள் கூறினார். தன் மகள் ஸ்ருதிக்கு கூட மின்னல் என்ற பெயரை வைத்திருக்கலாம் என்று அங்கலாய்த்துக்கொண்டார்.

சற்று சிந்தித்து பார்த்தால் அவர் சொல்வது உண்மை என்றே படுகிறது. நல்ல தமிழ் பெயர்களை வைக்க கூச்சப்படுகிறோமா நாம்? சற்றே சிந்தித்து பாருங்கள் .நம் வீட்டிலோ அல்லது நமக்கு தெரிந்த உறவினர் வீட்டிலோ சமீபத்தில் பிறந்த எத்தனை குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர்களை வைத்துள்ளோம?;. கண்டிப்பாக திரிஷா என்றோ ஷீலா என்றோ பெயர் வைக்கப்பட்ட குழந்தைகள் நிறைய இருக்கும் (போன வருடம் பிறந்த என் மகளுக்கு பெயர் திவ்யா தமிழினி. இதில் திவ்யா என்பது தூய தமிழ் அல்ல என்பதை நான் அறிவேன்)

உசிலம்பட்டியிலும் கொண்டலாம்பட்டியிலும் கூட கபீஷ் மற்றும் கூபீஷ்கள் இருப்பது ஒரு வகையில் கலாச்சார அழிவு என்றே சொல்லத் தோன்றுகிறது. கலாச்சார சீர்கேடு அல்ல.கலாச்சார அழிவு.

இதை உடனே கொச்சைப்படுத்தி தமிழ் வெறி என்று முத்திரை குத்துவதற்கு பதிலாக நமக்கு நம்முடைய பெயர்களின் மேல் உள்ள கூச்சங்களை மறுபரிசீலனை பண்ண வேண்டியது அவசியம். பெயரில் என்ன இருக்கிறது என்ற வறட்டு வாதங்களை தாண்டி குறைந்தபட்சம் தமிழில் இல்லாத எழுத்துக்களை பயன்படுத்தி பெயர் வைக்கமாட்டோம் என்றாவது ஒரு முடிவுக்கு வரலாமே?

ஸ,ஷ என்ற வார்த்தை இருந்தால் அந்த பெயர் மாடர்ன் பெயரா?
அல்லது நல்ல தமிழ் பெயர்களுக்கு பஞ்சமா? தமிழ் அழிகிறது என்று வருத்தப்படும் தமிழ் அறிஞர்கள் நல்ல தமிழ் பெயர்களை பண்டைய இலக்கியங்களில் இருந்தோ அல்லது எங்கிருந்தாவதோ தொகுத்து வெளியிட்டால் என்ன? இதை பற்றி மற்ற தமிழர்களின் கருத்து என்ன என்று அறிய ஆவலாக உள்ளேன்.

5 comments:

ilavanji said...

என் பொண்ணோட பேரு காதம்பரி...

நல்லா இருக்கா முத்து? :)

G.Ragavan said...

முத்து, இது நியாயமான ஆதங்கமே. அருமையான தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றன. ஆனால் என்னவோ தமிழர்களுக்கு வடமொழிப் பெயர்களின் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு. மதமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இந்துக் கடவுளின் பெயர்களில் வடமொழிப் பெயர்களை வைப்பதை விரும்புகிறார்கள். முருகன் என்பதை விட கார்த்திக் மார்டன். கிருத்துவர்களும் இஸ்லாமியர்களும் இதே போல மதம் சார்ந்த பெயர்களுக்குப் போகும் பொழுது, தமிழ்ப் பெயர்கள் விலகித்தான் போகின்றன. மதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் தங்கள் வழித்தோன்றல்களுக்குத் தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும். உண்மையான தமிழ்ப்பெயர் வைக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு அருமையான தமிழ்ப் பெயர்கள் நெட்டில் கிடைக்கின்றன. புத்தகங்களும் கிடைக்கின்றன.

Anonymous said...

I have heard about a little girl named as "Manisha Koirala"?. Bombay/Muthalvan effect dhan!

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

என் சித்தி பையனுக்கு ஹர்ஷத் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. நிச்சயம் என் அபத்தாவால் இந்தப் பெயரை உச்சரிக்க முடியாது. குமாரு, செந்தில் என்று ஏதாவது செல்லப் பெயர் வைத்து அவர்கள் ஆசைக்கு அழைத்துகொள்வார்கள் என நினைக்கிறேன். மலர், தென்றல், இளவழகன், நாணல், மின்னல் என்றெல்லாம் அழகான தமிழ்ப்பெயர்கள் வைத்தவர்களையும் அறிவேன். நன்கு படித்து உண்மையிலேயே பண்பாட்டுத் தெளிவு உடையவர்கள் தமிழ் பெயர் வைக்கத் தயங்குவதில்லை என நினைக்கிறேன். தன் குழந்தை mummy, daddy என்று கூப்பிட்டாலே தான் மேல் தட்டு வர்க்கத்தில் இணைந்து விட்டதாக நினைத்துப் புலங்காகிதப்படும் மக்கள் இருக்கும் வரை இந்த வட மொழிப் பெயரிடும் போக்கு தொடரும். இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று பயமுறுத்தும் numerology காரர்களுக்கும் இந்தப் போக்கில் பெரும் பங்குண்டு

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

உங்கள் வலைப்பதிவில் நட்சத்திரக்குறி இட்டு பரிந்துரைக்கும் வசதியைக் கொண்டு வரலாமே..அப்புறம், உங்களுக்கு தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் இருக்கும் பட்சத்தில் http://ta.wikipedia.org வாருங்கள். அங்கு இலவசமாக தமிழில் இணையத்தில் கலைக்களஞ்சியம் ஏற்படுத்தும் கூட்டு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்