Thursday, October 27, 2005

தேவை ஒரு சங்கம்

சமீபத்தில் மிகவும் பேசப்படுகிற ஒரு விசயம் மென்பொருள் தொழில்நுட்பத்துறையில் தொழிற்சங்கத்தை அனுமதிக்கலாமா என்பது பற்றியது.

இப்பொழுது எங்கும் இது போன்ற தொழிற்சங்கம் இந்த துறையில் இல்லை என்றே கூறலாம்.கல்கத்தாவில் மட்டும் சில இடங்களில்,அதுவும் பெயருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.நேற்று மார்க்ஸிஸ்ட் பொலிட்பீரோவில் இது பற்றி பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன்.

பொதுவாக கணிப்பொறி துறை என்றால் ஏ.சி யில் உட்கார்ந்து கொண்டு பெப்ஸி,கோக் குடித்துக்கொண்டு ஜாலியாக வேலை செய்துக்கொண்டு இருப்பார்கள் என்றே பலரும் எண்ணுகிறார்கள். உண்மையில் அவர்கள் வேலை எப்படிப்பட்டது? வேலை எனனும் போது செய்யும் வேலை மட்டும் இல்லாமல் அனைத்து சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டி இருக்கிறது.

செய்யும் ஒவ்வொரு பிராஜக்ட்க்கும் ஒரு டெட்லைன் கொடுத்து அதற்குள் முடிக்கவேண்டும் என்ற பிரஷர் ஜாஸ்தியாக உள்ளது என்று ஒரு பேச்சு உள்ளது. சக்கையாக பிழியபடுவதாக ஒரு சாரார் கருதுகின்றனர்.இவ்வாறான உயர்அழுத்த சூழ்நிலைகளில் பணிபுரிபவர்களின் மனநிலை பாதிக்கப்படுகிறதா? அவர்களின் சொந்த வாழ்க்கை இதனால் பாதிக்கப்படுகிறதா?டைவர்ஸ் நிறைய ஆவதாக எங்கோ படித்த ஞாபகம்.பலர் மன அழுத்த நோய்களுக்கு ஆளாவதாக ஒரு டாக்டர் பேட்டி கூட பார்த்தேன்.ஒரு தொழிற்சங்கம் என்று வந்தால் இது போன்ற பிரச்சனைகளுக்கு நிர்வாகத்துடன் பேசி தீர்வு காண முடியுமா?

பொதுவாக நல்ல சம்பளம் கொடுக்கப்படுவதாக ஒரு அபிப்பிராயம் உள்ளது. ஆகவே அந்த தளத்தில் முதலாளிகளின் சுரண்டுதல் என்பது இல்லை என்றே நான் நினைக்கிறேன்.ஆயினும் இது பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை.அந்த துறையில் உள்ளவர்கள் கூறலாம்.

மேலும் குழுமனப்பான்மை(தமிழ் மணத்திலேயே இத்தனை குழு இருக்கும்போது) மற்றும் போட்டி பொறாமை(போட்டுக்கொடுப்பது) முதலிய காரணங்களால் வேலை பறிகொடுப்பவர்கள் பரிகாரம் பெறுவதற்கு இது வகை செய்யுமா?

நானும் ஒரு வகையில் மென்பொருள் தொழில்நுட்பத்துறையில் தான் உள்ளேன் .கணிணி தொழில்நுட்பத்துறை என்று எல்லா வங்கிகளிலும் ஒரு பிரிவு உள்ளதால் இது போன்ற விஷயங்கள் இங்கு எப்படி செயல்படுகின்றன என்பதனையும் நான் சொல்லிவிடுகிறேன்.

இது பொதுத்துறை என்பதால் இங்கு தொழிற்சங்கம் உள்ளது. பொதுவாக அனைத்து வங்கிகளுமே தங்களுக்கு தேவையாக மென்பொருள்களை வெளியே வாங்குகின்றன. எங்களை போன்ற ஆட்களுக்கு பொதுவாக மென்பொருள் வழங்கும் நிறுவனத்தின் மென்பொருளை சோதனை செய்வது மற்றும் பராமரிப்பு வேலைதான்.மென்பொருள் உருவாக்குதல் சம்மந்தப்பட்ட வேலைகள் பெரும்பாலும் கிடையாது. சில வங்கிகள் தங்களுக்கு தேவையாக மென்பொருள்களை அவர்களே உருவாக்குவதாக கூறுகிறார்கள். ஆனால் பெரும்பாலான வங்கிகள் வெளியே வாங்குகின்றன்.

ஆயினும் கடைசியாக நடந்த ஊதிய ஒப்பந்தத்தின் ஒரு ஷரத்தின்படி கணிப்பொறி வல்லுனர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்ற வங்கி நிர்வாகங்களின் கோரிக்கையை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டன.அதாவது முக்கியமாக ஆட்கள் தேவைபடுகின்ற இடங்களில் (உ.தா. hub's,core centres,Distribution Centres)வேலை செய்பவர்கள் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது.ஆனால் தொழிற்சங்கங்களில் உறுப்பினராக இருக்கலாம். தம்முடைய பிரச்சனைகளுக்கு தொழிற்சங்கங்கள் மூலமாக தீர்வு காணலாம்.

பணி உயர்வு போன்ற விசயங்களிலும் ஒரு குறிப்பிட்ட கேடர்(CADRE) வரை தான் தொழிற்சங்கத்தில் இருக்கலாம். அதன்பிறகு அவர்கள் நிர்வாகத்தின் ஒரு அங்கம் என்பது தான் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள நிலைமை.

சிறிய நிறுவனங்களுக்கு இந்த தொழிற்சங்கம் என்பது ஒத்துவராது. ஆனால் இப்போது பல நிறுவனங்கள் வளர்ந்து சர்வசாதாரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்திருப்பதால் தொழிற்சங்கத்தின் தேவைப்பற்றி சிந்திக்கலாம் என்றே தோன்றுகிறது.

இங்கு வலைபதிவுகளில் எழுதும் பல நண்பர்கள் இந்த துறையில் பணியாற்றுபவர்கள் என்பதால் இது பற்றிய நண்பர்களின் கருத்துக்களை அறிய ஆவல். ஏதோ நீங்களும் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்து சீரழிந்து போக் வேண்டும் என்பதற்காக நான் கூறவில்லை. உங்கள் கருத்துக்களை அறிந்துக்கொள்ளலாம் என்றுதான் எழுதுகிறேன்.

2 comments:

Anonymous said...

திரு முத்து அவர்களே

தொழிற் சங்கம் மென்பொருட் வல்லுனர்களுக்கு தேவை தான்.

ஆனால் Bangalore-ல் உள்ள வல்லுனர்கள் தங்கள் சுயதேவை தான் பூர்த்தி செய்ய முயலுகிறார்கள். இது போன்ற சுழ்நிலையில் அவர்களிடம் இருந்து சமுதாய நன்மைகளை எதிர்பார்க முடியது.

" அகில இந்திய கணணி மென்பொருள் வல்லுனர்கள் சங்கம் " ஒரு தேவையில்லா திருகுவலி

Muthu said...

கணி்ப்பொறி வல்லுனர்கள் பலரின் மேல் தனிப்பட்ட முறையில் நமக்கு பல விமர்சனங்கள் உண்டு.ஆனால் இங்கு எடுக்கப்பட்டிருக்கும் சப்ஜெக்ட் வேறு.