Wednesday, November 08, 2006

ஒரு வருடத்திற்கு பின்

கடந்த முறை சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியையும் சென்னை புத்தக கண்காட்சியையும் பார்க்க சென்னை வந்துவிட்டு நான் எடுத்த முடிவு அடுத்த ஆண்டிற்குள் சென்னையில் செட்டில் ஆகிவிடவேண்டும் என்பதுதான்.

வரும் ஜனவரி சென்னை ஓபன் ( ரஃபேல் நடல் வருகிறாராம்) டென்னிஸ் மற்றும் புத்தக கண்காட்சி நடைபெறும் போது நான் சென்னைவாசி ஆகியிருப்பேன்.அதற்கான பூர்வாங்க பணிகள் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன.

டோண்டுவின் பதிவை பார்த்தவுடன் தான் நானும் பார்த்தேன்.நானும் பதிவுகள் எழுதி சூழலை நாசப்படுத்த ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்து விட்டது. ஏறத்தாழ 165 பதிவுகள் போட்டுள்ளேன். (நீக்கிய பதிவுகளா? அது இருக்கும் ஒரு ஏழெட்டு:).

பல அனுபவங்கள். பல நட்புக்கள்.நிறைவான ஒரு வருடம்.

இடமாற்ற வேலைகளால் கொஞ்சம் பிசி என்பதால் ஒரு மாதம் பதிவுகள் இருக்காது என்று என் லட்சோப லட்ச ரசிகர்களுக்கு(?) அறிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, November 07, 2006

ஏன் திமுக? ஏன் கலைஞர்?

மற்ற கட்சிகளை விட திமுகவையும் மற்ற தலைவர்களை விட கலைஞரையும் ஓப்பீட்டளவில் நான் ஏன் ஆதரிக்க வேண்டி இருக்கிறது என்பதற்கு ஆயிரம் காரணம் சொல்லமுடியும். சில காரணங்களை கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் நான் எழுதி உள்ளேன். சுட்டிகள் கீழே.

1.http://muthuvintamil.blogspot.com/2006/04/1.html

2.http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_05.html

3.http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_06.html

4.http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_07.html

மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கலைஞரால் மீட்டு கொண்டுவரப்பட்டு்ள்ள விவசாய தொழிலாளர்களுக்கு மிகவும் பயன்தரக் கூடிய ஒரு அமைப்பைப் பற்றிய ஒரு தகவலை நான் இங்கு கூற விரும்புகிறேன்.

கடந்த கலைஞர் ஆட்சியில் விவசாய தொழிலாளர் நலவாரியத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 60 வயதிற்கு உட்பட்ட நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் சிறு, சிறு விவசாயிகள் அனைவரும் ரூ.100 - நுழைவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாக சேர்ந்திட வழிவகை செய்யப்பட்டது.

அவ்வாறு உறுப்பினர்களாக சேர்பவர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை விபத்துகால உதவி, இயற்கை மரணத்திற்கான நிதி, ஈமச் சடங்கு நிதி என்று பல்வேறு நலத்திட்ட உதவிகளும் அறிவிக்கப்பட்டன. விவசாயத் தொழிலாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சேர்ந்தனர், 7,35,000 விவசாயத் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து அவ்வாரியத்தில் ரூ.10 கோடிக்கும் மேல் நிதியும் சேர்ந்த நிலையில் - 2001-ம் ஆண்டு சட்டப் பேரவைக்கான தேர்தல் வந்தது.

வழக்கம்போல் ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா தன்னுடைய அதிரடி தடாலடி பாணியில் அந்த அமைப்பையே கலைத்து உத்தரவிட்டார்கள். பலகோடி விவசாய தொழிலாளர்கள் பயன்பெற அமைக்கப்பட்ட அந்த வாரியத்தை கலைத்தது எந்த விதத்தில் நியாயம் என்று விவசாய தோழர்கள் குமுறினார்கள். இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி அந்த வாரியத்தை மீண்டும் அமைத்து கோடிக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் பயன்பெற ஏற்பாடு செய்துள்ளார்.இத்தகைய ஒரு அமைப்பின் தேவையைப்பற்றியும் இதனால் விளையும் பலன்களை பற்றியும் நான் விரிவாக விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இதற்காக திருவாரூரில் நடத்தப்பட்ட விழாவில் பேசிய கருணாநிதி"அறிஞர் அண்ணாவையும், தந்தை பெரியாரையும் நான் சந்திக்காமல் இருந்திருந்தால் நானும் ஒரு கம்யூனிஸ்ட்டாய் உங்கள் தோழர்களில் ஒருவனாய் இந்த மேடையில் அமர்ந்திருப்பேன்'' என்று உணர்ச்சியுறப் பேசியபோது லட்சக் கணக்கில் கூடியிருந்த உழைக்கும் தோழர்கள் மகிழ்ச்சி பொங்கப் பெரும் ஆரவாரம் செய்தார்களாம்.

http://www.keetru.com/anaruna/oct06/mutharasan.html


சன் டிவியில் சம்பாதிக்கிறார்கள், உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்தார்கள் என்றெல்லாம் ஆயிரம் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டாலும் இதுபோன்ற செயல்பாடுகளே நான் கலைஞரை தொடர்ந்து ஆதரிக்க காரணமாக அமைகின்றன.

கலைஞர் மீதான சில குற்றச்சாட்டுக்களை அனைத்து அரசியல்வாதிகளின் மேலும் வைக்கமுடியும் என்பதும் முனை முழுங்கி போன சில குற்றச்சாட்டுக்கள் ஒரு குறிப்பிட்ட சாராரால் மட்டும் மீண்டும் மீண்டும் இவர் மீது வைக்கப்படுகின்றன என்பதை அதன் காரணத்துடன் உணர முடிவதாலும் கலைஞரின் மீதான மதிப்பு என் மனதில் உயரத்தான் செய்கிறது.