Friday, March 31, 2006
இந்த சல்மா அந்த சல்மாவா?
ஏற்கனவே எழுத்தாளர் சல்மா பஞ்சாயத்து தலைவராகவும் இருக்கிறார் என்று கேள்விப்பட்டுள்ளேன்.காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நிற்கும் வி.சி வேட்பாளர் எழுத்தாளரை ரவிகுமாரை தொடர்ந்து இன்னொரு இலக்கியவாதி சட்டசபைக்கு போக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எழுத்தாளர்கள் அரசியலில் ஈடுபடுவதும் சமூக நிகழ்வுகளில் பங்களிப்பதும் (இலக்கிய சண்டைகள் தவிர)ஒரு பாஸிடிவ் டெவலப்மெண்ட் என்று நினைக்கிறேன்.இது தொடருமா?
Thursday, March 30, 2006
சீட் வாங்கலையோ சீட்
திண்டிவனம்: விடுங்க போறாங்க சின்ன பசங்க இப்ப நாம என்ன பண்றதுன்னு சொல்லுங்க.பேசாம கலைஞர் காலில் விழுந்துருவமா?
கார்த்திக்: உங்க ரெண்டு பேருக்குமே பதவி வெறி தலைக்கேறிடிச்சு.. கலைஞரை எதிர்த்து தானே ரெண்டு பேரும் வெளியே வந்தீங்க?
ராஜேந்தர்: நீங்க மட்டும் என்ன ரெண்டு தலைவரையும் மாத்தி மாத்தி மீட் பண்ணலை?
திண்டிவனம்:உங்க வம்பே வேணாம்பா, நான் நாளைக்கே டெல்லி போய் சோனியா கால்ல விழுந்து ஒரு சீட் வாங்கிக்கறேன்.
ராஜேந்தர்: நான் நாளைக்கே என் கட்சி பொதுக்குழுவை கூட்டி கூட்டணி பத்தி முடிவெடுக்கணும்..
கார்த்திக்: என்ன பிரதர் உஷா, சிம்பு, இலக்கியா, குறளரசன் இதுதானே உங்கள் பொதுக்குழு....அதுவும் சிம்பு இப்பல்லாம் தனியா டீல் பண்றாறாமே?
ராஜேந்தர் நெற்றில் விழும் முடியை சரிசெய்துக்கொண்டே டென்சனுடன் நழுவுகிறார்.
திண்டிவனமும் வேகமாக ஏர்போர்ட் நோக்கி செல்கிறார்.ஃபிளைட் கிடைக்காததால் சத்தியமூர்த்தி பவனை நோக்கி விரைகிறார்.சத்தியமூர்த்தி பவன் வாசலில் வேட்டி,துண்டு ஆகியவை விற்கும் கடையை பார்த்ததும் திண்டிவனம் அதிர்ச்சியடைகிறார்.
திண்டிவனம்:(மனதிற்குள்)அய்யய்யோ..வீரப்ப மொய்லியுடன் உட்கட்சி கலந்தாய்வு கூட்டம் ஆரம்பிச்சிருச்சு போலிருக்கே...(அவசரமாக உள்ளே ஓடுகிறார்)
சில கட்சிகாரர்கள் வெறும் அண்டர்வேருடன் ஓடிவந்து கடையில் வேட்டி வாங்கி கட்டிக்கொண்டு போகிறார்கள்.அருகிலேயே மண்ணெண்ணெய்,கட்சி கொடிகள்,தலைவர்கள் உருவபொம்மை எல்லாம் ரெடிமேடாக விற்பனையாகின்றன.பேச்சுவார்த்தை நிலவரப்படி உருவபொம்மைகள் எரிக்கப்படுகின்றன.
இதற்கிடையே விஜயகாந்த் பேசும் கூட்டங்களில் பெருங்கூட்டம் கூடுவதை பார்த்து முதலமைச்சருக்கு தகவல் போகிறது.உளவுத்துறை முடுக்கி விடப்படுகிறது. உளவுத்துறை அறிக்கையின்படி விஜயகாந்த் கூட்டங்களில் சேரும் கூட்டம் பொதுமக்கள் இல்லை என்றும் அவர்கள் எல்லாம் அரசின் புள்ளியியல் துறையை சேர்ந்த ஊழியர்கள்தான் என்றும் முதலமைச்சருக்கு ரிப்போர்ட் செய்கிறது உளவுத்துறை.
பல்வேறு இடங்களில் அரசாங்க புள்ளிவிவரங்களை அரசு துறைகளுக்கே தெரியாத அளவில் விஜயகாந்த் கூறுவதால் அதை நோட்ஸ் எடுக்கவே அவர்கள் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Wednesday, March 29, 2006
இலக்கியவாதியின் அரசியல்
அனந்தமூர்த்தி பி.ஜே.பியின் கொள்கைகளை எதிர்ப்பவர்.காங்கிரஸ் மற்றும் ஜனதாதளத்தை கடந்ததேர்தலில் ஆதரித்ததாக தெரிகிறது.ஆயினும் ஜனதாதளம் சப்போர்ட் கிடைக்கவில்லை.காங்கிரஸ் ஆதரவு அவருக்கு போதுமானதாக இல்லை.கடைசியில் அரசியலில் பணம் விளையாடுவதை எக்ஸ்போஸ் செய்யத்தான் நான் போட்டியிட்டேன்.இது எனக்கு மாரல் வெற்றிதான் என்று கூறிவிட்டார்.
ஆனால் அனந்தமூர்த்தி தான் தேர்தலில் போட்டியிட கூறிய காரணம் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.கன்னட மொழியை காக்கவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று கூறிய அவர் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதை கேள்விக்குட்படுததியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் குமுதம் தீராநதியில் இயல் விருது பெற்ற தமிழ் அறிஞர் பேரா.ஜார்ஜ் எல்.ஹார்ட் இதைப்பற்றி கேள்விக்கு கூறிய பதில் பின்வருமாறு:
ஹார்ட்: அரசியல்வாதிகள் மட்டும்தான் தமிழை செம்மொழி என்கிறார்கள். அறிஞர்களல்ல என்று அனந்தமூர்த்தி கூறியதாக படித்தேன்.அது உண்மைக்கு புறம்பானது.
என்றாவது ஒரு நாள் நான் (ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கன்னட மொழியின் முதல் இலக்கியமான) கவிராஜமார்க்கத்தைப் படித்து,அது உண்மையில் ஒரு தனிமரபை காட்டுகிறதா என்று பார்க்கப் போகிறேன். கவிராஜமார்க்கம் சமஸ்கிருத இலக்கிய மரபை அடியொற்றிஇயற்றப்பட்டது என்று படித்திருக்கிறேன்.அது உண்மை என்றால் கன்னடம் தமிழைப் போன்ற செவ்வியல் மொழியே அல்ல.தமிழ் முற்றிலும் மாறுபட்ட மரபு கொண்டது.தமிழ் இலக்கியங்கள் சம்ஸ்கிருத மரபிலிருந்து பெரிதாக ஏதும் இரவல் வாங்கியதில்லை.மேலும் யு.ஆர்.அனந்தமூர்த்தி பெரிதும் போற்றும் கன்னடரான பேரா.ராமானுஜன் தான் தமிழ் மொழியின் செவ்வியல் இலக்கிய மரபை பற்றி முதல் குரலை கொடுத்தவர்.அவர் கன்னடத்தின் செவ்வியல் தன்மையை பற்றி ஒரு போதும் சொன்னதில்லை.
இவ்வாறு கூறிச்செல்கிறார் பேரா.ஜே.எல்.ஹார்ட்
கன்னட செம்மொழி ஆவதை பற்றி நாம் வருந்தவில்லை.ஆனால் நம்முடைய மொழியின் செவ்வியல் தன்மையை ஒருவர் குறுகிய நோக்கத்துடன் கேள்விக்குட்படுத்துவதே நமக்கு வருத்தம் அளிக்கிறது.
நம் தமிழ்நாட்டில் பிறந்து வயிறு வளர்க்கும் சோதா பசங்களான டபுள் மீனிங் புகழ் "எஸ்.வி.சேகர்" முதலானவர்களே தமிழ் செம்மொழி என்பதை கிண்டல் அடித்து பிழைக்கும்போது மற்றவர்களை என்ன சொல்வது?(ஏதோ ஒரு திரைப்பட விழாவில் இவர் தமிழை கிண்டல் அடித்து அருவெருப்பு ஊட்டியதை மறக்கமுடியாது)
எழுத்தாளர்கள் புத்திசாலிகள்.இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் குறுகிய நோக்கங்களுக்காக சமூக மதிப்பீடுகளை அவர்கள் மாற்ற முயலும்போது அவர்கள் எழுத்து மேல் நமக்கு உள்ள மரியாதை குறைகிறது.இதற்கு தமிழ் சூழலிலும் பல உதாரணங்கள் காண கிடைக்கின்றன.
" செத்த மொழிகளான லத்தீன்,கிரேக்கமும் தான் கிளாசிக்கல் என்று சொல்லப்படவேண்டும். இப்போது உள்ள மொழிகளில் பெரும்பாலானவை ஐந்து நூற்றாண்டு கால பழமையை உடையவைதான்.தமிழும் கன்னடமும் தான் ஆயிரம் ஆண்டு கால பழமையை உடையவை.ஆகவே புராதன வாழும் மொழிகள் என்று தமிழையும் கன்னடத்தையும் வகைப்படுத்துவதே சிறந்தது.செவ்வியல் என்று கூறினோம் என்றால் எது பழமையானது என்று கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளது.என் பாணியில் வகைப்படுத்தினால் தமிழ் கன்னடத்தைவிட சற்று பழமையானதான இருந்தாலும் பிரச்சினை இல்லை.உலகமயமாக்கல் யுகத்தில் பல மொழிகளின் இருப்பே கேள்விக்குள்ளாக்கப்படும் போது சகோதர மொழியுடன் சண்டை போடுவதில் அர்த்தம் இல்லை"
இதையும் யு.ஆர்.அனந்தமூர்த்திதான் 24 மார்ச் அன்று எக்ஸ்பிரஸ் கட்டுரை ஒன்றில் கூறியிருக்கிறார்.(hope good sense prevail)
Tuesday, March 28, 2006
எலெக்சன் டைமில...
திண்டிவனம்: யோவ், அட்ரஸே இல்லாம இருந்த நீ இன்னைக்கு அம்மாவுக்கு நெருக்கமா ஆயிட்ட..நல்ல வெயிட்டா வசூலும் உண்டு போலிருக்கு.எப்படிய்யா?
நெல்லை: (மேலே பார்த்தப்படி) கான மூப்பனாராட கண்டிருந்த திண்டிவனம் தானும் அதுவாக பாவித்து தன் பொல்லாச்.....
திண்டி:(ஜெர்க்காகிறார்)யோவ் நீ பெரிய தமிழ் பருப்புன்னு எனக்கும் தெரியும்..இப்ப என்னய்யா பண்றது? அத சொல்லு..
நெல்லை: சரி விடுங்க...அது யாரு அங்க ஓரமா படுத்திருக்கறது?
திண்டி: அது நம்ம விஜய டி.ராஜேந்தர்தான்.ஏங்க இங்க எந்திரிச்சி வாங்க...(ராஜேந்தரை கூப்பிடுகிறார்)
நெல்லை: என்ன ராஜேந்தர் இப்படி பாதியா இளைச்சீட்டிங்க...மூஞ்சில முடி மட்டும்தான் இருக்கு....
திண்டி: (முணுமுணுக்கிறார்) எப்பவும் அப்படித்தான் இருக்கு...
ராஜேந்தர்: டாய், நான் எம்.ஜி.ஆரையே எதிர்த்து அரசியல் செஞ்சவன்..(தொடர்ந்து ஏதேதோ பேசி வூடு கட்டுகிறார்)
நெல்லை: இதுக்குத்தான் உனக்கு ஆப்பு அடிச்சது..ஏன்யா நீ அடங்கவே மாட்டியா?ஏம்பா திண்டிவனம்..சிம்புக்கு போன் போட்டு இவரை கூட்டிக்கிட்டு போக சொல்லுப்பா..
அப்போது அந்த பக்கமாக ஒருவர் முகத்தில் துண்டு போர்த்தி பதுங்கி பதுங்கி வருகிறார்.பாய்ந்து அமுக்கிறார்கள் மூவரும்.துண்டை விலக்கி பார்த்தால் நடிகர் கார்த்திக்.
கார்த்திக்: ஊய், ஏய்.கையை எடு..
ராஜேந்தர்: என்னய்யா துண்டு போர்த்திகிட்டு...
கார்த்திக்: என்னால் என் தொண்டர்கள் உதவியுடன் தனித்து ஆட்சியமைக்க முடியும் ஆனால் பாவம் ஜெயலலிதாவுக்கு துணை முதல்வர் பதிவியாவது தரலாம் என்றுதான் பார்க்க வந்தேன்...
திண்டிவனம் துண்டினால் வாயை பொத்தியவாறு சிரிக்கிறார்.திடீரென்று அங்கு ஒரு கூட்டம் கூச்சல் இட்டவாறு நுழைகிறது.சட்டை போட்டவன்,டவுசர் போட்டவன், டவுசரே போடாதவன், தலை சீவாதவன்,குளிச்சு பல நாள் ஆனவன் என்று பலரும் அடங்கிய குழு.
திண்டி: யாருய்யா இவங்க...
கார்த்திக்: இவங்கள்ளாம் அந்த ஆளோட ரசிகனுங்களாம்..இங்க வந்தா ஏதாவது கிடைக்கும்..அங்க போஸ்டர் ஒட்டுனது, பால் அபிஷேகம் பண்ணுனதுல கொஞ்சம் காசையாவது திரும்ப எடுக்கலாம்னு வந்திருக்காங்க...
(நாளை தொடரும்)
Monday, March 20, 2006
யார் இந்த கருப்பரசன்?
http://www.thinnai.com/le0317064.html
1.தமிழ்மணத்தில் தங்கமணியின் பதிவில் நடக்கும் சில விவாதங்களுக்கு இந்த கட்டுரையுடன் தொடர்பு இருப்பதாலும்
2.திண்ணை இந்த கடிதத்தை பிரசுரித்ததை பாராட்டியுமே இந்த விழிப்புணர்வு பதிவு.
Wednesday, March 15, 2006
ஹிந்துஸ்தானி இசையும் அண்ணன்மார்சாமி கூத்தும்
அனைத்து பணியாளர்களுக்கும் ஒரு பாஸ் மட்டுமே தரப்பட்டது. இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கும் ஹால் மங்களுரிலேயே மிகப்பெரிது.முழுவதும் குளுகுளு வசதி செய்யப்பட்டது என்றெல்லாம் தகவல்கள் வர ஆரம்பித்தன. ஹிநதுஸ்தானி கிளாசிக்கல் தெரிந்தவர்கள் யார் இருக்கிறார்கள்? இவ்வளவு பெரிய அரங்கை பார்ப்பதற்கும் நுழைவுச்சீட்டுடன் கொடுக்கப்பட்ட சிற்றுண்டி மற்றும் இடைவேளை பானங்களுக்கான சீட்டுக்கும் மிகுந்த வரவேற்பு இருந்தது. நிகழ்ச்சிக்கு வர இயலாதவர்களின் அனுமதி சீட்டுக்கும் மிகுந்த டிமாண்ட் ஏற்பட்டது.
நானும் ஒரு அனுமதிசீட்டை வாங்கிக்கொண்டு விழாவிற்கு சென்றேன். வித்வான் வந்தார். மிகப்புகழ்பெற்றவர். பத்மவீபூஷன் என்றார்கள். இரு கைகளையும் உயர்த்தி ஆசி வழங்குவது போல் ஆட்டினார்.ஒரு கடவுளை பார்ப்பது போல மக்கள் மெய்சிலிர்த்துபோனார்கள்.அல்லது மெய்சிலிர்ப்பது போல நடித்தார்கள். கூட்டம் முட்டி மோதியது சிற்றுண்டி வழங்கப்படும் இடத்தில்.
பிறகு நிகழ்ச்சி ஆரம்பித்து அரைமணிநேரத்தில் DRESSED TO KILL ஆன்ட்டிகள் மெல்ல வெளியேறினார்கள். நிகழ்ச்சியின் இடைவேளையின் போது இன்னும் பலர் வெளியேற ஹால் காலியானது. ஆயினும் வித்வானுக்கு வழங்கப்பட்ட மரியாதையும் உபசாரங்களும் கனஜோர்.
நானும் நினைத்துப்பார்த்தேன்.நான் எங்கள சொந்த கிராமத்திற்கு(சொந்தம்னா பூர்விக கிராமம்தான்) போனபோது எனக்காக நடத்தப்பட்ட கூத்து என்ற கலையைப்பற்றி.எங்கள் தாத்தா,அம்மாயி ஆகியோர் இருப்பது திருச்செங்கோட்டில். வீட்டில் மின்சாரம் என்பது இல்லாமல் பல காலம் இருந்தார்கள். சின்னஞ்சிறு வயதில் கோடை விடுமுறைக்கு அங்கே சென்று பல நாட்கள் இருந்தாலும கஷ்டம் தெரியாது.பகலெல்லாம் ஆடு மேய்ப்போம்.நுங்கு சாப்பிடுவோம். மாலை நேரம் பனங்கிழங்கு,பனம்பழம் ஆகியவை சுட்டு சாப்பிடுவோம். ஆனால் டிவி, கிரிக்கெட் என்ற மாயையில் சிக்கியபிறகு ஊருக்கு சென்று சில நாட்கள் இருப்பதே கடினமாகி விட்டது..ஆயினும் அவர்கள் ஆசைக்காகவும் ஒரு மாற்றத்திற்காகவும் வேண்டி நான் ஒரு வருடந்தோறும் ஒரு வாரமாவது அங்கே தங்குவது வழக்கம்.
அதுபோல ஒரு நேரத்தில் எனக்காக ஆட்களை திரட்டி அண்ணமார் சாமி கதை, குன்னுடையான் கதை போன்ற கூத்துகளில் இருந்து சில காட்சிகளை நடத்த என் தாத்தா ஏற்பாடு செய்தார். தானியங்களை காய வைக்க உபயோகப்படுத்தும் கலனில் அந்த கூத்து நடைப்பெற்றது. பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் மற்றும் எங்கள் உறவினர்கள் மட்டும்தான் ஆடியன்ஸ். சிறப்பு விருந்தினர் நான்தான். ஒரு மணிநேர அளவிற்குள்ளாக கூத்து நடத்திய அந்த கலைஞர்கள் அதை முடித்தப்போது நான் கைத்தட்டி ஆரவாரம் செய்தேன்.அப்போது வேஷம் கட்டிய ஆடியவர்களின் முகங்களில் விவரிக்க முடியாத உணர்ச்சிகள்.
மறுநாள் விசாரித்தேன்..அவர்கள் எல்லோரும் எங்கள் வீட்டில்தான் தங்கியிருந்தார்கள்.( கடலை பிடுங்க வந்திருந்தார்கள்). காரணம் நான் நினைத்ததுதான். இந்த மாதிரி கூத்து நடத்தியதும் அதை ஒருவர் கைத்தட்டி ரசித்ததும் பல நாட்களுக்கு அப்புறம் நடப்பதாக அவர் கூறினார். அப்ப பிழைப்பிற்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். ஊர் ஊராக சென்று கூலிவேலை பார்ப்பதாக சொன்னார்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனக்கு பத்து வயதோ அதற்கு கம்மியாகவோ இருக்கும். மாட்டு வண்டி கட்டிக்கொண்டு சாரி சாரியாக நாங்கள் கூத்து பார்க்கப்போவோம். இரவு முழுவதும் கூத்து நடக்கும்.ஊரே திருவிழா கோளம் பூண்டிருக்கும்.அதுவெல்லாம் ஒரு காலம். நமக்கென்று இருந்த பொழுதுபோக்கு,கேளிக்கை எல்லாவற்றையும் சினிமா விழுங்கிவிட்டது.
ஹிந்துஸ்தானி இசை மொத்த மக்கள் தொகையில் மிகச்சிலருக்கே புரிந்த இசை.அதை பல பேர் ரசிப்பதாக நடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். வித்வான் கடவுளுக்கு இணையானவராக போற்றப்படுகிறார். அவரை பார்த்த மாத்திரத்திலேயே பரவசமாகின்றனர் பலர்.அவருக்கு எத்தனை லட்சம் வங்கி கொடுத்தது என்பது பற்றிய தகவல் என்னிடம் இல்லை.ஆனால் லட்சத்தில் என்று தெரியும். ஆனால் நம் மண்ணின் கலையை நம் வாழ்க்கையின் கலையை நிகழ்த்தும் கலைஞர்கள் ஊர் ஊராக கூலிவேலை செய்து வாழ்கின்றனர்.
அங்கு உட்கார்ந்திருந்த மூன்று மணிநேரமும் இதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். விநோதமான ஏன் என்று விளக்கி கூறமுடியாத குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.
வாழ்க பாரதம்.வாழிய பாரத மணித்திரு நாடு.
Monday, March 13, 2006
நீங்க நல்லா இருக்கோணும்...
பல நல்லவர்கள் மிகவும் துன்பப்படுவதை பார்க்கிறோம்.பல கொடியவர்கள் ஏன் நன்றாக வாழ்கிறார்கள் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. இதில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதை சரியாக வரையறுக்கவேண்டியது அவசியம்.இது ஒவ்வொருவரின் வரையறையை பொறுத்து மாறும். என்னளவில் நல்லவன் என்பதை "சக மனிதனுக்கு அறிந்தே தீங்கு செய்யாதவன் " என்ற அளவில் தான் வரையறுக்கிறேன்.இது ஒரு அடிப்படையான கட்டமைப்பு.
இதையெல்லாம் விளக்கமுடியாது என்று சொல்லுவது சரியாக இருக்காது என்று கருதுகிறேன். கும்பகோணம் சிறார்களுக்கு நடந்த கொடுமை, சுனாமி சோகம் ஆகியவை எல்லாம் இறைவனையோ அல்லது மதத்தையோ வைத்து நாம் அணுக முடியாது என்றே எனக்கு தோன்றுகிறது. உதாரணத்திற்கு முற்பிறவி பலாபலன்களை பொறுத்து இந்த விஷயங்களை நாம் அணுகினால் அந்த குழந்தைகள் அனைத்தும் முற்பிறவியில் பாவம் செய்தன என்ற முடிவுக்குத்தான் நாம் வரவேண்டி இருக்கும்.அல்லது சுனாமியில் இறந்த அனைவரும் முற்பிறவியில் பாவம் செய்தவர்களா? இது சரியான முடிவா?சுனாமியில் கிராமம் கிராமமாக இறந்தவர்களைப்பற்றி சோதிடம் , ஜாதகம் ஆகியவை ஏதாவது கூறியுள்ளனவா? அனைவருக்கும் ஜாதகம் ஒன்றுதானா?
சரி.இதை எப்படி அணுகவேண்டும்?. என்னளவில் நான் புரிந்துவைத்திருப்பது இது ஒரு நிகழ்வு என்பதுதான்.தற்செயலான நிகழ்வு என்பதுதான் உண்மை. சிறிது எச்சரிக்கையுடன் நாம் இருந்திருந்தால் சேதங்களை முழுவதுமாக அல்லது பெருமளவு தவிர்த்திருக்கலாம் என்பதுதான் உண்மை.சில சம்பவங்களை நாம் எவ்வளவு முயன்றாலும் தவிர்க்கமுடியாது.ஏனென்றால் அது நமக்கு எட்டாத தளத்தில் நடைபெறுகிறது.எட்டாத தளம் என்பதையும் கடவுள் சமாச்சாரம் என்ற அர்த்தத்தில் நான் உபயோகப்படுத்தவில்லை.
சம்பவங்களின் கூட்டுத்தொகைதான் நம் வாழ்க்கை. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மற்றவர்களின் வாழ்க்கையை நேரடியாகவே மறைமுகமாகவோ பாதிக்கிறது. நிகழ்தகவு என்ற வார்த்தை இங்குதான் வருகிறது. உதாரணமாக ஜோசப் சாரின் மகளுடைய கல்லூரி தோழனின் சாவு.அன்று அவன் கவனகுறைவாக இருந்திருக்கலாம். அல்லது அந்த பஸ் டிரைவர் கவனகுறைவாக இருந்திருக்கலாம்.அல்லது இருவருமே கவனகுறைவாக இருந்திருக்கலாம்.இன்னொன்று கேன்ஸர் வந்த சிறுபெண்.கேன்ஸர் வர இரண்டாயிரம் காரணங்கள் உண்டு என்று ஒரு மருத்துவர் கூற கேட்டிருக்கிறேன்.
சில நாட்களுக்கு முன் ஒரு இணைய(த்தனமான) விவாதத்தின் போது சுனாமியின் போது அதிர்ஷ்டவசமாக தப்பி பிழைத்த ஒருவர் தன்னை கடவுள்தான் காப்பாற்றினார் என்று உளறியதையும் மற்றவர்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்த பதிவுகளையும் படிக்க நேர்ந்தது.அங்கு நடந்தது என்ன? சம்பவங்களின் நிகழ்தகவுதான்.அந்த நேரத்தில் பீச்சிற்கு சென்றவர்கள் சிக்கினார்கள்.மற்றவர்கள் தப்பினார்கள்.இதை ஏதோ அவர் மட்டும்தான் உத்தமன் போலவும் மற்றவர்கள் எல்லாம் பாவிகள் போலவும் நம்மை புரிந்துக்கொள்ளத்தான் மதம் தூண்டுகிறது.
பத்து நாணயங்களை பத்து முறை சுண்டினால் ஒரு நாணயத்தில் மட்டும் பூ விழ நிகழ்தகவு என்ன? என்பது போன்ற கேள்விகளை நாம் பள்ளியில் படித்திருப்போம்.இதே சமாச்சாரம்தர்ன வேறுதளத்தில் வேறுமாதிரி நடைபெறுகிறது.
தெளிவாக சொல்கிறேன்.தவறை கூட புத்திசாலித்தனமாக செய்பவன் கண்டிப்பாக பாதிக்கப்பட மாட்டான் என்பதுதான் என் கருத்து. ஏகப்பட்ட உதாரணங்களை நான் காட்ட முடியும்.அவ்வகையாக ஆட்கள் சிக்குவதற்கு காரணம் தவறை தவறாக செய்வதாலேயே.இதை ஓபனாக கூறினால் என்னை தவறாக ஆள் என்று கூற ஒரு கூட்டம் காத்திருக்கலாம். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.
இதில் நமக்கு கெட்டது நடைபெற வேண்டாம் என்றால் நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று அடுத்தவருக்கு தீங்கு விழைவிக்காமல் இருப்பதுதான்.மனித பிறவி எடுத்து வந்தாயிற்று.இந்த வாழ்வை சந்தோஷமாக அனுபவிப்பது என்பது தான் அனைத்து மனிதர்களின் ஆசை.நாம் இந்த உலகை அனுபவிக்க என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை நாளை பிறக்கபோகும் நம் சந்ததியினருக்கும் உண்டு. நம்முடன் வாழ்ந்துவரும் சக மனிதனுக்கும் உண்டு.ஆகவே நம் வாழும் சூழ்நிலையை சுமூகமாகவும் நன்றாகவும் வைத்திருப்பதுதான் மனிதர்கள் செய்யக்கூடிய காரியமாக இருக்க முடியும்.இன்னும் தெளிவாக சொல்லபோனால் நீங்கள் வாழும் உங்களுடைய வாழ்க்கை அடுத்தவருக்கு தொந்தரவு தருவதாகவே அடுத்தவர் இருப்பையோ கேள்விக்குள்ளாக்குவதாகவோ இருக்கக்கூடாது.
இந்த அடுத்தவரை இம்சை பண்ணாத வாழ்வின் அடுத்த பரிமாணம் அடுத்தவருக்கு உதவும் செயல். எந்த விதமான உதவியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.அடுத்தவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி எந்த அங்கீகாரத்தை எதிர்பார்க்காமலும் ஆத்மார்த்தமாகவும் இருந்தால் அந்த உதவி உங்களுக்கு கொடுக்கும் நிம்மதியும் சந்தோஷத்தையும் எந்த கடவுளும் உங்களுக்கு கொடுக்கமுடியாது.இந்த இடத்தில் அன்பே சிவம் படத்தின் மூலம் சொல்லப்படும் தத்துவத்தையும் இணைத்து பார்ககலாம்.
மற்றபடி கடவுள், மதம் என்று கருத்துக்களினால் மனிதகுலம் கண்டது சர்வநாசம் தான்.இதை நாம் கண்கூடாக பார்த்துவருகிறோம்.கடவுள், மதம் என்ற கருத்தாக்கம் உருவானது எல்லாம் எப்போது? ஏன் ? என்பதையெல்லாம் சிந்தித்து பார்ப்பது இன்னும் தெளிவை கொடுக்கும்.
(ஓரளவு சொல்ல முயன்றதை கூறி உள்ளதாகவே நினைக்கிறேன். பின்னூட்டத்தில் மேலும் ஏதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்)
Saturday, March 11, 2006
அந்த காலத்தில....
தருமியின் இந்த பதிவையும் இதற்கு முந்தைய பதிவையும் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளை இங்கே பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். எல்லாம் இந்த கடவுள் சோதிடம் சம்பந்தப்பட்ட விசயங்கள்தான்.
தன்னால் விளக்கமுடியாத விஷயங்களை கடவுள் மேல் போட்டு பார்த்து மனித குலம் திருப்திப்பட்டு வந்த காலம் மலையேறிவிட்டது என்று நினைக்கிறேன்
.இதைப்பற்றி விளக்கமாக எழுதும்முன் நான் ஒரு காலத்தில் திண்ணையில் ஒரு எதிர்வினை கொடுத்திருந்தேன்.அதைப்பற்றி இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன்.
சுட்டியை ஃபாலோ செய்தீர்கள் என்றால் கடவுளை பற்றி திருமதி.ஜோதிர்லதா கிரிஜா என்பவரின் கருத்தை சொல்லும்.
சுட்டியை படித்தீர்கள் என்றால் அது ஹமீது என்பவரின் கருத்தை சொல்லும்.
நான் எழுதியது கிழ்கண்டவாறு
(சுட்டி கொடுக்கப்படவில்லை )-----------------------------------------------------------------------------
கடந்த இரு வாரங்களாக கடவுள் பற்றி இரு நண்பர்கள் எழுதிய கட்டுரையை படித்தேன்.எனக்கு தோன்றிய சில விசயங்கள்.
முதலில் நண்பர் ஜாபரின் கருத்துக்களை பார்ப்போம். எனக்கு நினைவு தொரிந்த காலம் முதல் கடவுள் விசயத்தில் இந்த வாதத்தை கேட்டு வருகிறேன். முதலில் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்பார்கள்.பிறகு மெல்ல மெல்ல நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்பார்கள். இங்குதான் உள்ளது விசயம். அந்த சக்தி என்ன? அதன் பண்புகள் என்ன?
தெளிவான
மேலும் இயற்கையின் படைப்பில் மனிதனுக்கு புரியாமல் இருக்கும் சில விசயங்களைப் பற்றி கூறினார். என் கேள்வி என்னவென்றால் இயற்கையின் படைப்பில் நூறு வருடங்களுக்கு முன்பு மனிதனுக்கு தெரியாத
தோழி கிரிஜாவின் கடிதத்தை பொருத்தவரை ஒன்றுதான் நாம் கூறமுடியும். திரு. சுப்ரமணியத்தின் அனுபவத்தை நம்பும் மக்களுக்கு உங்கள் அனுபவத்தை நம்புவதில் ஒன்றும் பிரச்சினை இருக்காது. உங்கள் அனுபவத்தையும் நீங்கள் கூற வேண்டும். நாங்கள் படிக்க வேண்டும். பிள்ளையாரும் பால் குடித்து ரொம்ப நாள் ஆகிறது.
திரு. சுப்ரமணியத்தின் மேல் அக்கறை உள்ள எல்லாம் வல்ல கடவுளுக்கு கும்பகோணம் குழந்தைகள் மேல் ஏன் அக்கறை இல்லை என்று கேட்பது வறட்டு வாதம் என்றால் அந்த வறட்டு வாதத்தை சிந்திக்க தெரிந்த மனிதன் செய்துக்கொண்டே இருப்பான்.
Thursday, March 09, 2006
என்ன கிழித்தோம் வலைபதிவில்,,.
முதலில் பாலச்சந்தருக்கு சில வார்த்தைகள்:
நீங்கள் குமரனை தவறாக புரிந்துகொண்டீர்கள். குமரனை நான் அதிகம் படிப்பதில்லை என்றாலும் அவர் அப்படிபட்டவர் இல்லை என்பது என் கருத்து.நானும் உங்களுக்கு சொல்லவேண்டும் என்று நினைத்ததுதான் இது.சுருக்கமாக செய்திகளை சொல்லி அதன் பிறகு உங்கள் கருத்துக்களை சற்று விளக்கமாக போட்டீர்கள் என்றால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.
தனிப்பட்ட முறையில் உங்களின் எத்தனையோ கருத்துக்களை நான் ரசிப்பதுண்டு. ஆனால் நீங்கள் அதை விளக்காமல் ஒரு வரியில் முடித்துவிடுகிறீர்கள் என்ற வருத்தமும் உண்டு.படிக்கும் நண்பர்களும் உங்கள் பதிவை ஒரு செய்தியாக மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை படிக்காமல் போய்விடுகிற அபாயமும் உண்டு.
தினமும் ஒரு பதிவையோ அல்லது இரண்டு பதிவையோ சற்று பெரிதாக உங்களுக்கே உரிய ஆர்க்யூமெண்ட்டுடன் போட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும் என்பதுதான் என் கருத்து.(விகடனில் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பாணியில்).மற்றபடி உங்கள் உழைப்பையோ முயற்சியையோ நான் குறைத்து மதிப்பிடவில்லை. சிறிய பதிவுகள் சைட் கவுண்ட்டர் ஏற உதவலாம்.ஆனால் நல்ல விவாதம் நடக்காது என்பதும் ஒரு கருத்து.
ஆரோக்கியமான விவாதம் வேண்டுமா அல்லது ஹிட் கவுண்ட்டர் ஏறினால் போதுமா என்பது நீங்கள் முடிவு செய்யவேண்டியது.உங்கள் பதிவு உங்கள் இஷ்டம் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.choice is yours.
உங்கள் பதிவில் பின்னூட்டம் இடமுடியவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இனி பொதுவாக
மற்றபடி என் பதிவுகளை யாரும் படிக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. பின்னூட்டத்திற்காக நான் எழுதுவதில்லை என்றெல்லாம் யாராவது கூறினால் அது பம்மாத்து .இல்லை நான் உண்மையிலேயே அப்படித்தான் என்றால் நீங்கள் ஞானிதான்.
பல உருப்படியான விவாதங்களை நான் வலைபதிவின் மூலம் அறிந்து கொள்ளமுடிந்தது. என்னை பொருத்தவரை ஸ்டார் வலைப்பதிவாளர்கள் என்று சிலரை குறித்து வைத்துள்ளேன்.அவர்கள் என்ன "குப்பையை" எழுதினாலும் தவறாமல் படிப்பது வழக்கம்.
மற்றபடி பதிவின் தலைப்பை வைத்தே அதில் என்ன உள்ளது என்று மோப்பம் பிடித்துவிடுவேன். 90 சதவீதம் சரியாகவும் சில நேரம் தவறாகவும் ஆகியிருக்கிறது.
வலைப்பதிவிலும் இணையதளத்திலும் நாம் அடிக்கும் கூத்துக்களை பற்றி நான் சில பதிவுகளும் போட்டுள்ளேன்.வலைப்பதிவும் இம்சை அரசனும் என்ற என்னுடைய பழைய நகைச்சுவை பதிவை இங்கே படிக்கவும்.
ஒரு பதிவு மட்டமான தரம் என்று நண்பர்களால் சுட்டிக்காட்டப்பட்டு திரும்ப பெற்றுள்ளேன். தவறை தட்டும் அதே நண்பர்கள் நல்ல பதிவுகளையும் கைநீட்டி வரவேற்க தயங்கியதில்லை.
மற்றபடி அதிக பின்னூட்டம் வருவதுதான் நல்ல பதிவு என்றெல்லாம் நானும் நம்புவதில்லை. நாம் சுவையாகவும் உபயோகமாகவும் எழுதினால் அங்கீகாரம் தானாக வரும் என்பது என் கருத்து.நான் எழுதியதிலேயே சிறந்ததாக நான் நினைக்கும் ஒரு பதிவை பலர் படிக்கவில்லை என்பது எனக்கு குறைதான்.நானும் ஒரு நாள் நட்சத்திரம் ஆவேன்.அப்போது அந்த பதிவை மீள்பதிவு செய்து அந்த குறையை தீர்த்துக்கொள்வேன்.
நானும் எத்தனையோ பதிவுகளை படித்துவிட்டு பின்னூட்டம் இடாமல் சென்றுள்ளேன்.அதற்காக அவையெல்லாம் நல்ல பதிவு இல்லை என்று அர்த்தமா? கிடையவே கிடையாது.நான் பின்னூட்டம் இட்டாலும் அதற்கு அவர்கள் பதில் கண்டிப்பாக கொடுக்கவேண்டும் என்றும் எதிர்ப்பார்ப்பதில்லை.(பெரும்பாலும்)
கண்டிப்பாக நம்மை படிப்பவர் அனைவரும் பின்னூட்டம் இடவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. அப்படி என்றால் நாம் எல்லோருக்கும் பின்னூட்டம் இடவேண்டும். இதுவெல்லாம் அவரவர்களுக்கு உள்ள ஓய்வு நேரத்தை பொறுத்த விஷயம்.
உதாரணத்திற்கு ஆன்மிகம் பற்றி நான் படிப்பதில்லை. சமையல் கலையை பற்றி நான் படிப்பதில்லை.சினிமா பாடல்களை பற்றி அதிகம் படிப்பதில்லை.அரசியல், சமூகம், நகைச்சுவை, இலக்கியம், இணையச்சண்டைகள் (நிஜந்தாங்க) ஆகியவையை விரும்பி படிப்பேன்.
திரும்பி பார்க்கும்போது நானும் 60 பதிவு வரை போட்டிருக்கிறேன் என்று தெரியவருகிறது. இது ஒரு மலரும் நினைவுகள் மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள்.நன்றி.
Monday, March 06, 2006
குட்மார்னிங் ஆபிசர்....
போடும் எண்ணத்துடன் செந்தில் உட்கார்ந்திருக்க கவுண்டமணி உள்ளே வருகிறார்.
கவுண்டமணி: குட்மார்னிங் ஆபிசர்...
செந்தில்: அண்ணே என்னன்னே இது? என்னைய போய் ஆபிஸர்னு கூப்டுக்கிட்டு...
கவுண்டமணி:டேய் ஜார்ஜ் புஷ் தலையா..உன்னைய இனிமேல் நான் ஆபிசர்னுதான்டா கூப்பிட போறேன்..
செந்தில்: அண்ணே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குண்ணே...டீ சாப்பிடுங்கண்ணே...
கவுண்டமணி: ஏய்..ஸ்டாப்..எதுக்குன்னு ஒரு வார்த்தை கேக்கமாட்டயா?
செந்தில்:சொல்லுங்கண்ணே..
கவுண்டமணி: இந்தியாவுக்கு வந்த புஷ் காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்த போனாராம்....
செந்தில்: என்னன்னே..பின்ன அங்க இட்லி தின்னவா போவாங்க..
கவுண்டமணி: சொல்றத கேள்ரா பேர்டு ஃப்ளூ தலையா புஷ் வர்றதுக்கு முன்னாடி வெள்ளைகாரனுக காந்தி சமாதியை மோப்ப நாயை விட்டு வெடிகுண்டு சோதனை பண்ணியிருக்காங்க...நம்ம அதிகாரிகள் ஏன் நாய்களை எல்லாம் காந்தி சமாதியில் விடுகிறீர்கள் என்று அமெரிக்க அதிகாரிகளிடம் இந்த செயலுக்கு வெளக்கம் கேட்டாங்களாம்...
செந்தில்: அப்படி போடுங்கண்ணே...
கவுண்டமணி: குறுக்கே பேசாதடா...நாங்க எங்க நாய்களை விட்டோம்னு வெள்ளைகாரனுவ கேட்டிருக்கானுங்க. நம்ம ஆட்களுக்கு குழப்பம்.என்னடா இது பட்டபகல்ல இந்த அநியாயத்தை நாலு பேர் கண்ணு முன்னாடி செய்துட்டு இல்லைன்றாங்கன்னு...கடைசில தான் தெரிஞ்சது.அமெரிக்க பாதுகாப்பு படையில் இருக்கிற அந்த நாய்கள் எல்லாம் ஆபிசரு கேடர் அதிகாரிகளாம்... அதுகள நாய்ங்கன்னு சொல்லக்கூடாதாம். ஆபிசர் என்றுதான் குறிப்பிடவேண்டுமாம்...இப்ப புரியுதாடா நான் ஏன் உன்னை ஆபிசர்னு கூப்பி்ட்டேன்ட்டு.....
செந்தில்: அண்ணே..கிண்டல் பண்ணாதீங்கண்ணே..இது நிஜமாண்ணே?
கவுண்டமணி:ஆமாண்டா..நம்மகிட்டே இதுதான் பிரச்சினை, காந்தி தாத்தா என்ன சொன்னாருங்கறதை மறந்துர்றோம்..ஆனால் காந்தி சமாதிக்கு நாய்ங்க(ஸாரி ஆபிசருங்க) வந்தா அதை புடிச்சி்ட்டு தொங்கறோம்...
பின்குறிப்பு:
அமெரிக்க அதிபர் புஷ் இந்தியா வந்திருந்தபோது காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்த வந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் அமெரிக்க அதிகாரிகள் தங்கள் அழைத்து வந்திருந்த 65(ஆமாங்க அப்படித்தான் படித்தேன்) மோப்ப நாய்களில் சிலவற்றை விட்டு காந்தி சமாதியை சுற்றி வந்து வெடிகுண்டு சோதனை செய்தார்கள்.இது சர்ச்சையாகி பாராளுமன்றம் வரை சென்றது. அதை தொடர்ந்து எழுதப்பட்ட நகைச்சுவை பதிவுதான்.யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.
Sunday, March 05, 2006
வெட்கக்கேடு
தி.மு.க கூட்டணியில் இருந்தால் ஸ்டாலின் பதிவியேற துணை புரிந்தது போலாகிவிடும்.கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்பது போன்ற நொண்டிசாக்குகள் எல்லாம் மக்கள் மனதில் விழுந்துவிட்ட அவர் மரியாதையை தூக்கி நிறுத்தாது.
கடுப்பாகி போயிருக்கும் தி.மு.க தொண்டர்கள் இனி கருணாநிதிக்கு பிறகும் இவரை நம்ப முடியாது என்ற எண்ணத்திற்கு தான் வருவார்கள்.இது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய நன்மை என்றுதான் நான் கருதுகிறேன்.குழலி கூறியதுபோல தென்மாவட்டங்களில் ம.தி.மு.க வினால் தி.மு.கவிற்கு ஏற்படும் நஷ்டம் காங்கிரசினால் ஈடுகட்டப்படும்.
தி.மு.க கூட்டணியில் இதுவரை இருந்த இறுக்கம் குறையும்.அவரவர்க்கு வேண்டிய அளவு சீட்டும் கிடைக்கும்.ம.தி.மு.க விற்கு எதிராக தி.மு.கவினர் ஆவேசமாக வேலை செய்வார்கள் என்றும் எதிர்ப்பார்க்கலாம்.தி.மு.க கூட்டணியிலேயே இருந்து உள்குத்து (இது நம்முடைய தமிழ்மண உள்குத்து இல்லைங்க) குத்துவதற்கு பதிலாக அவர் வெளியே இருப்பதே நல்லது என்று தி.மு.க கூட்டணி சந்தோஷப்படலாம்.
இங்கு நாம் வருத்தப்படுவது ஒரு தலைவராக வைகோவின் சரிவு. திருமாவளவன் எடுக்கும் நிலைகளுக்கு நாம் ஆதரவளிப்பது நம் தார்மீக கடமை.திருமா கூறியுள்ளபடி தி.மு.க அவர்களை தனிக்கட்சியாக மதிக்க வில்லை.ஆகவே அவர் அ.தி.மு.க கூட்டணிக்கு சென்றுவிட்டார்.ஜெயலலிதா ஜெயிப்பதோ அல்லது கருணாநிதி ஜெயிப்பதோ நமக்கு முக்கியமல்ல. திருமாவளவன் போன்ற சக்திகள் வளரவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு
ஆனால் வைகோ கதை அப்படியா? எத்தனை பல்டி..எத்தனை தமாஷ்.. நடைப்பயணம் சென்றது,இருபது மாதங்கள் ஜெயிலில் இருந்ததை வைகோ மறந்துவிட்டாரா?
பழசை எல்லாம் நாங்கள் நினைப்பதில்லை என்று கூட்டணி பேச்சு முடிந்து ஜெயலலிதா குறுநகையுடன் பேட்டி கொடுக்கும்போது மேலே பார்த்துக்கொண்டு நின்றிருந்த வைகோவின் மனதில் ஜெயில் காட்சிகள் தானே தோன்றிக்கொண்டு இருந்திருக்கும். இந்த கருத்தை கேட்டு வைகோ திரும்பி ஜெயலலிதாவை பார்த்த பார்வையில் ஆயிரம் கவிதைகள்.அதை யாராவது நண்பர்கள் புகைப்படம் எடுத்து போடலாம்.
http://nayanam.blogspot.com/2006/03/blog-post.html
மேற்கண்ட பதிவு வைகோவின் தடுமாற்றங்களை சுவையாக சொல்கிறது.
ஒருவேளை தி.மு.க கூட்டணி வென்றால் வைகோ நிலைமை அதோ கதிதான்.அ.தி.மு.க வென்று தி.மு.க படுதோல்வி அடைந்தால்தான் வைகோவிற்கு நன்மை.ஆனால் வைகோ நினைப்பது நடப்பது கடினம் ஆகிவிட்டது அவருடைய இந்த செயலால் என்பது உண்மை.
தமிழ்சசி காங்கிரஸ் தமிழக அரசியலில் ஒரு பொருட்படுத்தும் அளவிற்கு இல்லை என்கிறார்.அது தவறு.எந்த அடிப்படையில் அவ்வாறு கூறுகிறார் என்று புரியவில்லை.இப்போதும் ஆன் பேப்பர் தி.மு.க கூட்டணி பலமானதுதான்.
அ.தி.மு.க செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பது உண்மையானால் இந்த தேர்தல் தமிழ்நாட்டில் ஒரு சர்ப்ரைஸ் ரிசல்ட் கொடுக்கும்.அது தமிழ்நாட்டு அரசியலில் முதல் கூட்டணி அரசு அழைக்கப்படும்.
Thursday, March 02, 2006
சாருவின் ஸீரோ டிகிரி இலக்கியமா?
எல்லா மனிதனுக்குள்ளும் ஒரு அழுக்கான இன்னொரு மனிதன் இருக்கிறான் என்பது உண்மை என்று நான் நம்புகிறேன்.(அழுக்கின் அளவு வித்தியாசப்படலாம்) ஆனால் பிரபஞ்ச ஒழுங்கு காப்பாற்றப்பட அந்த அழுக்கு மனிதனை உள்ளேயே அமுக்கி வைக்கவோ அல்லது உள்ளேயோ கொன்று புதைக்கவோ தான் ஒருவர் முயலவேண்டுமோ ஒழிய அவனை நியாயப்படுத்தவோ வீதியில் விட்டு பரபரப்பை ஏற்படுத்தவோ கூடாது.
ஒரு கதை
சின்ன வயதில் பாட புத்தகத்தில் அனைவரும் படித்திருக்கக்கூடிய கதை இது.
ஒரு ஒரு ஊரில் ஒரு முட்டாள் ராஜா இருந்தாராம். அந்த ராஜாவுக்கு பிறந்த நாள் ட்ரஸ் தைத்து தருகிறேன் என்று கூறி இரண்டு பேர் வந்து எந்த துணியையுமே காட்டாமல் (வடிவேலுவின், எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்குத்தான் கடவுள் தெரிவார் என்ற காமெடியை நினைத்துக் கொள்ளவும்.) ராஜாவை ஏமாற்றுவார்களாம். கடைசியில் ராஜா நகர்வலம் போகும்போது ஒரு குழந்தை ராஜா ட்ரெஸ்ஸே போடவில்லை என்று கத்தியவுடன் எல்லோரும் தன் அசட்டுதனத்தை உணர்வார்கள்.
ஒரு இலக்கிய வகை
ஸீரோ டிகிரி நாவலை பின்நவீனத்துவ நாவல் என்று கூறுகிறார்கள்.
பின்நவீனத்துவத்தின் அர்த்தம் என்ன என்று தேடினால் கிடைப்பது இதுதான்.
"பின் நவீனத்துவ புனைவிலக்கியம் தொடர்ச்சி, நீரோட்டம், தொகுப்பு, நேர்கோடு, ஆகியவற்றில் இருந்து விலகி தொடர்ச்சியின்மை, சிதறல், முடிவின்மை, மையமின்மை,புனைவு பற்றிய மேம்பட்ட புனைவு பன்முகத்தன்மை ஆகியவை கொண்டது."
(திண்ணையில் வந்த ஒரு கட்டுரையில் இருந்து சுடப்பட்டது)
எந்த ஒழுங்கிற்கும் வராது போனால் ரொம்ப அருமையான பின்நவீனத்துவ நாவல் என்பதாக கூறுகிறார்கள்.
ஒரு அத்தியாயம்
இது வரையிலான இந்த பக்கங்களை வாசித்துவிட்டு எங்கே கதை என்று கேட்டாள் வாசுகி. கதை சொல்ல வேண்டுமானால் கதாபாத்திரங்கள் வேண்டும். கதாபாத்திரங்கள் உருவாக்கப்படவேண்டும். யார் உருவாக்குவது.கடவுளற்ற உலகத்தில் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நியாயமற்ற உலகத்தில் வாழந்துகொண்டிருக்கிறேன்.
27 தினங்கள் முட்டைகளை அடைகாத்து முட்டை ஓட்டை தன் அலகினால் லேசாக உடைத்து குஞ்சு முட்டையிலிருந்து வெறியேற வழி செய்து குஞ்சுகளைத் தன் வெதுவெதுப்பான சிறகுகளுக்குள் வைத்துப் பாதுகாத்து தானியங்களைத் தின்பதற்கு கற்றுக்கொடுத்து எல்லாம் ஒழுங்கான தாள லயத்துடன் நடந்து கொண்டிருக்கும்போதே ஆகாயத்திலிருந்து சரேலெனப் பாய்ந்து குஞ்சுகளைத் தன் காலிடுக்கில் எடுத்து செல்லும் பருந்துகளுக்கு மிஞ்சிப் பிழைக்கும் குஞ்சுகள் ஒன்பது கூட இல்லை என்றால் இந்த உலகில் ஒழுங்கு எங்கே உள்ளது?
(ஸீரோ டிகிரியில் இருந்து எனக்கு பிடித்த ஒரு பகுதி)
ஒரு இலக்கிய கருத்து
இலக்கியம் இலக்கியத்திற்கே என்பது ஒரு மோசடி வாதம் என்பது தான் என் கருத்தும். ஆனால் இலக்கியத்தில் அழகியல் இருக்கத்தேவையில்லை என்பதும் முரட்டு வாதம்தான். ஒரு கட்டுரைக்கும் இலக்கிய புனைவிற்கும் கண்டிப்பாக வித்தியாசம் உள்ளது என்றே நான் நினைக்கிறேன்.
ஒரு நண்பர் என்னிடம் "அடிபட்டவன் எப்படி அழுவான்? ராகம் போட்டா?" என்று கேட்டார். என்னை சிந்திக்க வைத்த கிண்டல் அது.
திருப்பி அடிப்பதோ ராகம் போட்டு அழுவதோ அவனவன் இஷ்டம்.ஆனால் அடிப்பட்டவன் போராடவேண்டிய களம் வேறு. உடனே அடிப்பட்டவன் இலக்கியம் படைக்கக்கூடாதா என்று கேட்டால் அதற்கு பதில் என்னிடம் இல்லை. இதுவெல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் ரசனை, கருத்து என்று கூறி தப்பித்துக்கொள்வது தான் நான் செய்யும் காரியமாக இருக்கும்.
இலக்கியத்தில் உள்ள ரசனையை தூண்டக்கூடிய அந்த பண்பு, ரசனையோடு கூடி சிந்தனையையும் செழுமைப்படுத்துகிறது என்பது என் அனுபவம்.
இலக்கியம் என்பதற்கு பல விளக்கங்களை பலர் கூறி வருகின்றனர். என்னை பொருத்தவரை தனிமனிதனின் ரசனையை உயர்த்தி கூடவே அவன் சிந்தனைத்தளத்தை உயர்த்தி பக்குவப்பட்ட ஒரு மனதை உருவாக்குவதே நல்ல இலக்கியம் என்று நினைக்கிறேன். இலக்கியம் என்பது ஒரு தனி மனிதனோ அல்லது சமுதாயமோ எதிர்கொண்ட பிரச்சினைகளை, அதை அவர்கள் எதிர்கொண்ட விதம் ஆகியவற்றைப்பற்றி நியாயமான முறையிலும், யதார்த்தமான முறையிலும் முன்வைத்தலே என்றும் கூறலாம்.
ஒரு விளக்கம்
ஃபூக்கோ என்பவரின் பின்நவீனத்துவம் பற்றிய கருத்து
"வித்தியாசத்தை விடுவிக்க நமக்கு ஒரு வேறுபட்ட சிந்தனை வேண்டும். இச்சிந்தனை தருக்கமும் மறுப்பும் அற்றது. பன்மையை வரவேற்பது. அங்கீரிக்கப்பட்டதிலிருந்து விலகும் பாதைகளை உள்ளடக்கியது.ஒப்புதல் உள்ளது, அதே சமயத்தில தனிப்படுத்துவதை உபகரணமாக கொண்டது.பாண்டித்திய விதிகளுக்குள் கட்டுப்படாது தீர்வில்லாத கேள்விகளை எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் விளையாடும் வேறுபட்ட சிந்தனை."
இதன்படி பன்முகத்தன்மை பின்நவீனத்துவத்தின் ஒரு கூறு என்று வைத்துக்கொண்டாலும் ஒரு கலைஞன் எடுத்தாளும் ஒரு கருத்தில் அவன் கூறும் அனைத்து பன்முகத்தன்மையையும் சேர்க்கும் ஒரு புள்ளி இருந்தாக வேண்டும் என்று நினைக்கிறேன் நான்.
இலக்கியவாதியை பற்றி
தமிழ் வாழ்வு சார்ந்து கடுமையான பல விமர்சனங்களை கொண்ட சாரு நிவேதிதா லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க இலக்கியங்களையே பெரிதும் விரும்புகிறார்.அங்குள்ள படைப்பாளிகள் படைப்பதோடு மற்றுமின்றி களத்தில் இறங்கி போராடவும் செய்பவர்கள் என்றெல்லாம் அவர்களை போற்றி பேசும் சாரு நிஜ வாழ்வில் ஒரு சாதாரண போலீஸ் விசாரணை வந்ததற்காக தன்னுடைய ஒரு நண்பரை இனிமேல் தன்னை சந்திக்கக்கூடாது என்று கண்டித்து கூறியதாக கவிதா சரண் பத்திரிக்கையில் படித்துள்ளேன்.
இந்த நாவலில் கணிசமான அளவில் இவர் சொந்த வாழ்க்கையும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் பலராலும் சிலாகிக்கப்படும் மேற்கோள் காட்டப்படும் இந்த புகழ்பெற்ற வாசகத்தின் அர்த்தம் எனக்கு நிஜமாகவே புரியவில்லை.
" என் எழுத்தை புரிந்துக்கொள்ளவேண்டுமானால் என் வாழ்வை பார்க்காதே..என் வாழ்வை புரிந்துக்கொள்ள வேண்டுமானால் என் எழுத்தை பார்க்காதே"
ஒரு செக்ஸ் கருத்து
பெரும் கலகமாகவும் பரபரப்பாகவும் சித்தரிக்கப்பட்ட பெண்கள் மற்றும் செக்ஸ் பற்றி எழுதியுள்ளதாக கூறப்படும் பகுதிகள், இந்த நூலின் முன்னுரையில் ஜெயமோகன் கூறியுள்ளபடி முதிர்ச்சியில்லாமல் இருக்கிறது என்பது தான் என் புரிதலும். விடலைத்தனமாக சில அத்தியாயங்களை எழுதியுள்ளார்.
சில அத்தியாயங்களில் சில சக இலக்கியவாதிகள் தாக்கப்பட்டுள்ளனர் என்று எனக்கு புரிகிறது.இது அந்த கால இலக்கிய அரசியலுடன் சம்பந்தப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.நமக்கு இந்த உலகம் புதிதாகையால் அது யாரையெல்லாம் சுட்டுகிறது என்று புரியவில்லை.
இவ்வளவையும் மீறி நாவலின் சில பகுதிகள் கவித்துவமாக புனையப்பட்டுள்ளது. இதைவிடவும் நல்ல நாவலை இவரால் படைக்க முடியும் என்று தோன்றுகிறது..
ஒரு விளக்கம்
கடந்த இரு ஆண்டுகளாகத்தான் தமிழ் இலக்கிய உலகத்தை கவனித்து வருகிறேன். எனக்கு ஆச்சரியத்தை அளித்த படைப்பாளிகளில் ஒருவர் சாரு நிவேதிதா. அவருடைய கோணல் பக்கங்கள் என்ற இணையத்தளத்தை அவ்வபோது படிப்பதுண்டு.
முதன் முதலில் அந்த தளத்தை திறந்தபோது அதை எத்தனை பேர் (தினமும் இருபதாயிரம் ஹிட்ஸ்..நிஜமாகவா) படிக்கிறார்கள் போன்ற விவரங்களும், பிறகு அந்த தளத்தை பேமேண்ட் சைட் ஆக்கியபோது வெறும் இருபது பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்ததுமான நேர்மையான தகவல்கள் என்னை சிரிக்க வைத்தன.மீண்டும் அந்த தளம் இலவச தளமாக ஆக்கப்பட்டதை சொல்லவும் வேண்டுமா?அப்படிப்பட்ட சாரு நிவேதிதாவினுடைய ஸீரோ டிகிரியை பற்றி பல இடங்களில் கேள்விப்பட்டதினால் படாத பாடுபட்டு அந்த புத்தகத்தை சென்னை வலைப்பதிவர்கள் உதவியுடன் வாங்கினேன். எனக்கு இந்த புத்தகத்தை தந்தவர் ஒரு எழுத்தாளர்தான்.இதைப்பற்றி ஒரு ரிவ்யூ எழுத வேண்டும் என்ற கன்டிஷனுடன் புத்தகத்தை தந்தார்.
(என்னய்யா இது ஒரு இழவும் புரியவில்லை என்று கூறுபவர்கள் ஒரு பின்நவீனத்துவ நாவலுக்கு எழுதப்பட்ட பின்நவீனத்துவ விமர்சனம் இப்படித்தான் இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.அந்த நாவலை படிக்கும்போது எனக்கும் இப்படித்தான் இருந்தது)