Monday, November 21, 2005

கம்யூனிஸ்ட் கோபால்---வங்கி அனுபவங்கள் -2

THE WORD "GHERAO" IS OUR CONTRIBUTION TO THE OXFORD DICTIONARY
-west bengal Chief Minister Buddhadeb Bhattacharjee


ஊர்வலம் போவது,கோஷ்டி சேர்ந்து கோஷம் போடுவது என்பதெல்லாம் வீணாண வேலை என்பதாக பலருக்கு நினைப்பு இருக்கிறது. நானும் அந்த மாதிரியான எண்ணத்தை கொண்டிருந்தவன் தான். அதை நான் தவறு என்று உணர்ந்தது ஒரு சந்தர்ப்பத்தில்.அதை பற்றி இங்கு எழுதுவது தான் இந்த பதிவின் நோக்கம்.

நான் முதன்முதலில் வங்கி பணியில் சேர்ந்தது ஒரு கிராமத்து கிளை.அதிகம் படித்தவர்கள் நிறைந்த ஊர் என்று சொல்லிவிடமுடியாது. தலித் சமுதாயத்தை சேர்ந்த விவசாய கூலிகள்,மலைவாழ் பழங்குடியினர் நிறைய இருந்த அந்த கிராமத்தில் அதிக அளவு சிறு மற்றும் குறு விவசாயிகளும் இருந்தனர்.

நான் அன்று கையெழுத்து போட்டு வேலைக்கு சேர வேண்டும். ஆனால் நான் வங்கி உள்ளேயே நுழைய முடியாதபடி வங்கி வெளிப்புற கேட் முன்னால் ஒரே கூட்டம். எப்படியோ உள்ளே நுழைந்துவிட்டேன். ஆனால் மேலாளர் வரவில்லை.கிராம கிளையாதலால் ஒரே ஆபிசர்தான்.அவரிடம் தான் ரிப்போர்ட் செய்யவேண்டும்.மேலாளர் வரும்போது கெரோ தொடங்கிவிட்டது. வெளியே கூடியிருந்த கூட்டம் அவரை உள்ளேயே வரவிடவில்லை. எனக்கு அதிர்ச்சியாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது.எங்கள் வங்கி கிளை மாடியி்ல் அமைந்திருந்ததால் மாடியில் இருந்து கி்ழே நடக்கும் களேபரங்களை பார்க்கமுடிந்தது. சுமார் 45 முதல் 50 வயதுள்ள ஒரு குட்டையான ஒரு ஆள் தான் ஆர்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்திவந்தார்.

எங்கள் கிளை மேலாளருடன் சூடான வாக்குவாதம். எங்கள் மேலாளர் போலீஸை கூப்பிடுவேன் என்று சொல்லி பார்க்கிறார். இந்த பூச்சாண்டியெல்லாம் என்கிட்ட வேண்டாம் சார் என்ற அந்த நபர் புறங்கையால் அந்த மிரட்டலை சமாளிக்கிறார். அன்றே அருகிலிருந்தவர்களிடம் கேட்டதில் அவர் பெயர் கோபால் என்பதும் உள்ளுர் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் என்றும் தெரியவந்தது.

கிராமத்து பெரிய மனிதர்கள் உதவியுடன் எங்கள் மேலாளர் அன்று கெரோவில் இருந்து மீண்டதும் எதற்கும் அயராத கோபால் வங்கிக்கு எதிரில் மைக் செட் கட்டி மேலாளருக்கு எதிராக கோஷம் போட்டதும் பின்னர் மீண்டும் ஊர்பெரியமனிதர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்து எங்கள் மேலாளர் கோபால் கேட்டுக்கொண்டபடி சிலருக்கு லோன் வழங்க ஒப்புக்கொண்டதையும் பார்த்த எனக்கு அந்த வயதில் அது கண்டிப்பாக ஒரு புதிய அனுபவம் என்றே சொல்லவேண்டும்.

IRDP(ஒருங்கிணைந்த கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்)திட்டத்தின் கடைசி நாட்கள் அவை. எங்கள் கிளை மேலாளர் சற்றே கெடுபிடியானவர். இது போன்ற கடன்திட்டங்களில் வழங்கப்படும் கடன்கள் பெரும்பாலும் திரும்பசெலுத்தப்படுவதில்லை என்பதால் இது போன்ற கடன்களை அவர் ஊக்கப்படுத்துவதில்லை பிறகு சில காலம் கழித்து நான் அறிந்துக்கொண்டது என்னவெனில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசாங்கம் ஸ்பான்சர் செய்கிற கடன்களில் (இதில் குறிப்பிட்ட சதவீத பணம்தான் அரசுடையது)பணம் திரும்ப வராது என்ற காரணத்தால் கிளை மேலாளர் ஒருவருக்கு கடனை மறுத்தாலும், புகார் என்று போனால் வங்கி மேலிடம் கிளை மேலாளருக்கு சப்போர்ட் செய்யாது என்பதுதான்.கிளை மேலாளர் என்பவர் எவ்வாறு இவ்வகையாக குறுக்கீடுகளை சமாளிக்கிறார் என்பதும் முக்கியம்.இதுபோன்ற சமயங்களில் சில கடன்கள் வசூல் ஆகாமல் போகலாம்.இதன்பொருட்டு அந்த மேலாளர்களும் கேள்வி கேட்கப்பட மாட்டார்கள். (இதைப்பற்றி தனிப்பதிவை பின்னொரு முறை இடுகிறேன்)

விஷயத்திற்கு வருவோம்.அன்று தொடங்கி கம்யூனிஸ்ட் கோபாலை பல சமயங்களில் பார்த்துள்ளேன். காலை எட்டு மணிக்கு வங்கி முன் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வெறும் பனியனோடு லுங்கியை கட்டிக்கொண்டு பல்குச்சி வாயில் இருக்க பஞ்சாயத்து பண்ணிக்கொண்டு இருப்பார். ஒரு தீர்ப்பையாவது அவர் கூறுவார் என்று நானும் காத்திருந்து பார்த்தது உண்டு.ஆனால் என் கண் பார்த்து அவர் தீர்ப்பு சொன்னதில்லை.ஆனால் எப்படியும் தினமும் பஞ்சாயத்து உண்டு.

திடீரென்று காலை பத்து பதினொரு மணிக்கு சிலருடன் வங்கிக்கு வருவார்."நம்ப பசங்கதான்,வெளியே பத்துரூவா வட்டிக்கு கடன் வாங்கி வட்டி கட்டிக்கிட்டு இருந்தான்.நான்தான் நம்ப மானேஜர் இருக்கார்னு கூட்டிக்கிட்டு வந்தேன்", என்பார்.எங்கள் கிளை மேலாளரும் எப்படியாவது ஒரு லோனுக்காவது அவரை ஜாமீன் கையெழுத்து போட வைக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்.அந்த கடன் வசூல் ஆகவில்லையெனில் அதை சொல்லி அவருடைய மற்ற பரிந்துரைகளை மறுத்துவிடலாம் என்பது திட்டம்.ஆனால் அதற்கெல்லாம் மசிகிறவரா நம்ப கோபால்.கூட்டிக்கொண்டு வருகிற ஆட்களிலேயே ஒருவருக்கு ஒருவர் மாற்றி ஜாமீன் போட வைப்பார்.

ஒருநாள் ஏதோ காரணத்திற்காக அந்த கிராமத்தில் உள்ள ஒரே அரசு மருத்துவமனையை கண்டித்து பேரணி, ஆர்பாட்டம் என்று அறிவித்தார்.காலை பத்து மணிக்கு பேருந்து நிறுத்தத்தில் துவங்கும பேரணி ஊர்வலமாக சென்று அரசாங்க ஆஸ்பத்திரி முன்னால் கோபாலின் பேருரைக்குப்பின் மகஜர் கொடுப்பது என்பது நிகழ்ச்சிநிரல்.பயந்துப்போன நான் அன்று பஸ் எல்லாம் ஊருக்குள் போக முடியாது என்று முடிவு செய்து என்னுடைய இரு சக்கர வாகனத்தில் வங்கிக்கு சென்றேன்.எங்கள் வங்கிக்கு முன்னால்தான் பேருந்து நிறுத்தம் ஆதலால் எதையும் நன்றாக பார்க்கமுடியும். பத்துமணிக்கு எந்த ஒரு சலசலப்பையும் காணோம்.கோபால் தான் வழக்கமாக உட்காரும் இடத்தில் அமர்ந்திருக்கிறார்.அமைதியாக இருக்கிறார். ஒரே மாற்றம் துவைத்த வேஷ்டி,சட்டை அணிந்திருக்கிறார்.ஒரு பேரணி நடக்கப்போகிற அறிகுறி எதுவுமே அந்த இடத்தில் இல்லை.நான் பேரணி கேன்சல் ஆகிவிட்டதோ என்று சந்தேகப்பட்டேன்.நேரம் கூடக்கூட எனக்கு பதட்டமாக இருந்தது.சரியாக பத்து மணி பத்து நிமிடத்திற்கு கோபால் தன் சட்டை பையிலிருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்து படித்துக்கொண்டே நடக்கிறார். ஆங்காங்கே உட்காந்திருந்த நான்கு பேர் ஆம் ,நம்பினால நம்புங்கள்.நான்கே பேர். அவரை கோஷம் போட்டபடி பின்தொடருகிறார்கள். ஊர்வலமும் பேருரையும் மகஜர் சமர்பித்தலும் கண்டிப்பாக நடந்திருக்கும்.சந்தேகம் என்ன?

போலீஸ் ஸ்டேஷன் என்பது சர்வ சாதாரணம் அவருக்கு.கிராமத்தில் ஏற்படும் சில சில்லறை சண்டை,திருட்டு போன்ற விஷயங்களில் போலீஸ் ஸ்டேஷன் போய் கிராம மக்கள் சார்பாக பேசுவதும் அவர் வேலைகளில் ஒன்று.பணம் எதுவும் வாங்குவது இல்லை.மக்கள் அன்புடன் வாங்கிக்கொடுப்பதை சாப்பிடுவார்.

வரலாற்று பொருள்முதல்வாதம் என்றால் என்ன என்று இவருக்கு தெரியுமா? எங்கெல்ஸ்,மார்க்ஸ் பற்றியெல்லாம் மக்களுக்கு இவர் சொல்வாரா? என்றெல்லாம் நான் சிந்தித்ததுண்டு.அவரிடம் நான் அதிகம் பேசியதில்லை.அவர் என்னை பூர்ஷ்வா வர்க்கம் என்று கூட நினைத்து கொண்டிருக்கலாம்.ஆனால் நான் உள்ளூர அவரை ரசித்துக்கொண்டிருந்தேன். அவருடைய நடவடிக்கைகளை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் தன் பார்வையை கொண்டு அர்த்தப்படுத்திவிடமுடியும். ஒருவர் இந்த பதிவை வெறுமே ஒரு சிரிப்பு துணுக்காகவும் படித்துவிடமுடியும் ஆனால் சற்றே சிந்தித்தால் இதுபோன்ற ஆட்கள் படிப்பறிவில்லாத அப்பாவி ஜனங்கள் வாழ்க்கையில் எந்த அளவிற்கு ஆக்கபூர்வமாக பங்களிக்கிறார்கள் என்பதையும் புரிந்துக்கொள்ள முடியும். இன்றைய கிராமங்களில் இவர்களுடைய பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது.இவர்களின் சாதனை என்பது வெளிஉலகிற்கு தெரியாமல் போகலாம். ஆனால் இந்த மாதிரியான போராட்டங்களால் சிறிய அளவிளாவது சில மாற்றங்களை இவர்கள் உருவாக்கி வருகிறார்கள்.

ஆனால் நம் கல்வி முறையில் பட்டபடிப்பு வரை ஒருவர் மார்க்சியம் என்றால் என்ன என்று தெரியாமலே படித்துவிடமுடியும் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.ஒருவர் அந்த சிந்தாந்தத்தை ஏற்றுக்கொள்கிறாரா மறுக்கிறாரா என்பது அவரவர் மனப்பான்மையை பொறுத்தது. ஆனால் ஒரு அறிவியலை அடிப்படையாக கொண்டதாக சொல்லப்படுகின்ற ஒரு சிந்தனை முறை பற்றிய படிப்பு நம் பள்ளிகல்வியில் இல்லை என்பது நம் கல்விமுறையின் பற்றாக்குறையை சொல்கிறது என்றே நான் நினைக்கிறேன்.ஒரு புறம் அறிவியல் பாடம் எதையும் அறிவியல் பூர்வமாக பார்க்கும் கல்வி. இன்னொருபுறம் அதற்கு சம்பந்தமே இல்லாமல் மூடநம்பிக்கைகளில் ஊறிய வாழ்க்கை முறை.குறைந்தபட்சம் மார்க்சியத்தின் அடிப்படைகளாவது தெரிந்த இளைஞர்கள் இங்கு எத்தனை பேர்?கம்யூனிஸ்ட் என்றாலே ஸ்ட்ரைக் பண்ணுகிறவர்கள் என்றும் கூட்டம் சேர்ந்து கோஷம் போடுகிறவர்கள் என்று எண்ணம்தானே இங்கு பல இளைஞர்களுக்கும் உள்ளது.இது மறுபரிசீலனைக்குரியது.

6 comments:

டிபிஆர்.ஜோசப் said...

கம்யூனிஸ்ட் என்றாலே ஸ்ட்ரைக் பண்ணுகிறவர்கள் என்றும் கூட்டம் சேர்ந்து கோஷம் போடுகிறவர்கள் என்று எண்ணம்தானே இங்கு பல இளைஞர்களுக்கும் உள்ளது.//

நீங்க சொன்னது ரொம்ப சரி முத்து.

ஆனா அது எல்லா கம்யூனிஸ்டுகளுக்கும் பொருந்துமான்னு தெரியலை.

கம்யூனிஸ்டுகளுக்கு குற்றம் சொல்லி பிழைப்பதே வேலை என்றும் என்னுடைய கேரள நண்பர்கள் பலரும் சொல்லி கேட்டிருக்கிறேன்.

மார்க்சிஸ்ட்டுகளின் ஆட்சியில் கேரளமும், வங்காளமும் என்ன முன்னேற்றத்தைக் கண்டுவிட்டன என்பதை அதை நேரில் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

Muthu said...

கம்யூனிசம் அரசியலானப்பிறகு என்ன ஆச்சுங்கறதைபத்தி நான் ஆராய்ச்சி பண்ணலை.


கம்யூனிசத்தை ஒரு சித்தாந்தமா எடுத்து நாம் பார்க்கலை என்று சொல்கிறேன்.

ஆனால் லஞ்ச ஊழல் இவர்கள் பண்ணுவதில்லை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(இதுவும் கம்பேரட்டிவ் டேர்ம்தான்)

சந்திப்பு said...

மிக அருமையான அனுபவம். உண்மைதான் பலபோர் மார்க்சியம் - லெனினியம் என்ற பெயரால் பலதை மனப்பாடம் செய்திருப்பார்கள். ஆனார் அவர்களுக்கு மக்களைப் பற்றிய எந்தவிதமான அக்கறையும் இருக்காது. இது குறித்து அந்தோனியா கிராம்சி என்ற மார்க்சிய அறிஞர் என்ன கூறுவது சாலப்பொறுந்தும். தொழிலாளி வர்க்கத்தில் அதற்கான அறிவாளிகள் அங்கிருந்தே உருவாக வேண்டும். இது வெறுமனே பள்ளிப் படிப்பு போன்றதாகாது. இது கிராமத்து கோபாலின் அனுபவத்தில் இருந்து நன்றாக உணர முடிகிறது. நடைமுறை அனுபவத்தில் இருந்தும் தத்துவார்த்த கல்வியில் இருந்தும்தான் நாம் எதையும் உண்மையாக - மறைபொருளின்றி கற்க முடியும். புரிந்து கொள்ள முடியும் - செயல்டுத்த முடியும். வளர்க.... தங்கள் அனுபவ முத்திரை...
கே. செல்வப்பெருமாள்

Muthu said...

THANK YOU SELVAPERUMAL FOR YOUR VISIT AND COMMENT...

Sudhakar Kasturi said...

//ஆனால் நம் கல்வி முறையில் பட்டபடிப்பு வரை ஒருவர் மார்க்சியம் என்றால் என்ன என்று தெரியாமலே படித்துவிடமுடியும்//

மிக மிக உண்மை. நமது பாடத்திட்டத்தினை கவனியுங்கள். வேண்டாதது எத்தனையோ உள்ளது. நவீன இலக்கியம் கூட கல்லூரித் தமிழில்தான் வந்தது நான் படிக்கும்போது.
மார்க்சியம், பெரியாரின் கொள்கைகள் போன்றவற்றை கழகங்களும், காங்கிரசும் பாடத்திட்டத்திலிருந்து ஒதுக்கிவைத்த அரசியல் அடுத்த தலைமுறை இதனைத் தெரியாமல் வளரட்டுமே என்ற நல்லெண்ணம்தான். அம்பேத்கரின் சிந்தனைகள் குறித்து எத்தனை பாடப்புத்தகங்கள் சொல்லியிருக்கின்றன.? தலித் இயக்கம் எனப் பேசுபவர்கள் முதலில் இதனைச் செய்யட்டும். அந்த மாமனிதர் யாரென முதலில் மக்கள் புரிந்துகொள்ளட்டும். விட்டுவிடுவார்களா இவர்கள்?
மார்க்ஸியம் குறித்து பேசவும் இப்போது ஆளில்லை என்பது வருத்தமான செய்தி. சோவியத் நல்லுறவில் மலிவு விலையில் புத்தகங்கள் கிடைத்தன. இப்போது அதுவும் இல்லை. எப்படி இக்கொள்கைகளை உள்வாங்கும் இளையதலைமுறை? மலிவு திரைப்படங்களும், வசனங்களுமாக மளுங்க அடிக்கின்றன ஊடகங்கள்... சிற்றிலக்கிய இதழ்கள் எதேனும் ஒரு கட்சி/கொள்கை அல்லது ஜாதி சார்ந்த அல்லது விரோதமான போக்கைமட்டுமே கடைப்பிடிக்கின்றன.
கஷ்டம்தான்..
அன்புடன்
க.சுதாகர்

Muthu said...

thank you sudhakar for sharing my concern