Saturday, November 12, 2005

மசாலா தமிழ் திரைப்படங்களும் தமிழர்களும்

மசாலா திரைப்படங்கள் அடையும் வெற்றி தரமான திரைப்படங்களின் வருகையை தடுக்கிறது என்பது என்னுடைய கருத்து. இதுவெல்லாம் ஏற்கனவே பலர் சொல்லிய கருத்துதான் என்றாலும் இங்கே தமிழ்மணத்தில் மசாலா படங்களை பலரும் பாராட்டி எழுதுவதை சகித்துக்கொள்ள முடியாமல் எழுதப்பட்ட பதிவுதான் இது.

சங்கரின் திரைப்படங்களில் வரும் கதாநாயகன் லஞ்சம் வாங்குபவர்களை துவம்சம் செய்வதை பார்க்க பிளாக்கில் டிக்கெட் வாங்கி கொஞ்சம் கூட ரோஷம் இல்லாமல் கை தட்டுகிறோம்.
சங்கரும் படத்திற்கு கோடிக்கணக்கில் பணம் பண்ணுகிறார். இன்கம்டாக்ஸ் கணக்கு எல்லாம் பார்த்தால் தான் தெரியும்.பாரதியார் பற்றி படம் எடுத்தால் காத்து வாங்குகிறது. எங்கே போகிறோம் நாம்?

விஜய் நடிக்கும் படங்களின் கொடுமை ஆண்டவனுக்கே அடுக்காது. மிகச்சாதாரணமான நடிப்பு. வெற்று சவாடல்.படிக்காத பாமர தமிழன் இந்த மாதிரி படங்களை பார்த்து எப்படிய்யா முன்னேறுவான்?.அவனுக்கு வாழ்க்கை திரைப்படத்தில் ஆரம்பித்து திரைப்படத்தில் முடிகிறது. கோடிக்கணக்கில் சம்பாதிக்கறதில் ஒரு துளி பிச்சைப்போட்டு சமூக அக்கறையையும் காட்டிக்கொள்கிறார்கள் இந்த வீரர்கள்.

பறந்து பறந்து ஒரே சமயத்தில் நூறு பேரை அடித்துத்தான் எந்தவொரு அநியாயத்தையும் கதாநாயகன் முடிவுக்கு கொண்டுவருவான்.அது நிஜ வாழ்க்கையில் சாத்தியம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.ஆகவே தவறு செய்பவர்களும் கூச்சப்படுவதில்லை.யதார்த்த வாழ்க்கையை ஒட்டி வராத எந்த ஒரு திரைப்படத்தையும் பார்க்கும் மக்கள் அதையும் யதார்த்த வாழ்வையும் பிரித்து வாழும் ஒரு பக்குவத்திற்கு வந்து விட்டார்கள. திரைப்படம் என்பது ஒரு கனவு வாழ்க்கை என்பது போல.

உண்மையில் நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது பற்றி நமக்கு அக்கறையில்லை. பொழுதுப்போக்கு மீடியம் தானே அதில் என்ன போதனை என்று வேறு ஒரு குழு. பொழுதுப்போக்கு மீடியம்தான்.ஆனால் உங்கள் சிந்தனைப்போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி அதற்கு உண்டு. கேட்டால் மக்கள் கேட்பதைத்தான் தாங்கள் கொடுப்பதாக சப்பைக்கட்டு. புளு பிலிம் கூடத்தான் மக்கள் கேட்பார்கள்.(சூரியா என்ற இயக்குனர் மக்களின் இந்த அரிப்பை தான் உபயோகப்படுத்தி பணம் பண்ணுகிறார்) டேஸ்ட எல்லாம் படைப்பாளிகள் தான் உருவாக்க வேண்டும். வானத்தில் இருந்து குதிக்காது தரமான ரசனை என்பது.மசாலா குப்பையை எடுக்கும் எந்த ஒரு இயக்குனரையும் கேளுங்கள். என்னுடைய கனவு திரைப்படம் இதோ வருகிறது. அதுக்கு முன்னால் ஒரு குப்பையை பாருங்கள் என்பார்கள். ஆனால் இவர்களிடம் இருப்பது எல்லாம் நாற்றம் பிடித்த குப்பைகள்தான்.

இந்த நடிகைகள்,நடிகர்கள் தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் தொலைக்காட்சிகளிலும் வந்து தங்கள் அறிவை காட்டும்போது தமிழன் புளகாங்கிதம் அடைகிறான். ஒரு சிறந்த எழுத்தாளனோ சிந்தனையாளனோ பேசமுடிவதில்லை. மட்டமாக சினிமா எடுக்கும் சினிமாகாரர்கள் ஒருவரை ஒருவர் புகழ்வதை காணும்போது பற்றிக்கொண்டு வருகிறது.

படித்தவர் படிக்காதவர் என்று வித்தியாசம் இல்லாமல் சினிமா கலாச்சாரம் நமது சிந்தனையை ஆக்ரமி்த்துக்கொண்டிருக்கிறது. சேரன்,தங்கர்பச்சான் போன்று சிலர் இந்த சூழ்நிலையில் சற்றேனும் மாற்றத்தை கொண்டுவர முயற்சி செய்கின்றனர். ஆனால் இந்த மசாலா திரைப்படங்களின் வெற்றி இவர்களின் முயற்சியை முடக்கிவிடக்கூடாது என்பதே நமது ஆதங்கம்.

21 comments:

சினேகிதி said...

unga aathangam than niraya pearuku.

டிபிஆர்.ஜோசப் said...

சூப்பர் முத்து.


இப்படி சாட்டையாய் அடித்தால்தான் இதுபோன்ற மசாலா படங்களை ஆஹா, ஓஹோ என்று விமர்சித்து வரும் பதிவுகளும் குறையும்.

பாருங்களேன்.. இந்த மசாலா குப்பைகளுக்கு நடுவில் மாணிக்கமாய் வந்த அது ஒரு கனாக்காலம் (அ.ஒ.க) மறைந்தே போய்விட்டது!

இன்றைய Economic Times ET MadrasPlusல் அ.ஒ.கவை பற்றி மிக அருமையான விமர்சனம் வந்துள்ளது..

படித்து பாருங்கள்.

Muthu said...

thank you snegithi....
thank you joseph sir...

Really it is a sickening feeling to see these movies..

மணியன் said...

நீங்கள் கூறுவது சரிதான். ஆனாலும் மசாலா படங்கள் தரும் reliefஉம் அவ்வப்போது வேண்டியிருக்கிறது :)
மது கெடுதல்தான், ஆனால் சிறந்த கவிதைகள் உருவாவது ஒரு மாலை மயக்கத்தில் தானே ;)
எதுவும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதானே.

தருமி said...

unga aathangam than niraya pearuku// - சினேகிதி, நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்குமே. நம் படித்த மேதாவிகள் நிறைய பேருக்கு நம் தமிழ்ப்படங்களின் நிலை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.

மணியன் கூறுவது நல்ல உதாரணமாகத்தெரியவில்லை. அப்படியே வைத்துக்கொண்டாலும் - ஏதோ ஒரு மாலையென்றாலும் பரவாயில்லையே. இங்கே 'முழுச் சாப்பாடும்' அது மட்டும்தான் என்பதோடு, அதுவே நன்றாக இருக்கிறது என்ற குரலே ஓங்கி ஒலிக்கிறது.

ஜெ. ராம்கி said...

இதுபோல் எத்தனை நாளைக்கு எழுதிக்கொண்டே இருக்கப்போகிறீர்கள்? சினிமா ஒரு தொழில் என்பதை சினிமா சம்பந்தப்பட்ட யாரும் மறுக்கவே மாட்டார்கள். விமர்சனம் என்கிற பெயரில் இப்படி புலம்பி தள்ளுறதை மொதல்ல நிறுத்தங்க ஸார்... போரடிக்குது!

தருமி said...

sorry ராம்கி,
உங்களைப்போல் மூளையை கழற்றி வச்சிக்கிட்டு படம் பார்க்கிற ஆளுங்க, படம்னு பாக்காம 'நம்ம ஆளு'ன்னு பாக்கிற புத்திசாலிகள் இருக்கும்போது, இந்தப் புலம்பல்கள் நிறைய வளரும்; வளரணும். மற்ற எந்த நாட்டுப் படங்களாவது இத்தனை கேவலமாக இருக்கிறது என்று நீங்கள் காண்பித்துவிட்டால் எங்கள மாதிரி ஆளுங்களோட 'புலம்பல்'நிக்கும்.இல்லைன்னா உங்க மாதிரி ஆளுகளோட
'அலம்பல்கள்'தான் உண்மைன்னு ஆயிடுமே.
தயவு செய்து 'இது business; எல்லாம் mere entertainment என்பது போன்ற 'தத்துவ முத்துக்களை' உதிர்க்காமல் கொஞ்சம் சுய நினைவுக்கு வாருங்கள். PLEASE.

rv said...

நல்ல பதிவு முத்து. உங்களின் ஆதங்கமே என்னுடையதும். மசாலா தேவைதான். ஆனால் அளவிற்கு மீறக்கூடாது.

இது monopoly மாதிரி தான். மசாலாவே கிடைத்தால் அது பிடித்துத்தான் ஆக வேண்டும். மாறாக கருத்துள்ள படங்கள் நிறைய வர ஆரம்பித்தால் மக்களின் மனநிலையும் மாற வழிவகுக்கும். ஏனென்றால், நம் நாட்டில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சினிமா சமூகத்தின் எல்லா நிலைகளிலும் ஊடுருவியுள்ளது. பெண்களை அவமானப்படுத்துவது, நான் ஆம்பிளடா போன்றவை இள வயதினரிடம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சிவகாசி, கில்லி போன்ற படங்களே நிறைந்திருப்பதுதான் என் பிரச்சனை. குப்பையென்று ஒதுக்கவில்லை. அவையும் தேவைதான். ஆனால், நல்ல படங்களும் அதே அளவிற்கு தயாரிக்கப்படவேண்டும். சினிமா என்பது வெறும் பிஸினஸ் என்று சொல்வோருக்கு. லாபம் அதிகம் கிடைக்கிறது என்பதற்காக உங்கள் பால்காரர் அதிக தண்ணீர் கலந்து கலப்பட பால் விற்றால், பிஸினஸ் தானே, பொழச்சுப் போகட்டும் என்று சும்மா விடுவீர்களா?

விளம்பர நேரம்.. :)
இது குறித்து என் பதிவு ஒன்று.

முகமூடி said...

பேசாம அம்புமணிகிட்ட சொல்லி நம்ம ஆளுங்க திருத்த இப்படித்தான் படம் எடுக்கணுமுன்னு ஒரு சட்டம் போட சொல்லுங்க எல்லாம் சரியாப்போகும்...

சங்கரின் இன்கம்டாக்ஸ் கணக்கு எல்லாம் பார்த்தால் தான் தெரியும்னு இதுல பெரிய ஆதங்கம்,.. என்னிக்காவது சமூக நல அமைப்புகளோட வருமான விபரங்கள பத்தி தெரிஞ்சிக்க ஆரவம் காட்டியிருக்கீங்களா? சங்கரோட இன்கம்டாக்ஸ் விபரம் தெரிஞ்சி என்ன ஆகப்போகுது உங்களுக்கு...

பாரதியார் பற்றி படம் எடுத்தால் காத்து வாங்குகிறது. எங்கே போகிறோம் நாம்? எங்கியும் போகல... பாரதியார் பத்தி படமெடுத்தா பார்த்த்தே ஆக வேண்டிய கட்டாயம் இல்ல... அத எடுக்கிறவர் சுவாரசியமா திரைக்கதை அமைக்க தெரியாதவரா இருந்தா பாக்கணும்னு ஒன்னும் அவசியம் இல்லை... மேலும் பாரதியார பத்தி படத்துல பாத்துத்தான் தெரிஞ்சுக்கணுமுன்னு நெலமை இங்க நிறைய பேருக்கு இல்ல... நாள் முச்சூடும் நேசனல் ஜியாகரிபிக்கா பாக்கறீங்க.. கம்ர்சியல் டிவி பாக்கிறதில்லை?

படிக்காத பாமர தமிழன் இந்த மாதிரி படங்களை பார்த்து எப்படிய்யா முன்னேறுவான்? படத்த பாத்து முன்னேற்றான்ற அளவுல பாமர தமிழன பத்தி பேசறீங்க... என்ன ஒரு சுப்பீரியரிட்டி காம்ப்ளக்ஸ்யா உங்களுக்கு? நீங்க முன்னேறிட்டீங்களா?

அரசியலும் சினிமாவும் ஒரு மாயப்போர்வையாக சமுதாயத்தின் மேல் படர்ந்திருக்கிறது. அதை கண்டுக்காமல் செல்கிறவன் சென்று கொண்டுதான் இருக்கிறான். அதை வாழ்க்கையாக நினைப்பவன் நினைத்துக்கொண்டுதான் இருக்கிறான். குப்பைகளை புறக்கணிப்பதை உங்களளவில் செய்யுங்கள். நான் கடந்த 6 வருடத்தில் தியேட்டர் + DVDல் பார்த்த தமிழ்ப்படங்கள் 10 + 20க்கும் கம்மி.

மற்றபடி உங்கள் ஆதங்கம் புரிகிறது. அதை சரியாக சொல்ல முயற்சி செய்யுங்கள்... சினிமாவின் வேலை சமுதாயத்தை திருத்துவதில்லை... அது பொழுது போக்கு அம்சம். சினிமாவை பொழுதுபோக்காக இல்லாமல் வாழ்க்கையாக ஒரு சமுதாயம் பார்க்கிறது என்றால் அது சினிமாவின் குற்றமல்ல. சமூக அமைப்பின் குற்றம். அதற்கு பின்னால் உள்ள காரணிகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதை பற்றி எழுதுங்கள்.

***

// மற்ற எந்த நாட்டுப் படங்களாவது இத்தனை கேவலமாக இருக்கிறது என்று நீங்கள் காண்பித்துவிட்டால் எங்கள மாதிரி ஆளுங்களோட 'புலம்பல்' நிக்கும் //

எல்லா நாட்டுலயும் அப்படித்தான் தருமி... ஜேம்ஸ் பாண்டு படம் பாத்திருக்கீங்களா? அதுல இல்லாத அபத்தமா? இங்க இந்த சீசனுக்கு திரைக்கு வர படங்கள்ல பெரும்பாலான படத்துக்கு மூளைய களட்டி வச்சிட்டுத்தான் போகணும். மொத்தமா பாத்தா 10க்கு 3தான் தேறும் இங்க... நம்மூர்ல 10க்கு 1... அவ்வளவுதான் வித்தியாசம். (இந்த சந்தர்ப்பத்துல ஒரு சைடு கிக் :: மூளையோட பாக்குற படத்துக்கு ஒரு உதாரணம் கொடுங்க தருமி)

// கருத்துள்ள படங்கள் நிறைய வர ஆரம்பித்தால் மக்களின் மனநிலையும் மாற வழிவகுக்கும் // கருத்துள்ள படமா... கருத்த எதுக்கு படத்துல பார்க்கணும். வீட்டுல திருக்குறள் புஸ்தகம் வாங்கி வச்சி பார்க்கலாமே இராம்ஸ்?

ஜோ/Joe said...

Reproducing my comment from Ramanathan's old thread..

தமிழ்திரைப்படத்தின் தலையெழுத்துக்கு நுகர்வோரும் ஒரு முக்கிய காரணம் .உங்களைப்போல(என்னையுன் சேர்த்துத்தான்) சில பேர் நல்ல படம் வேண்டுமென்கிறீர்கள் நாம் சிறுபான்மை .அதுவும் நீங்கள் கேட்டதை யாராவது கஷ்டப்பட்டு கொடுத்தாலும் ,சிரமமெடுத்து உடனே திரயரங்கம் சென்று பார்ப்பதில்லை .படம் வந்தவுடனே அடித்து பிடித்து பார்க்கும் கூட்டம் இந்த மாதிரி படங்களுக்கு வரவேற்பு கொடுப்பதில்லை .அப்புறம் ஆளில்லாததால் தியேட்டரை விட்டு தூக்கிய பிறகு ,அதுக்குள்ள தூக்கிடாங்களான்னு VCD வாங்கி பார்த்துட்டு 'சூப்பர் படம்'-ன்னு சொன்னா போதுமா? அதுக்கப்புறம் கைகாசு போட்டு அது மாதிரி படம் எடுக்க ,சினிமா காரங்க என்ன கலைச்சேவையா பண்ணுறாங்க?

மகாநதியை வெகுஜனங்கள் புறக்கணித்ததும் ,அதோடு கூட வந்த ஆபாச குப்பை 'ரசிகன்' வெள்ளிவிழா ஓடியதும் நீங்கள் அறியாததா? 'குட்டி'-ன்னு ஒரு அற்புதமான படம் வந்ததே பல பேருக்கு தெரியாது. 'அன்பே சிவம்' என்னாச்சு ?கில்லி பக்கதுல நிக்க முடியல்லியே?
இதுக்கு எங்க போய் முட்டிக்குறது?

Anonymous said...

-->இந்த நடிகைகள்,நடிகர்கள் தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் தொலைக்காட்சிகளிலும் வந்து தங்கள் அறிவை காட்டும்போது தமிழன் புளகாங்கிதம் அடைகிறான்<--

சுதந்திர தின "சிறப்பு" நிகழ்ச்சிகள்! குடியரசு தின "சிறப்பு" நிகழ்ச்சிகள்! ஹி! ஹி!

-->ஒரு சிறந்த எழுத்தாளனோ சிந்தனையாளனோ பேசமுடிவதில்லை<--

ஏன் வைரமுத்துவும் வாலியும் போதாதென்றா? அட போங்க முத்து! இவர்கள் எங்கே திருந்த?

தருமி said...

மூளையோட பாக்குற படத்துக்கு ஒரு உதாரணம் கொடுங்க தருமி)//

ஜோ ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கார்.

நான் சொல்றது: நம்ம படங்கள் இரண்டே வகை: ஒன்று: முட்டாள்தனமாக, முட்டாள்களால், முட்டாள்களுக்காக எடுக்கப்படுபவை. இரண்டாம் வகை>: நல்ல படங்களோ இல்லையோ நல்ல முயற்சிகளோடு எடுக்கப்படும் படங்கள்.

bond picture/war picture/matrix-type picture என்று தனித்தனி identity-யோடு வரட்டும். முதலிலேயே முடிவெடுத்து விட்டு படம் பார்க்க போகலாம் - மூளை தேவையா, இல்லை, கழற்றிவைத்து விட்டு செல்லணுமான்னு.
ஆனா இங்கே ஒரே படத்தில், முதல் சீன், கதாநாயகர் மணலில் குத்தி வைத்த குச்சி எதிரில் நிற்கும் ஆட்களை ஒரு சுற்று சுற்றிவிட்டு நம்ம ஆள்ட்டயே வந்து நிற்கும்; இரண்டாவது சீன்ல, பொண்ணுன்னா எப்படி இருக்கணும்னு ஒரு தத்துவம் இருக்கும்; அடுத்து தாய்ப்பாசம் வழிந்தோடும்..என்ன கலவைஇது - பிச்சைக்காரன் வாந்தி மாதிரி..? எனக்குத்தெரிந்தவரை மற்ற நாட்டுப் படங்கள் எல்லாமே ஏதோ ஒரு genre-க்குள் அடங்கி நிற்கும். 'குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் ரசிக்கிறது மாதிரி படம்' நம்ம ஊர்லதாங்க...!

Muthu said...

i thank all the friends who visited my page and gave their feedback....special thanks to the
friends who shared my concern...i want to respond to the feedbacks...i will do it one by one

திரு மணியன்,
//மது கெடுதல்தான், ஆனால் சிறந்த கவிதைகள் உருவாவது ஒரு மாலை மயக்கத்தில் தானே ;)
எதுவும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதானே//
தண்ணி அடித்தால் சிறந்த கவிதைகள் வருமா? சந்தேகம் தான். ஆனால் பல கவிஞர்கள் பெருங்குடிகாரர்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் நீங்கள் சொல்லுவதும் ஒரு விதத்தில் சரி. அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதான்.நிறைய நல்ல படங்கள் .சில மசாலா படங்கள் என்று வந்தால் .ஓ.கே

.ஊறுகாயையே சாப்பிட முடியுமா? தமிழன் ஊறுகாயை தின்று ஏப்பம் விடுகிற மாதிரிதான் எனக்கு தோன்றுகிறது.

Muthu said...

நண்பர் ரஜினி ராம்கி,

சினிமா தொழில்தான். சாராயம் விக்கறதும் தொழில்தான்.லாட்டரி சீட்டு விக்கறதும் தொழில்தான். எல்லாம் தொழிலா போச்சு என்றுதான் நானும் சொல்கிறேன்.
லாட்டரி சீட்டு விக்கறதை மட்டும் தடை செய்யறீங்க? esponsibility அப்படின்னு ஒண்ணு இருக்கு சார்.

காலேஜ் முன்னாடி கஞ்சா விக்கறவனுக்கு கூட அது ஒரு தொழில்தான்னு சொல்வீங்களா நீங்க?

Muthu said...

நன்றி திரு ராமநாதன்,

உங்கள பதிவை பார்த்தேன். நேர்த்தியாக அலசி இருக்கிறீர்கள்.நன்றி.

( பார்முலா ஒன் ரேஸ் சீஸன் இப்போ இல்லையா? உங்க போட்டோன்னு போட்டு ஜான் பாப்லோ மான்டோயா படம் போட்டிருக்கீங்க? என்ன மேட்டர் அது)


திரு முகமூடி,

சங்கரோட இன்கம்டாக்ஸ் மட்டும் இல்ல. சங்கர மடம் இன்கம்டாக்ஸ்.மற்றும் இன்ன பிற சமூக நல இயக்கங்களோட இன்கம்டாக்ஸ் எல்லாமே சரியாக இருக்கவேண்டியது அவசியமே.இதில என்ன சந்தேகம் உங்களுக்கு?

பாரதியார் படத்தில குத்து டான்ஸ் இல்லைன்னு நீங்க வருத்தப்படுவதற்கு நான் எதுவும் செய்ய முடியாது.

நான் கண்டிப்பா முன்னேறிட்டேன்.இதில என்ன சந்தேகம்?

ஜெ. ராம்கி said...

//உங்களைப்போல் மூளையை கழற்றி வச்சிக்கிட்டு படம் பார்க்கிற ஆளுங்க,

மூளையா? எனக்கா? :-)

Muthu said...

ரஜினியை பெயரிலேயே வைத்திருக்கும் நீங்கள் என் இவ்வாறு கூறுகிறீர்கள் என்றும் என்ன கூறுகிறீர்கள் என்றும் புரிகிறது.

G.Ragavan said...

தமிழ் மட்டுமல்ல எல்லா மொழிகளிலும் இதே நிலைதான். அதற்காக நாமும் அமைதியாக இருக்க வேண்டுமா? நாமாக பார்த்து திருந்தினால்தான் உண்டு. இல்லையென்றால் இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

அது ஒரு கனாக்காலம் பற்றி யாரோ சொன்னார்கள். என் நண்பன் பாலுமகேந்திராவின் விசிறி. அவனுடைய கமெண்ட். "எல்லாரும் பாலுமகேந்திரா மாதிரி படமெடுக்கனுமுன்னு நெனைப்பாங்க. ஆனா இப்ப பாலுமகேந்திரா செல்வராகவன் மாதிரி படமெடுக்க நினைச்சிருக்காரு!"

Muthu said...

பாலுமகேந்திரா is past his prime

தருமி said...

யானை படுத்தாலும் குதிரை மட்டம்...

Muthu said...

இல்லை சார் நான் அந்த படத்தை பார்க்கலே. ராகவன் வருத்தப்பட்டாரு .அதுக்காக சொன்னேன்.அதான் அவரோட சீடன் பாலா சுமாரா எடுக்கறாருல்ல.