Thursday, January 12, 2006

வராக்கடன் மற்றும் விவசாயக்கடன்

நண்பர் பெருமாள் சந்திப்பு தளத்தில் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பல கட்டுரைகளை எழுதுகிறார். உலக வர்த்தக அமைப்பு மற்றும் ஏகாதிபத்திய சுரண்டல் ஆகியவற்றை பற்றி எழுதி ஒரு ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நமக்கு கேட்க மட்டும்தான் தெரியும் என்ற திருவிளையாடல் தருமி பாணியில் அடிப்படையான சில கேள்விகளை வீசினேன்.அவரும் பதிலை கூறி இருக்கிறார். இங்கே அவருடனான உரையாடலில் வங்கிகளை பற்றி கீழ்கண்டவாறு கூறிச்செல்கிறார்.

//வங்கிகளில் கேட்கப்படும் ஏராளமான பார்மாலிட்டிகள் - டாக்குமெண்டுகளுக்கு பயந்து சாதாரண மக்கள் அந்த பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை. அத்துடன் அவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் கையேந்தி போண்டியாகிப் போகிறார்கள் என்பதே உண்மை.//

//1,10,000 கோடி ரூபாயை வராக் கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்துள்ளது.//

இதை பற்றி ஒரு இந்திய பொதுத்துறை வங்கியாளனாக நான் சில வார்த்தைகளை கூற விரும்புகிறேன்.. ஆழமாக எழுதினால் போர் அடித்துவிடும் .மேலும் வங்கிகளை பற்றி அறிந்தவர்கள் மட்டுமே படிக்க முடியும். ஆகவே நான் இந்த பதிவில் சில் அடிப்படைகளை மட்டும் எளிமையான முறையில் விளக்க முயற்சிக்கிறேன்.( ஆழமாக எனக்கு எழுத தெரியாது என்பதும் ஆழமாக எழுதுபவர்கள் உடனடியாக மாட்டிக்கொண்டு பொது மாத்து வாங்குவதும் தான் இதற்கு காரணமா என்றெல்லாம் யாரும் கேட்டு என்னை தர்மசங்கடப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.)

வராக்கடன் பற்றி:வங்கிகளின் முக்கியமாக வருமானம் கடன் கொடுப்பதின் மீதான வட்டி வருமானம்தான். முதலில் (1990க்கு முன்)அனைத்து வங்கிகளும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ கடன் மீதான வட்டியை கணக்கிட்டு கடன்தொகையுடன் சேர்க்கும் அதே நேரம் அவ்வாறு விதிக்கப்படும் வட்டியை வருமானத்திலும் (லாபத்திலும்) சேர்த்துவிடுவார்கள்.அவ்வாறு சேர்க்கப்படும் தொகை(வட்டி) வசூலாகிறதோ இல்லையோ லாப கணக்கில் சேர்ந்துவிடும்.ஆனால் இப்போது ஆறு மாதங்களுக்கு(இப்போது இது மூன்று மாதமாக குறைக்கப்பட்டுள்ளது) மேல் ஒரு கணக்கில் வட்டியோ அசலோ வசூலாகவில்லை என்றால் அந்த குறிப்பிட்ட கணக்கில் கடன்தொகை முழுவதுமே வராகடன் என்று வகைப்படுத்தப்படும்.எல்லோரும் நினைப்பதுபோல வாராக்கடன் என்று எதையும் வங்கிகள் தள்ளுபடி செய்வதில்லை. இந்த முறை அறிமுகப்படுத்தபட்டவுடன் சில வங்கிகள் விழுந்தன.(இந்தியன் வங்கி, யூகோ வங்கி போன்றவை).அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் கடன்கொடுக்கப்பட்டதால் இந்த நிலை இந்தியன் வங்கியில் ஏற்பட்டதாக கூறுவார்கள்.ஆனால் இதனால் பல்லாயிரகணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது என்னவோ நிஜம்.பிறகு அரசாங்கத்திடம் இருந்து பணம் பெற்று மீண்டது அவ்வங்கி.


வாராகடன்களில் மிகப்பெரிய பங்கு தொழில் துறையினரிடம் தான் சிக்கியுள்ளது.கடந்த பி.ஜே.பி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட SECURITASATION ACT இந்த மாதிரியான வராக்கடனை வசூலிக்க ஏற்படுத்தப்பட்டதுதான். அரசாங்கம் ஒரு வங்கியின் மொத்த கடன்தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்கு(5%) மேல் வாராகடன் இருந்தால் அந்த வங்கியை நலிவடைந்த வங்கி என்று கூறுகிறது.ஆகவே அனைத்து வங்கிகளும் வாராகடனை குறைக்க முயற்சிக்கின்றன. எனினும் இன்றைய நிலையில் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கும் மொத்த வாராக்கடன்களையும் மீறி பல வங்கிகளும் லாபம் ஈட்டி வருகின்றன.


விவசாயத்திற்கான கடன்கள்:வங்கிகள் கொடுக்கின்ற மொத்த கடன்களில் ஒரு குறிப்பிட்ட சதவீகித தொகையை விவசாயத்திற்கு கொடுக்கவேண்டும் என்பது அரசாங்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் சட்டம். (வெளிநாட்டு வங்கிகளுக்கு இந்த கன்டிஷன் கிடையாது.ஆனால் அதற்கு பதிலாக ஏற்றுமதிக்கு கடன் தரவேண்டும்) அது முடியாத வங்கிகள் அரசின் கிராமப்புற மேம்பாட்டு திட்டம் ஒன்றிற்கு அந்த பணத்தை வழங்கவேண்டும். அரசும் ஒரு சிறிய தொகையை வட்டியாக அளிக்கும். நிறைய வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் கொடுத்து வாங்குவதைவிட இதை பாதுகாப்பான வழியாக நினைக்கின்றன. எல்லோரும் நினைப்பது போல பயிர் காப்பீடு என்று பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் நமது நாட்டில் இல்லை என்பது ஒரு அதிர்ச்சிகரமான உண்மை. நமது நிதியமைச்சர் சிதம்பரம் விவசாயிகளுக்கு வங்கிகள் நிறைய கடன் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்.இந்த வராக்கடன் என்று சொல்லப்படும் கடன்களில் விவசாயக்கடன்கள் நிறைய இல்லை என்கிறார்கள். தொழிலதிபர்களை வி்ட விவசாயிகள் நேர்மையானவர்கள் போலும்.



மக்கள்: மக்களும் வங்கியில் வழங்கப்படும் கடன்களை சரியாக உபயோகப்படுத்தி கொள்வதில்லை என்பது ஒரு சோகமான நிஜம். வங்கியில் அமர்ந்திருக்கும் மேலாளர் அவர் சொந்த பணத்தை எடுத்து யாருக்கும கொடுப்பதில்லை. மக்களின் டெபாஸிட் தொகையிலிருந்து தான் கடன் தருகிறார். ஆகவே அவர் தான் கொடுக்கும் கடன் சரியான முறையில் குறித்த காலத்தில் திருப்பப்பட வேண்டும் என்ற நோக்கத்தி்ல் சில கண்டிஷன்கள போடுவது டாக்குமெண்டுகள் கேட்பது தவிர்க்கமுடியாதது. ஏனென்றால் கடன் வசூலாகவில்லை என்றால் மேலிடத்திற்கு பதில் கூறவேண்டியவர் அவர்.ஒரு தொழில் தொடங்க ஆசைப்படும் ஒருவர் தனது பங்காக ஒரு தொகையை கண்டிப்பாக போடவேண்டும். இல்லையென்றால் அவருக்கு தொழிலில் ஈடுபாடு இருக்காது என்பது பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை. என்கிட்ட நிறைய ஐடியா இருக்கு. எல்லா காசையும் பேங்க் போட்டுக்கிட்டா நான் வானத்தை வில்லா வளைச்சிருவேன் என்பதெல்லாம் நியாயமில்லை என்று மக்கள் உணரவேண்டும்.கந்து வட்டிகடைகாரர்களிடம் பணம் வாங்கினால் குறித்த காலத்தில் செலுத்தும் மக்கள் வங்கி கடனை திரும்ப செலுத்த யோசிப்பது வருந்தத்தக்கது.இதுப்போன்ற இளைஞர்களுக்கு கடன் கொடுப்பதில் அரசாங்கத்தின் பங்கு இன்றியமையாதது.அரசாங்கம்தான் இதுப்போன்ற சுயதொழில் கடன் பயனாளிகளை வங்கிக்கு பரிந்துரைக்கிறது.அங்கே லஞ்சம் கொடுத்துத்தான் தங்கள் ஃபைல்களை மூவ் செய்யவேண்டிய நிலையில் பலர் உள்ளனர்.பொதுவாக வங்கிகளில் நிறைய கட்டுப்பாடு உள்ளது எனினும் சில வங்கியாளர்களும் கடன் கொடுப்பதில் பர்சென்டேஜ் அடிப்பதும் நடக்கிறது



அரசாங்கத்தின் இம்சை மற்றும் வங்கி ஊழியர்களின் நிலை:சந்தையை அரசாங்கம் திறந்துவிட்டதன் விளைவாகவும் (இதை தவறு என்றோ சரி என்றோ நான் சொல்லவில்லை) போட்டியின் விளைவாகவும் வங்கிகள் தங்களுடைய லாபத்தை கூட்ட பல ஜகஜ்ஜால வேலைகளை செய்யவேணடி உள்ளது. அதில் ஒன்றுதான் ஆட்குறைப்பு. எவ்வளவுக்கு எவ்வளவு ஆட்களை குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு லாபம் என்று முடிவு செய்த வங்கிகள் இப்போதெல்லாம் ஆட்களை வேலைக்கு எடுப்பதே இல்லை. இருப்பவர்களை வைத்தே நன்றாக வேலை வாங்குகிறார்கள். கடந்த மாதம் கூட சிதம்பரம் அனைத்து வங்கிகளும் காலை எட்டு முதல் மாலை எட்டு வரை வேலை செய்யவேண்டும் என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இன்று வரை ஷிப்ட் சிஸ்டம் எதுவும் இல்லை ஏற்கனவே கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பல வங்கிகளில் இரவு எட்டு மணி வரை அன்அபிஷியலாக வேலை நடக்கிறது. இப்போது இந்த உத்தரவினால் அது இரவு பதினொரு மணியாகிவிடுமோ என்று ஊழியர்கள் பயப்படுகின்றனர். பரவலாக ஹார்ட் அட்டாக் மற்றும் மன உளைச்சல் போன்றவற்றால் சில அதிகாரிகள் மரணமடைந்த செய்திகளும் வந்துள்ளன.இது போதாது என்று, ஏற்கனவே வங்கி டெபாஸிட்களுக்கு வட்டியை குறைக்க வழிசெய்த அரசு போஸ்ட் ஆபிஸில் அதிக வட்டி கொடுத்து மக்களிடம் இருந்து பணம் வசூலித்துக்கொண்டு உள்ளது.இதனால் வங்கிகளில் சேரும் டெபாஸிட்டுக்களின் அளவு குறையும் நிலை தோன்றியுள்ளது. தாராளமயமாக்கல் போக்கினால் மற்றசில துறைகளைப்போல இங்கேயும் சமமற்ற போட்டி நிலவுவதும் உண்மை.இது பல சிறிய வங்கிகள் காணாமல் போவதில் வந்து முடியலாம்.கல்விக்கடனை அள்ளிக்கொடு, விவசாயக்கடனை அள்ளிக்கொடு என்னும் அரசாங்கம் அக்கடன்கள் வசூல் ஆகாத பட்சத்தில் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள தயாரில்லை. அரசாங்கம் சொல்கிறது என்பதற்காக கடனை கொடுத்துவிட்டு வசூல் ஆகவில்லையென்றால் ஊழியர்கள் வேலை இழந்து வீட்டுக்கு செல்லவேண்டுமா என்று ஊழியர்கள் கேட்கின்றனர். சில ஊழியர்களின் பேராசை,ஊழல் காரணமாக வங்கிகளுக்கு நஷ்டங்கள் ஏற்படுகின்றன என்பதையும் இங்கு கூறவேண்டும்

2 comments:

பொன்ஸ்~~Poorna said...

கடைசியா என்னதான் சொல்ல வர்றீங்க? தாராளமயமாக்கலைப் போக்குவதை விட, சிறிய வங்கிகளைப் பெரிய வங்கிகளோட இணைச்சிட்டு, தனியார் வங்கிகளோட போட்டி போடும் அளவுக்குத் தயார் செய்யலாமே?!!

பொன்ஸ்~~Poorna said...

just curious - மீள்பதிவாக இருந்தும் இதற்கு ஏன் வேறு பின்னூட்டங்கள் வரவில்லை?!!