Monday, January 30, 2006

திராவிட ராஸ்கல்களை ஒழிக்க முடியுமா?

போலி டோண்டுவின் அடாவடியை கட்டுப்படுத்த தமிழ்மண நிர்வாகிகள் எடுத்த நடவடிக்கைகளை ஆதரித்தும் எதிர்த்தும்(முணுமுணுத்தும்) பதிவுகள் பல வந்தாகிவிட்டன.

ஒவ்வொரு கமெண்டையும் மாடரேஷன் வைத்து அனுமதிப்பது என்பது பலருக்கும் மிகவும் கடினம். பிரவுசிங் சென்டர் சென்று தான் பதிவையே இடவேண்டிய நிலைமை வந்தது எனக்கு.இதில் பின்னூட்டத்திற்கு பதில் மாடரேசன் பார்த்து எப்போது போடுவது?


கிரிக்கெட் விளையாடி கையை சுளுக்கிக்கொண்டு அமர்ந்திருக்கும் நான் இதை பற்றி தனி பதிவாக போடவேண்டாம் என்று அமர்ந்திருந்தேன்.இந்த நடவடிக்கையில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.போலிடோண்டுவை ஒடுக்க தமிழ்மணம் அவர்களால் ஆன, அவர்கள் சரி என்று நினைக்கிற ஒரு நடவடிக்கையை எடுக்கிறது.விருப்பம் உள்ளவர்கள் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நடைமுறைப்படுத்தலாம். மற்றவர்கள் சில நண்பர்களை போல வெளியேறலாம். தமிழ்மணத்தின் அனைத்து சட்டதிட்டங்களுக்கும் ஒத்துக்கொண்டுதான் நாம் இடுகைகளை கொடுக்கிறோம். தமிழ்மணம் சுமூகமாக இயங்க அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வது நம் கடமை.ஆனால் அது தொடர்பாக நம்முடைய கருத்துகளை(கருத்து இருந்தால்) கூறுவது நம் உரிமை.அரசியல் சட்டத்தை எல்லோரும் ஏற்று நடக்கிறோம்.ஆனால் எல்லா சட்டத்தின் மீதும் நமக்கு விமர்சனமே இல்லையா என்ன?


அந்த உரிமையை பலபேர் பயன்படுத்தி இருந்தனர். கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது என்ற நிலையை பலரும் எடுக்காமல் இருந்தது கருத்து சுதந்திரம் தமிழ்மணத்தில் வாழ்வதாகவே தெரிகிறது.இது குறித்து சந்தோஷ் என்பவர் ஒரு பதிவு போட்டிருந்தார்.அதில் திரு.டோண்டு அவர்களுக்கு சில கேள்விகளை வைத்திருந்தார். ஜோ, அப்படிப்போடு ஆகியோர் முதற்கொண்டு பலரும் கேட்ட கேள்விகள்.என் மனதிலும் இருந்த கேள்விகள்.ஆகவே அவரை பாராட்டி ஒரு பின்னூட்டம் போட்டு வைத்தேன்.இன்று காலையில் தான் பார்த்தேன்.ஒரு நண்பர் என்னை பண்ணையார் என்று விமர்சித்திருக்கிறார். சந்தோஷம்.


சந்தோஷின் பதிவில் சமுத்ரா என்பவரை பற்றி நான் விமர்சித்திருந்தேன்.அவர் ஒரு வித்தியாசமான ஜீவராசி என்றும் பொது புத்திக்கு உதாரணம் அவர் என்றும் கூறி இருந்தேன்.உடனே நான் பண்ணையார்தனம் செய்வதாக நண்பர் ஒருவர் எழுதி உள்ளார்.விளக்கமும் கேட்டு உள்ளார்.அதற்கு விளக்கமே இந்த பதிவு.


1.இந்த பதிவில் லிங்க் சந்தோஷ் தெளிவாக ஒரு பாயிண்டை கூறினார்.

//சபைல வந்துட்டா எல்லாரும் ஏதாவது ஒண்ணு செல்லத்தான் செய்வாங்க(நான் இங்க செல்ல வந்தது போலியை பத்தி அல்ல நீங்க ஜோவை பாத்து கேட்டீங்களே ஒரு கேள்வி டேய் இது என்னோட பக்கம் அதுல நான் எதை வேணா எழுதுவேன் உன் வேலையா பாத்திட்டு போன்னு).இல்லாட்டி உங்க பதிவுகளில் போட்டு விடுங்க யப்பா பாருங்கப்பா இந்த பதிவை என்னுடைய கருத்தை ஆதரிக்கறவங்க மட்டும் இதை படிங்க மத்தவங்க போங்கடான்னு அப்பறம் ஏதாவது சென்னா கேளுங்க.//

இதுக்கு சமுத்ரா என்பவர்கள் கொடுத்த பதில்

////சபைல வந்துட்டா எல்லாரும் ஏதாவது ஒண்ணு செல்லத்தான் செய்வாங்க(//

அப்போ சபை நாகரீகம் ?

உங்க அப்பா, அம்மா, தங்கை பத்தி என்ன வேனும்னாலும் எழுதலாம் அனா அதை பற்றி யாரும் எதுவும் பேச கூடாது.//

அதாவது ஒரு வாக்கியத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கூறி உள்ளார்கள். அதற்கு கீழே சந்தோஷ் எழுதியுள்ள எதையுமே அவர்கள் பார்க்கவில்லை. பார்க்க விரும்பவில்லை.


2.அதையும் தொடர்ந்து அ.மார்க்ஸ் எழுதிய பார்ப்பனர் ஆடும் ஆரிய கூத்து என்ற கட்டுரையை குறிப்பிட்டு சில வாக்கியங்களை அடித்துவி்ட்டுள்ளார். மார்க்ஸ் கட்டுரையை இந்த இடத்தி்ல் குறிப்பிட என்னய்யா அவசியம்? அவர் எழுதிய சூழ்நிலை என்ன? அதில உள்ள விஷயம் என்ன?

3.ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி கேவலமாக திட்டி எழுதும் பதிவுகளில் உங்கள் எதிர்ப்பை ஏன் பதிவு செய்யவில்லை என்றும் கேட்டுள்ளார்.பிறகு சாதியை ஒழிக்க ஒரு வழிமுறை வேறு. "Levelling up". இதைப்பற்றி ஒரு விளக்கமான பதிவாக போட்டால் சந்தோஷம். மற்றபடி இவர் கூறியிருப்பவை எல்லாம் பலரும் பதில் சொல்லி புளித்துப்போன கேள்விகள். பதில்கள். இதைத்தான் நான் குறிப்பிட்டு பொது புத்தி என்று சமுத்ராவை விமர்சித்திருந்தேன்.


4.தொடர்ந்து எழுதும் சமுத்ரா "Dravidian Rascals" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்.இதையும் குறிப்பிட்டு ஆரியர் திராவிடர் என்ற வித்தியாசமே இல்லை என்று கூறும் அவர் தாமும் ஆரியரா திராவிடரா என்று தெரியாமல் இருக்கிறார் என்றும் எழுதியிருந்தேன்.இதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.


சமுத்ராவின் பின்னூட்டத்திற்கு சந்தோஷ் பதில் கொடுத்திருக்கிறார். சந்தோஷ் நானும் தனிமனித தாக்குதலை செய்துவி்ட்டேன் என்று நினைத்து எனக்கும் அறிவுரை கூறியிருக்கிறார்.அதை நான் தவறாக கருதவில்லை.ஒரு மூத்த வலைப்பதிவாளர் தம் பதிவுக்கு வந்து தனக்கு அறிவுரை கூறியுள்ளதால் அவர் உணர்ச்சி வசப்பட்டிருக்கக்கூடும். அவர் கூறியது சரி என்றும் நான் கூறியது தனிமனித தாக்குதல் என்றும் தோன்றியிருக்கலாம்.தப்பில்லை.சந்தோஷின் மற்ற பதிவுகளில் எனக்கு எவ்வளவோ கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன.அதற்காக இந்த பதிவை நான் கண்டிக்க வேண்டுமா என்ன?


ஒருவர் காலையில் எழுந்து தினமலர் படித்து பொழுதுபோக்குக்கு துக்ளக் படித்து தேசியம் தேசியம் என்று கனவில் கூட காரியத்துடன் புலம்பும், தேவையில்லாமல் கண்ட இடத்தில் ஜெய் ஹிந்த் போடும் ஆட்களுடன் பேசி படித்து அறிவை வளர்த்துக்கொண்டால் வருவது தான் பொது புத்தி.இது என் கருத்துதான்.மற்றவர்கள் இதற்கு நேர்மாறாக சொல்லலாம்.அதை நான் மறுத்து பண்ணையார்த்தனம் என்று சொல்லமுடியுமா? இதை மூத்த வலைப்பதிவாளர்கள் சொன்னால் வாதத்திறமை என்பதும் நாங்கள் சொன்னால் பண்ணையார்த்தனம் என்பதும் நியாயமல்ல. நாங்களும் மூத்த வலைப்பதிவாளர் ஆவது எப்போது? எங்களுக்கு அப்ரெண்டீஸ்ஷிப் எப்போது முடியும்?


நண்பரே,மேற்கண்ட சமுத்ரா என்ற நண்பரின் பதிவில் இருந்து உங்களுக்கு சில விஷயங்கள் கிடைக்கலாம். மற்றவர்களுக்கு அது குப்பையாகவும் தெரியலாம். அதுவெல்லாம் அவரவர் மனம் இயங்கும் தளத்தையும் விதத்தையும் பொறுத்தது.என் பதிவுகளை மிகவும் பாராட்டுபவர்களையும் பார்த்துள்ளேன்.(நம்புங்கய்யா).குப்பை என்று விமர்சிப்பவர்களையும் பார்த்துள்ளேன்.

சமுத்ரா ஒருவரே அல்ல.அவர் ஒரு குழு என்றும் போலி என்றும் கருத்து கொண்ட நண்பர்களும் இங்கே இருக்கிறார்கள்.நான் அதை குற்றம் சொல்லவில்லை. அறிவுபூர்வமான விவாதங்களுக்கு ஒரு பதிவும் சில்லுண்டித்தனமான விசிலடிச்சான் குஞ்சு ஆக்ட்டிவிட்டிசுக்கு( வார்த்தை உதவி நன்றி: திரு ராம்கி அண்ட் ரோசா வசந்த) ஒரு பதிவும் பலரும் வைப்பது அவரவர் உரிமை.அதிலும் தவறில்லை என்பேன்.அவரை விமர்சிப்பதால் நீங்கள் வெகுண்டு எழுவதையும் நான் வித்தியாசமாக பார்க்கவில்லை.கருத்தை எழுத எல்லோருக்கும் உரிமை உண்டு என்பதுதான் என் நிலை.


நிற்க.திரு.டோண்டு ராகவன் எனக்கு தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர் என்ற ஒத்துகொள்வதில் எனக்கு வெட்கமோ,பயமோ ஒன்றும் இல்லை. அதை நான் ஒரு பதிவாகவே போட்டுள்ளேன்.ஆனால் போலி டோண்டு பிரச்சினை இவ்வளவு பெரிதானதற்கு அவரும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்.அதற்காக அவரின் மீதான தனிப்பட்ட கோழைத்தனமாக தாக்குதலை நான் ஆதரிக்கவில்லை. போலியாக ஒளிந்துக்கொண்டு அடுத்தவரின் குடும்பத்தைக்கூட விடாமல் ஆபாசமாக எழுதி தாக்குபவர்களை கண்டிப்பது நம் சமூக கடமை. என் பதிவிலும் போலி டோண்டு எழுதினான்.ஐ.பி செக் எல்லாம் வைத்துள்ளேன் தான். சட்டபூர்வமான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்பதிலும் எனக்கு ஒப்புதல் உண்டு.


இன்னும் சொல்லபோனால் திரு.டோண்டுவை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. ஒரு குழுவே போலி் டோண்டுவை Provoke செய்தது..ஒழித்துக்கட்ட முயற்சி செய்தது. டோண்டு இதில் புத்திசாலித்தனமாக உபயோகப்படுத்தப்பட்டார் என்றும் எனக்கு சந்தேகம் உள்ளது. போலி டோண்டு பத்து பின்னூட்டம் கேவலமாக எழுதினால் அதை பெரிதுபடுத்திய கும்பல் அதை இரண்டு முறையாவது கட் காப்பி பேஸ்ட செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன். இன்னும் பலரும் இதே போல கருதுவதாக தெரிகிறது. போலியால் பாதிக்கப்பட்ட சிலர் கூட இது ஒரு குழு என்பதாக கருத்து கொண்டிருக்கிறார்கள்.ஒரு நபராக இருந்தால் 24 மணிநேரம் இதைத்தான் செய்து கொண்டிருக்க முடியும்.வேறு பிழைப்பை பார்க்கமுடியாது.ஆனால் எப்படிப்பட்ட குழு என்பதில்தான் குழப்பம் உள்ளது.


ஒரு குடும்பத்தை கேவலமாக பேசுவது சில்லறைத்தனம்.(இன்னும் கடுமையான வார்த்தைகளும் போட்டுக்கொள்ளலாம்)ஆனால் அதே சில்லறைதனத்தை ஒரு இனத்தையே குறித்து யாராவது பேசினால் அது முற்போக்கா? என்னை பொறுத்தவரை இரண்டுமே கண்டிக்க, தண்டிக்கப்பட வேண்டிய சில்லறைத்தனம்தான்.(இது தனியாக எழுதவேண்டிய விஷயம்).


போலி டோண்டுவை போட்டு தள்ளியாயிற்று.(இது சாத்தியமா என்பது போக போகத்தான் தெரியும்). இனி அடுத்ததாக யாரும் பார்ப்பனீயத்தை பற்றி பேசவே கூடாது என்ற நிலைமைக்கு தமிழ்மணத்தை எடுத்து செல்ல நினைப்பது நடக்காது, நடக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.


பார்ப்பனீயத்தை எதிர்ப்பதை வெறும் ஒரு சாதி எதிர்ப்பாக மட்டும் பார்ப்பது தவறு. அது ஒரு சமூக அவலம் என்ற கருத்து என்னைப்போன்ற பல பண்ணையார்களுக்கும்(?) உண்டு. கூலிக்காரர்களுக்கும் உண்டு.


பார்ப்பனீயத்தை எதிர்ப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பல பார்ப்பன நண்பர்கள் உள்ளார்கள் என்பதை எப்படி அர்த்தப்படுத்துவீர்கள்?
கருணாநிதி குடும்பத்தில் சாமி கும்பிடுகிறார்கள்.அவர் பேரன் இந்தி படிக்கிறான், ராமதாஸ் பேரன் ஆங்கிலம் படிக்கிறான் என்ற லெவலில் விமர்சிப்பவர்கள் அவர் அய்யர் குடும்பத்தில் பெண் எடுத்ததைப்பற்றி கொச்சைப்படுத்தித்தான் பேசமுடியும். பாஸிடிவ்வாக திங்க் பண்ண முடியாதுதான்.


உங்களின் சில பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும்

"சொல்கிற கருத்தை மட்டும் பார்..சொல்கிற ஆளைப் பார்க்காதே.அவன் பின்புலத்தை பார்க்காதே"

என்பதாக ஒரு நிலைப்பாட்டை கொண்டிருக்கிறீர்கள்.அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.அது எல்லா விஷயத்திற்கும் பொருந்தாது.பேசப்படும் விஷயத்தை பொறுத்து அது மாறலாம்.


நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். ஆர்க்யுமெண்ட், ரீஸனிங் எல்லாம் பலமாக இருக்கும். உங்களோடு வார்த்தை லாவணி பாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அருமையாக உங்களுடைய பாணியில் ஒரு பதிவு போடுங்கள்.சோதாத்தனம்,பண்ணையார்த்தனம் என்றெல்லாம் அதில் நீங்கள் எழுதலாம்.யாரும் கேட்க மாட்டார்கள். மூத்த வலைப்பதிவாளர் அல்லவா?.


யார் யாருக்கு நீங்கள் பதில் சொல்வீர்கள் என்பதை சொல்ல சொல்லி இருந்தீர்கள்.நான் என் விருப்பம் போலத்தான் பதில் சொல்வேன்.ஒரு சில விஷயங்களை படிப்பவர் பார்வைக்கு வைத்து அவர்களை முடிவு எடுக்க விடுவதுதான் சரி என்பதுதான் என் நிலைப்பாடு.


இன்னும் சொல்லபோனால் பதிவிடுவதோடு என் வேலை முடிந்தது. படிப்பவர்கள் ஜட்ஜ்மெண்ட்டுக்கு விடவேண்டும் என்பது தான் என் வழிமுறை.இதற்கு காரணம் உண்டு.ஆட்டத்தை ஆரம்பித்தவர்கள் ஆட்டத்தின் விதிமுறைகளை அமைப்பார்கள். அந்த விதிமுறைப்படி தான் ஆட்டத்தை ஆடவேண்டும் எனபார்கள்.எனென்றால் விதிமுறைகள் அவர்களுக்கு சாதகமானவை.நாங்கள் விதிமுறைகளையே ஏற்றுக்கொள்ளவில்லை. கேள்விக்குட்படுத்துகிறோம். அப்புறம் ஆட்டத்தை எப்படி ஆடுவது?.இதுதான் விஷயம்.


இல்லை சமுத்ரா மீது நான் தனிமனித தாக்குதல் நடத்தினேன் என்று உறுதியாக கூறீனீர்கள் என்றால் "சமுத்ரா அவர்களே! இந்த எளியோனை மன்னியுங்கள்".


மன்னிப்பு கேட்க நான் வெட்கப்பட்டதேயில்லை.ஆனால் அதே சமயம் மனதிற்குள் உள்ளதை மறுத்து சமரச சன்மார்க்கம் பேசவும் நான் தயாரில்லை.எதிர்ப்பு அரசியல் கடினம்தான்.கேவலப்படுத்தப்படும் தான்.ஆனால் அது எங்கள் உயிரில் கலந்துள்ளது.

கடைசியாக ஒன்று....திராவிட ராஸ்கல்களை ஒழிக்க முடியாது என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

(இது ஆரிய திராவிட பதிவு இல்லை.ஆரிய திராவிட விஷயத்தை பற்றி எழுதும் அளவிற்கு எனக்கு படிப்பு இப்போதைக்கு கிடையாது. பின்னாளில் எழுதலாம். பண்ணையார்த்தனத்தை பற்றி மட்டும்தான் எழுதியுள்ளேன். இதைப்பற்றி ஆட்சேபமோ,ஆதரவோ,கருத்தோ தெரிவிக்க விரும்பும் நண்பர்கள் பின்னூட்டம் இடலாம்.பதில் கொடுக்க சொல்லி வூடு கட்டவேண்டாம்.என்னை சீர்தூக்கி பார்த்து திருத்திக் கொள்ள உங்கள் பின்னூட்டங்கள் உதவும் என்று நம்புகிறேன்.ஒரு மனிதன் எப்போதும் தன்னையும் தன் கருத்துக்களையும் பரிசீலனைக்கு உட்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது)

இர்பான் பதானும் போலி டோண்டுவும்

(பிளாக்கர் இம்சை தாளாமல் தலைப்பு சுருக்கப்பட்டுள்ளது.)
இர்பான் பதான் , ரோஜர் ஃபெடரர் ஆகியவற்றை பற்றி பேசும் பதிவில் போலி டோண்டு எங்கே வந்தான் என்பவர்களுக்கு பதில் கடைசியில் இருக்கிறது.

நேற்று சிக்கனை சாப்பிட்டுவிட்டு பல் குத்திக்கொண்டு இருந்தப்போது இர்பான் பதான் பாகிஸ்தானின் முதல் விக்கெட்டை சாய்த்தார். ரொம்ப நாட்களாக இர்பான் பதானை பற்றி எழுத வேண்டும் என்று என் மனதில் இருந்த எண்ணத்தை அசைப்போட்டுக்கொண்டு இருக்கும்போதே இரண்டாம் விக்கெட்டையும் சாய்த்தார். அடுத்ததாக மூன்றாம் விக்கெட்டும் சாயந்தது

.ஹாட்ரிக் என்ற சாதனையை முக்கியமான பேட்ஸ்மென்களை வீழ்த்தி சாதித்த 21 வயதான இர்பான் பதான் இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். ஒரு ஏழை முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த இர்பான் பதான் தனது திறமையால் இப்போது இந்திய அணியின் ஒரு தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டராகி விட்டார் என்றும் கூறலாம்.

என்னை பொறுத்தவரை தற்கால கிரிக்கெட்டில் உடல்தகுதியுடன் சேர்ந்து மனஉறுதி, புத்திசாலித்தனம் வேண்டும்.டெக்னிக் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.நம் பாலாஜியும் அணியில் இடம்பெற்றார்.எல்லா பந்துகளையும் எந்தவித வெரைட்டி, திங்கிங் இல்லாமல் அவர் வீசுவதினால்தான் அவரால் அணியில் தன் இடத்தை தக்க வைக்க முடியவில்லை.


இதற்கு மாறாக இர்பான் பதான் புத்திசாலித்தனமாகவும் பொறுப்பாகவும் விளையாடுகிறார்.அரெளண்ட் த ஸ்டிக்கில் இருந்து வலக்கை பேட்ஸ்மென்களுக்கு அவர் வீசும் பந்துகளை எந்த பேட்ஸ்மெனும் இன்னும் சரியாக விளையாட முடியவில்லை. வெளியே செல்லுமா உள்ளே வருமா என்று கணிக்க முடியாமல் புத்திசாலித்தனமாக வீசுகிறார்


முரளிதரனின் பந்துவீச்சை பேட்ஸ்மென்களே சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பிய சூழ்நிலையில் பதான் அழகாக தடுத்து ஆடியதோடு மட்டும் இல்லாமல் ரன்களும் குவித்தது அவர் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக வளர்ந்து வருவதை காட்டுகிறது.(பாகிஸ்தான் டூரிலும் ரன் குவித்தார் இவர்).



ஆட்டகளத்திலும் வெளியிலும் அவரின் நடவடிக்கைகள், அவரின் பேச்சு ஆகியவை பாராட்டத்தக்கவை.



நேற்று ஆஸ்ரேலியன் ஓபனின் ஆண்கள் இறுதிப்போட்டி நடந்தது. உலகின் முதல்நிலை ஆட்டக்காரர் "கிங்" ரோஜர் ஃபெடரருக்கும் 56 நிலை ஆட்டக்காரரான மார்க்கோஸ் பக்தாதிசுக்கும் இடையே இறுதிப்போட்டி நடைப்பெற்றது.இந்த மார்க்கோஸ் நமது சென்னை ஓபன் சாம்பியன் லுபிசிக், ஆண்டி ரோடிக் ஆகியோரை வென்று இறுதிப்போட்டிக்கு வந்துள்ளார்.



ஆரம்பத்தில் நன்றாக விளையாடி ரோஜருக்கு தண்ணி காட்டிய மார்க்கோஸ் இரண்டாவது செட்டில் இருந்து களைப்படைய தொடங்கிவி்ட்டார். முதலில் நிறைய தவறுகளை (Unforced errors) புரிந்த ஃபெடரர் தனது முழுதிறமையையும் காண்பிக்க மார்க்கோஸ் சரண்டர். இருந்தாலும் ஃபெடரருக்கு பேக்ஹேண்ட் வீக்(comparatively) என்பது தெரிகிறது.



இந்த வெற்றியின் மூலம் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் என்று மீண்டும் நிரூபித்துள்ளார் ஃபெடரர்.இவரின் ஆட்டத்திறனுக்கு ஈடுகொடுக்ககூடியவர் எனக்கு தெரிந்து ரஷ்யாவின் மாரட் சாஃபின்.ஆனால் எப்போதும் இஞ்சுரி தொல்லையிலேயே பாதிக்கப்பட்டு இருக்கும் இவர் எப்போது விளையாடுவார் என்றே கூறமுடியவில்லை. டெம்பரமெண்டும் மோசம்.அடிக்கடி டென்சன் ஆவார்.(மெக்கன்ரோவின் தம்பி எனலாம்)



நமது சானியா மிர்சாவிற்கு இந்த வருடம் ஆரம்பம் சரியில்லை என்று தான் கூறவேண்டும்.ஆனால் இரட்டையர் எக்ஸ்பர்ட்டான லியாண்டரும் பூபதியும் தூள் கிளப்புகிறார்கள்.பூபதி கலப்பு இரட்டையரில் பட்டம் வென்றார். லியாண்டர் ஆண்கள் இரட்டையர் பட்டத்தை போராடி நழுவ விட்டார்.டென்னிஸ் உலகில் இந்தியாவின் கொடியை பறக்கவி்ட்டதில் லியாண்டருக்கும் பூபதிக்கும் நிறைய பங்கு உள்ளது.அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.



சரி போலி் டோண்டுவை தலைப்பில் ஏன் இழுத்துள்ளீர்கள் என்பவர்களுக்காக இப்போதெல்லாம் போலி டோண்டுவை பற்றி எழுதவில்லையென்றால் அவர்களை வலைப்பதிவர்களாகவே யாரும் மதிப்பதில்லை என்று கேள்விப்பட்டேன்.அது தான்.ஹி ஹி.

Monday, January 23, 2006

முத்து இனிமேல் முத்து (தமிழினி)




Photo: 2


Photo : 1



ஏற்கனவே தமிழ்மணத்தி்ல் ஒரு முத்து இருப்பதால் நான் என்னுடைய தமிழ்மண பெயரை முத்து (தமிழினி) என்று மாற்றியுள்ளேன். பெயர் காரணம் என்ன என்பவர்களுக்காக முத்துவும் தமிழினியும் இருக்கும் புகைப்படத்தை கொடுத்துள்ளேன்.

1.சென்னை புத்தககண்காட்சியில் காலச்சுவடு ஸ்டாலில் எடுக்கப்பட்ட புகைப்படம்.


2.சென்னை ஓபன் இரட்டையர் இறுதி போட்டியி்ல் மேட்ச் பாயிண்ட்


இறுதி போட்டியில் இந்திய ஜோடி பிரகாஷ் அமிர்தராஜும் ரோகன் புபண்ணாவும் வெற்றி பெறும் நிலையில் இருந்து வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார்கள்.இரட்டையர் ஆட்டங்கள் இப்பொதெல்லாம் மக்களிடையே பெருத்த வரவேற்பை பெறுவதில்லை என்பதால் ரூல்சை மாற்றியுள்ளனர். இரண்டு செட் தான் ஆட்டம். மூன்றாவது செட் டைபிரேக்கராக நடத்தப்படும்.இதற்கு இரட்டையர் ஆட்ட சாம்ப்பியன்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.சென்னை ஓபன் போட்டியில் ஒற்றையர் இறுதி போட்டி கடந்த இரண்டு வருடங்களாக சாம்பியன் பட்டம் பெற்ற மோயா இந்த வருடம் லுபிசிக்கிடம் பட்டத்தை பறிகொடுத்தார். ஆனால் கடந்த இரண்டு வருட சாம்பியன் ஆதலால் மக்கள் ஆதரவு அவருக்கே இருந்தது.மோயாவிற்கு வயதாகிகொண்டு வருகிறது. ஆட்டத்தை விட்டு அவர் கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிடுவார் என்று தோன்றுகிறது.

இந்த பதிவு டென்னிஸ் பற்றியது. டென்னிஸ் பற்றி தெரியாதவர்களுக்கு ஒன்றும் புரியாது.எனக்கு டென்னிஸ் விளையாட்டின் மேல் இனம்புரியாத ஒரு காதலே உண்டு. சிறுவயதிலேயே (சுமார் பத்து வயதில் இருந்து) டிவியில் காட்டப்படும் டென்னிஸ் போட்டிகளை இரவென்றாலும் கண் விழித்து பார்த்துக்கொண்டிருப்பேன்.

கிரிக்கெட் மாதிரி சோப்ளாங்கி விளையாட்டு அல்ல அது. அது விளையாட நிறைய எனர்ஜி தேவைப்படும். இரண்டு கேம்களுக்கு ஒரு முறை சிறிது ஓய்வு அளிக்கப்படும் என்றால் அதன் கஷ்டத்தை புரிந்துக்கொள்ளலாம். நாங்கள் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சிறுவயதிலேயே லாங் சைஸ் நோட்புக்கின் இரண்டு அட்டையை மடித்து பின் செய்து மட்டை செய்து டென்னிஸ் ஆடியுள்ளோம்.இத்தனைக்கும் டென்னிஸ் மாட்சையோ கோர்ட்டையோ நான் நேரில் பார்த்ததேயில்லை.

எனக்கு அப்போதெல்லாம் இவான் லெண்டிலைத்தான் ரொம்ப பிடிக்கும். மிகவும் கடின உழைப்பாளி. தொடர்ந்து நான்கு வருடங்கள் உலகின் நம்பர் ஒன் ஆட்டக்காரராக இருந்து நன்றாக விளையாடினாலும் விம்பிள்டன் பட்டத்தை இவர் வெல்ல முடிந்ததேயில்லை.அவர் விம்பிள்டன் ஜெயிப்பதை பலமுறை கெடுத்தவர் போரிஸ் பெக்கர். இவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் சர்வீஸ் போடும் ஸ்டைல் அழகாக இருக்கும். இவரும் ஒரு சாதனையாளர்தான். இவர் சில வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்து விளையாடினார். அப்பொழுதே இந்த ஆட்டத்தை நேரில் பார்க்க நினைத்திருந்தேன்.முடியவில்லை. இந்த வருடம் ஆசையை தீர்த்துக் கொண்டேன். இனி வருடா வருடம் வரவேண்டும் என்றும் முடிவு செய்துகொண்டேன்.


ஆண்கள் டென்னிசில் இன்று முடிசூடா மன்னன் ரோஜர் பெடரர். சாம்பிராஸ் ஒய்வு பெற்றபிறகு இப்போது நடக்கும் போட்டிகளில் அநேகமாக கலந்துக்கொள்ளும் அனைத்து கோப்பைகளையும் தட்டி செல்கிறார். அற்புதமான ஆல் ரவுண்ட் கேம் இவருடையது. சர்வீஸ், ரிடர்ன் ஆஃப் சர்வ், பாசிங் ஷாட் என்று அனைத்து வித்தைகளிலும் கை தேர்ந்தவர்.இப்போது நடைபெறும் ஆஸ்ரேலிய ஒபன் டென்னிசிலும் இவரே பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்டுகிறது. சென்னை ஓபனில் பட்டம் வென்ற லுபிசிக்கும் உலக தரவரிசையில் முதல் பத்திற்குள் தான் இருக்கிறார். இவர் ஆட்டத்தைத்தான் நான் சென்னையில் நேரில் கண்டுகளித்தேன். இவரும் திறமையான ஆட்டக்காரர்தான்.


டென்னிஸ் பற்றி பேசும்போது சானியா மிர்சாவை பற்றி பேசுவதும் தவிர்க்க முடியாததாகிறது. சிறு வயதிலிருந்தே ஸ்பான்சர் கிடைத்து அதிஷ்ட்சாலி சானியா.அதனால் தான் அவரால் இவ்வளவு தூரம் சாதிக்க முடிந்திருக்கிறது. திறமையும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.ஆனால் மூத்த வீரர்களிடம் இருந்து அவர் பல விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும். டென்னிஸ் விளையாட்டில் வெல்ல முழு முதல் தேவை உணர்ச்சிவசப்படாத கண்சிஸ்டென்சி.அது சானியாவிடம் இல்லை. பெடரர் ஆட்டத்தை பார்ப்பவர்கள் இதை புரிந்துக்கொள்ளமுடியும்.முகத்தில் எந்த உணர்ச்சியும் இருக்காது.கருமமே கண்ணாக இருப்பார்.


சானியா கொஞ்சம் பந்தா பண்ணுகிறார் என்றே கூறலாம்.(வேறு வார்த்தை எனக்கு தோன்றவில்லை).ஆஸ்ரேலிய ஓபன் இரண்டாம் சுற்றில் தன்னைவிட தரத்தில் குறைந்த வீராங்கனையிடம் தோற்றுவி்ட்டு மட்டையை தூக்கி வீசினார். இதுவெல்லாம் ஒரு வளர்ந்து வரும் வீராங்கனை செய்ய கூடாதது என்பது என் கருத்து.இவருக்கு சர்வீசும் ஒரு வீக்னெஸ்.சற்று உயரம் கம்மியானதால் இந்த பலவீனத்தை இவர் சரிசெய்வது கடினம் என்று தோன்றுகிறது.அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதை இவர் உணர்ந்து கொண்டால் இன்னும் பல சாதனைகளை இவர் நிகழ்த்தலாம்.

Wednesday, January 18, 2006

துக்ளக் ஆண்டு விழா - ஒரு வம்பு பதிவு

திரு டோண்டு சோ வை பற்றி பதிவு போட்டால் அதை எதிர்த்து ஏதாவது நான் எழுதவேண்டும் என்று வலைப்பதிவு நண்பர்கள் எதிர்ப்பார்ப்பதாக காற்று வாக்கில் ஒரு சேதி வந்தது. ஏன் அவர்கள் ஆசையை குலைக்கவேண்டும்?

இது திரு.டோண்டு அவர்களின் இந்த(லிங்க்) பதிவை அடிப்படையாக கொண்டது. தகவல்பிழைகளுக்கு அவரை பிடிக்கவும்.

மேலும் காங்கிரஸ் பற்றி சோ கூறிய சில கருத்துக்களை நானும் ஆதரிக்க வேண்டி உள்ளது. இது தான் என் பிரச்சினை. ஒரு தரப்பை எதிர்க்க வேண்டும் என்னும்போது எதிர்தரப்பை ஆதரிக்க முடியாமல் போய்விடுகிறது.

அடைப்பு குறிகளுக்குள் இருப்பது சோவின் கருத்து. கீழே இருப்பது நம்மளோட பொருமல்.

//பல பத்திரிககைகள் உண்மையாகவே பா.ஜ.க. மதவாதக் கட்சி என்று நினைக்கின்றன. இந்தத் தோற்றத்தை அகற்ற அக்கட்சி நல்ல பப்ளிக் ரிலேஷன்ஸ் வேலை செய்ய வேண்டும். பத்திரிகைக்காரர்களை அழைத்து அத்வானி, வாஜ்பேயீ அவர்கள் பேசவேண்டும். //

உண்மையாகவே பா.ஜ.க மதவாத கட்சி என்று பத்திரிக்கைகள் நினைக்கின்றனவாம். இதற்கு என்ன அர்த்தம்? பா.ஜ.க மதவாத கட்சி இல்லை என்பதா? பப்ளிக் ரிலேஷன்ஸில் பா.ஜ.க எல்லா கட்சியையும் விட முன்னால் நிற்கிறது என்றே கூறவேண்டும். பிரச்சினை என்னவென்றால் புத்திசாலித்தனம் இருக்கிறது .ஆனால் நேர்மை இல்லை. (சோவிடம் உள்ள அதே பிரச்சினைதான்)

//இஸ்லாமியத் தீவிரவாதம் என்று கூறுவதை விட தீவிரவாதம் என்றுதான் கூறவேண்டும். புலிகள் இஸ்லாமியர் அல்ல, காலிஸ்தானியர் இஸ்லாமியர் அல்ல, ஐரிஷ் தீவிரவாதிகள் இஸ்லாமியர் அல்ல. ஸ்ரீலங்காவில் அஹிம்ஸை போதிக்கும் புத்த மதத்தைச் சேர்ந்த பலர் செய்யாத தீவிரவாதமா? கூறப்போனால் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர் என்று பல மதத்தைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாகவும் உருவாகின்றனர். ஆகவே இஸ்லாமியரை மட்டும் குறிவைப்பது நீதியாகாது. //

இது தான் கலக்கல் கருத்து. எப்போதுமே சோ ராமசாமி கடுமையான தாக்குதலுக்கு இடையே சில சலுகைகளை அள்ளி விடுவார்.அதற்கு உதாரணம் இது. கடவுளின் பெயரால் வன்முறை, மதத்தின் பெயரால் வன்முறை என்பதையே இந்த வார்த்தைகள் குறிக்கின்றன். குஜராத்தில் கலவரம் செய்தவர்களை இந்து தீவிரவாதிகள் என்றுதான் கூறுகின்றனர். அதுபோலத்தான் இஸ்லாமிய தீவிரவாதிகளையும் கூறுகின்றனர். (இந்த விஷயத்தில் சோவின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும். ஆனால் தான் நடுநிலைவாதி என்று சொல்லப்படவேண்டும் எனபதற்காக சில விஷயங்களை விட்டு கொடுப்பார் அவர்.(புத்திசாலி அல்லவா)

//ரஜனிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை இல்லை. அதை பற்றி பேசுவதையும் தான் விட்டாயிற்று என்று சோ கூறிவிட்டார். உடனேயே, தான் கூறுவதை விட்டுவிட்டதால் ரஜனி வந்தாலும் வரலாம் என்றும் பொடி வைத்து பேசினார். ஒரே சிரிப்பு.//

நகைச்சுவையாக தன் வருத்தத்தை பகிர்ந்து கொண்டு உள்ளார் சோ. வருத்தப்பட தேவையில்லை என்பேன் நான். அதுதான் விஜயகாந்த வந்துட்டாரே...ஓடிப்போய் பார்த்து அரசியல் ஆலோசகர் போஸ்டிங் கேட்கலாமே...விஜயகாந்தும் இவருடைய வாழ்நாள் லட்சியமான தி.மு.க மற்றும் கலைஞர் ஒழிப்பு ஆகிய கொள்கைகளை கையில் எடுத்து விட்டாரே...இனிமேல் விஜயகாந்தை ஆதரித்து கட்டுரைகளை துக்ளக்கில் எதிர்பார்க்கலாம். விஜயகாந்த பி.ஜே.பி கூட்டணியில் சேர்வதை பொறுத்து இது அமையும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.

//கருணாநிதி அவர்கள் பலமுறை மிக நல்ல நகைச்சுவைக்கு இடம் அளிக்கிறார் என்று சோ குறிப்பிட்டார். உதாரணத்துக்கு தான் 2001-ல் கைதான நிகழ்ச்சியை குறிப்பிடுகையில் ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சிகளை மிகைபடுத்திக் கூற ஆரம்பித்தார். கடைசியில் தன் வீட்டுப் பெண்களிடமே போலிஸார் முறைதவறி நடந்தனர் எனவும் நூற்றுக்கணக்கானோர் தீக்குளித்தனர் என்றும் அவர் கூற ஆரம்பித்து விட்டார். இவ்வளவு தமாஷாக எல்லாம் கூறினால் அதற்கேற்பத்தான் தன் நடவடிக்கையும் இருக்கும் எனக் கூறினார். ஜயலலிதா இந்த விஷயத்தில் டெட் சீரியஸ் என்றும் கூறினார். மற்றப்படி இருவரையும் சமமாகவே பாவிப்பதாகக் கூறினார்.//

இன்றைய முதல்வரை பாம்பும் பல்லியும் கொசுவும் ஜெயிலில் படுத்தி எடுத்ததை பற்றி கூறலாமோ? துரைமுருகன் சட்டசபையில் அப்போது பண்ணிணார் என்று கூறப்பட்ட கலாட்டாக்கள்? சென்னாரெட்டி விவகாரம்? காலில் விழும் தமாசுகள்? எல்லா அரசியல்வாதியையும் விமர்சிக்க போனால் தமாஷ்தான். ஓபனாக கலைஞரை எதிர்ப்பது தான் என் வாழ்நாள் லட்சியம் என்றும் மற்றவை பற்றி எனக்கு கவலையில்லை என்று சொல்லிவிடலாம்.
(ஒரு உதாரணத்திற்கு: அ.தி.மு.க ஆட்சி அமைத்த இந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை கார்ட்டூனில் தி.மு.க தாக்கப்பட்டுள்ளது? எத்தனை முறை கார்ட்டூனில் அ.தி.மு.க தாக்கப்பட்டுள்ளது என்று பார்க்கலாமா? அ.தி.மு.க ஆளுங்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.


// இப்போதைக்கு வாஜ்பேயி மற்றும் அத்வானி ஆகிய இருவரும் தேர்தலைச் சந்திக்க கட்சிக்கு தேவை என்றும் அவர் பேசினார்//

தேர்தலை சந்திக்க மட்டும் தேவையாம்.ஆட்சியை நரேந்திர மோடியை வைத்து இவர்கள் நடத்தி கொள்வார்களாமா?

// துறவியான உமா பாரதி அவர்கள் நீதி முதலிய நல்ல பண்புகளையும் துறந்தார் என்றும் அவர் கூறினார்.//

சரியோ தவறோ கட்சியின் கொள்கைகளை விடக்கூடாது என்று கூறிய உமாபாரதி நல்ல பண்புகளை துறந்தவராம்.ஆனால் ஆட்சியை பிடிக்க இவர்கள் ( பி.ஜே.பி என்று படிக்க) நடத்திய மற்ற கூத்துக்களை கீதையை மேற்கோள் காட்டி நியாயப்படுத்துவார் இவர்.

//தீவிரவாத எதிர்ப்பு, தி.மு.க.வால் தூண்டப்பட்ட மத்திய அரசின் எதிர்ப்பு இருப்பினும் அரசை திறமையாக நடத்திச் சென்றது, அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கையாண்டது, தண்ணீர் பஞ்சத்தை சமாளித்தது எல்லாவற்றையும் அடிக்கோடிட்டு ஜெயலைதாவுக்கு தன் ஆதரவை சூசகமாகத் தெரிவித்தார்.//

என்னமோ கருணாநிதி ஆட்சியில் யாரும் ரோட்டில் நடந்துபோக முடியாத சூழ்நிலை இருநததுபோலவும் அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் மீண்டும் அமைதி பூங்காவாக ஆனதாகவும் இவர் அடிக்கடி பில்ட் பண்ணுவது உண்டு. தண்ணீர் பஞ்சத்தை சமாளித்தது...அரசு ஊழியரை சமாளித்தது எல்லாம் அவங்கவங்களைத்தான் கேட்கணும்....

//போன வருடம் சங்கராச்சாரியாரை பற்றி மிகவும் பேசிய சோ அவர்கள் இம்முறை மிகச் சில வாக்கியங்களிலேயே பேசி முடித்தார். அதாவது தெருவில் நியூசன்ஸ் செய்தார் என்ற வழக்கைத் தவிர மற்ற எல்லா வழக்குகளையும் அரசு போட்டுப் பார்த்துவிட்டது என்று கூறினார். தேவையில்லாது குண்டர் சட்டத்தை இவ்வரசு பயனபடுத்தியதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.//

இதைப்பற்றி நாம் எதுவும் சொல்வதற்கு இல்லை. சிரித்து வைக்கலாம்.

// பிறகு தேசீய கீதம் பாடப்பட்டது.//

இதையெல்லாம் சரியாக பண்ணிடுவாங்க...தேசியவியாதிங்க இல்லையா...

அவருடைய மற்ற அரிய பெரிய கருத்துக்கள் கிடைக்கவில்லை. கிடைத்தால் கட்டுடைத்து பார்க்கலாம்.

Monday, January 16, 2006

நட்பை மதிப்பவன் நான் - சரத்குமார்

இந்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி,தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஆகிய கூத்துக்களை நானும் ஒரு காலத்தில் வாயில் ஈ நுழைவது தெரியாமல் பார்த்து வந்தவன் தான்.இதை ஒத்துக்கொள்வதில் வெட்கம் ஒன்றும் இல்லை. ஆனால் வயது ஏற ஏற நம் சினிமா அறிஞர் பெருமக்களின் அனுபவங்களையும் அவர்கள் ஒருவரை ஒருவர் பரவச வார்த்தைகளால் போற்றி பேசி புளகாங்கிதம் அடைவதையும் பார்ப்பது நரக வேதனையாயிற்று.

நேற்றோ முந்தாநாளோ "சுப்ரீம் ஸ்டார்" எம்.பி சரத்குமார் தன் இளமை காலத்தையும் கல்லூரி வாழ்க்கையும் நினைவு கூர்ந்து கொண்டிருந்ததை அகஸ்மாத்தாக பார்க்க நேர்ந்தது. தான் பழைய நட்பை எவ்வாறெல்லாம் மறவாது இருக்கிறேன் என்பதை தன்னுடைய இளமைகாலத்தில் தனக்கு சிகை அலங்காரம் செய்த தன் நண்பனை வைத்து சுவையாக சொன்னார் சரத்குமார்.

சரத் லயோலாவில் கணக்கு பாடத்தில் டிகிரி படித்தாராம். அங்கு தனக்கு கணக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ஆசிரியரையும் நமக்கு அறிமுகப்படுத்தினார் சுப்ரீம்ஸ்டார். அட்டகாசமாக தன் நண்பர்கள் புடைசூட சரத் அமர்நதிருக்கிறார். சைடில் சேர் போட்டு வெட்கத்தோடு அமர்நதிருக்கிறார் அந்த ஆசிரியர். அவருக்கு பொங்கல் வாழ்த்து சொல்கிறார் சுப்ரீம்ஸ்டார். சேரை விட்டு எழவில்லை. ஆனால் ஆசிரியர் சேரை விட்டு எழுந்து நின்று கைகுலுக்கி அந்த வாழ்த்தை ஏற்றுக்கொள்கிறார்.எனக்கு அந்த ஆசிரியரை நினைத்து பாவமாக இருந்தது.ஒரு பக்கம் கோபமாகவும் இருந்தது. சரத்குமாராவது மரியாதைக்கு எழுந்து நின்றிருக்கலாம். சரி .சரத்குமார் பழைய நண்பர்களிடம் பந்தா இல்லாமல் பழகுவார். ஆனால் தனது பழைய ஆசிரியர்களை மதிப்பேன் என்று கூறினாரா? என்று நினைத்து என் மனதை தேற்றிக்கொண்டேன்.தொ'ல்'லைக்காட்சியையும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே சேனல் மாற்றினேன்.


அதற்கு முதல்நாள் இயக்குனர் சூர்யா வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி? என்று தமிழ்கூறு நல்லுலகிற்கு கிளாஸ் எடுத்ததாக கேள்விப்பட்டேன். தான் ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் தான் தூங்குவதாகவும் மற்ற நேரங்களில்
வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்றும் தன் தொழிலை பற்றியுமே சிந்தித்து கொண்டிருப்பதாகவும் கூறிய இயக்குனர் சூர்யா எல்லா தமிழனும் அவ்வாறு தன்னை போல் உழைத்தால் முன்னேறலாம் என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம்.

எப்படி நயன்தாராவை விதவிதமாக உரித்து காட்டலாம், எப்படி எப்படி எல்லாம் கேட்கவே காது கூசும் இரட்டை அர்த்த வசனங்களை படத்தில் சேர்க்கலாம்,ப்ளு பிலிமை ஒத்த படங்களை சென்சார் அதிகாரிகளை உதைத்தாவது எப்படி ரிலீஸ் செய்யலாம் என்று சூர்யா தமிழன் வாழ்வு முன்னேற கடுமையாக உழைக்கிறார்.

இந்த மாதிரியான பொறுப்புணர்வு இல்லாமல் நாம் நாளும் கிழமையுமாக குடும்பத்தோடு டிவி முன் அமர்ந்து இவரை ரசிக்கிறோம். ஆறரை கோடி தமிழர்களில் ஒருவர் அல்லவா இவர்? சூர்யா தவறாமல் வழிபடுகிற மேரி மாதா தான் நம்மை காப்பாற்றவேண்டும்.

Friday, January 13, 2006

வள்ளுவர் கோட்டத்தை இடிக்கவேண்டும்

ஏ.டி.பி டென்னிஸ் போட்டிகளை காணச்சென்ற நான் ஞாயிறன்று இரண்டு மணிநேரம் அருகில் இருந்த வள்ளுவர் கோட்டத்தில் கழிக்க வேண்டியதாயிற்று.

வள்ளுவம் எங்கள் உயிர்மூச்சு. திருக்குறள் எமது மறை என்றெல்லாம் பிதற்றும் தமிழர்கள் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய இடம் வள்ளுவர் கோட்டம்.ஒரு காலத்தில் உள் நுழைய கட்டணம் வசூலிக்கப்பட்டுக்கொண்டு இருந்ததாம்.இப்போது இல்லை. முன்பகுதியில் சிறிய கார்டன். இந்தியன் வங்கி புண்ணியத்தில் நன்றாகவே மெயின்டெய்ன் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் மெயின் கட்டிடம் பெயிண்ட் செய்து எவ்வளவு வருடங்கள் ஆயிற்றோ தெரியவில்லை. அழுது வடிகிறது. உள்ளே ஹாலில் சர்வோதய சங்க கண்காட்சி நடைப்பெற்று கொண்டிருந்தது. அதையும் சகித்துக்கொள்வதில் நமக்கு பிரச்சினை எதுவுமில்லை.

ஆனால் முக்கிய பகுதி மாடி வராண்டா.இங்குதான் அனைத்து குறள்களையும் அதிகாரங்களாக பிரித்து ஒவ்வொரு தூணில் பொறித்து படங்களுடன் வைத்துள்ளார்கள். இந்த பகுதியை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. சுத்தம் செய்து பல நூற்றாண்டுகள் உருண்டோடி இருக்கும் போல ஒரு தோற்றம். வெற்றிலை எச்சில். காகித குப்பைகள். காண்டம் ஒன்றுதான் இல்லை. பெயிண்ட் செய்து பல நாட்கள் ஆகியிருக்கும்.

சுவர்களில் இருக்கும் படங்கள் துடைக்கப்படுவதில்லை. பாத்ரூம், டாய்லட் என்றெல்லாம் கூறப்படுகின்ற ஒரு பகுதியும் உள்ளே உள்ளது. தயவு செய்து யாரும் உள்ளே நுழைந்து விடாதீர்கள். சுத்தப்படுத்தபடுவதும் இல்லை. தண்ணீரும் இல்லை. மூச்சு திணறி விடும்.

வள்ளுவர் கோட்டத்தின் பின்புறம் பராமரிக்கப்படாமல் ஒரு பகுதி உள்ளது. அதில் ஒரு சிறிய தண்ணீர் தொட்டி கழுவப்படாமல் இருக்கிறது.அந்த பக்கமும் போக முடியவில்லை.

யாராவது வெளிநாட்டுக்காரன் நாம் திருக்குறள் பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் பினாத்திக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு, என்னே தமிழர் தமிழ் பற்று! வள்ளுவர் பற்று! ஆக நாம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடம் வள்ளுவர் கோட்டம்தான் என்று நினைத்து வந்து பார்த்தால் நம் மானம் என்ன ஆவது?

சுத்தமாக மெயின்டெய்ன் பண்ணலாம்.அனைத்து குறள்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைக்கலாம். ஒரு சிறிய நூலகம் அமைத்து அனைத்து திருக்குறள் உரைகளையும் வாங்கி போடலாம். எவ்வளவோ செய்யலாம். பணம் பிரச்சினை என்றால் வசூல் செய்தால்கூட தமிழர்கள் கொடுப்பார்களே.

மாற்று கட்சி அரசு வள்ளுவர் கோட்டத்தை அமைத்தது தான் பிரச்சினை என்றால் மாற்றுக்கட்சி அரசாங்கம் அமைத்த அனைத்து ரோடு, பாலம் அனைத்தையும் அரசாங்கம் இடிக்க முன்வருமா?

இல்லை செய்யமுடியாது என்றால் இந்த வள்ளுவர் கொட்டத்தை (இதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) இடித்து விடுங்கள் அய்யா. தமிழனின் மானமும் திருக்குறளின் மானமும் இப்படி காற்றில் பறக்கவேண்டாம்.அந்த இடத்தில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டிக்கொள்ளலாம்.வருமானமாவது வரும்.

Thursday, January 12, 2006

வராக்கடன் மற்றும் விவசாயக்கடன்

நண்பர் பெருமாள் சந்திப்பு தளத்தில் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பல கட்டுரைகளை எழுதுகிறார். உலக வர்த்தக அமைப்பு மற்றும் ஏகாதிபத்திய சுரண்டல் ஆகியவற்றை பற்றி எழுதி ஒரு ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நமக்கு கேட்க மட்டும்தான் தெரியும் என்ற திருவிளையாடல் தருமி பாணியில் அடிப்படையான சில கேள்விகளை வீசினேன்.அவரும் பதிலை கூறி இருக்கிறார். இங்கே அவருடனான உரையாடலில் வங்கிகளை பற்றி கீழ்கண்டவாறு கூறிச்செல்கிறார்.

//வங்கிகளில் கேட்கப்படும் ஏராளமான பார்மாலிட்டிகள் - டாக்குமெண்டுகளுக்கு பயந்து சாதாரண மக்கள் அந்த பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை. அத்துடன் அவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் கையேந்தி போண்டியாகிப் போகிறார்கள் என்பதே உண்மை.//

//1,10,000 கோடி ரூபாயை வராக் கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்துள்ளது.//

இதை பற்றி ஒரு இந்திய பொதுத்துறை வங்கியாளனாக நான் சில வார்த்தைகளை கூற விரும்புகிறேன்.. ஆழமாக எழுதினால் போர் அடித்துவிடும் .மேலும் வங்கிகளை பற்றி அறிந்தவர்கள் மட்டுமே படிக்க முடியும். ஆகவே நான் இந்த பதிவில் சில் அடிப்படைகளை மட்டும் எளிமையான முறையில் விளக்க முயற்சிக்கிறேன்.( ஆழமாக எனக்கு எழுத தெரியாது என்பதும் ஆழமாக எழுதுபவர்கள் உடனடியாக மாட்டிக்கொண்டு பொது மாத்து வாங்குவதும் தான் இதற்கு காரணமா என்றெல்லாம் யாரும் கேட்டு என்னை தர்மசங்கடப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.)

வராக்கடன் பற்றி:வங்கிகளின் முக்கியமாக வருமானம் கடன் கொடுப்பதின் மீதான வட்டி வருமானம்தான். முதலில் (1990க்கு முன்)அனைத்து வங்கிகளும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ கடன் மீதான வட்டியை கணக்கிட்டு கடன்தொகையுடன் சேர்க்கும் அதே நேரம் அவ்வாறு விதிக்கப்படும் வட்டியை வருமானத்திலும் (லாபத்திலும்) சேர்த்துவிடுவார்கள்.அவ்வாறு சேர்க்கப்படும் தொகை(வட்டி) வசூலாகிறதோ இல்லையோ லாப கணக்கில் சேர்ந்துவிடும்.ஆனால் இப்போது ஆறு மாதங்களுக்கு(இப்போது இது மூன்று மாதமாக குறைக்கப்பட்டுள்ளது) மேல் ஒரு கணக்கில் வட்டியோ அசலோ வசூலாகவில்லை என்றால் அந்த குறிப்பிட்ட கணக்கில் கடன்தொகை முழுவதுமே வராகடன் என்று வகைப்படுத்தப்படும்.எல்லோரும் நினைப்பதுபோல வாராக்கடன் என்று எதையும் வங்கிகள் தள்ளுபடி செய்வதில்லை. இந்த முறை அறிமுகப்படுத்தபட்டவுடன் சில வங்கிகள் விழுந்தன.(இந்தியன் வங்கி, யூகோ வங்கி போன்றவை).அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் கடன்கொடுக்கப்பட்டதால் இந்த நிலை இந்தியன் வங்கியில் ஏற்பட்டதாக கூறுவார்கள்.ஆனால் இதனால் பல்லாயிரகணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது என்னவோ நிஜம்.பிறகு அரசாங்கத்திடம் இருந்து பணம் பெற்று மீண்டது அவ்வங்கி.


வாராகடன்களில் மிகப்பெரிய பங்கு தொழில் துறையினரிடம் தான் சிக்கியுள்ளது.கடந்த பி.ஜே.பி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட SECURITASATION ACT இந்த மாதிரியான வராக்கடனை வசூலிக்க ஏற்படுத்தப்பட்டதுதான். அரசாங்கம் ஒரு வங்கியின் மொத்த கடன்தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்கு(5%) மேல் வாராகடன் இருந்தால் அந்த வங்கியை நலிவடைந்த வங்கி என்று கூறுகிறது.ஆகவே அனைத்து வங்கிகளும் வாராகடனை குறைக்க முயற்சிக்கின்றன. எனினும் இன்றைய நிலையில் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கும் மொத்த வாராக்கடன்களையும் மீறி பல வங்கிகளும் லாபம் ஈட்டி வருகின்றன.


விவசாயத்திற்கான கடன்கள்:வங்கிகள் கொடுக்கின்ற மொத்த கடன்களில் ஒரு குறிப்பிட்ட சதவீகித தொகையை விவசாயத்திற்கு கொடுக்கவேண்டும் என்பது அரசாங்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் சட்டம். (வெளிநாட்டு வங்கிகளுக்கு இந்த கன்டிஷன் கிடையாது.ஆனால் அதற்கு பதிலாக ஏற்றுமதிக்கு கடன் தரவேண்டும்) அது முடியாத வங்கிகள் அரசின் கிராமப்புற மேம்பாட்டு திட்டம் ஒன்றிற்கு அந்த பணத்தை வழங்கவேண்டும். அரசும் ஒரு சிறிய தொகையை வட்டியாக அளிக்கும். நிறைய வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் கொடுத்து வாங்குவதைவிட இதை பாதுகாப்பான வழியாக நினைக்கின்றன. எல்லோரும் நினைப்பது போல பயிர் காப்பீடு என்று பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் நமது நாட்டில் இல்லை என்பது ஒரு அதிர்ச்சிகரமான உண்மை. நமது நிதியமைச்சர் சிதம்பரம் விவசாயிகளுக்கு வங்கிகள் நிறைய கடன் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்.இந்த வராக்கடன் என்று சொல்லப்படும் கடன்களில் விவசாயக்கடன்கள் நிறைய இல்லை என்கிறார்கள். தொழிலதிபர்களை வி்ட விவசாயிகள் நேர்மையானவர்கள் போலும்.



மக்கள்: மக்களும் வங்கியில் வழங்கப்படும் கடன்களை சரியாக உபயோகப்படுத்தி கொள்வதில்லை என்பது ஒரு சோகமான நிஜம். வங்கியில் அமர்ந்திருக்கும் மேலாளர் அவர் சொந்த பணத்தை எடுத்து யாருக்கும கொடுப்பதில்லை. மக்களின் டெபாஸிட் தொகையிலிருந்து தான் கடன் தருகிறார். ஆகவே அவர் தான் கொடுக்கும் கடன் சரியான முறையில் குறித்த காலத்தில் திருப்பப்பட வேண்டும் என்ற நோக்கத்தி்ல் சில கண்டிஷன்கள போடுவது டாக்குமெண்டுகள் கேட்பது தவிர்க்கமுடியாதது. ஏனென்றால் கடன் வசூலாகவில்லை என்றால் மேலிடத்திற்கு பதில் கூறவேண்டியவர் அவர்.ஒரு தொழில் தொடங்க ஆசைப்படும் ஒருவர் தனது பங்காக ஒரு தொகையை கண்டிப்பாக போடவேண்டும். இல்லையென்றால் அவருக்கு தொழிலில் ஈடுபாடு இருக்காது என்பது பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை. என்கிட்ட நிறைய ஐடியா இருக்கு. எல்லா காசையும் பேங்க் போட்டுக்கிட்டா நான் வானத்தை வில்லா வளைச்சிருவேன் என்பதெல்லாம் நியாயமில்லை என்று மக்கள் உணரவேண்டும்.கந்து வட்டிகடைகாரர்களிடம் பணம் வாங்கினால் குறித்த காலத்தில் செலுத்தும் மக்கள் வங்கி கடனை திரும்ப செலுத்த யோசிப்பது வருந்தத்தக்கது.இதுப்போன்ற இளைஞர்களுக்கு கடன் கொடுப்பதில் அரசாங்கத்தின் பங்கு இன்றியமையாதது.அரசாங்கம்தான் இதுப்போன்ற சுயதொழில் கடன் பயனாளிகளை வங்கிக்கு பரிந்துரைக்கிறது.அங்கே லஞ்சம் கொடுத்துத்தான் தங்கள் ஃபைல்களை மூவ் செய்யவேண்டிய நிலையில் பலர் உள்ளனர்.பொதுவாக வங்கிகளில் நிறைய கட்டுப்பாடு உள்ளது எனினும் சில வங்கியாளர்களும் கடன் கொடுப்பதில் பர்சென்டேஜ் அடிப்பதும் நடக்கிறது



அரசாங்கத்தின் இம்சை மற்றும் வங்கி ஊழியர்களின் நிலை:சந்தையை அரசாங்கம் திறந்துவிட்டதன் விளைவாகவும் (இதை தவறு என்றோ சரி என்றோ நான் சொல்லவில்லை) போட்டியின் விளைவாகவும் வங்கிகள் தங்களுடைய லாபத்தை கூட்ட பல ஜகஜ்ஜால வேலைகளை செய்யவேணடி உள்ளது. அதில் ஒன்றுதான் ஆட்குறைப்பு. எவ்வளவுக்கு எவ்வளவு ஆட்களை குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு லாபம் என்று முடிவு செய்த வங்கிகள் இப்போதெல்லாம் ஆட்களை வேலைக்கு எடுப்பதே இல்லை. இருப்பவர்களை வைத்தே நன்றாக வேலை வாங்குகிறார்கள். கடந்த மாதம் கூட சிதம்பரம் அனைத்து வங்கிகளும் காலை எட்டு முதல் மாலை எட்டு வரை வேலை செய்யவேண்டும் என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இன்று வரை ஷிப்ட் சிஸ்டம் எதுவும் இல்லை ஏற்கனவே கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பல வங்கிகளில் இரவு எட்டு மணி வரை அன்அபிஷியலாக வேலை நடக்கிறது. இப்போது இந்த உத்தரவினால் அது இரவு பதினொரு மணியாகிவிடுமோ என்று ஊழியர்கள் பயப்படுகின்றனர். பரவலாக ஹார்ட் அட்டாக் மற்றும் மன உளைச்சல் போன்றவற்றால் சில அதிகாரிகள் மரணமடைந்த செய்திகளும் வந்துள்ளன.இது போதாது என்று, ஏற்கனவே வங்கி டெபாஸிட்களுக்கு வட்டியை குறைக்க வழிசெய்த அரசு போஸ்ட் ஆபிஸில் அதிக வட்டி கொடுத்து மக்களிடம் இருந்து பணம் வசூலித்துக்கொண்டு உள்ளது.இதனால் வங்கிகளில் சேரும் டெபாஸிட்டுக்களின் அளவு குறையும் நிலை தோன்றியுள்ளது. தாராளமயமாக்கல் போக்கினால் மற்றசில துறைகளைப்போல இங்கேயும் சமமற்ற போட்டி நிலவுவதும் உண்மை.இது பல சிறிய வங்கிகள் காணாமல் போவதில் வந்து முடியலாம்.கல்விக்கடனை அள்ளிக்கொடு, விவசாயக்கடனை அள்ளிக்கொடு என்னும் அரசாங்கம் அக்கடன்கள் வசூல் ஆகாத பட்சத்தில் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள தயாரில்லை. அரசாங்கம் சொல்கிறது என்பதற்காக கடனை கொடுத்துவிட்டு வசூல் ஆகவில்லையென்றால் ஊழியர்கள் வேலை இழந்து வீட்டுக்கு செல்லவேண்டுமா என்று ஊழியர்கள் கேட்கின்றனர். சில ஊழியர்களின் பேராசை,ஊழல் காரணமாக வங்கிகளுக்கு நஷ்டங்கள் ஏற்படுகின்றன என்பதையும் இங்கு கூறவேண்டும்

புத்தக கண்காட்சியும் வலைப்பதிவு நண்பர்களும்

நான் ஏ.டி.பி டென்னிஸ் மேட்சும் புத்தக கண்காட்சியும் பார்க்க சென்னை வருவதையும் அச்சமயம் சென்னை வாழ் வலைப்பதிவாள நண்பர்களை பார்க்க விருப்பம் என்று கூறி போட்ட பதிவிற்கு பதில் கொடுத்தவர்கள் இரண்டு பேர்.

"என்றும் பதினாறு" டோண்டுவும் "சிரிப்பழகன்" ரஜினி ராம்கியும் தான் அவர்கள்.

ஏற்கனவே டோண்டுஇந்த வரலாற்று சிறப்பு(?) வாய்ந்த சந்திப்பை பற்றி எழுதியுள்ளார். சில நண்பர்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.இது எப்படி வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு ஆகும் என்று. அந்த நண்பர்கள்
என்னுடைய சோ சம்மந்தமான பதிவுகளை (பின்னூட்டங்கள் உள்பட) பார்த்தால் அது ஏன் வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு என்பது தெரியவரும்.

ராம்கியும் அன்றும் அதற்கு மறுநாளும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதித்துள்ளார்(கமெண்ட்ஸ் நச்சுன்னு இருந்தது ராம்கி)

கடந்த சனிக்கிழமை( சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.மதியம் கிழக்கு பதிப்பக ஸ்டாலில் திரு.பத்ரியிடம் என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். அப்போது ஐகாரஸ் பிரகாஷ் வந்திருந்தார்.அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் பத்ரி. சரியாக என் பிளாக்கின் பெயரை கூறி என்னை ஆச்சரியப்படுத்தினார் பிரகாஷ். சோ பதிவும் அதை தொடர்ந்து நடந்த சில சமாச்சாரங்களும் என்னை பத்ரி,பிரகாஷ் போன்ற மூத்த வலைப்பதிவாளர்களிடம் அறிமுகப்படுத்தி உள்ளன என்று நினைக்கிறேன்.

பிறகு ஏற்கனவே முடிவு செய்திருந்தது படி மாலை கிழக்கு பதிப்பக ஸ்டாலுக்கு வந்தேன். சுமார் ஆறு அடி உயரம், கழுத்தில் மாட்டிய மொபைல் என்று மாடர்னாக நின்று கொண்டிருந்தார் "என்றும் பதினாறு" டோண்டு.மூன்று மணிநேரத்திற்கும் மேல் நீண்ட எங்கள் பேச்சின் பெரும்பகுதி போலி டோண்டுவை பற்றிய சுழன்று கொண்டு இருந்தது. கம்ப்யூட்டர் தொழில்நுணுக்கம் எல்லாம் எனக்கு தெரியாது என்று கூறியபடியே ஆனால் கம்ப்யூட்டரின் எல்லா நுணுக்கங்களையும் பிட்டு பிட்டு வைத்தார் டோண்டு.கூர்மையான கவனிப்பின் மூலமாகவோ அல்லது அனுபவத்தின் மூலமாகவோ அவருக்கு கைகூடியுள்ள அவருடைய நுண்ணிய பார்வைகள் எனக்கு வியப்பூட்டின.தமிழ்மணத்தில் நடமாடும் போலிகளை பற்றிய ஒரு விஷயத்தில் அவர் தனக்கு தோன்றிய ஒரு சந்தேகத்தையும் அதற்கான காரணத்தையும் தெரிவித்தது தான் எனக்கு அவரின் அவதானிப்புகள் சரியாக இருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட காரணம். முழுக்க சரி என்று கூறமுடியாவிட்டாலும் தவறு என்று ஒதுக்கமுடியாது.

பிறகு சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி புத்தகத்தை வாங்க டோண்டுவுடன் சில புத்தக ஸ்டால்களில் ஏறி இறங்கினேன். என்னுடன் வந்துக்கொண்டிருந்த டோண்டு சட்டென்று அகராதிகள்( DICTIONARY) விற்கப்பட்டு கொண்டிருந்த ஒரு ஸ்டாலில் நுழைந்தார்.

"ஜெர்மன், பிரஞ்சு கலைச்சொல் அகராதி உள்ளதா" , என்று ஒரு கேள்வியை போட்டு கடைக்காரனை மிரள வைத்தார்.கடைக்காரனும் மிரண்டுப்போய் இல்லை எனவும் இவ்வளவு பெரிய புத்தக கண்காட்சியிலும் தன் ரேஞ்சுக்கு புத்தகம் இல்லை என்று கடைக்காரனுக்கு(எனக்கும்) புரிய வைத்த சந்தோஷத்துடன் கடையை விட்டு வெளியே வந்தார் டோண்டு.

ஆனால் அச்சிலேயே இல்லாத "சீரோ டிகிரி" புத்தகத்தை எழுத்தாளர் திரு.பா.ராகவன் (நிலமெல்லாம் இரத்தம் புகழ்) அவர்களிடம் இருந்து வாங்கி கொடுத்தார். பல தகவல்களை கையில் வைத்திருக்கும் டோண்டு அவர்கள் தினம் ஒரு பதிவு போட்டால்கூட அவருக்கு எழுத சரக்கு இருந்துக்கொண்டே தான் இருக்கும் என்று எனக்கு தோன்றியது.

என்னுடைய பதிவின் கடுமையான சில விமர்சனங்களையும் மீறி அவர் சகஜமாக நட்பு பாராட்டியது எனக்கு நிறைவாகவே இருந்தது.நட்பு வேறு என்றும் கருத்து ரீதியில் நான் கடுமையாக மோதுவேன் என்று நான் பிரகடனம் செய்ததை அவர் ரசித்து சிரித்தார்.

பிறகு ராம்கி மூலமாக "கிரிக்கெட்" மீனாக்ஸ், வந்தியதேவன் மற்றும் சில நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது.பெரும்பாலான நேரம் கிழக்கு ஸ்டாலில் தான் அமர்ந்திருந்தோம். அரவிந்தசாமி ஸ்டைலில் லாப் டாப்பில் முழ்கியிருந்த பத்ரி அவ்வபோது சில நேரங்கள் மட்டும் தலையை தூக்கி தனது பதிவுகளை போலவே ரத்தின சுருக்கமாக ஏதாவது கருத்துக்களை சொல்லுவார்.

டி.பி.ஆர்.ஜோசப், ரோசா வசந்த், சந்திப்பு பெருமாள் போன்றவர்களை காண முடியாதது எனக்கு வருத்தம்தான்.ராம்கிதான் தேற்றினார்.ஒரு கெட்-டு -கெதர் மாதிரி நடத்த பிளான் செய்ததாகவும் பல காரணங்களால் அது முடியாமல் போய்விட்டதாகவும் அங்கலாய்த்துக்கொண்டார்.பிறிதொரு நாள் செய்வோம் என்றார்.வலைப்பதிவு சம்மந்தமாக சில ஆலோசனைகளையும் அவரிடம் பெற்றுக்கொண்டேன்.டோண்டு போலவே இவரும் ஸ்போர்டிவ்வாகவே இருந்தார்.

ஜேம்ஸ்பாண்ட் மாதிரி தோளில் மாட்டிய ஒரு பேக், கையில் ஒரு காமிரா செல்பேசி வைத்துக்கொண்டு ராம்கி பண்ணிய அலம்பல் சொல்லி மாளாது. இவரை மீறி ஒரு பிரபலமும் உள்ளே வரமுடியவில்லை.வெளியே செல்ல முடியவில்லை.

நானும் அப்துல் ரகுமான், நக்கீரன் கோபால் , திலகவதி , மனுஷ்யபுத்திரன் போன்ற பிரபலங்களை முதல்முதலாக பார்த்தேன். சா.கந்தசாமி்யை பார்த்து ஜெயகாந்தன் என்று உளறிய என்னை அனுதாபத்துடன் பார்த்த ராம்கி அவர் ஜெயகாந்தன் அல்ல சா.கந்தசாமி என்று விளக்கினார்.

மொத்தத்தில் சென்னை பயணத்தின் புத்தக கண்காட்சி அனுபவமும் நண்பர்களை சந்தித்த அனுபவமும் எனக்கு மிகவும் சந்தோஷத்தையும் சென்னை வாழ் நண்பர்களின் மேல் மனதின் ஓரத்தில் சிறிது பொறாமையையும் ஏற்படுத்தியது.தினமும் மாலை புத்தக கண்காட்சி செல்வதும் இலக்கிய பேச ஆட்கள் இருப்பதும் தமிழ்மண்ணில் தான் சாத்தியம். அதுவரை தமிழ்மணம் தான் எங்களை போன்ற ஆட்களுக்கு
ஆறுதல்.


இனி புத்தகங்களை பற்றி

சென்னை புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்

பெருமாள்முருகனின் கூளமாதாரி

நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள்

சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி

சுந்தர ராமசாமியின் காகங்கள் சிறுகதை தொகுப்பு

ஜெயமோகனின் சுந்தர ராமசாமி நினைவின் நதியில்

காந்தியின் சத்திய சோதனை

VISUAL BASIC BLACK BOOK (என் மனைவிக்கு)

EDUCATION CD (என் மகளுக்கு)

ஒரு கடையில் ஜெயமோகனின் கொற்றவை என்று நூலை பார்க்க நேர்ந்தது. கடைக்காரர் இது ஜெயமோகனின் லேட்டஸ்ட நாவல் என்றும் காப்பியம் என்றும் கூறினார். ஜெயமோகன் தான் எழுதும் அனைத்து நூல்களையும் காப்பியம் என்றுதான் கூறுவார் என்றேன் நான்.ஆனால் இந்த புத்தகம் நன்றாக போவதாக கேள்விப்பட்டேன்.

Monday, January 02, 2006

சென்னை புத்தக கண்காட்சியும் ஏ.டி.பி டென்னிசும்

இது இரண்டிற்கும் என்ன சம்மந்தம் என்று நண்பர்கள் குழம்பவேண்டாம்.இந்த இரண்டிலும் பங்குபெற (பார்வையாளனாகத்தான்) நான் சென்னை வருகிறேன்.ஜனவரி 6.7.8 ஆகிய நாட்கள் சென்னையில் இருப்பேன்.


ஏ.டி.பி டென்னிஸ் பார்ப்பது என் நீண்ட நாள் ஆசை. போரிஸ் பெக்கர் வந்தபோதே பார்க்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டு முடியாமல் போய்விட்டது.

புத்தக கண்காட்சியிலும் படிக்க ஆசைப்பட்டு கிடைக்காமல் போக்கு காட்டும் சில புத்ககங்களை தேடி வருகிறேன்.


நேரம் அனுமதித்தால் சென்னை வாழ் வலைப்பதிவாள நண்பர்களை சந்திக்க ஆசை.பார்ப்போம். விருப்பம் உள்ள நண்பர்கள் எனக்கு ஈமெயில் அனுப்புமாறு வேண்டுகிறேன்.