Monday, November 28, 2005

ஜெயமோகன், சுந்தர ராமசாமி மற்றும் நான்

நேற்று சென்னையில் ஜெயமோகனின் புத்தக வெளீயிட்டு விழா நடந்தது. சுந்தர ராமசாமி இறந்து இரண்டு மாதங்களுக்குள்ளாகவே இந்த நூல் வெளியிடப்படுவது சுந்தர ராமசாமியை விற்பதற்கான முயற்சிதான் என்று பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.திரு.ரவி சீனிவாஸ் கூட இதைப்பற்றி எழுதியிருக்கிறார்.திண்ணையில் கூட திரு.பாரதி என்பவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.இந்த சர்ச்சையை பற்றி எழுதுவது இந்த பதிவின் நோக்கம் இல்லை.அந்த சர்ச்சையையும் அந்த நூலைப்பற்றியும் இன்னும் பல காலத்திற்கு பலரும் எழுதுவார்கள் பேசுவார்கள் என்பது உறுதி.

அறிமுக இலக்கிய வாசகனான என் பார்வையில் ஜெயமோகனின் உயிர்மை கட்டுரையின் அடிப்படையில் எனக்கு தோன்றிய சில சிந்தனை கீற்றுக்களை பதிவிடலாம் என்பது தான் என் நோக்கம்.

எனது நோக்கில் ஜெயமோகன் சுந்தர ராமசாமி பற்றி ஒரு நூல் எழுத தகுதியானவர்தான். கட்டுரை நெடுக ஜெயமோகன் தன்னை சுந்தர ராமசாமியுடன் ஒப்பிட்டு தன்னை ஒரு சிறந்த படிப்பாளியாக, படைப்பாளியாக மற்றும் இன்னபிறவாக முன்னிலைப்படுத்துகிறார்.அது அவர் எப்போதும் செய்வதுதான். ஏற்கனவே தன்னுடைய விஷ்ணுபுரமும் பின்தொடரும் நிழலின் குரலும் தான் தமிழில் வந்ததிலேயே சிறந்த நாவல்கள் என்று தன்னம்பிக்கையுடன் கூறியவர்.ஆகவே அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

ஜெயமோகன் தொடர்பாக திண்ணையில் தொடர்ந்து வெளிவந்துக்கொண்டிருந்த கட்டுரைத்தொடர்களை பார்த்து பரவசம் அடைந்து பின்தொடரும் நிழலின் குரலை வாங்கினேன்.கதையின் களத்தை ஒரளவு நன்றாகவே அமைத்த கதாசிரியர் கதையின் நடுப்பகுதியில் நீதிபதியின் சீட்டிலும் தானே வந்து அமர்கிறார்.அங்கேதான் அந்த கதையின் விழ்ச்சி ஆரம்பமாகின்றது.

விஷ்ணுபுரம் நாவலைப்படிக்க நான் துணியவில்லை.அவரே கூறியபடி இந்திய மரபு தெரியாதவர்களுக்கு இந்த நாவல் உவக்காது என்பதால்.இந்திய மரபை கற்கும முயற்சியில் இருக்கிறேன்.ஆனால் பொதுவாக விவாதங்களில் தெரியும் ஜெயமோகனின் அறிவு பரிமாணங்களை அவரது படைப்புகளில் என்னால் காண முடியவில்லை. விவாதங்களுக்கும் தனக்கென சில கொள்கைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களின் பார்வையை நிராகரிக்கிறார்.

ஆனால் இது போல ஒரு நூலை எழுதுவதின் மூலம் தன்னை திரு.சுந்தர ராமசாமியின் இலக்கியவாரிசாக முன்னிறுத்துகிறார் என்று கூறிவிடமுடியாது. சுந்தர ராமசாமியின் பாணியும் ஜெயமோகனின் பாணியும் வேறுவேறுதான்.அவரே கூறியுள்ளபடி உள்ளுணர்வு * தர்க்கமனம்.சுந்தர ராமசாமியின் பாணியை தர்க்கமணம் என்று வரையறுக்கும ஜெயமோகன் தன் பாணியை உள்ளுணர்வு என்று வரையறுப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
இங்கேதான் இந்த நூல் என்னை பொறுத்தவரை முக்கியத்துவம் பெறுகிறது.

இருவரும் நேர்மாறான கொள்கைகளை உடையவர்கள். ஜெயமோகனே கூறியுள்ளபடி இருவரும் ஒருவரையொருவர் மாற்றவும் முயன்றுள்ளனர்.நேர்பழக்கம் நிறைய கொண்டவர்கள்.சுந்தர ராமசாமியின் கருத்துலகை அவரை அவர் கருத்துக்களை கொண்டாடும் ஒருவர் சொல்வதை விட அவரை நிராகரிக்கும் ஒருவர் பார்வையில் இருந்து சொல்வது பல புதிய பார்வைகளை வாசகர்களுக்கு தரலாம்.ஆயிரம் காரணங்களை சொல்லி ஜெயமோகன் சுந்தர ராமசாமியின் பார்வைகளை நிராகரிக்கலாம். அதற்கு அவர் சொல்லும் காரணங்களை மார்க்சிய பார்வை உள்ள ஒருவர் அலசிப்பார்க்கலாம்.

எழுத்தாளர்களுக்கென்றே தவிர்க்க முடியாமல் வரும் வியாதியின் கூறுகளின்படி அடுத்தவரை சிறுமைப்படுத்தி( அவருக்கு படிப்பு பத்தாது போன்ற விஷயங்கள்) தன்னை முன்னிலைப்படுத்தி சில வாக்கியங்கள் இருக்கின்றன். அது தவிர்க்கமுடியாதது.அடிப்படை சிந்தனைத்திறன் இல்லாமல் ஒருவர் தமிழ் இலக்கிய உலகில் வாசகராக இருக்க முடியாது. அப்படி திறன் உள்ள ஒருவர் இதுப்போன்ற வாக்கியங்களின் முழு அர்த்தத்தையும் விளங்கிக்கொள்ளமுடியும்.வேண்டுமென்றால் தவிர்க்கவும் முடியும்.

இனி ஜெயமோகன் கட்டுரையில் என்னை கவர்ந்த ஒரு பகுதியை பற்றி சொல்லி முடிக்கிறேன்.மேற்படி உயிர்மை கட்டுரையில் ஓரிடத்தில் தஸ்தயேவ்ஸ்கிவின் கரம்சேவ் நாவலி்ல் வரும் இவான் என்ற கதாபாத்திரத்தை பற்றி எழுதுகிறார்.

"இவான் சுந்தர ராமசாமிக்கு மிக முக்கியமான கதாபாத்திரம்.ஒரு பக்கம் அல்யோஷாவின் களங்கமின்மையின் வசீகரம்,மறுபக்கம் திமித்ரியின் இச்சையின் மூர்க்கம்,இரண்டுக்கும் நடுவே கட்டிய சரடு மீது தன் தர்க்கபுத்தியின்,சிந்தனையின் கைக்கோல் கொண்டு சமன்செய்து நடந்துபோகும் இவான் சுந்தர ராமசாமியின் ஆளுமையேதான்."

சுந்தர ராமசாமியின் பற்றி பலருக்கும் தெரியாத இது போன்ற பல பரிமாணங்களை என்னை போன்ற சு.ரா வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஜெயமோகன் சரியானவர்தான்.


இனி என்னைப்பற்றி கொஞ்சம். தலைப்புக்கு நியாயம் பண்ணணும்ல.தஸ்தயேவ்ஸ்கி பற்றி அதே உயிர்மை இதழில் திரு.எஸ். ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அதில் ஓரிடத்தில் அவர் எழுதுகிறார்.

"கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இவான் தனது சகோதரன் அல்யோஷாவிடம் தான் ஒரு கவிதை எழுதியிருப்பதாகவும், அது சற்றே உரைநடைத்தன்மை கொண்டது என்றும் விவரிக்கிறான்.இவான் எழுதிய கவிதை The Grand Inquisitor கிறிஸ்துவை பற்றியது.கடவுள் பூமிக்கு வருவதை பற்றியது இந்த கவிதை".

இதை படித்த நான் ஆச்சரியம் அடைந்தேன். நான் எழுதி இங்கே என்னுடைய பிளாக்கில் வலையேற்றியுள்ள "தேவி தோன்றியபோது" என்ற சிறுகதை இதுப்போல ஒரு கருவை கொண்டதுதான்.ஒரு நண்பர் கூட இதை படிக்கும்போது புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் மற்றும் ஆதவனின் கடவுள் வந்தார் ஆகிய கதைகள் நினைவுக்கு வருகின்றன் என்று பின்னூட்டம் இட்டிருந்தார்.எனக்கு தோன்றியது என்னவெனில் பக்தி மயமாக்கப்பட்ட இந்த உலகத்தில் ஏதோ ஒரு காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் தோன்றும் ஆசைதான் கடவுள் நேரில் வருவது.அதுதான் தஸ்தயேவ்ஸ்கிக்கு தோன்றியிருக்கிறது.புதுமைபித்தனுக்கு தோன்றியிருக்கிறது.ஆதவனுக்கு தோன்றியிருக்கிறது.எனக்கும்(?) தோன்றியிருக்கிறது.

நான் அடுத்து படிக்கவேண்டியது தஸ்தயேவ்ஸ்கிதான் என்று முடிவு செய்துவிட்டேன். கரமசேவ் சகோதரர்கள் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்த நண்பர்கள் கூறலாம்.அல்லது புத்தகம் வைத்திருக்கும் நண்பர்கள் தந்து உதவலாம்.

நேற்றைய விழா பற்றி எந்த வலைப்பதிவரும் பதிவேற்றவில்லை.ஆவலுடன் காத்திருக்கிறோம்.

Monday, November 21, 2005

கம்யூனிஸ்ட் கோபால்---வங்கி அனுபவங்கள் -2

THE WORD "GHERAO" IS OUR CONTRIBUTION TO THE OXFORD DICTIONARY
-west bengal Chief Minister Buddhadeb Bhattacharjee


ஊர்வலம் போவது,கோஷ்டி சேர்ந்து கோஷம் போடுவது என்பதெல்லாம் வீணாண வேலை என்பதாக பலருக்கு நினைப்பு இருக்கிறது. நானும் அந்த மாதிரியான எண்ணத்தை கொண்டிருந்தவன் தான். அதை நான் தவறு என்று உணர்ந்தது ஒரு சந்தர்ப்பத்தில்.அதை பற்றி இங்கு எழுதுவது தான் இந்த பதிவின் நோக்கம்.

நான் முதன்முதலில் வங்கி பணியில் சேர்ந்தது ஒரு கிராமத்து கிளை.அதிகம் படித்தவர்கள் நிறைந்த ஊர் என்று சொல்லிவிடமுடியாது. தலித் சமுதாயத்தை சேர்ந்த விவசாய கூலிகள்,மலைவாழ் பழங்குடியினர் நிறைய இருந்த அந்த கிராமத்தில் அதிக அளவு சிறு மற்றும் குறு விவசாயிகளும் இருந்தனர்.

நான் அன்று கையெழுத்து போட்டு வேலைக்கு சேர வேண்டும். ஆனால் நான் வங்கி உள்ளேயே நுழைய முடியாதபடி வங்கி வெளிப்புற கேட் முன்னால் ஒரே கூட்டம். எப்படியோ உள்ளே நுழைந்துவிட்டேன். ஆனால் மேலாளர் வரவில்லை.கிராம கிளையாதலால் ஒரே ஆபிசர்தான்.அவரிடம் தான் ரிப்போர்ட் செய்யவேண்டும்.மேலாளர் வரும்போது கெரோ தொடங்கிவிட்டது. வெளியே கூடியிருந்த கூட்டம் அவரை உள்ளேயே வரவிடவில்லை. எனக்கு அதிர்ச்சியாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது.எங்கள் வங்கி கிளை மாடியி்ல் அமைந்திருந்ததால் மாடியில் இருந்து கி்ழே நடக்கும் களேபரங்களை பார்க்கமுடிந்தது. சுமார் 45 முதல் 50 வயதுள்ள ஒரு குட்டையான ஒரு ஆள் தான் ஆர்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்திவந்தார்.

எங்கள் கிளை மேலாளருடன் சூடான வாக்குவாதம். எங்கள் மேலாளர் போலீஸை கூப்பிடுவேன் என்று சொல்லி பார்க்கிறார். இந்த பூச்சாண்டியெல்லாம் என்கிட்ட வேண்டாம் சார் என்ற அந்த நபர் புறங்கையால் அந்த மிரட்டலை சமாளிக்கிறார். அன்றே அருகிலிருந்தவர்களிடம் கேட்டதில் அவர் பெயர் கோபால் என்பதும் உள்ளுர் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் என்றும் தெரியவந்தது.

கிராமத்து பெரிய மனிதர்கள் உதவியுடன் எங்கள் மேலாளர் அன்று கெரோவில் இருந்து மீண்டதும் எதற்கும் அயராத கோபால் வங்கிக்கு எதிரில் மைக் செட் கட்டி மேலாளருக்கு எதிராக கோஷம் போட்டதும் பின்னர் மீண்டும் ஊர்பெரியமனிதர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்து எங்கள் மேலாளர் கோபால் கேட்டுக்கொண்டபடி சிலருக்கு லோன் வழங்க ஒப்புக்கொண்டதையும் பார்த்த எனக்கு அந்த வயதில் அது கண்டிப்பாக ஒரு புதிய அனுபவம் என்றே சொல்லவேண்டும்.

IRDP(ஒருங்கிணைந்த கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்)திட்டத்தின் கடைசி நாட்கள் அவை. எங்கள் கிளை மேலாளர் சற்றே கெடுபிடியானவர். இது போன்ற கடன்திட்டங்களில் வழங்கப்படும் கடன்கள் பெரும்பாலும் திரும்பசெலுத்தப்படுவதில்லை என்பதால் இது போன்ற கடன்களை அவர் ஊக்கப்படுத்துவதில்லை பிறகு சில காலம் கழித்து நான் அறிந்துக்கொண்டது என்னவெனில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசாங்கம் ஸ்பான்சர் செய்கிற கடன்களில் (இதில் குறிப்பிட்ட சதவீத பணம்தான் அரசுடையது)பணம் திரும்ப வராது என்ற காரணத்தால் கிளை மேலாளர் ஒருவருக்கு கடனை மறுத்தாலும், புகார் என்று போனால் வங்கி மேலிடம் கிளை மேலாளருக்கு சப்போர்ட் செய்யாது என்பதுதான்.கிளை மேலாளர் என்பவர் எவ்வாறு இவ்வகையாக குறுக்கீடுகளை சமாளிக்கிறார் என்பதும் முக்கியம்.இதுபோன்ற சமயங்களில் சில கடன்கள் வசூல் ஆகாமல் போகலாம்.இதன்பொருட்டு அந்த மேலாளர்களும் கேள்வி கேட்கப்பட மாட்டார்கள். (இதைப்பற்றி தனிப்பதிவை பின்னொரு முறை இடுகிறேன்)

விஷயத்திற்கு வருவோம்.அன்று தொடங்கி கம்யூனிஸ்ட் கோபாலை பல சமயங்களில் பார்த்துள்ளேன். காலை எட்டு மணிக்கு வங்கி முன் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வெறும் பனியனோடு லுங்கியை கட்டிக்கொண்டு பல்குச்சி வாயில் இருக்க பஞ்சாயத்து பண்ணிக்கொண்டு இருப்பார். ஒரு தீர்ப்பையாவது அவர் கூறுவார் என்று நானும் காத்திருந்து பார்த்தது உண்டு.ஆனால் என் கண் பார்த்து அவர் தீர்ப்பு சொன்னதில்லை.ஆனால் எப்படியும் தினமும் பஞ்சாயத்து உண்டு.

திடீரென்று காலை பத்து பதினொரு மணிக்கு சிலருடன் வங்கிக்கு வருவார்."நம்ப பசங்கதான்,வெளியே பத்துரூவா வட்டிக்கு கடன் வாங்கி வட்டி கட்டிக்கிட்டு இருந்தான்.நான்தான் நம்ப மானேஜர் இருக்கார்னு கூட்டிக்கிட்டு வந்தேன்", என்பார்.எங்கள் கிளை மேலாளரும் எப்படியாவது ஒரு லோனுக்காவது அவரை ஜாமீன் கையெழுத்து போட வைக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்.அந்த கடன் வசூல் ஆகவில்லையெனில் அதை சொல்லி அவருடைய மற்ற பரிந்துரைகளை மறுத்துவிடலாம் என்பது திட்டம்.ஆனால் அதற்கெல்லாம் மசிகிறவரா நம்ப கோபால்.கூட்டிக்கொண்டு வருகிற ஆட்களிலேயே ஒருவருக்கு ஒருவர் மாற்றி ஜாமீன் போட வைப்பார்.

ஒருநாள் ஏதோ காரணத்திற்காக அந்த கிராமத்தில் உள்ள ஒரே அரசு மருத்துவமனையை கண்டித்து பேரணி, ஆர்பாட்டம் என்று அறிவித்தார்.காலை பத்து மணிக்கு பேருந்து நிறுத்தத்தில் துவங்கும பேரணி ஊர்வலமாக சென்று அரசாங்க ஆஸ்பத்திரி முன்னால் கோபாலின் பேருரைக்குப்பின் மகஜர் கொடுப்பது என்பது நிகழ்ச்சிநிரல்.பயந்துப்போன நான் அன்று பஸ் எல்லாம் ஊருக்குள் போக முடியாது என்று முடிவு செய்து என்னுடைய இரு சக்கர வாகனத்தில் வங்கிக்கு சென்றேன்.எங்கள் வங்கிக்கு முன்னால்தான் பேருந்து நிறுத்தம் ஆதலால் எதையும் நன்றாக பார்க்கமுடியும். பத்துமணிக்கு எந்த ஒரு சலசலப்பையும் காணோம்.கோபால் தான் வழக்கமாக உட்காரும் இடத்தில் அமர்ந்திருக்கிறார்.அமைதியாக இருக்கிறார். ஒரே மாற்றம் துவைத்த வேஷ்டி,சட்டை அணிந்திருக்கிறார்.ஒரு பேரணி நடக்கப்போகிற அறிகுறி எதுவுமே அந்த இடத்தில் இல்லை.நான் பேரணி கேன்சல் ஆகிவிட்டதோ என்று சந்தேகப்பட்டேன்.நேரம் கூடக்கூட எனக்கு பதட்டமாக இருந்தது.சரியாக பத்து மணி பத்து நிமிடத்திற்கு கோபால் தன் சட்டை பையிலிருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்து படித்துக்கொண்டே நடக்கிறார். ஆங்காங்கே உட்காந்திருந்த நான்கு பேர் ஆம் ,நம்பினால நம்புங்கள்.நான்கே பேர். அவரை கோஷம் போட்டபடி பின்தொடருகிறார்கள். ஊர்வலமும் பேருரையும் மகஜர் சமர்பித்தலும் கண்டிப்பாக நடந்திருக்கும்.சந்தேகம் என்ன?

போலீஸ் ஸ்டேஷன் என்பது சர்வ சாதாரணம் அவருக்கு.கிராமத்தில் ஏற்படும் சில சில்லறை சண்டை,திருட்டு போன்ற விஷயங்களில் போலீஸ் ஸ்டேஷன் போய் கிராம மக்கள் சார்பாக பேசுவதும் அவர் வேலைகளில் ஒன்று.பணம் எதுவும் வாங்குவது இல்லை.மக்கள் அன்புடன் வாங்கிக்கொடுப்பதை சாப்பிடுவார்.

வரலாற்று பொருள்முதல்வாதம் என்றால் என்ன என்று இவருக்கு தெரியுமா? எங்கெல்ஸ்,மார்க்ஸ் பற்றியெல்லாம் மக்களுக்கு இவர் சொல்வாரா? என்றெல்லாம் நான் சிந்தித்ததுண்டு.அவரிடம் நான் அதிகம் பேசியதில்லை.அவர் என்னை பூர்ஷ்வா வர்க்கம் என்று கூட நினைத்து கொண்டிருக்கலாம்.ஆனால் நான் உள்ளூர அவரை ரசித்துக்கொண்டிருந்தேன். அவருடைய நடவடிக்கைகளை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் தன் பார்வையை கொண்டு அர்த்தப்படுத்திவிடமுடியும். ஒருவர் இந்த பதிவை வெறுமே ஒரு சிரிப்பு துணுக்காகவும் படித்துவிடமுடியும் ஆனால் சற்றே சிந்தித்தால் இதுபோன்ற ஆட்கள் படிப்பறிவில்லாத அப்பாவி ஜனங்கள் வாழ்க்கையில் எந்த அளவிற்கு ஆக்கபூர்வமாக பங்களிக்கிறார்கள் என்பதையும் புரிந்துக்கொள்ள முடியும். இன்றைய கிராமங்களில் இவர்களுடைய பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது.இவர்களின் சாதனை என்பது வெளிஉலகிற்கு தெரியாமல் போகலாம். ஆனால் இந்த மாதிரியான போராட்டங்களால் சிறிய அளவிளாவது சில மாற்றங்களை இவர்கள் உருவாக்கி வருகிறார்கள்.

ஆனால் நம் கல்வி முறையில் பட்டபடிப்பு வரை ஒருவர் மார்க்சியம் என்றால் என்ன என்று தெரியாமலே படித்துவிடமுடியும் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.ஒருவர் அந்த சிந்தாந்தத்தை ஏற்றுக்கொள்கிறாரா மறுக்கிறாரா என்பது அவரவர் மனப்பான்மையை பொறுத்தது. ஆனால் ஒரு அறிவியலை அடிப்படையாக கொண்டதாக சொல்லப்படுகின்ற ஒரு சிந்தனை முறை பற்றிய படிப்பு நம் பள்ளிகல்வியில் இல்லை என்பது நம் கல்விமுறையின் பற்றாக்குறையை சொல்கிறது என்றே நான் நினைக்கிறேன்.ஒரு புறம் அறிவியல் பாடம் எதையும் அறிவியல் பூர்வமாக பார்க்கும் கல்வி. இன்னொருபுறம் அதற்கு சம்பந்தமே இல்லாமல் மூடநம்பிக்கைகளில் ஊறிய வாழ்க்கை முறை.குறைந்தபட்சம் மார்க்சியத்தின் அடிப்படைகளாவது தெரிந்த இளைஞர்கள் இங்கு எத்தனை பேர்?கம்யூனிஸ்ட் என்றாலே ஸ்ட்ரைக் பண்ணுகிறவர்கள் என்றும் கூட்டம் சேர்ந்து கோஷம் போடுகிறவர்கள் என்று எண்ணம்தானே இங்கு பல இளைஞர்களுக்கும் உள்ளது.இது மறுபரிசீலனைக்குரியது.

Saturday, November 19, 2005

என்னதான் நடக்கிறது இலங்கையில்?

நேற்று நடந்த தேர்தலில் மகிந்தா வெற்றி பெற்றார். இங்கே இந்தியாவில் எங்களுக்கு தெரிந்ததெல்லாம் விக்கரமசிங்கே வெற்றி பெற்றிருந்தால் அமைதி பேச்சுவார்த்தைக்கு
புத்துயிர் கொடுத்திருப்பார். இப்போது விடுதலைபுலிகளும் தமிழர்களும் தேர்தலை புறக்கணித்திருப்பதன் காரணமாக மகிந்தா வெற்றி பெற்றிருக்கிறார். மகிந்தா விடுதலைபுலிகளை எதிர்ப்பவர்.

ஏன் விடுதலைபுலிகள் இப்படி ஒரு முடிவு எடுத்தார்கள்? இதை அவர்கள எதிர்பார்க்கவில்லையா? அவர்கள் பக்க நியாயம் என்ன?

இங்கே தமிழ் மணத்தில் பல இலங்கையை சேர்ந்த நண்பர்கள் பதிவிடுகின்றனர்.பல விஷயங்களை எழுதுகிறார்கள். என்னுடைய இந்த குழப்பத்திற்கு தெளிவான பதிவை யாராவது இடுவார்களா?

Monday, November 14, 2005

என் வரலாற்று கடமை

குஷ்பு விவகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய முற்போக்குத்தனத்தை எல்லோரும் காட்டிவிட்டனர்(சிலர் தங்கள் பிற்போக்குதனத்தையும்).இதை பற்றி நான் பேசி என்ன ஆகப்போகுது என்றுதான் இத்தனை நாள் நினைத்து இருந்தேன்.நான் என்னுடைய வரலாற்று கடமையை ஆற்றவில்லையென்றால் வருங்கால சமுதாயம் என்னை தூற்றும் என்பதால் நானும் என்னுடைய பிற்போக்குத்தனத்தை காட்டிவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

பல புரட்சிகர கருத்துக்களையும்(உண்மையில் அந்த கருத்துக்களிலெல்லாம் தவறு இல்லை..சில ஆலோசனைகளும் உண்டு அதில்) சொன்ன குஷ்பு பின்னர் ஒரு நிருபரின் கேள்விக்கு "இங்கே எத்தனை பேர் கல்யாணத்திற்கு முன்னால் செக்ஸ் வைச்சுக்கலை என்று எனக்கு தெரிந்தாகணும்" என்றாராம்.அதற்கு அர்த்தம் தமிழகத்தில் பெரும்பாலானோர் கல்யாணத்திற்கு முன்னால் செக்ஸ் அனுபவம் பெற்றுள்ளார்கள் என்பதுதான்.

ஆண்களுக்கு எப்படியோ பெண்களுக்கு இது கண்டிப்பாக அவமானம் தரும் பேச்சுத்தான். சராசரி தமிழ் பெண் (தமிழ் பெண் மட்டும் அல்ல..சராசரி இந்திய பெண் என்றும் சொல்லலாம்.ஏன் உலக பெண்களை சொல்லவில்லை என்று ஒரு அறிவுஜீவி பின்னூட்டம் இடக்கூடும் அதையும் சேர்த்துக்கலாம்.) இதனால் வருத்தப்படுவதற்குரிய நியாயம் உள்ளது.அது தான் கொஞ்சம் ஓவரான பேச்சு என்று நான் நினைக்கிறேன்.தன் சொந்த வாழ்க்கையை நியாயப்படுத்த அடுத்தவரையும் அசிங்கப்படுத்துவது என்பது பல மனிதர்களின் இயல்பு.குஷ்பு அதில் விதிவிலக்கு அல்ல.

சுகாசினி ஏற்கனவே அறிவுஜீவி என்று பெயர் எடுத்தவர். தன் அறிவை காட்ட தமிழர் கொம்பு என்றெல்லாம் பேசிவிட்டார். தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்து இருக்கிறது என்ற வார்த்தை ரொம்ப ஓவர்.எந்த ஒரு இனத்திற்கும் தங்களை உயர்வாக நினைக்க,பேச உரிமை உண்டு.

அடுத்தவரை கிண்டல் பண்ணியே டைம் பாஸ் பண்ணி பழக்கப்பட்ட தமிழன் கிண்டல் பண்ண ஆள் கிடைக்காமல் தன்னையே யாராவது கேவலமாக நக்கல் செய்தாலும் பல்லை இளித்து ஏற்றுக்கொள்ள பழகி விட்டான்.(அடுத்த கவுண்டமணி படத்தில் கவுண்டமணி செந்திலை போடா தமிழ் தலையா என்று திட்டுவார். தமிழன் அதற்கும் வெடிச்சிரிப்பு சிரிப்பான்)

தமிழர் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன் என்பது இன்னும் கேவலம். தமிழர்களின் ஏகபோக பிரதிநிதியா இவர்? ஆனானப்பட்ட ஜெயலலிதாவே இவ்விவகாரத்தில் பொறுப்பாக கருத்து சொல்லி இருக்கும்போது இவர் ஏன் இப்படி பேசுகிறார்?

Saturday, November 12, 2005

மசாலா தமிழ் திரைப்படங்களும் தமிழர்களும்

மசாலா திரைப்படங்கள் அடையும் வெற்றி தரமான திரைப்படங்களின் வருகையை தடுக்கிறது என்பது என்னுடைய கருத்து. இதுவெல்லாம் ஏற்கனவே பலர் சொல்லிய கருத்துதான் என்றாலும் இங்கே தமிழ்மணத்தில் மசாலா படங்களை பலரும் பாராட்டி எழுதுவதை சகித்துக்கொள்ள முடியாமல் எழுதப்பட்ட பதிவுதான் இது.

சங்கரின் திரைப்படங்களில் வரும் கதாநாயகன் லஞ்சம் வாங்குபவர்களை துவம்சம் செய்வதை பார்க்க பிளாக்கில் டிக்கெட் வாங்கி கொஞ்சம் கூட ரோஷம் இல்லாமல் கை தட்டுகிறோம்.
சங்கரும் படத்திற்கு கோடிக்கணக்கில் பணம் பண்ணுகிறார். இன்கம்டாக்ஸ் கணக்கு எல்லாம் பார்த்தால் தான் தெரியும்.பாரதியார் பற்றி படம் எடுத்தால் காத்து வாங்குகிறது. எங்கே போகிறோம் நாம்?

விஜய் நடிக்கும் படங்களின் கொடுமை ஆண்டவனுக்கே அடுக்காது. மிகச்சாதாரணமான நடிப்பு. வெற்று சவாடல்.படிக்காத பாமர தமிழன் இந்த மாதிரி படங்களை பார்த்து எப்படிய்யா முன்னேறுவான்?.அவனுக்கு வாழ்க்கை திரைப்படத்தில் ஆரம்பித்து திரைப்படத்தில் முடிகிறது. கோடிக்கணக்கில் சம்பாதிக்கறதில் ஒரு துளி பிச்சைப்போட்டு சமூக அக்கறையையும் காட்டிக்கொள்கிறார்கள் இந்த வீரர்கள்.

பறந்து பறந்து ஒரே சமயத்தில் நூறு பேரை அடித்துத்தான் எந்தவொரு அநியாயத்தையும் கதாநாயகன் முடிவுக்கு கொண்டுவருவான்.அது நிஜ வாழ்க்கையில் சாத்தியம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.ஆகவே தவறு செய்பவர்களும் கூச்சப்படுவதில்லை.யதார்த்த வாழ்க்கையை ஒட்டி வராத எந்த ஒரு திரைப்படத்தையும் பார்க்கும் மக்கள் அதையும் யதார்த்த வாழ்வையும் பிரித்து வாழும் ஒரு பக்குவத்திற்கு வந்து விட்டார்கள. திரைப்படம் என்பது ஒரு கனவு வாழ்க்கை என்பது போல.

உண்மையில் நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது பற்றி நமக்கு அக்கறையில்லை. பொழுதுப்போக்கு மீடியம் தானே அதில் என்ன போதனை என்று வேறு ஒரு குழு. பொழுதுப்போக்கு மீடியம்தான்.ஆனால் உங்கள் சிந்தனைப்போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி அதற்கு உண்டு. கேட்டால் மக்கள் கேட்பதைத்தான் தாங்கள் கொடுப்பதாக சப்பைக்கட்டு. புளு பிலிம் கூடத்தான் மக்கள் கேட்பார்கள்.(சூரியா என்ற இயக்குனர் மக்களின் இந்த அரிப்பை தான் உபயோகப்படுத்தி பணம் பண்ணுகிறார்) டேஸ்ட எல்லாம் படைப்பாளிகள் தான் உருவாக்க வேண்டும். வானத்தில் இருந்து குதிக்காது தரமான ரசனை என்பது.மசாலா குப்பையை எடுக்கும் எந்த ஒரு இயக்குனரையும் கேளுங்கள். என்னுடைய கனவு திரைப்படம் இதோ வருகிறது. அதுக்கு முன்னால் ஒரு குப்பையை பாருங்கள் என்பார்கள். ஆனால் இவர்களிடம் இருப்பது எல்லாம் நாற்றம் பிடித்த குப்பைகள்தான்.

இந்த நடிகைகள்,நடிகர்கள் தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் தொலைக்காட்சிகளிலும் வந்து தங்கள் அறிவை காட்டும்போது தமிழன் புளகாங்கிதம் அடைகிறான். ஒரு சிறந்த எழுத்தாளனோ சிந்தனையாளனோ பேசமுடிவதில்லை. மட்டமாக சினிமா எடுக்கும் சினிமாகாரர்கள் ஒருவரை ஒருவர் புகழ்வதை காணும்போது பற்றிக்கொண்டு வருகிறது.

படித்தவர் படிக்காதவர் என்று வித்தியாசம் இல்லாமல் சினிமா கலாச்சாரம் நமது சிந்தனையை ஆக்ரமி்த்துக்கொண்டிருக்கிறது. சேரன்,தங்கர்பச்சான் போன்று சிலர் இந்த சூழ்நிலையில் சற்றேனும் மாற்றத்தை கொண்டுவர முயற்சி செய்கின்றனர். ஆனால் இந்த மசாலா திரைப்படங்களின் வெற்றி இவர்களின் முயற்சியை முடக்கிவிடக்கூடாது என்பதே நமது ஆதங்கம்.

Thursday, November 10, 2005

உலக தமிழ் இலக்கிய வகையும் வடிவும்

சமீபத்தில் சென்னையில் ஒரு இலக்கிய விழாவை பார்க்க நேரிட்டது. உண்மையில் நான் அங்கு ஒதுங்க நேரிட்டது மழைக்காகத்தான்.(நிஜமாங்க). இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு தமிழ் கருத்தரங்கு அது.

ஒரு தேர்வின் நிமித்தம் சென்னை செல்லவேண்டி இருந்த நான் அப்படியே சென்னையை சுற்றி பார்க்கலாம் என்ற எண்ணத்தில், எங்கள் வங்கியி்ல் உள்ள ஒரு சலுகையை பயன்படுத்தி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரூம் புக் செய்திருந்தேன். சிங்கார சென்னையின் மழை என் அனைத்து திட்டங்களையும் தவிடு பொடியாக்கிவிட்டது.

ஞாயிற்றுக்கிழமை அன்று மிக அருகில் இருக்கும் கல்லூரிக்கு ஆட்டோவிற்கு நூறு ரூபாய் கொடுத்து சென்றோம். ( மழை பெய்வதால் சார்ஜ் அதிகமாம்.ஆனால் மீட்டர்படி வாடகை என்பது எங்கள் வரலாற்றிலேயே இல்லை என்கிறார்கள். மும்பய்ல கூட ஆட்டோக்கள் மீட்டர் படி தான் ஒடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மீட்டர் போடும் ஆட்டோகாரர்களை பார்க்க முடிவதில்லை.மீட்டரை இம்ப்ளிமெண்ட் பண்ணவேண்டிய போலீஸ்காரங்க தான் நிறைய ஆட்டோக்களை வைத்திருக்காங்களாமே.இதைப்பற்றி சென்னைவாழ் நண்பர்கள் தனிப்பதிவே போடலாம் )

மழை வலுத்த நேரம் என் மனைவி தேர்வு ஹாலுக்குள் சென்றுவிட கையில் ஒரு வயது மகளுடன் நான் மழைக்கு ஒதுஙகவேண்டி நுழைந்த இடம்தான் அந்த கல்லூரியின் ஆடிட்டோரியம்.அங்குதான் மேற்படி இலக்கிய விழா.அதென்ன தலைப்பு உலக தமிழ் இலக்கிய வகையும் வடிவும் வெறுமனே தமிழ் இலக்கிய வகையும் வடிவும் என்று இருந்தால் பத்தாதா என்று கேட்பவர்களுக்கு பதில் பின்னால் வருகிறது.


பிள்ளைத்தமிழ் பற்றி சில கட்டுரைகள் படிக்கப்பட்டன. சாதாரணமாக அனைவருக்கும் தெரிந்த தகவல்களையே கருத்தரங்க கட்டுரையாக முன்வைக்கப்பட்டது சலிப்பை ஊட்டியது. ஒரு மாணவர் சைவ சிந்தாந்தத்தை பற்றி அருமையாக உரையாற்றினார்.சைவ சிந்தாந்தத்தை பற்றி எதுவும் தெரியாத என்னை போன்றவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.சம்ஸ்கிருததிலும் பிள்ளைத்தமிழ் இருப்பதாகவும் அதற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை பற்றி சில கட்டுரைகள் படிக்கப்பட்டன. சங்க இலக்கியத்தில் எனக்கு புலமை கம்மியாதலால் நவீன இலக்கியத்தை பற்றி எதாவது கட்டுரை வரும் என காத்துக்கொண்டு இருந்தேன்.

கடைசியாக வந்தது ஒரு கட்டுரை. மணிக்கொடி காலத்து பரிசோதனை கதைகள் என்ற தலைப்பில் ஒரு அருமையாக கட்டுரை. கல்வித்துறைக்கே உரிய பாணியில் அமைந்த பிரஸன்டேஷனை தவிர்த்துவிட்டு பார்த்தோமென்றால் ந.பிச்சமூர்த்தி கு.பா.ரா.புதுமைபித்தன் போன்றவர்களின் பரிசோதனை முயற்சிகளை பற்றி அழகாக கூறினார் என்று கூறலாம். புதுமைபித்தனை தவிர வேறு மணிக்கொடி எழுத்தாளர்களை பழக்கம் இல்லாத எனக்கு இந்த கட்டுரை சுவையாக இருந்தது. மற்ற மணிக்கொடி எழுத்தாளர்களையும் படிக்க தூண்டியது. மணிக்கொடி எழுத்தாளர்களின் தேர்தெடுத்த சிறுகதைகள் என்று ஏதாவது தொகுப்பு இருந்தால் நண்பர்கள் எனக்கு தெரியபடுத்தலாம்.

பிறகு லேட்டஸ்ட்டாக வந்த நாவல்களின் வடிவங்களை பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை படிக்கப்பட்டது. சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை,உமா மகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை உள்பட 2000 முதல் 2004 வரை வெளிவந்த நாவல்களை எடுத்துக்கொண்டு வடிவம், வட்டார சொற்கள்,அத்தியாயங்கள் அல்லது கதை போக்கு முன் பின் முரணாக இருப்பது போன்ற விஷயங்களை பேசினார். நல்லவேளை பாலகுமாரன், ரமணிசந்திரன் முதலான நாவல்களை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ள வில்லை.சந்தோஷபடவேண்டிய விஷயம்தான். பிறகு பிற்பகல் உணவு இடைவேளை விட்டவுடன் இங்கு தேர்வு முடிவடைந்து விட்டதால் நானும் வெளியேற வேண்டியதாகிவிட்டது.

இத்தனை ஆய்வுக்கட்டுரைகளையும் புலவர்கள் சமர்ப்பிக்கும்போது கரகோஷம் எழுப்பிய ஒரே ஜீவன் என் ஒரு வயது மகள்தான். தன் தாயை விட்டு ஒரு கணப்பொழுதும் பிரியாத அவள் தொடர்ந்து மூன்று மணிநேரம் என்னுடன் இருக்க நேர்ந்ததை ஏற்றுக்கொள்ளமுடியாமல் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தாள்.


என்னை போலவே மற்றவர்களுக்கு தேர்வுக்கு துணையாக வந்து மழைக்கு ஒதுங்கிய சிலர் தான் பார்வையாளர்கள்.கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்த பேராசிரியை இது போன்ற பல கருத்தரங்குகளை பார்த்திருக்கவேண்டும். பத்துப்பேரை வைத்துக்கொண்டு மேடையில் பேசுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும். போன் ஆண்டு வெறும் தேசிய கருத்தரங்காக நடந்த கருத்தரங்கு இந்த ஆண்டு பன்னாட்டு கருத்தரங்காக முன்னேறியிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார் அவர். இதையெல்லாம் எப்படி, யார் தீர்மானிக்கிறார்கள் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.சிங்கப்பூரில் இருந்து ஒரு கட்டுரை வந்துள்ளதால் இது பன்னாட்டு கருத்தரங்காக மலர்நதுள்ளதாக அகமகிழ்ந்தார்.
பன்னாட்டு கருத்தரங்கு அடுத்த ஆண்டு இதே அழகில் நீடித்தால் கருத்தரங்கை துறை தலைவர் தனியாக நடத்த வேண்டி வரும் என்றுதான் நினைக்கிறேன்.

பன்னாட்டு ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படும்போது சக ஆய்வாளர்கள் மட்டும்தான் பார்வையாளர்கள் என்பது தமிழின் எதிர்காலத்தை நன்றாகவே படம் பிடித்துக்காட்டுகிறது. ஏற்கனவே நான் கூறியிருந்தபடி தமிழ் ,தமிழ் வளர்ச்சி என்றெல்லாம் பேசுவதே கேவலம் என்பதுதான் இன்றைய தமிழகத்தின் நிலைமை. இம்மாதிரியான இலக்கிய விழாக்களுக்காவது மாநகரத்தில் உள்ள அனைத்து கல்லூரி தமிழ்த்துறை மாணவர்களும் அழைக்கப்பட்டிருக்கலாம்.குறைந்தபட்சம் அந்த கல்லூரி துறை மாணவிகளாவது அனைவரும் வந்திருக்கலாம். எனவே என்னுடைய இந்த பதிவால் இந்த இலக்கிய விழாவானது தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு நூறு பேராவது படிப்பார்கள் என்று நினைக்கிறேன்.(comprehensive coverage). விழா நிர்வாகிகள் அடுத்த முறை என்னை சிறப்பு விருந்தினராக அழைக்கலாம்(?) அல்லது ஆள் அனுப்பி உதைக்கலாம்.



tamil literature

Wednesday, November 09, 2005

நெஞ்சில் எட்டி உதைத்த காப்கா...

ஒரு வார தீபாவளி விடுமுறையை உபயோகமாக பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.மதுரை நியு செஞ்சுரி புக் ஹவுஸ் சென்று இரண்டு இந்திய எழுத்தாளர்கள்,இரண்டு வெளிநாட்டு எழுத்தாளர்கள் என்ற கணக்கின்படி நான்கு புத்தகங்கள் வாங்கினேன்.பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்,காப்காவின் விசாரணை மற்றும் ஆல்பெர் காம்யுவின் அந்நியன் ஆகியவையே அந்த புத்தகங்கள்.

புரிந்ததோ இல்லையோ நான்கு புத்தகங்களையும் ஒரு வாரத்தில் படித்து முடித்துவிட்டேன். முதலில் வெளிநாட்டு நாவல்களை பற்றி சில வார்த்தைகள். ப்ரன்ஸ் காப்காவின் விசாரணை என்ற நாவல் க்ரியாவின் வெளியீடு. சற்றே பெரிய அந்த நாவலை எப்படி அப்படி அச்சு கோர்க்க முடிந்தது அந்த பதிப்பகத்தால் என்று என்னால் விளங்கிக்கொள்ளமுடியவில்லை. பக்கங்களை குறைக்கிறோம் என்ற பெயரில் வாக்கியங்களை மிகவும் நெருக்கி படிக்க முடியாதபடி செய்திருந்தார்கள். அதனால் தான் எனக்கு நாவல் புரியவில்லை என்றெல்லாம் நான் சொல்லவில்லை.

நாவலுக்குள் என்னால் நுழைய முடியவில்லை. ப்ரன்ஸ் காப்காவும் அந்த நாவலின் கதாநாயகனான "யோசப் க"வும் என் நடு நெஞ்சில் எட்டி எட்டி உதைக்கின்றனர். உள்ளே நுழையாதே என்கின்றனர். உதையையும் வாங்கிக்கொண்டு படித்து முடித்தேன். முதன்முதல் என் நெஞ்சில் எட்டி உதைத்த சுந்தர ராமசாமி ,ஜெயமோகன் போன்றோரை நினைத்தேன். எப்படியும் இன்னும் சிறிது காலம் கழித்து படித்தால் புரிந்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் புத்தகத்தை பரணில் போட்டுவிட்டேன்.

இரண்டாவது புத்தகம் ஆல்பெர் காம்யுவி்ன் அந்நியன்.(ஞாபகம் இருக்கிறதா காம்யுவை? ஜே.ஜே சில குறிப்புகளில் ஆல்பெர் காம்யு பற்றி எழுதி இருப்பார் சு.ரா.)
காப்கா போல் அல்லாது காம்யு என்னை அரவணைத்து ஏற்றுக்கொண்டார். என் அப்படி என்று யோசித்து பார்த்தேன். என்னுள்ளும் அந்த அந்நியனின் சில கூறுகள் இருப்பதினால் தான் எனக்கு சற்றேனும் இந்த கதை புரிந்தும் பிடித்தும் உள்ளது என்று தோன்றுகிறது.இந்த கதையையும் திரும்ப படிக்கத்தகுந்த கதைதான்(புரிதலுக்கு அல்ல,சுவைத்தலுக்கு)

மூன்றாவதாக புலிநகக்கொன்றை. இந்த நாவலை பற்றி ஒரு அருமையான நாவல் என்று சொன்னால் அது சாதாரணமான வார்த்தையாகிவிடும். இந்த நாவலில் எனக்கு என்ன பிடித்தது என்பதை கூறப்போனால் ஒரு குறிப்பிட்ட இனத்தவரை பகைத்துக்கொள்வதாக ஆகிவிடும். ஆனால் நேர்மையான இலக்கியம் என்பதற்கு உதாரணமாக இந்த நாவலை கூறலாம்.இது நான் நாவலை படித்தவரை, புரிந்துக்கொண்டவரை, உள்வாஙகிக்கொண்டவரை என்னுடைய கருத்து.

முக்கியமாக நான் கூறவந்தது சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் என்ற நாவல். சற்றே பெரிய சிறுகதை என்று கூறலாம். மிகவும் நன்றாக எழுதியுள்ளார். ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஒரு கதையின் மூலம் நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார் என்றே கூறலாம்.

சற்றே காப்பிய தன்மை கொண்ட இந்த கதை முன்முடிவு கொண்டது. ஆனால் நடை அத்தனை குறைகளையும் போக்கி இதை ஒரு அருமையான கதையாக தூக்கி நிறுத்தி உள்ளது.இந்த நாவலின் கதாநாயகனான பிச்சி,அவன் கூட்டாளியும் மச்சினனுமான மருதன், அவர்கள் ஜல்லிக்கட்டின் போது சந்திக்கும் கிழவன், காரி காளையை வைத்திருக்கும் ஜமீன்தார் என்ற அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக வடிவமைக்கபட்டிருக்கின்றன.

ஒரே நாளில் நடைபெறும் சம்பவமாக இந்த கதை சித்தரிக்கப்பட்டு இருப்பது கதையின் விறுவிறுப்பை கூட்ட உதவுகிறது.தன் தந்தையின் உயிர் பிரிய காரணமாக இருந்த காளையை அடக்க வரும் ஒரு வீரனின் கதையை கச்சிதமாக வார்த்தைகளில் கூறுவதில் வெற்றி பெற்றுள்ளார் கதாசிரியர்.

மனிதனுக்கு இது விளையாட்டாக இருந்தாலும் காளைக்கு இது விளையாட்டு அல்ல என்று கூறும் கதாசிரியர் மாடு பிடிக்கும் நுட்பங்களையும் அழகாக பதிவு செய்துள்ளார்.இந்த நாவலை ஒரு நல்ல தரமான சினிமா டைரக்டர் சினிமாவாக எடுக்கலாம் என்பது என் கருத்து. ஜமீன்தார் பாத்திரத்திற்கு நாசரை சிபாரிசு செய்கிறேன்.


நான் பார்த்த ஜல்லிக்கட்டை பற்றி என்னுடைய வங்கி பதிவு-2 எழுதலாம் என்றுள்ளேன்.

Tuesday, November 08, 2005

விட்டுப்போனது எல்லாம்,,,,

ஆல்பெர் காம்யு வின் அந்நியன், காப்கா வின் விசாரணை, பி.எ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை, சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்.

ஒரு வாரத்திற்கு பிறகு இன்று தான் தமிழ் மணத்திற்கு வர முடிந்தது.ஒரு வார தமிழக பயணத்தில் மதுரை மற்றும் சென்னை (மழையோ மழை) அனுபவங்கள் , நான் புதிதாக படித்த நான்கு புத்தகங்கள் (மேலே குறிப்பிடபட்டுள்ளவை ) ஆகியவைப்பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.

முதலில் கடந்த ஒரு வார தமிழ்மண கட்டுரைகளை படித்துவிட்டு பிறகு என்னுடைய கட்டுரைகளை சபையில் ஏற்றலாம் என்று நான் படித்ததில் பிடித்தது,பாதித்தது பற்றி .

தில்லி குண்டுவெடிப்பை பற்றி ஒரு பாமரனாக நம் கருத்து என்னவென்றால் அப்பாவிகளை கொல்லுதல் கோழைத்தனம் என்பதே.தைரியம் இருக்கும் போராளிகள் விடுதலைப்புலிகள் போல் அரசாங்கத்தை எதிர்த்து ராணுவத்தையோ போலீசையோ எதிர்த்து போர் புரியலாம். போராட எத்தனையோ வழிகள் உள்ளன. இதையும் சப்போர்ட் செய்யும் நண்பர்கள் ஆயிரம் காரணம் சொன்னாலும் தங்கள் உயிரையோ அல்லது தங்கள் உற்றார் உறவினர் உயிரையோ இந்த மாதிரி கோழை தாக்குதலில் இழந்தால் தான் தெரியும் .

பிரபலம் எழுதும் பதிவுக்கு பல பின்னூட்டங்கள் வருகின்றன என்பது போலவும் அந்த பிரபலங்களையும் சந்திக்கு இழுத்து சீரழித்து சிலர் மகிழ்கிறார்கள் என்பது போலவும் ஒரு பிரபலத்தின் பதிவின் பின்னூட்டத்தில் யாரோ எழுதி பார்க்க நேர்ந்தது.

1.பிரபலங்கள் வலைபதிவிற்கு வந்துவிட்டால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல

2.பின்னூட்டங்கள் இங்கு பெரும்பாலும் கருத்துக்களுக்கோ தரத்திற்கோ இல்லை என்பது உண்மைதான். பரஸ்பர பின்னூட்டங்கள்,நட்புக்காக பின்னூட்டங்கள், வம்புக்காக பின்னூட்டங்கள்,இனமானத்தை காக்கும் பின்னூட்டங்கள்(தமிழ் இனமானம்,ஆரிய இனமானம், முஸ்லிம் இனமானம் என்பது உதாரணங்கள்) என பல வகைப்படும். இது இயற்கையானது தான். உதாரணத்திற்கு நானெல்லாம் சில பின்னூட்டங்களை கேட்டே பெற்றுள்ளேன்(?).


தீபாவளி கொண்டாடுவதா வேண்டாமா என்ற ஸ்டேஜ் எல்லாம் தமிழன் கடந்து பல நாட்கள் ஆகின்றன.யாராவது ஏன் கேரளாவில் தீபாவளி இல்லை என்று எழுதக்கூடாதா?

இன்னும் படிக்கவேண்டி உள்ளது.ஆகவே தொடரும்.