Wednesday, August 09, 2006

எழுத்துலக பயணமும் சென்னை பயணமும் - 1

என் வலைப்பதிவுலக வாழ்க்கையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகிறது(ஓவர் பில்ட் அப்பாக இருக்கிறதா:) என்று நினைக்கிறேன். தொடர்ந்து பதிவுகள் எழுதுவதினால் என்ன பலன் என்று யோசிக்க ஆரம்பித்தால் அது இரண்டாம் கட்டம்தானே?

மிகுந்த ஆர்வமாகவும் தொடர்ந்தும் வலையுலகில் இயங்குவதன் தொடர்ச்சி என்ன?பலன் என்ன? கண்டிப்பாக வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் வலைப்பதிவில் இயங்கக்கூடாது என்றுதான் நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

இந்த யோசனை வருவதற்கு காரணம் என்ன? இணையத்தில் தமிழை கண்ட ஆர்வத்தில் எழுதி,சலித்து போய் தமிழின், எழுத்தின் மீதான கவர்ச்சி குறைந்து விட்டதா என்ற யோசனை ஒரு பக்கம், சமூகத்தின் மீது வெறும் விமர்சனங்களை மட்டும் வைத்து என்ன ஆகப்போகிறது என்ற நினைப்பு மறு பக்கம்,நடைமுறை ரீதியாக விஷயங்களை பார்க்கமறுத்து எதிர்மறை விமர்சனம் மட்டுமே செய்யும் அரைகுறைகளினால் ஏற்படும் சலிப்பு இன்னொரு பக்கம் என்று பல யோசனைகள். சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தால் இவை எவையுமே காரணம் இல்லை என்பது புலப்படுகிறது.

ஆனால் தொடர்ந்து வலையுலகில் ஆர்வமாக இயங்குவதின் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன என்று பார்த்தால் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்துள்ளதை உணர முடிகிறது.பேசி பேசி முனை மழுங்கி போன விஷயங்களை மீண்டும் மீண்டும் எதிர்க்கொள்வதில் உள்ள சங்கடங்கள் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் இவையெல்லாம் பிரச்சினைகளாக தோன்றவில்லை.ஆனால் போக போக இந்த வகையிலான பிரச்சினைகள் அதிகமாக தெரிகின்றன.

தளங்களின் வேறுபாடுகளினால் வரும் சிக்கல்கள் தான் சிக்கல்களில் தலையாய பிரச்சினை. சமூகத்தின் பொதுபுத்தி சார்ந்த கருத்துக்களுக்கு புனிதபிம்ப முலாம் பூசப்படுவதால் சோர்வு தட்டுகிறது பல நேரம்.இந்த சிக்கல்களைப்பற்றி யோசித்து பார்த்தால் இவைகளின் தீர்வும் இந்த பிரச்சினைகளிலேயே உள்ளன என்பதையும் உணரமுடிகிறது.

நம் எழுத்தை பட்டை தீட்டிக்கொள்ள ஒரு களன் என்பதும் நாம் நினைக்கும் கருத்துக்கள் பெரும்பாலானவர்களை நாம் நினைக்கும் விதத்தில் சென்று சேருகிறதா என்பதை சோதிக்கும் தளமாகவும் வலைப்பதிவுகள் இருக்கின்றன என்பது நல்ல விஷயமே.

இதையும் மீறி மிகப்பெரிய நன்மையாக நான் நினைப்பது வலைப்பதிவுகளின் மூலம் பெற்ற நண்பர்கள்தான்.நிறைய நண்பர்களை நான் வலைப்பதிவுகள் மூலம் பெற்றிருக்கிறேன். தொடர்ந்து ஒருவரை படிப்பதன் மூலம் எழுதுபவரின் மனதையும் மனம் இயங்கும் விதத்தையும் புரிந்துக் கொள்ளமுடிகிறது. ஒருவரிடம் பழகி அவர்களை புரிந்துகொள்வதற்கு எந்த விதத்திலும் குறைவில்லாத புரிதலை அவர்களை படித்து புரிந்துக்கொள்வது தருகிறது என்றுதான் நினைக்கிறேன்.(சிலர் விஷயங்களி்ல இதில் தவறுகள் நேரலாம்).ஆனால் பெரும்பாலும் இது சரிதான்.

இவ்விதம் நெருக்கமாக நான் உணரும் பல நண்பர்களை நான் இன்றுவரை நேரில் சந்தித்ததே இல்லை என்பதுதான் இதில் ஆச்சரியமானது. பொதுவாகவே ஒரு முறை பேசினாலே ரொம்ப நெருங்கி பழகும் தன்மை என்னுடையது.(இது பலவீனமா என்று எனக்கு தெரியவில்லை).நண்பர்கள் தினத்திற்கு எழுத வேண்டிய கட்டுரையை காலம் தாழ்த்தி எழுதுகிறேனோ?

************************

சென்னை என் மனதில் எப்போதும் ஒரு சிறப்பான, கவர்ச்சிகரமான இடத்தை பிடித்துள்ளது. இத்தனைக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய முறை தான் நான் சென்னைக்கு வந்திருப்பேன்.முதன்முதலாக எப்போது சென்னைக்கு வந்தேன் என்று இன்று நினைத்துப்பார்க்கிறேன். நினைவு தெரியாத ஐந்து வயது பருவத்தை எல்லாம் தாண்டி யோசித்து பார்க்கையில் பட்டபடிப்பு முடித்தப்பின் முதுகலை(பிஸிக்ஸ்) சேருவதற்காக லயோலா, பிரசிடென்சி, கிறிஸ்டியன் காலேஜ் ஆகிய மூன்று கல்லூரிகளிலும் சேர கடும் முயற்சி செய்த காலத்தில்தான் முதன்முதலாக சென்னை வந்தேன். எந்த கல்லூரியிலும் கிடைக்கவில்லை. கோவை பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்தவுடன் பிரசிடென்சியில் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்து கிடைத்தது. போகும் சூழ்நிலை இல்லை. பல மாதங்கள் எதையோ இழந்ததாக வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தேன்.

அந்த காலக்கட்டத்தில் சென்னை போகும்போதெல்லாம் என் உறவினர் பையன்(அப்போது சி.ஏ படித்துக்கொண்டு இருந்தான். இன்னமும் படிக்கிறான்). அவன் ரூமில் தங்குவேன். திருவல்லிக்கேணி வெங்கடேஸ்வரா ஹாஸ்டல் என்று நினைக்கிறேன். அதைப்பற்றியும் சென்னைப்பற்றி என் மற்ற நினைவுகள் பற்றியும் அடுத்த பாகத்தில் தொடர்கிறேனே.

18 comments:

அறிஞர். அ said...

கல்லூரி நாட்களைப்பற்றி நீங்கள் எழுத ஆரம்பிக்கும்பொழுது ஆனந்தமாய் சில நினைவுகள், எண்ணுள்ளும்.

லக்கிலுக் said...

ஆரம்பமே அசத்தலா இருக்கே... தொடருங்கள்....

G.Ragavan said...

சென்னை பற்றியுமா...ம்ம்ம்...நானும் இந்த மூன்று மாதங்களில் சென்னையைப் பற்றி அறிந்தது நிறைய. நீங்கள் பாகு காய்ச்சுங்கள். நடுநடுவில் நான் பொரியைத் தூவுகிறேன்.

மகேஸ் said...

இனைய அரசியலை விட்டு விட்டு அனுபவம்/நிகழ்வுகளுக்கு வந்திருக்கிறீர்கள். மனது லேசாகும். பாரங்கள் குறையும்.
நன்றாக ஆரம்பித்து இருக்கிறீர்கள். தொடருங்கள்.

பிச்சைப்பாத்திரம் said...

http://pitchaipathiram.blogspot.com/2004/12/blog-post_110231751721937392.html

Boston Bala said...

லக்கிலுக்கை வழிமொழிகிறேன்.

----லயோலா, பிரசிடென்சி, கிறிஸ்டியன் காலேஜ் ஆகிய மூன்று கல்லூரிகளிலும் சேர கடும் முயற்சி செய்த காலத்தில்தான் முதன்முதலாக-----

ரொம்ப அவசரமாக, ஒற்றை வாக்கியத்தில் முடித்து விட்டீர்களே. இந்த மூன்றுடன், விவேகானந்தாவையும் எ.சி.சி.யையும் சேர்த்துக் கொண்டு, நானும் நிறைய நாள்களை ஆரம்பித்து முடித்திருக்கிறேன். சொல்ப விரிவாக பகிர்ந்திருக்கலாம் :-)

----அப்போது சி.ஏ படித்துக்கொண்டு இருந்தான். இன்னமும் படிக்கிறான்----

;-))

Muthu said...

நன்றி மாஹிர், லக்கிலுக்

நன்றி ராகவன்,
ஹிஹி...பொரி போடறீங்களா? நல்லது....நடத்திடுவோம்..

மகேஸ்,

என்ன சொல்றீங்க? புரியலையே..எனக்கு ஒரு பழமொழி ஞாபகம் வருது...
அரசியலில் இருந்து விலகும் பேச்சுக்கே இடம் இல்லை..:)))

நன்றி சுரேஷ்கண்ணன்..படித்துவிட்டு அங்கு எழுதுகிறேன்.

நாமக்கல் சிபி said...

//நன்றி ராகவன்,
ஹிஹி...பொரி போடறீங்களா? நல்லது....நடத்திடுவோம்//

உருண்டை பிடித்துத்தர ஆள் வேண்டுமெனில் சொல்லுங்கள்.

:)

அனுபவக் கட்டுரையா? சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Muthu said...

//ரொம்ப அவசரமாக, ஒற்றை வாக்கியத்தில் முடித்து விட்டீர்களே//

பின்னாடி விரிவாக வருது பாலா

சிறில் அலெக்ஸ் said...

//ஆனால் தொடர்ந்து வலையுலகில் ஆர்வமாக இயங்குவதின் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன என்று பார்த்தால் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்துள்ளதை உணர முடிகிறது.//

நல்லவேளை எனக்கு அப்படிப்பட்ட (புத்தகம் படிக்கும்) கெட்ட பழக்கங்களெல்லாமில்லை.

:)

தொடருக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

// தி.நகர் வெங்கடேஸ்வரா ஹாஸ்டல் என்று நினைக்கிறேன் //

venkateswara hostel ice house-ilthaanE irukkiRathu ?

Muthu said...

நன்றி அனானி,

திருவல்லிக்கேணி என்பதற்கு பதிலாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன். அந்த ஐஸ் ஹவுஸ் அருகில் உள்ளதுதான்.

(இதுக்கு எதுக்கு அனானியாக வந்தீங்க?

தருமி said...

என் வலைப்பதிவுலக வாழ்க்கையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகிறது//
எல்லாருக்கும் இந்த 'தொய்வு' அல்லது மறு சுய பரிசீலனை அல்லது தேக்கம் /சலிப்பு அவ்வப்போது வருமோ?

Muthu said...

//எல்லாருக்கும் இந்த 'தொய்வு' அல்லது மறு சுய பரிசீலனை அல்லது தேக்கம் /சலிப்பு அவ்வப்போது வருமோ? //

தள வித்தியாசத்தை அனுசரிக்க வேண்டும் என்பதுதான் நிரந்தர தீர்வு.
நீங்கள் உபயோகித்திருந்த வார்த்தைகளும் மிகவும் பொருத்தமானவையே.

வினையூக்கி said...

Sir, Welcome to "Singara" chennai. You have changed your profile image.

சந்திப்பு said...

முத்து தாங்கள் தொடங்கியதற்கும் முடித்ததற்கும் வித்தியாசம் இருப்பதாக உணர்கிறேன். தங்களது அலசல் சரியானது. பிளாக் கருத்துச் சுதந்திரத்திற்கு கிடைத்த பெரும் வரப்பிரசாரம். அதுவும் தமிழில் இன்றைக்கு இந்த வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. ஒரே வித்தியாசம் அதில் பல ஆக்கப்பூர்வமான விஷயங்கள் வந்தாலும், சில நெகட்டிவான விஷயங்களும் உலாவரத்தான் செய்கிறது. மேலும் நம்மிடையே இருக்கும் ஆர்வ கோளாரும் இதற்கு ஒரு காரணம். நான் கூட தினந்தோறும் மேட்டர் போட வேண்டும் என்று ஆரம்பித்து, அதுவே ஒரு சைகோவாக மாறிவிட்டது. தற்போது கொஞ்சம் இதிலிருந்து விடுபட்டுள்ளேன் என்று கூறலாம். மேலும் ஒரு கொள்கை சார்ந்து எழுதுவது நல்லது என்று தோனுகிறது. இறுதியாக தாங்கள் ஒரு கோணத்தில் எடுத்த முயற்சி தங்களுக்கு நல்லதாக தெரிந்தாலும், அது டிவிஷனை உண்டுப் பண்ணியுள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. எழுதுங்கள் தங்களது கோபால் கட்டுரையைப்போல... வாழ்த்துக்கள்...

Muthu said...

//ஆர்வ கோளாரும் இதற்கு ஒரு காரணம். நான் கூட தினந்தோறும் மேட்டர் போட வேண்டும் என்று ஆரம்பித்து, அதுவே ஒரு சைகோவாக மாறிவிட்டது.//

:))

ஆர்வம் இருக்கும்வரை எழுதுங்கள் சந்திப்பு..தவறில்லை...

வித்தியாசங்களைப்பற்றி வெளிப் படையாக பேசாமல் இருப்பது தான் சமுதாயத்திற்கு கேடு என்பது என் கருத்து.இந்த விஷயத்தில் நமக்குள் கருத்தொற்றுமை வருவது கடினம்.

குழலி / Kuzhali said...

நாம் ஏதேனும் நினைப்பதை வேறொருவர் சொன்னால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது இந்த கட்டுரை

இதே எண்ணம் தான் எனக்கும் முக்கியமாக வலைப்பதிவுகள் புத்தகம் படிக்கும் நேரத்தை சாப்பிட்டுவிட்டது, ஆனாலும் வலைப்பதிவுகள் ஒரு புதிய உலகை, அனுபவத்தை தருகின்றது, நீண்ட நாட்களாக தொக்கி நின்ற இரண்டாம் சாமங்களின் கதை முடிந்து, பின் தொடரும் நிழல்களின் குரல் போய்கொண்டிருக்கின்றது, நடு நடுவே சில புத்தகங்கள் மறுவாசிப்பென, கடந்த இரு வாரங்களாக நாட்கள் நகர்ந்ததது, கடந்து இரு வாரங்களில் வலைப்பதிவுகள் பக்கம் வரவில்லை, வரவில்லை என்பதைவிட வரமுடியவில்லை என்பதே உண்மை....