Thursday, July 16, 2009

துரோகிகள் பலவிதம் - ஆதவன்,சுகுணா மற்றும் பலர்

பாகம் 1


புலிகளை விமர்சிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். ஜெயமோகனும்,சாருவும் சாத்வீக யோகிகளாக மாறி ஒத்த கருத்தினை சொலகிறார்கள்.ராயகரன்,சிரிரங்கன்( ம.க.இ.க போன்ற) அவர்கள் ஒரு பார்வையில் விமர்சிக்கிறார்கள். அ.மார்க்ஸ் முதலானவர்கள் ஒரு புறம்...

தமிழ்நதிக்கும் ஆதவனுக்குமான பிரச்சினையை பார்க்கும்போதும் சரி, சுகுணாவின் பதிவினை பார்க்கும்போதும் சரி, பலரும் இன்று தங்களை தங்கள் நிலைப்பாடுகளை காத்துக்கொள்வதற்காகவே இந்த போராட்டத்தின் தோல்விக்கான காரணங்களை பற்றி பேசக்கூடாது என்று மற்றவர்களுக்கு வாய்ப்பூட்டு போடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.துரதிஷ்டவசமாக தமிழின போராட்டம் ஒரு மாபெரும் பின்னடைவை சந்தித்திருப்பது இவர்களுக்கு ஒரு காரணமாகிவிட்டது.

ஆனால் எத்தனை காலம் இதை பேசாமல் நாம் இருக்கமுடியும்? ஆதவன் - தமிழ்நதி விவாதத்தில் ஆதவன் "நேற்று விமர்சித்த போது களத்தி்ல் இருக்கிறார்கள் என்றீர்கள். இன்று விமர்சித்தால் துக்கத்தில் இருக்கிறேன் என்கிறீர்கள், எப்போது இதை பேசமுடியும்?" என்று எழுதுகிறார். அவர் கண்டிப்பாக மானுட விரோதி அல்ல அவர்.மனு விரோதி மட்டுமே. "நான் ஒரு மனு விரோதன்" என்று புத்தகம் எழுதி பின்னர் தம்மையறியாமலே ஆணாதிக்க சிந்தனை தமக்கு வருகிறது என்று கூறி "நான் ஒரு மனு விரோதி" என்றுதான் தன் புத்தகம் இருந்திருக்க வேண்டும் என்று பேசியதாக கேள்விப்பட்டேன். அது போலத்தான் உணர்ச்சிவசப்பட்டு தலைவிரிக்கோலம் போன்ற வார்த்தைகளை விட்டுவிட்டார்.அதற்காக அவர் கேட்ட கேள்விகளை நாம் புறந்தள்ளமுடியாது.


ஒரு வகையில் பார்த்தோமென்றால் புலிகளின் மேல் நாம் வைத்த இந்த விமர்சனமற்ற ஆதரவு(கண்மூடித்தனமான ஆதரவு) வெளியுலக சிந்தனையை, ஒரு வெளிப்படையான பார்வையை புலித்தலைமைக்கு தராமல் தடுத்தது என்றும் எனக்கு தோன்றுகிறது. இதற்கு நாம் அனைவரும் கூட்டு பொறுப்பு எடுக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்களுக்கு புலிகளுக்கு அனைத்து வகையான சப்போர்ட்டும் தந்து வருகிறவர்கள் என்ற வகையில் அதிக பொறுப்பு இருந்தது.


அவர்கள் கள நிலையை புரிந்துக்கொள்ளவில்லை.தமிழக தலைவர்களை திட்டுவது, பிறகு(தேர்தலுக்கு பின்) தமிழர்களையே திட்டுவது என்றும் தான் இருந்தது. இதில் புலி ஆதரவாளர் என்று பெயர் எடுத்த நார்வே தலைவர் எரிக் சோல்கமும் தப்பவில்லை.


தமிழக தமிழர்களின் அழுத்தததையே புலிகளும் நம்பி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலேயே பல உள்சிக்கல்கள் இருக்கின்றன.ராஜீவ் கொலையில் ஆரம்பித்து, தமிழகத்தில் மக்கள் ஆதரவு பெற்ற அரசியல் தலைவர்களிடம் புலிகளுக்கு உள்ள உறவு ( அமிர்தலிங்கத்தை கொல்ல வேண்டாம் என்று கருணாநிதி கேட்டுக்கொண்டும் அவர் கொல்லப்பட்டாராம் - குழலி பதிவில் பார்த்த ஒரு தகவல்) வரை பல விஷயங்களை பேசலாம்.மொத்தத்தில் இங்குள்ள நிலைமையை புலித்தலைமைக்கு எடுத்து சொல்லும் பொறுப்பு ஒரு விருப்பு வெறுப்பற்ற நடுநிலையாளருக்கே இருக்கும்.நெடுமாறனுக்கும், வைகோவிற்கும் அந்த தகுதி கிஞ்சித்தும் கிடையாது.


என்னளவில் கிளிநொச்சி விழ்ந்தபோதே புலிகளுக்கு போரின் போக்கு பிடிபட்டிருக்கவேண்டும்.புலிகள் மட்டும் மக்களை விட்டுவிட்டு பின்வாங்கி முல்லைத்தீவிற்கோ மற்ற பகுதிக்கோ வந்திருக்கலாம். மக்களுக்கான போராட்டம் என்பது மக்களை விலையாக வைத்தோ பிணையாக வைத்தோ நடத்தப்படக்கூடாது. ஐ.பி.கே.எஃப் தோற்றோடியதற்கு காரணம் அப்போது மக்களோடு கலந்து இருந்து போராடினர்கள் புலிகள்.


இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் பத்திரிக்கையாளர் எழுதியுள்ள இந்த பதிவை பாருங்கள். இதில் உள்ள அனைத்தும் உண்மை என்று நான் சொல்லவில்லை. என்னுடைய சோர்ஸ் என்று கூறி அவர் சிலவற்றை கூறியிருக்கிறார். இதில் தமிழக மத்திய அமைச்சர் ( சிதம்பரம்?) மூலமாக கடைசி கட்ட பேசசுவார்த்தை நடந்தததாகவும் அப்போது புலிகள் நெடுமாறன் மற்றும் வைகோ பேச்சை கேட்டு அநத பேச்சுவார்த்தையை விட்டும் விலகியதாகவும் ஜெயராஜ் கூறுகிறார். தேர்தலி்ல் காங்கிரஸ் தோற்றால் இலங்கை ராணுவத்தின் நடவடிக்கை நிற்கும் என்று நம்பும் அளவிற்கு புலிகளை கொண்டு போனது யார்?அத்வானியே வென்றிருந்தாலும் கடைசி நாளில் குண்டு போட்டு முதலல மேட்டரை முடிங்க அப்புறம் பேசலாம் என்றுதான் கூறியிருப்பார்.இதை யாரும் யூகிக்கலாம்.ஏனென்றால் போரை நடத்துவது இந்திய அரசாங்கம்.காங்கிரஸ் அரசாங்கம் அல்ல.இப்படி கூறுவது தகவல் மட்டுமே.அரசுக்கான ஆதரவு ஆகாது.


இன்று வரை பிரபாகரன் மரணம் என்று இலங்கையோ இந்தியாவே அறிவித்ததற்கும் இப்போது புகைப்படம் மற்றும் வீடியோ ஆதரத்தோடு கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.நெடுமாறன்,வைகோ போன்றவர்கள் இன்றும் மக்களை மாக்கான்களாக நினைத்துக்கொண்டு பேசுவது அருவெறுப்பாக இருக்கிறது.


என்னளவில் இந்திய அரசாங்கம் சரி என்றோ, புலியை விமர்சிப்பவர்கள் கூறுவது எல்லாம் சரி என்றோ கூற முடியாவிட்டாலும், புலிகள் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதும் தங்கள் மேல் சிங்களருக்கு உச்சக்கட்ட பயம் இருந்த காலத்தை சரியாக பயன்படுத்தாததும் (பேச்சுவார்த்தை காலம்) மிக தவறானது.

ஒரு தமிழின துரோகியின் வாக்குமூலம் - 1

சுகுணா திவாகர் ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.இதே பதிவு சில நாட்களுக்கு முன்பு இடப்பட்டிருந்தால் ( போர் முடிந்த சமயத்தில்) கற்றறிந்த பிரபல பதிவர்கள் உள்பட பலரிடமும் பல மொக்கை பின்னூட்டங்களை சந்திக்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி இருப்பார்.

ஈழத்தமிழர் போராட்டம் இந்த காலக்கட்டத்தில் இப்படி கடுமையான பின்னடைவை சந்தித்ததற்கு மிக முக்கியமான ஒரு தரப்பை நான் விமர்சனத்துக்கு ஆட்படுத்தவில்லை என்று சில பதிவுகளில் சொல்லி இருந்தேன். இந்த பதிவில் அழுத்தமாக இருந்த வரிகளை கவனிக்கவும்.


புலிகள் மிக மோசமாக தனிமைப்படுத்த பட்டுள்ளனர். ராஜபக்செ பொறுப்பேற்றதில் இருந்தே ஒவ்வொரு நடவடிக்கையும் அணுஅணுவாக திட்டமிட்டு கடைசியில் இன்றைய நிலை வரை தமிழர்களுக்கு பின்னடைவாகத்தான் இருக்கிறது.ஐரோப்பிய யுனியன், கனடா, யு.எஸ் இங்கு எல்லாம் தடை செய்யப்பட்டது பலத்த அடி.பிறகு ராணுவ ரீதியாக இந்தியாவுடன் இலங்கை நெருங்கியது புலிகளுக்கு தெரியாமல் இருந்திருக்காது.அதற்கு அவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன? அவர்கள் அரசியலே என்னவென்று தெரியவில்லை.பல தமிழ் ஆர்வலர்களிடமும் நாம் இதைப்பற்றி கேட்கும் போதெல்லாம் இது ஒரு திட்டம், இங்க தான் இருக்கு ஐடியாவே என்றெல்லாம் சொல்கிறார்களே ஒழிய நடப்பவை எதுவும் தமிழர்களுக்கு நன்மையாக முடிய காணோம். கடைசியாக நார்வே உள்பட முக்கிய நாடுகள் புலிகளை சரணடைய சொல்வதில் வந்து நிற்கிறது நிலைமை.


நம் எல்லார் மீதும் தவறு உள்ளது. இந்து ராம், சோ, சுப்ரமணிய சுவாமி முதலானவர்கள் விடுதலைப்புலிகளை காலம் காலமாக விமர்சித்து வருகிறார்கள். அவர்கள் அஜெண்டா வேறு. அதை தவிர்த்து,ஒரு கால அளவிற்குள் இந்த கருத்தை கொண்டு வரவேண்டும் என்றால் கடந்த பத்து ஆண்டு அளவில் புலிகளின் மீதான விமர்சனங்களை நாம் நியாயமான முறையில் எதிர்க் கொள்ளவில்லை. துரோகிகள் என்று ஒரே வார்ததையில் அவர்கள் வாயை அடைத்தோம்.

அப்போது எனக்கு சுமார் பத்து வயதிற்குள் இருக்கும். நான் செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களுக்கு என்னுடைய இரண்டாம், மூன்றாம் வகுப்பு சமயத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டேன். அப்பா சில சமயம் பள்ளியில் இருந்து வரும்போது சில வழவழ தாள்களை கொண்டு வருவார். அதில் விடுதலைப்புலிகளின் படம், போர்க்காட்சிகள் இருக்கும். என் தந்தையிடம் தான் முதலில் அரசியல் கற்றேனாகையால் அவர் கூறியபடி என் மனதில் படிந்தது பிரபாகரன் ஒரு வீரன். சிங்கள வெறியர்களை எதிர்த்து தமிழர்களுக்காக போராடுபவன் என்பதே. புலிகளுக்கு பண உதவி செய்வது என்பது அப்போது சாதாரண விஷயம்.

அப்போது செல்வாவை பற்றியோ, அமிர்தலிங்கம் பற்றியோ எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.தினத்தந்தி இலங்கை போராட்டத்தை பற்றி தினமும் செய்திகளை தரும். பல வருடங்கள் நான் தினத்தந்தி படித்து வந்தேன். பிறகு ஆறாம் வகுப்பிற்கு பிறகு ராஜீவ்காந்தி ஈழப்போராட்டத்தை அதகளப்படுத்தியது, பிரபாகரனை மிரட்டி கையெழுத்து வாங்கியதை தொடர்ந்து துன்பியல் சம்பவம் நடந்ததுவரை தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன். புலிகளுக்கு ஏனைய அனைத்து தமிழர்களை போலவே முழு ஆதரவை கொடுத்தே வந்தேன். நடுவில் சில நேரம் நான் படித்த துக்ளக் என் மனதை மாற்றவில்லை. "சகோதர யுத்தம்" சமாச்சாரங்கள் எல்லாம் அப்போது எனக்கு பெரிதாக தெரியவில்லை.இன்றும் "துன்பியல் சம்பவம்" புலிகளின் நோக்கத்திற்கு எதிரான புத்திசாலித்தனமற்ற செயலாக மட்டுமே பார்க்க முடிகிறது.மற்றபடி ராஜுவ் காந்தியின் பக்குவமற்ற அரசியலே இதற்கு காரணம் என்பதுதான் என் பார்வை.

ஆனால் பிற்காலங்களில் புலிகளின் அரசியல் வெளிப்படை தன்மையற்றது என்று கருத்துக்கு நான் வந்தது 2000 ஆண்டுக்கு வெகுபின்னரே. இந்த பதிவு எழுதப்பட்ட சமயங்களில் இந்த குழப்பம் உச்சத்தில் இருந்தது.

நார்வே முன்னிலான பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது, யாரால் பேச்சு வார்ததை முறிந்தது போன்ற விஷயங்கள் எல்லாம் எங்குமோ தெளிவாக கூறப்படவில்லை.பச்சையாக சொல்லப்போனால் தன் தேவை தனிஈழமா, இல்லையா என்பதைக்கூட புலிகளால் மிகத்தெளிவாக கூறவில்லை என்றே எனக்கு தோன்றியது. தமிழக தமிழர்களில் பலபேருக்கு இந்த குழப்பம் இருக்கும் என்றே நம்புகிறேன்.


மகிந்த வென்றபிறகு என் சந்தேகம் உறுதிப்பட்டது.கருணா பிரிந்த பாதிப்பு, முஸ்லீம்களை விரட்டியது போன்ற சம்பவங்கள் எனக்கு தெரியவந்தது மிகப்பின்னரே.அதற்குள் பதிவுலகம் என்னை ஆக்ரமித்து இருந்தது. நண்பர்களிடம் விவாதிப்பேன். ஒரு நண்பர் புலிகள் தனிஈழததை அடைந்துவிட்டார்கள் என்றும் அவர்களுக்கு இன்று தேவை அடுத்த நாடுகளின் அங்கீகாரம் மட்டுமே என்றார். இந்த விஷயததை இவ்வளவு சுலபமாக பார்க்க முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இலங்கை அரசாங்கம் போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக விளக்கிக்கொண்டது என் சந்தேகத்தை போக்கியது.நண்பர்கள் மீண்டும் கூறினார்கள்.இது ஒன்றுமே இல்லை. இப்போது நடக்கும் சண்டையின் மூலம் இலங்கை அரசாங்கம் இனவெறி அரசாங்கம் என்பது உலக நாடுகளுக்கு உணர்த்துவது தான் நோக்கம் என்றனர்.


கடைசி ஒரு வாரத்தில் பொங்கி எழுந்து மேற்குலகை போராட்டங்களால் உலுக்கிய புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களது லாபி திறமைகளையும் போராட்ட நோக்கங்களையும், புலிகள் ஐரோப்பிய யுனியன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்ட போதோ காட்டியிருந்திருக்க வேண்டும். நம்மை விட புலிகளின் மேல் ஒரு சாகச பக்தியை இவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதும் புலிகள் தோற்பார்கள் என்பதை இவர்களால் இன்றும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதற்கு இன்றும் சில நண்பர்களின் இடுகைகளே சாட்சி.


" புலிகள் சுட்டு ராணுவ வீரர் சாவு, இலங்கை ராணுவம் அதிர்ச்சி"

"அடுத்த பொய், பிரபாகரன் மகன் மரணம் என்று இலங்கை புதுக்கதை"

கடைசி கட்டத்தில் நடந்த நிகழ்வுகளில் எனக்கு தெரிந்த சுடும் நிஜங்கள் - அடுத்த பதவில் தொடரும்