Wednesday, September 27, 2006

வேட்டையாடு விளையாடு சர்ச்சை

கமல்,கெளதம் பற்றிய பாலபாரதி,லிவிங் ஸ்மைல் மற்றும் லக்கிலுக்கின் பதிவுகளை படிக்க நேர்ந்தது.ஒரு இடத்தில் யாருக்காவது பொதுமாத்து விழுந்துகொண்டிருந்தால் என்ன ஏது என்று என்று கேட்காமல் தாமும் இரண்டு குத்துவிட்டுவிட்டுத்தான் என்ன விஷயம் என்று கேட்பது தமிழ் பண்பாடு என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம்.அந்த அடிப்படையில் நானும் கமலையோ அல்லது பாலபாரதியையே மொத்தலாம் என்று நினைத்தேன்.

ஆனால் வேட்டையாடு,விளையாடு என்ற அந்த படத்தை பார்க்காமல் படத்தை விமர்சித்தால் அது ஜல்லியாகிவிடும்.உதாரணத்திற்கு...
இட ஒதுக்கீடு ஏன் என்பது பற்றி எதுவும் தெரியாது.ஆனால் இடஒதுக்கீட்டால் மெரிட் பாதிக்கப்படும் என்பார்கள்.
இயக்கவியல் பொருள்முதல்வாதம்,முரண்இயக்கம் தெரியாது. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் பிற்போக்குவாதிகள் என்பார்கள்.
பெரியாரை படித்ததே இல்லை.ஆனால் பெரியாரின் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானவை என்பார்கள்.
இந்த லிஸ்ட்டில் சோந்து நானும் படத்தை பார்க்காமல் கதையை சொல்லி ஜல்லி கொட்டி சூழலை மாசுப்படுத்த விரும்பவில்லை. சில விஷயங்கள் மட்டும்..

முதல் விஷயம் இது கமல் படம் இல்லை. கமல் தலையிட்டு இருந்தால் இந்த திரைப்படம் ஊற்றிக் கொண்டிருக்கலாம்:)).மாபெரும் வெற்றி பெற்றிருக்காது.கமல் இந்த படம் பற்றி ஆர்வம் இல்லாமல் இருந்ததாக இயக்குநரே கூறி உள்ளார்.கமல் டைரக்சன் விசயத்தில் மூக்கை நுழைத்து படங்களை ஒழித்துவிடுவதாக ஒரு கருத்து உள்ளது.ஆகவே கமல் கதை விஷயத்திலும் டைரக்டர் விஷயத்திலும் தலையிடாமல் இருக்க அவருக்கு சம்பளத்தில் ஒரு தொகை சேர்த்து தரப்படுகிறதாம்:)).

ஆக இது கெளதம் படம்தான்.கெளதமின் படங்கள் மேல் எனக்கு பெரிய அபிப்பிராயம் எதுவும் கிடையாது.மசாலா படங்களை திறமையாக எடுக்கக்கூடியவர் என்ற அளவில் தான் அவர் மீதான மரியாதை. பாட்டுக்கள் ஹி்ட்டாவது கூடுதல் நன்மை.அவருடைய முதலிரண்டு படங்களையும் வைத்துத்தான் இந்த கருத்தை சொல்கிறேன். இது போன்ற மசாலா திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்கள் நம்மிடையே நிறைய உள்ளார்கள். சங்கர், சரண், ஹரி, கெளதம் என்று இவர்கள் எல்லோருமே மசாலா கலைஞர்கள்தான்.

டைரக்டர் பாலா போன்றோரை இவர்களை விட ஒரு படி மேலாகத்தான் நான் மதிக்கிறேன் என்ற ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.ஆனால் அவருடைய முதல் படத்திலும் அய்யர்களை கடுமையாக நக்கல் அடித்து சில வசனங்கள் இருந்தன என்று ஞாபகம். கதைக்கு சம்பந்தப்பட்டு இருப்பதாக பாலா கூறலாம்.எனக்கும் அப்படித்தான் தோன்றியது.ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்த வசனங்கள் ஓவராக இருப்பதாக தோன்றியிருக்கும்.

லிவிங் ஸ்மைல் கூறியதில் முக்கிய அம்சமே இங்குதான் வருகிறது. டைரக்டர் யதார்தத்தை எடுக்கிறார் என்று கூறுவதா? அல்லது தெரிந்தே, கேட்க ஆளில்லாமல் இருப்பவர்களை கேவலப்படுத்துகிறாரா? என்பதை கவனிக்கவேண்டும்.இதை எப்படி கண்டுபிடிப்பது என்பது அடுத்த பிரச்சினை.கதைக்கு அவசியம் தேவைப்படாத பட்சத்தில் குறிப்பிட்ட அந்த சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

கதைக்கு அந்த குறிப்பிட்ட வசனமோ, வார்த்தையோ, கான்செப்ட்டோ எந்த விதத்தில் இன்றியமையாதது என்று டைரக்டர்/கதாசிரியர் விளக்கவேண்டும். நம் விமர்சனமும் அதை பொறுத்துதான் இருக்கமுடியும். ஆட்டம் போடு, அவுத்து போடு(நன்றி லிவிங் ஸ்மைல்) படத்தில் இந்த வார்த்தையும்( பொட்டை), கான்செப்ட்டும்(ஓரின சேர்க்கை சமாச்சாரம்) தேவையில்லாமல் திணிக்கப்பட்டுள்ளன என்ற முடிவுக்குத்தான் நண்பர்களின் விமர்சனம் என்னை இட்டு செல்கிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் டைரக்டர் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவர் ஆகிறார்.

மேலும் கமலின் மீதான பாலபாரதியின் இந்த விமர்சனம் என்னால் ஏற்க முடியவில்லை.

//ஆணாதிக்க சிந்தனாவாதிகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் எத்தனையோ விதமான கற்பித விஷயங்களில் ஒன்று தான் விதவையையோ, மணமுறிவோ ஆன பெண் மறுமணம் செய்துகொள்ளும் போது, அதே போல மனைவியை இழந்தவரோடோ, மணமுறிவு ஏற்பட்ட ஆணுடனோ தான் மணம் முடித்துக்கொள்ள வேண்டும். இந்த கருத்தாக்கம் படித்த பலரிடம் கூட இருக்கிறது. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் இந்தபடத்தில் கமலினி முகர்ஜி கொல்லப்படுகிறார்.எப்போதும் தன்னை சக நடிகர்களிலிருந்து இருந்து வேறுபடுத்தி சமூக அக்கறை உள்ளவராக காட்டிக்கொள்ளும் கமல்ஹாசன் இந்த பாத்திரத்தை எப்படி விமர்சனம் செய்யாமல் ஏற்றுக்கொண்டார் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு வேளை அவருக்குள் இருக்கும் மிருகத்தனமான ஆணாதிக்க சிந்தனை இதை பெரியதாக கண்டு கொண்டிருக்காது.//
இந்த படத்தை பொறுத்தவரை கமலுக்கு அவர் வயதை கணக்கில் கொண்டு எழுதப்பட்ட கதை. இன்று கமல் "அம்மா காலேஜுக்கு போறேன்" என்று சொல்லி துள்ளி ஓடமுடியாது. ஒரு பழைய எம்.ஜீ.ஆர் படத்தில் அப்படி ஒரு காட்சியை பார்த்து அதிர்ந்தது ஞாபகம் வருகிறது. அதை தவிர

நளதமயந்தி என்ற படம் . கமல் கதையா அல்லது திரைக்கதையா என்று தெரியவில்லை.ஆனால் கமலின் சொந்தப்படம்.கதையின் நாயகன் மாதவனின் தங்கையை புகுந்த வீட்டில் அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவார்கள். பொதுவாக முடிவில் இதுபோன்ற விஷயங்களில் மாப்பிள்ளை பையன் திருந்துவதாக காட்டுவார்கள். ஆனால் இந்த படத்தில் தங்கையின் முன்னாள் காதலனுக்கு அவளை மறுமணம் முடிப்பது போல் காட்டுவார்கள். வரதட்சணை கொடுமைக்கு இது சரியான தீர்வா என்பது ஒருபுறமிருக்க கல்யாணம் ஆன பெண்ணுக்கு கல்யாணமாகாத மாப்பிள்ளையை கட்டி வைக்கும் புரட்சி(?)மனப்பான்மை கமலுக்கு இருக்கிறது என்று தோன்றுகிறது.

மற்றபடி கமலஹாசன் தேவர்சாதி மீது பற்றோடு இருக்கிறார் என்று ஒரு விமர்சனம் பார்த்தேன். எனக்கு தெரிந்தவரை தேவர்மகன் படத்தில் கதைக்கு சம்பந்தப்பட்டுத்தான் காட்சிகள் இருந்ததாக ஞாபகம்.விருமாண்டி, தேவர்மகன் போன்ற வட்டார வாழ்க்கையை காட்டும் படங்களில் சாதியை தவிர்த்து(சாதி அடையாளம் தெரியாமல்/பேசாமல்) படம் எடுக்கமுடியுமா?

தனிப்பட்ட முறையில் கமலின் "வெச்சு வாழ தெரியாத" தன்மையைப்பற்றி நிறைய பேரிடம் விமர்சனம் (குறிப்பாக பெண்கள் நிறைய பேர் இதை சொல்கிறார்கள்) உள்ளது.

இது ஒரு சிக்கலான விஷயமும் அதற்கு மேலாக அவரின் தனிப்பட்ட விஷயமும். நம்மை பாதிக்காதவரைஅதைப்பற்றி கருத்து கூற நமக்கு உரிமையில்லை.

16 comments:

Anonymous said...

நீயும் சேர்ந்தாச்சா....

வரவனையான் said...

மேற்படி அனானி யாருன்னு தெரியுதா ரங்கா.... ஸாரி ' முத்து

பொன்ஸ்~~Poorna said...

முத்து,
படம் பார்த்துட்டே எழுதி இருக்கலாமே.. எப்போ பார்க்கப் போறீங்க?

Muthu said...

பொன்ஸ்,

தேடி பார்க்கிற அளவிற்கு சிறந்த படம் இல்லை என்கிறார்கள்.ஆகவே சன் டிவியில் உலகில் முதன்முறையாக என்று போடும் போதுதான் பார்ப்பதாக ஐடியா..

நான் படத்தை விமர்சிக்கவே இல்லையேம்மா:)

பொன்ஸ்~~Poorna said...

//
நான் படத்தை விமர்சிக்கவே இல்லையேம்மா:)
//

அதனால் தான் கொஞ்சம் காரம் குறைச்சலா இருக்கிறாற்போல் இருக்கு :)

பார்த்துட்டு உங்க விமர்சனமா எழுதி இருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும்.. (கமல், பாலபாரதி யாருக்கு விழுந்திருந்தாலும் ;) )

ஆனால் தேடிப் பார்க்குமளவுக்கு அத்தனை ஓகோ ரகமெல்லாம் இல்லைதான்..

லக்கிலுக் said...

குறைந்தபட்சம் 1000 ஹிட்ஸ் ஆவது உங்களுக்கு கிடைக்கும். எனக்கு இன்று மதியம் ஆயிரத்தை தாண்டி விட்டது :-))))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பூ;பத்தோடு பதிணொண்ணு ரகம்; ஒன்னுமே செய்வத்ற்க்கிலையெனில் ,தூக்கமும் வரவில்லையென்றால் பார்க்கவும்; பார்க்கும் போது தூக்கம் வந்தது.
யோகன் பாரிஸ்

இரவுக்கழுகார் said...

பிரச்சினை என்றவுடம் மூக்கில் வேர்க்கும் நபர் என்றால் அது நமது முத்து தமிழினி தான். ஆனால் பல பிரச்சினைகளுக்கு நடுவிலும் திராவிடம், ஆரியம் பெரியாரிஸம், போன்ற உள்குத்துக்களை வைத்து பதிவு இடுவது உமக்கு கைவந்த கலையாகி வருகிறது..

கழுகார் உம்மை கவனித்துக்கொண்டுள்ளார்..

Sivabalan said...

// இட ஒதுக்கீடு ஏன் என்பது பற்றி எதுவும் தெரியாது.ஆனால் இடஒதுக்கீட்டால் மெரிட் பாதிக்கப்படும் என்பார்கள்.
இயக்கவியல் பொருள்முதல்வாதம்,முரண்இயக்கம் தெரியாது. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் பிற்போக்குவாதிகள் என்பார்கள்.
பெரியாரை படித்ததே இல்லை.ஆனால் பெரியாரின் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானவை என்பார்கள் //

இது சூப்பருங்க.. மூன்றே வரியில் சூப்பரா சொல்லிட்டீங்க..

Muthu said...

கழுகாரே,

நீர் யார் என்று தெரியாத அளவுக்கு நான் ஏமாளி இல்லை :)))

கதிர் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க!!
என்ன பிரச்சினைன்னா நீங்க யார் பக்கம்னு தெரியலன்னா அனானிங்க பூந்து விளாடற வாய்ப்பும் இருக்கு!
லக்கி பதிவை போன்றே தன்மையுள்ள பதிவு!

கோபா said...

//இட ஒதுக்கீடு ஏன் என்பது பற்றி எதுவும் தெரியாது.ஆனால் இடஒதுக்கீட்டால் மெரிட் பாதிக்கப்படும் என்பார்கள்.
இயக்கவியல் பொருள்முதல்வாதம்,முரண்இயக்கம் தெரியாது. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் பிற்போக்குவாதிகள் என்பார்கள்.
பெரியாரை படித்ததே இல்லை.ஆனால் பெரியாரின் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானவை என்பார்கள் //

சிந்தனையை துண்டும் வரிகள்.....சம்மந்தப்பட்டவருகளுக்கு

ஜோ/Joe said...

முத்து,
படம் பார்த்த பலரும் இந்த சர்ச்சையில் வாய் பொத்தி நிற்க ,படம் பார்க்காமலே பதிவு போடுறதெல்லாம் தனித் திறமைங்க! கலக்குங்க!

Muthu said...

joe,

என்ன இதுதான் அதுவா?

rajavanaj said...

முத்து,

கமல் அவருடைய சில படங்களிலேயே தன்னுடைய உண்மையான முகத்தை காட்டியுள்ளார் என்று நினைவு. உதாரணம் "ஹே ராம்" படத்தில் வரும் கலவரக் காட்சியில் அவருடைய மனைவியை ஒருவன் பலாத்காரம் செய்ய இன்னொருவன் அவரை ஓரினச் சேர்க்கைக்கு பலாத்காரம் செய்வது போல் ஒரு காட்சி வரும். அதே போல் அந்த படத்தில் பல காட்சிகளில் கலவரம் என்றாலே முஸ்லிம்கள் என்பது போலும் இந்துக்கள் செய்வது பதில் தாக்குதல் மட்டுமே என்பது போலும் காட்சிகள் வைத்திருப்பார்.

எனிவே,
//ஒரு இடத்தில் யாருக்காவது பொதுமாத்து விழுந்துகொண்டிருந்தால் என்ன ஏது என்று என்று கேட்காமல் தாமும் இரண்டு குத்துவிட்டுவிட்டுத்தான் என்ன விஷயம் என்று கேட்பது தமிழ் பண்பாடு என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம்//
நல்ல நகைச்சுவை :))

Chellamuthu Kuppusamy said...

தல..வாட் இஸ் திஸ். ஒரே நாள்ல மூனு போஸ்ட். இடைவெளி பயனுள்ளதா இருந்துச்சுன்னு நம்பறேன்.