Tuesday, September 26, 2006

மங்களூரில் வலைப்பதிவர் சந்திப்பு

k; வலைப்பதிவர் மாநாடுகள் அங்காங்கே நடப்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம். ஒரே ஊரில் ஒரே வாரத்தில் மூன்று முறை கூட நடக்கின்றனவாம். வலைப்பதிவர் மாநாடுகள்(?) வலைப்பதிவின் தட்பவெப்ப நிலையை கட்டுக்குள் வைக்கவும் நல்ல அறிமுகங்கள் கிடைக்கவும் உதவும் என்ற அடிப்படையில் நான் வலைப்பதிவாளர் சந்திப்புகளில் ஆர்வம் காட்டுவது உண்டு.

"அத்தெல்லாம் சரி மாமே.மங்களூர்ல என்ன மீட்டிங்,அங்கிருந்து தமிழ் குப்பை போடும் ஒரே ஆசாமி நீதானே",என்று அவசரப்படும் கண்மணிகளுக்காக நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு தூக்கம் வராமல் கணிணியை நோண்டிக்கொண்டிருந்த போது ஒரு மெயில் வந்தது. நடராசன் சீனிவாசன் என்ற பெயரில் வந்த அந்த மெயில் ஒரு பதிவர் மங்களூர் வருவதாகவும் வலைப்பதிவாளர் சந்திப்பை மங்களூரில் வைத்துக்கொள்ளலாமா என்றும் கேட்டது.

ஏற்கனவே நற்பணி மன்றம், மங்களூர் கிளை அது இது என்று பல இடங்களில் நம் பெயர் உபயோகப்படுப்பட்டிருப்பதால் குழப்பம் அடைந்திருந்த நான் எந்த பெயரில் நீங்கள் எழுதுகிறீர்கள் என்று கேட்டு மெயிலை தட்ட பிறகுதான் தெரிந்தது நமமுடைய ஓகை தான் நடராசன் சீனிவாசன்.

தன்னுடைய தொழில் சம்பந்தப்பட்ட (அலுமினியம் தயாரிப்பு) மூன்று நாள் கருத்தரங்குக்கு மங்களூர் வந்த ஓகை நடிகர் சுனில் ஷெட்டியின் ஓட்டலில் இந்த வரலாற்றுபூர்வமான, தமிழ் வலைப்பதிவாளர்களின் முதல் மங்களூர் சந்திப்பின் முதலாம் அமர்வு நடைபெற்றது. மொத்தம் மூன்று அமர்வுகளாக இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிநிரல் என்னவோ ஒன்றுதான்.

மரபு கவிதைகளில் ஆர்வம் உள்ள அவர் பல கவிதைகளையும் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சில கவிதைகளை புரட்டி பார்த்தேன். நிலைமண்டில ஆசிரியப்பா, விருத்தம், அடி என்று லத்தீன் மொழியில் சில வார்த்தைகள் இருந்தன.உஷாராக பேச்சை மாற்றினேன்.தமக்கு புதுக்கவிதைகள் பிடிக்காது என்பதுபோல் ஒரு கருத்தை உதிர்த்தார் ஓகை. மேத்தாவை கலாய்க்க சென்ற மணிகண்டனை விட்டு இந்த ஆளை ஒரு காட்டு காட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

தமிழ்மேல் மிகவும் ஆர்வமுள்ள ஓகை பல காலமாக தமிழ் இணையத்தில் இயங்கி வருவதாக கூறினார்.மரத்தடி குழுமங்களிலும் இயங்குவதாக கூறினார். எனக்கு தமிழ் இணைய பரிச்சயம் ஒரு வருடமாகத்தான் என்றேன் நான். பரவாயில்லை அதற்குள்ளாக பிரபலம் ஆகிவிட்டீர்கள் என்றார். ஹிஹி என்று மையமாக சிரித்துவைத்தேன்.முதுகில் டின் கட்டப்பட்டால் அதற்கு பெயர் பிரபலமா என்று மனதிற்குள் நினைத்துக்கெர்ணடேன்.புரிந்து கொண்டாரோ என்னமோ மிகவும் இளவயதினராக இருக்கிறீர்கள் என்று ஒரு கட்டி ஐஸை எடுத்து வைத்தார்.கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன்.

சென்னை வலைப்பதிவர் சந்திப்பின் போது ஒரு முக்கிய வேலை இருந்ததால் கலந்துக்கொள்ள இயலவில்லை என்றார்.எனக்கு ஓகை என்ற பெயரும் சிதம்பரம் அர்ச்சகர் சமாச்சாரம் மற்றும் தேர்தல் சமயத்தில் யாருக்கு ஓட்டு போடுவது என்று அவர் எழுதிய சில பதிவுகளும் ஞாபகம் இருந்தது. அதன் அடிப்படையில் நாங்கள் பேச ஆரம்பித்தோம்.சோ பிடிக்கும் என்றும் கருணாநிதி பிடிக்காது என்றும் தயக்கத்துடன் சொல்லியபடி கொஞ்சம் தள்ளி அமர்ந்தார் மனிதர்.மேலே பாய்ந்துவிடுவேன் என்று சந்தேகம் அவருக்கு இருந்திருக்கும் போல் தோன்றியது. ஆவேசமாக எழுதுவது போல் தோன்றினாலும் நான் அப்பாவிதான்(அப்பாவிகளுக்கு மட்டும்) என்றேன். மேலும் நான் எந்த கட்சியிலும் இல்லை.யாரிடமும் அல்லது எந்த கோட்பாட்டிலும் விமர்சனமற்ற பக்தி என்பது எனக்கு இல்லை என்றேன். அவருடைய பதிவுகளை வைத்து எனக்கு அவர் பற்றி ஏற்பட்ட இருந்த மனபிம்பத்தை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டேன். சோவின் இரண்டாவது குரல் என்று அவரை நான் விமர்சித்ததை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டார்.

அவர் ஒரு மிகப்பிரபல வலைப்பதிவாளருக்கு மிகவும் நெருங்கியவர் என்று அவருக்கே தெரியாத ஒரு தகவலை கூறி அவரை அதிர வைத்தேன். மாற்றுபார்வை என்பது என்ன? ஏன்? என்பதைப்பற்றியும் இடதுசாரியம், வலதுசாரியம், இந்து மதம், டோண்டு, புனிதபிம்பங்கள், தேசியம்,திராவிடம் என்று வழக்கமாக எல்லா வலைப்பதிவு எவர்கிரீன் சமாச்சாரங்களையும் பேசினோம்.

புனிதப்படுத்துதல், இழிவுப்படுத்துதல் பற்றி என் கருத்தை உன்னிப்பாக கேட்டுக்கொண்டார்.இந்திய தத்துவத்தின்,சிந்தனையின் பெருமையை பேசும்போது மட்டும் சமணம், பெளத்தம், சாங்கியம்,கடவுள் மறுப்பு தத்துவங்களை சேர்த்துக்கொண்டு விட்டு ஆன்மீகத் தளத்தில் பேசும்போது இவைகளை புறந்தள்ளிவிட்டு வேத உபநிஷத தத்துவங்களை மட்டும் சிலர் பெரிதாக பேசுவது அயோக்கியத்தனம் என்றேன் நான்.

கருணாநிதி திமுகவில் தீடிரென வளர்ந்தது அந்த காலகட்டத்தில் எல்லாருக்கும் ஒர் ஆச்சரியமான விஷயம் என்றார்.சோவின் பல கருத்துக்கள் பிடிக்காது எனினும் அவர் வாதம் செய்யும் முறை,தைரியம் ஆகியவையே தம்மை கவர்ந்தவை என்றார். காலரிக்காக எழுதுவது,நிறைய பேரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக எழுதி தன்னுடைய தனித்தன்மையை கைவிடுவது என்ற எழுத்து துறையில் உள்ள பிரச்சினைகளையும் பரிமாறிக்கொண்டோம்.கருத்துக்கள் மாறுபடலாம். மனிதம், நட்பு ஆகியவை அதையும் மீறியவை என்ற அடிப்படையில் பல விஷயங்களை விவாதித்தோம்.பல விஷயங்களில் மாற்றுபார்வைகள் விவாதபூர்வமாக அவர் வைத்திருந்தாலும் விவாதங்களில் தமக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை என்றார்.

மிகவும் குறைந்த கால அவகாசமே இருந்ததால் உடுப்பி, கொல்லூர் ஆகிய இடங்களுக்கு போக முடியவில்லை. ஒரு மாலை பனம்பூர் பீச்சுக்கு சென்றோம்.தன்னுடைய பரிசாக பாலகுமாரனின் புருஷவதம் என்ற புத்தகத்தையும் எனிஇந்தியன் பதிப்பகத்தின் அறிவியல் புனைகதைகளின் தொகுப்பை எனக்கு அளித்தார்.அதில் அவர் எழுதிய ஒரு சிறுகதையும் இருப்பது போனஸ்.

(என்னது ரிட்டையர்மெண்ட்டா? ஹிஹி அதெல்லாம் முடிஞ்சிருச்சி.சிறிய இடைவேளைன்னு தானே போட்டிருந்தேன்:))

8 comments:

Vaa.Manikandan said...

//மேத்தாவை கலாய்க்க சென்ற மணிகண்டனை விட்டு இந்த ஆளை ஒரு காட்டு காட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். //

அடி வாங்க வைப்பீங்களோ?

அருண்மொழி said...

இன்னாபா இது. உனக்கே நாயமா கீதா. சென்னை மேட்டரை அப்படியே உட்டுபுட்டு மங்களூருக்கு தாவிகின. சரியில்லபா.

Muthu said...

அருண்மொழி,

சென்னை மேட்டரா? ஹிஹி எழுதலாம்...

rajavanaj said...

muthu,

//இந்திய தத்துவத்தின்,சிந்தனையின் பெருமையை பேசும்போது மட்டும் சமணம், பெளத்தம், சாங்கியம்,கடவுள் மறுப்பு தத்துவங்களை சேர்த்துக்கொண்டு விட்டு ஆன்மீகத் தளத்தில் பேசும்போது இவைகளை புறந்தள்ளிவிட்டு வேத உபநிஷத தத்துவங்களை மட்டும் சிலர் பெரிதாக பேசுவது அயோக்கியத்தனம் என்றேன் நான்.//

HATS OFF... :-))

ஓகை said...

நன்றி முத்து. அழகாக எழுதிவிட்டீர்கள்.
கிட்டத்தட்ட மூன்று நாட்களில் பன்னிரண்டு மணி நேரம் பேசி இருக்கிறோம். பெரும்பான்மையாக மாற்றுக் கருத்து உடையவர்களாக இருந்துவிட்டதால் விவாதத்திலேயே நேரம் போய்விட்டது.

நானும் ஒரு பதிவு போடுகிறேன்.

ஜடாயு said...

//இந்திய தத்துவத்தின்,சிந்தனையின் பெருமையை பேசும்போது மட்டும் சமணம், பெளத்தம், சாங்கியம்,கடவுள் மறுப்பு தத்துவங்களை சேர்த்துக்கொண்டு விட்டு //

தத்துவச் சிந்தனைகள் என்ற அடிப்படையில், இந்த விஷயங்களை இந்து ஞான மரபு சேர்த்துக்கொண்டது. அவற்றுக்கு "தரிசனங்கள்" என்ற தகுதியும் அளித்தது. அதை நாம் கடைப்பிடித்தும் வருகிறோம்.
இது எவ்வளவு பெரிய, உன்னதமான விஷயம்!

// ஆன்மீகத் தளத்தில் பேசும்போது இவைகளை புறந்தள்ளிவிட்டு வேத உபநிஷத தத்துவங்களை மட்டும் சிலர் பெரிதாக பேசுவது அயோக்கியத்தனம் என்றேன் நான்.//

ஆன்மீகம் என்பது அனுபவ மயமானது, அது சிந்தனை என்ற தளத்தில் மட்டும் இயங்குவதில்லை. அதனால், தான் கண்டு, கற்று உணர்ந்தவற்றைத் தான் ஒரு யோகியோ, ஞானியோ, பக்தனோ (இல்லை ஒரு சாதாரண ஆன்மீக சாதகனோ) பேசுவான், உலகில் உள்ள எல்லா தத்துவங்களையும் அல்ல. இதற்குப் பொருள் அந்தத் தத்துவங்களை வெறுப்பதோ, ஓரங்கட்டுவதோ அல்ல. இந்து மரபு அதற்கான பக்குவப்பட்ட மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பதஞ்சலி யோகத்தைப் பற்றித் தான் பேசுவார், மாதா அம்ருதானந்தமயி அன்பு, கருணை பற்றித் தான் பேசுவார். இவர்களிடம் போய் நீங்கள் ஏன் சமணத்தைப் பற்றிப் பேசவில்லை, உலகாயத (சார்வாக) சித்தாந்தம் பற்றிப் பேசவில்லை என்று கேட்க முடியுமா?

இதில் என்ன "அயோக்கியத்தனம்" இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.

லக்கிலுக் said...

சந்திப்பில் போண்டா பரிமாறிக் கொள்ளப்பட்டதா என்று அறிய விரும்புகிறேன் :-)

ரவி said...

///சந்திப்பில் போண்டா பரிமாறிக் கொள்ளப்பட்டதா என்று அறிய விரும்புகிறேன் :-) ///

போண்டா என்ன அம்பத்தூர் ராக்கெட்டா ? அதை டேபிளுக்கு அடியில் வைத்து பறிமாறுவதற்க்கு ?

மூன்று நாட்களில் 12 மணிநேரம் பேசினீர்கள் என்று ஓகை தெரிவித்துள்ளார்.

எவ்ளோபெரிய பிள்ள்ளேடு தீட்டப்பட்டிருக்கும் என்று தெரிந்தது...