Wednesday, August 23, 2006

தேசபக்தி, ஜெய்ஹிந்த் பற்றி செல்வன்

வலைப்பதிவுகளில் தேசப்பக்தி ஆறாக பெருக்கெடுத்து போனதையும் அதில் பல வலைப் பதிவாளர்கள் அடித்துசெல்லப்பட்டதையும் பார்த்திருப்பீர்கள். நண்பர் செல்வனின் பதிவில் இதுப்பற்றி சில சுவையான வாதங்களை பார்க்கமுடிந்தது.

சுதந்திர இந்தியாவின் சிறுமைகளை பேச வெட்கப்பட்டுக்கொண்டு முன்னேறிய ஒரு சிறிய சதவீத மக்களைப்பற்றி மட்டுமே பேசி புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருந்தால் இந்தியா முன்னேறாது. மாறாக சுதந்திரம் பெற்று ஐம்பது வருடங்களுக்கு பிறகும் இங்கு நிலவும் பல்வேறு சமூக ஏற்றத்தாழ்வுகள், சமுதாய மேடுபள்ளங்கள் இவற்றைப்பற்றி யோசித்தவர்களால் தான் நாடு இந்த அளவாவது முன்னேறியுள்ளது.

என்று ஒரு பெண் நடுநிசியில் சுதந்திரமாக உலவ முடிகிறதோ அன்றுதான் நிஜமான சுதந்திரம் என்று காந்தியார் கூறியது போல் என்று அனைத்து மக்களும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடிந்தால்தான் நிஜமான சுதந்திரம் என்று நினைக்க அனைவருக்கும் உரிமை உள்ளது.நினைத்தபடி வாழ்ககையை அமைத்துக்கொண்டவர்களுக்கு முழுதிருப்தி என்றால் முழுதிருப்தி இல்லாத ஆட்களுக்கு அவர்கள் வருத்தத்தை பகிர உரிமை உள்ளது.

மூச்சை அடைத்துக்கொண்டு ஜெய்ஹிந்த் போடாதவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் என்றும் இந்தியாவை கூறு முக்கால் ரூபாய் என்று விற்பவர்கள் என்றும் கூறுவது நகைப்பிற்குரியது.தேசபக்தியை இதை வைத்து அளக்கமுடியாது. நாடு என்ற கற்பிதத்தை போலியாக போற்றுவதை விட அதில் உள்ள பெரும்பான்மையான மக்களின் நலனுக்காக பேசுவது கண்டிப்பாக சிறந்ததுதான்.

லிவிங் ஸ்மைல் போன்றவர்களுக்கு இந்த நாடு என்ன செய்தது என்பதை "நாட்டுக்கு நீ என்ன செய்தாய்" போன்ற குழந்தைத்தனமான கேள்விகளை கேட்டு மறைக்கமுடியாது. அவர் நிலையில் இருந்து அதை பார்க்க வேண்டும். அதே போல் ஒரு லிவிங் ஸ்மைல் இன்று ஒரு நல்ல வேலையில் அமர்ந்துவிட்டதை வைத்து இந்த நாட்டில் திருநங்கைகள் வாழும் வாழ்க்கையை எடை போட்டுவிட முடியாது.அப்துல் கலாம் ஜனாதிபதியாகிவிட்டதால் முஸ்லீம்களின் குறைந்த கல்வி அறிவு சதவீதத்தை நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்கமுடியுமா?

ஆந்திராவில், மகராஷ்ட்ராவில் தற்கொலை செய்துக்கொண்டு இறக்கும் ஏழை விவசாயிக்கு நாடு என்ன செய்தது என்று கேட்க அனைவருக்கும் உரிமை உள்ளது. இந்த கேள்விக்கும் அவர்கள் நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்பதுதான் பதிலா? இந்த நாட்டில் அறுபது சதவீததிற்கும் மேலான மக்கள் வாழும் வாழ்க்கைத்தரம் என்ன?அதை வைத்துத்தான் நாட்டின் முன்னேற்றத்தை எடை போடமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து.

முன்னேறியவர்கள் தங்கள் நலத்தை மட்டுமே பார்த்துக்கொள்வதும் அந்த சுயநலத்தில் பொதுநலன் இருப்பதாக பில்ட் அப் செய்வதும் ஆபாசமானது. பல நிறுவனங்களை சாம, பேத, தான தண்ட முறைகளில் அழித்த மைக்ரோசாப்ட் நிறுவனம் எய்ட்ஸ் ஒழிப்பிற்கு பல கோடிகளை அள்ளி விடுவதை பாராட்டும் நம் மிடில் கிளாஸ் மனசாட்சிதான் இதில் தெரிகிறது. அதாவது அவர் சம்பாதிக்க எந்த வித நெறிமுறையும் இல்லாமல் கொள்ளை அடிக்கலாமாம்.ஆனால் ஏழைகளுக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்தால் சரியாகிவிடுமாம்.என்ன கூத்து இது?

மத்திய அரசு பணிகளில் 1980 களில் தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வந்தது என்பதே ஒரு அதிர்ச்சிதகவல்.இன்று அதே மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டி உள்ளது.இதை நினைத்து நாம் என்ன பெருமைப்படுவது? இன்று அரசியல் அரங்கில் பிற்படுத்தப்பட்டவர்களின் அதிகாரம் செல்லுபடியாகும் இந்த சூழ்நிலையிலும் இந்த சட்டம் இந்த பாடுபடுகிறது.இது சந்தோஷப்படக்கூடிய செயல்பாடா?

14வது மக்களவையில் 136 எம்.பி.க்கள் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்களாம்.இதில் பெருமைப்பட ஏதாவது உள்ளதா?

நாடு சரியில்லை என்று புலம்புபவர்கள் அதை மட்டும் செய்வதில்லை.அது சம்பந்தமாக மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். நம்மிடம் இருக்கும் பிரச்சினைகளைப்பற்றி ஒரு பொதுகருத்து எட்ட முயல்கிறார்கள்.ஆனால் நம்மிடம் பிரச்சினையே இல்லை என்று கூறுபவர்கள் பிரச்சினைகளை மறைக்கிறார்கள் என்பதுதான் எங்கள் புலம்பல்.நாட்டில் உள்ள பிரச்சினைகளை வெளிப்படையாக பேசுபவன் தீவிரவாதி என்றும் தேசத்துரோகி என்றும் சித்தரிப்பது பலகாலமாக நடப்பதுதான்.

போராடுபவன் ஏன் போராடுகிறான் ? எவனும் தற்கொலை படையாக ஆக விரும்பி வரமாட்டான். எவனும் நக்சலைட்டாக ஆகவேண்டும் என்று வரம் வேண்டி ஆவதில்லை. அவன் தரப்பு நியாயத்தை அவன் நிலையில் இருந்து பார்க்கவேண்டும்.காஷ்மீரிலிருந்து வடகிழக்கு மாநிலங்கள் வரை இந்திய தேசியத்தின் தவறான கொள்கைகள்தான் இந்தியாவிற்கு பிரச்சினைகள் ஏற்படுத்தி உள்ளன என்று கூறினால் அது தேசவிரோதமா?

"எனக்கு இந்தியா மேலே நேசம் இருக்கே ஒழிய பக்தி இல்லை. அதனால அதன் குறைகளை குறிக்கவோ, ஒழிக்க முனைவதிலோ எனக்கு தயக்கமில்லே" என்று சொல்வேன்.அதனால, "போங்கடா நீங்களும் உங்க 'ஜெய் ஹிந்த்'" ம்னு கண்டிப்பா சொல்வேன்" என்று ஒருவர் கூறிய கருத்தில் எனக்கு முழு ஒப்புதல் உண்டு.

லோக்பிரதான் தேர்தலில் நின்றபோது ஓட்டு விழவில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.லோக்பிரதானின் யோக்கியதை சில நாட்களிலேயே பல் இளித்தது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

//நல்லவேளை ஏழை ஜனம் தேசபக்தியோடு இருப்பதால் நாம் தப்பிக்கிறோம்.இல்லாட்டா நம் நாட்டின் கதி என்ன?//

இந்த வாக்கியம் பயங்கர காமெடி செல்வன், குழந்தை மாதிரி பேசறீங்க என்று நான் சொன்னதற்கு ஒரு கிளாசிக் உதாரணம் இது.இது போல் பல இடங்களில் பின்னூட்டங்களில் சொல்லி உள்ளீர்கள்.குழாயில் தண்ணீரை அண்ணன் தரவில்லை என்றால் அம்மாவை அடிப்பது முறையா?(இது காவிரி பிரச்சினைக்கு நீங்கள் தரும் பதில்.மேலும் தமிழக அரசு இந்த விஷயத்தில் சரியாக நடந்துக் கொள்ளவில்லை என்ற ஜல்லியை அடிப்பீர்கள்.நாமெல்லாம் ஒரே தேசியம்தானே.அப்புறம் ஏன் அவர்கள் மறுக்கவேண்டும் என்பதுதான் கேள்வியே. அப்படியானால் தேசியம் என்பதில் புத்திசாலியாக( as you said Clever) இருப்பவன் பிழைத்துக்கொள்ளலாம்.மற்றவன் தற்கொலை செய்துக்கொண்டு சாகவேண்டும் என்பதுதானா?

//ஒருவன் ஏழையாக பிறப்பது கண்டிப்பாக அவன் குற்றம் இல்லை.ஆனால் ஒருவன் ஏழையாக சாவது என்பதில் அவன் மீது அரை சதவிகிதமாவது தப்பு இருக்கும்.போராடினால் தான் வெல்ல முடியும்.போராடாத மனிதன் மண்புழு தான்.//

இதையும் நீங்கள்தான் சொல்கிறீர்கள்.இது நியாயமா என்று ஒருகணம் யோசிக்கவும். சினிமாவில் தான் கதாநாயகனுக்கு லாட்டரி அடிக்கும்.அல்லது ரஜினியின் அண்ணாமலை படம் போல் ஒரு பாட்டு முடிவதற்குள் பெரிய ஆள் ஆகமுடியும்.நிஜ வாழ்வில் ஒரு அரசாங்கத்தின் கடமை அனைவருக்கும் வாய்பபு ஏற்படுத்து தருவதே,

//சிதம்பரம் கோயிலில் மணியாட்டுபவன் தமிழ் பேசவில்லை என்றால் மொழியுரிமை இல்லை என்பது டூ மச்.தமிழ் மொழிக்காக பல போராட்டங்களை செய்தோம்,இன்னும் பலவற்ரை செய்ய வேண்டியுள்ளது.அதை எல்லாம் மறுக்கவில்லை.ஆனால் மொழி உரிமை இல்லை,தமிழ் ஒடுக்கப்படுகிறது என்பதெல்லாம் மிக மிகைப்படுத்தப்ப்ட்ட கூற்று.//

ஹிஹி.....மொழியின் அருமையைப்பற்றி பதிவு போட்ட செல்வனா இது?

//தமிழன் தான் இன்று நாட்டின் முதல் குடிமகன்.மத்திய அரசை தாங்கி நிற்பவன் தமிழன்.பெரும் பொறுப்புக்களில் தமிழன் இன்று மத்தியில் ஆளுகிறான்.இதை எல்லாம் பயன்படுத்தி மொழிக்கும்,நாட்டுக்கும் வேண்டியதை சாதித்துக்கொள்ள வேண்டியது அவன் கடமை.//

ஹிஹி இதுவும் ஜோக..என்ன செய்யமுடியும் இந்த சூழ்நிலையில்? ஒரு இடஒதுக்கீட்டுக்கு போராடிய தமிழன் சகதமிழனிடம் கூட மரியாதை இல்லாம நிக்கிறான்.உதாரணத்திற்கு இடஒதுக்கீடு பற்றி உங்கள் கருத்து என்ன என்று விளக்கமாகவும் வெளிப்படையாகவும் உங்களால் சொல்லமுடியுமா?

அப்துல்கலாமை நினைத்து புளகாங்கிதப்பட என்ன இருக்கிறது என்று நிஜமாகவே எனக்கு புரியவில்லை.நல்லவர்தான். குழந்தைகள் மேல் பாசம் உள்ளவர்தான்.ஆனால் அவரால் ஜனாதிபதியாக என்ன மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்த முடிந்தது?

//அமெரிக்காவில் இப்படித்தான் பெண்ணுரிமை இல்லை,சம உரிமை இல்லை,என்று வருஷம் முழுக்க போராடுவார்கள்.ஜூலை 4 வந்தால் அனைவரும் சேர்ந்து கொடியேற்றி சல்யூட் அடிப்பார்கள்.அடுத்த நாள் மீண்டும் ஊர்வலம் போவார்கள்.//

அவங்கவங்க பாதிப்போட அழுத்தத்தை பொறுத்தது அது செல்வன்..இங்க அடிப்படை தேவைகளே பூர்த்தியாகாத ஆட்கள் நிறைய இருக்காங்க

//கலவரம்,வன்முரை இவை இல்லாத நாடு என ஏதேனும் உண்டா?ஒரு நாடு கூட இல்லை.//

அப்படியா? ...நான் ஏதோ நம்மளை மாதிரி சில நாடுகள் தான் சுதந்திர தினத்தைக்கூட பயந்து பயந்து கொண்டாடுவதாக நினைத்தேன்.:))
இவையெல்லாம் மாற்றுக்கருத்துக்கள்தான். ஆனால் இதை சொல்பவர்கள் எல்லாம் இந்தியாவை கூறுக்கட்டி விற்பவர்கள் என்று கூறினால் அது மிகப்பெரிய காமெடியாகத்தான் இருக்கும்.

Sunday, August 20, 2006

புலித்தம்பிக்கு அண்ணனின் ஆப்பு

அருமை தம்பி வைகோ கள்ளத்தோணியில் இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்ததால்தான் ராஜீவ் பிரபாகரனை சந்திக்கும் ஒரு புரட்சிகரமான திட்டம் கைவிடப்பட்டது என்று அர்த்தம் தெனிக்கும்படி ஒரு கருத்தை அண்ணன் கலைஞர் நேற்று கூறியிருக்கிறார்.

இதை ஆப்பு என்று எடுத்துக்கொள்வதா அல்லது மெஸேஜ் என்று எடுத்துக் கொள்வதா என்று தெரியவில்லை.வைகோ அடக்கி வாசிக்க வேண்டும் என்று அண்ணன் விரும்புவதாக தெரிகிறது.இலங்கை தமிழர் பிரச்சினை என்பது தமிழக மக்களின் உணர்வு பூர்வமான ஒரு பிரச்சினை என்பது ஒருபுறமிருக்க இதை வைத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கபடி விளையாடுவது என்பது பல காலமாக நடந்து வருவதுதான்.

நேற்று மதிமுகவின் குட்டித்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளை ஆதரித்து துப்பாக்கி தூக்குவேன்,தனிதமிழ்நாடு கேட்போம் என்பதுபோன்ற பேச்சுக்களுக்காக அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் கூறுகிறது.மேலும் கலைஞர் இது தொடர்பாக பிரதமருடன் பேசி வருவதாகவும் என்ன பேசினார் என்று தமிழ் மக்களின் நன்மை கருதி வெளிப்படையாக கூற முடியாது என்று சட்டசபையிலே ஆற்காடு வீராசாமி கூறியிருந்தார்.

அண்ணன் கலைஞர் ஏற்கனவே ஒருமுறை ஆட்சியை இதனால் இழந்தது குறிபபிடத்தக்கது.ஆகவே அண்ணன் இந்த முறை உஷாராக வண்டியை ஓட்ட முடிவு செய்துள்ளார்.தம்பி வைகோவும் அம்மாவின் அணியில் இருப்பதால் அவரும் மிக வெளிப்படையாக எதையும் அம்மாவின் அனுமதியை மீறி பேசிவிடமுடியாது.

சேலத்தில் நடந்த தமிழர் மாநாட்டிலும் குட்டித்தலைகள் பல பிரபாகரனை பகிரங்கமாக ஆதரித்து பேசிய நிலையிலும் மாநாட்டில் பேசிய ராமதாஸ் அடக்கி வாசித்தது குறிப்பிடத்தக்கது. வெற்று பேச்சு கவைக்கு உதவாது என்ற முடிவுக்கு நமது தலைவர்கள் வந்துள்ளது பாராட்டத்தக்கது. அதிகாரம் பறிப்போய்விடும் என்ற பயம் இந்த பக்குவத்தை அவர்களுக்கு கொண்டு வந்திருந்தாலும் நல்லதுதான்.இப்போதைக்கு திருமாவளவன் கொஞ்சம் அதிகமாக பேசிவருகிறார்.ஆனால் அவருக்கு அவர் எல்லை தெரியும்.

இந்த விஷயத்தில் உணர்ச்சி வசப்பட்டு பேசினால் இதை சாக்கிட்டு தமிழ் உணர்வையே கேலி பேசும் சக்திகளின் ஆட்டம் அதிகமாகிவிடும்.ஆனால் மத்திய அரசில் தமக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அதிக சலசலப்பு இல்லாமல் இலங்கை விஷயத்தில் ஒரு நல்ல முடிவு ஏற்பட கலைஞர், ராமதாஸ்,வைகோ ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Thursday, August 17, 2006

ஆகஸ்ட் சிந்தனைகள் by Dummy

சுதந்திர தின உரையை பாரத பிரதமர் குண்டு துளைக்க முடியாத கூண்டுக்குள் இருந்துதான் நிகழ்த்த முடிகிறது. வழக்கம் போல் பாகிஸ்தானுக்கு சவால், ஏழை விவசாய மக்களுக்கு ஆறுதல் என்று அனைத்து மசாலக்களையும் தூவி தயாரிக்கப்பட்ட இந்த உரையில் பெட்ரோலிய பொருள்கள் விலை உயரும் என்று சூசகமாக தெரிவித்தாராம் பிரதமர்.விலைகளை குறைக்க போராடுவோம் என்றுதான் சொல்வது வழக்கம். இப்போது தலைகீழாகி விட்டது. இந்தியா தான் வளருதாமே? கண்டுக்காத மாமே.


இந்த காஷ்மீர் பிரச்சினையில் தைரியமாக முடிவெடுக்கக்கூடிய ஒரு அரசாங்கம் நமக்கு கிடைக்கும் வரை அல்லது பாகிஸ்தான் அழியும்வரை இந்த பிரச்சினையை ஒழிக்கமுடியாது என்று தோன்றுகிறது.

***********

இலங்கை பிரச்சினை சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் கணிசமாக பகுதிகளை தங்கள் கைவசம் விடுதலைபுலிகள் வைத்துக் கொண்டிருப்பதாகவும் அங்கே தனி அரசாங்கமே நடக்கிறது என்றும் மற்ற நாடுகளின் அங்கீகரிப்புதான் இப்போதைக்கு தேவை என்றும் பலரும் கூறுகிறார்கள்.ஆயினும் அவர்களுடன் தொப்புள்கொடி உறவு கொண்டிருக்கும் நம்மில் பலபேர் அவர்களை தீவிரவாதி என்று கூறி நம் நடுநிலைமையை நிலைநாட்டுகிறோம்.

ராஜீவ் காந்தி ஒருவருக்காக ஒரு இனத்தையே அழிய விடமுடியுமா என்று தரண் கேட்கும் கேள்வி ஒதுக்கப்படக்கூடியது அல்ல. ராஜீவ்காந்தி இலங்கை பிரச்சினையை அணுகிய விதம் தவறு என்பது எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று கூறி நடுநிலைமையை நிலைநாட்டும் நாம், அறுபது பச்சிளம் தளிர்களை கொன்ற இலங்கை ராணுவத்தின் அட்டூழியத்தை கண்டிக்காத நாம், எங்கோ அடாவடி பண்ணும் இஸ்ரேலுக்கு தட்டும் ஜால்ராவில் கேட்பவர்கள் காது கிழிகிறது. கண்ராவி.

*****************

துளசியின் இந்த பதிவு இது எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கவில்லை. மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழை நக்கல் அடிக்கிறார்கள் என்று வருத்தப் பட்டிருக்கிறார். அவ்வளவு தூரம் போக தேவையில்லை. நம் ஊரிலேயே தமிழை மட்டம் தட்ட பலர் இருக்கிறார்கள்.

ஜெயராமன் தமிழின் போதாமை என்று கூறி சில கருத்துக்களை அள்ளி விட்டுள்ளார். அதற்கு முன் தமிழில் என்ன இருக்கிறது என்ன இல்லை என்று அறிந்து,தெளிந்து கூறியிருக்கலாம்.இதுபோன்ற கருத்துக்கள் வருவதற்கு காரணமே தமிழ் என்பது ஒரு தனிப்பட்ட, தனித்தியங்கக்கூடிய ஒரு மொழி என்ற கருத்தையே இவரை போன்றோர் ஒத்துக்கொள்ளாததுதான். சம்ஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது தான் தமிழ் என்ற இவர்கள் அடிப்படை கருத்தே இவ்வாறு திரிந்து வருகிறது.

எப்போதும் அமைதியாக இருக்கும் ராகவன், லைட்டாக உணர்ச்சிவசப்பட்டு அதி ராகவன் ஆகிவிட்டார். இராம.கி மற்றும் குமரன் ஆகியோர் அதற்கு சரியான,விளக்கமாக பதிலை தந்துள்ளார்கள்.

ஜெயராமன் ஒரு மொழி அறிஞர் என்று அடையாளம் காணப்படுபவர் அல்ல. ஆகையால் அவருடைய இந்த கருத்திற்கு பின்னால் இருக்கும் அரசியல் கவனிக்கத் தக்கதாகிறது. முக்கியமாக கல்வெட்டு கருப்புவின் பதிவில் கூறிய இந்த வரிகள் சிந்திக்கத்தக்கவை.

"உனக்கு ஆயிரம் மொழிகள் தெரிந்து இருக்கலாம். ஆனால், நீ எந்த மொழியுடன் உன்னை அடையாளப்படுத்திக் கொள்ள(இணைத்துக் கொள்ள) மனதால் விரும்புகிறாய் என்பது முக்கியம்.நீ அதுவாகவே ஆகிறாய்.அதனாலேயே அடையாளம் காணப்படுகிறாய்."


Friday, August 11, 2006

சிங்கார சென்னைக்கு வருகிறேன்

இந்த வருடம் ஜனவரி முதல் வாரத்தில் புத்தக கண்காட்சி மற்றும் ஏ.டி.பி டென்னிசுக்கு வந்தப்பிறகு இப்போது மீண்டும் ஆகஸ்ட் 31ம் தேதி சென்னை வருகிறேன்.ஒரு மூன்று,நான்கு நாள் இருப்பேன் என்று நினைக்கிறேன்.இந்த முறை சென்னை விஜயத்தின் போது நான் சந்திக்க நினைக்கும் நண்பர்கள் லிஸ்ட் பெரிதாக இருக்கிறது. கீழ்க்கண்ட அனைவரையும் சந்திக்க ஆசை.

ரஜினிராம்கி, டோண்டு,ஜோசப், ரோசாவசந்த், குப்புசாமி, பினாத்தல், சந்திப்பு, பாலபாரதி, முத்துகுமரன், ராகவன், தங்கவேல், செல்வகுமார், பொன்ஸ், பூபாலன், லக்கிலுக், இட்லிவடை மற்றும் இதில் கூற மறந்த மற்ற நண்பர்களையும் சந்திக்க ஆசை.ஆர்வம் உள்ள சென்னை நண்பர்கள் எனக்கு ஒரு மெயில் தட்டி விடலாம். முடிந்தால் ஒரு பிளாக்கர் மீட்டிங்கும் நடத்த உத்தேசம்.

************************

முதுகலை படிக்க சென்னையின் மூன்று புகழ்பெற்ற கல்லூரிகளில் முட்டி மோதினேன் என்று கூறியிருந்தேன். எல்லா கல்லூரிகளில் என் மதிப்பெண்களுக்கு சுலபமாக சீட் கிடைக்கும் என்றார்கள்.எனக்கென்னவோ அந்த வயதில் லயோலா,கிறிஸ்டியன் காலேஜ் மேல் அப்படி ஒரு கிரேஸ். அந்த நம்பிக்கையில் தைரியமாக முயற்சி செய்தேன்.

இந்த மூன்று கல்லூரிகளிலும் அவர்கள் வைத்த நுழைவு தேர்வினில் தேறி விட்டேன். உடனே எனக்கு ஒரு நம்பிக்கை வந்துவிட்டது.பிரசிடென்சியில் நேர்முகத்தேர்வு இல்லை. ஆனால் லயோலாவிலும்,கிறிஸ்டியன் கல்லூரியிலும் நேர்முகத்தேர்வு இருந்தது. நன்றாகவே செய்திருந்தேன்.

குறிப்பாக கிறிஸ்டியன் காலேஜ் நேர்முகத்தில் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் சொன்னதால் மிகவும நம்பிக்கையுடன் இருந்தேன். அங்கிருக்கும் டென்னிஸ் கோர்ட்டில் விளையாடுவது போலவும், அங்கு மேய்ந்து திரியும் மான்குட்டிகள்(நிஜ மான்குட்டிகள் தாங்க)உடன் விளையாடுவது போலவும் கனவுகள் காண ஆரம்பித்தேன்.

ஆனால் விதி சதி செய்தது.தேர்வு பட்டியலில் என் பெயர் இல்லை.ஓபன் மற்றும் பி.சி என்று அனைத்து சீட்டுக்களையும் பெண்களே கைப்பற்றினர். போனால் போகிறதென்று எஸ.சி கோட்டாவில் ஆண்குலம் சிலரின் பெயர் இருந்தது.பட்டியலை பார்த்து துள்ளி குதித்த ஒரு ஜீன்ஸ் போட்ட ஒரு இளங்கன்னியை கேட்டே விட்டேன்.

எச்சூஸ் மீ, உங்க பர்சன்டேஜ் என்ன?

புழுவை போல் என்னை பார்த்த அந்த அழகிய இளம்பெண் சொன்னாள்.

"நைன்ட்டி ஓன்"

அதற்குப்பிறகு அங்கு எனக்கு என்ன வேலை? திரும்பி வரும்போது என் மாமன் சொன்னான்.

"டேய், இப்படி ஒரு ஃபிகர் கூட நீ படிக்கிறது ஆண்டவனுக்கே பொறுக்கலைடா"

சில நாட்கள் கழித்துத்தான் சென்னையில் உள்ள சில பெண்கள் கல்லூரிகளில் இன்டர்னல் மார்க் என்பது ஐம்பது சதவீதம் என்பதால் தொண்ணூறு சதவீதம் என்பது சாதாரணம் என்று தெரியவந்தது.

ஆனால் என் நண்பன் ஒருவன் எம்.பி.சி கோட்டாவில் கெமிஸ்ட்ரியில் நுழைந்து விட்டான்.நானும் அப்போதெல்லாம்(ஹிஹி..இப்போதும்தான்) பட்லர் ஆங்கிலம்தான் என்றாலும் ஒரு டவுனில்தான் வளர்ந்தேன்.அவனோ பிராப்பர் கிராமத்தான். அவனால் ஆறு மாதத்திற்கு மேல் அங்கு படிக்க முடியவில்லை. இடையில் படிப்பை விட்டுவிட்டான்.காரணம் அதேதான். அந்த மெட்ரோபாலிடன் சூழ்நிலையில் அவனால் சர்வைவ் செய்யமுடியவில்லை.

Wednesday, August 09, 2006

எழுத்துலக பயணமும் சென்னை பயணமும் - 1

என் வலைப்பதிவுலக வாழ்க்கையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகிறது(ஓவர் பில்ட் அப்பாக இருக்கிறதா:) என்று நினைக்கிறேன். தொடர்ந்து பதிவுகள் எழுதுவதினால் என்ன பலன் என்று யோசிக்க ஆரம்பித்தால் அது இரண்டாம் கட்டம்தானே?

மிகுந்த ஆர்வமாகவும் தொடர்ந்தும் வலையுலகில் இயங்குவதன் தொடர்ச்சி என்ன?பலன் என்ன? கண்டிப்பாக வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் வலைப்பதிவில் இயங்கக்கூடாது என்றுதான் நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

இந்த யோசனை வருவதற்கு காரணம் என்ன? இணையத்தில் தமிழை கண்ட ஆர்வத்தில் எழுதி,சலித்து போய் தமிழின், எழுத்தின் மீதான கவர்ச்சி குறைந்து விட்டதா என்ற யோசனை ஒரு பக்கம், சமூகத்தின் மீது வெறும் விமர்சனங்களை மட்டும் வைத்து என்ன ஆகப்போகிறது என்ற நினைப்பு மறு பக்கம்,நடைமுறை ரீதியாக விஷயங்களை பார்க்கமறுத்து எதிர்மறை விமர்சனம் மட்டுமே செய்யும் அரைகுறைகளினால் ஏற்படும் சலிப்பு இன்னொரு பக்கம் என்று பல யோசனைகள். சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தால் இவை எவையுமே காரணம் இல்லை என்பது புலப்படுகிறது.

ஆனால் தொடர்ந்து வலையுலகில் ஆர்வமாக இயங்குவதின் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன என்று பார்த்தால் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்துள்ளதை உணர முடிகிறது.பேசி பேசி முனை மழுங்கி போன விஷயங்களை மீண்டும் மீண்டும் எதிர்க்கொள்வதில் உள்ள சங்கடங்கள் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் இவையெல்லாம் பிரச்சினைகளாக தோன்றவில்லை.ஆனால் போக போக இந்த வகையிலான பிரச்சினைகள் அதிகமாக தெரிகின்றன.

தளங்களின் வேறுபாடுகளினால் வரும் சிக்கல்கள் தான் சிக்கல்களில் தலையாய பிரச்சினை. சமூகத்தின் பொதுபுத்தி சார்ந்த கருத்துக்களுக்கு புனிதபிம்ப முலாம் பூசப்படுவதால் சோர்வு தட்டுகிறது பல நேரம்.இந்த சிக்கல்களைப்பற்றி யோசித்து பார்த்தால் இவைகளின் தீர்வும் இந்த பிரச்சினைகளிலேயே உள்ளன என்பதையும் உணரமுடிகிறது.

நம் எழுத்தை பட்டை தீட்டிக்கொள்ள ஒரு களன் என்பதும் நாம் நினைக்கும் கருத்துக்கள் பெரும்பாலானவர்களை நாம் நினைக்கும் விதத்தில் சென்று சேருகிறதா என்பதை சோதிக்கும் தளமாகவும் வலைப்பதிவுகள் இருக்கின்றன என்பது நல்ல விஷயமே.

இதையும் மீறி மிகப்பெரிய நன்மையாக நான் நினைப்பது வலைப்பதிவுகளின் மூலம் பெற்ற நண்பர்கள்தான்.நிறைய நண்பர்களை நான் வலைப்பதிவுகள் மூலம் பெற்றிருக்கிறேன். தொடர்ந்து ஒருவரை படிப்பதன் மூலம் எழுதுபவரின் மனதையும் மனம் இயங்கும் விதத்தையும் புரிந்துக் கொள்ளமுடிகிறது. ஒருவரிடம் பழகி அவர்களை புரிந்துகொள்வதற்கு எந்த விதத்திலும் குறைவில்லாத புரிதலை அவர்களை படித்து புரிந்துக்கொள்வது தருகிறது என்றுதான் நினைக்கிறேன்.(சிலர் விஷயங்களி்ல இதில் தவறுகள் நேரலாம்).ஆனால் பெரும்பாலும் இது சரிதான்.

இவ்விதம் நெருக்கமாக நான் உணரும் பல நண்பர்களை நான் இன்றுவரை நேரில் சந்தித்ததே இல்லை என்பதுதான் இதில் ஆச்சரியமானது. பொதுவாகவே ஒரு முறை பேசினாலே ரொம்ப நெருங்கி பழகும் தன்மை என்னுடையது.(இது பலவீனமா என்று எனக்கு தெரியவில்லை).நண்பர்கள் தினத்திற்கு எழுத வேண்டிய கட்டுரையை காலம் தாழ்த்தி எழுதுகிறேனோ?

************************

சென்னை என் மனதில் எப்போதும் ஒரு சிறப்பான, கவர்ச்சிகரமான இடத்தை பிடித்துள்ளது. இத்தனைக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய முறை தான் நான் சென்னைக்கு வந்திருப்பேன்.முதன்முதலாக எப்போது சென்னைக்கு வந்தேன் என்று இன்று நினைத்துப்பார்க்கிறேன். நினைவு தெரியாத ஐந்து வயது பருவத்தை எல்லாம் தாண்டி யோசித்து பார்க்கையில் பட்டபடிப்பு முடித்தப்பின் முதுகலை(பிஸிக்ஸ்) சேருவதற்காக லயோலா, பிரசிடென்சி, கிறிஸ்டியன் காலேஜ் ஆகிய மூன்று கல்லூரிகளிலும் சேர கடும் முயற்சி செய்த காலத்தில்தான் முதன்முதலாக சென்னை வந்தேன். எந்த கல்லூரியிலும் கிடைக்கவில்லை. கோவை பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்தவுடன் பிரசிடென்சியில் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்து கிடைத்தது. போகும் சூழ்நிலை இல்லை. பல மாதங்கள் எதையோ இழந்ததாக வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தேன்.

அந்த காலக்கட்டத்தில் சென்னை போகும்போதெல்லாம் என் உறவினர் பையன்(அப்போது சி.ஏ படித்துக்கொண்டு இருந்தான். இன்னமும் படிக்கிறான்). அவன் ரூமில் தங்குவேன். திருவல்லிக்கேணி வெங்கடேஸ்வரா ஹாஸ்டல் என்று நினைக்கிறேன். அதைப்பற்றியும் சென்னைப்பற்றி என் மற்ற நினைவுகள் பற்றியும் அடுத்த பாகத்தில் தொடர்கிறேனே.

Sunday, August 06, 2006

வள்ளுவர் கோட்டத்தை காக்கவேண்டும்

ஏ.டி.பி டென்னிஸ் போட்டிகளை காணச்சென்ற நான் ஞாயிறன்று இரண்டு மணிநேரம் அருகில் இருந்த வள்ளுவர் கோட்டத்தில் கழிக்க வேண்டியது ஆயிற்று. வள்ளுவம் எங்கள் உயிர்மூச்சு. திருக்குறள் எமது மறை என்றெல்லாம் பிதற்றும் தமிழர்கள் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய இடம் வள்ளுவர் கோட்டம்.ஒரு காலத்தில் உள் நுழைய கட்டணம் வசூலிக்கப்பட்டுக்கொண்டு இருந்ததாம்.இப்போது இல்லை. முன்பகுதியில் சிறிய கார்டன். இந்தியன் வங்கி புண்ணியத்தில் நன்றாகவே மெயின்டெய்ன் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் மெயின் கட்டிடம் பெயிண்ட் செய்து எவ்வளவு வருடங்கள் ஆயிற்றோ தெரியவில்லை. அழுது வடிகிறது. உள்ளே ஹாலில் சர்வோதய சங்க கண்காட்சி நடைப்பெற்று கொண்டிருந்தது. அதையும் சகித்துக் கொள்வதில் நமக்கு பிரச்சினை எதுவுமில்லை.ஆனால் முக்கிய பகுதி மாடி வராண்டா.இங்குதான் அனைத்து குறள்களையும் அதிகாரங்களாக பிரித்து ஒவ்வொரு தூணில் பொறித்து படங்களுடன் வைத்துள்ளார்கள். இந்த பகுதியை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. சுத்தம் செய்து பல நூற்றாண்டுகள் உருண்டோடி இருக்கும் போல ஒரு தோற்றம். வெற்றிலை எச்சில். காகித குப்பைகள். காண்டம் ஒன்றுதான் இல்லை. பெயிண்ட் செய்து பல நாட்கள் ஆகியிருக்கும்.சுவர்களில் இருக்கும் படங்கள் துடைக்கப் படுவதில்லை. பாத்ரூம், டாய்லட் என்றெல்லாம் கூறப்படுகின்ற ஒரு பகுதியும் உள்ளே உள்ளது. தயவு செய்து யாரும் உள்ளே நுழைந்து விடாதீர்கள்.
சுத்தப்படுத்தபடுவதும் இல்லை. தண்ணீரும் இல்லை. மூச்சு திணறி விடும்.

வள்ளுவர் கோட்டத்தின் பின்புறம் பராமரிக்கப்படாமல் ஒரு பகுதி உள்ளது. அதில் ஒரு சிறிய தண்ணீர் தொட்டி கழுவப்படாமல் இருக்கிறது.அந்த பக்கமும் போக முடியவில்லை.யாராவது வெளிநாட்டுக்காரன் நாம் திருக்குறள் பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் பினாத்திக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு, என்னே தமிழர் தமிழ் பற்று! வள்ளுவர் பற்று! ஆக நாம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடம் வள்ளுவர் கோட்டம்தான் என்று நினைத்து வந்து பார்த்தால் நம் மானம் என்ன ஆவது?

சுத்தமாக மெயின்டெய்ன் பண்ணலாம்.அனைத்து குறள்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைக்கலாம். ஒரு சிறிய நூலகம் அமைத்து அனைத்து திருக்குறள் உரைகளையும் வாங்கி போடலாம். எவ்வளவோ செய்யலாம். பணம் பிரச்சினை என்றால் வசூல் செய்தால்கூட தமிழர்கள் கொடுப்பார்களே.மாற்று கட்சி அரசு வள்ளுவர் கோட்டத்தை அமைத்தது தான் பிரச்சினை என்றால் மாற்றுக்கட்சி அரசாங்கம் அமைத்த அனைத்து ரோடு, பாலம் அனைத்தையும் அரசாங்கம் இடிக்க முன்வருமா?

இல்லை செய்யமுடியாது என்றால் இந்த வள்ளுவர் கொட்டத்தை (இதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) இடித்து விடுங்கள் அய்யா. தமிழனின் மானமும் திருக்குறளின் மானமும் இப்படி காற்றில் பறக்கவேண்டாம்.அந்த இடத்தில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டிக் கொள்ளலாம். வருமானமாவது வரும்.

***********
மேற்கண்ட இந்த பதிவு ஆறு மாதங்களுக்கு முன்பு நான் எழுதியது.இன்று ஆட்சி மாறியிருக்கும் சூழலில் ,கண்ணகிக்காக வாளை சுழற்றிய கலைஞர் இதற்கும் ஆவண செய்வாரா?