Thursday, July 12, 2007

நடுநிலைவாதியாக நாலு யோசனைகள்

ஏற்கனவே புனித பிம்பங்கள் என்றால் என்ன என்பதைப்பற்றி இரண்டு பாகங்களில் எழுதியுள்ளேன். வலைப்பதிவிற்கு புதிதாக வந்துள்ளவர்கள் அதை படித்து அப்டேட் ஆகலாம்.இந்த பாகத்தில் நாம் பார்க்க இருப்பது நடுநிலைவாதி ஆவது எப்படி என்பதை பற்றியது.

நடுநிலைமை என்றால் என்ன? நடுநிலைவாதியாக ஏன் ஆகவேண்டும்? என்ற சிக்கலான கேள்விகளுக்கு என்னிடம் பதிலை எதிர்ப்பார்க்க வேண்டாம்.பதில் எனக்கு தெரியாது. ஆனால் தெரிந்தவர்கள் சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்.

1. பொதுவாக சர்ச்சைகளின் அடிப்படையில் தான் கருத்துக்கள் பிற்ககின்றன. லேட்டஸ்ட் சர்ச்சை உதாரணம். அப்துல்கலாம் மீண்டும் வரலாமா? என்ற பிரச்சினை. எப்போதும் இருக்கும் பிரச்சினை திமுக,பா.ம.க பிரச்சினைகள். சரியா? விஷயத்திற்கு வருவோம்.

நடுநிலைவாதியாக விரும்புபவர்கள் சர்ச்சைகள் உருவாகும் போதே கருத்து சொல்லி மாட்டிக் கொள்ளக் கூடாது. ஒரு மூன்று நான்கு நாட்கள் அனைத்து பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்து அனலைஸ் செய்யவேண்டும். கடைசியில் யார் கை ஓங்குகிறது என்பதை பார்த்து அவருக்கு ஆதரவாக பதிவோ பின்னூட்டமோ இடலாம்.பெரும்பான்மையை ஆதரிப்பதால் வரும் நல்ல பெயர் உங்களுக்கு இங்கே கிடைக்கும்.

2. அப்படியே ஆதரவை கொடுத்தாலும் முழுமையான ஆதரவை தந்துவிடக் கூடாது. அப்படி கொடுத்தால் நீங்கள் நடுநிலையாளர் என்ற அந்தஸ்த்தை இழக்கிறீர்கள்.ஆனால் என்ற வார்த்தையை போட்டு ஒரு மொக்கை கருத்து சொல்லவேண்டும். உதாரணமாக சதாம் விவகாரத்தி்ல் புஷ் செய்வது தவறு என்று யாராவது பதிவு போட்டால் ஆமாம் புஷ் அயோக்கியன் தான் என்று சொல்லும் அதே நேரம் சதாமும் கொல்லப்பட வேண்டியவன் தான் என்று ஒரு பிட்டை கடைசி வாக்கியமாக சேர்க்கலாம். இதில் என்ன லாபம் என்றால் புஷ் எதிர்ப்பாளர்களை சந்தோஷப்படுத்தும் அதே நேரம் கடைசி வாக்கியத்தின் மூலம் புஷ் ஆதரவாளர்களையும் ஆறுதல் படுத்துகிறீர்கள்.

3.தீவிரமாக யாராவது கருத்து சொல்லி இருந்தால் அவரிடம் சென்று "அய்யோ சுப்ரமணி, நீங்களா இப்படி? " என்றெல்லாம் ஃபீல் செய்து அவர்கள் கருத்தை மாற்ற முயற்சி எடுக்கவேண்டும். இதை எமோசனல் பிரசர் டேக்டிக்ஸ் எனலாம். சம்பந்தப்பட்ட நபர் உண்மையிலேயே தாம் ஏதோ தவறாக சொல்லிவிட்டோமே என்று குழம்பி மந்தையில் ஒன்றாக இருப்பதே நல்லது என்ற முடிவுக்கே வந்துவிடுவார். இவ்வாறு மந்தையில் ஆடுகளை சேர்ப்பதும் நடுநிலையாளர்களின் பணிதான்.

4.முக்கியமாக அடிப்படை விஷயங்களில் உங்கள் கருத்தை யாராவது மடக்கி மடக்கி கேள்வி கேட்டாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டும். அப்படியும் சில பிரகஸ்பதிகள் தனிமடல் அனுப்பி இம்சை செய்வார்கள்.அது போன்ற சூழ்நிலையில் இதுபோன்ற விஷயங்களில் நான் பொதுவாக கருத்து சொல்வதில்லை என்று கூறிவிடவேண்டும். அடிப்படையான சில விஷயங்களில் உங்கள் கருத்து என்ன என்றே யாருக்கும் தெரியாமல் இருக்கும்வரை நீங்கள் கூட்டம் சேரும் இடங்களில் கோவிந்தா போட்டு உங்கள் நடுநிலைமையை நிலைநாட்டிக்கொண்டே இருக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு

http://muthuvintamil.blogspot.com/2006/04/1_19.html

http://muthuvintamil.blogspot.com/2006/04/2_20.html


( இது பழைய பதிவு ட்ராப்ஃடில் இருந்தது)

Sunday, July 01, 2007

சிபிஐ எங்கே? தேடச்சொல்லு கொஞ்சம்

கடந்த வாரம் என்னை தேடி நிஜமாகவே வீட்டுக்கு வந்துவிட்டது சி.பி.ஐ . அலுவலகத்தில் வந்து என்னை சந்திக்க வேண்டும் என்று ஒருவர் தகவல் தந்து சென்றார். சரியான நேரத்திற்கு சிபிஐ அலுவலகம் சென்றேன்.சுத்தமாக ஷேவ் செய்து மிடுக்காக உடையணிந்திருந்த அந்த அதிகாரி என்னுடன் சில முக்கிய தகவல்களை பற்றி விசாரிக்க வேண்டும் என்றார்.

"சி.பி.ஐ அதிகாரி என்னிடம் பேச என்ன இருக்கிறது", என்றேன் நான்.

"மிஸ்டர், அது எங்கள் உரிமை", என்றார் அவர்.அடங்கிப்போனேன் நான்.
அவர் கேட்ட அனைத்து தகவல்களையும் பொறுமையாக விளக்கினேன்.அதிலிருந்து சில விவரங்கள்.

"நீங்கள் எல்.டி.டி.ஈ க்கு சப்போர்ட் செய்கிறீர்களாமே"

"என்ன ஆதாரம் சார்?" என்றேன் நான்.

"உங்கள் இணையப்பக்கத்தில் எழுதியுள்ளீர்களாமே"

"எனக்கு ஞாபகம் இல்லை சார், ஆனால் வைகோ மேல் ஒரு பொடா கேஸ் இருந்து தள்ளுபடியானதே.அதுல என்ன காரணம் சொல்லி தள்ளுபடி செஞ்சாங்கன்னு உங்களுக்கு தெரியுமா சார்?" என்றேன் நான்.

"நக்சலைட்டுகள்....."

"யாராவது அப்படி தெரிந்தால் சொல்லுங்க சார் நானும அவங்கள பார்த்து சிலது கேட்கணும்"

"என்ன"

"ஏய்யா வன்முறையை கையில் எடுத்து வாழ்க்கையை பாழடிச்சுக்கறீங்க. புள்ளை குட்டிய ஒழுங்கா படிக்க வையுங்கடான்னு சொல்லலாம்னு தான் சார்"

"....."

"இந்த தகவல் எனக்கு முன்னமே வந்துடுச்சு சார்" என்றேன் நான்.

"அப்படியா" என்றார் அவர்.

"அனானி மிரட்டல் பின்னூட்டம் வந்துச்சு சார்" என்றேன்.

பிறகு அந்த அனானி காமெண்ட்டின் ஐ.பி அட்ரஸ், அதன்மூலம் நான் கண்டுபிடித்த ஆள் அட்ரஸ், நான் சந்தேகப்படும் நபரின் பெயர் ஆகியவற்றை கொடுத்தேன். மேலும் நான் மட்டுறுத்தி வைத்திருக்கும் நானூற்றி சொச்சம் காமெண்டுகள்,அதன் ஐபி சமாச்சாரங்கள் ஆகியவற்றையும் வாங்கிக்கொண்டார்.

என்னய்யா ஒரு பேரலல் அண்டர்கிரவுண்ட் உலகமே இருக்கு இங்கே என்று அங்கலாய்த்துக் கொண்டே தகவல்களை வாங்கிக்கொண்டார்.

"சிபிஐ சட்டத்தின்படி பொய் குற்றச்சாட்டு சொன்னால் என்ன பண்ணுவாங்க சார்? என்றேன்.

"சுளுக்குதான்", என்றார்.

"சார், எல்லாம் படிச்சவங்க. சாப்ட்வேர் ஆளுங்க ஏதோ தெரியாம இப்படி பண்ணீட்டாங்க", என்றேன் நான்.

"அதை நீ சொல்லாதே..உனக்கு ஒரு பொட்டைப்பய இந்த மாதிரி பேடித்தனமா மிரட்டல் விடுறான்னு ஏன் நீங்க புகார் பண்ணலை?", என்றார்.

பாய்ந்து எழுந்து அவர் வாயை பொத்தினேன்.

"சார் நாகரீகமா பேசுங்க, இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் கோபமா கூட நீங்கள் உபயோகப்படுத்துவது எங்கள் வலையுலக சட்டத்தின்படி தவறு",என்றேன் காட்டமாக.

"அடப்பாவி இவ்ளொ நல்லவனாடா நீ? என்ன பண்றது? ஏகப்பட்ட கேஸ். இதுக்கு நடுவுல இந்த மாதிரி அரைகிறுக்கன்களாள இம்சை. எங்களுக்கும் டென்சன் இருக்கும்தானே?"

டென்சன் ஆவாதீங்க சார் என்ற நான் அருகிலிருந்த தண்ணீர் ஜாடியை அவர் அருகில் தள்ளி வைத்தேன்.மடக் மடக் என்று ஒரே மூச்சில் தண்ணீரை காலி செய்தார்.

உண்மைத்தமிழன் சமாச்சாரம், தோழி ஒருவருடைய பிரச்சினை, ஐதராபாத் நண்பர் ஒருவரால் வந்த பிரச்சினை, சுகுணாதிவாகரின் பிரச்சினை, டோண்டு சாரின் பிரச்சினை என்றெல்லாம் நான் ஆரம்பிக்க

"த்ரோ ஹிம் அவுட்" என்றார் அவர்.

சட்டென்று விழித்துக்கொண்டேன் நான்.

கலைஞர் பதவி விலகலாம்

மதுரை மேற்கு தொகுதியில் ஆளுங்கூட்டணி முப்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. பலவீனமான கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். அழகிரி தேர்தல் பணி திறமைக்கு கிடைத்த வெற்றி என்கிறார்கள் திமுகவினர். பணபலம் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

அந்த தொகுதியுடன் எனக்கும் ஒரு உறவு உள்ளதால் நான் விசாரித்தவரை பணப்பட்டுவாடா நடந்தது என்றுதான் கூறுகிறார்கள்.ஆயிரத்து ஐந்நூறு ரூபாயை அதிகாலை நான்கு மணிக்கு வீடுவீடாக வந்து கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது வெற்றி பெற்ற கூட்டணி பற்றிய தகவல். இரண்டு பெரிய கூட்டணிகளும் பணம் கொடுத்ததாக தெரிகிறது. அதிக பணம் செலவழித்த ஆளுங்கட்சி கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது. இந்த ட்ரெண்ட் நீடித்தால் இனி இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி கூட்டணி என்பது தோற்கவே தோற்காது.

"தமிழனோட உலகப்புகழ் வாய்ந்த மனசாட்சி இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் ஸ்ராங்கா இருக்கிறதென்று தான் சொல்லவேண்டும் .கைநீட்டீ காசை வாங்கிட்டா சரியா குத்திடறான்.பண விஷயத்தில் துரோகம் செய்ய தமிழன் நினைக்கறதேயில்லை(?)."

விஜயகாந்த் கூறியதுபோல பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டை எனக்கு போடுங்க என்ற வாதத்தை மதுரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. விஜயகாந்த் மனைவியும் ஆரததி எடுத்த மக்களுக்கு நூறு நூறாகவும் ஐநூறாகவும் பணம் கொடுத்த புகைப்படங்கள் நக்கீரனில் பார்த்த ஞாபகம் உள்ளது. (இது விஜயகாந்த் ரசிகர்களுக்கான தகவல்). கவலைப்படாதீங்க கேப்டன்.நடத்துங்க.நீங்கள் மட்டும் இளிச்சவாயனா?

அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக சொல்வாக்கை இழந்துவருகிறது அது தே.மு.தி.கவிற்கு பலமாக சேருகிறது என்பதும் உண்மைதான். அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் தேமுதிகவும் கூட்டணி சேரும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை உருவானால் டாக்டர் அய்யா என்ன செய்வார் என்பது ரொம்பவே சுவாரஸ்யமான விஷயம்தான்.
இந்த இடைதேர்தலின்போது வெளியான ஒரு வதந்தியின்படி ஆளுங்கட்சி கூட்டணி 1500 ரூபாயை முப்பத்திரண்டாயிரம் வீடுகளுக்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. (1500*32000=48000000).கணக்கு சரியா. இந்த பணத்தை வெற்றி பெற்ற வேட்பாளர் எப்படி எடுப்பார்? இவர் ஊழல் செய்தால் அதை இந்த மக்கள் தட்டி கேட்க முடியுமா?

அது ஒருபுறம் இருக்க, கலைஞர் பதவி விலக இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன். ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர் என்று ஏறக்குறைய எல்லாரும் ஏற்றுக்கொண்டாயிற்று. (கட்சியில்தான்). இன்னும் சில ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் நிலையில் இப்போதே ஸ்டாலினை அந்த பதவியில் அமர வைப்பது அவருடைய நிர்வாகத் திறமையை அளந்து பார்க்க உதவும்.உடனடியாக வாரிசு அரசியல் என்ற கோஷம் பலமாக எழும். அடுத்த தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு இது சலித்துபோய்விடும்.

கலைஞர் பால்தாக்கரே கணக்காக கருத்து கந்தசாமியாக மாறி சன் டிவி செய்திகளில் கருத்து சொல்லிக்கொண்டு நிம்மதியாக ஓய்வெடுக்கலாம். கலைஞருக்கு மிகவும் வயதாகிவிட்டது என்று அவ்வபோது வரும் தகவல்கள் உறுதி செய்கின்றன. டெல்லியில் ஜெயா டிவி நிருபரை தரக்குறைவாக பேசியதாக வந்த தகவல் கலைஞர் தடுமாறுகிறார் என்பதையே காட்டுகிறது.

கட்டாய தலைக்கவச விவகாரத்தில் சொதப்பியது ரொம்பவே தவறானது. பல மாநிலங்களில் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனததில் பின்னால் அமர்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று முதலில் கூறிவிட்டு பின்னர் வண்டியை இயக்குபவர் மட்டும் அணிந்தால் போதும் என்றுதான் பல மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கும் அதையே செய்திருக்கலாம். குழந்தைகளும் அணியவேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டு தீடிரென்று இவர் போலீசார் மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றெல்லாம் மக்களிடம் அக்கறை காட்டும் மூதறிஞராக மாறி சொல்லப்போக, இப்போது சென்னையில் கூட ஒரு பயல் தலைக்கவசம் அணிவதில்லை.

ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் அறிவித்து பல நாட்களாகிறது. ஒரு ஆட்டோ கூட மீட்டர் போட்டு இயக்குவதில்லை. சென்னையில் திமுக செல்வாக்கை இழந்துவிட்டது என்று பேச்சு இருக்கிறது. இழந்த செல்வாக்கை சுலபமாக மீட்கலாம் கலைஞர் அவர்களே.ஆட்டோகாரர்களை மீட்டர் போட்டு ஓட்ட வையுங்க அது போதும் :))