சென்னை மீதான என் காதலைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். சென்னையில் குடியேற ஒரு துவக்கம் ஏற்படுத்தும் முகமாக வலையுலக நண்பர்கள் ஏழெட்டு பேர் உள்பட பல நண்பர்கள் மூலமாக மென்பொருள் துறை வேலைவாய்ப்புகளை பற்றி விசாரித்து கொண்டிருந்தேன். ஒரு சனி,ஞாயிறு அன்று "உள்நடக்கும்" (வாக்-இன் இண்டர்வ்யூக்கு அதுதானே தமிழ்) நேர்முகத்தேர்வு ஏதாவது இருந்தால் பங்கு பெறலாம் என்ற எண்ணத்தில்தான் ஆகஸ்ட் பயணத்தை முடிவு செய்திருந்தேன்.அது ஒரு அசட்டு முயற்சியாகத்தான் முடிந்திருக்கும் என்பது இப்போதுதான் தெரிகிறது.
அந்த குறிப்பிட்ட சீசனில் பலரும் வலைப்பதிவில் வேலைவாய்ப்பு செய்திகளை கொடுத்து கொண்டிருந்தனர். ஒரு கலவரம், கொலைவெறி சமாச்சாரமாக நண்பர் செந்தழல் ரவியுடன் மொபைலில் பேசிக்கொண்டிருந்த போது என் சென்னை பயணத்தின் நோக்கத்தை சொன்னேன். புரொபைல் அனுப்புங்க என்பதோடு முடித்துக்கொண்டு அனானி பின்னூட்டம் இட சென்றுவிட்டார்.
ஒரிரு வாரம் கழிந்திருக்கும். ரவி ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதிர்ஷ்வசமாக ஒரு நல்ல கம்பெனியில் ஆட்கள் தேவைப்படுவதாகவும் நான் அனுப்பிய புரொபைலை தான் முன்மொழிவதாகவும் கூறினார்.நேர்முகத்தேர்வு நன்றாக செய்தால் வாய்ப்பு இருப்பதாக கூறினார்.அதற்குப்பிறகு நடந்தது எல்லாம் மாயம்தான். ரவி தன் அனுபவத்தை வைத்து சில உபயோகமான டிப்ஸ்களையும் கொடுத்தார்.சில நாட்களில் தொலைபேசி வாயிலாக நேர்முகத்தேர்வு நடந்தது. காரியமும் ஜெயமானது.
இந்த மிகப்பெரிய உதவியை செய்த செந்தழல் ரவியை இன்று வரை நான் நேரில் பார்த்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் பல நண்பர்களை நேரில் பார்க்காமலே ஆண்டாண்டு காலம் பழகிய உணர்வை தருவது இணையத்தின் சிறப்புதான். எனக்காக முயற்சிகளை எடுத்துக்கொண்ட அனைத்து நண்பர்களுக்கும்(செந்தழலாருக்கு ஸ்பெஷல் என்பதை சொல்லவும் வேண்டுமா) என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னையில் ஒருநாள் ரவியின் சகோதரரை சந்திக்க நான்,லக்கி,வரவணையான் ஆகியோர் சென்றிருந்தோம்.அன்று தான் வலையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட திராவிட ஃபிகர் பைக்கில் கடத்தப்பட்ட சம்பவம் நடந்தது. வேளச்சேரி ரோட்டில் கால் டாக்சியை அழைத்துவிட்டு காத்திருந்த நேரத்தில் நாங்கள் வெட்டி ஞாயம் பேசிக்கொண்டு இருந்தோம்.
சென்னை மென்பொருள் துறையில் மிகுந்த முன்னேற்றம் அடைந்துவிட்டது. கால்சென்டர்கள் ஏராளமாக வந்துவிட்டது என்றேன் நான். ஆனால் பப் கலாச்சாரம், பார்ட்டி கலாச்சாரம் என்று நாட்டின் கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று அங்கலாய்த்துக்கொண்டார் லக்கி.அப்போது ஒரு மாநிறமான பெண்ணை ( ஜீன்ஸ்,டீசர்ட் அணிந்திருந்தார்) பைக்கில் அமர்த்திக்கொண்டு ஒரு சிவப்பான இளைஞன் எங்களை கடக்க ஜாலிக்காக "திராவிட ஃபிகரை தள்ளிகிட்டு போறான்யா" என்றேன் நான். திராவிட இயக்கத்தின் உண்மை வாரிசான லக்கியாருக்கு நரம்புகள் துடித்தன.கழுத்தில் இருந்து ஒரு நரம்பு அப்படியே ரட்சகன் ஸ்டைலில் துடித்து மேலேறியது.அவர் பாய்ந்து செல்வதற்கு முன் ஒரு வெளிநாட்டு கார் வந்து எங்கள் அருகில் நின்றது.அதிலிருந்து ஒரு அழகிய ஆன்ட்டி ஏதோ அட்ரஸ் கேட்க லக்கி சிறிதே குளிர்ந்தார். காரில் ஏறி சென்றுவிடுவாரோ என்று நாங்கள் பயந்திருக்க நல்லவேளை லக்கி அவ்வாறெல்லாம் செய்யவில்லை.
அதற்கு முன்னர் ரவியின் சகோதரரை சந்தித்தோம். அவருடன் சென்று சிஃபி ஹைவேயில் இணையத்தில் சில மெயில்கள் அனுப்ப சென்றிருந்தோம். நான் அவருடன் பேசிக்கொண்டிருக்க வரவணையானும்,லக்கியும் ஒரு மெஷனில் அமர்ந்து இலங்கை பிரச்சினையில் மயிர் பிளக்கும் வாதம் செய்துக்கொண்டிருந்தனர். யாழ் களத்தை ஓப்பன் பண்ணு, பொங்குதமிழை திற, திரிகோணமலை,வன்னி,சந்திரிகா என்று இவர்கள் பேசுவதை பார்த்த ரவியின் அண்ணன் தியாகு இவர்கள் தற்கொலை படை தீவிரவாதிகளோ என்று சிறிது ஆடிப்போனார். நீங்களெல்லாம் ரவிக்கு எப்படி தெரியும் என்று மட்டும் ஒரு வார்த்தை என்னிடம் கேட்டார்.
இலங்கை பிரச்சினையில் பிரபாகரனுக்கே தெரியாத சில உண்மைகளை வரவணையான் பகிர்ந்துகொள்ள லக்கி பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து வைகோவை துவைத்து காயப்போட்டு கொண்டிருந்தனர். ஓரளவு எங்களைப்பற்றிய ஒரு முடிவுக்கு ரவியின் அண்ணன் வ்நதிருப்பார் என்று எனக்கு தோன்றியது. எங்கள் வேலை முடிந்ததும் சாப்பிடபோகலாம் என்று நாங்கள் அழைக்க எங்களுடன் இருந்தால் புலிகள்,நக்சலைட் சம்பந்தப்பட்ட பிரச்சினை வரும் என்று அஞ்சி உஷாராக நழுவினார் அவர்.ரவிக்கு மண்டகப்படி கிடைத்ததாக கடைசி தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக வரவணையான் பதிவில் குறிப்பிட்ட எக்மோர் பாரில் குறிப்பிடும்படி எந்த விஷயத்தையும் நாங்கள் பேசவில்லை. வரவணையான் கூறியபடி பொதுவான சில விஷயங்களைத்தான் பேசிக்கொண்டிருந்தோம். வலைப்பதிவர் சீனு என் நெருங்கிய நண்பனுக்கு நண்பர் என்று தெரியவந்தது. சில பழைய செய்திகளை பகிர்ந்துகொண்டோம்.மற்றபடி இரவு பாட்டில் சந்திப்புகள் நடத்த சென்னை பார்கள் உகந்த இடம் அல்ல என்று தெரிந்துக்கொண்டேன்.