Monday, October 30, 2006

கிரிக்கெட்டில் ஆப்பு

மக்களே, நான் இந்த மேட்ச் கழுதையெல்லாம் முழுசா உட்கார்ந்து பாக்கறதில்லை. நானெல்லாம் எப்பவும் இந்த பாவத்துக்கு ஆளாகவே மாட்டேன்.வேற வழியில்லாம சில நேரம் ஹிஹி...


மொகாலியில் மேட்ச்.சாதாரணமாகவே அது வேகபந்துக்கு சாதகமான பிட்ச். இந்த தொடரின் பெரும்பாலான ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது என்ற போதே எனக்கு தெரிந்துவிட்டது நமக்கு ஆப்பு தான் என்று.


ஆசிய அணிகள் எதுவும் அரைஇறுதிக்கு தகுதி பெறவில்லை என்பது தற்செயலா? இல்லை.மற்ற அணிகள் ஆடுகளத்திற்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ள சிறிது அவகாசமே எடுத்துக்கொள்கின்றன.நம் ஆட்களுக்கு அதெல்லாம் இல்லை. எப்பவாவது ஜெயசூர்யா பவுலிங் பிட்ச்சில் ரன் எடுத்திருக்கிறாரா? நம் ஆட்களுக்கு மட்டையாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் வேண்டும்.குறிப்பாக பந்து முட்டிக்கு மேல் எழும்பக்கூடாது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கவே கூடாது.


இந்த டிவி,மீடியா,முன்னாள் வீரர்களின் கூத்து சகிக்க முடியாத அளவு வளர்ந்துக் கொண்டே போகிறது. இதை தடுக்க எவனாவது சட்டம் போடக்கூடாதா?


நேத்து பாருங்க மெக்ராத் எப்பவும் போல் நூல் பிடித்தது போல் பந்து வீச ஆரம்பிச்சாரு.. சச்சின் தடுமாறினாலும் நம்ப காமெண்ட்ரி ஆளுங்களை பார்க்கணுமே.இதோ வெளுக்க போறாரு.வெட்ட போறாரு. கிழிக்க போறாருன்னு ஓரே கூச்சல்.கடைசியில் மெக்ராத் தான் சிரிச்சாரு. அதே ஸ்டைலில் இன்னும் எத்தனை முறை சச்சின் கீப்பர் கேட்ச் தருவாரோ?


சேவாக்குக்கு ரெண்டு பால் பீட் ஆகி கீப்பர் கிட்டே .போகுது. அடுத்த பால்ல தடுமாறி ஒரு காமா சோமா ஷாட் அடிச்சி பவுண்டரி கிடைக்குது.சரியான பிளேஸ்மெண்ட் இல்லை. ஆனா உடனே ஒரு ஆள் சொல்றாரு."அதுதாங்க சேவாக்.கவலையே படமாட்டாரு" இந்த பில்ட் அப் தேவையா? எக்ஸ்டரா கவர்ல ஆள் இருந்திருந்தா அப்பவே டவுசர் கிழிஞ்சிருக்கும்.

எப்பவுமே காயப்பட்டு இருக்கிற அகர்கர், டீமை விட்டு தூக்கற நிலைமை வந்தா மட்டும் ஒன்றிரண்டு அரை சதம் அடிச்சி இடத்தை தக்க வைக்கற யுவராஜ் இவங்க இல்லாட்டி டீமே இல்லையா?டிவி போட்டா எல்லா சேனலிலும் இதுதான் பேச்சு.


விளம்பரம் எல்லாம் ஊ ஆ இந்தியான்னு ஓரே கூச்சல். நடுவில் இந்த கங்கூலி வேற. நீட்டா ட்ரஸ் பண்ணிகிட்டு உட்கார்ந்துகிட்டு குழந்தை மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டு என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்கன்னு கேக்குறாரு.


மொத்தத்துல பவுலிங்கில் பதானும் பேட்டிங்கில் திராவிட்டும் ஜொலிக்க வில்லை என்றால் நம்ம மேட்டர் காலி. என்னது உலக கோப்பையா? ஹிஹி...என்னங்க குறும்பு பண்றீங்க? அது வெஸ்ட் இண்டிஸ்ல நடக்க போகுதுங்க..... கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்.......:))

Friday, October 27, 2006

நெருப்பு நரியில் உங்கள் பதிவு

என்னுடைய பதிவுகளை நெருப்பு நரி உலாவியை உபயோகப்படுத்தி படிக்க முடியவில்லை என்று ஒரு நண்பர் கூறினார்.நேற்று அகஸ்மாத்தாக ஒரு புகழ்பெற்ற பதிவரிடம் பேச நேர்ந்தது.


பிளாக்கரில் வலையேற்றிய பின் அதை right align,left align,justify full ஆகிய ஆப்சன்களை உபயோகப்படுத்தினால் நெருப்பு நரி உலாவியில் படிக்க முடியாது என்றார் அவர்.சோதித்து பார்த்ததில் அது உண்மை என்று அறிந்தேன்.


எத்தனை பேருக்கு இது தெரியும் என்று தெரியவில்லை.தனிபதிவாக இட்டால் பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது.

மதுரை சந்திப்பு விவாதங்கள் 3

சில பேர்(மொக்கையன்) கேட்டது போல் மதுரை வலைப்பதிவாளர் சந்திப்பில் கவிதைகள் எதுவும் படிக்கப்படவில்லை என்பது உண்மைதான்.லிவிங் ஸ்மைலின் காட்டமான கேள்விகள் ஜுவியில் வந்ததைப்பற்றி விசாரித்தேன். அதைப்பற்றி இங்கு உஷா பதிவில் ஒரு விவாதமே நடந்தது எனக்கு அப்போது தெரியாது.அந்த ஜுவி கட்டுரை பொது மக்களிடையே எந்த விதமாக பாதிப்பை ஏற்படுத்தியது? எதிர்வினைகள் என்ன? என்றெல்லாம் கேட்டேன்.அதைப்பற்றி தனக்கு தெரியாது என்றார். பத்திரிக்கைகள் இதை வெறுமனே ஒரு வியாபார விஷயமாகத்தான் பார்க்கின்றன என்று அவர் நினைப்பதாக எனக்கு தோன்றியது.

அப்சல் விஷயத்தை பற்றி பேசும்போது பேராசிரியர் தருமியின் நண்பர் பேராசிரியர் சைலேஸ்(முனைவர்) ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டார். தேசதுரோகிகளை சுட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் ஆவேசப்பட்ட போது எனக்கே உடல் நடுங்கியது.சட்ட நுணுக்கங்கள் சம்பந்தமாக அட்வகேட் பிரபுவும் கவிஞர் சுகுணா திவாகரும் சில கேள்விகளை வைத்தப்போது முனைவர் சைலேஸ் தடுமாறினார்.

பேராசிரியர் தருமியும் அப்சல் தூக்கு விஷயத்தில் ஒரு தீவிரமான நிலைப்பாடு வைத்துள்ளார்.அவர் பதிவுடனோ வி த பீப்பிள் பதிவுடனோ அல்லது பினாத்தலாரின் பதிவுடனோ எனக்கு முரண்பட ஒன்றுமில்லை.ஒரு பிரச்சினையை பாதியில் இருந்து அவர்கள் அணுகுவதாக எனக்கு படுகிறது. ஆகவே அந்த விவாதத்தில் நான் பங்கு கொள்ளவில்லை. அரசியல் நோக்கில் இதை அணுகுவதில் உள்ள சிக்கல்களைப்பற்றி நான் எழுதியுள்ள ஒரு பதிவு இங்கே.

அப்சல் பற்றிய விவாதங்கள் வலைப்பதிவில் மிக நன்றாக நடந்தன என்று தான் எனக்கு தோன்றுகிறது.முதலில் தேசபக்தி ஆறாக ஓடியது.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரச்சினையில் மற்ற பரிமாணங்களும் விவாதத்திற்கு வந்துள்ளது நல்ல முன்னேற்றமாகவே படுகிறது.இஸ்லாமிய எதிர்ப்பு கண்மூடித்தனமாக நம் மனதில் நிறைந்துள்ளது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.இது பி.ஜே.பி ஆட்சியில் திட்டமிட்டு பரப்பப்பட்ட விஷம பிரச்சாரமா அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மேல் உள்ள கோபத்தினால் வந்ததா என்று தெரியவில்லை.இதன் இரண்டின் கூட்டு கலவை தான் இது என்று நினைக்கிறேன்.அதே போல் காஷ்மீர் பிரச்சினையை பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் பலர் இருப்பதை உணர முடிகிறது.வெகுஜன மீடியா என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இதன்மூலம் நம்மால் புரிந்துக்கொள்ளமுடியும்.

சரி மீட்டிங்குக்கு வருவோம்.அட்வகேட் பிரபு ராஜதுரையும் ராமும் பல காலமாகவே தமிழ் இணையத்தில் பங்கு பெற்று வருகிறவர்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ராம் சீரியஸாக எதுவும் எழுதுவதில்லை என்றார். சே குவாராவை பற்றி உணர்ச்சி வசப்பட்டு அவர் சில வார்த்தைகள் பேசினார்.

ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இடதுசாரி கருத்தாக்கங்களை பற்றி பொதுவில் பேச தயங்கும் பலரும் தனிப்பட்ட முறையில் பேசும் போது அதைப்பற்றி பேசுவதும் தெரிந்து வைத்திருப்பதும்தான்.

அட்வகேட் பிரபு அதிகம் வலையுலகில் எழுதுவது இல்லை என்றாலும் தொடர்ந்து வலையுலகை படித்து வருவது அவர் பேச்சில் இருந்து புரிந்துக்கொள்ள முடிந்தது.மரத்தடி காலத்தில் இருந்து இன்றுவரை தமிழ் இணையத்தில் இயங்கி வரும் சிலரில் அவர் முக்கியமானவர் என்று தோன்றியது.மரத்தடி காலம் என்று தருமி சிலாகித்தது கொஞ்சம் ஓவரானது என்பது என் கருத்து.அப்போதும் பிரச்சினைகள் இருந்தன என்பதுதான் என் புரிதல்.பங்கு பெற்றோர் எண்ணிக்கை, பேசப்பட்ட விஷயங்களை பொறுத்து கூடக்குறைய இருக்கலாமே தவிர கருத்து மோதல்கள் இருக்கத்தான் செய்தன.

வலைப்பதிவுகளினால் சமூகத்திற்கு பயன் என்ன என்ற தருமியின் கேள்வி முக்கியமானது. இது ஒரு சுதந்திரமான வெளி. எந்த விதமான தடங்கலும் இன்றி உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உங்களுக்கு இருக்கும் சுதந்திரம் தான் இங்கு முக்கியம். யார்,எதை எழுதவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இங்கு நொறுக்கப்படுகின்றன என்பதை வைத்துத்தான் இதை புரிந்துக்கொள்ளமுடியும்.


(தொடரும்)