Wednesday, January 28, 2009

ஈழ பிரச்சினை - கருணாநிதியை கும்முவது தீர்வாகாது

இலங்கை பிரச்சினையில் விடுதலைப்புலிகளை (தமிழ் மக்களை) அழிக்க இறுதி யுத்தம் நடத்தும் இலங்கை அரசை தடுக்க இந்திய அரசாங்கம் முன்வரவில்லை என்பதும் இதற்கு முழுமுதற்காரணம் கருணாநிதிதான் என்றும் பரவலாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது.

இந்திய அரசின் நிலை கூட ஏதோ ஒரு கட்சியின் நிலை என்றும் சோனியாவில் தனிப்பட்ட பகை போல் சித்தரிக்கப்படுவது எனக்கு சரியாக படவில்லை. அது தெற்காசிய பேட்டை தாதா என்ற கோதாவில் இந்தியா எடுத்துள்ள நிலை. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும்.

மத்திய அரசின் ஆட்சிக்காலம் இருப்பது ஓரிரு மாதங்கள்.அதற்கும் கருணாநிதி என்ன செய்ய முடியும் என்று மக்கள் அவரை கும்முகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. தமிழ் மக்களின் ஒரே காவலனாக இப்போதெல்லாம் தன்னை நினைத்துக்கொள்ளும் ராமதாசு கச்சிதமாக காய்களை நகர்த்துகிறார்.வீராவேசமாக பேசுகிறார்.ஆனால் பதவி என்று வந்தால் முதலில் கருணாநிதி பதவி விலகட்டும் என்கிறார். நாளைக்கே கருணாநிதி முற்காலத்தில் இழந்ததுபோல் ஆட்சியை இழந்தால் ராமதாசு ராஜுபக்சே தங்கச்சியின் கட்சியான அதிமுக கூட்டணிக்கு போகமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பது தான் நிஜம். அது கருணாநிதிக்கும் தெரியும்.

கருணாநிதி இலங்கை பிரச்சினையினால் ஆட்சியை இழந்ததே இல்லை என்று லேட்டஸ்ட்டாக வரும் தகவல்கள் நல்ல காமெடி.1989 ஆட்சி எதனால் போச்சு என்று யாராவது சொன்னால் தேவலை.எனக்கு தெரிந்த அரைகுறை அரசியலும் மறந்து விட்டது.


நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. இருக்கவே இருக்கார் கலைஞர் என்று நாமெல்லாம் அவரை கும்முவதாக சில காலம் முன்பு சொல்லியிருந்தேன்.அதே தான் இப்பவும். கலைஞர் ராஜினாமா செய்தால் ஈழம் மலருமா? கருணாநிதியும் இதை நாசூக்காக கேட்டார்.யாரும் கண்டுக்கலை.


அப்படி ஏதாச்சும் ஆச்சுன்னா நாளைக்கே காங்கிரசு காரன் அதிமுக கூட கூட்டணி போடுவான். டாக்டர் அய்யாவும் தான்.

மக்கள் நிலை என்ன என்பதுதர்ன இங்கே முக்கியம். எத்தனை அரசியல் கட்சிகள் உளமார ஈழத்தமிழர்களை ஆதரிக்கின்றன? எழுச்சி எப்படி வரும? மக்கள் வீதியில் இறங்கி போராடினால் நடக்கலாம்.











******************

Tuesday, January 13, 2009

கூச்சமே வேண்டாம்..கழட்டி விட்டுடுங்க

இடைதேர்தல் முடிவு எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. தி.மு.க அனுதாபியாகத்தான் இருந்தேன். ஆனா இன்னமும் தொடர்ந்து இருப்பேனாங்கறது சந்தேகம் தான். அது ஸ்டாலின் நடந்துக்கற முறையிலதான் இருக்கு.(ஓவரா இருக்கா).

என்னதான் லஞ்சம், லாவண்யம்னு சொன்னாலும் இத்தனை ஓட்டு வித்தியாசத்துல ஜெயித்து, கேப்டனுக்கு ஆப்பு அடிச்சி..என்ன கொடுமை சரவணன் இது?

கேப்டன் இனிமேல் விடும் அறிக்கைகள், பேசும் பேச்சுக்கள் எல்லாம் கொஞ்சம் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து விடுவது நல்லது. சுப்ரமணிய சாமி அறிக்கை மாதிரியே தெரிகிறது. நேரம் இருக்கு தலைவரே. அவசரப்படாதீங்க. இனிமேலாவது சில விசயங்களை நேரடியா பேசுங்க. இலங்கை பிரச்சினை போன்றவை. தினமலர் வகையறாக்களின் சப்போர்ட்டுக்காக பேச ஆரம்பிச்சா உள்ளதும் போயிடும்.


சரி.அடுத்து திமுக என்ன பண்ணலாம்? அவட் ஆஃப் பாக்ஸ் யோசிச்சா..

ராஜீவ் அது இதுன்னு பேசற காங்கிரஸ் காரனுங்களை கழட்டி விட்டுட்டு பி.ஜே.பிக்கு ( ரெண்டு எம்.பி. சீட்டு, ஆட்சி அமைக்க சப்போர்ட்) கூட்டணி போட்டு, பதிலுக்கு இலங்கை பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவா நடக்கணும்னு ஒரு டீல் போடலாமா? ராமதாசும் வந்திருவார். அவருக்கு என்ன? அன்புமணி கன்டினியு பண்ணலாமே?

கலவரமா இருக்கும் இல்ல?

Saturday, January 10, 2009

மக்கா..சூதானமா இருந்துகோங்க

http://pulithikkaadu.blogspot.com/2009/01/blog-post.html

மேற்படி பதிவை பார்த்தேன். ரொம்ப ஆபத்தான ஒரு ஐடியாவை நண்பர் கொடுத்துள்ளார். பங்கு விலைகள் சரிவதனால் தின வர்த்தகம் செய்ய முடியாமல் இருப்பவர்கள் தின வர்த்தகமே செய்யாமல் இருப்பதே நல்லது. டெலிவரி எடுத்து வைத்திருக்கும் பங்குகளையும் தின வார்த்தகம் செய்ய உபயோகப்படுத்தி உள்ளதும் போச்சு என்ற கதையாகி விடக்கூடாது.

என்றாவது ஒரு நாள் அது மீண்டு வரும் என்று இருக்கலாம். அதுவும் போய்விட்டால்.....

தின வர்த்தகம் என்பதே ஒரு சூதாட்டம். பங்கு சந்தையில் ஒரு கணக்கெடுப்பின் படி 90 சதவீத பங்கு சந்தை வியாபாரிகள் நஷ்டமே அடைகிறார்கள். ஆக, பங்குகள் தினப்படி நகருவது பெரிய பெரிய முதலைகளால் தீர்மானிக்கப்படுகிறது.

ஒருவரின் நஷ்டம் தான் ஒருவரின் லாபம். அதுவம் டே டிரேடிங் எனப்படும் தினப்படி பங்கு வியாபாரத்தில் இதுதான் நிதர்சனம். பின்னூட்டத்தில் அனைவரும் வெற்றியாளராக ஆண்டவனை வேண்டுவோம் என்று ஒரே போடாக போடுகிறார் நண்பர்.

மக்கா....வேண்டாம்டா....

சல்மா அயூப் - பரபரப்பு நிமிடங்கள்

சல்மா அயூப் விவகாரத்தை பற்றியும் ஜெயராமன் சார் விவகாரத்தை பற்றியும் செந்தழல் ரவி மற்றும் உண்மைத்தமிழன் ஆகியோர் எழுதிய பதிவை பார்த்தேன். இது சம்பந்தமான சில தகவல்களை பொதுவில் வைத்துவிடலாம் என்றுதான் இந்த பதிவை எழுதுகிறேன்.

இது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ( போலி விவகாரம்) முழுமையாக ஓய்ந்துவிட்டபடியால் கணக்கை நேர் செய்துவிடலாம் என்ற எண்ணமும் மற்றும் வெட்டியாக பொழுது போக்கிக்கொண்டு இருப்பதாலும் ( இந்த காரணம் முக்கியமானது) இதை எழுதி விடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.


நான் பெங்களூரில் இருந்த சமயம். எனது நண்பர் ஒருவர் ( செந்தழல் ரவியின் பதிவில் பிரபல பத்திரிக்கையாளர் என்று விளிக்கப்பட்டவர்) எனக்கு தொலைபேசினார். அவர் கூறிய தகவல் என்னவென்றால் அந்த சமயம் பதிவுலகில் மும்முரமாக இயங்கிய தோழி ஒருவர் பெயரில் போலி பாணி வலைத்தளம் இருப்பதாகவும் அதை நடத்துபவர் மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர் என்று சில ஆரம்பக்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.


நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு வலதுசாரி அடிப்படைவாதி என்று நான் அறிந்திருந்தாலும் சாதுவானவர்.நான் அறிந்தவரை நாம் சொல்வதை காது கொடுத்து கேட்க கூடியவர் தான். ஒரு உதாரணம். தகவல் அறியும் சட்டத்தை பற்றி ஒரு அருமையான பதிவை எழுதி இருந்தார் மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர்.. அதில் தேவை இல்லாமல் திராவிடம், கலைஞர் என்று எழுதி நக்கல் அடிந்திருந்தார். நான் நல்ல கட்டுரையில் இது போன்ற எள்ளல் எதற்கு என்று கேட்டிருந்தேன். உடனே கட்டுரையை அழகாக திருத்தினார். இது ஒரு உதாரணம் தான்.


விசயத்திற்கு வருவோம். தொலைபேசிய நண்பர் இது சம்பந்தமாக காவல் துறைக்கு போக போவதாக என்னிடம் கூறினார். எனக்கு அந்த சமயத்தில் அது அதிகமாக பட்டது. ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் அந்த தளத்தை துவக்கினார் என்ற தகவல் பதிவுலகில் பரவியவுடன் அந்த தளம் அகற்றப்பட்டது. ஆகவே வேண்டாம் என்றேன்.


எனக்கு இருந்த தொடர்புகளை பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர் இதற்கு என்ன சொல்லுகிறார் என்று கேட்டு சொல்லும்படி கேட்டார் நண்பர்.நானும் இன்னொரு பிதாமகரின் மூலம் சம்பந்தப்பட்டவரிடம் பேசினேன். தெளிவாகவே நான் கூறியிருந்தேன். நீங்கள் இதில் குற்றவாளி இல்லை என்றால் கவலையே படவேண்டாம். அவர்கள் காவல்துறைக்கு போனாலும் உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றேன்.


ஆயினும் ஏனோ தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை பிரபல பத்திரிக்கையாள நண்பரிடம் ஒத்துக்கொண்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பிற்காகவே எழுதி வாங்குவதாக பிரபல பத்திரிக்கையாளர் என்னிடம் கூறினார். அந்த முடிவு பாதிக்கபட்டவர் நிலைமையில் இருந்து பார்த்தால் தான் சரியா தவறா என்பது நமக்கு தெரியும்.


அதுபோல் மெத்த படித்த ஒருவர் ச்சும்மா யாருக்கும் எழுதி கையெழுத்து போட்டு தந்துவிட மாட்டார். மேலும் இந்த இடத்திலும் நான் இதை வலியுறுத்தினேன். நீங்கள் இதில் குற்றவாளி இல்லை என்றால் கவலையே படவேண்டாம். அவர்கள் காவல்துறைக்கு போனாலும் உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றேன்.


கடைசியில் சல்மா தான்தான் என்றும் ஆனால் ஆபாசத்தளம் என்னுடையது இல்லை என்பது போல் எழுதி கொடுத்தார் என்று நினைக்கிறேன்.
ஆபாசத்தளம் முக்கிய பிரச்சினை என்றாலும் அவரை பொறுத்தவரை சல்மா அவர்தான் என்பது வெளிப்பட்டாலே பிரச்சினை என்று அவர் நினைத்தபடியால் அவர் இதற்கு ஒத்துக்கொண்டார் என்பதாகவே நான் நினைத்துக்கொண்டேன்.


ஆபாச்த்தளம் அவருடையது என்பதற்குரிய ஆதாரம் என்னை பொறுத்தவரை உறுதியானது என்று சொல்லமுடியாது. ஆனால் அவர் இல்லை என்று உறுதியாக என்னால் அன்று சொல்லமுடியவில்லை.

பிரச்சினை நடந்த சமயம் பதிவுலகே களேபரமானது.பிதாமகரின் சப்போர்ட்டும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிறைய இருந்தது.
ஒரு சும்பன் என்னை பேட்டை ரவுடி என்று அப்போது திட்டினான். என்ன நடந்தது என்றே தெரியாமல் ஒருவரை திட்டுபவன் என்னை பொறுத்தவரை சும்பன்தான். அவனை பொறுத்தவரை இது இந்து முஸ்லீம் பிரச்சினை.அவன் இந்துவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது வேறு பிரச்சினை.

போலிக்கு ஆப்படித்த செந்தழல் ரவி, உண்மைத்தமிழன் ஆகியோர் கூற்று பிதாமகரின் கூற்றைவிட நம்பகமானது. மேலும் ரவிக்கு போலி விவகாரத்திற்கு பிறகு நிறைய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

இன்னமும் சில வாய்ச்சொல் வீரர்கள் இந்த பிரச்சினையை காவல்துறைக்கு கொண்டு செல்லும்படி வீரமாக ஆனால் அனானியாக ( ஒரே ஐ.டி இருந்தாலும் யார் என்று தெரியவில்லை என்றால் அது அனானிதான்) அடிக்கடி எங்காவது எழுதுவது உண்டு. என்னமோ ரவி,உண்மைத்தமிழன் எல்லாம் போலீசையே பார்க்காதது மாதிரி.சம்பந்தப்பட்ட இரு தரப்புமே இதைப்பற்றி பேசுவதில்லை என்பது கூடுதல் செய்தி.


அது ஒரு துன்பியல் சம்பவம் என்று நினைத்து அதில் இருந்து ஒதுங்கி விட்டார் குற்றம் சாட்டப்பட்டவர். தமிழ்மணத்திலும் இல்லை.ஆயினும் அவரின் பழைய முடிந்த பிரச்சினையை தோண்டி அவரை அமுக்கலாமா?