சற்று கண் அசந்து விட்டேன் என்று நினைக்கிறேன். நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் மிகவும் நெருங்கிவிட்டதை உணர்ந்தேன். திடுக்கிட்டேன். மெதுவாக படியை நோக்கி ஊற ஆரம்பித்தேன். முனகல்களும் எரிச்சல் பார்வைகளும் உடம்பை அரிக்க ஆரம்பித்தன. அந்தேரி ஸ்டேஷனில் இறங்க முடியவில்லை என்றால் அடுத்து போரிவிலிதான். முட்டி கொண்டு போக முயற்சித்தேன். முடியாது என்று தெரிந்தும் முயற்சித்தேன். இரயில் காந்திவிலியை நெருங்கியது. நான் இறங்க யாரும் நகர்ந்து இடம் தரவில்லை. இரயில் நின்றது. திமுதிமுவென்று உள்ளே ஏறிய கூட்டம் இறங்குவதை சாத்தியம் இல்லை என்றாக்கியது. இரயில் கிளம்பியது. என் உடம்பில் பாய்ந்து கொண்டிருக்கும் அத்தனை இரத்தமும் தலையில் பாய்ந்தது. சுற்றியிருந்த அனைவரும் என்னை பார்த்து சிரித்தார்கள். என்னையும் மீறி என் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்தது. தேவடியா பசங்க என்று தமிழில் அர்த்தம் வரும். சற்று சத்தமாக திட்டிவிட்டேன் போலிருக்கிறது.
"என்ன சொன்னாய்?", என்று இந்தியில் கேட்டான் ஒருவன்.
அதுவரை எதுவும் பேசாமல் இருந்த ஒருவன் மற்றவர்களை பார்த்து இந்தியில் ஏதோ சொன்னான். அனைவரும் என்னையே பார்த்தார்கள்.
"இறங்கவேண்டும் என்று முன்னமேயே சொல்லியிருக்கலாமே" என்று கோணல் சிரிப்புடன் சொல்லியபடி என்னை நெருங்கினான் ஒருவன். கூட்டம் என்னை நெருங்கியது. என்னை அலாக்காக சிலர் தூக்கி ஓடுகிற இரயிலில் இருந்து வீசி எறிந்தனர். ஒருவன் என் பைலை தூக்கி எறிந்தான். அப்போதும் நான் அலறாமல் இருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இது கனவாக இருக்கலாம் என்று நான் நினைத்தபோது என் கனவு கலைந்தது.
"டீ,,,காபி", என்று சத்தம் கேட்டது. இரயிலில் வேகமாக போய் கொண்டு இருந்ததை உணர்ந்தேன். மேல் பர்த்தில் அமர்ந்திருந்த என்னை என் மனைவி உற்று பார்த்து கொண்டிருந்தாள். கீழே இறங்கி என் கனவை கூறினேன்.
"நாளையில் இருந்து லோக்கல் ட்ரெயினில் ஆபீஸ் போகணும் என்ற பயம் உனக்கு", எனறாள் அவள்.
சரியாக அதே நேரம் என் மொபைல் போன் ஒலித்தது.
"மும்பயிலிருந்துதான்", என்றாள் என் மனைவி.
எனது நண்பர் சாமிநாத அய்யர் தான் பேசினார். மிகவும் பதட்டமாக இருந்தார்.
"நம்ம சிங்கை கொன்றுவிட்டார்கள்", என்றார்
"அய்யோ,எப்போ?"
"நேத்து நைட் கடையில. உங்களை போனில் ட்ரை பண்ணிக்கொண்டே இருந்தேன். உங்கள் மொபைல் எடுக்கவில்லை",
நான் இரயிலில் வருவதை சொன்னேன். திரும்ப லைன் டிஸ்கனெக்ட் ஆனது. எனது முகம் போன போக்கை வைத்து என் மனைவி ஊகித்துவிட்டாள் ஏதோ கெட்ட செய்தி என்று. நான் சொன்னேன். பெரிய அதிர்ச்சி. என் மனைவியும் ஷாக் ஆனாள். அப்படியே கண்ணை மூடிக்கொண்டேன்.
என் உத்தியோக நிமித்தம் மும்பாய் பணிமாற்றம் ஏற்பட்டிருந்த புதிது. திருமணமும் அப்போது தான் ஆகியிருந்தபடியால் மனைவியுடன் அருகிலிருந்த எலிபெண்டா கேவ்ஸ் என்ற சின்னஞ்சிறியதீவிற்கு போயிருந்தோம். படகில் தான் செல்ல வேண்டும். படகில் ஐம்பது நூறு பேர் பயணம் செய்யலாம். அந்த பயணத்தில் தான் முதன்முதலாக ரிபுதாமன்சிங்கை பார்த்தேன்.
படகு முழுவதும் ஒரே இளவட்டங்கள் கூட்டம். எனக்கு திருமணம் ஆகியிருந்த புதிதாகையால் மனைவியின் பார்வையை மீறி பெண்களை பார்ப்பது மிகவும் கடினமாகி தடுமாறி கொண்டிருந்தேன். சிங் தன் பெரிய குடும்பத்துடன் வந்திருந்தான். திடீரென்று படகில் ஒரே கலாட்டா. யாரோ சில இளைஞர்கள் சில இளம் பெண்களிடம் சில்மிஷம் பண்ணிவிட்டார்கள். கேட்க போன பெண்ணின் கணவரையும் அடித்துவிட்டார்கள். இதுவெல்லாம் எனக்கு பின்னால் சிங் மூலம் தெரிய வந்தது. பொதுவாகவே அடிதடி என்றாலே காத தூரம் ஓடும் எனக்கு, மொழியும் புரியாமல், கையும் ஓடாமல் காலும் ஓடாமல் அமர்ந்திருந்தேன்.
சிங் பொங்கியெழுந்தான். அப்போது அவன் போட்ட ஸ்டண்ட் இன்றும் என் கண்ணில் நிற்கிறது. கலாட்டா பண்ணிய இரண்டு இளைஞர்களையும் உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டான். பலரும் தலையிட்டு தடுக்கவில்லை என்றால் அன்று கொலையே விழுந்திருக்கும். களேபரம் ஓய்ந்தபிறகு சிங் எனதருகில் வந்து அமர்ந்தான். இப்போது நான் கண்டிப்பாக எதாவது அவனிடம் பேசுவேன் என்பது என் மனைவிக்கு தெரியும்.பொதுவாக இரயிலில் அல்லது பஸ்ஸில் நான் அருகிலிருப்பவர்களுடன் அதிகம் வாயாடுகிறேன் என்பது அவளின் புகார். நான் மெல்ல சிங்கிடம் என்ன நடந்தது என்றேன்.
என்ன நடந்தது என்று விளக்கிய சிங் முஷ்டியை மடக்கி நான் இருக்கும் போது எதாவது கலாட்டா நடக்குமா? என்றவன்,
"நீங்கள் ஏன் தலையிடவில்லை", என்றான்.
"எனக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை"
"மதராஸி எல்லாம் இட்லி சாப்பிட தான் லாயக்கு", என்றான் பட்டென்று
"எனக்கு இட்லி பிடிக்காது", என்றேன்.
பெரிதாக சிரித்தான் சிங்.
"சும்மா தமாசுக்கு தான் சொன்னேன்", என்றான்.
"உங்கள் சண்டை நிஜமாகவே நன்றாக இருந்தது. நீங்கள் சோல்ஜரா?",
"ஆமாம், எப்படி அறிந்துக்கொண்டீர்கள்?", என்று கேட்டு ரொம்பவே சந்தோஷப்பட்டுக்கொண்டான் சிங.
பரஸ்பர அறிமுகத்திற்கு பின் தானும் அந்தேரியில் தான் கேஸ் ஏஜென்ஸி வைத்திருப்பதாகவும் சமயம் கிடைக்கும்போது தன் கடைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தான். படகு தீவை அடைந்ததும் நாங்கள் சிங் குடும்பத்துடன் சேர்ந்துக்கொள்ள அழைத்தான். பஞ்சாபிகளுக்கே உரிய விருந்தோம்பல் ட்ரை சப்பாத்தி மற்றும் கெட்டி பருப்பு ஆகியவை வற்புறுத்தி சாப்பிட வைத்தான்.
பிறகு மும்பாய் மிஷின் வாழ்க்கையில் கலந்தப்பின் சிங்கை மறந்து விட்டேன்.ஒருநாள் நான் மின்சார இரயிலில் வந்த அலுப்பு தீர ஸ்டேஷன் எதிர்புறம் அருகில் வடாபாவ் தின்றுகொண்டிருந்த போது முதுகில் படீரென்று ஒரு குத்து. திரும்பி பார்த்தால் சிங்.
"என்னப்பா இது, என்னை மறந்துவிட்டாயே", என்று உரிமையுடன் கோபித்துக்கொண்டான்.
"பக்கத்தில் தான் என்னுடைய ஆபிஸ்,. வந்துட்டுப்போ", என்றான்.
இன்னொரு நாள் வரேனே என்ற என் குரல் தன் காதிலேயே விழாததை போல் நடக்க ஆரம்பித்துவிட்டான்.
அப்படித்தான் ஆரம்பித்தது அவன் கடைக்கு செல்லுகிற பழக்கம். வாரத்தில் குறைந்தது மூன்று முறையாவது அவன் கேஸ் ஏஜென்சிக்கு செல்லுவது என்பது பழக்கமாகி விட்டது. சிங் ஒரு முன்னாள் ராணுவ வீரன் என்பதும் அதனாலேயே அவனுக்கு ஒரு கேஸ் ஏஜென்ஸி கிடைத்திருப்பதும் எனக்கு முன்னதாகவே தெரிந்த விஷயங்கள். பிறகு நான் அறிந்து கொண்டது எல்லாம் அவனுக்கு என்னை போல பல நண்பர்கள். அனைவரும் வெவ்வேறு வேலை பார்ப்பவர்கள். அவனது கடையில் எப்போதும் யாராவது நண்பர்கள் இருந்துக்கொண்டேயிருப்பார்கள். சிங் தன்னுடைய ராணுவ வீரபராக்கிரமங்களை ஒவ்வொன்றாக விஸ்தாரமாக கூறிக்கொண்டிருப்பான். இந்தியா-பாகிஸ்தான் போரில் தன்னுடைய குழு தான் முன்னால் சென்றது என்றும் பல பாகிஸ்தானிய நிலைகளை அழித்ததில் தன்னுடைய பங்கு கணிசமானது என்பான் அவன்.
நானும் அவனை தூண்டி பல கேள்விகளை கேட்பேன். ஒரு நாள் கேட்டேன்.
"நீங்கள்ளாம் தாடி வளர்ப்பது ஏன்?",
"ஆண்டவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் உடலில் எந்த பாகமும் வேஸ்ட் என்று தூக்கியெறிய உங்களுக்கு உரிமையில்லை", என்றான் சிங்.
"ஓகோ", என்றேன் கேலியாக நான்.
"அப்படியென்றால் தாடி மீசையை வெட்டி எறிவது போல் நீங்களெள்ளாம் கை காலை வெட்டி எறிவதுதானே", சிங் உணர்ச்சிவசப்பட்டான்.
அதன்பிறகு வரிசையாக எனக்குள் தோன்றிய பல கேள்விகளை என் மனதுக்குள்ளேயே அமுக்கினேன்.
நீங்கள்(மதராஸிகள்) எல்லாம் உடலை வருத்தி வேலை செய்ய லாயக்கு இல்லை. எங்களுக்கு உடல் வலிமை அதிகம் என்பதால் உடலை வருத்தி செய்யும் ராணுவம் போன்ற துறைகளை தாங்கள் தேர்ந்தெடுப்பதாக சிங் அடிக்கடி கூறிக்கொள்வான்.அதற்காக அவன் நம்மை மட்டமாக எண்ணுபவனும் அல்ல. நீங்கள் எல்லாம் முளையை நன்றாக உபயோகபடுத்துகிறவர்கள் என்பான். மதராஸிகள் என்றால் அவன் மனதில் உள்ள சித்திரம் தமிழ் அய்யர்கள் மட்டும்தான் என்று எனக்கு தோன்றியது.
ஓருநாள் இரவு காலாண்டு கணக்கு முடிந்து தாமதமாக மாலையில் திரும்பும் போது சிங் கடை வழக்கத்திற்கு முன்னதாகவே சாத்தி இருந்தது. எல்லோரும் போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கிறார்கள் என்றான் பக்கத்து கடைக்காரன். விசாரித்ததில் அன்று மாலை சிங் கடையில் தனியாக இருந்திருக்கிறான். யாரோ இருவர் கத்தியை காட்டி பணத்தை கொள்ளை அடிக்க முயன்றிருக்கின்றனர். சிங் தனி ஆளாக இருவரையும் புரட்டி எடுத்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போயிருப்பதாக தெரிந்தது. மறுநாள் கடையில் பார்த்து நாங்களெல்லாம் அவனை பாராட்டியபோது அதை ஒரு சாதாரண விஷயமாக அவன் கூறினாலும் மனதினுள் அவன் சந்தோஷப்பட்டதை உணர முடிந்தது.
சிங் கடையில் அக்கவுண்ட பார்த்துக்கொண்டு இருப்பவர்தான் சாமிநாத அய்யர். மும்பாயில் செட்டில் ஆகிய தமிழர்.எனக்கும் நண்பர் ஆனார். பேசவே காசு கேட்கும் நானும், சிங்கும் நெருங்கிய நண்பர்களானது அவருக்கு வியப்பு. பழகும் வரைக்கும் நான் பேசமாட்டேன் ஆனால் ரொம்ப பழகியபிறகு ரொம்பவும் பேசுகிறேன் என்றார் அவர். அது பாராட்டா இல்லை கிண்டலா என்றே புரியவில்லை.
"சிங் வியாபாரத்தில் எப்படி", என்றேன். புத்திசாலிதனமாகவே செய்வதாக சாமிநாதன் கூறியதாகவே நினைவு. இந்த முறை கூட மதுரையில் இருந்து தனக்கு ஏதாவது வாங்கி வரும்படி கூறியிருந்தான். ஆனால் எல்லாம் முடிந்து விட்டது. என் மனைவியும் இரயிலில் தூங்கவில்லை என்று அவள் புரண்டு புரண்டு படுத்ததில் தெரிந்தது.
மும்பாயை அடைந்தவுடன் சாமிநாத அய்யரை போய் விசாரித்தேன்.
"முந்தாநாள் இரவு கடை சாத்தும் நேரத்தில் இரண்டு பேர் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். கடையில் சிங்கும் கடை பையனும் தான் இருந்திருக்கிறார்கள். துப்பாக்கி முனையில் அவர்கள் கல்லாவில் இருந்த பணத்தை கேட்டவுடன் சிங்குக்கு வேறு வழியில்லாமல் போயிருக்கிறது. பணத்தை எடுத்துக்கொடுத்துவிட்டார்"
"எவ்வளவு பணம்"
"வெறும் ஆயிரத்து முன்னூறு ரூபாய்தான்.தொலைகிறது என்று விட்டிருக்கலாம். அவர்கள் திரும்பும் நேரம் ஒருவனை பிடிக்க முயன்றிருக்கிறார். சுட்டுட்டான் மிக அருகிலிருந்து சுடப்பட்டு உள்ளதாக போலீஸ் கூறுகிறது"
",,,,,"
"வெறும் ஆயிரத்து முன்னூறு ரூபாய்க்காக அவசரப்பட்டு விட்டார்"
நான் எதுவும் சொல்லாமல் திரும்பி நடந்தேன் .சிங் வெறும் ஆயிரத்து முன்னூறு ரூபாயை மட்டும் காப்பதற்காக உயிரை விடவில்லை என்று நான் இன்றும் உறுதியாக நம்புகிறேன்.
Tuesday, October 04, 2005
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
நல்லா எழுதி இருக்கீங்க.. சுவாரஸ்யமா இருந்துது.
நல்வரவு, வாழ்த்துக்கள்.
நன்றாக இருந்தது முத்து.
வாழ்த்துக்கள்.
உங்களுடைய பதிவைப் பார்த்தால் வெகு காலமாகவே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.
உங்களுடைய மும்பை புறநகர் ரயிலனுபவம்போல் எனக்கும் நிறைய இருக்கிறது. நானும் சுமார் ஏழு வருடங்கள் இந்த மாஜிக் பயணத்தை அன்றாடம் செய்திருக்கிறேன்!
அதைப் பற்றி எத்தனை பதிவுகள் எழுதினாலும் தீராது.
என்னுடைய என்னுலகம் பதிவையும் கண்டுவிட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
உங்கள் சிறுகதைகளை தமிழ் மின்சஞ்சிகைகளுக்கும் அனுப்புங்கள்.
மூன்று சிறந்த சஞ்சிகைகளின் தொடுப்பு (லிங்க்ஸ்) என் http://ennulagam.blogspot.com பதிவில் உள்ளன.
ஏதாவது வங்கியில் பணிபுரிகிறீர்களா? நானும் வங்கி அதிகாரிதான்.
தமிழ்மணத்திற்கு வரவேற்கிறேன்.
வாழ்த்துக்கள்!
வருக! வருக! இப்பத்தான் மின்னஞ்சல் பொட்டியிலே பார்த்தேன்... உங்க மடல் junk folder லே இருந்தது. கவனிக்கலை. வலைப்பதிவு உலகத்துக்கு நல்வரவு.
Nice story
nalla irukku
கதையின் flow நல்லா இருக்கு. ஆரவாரமில்லாத கதை. வாழ்த்துக்கள்.
மிக அருமையாக வந்திருக்கிறது நண்பரே. வாழ்த்துக்கள் பல.
ஊக்கப்படுத்தி எழுதிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறும் வேண்டுகிறேன்.
முத்து,
வலைப்பதிவு உலகத்திற்கு வருக. மேலும் நன்றாக எழுத வாழ்த்துக்கள்!
தேசிகன்
கதை நல்லா இருக்கு.
//நான் எதுவும் சொல்லாமல் திரும்பி நடந்தேன் .சிங் வெறும் ஆயிரத்து முன்னூறு ரூபாயை மட்டும் காப்பதற்காக உயிரை விடவில்லை என்று நான் இன்றும் உறுதியாக நம்புகிறேன்.//
-- இது மட்டும் எனக்கு புரியவில்லை... :(
முத்து, திருப்பி படிச்சேங்க (முதல்லேர்ந்து தான்)... இதப் போய் ஏன் புரியலைன்னு சொன்னேன்னு எனக்கே ஆச்சரியமாகிடுச்சு... உங்க சிங் மாதிரி ஒருத்தரை எப்போவாவது நானும் பார்ப்பேனான்னு தெரியலை :(
Post a Comment